புதன், 26 ஜூலை, 2023

"சிங்காரவேலு அண்ணே - நான் பாஸா ? "

 

எங்கள் கேள்விகள் : 

1) உங்கள் வீட்டில் நீங்கள் அல்லது உங்கள் பெற்றோர் வாங்கிய மின்சார இஸ்திரிப் பெட்டி, தையல் எந்திரம். போன்ற பழைய பொருட்கள் இன்றும் உபயோகத்தில் உள்ளனவா? 

2) உங்கள் சமையல் அறையில் கல்சட்டி, ஈயச்சொம்பு போன்ற சென்ற நூற்றாண்டு பாத்திரங்கள் உள்ளனவா? இப்பொழுதும் உபயோகத்தில் உள்ளனவா? 

3) ரேடியோ / ட்ரான்சிஸ்டர் ரேடியோ இவைகளை நீங்கள் பயன்படுத்தி எவ்வளவு வருடங்கள் ஆகின்றன? (செல்போனில் கேட்கப்படும் FM ரேடியோ கணக்கில் வராது. ) 

4) சமீப கால வீட்டு உபயோகப் பொருட்களில் மிகவும் பயனுள்ளது எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏன்? 

= = = =

KGG பக்கம் : 

சென்ற வாரம் நான் சொன்ன சிங்காரவேலன் என் நண்பன் அல்ல; வில்லன்! 

நான் முதன் முதலில் படித்த ஆரம்பப் பாட சாலையின் ஊழியர். நாலு முழ வேட்டி, மேலே ஒரு காக்கிச் சட்டை. அந்தச் சட்டையின் பொத்தான்கள் பித்தளையால் ஆனவை. பெரிய பொத்தான்களாக இருக்கும். சிங்காரவேலுவுக்கு பதினான்கு அல்லது பதினைந்து வயது இருக்கும். மெதுவாக ஆடி ஆடி நடந்து வருவார். ஒவ்வொரு வகுப்புக்கும், காலையும் மதியமும் மாணவர்களின் வருகைப் பதிவேடு கொண்டு வந்து கொடுப்பவர். மாணவர் வருகை விவரங்கள் பதியப்பட்ட பிறகு பதினைந்து ( 5 x 3 பிரிவுகள்) வகுப்புகளிலிருந்து அந்தப் பதிவேடுகளை தலைமை ஆசிரியரின் அறைக்குக் கொண்டுபோய் வைத்துவிட்டு வருவார். 

ஒவ்வொரு வருடமும் தீபாவளி வருவதற்கு முன்பு ஒரு மாதம் இருக்கும்போது, வகுப்புகளுக்கு ஒரு சுற்றறிக்கை வரும். 

அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயம் இதுதான். 

"மாணவர்கள், தங்கள் பெற்றோர்களிடம் கேட்டு, 'பியூன் காசு' கொண்டு வந்து வகுப்பு ஆசிரியரிடம் கொடுக்கவேண்டும். யாரும் பியூனிடம் நேராக கொடுக்கக் கூடாது. பியூன் காசு அவரவர்கள் விருப்பப்பட்ட தொகையைக் கொடுக்கலாம். கொடுக்கவேண்டும் என்னும் கட்டாயம் எதுவும் இல்லை"

அந்தக் காலத்தில் 'பியூன் காசு' என்பது ஓரணா ( 6 பைசாக்கள்) என்று ஞாபகம். 

என்னுடைய அம்மா நான் வந்து வீட்டில் விவரம் சொல்லும்போது, அந்தக் கடைசி வாக்கியத்தைப் பிடித்துக்கொண்டு மற்ற எல்லாவற்றையும் விட்டுவிடுவார். 'கொடுக்கவேண்டும் என்னும் கட்டாயம் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்தானே - கேட்டால், எங்களுக்குக் கொடுக்க வசதியில்லை என்று சொல்லிவிடு' அவ்வளவுதான். இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு அப்பீல் கிடையாது. 

சுற்றறிக்கை வந்த மறுநாள் தொடங்கி, வகுப்பாசிரியர் வருகைப் பதிவேட்டில்  - மாணவர்கள் வருகை விவரங்களைப் பதிந்த பின்பு, "யாரெல்லாம் பியூன் காசு கொண்டு வந்திருக்கீங்க? வரிசையாக என்னிடம் கொண்டு வந்து கொடுங்க" 

கோவிந்து போன்ற முந்திரிக்கொட்டைகள் முதல் ஆளாக போய் பியூன் காசு கொடுப்பார்கள். ஆசிரியர், வருகைப் பதிவேட்டில் காசு கொடுக்கும் மாணவர்களின் பெயருக்குப் பக்கத்தில், ஒரு சிறிய டிக் மார்க் போட்டு வைப்பார். எவ்வளவு வசூல் ஆயிற்று என்ற கணக்கு வைத்துக்கொள்வதற்காக அப்படி செய்வார். பதினைந்து வகுப்புகளிலும் வசூலாகும் மொத்தக் காசு, தீபாவளி விடுமுறைக்கு முன்பாக, தலைமை ஆசிரியரால் பியூன், வகுப்புகளைப் பெருக்கும் ஆயா, பள்ளித் தோட்டக்காரர் ஆகிய ஊழியர்களுக்கு சமமாகப் பிரித்துக்கொடுக்கப்படும். 

விளையாட்டு பீரியட் நடக்கும்போது - விளையாட்டுத் திடலில் ஆடி ஆடி நடந்துவருவார் சிங்கார வேலன். அவரை தூரத்தில் பார்த்தவுடனேயே நம்ம கோவிந்து, அடித்துப் பிடித்து ஓடி அவர் அருகே சென்று, " சிங்காரவேலு அண்ணே - நான் பாஸா? " என்று கேட்பான். அவனுடைய பார்வையில் சிங்காரவேலுவுக்கு தெரியாதது எதுவும் இல்லை. 

சிங்காரவேலு அண்ணன் உடனே தலைமை ஆசிரியர் அறைக்கு, தான் எடுத்துச் செல்லும் வருகைப் பதிவேட்டை பிரித்துப் பார்த்துவிட்டு, "கோவிந்தராஜூ - நீ பாஸ் " என்பார். கோவிந்துவுக்கு புளகாங்கிதம் ஏற்படும். 

சிங்கார வேலு அண்ணன் அதோடு நிறுத்தியிருந்தால் பிரச்சனை இல்லாமல் எல்லாம் சரியாக இருந்திருக்கும். அவர் கோவிந்துவிடம், "உன்னுடைய கிளாசில் மொத்தம் மூன்று பேர் ஃபெயில். கௌதமன், முத்து, சுப்ரமணி - மூன்று பேரும் ஃபெயில் " என்று ஐ ஏ எஸ் ரிசல்ட் போல சொல்லிவிட்டு, ஆடி ஆடி நடந்துபோய் விடுவார். 

கோவிந்து என்னிடம் வந்து, "சிங்காரவேலு அண்ணன் சொல்லிடுச்சு. நான் பாஸ், நீ ஃபெயில் - அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் பார்த்து சொல்லிவிட்டார்  அண்ணன்" என்பான். (கோவிந்துவைப் பொருத்தவரை சிங்காரவேலு அண்ணன்தான்  - மாணவர்களுக்கு பாஸ் / ஃபெயில் போடும் செலக்ஷன் கமிட்டி வைஸ் சேர்மன்! ) 

எனக்கு ஒரே அழுகையாக வரும். இதை வீட்டில் சொன்னால் எல்லோரும் என்னை கேலி செய்து நோக அடித்துவிடுவார்களே என்று மிகவும் வருத்தப்பட்டு உட்கார்ந்திருப்பேன். 

அப்போதுதான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணனாக எனக்கு உபதேசம் செய்தான், நண்பன் முத்து. " சிங்காரவேலு சொல்றதை நம்பாதே. நீயும், நானும், மணியும் பியூன் காசு தரவில்லை. அதனால் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் நம்ம பெயருக்கு நேரே வாத்தியார் டிக் போடவில்லை. நாம பியூன் காசு தராததால், அதைத் தெரிந்துக்கொண்ட சிங்காரவேலு நாம் ஃபெயில் என்று சொல்லுகிறார். அவ்வளவுதான். நான் ஃபெயில் என்று சொன்னால் கூட நம்புவேன். ஆனால் நல்லா படிக்கிற நீ நிச்சயம் ஃபெயில் ஆகமாட்டாய் - கவலைப்படாதே." 

முத்து வாழ்க. 

= = = = =

அப்பாதுரை பக்கம் : 

நான் காலன்

முதலில் ஒரு கதை.

தீய சக்திகளைத் தடுத்து நமது பாரத நலனுக்காகவே நாளும் போராடி வரும் ஸ்ரீ நரேந்திர சுவாமிகள் எழுதிய கீதையில் விசுவரூப தரிசன யோகம் என்ற பகுதியில் 'ஸகஸ்ரஸூர்யம் யுக பத் உத்தித' என்று ஒரு விவரம் வரும். 

என்ன? கீதை எழுதியது ஶ்ரீ நரேந்திரர் இல்லையா? வேறே சுவாமிகளா? பாருங்களேன்.. இந்த வாட்சப் குழுவில எப்படியெல்லாம் எழுதுறாங்க! நம்பவே முடியலிங்க. எனக்கு இந்த மெஸெஜ் பார்வர்ட் பண்ணின பேட்டை க்ரூப் முரலியிடமே கேட்கிறேன்.  ஏம்பா முர்லி...

எவன் சொன்னான்? நரேன் சாமி கீதை எயிதலியா?  வாசப்ல வந்துக்துபா.. இன்னா? வாசப்பே  டுபாகுரா? அப்ப எவன் எயுதினாம்பா? சரி வுடு. விசயத்துக்கு வரேன்.. அதாம்மா.. நம்ம அர்ஜூனன் கீறான்ல? அவன் இன்னா பண்றான் ஒரு தபா.. அத்தினி பேட்டை கேடிங்களையும் மாஸா வரசொல்லி சுலுக்கெடுத்து ஒயிக்கிறதா ரவுசு வுட்டுகினான்...  அப்பால அவிங்களை ஒண்ணா பாக்க சொல்ல பெஜாராயி ஜகா வாங்கிகினான்.. தேர் டிரைவராண்ட பொலம்பிகினான்: கிஸ்னா. இவங்கல்லாம் என் மாமன் மச்சான் தோஸ்துங்க.. இவங்களை எப்படி சுலுக்கெடுப்பேன்?  அந்த டிரைவர் கிஸ்னன் யாருன்றே? அசல் கிஸ்னன்பா! டிரைவர் கிஸ்னன் சிரிச்சுகினே சொல்றான்: மச்சி.. இவங்களையெல்லாம் நீ தான் ஒயிக்கிறதா நென்ச்சுகினியா? தோ பார்டா.. இன்னா மப்பு மச்சி.. உனுக்கென்ன அம்மாம் சத்தி கீதா? நீ வெறும் கத்தி மச்சி.. நான் தான் சக்தி. அவனுங்களை வெட்றதும் ஒட்றதும் அல்லாமே நானு பிரியுதா? போய் உன் வேலைய கெவினி. அர்ஜுனன் வுடாம கேக்குறான்: அல்லாத்தியும் நீதான் செய்றேனா அப்ப நான் யாரு நீ யாரு இவங்கலாம் யாரு? இந்த கிஸ்னன் வேசம் ஏன் போட்டுனுகிறே? உன் அசல் லுக்கை எட்த்து வுடு மாமு.  இப்டி போவுது கதை வசனம் அந்த காலத்து பாக்யராஜ் படமாட்டம்.. இத்தினி சோக்கா கீது.. இதை நரேன் சாமி எயுதலன்றே? யார்யா அது? இன்னா.. நான் வேணாவா.. இந்தாப்பா தொரை.. நீயே சொல்லிக்க. வர்ட்டா..?  இதுக்கு தான் பட்சவங்க சவாசம் வேணாம்னு சொன்னேன்.. கேக்குறியா நீ? 

நானும் விஷயத்துக்கு வருகிறேன்.  சகஸ்ரசூர்யம் விவரம் வரும் கீதை பாடலின் உரை இது தான்: விசுவரூப தரிசனம் கிடைத்ததும் அர்ஜூனன் அதை விவரிக்கத் தடுமாறுகிறான். ஆயிரம் சூரியன்கள் ஒரே நேரத்தில் வானத்தில் தோன்றினால் எப்படிப்பட்ட ஒளிப்பிழம்பாக இருக்குமோ, அது சற்று முன் தான் கண்ட பரமாத்மாவின் ஒளிக்கு நிகராகலாம் என்று சந்தேகத்துடன் ஒப்பிடுகிறான். பிறகு கண்ணன் சொல்கிறான்: நான் காலன். அதர்மிகளை அழிக்க முன் வந்திருக்கிறேன். அழிப்பது நான். நீ வெறும் நிமித்தமாக இரு. வெற்றியின் பெருமையையும் புகழையும் நீ ஏற்றுக்கொள். அர்ஜூனன் மனம் தெளிந்து போருக்குத் திரும்புகிறான்.  இதான் கதை. 

1944 வாக்கில் இரண்டாம் உலகப்போர் தீவிரத்தைக் குறைக்கவும் ஒரு தீர்மானப் பாதையில் மாற்றிச் செல்லவும் அமெரிக்கா ஒரு அறிவார்ந்த முடிவெடுத்தது.  அணுகுண்டு தயாரிப்பதென்று. சபிக்கப்பட்ட மனிதகுலத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட காவலர்கள் இல்லையா அமெரிக்கர்கள்? அப்படித்தான் முடிவெடுப்பார்கள்.  ஐன்ஸ்டைன் பின்னணியில் ஓப்பன்ஹைமர் தலைமையில் ஒரே வருடத்தில் இரண்டு குண்டுகளைத் தயாரிக்கத் திட்டமிட்டார்கள். மிகத் திறமைசாலியான ஓபன்ஹைமர் தலைமையில் அணுகுண்டு பரிசோதனைக்குத் தயாராகிறது.  நெவாடா பகுதியில் ஒரு பாலைவனத்தில் சோதிக்கிறார்கள். உலகின் முதல் அணுகுண்டு வெற்றிகரமாக சோதனை முறையில் வெடிக்கிறது.  வெற்றி! சுற்றியிருப்போர் எக்காளமிட, ஓபன்ஹைமருக்கு என்னவோ போலிருக்கிறது. என்ன செய்துவிட்டேன்! எப்படிப்பட்ட கொடுமைக்கு வித்திட்டுவிட்டேன்? கடவுளே? இதற்கா என்னைப் படைத்தாய்? அறிவும் திறமையும் தந்தாய்? 

அந்தக் கணத்தில் அவர் நினைவுக்கு வருவது என்ன? தான் படித்த கீதையில் அர்ஜூனனின் சந்தேகம்! ஆயிரம் சூரியன்களின் ஒளி தான் கண்ட பரமாத்மா முழு உருவத்தின் பிரகாசத்துக்கு ஈடாகுமா என்றானே அர்ஜூனன்?

ஓபன்ஹைமர் சட்டென்று தரையில் விழுகிறார்.  இந்துமதத்தின் காரியம்-காரணம்-கர்த்தா தொடர்புகளைப் பற்றி வியந்து அதிர்ச்சியடைகிறார். மெள்ளத் தெளிகிறார். நிமித்தமாக இரு என்ற கண்ணனின் கட்டளையை  உள்ளேந்தி வெளியுலகைச் சந்திக்கிறார். சில வாரங்களில் ஜப்பானில் இரண்டு அணு குண்டுகளை அமெரிக்கா வீசுகிறது. போரில் வெற்றி.  இது நிஜம்.

கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்குப் பிறகு அனேக போர்க்கால ரகசியக் கோப்புகள் பொதுவில் வெளியிடப்பட்டதும் ஓபன்ஹைமர் அமெரிக்க அணுகுண்டு தயாரிப்பு பற்றி பல புத்த்கங்கள் வந்தன. அவற்றில் ஒன்று க்ரிஸ் நோலன் கைவண்ணத்தில் திரைப்படமாகி உள்ளது.

வால்:

ஓபன்ஹைமர் தீவிர பகவத்கீதை பிரசங்கியானார்.  குண்டு வெடிக்குமுன் வீரர்கள் அணிந்த விசேஷ கண்ணாடியை விவரிக்கையில் அர்ஜுனனுக்கு கண்ணன் தந்த விசேஷ பார்வை பற்றிப் பேசுகிறார்.  துவாபரயுகம் அழிய அஸ்தினாபுர போர்க்களத்தில் அணுகுண்டு வெடித்திருக்குமோ என்று மிக மதிப்புடனும்  மரியாதையுடனும் அவர் உத்தேசமாகக் கேட்டிருப்பது சுவாரசியம். இரண்டாம் உலகப்போர் முடிந்து திரும்பி வந்த அமெரிக்க வீரர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க கண்ணனின் உரைகளை அமெரிக்க அரசு (!) பயன்படுத்தியது என்று ஓபன்ஹைமர் குறிப்பிட்டிருப்பது வியக்க வைத்தது. உடனே பகவத் கீதையை தூசு தட்டி மறுபடி படிக்க வைத்தது என்பதை சற்று வெட்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

நாய் வால்:

இரண்டு உறுதிகளை எடுத்துக் கொண்டேன். 

1. இந்திய நூல்களை இனி இளப்பமாகப் பார்ப்பதில்லை (ஜெயமோகன் எழுதியவை தவிர) 

2. ஓபன்ஹைமர் படத்தை ஐமேக்ஸில் பார்க்க வேண்டும். 

நிற்க, கீதையில் இந்த ஆன்மிக சமாசாரம் தடுக்கி விழுந்தா அனாமத்துக்கு அடிபடுதே?  நாலஞ்சு பொறுக்கிட்டு வரவா?

= = = = = =

62 கருத்துகள்:

  1. நேற்று வீட்டில் உறவினர்களோடு எல்லோரும் ஐமேக்ஸில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் நான் தூங்கிவிட்டேன். இனித்தான் கேட்கணும் படம் எப்படி இருந்தது என்று.

    பொதுவா பசங்களை தியேட்டருக்கு அழைத்துச் சென்றால் காசுக்கு வேட்டு வைப்பாங்க. எவ்வளவு செலவழிச்சாங்கன்னும் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ...சென்றால் காசுக்கு வேட்டு வைப்பாங்க. //

      சேத்துவைப்பவர்களுக்கு வேட்டு வைப்பவர்கள்தானே பதில் தரணும். அந்தப் பொறுப்பு அவங்களுக்கு உண்டுல்ல..

      நீக்கு
    2. //சேத்துவைப்பவர்களுக்கு வேட்டு வைப்பவர்கள்தானே பதில் தரணும்.// - என்னுடைய motto, We are only custodians of funds. முடிஞ்ச வரை எளிமையா இருக்கணும் என்பது. இதை யாரு ஏத்துக்கறாங்க? சொல்லுங்க..

      நீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. அணுகுண்டு மஹாபாரத காலத்தில் இருந்திருந்தால் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது போல் ஒரே நாளில் முடிவுக்கு வந்திருக்குமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த காலத்தில் அதற்கு பெயர் அணுகுண்டு அல்ல. அஸ்திரம் என்று பெயர்.

      நீக்கு
    2. இதற்கு உள்ள மந்திரங்களை நான் ஆரம்ப காலத்தில் 2005/2006 ஆம் ஆண்டுகளில் மழலைகள் குழுமத்தில் இருந்தப்போப் பெரியவர் ஒருத்தர் பகிர்ந்திருந்தார். ட்ராஃப்ட் மோடில் சேமிச்சு வைச்சிருக்கேன். தேடிப் பார்க்கணும். அஸ்வத்தாமா பயன்படுத்திய பிரம்மாஸ்திரம் தான் கிட்டத்தட்ட அணுகுண்டுவுக்குச் சமானம் என்பார். அந்த மந்திரமும் உள்ளது. அந்தப் பெரியவருடைய பிள்ளை தான் "அழகி"யைக் கண்டு பிடித்த விஷி! ஒரு காலத்தில் நல்ல நட்பு. இப்போத் தொடர்பே இல்லை.

      நீக்கு
  4. 1970 காலத்து murphy டிரான்சிஸ்டர் ரேடியோ இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.. எப்பவாவது கேட்பேன் வேலை செய்கிறதா என்று பார்க்க, மற்றபடி காட்சிப் பொருள். கரா கரா என்று சப்தம் வரும். இந்த ஊர் ஏஎம் ரேடியோ நிகழ்ச்சிகள் சகிக்காது. அதே காலத்து எலக்ட்ரிக் டைப்ரைடர் ஒன்று வைத்திருந்தேன். சமீபத்தில் என் பெண் அதை விற்று விட்டாள். எனக்கு கோபம். அவளுக்கு லாபம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. கோபம் & லாபம் இரசித்தேன்!

      நீக்கு
    2. நாங்க வைத்திருந்த டேப் ரிகார்டர், சிடி ப்ளேயர் எல்லாவற்றையும் அக்வாகார்ட் வாக்வம் க்ளீனர் உள்பட எல்லாவற்றையும் போன வருஷம் தான் விற்றோம். ரேடியோ எப்போவோ ஒண்ணுமில்லாமல் போயிடுத்து. ட்ரான்சிஸ்டரில் நான் அம்பத்தூரில் இருந்தவரைக்கும் பாட்டுக் கேட்பேன். தனி வீடு என்பதால் பிரச்னை இருக்காது. இங்கே வந்தப்புறமா அதெல்லாம் எதுவும் இல்லை.. இன்னும் சொல்லப் போனால் பாட்டுக் கேட்பதே நின்று போச்சு! :(

      நீக்கு
    3. ஹும். ஒருகாலத்தில் நானும் டிரான்ஸிஸ்டருக்கு அடிமையாக இருந்தேன். கேட்கும் திறன் குறைந்த பிறகு எல்லாமே மறந்து போச்சு.

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. அப்பாதுரை ஐயா அவர்களின் கலக்கல் அருமை...

    பதிலளிநீக்கு
  7. // நல்லா படிக்கிற நீ நிச்சயம் ஃபெயில் ஆகமாட்டாய் - கவலைப்படாதே.//

    முத்து வாழ்க...

    ஆகா.. ஆகா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இப்படி ஃபெயில்னு சொல்லிக் கவலைப் பட்டிருக்கேன். ஆனால் 30 வயசில். ஹிந்தி படிக்கையில் விஷாரத் முதல் பகுதி தேர்வு கொடுத்திருந்தேன். அந்தச் சமயம் வீட்டில் என்னென்னவோ பிரச்னைகள். படிக்கவே நேரம் கிடைக்கலை. ராத்திரி பத்து/பத்தரை ஆயிடும் வீட்டு வேலைகள் முடிந்து தூங்க. ஆகவே காலம்பர 4 மணிக்கு எழுந்து கொண்டு ஐந்து மணி வரை முடிஞ்சதைப் படிப்பேன். பின்னர் வீட்டு வேலைகள் தொடங்கிடும். ஏதோ பரிக்ஷை எழுதினேன்னு பெயர் தான். தேர்வு முடிவுகள் வந்தப்போ என்னோட பெயர்/ஹால் டிக்கெட் எண் எதுவும் இல்லை. எல்லோரும் ஃபெயில்னே சொல்லிட்டாங்க. எனக்கென்னவோ ஒரு உறுத்தல் நேரே ரிசல்ட் யாருக்கு மொத்தமா வருமோ அவரிடம் போய் எல்லாப் பேப்பர்களையும் வாங்கிப் பார்த்தால் என்ன ஆச்சரியம்! "சிறப்புத் தகுதி" யில் என்னோட பெயரும் நம்பரும் வந்திருந்தது. யாருக்குமே அதைப் போய்ப் பார்க்கணும்னு தோணலை.

      நீக்கு
    2. சிறப்புத் தகுதி! வாழ்த்துகள்!

      நீக்கு
  8. 1. என் அம்மா பயன்படுத்திய தோசைக்கல், வெண்கல உருளி, ஒரு பெரீயீயீயீயீயீயீயீயீயிய அலாய் Pressure cooker - செம வெயிட். ஆனால் நன்றாக வேலை செய்கிறது அப்பப்ப கேஸ்கெட், Safety valve இத்யாதிகள் மாற்றணும். அவ்வளவே. தோசைக்கல்லில் செம தோசை roast செய்யலாம். இப்ப வரை அதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது 2 வதுக்கான பதில்.

      கீதா

      நீக்கு
    2. என் அப்பா வீட்டில் பயன்படுத்திய தோசைக்கல், ஒரே நேரம் 4 தோசை வார்க்கலாம். நல்ல நீளமாகச் செவ்வகமாகவே இருந்தது. அதை அறுத்து அப்பா எனக்கு ஒரு துண்டு கொடுத்தார். வேண்டாம்னு சொல்லிட்டேன். என்னோட முதல் தோசைக்கல், {அம்மா 2 ரூபாய்க்கு வாங்கினது} நான் அம்பத்தூரை விட்டு வரும்போது வீட்டு வேலை செய்து வந்த பெண்ணிடம் கொடுத்தேன். ரொம்ப சந்தோஷமாக வாங்கிப் போனாள். ஆனால் அது மாதிரி தோசைக்கல் இனி கிடைக்குமா? சந்தேகமே!

      நீக்கு
  9. 2. கல்சட்டி இருக்கிறது. வெண்கல உருளி சிறியதுதான். பொங்கல் பானை...

    1. அப்பா முன்ன எல்லாம் பயன்படுத்திய டைப் ரைட்டர் பத்திரமாக இருக்கிறது! இப்ப அவர் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால் பத்திரமாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ரேடியோ, ட்ரான்ஸிஸ்டர் எல்லாம் போச்!!!! பல வருஷங்கள் ஆகின்றன.

    4 . mixer grinder - எந்த வீட்டிலும் உரல் அம்மி இல்லையே. அப்படிப் பார்த்தால் பல பொருட்களை மிகவும் பயனுள்ளவை என்று சொல்லலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சிங்காரவேலு விஷயம் வாசிக்கும் போதே புரிந்துவிட்டது....இப்படி பங்கம் விளைவிக்கும் வேலுவாக இருந்திருக்கிறாரே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. சென்னை தமிழை ரொம்ப ரசித்தேன். பட விமர்சனம் வித்தியாசமாக!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. என் அப்பா எந்தப் பொருளுமே வாங்கி நான் பார்த்ததில்லை. மின்சார சாதனங்கள் எல்லாம் அப்போ அவ்வளவா இல்லையே! ரேடியோவும் அன்றாட தினசரிப் பேப்பருமே ஆடம்பரம் என நினைக்கும் மனிதர். ஆகவே எங்க வீட்டில் மின் சாதனங்கள் எதுவுமே பழையதாக இல்லை. தையல் மிஷின் என்னோடது என் அண்ணா சம்பாதிக்க ஆரம்பித்ததும் போனஸில் வாங்கிக் கொடுத்தது. மெரிட் மிஷின். 69 ஆம் வருஷம் வாங்கினது, கிட்டத்தட்ட 2000 ஆவது ஆண்டு வரை உபயோகித்தேன். 97 ஆம் ஆண்டிற்குப் பின்னால் குறைந்த பக்ஷமாகவே பயன்பாடு. அவ்வப்போது பிலாயிலிருந்து வரும் என் நாத்தனார் அங்கே இருந்து தைக்க வேண்டிய துணிகளைக் கொண்டு வந்து தைத்து எடுத்துச் செல்வார். அது தான் அதிக பக்ஷமான பயன்பாடு. எனக்கு முதல் முதல் கால் வீக்கம் கண்டு நடக்க முடியாமல் போனப்போ நம்மவர் மிகவும் வற்புறுத்தி அதை விற்க வைத்தார். ஒரு வாரம் அழுதிருப்பேனோ? மனசே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ. வருத்தமான நிலைதான். எனக்குத் தெரிந்து பல குடும்பங்களில் தையல் மெஷின் வாங்கினார்கள் ஆனால் அதைப் பயன்படுத்தாமல் மூடி வைத்திருந்தார்கள்.

      நீக்கு
    2. நான் தையலோடு சேர்த்துத் தையல் மிஷின் எம்ப்ராய்டரியும் கற்றுக் கொண்டேன். அப்போல்லாம் ப்ளவுஸ்களில் சின்னச் சின்னதாய்ப்பூக்கள், கிளி, குருவிகள் என எம்ப்ராய்டரி போடுவது ஒரு பிரபலமாக இருந்தது. மதுரை சொக்கப்ப நாயக்கன் தெருவில் (தெற்கு கோபுரம் எதிரே) இதற்கானச் சின்னச் சின்னக் கடைகள் இருக்கும். முழுதும் ப்ளவுஸ் பீஸ்களே இருக்கும் ஒரு டஜன் ப்ளவுஸுக்கு எம்ப்ராய்டரி போட்டுக் கொடுத்தால் 15 ரூபாய் கிடைக்கும். அம்மா போய் தெரிந்த ஒரு கடைக்காரரிடம் வாங்கி வருவார். நான் எம்ப்ராய்டரி போட்டுக் கொடுப்பேன். அக்கம்பக்கம் உள்ளவர்களுக்குத் தைத்தும் கொடுத்திருக்கேன். 1980 ஆம் ஆண்டு சிகிந்திராபாதில் இருந்து சென்னை மாற்றல் ஆகி அம்பத்தூருக்கே இரண்டாம் முறையாக வந்தப்போத் தையல் வகுப்பெல்லாம் எடுத்திருக்கேன். எம்ப்ராய்டரி தையல் வகைகள் டிசைன்கள் மட்டுமே இரண்டு ஒரு மீட்டர் வெள்ளைத்துணியில் போட்டு மாதிரியாக வைச்சிருந்தேன். அதை என்னிடம் சொல்லாமல் நம்மவர் வ்ண்ணானுக்குப் போட்டு அவர் வெள்ளாவியில் வைச்சு எடுத்து வந்ததில் நூலெல்லாம் கன்னாபின்னாவெனப் போய் நிறமெல்லாம் மாறித் துணி பிடி சுருணை மாதிரி ஆகி அந்த துக்கம் ஆறச் சில வருஷங்கள் பிடித்தன. :))))) அவ்வளவு மனோ தைரியம் இல்லாமல் இருந்த நாட்கள் அவை. இருபதுகளின் மத்தி. அது முடியும் நேரத்தில் செய்து கொண்ட மூலத்துக்கான அறுவை சிகிச்சை ஆனப்போப் பட்ட வலியில் எனக்கு அதன் பின்னர் அழுகை என்பதே மறந்து போச்சு. எதுவானாலும் எதிர்த்து நிற்க ஆரம்பிச்சேன். முன்னரே ஒரு முறை எழுதின நினைவு. :( _/\_

      நீக்கு
    3. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  14. அப்பா வீடு/மாமியார் வீடுகளில் வெண்கலப்பானை, கல்சட்டிச் சமையல் தான் என்றாலும் அங்கிருந்து வந்தவை ஏதும் என்னிடம் இல்லை. எனக்குக் கொடுத்த வெண்கலப்பானைகளே பத்துக்கும் மேல் இருக்கும். உருளி ஒரு நாலைந்து. ஈயச் செம்பு 3. பெரிய சம்சாரம் என்று அம்மா/அப்பா பத்துப் பேருக்குச் சமைக்கும்படியான வெண்கல, பித்தளை, ஈயப் பாத்திரங்கள் கொடுத்ததால் அவற்றில் பெண்ணிற்குக் கொடுத்தது/விலைக்குப் போட்டது போக மீதம் இரண்டு ஒரு படி வெண்கலப்பானைகளும் அரைப்படி ஒன்றும், கால்படியில் இரண்டும் சின்னப் பருப்புக் குண்டும் இருக்கின்றன. உருளிகளைப் போடலை. கிளற வசதி. அரிசி உப்புமா பண்ணினால் அவற்றில் ஏதேனும் ஒன்றில் தான் பண்ணுகிறேன். ஈயச் செம்பு பொண்ணுக்குக் கொடுத்தது போக என்னிடம் இரண்டு ஈயக்கிண்ணங்களும் ஒரு ஈயச் செம்பும் இருக்கு. கல்சட்டி கும்பகோணத்தில் வாங்கியது. 20 வருடம் ஆகிறது. பயன்பாட்டில் இருக்கு.

    கருத்துரை ரொம்பப் பெரிசா இருக்கோ? சுருக்கத் தெரியலை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய கருத்துரையாக இருந்தாலும் அரிய கருத்துதான். நன்றி.

      நீக்கு
  15. அம்மா உபயோகித்த கல் இயந்திரம் கொடுக்கும்படி கேட்டேன். உன்னால் முடியாதுனு கொடுக்கலை. கல்லுரலும், அம்மியும் கூடக் கொடுக்கலை. அண்ணா வீட்டில் இருந்தது. என்ன ஆச்சோ தெரியாது. கல்லுரல் வெள்ளைக் கல். வளர்கல் என்பார்கள். நான் சொந்தமாக வாங்கிய கல்லுரலையும் அம்மியையும் முதல் முறை ராஜஸ்தானில் இருந்து சிகிந்தராபாத் மாற்றலில் வந்தப்போ நம்மவர் தானம் பண்ணிட்டார். அருமையாக அரைக்கும். அதுக்கப்புறமா சிகிந்திராபாத் வீட்டில் வீட்டுக்காரங்க கல்லுரல்/அம்மி எதுவுமே போடாமல் சென்னையிலிருந்து ரயிலில் வரவழைச்சேன். அப்போவே 250 ரூபாய்.

    பதிலளிநீக்கு
  16. ஒரு கருத்துரை வெளியிடும்போது காணாமல் போய் விட்டது. பின் தொடரும் கருத்துரைகளிலும் கிடைக்கலை. :( காக்கா உஷ் தான் போல!

    பதிலளிநீக்கு
  17. ஒரு கருத்துரை வெளியிடும்போது காணாமல் போய் விட்டது. பின் தொடரும் கருத்துரைகளிலும் கிடைக்கலை. :( காக்கா உஷ் தான் போல!

    பதிலளிநீக்கு
  18. என்னிடம் இப்போ ஒரு கல்லுரலும், அம்மியும் மட்டும் இருக்கின்றன. அம்மியில் வெல்லம் தட்டிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. அந்த பயம் இருக்கட்டும் நெல்லை! இஃகி,இஃகி,இஃகி! ஆனால் நான் பின் தொடரும் கருத்துகளில் இதுவும் வந்ததால் படிச்சுட்டேனே! :))))))

      நீக்கு
  19. //உங்கள் வீட்டில் நீங்கள் அல்லது உங்கள் பெற்றோர் வாங்கிய மின்சார இஸ்திரிப் பெட்டி, தையல் எந்திரம். போன்ற பழைய பொருட்கள் இன்றும் உபயோகத்தில் உள்ளனவா? //

    அக்காவிற்கு உஷா தையல் மிஷின் 68ம் வருடம் வாங்கி கொடுத்தார்கள் அப்பா அது இன்னும் என் அண்ணன் வீட்டில் இருக்கிறது. உபயோகத்தில் இருக்கிறது. அடிக்கடி சர்வீஸ் செய்கிறார்கள் அண்ணி.

    அம்மாவைத்து இருந்த பெரிய கல்சட்டியில் கோலபொடி வாங்கி வைக்கிறாள் தம்பி மனைவி. ஈயசட்டி பரணில் கிடக்கிறது.

    //சமீப கால வீட்டு உபயோகப் பொருட்களில் மிகவும் பயனுள்ளது எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏன்? //

    குக்கர், கேஸ்ஸ்டவ். இரண்டும் மிகவும் உபயோகமானது சமைத்து சாப்பிடுகிறேன்.




    ட்ரான்சிஸ்டர் ரேடியோ இன்னும் கேட்கிறேன். 95 ம் வருடம் வாங்கியதை இன்னும் வைத்து இருக்கிறேன். இன்னும் கேட்கிறேன்.
    தையல் மெஷின் 80ல் வாங்கி 2001 வரை வைத்து இருந்தேன். அப்புறம் கொடுத்து விட்டேன். வெண்கல பானை அம்மா கொடுத்தது பொங்கலுக்கு பயன் படுத்துகிறேன். கல்சட்டி வாங்கி உடைந்து விட்டது அப்புரம் வாங்கவில்லை.

    பதிலளிநீக்கு
  20. //அவ்வளவுதான். நான் ஃபெயில் என்று சொன்னால் கூட நம்புவேன். ஆனால் நல்லா படிக்கிற நீ நிச்சயம் ஃபெயில் ஆகமாட்டாய் - கவலைப்படாதே."//

    முத்து அவர்கள் தன் நண்பரை நங்கு அறிந்து வைத்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  21. சென்னைத்தமிழ் பேச்சு நன்றாக இருக்கிறது. ஓபன்ஹைமர் காணொளி பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  22. அம்மி, உரல், ஆட்டுக்கல்லு , , அரிக்கன் விளக்கு வாசலில் காட்சிப் பொருளாகவே உள்ளது.

    அன்றாடம் முக்கியமானது காஸ்குக்கர், மிக்ஸி, எலெக்ட்ரிக் கேத்தல்.

    முத்து நண்பனாக கிடைத்தது உறுதுணை.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    இன்றைய புதன் பதிவு அருமையாக உள்ளது. எங்களுக்கான கேள்விகளும், அதற்கான கருத்துக்களின் பதில்களும் நன்றாக உள்ளது.

    பழையனவற்றை மறக்க முயற்சிக்கும் காலம் இது. நமக்கு பழையதின் அருமை களளைப் பற்றி பல தெரிந்தாலும், இப்போது அவற்றை நிராகரிக்க இளைய தலைமுறையினர் கவலைப்படுவதில்லை.

    என்னிடமும் ரசசொம்பு உள்ளது. ஆனால், தற்சமயம் முறையாக தினமும் பயன்படுத்தவில்லை. கேஸ் ஸ்டவ், குக்கர், மிக்ஸி இல்லாமல் வாழவும் தெரியவில்லை. ஒருகாலத்தில், விற்கு, கரியடுப்புக்கள் , மண்ணெண்ணெய் திரிஸ்டவ், மரப்பொடி அடுப்பு, பம்பிங் ஸ்டவ், என்று அத்தனையும் பார்த்து வந்தாகி விட்டது. இப்போது, கேஸ் அடுப்பு இல்லையென்றால் சமைக்கவே தெரியாது என்ற மாதிரி நிலை உருவாகி விட்டது.

    உங்கள் பக்கம் தில், உங்கள் நண்பரின் பக்குவமான பேச்சு ஆறுதல் அளிக்கிறது. அப்போதைய நம் வீடுகளின் பண நிலவரம் பற்றி நன்கு அறிந்து கொண்ட தங்கள் நண்பர் முத்து பல்லாண்டு வாழ்க. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. நண்பன் முத்து இளைய வயதிலேயே இறந்துவிட்டார் என்ற செய்தியை, அவருடைய அண்ணன் ( என் அண்ணனின் நண்பன்) மூலம் கேள்விப்பட்டேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!