வியாழன், 13 ஜூலை, 2023

நின்றுபோகட்டும் இந்தநொடி

 இனி இரண்டாவது சம்பவத்துக்கு வருகிறேன்.

இரண்டாவது சம்பவம் என்று சொல்லி இருந்தேன் அல்லவா...  அதற்கு வருவோம்.


அட்சதை போடும் வைபவம் பற்றி போன வாரமும் பேசி இருந்தோம்.  அதேதான் இது.  கொஞ்சம் வித்தியாசமாய்!

எத்தனை சமயங்களில் நீங்கள் அசடு வழிந்திருக்கிறீர்கள்?  அன்று என் முறை!

​அந்த விழாவில் நான் வழக்கம்போல முன்னாலும் இல்லாமல், பின்னாலும் இல்லாமல் மையமான ஓரிடத்தில் அமர்ந்திருந்தேன்.  எப்போதும் போல எழுந்து இங்குமங்கும் செல்ல வசதியாக ஓர ஸீட்.  

அதுவரை வந்திருந்தவர்களை பார்த்து, கைகுலுக்கி, நலம் விசாரித்து பின்னர்தான் அங்கு செட்டிலாகி இருந்தேன்.  பாஸ் அதேபோல குசல விசாரிப்புகளுக்குப் பின் மேடையில் இருந்தவர்களுக்கும், சம்பந்தப்பட்ட உறவுகளுக்கும் சிறு உதவிகள் புரிந்து கொண்டிருந்தார்.

ஒரு இடைவெளியில் என்னிடம் வந்தார். அருகே அமர்ந்து கொண்டார்.  அந்த நேரம் பார்த்து எனக்கு ஆபிசிலிருந்து ஒரு ஃபோன்கால்.  பேசிக் கொண்டிருந்தேன்.

என்னிடம் நீட்டப்பட்ட பாதாம்பாலை சுவைத்தபடியே பேசிக்கொண்டிருந்தேன்.


அருகில் அமர்ந்திருந்த பாஸ் ஏதோ ஜாடை காட்டிக் கொண்டிருந்தார்.  பாதாம் பாலுக்காகத்தான் ஜாடை செய்கிறார் என்று எண்ணி முதலில் அசட்டையாய் கையில் இருந்த கப்பைக் காண்பித்தவன், அவர் பார்வையின் சூடு கண்டு, கவனம் கலைந்தேன்.

அவர் காட்டிய திசையில் இரண்டு மூன்று வரிசைகள் தள்ளி சாஸ்திரிகளின் உதவியாளர் எல்லோருக்கும் அட்சதை விநியோகம் செய்து கொண்டு வந்து கொண்டிருந்தார்.

இங்குதான் வருவாரே என்று காத்திருந்தால், திடீரென கவனித்தபோது அவரைக் காணோம்.  என் கவனமின்மையால் பாஸ் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தார் என தெரிந்தது.  என்னவென்றால்,

நடுவிலேயே உதவியாளருக்கு மேடையிலிருந்து அழைப்பு வந்திருந்திருக்கிறது.  இவர் 'அட்சதை விநியோகம்' என்று ஜாடை காட்டியும், அவர் தேவை மேடையில் அவசியமானதாக இருந்திருக்கிறது.  எனவே அவர் கிளம்ப, வரிசையில் அமர்ந்திருந்த விருந்தினர்களின் ஒருவர் அவரிடமிருந்து அட்சதைக் கோப்பையை வாங்கி விநியோகம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.  சேவை!

"மேடையில் 'வடு' நமஸ்காரம் பண்ணப்போகிறான்..    நம்ம கைக்கு இன்னும் அட்சதை வரல்லே...  வாங்கிட்டு வாங்க..  நான் முன்னால போறேன்..."

நான் போனில் பேசியபடியே முன்னேறி அங்கு அட்சதை விநியோகிப்பாளரைக் காணாமல் திகைத்து, பின்னர் அவர் அப்படியே பெண்கள் வரிசைக்குள்ளும் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்ததை பார்த்தேன்.  

இந்த இடைவெளிக்குள் ஆபீஸிலிருந்து ஏகப்பட்ட ஹலோக்கள் போன் வழியே தெறித்து விழுந்து கொண்டிருந்தன.  அங்கு ஒரு சங்கடம்.  உடனே அட்டென்ட் செய்யப்படவேண்டிய சங்கடம்.  அலுவலகத்தில் என்ன பிரச்னை என்பது எனக்கும் தெரிந்திருந்ததால் அதைத் தீர்க்க வேண்டிய அவசரம்..

"ஸாரி..  நடுல இங்க கொஞ்சம் கவனிக்க வேண்டியாதாயிடுச்சு...  சொல்லுங்க..  அந்த மூணாவது அலமாரில தேடினீங்களா?  இல்லைன்னா சதீஷைக் கேளுங்க...  அவருக்குத் தெரிந்திருக்கும்..."

"ஸார்..  ரெஜிஸ்தரையே கேக்கறாரு ஏ ஓ.." - எதிர்முனை.

மறுபடியும் என் கண்கள் துழாவ, ஒரு வரிசையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தவரின் முன்னால் அவரை மறித்து நின்று கையைக் குவித்து நீட்டினேன்.  போனில் பேசிக்கொண்டே கையை நீட்டிய என்னை வினோ(ரோ)தமாகப் பார்த்தார் அவர்.

"உங்களுக்கென்ன கஷ்டம்?  கேட்டா கொடுக்க வேண்டியதுதானே?" எதிர்முனைக்கு பதில் சொல்லியபடியே கையை அவர்முன்னே நீட்டி மறுபடி ஜாடையில் வலியுறுத்தினேன்.  கீழே நாற்காலியில் அமர்ந்திருந்த இரு மாமிகள் என்னை அல்லது எங்களை பார்த்த வண்ணம் இருந்தனர்.

அவர் நகர முற்பட, சட்டென மூன்று விரல்களைக் குவித்து அட்சதையை எடுக்கும் முகத்தான் கப்புக்குள் கைவிட்டேன்.   பாதாம் பால் கைகளில் ஒட்ட, கைகளை வெளியே எடுத்து உதறினேன்.

அது கீழே இருந்த மாமியின் அழகான வயலட் பட்டுப்புடைவையில் தெறிக்க, அவர் அதைத் துடைத்தபடியே முறைக்க, 

இப்போது நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன்; அசடு வழிந்தேன்.

சரியாக அதே நேரம் அட்சதை கொடுப்பவர் (அதே போன்றதொரு பேப்பர் கப்பில்) அட்சதையை விநியோகிக்க என்னை நெருங்கி நீட்ட, இப்போது மறுபடி என் கை அவருக்காய் நீண்டதும் பாதாம்பால் காரருக்கும் விஷயம் புரிந்து (நல்லவேளையாய்) புன்னகைத்தார்.

அட்சதைன்னு நினைச்சுட்டீங்களோ..  இருங்க..  கப்பை தூக்கிப் போட்டுட்டு வர்றேன்"  என்றவர் "மாமிதான் பாவம்" என்றார் இலவச வம்பு இணைப்பாய்...

மாமி சிரிப்பதா முறைப்பதா என்று முடிவாகாமல் இரண்டையும் இணைத்து ஒரு மாதிரியாய் முகத்தை வைத்துக் கொள்ள, அட்சதையை வாங்கிய நான் ஆசீர்வாதம் செய்ய மேடைக்கு அருகில் விரைந்தேன். 

அட்சதையை இங்கிருந்தே தூக்கி மேடையை நோக்கி எறியும் அளவு நான் தெரியாதவன் இல்லை!

நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த பாஸ் சிரிப்பை அடக்கிக் கொண்டு "நானெல்லாம் ஃபோன் பேசினாலும் கவனமா இருப்பேன்" என்றபடியே மேடையிலிருந்தே சேகரம் செய்திருந்த அட்சதையை என்னிடம் நீட்டினார்.  என் கையில் வைத்திருந்த அட்சதையை அவரிடம் காட்டி விட்டு ஜோடியாய் சென்று 'வடு'வை ஆசீர்வாதம் செய்தோம்.

இப்படியாகத்தானே ஒரு அசடு வழிந்த அனுபவம் அட்டகாசமாக நடந்தேறியது....

இன்னும் மூன்றாவது சம்பவம் பாக்கி இல்லையா...  வாருங்கள்..

=============================================================



நா.பா.வின் பத்திரிகையுலக வாழ்க்கை என்பது கல்கி வார இதழில் அவர் துணையாசிரியர் பொறுப்பை ஏற்றதோடு தொடங்கியது. 

மதுரை சேதுபதி மேநிலைப் பள்ளியில் ஆசிரியராக நா.பா. இருந்த காலம் அது. அப்போது கல்கி அதிபர் சதாசிவம் அவரது எழுத்தாற்றலை மெச்சி கல்கிக்கு அவரை 1960ல் அழைத்தார் நான்கு ஆண்டுகள் கழித்து கல்கியிலிருந்து விலகும்போது நா.பா.வுக்கு சதாசிவத்திடம் மனத்தாங்கல் ஏற்பட்டது உண்மை. தமது பணி நீக்கம் தொடர்பான விஷயங்களைத் தாமரை இதழில் அவர் காட்டமாக எழுதி வந்ததும் உண்மை. ஆனால் இந்த மனக் கசப்பெல்லாம் பின்னாளில் மங்கி மறைந்தே போனது. தாம் தினமணி கதிர் ஆசிரியப் பொறுப்பை ஏற்றபோது, சதாசிவம் அவர்களையும் அவரது துணைவியார் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களையும் நேரில் சென்று வணங்கி ஆசிபெற்று வந்தார் நா.பா. அவ்விருவர் மேலும் நா.பா.வுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் அளவில்லாதது. தமது எழுத்துலகப் புகழுக்கு சதாசிவம் அவர்கள் தான் மூலகாரணம் என்ற நன்றியுணர்ச்சியும் நா.பா.வுக்கு இறுதி வரை இருந்தது.
நா. பா. வின் புகழ்பெற்ற நாவல்களெல்லாம் கல்கியில் தான் வெளிவந்தன. கல்கியில் பணிபுரிந்தபோதும் சரி, கல்கியை விட்டு விலகிய பிறகும் சரி, அந்த இதழ் அவரது எழுத்துக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தது. குறிஞ்சி மலர், பொன்விலங்கு, பாண்டிமாதேவி, சத்தியவெள்ளம், துளசிமாடம் எனப் பலப்பல படைப்புகளை நா. பா. கல்கியில் எழுதினார். தீரன் என்ற புனை பெயரில் பல அரசியல் விமர்சனங்களை எழுதினார். கல்கிக்கும்
நா.பா.வுக்கும் இருந்த எழுத்துறவைத் தமிழ் வாசகர்கள் ஆர்வத்தோடு வரவேற்றார்கள்.

நா.பா.எழுத்து பிற பத்திரிகைகளில் இடம் பெற்றபோது கிடைத்த புகழை விடக் கல்கியில் இடம் பெற்றபோது கிடைத்த புகழ் கூடுதல் என்பதும் உண்மைதான்.

கல்கி வாசகர்கள் நா.பாவின் எழுத்துப் பாணிக்குப் பெரிதும் பழகியிருந்தார்கள். அதை மதித்துப் போற்றினார்கள்.

நா பா.வின் எழுத்துக்கு கல்கி இதழ் மிக அதிக விளம்பரம் கொடுத்து அவரைப் பெருமைப்படுத்தியது. அவரது தொடர்கதைகள் வெளிவரும்போது, தொடர்கதைக் காட்சிகள் கல்கி அட்டையை வண்ணப் படங்களாக அலங்கரித்தன. அவரது தொடர்கதை தொடங்குவதை அறிவிக்கும் வண்ணப் போஸ்டர்கள் தமிழகமெங்கும் சுவர்களை அலங்கரித்தன.

கல்கி பத்திரிகை மூலம் நா. பா. பெற்ற பெரும்புகழே அடித்தளமாக அமைந்து அவரது இலக்கிய வாழ்க்கையை நிலை நிறுத்தியது என்று சொல்வது மிகையாகாது.
பின்னாளில் தீபம் இதழாசிரியராகவும், தினமணி கதிர் இதழாசிரியராகவும் மாபெரும் படைப்பாளியாகவும் அவர் உயர்த்தோங்கிச் சாதனை புரிந்ததற்கெல்லாம் ஆதாரமாக அமைந்தது அவரது கல்கி வாழ்வு எனலாம்.
- திருப்பூர் கிருஷ்ணன்
நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்.  நன்றி R கந்தசாமி ஸார்.
=======================================================================================================

நம்மால் அடுத்தவர் கண் கலங்கினால், அதனால்  நமக்கு சந்தோஷம் ஏற்படுகிறது என்றால், 'கொடுமைக்காரன் நீ' என்று சொல்லத் தோன்றுகிறதா... 

இருங்கள்... 

கொஞ்சம் விளக்கினால் புரியும் உங்களுக்கு..

வெய்யிலின் வெம்மை பற்றி கவிதை எழுத முயற்சித்துக் கொண்டிருந்தபோது (சென்ற வாரங்களில் வெளியானது) வீட்டுக்கு வந்திருந்த அந்த விருந்தினர் (85 வயது) அருகில் வந்தார்.  "என்ன எப்போ பார்த்தாலும் ஏதோ படிச்சுக்கிட்டு, எழுதிகிட்டே இருக்கீங்க?" என்று அருகில் வந்தவர், வெய்யில் பற்றி நான் எழுதி இருந்ததை கணினித் திரையில் படித்து சிலாகிக்க,  உடனே நான் சந்தர்ப்பத்தை உபயோகித்து அவரைத் தப்ப விடாமல் நாற்காலியில் அமர்த்தி, அப்போது பேஸ்புக்கில் 'மெமரீஸ்' பகுதியில் வந்திருந்த என் பழைய கவிதை ஒன்றை படித்துக் காட்டினேன்.  அது ஏற்கெனவே பிளாக்கிலும் பகிர்ந்திருந்தேன்.  அதைப் படித்த அவர் கண்கலங்கிப் போனார்.  மனைவியை இழந்தவர் அவர்.  ஏதோ சொல்ல வந்தவர், பேச முடியாமல் சட்டென எழுந்து அப்பால் நகர்ந்து விட்டார்.  இன்று அதை மீள்பதிவு செய்கிறேன்.

இன்னும் எத்தனை காலமடி
இருப்போம் இவ்வுலகில்
இணைந்தே இருப்போம் அதுவரையில்
உறைந்து போகட்டுமடி
இந்த கணம் - என் மனம்
தாங்குமாடி உன் அன்பின் கனம்.
வாழ்வாங்கு வாழ்ந்த காலமடி
வருந்தியதில்லை ஒருநொடி
அது என்ன
இளமையில் இருந்ததைவிட
இப்போது இவ்வளவு அழகாக இருக்கிறாய்.
நின்றுபோகட்டும் இந்தநொடி

இந்த மடி
இன்று செய்த பாக்யமடி
அன்பை உணர்ந்த நேரமடி
ஆசை வார்த்தை வேண்டாமடி
சொந்தமடி நானுனக்கு
பந்தமடி நீ எனக்கு
வந்தென்னை ஆட்கொண்டாய்
வராது வந்த மாமணி
நீ எனக்கு.

============================================================================================

நியூஸ் ரூம் :  


பானுமதி வெங்கடேஸ்வரன் :

கடனை திருப்பிக் கேட்டதால் ஜெயின் சமூக மடாதிபதியை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, ஆழ்துளை கிணற்றில் வீசியிருக்கின்றனர்.

90 அடி நீள இரும்பு பாலத்தை திருடிய பலே திருடர்கள். மும்பை மலாடில் கால்வாய் ஒன்றின் மேல் கட்டப்பட்ட தார்காலிக இரும்பு பாலம், நிரந்தர பாலம் கட்டப்பட்டதும் பிரித்து கேட்பாரின்றி போடப்பட்டிருகிறது. திடீரென்று அந்த இரும்பு பாலம் கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரும்புத் துண்டுகளை காணவில்லை. பாலம் கட்டுவத்ற்காக போடப்பட்ட ஒப்பந்த கம்பெனியின் தொழிலாளர்கள் திருடியிருக்கிறார்கள். - அரசு யந்திரத்தின் மெத்தனத்திற்கு மற்றோர் உதாரணம்.

ஆன் லைனில் திருமணத்தை பதிவு செய்யலாம் என்று கர்நாடக முலமைச்சர் அறிவிப்பு. ஆன் லைனில் திருமணத்தை பதிவு செய்யும் சட்டம் லவ் ஜிஹாத்திற்கு உதவி செய்யும் என்பதால் அதை தடை செய்ய வேண்டும் என ராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் வேண்டுகோள்.

இத்தாலியின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்த, 84 வயதான பெர்லுஸ்கோனி சென்ற மாதம் மரணமடைந்தார். அவர் தன்னுடைய காதலியான, 33 வயதான மார்டா பேசினாவுக்கு 900 கோடி சொத்து எழுதி வைத்திருக்கிறார். மார்டாவோடு பெர்லுஸ்கோனிக்கு உறவிருந்ததே தவிர மணந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சின்ன வெங்காயம் கிலோ ரூ.240/- - நறுக்காமலேயே கண்களில் நீர் வருகிறது.

லோக் சபா தேர்தலில் போட்டியிட்லாமா? என்று நடிகர் விஜய் ரசிகர்களோடு ஆலோசனை. – ம்ம்ம்!


பிச்சை எடுத்தே ஏழரை கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார்.  மும்பையின் பரபரப்பான இடத்தில் இரண்டு வீடுகள் இரண்டு படுக்கைஅறை  வசதியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்திருக்கிறார்.  மனைவியும் உறவினரும் சொந்தமாக கடை வைத்து விட்டனர்.  ஆயினும் இவர் தொடர் ந்து பிச்சை எடுக்கிறாராம்.  மாதம் அறுபதாயிரம் முதல் எழுபத்தைந்தாயிரம் வரை சம்பாதிக்கிறாராம்.

சட்சட்டென இரண்டு மூன்று போலீஸ் தற்கொலைகளுக்குப் பின், அவர்களுக்கு மன அழுத்தம் இருக்கும் என உணர்ந்து ஒருவழியாய் ''போலீசார் உரிய காரணங்களோடு விடுமுறை கேட்டு விண்ணப்பித்தால், விடுமுறை வழங்க வேண்டும். மன அழுத்தத்தை போக்க புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்'' என்று சொல்லி இருக்கிறார் DGP.

பேசுவதற்கு எல்லோருக்கும் வாய் இருக்கிறது.  ஆனால் யாருக்கும் கேட்பதற்கு காதுதான் இல்லை.  அல்லது கேட்கும் மனம் இல்லை; நேரம் இல்லை!  மனபாரத்தை இறக்கி வைத்தாலே நிம்மதிதான்.  அதற்கு உதவுபவர்களுக்கு கோடி புண்ணியம்!  அந்தச் செயலைச் செய்ய, உங்கள் பிரச்னைகளை காது கொடுத்து கேட்க என்று காசு எதுவும் வாங்காமல் இலவசமாய் சேவை செய்கிறார்கள் இரண்டு இளைஞர்கள்.

அந்த பங்களாவில் என்ன நடக்குதுன்னே தெரிலைங்க..   இளம்பெண்கள் அங்கு விரும்பிச் செல்கிறார்கள்.  திரும்ப விரும்புவதில்லை!  போலீசுக்கு சொன்னாலும் உள்ளே சென்று என்ன என்று பார்க்க முடிவதில்லை.  உள்ளே சென்ற ஒரு இளம்பெண் 'நான் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை" என்று சொல்லும் அவலமும் நடக்கிறது..  என்னவாம் அங்கே?

========================================================================================================

பொக்கிஷம் :









77 கருத்துகள்:

  1. அட்சதை சம்பவம் புன்னகை வரவைத்தது. பாதாம் பால் கையுடன் அட்சதையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   கையை துடைத்துக் கொண்டுதான்..  அட்சதை போடும் அவசரத்தில் கைகழுவ தண்ணீருக்கு எங்கே ஓட?!

      நீக்கு
  2. நம் விசேஷங்களில் பல சடங்குகள் அர்த்தமில்லாமல் சக்கையைக் கடைபிடிப்பதாக இருக்கிறதோ?

    பதிலளிநீக்கு
  3. மனைவி பற்றிய கவிதை மீண்டும் படித்து நெகிழ்ந்தேன். ஒருவரின் அருமை, அவர் இல்லாதபோது இன்னும் அதிகமாகவே தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். திருமண பந்தத்தில் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து உணர்ந்து கொள்ளும் முதிய, கனிந்த தருணங்கள்..

      நீக்கு
  4. சென்னை... பழைய படங்கள்.... இவைகளைப் பார்க்கும்போது அந்த இடங்களில் மனை வாங்கிப் போட்டிருக்கலாமே என்றுதான் எனக்குத் தோன்றும் (ஒரு இடம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   இப்போது 200, 2005ல் தவற விட்ட இடங்களே வருந்த வைக்கின்றன!

      நீக்கு
  5. அட்ஷதையோடு அசடு வழிந்த சம்பவம் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
  6. கவிதை வரிகள் மனதை நெகிழ வைத்தது ஜி

    சென்னைப்பட்டணம் பழைய படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  7. கவிதை - வாரமலர்களில் வந்துபோகும் ஒன்றைப் போன்றிருக்கிறது. சாரி!
    கருத்தைச் சொல்லவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்ல வருவது சரியாய்ப் புரியவில்லை என்றாலும் நன்றி உங்கள் கருத்துக்கு.

      நீக்கு
  8. முதுகு அட்சதை, பால் அட்சதை, அடுத்து என்ன அட்சதை?
    போட்டோ படம் நீங்கள் அட்சதை தூவிய நிகழ்வா?

    பாட்டும் படமும் இணைந்து வெகு பொருத்தமாக இருந்தது; "உன் கண்ணில் நீர் வழிந்தால்" பாடலும் காட்சியும் மனத்திரையில் வந்தது.

    மதராசபட்டினம் போட்டோக்கள் அருமை. "நினைத்து நினைத்து நெஞ்சம் உருகுதே"

    வாய் ஓயாமல் பேசுபவர்களைக் கண்டால் "அறுவை" என்று ஓடும் மக்களிடையில் ஒரு வித்யாசமான ஜோடி இளைஞர்கள் (நியூஸ் ரூம்). நல்லது. இதே போல தான் நானும். காரணம் shut off; புரிகிறதா?

    ஜோக்ஸ் இல்லாமல் வாசனை இல்லாத கதம்பம் ஆகி விட்டது இன்றைய பதிவு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்ததும் அட்சதை அனுபவமாகத்தான் இருக்கும் என்று புரிந்து கொண்டு விட்டீர்கள்..   அடுத்த வியாழன் தெரிந்து விடும்!

      ஆம்.  அந்தப் பாடல் நினைவுக்கு வராமல் போகாது.  சில வருடங்களுக்கு முன் இணையத்தில் சக்கைபோடு போட்ட படம் இது!

      ஓ..  சதாரம் பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள்!
      நீங்கள் ஓயாமல் பேசுபவர் என்று சொல்ல வருகிறீர்களா?  

      அச்சச்சோ..   ஜோக்ஸ் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று சொன்னீர்களே என்று இந்த வாரம் அதை ஒதுக்கி வைத்தேன்!

      நீக்கு
  9. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. பழைய படங்கள்!...

    சென்னையை எனக்குப் பிடிக்காது தான்..

    ஆனாலும்
    பழைய படங்களைப் பார்க்கும் போது அந்த இடங்கள்
    அப்படியே இருந்திருக்கக் கூடாதா.. என்று இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பழைய சென்னைப் படங்கள் எனில் ரொம்பப் பிடிக்கும். ஆனால் சென்னையில் வாழப் பிடிக்கிறதில்லை.

      நீக்கு
    2. உங்கள் இருவர் கருத்துதான் எனக்கும்.  சென்னைப்பிடிக்காது.  ஆனால் வாழுமிடம் இதுதான்!

      நீக்கு
  11. சென்னை எனக்குப் பிடிக்காது என்றாலும் திரு மயிலாபுரி பிடிக்கும்.. திரு அல்லிக்கேணியை மருந்தீசரை மிகவும் பிடிக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருந்தீஸ்வரர் கோயில் திருவான்மியூர் அல்லவோ? அல்லிக்கேணியில் பார்த்த சாரதி தான் பிரபலம்.

      நீக்கு
    2. அவர் திருவல்லிக்கேணியை,மருந்தீசரை என்று கமா போட்டு சொல்கிறார் என்று நினைக்கிறேன் கீதா அக்கா.

      நீக்கு
  12. ஹாஹாஹாஹா முதல் பகுதியில் உங்கள் அசடு வழிதலையும் அந்த அசட்டு வழிதலோடு அட்சதையையும் அந்த அட்டகாசத்தையும் ரசித்தேன்!!!! விஷுவலாக நினைத்துக் கொண்டே!!!!!

    தர்மசங்கடமான சூழல். ஆஃபீஸ் பிரச்சனைகள் இங்கு அட்சதை போடுவது....ம்ம்ம்ம் ஆமா அதெப்படி பாஸ் ஃபோன் பேசிக் கொண்டே இதையும் கவனிப்பேன் என்று சொன்னது...அந்த தெக்கினிக்கை கத்துக்கணும் அவங்ககிட்ட!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகப் பெண்களுக்கு ஒரே சமயத்தில் அஷ்டாவதானியாய் எல்லாவற்றையும் கவனிக்கும்/செய்யும் திறன் உண்டு.

      நீக்கு
    2. கீதா..  உங்களுக்குத் தெரியாதா..  பாஸ் தினசரி 17 மணி நேரம் போன் பேசிக்கொண்டே தான் எல்லா வேலையும் செய்வார் என்று...!

      நீக்கு
  13. முதுமையின் ஒய்வில் கணவரின் மடி மீது நிச்சிந்தையாக தலை சாய்த்திருக்கும் மனைவியும் அவரை ஆதூரத்துடன் பார்த்திருக்கும் கணவருமான புகைப்படமும் அதற்கான கவிதையும் மனதை நெகிழ வைத்தது.
    மதராசப்பட்டணத்தின் புகைப்படங்கள் அருமை!

    பதிலளிநீக்கு
  14. அறுபதுகளில் நா.பார்த்தசாரதியின் எழுத்துக்கு மயங்கியிருந்த இளமைக்காலங்கள் மறுபடியும் நினைவுக்கு வந்தது. குறிஞ்சி மலரின் அரவிந்தன் நீறைய பேர்களுக்கு அப்போதைய ஆதர்ச ஹீரோ! லதாவின் ஓவியங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன! பொன் விலங்கு எழுதும்போது ஒவ்வொரு வாரமும் பொன்மொழிபோல இதயத்தை நெகிழ வைக்கும் வரிகள் சின்னதாய் கட்டம் கட்டி நடுவில் வரும்! அந்த வரிகளைப்படிப்பதற்காக காத்திருப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவற்றைத் தனியான ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி அதை இன்னமும் பத்திரமாக வைச்சிருக்கேன். நா.பா.வை முதல் முதலாகச் சித்தப்பா வீட்டில் பார்க்க நேர்ந்தப்போ இனம் புரியாததொரு பரபரப்பு. பரவசம்.

      நீக்கு
    2. பொன் விலங்கு சூப்பர் ஹிட் நாவல் இல்லையா?

      நீக்கு
  15. நாபா தகவல்கள் வெகு சுவாரசியம்.

    ஸ்ரீராம், உங்கள் கவிதை ரொம்ப ரொம்ப அருமை. மனதை நெகிழ்ச்சியடைய வைத்த ஒன்று. இதை நான் முன்பு எடுத்து வைத்துக் கொண்ட நினைவும் இருக்கிறது.

    இந்தப் படத்துக்கு எபியில் இரு கதைகள் எழுதிய நினைவும்...அப்போது இது என் தாத்தா பாட்டி போலவே அப்படியே அச்சாக என்றும் சொல்லி என் உறவுகளுக்கு அனுப்பிக் கேட்கவும் செய்தேன். ரசித்த படம் இது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இந்தக் கவிதையும் நினைவில் இருக்கு. இதை ஒட்டி வந்த கதைகளும்.

      நீக்கு
    2. ஆம்.  முன்பு கவிதையும் கதைகளுமாய் இந்தப் படத்துக்கு கேட்டு அவை வெளியாகின.

      நீக்கு
    3. இன்று அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் பெண் ஒருவர் நான் எழுதுவேனா என்று கேட்டு மாட்டிக் கொண்டார்.  வலையில் விழுந்த மீன்!   கவிதையைப் படிக்கக் கொடுத்தேன்.  படித்து முடித்ததும் அவர் நிமிர்ந்து ஒன்றும் பேசாமல்  நகர,சற்றே ஏமாற்றமானபோது அவர் திரும்ப என்னை நோக்க, அவர் கண்கள் சிவந்து கண்ணீர்!  நம்ப முடியாமல் மறுபடியும் அவரை நோக்கி உறுதிப்படுத்திக் கொண்டு மகிழ்ந்து போனேன்.

      நீக்கு
    4. //அவர் கண்கள் சிவந்து கண்ணீர்! // கண்ணீருக்கு பதில் சொல்லுவதாக புன்னகையோ? மாறுபட்ட ரியாக்சன்.
      Jayakumar

      நீக்கு
    5. அவருக்கு யார் நினைவுக்கு வந்தார்களோ..., என்ன நினைவு வந்ததோ..  !

      நீக்கு
  16. நா பா - தகவலில் பகிர்ந்திருக்கும் படத்தில், மணியன், ஆவி பாலசுப்ரமணியன், நாபா, எஸ் ஏ பி, கிவஜ இவர்களை கீழே பெயர் பார்க்காமலேயே கண்டுபிடிக்க முடிந்தது மற்றவர்களை டக்கென்று முடியலை

    கீதா

    பதிலளிநீக்கு
  17. சின்ன வெங்காயம் கிலோ ரூ.240/- - // நறுக்காமலேயே கண்களில் நீர் வருகிறது.// ஹாஹாஹாஹா இந்த வரிக்கு!!

    ஆ! பிச்சை எடுத்துப் படிச்சா கூட சம்பாதிக்க முடியாதது பிச்சையில்!

    கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே!!!!!!??????

    கீதா

    பதிலளிநீக்கு
  18. சென்னைப் பட்டினம் அழகோ அழகு! படங்கள் எல்லாம் ரசித்துப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. நீங்கள் பாதாம் பாலை எச்சில் பண்ணி குடித்து விட்டு, அதே கையோடு அட்சதையை எடுக்க முயன்றதால்தான் அவர் உங்களை தொட விட வில்லையோ என்று நினைத்தேன். நான் எச்சில் கையோடு அட்சதை போட மாட்டேன். கையை கழுவிய பிறகே அட்சதை போடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க.. நான் கையை கர்சீப்பில் துடைத்துக் கொண்டதோடு சரி.

      நீக்கு
  20. கல்கி-நாபா உறவு செழித்திருந்திருக்கிறது ஒரு காலத்தில் என்பது உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆனால்.. பின்னாளிலே அவர் ‘தீபம்’ பார்த்தசாரதி என்றல்லவா அறியப்பட்டிருந்தார்..

    தீபம் இதழ் உங்களிடம் காப்பி இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா உபயத்தில் சில தீபம் தொகுப்புகள் என்னிடம் உண்டு. அதில் மணிவண்ணன் என்ற பெயரில் நா பா எழுதி இருப்பார். ஆத்மாவின் ராகங்கள் என்று நினைவு.

      நீக்கு
  21. ஓல்ட் மெட்ராஸ் அழகு! ஆசாரிகள் பூணூல் அணிந்திருப்பதை கவனித்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பத்தூரில் எங்க வீட்டருகே அடுத்த வீட்டில் குடி இருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஆசாரி குடும்பத்தினர் வருஷா வருஷம் ஆவணி அவிட்டம் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.நான்காம் வர்ணத்தவர் தவிர்த்த மற்ற 3 வர்ணத்தவருக்கும் உபநயனம் உண்டு. காயத்ரி உபதேசமும் உண்டு. இது பற்றி என்னோட உபநயனம் என்னும் மின்னூலில் விபரமாக எழுதி இருப்பேன்.

      நீக்கு
    2. சில செட்டியார் வகையறாக்களும் உபநயனம் போட்டுக் கொள்வார்கள்.'

      நீக்கு
  22. பத்திரிகை ஆசிரியர்கள் குழுவில் முத்லில் கண்களில் பட்டவர் திரு. எஸ்.ஏ.பி. எனக்கு மிகவும் பிடித்தவர். அவர் உங்களைப் போல முகம் காட்ட மாட்டாரே..? இந்த புகைப்படம் மிகவும் அரியதுதான். நிஜமான பொக்கிஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னாட்களில் எஸ் ஏ பி முகம் காட்டி இருக்கிறார் என்று நினைவு.

      நீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  24. //அட்சதைன்னு நினைச்சுட்டீங்களோ.. இருங்க.. கப்பை தூக்கிப் போட்டுட்டு வர்றேன்" என்றவர் "மாமிதான் பாவம்" என்றார் இலவச வம்பு இணைப்பாய்...//

    இரண்டாவது சம்பவம் உங்கள் தர்மசங்கடத்தை சொல்கிறது.

    "//நானெல்லாம் ஃபோன் பேசினாலும் கவனமா இருப்பேன்" என்றபடியே மேடையிலிருந்தே சேகரம் செய்திருந்த அட்சதையை என்னிடம் நீட்டினார்.//
    எதற்கு வந்தோமோ அதிலேயே கவனம் பாஸூக்கு.. நீங்கள் அலுவலக வேலையில் கவனமாக இருந்தீர்கள்.

    //ஜோடியாய் சென்று 'வடு'வை ஆசீர்வாதம் செய்தோம்.//

    அதுதான் வேண்டும் மணமக்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.  அலுவலகத்தில் அப்போது ஒரு எரியும் பிரச்னை ஓடிக் கொண்டிருந்தது!

      நீக்கு
    2. I think it was upanayanam. Vadu upanayanam sethi kollum paiyar

      நீக்கு
    3. உபநயனம் செய்து கொள்ளும் பையரை "வடு" என்பார்கள் என நினைக்கிறேன்.

      நீக்கு
    4. நினைக்கிறீர்களா?  அதேதான் கீதா அக்கா..  உங்களுக்குத் தெரியாததா?

      நீக்கு
  25. நா.பா அவர்களை பற்றிய செய்தியும் பழைய புகைப்பட பகிர்வும் அருமை.

    உங்கள் கவிதை முன்பு வந்த போது நிறைய பேசினோம்.
    //நின்றுபோகட்டும் இந்தநொடி//

    நெகிழ்வு. "முழுமை பெற்ற காதல் என்றால் முதுமைவரை கூட வரும் "என்ற பட்டுக்கோட்டை பாடல் வரி நினைவுக்கு வரும்.

    உண்மையான அன்பு வயதாக ஆக ஆக கூடி கொண்டு போகும்.
    முதுமை காலத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவு மிகவும் அவசியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அக்கா.  நான் அவர்கள் அண்ணன் தங்கை என்று உருவகப்படுத்தி கூட ஒன்று எழுதினேன்.  அது எடுபடவில்லை!  நீங்கள் pbs பாடல் வரிகளை நினைவு கூர்கிறீர்கள்.  நான் அந்த மூன்று எழுத்துகளை ஜம்பிள் செய்து spb குரல் பாடல் ஒன்றை நினைவு கூர்கிறேன்..  "வயதோடு வந்தாலும் காதல்..  அது வயதாகி வந்தாலும் காதல்...

      :))

      நீக்கு
  26. //பானுமதி வெங்கடேஸ்வரன் வழங்கிய நியூஸ் ரூம் கடைசி செய்தி திடுக்கிட வைக்கிறது.

    கை ரிக் ஷா படம் நிறைய இருந்த காலத்தை சொல்கிறது, அதை பார்த்து வருத்தமும் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், திடுக்கிட வைத்த கொடூரம் அது.

      நீக்கு
    2. கைரிக் ஷா பார்த்தால் எனக்கு சிவாஜியும் நாகேஷும் நினைவுக்கு வருகிறார்கள்.  ஏன், மெஹமூதும் கூட...

      நீக்கு
    3. மெஹ்மூத் அல்ல, ராஜேஷ் கன்னா

      நீக்கு
  27. அட்சதை சிரிப்பை தந்தது.


    பொக்கிசம் அரிய படங்கள்.

    பதிலளிநீக்கு
  28. இரண்டாவது சம்பவம்.. கற்பனை செய்து பார்க்க முடிகிறது உங்கள் எழுத்து நடையின் மூலமாக :)!

    கவிதை நெகிழ்வு. பதிவின் தலைப்பானது கூடுதல் கனம்.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!