திங்கள், 31 ஜூலை, 2023

"திங்க"க்கிழமை  :  தஞ்சாவூர் தயிர் பச்சடி - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 தஞ்சாவூர் தயிர் பச்சடி..

*****

மாதுளம் பழம் ஒன்று
வெள்ளரிப்பிஞ்சு 2
கேரட் 2
நடுத்தர பல்லாரி வெங்காயம் -  1
பச்சை மிளகாய் - 3 கொத்துமல்லித் தழை, புதினா - சிறிதளவு
கல் உப்பு தேவைக்கேற்ப
(விரும்பினால்)
சீரகப் பொடி அரை tsp


ஒரு லிட்டர் தரமான பாலைக் காய்ச்சி உறைக்கு ஊற்றினால் 700 கிராம் கட்டித் தயிர் கிடைக்கலாம்..

இப்படி இயற்கையான தயிர் முக்கியம்..

தேவையான கல் உப்பினை நுணுக்கிக் கொள்ளவும்..

மாதுளம் பழத்திலிருந்து முத்துக்களை உதிர்த்து  உள்ளங்கையளவு எடுத்துக் கொள்ளவும்..

வெள்ளரிப் பிஞ்சு கேரட்  - இவற்றை சன்னமாக துருவிக் கொண்டு பல்லாரி வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்..

கொத்துமல்லித் தழை, புதினா இவற்றையும் சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்..

பச்சை மிளகாய்களை மட்டும் காம்பினை நீக்கி விட்டு நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.. மெல்லிய துகள்களாக நறுக்கி கலந்து விட்டால் ஆவலுடன் உண்ணும் குழந்தைகளிடம் களேபரத்தை உண்டாக்கி விடலாம்..

" அட.. தயிரு எவ்வளவு..ன்னு சொல்லாம சுத்தி வளைக்கிறியே!.. "

தயிர் 200 கிராம் ..

(நமது செய்முறைகளுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட  புதிய தயிர் மட்டுமே.. இதற்கு  மாற்று வேறு எதுவும் இல்லை..)

தயிரை மெல்லிய துணியில் வடிகட்டி எடுக்கவும்.. 

வடிகட்டி எடுத்த தயிருடன் உதிர்த்தும் துருவியும் நறுக்கியும் வைக்கப்பட்டுள்ள அனைத்தையும் நன்றாகக் கலந்து  சாப்பிடுவதற்கு சிறிது முன்பாக சீரகப் பொடியையும் நுணுக்கி வைத்துள்ள கல் உப்பினையும்  போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும்..

இவ்வளவு தான்.. பாரம்பரிய தஞ்சாவூர் தயிர்ப் பச்சடி தயார்..

முன்னதாகவே உப்பிட்டு விட்டால் பச்சடி நீர்த்துப் போய் இருக்கும்..

இங்கே சொல்லப்பட்டிருப்பது இரண்டு பேர் தாராளமாகச் சாப்பிடக் கூடிய அளவு... 

மேற்கொண்டு தாங்களே கணக்கிட்டுக் கொள்ளவும்..

இந்தத் தயிர்ப் பச்சடி பகல் உணவுக்கு மட்டுமே ஏற்றது..  பசு நெய்யுடன் தயாரிக்கப்பட்ட - காய்கறி கலவை  சாதத்திற்கும் தேங்காய்ப் பால் சாதத்திற்கும் ஏற்றது.. 

இந்தத் தயிர்ப் பச்சடியை மதிய உணவின் போது  ஆ அமர சாப்பிடலாம்..

அல்லது மதிய உணவிற்கு முன்னதாகவே பத்தரை மணியளவில் வெளுத்துக் கட்டி விடலாம்!..

அது உங்கள் சாமர்த்தியம்!..

***

34 கருத்துகள்:

  1. அட....தஞ்சாவூர் தயிர் பச்சிடியா? செய்முறை நன்றாகவே இருக்கிறது.

    வெங்காயம் கலக்கவில்லை என்றால் கலந்த சாத்த்திற்கோ இல்லை டயட்டில் இருப்பவர்கள் வெறும்ன சாப்பிடுவதற்கோ நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை அவர்களுக்கு..

      /// டயட்டில் இருப்பவர்கள் வெறும்ன சாப்பிடுவதற்கோ நன்றாக இருக்கும்..///

      இதுதான் முக்கியம்...

      பச்சடி தான்
      பச்சடியே தான்!...

      நீக்கு
    2. என் அம்மா, சிறு வயதில் எனக்கு வெண்டைக்காய் கிச்சடி செய்துதருவார். மாங்காய் பச்சடி, வெண்டைக்காய் கிச்சடி. ஒன்று இனிப்பு, இன்னொன்று தேங் மிளகாய் அரைத்து மோர்/தயிரில் கலக்குவது. திருமணம் ஆனபின், மனைவி கிச்சடிக்குப் பதில் பச்சடி என்ற வார்த்தையை உபயோகித்தார். எனக்கு ரொம்ப வருடமாமனதில் உறுத்தல். எப்படி கிச்சடி பச்சடியாயிற்று என்று. ஓரிரு மாதங்களுக்கு முன், குக் வித் கோமாளி சிவாங்கியின் அம்மா, கிச்சடி என்ற சொல்லை உபயோகித்து அவங்களின் கேரளப் பகுதியில் கிச்சடி என்றுதான் உபயோகிப்பார்கள் பச்சடி என்றல்ல என்றார். அப்போதான் என் அம்மாவின் அம்மா...அதற்கு முந்தைய தலைமுறை கேரள சம்பந்தம் உள்ளவர்கள் என்பது புரிந்தது.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      திருநெல்வேலி பக்கமும் தயிர் கலக்காத இனிப்பு (வெல்லம்) சேர்த்தவற்றை பச்சடி (மாங்காய் பச்சடி) என்றுதான் சொல்வார்கள். கி. யோ, ப. வோ சுவையாக இருந்தால் சரிதான்.:)) கருத்தில் மற்ற தகவல்களுக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. கமலா ஹரிஹரன் மேடம்.... ஒரு திருநெவேலி ரெசிப்பியோடு பதிவு போடுங்களேன்....

      நீக்கு
    5. நெல்லை அண்ட் கமலாக்கா சேம் அதே தான் கிச்சடி, பச்சடி....கீழெ சொல்லியிருக்கிறேன்...

      நெல்லை நானும் தின்னவேலியாக்கும்!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹா....

      கீதா

      நீக்கு
  2. வெங்காயம் சேர்த்துவிட்டால் சப்பாத்திக்கோ இல்லை புலாவ் கோன்றவற்றிர்க்குச் சரிப்பட்டு வரலாம்.

    அது சரி... நல்ல வெஜிடபிள் பிரியாணி எந்த ஹோட்டல்களில் (சென்னை, கும்பகோணம்) நல்லா இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் பெரம்பூர் ஸ்ரீநிவாஸா

      நீக்கு
    2. சென்னை பிறியாணிக் கடைகளைப் பற்றி சிந்திப்பதில்லை...

      கும்மோணத்தில் கோயில் சுற்றுலா என்று கூட்டம் சேர்வதால் சமயத்துக்குத் தகுந்தபடி இதுவே அதுவாகின்றது.. அதுவே இதுவாகின்றது.. ரெண்டு வகையையும் ஒரே கடையில் செய்து விற்கின்றார்கள்..
      காசு ஒன்றே பிரதானம்...

      இங்கே தஞ்சையில் புதிய பேருந்து நிலையைத்திற்கு அருகிலும் மங்கலபுரத்திலும் ரயிலடிக்குப் பக்கத்திலும் அரண்மனைக்கு எதிரிலும் தரமான சுத்த சைவ உணவகங்கள் உள்ளன.. நான் சாப்பிட்டிருக்கின்றேன்..

      நீக்கு
    3. இதற்காகவே பெரம்பூர் செல்லப் பார்க்கிறேன். கும்பகோணம் மங்களாம்பிகாவில் மி பொடி தடவிய இட்லி 15 ரூ, சூப்பராக இருக்கும்.

      நீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று சமையற்கட்டின் பக்கம் வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..

    இன்று எனது குறிப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. இந்தக் குறிப்பினை. நான் மறந்தே விட்டேன்...

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  6. செய்முறை சிறப்பு
    இது இரண்டு நபருக்கான அளவுதானா...

    ஒரு லிட்டர் பாலில் செய்து ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு லிட்டர் தரமான பாலைக் காய்ச்சி உறைக்கு ஊற்றினால் 600 முதல் 700 கிராம் வரை தயிர் கிடைக்கலாம்..

      அதிகப்படிக்கு கணக்கிட்டுக் கொள்ளலாம்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    இன்றைய திங்களில் தங்கள் செய்முறையாக தஞ்சாவூர் தயிர் பச்சடி மிக அருமையாக உள்ளது.சுவையான குறிப்பிற்கு மிக்க நன்றி.

    அதில் சேர்க்கப்பட்ட பொருட்களும், காய்களும் சத்துள்ளவை. இந்த மாதிரியான தயிர் பச்சடியை காய்கறி கலவன் சாதனங்களுக்கு பொருத்தமாக அமையும். காய்கறிகளை துவையலாக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடும் உணவு வகைகளுக்கும் பொருத்தமாக அமையும்.நீங்கள் சொல்வது போல் இந்தப் பச்சடியை தனியாகவும் சாப்பிடலாம்.

    தயிரை வடிகட்டும் போது (மெல்லிய துணியானாலும்) அது சரியாக வடிபடுமா என்ற சந்தேகம் மட்டும் தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. /// தயிரை வடிகட்டும் போது (மெல்லிய துணியானாலும்) அது சரியாக வடிபடுமா என்ற சந்தேகம்///

    அதிகப்படியான தண்ணீர் வழிந்து விடுவதற்குத் தான்..

    திரட்சியான தயிருடன் நீர்ச்சத்துள்ள காய்கறிகள் சேறும் போது மேலும் நீர் தளர்வு ஆகும்...

    அதனுடன் உப்பு சேர்க்கப்படும் போது சற்றே தளதளத்து இருக்கும்...

    இதையெல்லாம் தற்போது கவனித்துச் செய்கின்றார்களா தெரியவில்லை..

    தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  10. பச்சடியா.. கிச்சடியா!..

    இயற்கையான தயாரிப்பு பச்சடி..
    அடுப்பில் ஏற்றி செய்தால் கிச்சடி!...

    ஆனால் மாங்காய் வெல்லப் பச்சடி மட்டும் விதி விலக்கு..

    பதிலளிநீக்கு
  11. ஆஹா கிச்சடி!!! ராய்த்தா!!!! தேங்காய் இல்லாததால். அருமை அருமை....துரை அண்ணா,

    நாங்கள் கிச்சடி என்போம்.உப்பு தேங்காய் பமி அரைத்துச் சேர்ப்பதை..

    வெல்லம் போட்டுச் செய்வதை பச்சடி என்போம். திருநெல்வேலி, கேரளத்துப் பகுதியில்.

    கல்யாணம் ஆனதும் நிறைய விருந்தினர் வருகை விருந்து என்று இருக்குமே புகுந்த வீட்டில் அப்ப பரிமாறும் போது பச்சடி எடுத்துவா என்றதும் நான் தேடினேன் தேடினேன்...எங்கே என்று. கேட்கவும் பயம். கேலி செய்வாங்களோன்னும், இதுகூடத் தெரியாதா என்ன சமையல் செய்யப் போறியோ சமையலே தெரியாதான்னு...சொல்வாங்களோன்னு பயம். எல்லாரும் தஞ்சாவூர், சென்னைக்காரர்கள் நான் மட்டுமே தின்னவேலிக்காரி அதுவும் மலையாளத்து வாசனையுடன்!!! பல வார்த்தைகள் புரியவே புரியாது. அப்புறம் தான் தெரிந்தது ஓ உப்புக் கிச்சடிதான் இங்கு பச்சடி, திதிப்புப் பச்சடி என்று சொல்றாங்கன்னு...சட்டென்று மண்டையில் உரைக்க லேட்டாச்சு. பழகிக் கொள்ள.

    கம்பை கொம்பு என்பாங்க. மேகம் கூடிருக்கு என்பதை மோடம் கட்டியிருக்கு என்பாங்க. பூ பறிச்சுட்டு வா என்பதை பூ பொறி??ச்சுட்டு வா என்பாங்க. கம்பு கொம்பு, பறி பொறி - ஆனால் உச்சரிப்பில் ரி றி ....ரி என்றால் அர்த்தமே மாறிடும் இல்லையா ? நான் இதென்ன பூவை பொரிக்கச் சொல்றாங்க என்று நினைப்பேன்...அப்பல்லாம்... நிறைய பழக்கவழக்கங்கள் கூட வித்தியாசங்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனையான விஷயம்..
      சொல்வழக்கு சுவையானது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  12. இது வீட்டில் அடிக்கடி செய்வது. அதுவும் மாதுளை வாங்கினால் நான் கொஞ்சமேனும் இப்படிச் செய்து விடுவதுண்டு.

    எல்லா பச்சைக்காய்களும் கலந்து செய்து, என் மதிய உணவு இது மட்டுமே என்றும் வைத்துக் கொள்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சைக் காய்களும் கலந்து செய்து, மதிய உணவு இது மட்டுமே என்றும் வைத்துக் கொள்வதுண்டு.

      அருமை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  13. பச்சடி சூப்பர் நலத்துக்கும் ஏற்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை..
      உண்மை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. தயிர் பச்சடி செய்முறை குறிப்பும், படமும் நன்றாக இருக்கிறது.
    முக்கிய குறிப்பு எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. அருமையான ரெசிபி! இதை அப்படியே சாலடாக சாப்பிட்டு விடலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!