ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 14 : நெல்லைத்தமிழன்

 

நான் தரிசனம் செய்த கோயில்கள் நெல்லைத்தமிழன்

ஐந்து துவாரகைகள் யாத்திரை பகுதி 14

நாம் இன்னும் அஹமதாபாத் ஸ்வாமி நாராயணன் கோவிலிலேயே இருக்கிறோம். முந்தைய பயணத்தில் இங்கு தங்கிக் குளித்துவிட்டு, கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த பிறகு மற்ற கோவில்களுக்கு பேருந்தில் சென்றோம். அடுத்த முறை, ஸ்வாமி நாராயணன் கோவிலில் விசேஷம். அதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் வரும் என்பதால் தங்குவதற்கு மற்றும் சமைப்பதற்கான வசதி கிடைக்காது என்பதால், நகரின் இன்னொரு பகுதியில் மஹாராஜா ஹோட்டல் என்ற ஹோட்டலில் தங்கினோம்அன்று சாயந்திரம் ஸ்வாமி நாராயணன் கோவில் தரிசனத்துக்குச் சென்றபோது வளாகமே ஒளிவெள்ளத்தில் இருந்தது. அப்போது எடுத்த படங்களும் இந்த வாரம், ஸ்வாமி நாராயணன் கோவில் என்ற பகுதியில் இடம் பெறுகின்றனஅதனால், ஒரே யாத்திரை, வெவ்வேறு சமயங்களில் மேற்கொள்ளும்போது ஏற்படும் மாறுதல்கள், தரிசிக்கும் இடங்களில் மாற்றம் தவிர்க்க முடியாது. அதே சமயம், யாத்திரையின் நோக்கமான முக்கியக் கோவில்கள் தரிசனம் எதுவும் விட்டுப்போகாது.

ஸ்வாமி நாராயணர் கோவில் கட்டிடக் கலை.

வெளிப்புறச் சுவற்றில் இருந்த அழகிய சிற்பங்கள்.

வளாகத்தில் இருந்த புறாக் கூட்டம். சுவாதீனமாக கையில் அமர்ந்துகொண்டு, தானியங்களைக் கொத்தித் தின்கின்றன.  (துபாயில் கையில் தோல் கையுறை அணிந்துகொண்டு, கழுகை கையில் நிற்குமாறு செய்து எடுத்த புகைப்படம் நினைவுக்கு வருகிறது. அதன் கண்ணைத் திரையிட்டு மறைத்திருப்பார்கள்)

கோவிலில் ஆஞ்சநேயர் சன்னிதியும், லக்ஷ்மி நாராயணர் சன்னிதியும்.


லக்ஷ்மி நாராயணர் மற்றும் ராதே கோபாலன் சன்னிதி


இரவில் ஒளி வெள்ளத்தில் கோவில் மண்டபம்


கோவிலில் விளக்கு அலங்காரம் கண்ணைப் பறித்தது

10 மணிக்கு காலை உணவுக்குச் சென்றோம். குடமிளகாய் சாம்பார், பீன்ஸ் கறியமுது, பச்சைத் தக்காளிக் கூட்டு, ரவா கீர், மிளகாய் பஜ்ஜி, ரசம் தயிர் என்று காலை உணவு. சாப்பிட்டு முடித்த பிறகு (அதாவது நாளின் முதல் உணவு. இரண்டாவது உணவு இரவுதான்), நாங்கள் எல்லோரும் பேருந்தில் கிளம்பி, அஹமதாபாத் பாலாஜி கோவிலுக்குச் சென்றோம்.  (15 கிமீ தூரம், 40 நிமிடங்கள்). திருப்பதி தேவஸ்தானம் பல இடங்களில் பாலாஜி கோவில்களை நிர்மாணித்திருக்கிறது. அதில் ஒன்று அஹமதாபாத்திலும் இருக்கிறது. அவங்க கோவில்கள்ல அதே புனிதத்தை (செல்போன் உபயோகிக்கக் கூடாது, தூர இருந்து தரிசனம் என்றெல்லாம்) நடைமுறைப்படுத்துகிறார்கள்


இந்த வளாகத்தினுள்ளே, கோவிலுடன், திருமண மண்டபமும் வைத்திருக்கிறார்கள்

கோவில் கோபுரம்

த்வஜஸ்தம்பத்திற்கு அப்பால் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று நடைமுறை வைத்திருக்கிறார்கள். அதனால் கோபுரத்திற்கு உள் எடுத்தது இந்த ஒரு படம்தான்.

கோபுரத்தின் முன்பு, அஞ்சனை மைந்தனும், கருடனும்


கோவிலுக்கு முன்பிருந்த அழகிய பாதை


பாதையின் ஒரு பகுதியில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் குறிக்கும் சிற்பங்கள்

கோவிலின் உள், திருப்பதி வெங்கடாசலபதி மூலவர். மிகவும் திருப்தியான தரிசனம். அதுபோல வளாகம் முழுவதுமே மிகவும் சுத்தமாகவும் புனிதத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், இருந்தது. கோவில் தென்னிந்திய பாணியில் அமைந்திருந்தது.  


திருப்பதி பாலாஜி தரிசனத்திற்குப் பிறகு அருகிலிருந்த மா வைஷ்ணவிதேவி என்ற கோவிலுக்குச் சென்றோம்.

அதனைப் பற்றி வரும் வாரத்தில் காண்போம்

(தொடரும்) 

 

26 கருத்துகள்:

  1. செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. ஓம் ஹரி ஓம்..

    இன்றைய பதிவு அருமை.. ஒளிப்படங்கள் அழகு..

    பதிலளிநீக்கு
  4. /// பாதையின் ஒரு பகுதியில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் குறிக்கின்ற சிற்பங்கள்.. ///

    திருமலை ஏற்றத்தில் அலிபிரியில் இருந்து மலை உச்சி வரை இம்மாதிரி உண்டு...

    அறிவார்ந்த மா நிலமான இங்கு இம்மாதிரி எல்லாம் பொது வெளியில் இல்லை..

    பஹூத் அச்சா மாநிலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா. ஆந்திரா தெலுங்கானாவிலும் கண்டிருக்கிறேன்

      நீக்கு
  5. /// கோபுரத்தின் முன்பு, அஞ்சனை மைந்தனும், கருடனும்... ///

    திருமலையின்
    சீர்மிகு பதிப்பு..

    பதிலளிநீக்கு
  6. அன்பின் நெல்லை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி.

      நாம் எல்லோரும் கோமதி அரசு மேடம் உடல் நிலை சீராகவும், கீதா சாம்பசிவம் மேடம் அவர்களின் கணவர் உடல் நிலை சரியாகவும் ப்ரார்த்தித்துக்கொள்வோம்.

      நீக்கு
    2. ஒன்றும் புரியவில்லை..

      இருப்பினும் மனதார பிரார்த்தனை செய்து கொள்வோம்..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    ஞாயிறு பதிவு வழக்கம் போல அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஒளி விளக்குகள் பிரகாசமாக சூழ ஸ்வாமி நாராயணர் கோவில் அழகாக இருக்கிறது. ஸ்வாமி நாராயணர் கோவில் கட்டிட கலை, சிற்பங்கள், சன்னதிகள் என அனைத்தும் நன்றாக உள்ளது. சன்னதிகளில குடி கொண்டிருக்கும் அத்தனை இறைவனையும் தரிசித்துக் கொண்டேன்.

    அங்குள்ள புறாக்களின் சுவாதீனம் வியக்க வைக்கிறது. காலை உணவுக்குப் பின் சென்ற பாலாஜி கோவிலும், அதன் அமைப்புடனான பல புகைப்படங்களையும் ரசித்தேன். திருப்பதி பாலாஜி யின் தரிசனம் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. இங்கும் பல கோவில்களில் வெங்கியின் தரிசனம் காணும் போது, இப்படி திருப்பதியில், நீண்ட நேரம் கண் நிறைய பார்த்து தரிசிக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் வரும்.

    வழக்கம் போல சிறப்பான படங்களுடன், மன நிம்மதியை தரும் இறைதரிசனத்தை எங்களுக்கு அளித்த தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவைப் படித்து விளக்கமாக கருத்துச் சொன்னதற்கு நன்றி.

      திருப்பதியில் சில விநாடிகள் தரிசனமே மன நிறைவைத் தரும். மீண்டும் தரிசிக்கும் ஆவல் எழும்

      நீக்கு
  9. ஸ்வாமி நாராயண் கோவில்கள் பல இடங்களிலும் உள்ளன. அதே போல் அக்ஷர்தாம் கோவில்களும். இரண்டும் ஒரே அமைப்பு சார்ந்ததா? அல்லது வேறு வேறு அமைப்புகளால் உருவாக்கப்பட்டனவையா? விளக்கமாகக் கூற முடியுமா?

    இன்றைய பதிவு வழக்கம்போல் என்பதால் வழக்கம் போல் இடும் கருத்துக்களையே கூற முடிகிறது. அது "சிறப்பு".

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுமே வைணவர்களால் நிர்மாணிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. பொதுவா அக்ஷ்ஷர்தாம் செக்யூரிட்டி அதிகம்

      நன்றி ஜெயகுமார் சார்

      நீக்கு
  10. கண்ணைக் கவரும் அழகிய படங்களுடன் விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  11. ஸ்வாமி நாராயணன் கோவில் பற்றி வாசித்ததும் அமெரிக்கா அட்லாண்டா நகரிலிருக்கும் சுவாமி நாராயணர் கோயில் பற்றிக் குறிப்பிடத் தோன்றியது. அழகான தாமரைத் தடாகம், உயரமான படிக்கட்டுகள்,
    மத்தியில் சலவைக் கற்களால் இழைக்கப்பட்ட பிர்மாண்ட கோயில் அது.

    ஒரே வளாகத்திலிருக்கும்
    பிர்மாண்ட வெங்கடாஜலபதி கோயில், சிவன் கோயில்.

    நகர சுற்று வட்டாரத்தில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்கள்.

    வெளி நாடுகளில் இருக்கும் ஹிந்து கோயில்கள் பற்றிய ஞானம், விவர சேகரிப்பு, அன்றாட கோயில் வழிபாட்டு நடைமுறைகள், கோயில் சார்ந்து ஹிந்து
    பண்டிகைகளைக் கொண்டாடும் நேர்த்தி, கூடவே இசைக் கச்சேரிகள், பாட்டு நடனம் என்று குழந்தைகளுக்கு நம் பரம்பரை லலித கலைகளின் தொடர்பு விட்டு விடாமல் பயிற்றுவிக்கும் அக்கறை -- இவையெல்லாம் பற்றிய தகவல் அறிவு கூட இல்லாத இங்கிருக்கும் ஹிந்து மக்களின் பெரும் கூட்டம்!

    நினைத்துப் பார்த்தால் வருத்தமாகத் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமே இல்லை ஜீவி சார்.

      நம்ம அம்மா அப்பா நம்ம கூடவே இருப்பாங்க. வாழ்க்கை எப்போதும் போல் போயிட்டிருக்கும். ஒரு நாளும், அவங்க நமக்காக எவ்வளவு கஷ்டப்படறாங்க என்றெல்லாம் சிந்திக்க மாட்டோம். கடும் வெயிலில் வெளியே சென்று மளிகை சாமான்கள் வாங்கிட்டு வரும் அப்பாவிடம், அவரைப் பாராட்டும் விதமாக எதுவும் தெரிவிக்க மாட்டோம். ஆனால் அவங்க இல்லாதபோது (மறைந்த பிறகு) அவங்களை நினைக்கும்போதெல்லாம் நம் மனதில் அந்த இழந்த காலங்கள் வெறுமையை உண்டாக்கும் இல்லையா?

      அதுபோல, இங்க இருக்கறவங்களுக்கு கோவிலின் பெருமையோ கலாச்சாரமோ ரொம்பவும் தாக்கத்தை உண்டாக்குவதில்லை. ஆனால் வெளிநாடு சென்றபின், இவற்றை நாம் miss செய்கிறோம். அதனால் அவைகளின் மீது நமக்கு இயல்பான ஈர்ப்பு அதிகமாகிறது. நாங்கள் பஹ்ரைனில் சத்சங்கம் வைத்திருந்தோம். வாரா வாரம் கூடுவோம். முடிந்தவர்கள் வாரம் மூன்று முறை கூடுவார்கள்.

      கோவிலின் சுத்தத்திற்குக் காரணம், அந்த அந்த தேசங்களின் கலாச்சாரம், அதற்கேற்ற நடைமுறைதான். நம் மக்கள் வெளிநாட்டை விரும்புவது அதன் ஒழுங்குமுறைக்கும் சுத்தத்திற்கும்தான்.

      நீக்கு
  12. பதில் சொல்ல முடியாது இருப்பது தான் பின்னூட்டங்களின் சிறப்பு.

    அந்த மாதிரி பதில் சொல்ல முடியாது திணறடிக்கும் பின்னூட்டங்களை வரவேற்பதாக ஆசிரியர் குழு அறிவிக்கலாம். :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் சொல்ல முடியாத கேள்வி என்பது கிடையாது ஜீவி சார். நமக்கு சட் என்று சரியான பதில் தோன்றாது.

      என் பெண், சிறிய வயதில், பெருமாள் பன்றி முகம் கொண்டு பூமியை கடலிலிருந்து தூக்கினார் என்று சொல்றீங்க. அப்போ பூமி கடலுக்குள்ளேயா இருந்தது? கடல் எங்க இருந்தது என்று கேட்டாள். எனக்கு அப்போ பதில் தோன்றலை.

      நீக்கு
  13. நாராயணன் கோவில் மிகவும் அழகிய படங்களுடன் தரிசனம் கிடைத்தது.

    பாலாஜி கோவிலும் வணங்கினோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!