சனி, 20 ஏப்ரல், 2024

பாட்டியும் பேரனும் பின்னே மசாலாவும் மற்றும் நான் படிச்ச கதை

 சூரத் :குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாவேஷ் பண்டாரி, தன் 200 கோடி ரூபாய் சொத்துக்களை தானாமாக வழங்கிய நிலையில், அவரும், அவரது மனைவியும் சமண துறவியராக துறவறம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.


குஜராத்தின் சபர்காந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் பாவேஷ் பண்டாரி. கட்டுமான தொழில் செய்து வரும் இவர் பல நுாறு கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரர்.

வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த இவரது 19 வயது மகள் மற்றும் 16 வயது மகன், கடந்த 2022ல் சமண துறவியராக துறவறம் மேற்கொண்டனர்.

இதனால் ஈர்க்கப்பட்ட பாவேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

முன்னதாக, தங்களுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் சொத்துக்கள் முழுவதையும் தானமாக அளித்தனர். அவர்களிடம் இருந்த, 'மொபைல் போன்' உட்பட சராசரி மனிதர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் கடந்த பிப்., மாதம் தானமாக வழங்கினர்.

இந்நிலையில், வரும் 22ம் தேதி நடக்கும் நிகழ்வில் இருவரும் சமண துறவியராக துறவறம் மேற்கொள்கின்றனர்.

அதன் பின், இரு வெள்ளை ஆடைகளை மட்டுமே இவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். தானம் பெற்று சாப்பிட ஒரு பாத்திரமும், ரஜோஹரன் எனப்படும் வெள்ளை நிற துடைப்பமும் மட்டுமே இவர்களின் சொத்தாக இருக்கும்.

சமண துறவியர் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க, அவர்கள் அமரும் போது, ரஜோஹரன் பயன்படுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்த பின் அமருவது வழக்கம்.

நாடு முழுதும் வெறும் காலில் நடைபயணமாக சென்று, தானம் பெற்று வாழ்க்கை வாழ்வதே சமண துறவியரின் வழக்கம்.

பாவேஷ் பண்டாரியை போலவே குஜராத்தைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள் கோடிக்கணக்கான சொத்துக்களை தானம் வழங்கிவிட்டு சமண துறவிகளான நிகழ்வு ஏற்கனவே நிகழ்ந்துள்ளது.

==================================================================================

புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஒரு பெரிய பிரச்சனையாக வெடிக்கும் முன்னரே சுற்றுச் சூழலை காக்கும் பொறுப்பை தனியாளாக கையில் எடுத்து 40 வருடங்களாக இன்றும் பேணி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த 85 வயதான பாட்டி.  தேவகி அம்மா  [ நன்றி JKC  ஸார்.] 


=============================================================================================

1000 கிலோ மிளகாய்துாள்; ரூ.3 லட்சம் வருவாய்: பாட்டியின் மசாலா தொழில் சிறக்க உதவிய பேரன்!நன்றி JKC  ஸார்.]




======================================================================================================





நான் படிச்ச கதை
எஸ்தர்
வண்ணநிலவன்


திருநெல்வேலி எழுத்தாளர்கள் என்றறியப்படும் தி க சிவசங்கரன்,
கலாப்ரியா, விக்ரமாதித்யன் இவர்களுடன் வண்ணநிலவனும் ஒருவர்.
இயற்பெயர் உ ராமச்சந்திரன். தாதன்குளம் சொந்த ஊர். பிறப்பு 1949.

பள்ளிப் படிப்பு முடித்து சென்னைக்கு வந்தவர் பல பத்திரிக்கைகளிலும்
ஆசிரியர் குழுவில் வேலை பார்த்தார். கண்ணதாசன், கணையாழி, புதுகைக்குரல், துக்ளக், சுபமங்களா ஆகியவை அவற்றில் அடங்கும்.

"வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள் வாழ்க்கைச் சோதனையில்
அனைத்தையும் பறிகொடுத்த பின்னரும் அன்பின் நெகிழ்ச்சியைத் தக்க
வைத்துக்கொண்டிருப்பவர்கள். மனிதனை மனிதனாகக் காண்பதற்கு
இவருக்குக் கடைசியாக மிஞ்சியிருக்கும் அடையாளம் இதுதான். கதை
மரபிலிருந்து விடுபட்டுச் சிறுகதைக்குரிய சிக்கனம், குறிப்புணர்த்தல்,
குறைவாகக் கூறி அனுபவ அதிர்வுகளுக்கு இடம் தரும் பாங்கு ஆகிய
சிறுகதைக்குரிய சிறப்பம்சங்களை இவரது வெற்றி பெற்ற கதைகளில்
காணலாம்" என்று சுந்தர ராமசாமி கூறுகிறார்.

மென்மையான கூறுமுறை, உள்ளடங்கிய உணர்த்தும்திறன் ஆகியவற்றுக்காக இலக்கிய விமர்சகரளால் மதிக்கப்படுபவர்.

முன்னுரை

எஸ்தர் எனற இக்கதை கொஞ்சம் நீளமானது. கதை பெரும்பாலும் கதை
மாந்தர்களின் குணங்களை பற்றியும் எஸ்தர் சித்தியின் மேலாண்மை
பற்றியும் பின்னி பிணைந்து எழுதப்பட்டுள்ளது. கூட்டு குடும்ப வாழ்வு, அதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவை நிறைந்த கதை.

எஸ்ரா இந்தக் கதையை 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்துள்ளார்.

கதை முழுதும் தராமல் கதைச் சுருக்கத்தை மட்டும் இங்கு தந்துள்ளேன்.
முழுக்கதையையும் வாசிக்க விரும்புவார்கள் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள எஸ்தர் அழியாசுடர்கள் சுட்டி வழி சென்று வாசிக்கலாம்.

கதைச்சுருக்கம் பெரும்பாலும் ஆசிரியரின் வார்த்தைகளிலேயே 
தரப்பட்டுள்ளது

என்றாலும் சுருக்கத்திற்கும் சுருக்கப்படாத ஆசிரியரின் கதைக்கும் இடையில் நிறைய வித்தியாசங்களை வாசகர்கள் காணலாம்.. ஆசிரியரின் கதை சொல்லும் முறையை மாற்றி நிகழ்ச்சிகளின் அடிப்படையில் கதையை நேர்கோட்டில் கொண்டு வந்து கதைச் சுருக்கத்தை அமைத்திருக்கிறேன்.

மேலும் எஸ்தர் சித்தியின் செயல்களை ஒட்டியே சுருக்கத்தை
அமைத்திருக்கிறேன்.

இந்தக் கதையும் கடைசியில் குறிப்பால் உணர்த்தும் சில வாக்கியங்களைக் கொண்டுள்ளது. அது ஈசாக்கு, மற்றும் பாட்டி இருவரை ஊரில் விட்டு செல்லுதல் பற்றி.

நடக்கும் அக்கினி வெயிலுக்கு ஏற்ற ஒரு கதை……

எஸ்தர்-வண்ணநிலவன்
கதைச் சுருக்கம்


அது ஒரு கூட்டு குடும்பம். குடும்பத் தலைவர் மரியதாஸ். தற்போது
உயிருடன் இல்லை. மரியாதாஸிற்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன்
அகஸ்டின். இரண்டாமவன் டேவிட்.. அகஸ்டின் மனைவி பெயர் அமலம்.
டேவிட்டின் மனைவி பெயரும் அமலம் தான். அகஸ்டினுக்கு மூன்று பெண்
மக்கள், ஒரு மகன். டேவிடிற்கு இரண்டு மகன்கள்.

தகப்பனார் மரியதாஸுடைய ஒன்று விட்ட தங்கச்சி தான் எஸ்தர்.
மரியதாஸ் சாகிறதுக்குப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்பே எஸ்தர் சித்தி
இந்த வீட்டுக்கு வந்து விட்டாள். புருஷனுடன் வாழப் பிடிக்காமல் தான்
வந்தாள் என்று எஸ்தரை கொஞ்ச காலம் ஊரெல்லாம் நைச்சியமாகப்
பேசியது, இப்போது பழைய கதையாகி விட்டது……

ஒன்றும் செய்ய இயலாத ஒரு பாட்டியும் உண்டு. குடும்ப உறுப்ப்பினர்
போல் ஈசாக்கும் உண்டு.

இத்தனை பெரிய குடும்பத்தை தலைமை தாங்கி வழி நடத்தியது எஸ்தர்
சித்தி தான். .



எஸ்தர் சித்தி குட்டையானவள். நீண்ட காலமாகப் புருஷ சுகத்தைத்
தேடாமல் இருந்ததாலோ என்னவோ உடம்பெல்லாம் பார்க்கிறவர்களின்
ஆர்வத்தைத் தூண்டுகிற விதமாய் இறுகி கெட்டித்துப் போயிருந்தது. இதற்கு அவள் செய்கிற காட்டு வேலைகளும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

நல்லா கருப்பானதும், இடையிடையே இப்போது தான் நரைக்க
ஆரம்பித்திருந்த நரை முடிகள் சிலவுமாக சுருட்டை முடிகள். உள்பாடி
அணிகிற வழக்கமில்லை. அதுவே மார்பகத்தை இன்னும் அழகானதாகப்
பண்ணியது.

சித்திக்கு எப்போதும் ஓயாத வேலை. சேலை முந்தானை கரண்டைக்
கால்களுக்கு மேல் பூனை முடிகள் தெரிய எப்போதும் ஏற்றிச் செருகப்பட்டே இருக்கும். சித்திக்குத் தந்திர உபாயங்களோ நிர்வாகத்துக்குத் தேவையான முரட்டு குணங்களோ கொஞ்சங்கூடக் தெரியாது. இருப்பினும் சித்தி பேச்சுக்கு மறு பேச்சு இல்லை. அவ்வளவு பெரிய குடும்பத்தை மரியதாசுக்குப்பின் நிர்வகித்து வருகிறதென்றால் எத்தனை பெரிய காரியம். இத்தனை ஏக்கர் நிலத்துக்கு இவ்வளவு தானியம் விதைக்க வேண்டும் என்கிற கணக்கெல்லாம் பிள்ளைகளே போடுகிற கணக்கு. ஆனால் வீட்டு வேலைகளானாலும், காட்டு
வேலைகளானாலும் சுணக்கமில்லாமல் செய்ய வேண்டுமே. வேலை
பார்க்கிறவர்களை உருட்டி மிரட்டி வேலை வாங்கிக் காரியம் செய்வதெப்படி?  சித்தி உருட்டல் மிரட்டல் எல்லாம் என்னவென்றே அறியாத பெண்.

விதைக்கின்ற சமையமாகட்டும் தண்ணீர் பாய்ச்சுகின்ற நேரமாகட்டும்
காலையிலோ, மதியமோ அல்லது சாயந்திரமோ ஒரே ஒரு பொழுது வீட்டுக் காரியங்கள் போக ஒழிந்த நேரத்தில் காட்டுக்குப் போய் வருவாள். அதுவும் ஒரு பேருக்குப் போய்விட்டு வருகிறது போலத்தான் இருக்கும். ஆனால் வேலைகள் எல்லாம் தானே மந்திரத்தால் கட்டுண்டது போல் நடைபெற்று விடும். சாயங்காலம் காட்டுக்குப் போனாள் என்றால் இவள் வருகிறதுக்காக பயபக்தியுடன் எல்லாவற்றையும் குற்றம் சொல்ல முடியாதபடி செய்து வைப்பார்கள். வீடே சித்திக்காக இயங்கியது. வேலைக்காரர்களும், அந்த ஊருமே சித்திக்குக் கட்டுப்பட்டு இயங்கினது.

இப்படி இருக்கையில் தான் அந்த கொடிய பஞ்சம் வந்தது..

சாப்பாட்டு நேரம் அந்த வீட்டில் எவ்வளவோ ஆனந்தமாக இருந்தது.
இப்போது நெல் அரிசிச் சோறு கிடைக்கவில்லை கம்பும், கேப்பையும்
கொண்டுதான் வீட்டுப் பெண்கள் சமையல் செய்கின்றனர். நெல்லோடு
ஆனந்த வாழ்வும் போயிற்றா?

அப்படிச் சொல்லவுங்கூடாது. இன்னமும் சமையலின் பிரதான பங்கு எஸ்தர் சித்தியிடமே இருக்கிறது. சக்கை போன்ற இந்தக் கம்பையும்
கேப்பையையும்தான் சித்தி எஸ்தர் என்னமாய் பரிமளிக்கப் பண்ணுகிறாள்?  ஒரு விதத்தில் இத்தனை மோசமான நிலையிலும் சித்தி எஸ்தர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்னவாயிருக்கும்?

பக்கத்து வீடுகளில் எல்லாம் ஊரை விட்டுக் கிளம்பிப் போய் விட்டார்கள்.
மேலத் தெருவில் ஆளே கிடையாது என்று நேற்று ஈசாக்கு வந்து
அவர்களுக்குச் சொன்னான். ஊர் சிறிய ஊர் தானென்றாலும் இரண்டு
கடைகள் இருந்தன. வியாபாரமே அற்றுப்போய்க் கடைகள் இரண்டையும்
மூடியாகிவிட்டது. வீட்டில் இருக்கிற நெருப்புப் பெட்டி ஒன்றே ஒன்றுதான்.
கேப்பை கொஞ்சம் இருக்கிறது. சில நாட்களுக்கு வரும். கம்பும் கூட
இருக்கிறது. ஆனால் நெருப்பு பெட்டி ஒன்றே ஒன்று இருந்தால் எத்தனை
நாளைக்குக் காப்பாற்ற முடியும்.

அன்றைக்கு ராத்திரி கூழ் தான் தயாராகிக் இருந்தது. அந்தக் கூழுக்கும்
மேலும் வீட்டுச் செலவுகளுக்கும் வர வரத் தண்ணீர் கிடைத்து வருவது
அருகி விட்டது. ரயில் போகிற நேரம் பார்த்து எந்த வேலை இருந்தாலும்
சித்தியும் ஈசாக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக வேண்டி வந்தது. அந்த என்ஜின் டிரைவரிடம் தான் தண்ணீருக்காக எவ்வளவு கெஞ்ச
வேண்டியிருக்கிறது? எஸ்தர் சித்தியிடம் பேசுகிற சாக்கில் டிரைவர்கள்
கொஞ்ச நேரம் வாயாடிவிட்டுக் கடைசியில் தண்ணீர் திறந்து விடுகிறார்கள்.

எஸ்தருக்கு அவள் புருஷன் லாரன்ஸுடைய ஞாபகம் வந்தது. லாரன்ஸும்,
அவனைப் பற்றிய ஞாபகங்களும் இப்போது எல்லோருக்கும் மிகப் பழைய
விஷயம். யாருக்கும் இப்போது லாரன்ஸின் முகம் கூட நினைவில் இல்லை.
அவ்வளவாய் அவன் காரியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. இரண்டு பேருக்குமே அப்போது அதை விடவும் உயர்வான காரியம் ஒன்றுமில்லை அந்நேரத்தில்.

ஈசாக் காட்டிலிருந்து திரும்புகிற நேரமாகி விட்டது ஈசாக்குக்கு இப்போது
காட்டில் எந்த வேலையும் இல்லை. அவனுடைய உலகம் காடு என்பதை
எஸ்தர் சித்தி மட்டும் எப்படியோ தெரிந்து வைத்திருந்து வெயிலும், வறட்சியும் நிரம்பிய காட்டுக்குள் அனுப்பி வந்தாள். காட்டைப் பார்க்காமல் இருந்தால் ஈசாக் செத்தே போவான் போல அவன் காட்டைப் பற்றிப் பேசாத நேரமே இல்லை, காடு மறைந்து கொண்டிருந்தது. விளைச்சலும், இறவைக் கிணறுகளில் மாடுகளின் கழுத்துச் சலங்கைச் சத்தமும் கண் முன்னாலேயெ கொஞ்ச காலமாய் மறைந்து விட்டன.

ஊரில் எல்லோருக்கும் தேவையாக இருந்த காட்டுக்குள் இப்போது ஒன்றுமே இல்லை. ஒரு வெள்ளை வெயில் விளைகளுக்குள் அடிக்கிறதென்று ஈசாக்கு சொல்கிறான். வெயிலின் நிறங்களை ஈசாக்கு நன்றாக அறிவான். “மஞ்சள் வெயில் அடித்தால் நாளை மழை வரும்” என்று அவன் சொன்னால் மழை வரும். கோடை காலத்து வெயிலின் நிறமும், மழைகாலத்து வெயிலின் நிறமும் பற்றி ஈசாக்குத் தெரியாத விஷயமில்லை. ஈசாக்க்கு விளைகளில் விளைகிற பயிர்களுக்காகவும், ஆடுமாடுகளுக்காகவும் மட்டுமே உலகத்தில் வாழ்ந்து வந்தான். ஆனாலும் ஈசாக்குப் பிரியமான விளைகள் எல்லாம் மறைந்து கொண்டிருந்தன. கடைசியாக திட்டி விளையில் மாட்டைவிட்டு அழிக்கப்போனபோது ஈசாக்கு கஞ்சியே சாப்பிடாமல் தானே போனான்.  எவ்வளவு அழுதான் அன்றைக்கு? இத்தனைக்கும் அவன் பேரில் தப்பு ஒன்றுமில்லை. தண்ணீரே இல்லாமல் தானே வெயிலில் காய்ந்து போன பயிர்களை அழிக்கத்தானே அவனைப் போகச்சொன்னாள் எஸ்தர் சித்தி.  காய்ந்து போன பயிர்களை அழிக்கிறதென்றால் அவனுக்கு என்ன நஷ்டம்?
ஆனாலும் கூட ஈசாக்கு எவ்வளவாய் அழுதான். அவன் நிலம் கூட இல்லை
தான் அது.

இவ்வளவு அக்கினியை மேலேயிருந்து கொட்டுகிறது யார்? தண்ணீரும்
இல்லாமல், சாப்பிடத் தேவையான உணவு பொருட்களும் கூட இல்லாத
நாட்களில் பகல் நேரத்தை இரவு ஏழு மணி வரை அதிகப்படுத்தினது யார்?
காற்று கூட ஒளிந்து கொள்ள இடம் தேடிக் கொண்டது. பகலில் அளவில்லாத வெளிச்சமும் இரவில் பார்த்தாலோ மூச்சைத் திணற வைக்கிற இருட்டும் கூடியிருந்தது.

எஸ்தர் சித்தி ஒருநாள் இரவு, ஹரிக்கேன் லைட்டின் முன்னால் எல்லோரும்
உட்கார்ந்திருந்த போது சொன்னாள் “இந்த மாதிரி மையிருட்டு இருக்கவே கூடாது, இது ஏன் இம்புட்டு இருட்டாப் போகுதுன்னே தெரியல இது கெடுதிக்குத்தான்”.

வெயில், புழுக்கமும் எரிச்சலும் அளித்தது. வெயில் பகலின் துயரங்களை
அதிகப்படுத்தியது. இருட்டோ வெயிலைப் போல எரிச்சலைத் தராமல்
போனாலும் இன்னொரு காரியத்தைச் செய்தது. அதுதான் பயம். வெறும்
இருட்டைக் கண்டு குழந்தைகள் பயப்படுகிறது போலப் பயமில்லை. யாரும் ஊரில் இல்லை என்பதை, உறங்கக் கூட விடாமல் நடைவாசலுக்கு வெளியே நின்று பயமுறுத்திக் கொண்டிருந்தது இருட்டு.

இருட்டு கரிய பொருள், உயிரில்லாதது போல் தான் இத்தனை வருஷமும்
இருந்தது. இந்தத் தடவை உயிர் பெற்றுவிட்டது வினோதம் தான். எஸ்தர்
சித்தி வீட்டுக்கு வெளியே நின்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அது
என்ன சொல்லுகிறது?

நீயும் உனக்குப் பிரியமானவர்களும் இங்கிருந்து போவதைத் தவிர வேறு
வழியென்ன? இன்னும் மழைக்காகக் காத்திருந்து மடிவீர்களா? இதுதான்
எஸ்தர் சித்திக்கு இருட்டு சொன்னது. அது தினந்தோறும் இடைவிடாமல்
முணுமுணுத்தது. பிடிவாதமும் உறுதியும் கூடிய முணுமுணுப்பு.

அன்றைக்கு ராத்திரி மறுபடியும் எல்லோரும் கூடினார்கள். இருந்தது
கொஞ்சம் போல கேப்பை மாவு மட்டிலுமே. காய்ந்து போன சில
கறிவேப்பிலை இலைகளும் கொஞ்சம் எண்ணெயும் கூட வீட்டில் இருந்தது
பெரும் ஆச்சரியமான விஷயம். கேப்பை மாவிலிருந்து எஸ்தர் களி
போலவொரு பண்டம் கிளறியிருந்தாள்.  யாருக்கும் பற்றாத சாப்பாட்டை தட்டுக்களில் பறிமாறினாள் எஸ்தர் சித்தி.

சிறு குழந்தைகளுக்கும் கூடப் போதாத சாப்பாடு. சின்ன அமலம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள். அது அவள் இயல்புதான்.
முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று
ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு?
அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்?  நடமாட முடியாது, காது
கேளாது, பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சமாக இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினவள். பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட எல்லாருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. அதற்காக இப்போது உபயோகமில்லாத பாட்டியை அழைத்துக் கொண்டு பிழைக்கப் போகிற இடத்துக்கெல்லாம் கூட்டிச் செல்ல முடியுமா?

”நீங்க ரெண்டு பேரும் ஒங்க வீடுகளுக்குப் போயி இரிங்க. புள்ளயளயுங்
கூட்டிக்கிட்டுப் போங்க”,  என்று பெரிய அமலத்தையும், சின்ன அமலத்தையும் பார்த்துக் கேட்டாள். இரண்டு பேரும் அதற்குப் பதிலே சொல்லக் கூடாது என்கிறது போல எஸ்தர் சித்தியின் குரல் இருந்தது.

அவர்களும் பதிலே பேசவில்லை.

“நீங்க ரெண்டு பேரும் எங்கூட வாங்க, மதுரையில போய் கொத்த வேல
பாப்போம், மழை பெய்யந்தன்னியும் எங்ஙனயாவது காலத்தே ஓட்ட
வேண்டியது தானே? ஈசாக்கும் வரட்டும்”

இதற்கும் அகஸ்டினும், டேவிட்டும் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்ச
நேரம் கழித்து டேவிட் மட்டும் பேசினான். கைவிரல்களில் கேப்பைக்களி
பிசுபிசுத்திருந்ததை ஒவ்வொரு விரலாக வாய்க்குள் விட்டுச் சப்பினபடியே பேசினான், “பாட்டி இருக்காளா?”

அன்றைக்கு ராத்திரியில் சுமார் ஒரு மணிக்கும் மேலே வறட்சியான காற்று வீச ஆரம்பித்தது. அப்போது நடுவீட்டில் குழந்தைகளின் பக்கத்தில்
படுத்திருந்த எஸ்தர் சித்தி எழுந்து போய் பாட்டியின் பக்கத்தில் படுத்துக்
கொண்டாள்.

பாட்டியை கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு போகிறதுக்கு பக்கத்து
ஊரான குரும்பூரிலிருந்து ஒரு பழைய சவப்பெட்டியை மிகவும் சொல்பமான விலைக்கு ஈசாக்கே தலைச்சுமையாக வாங்கிக்கொண்டு வந்தான். அதற்குள் சாயந்திரமாகி விட்டிருந்தது. பாதிரியார் ஊரில் இல்லையென்று கோயில் குட்டியார் தான் பாளையஞ்செட்டி குளத்திலிருந்து வந்திருந்தார். ஊரை விட்டு கிளம்புகிறதுக்காகவென்று எஸ்தர் சேமித்து வைத்திருந்த பணத்தில் பாட்டியின் சாவுச் செலவிற்கும் கொஞ்சம் போய்விட்டது.

யாரும் அழவேயில்லை மாறாகப் பயந்து போயிருந்ததை அவர்களுடைய
கலவரமான முகங்கள் காட்டின. கல்லறைத் தோட்டம் ஒன்றும் தொலைவில் இல்லை. பக்கத்தில் தான் இருந்தது. கோவில் தெருவிலும், நாடாக்கமார் தெருவிலும் இருந்த இரண்டே வீட்டுக்காரர்கள் கொஞ்ச நேரம் வந்து இருந்து விட்டுப் போய்விட்டர்கள். துக்க வீட்டுக்குப் போய் துக்கம் விசாரிக்கிற பொறுப்பை அவ்வளவு லேசாகத் தட்டிக் கழித்து விட முடியும் தானா?

எஸ்தர் சித்திக்கு மட்டும், பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப்
பார்த்து நிலை குத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்திற்கு வந்து கொண்டே
இருந்தது. வெகு காலம் வரை அந்தக் கண்களை அவள் மறக்காமல்
இருந்தாள்.

9 கருத்துகள்:

  1. எங்கள் வளாகத்தில் 60-70 சதம் மார்வாரிகள. சமண மதத்தைப் பின்பற்றுபவர்கள். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் flatஐ சிலபல துறவிகளுக்காக கொடுத்துள்ளனர். துறவியரில் இளைஞர்களும் அடக்கம். காலையில் பலர் போய் வணங்கிவிட்டு வருவர். ஒரு பாத்திரத்தோடு கதவு திறந்திருக்கும் ஐந்து ஆறு வீடுகளில் உணவு ஒரே பாத்திரத்தில் வாங்கி அதனை உட்கொள்கின்றனராம். இதற்கும் நிறைய கட்டுப்பாடுகள். கஷ்டமுள்ள வாழ்க்கையை மேற்கொள்ள பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு பெரும் வைர்க்கியம் வேண்டும்.

    அது சரி உனக்கு அந்த மாதிரி மனம் உண்டா என்று கேட்டால் காலையில் எழுந்தவுடன் இன்று என்ன மெனு சொல்லலாம் என்றே நினைக்கும் மனதுக்கு துறவற ஆசையா? நஹீன் இல்லா

    பதிலளிநீக்கு
  2. திரு. மோடிஜியின் மாநிலமான குஜராத் விடயம் ஆச்சரியமாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  3. ஜெஸி ஸார்,

    ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த 'நான் படிச்ச கதை'ப் பகுதியே எபியில் வண்ணநிலவனின் கதையோடு தான் துவங்கியிருக்கிறது.

    14-8-21 எபி பதிவில் இப்படி ஒரு புதிய பகுதி
    துவங்குவதாக அறிவிப்பு காணப்படுகிறது.

    வண்ண நிலவனின் 'கெட்டாலும் மேன்மக்கள்' என்ற கதை படிச்ச கதையாக அப்பொழுது பேசப்பட்டிருக்கிறது.

    இந்த ஸ்ரீராம் என்ன செய்திருக்கிறார் என்றால் 'துர்வாசர் கதை' என்று லேசான குறும்புடன் அன்றைய சனிக்கிழமைப் பதிவிற்கு தலைப்பிட்டிருக்கிறார்.

    அந்த நாட்களில் 'எஸ்தர்' மிகவும் பேசப்பட்ட கதை.
    நிறையச் சொல்லலாம்.
    வேண்டாம்.

    வண்ண நிலவனின் அற்புதமான 'கடல்புறத்தில்' நாவல் நினைவுக்கு வந்த பொழுது அதை மீறிக் கொண்டு 'ரெயினீஸ் ஐயர் தெரு' -- திருவனந்தபுரம் ரோடில் சென்று முடிகிற எதிரும் புதிருமாக ஆறே வீடுகள் கொண்ட அந்தத் தெரு--- கதை நினைவுக்கு வந்து மெய்மறக்கச் செய்தது.

    எழுத நினைப்பதையெல்லாம் குறைத்துக் கொள்வதே நல்லது என்று உணர்கிறேன்.

    தங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய வரவிற்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
      Jayakumar

      நீக்கு
    2. உடல் நிலை சரியில்லை என்றால்
      அதிக கவனம் கொள்ளவும் ஜெஸி ஸார். நன்றி.

      நீக்கு
  4. தேவகி அம்மாவை வணக்கம் வேண்டும்.
    துறவறம் மன வைராக்கியம் வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு தானம் கொடுத்தார்கள் என்றால் மிகவும் பாராட்ட வேண்டும், வணங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. கதையில் பாட்டியை விட்டு போக நினைத்தார்கள், பாட்டி அவர்களை விட்டு நிம்மதியாக வான் உலகம் போய் விட்டார். பஞ்ச காலத்தில் தப்பித்தார் பாட்டி.

    பதிலளிநீக்கு
  6. கதைச்சுருக்கம் மீண்டும் எஸ்தரை நினைவூட்டியது. வார்த்தைகளை வாரி இறைக்காமல் கதை சொல்வது, வண்ண நிலவனுக்குக் கைவந்த கலை.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இந்த வார பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    துறவறம் மேற்கொண்டு தம்பதிகளை மானசீகமாக வணங்கி கொண்டேன். எளிதாக யாருக்கு கிடைக்கும் இந்த நிலை. எல்லாம் இறைவன் செயல். அவன் அருளின்றி, இப்பேர்ப்பட்ட ஞான மார்க்கம் எளிதில் கைகூடுமா?

    சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு தனியாளாக நின்று ஒரு காட்டை பராமரித்து வரும் தேவகி அம்மாவையும் வணங்குவோம்.

    பாட்டியின் பகழ் காக்க பாடுபடும் பேரனையும் வாழ்த்திப் பாராட்டுவோம்.

    மூன்று செய்திகளும் முத்தான செய்திகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    இன்றைய கதை பகிர்வும் அருமை. இந்தக்கதை ஏற்கனவே படித்துள்ளேன். மீண்டும் படித்து ரசித்தேன். எழுத்தாளர் வண்ண நிலவின் எழுத்துக்கள் என்றுமே சிறப்பானது.

    உடல்நலமில்லாத போதும், அருமையான கதைகளை தேர்ந்தெடுத்து தரும் சகோதரர் ஜெய்க்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரரே. கூடிய விரைவில் தாங்கள் நன்கு நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!