திங்கள், 8 ஏப்ரல், 2024

"திங்க"க்கிழமை  :  வாழைப்பூ போண்டா  -  மனோ சாமிநாதன் ரெஸிப்பி 

 சில மாதங்களுக்கு முன் 105 வயதாகும் என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோதுவாழைப்பூ வடை செய்து கொடுத்தேன். 

அதை சுவைத்தவாறே, ‘ நீ வாழைப்பூ போண்டா செய்திருக்கிறாயா?’ என்று கேட்டார்.

அதோடு வாழைப்பூ போண்டா செய்யும் விதம் பற்றியும் சொன்னார். 

அவ்வப்போது சிறிதளவில் நினைவு தப்புவதும் மறதியுமாக இருப்பதால் அவர்கள் சொல்லச் சொல்ல முடிந்தவரையில் தொகுத்து அந்த செய்முறையை செய்தும் பார்த்து அவர்களுக்கும் வாழைப்பூ போண்டா உடனேயே செய்தும் கொடுத்தேன். அவர்களுக்கு மிகவும் சந்தோஷம்!! அந்த செய்முறையைத்தான் இங்கே எழுதியிருக்கிறேன்.


வாழைப்பூ போண்டா:


தேவையானவை:

முழு உளுத்தம்பருப்பு- 1 கப்

ஆய்ந்த வாழைப்பூ- 3 கைப்பிடி

நீளமாகமெல்லியதாக அரிந்த பெரிய வெங்காயம்-2

பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-2

பொடியாக அரிந்த மல்லியிலை- 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை- 2 கொத்து

மிளகு- 1 ஸ்பூன்

சோம்பு [ பெருஞ்சீரகம்]- 1 ஸ்பூன்

தேங்காய்த்துருவல்- கால் கப்

தேவையான உப்பும் எண்ணெயும்


செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அது கொதிக்க ஆரம்பிக்கும்போது வாழைப்பூக்களை சிறிது உப்புடன் போட்டு 2 கொதி வந்ததும் வடிகட்டி வாழைப்பூக்களை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.

உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வடைக்கு அரைப்பது போல பந்தாக அரைத்துக்கொள்ளவும்.


மாவை வழித்தெடுக்கும்போது வாழைப்பூக்களை அரிந்து அதில் போட்டு கூடவே மிளகு
சோம்பு போட்டு ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். அதிகம் அரைத்து விட வேண்டாம்.

இந்த மாவில் வெங்காயம்பச்சை மிளகாய்கொத்தமல்லிகறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

எண்ணெயை சுட வைத்து மீடியம் தீயில் போண்டாக்களாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான வாழைப்பூ போண்டாக்கள் தயார்!!!




பின்குறிப்பு:

நான் அவசரத்துக்கு மிக்ஸியில் உளுந்தை அரைத்து செய்தேன். கிரைண்டரில் அரைத்து செய்தால் மாவு இன்னும் கெட்டியாக இருக்கும். அதிகமாகவும் காணும். அதோடு இன்னும் மெதுவாக இருக்கும். 

18 கருத்துகள்:

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. மதிப்புக்குரிய மனோ சாமிநாதன் அவர்களது தாயாருக்கு எனது வணக்கங்கள்...

    பதிலளிநீக்கு
  4. வாழைப்பூ வடை பற்றித் தான் தெரியுமே தவிர இது புதுமையானது..

    பதிலளிநீக்கு
  5. உளுந்தோடு சேர்த்துச் செய்யும் போது சிறப்பு..

    ஆரோக்கிய செய்முறை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  6. உளுந்து வடை மாவில் வாழைப்பூ சேர்த்து போண்டா/ வடை செய்ததில்லை. கடலைப்பருப்பு/வடைப்பருப்பு மாவில் வாழைப்பூ சேர்த்து செய்ததுண்டு. இந்த வடை செய்முறை கீரை வடை செய்முறை போன்று உள்ளது. செய்து பார்க்க வேண்டும். படங்கள் அழகாக இருக்கின்றன. குறிப்பாக கோலம் பரர்டர் ஸ்டிக்கர்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. இன்றைக்கு எனது குறிப்பை இங்கே வெளியிட்டிருப்பதற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!!

    பதிலளிநீக்கு
  8. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!!

    பதிலளிநீக்கு
  9. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!!

    பதிலளிநீக்கு
  10. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெ.சந்திரசேகரன்!!
    இதற்கு முன்னால் நானும் வாழைப்பூவில் போண்டா செய்ததில்லை. அம்மா மூலம் தான் ஒரு நல்ல ரெசிபி கிடைத்தது!

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவுக்கு தங்கள் தயாரிப்பான வாழைப்பூ போண்டாவின் செய்முறை, படங்களுடன் மிக நன்றாக உள்ளது. நானும் வாழைப்பூவுடன் முப்பருப்பும் சேர்த்து வடை, அடை என செய்திருக்கிறேன். இந்த மாதிரி உ. பருப்பு மட்டும் சேர்த்து போண்டா செய்ததில்லை. வித்தியாசமாக மிகவும் ருசியாக இருக்குமென்று தோன்றுகிறது ஒரு தடவை இம்மாதிரி கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

    போண்டாவின் செய்முறையை அழகாகச் சொன்ன தங்கள் தாயாருக்கு என் அன்பான வணக்கங்களையும், நன்றியையும் தெரிவியுங்கள்.

    தங்கள் அழகான இந்த ரெசிபி பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. செய்முறை விளக்கம் சிறப்பாக இருக்கிறது.

    105 வயதில் ஞாபகம் இருப்பது பெரிய விடயம்.

    பதிலளிநீக்கு
  14. இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கமலா ஹரிஹரன்!

    பதிலளிநீக்கு
  15. பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
    அம்மாவுக்கு பழைய ஞாபகங்கள் நிறையவே தெளிவாக இருக்கின்றன. சமீபத்திய நினைவுகள் தான் மறந்து போவதும் தடுமாறுவதுமாய் இருக்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதாவதில் இது சகஜம்.  மூளை நியூரான்கள் பலவீனமாகி சேதமாவதில் சமீபத்திய நினைவுகள்தான் மறக்கும்.  பழைய நினைவுகள் ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் தெளிவாக நினைவிருக்கும்.  என் அம்மா, என் பாட்டி விஷயங்களில் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  16. உங்கள் அம்மாவின் சமையல் குறிப்பு மிக அருமை . வித்தியாசமானது வாழ்த்துகளை தெரிவியுங்கள்.அவரின் ஞாபக சக்தி வியக்க வைக்கிறது.
    செய்து பார்க்கிறேன் .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!