வியாழன், 18 ஏப்ரல், 2024

மனக்குரல்

 ஒருமுறை புத்தகக் கண்காட்சி சென்றபோது ஆடியோ புக் என்று பார்த்து கவரப்பட்டேன்.  நல்லவேளை, விசாரித்தேனே தவிர எதுவும் வாங்கவில்லை.

வாங்கி வந்து ஒலிக்க விட்டிருந்தால் செட் ஆகியிருக்காது.  திருப்தி வந்திருக்காது!

என்னிடம் பாம்பே கண்ணன் வழங்கிய பொன்னியின் செல்வன் ஆடியோ டி வி டி இருக்கிறது.  திரு பாம்பே கண்ணன் நாகப்பட்டினத்துக்காரர்,  என் மாமாக்களுக்கு நண்பர் என்பதால் வாங்கினேன்.  அடிஷனல் அட்ராக்ஷன் சக பிளாக்கர் அனன்யா மகாதேவன் ஒரு கேரக்டருக்கு குரல் கொடுத்திருந்தார்.

இத்தனை வருடமாயிற்றே....  வாங்கினேனே தவிர இதுவரை ஒருமுறை கூட கேட்டதில்லை.  கேட்க ஆரம்பித்தால் மனம் ஒன்றவே இல்லை.

நாம் படிக்கும் நம் மனக்குரலோடு அது ஒத்து போகவில்லை!  இந்தக் காரணத்தாலேயே நான் யு டியூபில் வரும் கதை வாசிப்புகளைக் கூட கேட்பதில்லை.  அதென்ன நம் மனக்குரல்?  எனக்கும் சரியாய் சொல்லத் தெரியவில்லை.

ஒரு கதையையோ, செய்தியையோ 'கொஞ்சம் சத்தமாக படியுங்களேன்' என்று கேட்டால் சிலர் ஆறாம் வகுப்பு தமிழ் பாட மனப்பாடப் பகுதியைப்  படிப்பதுபோல படிப்பதைக் கேட்டிருக்கிறீர்களா?  இவர்கள் தங்கள் மனதுக்குள்ளும் இப்படிதான் வாசித்துக் கொள்வார்களா என்று தோன்றும்.

நான் எழுதியவற்றை மகனையோ, பாஸையோ படிக்கச் சொல்லுவேன்,  மனதுக்குள் படிப்பவர்களை வாய் விட்டு படிக்கச் சொன்னால் அவர்கள் படிக்கும் பாணியில் ஒரு..  ஒரு...  ஒரு...  'இது'வே இருக்காது!

அப்புறம் நான் படித்துக் காட்டுவேன்.  ஆனால் சமீபத்தில் ஒரு பெண், மகனின் தோழி அழகாக வாசித்தாள்.  நிறைவாய் இருந்தது.

அப்புறம்...  புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு வினாடி உள்ளுக்குள் ஆழ்ந்து உங்கள் வாசிப்பை கவனித்திருக்கிறீர்களா?  படிக்கும் வார்த்தைகள் உங்கள் குரலிலா ஒலிக்கிறது?  இல்லை, உங்களைக் கவர்ந்த வேறு யார் குரலிலாவதா?  அந்த கதாபாத்திரங்களுக்குள் ஆழும்போது யாரை நினைவு கூர்கிறீர்கள்?  

படிக்கும் உங்கள் பாவங்கள் எழுத்தாளரைப் பொறுத்து மாறுமா?  இல்லை எப்போதும் உங்கள் பாணியிலேயே படிப்பீர்களா?

அந்தப் புத்தகத்துக்கும் உங்கள் கண்களுக்குமிடையேயான அந்த இடைவெளியில் ஒரு விர்ச்சுவல் தோற்றத்தில் யவனராணி இதயச்சந்திரன் மடியில் தன் கடைசி சுவாசத்தை விடுகிறாளா?  குடகு மலையின் பண்ணை வீட்டில்  வஸந்த் கணேஷிடம் "சும்மா ஏமாத்தறார் பாஸ்...  அவரை ஈஸியா ஜெயிச்சுடலாம்" என்று எமோஷனலாக சொல்லி விட்டு செஸ் போர்டை விட்டு விலகுகிறானா?  அருகில் கணேஷ் வார் அண்ட் பீஸ் புத்தகத்தோடு அமர்ந்து புன்சிரிக்கிறானா?  குரலை மட்டும் கவனிக்கச் சொல்லவில்லை.  உருவங்களையும்!  உங்கள் மனத்திரையில் ரவிதாஸனோ, கணேஷோ, ரூபாலாவோ அரவிந்தனோ என்ன தோற்றத்தில் வருகிறார்கள் / தெரிகிறார்கள்?

படிப்பது இது மாதிரி காட்சிகளாக விரிவதுண்டா?

புத்தகத்தை மூடியும் காட்சியிலிருந்து மறையாமல் கண்களுக்குள் நின்று கவனத்தைக் கலைத்துக் கொண்டே இருப்பவர்கள் உங்களை பொறுத்தவரை யார் யார்?

=================================================================================================

ஏகாந்தமாய் 



திரு ஏகாந்தன் அவர்களிடமிருந்து சென்ற வாரம் வந்த மெயில்....



அன்புள்ள ஸ்ரீராம், எபி,

நிறுத்திக்கொள்கிறேன் என்று சொல்ல நேர்ந்ததற்கு முன்பே, தொடர் முடியப்போகிறது என்பதற்கான ஒரு ஹிண்ட் கொடுத்திருக்கலாம்தான். நினைத்தேன். பின்னர், இதென்ன ஒரு புகழ்த் தொடரா, இதை முடிக்க எதற்கு ஒரு முன்னறிவிப்பு, ஸ்ரீராமுக்குக் கடைசி கட்டுரையை அனுப்புகையில் சொல்லலாமே என்றும் தோன்றியதால், சும்மா இருந்துவிட்டேன்.

எபி-யில் நான் இதை எழுத ஆரம்பித்த கடந்த அக்டோபரிலிருந்து இதுநாள் வரை என்னுடைய ப்ளாகில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று திரும்பிப் பார்க்கிறேன். பெரிதாக ஒன்றும் வெட்டி முறிக்கவில்லை. ஆறுமாத காலத்தில் நாலே நாலு பதிவுகள். இடையிடையே கொஞ்சம் படிக்கலாம் என நினைத்து சில புத்தகங்கள் வாங்கினேன். இன்னும் வாசிக்க ஆரம்பிக்கக் கூட இல்லை. (ஜேகே-யின் Meditations மட்டும் இதில் விதிவிலக்கு.  கைக்கடக்கமாக அது இருந்ததும் காரணமாயிருக்கலாம்). சமீபத்திய மாதங்களில் சில திடீர்க் கவிதைகள் எழுதிய ஞாபகம். எங்கு போட்டு வைத்திருக்கிறேன் என்கிற நினைவும் இல்லை. கடந்த வருடம் லேப்டாப் க்ராஷ் ஆனதில், இன்னமும் வெளி உலகைப் பார்த்திராத என்னுடைய கவிதைத் தொகுப்பு (தமிழ், ஆங்கிலச் சிறுகவிதைகள் சுமார் 70) ஹார்ட்-டிஸ்கிலிருந்து மீட்டெடுக்கமுடியாதபடி காணாமற் போயிற்று. (எழுதும் ஆசையும் அத்தோடு கரைந்து காணாமற்போய்விட்டதோ?) நானே நிலையில்லாதவன். என் கவிதை மட்டும்  நிலைத்திருக்க வேண்டுமாக்கும்? க்ராஷ் ஆனதே சரி..

கடந்த இரண்டு வருடங்களாகவே பயணங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஒரு சிறு பயணத்துக்குப் பின், இரண்டு நாட்கள் முன்புதான் கேரளாவின் திருச்சூரிலிருந்து திரும்பினேன். ஏன் அங்கு சென்றேன்? ஏதாவது காரியமாகத்தான் ஒரு இடத்திற்கு செல்லவேண்டுமா என்ன? கேரளாவிற்கு நான் போனது இதுவே முதல் தடவை. க்யூபா வரை சென்று திரும்பிய என்னை, தன்னிடம் அழைக்க கேரளத்திற்கு எத்தனை காலமாகியிருக்கிறது.. ஆங்காங்கே சில பல சந்திப்புகள், அனுபவங்கள். கிரிக்கெட் உலகிலும் சமீப காலமாக என்னென்னவோ நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆர்வத்துடன் அவதானிக்கிறேன். சில மாதங்கள் முன் கிரிக்கெட் உலகக்கோப்பை மேட்ச் ஒன்றை டெல்லி மைதானத்தில் போய்ப் பார்த்தேன். சாதாரண மன நிலையில், சுடச்சுட எனது ப்ளாகில் ஏதாவது எழுதியிருக்க வேண்டும். எழுதினேனா? ம்ஹும்.. வேண்டாம் என்றது மனம்: ’சும்மா கிட தம்பி!’

இத்தகைய நிலையில்தான், ‘நிறுத்திக்கொள்கிறேன்’ என்றேன். தொடர் என்பதாக எல்லாம் வாரா வாரமென, ஒரு டைம்-ஃப்ரேமிற்குள் என்னை உட்படுத்திக்கொண்டு எழுதும் மனம் தற்போது இல்லை. பின்னர் எப்போதாவது (தொடர் என்று இல்லாது) ஏதாவது எபி-க்கு எழுதக்கூடுமோ? கூடலாம். இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை.

பின்னூட்டங்களாக, கடந்த வியாழன், வெள்ளியில் வெளிப்பட்ட வாசக நண்பர்கள் சிலரின் ஆர்வம், எழுத்து நின்றதில் ஏற்பட்ட ஏமாற்றம் கண்டு சற்றே ஆச்சர்யப்படுகிறேன். அன்பு மகிழ்ச்சி தருகிறது. நன்றியும் சொல்லவைக்கிறது.

-- ஏகாந்தன் -

=================================================================================================


நான் முஸ்லீம், என் மனைவி பிராமணர்.. 3 முறை திருமணம் செய்துகொண்டது ஏன்? - ஜெயம் ரவியின் தந்தை சுவாரஸ்ய பேட்டி
ஜெயம் ரவியின் தந்தை மோகன் தனது மனைவி வரலட்சுமியுடனான காதல் திருமணம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்விட்டு பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி கோலிவுட்டில் சக்கை போடு போட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து அசத்தியிருந்தார் ஜெயம் ரவி. அப்படத்தின் வெற்றிக்குப் பின் இறைவன், சைரன், அகிலன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் ஜெயம் ரவியின் தந்தை மோகன், இவரும் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் ஆவார். சமீபத்தில் மோகன் - வரலட்சுமி தம்பதியின் ஐம்பதாவது திருமண நாளை அவரது மகன்களான ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா இருவரும் கோலாகலமாக கொண்டாடினர். அது குறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் ஜெயம் ரவியின் தந்தை மோகன் தனது மனைவி வரலட்சுமியுடன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் தங்களது காதல் திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய மோகன், தான் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்றும், அவரது மனைவி ஒரு பிராமண வீட்டு பெண் என்றும் கூறினார். அது மட்டுமின்றி தனது உண்மையான பெயர் ஜின்னா என்றும் அந்த பேட்டியில் மோகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் தங்கவேல் வீட்டில் தான் சிறுவயதில் வளர்ந்ததாகவும், தங்கவேலுக்கு குழந்தைகள் இல்லாததன் காரணமாக அவர் தன்னை குழந்தையாக தத்தெடுத்து வளர்த்து வந்ததாகவும் மோகன் தெரிவித்துள்ளார். அப்போது அவர் தான் தனக்கு மோகன் என பெயர் வைத்ததாக கூறிய அவர், தங்கவேல் மூலம் தான் சினிமாவில் எடிட்டிங் கற்றுக்கொண்டதாக கூறி உள்ளார்.
அதுமட்டுமின்றி தனக்கும் தனது மனைவி வரலட்சுமிக்கு மூன்று முறை திருமணம் நடைபெற்ற சுவாரஸ்ய தகவலையும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் மோகன். நாங்கள் மதம் விட்டு மதம் கல்யாணம் செய்துகொண்டதாக சொல்கிறார்கள் ஆனால் உண்மையில் நாங்கள் மனம்விட்டு தான் கல்யாணம் செய்து கொண்டோம் என்று இன்றளவும் குறையாத காதலுடன் மோகன் - வரலட்சுமி ஜோடி கொடுத்த பேட்டி தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது.
நன்றி: ஏசியாநெட் நியூஸ்

===========================================================================================






இத்தனை பேர்களையா 
அடைத்து வைத்திருக்கிறது 
இத்தனூண்டு புத்தகம்?
அடுக்கடுக்காய் புறப்பட்டு 
வருகிறார்கள் 
அட்டையைப் பிரித்ததும்.
புத்தகத்தை மூடினாலும் 
உடனே புறப்பட்டுச் 
சென்று விடுவதில்லை இவர்கள்...
மனவெளியில் தங்கி 
கனவுலகில் ஆழ்த்தி 
அப்புறமாய் 
கதைக்குள் மறைகிறார்கள்.


தெருவெங்கும் இறைந்து 
கிடக்கின்றன 
எழுத்துகளும் வார்த்தைகளும்
இதோ அங்குமிங்கும் உங்களருகே 
அர்த்தம் புரியாமல் பல குரல்களில்  
காற்றில் சுற்றி வருகின்றன 
யார் யாரோ பேசிய  வார்த்தைகள் 

==================================================================================================

அந்த கணம்!...   அந்த நொடி....   ரசித்த படம்.


==================================================================================================

கி.வா.ஜ அவர்களின் சிலேடைச் சுவை



கி.வா.ஜகந்நாதன் ஒரு ஊருக்கு பேச்சாளராகச் சென்றார். அவருக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்பவர், "தங்களுக்குப் பூரி பிடிக்குமா? என்று கேட்டார்.

அதற்கு இவர், 'ஜகந்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?' என்று சொல்ல, அருகிலிருந்த அனைவரும் அவரது சமயோசித பதிலைக் கேட்டுச் சிரித்தனர்.

கி வா ஜ உதிர்த்த முத்து

ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு விட்டுக் கை கழுவ வந்தார், கி வா ஜ. ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அவர் கை கழுவத் தந்தார், ஒரு அன்பர்.

சாதாரணமாக நீரில்தான் குவளை இருக்கும் !! இங்கே குவளையில் நீர் !!

கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது.

அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை.

கி.வா.ஜ உடனே *“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை"* என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல, அனைவரும் ரசித்தனர்.
_________



ஒரு குழந்தைக்கு, அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை.

அருகில் இருந்தார் கி.வா.ஜ.

'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' எனக் குழந்தையைக் கோபித்துக் கொண்டார், அந்தப் பெண்மணி.

கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு பார்த்தார்.

பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.

ஏன் என்று அந்த அம்மா கேட்டார்,

*'ஊசி இருக்கிறது'* என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!
__________

கி வா ஜ ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப் பட்டார். அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு cough syrup ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.

கி வா ஜ அவர்கள் இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு" என்கிறார்கள் என்று கேட்டார்.



======================================================================================

வசியம் அவசியமா, அனாவசியமா?!!


===========================================================================================

ஃபேஸ்புக்கில் கிடைத்த சுவாரஸ்யம்.


=======================================================================================

நியூஸ் ரூம் 
- பானுமதி வெங்கடேஸ்வரன்

- பெங்களூரு ரூரல்,தேவனஹள்ளி அருகே அவதி என்னும் கிராமத்தில் போலீஸ் பயிற்சி மையம் உள்ளது. அங்கு பயிற்சியின் பொழுது போலீஸ்காரர்கள் தவறுதலாக சுடும் தோட்டாக்கள் அருகிலிருக்கும் நீலேரி கிராம மக்களின் கார்களையும், வீடுகளையும் பதம் பார்த்து விடுகின்றனவாம். இதனால் பீதியடைந்த நீலேரி மக்கள் தங்கள் ஊருக்குள் விழுந்த தோட்டாக்களோடு போராட்டம் நடத்தியதில் அங்கு விசாரணை நடத்திய பெங்களூரு ரூரல் எஸ்.பி.,போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். - பயிற்சியளிக்கும் இடத்தை மாற்றினால் போதாதா?

- சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் ஓட்டுனர் இல்லாமல் மெட்ரோ ரயில்களை இயக்கத் திட்டம்.

- மத்திய அரசின் ஒருங்கிணைந்த சமக்ர சிக்க்ஷா கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க,நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு டிஜிடல் வழி கல்வி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்படி ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனிமேஷன் வகை வீடியோக்களை பாடல்களாக நடத்துவதற்கு தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

- நியூ ஆரிஜன் என்னும் விண்வெளி நிறுவனம் நியூ ஷெப்பர்ட் 25(NS 25) என்னும் திட்டத்தின் கீழ் ஆறு பேர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்ப தேர்ந்தெடுத்துள்ளது. அவர்களுள் விஜயவாடாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் விமானியாக பணியாற்றும் கோபிசந்த் என்னும் இளைஞரும் அடக்கம். இதன் மூலம் சுற்றுலா பயணியாக விண்வெளிக்கு பறக்கப் போகும் முதல் இந்தியர் என்னும் பெருமையை அடைகிறார்.

- மும்பை வொர்லி பகுதியில் வீட்டு வாசலில் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொணிடிருந்த 12 வயது மன வளர்ச்சி குன்றிய சிறுவனைக் காணாமல் பெற்றோர்கள் தேடியிருக்கிறார்கள். அதே நேரத்தில் கொலாபா ரீகல் தியேட்டர் அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுவன் திரிந்து கொண்டிருப்பதாக செய்தி வந்து போலீஸார் அவனை மீட்டிருக்கிறார்கள். அந்த சிறுவன் கழுத்தில் அணிந்திருந்த செயினில் QR கோடி இருப்பதை பார்த்த போலீஸ் அதிகாரி தன் செல்ஃபோனில் ஸ்கேன் செய்ய, அதில் அவனுடைய பெற்றோர்களின் டெலிஃபோன் நம்பர்கள் இருந்திருக்கின்றன. அதை தொடர்பு கொண்டு, சிறுவன் பற்றிய செய்திகளை கேட்டறிந்து, பெற்றோர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் உதவியால் தொலைந்து போன சிறுவன் அரை மணி நேரத்தில் மீட்கப்பட்டிருக்கிறான். 

===============================================================================================

பொக்கிஷம்  :-     அரு ராமநாதன் நடத்திய 'காதல்' புத்தகத் தொகுப்பிலிருந்து இந்த வார பொக்கிஷம்....

திருப்பதி வரை போகவேண்டாம் பாருங்கள்.....

ஜோக்தான்....   புன்னகையுங்கள்...


என் எஸ் கிருஷ்ணன் பற்றி காதல் பத்திரிகையில் அவர் மனைவி டி ஏ மதுரம் சொல்லி இருப்பது....

வாரிசு!

பின்னாட்களில் ஸ்ரீராம் இப்படி எங்கள் பிளாக்கில் பகிரும்போது சந்தேகபப்டுவார்கள் என்று தெரிந்துதான் மேலே நகைச்சுவை என்று தலைப்பே கொடுத்திருக்கிறார்கள்...!

இதைத் தழுவி சில ஜோக்ஸ் பின்னாட்களில் வந்தன.  திறமையான தழுவல்கள்!

இதைத் தழுவியும், உல்ட்டா செய்தும் சில ஜோக்ஸ் பின்னாட்களில் வந்தன..நினைவிருக்கிறதா?


வழி வழி வந்த வழி!

55 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று..

    தமிழ் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'தமிழும்' வாழ்க வை இங்கு சேர்த்து விட்டீர்கள்!!!   வாங்க செல்வாண்ணா..  வணக்கம்.

      நீக்கு
  3. நான் படிச்ச கதையில் திரு JKC யால் பகிரப்பட்ட கதையின் ஆசிரியர் வந்து பின்னூட்டம் போட்டிருக்கிறார். கீழே சுட்டி.

    https://engalblog.blogspot.com/2023/10/blog-post_28.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்றேன் பார்த்தேன். நன்றி. நல்லவேளை எதிர்ப்பு இல்லை.
      Jayakumar

      நீக்கு
    2. கூழாங்கற்களை
      நானும் தேடிப் படித்து
      மகிழ்ந்தேன்.

      சமீப காலமாக சகோதரி கீதா ரெங்கன் எபி பக்கம் வராதது எபி செவ்வாய்க்கிழமை பின்னூட்டங்களின் சுவாரஸ்யதைக் குறைக்கிறது.

      அந்த குறிப்பிட்ட கதைக்கு அவர் போட்டிருந்த பின்னூட்டங்களின் சிறப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும.

      நீக்கு
    3. நாம் பகிர்ந்த எழுத்துக்கு சொந்தக்காரரே வந்து படித்து பாராட்டுவது ஒரு மனமகிழ்வைத் தரும்.  எனக்கு இருமுறை அது கிட்டி இருக்கிறது.  ஒருமுறை எழுத்தாளர் தமயந்தி.  இன்னொருமுறை காலச்சக்கரம் நரசிம்மா.

      நீக்கு
  4. யோவ்... இதென்ன புத்சா இருக்கு??..

    ஆமாம்.. இனிமேல் இப்படித் தான்..

    கோழி கூவியா பொழுது விடியுது?..
    ஆனாலும் கூவிக்கிட்டு தானே இருக்கு!..

    பதிலளிநீக்கு
  5. இங்கே
    தொலைக் காட்சியில் தமிழ்ப் படுத்தப்பட்ட வில்வாஷ்டகம் சமஸ்கிருத வார்த்தைகளுடன் ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. //அட்டையைப் பிரித்ததும்.
    புத்தகத்தை மூடினாலும்
    உடனே புறப்பட்டுச்
    சென்று விடுவதில்லை இவர்கள்...
    மனவெளியில் தங்கி
    கனவுலகில் ஆழ்த்தி
    அப்புறமாய்
    கதைக்குள் மறைகிறார்கள்.//

    உங்கள் மனக்குரல் பதிவுக்கு ஏற்ற கவிதை.
    கடைசியாக படித்த கதை, கேட்ட பாடல் மனதில் ஒலித்து கொண்டே இருக்கும் தான்.

    புத்தகத்தை கையில் வைத்து படிப்பது தான் இன்பம்.
    கதை கேட்கலாம், தலை, கண் வலிக்கும் போது கேட்டு இருக்கிறேன்.
    தூக்கம் வராத இரவுகளில் கதை கேட்டுக் கொண்டு படுத்து இருப்பேன். தூக்கம் வந்து விடும்.
    ஹலோ எப். எம்மில் சனிக்கிழமை இரவு கதை சொல்கிறார்கள் கேட்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா...   தூக்கம் வரத்தான் ஆடியோ கதைகள் உதவுகின்றன!  ஆடியோ புத்தகத்தை விடுங்கள்.  நீங்கள் எழுதியதை அல்லது எதாவது ஒரு புத்தகத்தை அருகில் இருப்பவர்களை வைத்து படிக்கச் சொல்லுங்களேன்....

      நீக்கு
  8. திரு ஏகாந்தன் அவர்கள் அனுபவ பகிர்வு பின்னர் நேரம் கிடைக்கும் போது மறுபடியும் பகிரலாம் .
    (தமிழ், ஆங்கிலச் சிறுகவிதைகள் சுமார் 70) ஹார்ட்-டிஸ்கிலிருந்து மீட்டெடுக்கமுடியாதபடி காணாமற் போயிற்று. (எழுதும் ஆசையும் அத்தோடு கரைந்து காணாமற்போய்விட்டதோ?) //

    ஆமாம், காணாமற் போன கவிதைகள் நினைவு வந்தால் மீண்டும் எழுத ஆசை வராதுதான். கவிதைகள் காணாமல் போனது வருத்தம் தான். மீண்டும் எழுதுங்கள் முடியும் உங்களால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணாமல் போன கவிதைகள் புத்துருவம் பெறலாம்!  அதன் தோற்றமே மாறலாம்!

      நீக்கு
  9. நகைச்சுவை நன்றாக இருக்கிறது. கூந்தல் வளரும் தைலத்தை கணவர் தேய்த்து கொள்ளவில்லை போலும்!
    சரியான பைத்தியம் நகைச்சுவையில் பொய்யை நன்றாக அழுத்தி சொல்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை ரகத்துக்கும் கீழே இருக்கும் ஜோக்ஸ் என்று நினைத்தேன். பரவாயில்லை.

      நீக்கு
  10. //அந்த இடைவெளியில் ஒரு விர்ச்சுவல் தோற்றத்தில் யவன ராணி இதயச்சந்திரன் மடியில் தன் கடைசி சுவாசத்தை விடுகிறாளா?//

    எழுதும் பொழுது இரண்டு பெயர்கள் வரும் பொழுது அந்தப் பெயர்களைச் சேர்த்து எழுதாமல் அந்த வாக்கியத்தின் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக வரும்படி எழுதுவது ஒரு எழுத்துப் பயிற்சி.

    யவனராணி -- இதயச்சந்திரன்

    இந்த இரண்டு பெயர்கள் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் வருமாறு அந்த வாக்கியத்தை யாராவது எழுதிப் பாருங்கள். சொல்ல வருவது புரியும்.

    அதே மாதிரி தான் குடகு மலையின் பண்ணை வீட்டில் வசந்த் கணேஷிடம்

    --என்று வரும் வரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடகு மலையின் பண்ணை வீட்டில் வஸந்த் கணேஷிடம் ".......

      இதையே எடுத்துக் கொள்ளுங்கள். இதை இன்னொருத்தர் வாசித்துக் கேட்டால் கதையை நாம் நமக்குள் படிக்கிற மாதிரி இருக்காது. எதையோ ரிப்போர்ட் பண்ணுகிற மாதிரி இருக்கும். அதற்காக சொன்னேன்.

      குடகு மலையின் பண்ணை வீட்டில்
      வஸந்த் " சும்மா ஏமாத்தறார் பாஸ்........." என்று கணேஷிடம் எமோஷனலாக சொல்லி விட்டு...

      என்று எழுதினால் நமக்குள் வாசிப்பதற்கும் இன்னொருத்தர் வாசித்து நாம் கேட்பதற்கும் ஒரே மாதிரி இருக்கும்.

      நீக்கு
    2. நம் மனம் சொல்வது, பிறர் எதிர்பார்ப்பது என்பது பற்றி கூட ஒரு கட்டுரை எழுதவேண்டும்!  ஒவ்வொன்று ஒரு மாதிரி.  ஒருவர் மிளகாய் பஜ்ஜி கேட்பார்.  ஒருவர் ஆனியன் பஜ்ஜி போல வராது என்பார்!  இதெல்லாம் பழசு, உடம்புக்கு ஆகாது என்பார் இன்னொருவர்!  சுவாரஸ்யம்தான்.

      நீக்கு
  11. கவிதை, புத்தக வாசிப்பு நியூஸ்ரைம் அனைத்தும் ரசனை.
    திரு ஏகானந்தன் அவர்கள் முடிந்தபோது எழுதலாம் ரசிப்போம்

    தைலம் ஜோக்ஸ்செம சிரிப்பு.

    பதிலளிநீக்கு
  12. திரு. ஏகாந்தன் அவர்களது தொடர் -

    மீண்டும் ஒரு நல்ல பொழுதில் தொடங்கும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  13. /// மன வளர்ச்சி குன்றிய சிறுவனைக் காணாமல் பெற்றோர்கள் தேடியிருக்கிறார்கள்..

    அந்த சிறுவனைக் கண்டுபிடித்த போது
    கழுத்தில் அணிந்திருந்த செயினில் QR அடையாளம் இருப்பதை பார்த்த போலீஸ் அதிகாரி...///

    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  14. கி.வா.ஜ அவர்களின் சிலேடைச் சுவை..

    தமிழறிஞர்...

    வேறும் உள்ளன..

    பதிலளிநீக்கு
  15. ஆடியோ புக்..

    இதில் எல்லாம் ஈடுபடுவதில்லை..

    பதிலளிநீக்கு
  16. தொலைக் காட்சித் தமிழைக் கேட்கும் போதே....

    பதிலளிநீக்கு
  17. படிப்பது காட்சிகளாக விரிய, கதை நிகழ்வுகளை நம் மனக்கண் முன் காட்சிப்படுத்துகிற எழுத்து வன்மை கொண்ட எழுத்தாளர்களாலேயே முடியும்.

    சுயதரிசனம்
    அக்னிப்பிரவேசம்
    சில நேரங்களில் சில மனிதர்கள்

    -- என்றோ வாசித்த இக்கதைகளின் நிகழ்வுகள் அப்படி அப்படியே காட்சிகளாக இன்றும் என் மனக்கண் முன் விரிகின்றன.

    இந்த மாதிரியான எழுத்து
    மேன்மைகள் செத்து விட்டதால் இன்றைய வாசகர்களுக்கு இவையெல்லாம் 'வளவள' வென்று அலுப்பூட்டுபவையாக ஆகிப் போயின.

    எது பற்றிய கதை இது
    என்று ஓரிரு வரிகளில் ஒரு எழுத்துச் சித்திரத்தை முடக்கவே இன்றைய வாசகர்கள் துடிக்கிறார்கள். இவர்களின் ரசனைகளைத் தீர்த்து வைக்கவே ஒரு பக்கக் கதைகள் பிறவி எடுத்து கிழடு தட்டிக் கூட போய்விட்டன. இருந்தும்
    அவற்றின் சுவாரஸ்யம் தீர்ந்தபாடில்லை. நேரம் காலம் பார்க்காமல் இருந்த வாசிப்பின் சுகம் மட்டும் மரித்துப் போய்விட்டதென்னவோ உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்! உங்கள் மனக்குரல் வாசித்து என்னில் கிளர்ந்த உணர்வுக்குரல் இது.

      நீக்கு
    2. ஒரு தீர்மானத்திற்குப் பிறகு எழுத ஆரம்பித்த கதையை அரைகுறையாக குற்றுயிரும் குலையுருமாக abrupt-ஆக 'படக்'கென்று முடித்துக் கொள்வதில் இந்த ஒரு பக்கக் கதைக்காரர்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை.

      நீக்கு
    3. ஜெஸி ஸார் பகிர்ந்து கொண்ட பெருமாள் முருகனின் 'கிணறு' என்ற கதையை நாம் வாசித்தோம்.

      சொல்ல வந்த விஷயம் என்னவோ ரெண்டே வரி தான்.
      இருந்தாலும் எழுத வந்தக் கதைக்கு ஒரு ஸ்கெட்ச் போட்டுக் கொண்ட மாதிரி...
      கிணற்றின் தோற்றம் பற்றி, கிண்ற்றுக்குள் முங்கி அமிழும் சிறுவர்கள், அந்த அமானுஷ்ய சூழ்நிலை, இதற்கு முத்தாய்ப்பாய் கதை முடிவை வாசிப்பவர் யூகத்திற்கு விட்டு விடும் அட்டகாசம் -- என்று ஒரு கதையை எவ்வளவு நேர்த்தியாகப் படைத்திருக்கிறார்.?
      படித்து முடித்ததும் 'அட..' என்று வியக்க வேண்டியிருக்கிறது.

      நம்மிடம் இருக்கும் பெரிய கோளாறு
      இன்னொருத்தர் எழுதுவதிலிருந்து கற்றுக்கொள்ள நம் மனம் மறுப்பது தான்.

      எபி எழுத ஆசைப்படுவோருக்கு அமைத்துத் தந்திருக்கும் பயிற்சிக் களம் அற்புதமானது.

      சனிக்கிழமை தோறும்
      பிற எழுத்தாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வாசிப்பு, நாம் கற்றதை வெளிப்படுத்த செவ்வாய்க் களம்.

      நன்றி சொல்ல வேண்டும் எபிக்கு.

      நீக்கு
    4. காட்சிகளாக விரியும் கதைகளுக்கு உங்களால் ஜேகே கதை மட்டும்தான் உதாரணம் காட்ட முடிகிறதா ஜீவி ஸார்?!

      ஒரு பக்கக் கதைகளுக்கு வாசகர்கள் மேல் பழியைப் போடுவது நியாயமில்லை!!ஜீவி ஸார்...   கதை எழுதுபவர்களுக்கு ஒரு சுவாரஸ்யம்.  வாசிப்பவர்களுக்கு ஒரு சுவாரஸ்யம். 
      வாசகர்களின் டேஸ்ட் தெரியாமல் எழுதி விட்டு படைப்பாளி அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது நியாயமா?  

      நீக்கு
    5. மனக்குரலின் பதிலாய் வந்த உணர்வுக்குரலுக்கு நன்றி ஜீவி ஸார்.  ஒருபக்கக் கதை எழுதுபவர்கள் பெரிதாக எழுத ஆரம்பித்து ​கதையின் கழுத்தை நெரிக்கிறார்கள் என்று மனதார நம்புகிறீர்களா?  ஹைக்கூ மாதிரி ஒரு சின்ன ட்விஸ்ட்டுடன் சட்டென முடித்து விடுகிறார்கள்.

      நீக்கு
    6. நிறைய வாசிப்பவர்களுக்குதான் கொஞ்சமாவது எழுத முடியும்.  அபூர்வமான சில திறமையாளர்கள் தவிர...  சுஜாதா கூட நிறைய படியுங்கள் என்றுதான் பரிந்துரைப்பார்.  படிக்கப்படிக்க எழுதுவதற்கு நமக்குள் ஊற்று பொங்க வேண்டும்.

      நீக்கு
  18. ஆடியோ புக் ஜோதிஜி தான் வெளியிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். இது ஒரு வேஸ்ட் என்று நினைக்கிறேன். கிண்டில் ஆடியோபுக் வேறு ரகம் உண்டு. அச்சு புத்தகம் திரையில் இருக்கும். ஒருவர் வாசிப்பார். வாசிக்க வாசிக்க பாயின்டர் நகரும். வேண்டுமென்றாலும் நிறுத்தி பின்னர் தொடரலாம்.

    ஏகாந்தன் சாரின் படைப்புகள் லேப்டாப்பில் நசிந்தது வருத்தத்திற்குரியது.

    கவிதைகள் இரண்டும் சிறப்பு. கிட்டத்தட்ட குவாண்டம் தியரி தான். வார்த்தைகளுக்கும் சொற்களுக்கும் உயிர் உண்டு.

    கருத்துக்கள் குறைவு. நலம் இல்லை. பின்னர் வருகிறேன்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடியோபுக் ஜோதிஜி வெளியிட்டிருக்கிறாரா தெரியாது.  நிறையப்பேர் வெளியிட்டிருக்கிறார்கள்.  நான் கிண்டில் பக்கமே செல்வதில்லை.  கவிதைகளை பாராட்டியதற்கு நன்றி.  ஆச்சர்யம்.  

      //கருத்துக்கள் குறைவு. நலம் இல்லை. பின்னர் வருகிறேன்.//

      பிறர் கருத்துக்களோ?  உங்கள் கருத்துக்களோ?  கமலா அக்காவை மறுபடியும் காணோம்.  கீதா அக்கா மாமா உடல்நிலையில் கவனமாயிருக்கிறார்.  வல்லிம்மா வருவதே இல்லை.  நெல்லை பயணத்தில் பிஸியாகி இருப்பார்.  கீதா ரெங்கன் முக்கிய வேலையாக வெளியூர் பயணம்...   என்ன செய்ய!

      உங்களுக்கு உடல் நலமில்லையா?  ரெவியூ சீராக சென்று வருகிறீர்களா?  

      நீக்கு
  19. கிவாஜ-வின் எழுத்துலகமே வேறே.
    'உ.வே.சா-வின் மாணாக்கன் நானாக்கும்'
    என்று நிரூபித்த எழுத்தும் வாழ்க்கையும் அவரது.
    பெரிய புராணம் விளக்க உரையாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
    கலைமகள் கிவாஜ என்று அழைக்கும் அளவுக்கு கலைமகள் பத்திரிகைக்கு பல ஆண்டுகாலம் ஆசிரியராய் இருந்து பத்திரிகை உலகிற்கு அரிய கொடையாக இருந்தவர். தமிழில் நாவல் இலக்கியம் என்றால் கலைமகள் பத்திரிகை தான் நினைவில் நின்ற காலம் அது. அகிலன் என்ற அற்புத எழுத்தாளரை தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்திய செம்மல்.

    கிவாஜ-வின் சிலேடைப் பேச்சு என்று கட்டம் கட்டி
    இரண்டு பாராக்கள் போடுவது (குமுதம் ஆரம்பித்து வைத்த கைங்கரியம்) வழக்கமாகி அவரே அறியாத விபத்தாய் சிலேடைப் பேச்சுக்கு கிவாஜ என்று ஆகிப் போனதை என்னவென்று சொல்ல?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிவாஜ போல என் அம்மா ரொம்ப சிலேடை பேசுவார்.  குறித்துக் கொள்ளாமல் போனேன். சமயங்களில் ஓவர் சிலேடையும் உடம்புக்கு ஆகாது என்று தோன்றும்.

      நீக்கு
  20. 'காதல்' பத்திரிகை தீபாவளி மலர் போட மாட்டார்கள். வசந்த மலராக அவர்கள் பொங்கல் மலர் வெளிவரும். கடைசியாக வெளிவந்த வசந்த மலரில் இரண்டு குறு நாவல்கள்.

    ஒன்று ஜெகசிற்பியன் எழுதியது. மற்றொன்று நான். கதையின் பெயர்:
    பார்வதி அம்மாள் என் அம்மா.

    இதழ் கைவசமில்லை. உங்களிடமிருக்கும் காதல் பத்திரிகைத் தொகுப்பில்
    இந்தக் குறிப்பிட்ட இதழ் கிடைக்கிறதா என்று கொஞ்சம் தேடிப் பாருங்களேன்.

    கதை கிடைததால் இருவருக்கும் சந்தோஷம்.
    கே.வா.போடும் கதை வரிசை எபியில் ஆரம்பித்த உண்மைக் கதை நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் புத்தகத்தில் காதல் யோசனைகளும், தாம்பத்ய யோசனைகளும்தான் இருக்கின்றன.  வேறெங்காவது கிடைத்தால் சொல்கிறேன் ஜீவி ஸார் 

      நீக்கு
  21. காதல் புத்தகத் தொகுப்பு
    என்று குறிப்பிட்டிருந்ததினால்
    காதல் இதழ்களின் பைண்டிங் என்று தவறான புரிதல் கொண்டிருந்திருக்கிறேன்.

    //வேறெங்காவது.. சொல்கிறேன்.. //

    நன்றி. பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதுதான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்!  என்னிடம் காதல் தொகுப்பு பைண்டிங் உள்ளதுதான்.  அதிலிருந்துதான் இவற்றை எடுத்திருக்கிறேன்.  இருக்கும் ஏகப்பட்ட பைண்டிங் புத்தகங்களில் இன்னொரு காதல் தொகுப்பு கிடைக்கிறதா என்று பார்க்கிறேன், கிடைத்தால் சொல்கிறேன் என்றுதான் சொல்ல முயன்றிருக்கிறேன்!

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதியான உங்களின் மனக்குரல் அருமையாக உள்ளது. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

    பொதுவாக நாமே ஒரு கதையை படிக்கும் சுகம் பிறர் படித்து கேட்கும் போது வராது. எனக்கும் ஒரு கதையின் பாவங்களுக்கேற்ப பிறர் ஏற்ற இறக்கங்களோடு படித்தால்தான் பிடிக்கும். இல்லையென்றால் கேட்கும் போதே அதில் சுவாரஸ்யம் போய் தூக்கம் வந்து விடும்.

    கவிதை அருமை. நம் மனக்குரலுக்ககேற்ற கவிதை. ரசித்தேன்.

    கி. வா ஜ அவர்களின் சிலேடை பேச்சையும் சகோதரர் ஏகாந்தன் அவர்களது கடிதத்தையும், படித்து மிகவும் ரசித்தேன்.

    என்னை சில நாட்களாக காணவில்லை என்ற தங்களின் கருத்துரையில் கண்டேன். உடனே வருகிறேன். இந்த ஒரு வார காலமாக ஏதோ விஷேடங்கள், அதற்காக மகன் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தல் என நேரம் சரியாகப் போய் விட்டது. நடுவில் உடல்நிலை வேறு கொஞ்சம் படுத்தல். இப்படியாக பொழுது நகர்கிறது. விரைவில் இயல்பாக அனைவரின் பதிவுகளுக்கும் வருகிறேன். என்னை நினைவு கொண்டு தேடியமைக்கு நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றார் எபியிலே கமலாக்கா.... நன்றி உடனே வந்து படித்து, ரசித்து, கருத்திட்டமைக்கு. உடல்நிலை தேவலாமா?

      நீக்கு
  23. மனக்குரல்.. பற்றிய அலசல் அருமை. பொருத்தமாக அமைந்த கவிதை வரிகளும் சிறப்பு.

    நாம் ரசித்து வாசித்தக் கதையை வேறொருவர் குரலில் கேட்கும் போது தாக்கம் குறைந்து விடுவதாகவே நானும் உணர்ந்திருக்கிறேன்.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!