திங்கள், 15 ஏப்ரல், 2024

"திங்க"க்கிழமை  :  கேழ்வரகு (அ) கம்பு (அ) சோள மாவுக்கஞ்சி (காய்களுடன்) /One dis law! - கீதா ரெங்கன் ரெஸிப்பி

 

வணக்கம், வந்தனம்! சுஸ்வாகதம்! வாங்க வாங்க எபி அடுக்களைக்குள் கீதாவோடு சமைக்க வாங்க!!

one dish law! - one pot dish என்றும் சொல்லலாம். எல்லாம் கலந்த ஒரே ஒரு உணவுதான். ஆரோக்கியமானது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் சரி வயதானவர்களுக்கும் சரி. Gluten free உணவு.

என்றாலும் ஒரு முக்கியமான குறிப்பு : சிறு தானியங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து செய்யக் கூடாது என்பது மருத்துவர்களின் குறிப்பு. ஏனென்றால் ஒவ்வொரு தானியத்திற்குமான செரிமான நேரம் ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப வித்தியாசப்படும். எனவே தானியங்கள் ஒவ்வாமை இருந்தால் அதற்கு ஏற்ப செய்யவும்.

சரி செய்முறைக்கு வாங்க என்னோடு. பெரிய கம்பு சூத்திரம்…ஓ ஸாரி….கம்ப சூத்திரம் எல்லாம் இல்லை.

உங்கள் வீட்டிலுள்ளவர்கள், சாப்பிட விருப்பம் உள்ளவர்களைக் கணக்கெடுத்துக் கொண்டு அதுக்கேத்தாப்ல அளவு எடுத்துக்கோங்க. இங்கு நான் கொடுத்திருப்பது மூன்று பேருக்கான அளவு.

தேவையான பொருட்கள் :

வெந்தயக் கீரை அல்லது முருங்கைக் கீரை ஆய்ந்தது (வேறு எந்தக் கீரை வேண்டுமானாலும் சேர்த்துக்  கொள்ளலாம்) – 2 கோப்பை.

(நான் இங்கு வெந்தயக் கீரை சேர்த்துக் கொண்டுள்ளேன்)

சின்ன வெங்காயம் – 3/4 கோப்பை

பெரிய வெங்காயம் – பெரியதாக ஒன்று, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்

பூண்டு – 10 இதழ்கள்

பீன்ஸ் – ½ கோப்பை

காரட் – 1/3 கோப்பை

காலிஃப்ளவர் – 1 கோப்பை

முளைகட்டிய பயறு (அ) கொண்டைக் கடலை (அ) கொள்ளு இப்படி ஏதேனும் ஒரு வகை – 1 கோப்பை

வேப்பம் பூ – 1/3 கோப்பை (அ) மணத்தக்காளி / சுண்டைக்காய் / மிதுக்க வற்றல் கூட எடுத்துக் கொள்ளலாம். நான் இந்த முறை வேப்பம் பூ சேர்த்துக் கொண்டேன்.

நெய் – 1 ½ தேக்கரண்டி

மிளகுப் பொடி – ½ மேசைக்கரண்டி

வறுத்துப் பொடி செய்த ஜீரகப் பொடி – ½ மேசைக்கரண்டி

உப்பு – உங்கள் தேவைக்கேற்ப

கம்பு மாவு (அ) கேழ்வரகு மாவு (அ) சோள மாவு (சூப்புக்குப் பயன்படுத்தப்படும் வெள்ளை மாவல்ல. சின்னச் சோளம் பொடித்து மாவாக்கியது) – 3 மேசைக்கரண்டித் தூக்கலாக

துவரம் பருப்பு (அ) பாசிப்பருப்பு (அ) இரண்டும் கலந்து ¼ கோப்பை. வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும் (அ) தேங்காய்ப்பால் – 1/2 கோப்பை. தேங்காய்ப்பால் சேர்க்கக் கூடாது என்று அறிவுரைக்கப்பட்டவர்கள் பருப்பு சேர்த்துக் கொள்ளவும். இங்கு இன்று கொடுக்கப்பட்டிருக்கும் படங்களில் / காணொளியில் தேங்காய்ப்பால் சேர்த்திருக்கப்பட்டிருக்கிறது. பருப்பு சேர்க்கும் படமும் இருக்கு.

(காய்கறிகள், பயறு வகைகள், வேப்பம் பூ / சுண்டைக்காய் வற்றல் / மணத்தக்காளி வற்றல் இவை எல்லாம் அளவு உங்கள் விருப்பம். இங்கு நான் கொடுத்திருக்கும் காய்கள் தவிர வேறு காய்கள் – ப்ராக்கோலி, தக்காளி, மாங்காய், வெள்ளரிக்காய், பூஷணிக்காய், அவரைக்காய் குடை மிளகாய், முருங்கை வேக வைத்து  உள் பகுதி மட்டும், இப்படி எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். கத்தரிக்காய், புடலங்காய், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைக் கிழங்கு போன்றவை வேண்டாம்.

வெங்காயம், பூண்டு தவிர்க்க நினைப்பவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு வேப்பம் பூவை / சுண்டைக்காய் / மணத்தக்காளி வற்றல் வறுத்துக்கோங்க. ஆழ்ந்த ப்ரௌன் நிறம் வரைதான் வறுக்க வேண்டும் கறுப்பு ஆகும் வரை வறுக்கக் கூடாது. சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றலும் கூட அப்படித்தான் ரொம்பக் கருப்பாக வறுக்க வேண்டாம். பொதுவாகவே கருப்பாக வறுப்பதைத் தவிர்க்கலாம்.

சின்ன வெங்காயம், பூண்டு முதலியவற்றை இப்படி நசுக்கிக்கோங்க.


½ ஸ்பூன் நெய்யை மண் சட்டியிலோ அல்லது வாணலியிலோ விட்டுக் கொண்டு கீரையை சற்று வதக்கிவிட்டுத் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

நசித்தவற்றை மற்றக் காய்களுடன் சேர்த்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளலாம் அல்லது கீரையுடன் போட்டு நேரடியாகவும் வேக வைத்துக் கொள்ளலாம். (one pot dish)

வேகும் சமயம், கம்பு அல்லது கேழ்வரகு அல்லது சோள மாவை கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்துக் கொண்டு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். இங்கு நான் கம்பு மாவு பயன்படுத்தினேன். இந்த அளவு மாவிற்கு 1 1/2 கோப்பைத் தண்ணீர் தேவைப்படும்.


கீரை வெந்ததும் ஆவியில் வெந்த காய்களைச் சேத்து கலந்துவிட்டு, கரைத்து வைத்திருக்கும் மாவை அதில் விட்டுக் கலந்து தேவையான உப்பு போடவும்.

அடுத்து மிளகுப் பொடி, (படம் எடுக்க விட்டுப் போய்விட்டது. காணொளியில் இருக்கிறது) ஜீரகப் பொடி எல்லாம் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட வேண்டும். மாவு வெந்து கெட்டியாகி வரும். கூடக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

மாவு வெந்தது தெரிந்ததும், தேங்காய்ப் பால் அல்லது பருப்புக் கரைசலை விட்டு, தேங்காய்ப் பால் என்றால் அதிகம் கொதிக்காமல், சிம்மில் வைத்து, 5 நிமிடத்தில் அடுப்பை அணைத்துவிடலாம்

பருப்புக் கரைசல் என்றால் கொஞ்சம் கொதித்ததும் அணைத்துவிடலாம்.

கடைசியில் வறுத்த வேப்பம் பூவைப் போட வேண்டும் அல்லது வற்றல் என்றால் வற்றலைப் போடலாம். அவ்வளவுதான். தயார்!



10 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. கம்பு மாவு கஞ்சி செய்முறை, படங்கள் அனைத்தும் அருமை கீதா.
    இரண்டு காணொளிகளும் நன்றாக எடுத்து இருக்கிறீர்கள்.

    நல்ல சத்துள்ள கஞ்சி. இந்த பருவத்தில் கிடைக்க கூடியது வேப்பம்பூ .
    சேகரித்து வைத்துக் கொண்டால் நல்லது.

    நான் தனியாக சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல், கொத்தவரை வற்றல், வெங்காய வடகம். மோர் மிளகாய், மிதுக்கு வற்றல் எல்லாம் வறுத்து வைத்துக் கொண்டு கஞ்சிக்கு தொட்டுக் கொள்வேன். கஞ்சியில் வறுத்து கொட்டியது இல்லை.
    உங்கள் பக்குவபடி செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. கஞ்சி கூழ் களி வித்தியாசங்கள் என்ன?
    மாவைக் கரைத்து அடுப்பில் காய்ச்சினால் கஞ்சி என்றால் கூழ் என்பது என்ன? அந்த மாவு கட்டியாகி உப்புமா பதத்திற்கு வந்தால் களி?

    சமைத்து பார்த்த நிபுணர்கள் விளக்க கோருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழின் பெருமை ஒவ்வொரு பத்த்திற்கும் சொல் இருப்பது. பேதை, பெதும்பை என்பது போல. கஞ்சி-கொஞ்சம் நீர்க்க (நீராகாரம் என்பது வேறு). கூழ் செமி சாலிட் பதம். களி அனேகமா சாலிட் பதம். (பார்லி கஞ்சி, கேப்பைக் கூழ், திருவாதிரை களி)

      நீக்கு
  5. என்ன... வர வர வயசானவங்களுக்கான செய்முறைகளா வருது. கீதா ரங்கன்(க்கா)வுக்கு ரொம்ப வயசாகிட்டே வருதா?

    பதிலளிநீக்கு
  6. அருமையான கஞ்சி குறிப்பை எழுதியிருக்கிறீர்கள் கீதா! இன்றிரவு அனைவருக்கும் கஞ்சி தான்! அதனால் இதை செய்து பார்க்கிறேன்! கீரையை இது வரை சேர்த்ததில்லை. என்னிடம் பாலக் கீரை தான் இருக்கிறது. இரவில் சேர்க்கலாமா என்று தெரியவில்லை! அதோடு கம்பு மாவு இல்லாததால் முழு கம்பைத்தான் ஊற வைத்து வேக வைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்! செய்து பார்த்து விட்டு சொல்லுகிறேன்!!

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு செய்முறை...

    விளக்கப் படங்கள் அழகு.. அருமை..

    பதிலளிநீக்கு
  8. சிறு தானியங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சிறப்பு இயல்புகள்..

    ஒன்றாக அள்ளிப் போட்டு அரைத்துத் தின்பதே நல்லது என்று இப்போது விளம்பரங்கள் வருகின்றன..

    இந்நிலையில் மருத்துவர் கருத்துகளுடன் பதிவு அருமை..

    பதிலளிநீக்கு
  9. /// சிறு தானியங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து செய்யக் கூடாது என்பது மருத்துவர்களின் குறிப்பு. ஏனென்றால் ஒவ்வொரு தானியத்திற்குமான செரிமான நேரம் ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப வித்தியாசப்படும்..///

    என்றால் சத்து மாவு என்ற பேரில் கூட்டு மாவுக் கலவை விளம்பரங்கள் எதற்காக வருகின்றன?..

    ஓ... இப்படி இருந்தால் தான் அப்படியோ!..

    நமக்கு எதற்கு ஊர் வம்பு..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!