செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை - களத்து மேட்டுக் காவலன் 1 -

களத்து மேட்டுக் காவலன்  1


========================டட்ட டுடும்.... டுடும் டுடும்... டட்ட டுடும்!...
டட்ட டுடும்.... டுடும் டுடும்... டட்ட டுடும்!...

கொட்டுச் சத்தம் ஆரம்பித்தாயிற்று...

இப்போ ராத்திரி மணி பத்தரை...

வருசாந்திர திருவிழாவுக்கு இன்னும் நாள் கிடக்கு...

ஆனாலும் குறுக்கால ஒரு பாய்ச்சல்!..

மாடு கன்னு எல்லாம் நிலை கொள்ளாம தவிக்குதுங்க...
ஊருக்குள்ள பீடை பிணிகளோட நடமாட்டம் ஜாஸ்தியாயிடுச்சு...
வீட்டுக்கு வீடு பிரச்னை... அதிலயும் போனவாரம் தெற்குத் தெருவில
நடக்கக் கூடாதது நடந்திடுச்சு...

ஜனங்க தன்னால மனசு தாங்காம களத்து மேட்டு..ல கூடி
சோழி போட்டுப் பார்த்ததுல சேதி வந்தது -

பாய்ச்சலுக்குப் பந்தக் கால் நாட்டுங்கடா!... - அப்படி..ன்னு

அதுனால தான் இந்த அவசர பூசை!..
இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம்
களத்து மேட்டு முனீஸ்வரன் கிளம்பிடுவார்...

மக்க மனுசங்க.. மாடு கன்னுங்க.. காடு கரை -
இப்படி எல்லாத்துக்கும் முனி ஐயா தான் காவல்...

பத்து வருசத்துக்கு முன்னால
அஞ்சடி ஒசரத்துக்கு ஒரு சூலம் மட்டுந்தான் களத்து மேட்டுல..

அப்புறம் களத்து மேட்டைச் சுத்தி இருக்கிற வெள்ளாமைக்காரங்க
எல்லாரும் ஆளுக்கு பத்தடி விட்டுக் கொடுத்தாங்க...

களத்து மேடு நல்ல அகலமா ஆன கையோட -
சிப்பி சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய், கத்தாழை நார், பனஞ்சக்கை, பதனி,
ஆவாரை, அவுரி, கொளுஞ்சி - இதெல்லாம் சேர்த்துப் போட்டு அரைச்சி
கம்பீரமா முனீஸ்வரனை கட்டி முடிச்சு - நல்ல நாளாப் பார்த்து கண்ணு
தெறந்து வைச்சாங்க...

வெள்ளாமை வேலை ஆரம்பமாயிடிச்சுன்னா
ஜனங்களுக்கு களத்து மேடுதான் வீடு வாசல் எல்லாமே!..

பகல் இரவு..ன்னு தாராளமா புழங்கிக்கிட்டு இருப்பாங்க...

கதிர் அறுத்து அடிச்சு தூத்தி மூட்டையா கட்டுறப்போ
அவங்க அவங்க சக்திக்கு ஏத்த மாதிரி
முனீஸ்வரனுக்கு நெல்லு காணிக்கை
அங்கேயே அளந்துடுவாங்க....

அப்புறம் கோடையில பயறு, உளுந்து, கடல, காராமணி....

இந்த காணிக்கைய எல்லாம் வாங்கி மூட்டை கட்டி
தலைமாட்டுல வச்சிக்கிட்டா முனீஸ்வரன் தூங்கப் போறாரு!?..

அப்படியெல்லாம் இல்லை...

இந்த காணிக்கைய ஊர்ப் பொதுவுல வித்து காசாக்கி
அந்த வரவு செலவுல தான் வருசாந்திரத் திருவிழா எடுக்குறது....
ஏழை பாழை வீட்டு கல்யாணச் செலவுகளுக்கு முழுச்சீர் வைக்கிறது...

வழக்கமா மேல வீட்டு பெரியசாமி அண்ணன் மேல தான் ஐயா எறங்குவார்...

அவங்க அப்பா தாத்தா காலத்தில இருந்தே முனீஸ்வர பூசை..

வெள்ளி, செவ்வாய்.. அந்திப்பட்ட நேரம்
வீட்டுல வேல்கம்பு வச்சி படையல் நடக்கும்...

சின்ன புள்ளைங்க பயந்த கோளாறுக்கு
திருநீறு போட்டு முடிகயிறு கட்டி விடுவாங்க..

ஆட்டைக் காணோம்.. மாட்டைக் காணோம்.. ன்னு
பிராது கொடுத்தா தடம் பார்த்துச் சொல்லுவாங்க...

முக்காலே மூனு வீசம் மாடு கன்னுங்க வீடு வந்து சேந்துடும்...

ஆடு தான் பாவம்... ஏப்பம் விட்டுருப்பானுங்க...

ஆனாலும், விட மாட்டாரு சாமி...
களவாணிப் பயலோட கைய முறிச்சுத் தொங்க விட்டுடுவாரு!...

வருசா வருசம் கார்த்திகை மூனாவது வெள்ளிக்கிழமைய
மையமா வெச்சி முகூர்த்தக்கால் ..

முகூர்த்தக் கால் நாட்டுன மூன்றாம் நாள்
வெள்ளிக்கிழமை நடுராத்திரி முனீஸ்வரன் பாய்ச்சல்..

களத்து மேட்டு முனீஸ்வரனுக்கு ரத்த வாடை ஆகாது...
எல்லாமே சைவ படையல் தான்... ஆனா,

இவருக்கு பரிவாரம்...ன்னு ஏழு பேர்...
இவங்கள்...ல.... பூவாயி....- ன்னு ஒரு கன்னித் தேவதை...

இவங்க ஏழு பேருக்கும்
முனீஸ்வரன் பாய்ச்சல் முடிஞ்ச மூன்றாம் நாள் அசைவ படையல்...

ராத்திரி பத்து மணிக்கு மேல குருதி பூசை...

புதுப்பானையில பச்சரிசியை பொங்கி - அதுல குருதி விட்டுப்
பிசைஞ்சுக்கிட்டு வடக்கால இருட்டுக்குள்ள போவாரு பூசாரி..

தீவட்டி ஒன்னு மட்டும் துணைக்குப் போகும்...

அங்கே ஒரு ஒத்தப்பனை மரம்... அதுக்கிட்ட நின்னுகிட்டு
குருதி சோற்றை உருட்டி உருட்டி ஆகாசத்துல வீசுவாராம்...

ஊர்ல சுத்திக்கிட்டு இருக்கிற
பேய் பிசாசு பிரம்ம ராட்சசர் எல்லாரும்
அதை வாங்கிட்டு போய்டுவாங்களாம்!..

அப்படி..ன்னு பெரியவங்க சொல்லுவாங்க...

அது முடிஞ்சதும் பூசாரிக்கு மஞ்ச நீராட்டு...

அதுக்கப்புறம் பள்ளயம்... படையல்...

களத்து மேட்டுக்குத் தெக்கால அந்த ஏழு பரிவார சாமிகளுக்கும்
அவங்க அவங்க வசதிக்கு ஏத்தபடி படையல் போடுவாங்க...

அன்னைக்கு முனீஸ்வரனுக்கு கதம்ப சோறு படையல்...

அஞ்சு மரக்கால் அரிசி.. எல்லாக் காய்கறியும் போட்டு சாம்பார்..
கூட்டு, பொரியல், அவியல், வறுவல், வடை, அப்பளம், பாயசம், மோர், ஊறுகா...

பாயசம் மட்டும் புதுப் பாத்திரத்துல... மத்ததெல்லாம்
தலை வாழை இலையில அம்பாரமா கொட்டி இருக்கும்...

வாழைப்பழம் மூனு தார், ஒம்பது தேங்காய்.. இது கணக்கு மாறாம வைக்கணும்..

மத்தபடி -
இளநீ, பானகம், பஞ்சாமிர்தம், துள்ளு மாவு
கொழுந்து வெத்தலை, ஏலக்கா போட்டு இடிச்ச கொட்டைப் பாக்கு
எல்லாமும் இருக்கும்..

முனீஸ்வரனுக்கு தீபம் காட்டி தீர்த்தம் கொடுத்ததும்
பரிவார சாமிங்களுக்கு படையல்...

போனது வந்தது எல்லாத்துக்கும் சேதி கேட்டுக் கிட்டு
ஏக களேபரமா இருக்கும்...

ஒரு வழியா சாமி எல்லாம் மலையேறுனத்துக்கு அப்புறமா
முனீஸ்வரனுக்குப் படையல் போட்டது எல்லாருக்கும் விநியோகம் ஆகும்..

காய்கறிப் படையலோ இறைச்சிப் படையலோ - எல்லாத்தையும்
விடியறதுக்குள்ள அங்கேயே சாப்பிட்டு முடிக்க வேண்டும்...

எதையும் எடுத்துக்கிட்டு எல்லை தாண்டக்கூடாது...

அதெல்லாம் இருக்கட்டும்... இதோ சாமி அழைக்கிறாங்க...

டட்டடுடும்.... டுடும் டுடும்...டட்டடுடும்!...

- ந்னு கொட்டு ஆங்காரமா முழங்குது....

பெரியசாமி அண்ணன் முனீஸ்வரனா உருமாறி
ஆக்ரோஷமா நிக்கிறாரு..

மார்.. ல ரெண்டு குறுக்கு மாலை... ஆள் ஒசரத்துக்கு தோள் மாலை...
நேர்ச்சைக்கு அங்க வஸ்திரம் வேற போட்டுருக்காங்க..
பார்க்கவே பனை மரத்துல பாதி இருக்குறாப்புல தோணுது...

பட்டுச் சல்லடம்.. இடுப்புக் கச்சை.. பிச்சுவா பட்டி..
தோள் வளையம்.. கங்கணம்... சலங்கை... எல்லாம் கட்டியாச்சு...

சாம்பிராணி போட்டு கற்பூரமும் எடுத்தாச்சு...

ஹூம்!.. ஹூம்!.. - ந்னு துள்ளிக்கிட்டு நிக்குது சாமி...

பத்து ஆளுங்க சேர்ந்து - இழுத்துப் பிடிச்சி முகப்பட்டம் கட்டுறாங்க...

முகப்பட்டம்...ன்னா முகத்தை மறைச்சி மல்லிகைப் பூவால தடுப்பு...
சாமி முகத்தை யாரும் நேருக்கு நேர் பார்க்கக் கூடாது..ன்னு சம்பிரதாயம்...

முதல்ல பட்டம் கட்டுறது அவங்க வீட்டு ஆளுங்க...

அதுக்கு அப்புறம் மண்டகப்படிக்காரங்க...

ஏழெட்டு முகப்பட்டம் கட்டிக்கிட்டு
சாமி அப்படியே சதிராடி வர்றப்ப மல்லிகை வாசம் தெருவையே தூக்கும்...

ஆறடி உயரத்துக்கு முத்துச் சலங்கை கட்டுன வேல் கம்பு....

அந்த வேல்கம்பைக் கையில பிடிச்சுக்கிட்டு முனீஸ்வரன் கிளம்பிட்டாரு...

எலுமிச்சம்பழத்தை அறுத்து நாலு பக்கமும் வீசியாச்சு..

ஜல்...ஜல்..ன்னு பூமி அதிருது.....

சாமிக்குப் பாய்ச்சல்...ன்னா விறுவிறுப்பான நடை தான்..
ஊரைச் சுத்தி ஏழு தெருவிலயும் வீடு வீடா நிக்கும்...

சாமி வருது... ன்னு வீடு தவறாம வாசல்..ல
நல்ல விளக்கு ஏத்தி வெச்சி ஒரு செம்பு மோர், வாழைப்பழம்,
வெத்தலை பாக்கு..ன்னு தாம்பாளம் வெச்சிருப்பாங்க....

ஒரு செம்பு மோரையும் குடிச்சுட்டு
நல்ல சேதி சொல்லி திருநீறு கொடுக்கும்...

இதெல்லாம் இப்படியிருக்க
எல்லா ஜனங்களுக்கும் இன்னும் சந்தேகம் தீரவே இல்லை...

தெற்குத் தெரு மூனாவது வீட்டுல பெரிய பிரச்னை...
உசுரு போய்ட்டு உசுரு வந்த மாதிரி..

அந்த வீட்டுல அப்படி..ன்னா
அதுக்கு அடுத்த வீட்டுல வேற மாதிரி!...
போன உசிரு எங்க போனது...ன்னு தெரியாம
பொங்கிக் கெடக்கு ஊரு முழுக்க!..

இப்படியான நேரத்துல -
முகூர்த்தக் காலை நாட்டுங்கடா..ன்னு
சொன்னது எப்படி..ன்னு குடைச்சல்!...

டட்ட டுடும்.... டுடும் டுடும்...டட்ட டுடும்!...
டுடும் டுடும்!...
டட்ட டுடும்.... டுடும் டுடும்...டட்ட டுடும்!...

கீழத்தெருவைத் தாண்டி சாமி வந்துக்கிட்டு இருக்கு....

அரைகுறை தூக்கத்தில் இருந்த தெற்குத் தெரு
அடித்துப் பிடித்தபடி விழித்துக் கொண்டது...

அவசர அவசரமாக வாசல் தெளித்துக் கோலம் போட்டு -
நல்ல விளக்கை ஏற்றி உபசாரத் தட்டையும் எடுத்து வைத்தார்கள்...

அந்த மூனாவது வீடும் நாலாவது வீடும் தான்
எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தன...

அந்த வீடுகளில் தான் துக்கமும் துயரமும்!...
இன்னும் முழுதாகப் பத்து நாட்கள் கூட ஆகவில்லை!...

தெரு முனையில் சித்தி விநாயகர் கோயில்!..

முனீஸ்வரன் வந்து நின்றதும் -
பிள்ளையார் கோயில் வாசலில் சூறைத் தேங்காய் விட்டார்கள்...

விபூதித் தட்டில் கற்பூரம் ஏற்றப்பட்டது...

முனீஸ்வரன் வருகைக்காக
தகதக ... - என, ஜரிகை அலங்காரத்துடன்
பிள்ளையார் சந்தனக்காப்பில் இருந்தார்.....

விடலைப் பசங்க ஒன்னாக் கூடி காசு வசூல் பண்ணி
பேண்டு வாத்தியம் அடிச்சிக்கிட்டு இருந்தானுங்க...

பிள்ளையாருக்கு முனீஸ்வரன் தகப்பன் ஸ்தானம்..

இருந்தாலும் முறையைக் கைவிடலாமா?..

கை கூப்பி வணங்கிய சாமி
விபூதியை அள்ளி வானில் வீசி விட்டு நடந்தது..

இதோ முதல் வீட்டு வாசலில் முனீஸ்வரன்...

வீட்டு பெண்கள் குடத்துத் தண்ணீருடன் வெளியே வந்து
சாமியின் பாதங்களில் ஊற்றி விட்டு விழுந்து வணங்கினார்கள்...

சின்னப் பிள்ளைகள் அச்சத்துடன் கதவுக்குப் பின்னால் நிற்க
வீட்டுப் பெரியவர்களிடம் சேதி சொல்லிய சாமி
எலுமிச்சம்பழத்துடன் திருநீறு கொடுத்தது..

வீட்டிலிருந்தவர்களுக்கு ரொம்ப சந்தோஷம்...

இரண்டாவது மூனாவது வீட்டு வாசலிலும்
சாமி நின்னு சேதி சொல்லியாச்சு!..

இதோ... நாலாவது வீடு...
சாமி இங்கே நிற்குமா?.. நடக்குமா?..

எல்லாருக்கும் ஆவல்... பரபரப்பு!...

கொட்டுச் சத்தம் குறையாமல் உச்சத்துக்குச் சென்றது...

டட்டட டட்டட... டும்டும்டும்... டட்டட டும்!...
டட்டட டட்டட... டும்டும்டும்... டட்டட டும்!...
தொடரும்.....

59 கருத்துகள்:

 1. அன்பின் வணக்கத்துடன்
  திருச்செந்தூரில் இருந்து

  துரை செல்வராஜூ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.... திருச்செந்தூர்.... நீண்ட நாட்களாக சென்றுவரவேண்டும் என்று நினைத்திருக்கும் தலம்.

   நீக்கு
 2. திருச்செந்தூரின் கடலோரத்தில்
  செந்தில்நாதன் அரசாங்கம்!..

  பாட்டுச் சத்தும் கேக்கலையா - எம்
  பாட்டுச் சத்தம் கேக்கலையா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செந்தில் நாதனிடம் அனைவருக்கும் வேண்டிக் கொள்ளுங்கள்.

   நீக்கு
 3. அன்பு ஸ்ரீராம், துரை செல்வராஜு, இன்னும் வரப் போகிறவர்களுக்கெல்லாம் காலை வணக்கம்.
  கதை எழுதினவர் வந்து வணக்கம் சொல்லிட்டாரா.
  இல்லை எனக்குத்தான் எழுத்து பிடிபடலையா.
  அம்மாடி சாமி முனீஸ்வரா காப்பாத்து.
  என்னமா கதை ஜங்க் ஜங்க் என்று போகிறது.

  யாரு எழுதுனீங்களோ கதை ரொம்ப நன்றாக இருக்கிறது.
  வர்ணனை அதைவிடப் பிரமாதம்.களத்துமேட்டுக் காவலனின்
  கம்பீரம் அசத்துகிறது.

  இந்த மாதிரி ஒரு நடையில் கதை படித்ததில்லை. மீண்டும் ஒரு தடவை
  படிக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> இந்த மாதிரி ஒரு நடையில் கதை படித்ததில்லை. மீண்டும் ஒரு தடவை
   படிக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.. <<<

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியம்மா..
   தங்களது அன்பான வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 4. துரை முருக தரிசனமா. எங்களுக்கும் சேர்த்து அவரிடம் சொல்லுங்கள்.
  கந்தனுக்கு வேல் வேல் . முருகனுக்கு வேல் வேல்.
  வேல் முருகா வெற்றி வேல் முருகா.

  பதிலளிநீக்கு
 5. கிராமத்து, களத்துமேட்டின் நினைவுகளை அப்படியே கொண்டுவந்திருக்கீங்க.

  நான் 1வது படிக்கும்போது திருவாடானையில் பார்த்தது மனதில் நிழலாடியது.

  ஆனால் கதை அந்தரத்தில் நின்றுவிட்டதுபோல் இருக்கோ? இல்லை கதையின் நோக்கம் கிராமத்து நம்பிக்கைகளைச் சொல்வது மட்டுமா துரை செல்வராஜு சார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடருமாம் எல்லோ நெல்லைத்தமிழன்.... அந்தரத்தில நிற்பாட்டி, நமக்கு ரென்ஷனை ஏற்படுத்துறாராம் துரை அண்ணன் ஹா ஹா ஹா... பாரதிராஜா ரேஞ்சுக்கு வந்துகொண்டிருக்கிறார்:)..

   நீக்கு
  2. >>> ஆனால் கதை அந்தரத்தில் நின்றுவிட்டதுபோல் இருக்கோ? இல்லை கதையின் நோக்கம் கிராமத்து நம்பிக்கைகளைச் சொல்வது மட்டுமா .. <<<

   அன்பின் நெல்லை..

   கதையின் அடுத்த பகுதியில் விளக்கம் கிடைக்கும்...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

   நீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 7. //சிப்பி சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய், கத்தாழை நார், பனஞ்சக்கை, பதனி,
  ஆவாரை, அவுரி, கொளுஞ்சி - இதெல்லாம் சேர்த்துப் போட்டு அரைச்சி
  கம்பீரமா முனீஸ்வரனை கட்டி முடிச்சு - நல்ல நாளாப் பார்த்து கண்ணு
  தெறந்து வைச்சாங்க...//


  களத்து மேட்டு காவலன் அழகாய் காலம் கடந்தும் இருக்கும். அப்படி உறுதியாக செய்து விட்டார்கள்.

  கண்முன்னே மூனீஸ்வரன் வந்து நின்றதை பார்க்க முடிகிறது.

  மிக அருமையான மண்ணின் மனம் வீசும் கதை. கதை தொடர் கதையா?

  //இதோ... நாலாவது வீடு...
  சாமி இங்கே நிற்குமா?.. நடக்குமா?//

  தெரிந்து கொள்ள ஆவல் ஏற்படுகிறது.

  நெல்லைத்தமிழன் சொல்வது போல் சகோ துரைசெல்வராஜூ அவர்கள்தான் என்று நினைக்கிறேன்.
  குமாரும் இப்படி எழுதுவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> கண்முன்னே மூனீஸ்வரன் வந்து நின்றதை பார்க்க முடிகிறது.
   மிக அருமையான மண்ணின் மனம் வீசும் கதை. கதை தொடர் கதையா?..<<<

   குறுந்தொடர் என்று வைத்துக் கொள்ளலாம்...
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...நன்றி..

   நீக்கு
 8. தொடரா...?
  கிராமத்திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வுகள்...

  நடையின் அழகு குவைத் ஜி என்று சொல்கிறது சரிதானே....?

  ஏன் கதாசிரியரின் பெயர் போடுவதில் ஏதும் கஷ்டமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   சும்மா லுலுலுவா காட்டத்தான் இப்படி...வேறொன்றும் இல்லை...
   தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி... நன்றி...

   நீக்கு
 9. பெரியசாமி அண்ணன் முனீஸ்வரனா உருமாறி
  ஆக்ரோஷமா நிக்கிறாரு..

  மார்.. ல ரெண்டு குறுக்கு மாலை... ஆள் ஒசரத்துக்கு தோள் மாலை...
  நேர்ச்சைக்கு அங்க வஸ்திரம் வேற போட்டுருக்காங்க..
  பார்க்கவே பனை மரத்துல பாதி இருக்குறாப்புல தோணுது...

  பட்டுச் சல்லடம்.. இடுப்புக் கச்சை.. பிச்சுவா பட்டி..
  தோள் வளையம்.. கங்கணம்... சலங்கை... எல்லாம் கட்டியாச்சு...
  ////////////மிக மிக அருமையான வர்ணனை.
  நேரே பார்ப்பது போல என்ன ஒரு தோற்றம்.
  சிலிர்க்கிறது. நன்றி இந்த கதைக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> மிக மிக அருமையான வர்ணனை.
   நேரே பார்ப்பது போல என்ன ஒரு தோற்றம். சிலிர்க்கிறது... <<<

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

   நீக்கு
 10. முருக தரிசனம் நல்லபடியாக நிகழ்ந்தது..
  அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டேன்...

  வேலுண்டு வினையில்லை..
  மயிலுண்டு பயமில்லை..
  குகனுண்டு குறைவில்லை..
  கந்தனுண்டு கவலையில்லை..

  மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருகன் தரிசனம் நல்லபடியாக நிகழ்ந்தது மகிழ்ச்சி.
   அனைவருக்கும் வேண்டிக் கொண்டது மகிழ்ச்சி .

   நீக்கு
  2. முருகன் தரிசனம் மிக சிறப்பாக அமைந்ததற்கு மகிழ்ச்சி.

   நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

   இன்று செவ்வாயன்று செந்திலாண்டவன் தரிசனம் சிறப்பாக கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. தாங்கள் எங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கொண்டதற்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. முனீஸ்வரன் அழகே.. அழகு...
  முனீஸ்வரா போற்றி.. போற்றி..

  பதிலளிநீக்கு
 12. அங்கே ஒரு பக்கம் கில்லர் ஜி மூஸாலியை விட்டு கலக்கியடிக்கிறார்...

  இங்கே நடுச்சாமத்தில் முனீஸ்வரனா!..

  பதிலளிநீக்கு
 13. பதில்கள்
  1. அன்பு டிடி,

   நிகழ்வுகளே கதைகளாய் கதைகளே நிகழ்வுகளாய் ஒன்றரக் கலக்குமிடம் தான் கதைக்களம்.

   நிகழ்வுகள் கதைக்கோலம் பூண்டிருக்கும் அழகை ரசித்தீர்களா?

   நீக்கு
  2. அன்பின் தனபாலன் அவர்களுக்கும் அன்பின் ஜீவி அவர்களுக்கும்
   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 14. //வாசல்...லே
  மார்...லே //

  இதன் க்ளூ.. இப்படி புள்ளி குத்தி எழுதறது யார் ஸ்டைல்னு கண்டுபுடிங்க, பாக்கலாம்.

  பதிலளிநீக்கு
 15. பாய்ச்சலுக்கு பந்தக்கால் நாட்டுங்கடான்னு ஆணை கிடைத்ததுமே, கதைக்கு ஜிவ்வுன்னு வேகப் பாய்ச்சல் தான்.. களத்து மேட்டு ஸ்பாட்டிலேயே போய் இறக்கியாச்சு..

  தெரு வலம்ன்னு ஆரம்பிச்சவுடனேயே பரபரப்பு எகிறி.. சரியான இடத்திலே அந்த 'தொடரும்' போட்டுட்டாங்களா...
  இந்த விவரிப்புக்கு ஏத்த மாதிரி பின்னாடி வர்ற கதையும் நீளனுமேன்னு இன்னொரு பக்கம் கவலை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> தெரு வலம்ன்னு ஆரம்பிச்சவுடனேயே பரபரப்பு எகிறி.. சரியான இடத்திலே அந்த 'தொடரும்' போட்டுட்டாங்களா...
   இந்த விவரிப்புக்கு ஏத்த மாதிரி பின்னாடி வர்ற கதையும் நீளனுமேன்னு இன்னொரு பக்கம் கவலை..<<<

   கண்டிப்பாக கதை நீளும் ஐயா!...
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 16. கண்முன்னே காட்சிகளின் அணிவகுப்பு ...

  ஆஹா மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  துரை அண்ணா வா இல்லை குமார் சகோ வா எனபதில் குழப்பம் ..பார்ப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 17. முதல் வரியே செல்வராஜ் ஐயாவை நினைவில் கொண்டு வந்து விட்டது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 18. முனியய்யா ஆட்டம் எங்க ஊர் கருப்பர் ஆட்டத்தைக் கண் முன் நிறுத்தியது.. பிரச்சினைகளால் அதெல்லாம் இல்லாது போய்விட்டது....

  அருமையான கதையோட்டம்.

  வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> முனியய்யா ஆட்டம் எங்க ஊர் கருப்பர் ஆட்டத்தைக் கண் முன் நிறுத்தியது.. பிரச்சினைகளால் அதெல்லாம் இல்லாது போய்விட்டது....<<<

   சில ஊர்களில் இப்படியும் ஆகி விடுகின்றது...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 19. என்ன இண்டைக்கு ஒரே பிங்கி மயமாக இருக்கே:)...
  அழகிய உரையாடலோடு கூடிய கதை, அருமை.

  தன் கதை எனில் எப்பவும், தானே முதலில் குதிப்பாரெல்லோ துரை அண்ணன் ஹா ஹா ஹா அதை வச்சே கண்டுபிடிச்சிடுவேனே:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அதிரா..

   மற்ற பதிவர்களின் படைப்புகள் வெளியாகும்போது முதலில் வருவதில்லையா நான்!?..
   நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள் என்பது தெரிந்ததே...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  நல்ல சுவாரஸ்யமான கிராமிய கதை. வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் கிராமிய மணம் சொட்டுகிறது. விறுவிறுப்பான நடையுடன் பயணித்த கதை நல்ல இடத்தில் தொடரும் போட்டு நின்று விட்டது. அடுத்தப் பகுதிக்கு வரும் செவ்வாய் வரை காத்திருக்க வேண்டுமே என மனது ஆவலுடன் தவிக்கிறது. அருமையான கதையை திறம்பட எழுதிய சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் பணிவான நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> அருமையான கதையை திறம்பட எழுதிய சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள்... <<<

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 21. இனிய மாலை வணக்கம். ஜீவீ சார். என்ன ஒரு கணிப்பு.
  ஒரு நல்ல எழுத்தாளரின் இலக்கணம் அறிய இன்னோரு நல்ல எழுத்தாளரால்
  தான் முடியும்.
  வாழ்த்துகள் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> ஒரு நல்ல எழுத்தாளரின் இலக்கணம் அறிய இன்னோரு நல்ல எழுத்தாளரால்
   தான் முடியும்..<<<

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சியம்மா.. நன்றி..

   நீக்கு
 22. இந்த மாதிரி எழுத்துக்குச் சொந்தக்காரர்களை எபி வழியாகப் படிப்பது
  மிக மிக மகிழ்ச்சி.
  இதோ காலையில் இன்னும் ஒரு தடவை படிக்கப் போகிறேன்.
  வாழ்த்துகள் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுப்பானையில பச்சரிசியை பொங்கி - அதுல குருதி விட்டுப்
   பிசைஞ்சுக்கிட்டு வடக்கால இருட்டுக்குள்ள போவாரு பூசாரி..

   தீவட்டி ஒன்னு மட்டும் துணைக்குப் போகும்...

   அங்கே ஒரு ஒத்தப்பனை மரம்... அதுக்கிட்ட நின்னுகிட்டு
   குருதி சோற்றை உருட்டி உருட்டி ஆகாசத்துல வீசுவாராம்... This I remember from our Thirumangalam days.

   நீக்கு
  2. எனக்கும் இது பற்றி சிறு வயது நினைவுகள் உண்டு.
   மதுரை சிம்மக்கல் தாண்டி வக்கீல் புதுத்தெருவை வெட்டிக் கொண்டு போகும் சின்ன தெருவில் செல்லத்தம்மன் என்னும் அம்மனின் கோயில் உண்டு. அங்கு அக்காலத்தில்-- கிட்டத் தட்ட 66 வருடங்களுக்கு முன்பு-- ஆண்டுத் திருவிழா பொழுது இந்நிகழ்வு நடக்கும். காவு கொடுத்தல் என்பார்கள். முதல் நாள் கோயிலுக்குள், அடுத்த நாள் அந்த ஏரியா சுற்றி, அதற்கடுத்த நாள் மதுரையின் அந்தப் பகுதி சுற்று வட்டாரத்தில. சங்கிலியால் பிணைத்த கோயில் பூசாரி தான் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும். யாரும் இந்த நிகழ்வை பார்க்கக் கூடாதென்று கண்டிப்பான தடை உண்டு. வானை நோக்கித் தூக்கி எறியும் சோற்று உருண்டைகளை பேய்க்கணங்கள் சாப்பிட்டுப் போகும் என்று சொல்வார்கள்.

   நீக்கு
  3. அன்பின் ஜீவி ஐயா அவர்களுக்கு..

   தங்கள் அன்பின் வருகையும் மேலதிக செய்திகளும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 23. ஆஹா... சிறப்பான கிராமியக் கதை. திருச்சியில் வீட்டின் அருகே உள்ள முனீஸ்வரன் கோவிலில் வருடா வருடம் சிறப்புப் பூஜைகள், மாவிளக்கு போடுவது என அமர்க்களப்ப்டும். சில வருடங்கள் பூஜையின் போது அங்கே இருந்திருக்கிறேன்.

  கதை எழுதியது துரை செல்வராஜூ ஐயா அல்லது பரிவை சே. குமார் என்றே எனக்கும் தோன்றியது. பார்க்கலாம் யார் எழுதியது என.

  சரியான இடத்தில் தொடரும்.... பதிவின் அடுத்த பகுதிக்காகக் காத்திருப்பில் நானும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 24. பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 25. பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!