திங்கள், 25 நவம்பர், 2019

"திங்க"க்கிழமை  :  மேத்தி சப்பாத்தியும் இமிலி பச்சிடியும் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 



மேத்தி சப்பாத்தியும் இமிலி பச்சிடியும் 
வெந்தய கீரை ரொட்டியும், இனிப்பு புளி பச்சடியும் 

தேவையான பொருள்கள்:

பொடியாக நறுக்கிய வெந்தய கீரை(பெரியது) --  1 கப்       
         
கோதுமை மாவு   -- 2 கப் 

பச்சை மிளகாய்    -- 2

காரப்பொடி      -  2 டீ ஸ்பூன் 

மஞ்சள் பொடி -  1 டீ ஸ்பூன்

உப்பு                  - 1 டீ ஸ்பூன் 

கரம் மசாலா, பெருங்காயம், கஸ்தூரி மேத்தி போன்றவை அவரவர் விருப்பம் போல வேண்டுமென்றால் சிறிதளவு சேர்க்கலாம். பிடித்தவர்கள் இஞ்சி, பூண்டு விழுது கூட சேர்க்கலாம்.

செய்முறை:

வெந்தய கீரையில் சிறியது, பெரியது என்று என்று இரு வகை உண்டு.அதில் பெரிய இலைகள் கொண்ட வெந்தய கீரையை  நன்கு சுத்தம் செய்து, ஆய்ந்து, பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதனுடன் கோதுமை மாவு மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருள்களை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொண்டு. அதை பராத்தா போல் சற்று கனமாகவும் இடலாம், அல்லது சப்பாத்தி போல் மெலிதாக பரத்தி தாவாவில் போட்டு இரண்டு பக்கமும் நெய் அல்லது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான மேத்தி சப்பாத்தி ரெடி. 






தொட்டுக்கொள்ள இமிலி சட்னி என்னும் இனிப்பு சட்னி செய்ய 
தேவையான பொருள்கள்:
புளி                -  எலுமிச்சை அளவு 
காரப்பொடி  - 2 டீ ஸ்பூன் 
வெல்லம்     - பெரிய எலுமிச்சை அளவு 
உப்பு              -  1 1/2 டீ ஸ்பூன் 
தாளிக்க:
எண்ணெய்  -  1 டேபிள்         
சோம்பு          - 1 டீ ஸ்பூன் 
சீரகம்            -  1 டீ ஸ்பூன் 

செய்முறை:

ஊற வைத்த புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் சோம்பு, மற்றும் சீரகம் போட்டு வெடிக்க விடவும். பின்னர் தூள் செய்த வெல்லத்தை போட்டு புளிக்கரைசலையும் சேர்த்து அதில் காரப்பொடி, உப்பு இவற்றை போட்டு கொதிக்க விடவும். புளி வாசனை போய், சற்று கெட்டியானதும் இறக்கி விடலாம். 

வெந்தய பராத்தாவை இந்த இனிப்பு புளி சட்னியோடு சாப்பிட நன்றாக இருக்கும். வெண்ணை, புளிக்காத கெட்டித்தயிர் போன்றவைகளும் நன்றாக இருக்கும். 

வெந்தய கீரை வயிற்று புண்களை ஆற்ற வல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கும் உகந்தது. அவர்கள் இனிப்பு சட்னியைத் தவிர்த்து வேறு ஏதாவது தொட்டுக்கொள்ளலாம். 

இது என் மருமகள் செய்த பொழுது படங்கள் எடுத்தேன். மேத்தி சப்பாத்தி நானும் இதே முறையில்தான் செய்வேன். இனிப்பு பச்சடியில் பேரீச்சம் பழத்தை கொட்டை எடுத்து விட்டு வென்னீரில் ஊற வைத்து மசித்து சேர்ப்பேன். 





55 கருத்துகள்:

  1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல...


    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .............தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை

      வாழ்க நலம்!

      நீக்கு
    2. Practicalஆ இப்படி பூமா தேவி போல பொறுமையா இருக்க முடியுமா?

      நேற்று சோளிங்கர், 1305 படிகள், சிறிய மலை 450 படிகள் ஏறி அருமையான தரிசனம். எ.பி பக்கம் வர முடியலை.

      நீக்கு
    3. //Practicalஆ இப்படி பூமா தேவி போல பொறுமையா இருக்க முடியுமா?//
      Yes, it is possible, but we will take them for granted.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... 
       
      வாங்க....

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம்..
      மின்னஞ்சலைக் கவனிக்கவில்லையா!...

      நீக்கு
    3. நேற்றே பதில் அளித்து விட்டேனே....!!

      நீக்கு
  3. இங்கே இதனைச் சாப்பிட்டிருக்கிறேன்...

    எளிய செய்முறை... உடலுக்கும் நல்லது...
    அருமை.. அருமை...

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   வணக்கம்.   பிரார்த்தனையில் நானும் கலந்து கொள்கிறேன்.

      நீக்கு
  5. காலை, நள்ளிரவு, இரவு வணக்கம் அனைவருக்கும்

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அன்பு துரை ,பானு,
    ஸ்ரீராம், கமலா அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

    அன்பு பானுவின் மேதி சப்பாத்தி சூப்பர்.
    அழகா குறிப்புகளைச் சொல்லி இருக்கிறார்.

    மருமகள் ஸ்பெஷலிஸ்ட் சப்பாத்தி செய்வதில்.
    இம்லி தான் ரொம்ப ருசி.
    காலை டிபன் பானுமதி கிருபையில் ஆச்சு. நன்றி மா.

    பதிலளிநீக்கு
  7. மேத்தி சப்பாத்தி இதுவரை சாப்பிட்டதில்லை. செய்முறை எளிது.

    பானுமதி வெங்கடேச்வரன் மேடம் ஸ்பெஷல் என்பதால் ஒரு மாதம் கூட காத்திருப்பு இல்லாமல் ஶ்ரீராம் வெளியிட்டுவிட்டாரோ?

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் இமிலியை 7 1/2 க்குச் செய்திருந்தாலும், சப்பாத்தி செய்து இரவு உணவுக்குத் தட்டில் போட்டுக்கொண்ட இரவு 9:30 மணி, நான் தூங்கி ஒரு நாழிகை ஆயிருக்கும் நேரம்.

    பதிலளிநீக்கு
  9. இமிலி செய்முறை படிக்கும்போதே, வெல்லத்திற்குப் பதில் பேரீட்சை சேர்க்கலாமே என்று மனதில் தோன்றியது. நீங்களும் அதனைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    நல்ல செய்முறை, படங்களுடன். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. 8 1/4க்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு அரை மணி நேரம் ஊறணுமா இல்லை ஒரு சீரியலை பார்த்து முடிக்கணுமான்னு எழுத விட்டுட்டீங்க. 9 மணிக்குத்தான் முதல் சப்பாத்தி தவால போட்டிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை சமையல் குறிப்பு போடும் பொழுது தேதி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹா ஹா! அடுத்த முறை சமையல் குறிப்பு போடும் பொழுது தேதி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹா ஹா! அதுதான் முதல் சப்பாத்தி என்று எப்படி சொல்கிறீர்கள்? கடைசி சப்பாத்தியாகவும் இருக்கலாமே.

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பையர் குட்டிக்குஞ்சுலுவோடு இங்கே வந்திருந்ததால் இணையம் வர நேரம் ஆனது. குட்டிக்குஞ்சுலுவுக்கு இன்னிக்குத் தூக்கக் கலக்கம்.

    பதிலளிநீக்கு
  12. அது கஸ்தூரி மேதி இல்லை. கசூரி மேதி! தமிழ்நாட்டில் எல்லோருமே கஸ்தூரி மேதி என்றே சொல்லுகின்றனர். ஏன் என்று தெரியவில்லை. சின்னப் பிஞ்சு வெந்தயக் கீரையிலும் பண்ணலாம். நாங்க அதிகமாச் சின்னக் கீரையில் தான் பண்ணுவோம். சின்னக் கீரை ஆய்வது சிரமம் என்பதால் பலரும் பெரிய கீரையை விரும்பலாம். சின்னக் கீரையையும் நன்கு பொடியாக நறுக்கி அலசி ஆய்ந்து மண்ணை நீக்கிவிட்டுப் பின்னர் கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி போட்டுச் சிறிது நேரம் வைத்துவிடுவேன். பின்னர் மாவில் எல்லாப் பொருட்களோடும் கலந்து பிசைவேன். கடலை மாவு சேர்த்தால் தேப்லாவாகப் பண்ணிடுவேன். கடலை மாவு சேர்க்காமல் கோதுமை மாவு மட்டும் எனில் பராந்தா! மடித்துப் போட்டுக் கொஞ்சம் கனமாகவே இடுவோம். பெரிய கீரையையும் சரி, சின்னக் கீரையையும் சரி சப்பாத்தி பண்ணுவது மட்டுமில்லாமல் அடைக்கும் போடுவோம். பருப்பு உசிலியும் பண்ணுவோம். வடமாநிலங்களில் பண்ணும் பஜியாவுக்கு (நம்ம ஊர்த் தூள் பஜ்ஜி மாதிரி) இது போட்டுப் பண்ணினால் நன்றாக இருக்கும். வெந்தயக்கீரையை மட்டுமே பஜியா பண்ணுவதும் உண்டு. குஜராத்தில் பண்ணும் "உந்தியா" என்னும் நம்ம ஊர் அவியல் போன்ற வ்யஞ்சனத்திற்கு இந்த மேதியில் செய்த பஜியாக்களை உருட்டி எண்ணெயில் பொரித்துக் கடைசியில் சேர்ப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வடமாநிலங்களில் பண்ணும் பஜியாவுக்கு (நம்ம ஊர்த் தூள் பஜ்ஜி மாதிரி) இது போட்டுப் பண்ணினால் நன்றாக இருக்கும்.//சாப்பிட்டிருக்கிறேன் 

      நீக்கு
  13. படங்கள் மிக தெளிவாகவும் பதிவு எளிமையாகவும் ஆக மொத்தம் நன்றாக வந்திருக்கிறது சமையல் குறிப்பு போடும் மற்ற பதிவாளர்களும் இதே முறையில் பதியலாமே

    பதிலளிநீக்கு
  14. புளிச்சட்டினி செய்யும்போது தாளிப்பதில்லை. அதுவும் கடுகு, ஜீரகம், சோம்பு போன்றவை வாய்ப்பே இல்லை. கெட்டியாகப் புளியைக் கரைத்துக் கொண்டு உப்புச் சேர்த்து மிளகாய்ப் பொடியும் சேர்த்துக் கொதிக்க வைத்து வாசனை போகும் சமயம் புளிக்குச் சமமான வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைப்பொம். புளியும் வெல்லமும் சேர்ந்து நன்கு கெட்டியானதும் கீழே இறக்கி வெறும் வாணலியில் வறுத்த ஜீரகத்தைப் பொடி செய்து சேர்ப்போம். இம்மாதிரித் தேப்லா, பராந்தா போன்றவைகளுக்கு அநேகமாகத் தயிர், ஊறுகாய் தான்! சர்க்கரை சேர்த்த எலுமிச்சை ஊறுகாய் அல்லது வெல்லம் சேர்த்த மாங்காய் ஊறுகாய் குஜராத்தில் அதிகம் தொட்டுக்க வைச்சுப்பாங்க. மிக்சட் வெஜிடபுள் ஊறுகாயும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. பேரீச்சம்பழச்சட்னி குஜராத்தியர் செய்முறை தனியாக இருக்கும். பொதுவாக நான் செய்தால் பேரீச்சம்பழத்தோடு கொஞ்சம் போல் புளி, உப்பு, வெல்லம் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு அதில் ஜீரகப் பொடியைப் போட்டுக் கலந்து வைத்துக் கொள்வேன். இதை அதிகம் கொதிக்க விட வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  16. மறந்துட்டேனே, தேப்லா பண்ணினாலும் சரி, பராந்தா பண்ணினாலும் சரி மாவு பிசையும்போது கெட்டித் தயிர் சேர்ப்போம். நான்கு பேருக்குச் சப்பாத்தி பண்ண மாவு பிசைந்தால் ஒரு கிண்ணம் தயிராவது தேவைப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதியின் செய்முறை விளக்கமும் அதற்கேற்ற படங்களும் அழகாக வந்திருக்கின்றன. சமைக்கும்போது இப்படி யாரேனும் படம் எடுத்துக் கொடுத்தால் நன்றாக எடுக்க முடியும். நாமே சமைத்துக்கொண்டும், படமும் எடுத்துக்கொண்டும் இருந்தால் ஏதேனும் ஒன்றில் தான் கவனம் போகிறது. அநேகமாய்ச் சமையலில் போய்விடும்.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் பதிவான இந்த மேத்தி சப்பாத்தி, இமிலி சட்னி ஆகியவற்றின் செய்முறையும்,படங்களும் வெகு ஜோராக இருக்கிறது. இரண்டுக்கும் சுவை பொருத்தமாக இருக்கும். நானும் இதுபோல் செய்து பார்க்கிறேன்.

    அருமையாக செய்து காண்பித்த அவர்களிள மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

    இமிலி சட்னியும் வருடப் பிறப்பன்று வேப்பம்பூவோடு செய்து சுவைத்துள்ளோம்.

    அழகாக செய்முறைகளை கூறி பதிவிட்ட சகோதரிக்கும், பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி! உங்கள் பாராட்டை என் மருமகளுக்கு தெரிவித்து விடுகிறேன். 

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. வெந்தய கீரை ரொட்டியும், இனிப்பு புளி பச்சடியும் அருமை.
    செய்முறை குறிப்புகள் படங்கள் அழகு.
    வெந்தய கீரை நன்றாக கிடைக்க மாட்டேன் என்கிறது. இலைகள் பழுத்த மாதிரியே இருக்கிறது. பச்சை பசேல் என்று வீட்டில் வளர்த்து செய்ய போகிறேன். முன்பு வெந்தயகீரை ரொட்டி செய்து இருக்கிறேன். அதற்கு இனிப்பு புளி பச்சடி செய்தது இல்லை. செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. இலைகளை மட்டும் தான் போட்டு செய்து இருக்கிறேன். உங்கள் மருமகள் சிறு தண்டையும் பயன்படுத்தி இருக்கிறார் அது போல் செய்து பார்க்கிறேன்.
    மருமகளுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி எத்தனை நுட்பமாக கவனித்திருக்கிறீர்கள்!அதற்கு உங்களை பாராட்ட வேண்டும்.

      நீக்கு
  22. வெந்தய கீரையில் சிறியது, பெரியது என்று என்று இரு வகை உண்டு.////
    ஓ இது இப்போதான் எனக்குத் தெரியுது, நான் நினைப்பேன் வீட்டில் வளர்த்தால் குட்யாக வருதே கடையில் பென்னாம்பெரிசாக இருக்கே என....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார்த்திகை பிறையா? அது கண்ணுக்கே தெரியாதே?சித்திரை நிலவு என்று வைத்துக்கொள்ளுங்கள்

      நீக்கு
  23. இமிலி... பொம்பிளைப்பிள்ளைகளின் பெயர்போல அழகா இருக்கு... இதுவும் புதிசெனக்கு.
    சப்பாத்தி குட்... ஒரு தடவை செய்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு ஹிந்தி பண்டிட் அதிரா என்று பெயர் வைத்துக்கொண்டிருந்த நினைவு.

      நீக்கு
    2. எ.பி.யின் என்சைக்ளோபீடியாவாக ஒருவர் இருப்பதை மறந்துவிடக்கூடாது.

      நீக்கு
  24. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். என்ன இன்னிக்கு யாரும் கதை அனுப்பவே இல்லையா?

    பதிலளிநீக்கு
  25. வெந்தய கீரை ரொட்டியும், இனிப்பு புளி பச்சடியும் ...ரெண்டுமே அருமையா இருக்கு ...நிறைய இடத்தில் பார்த்தாலும் இன்னும் சமைத்து பார்த்தது இல்ல ...

    விரைவில் சமைத்து பார்கிறேன் ...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!