செவ்வாய், 3 மார்ச், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : சந்தோஷத் தோரணங்கள் - துரை செல்வராஜூ 


சந்தோஷத் தோரணங்கள்..


துரை செல்வராஜூ 

======================

புத்தம் புது வீடு...  கூடவே கல்யாணக் களை...

சில நாட்களுக்கு முந்தைய தோரணங்கள் இன்னும் காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறன...

தெற்கு நோக்கிய அந்த வீட்டின் மேல் தளத்தில் கிழக்குப் புறமாக விசாலமான அறை ..

அந்த அறையின் முன்பாக தளம் முழுதும் பச்சை நிற பிளாஸ்டிக் தகடுகளால் வேயப்பட்டிருக்க வெயிலின் வெம்மை வெகுவாகக் குறைந்திருந்தது...

அத்துடன் தளம் முழுதும் சின்னஞ் சிறு பூச்செடிகள் தொட்டிகளில்
அணி வகுத்திருக்க நடுநாயகமாக மெத்தையுடன் கூடிய ஊஞ்சல்....

அதில் இரண்டு இளங்கிளிகள்...

சில நாட்களுக்கு முன்பாக மணம் முடித்திருந்தவை அவைதான்...

வாசம் குறையாத மஞ்சள் கயிற்றுடன் திருவளர்ச்செல்வி....  அவளது தோளை உரசியவாறு தவமாய்த் தவமிருந்து பெற்ற பிள்ளை..

மெதுவாக ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்க அதைக் கண்டு ஆனந்தம் பாடிக் கொண்டிருந்தது பரிமளத்தின் மனம்...

பதினெட்டு வருடம் ஒற்றையாய் நின்று போராடி வீட்டையும் கட்டி அதில் மகனுக்குக் கல்யாணத்தையும் நடத்தி விட்ட சந்தோஷம் அலையலையாய்ப் பொங்கியது அவளது மனதுக்குள்...

நான்கு வருடங்களுக்கு முன் மூத்தவள் ரேவதியின் திருமணம் நடந்த போது விளைந்த ஆனந்தத்தை விட இப்போது அதிகம்...

சுவர் ஓரமாக சோபாவில் அமர்ந்தபடி மகனையும் மருமகளையும்
கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பரிமளம்...

இந்த ஒரு வாரத்தில் மணமக்கள் அங்குமிங்குமாக அழைப்புக்குச் சென்ற நாட்களைத் தவிர்த்து - மற்ற நாட்களில் அவர்களை மாடியிலிருந்து கீழே இறங்க விடவே இல்லை பரிமளம்...

பரிமளம் அனாவசியமாக மேலே வந்ததும் இல்லை..

இப்போது வந்தது கூட மாலை நேர சிற்றுண்டி கொடுப்பதற்காகவே...

இப்படியான சந்தோஷத்தைக் கெடுப்பதற்காக என்பது போல
கீழிருந்து அழைப்பு மணியின் ஓசை...

கூடவே -

பாலா... பாலா!... - என, அன்பின் தேடல்...

வந்துட்டான்.. கடங்காரன்!.. - என்றபடி பரிமளம் எழுந்தபோது

கணேஷ் அண்ணாவா!.. - என்றாள் பரிமளத்தின் மருமகள்...

அவ்வாறு அவள் சொன்னதும் சுருக்கென்றிருந்தது பரிமளத்துக்கு...  ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை...

பாலா.. நீ கீழே வராதே... நானே அனுப்பி விட்டு வருகிறேன்!...  என்றபடி வேகமாக எழுந்து நடந்தாள்...

அவசரமாக - அம்மா!.. - என்றான் பாலா...

அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை பரிமளம்...

மாடியிலிருந்து கூடத்துக்கு உட்புறமாகவே இறங்கும்படியான படிக்கட்டுகள்...

அதற்குள் வீட்டுக்குள் வந்து விட்ட கணேஷ் கூடத்து நாற்காலியில் அமர்ந்திருக்க - ரேவதி அவனை உபசரித்துக் கொண்டிருந்தாள்...

மாமா... மாமா!.. - என்று கணேஷின் மடியில் பேத்தி ...

கொஞ்சங்கூட சகித்துக் கொள்ள முடியவில்லை - பரிமளத்துக்கு...

மாற்றுக் குறைந்த புன்னகையுடன் -

வா.. கணேஷ்!... - என்றாள்...

காலையில தான நாம எல்லாரும் உறையூர்..ல இருந்து வந்தோம்..  அதுக்குள்ளயும் கூட்டாளியைப் பார்க்காம இருக்க முடியலையா உனக்கு?...

எகத்தாளம் கொப்பளித்தது பரிமளத்தின் வார்த்தைகளில்...

கல்யாணத்திலும் சரி..  மூன்று அழைப்புகளுக்கும் சரி..
பாலாஜிக்கு கணேஷ் தான் மாப்பிள்ளைத் தோழன்...

உறவுக்கார பசங்கள் நாலைஞ்சு பேர் இருந்தாலும்
பாலாஜியின் பிடிவாதம் தான் வென்றது..

அந்த அளவுக்கு பாலாஜியும் கணேஷூம் சிநேகம்..

இருக்காதா பின்னே...

இருவரும் பத்து வயதிலிருந்தே பள்ளித் தோழர்கள்...

இன்றைக்கு ஆகிறது வயது இருபத்திரண்டு...

பாலாவின் தந்தை திடீரென இறந்தபோது அவனை விட அதிகமாக அழுதவன் இவன் தான்...

கணேஷ் வசதியில் கொஞ்சம் குறைவுதான் என்றாலும் குணத்தில் கோமேதகக் குன்று...

வீட்டு வேலையாகட்டும் அல்லது வேறொருவருக்கான வேலைகளாகட்டும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வான்...

கணேஷின் முகத்தில் கோபத்தை யாருமே கண்டதில்லை...

பரிமளத்தில் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்ட கணேஷ் -

'' நாளைக்குக் காலைல மாரியம்மன் கோயில் போய்ட்டு அப்படியே சாலியமங்கலம் வழியா திருக்கருகாவூர் போகணும்..ன்னு பாலா சொல்லிக்கிட்டு இருந்தான்... அதைப் பத்தி சொல்லலாம்..ன்னுதான் வந்தேன்... புது ஏசி வண்டி... கிலோ மீட்டருக்கு எழு ரூபாய் கேட்டான்... நான் நாள் வாடகைக்குப் பேசியிருக்கேன்..

சொல்லிக் கொண்டிருந்தவனை இடை மறித்தாள் - பரிமளம்..

'' அதெல்லாம் இப்ப ஒன்னும் வேண்டாம்... ''

'' ஏம்மா!... '' - கணேஷிடம் வியப்பு..
.
'' கோயில் கொளமெல்லாம் இப்போ சரிப்படாது...  தேவைப்படுறப்போ நான் பார்த்துக்கறேன்... ''  என்று முகம் கடுத்த பரிமளம் -

'' சின்னஞ் சிறுசுங்க... அப்படியும் இப்படியுமா இருக்குற நேரம்..  இவனுக்குத் தான் ஒன்னும் புரியலே... ''  என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பரிமளம்...

இடையில் கணேஷின் தோளில் குழந்தை தூங்கிவிட -

'' ரேவதி... பாப்பா தூங்குறா பாரு... உள்ளே தூக்கிக்கிட்டுப் போ.. '' - என்றாள்..

கணேஷிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்ட ரேவதி
அங்கிருந்து அகன்றதும் -

'' இத பாரு கணேஷ்.. இனிமே ஒயாம பாலா.. பாலா.. ந்னு
இங்கே வர்ற வேலை வைச்சுக்காதே... அவனைக் கொஞ்சம் தனியா இருக்க விடு..  புதுப் பொண்ணு இருக்கற எடம்... புரியும்..ன்னு நெனைக்கிறேன்... ''

பரிமளத்தின் வார்த்தைகளில் அனல் தகித்தது...

'' இரு!.. கொஞ்சம் ஸ்வீட் எடுத்துக்கிட்டு வர்றேன்!... ''

- என்றபடி பரிமளம் எழுந்த வேளையில் -

கணேஷின் அலைபேசி கிணுகிணுத்தது...

சமையற்கட்டுக்குள் சென்ற பரிமளம் கையில் இனிப்பு வகைகளுடன் கூடத்துக்குத் திரும்பி வந்த போது அங்கே கணேஷ் இல்லை...

'' என்ன இது சொல்லாம கொள்ளாம போய்ட்டான்!...'' பரிமளத்துக்குத் திகைப்பு..

'' நீ பேசின பேச்சுக்கு சொல்லிட்டு வேற போவாங்களாக்கும்!... ''  ரேவதி கடுகடுத்தாள்...

'' ஒனக்கு ஒன்னும் தெரியாது.. நீ சும்மா இரு... '' - அதட்டினாள் பரிமளம்...

'' ஏம்மா.. நாலு வருசத்துக்கு முன்னால எங் கல்யாணத்தப்போ ஜுரத்தோட ஜுரமா ஓடி ஓடி எல்லா வேலையும் செஞ்சது இந்த கணேஷ் அண்ணன் தானே!.... ''

'' இந்த எடத்தை நாம வாங்கி வீடு கட்டுனது யாரால?..  அவனால தானே அம்மா!.. ''

கேள்வியும் பதிலுமாக மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் பாலாஜி..

பரிமளத்துக்கு கோபம் தலைக்கு ஏறியது...

'' என்னப்பா... ஆளாளுக்குப் பேசுறீங்க?...  வளர்ந்துட்டதாலயா!.. இல்லை வளர்த்து விட்டதாலயா?... ''

ஒரு கணம் அமைதி...

'' உங்களுக்குத் தெரியாது..  மனுச மனம் ஒரு நேரம் போல இருக்காது... ''

'' அதான் தெரியுதே!... ''

ரேவதி இடங்கண்டு இடித்தாள்....சிரித்தாள்...

'' அந்தக் கணேஷ் ராசியில்லாதவன்..  அவனும் இவனும் ஒன்னாத்தான் வளர்ந்தானுங்க....  ஒன்னாத்தான் படிச்சானுங்க.... ''

ஆனா இவனுக்குத் தான் வேலை சம்பளம் , வீடு வாசல்..  கல்யாணம்..ன்னு அதிர்ஷ்டம் கூடி வந்திருக்கு...

'' நமக்கு இன்னும் வேலை கிடைக்கலையே..  நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே...ன்னு அவன் மனசுல நெனைப்பு வந்தா அது நல்லதுக்கா?... ''

'' அதுவுமில்லாம கூட்டாளி.. கூட்டாளின்னு...  எந்த நேரமும் கூடவே இருந்துக்கிட்டு....  அதான் விரட்டிவிட்டேன்!... ''

- அளப்பரிய  செயல் செய்ததைப் போல பரிமளம் தன்னைத் தானே வியந்து கொண்டாள்..

'' அவன் அப்படிப்பட்டவன் இல்லைம்மா!... ''

'' நமக்குத் தேவைப்பட்ட சமயத்துல அவனை ராசிக்காரன்... ன்னு
சொன்னோம்...  எதுவும் தேவையில்லாத இந்த நேரத்துல அதிர்ஷ்டம் இல்லாதவன்..  கண் திருஷ்டி பட்டுடும்..ன்னு சொல்றோம்... ''

'' இருந்தாலும் அவன் ரோஷக்காரன்... இந்த மாதிரி பேசியிருக்கக் கூடாது...  அவன் இனிமே இந்தப் பக்கம் நினைச்சுக் கூட பார்க்க மாட்டான்... ''

'' அதெல்லாம் நினைச்சுப் பார்ப்பான்...  அவனுக்கு இதை விட்டா வேற
போக்கிடம் ஏது பாலா!.. வருவான் பாரு நாளைக்கு!... ''

பரிமளத்தின் பேச்சில் எகத்தாளம் தொனித்தது...

ஆனால் பரிமளம் சொன்னது போல மறுநாள் அவன் வரவில்லை..
அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் கூட வரவில்லை...

அந்தத் தெருவைச் சேர்ந்த சிறுவன் ஒருவனைக் கூப்பிட்டுக் கேட்க
கணேஷ் ரெண்டு நாளா வீட்டில் இல்லை என்றான்...

கணேஷ் வீட்டிலும் இல்லை என்று கேட்டதும் - திக்!.... என்றிருந்தது பரிமளத்துக்கு...

அலைபேசியைச் சுரண்டினாள்.. இணைப்பில் இல்லை என்றது...

எங்கே போனான்... மனசு உடைஞ்சு போய்ட்டானோ?..

புது மாப்பிள்ளை பாலாவின் முகமும் களையிழந்து போனது...

மகனுடன் எப்படிப் பேசுவது என்று தெரியாத பரிமளம் மாடிக்குச் சென்ற வேளையில் ரேவதி அலறினாள்...

''அம்மா... இங்கே வாயேன்!... ''

உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்கள்..

பூக்காரத் தெரு புது ஆற்றங்கரையில் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க வாலிபருடைய....

'' நிறுத்து... நிறுத்து... டீவிய நிறுத்து!... ''  - பதறியபடி காதுகளை மூடிக் கொண்டாள் பரிமளம்..

காவல் துறையினர் மேலும் புலன் விசாரணை செய்து வருகின்றனர்...

'' பாலா... கீழே வா.... வண்டிய எடு... கணேஷ் வீட்டுக்குப் போகணும்!... ''

சத்தம் போட்டாள் பரிமளம்...

கூடத்தில் களேபரத்தைக் கேட்டு கீழே ஓடி வந்தான் பாலா!...

'' என்னம்மா... என்ன ஆச்சு!...''

'' கணேஷ் வீட்டுக்குப் போகணும்..ப்பா..  மனசெல்லாம் பதறுது!... வண்டிய எடு சீக்கிரம்!... ''

கலங்கிய கண்களுடன் பரிமளம் வாசலுக்கு விரைந்த போது

'' அம்மா!... '' - என்றபடி எதிரில் வந்து கொண்டிருந்தான் கணேஷ்...

ஆனந்த அதிர்ச்சி..  திக்குமுக்காடியது பரிமளத்தின் மனம்...

'' எங்கேடா போயிருந்தே!.. சொல்லாம கொள்ளாம!... ''

வருத்தமும் மகிழ்ச்சியுமாக கடிந்து கொண்டாள்...

'' ஏண்டா.. நீ பாட்டுக்குப் போய்ட்டே...  இங்கே நாங்க பட்டபாடு எங்களுக்குத் தான் தெரியும்... ''

பாலா சத்தம் போட்டான்...

'' எங்கேடா போயிருந்தாய்?... ''

பரிமளம் கணேஷின் சட்டையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் கேட்டாள்...

'' நம்ம கபிஸ்தலம் சரவணன் இருக்கானே.. அவனோட அக்காவுக்கு அடுத்த வாரம் கல்யாணம்... தாத்தா திடீர்..ன்னு மயக்கம் போட்டுட்டார்... கும்மோணம் பிரைவேட் ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க... ''

'' தாத்தா கூட இருந்து கவனிக்கறதுக்கு ஆள் இல்லை... எனக்கு சேதி வந்தது போனேன்... தாத்தாவை ரெண்டு நாள் கவனிச்சுக்கிட்டேன்... ''

'' ஏன் தாத்தா இவ்ளோ அவசரம்... பேத்தி கல்யாணத்தைப் பார்க்க வேணாமா?..  அதுக்குப் புள்ளைங்க பொறந்து அதுகளைக் கொஞ்ச வேணாமா... அதுக உங்க மேல உச்சா எல்லாம் அடிக்க வேணாமா.... ன்னு கேட்டேன்... ''

'' தாத்தா வாய் விட்டுச் சிரிச்சார்... நோய் விட்டுப் போச்சு..  கூட இருந்த எல்லாரும் சிரிச்சாங்க... அப்புறம் என்ன!...  ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு வந்துட்டோம்!.... ''

'' இப்போ தாத்தா பேத்தியோட கல்யாணப் பந்தல்.. ல தோரணம் கட்டிக்கிட்டு இருக்கார்!... ''

'' சரி.. அங்கே போற நீ... வீட்டுல சொல்லிட்டுப் போக வேணாமா?... ''

'' நல்ல கதை தான்... கபிஸ்தலம் போறேன்...ன்னு சொன்னா அப்பா தாண்டவம் ஆடுவார்... கபிஸ்தலம் தானே அம்மா பொறந்த ஊர்...  அங்கே மாமா குடும்பத்தோட பேச்சு வார்த்தை இல்லை... ''

'' அதனால அம்மா கிட்ட மட்டும் சொல்லிட்டுப் போனேன்... ''

'' அங்கே போன நேரம் பிரிஞ்சிருந்த எங்க குடும்பம் ஒன்னு சேரப் போவுது... ''

'' எங்க ஆச்சி, தாத்தா எல்லாரையும் பார்த்தேன்...  மாமா என்னைப் பார்த்ததும் அழுதுட்டார்...  சின்ன் வயசில என்னைத் தூக்கி வளர்த்ததெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுச்சாம்... ''

''எதுக்குப் பகை.. எதுக்குப் பழி... எதுக்குடா இதெல்லாம்?...  வெள்ளிக் கிழமை வீட்டுக்கு வர்றோம் மாப்ளே!..  அப்படி.... ன்னுட்டார்... ''

'' நல்ல நேரம் தான்!.. '' - ரேவதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது...

'' பின்னே... இருபது ஏக்கர் நஞ்சை.. ஏழு ஏக்கர் வாழத் தோப்பு இதோட மாமா பொண்ணும் வருதே!.. ''

'' ஓ!... மாமா பொண்ணா!.. என்னடா பேரு?... ''

ரேவதிக்கு சந்தோஷம் தாளவில்லை ...

'' சிநேகவல்லி!.. '' - என்றான் கணேஷ் வெட்கத்துடன்....

'' அங்கேயும் சிநேகந்தானா!.. ''

எல்லாரும் சிரித்தார்கள்...

'' இத பாருடா கணேஷ்... இனிமே எங்கேயும் வெளியில போனா...  உங்க அம்மா கிட்ட சொல்ற மாதிரி இந்த அம்மாக்கிட்டயும் சொல்லிட்டுப் போகணும் .. தெரியுதா!... ''

பரிமளத்தின் மனம் பரிமளமாகியிருந்தது..

''அதுக்கெல்லாம் இனிமே வாய்ப்பே இல்லை..  அவன் சிநேகவல்லிக்கிட்ட மட்டுந்தான் சொல்லுவான்!...''

பாலா வாய் விட்டுச் சிரிக்க அங்கே காற்றில் ஆடிக் கொண்டிருந்த தோரணங்கள் கலகலத்தன..


ஃஃஃ

79 கருத்துகள்:

  1. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. இன்று எனது சிறுகதையைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கங்கள்

    இன்று துரை செல்வராஜு சார் கதையா? நன்றாக இருக்கும். பிறகுதான் வர முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை. ஆமாம், துரை செல்வராஜு ஸார் கதைதான்.

      இப்போ எந்த ஊரில் இருக்கீங்க?

      நீக்கு
    2. கொஞ்ச நேரம் முன்பு நொய்டா (தில்லி) தாண்டி பானிபட் நோக்கிச் செல்கிறோம். இரவு குருஷேத்திரம் அடையத் திட்டம்

      காலை எழுதும்போது விருந்தாவனில் இருந்தோம்

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நல்லதொரு செவ்வாயில் இனிமையான கதை.இதை மாதிரி சொல்ல அன்பு துரையால
    தான் முடியும்.

    வெறும் அம்மாவாக இருந்து,
    கோபித்து,குணம் மாறி, மீண்டும் அன்புத் தாயாகப்
    பரிமளத்தைக் கண்டு கொள்ள துரையால் தான் முடியும்.
    அந்தக் கிளி கொஞ்சும் வீட்டை நேரில் பார்த்த உணர்வு.

    தெற்குப் பார்த்த வீட்டில் கிழக்கை பார்த்த அறையும்
    ஊஞ்சலும், அமிர்தம்.

    கடுகடு பேச்சைக் கேட்டாலும் மனம் கலங்காத
    அன்பு நண்பன் கணேஷ்.
    ஒவ்வொருவரும் நல்ல மனம் கொண்டு
    கதையை அழகாக நடத்திவிட்டார்கள். சினேகா
    இனி கணேஷ் வாழ்வில்., அதிக இன்பமும் பாசமும்.
    அன்பு மயமான வாழ்வைத் துளி கசப்பு கலைக்கப் பார்த்த போது
    அவனின் உண்மை அன்பு இவர்களை அவனுடன் மீண்டும்
    சேர்த்துவிட்டது.
    வளமான வாழ்வைக் காண்பித்துக் கொடுத்த துரைக்கு
    மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மனம் நிறை வாழ்த்துகளும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கதை படித்து ரொம்ப நாளாகி விட்டது என நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று அவர் எழுதிய கதை கண்டு மிகவும் மகிழ்ச்சி. கொஞ்ச நேரத்தில் படிக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல கதை. நல்ல மனம் இருந்தால் வாழ்க்கை எப்போதுமே சிறக்கும்...

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஒன்பது வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது கேட்டு வாங்கிப் போடும் கதை : சந்தோஷத் தோரணங்கள் – துரை செல்வராஜூ பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பாரதி..
      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. வழக்கம் போல் மனதை மயிலிறகால் வருடும் கதை. பரிமளாவின் பாத்திரப் படைப்பு அருமை!. என்னதான் உயிர் ஸ்நேகிதனானாலும் தன் மகன் மீது அசூயைக் கொண்டு விடுவானோ என்ற அச்சத்தில் விலக்க நினைப்பதும், அவனைக் காணாமல் தவித்து, பீறிட்டெழும் பாசமும் வெகு இயல்பு. பாராட்டுகள்!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. துரை செல்வராஜ் சார், என்ன ஒரு நடை, என்ன ஒரு முன்னோக்கும் பார்வை !!!!!!!!!!!!! கதை எழுத பிறந்தவர் சார் நீங்கள். // நமக்கு இன்னும் வேலை கிடைக்கலையே.. நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே...ன்னு அவன் மனசுல நெனைப்பு வந்தா அது நல்லதுக்கா?... ''// என்ன மனிதர்கள் சார். மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு ............ என்பது எவ்வளவு சரி. வேண்டும்போது ஒட்டுவோம். வேணாமென்றால் வெட்டுவோம். இதுதான் நம் இயல்பு. மிக அழகாக வெளி கொணர்ந்திருக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      வேண்டும்போது ஒட்டுவோம்..
      வேண்டாம் எனில் வெட்டுவோம்....

      நயமான சொல்லாடல். மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. கதை படித்து முடித்ததும் மனசு நிறைந்து விழியோரம் கண்ணீர் துளிர்த்து விட்டது.சிநேகம் உன்னதம்.
    சிநேகவல்லியுடன் கணேஷ் நல்லபடியாக பல்லாண்டு சிநேகமாய் எல்லோருடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. பாத்திரபடைப்புகள் அனைவரும் அற்புதமானவர்கள். அவ்ரகள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் மிக மிக அருமை.
    வாழ்த்துக்கள் சகோ . நட்பும், நேசமும் என்றும் கதைகளில் வருவது மகிழ்ச்சி தருகிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  14. "சந்தோஷ தோரணங்கள் " அழகிய நடையில் நம்மை ஈர்த்து கொண்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  15. துரை சார் ஒரு நல்ல கதைசொல்லி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. அன்பின் நண்பர்கள் அனைவரும்
    இன்றைய பதிவுக்கு வருகை தந்து ஊக்கப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    மிகவும் அருமையான கதை.

    பரிமளத்தின் மனதில் இருந்த வீண் சந்தேகங்கள் அகன்றதற்கு கணேஷின் நல்ல மனந்தான காரணம். அவனின் நல்ல மனதிற்கு எல்லாமே நன்றாகத்தான் நடக்கும். இறுதியில் மங்களகரமான முடித்திருப்பது மகிழ்வாக உள்ளது. பாலா, கணேஷ் இருவருடைய நட்பு மனதை கவர்கிறது. அவர்களது நட்பு என்றும் அப்பழுக்கில்லாமல் தொடர நானும் வேண்டிக் கொள்கிறேன். சிறப்பான கதை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜீவி ஐயா..
      நலம் தானே!...

      நலம் வாழ விழைகிறேன்...

      நீக்கு
  19. நல்ம் தான் ஐயா. இதோ வந்திட்டேன்.

    பதிலளிநீக்கு
  20. அன்பின் ஜீவி ஐயா...

    தாங்கள் சொல்லியிருந்ததை ஏன் நீக்கி விட்டீர்கள்?...

    இந்தக் கதையை ஒழுங்கு செய்து அனுப்பும் போது இணையம் சரியில்லை...

    அதனால் தான் அந்தக் கொட்டேஷன்கள் அழிந்து போய்விட்டன...

    தாங்கள் சொல்லியிருந்ததை இனிமேல் மனதில் கொள்கிறேன்...

    தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
  21. 'பூக்காரத் தெரு புது ஆற்றங்கரையில் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க வாலிபருடைய'....

    இந்த இடத்தில் 'திடுக்' தான். மேற்கொண்டு தொடர்ந்த பொழுது ஆசுவாசப்பட்டது மனசு. ஸ்ரீராமிற்கும் சந்தோஷமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தாங்கள் அறியாததா!...

      இங்கே இணைய இணைப்பும் வேலை சூழ்நிலையும் இன்னும் கொஞ்சம் இலகுவாக இருந்திருந்தால்!...

      என்ன செய்வது..

      இது இருந்தால் அது இல்லே..
      அது இருந்தால் இது இல்லே...

      பட்டுக்கோட்டையார் நினைவுக்கு வருகிறார்..

      நீக்கு
  22. எனக்கும் கும்மோணம், அல்லவா?.. கும்மோண பக்க சின்னச் சின்ன கிராமப் பெயர்களை வாசிக்கும் பொழுதெல்லாம் மனசில் ஒரு கிரக்கம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழகிக் களித்த ஊர்களைக் கதையில் வைக்கும் போது என்மனமும் நெகிழ்ந்து விடுகிறது...

      நீக்கு
  23. இருபது ஏக்கர் நஞ்சை.. ஏழு ஏக்கர் வாழத் தோப்பு.. அதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்..
    மாமா பொண்ணுன்னு ஒரே சொந்தம் போதும்! ஒண்ணூக்குள் ஒண்ணு.. பொன்மனச் செம்மல்களுக்கு குறையே இருக்காது! இறைவன் கூட துணை இருந்து அருள்வான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கி வளர்த்த மருமகனை இளைஞனாகப் பார்த்ததும்

      மாமன் கண் கலங்குமிடத்தில்
      நானும் கலங்கி விட்டேன்...

      இப்படியான கதை மாந்தர்கள் காவிரிக் கரைகளில் வாழ்ந்து கொண்டிருப்பதாகப் படுகிறது....

      நீக்கு
  24. ஆற்றோட்டம் போல அழகாக சுழித்து நெளிந்த கதை! நட்பின் பெருமையில் இலக்கிய சம்பந்தப்பட்ட யாரோரோவெல்லாம் நினைவுக்கு வருகிறார்கள்.. வாழ்த்துக்கள், செல்வராஜ் ஐயா! மனம் நெகிழ்ந்த வாழ்த்துககள். உலகம் இப்படியே சந்தோஷமாக இருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது நெகிழ்வான வாழ்த்துரைகளுக்கு நானும் ஆளானேன் என்பதை நினைக்கும் போது

      என் மனமும் நெகிழ்ந்து கண்ணீர் சுரக்கின்றது....

      மகிழ்ச்சி... நன்றி... நன்றி..

      நீக்கு
  25. அன்பு ஐய,

    அவற்றைத் திருத்தாமல் விட்டால் கதையின் உரையாடல் நேர்த்தியில் வாசிப்போருக்கு லேசான தடுமாற்றம் ஏற்படலாம். அவற்றைத் திருத்தி விடுவதே நல்லது. வரிசையாகக் குறிப்பிடுகிறேன்.

    'சின்னஞ் சிறுசுங்க... அப்படியும் இப்படியுமா இருக்குற நேரம்.. இவனுக்குத் தான் ஒன்னும் புரியலே...' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பரிமளம்...

    (மனத்திற்குள் நினைப்பதற்கு மேற்குறித்தவாறு ஒரே ஒரு கொட்டேஷனாகத் திருத்தி விடலாம்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பியவை தவிர
      இனி எழுதுபவைகளில் கவனம் கொள்கிறேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அச்சு வாகனமேறிய என் நூல்களுக்கு ப்ரூப் ரீடர் பணியையும் மேற்கொண்ட ஆர்வத்தில் இதெல்லாம் மனத்தில் பதிகிறது என்றாலும்
      என் இடக்கண் பார்வைக் குறைவு குறைபாட்டில் பாதிக்கப் பட்டிருப்பதால் முன்பு மாதிரி இப்பொழுது செயல்பட முடியவில்லை. இருப்பினும் 'எங்கள் ப்ளாக்' என்றால் ஒரு தனிப்பட்ட ஆர்வம். வாசிக்கிறவர்களை சந்தோஷத்தில் இருத்தி வைப்பது எல்லாராலும் முடியாது. உங்களால் முடிந்திருக்கிறது. வாழ்த்துக்கள், ஐயா.

      நீக்கு
    3. இத்தனை இன்னல்களுக்கு இடையேயும்
      இப்படியான குறிப்புகளைத் தந்தமைக்குத் தலை வணங்குகிறேன்...

      அன்பின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா...

      நீக்கு
  26. '' அந்தக் கணேஷ் ராசியில்லாதவன்.. அவனும் இவனும் ஒன்னாத்தான் வளர்ந்தானுங்க.... ஒன்னாத்தான் படிச்சானுங்க.... ''

    ஆனா இவனுக்குத் தான் வேலை சம்பளம் , வீடு வாசல்.. கல்யாணம்..ன்னு அதிர்ஷ்டம் கூடி வந்திருக்கு...

    '' நமக்கு இன்னும் வேலை கிடைக்கலையே.. நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே...ன்னு அவன் மனசுல நெனைப்பு வந்தா அது நல்லதுக்கா?... ''

    '' அதுவுமில்லாம கூட்டாளி.. கூட்டாளின்னு... எந்த நேரமும் கூடவே இருந்துக்கிட்டு.... அதான் விரட்டிவிட்டேன்!... ''

    (இது பூராவும் பரிமளம் சொல்வது தான். அதனால் பேச்சு ஆரம்பிக்கும் இடத்தில் இரண்டு கொட்டேஷனைப் போட்டு
    விரட்டி விட்டேன் என்னும் இடத்தில் இரண்டு கொட்டேஷங்களைப் போட்டு ஒரே பாராவாக ஆக்கி விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான பயிற்சிப் பட்டறைக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

      தங்களது மேலான ஆலோசனைகளுக்கு
      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  27. '' அவன் அப்படிப்பட்டவன் இல்லைம்மா!... ''

    '' நமக்குத் தேவைப்பட்ட சமயத்துல அவனை ராசிக்காரன்... ன்னு
    சொன்னோம்... எதுவும் தேவையில்லாத இந்த நேரத்துல அதிர்ஷ்டம் இல்லாதவன்.. கண் திருஷ்டி பட்டுடும்..ன்னு சொல்றோம்... ''

    '' இருந்தாலும் அவன் ரோஷக்காரன்... இந்த மாதிரி பேசியிருக்கக் கூடாது... அவன் இனிமே இந்தப் பக்கம் நினைச்சுக் கூட பார்க்க மாட்டான்... ''

    -- இது பூராவும் மகள் ரேவதி சொல்வது. அதனால் ஆரம்பத்திலும் கடைசி வார்த்தை முடிவிலும் இரண்டு கொட்டேஷன்களைப் போட்டு
    ஒரே பாராவாக முடித்து விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரா பெரிதாக இருந்தால் படிப்பவர்களுக்கு அயர்ச்சியாக இருக்குமே.. என்று நினைத்தேன்..

      இனிமேல் மனதில் கொள்கிறேன் ஐயா...

      மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும்...

      நீக்கு
    2. பாராவைப் பிளக்க வேண்டுமானால் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.

      நீக்கு
  28. '' தாத்தா கூட இருந்து கவனிக்கறதுக்கு ஆள் இல்லை... எனக்கு சேதி வந்தது போனேன்... தாத்தாவை ரெண்டு நாள் கவனிச்சுக்கிட்டேன்... ''

    '' ஏன் தாத்தா இவ்ளோ அவசரம்... பேத்தி கல்யாணத்தைப் பார்க்க வேணாமா?.. அதுக்குப் புள்ளைங்க பொறந்து அதுகளைக் கொஞ்ச வேணாமா... அதுக உங்க மேல உச்சா எல்லாம் அடிக்க வேணாமா.... ன்னு கேட்டேன்... ''

    '' தாத்தா வாய் விட்டுச் சிரிச்சார்... நோய் விட்டுப் போச்சு.. கூட இருந்த எல்லாரும் சிரிச்சாங்க... அப்புறம் என்ன!... ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு வந்துட்டோம்!.... ''

    '' இப்போ தாத்தா பேத்தியோட கல்யாணப் பந்தல்.. ல தோரணம் கட்டிக்கிட்டு இருக்கார்!... ''

    --- இது பூராவும் கணேஷ் சொல்வது. தனித்தனி வரிகளில் தான் இதையே சொல்ல வேண்டுமானால், ஒவ்வொரு
    வரியின் ஆரம்பத்திலும் மட்டும் இரட்டை மேற்கோள் குறிகளைப் போட்டு விட்டு, கடைசி வரி கடைசி இடத்தில் இரட்டை கொட்டேஷனைப் போட்டு முடித்து விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுலபமாகப் புரிகிற மாதிரி இவ்வாறு:

      '' தாத்தா கூட இருந்து கவனிக்கறதுக்கு ஆள் இல்லை... எனக்கு சேதி வந்தது போனேன்... தாத்தாவை ரெண்டு நாள் கவனிச்சுக்கிட்டேன்...

      '' 'ஏன் தாத்தா இவ்ளோ அவசரம்... பேத்தி கல்யாணத்தைப் பார்க்க வேணாமா?.. அதுக்குப் புள்ளைங்க பொறந்து அதுகளைக் கொஞ்ச வேணாமா... அதுக உங்க மேல உச்சா எல்லாம் அடிக்க வேணாமா'ன்னு கேட்டேன்...

      '' தாத்தா வாய் விட்டுச் சிரிச்சார்... நோய் விட்டுப் போச்சு.. கூட இருந்த எல்லாரும் சிரிச்சாங்க... அப்புறம் என்ன!... ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு வந்துட்டோம்!....

      '' இப்போ தாத்தா பேத்தியோட கல்யாணப் பந்தல்.. ல தோரணம் கட்டிக்கிட்டு இருக்கார்!... ''

      நீக்கு
  29. இதில் அந்த ஏன் தாத்தா ஒரு வரி மட்டும் ---

    'ஏன் தாத்தா இவ்ளோ அவசரம்... பேத்தி கல்யாணத்தைப் பார்க்க வேணாமா?.. அதுக்குப் புள்ளைங்க பொறந்து அதுகளைக் கொஞ்ச வேணாமா... அதுக உங்க மேல உச்சா எல்லாம் அடிக்க வேணாமா'ன்னு கேட்டேன்.

    (இப்படியாக ஒற்றைக் கொட்டேஷனோடு.)
    '

    பதிலளிநீக்கு
  30. மன்னிக்கவும், ஸ்ரீராம். அனுமதித்தற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்து முத்தான குறிப்புகள்..
      அத்தனையையும் நெஞ்சில் கொண்டேன்..

      மகிழ்ச்சி.. நன்றி ஐயா...

      நீக்கு
  31. நேற்று துரையின் கதையா? மத்தியானம் வரணும்னு நினைச்சு வர முடியலை. எரிவாயு அடுப்பு வீணாகி அதைச் சரி செய்ய வேண்டி இருந்தது. இப்படி இன்னும் சில சின்னச் சின்னப் பிரச்னைகள். இப்போத் தான் சமையலறையை எப்போதும் போல் கொண்டு வந்திருக்கேன். நடுவில் கால்வலி வேறே! கண்களில் 2 மாதங்களாகக் கட்டி வந்து வந்து போகிறது. இன்னிக்கு மருத்துவரிடம் படை எடுப்பு. காலை கண் மருத்துவம், மாலை உடல் மருத்துவம். இன்னிக்கு நாள் சரியாப் போயிடும்.

    பதிலளிநீக்கு
  32. ஆனால் மனதில் ஏற்கெனவே தோன்றியது துரையின் கதையாகத் தான் இருக்கும் என. எல்லா அம்மாக்களையும் போல் தான் பரிமளமும். ஆனால் மகன், மருமகளின் தனிமை கெட்டுவிடக் கூடாது என நினைப்பவளால் கணேஷிடம் எப்படிக் கடுமையாக நடந்துக்க முடியும்? அந்த நேரம் தோன்றியதைச் சொல்லிவிட்டாள். பின்னால் அவள் தாய்மனம் அவளையே மன்னிக்கவில்லை. பாசம் பீறிட்டு எழுந்து விட்டது. அருமையான கதை. நல்ல முடிவு. இதைக் கணேசனுக்குத் திருமணம் நிச்சயம் ஆகாமல் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதையும் ஓர் கதையாகக் கொண்டு வரலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா அம்மாக்களையும் போலத்தான் பரிமளமும்...

      அவள் என்ன செய்வாள் பாவம்....

      ஆனாலும் அடுத்த கதைக்கு அஸ்திவாரம்...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  33. பிஎஸ் என் எல் தொலைபேசியைப் பாதுகாப்பாக வைத்துவிட்டுப் போனதை இன்னமும் விடுவிக்கவில்லை. அது வேறே. எல்லாரும் மொபைலில் தான் கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இணையம் சரியாக வராமல் பிரச்னை. மோடம் சரியில்லை என்கிறார்கள். அதையும் கொஞ்ச நாட்கள் பார்த்துக்கொண்டு மாற்றும்படி ஆகுமோ என்னமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோடம் பிரச்னையாகத்தான் இருக்கிறது எங்கெங்கும்...

      நீக்கு
  34. நல்ல முடிவு. சிலர் இப்படித்தான் வெடுக்கென்று எதையாவது சொல்லி விடுவார்கள் - தப்பென்று தெரிந்தாலும்!

    சிறப்பான கதை எழுதிய துரை செல்வராஜூ ஐயாவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      சட்டென்று சொல்லால் சுட்டு விடுகின்றார்கள்.. பரிமளம் போல் மனம் திருந்தி திருத்திக் கொள்பவர்கள் வெகு சிலரே...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  35. ஆஆஆஆஆஆஆஆஆ இப்போதான் கதை படிச்சு முடிச்சேன்.. பரிமளமாமியை தேம்ஸ்ல தள்ளோணும் எனும் கோபத்துடன் பொயிங்கியபடி படிச்சுக் கொண்டு வந்தேன், ஆனா கதையை திசை திருப்பி, அவ நல்ல மாமிதான் எனச் சொல்லி முடிச்சிட்டார் துரை அண்ணன்.

    பரிமளம் மாமியைப் போல சிலர் இருக்கிறார்கள்தான், அதாவது கதைக்கப் பேசத் தெரியாது, படு மோசமாக வார்த்தைகளைக் கொட்டுவினம், ஆனா அவர்களின் உள் மனமோ உண்மையில் மிக அழகியதாக இருக்கும்.

    அதுசரி, ஏதோ பிறந்த குழந்தையைப் பாதுகாப்பதைப்போல எதுக்கு மாமி புதுத்தம்பதிகளைப் பாதுகாக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

    அழகிய கதை துரை அண்ணன்... அனைவரும் நல்லவர்கள் எனச் சொல்லிட்டீங்க:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா....

      ஜென்மம் கடைத்தேறியது போல மகிழ்ச்சி...

      தன் பிள்ளை மருமகளின் சந்தோஷத்தின் மீது கண்ணேறு பட்டுவிடக் கூடாது என்ற ஆசையினால் வார்த்தைகளைக் கொட்டி விட்ட அப்பாவித் தாய் - பரிமளம்...

      அதிராவின் அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. நன்றி..:). சில நேரங்களில் தாமதமாக கொமெண்ட் போட்டால் நீங்கள் பதில் கொடுப்பதில்லையோ துரை அண்ணன்?.. அதனாலும் கூட, தாமதமாகிவிட்டது இனி கொமெண்ட் போட்டு பலன் இல்லை என்பதுபோலவும் நினைத்திருக்கிறேன்:).

      நீக்கு
    3. எங்கள் பிளாக்கில் எனது கதை வெளியான பிறகு
      அதற்கு சொல்லப்படும் கருத்துகளுக்கு பதில் அளிப்பதற்குத் தவறுவதே இல்லை - தாமதம் ஆனாலும்!...

      தங்கள் மீள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!