வெள்ளி, 6 மார்ச், 2020

வெள்ளி வீடியோ : தாமரையாள் ஏன் சிரித்தாள்...  தலைவனுக்கோர் தூது விட்டாள்...



இன்றைய நேயர் விருப்பத்தில் துரை செல்வராஜூ ஸார் எப்போதோ கேட்டிருந்த "இயற்கை என்னும் இளைய கன்னி" பாடல்.



இந்தப் பாடல்தான் தமிழில் எஸ் பி பி யின் முதல் பாடல் என்று சொல்வார்கள்.  ஆனால் இது இரண்டாவதாக வெளியான, முதலில் வெளிவரும் வகையில் அமைந்த பாடல்!  கொஞ்சம் குழப்பமா இருக்கு இல்லே...!  எஸ் பி பி முதலில் தமிழில் பாடியது வெளிவராத 'ஹோட்டல் ரம்பா'  என்கிற படத்துக்காக.   எல் ஆர் ஈஸ்வரியுடன் "அத்தானோடு இப்படிஇருந்து எத்தனை நாளாச்சு"  என்கிற அந்தப் பாடல் காணாமல் போச்சு!--



இந்தப் பாடலும், அடிமைப்பெண் படப்பாடலான 'ஆயிரம் நிலவே வா' பாடலும் 1969 இல் வெளியான பாடல். ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகுதான் அடிமைப்பெண் படப்பாடலுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரே நாளில் நிறைய பாடல்கள் பாடிப் பதிவு செய்திருக்கும் சாதனை இவர் வசம் இருக்கிறது.  ஒருமுறை கன்னடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களால்.  ஒருமுறை தமிழில் 19 பாடல்களால்.  ஒருமுறை ஹிந்தியில் ஒரே நாளில் 16 பாடல்களாம்.



போதும் எஸ் பி பி புராணம் அப்புறம் தொடரலாம் என்று நிறுத்திக் கொண்டு பாடலுக்கு வருவோம்.

ஒரிஜினல் ஆங்கிலப் படமான 'The Sound Of Music'.  இது 1965இல் வெளியானது.   அதைத்தழுவி கன்னடத்தில் பேடி பந்தாவுலு என்ற படம் எடுக்கப்பட, அதைப்பார்த்த வாசன் அதைத் தமிழில் எடுக்க விரும்பி உரிமை வாங்கி எடுத்த படம். சித்ராலயா கோபு வசனம்.  அவர் சிபாரிசில்தான் காஞ்சனா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.



கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.    இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்.

இந்த பாடல் எனக்குமே மிகவும் பிடிக்கும் என்பதால் இதையே என் விருப்பமாகவும் மாற்றி ஒரே பாடலாக இன்றைய பதிவு!

தமிழில் எஸ் பி பி யின்  என்பதால் குரலின் இளமைக்குச் சொல்ல வேண்டியதில்லை.  ஆரம்ப ஹம்மிங் முதல் முழுப்பாடலிலும் அவர் குரலையும் செசீலாம்மாவின் குரலையும் ரசிக்கலாம்.

இயற்கை என்னும் இளைய கன்னி 
ஏங்குகிறாள் துணையை எண்ணி..

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட 
பொட்டு வைத்த வண்ணமுகம் நீராட 
தாமரையாள் ஏன் சிரித்தாள் 
தலைவனுக்கோர் தூது விட்டாள்...

தலையை விரித்துத் தென்னை போராடுதோ 
எதனை நினைத்து இளநீராடுதோ 
கன்னி உன்னைக் கண்டதாலோ...
தன்னை எண்ணிக் கொண்டதாலோ 

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ 
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ 
கட்டிக்கொண்ட கள்வன் யாரோ 
கள்வனுக்கும் என்ன பேரோ 

மலையைத் தழுவிக்கொள்ளும் நீரோட்டமே 
கலைகள் பழகச்சொல்லும் தேரோட்டமே 
மஞ்சள் வெயில் நேரம்தானே 
மஞ்சம் ஒன்று போடலாமே 

 தலையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே 
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே 
இன்னும் கொஞ்சம் நேரம்தானே 
அந்திமட்டும் பேசலாமே 







84 கருத்துகள்:

  1. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. கவியரசரும் மெல்லிசை மன்னரும் தொடுத்துக் கொடுத்த மணி மாலைகளுள் இந்தப் பாடலும் ஒன்று...

    பதிலளிநீக்கு
  3. என் விருப்பப் பாடலே
    தங்கள் விருப்பப் பாடலாகவும்....

    ஆகா!... இசையே தமிழே நீ வாழ்க...

    பதிலளிநீக்கு
  4. தாமரையாள் ஏன் சிரித்தாள்!?..

    இத்தனை இத்தனை பாடல்களில் இந்த வார்த்தைகள் இந்த ஒரு பாடலில் மட்டும் தான் என்று நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    மிக மிக இனிமையான பாடல்.
    நாங்கள் முதன் முதலாகக் கேட்ட எஸ்பிபியின்
    பாடல் இதுதான்.
    படம் பார்க்கவில்லை. குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு எங்கே படம் பார்ப்பது:)

    வானொலி இருந்ததோ. அருமையான பாடல்களோடு
    பொழுது நகர்ந்ததோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா... இதன் பாடல்கள் அத்தனையும் சிறப்பான பாடல்கள்.

      நீக்கு
  6. பிற்காலத்தில் தொலைக்காட்சி வந்த பிறகு பார்த்த
    படம்.காஞ்சனா பெரிய ப்ளஸ் பாயிண்ட்.
    கடவுள் ஒரு நாள் பாடலும்,இயற்கை எனும் பாடலும் விரும்பிக் கேட்டவை
    நிகழ்ச்சியில் வந்து கொண்டே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படத்துக்கு காஞ்சனாவை கோபு ஸார்தான் சிபாரிசு செய்தாராம்.

      நீக்கு
    2. இது வாசன் எடுத்த படம் என்பது இப்போத் தான் தெரியும்.

      நீக்கு
  7. எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத பாடல்.

    பதிலளிநீக்கு
  8. மிகப் பொருத்தமான இசைத்தமிழ்.
    இது போல இசையும், வண்ணமும்
    பாடல் வரிகளும் இணைந்து வந்த முதல் பாடல்.
    ஜேன் அயர் என்ற கதையும், சௌண்ட் ஆஃப் மியூசிக்
    பாத்திரங்களும் இணைந்த கதை.
    அதே போலப் பாடல்கள்.
    படத்திலியே முத்தான பாடல் இது.
    தேர்ந்தெடுத்த அன்பு துரைக்கும், பதிவிட்ட ஸ்ரீராமுக்கும்
    மனம் நிறை நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும்.மஞ்சுளா கூட இந்தப் படத்தில் சின்னப் பெண்ணாக வருவார். தொலைக்காட்சியில் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.

      நீக்கு
    2. கீசா மேடம் தியேட்டருக்குப் போய் பார்த்த இரண்டு படங்களைக் குறிப்பிடுபவர்களுக்கு *சிறந்த இணையதள வாசகர்* பட்டம் கொடுக்கப்படும். கீசா மேடமும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். ஹா ஹா ஹா

      நீக்கு
    3. முதல் முதலாகத் தியேட்டரில் பார்த்த படம் வீரபாண்டியக் கட்டபொம்மன். அதுக்கப்புறமாக் கல்யாணப் பரிசு. அப்புறம்................ ம்ஹூம் கொஞ்ச நாட்கள் படங்கள் ஏதும் போனதாய் நினைவில் இல்லை. ஆனால் போலீஸ்காரன் மகள் பாஸ் கிடைச்சு விளக்குத் தூண் கிட்டே இருக்கும்/இருந்த ஒரு தியேட்டரில் போய்ப் பார்த்தநினைவு அரசல் புரசலாக. பாவமன்னிப்பு? இருக்கலாம். நடுவில் சில வருடங்கள் பக்கத்தைக் காணோம். அப்புறமா நல்ல நினைவாக வருபவை ரத்தத் திலகம், ராமன் எத்தனை ராமனடி, லக்ஷம் தரம் பார்த்திருக்கேனே ஒரு ஏவிஎம் படம், பேரென்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மறந்துட்டேன், ஜிவாஜி, மேஜர் நடிச்சது. அப்புறமாச் சித்ராலயாவின் படங்கள் அநேகமாக, இதில் கொடி மலர், நெஞ்சம் மறக்கவில்லை, ஸ்ரீதரின் ஆரம்பகாலப் படங்கள் பார்த்ததில்லை. அப்புறமாக் கல்யாணம் ஆனதும் போன படங்களில் மூன்று தெய்வங்கள், பாலசந்தரின் சில, பல படங்கள்! பின்னர் ராஜஸ்தானில் திறந்த வெளித் திரையரங்கு/ மற்றும் ஊரில் உள்ள தியேட்டரில் சலுகை விலைச் சீட்டில் பார்த்தவை! அப்புறமாசிகிந்திராபாதில் ஒரு படம் பார்க்கப் போயிட்டுக் கடவுளே பார்க்கவே முடியலை. அதுக்கப்புறமாச் சென்னை வந்து உடனே தொலைக்காட்சி வாங்கிட்டதாலே தொலைக்காட்சி தயவில் தான் படங்கள். நெல்லைத் தமிழரே, இந்த வரலாறு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? :P:P:P:P

      நீக்கு
    4. கீதா அக்கா... சினிமா அனுபவங்கள் வைத்து பெரிய கட்டுரையே எழுதலாம் போலிருக்கே..்

      நீக்கு
    5. வேடிக்கை என்னன்னா எங்க பெண்ணுக்கும் சரி, பையருக்கும் சரி, திரைப்படம் பார்க்கத் திரையரங்குக்குப் போனாலே பிடிக்காது. கட்டிப் போட்டாப்போல் இருக்குனு உணர்வாங்க போல! அதிகமாத் திறந்த வெளியில் மிகவும் ஜாலியாக இங்குமங்கும் போய்க் கொண்டும், நண்பர்களுடன் பேசிக்கொண்டும் திரைப்படம் பார்ப்பதில் உள்ள சுகம் திரை அரங்கில் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். அப்புறமாக் கொஞ்சம் கொஞ்சம் பழகிவிட்டது. ஆனாலும் இப்போப் பெண் படங்களே அதிகம் பார்ப்பதில்லை. பையர் வீட்டிலேயே நெட்பிளிக்ஸில் பார்த்து விடுவார்.

      நீக்கு
    6. கீசா மேடம்.. உங்க அனுபவத்தை எழுதுங்க

      நான் முழுப் படத்தையும் பார்க்கணும்னா மட்டும்தான் தியேட்டருக்குப் போவேன். வருடத்துக்கு மூணு நாலு. ஆனா படம் பிடித்தால் அதே படத்தை இரண்டு மூன்று முறை தியேட்டரில் பார்ப்பேன். தியேட்டர்னா காசு கொடுத்து டிக்கெட் வாங்கறதால முழுப் படமும் பார்ப்பேன்

      வீட்டில் எந்தப் படத்தையும் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பார்க்க மாட்டேன். அதுக்குள்ள தூங்கிடுவேன். ஆனா வீட்டில் மத்தவங்க முழுமையாப் பார்ப்பாங்க

      நீக்கு
    7. இரத்தக் கண்ணீர், முதல் மரியாதை, பாஹுபலி இரண்டு பாகம், முதல் எந்திரன் (இரண்டாவது கணிணியில்தான்.. என் பெண் டோன்ட் வேஸ்ட் டைம்னா.. அப்படிச் சொல்லியும் நேரத்தை வீண்டித்தேன் ஹா ஹா)

      நீக்கு
  9. இனிமையான பாடல். கேட்டு ரசிக்கலாம்!

    பதிலளிநீக்கு
  10. சாந்தி நிலையம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இறைவன் ஒரு நாள் உலகைக்காண.... என்பதே.

    பதிலளிநீக்கு
  11. அருமையான பாடல்
    நான் விரும்பிக் கேட்கும் பாடல்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  12. sound of music போல எடுப்பதாக நினைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று கூறுங்கள்.  sound of music ஐ காப்பியடித்து மேலும் சில படங்கள் வந்தன என்று நினைக்கிறேன். ரஜினிகாந்த் கூட ஒரு படத்தில் நடித்திருப்பார். அதில் பேபி ஷாலினி உண்டு. ஒரு பாடல் காட்சியில் கார்ட்டூன் பாத்திரங்கள் வரும். ராஜா சின்ன ரோஜாவா? ராமா ஸ்ரீனிவாசன் தெளிவுபடுத்துவார்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் படம் ராஜா சின்ன ரோஜாதான்.

      நீக்கு
    2. ஆமாம், ஏவிஎம் எடுத்த படம். நான் சென்னைத் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். பார்த்த சில ரஜினி படங்களில் இதுவும் உண்டு.

      நீக்கு
    3. sound of music இல்லைனு சொல்ல வந்தேன். பானுமதி சொல்லிட்டாங்க.

      நீக்கு
    4. அந்தப் படத்தில் நகைச்சுவைக்காட்சிகள் நன்றாக இருக்கும் என நினைவு. என் நினைவு சரியாக இருந்தால் ரவிச்சந்திரன் கண் தெரியாதவர் போல் நடிப்பார். ரஜினியும், கௌதமியும் அவருக்குக் கண் தெரியாது என நினைத்துக் கொண்டு காதல் சாகசங்கள் செய்வது இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    5. ஆமாம்... அந்தப் படத்தில் ஷாலினி பேபி ஆர்ட்டிஸ்ட்!

      நீக்கு
    6. பாவெ கீசா மேடம்... நான்உங்களைப் பாத்து வியக்கேன். படம் என்மனதில் சென்று மூளையில் தங்காது. அதனால் எனக்கு இருவாரம் கழித்து அதே படத்தை இன்னொரு தடவை பார்த்தாலும் புதிதாக இருக்கும்.

      பாஹுபலியை தொடர்ந்து இரண்டு நாட்களில் மூன்று ஷோ பார்த்ததால் ஓரளவு மனதில் தங்கியது. இருந்தாலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீண்டும் பார்த்தாலும் ரசிப்பேன்.

      என் பெண் நான் எப்பவோ பார்த்த தமிழ்பட கிளிப்ஸ் வந்தாலும் அதில் வரும் காட்சியைச் சொல்லுவாள் ஹா ஹா

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. எனக்கும் பிடித்த பாடல்.
    இயற்கை காட்சியும், பாடல் எடுத்த விதமும் படத்தின் வண்ணமும் மிக அருமையாக இருக்கும் .
    கருப்பு வெள்ளை படம் வந்து கொண்டு இருந்த போது வண்ணத்தில் வந்த படம் இயற்கை காட்சிகளைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கும்.

    பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.

    //தமிழில் எஸ் பி பி யின் என்பதால் குரலின் இளமைக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆரம்ப ஹம்மிங் முதல் முழுப்பாடலிலும் அவர் குரலையும் செசீலாம்மாவின் குரலையும் ரசிக்கலாம்.//

    எஸ்பி யியின் இளமைக்குரல் மிகவும் மனதை கவரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எழுதியதில் ஆரம்ப காலப் பாடல் என்ற வரி விட்டுப்போச்சு போல... வண்ணப்படம் என்பது அன்றைய காலகட்டத்தில் ஒரு கூடுதல் கவர்ச்சி.

      நீக்கு
  15. சாந்தி நிலையத்திற்கு வருகிறேன். அதில் காஞ்சனா அழகோ அழகு! அந்த படத்தில் வரும் 'கடவுள் ஒரு நாள் உலகைக் காண தனியே வந்தாராம்' மிகவும் பிடிக்கும். என்னவொரு பாடல்! குழந்தைகளுக்கு கதை சொல்வது போல் மெஸேஜையும் சொல்ல கண்ணதாசன் மறுபடி பிறந்து வந்தால்தான் முடியும். அவனை போய் அழைத்துக் கொண்ட கடவுளை என்ன செய்தால் தேவலை?அந்தப் பாடல் பாடியிருந்த விதம், அதன் இசை, படமாக்கப்பட்டிருந்த விதம் எல்லாமே அழகு.!மணித்துக் கொள்ளுங்கள் நீங்கள் ஒரு பாடலை பகிர்ந்திருக்கிறீர்கள், நான் வேறு ஒரு பாடலை புகழ்ந்து  கொண்டிருக்கிறேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் என்ன?!

      இறைவன் வருவான்... அவன் என்றும் நல்வழி தருவான். இந்தப் பாடலும் நன்றாயிருக்கும்.

      நீக்கு
  16. 'மன்னித்து' என்பது 'மணித்து' ஆனதை மன்னித்துக் கொள்ளுங்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை இடையில “ர” போடாமல் விட்டீங்களே பானு அக்கா:)) ஹா ஹா ஹா

      நீக்கு
    2. பரவாயில்லை பானு அக்கா..

      ஹா.்். ஹா... ஹா... அதிரா!

      நீக்கு
  17. சாந்தி நிலையம் படத்தில் பாப்பம்மா என்று ஒரு கதா பாத்திரம் வரும். அவள் தினமும் இரவு பன்னிரண்டு மணிக்கு தலையில் முக்காடு போட்டுக் கொண்டு,கையில் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு எங்கோ போவாள். என் அக்காக்கள்,"பாப்பம்மா வருகிறாள்" என்று அதைப் போல நடித்து என் சிறு வயதில் என்னை பயமுறுத்தி இருக்கிறார்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... அது தேவையில்லாத கதாபாத்திரம் என்று தோன்றும் எனக்கு.

      நீக்கு
    2. இறைவா... இந்த பாவெ மேடம் சினி படங்கள் மற்றும் கிசுகிசு என்ற தலைப்பில் ஆராய்ச்சி பண்ணியருந்தாங்கன்னா இரண்டு பி எச் டி கிடைத்திருக்குமே... வாய்ப்பைத் தவற விடறாங்களே

      நீக்கு
    3. பாப்பம்மா கேரக்டர் கும்நாம் படத்திலிருந்து சுட்டதாமே...

      நீக்கு
  18. சாந்தி நிலையம் படத்தில் மஞ்சுளா சைல்டு ஆர்ட்டிஸ்ட்! இந்த விஷயம் கே.ஜி.ஜி. சாருக்குத் தெரியுமா?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி... ஹி... ஹி... எனக்குத் திட்டு வாங்கி வைக்கப் பார்க்கறீங்க நீங்க...!

      நீக்கு
    2. பிஞ்சுல பழுத்த ஆர்டிஸ்ட் என்று சொல்லியிருந்தால் கேஜிஜி எதற்குத்திட்டப்போகிறார் ஸ்ரீராம்?:-))))

      இது ஜெமினி வாசன் படமில்லை. ஆனால் வாசன் மாப்பிள்ளை ஜி எஸ் மணி தயாரித்து இயக்கிய படம்.Though it is believed that this movie is an adaptation of the mega hit The Sound of Music (1965), it is actually an adaptation of Charlotte Bronte’s classic novel Jane Eyre, with some elements of the movie thrown in என்கிறார் ரேண்டார் கை. பாப்பம்மா கேரக்டர் கும்நாம் ஹிந்திப்படத்தில் இருந்து சுடப்பட்டது. இப்படி பலவிதமான படங்களின் காப்பியாக இருந்தாலும் அந்தநாட்களில் நல்ல வரவேற்பைப் பெற்றபடம்.

      இந்தப்படத்துக்குப் பின் இதைத்தயாரித்த ஜி எஸ் மணி என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாது.

      நீக்கு
    3. ஆமாம் கிருஷ் ஸார்... நானும் பார்த்தேன்..

      நீக்கு
  19. சின்ன வயதில் ரசித்த பாடல்களில் ஒன்று. இப்போதும் தொடர்கிறது ரசனை!

    பதிலளிநீக்கு
  20. இனிய பாடல். படம்பார்கவில்லை.

    பதிலளிநீக்கு
  21. ஆஆஆஆவ்வ்வ்வ் இப்போ எதுக்காம் துரை அண்ணனுக்குக் கன்னீஈஈஈஈஈஈஈஈ?:)) ஹா ஹா ஹா நான் இயற்கையைச் சொன்னேன்:))..
    அழகிய பாடல்... ஆனா ஸ்ரீராம் எதுக்காக நழுவி விட்டார்ர்:)) ஒரு பாட்டில் இரு மாங்காயை உடைச்சிட்டாரே கர்ர்ர்ர்ர்:))...

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    வெள்ளி பதிவில் இன்றைய பாடல் இனிமையான பாடல். எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

    இந்த படம் தியேட்டரில் பார்த்து எனக்கும், என் பக்கத்து வீட்டு உறவு தோழிக்கும், பயத்தினால் ஜுரம் வந்தது நினைவுக்கு வருகிறது. நானாவது ஒரு வாரத்தில் எழுந்து நடமாடி விட்டேன். அவள் ஒரு மாதம் படுத்து விட்டாள். இப்போது நினைக்கும் போது அதில் பயப்பட என்ன இருக்கிறது என ஆச்சரியமாக உள்ளது.

    எஸ்.பி.பி யின் சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. மகிழ்ச்சியாகவும் உள்ளது. அவரின் இந்தப் பாடலை ரசிக்காத மனிதர்களே கிடையாது. என்ன ஒரு இனிமையான குரல்... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாப்பம்மாவைப் பார்த்து பயந்து விட்டீர்களா கமலா அக்கா? ஹா... ஹா.... ஹா....

      நீக்கு
    2. அட? எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய மர்மம் தானே அந்தப் படத்தில்! அதுக்கேவா பயந்துட்டீங்க? அதே கண்கள் பார்த்திருக்கீங்களா? ரவிச்சந்திரன், காஞ்சனா, இதுவும் ஏவிஎம் எடுத்த படமே. சின்ன வயசில் வந்தது. இதில் சிந்தால் சோப்புக்கான விளம்பரம் வரும். அதை வைச்சு ஒரு போட்டி கூட நடத்தினாங்க. ஹிஹிஹி, எங்கே இருந்தோ எங்கேயோ போயிட்டேன்.

      நீக்கு
    3. அதே கண்கள் ரசிக்கத் தக்க ஒரு படம். பூம்பூம்பூம் மாட்டுக்காரன் பாடல் காட்சியில் காஞ்சனா காஸ்ட்யூம் கண்றாவியாக இருக்கும்!

      நீக்கு
  23. டைட்டானிக் படம் பார்த்தபோது
    இந்த்ப் பாடலில் சில காட்சிகளை நினைத்துக் கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    இந்தப் படத்துக்கு பாட்டெழுத கவிஞர் அழைக்கப்பட்ட போது அவருடன் சென்ற அவர் மகன் தன் இனிமையான நினைவொன்றை பகிர்ந்திருந்ததை படித்தது நினைவுக்கு வருகிறது.

    அதாவது, குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் சூழ்நிலையில் ஒரு பாட்டு வேண்டுமென இயக்குனர் கேட்டவுடன், "கடவுள் ஒரு நாள் உலகை காண" என்ற பாடலை சொன்னாராம். தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று பாட்டுக்கும் அதே சூழ்நிலையை சொன்ன இயக்குனருக்கு தயக்கமில்லாமல், மூன்று பாட்டுகளையும் கவிஞர் சரளமாக வார்த்தைகளை கோர்த்து சொன்னவுடன் அனைவருமே திகைத்து விட்டார்களாம். என்ன ஒரு திறமை..! இறைவன் கொடுத்த வரம். எல்லோருக்கும் இறைவனின் இந்த பரிசு எளிதில் கிடைப்பதில்லையே.. !

    இந்த படத்தில் குழந்தைகளுடன் வரும் பாட்டுக்கள் அனைத்துமே பிரபலமானவை.. ரசிக்கத்தக்கவை...!

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. காஞ்சனா அழகு பற்றி சொன்னவுடன் நினைவுக்கு வருவது "மாதமோ மார்கழி மங்கையோ மாங்கனி ...." பாட்டு தான் ஞாபகம் வரும்........ உங்களுக்கு எப்படியோ ??

    பதிலளிநீக்கு
  26. ஒரே நாளில் நிறைய பாடல்கள் பாடிப் பதிவு செய்திருக்கும் சாதனை இவர் வசம் இருக்கிறது. ஒருமுறை கன்னடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களால். ஒருமுறை தமிழில் 19 பாடல்களால். ஒருமுறை ஹிந்தியில் ஒரே நாளில் 16 பாடல்களாம்.///Hats off SPB sir.

    பதிலளிநீக்கு
  27. எனக்கும் பிடித்த பாடல் இது. அதுவும் ஜெமினி.. கேட்க வேண்டுமா?...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!