சனி, 14 ஆகஸ்ட், 2021

துர்வாசரின் கதை

 

தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா: ஒலிம்பிக்கில் புதிய வரலாறு.

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற சாதனை படைத்தார். இதன்மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா 23, பங்கேற்றார். பைனலில் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், ஜெர்மனியின் ஜூலியர் வெபர், ஜோகனஸ் வெட்டர் உட்பட 12 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருக்கும் தலா 6 வாய்ப்பு வழங்கப்பட்டன. முதல் வாய்ப்பில் 87.03 மீ., துாரம் எறிந்த நீரஜ், 2வது வாய்ப்பில் அதிகபட்சமாக 87.58 மீ., துாரம் எறிந்து முதலிடத்தை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.


latest tamil news


இது, ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். தவிர, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். இம்முறை இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்துள்ளன.

= = = =

மீராபாய் சானு !


= = = =
ரூ.16 கோடி மதிப்புள்ள ஊசி : தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்தப்பட்டது. 

நாமக்கல்:தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவுக்கு, பெங்களூரு மருத்துவமனையில், 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்து செலுத்தப்பட்டது.



latest tamil news


நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார். அவரது மகள் மித்ரா. அவர், தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி போட வேண்டும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.அதையடுத்து, பொதுமக்கள் வழங்கிய நன்கொடை மூலம், சிறுமிக்கு ஊசி மருந்து போடப்பட்டது.

இது குறித்து, சிறுமி மித்ராவின் தந்தை சதீஸ்குமார் கூறியதாவது:எங்கள் மகள் மித்ரா, தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். அவரது சிகிச்சைக்காக, ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் ஊசி மருந்து தேவைப்பட்டது. அதன் விலை, 16 கோடி ரூபாய்.
அந்த ஊசியை, இந்தியாவில் இறக்குமதி செய்ய, ஆறு கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். பொதுமக்கள் கொடுத்த நன்கொடை மூலம், 16 கோடி ரூபாய் சேர்ந்து விட்டது.

பொதுமக்கள் கொடுத்த பணம் மருந்துக்கு மட்டுமே போதுமனதாக இருந்தது. இறக்குமதி வரி ரத்து செய்தால் மட்டுமே, இந்த மருந்து எங்கள் மகளுக்கு கிடைக்கும் எனும் நிலை இருந்தது.
பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்கள், அதிகாரிகள் மனது வைத்து, இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். கடவுள் அருளால், மத்திய அரசு, இறக்குமதி வரியான, ஆறு கோடி ரூபாயை ரத்து செய்தது.


latest tamil news

அதற்கான கடிதம், இணையதளம் மூலம் அனுப்பி வைத்தனர். நேற்று, எங்கள் மகள் மித்ராவுக்கு, பெங்களூரு மருத்துவனமனையில் ஊசி மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாட்களில், சிகிச்சைக்கு பின், ஊர் வந்துவிடுவோம். எங்கள் மகள் வாழ உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.
==== == 

உலகின் பலமிக்க கண்ணாடி. 


கண்ணாடியை வெட்டுவதற்கு வைர முனையை பயன்படுத்துவர். ஆனால், அத்தனை உறுதியான வைரத்தின் மீதே கீறலை ஏற்படுத்துமளவுக்கு உறுதியான கண்ணாடியை சீன விஞ்ஞானிகள் படைத்துள்ளனர்.

யான்ஷான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உலகின் மிக வலுவான கண்ணாடியை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். வைரத்தையே பிளக்குமளவுக்கு பலத்தையும், ஒளி ஊடுருவும் தன்மையும் கொண்டதாக அந்தக் கண்ணாடி உள்ளது.

'ஏ.எம்., 3' என்று பெயரிடப்பட்டுள்ள இக்கண்ணாடிக்கு இன்னொரு பலமும் உண்டு. இது ஒரு குறைமின் கடத்தியாகவும் செயல்படும் திறன் கொண்டது. எனவே, சூரிய மின் தகடுகளில் ஏ.எம்.,3யை பயன்படுத்த முடியும் என யான்ஷான் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனிதனால் உருவாக்கப்பட்ட ஏ.எம்.,3 கண்ணாடியை அணிகலனாகவும், பூமியை அலங்கரிக்கும் சூரிய மின் பலகைகளாகவும் தயாரிக்க முடிவது, ஆச்சரியமான செய்தி தான்.
================ ================ =========

"நான் படிச்ச கதை!"

[இது ஒரு புதிய பகுதி.  ஜீவி ஸாரின் யோசனை மற்றும் ஆரம்பத்தோடு தொடங்குகிறது.  இதே எண்ணம் எனக்கும் ஏற்கெனவே இருந்ததால் நேற்று வந்ததை இன்றே வெளியிடுகிறேன்.  நண்பர்கள் அனைவரும் பங்கு பெறலாம்.  அவரவர்கள் ரசித்த கதையை ரசனை வெளிப்பாட்டுகளுடன் எழுதி அனுப்பலாம்.]


நான் படிச்ச கதை
- ஜீவி -
================

சுப்பையா சைக்கிளை எடுக்கும் பொழுது எதிரில் ஒரு பெண் கடகப் பெட்டியுடன் வந்து கொண்டிருந்தாள்.  ஏதாவது வியாபாரமாக இருக்குமோ என்று தோன்றியது.  திங்கிற பொருளாக இருந்தால் வாங்கிச் சாப்பிடலாமே என்று நினைத்து,  சைக்கிளை எடுக்காமலேயே நின்றான்.

"பொட்டியிலே என்னம்மா?  யாவாரமா?"  என்று கேட்டான்.

"யாவாரந்தான்..  மொச்சப்பயறு வேணுமா?.." என்று கேட்டுக் கொண்டே பக்கத்தில் வந்தாள். 

"நல்லா இருக்கணும்மா நீ..  நல்ல நேரதுல வந்த.. ஆழாக்கு பயறு  போடு.."

அவள் பெட்டியை இறக்கி மணலில் வைத்தாள்.  பயறை அளந்து  கொண்டே,  "பேப்பரு  இல்ல..  கையில வாங்கிக்கிடும்.." என்றாள்..

"சும்மாப் போடு" என்று இரண்டு   கைகளையும் அகல விரித்து  இரண்டே வாயில் அவ்வளவையும் தின்று விட்டான்.

"இன்னொரு ஆழாக்கு போடட்டா?"  என்று கேட்டாள்.

"போதும்  தாயி..."

தமிழ் மண்ணில் ஒரு காலத்தில் ஊருக்கு வெளியே ஆள் அரவமில்லாத பொட்டல் காட்டில் கூட மனசில் களங்கமில்லாத வெள்ளந்தியான ஆண்--பெண் பேச்சு,  பழக்க வழக்கங்கள் எவ்வளவு  நாகரீகமாக இருந்தன என்பதை  எழுத்தில் படிக்கும் பொழுது மனசு இளகிப் போகிறது.   

முன்பெல்லாம் சுப்பையாவுடன் அவன் முதலாளி அரிகிருஷ்ணனும் வருவார்.  இரண்டு பேரும் பேசிக் கொண்டே  சைக்கிளை மிதிப்பார்கள்.  ஆதிச்ச நல்லூர்,  கால்வாய் லயன் சோடா விற்பனையெல்லாம் அவரே பார்த்துக்  கொள்வார்.  அவர் இறந்ததிலிருந்து சுப்பையா மட்டும் தான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறான்.  அவர் இருக்கும் பொழுது எப்பொழுதாவது தான் கம்பெனியில் வந்து உட்காரும் அவர் பெண்சாதி சந்திரா இப்பொழுது சகலத்தையும் கவனித்துக் கொள்கிறாள்.   மூத்த  பிள்ளைக்கு  ஆறு வயதாகிறது.  புத்தி சரியில்லை.  கையில் எட்டு மாத குழந்தை வேறு.  எப்படியிருந்த குடும்பம் இப்படி ஆகிவிட்டதென்று சுப்பையாவுக்கு வருத்தமாக இருக்கிறது.   "ஏலே,  சுப்பையா!  அவரு பொஞ்சாதியும் சின்னஞ்சிறுசு.   ஒனக்கோ கல்யாணம் ஆவல.   ஊருலே ஒரு மாதிரிப் பேசுவாவ..  அந்த வேலைய வுட்டுரு..." என்று அவன் ஆத்தா கூட அவனிடம் சொல்லியிருக்கிறாள்.   என்றாலும் சுப்பையாவுக்கு அவள் சொன்னது சரியாகப் படவில்லை. 

பணையூர் விலகலில் வந்து கொண்டிருந்த போது சைக்கிள் பஞ்சராகாமலிருந்தால் இன்னும் கூட  சீக்கிரமாக வந்திருக்கலாம்.  கம்பெனி வாசலில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு சந்திரா உட்கார்ந்திருந்தாள்.  கீழ்ப்படியில் அந்த புத்தி சரியில்லாத பிள்ளை உட்கார்ந்து  வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தது.

சுப்பையாவைப் பார்த்ததும் சந்திரா உள்ளே போய் விளக்கைப் போட்டாள்.  அவன் கணக்கை முடித்துக் கொண்டு புறப்படும் பொழுது  "சுப்பையா.." என்றாள்.

"ஒங்கிட்டே சொல்லணும் சொல்லணும்னு நெனைச்சுக்கிட்டே இருக்கேன்.." என்று சொல்லி  விட்டுத் தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.   "அந்த ஸ்டூலில் உட்காரேன்.."  என்றாள்.

"இல்லம்மா,  நிக்கேன்.."

"சும்மா உட்காரு.  நீ என்னை விட  வயசுலே மூத்தவந்தானே,  உக்காரு.."

"அது நல்லா இருக்காதம்மா.. கடையில் ஏதாவது சாமான் வேண்டனுமா?.."

"இல்ல.  அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... " 

"அய்யா போனம் பொறவு ஒனக்கு வேலை ஜாஸ்தியாப்  போச்சு.. லயனுக்கும் போய்க்கிட்டு கம்பெனிக்கு வேண்டிய  சாமாங்களும்  நீ தான்  வாங்கிட்டுவாரே.."

"அதனாலே  என்ன தாயி.."

"கூட ஒரு ஆளாவது வேலைக்குப் போடணும்...  இல்ல  ஒனக்கு சம்பளமாவது கூட்டித் தரணும்.."

"அந்த மாதிரி எல்லாம் ஒண்ணும் நெனைக்காதியம்மா.."

"அடுத்த வாரத்துலே இருந்து என்னால் ஏண்டதக் கூட்டித் தாரேன்.  ஒண்ணும் தப்பா நெனைச்சுக்கிடாத  சுப்பையா.." என்றாள்.  சொல்லும் போதே தொண்டை அடைத்து கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
 
"நான் ஒங்க கிட்ட சம்பளத்தைக் கூட்டித் தாங்கன்னா கேட்டேன்?  ரெண்டு புள்ளைங்களையும் வெச்சுக்கிட்டு நீங்க  தனியா நின்னு தட்டழியதப் பாத்தா அந்த நல்ல தங்காளக் கொடுமைப்படுத்துன  மூளி அலங்காரி கூட மனசு தாங்க மாட்டாம்மா..  நா  சம்பளத்துக்காக இங்கே  வேலைக்கு நிக்கலம்மா...  செத்துப் போன அய்யாவையும்  உங்களையும்,  இந்த ரெண்டு புள்ளைங்களையும்  நெனச்சுத்தாம்மா வேலைக்கு நிக்கேன்.   ஒழைச்சுத் தாரதத் தவிர  ஒங்களுக்கு ஒதவ எங்கிட்டே வேறே ஒண்ணுமில்ல நாச்சியாரே..."

சந்திரா தலையைக் குனிந்து அழுது  கொண்டிருந்தாள்.  ஒக்கலில் இருந்த குழந்தை அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.

"வாரேன்  தாயி... பத்தரமா இருங்க..  வெள்ளன  வாரேன்..."  என்று சொல்லி விட்டுப் படியிறங்கிப் போனான்.  அந்தப் பிள்ளை வாசல்படியிலேயே சலனமில்லாமல் உட்கார்ந்து இன்னும்  வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.

===  என்று கதை முடியும் போது விக்கித்துப்   போய் விடுகிறது.

சுப்பையாவின் பாத்திரப் படைப்பு அற்புதம்.   வறுமையில் செம்மை மனசைப் போட்டு உலுக்குகிறது.

இந்தக் கதையை எழுதிய வண்ணநிலவனின் எழுத்தின் சான்றாண்மை அவருக்கு   ஜே  போடச் சொல்கிறது.  கூடவே வேறு யாராவது எழுதியிருந்தால் இந்தக் கதையை எப்படிக் கொண்டு போய் இருப்பார்கள் என்று நினைத்துப் பதறாமல் இருக்க முடியவில்லை.

வண்ணநிலவன்:    வண்ணநிலவனின் இயற்பெயர்  இராமச்சந்திரன்.  பிறந்த ஊர்  தாதங்குளம்.   திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லும் இரயில் பாதையில் இரண்டாவதோ அன்றி மூன்றாவதாகவோ இருக்கும் ஊர் தாதங்குளம்

தாதங்குளத்து ஓவலிங்கசாமி கோயில் ரொம்ப பிரசித்தம்.  சாஸ்தா கோயில் என்று சொல்வார்கள்..    வண்ணநிலவனின் தந்தை கொக்கிரகுளத்தில் நில அடமான வங்கியில் வேலை பார்த்தவர்..

தூத்துக்குடியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த  'சாந்தி'  பத்திரிகையில் இராமச்சந்திரனுக்கு  வண்ணநிலவன் என்ற புனைப்பெயர் கொடுத்து 'மண்ணின் மலர்கள்'  என்ற அவரின் முதல் கதையைப் பிரசுரித்து அவரை எழுத்துலகிற்கு அறிமுகம் செய்தவர் வல்லிக்கண்ணன்.   'துக்ளக்'  பத்திரிகையின்   துர்வாசரும் இவரே.  துக்ளக் எடிட்டர் சோ அவர்கள் நட்புரிமையுடன் இவருக்கு சூட்டிய இன்னொரு புனைப்பெயர் அது.


≠==========



44 கருத்துகள்:

  1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் எப்போதும் வளமோடு இருக்க இறைவன் அருள்
    நம்மோடு வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. வண்ண நிலவனின் கதை கண்களைத் தொட்டு மனதையும் தொட்டுக்
    கண்ணீர் வரவழைத்தது. என்ன ஒரு நேர்மை, என்ன ஒரு நியதி,!!!

    நெல்லை மண்ணின் ஈரம் வண்ண நிலவன், வண்ண தாசன், சுகா
    என்று தொடருகிறது.
    இராமச்சந்திரனுக்கு வண்ண நிலவன் என்று பெயர் சூட்டிய
    வல்லிக் கண்ணனுக்கு கோடானு கோடி நன்றிகள்.
    இந்தக் கதையை இங்கே பதித்த ஜீவி அவர்களுக்கும்
    மனம் நிறை நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்ண நிலவன்னா, பலருக்கு அவரோட 'எஸ்தர்' தான் ஞாபகத்துக்கு வரும். எனக்கு அவரோட இந்த சிறுகதை மிகவும் பிடித்துப் போயிற்று. கதை தான் படிக்கறோம்.. இருந்தாலும் எழுத்துக்குத் தான் எவ்வளவு சக்தி?.. நெஜமாலுமே கதையை வாசித்தவுடன் விக்கித்துப் போனேன், வல்லிம்மா.

      நீக்கு
  3. கடகப் பெட்டி... எங்களூர் கூடை. ராஜ நாராயணன்
    ஐய்யா கட்டுரைகளில் அதிகம் வரும்.
    மிக நெகிழ்ச்சி தந்த தமிழ் நடை. கடை முதலாளியிடம்
    காண்பிக்கப் படும் விஸ்வாசம்,
    ஊழியரிடம் காட்டப்படும் பாசம்
    எல்லாமே உச்சம் தொடும் தரம், நாஞ்சில்,கரிசல்
    என்று எது வேண்டுமானாலும் சொல்லலாம்.
    மண்ணின் மகிமை அது. மீண்டும் மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கடகப்பெட்டி தெற்கத்தித் தமிழ். நல்லதொரு பகிர்வு. மனதைத் தொட்ட பகிர்வு.

      நீக்கு
  4. இவரே துர்வாசர் என்று அறிந்ததில் மிக வியப்பு,
    ஏகப்பட்ட நல்ல தகவல்களை இங்கே பதிந்த ஜீவி சாருக்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் துக்ளக் அலுவலகத் தொடர்புகளில் இருந்த பொழுது, அநீதியான விஷயங்களைப் படிக்கும் பொழுதோ அல்லது பார்க்கும் பொழுதோ ரொம்பவும் கொதித்துப் போவாராம். அந்த சமய இவர் கோபத்தைப் பார்த்துத் தான் துர்வாசர் என்று செல்லமாக அழைப்பாராம், சோ சார்!

      நீக்கு
    2. @வல்லி, முதலில் வக்கீல் சுமதி தான் துர்வாசர் எனப் பல வருடங்கள் நினைச்சிருந்தேன். பின்னர் அகஸ்மாத்தாகத் தெரிய வந்தது. நல்ல பெயர்.

      நீக்கு
  5. 16 கோடி மதிப்புள்ள ஊசி என்றால்
    எத்தனை உழைப்பு அதில் சேர்ந்திருக்கிறது என்று நினைக்க நினைக்க
    ஆச்சரியம்.
    அந்தக் குழந்தைக்கு ஊசி சேர்ந்தது நல்ல செய்தி.
    இறைவன் இதே போல நிறைய
    குழந்தைகளுக்கும் உதவி கிடைக்க அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. //உலகின் பலமிக்க கண்ணாடி. //


     இப்போ விக்கிற அமெரிக்கன் டயமண்ட், ஆஸ்திரேலியன் டயமண்ட் ஜிர்கோனியம் போன்ற செயற்கை வைரங்களுக்கும் இதற்கும் என்ன வித்யாசம்?

     கதை துரை செல்வராஜ் அவர்கள் எழுவது போல் இருக்கிறது. குறும்கதை என்று சொல்லலாம்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய பகுதியின் கதையினூடே
      தங்களுக்கு எனது நினைவு வந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..

      துரை செல்வராஜூ..

      நீக்கு
    2. @ Jayakumar

      இதுவே முழுக்கதை அல்ல. எங்கள் பிளாக்கில் போடுவதற்கேற்ப கதையின் ஜீவன் தளும்பும் சுருக்கப் பட்ட தோற்றம். அதனால் குறுங்கதை என்று கொள்ள வேண்டாம்.

      நீக்கு
    3. இந்தக் கதையின் பெயர், 'கெட்டாலும் மேன்மக்கள்'.
      இணைய வாசிப்பில் கிடைத்தால் முழுக் கதையையும் வாசித்துப் பாருங்கள், சார்.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள்.

    மீராபாய் சானுக்கு வாழ்த்துக்கள். அவரின் நல்ல குணத்திற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    மித்ரா இறை அருளால் பல்லாண்டு வாழ வேண்டும்! வாழ்க வளமுடன்
    உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்., நன்றிகள்.




    பதிலளிநீக்கு
  10. ஜீவி சார் படித்த கதை அருமை. எழுத்தாளர் அறிமுகம் நன்று.
    புதிய பகுதிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாரும் கதைகள் வாசிக்கும் பொழுது ரொம்ப பிடிச்சிருந்தா அந்தக் கதையை நம்ம எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டால் ஒரு நூல் நிலையத்தில் இருக்கிற உணர்வோடு இந்தப் பகுதி களை கட்டி விடும், கோமதிம்மா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. படித்த கதை பிடித்திருந்ததில் மகிழ்ச்சி
      டி.டி.

      நீக்கு
  12. குழந்தை மித்ரா நீடூழி வாழட்டும்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் அன்பின் வணக்கம்,..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வளமுடன்..
    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
  14. மித்ரா இறையருளால் நீடூழி வாழட்டும்ம்...

    பதிலளிநீக்கு
  15. புதிய பகுதி பொன் போல் ஒளிர்ட்டும்..

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
    ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.
    மீராபாய் சானு அவர்களின் நல்ல உள்ளம் வாழ்க.
    குழந்தை மித்ரா தெய்வ அருள் பெற்றவர். பல்லாண்டு காலம் நோய் நொடி ஏதுமின்றி, ஆரோக்கியத்தோடு வாழ பிரார்த்தித்து கொள்கிறேன்.
    உடையாத கண்ணாடி செய்தி நன்று.

    இன்று ஜீவி சகோதரர் பகிர்ந்த கதை நன்றாக உள்ளது. சுப்பையாவின் நல்ல குணம் கதையின் ஜீவநாடி. கதை உயிர்ப்புடன் இருக்கிறது. இன்றைய புதிய பகுதிக்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை ரசித்து வாசித்தமைக்கு நன்றி, சகோதரி.

      நீக்கு
  17. //விலகலில் - விலக்கில், //வேண்டனுமா?.// - இந்த வார்த்தை அங்க பேசிக் கேட்டதில்லை.

    அருமையான சிறுகதை. அந்த நல்ல காலமும்தான் போயிடுச்சே.

    நல்ல கதை அறிமுகத்துக்கு நன்றி ஜீவி சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விலகலில்.. விலக்கில்..//

      நான் கூட கொஞ்ச காலம் தாமிரபரணி தண்ணீர் குடிச்சவன் தான். எனக்கோ, "என்ன,லே.."(ஆண்களைக் கூட) " என்ன், டீ..?" விளிப்புகள் தாம் ஞாபகம் இருக்கு.
      கொஞ்சம் தூத்துக்குடி பக்க நெருங்கலில் இப்படி சொல்லுவாங்களோ என்னவோ? இதையே ஈரோடு பக்கம்லாம் வளைவு என்பார்கள்.. தஞ்சாவூர் பக்கம்ன்னா
      பேட்டையோ? தம்பியோ, ஸ்ரீராமோ சொன்னாத்தான் பேட்டை பற்றி தெரியும். நானும் கும்பகோணத்தான் தான் என்றாலும் தமிழகத்து பல ஊர் வாசம், எல்லாங்கலந்த பேச்சு வழக்காயிடுத்து!

      நீக்கு
    2. திருநெல்வேலி பாஷை தனிரகம்.  அதே போல கோயம்புத்தூர் பாஷையும்.  மதுரையும் தூத்துக்குடியும் கொஞ்சம் ஒத்துப்போகும்.  தஞ்சாவூர் சுத்தத்தமிழ் ரகம்.  என்னுடைய மதுரை நண்பன் என்னுடனேயே சென்னையில் வசிக்கிறான்.  அவனும் 35 வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறான்.  ஆனால் இப்போதும் அவன் பேசினால் மதுரைக்காரன் என்று கண்டுபிடித்துவிடலாம்.  சிலர் அப்படிதான், மண்மணம் மாறாமல் இருக்கிறார்கள்.  நான்லாம் எந்த ஊர் என்று தெரியாத அளவில் பேசுவேன்!

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எண்பதை "எம்பளது" என்றும் "பங்கீடு" என்பதைப் "பங்டு" எனவும், கும்பகோணத்தை "கும்மாணம்" என்னும் தஞ்சைத்தமிழா சுத்தத் தமிழ் ரகம்? அநியாயமா இல்லையோ? மதுரை தவிர்த்த மற்ற மக்கள் பேசுவது தமிழே இல்லை. தமிள், தமில்! :))))))

      நீக்கு
    4. ஏற்கனவே இரண்டு முறை சொல்லியாச்சு, இப்போது மூன்றாவது முறையாக சொல்கிறேன், எந்த விதமான ஸ்லாங்கும் இல்லாத சுத்தமான தமிழ் திருச்சி தமிழ்தான்.

      நீக்கு
    5. என்னஆஆஆஆஆஆஆது? திருச்சித் தமிழா? சொந்தப் பிள்ளையைத் "தம்பி" என்கிறார்கள், பெண்ணைப் "பாப்பா" என்கிறார்கள். கணவனை "சார்" என்கிறார்கள். எங்க சார்னு சொன்னால் அவங்க கணவர்னு நாம புரிஞ்சுக்கணும். தமிழா? இது தமிழா?

      நீக்கு
  18. டக்குனு ஒரு விஷயத்துக்கு தலைப்புக் கொடுக்கறதிலே நம்ம ஸ்ரீராம் கைதேர்ந்தவர். நான் கூட காலம்பற இந்தத் தலைப்பை மட்டும் பார்த்திட்டு ஏதோ புராண காலத்து துர்வாசரைப் பற்றி எழுதியிருக்காராக்கும் என்று நினைத்தேன். :)))

    பதிலளிநீக்கு
  19. நற்செய்திகளுக்கு வாழ்த்துகள். நல்ல கதை
    .

    பதிலளிநீக்கு
  20. கதை வாசித்து கருத்து பகிர்ந்ததற்கு
    நன்றி, மாதேவி சகோ.

    பதிலளிநீக்கு
  21. நீரஜ் சோப்ரா, மீரா சானு பற்றித் தொ(ல்)லைக்காட்சியில் பார்த்தாச்சு . குழந்தைக்கு ஊசி போட்ட விபரமும் படிச்சது. கண்ணாடி பற்றிய தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. துர்வாசர்னு தலைப்பைப் பார்த்ததும் என்னவோ, ஏதோ என நினைச்சேன். இந்தக் கதை படிச்ச நினைவு இருக்கு. தலைப்புப் பொருந்தலையேனு யோசிச்சப்போக் கருத்துரைகளின் மூலம் புரிய வந்தது. நல்ல கதை. ரொம்பச் சுருக்கி இருப்பதால் கதையின் முக்கிய ஜீவன் மறைந்து விட்டதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிட்டோ! கதையை சுருக்கியதில் ஜீவனை உணர முடியவில்லை.

      நீக்கு
  23. இனிய மண நாள் வாழ்த்துகள் ஶ்ரீராம்&அவரோட பாஸுக்கு!

    பதிலளிநீக்கு
  24. படித்த கதை வெகு சிறப்பு. மனதைத் தொட்ட கதை.

    தங்கப் பதக்கம் - வாழ்த்துகள். பதக்கம் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!