வியாழன், 12 ஆகஸ்ட், 2021

கொஞ்சம் ஏறி நிக்கட்டுமா?

 "கொஞ்சம் ஏறி நிக்கட்டுமா?"  ஓட்டுநர் காதருகில் நான் சற்று சத்தமாகக் கேட்டபோது 'அவர்' பாதி திரும்பி என்னைப்  பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாரே தவிர பதில் சொல்லவில்லை! "எழுந்து நிற்கட்டுமா" என்று கேட்டிருக்கலாமோ!

எவர்?

நான் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் ஓட்டுநர்.

பக்கத்தில் கடந்து கொண்டிருந்த பைக்காரர் என்னைத் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றார்!

வாகனங்களின் சத்தத்திலும், போட்டிருக்கும் ஹெல்மெட் தாண்டி அவர் காதில் விழவேண்டுமே என்றும் நான் கொஞ்சம் கூடுதல் சத்தத்தில் கேட்பதாய் நினைத்து ரொம்பவே சத்தமாகப் பேசி விட்டேனோ என்னவோ!

ஊபர் மோட்டோ போட்டிருந்தேன்.  ரொம்ப நேரமாய் ஊபரில் ஆட்டோவும் அமையவில்லை, காரும் கிடைக்கவில்லை.  எனவே மோட்டோ.  அந்த நேரம் அதில் எந்த  வண்டி கிடைக்கிறதோ அது நம் விதி!   சமயங்களில் சாதாரணமாக கால் வைத்து ஏற முடியாதபடி உயரமான வண்டி அமையும்.   ஒன்று சற்று உயரமான இடத்துக்கு அவரைத் தள்ளிக் கொண்டுபோய் ஏறவேண்டும்.  அல்லது அவர் அனுமதியுடன் கால்வைப்பானில் காலை வைத்து எம்பி அவர் தோளை பிடித்துக் கொண்டு ஜிங் என்று ஏறி அந்தப் பக்கம் காலைத் தூக்கிப்போட்டு அமரவேண்டும்!

'ஏன்...  உன்னிடம் வண்டி இல்லையா' என்று கேட்பீர்கள்...   தள்ளிக்கொண்டே எவ்வளவு தூரம் செல்வது?  அதற்கு அந்த பத்து கிலோமீட்டரைக் கடக்க சும்மா நடந்து விடலாம்!

கொரோனா கடுமையாக இருந்த / இருக்கும் நேரங்களில் மோட்டோ உபயோகிக்க மாட்டேன்!  அந்நேரங்களில் ஊபர், ரேபிட் ஓ வில் மோட்டோ அனுமதியும் இருக்காது.  மற்ற சமயங்களில் இருக்கும்.  ஒரு ஒப்புமையில் ரொம்ப சீப்.  மட்டுமல்லாது போக்குவரத்து நெரிசலில் நுழைந்து, புகுந்து, வளைத்து ஓட்டிக் கொண்டு சேர்த்து விடுவார் என்பதால் அலுவலகத்துக்கு நேரமாகாது!

ஓலாவை விட ஊபர் சீப்.  சில ஆட்டோ ஓட்டுநர்கள் ஓலா, ஊபர் இரண்டும் வைத்திருப்பார்கள்.  சென்ற வாரம் ஊபரில் ஒரு ஆட்டோ போட்டு காத்திருந்தேன்.  ஐந்து, நான்கு, மூன்று என்று நிமிடங்கள் கழிந்து கொண்டிருந்துவிட்டு, மறுபடி நான்கு, ஐந்து, ஆறு என்று ஏறுமுகத்தில் இருக்க, மேப்பைப் பார்த்தால் வண்டி எதிர் திசையில் சென்று கொண்டிருந்தது.  குழம்பிப்போய் ஃபோன் செய்து கேட்டால், அவர் ஊபரைப் புறக்கணித்து ஓலாவை தெரிவு செய்து விட்டார்!  அதாவது இரண்டையும் தெரிவு செய்திருந்திருக்கிறார்.  ஓலா கஸ்டமர் இருக்குமிடம் அவருக்குப் பக்கமாக இருந்திருக்கிறது.  "நீங்கள் கேன்ஸல் செய்து கொள்ளுங்கள்" என்கிறார் கூலாக.  என்ன ஆகும்...  முப்பது நாற்பது ரூபாய் அடுத்த ட்ரிப்பில் பச்சா விழும்!

சரி, இரண்டு சக்கர வாகன அனுபவத்துக்கு வருகிறேன்...

வண்டி ஓடும்போது, சொல்லாமல் அட்ஜஸ்ட் செய்து உட்கார்ந்தோமானால், ஓட்டுநர் பாடு சிரமம்.  அவர் "யே தோஸ்தி..." என்று ஓட்டுவது போல, வளைந்து வளைந்து ஓட்ட ஆரம்பித்து விடுவார். அப்புறம் முறைப்பார்.  ஒருமுறை  ஒருவர்  வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு எனக்கு இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்வதெப்படி என்று அறிவுரையும் சொல்ல ஆரம்பித்து விட்டார்!  "யோவ்...   தெரியும்யா..  நானும் வண்டி ஓட்டுனவன்தான்..  இடுப்பில் கம்பியை விட்டு சொருகினாப்போல இருந்தால் தெரியும் உனக்கு" என்று சொல்லவில்லை...  நினைத்துக் கொண்டேன்.  மதுரையில் பின்னால் சரியாய் உட்காராத அப்பாவை வைத்து சைக்கிள், மற்றும் கியர் இல்லாத டிவிஎஸ் 50, அவந்தி கரேலி எல்லாம் ஓட்டியிருக்கிறேனே....!

அதே சமயம் நிறைய 'பைக்கர்'கள் மிகவும் அன்புடனும், பணிவுடனும் நடந்து கொள்வதும் உண்டு.  மிகவும் சகாயமாக இருப்பார்கள்.  எப்போதாவது இது மாதிரி ஒரு முறைப்பான் அமைவார்.

பெரும்பாலான இருசக்கர ஓட்டுநர்கள் வேறு ஒரு தொழிலைச் செய்பவர்கள்.  நடுவில் அவர்கள் போக வேண்டிய இடத்துக்கு  செலவில்லாமல், சற்றே லாபத்துடனும் செல்ல இதுபோல ஓலா, ஊபர், ரேபிட் ஓ போன்றவற்றில் சேர்ந்து காசு பார்ப்பார்கள்.  என்னுடைய கணினி மருத்துவரே இது மாதிரி ஒரு கேப்டன்தான்!  ரேப்பிட் ஓ வில் அவர்களை அப்படிதான் அழைப்பார்கள்! கூரியர் காரர்களும் இதில் இணைவார்கள்.  மிக அதிசயமாக படிக்கும் மாணவர்கள் ஓட்டுநராக அமைவதுண்டு.

நேற்று ஒரு பைக்கர் வண்டி உறுதி செய்யப்பட்டதும் மெசேஜ் அனுப்பினார்.  

"டிராப் எங்கே?"

"---------------------"  பதில் அனுப்பினேன்.

"கேஷா? கார்டா?"  கார்ட் போட்டிருந்தால் ஹோகயா!  அவர்களுக்கு அவ்வப்போதைய பெட்ரோல் செலவுகளுக்கும் மற்றும் இதர செலவுகளுக்கும் கையில் காசு வேண்டும்!  ஒருமுறை ஒரு ட்ரைவர் என்னிடம் புலம்பினார்.  "காலையிலிலிருந்து ஏழாவது சவாரி...  கைல பத்து பைசா இல்ல..  நீங்க கேஷ்தானே?"   இந்த வகையில் ஆன்லைனில் பணம் கட்டிவிட்டோம் என்று தெரிந்தால் பெரும்பாலான இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகன ஊபர்தாரிகள் ட்ரிப்பை கேன்ஸல் செய்து விடுவார்கள். 

"கேஷ்தான்"

"எவ்வளவு காட்டுகிறது?"

சொன்னேன்.

"ப்ளஸ் இருபது ரூபாய் தருவீர்களா?  இல்லையென்றால் கேன்சல் செய்துகொள்ளுங்கள்"  இப்படிக் கேட்பது இரு சக்கர வாகன வகையில் அபூர்வம்.

"தர முடியாது.  நீங்கள் கேன்சல் செய்யுங்கள்"

ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நாம் கேன்சல் செய்தால் அடுத்த ட்ரிப்பில் நம்மிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெனால்ட்டி என்று வாங்கி விடுவார்கள்.  நாம் நம் நிலைமையை விளக்கி பிராது எல்லாம் கொடுக்க வேண்டும்.  சமீப காலங்களில் அந்த வசதியும் காணோம்!  அவரே கேன்சல் செய்தால் இல்லை, இந்தத் தொல்லை!

அவர் கேன்சல் செய்ய நேரம் எடுத்தார்.  நாங்களும் காத்திருந்தோம், 'என்னதான் செய்வே' என்று!  எக்ஸ்டராவும் தரத் தயாரில்லை.  அப்புறம் கேன்சல் செய்தார்.

சில ஸ்கூட்டி வகை வண்டிகளில் ஏறி அமர்வது எளிது.  ஆனால் அமர்ந்தபின் காலை எப்படி வைத்துக் கொண்டாலும் தொடையும் இடுப்பும் சேரும் இடத்தில் பிடித்துக் கொண்டு மரண அவஸ்தையாய் இருக்கும்.  கால் வைக்கும் இடத்தை வேறு உடைத்து வைத்திருப்பார்கள்.  கால்கள் நிற்கவே பிடிப்பில்லாமல் தொங்கும்!  ஆரம்பத்தில் பெரிய வகை வண்டிகள்தான் காணப்பட்டன.  இப்போதுதான் இலகுரக வாகனங்களும் வருகின்றன.  இன்னும் இந்த வகையில் நான் ஒரு டிவிஎஸ் 50 யைச் சந்திக்கவில்லை!  அவ்வளவுதான்.

இப்போதும் காலும் இடுப்பும் அப்படி இருந்ததால்தான் மேலே சொன்னபடி அப்படிக் கேட்டேன்.  ஏற்கெனவே அவர் வந்து என்னை (பிக்கப்) அழைத்துச் செல்லாமல் அவர் இருக்கும் இடத்துக்கு சாலையைக் கடக்க வைத்து என்னை அழைத்து ஏற்றுக் கொண்டிருந்தார்.

எனக்கு நோட்டிபிகேஷனில் வந்த வண்டி வகையும் இல்லை, வண்டி எண்ணும் அது இல்லை.  எனவே சந்தேகமாக அவரைப் பார்த்து 'ஊபர்?' என்று கேள்விக்குறி போட்டேன்.   'ஆம்' என்று தலையசைத்தார்.  'ஸ்ரீராம்?" என்றேன்.  "ஆம்" என்னும் வகையில் மண்டையை ஆட்டினார்.  'வண்டி எண் மாறி இருக்கிறதே'ன்னு கேட்டேன்.  என்றேன்.  'ஆல்டர்நேட் நம்பர்' என்று இரண்டு வார்த்தை செலவு செய்தார்.. 

அப்போதுதான் வண்டியைப் பார்த்தால் அது எனக்கு அலர்ஜியான வகை.  

'இந்த வண்டி வகைக்கும் என் இடுப்புக்கும் ஆகாதே' என்று நான் சொன்னதை அவர் ரசிக்கவில்லை!  வண்டியில் ஏறி அமர்ந்ததும் காலில் பிடிப்பு தொடங்கி விட்டது.  போகப்போக சங்கடம் அதிகரிக்க, வலி ஆடுகால் சதையிலிருந்து தொடை வழியே இரண்டு பக்க இடுப்பையும் அடைய, சமாளித்துப் பார்த்து, முடியாமல் நான் ஆரம்பத்தில் சொன்ன அந்தக் கேள்வியைக் கேட்டேன்!  இன்னும் பதினைந்து நிமிட டிராவல் இருக்கிறதே...

அவர் பதில் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, வேகத்தைக் கூட்டி நடுச் சாலையில் பறக்க ஆரம்பிக்க, எனக்கு வேறு வழியே இல்லாமல் காலை நீட்டி சரி செய்ய வேண்டிய கட்டாயம்.  எனவே  முடிந்தவரை பாதிக்காமல் பாதி எழுந்து சரிசெய்துகொண்டு மறுபடி ஒரு  முறைப்பை வாங்கிக் கொண்டேன்.

=================================================================================================  

பொக்கிஷம் :

ரோசாப்பூ ரவிக்கைக்காரியில் "வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ..." என்று ஒரு பாட்டு வரும்.  ரசிக்கக் கூடிய பாட்டுதான். 

நடுவில் ஒரு பயில்வான் பேசுவார்.  "ஏல செம்பட்ட....  மூணு தோலானுக்கு  முந்திரியும் திராட்சையும், ஏழு தோலானுக்கு பாதாவும் பிஸ்தாவும் வாங்கிட்டு வாடா" என்பார். 
 செம்பட்டயின் கேள்விக்கு பதிலாக "எனக்கல்லடா அது..  உனக்கு" என்றும் சொல்வார்.  

அதென்ன தோலான்?  அதைத் தேடினால் சாண்டில்யன் கதையில் வரும் கழஞ்சு, ஆங்காங்கே படித்த வீசை எல்லாம் கண்ணில் பட்டது. 

அந்தக் கணக்கு கீழே.   இதில் தெ (முக்கால்) என்பதும் வறு (அரைக்கால்) என்பதும் இரண்டு எழுத்துகளும் ஒன்றின்மேல் ஒன்று ஏறிக்கொண்ட நிலையில் கண்ணில் பட்டது.  கேள்விக்குறிக்கு (அரை) கீழே புள்ளி கிடையாது!  அதை அப்படி டைப்ப முடியாதே....


1=க (ஒன்று)  3/4=தெ (முக்கால்);  1/2+? (அரை);  1/4=வ (கால்);  1/8=வறு (அரைக்கால்);  


3- 3/4 குன்றி - ஒரு பணவெடை ;  32 குன்றி = ஒரு வராகனெடை ; 

8 குன்றி = ஒரு மாஷா ; 40 குன்றி = ஒரு கழஞ்சு ; 

1 தோலா = ஒரு ரூபாய் ; 3 தோலான் = ஒரு பலம் ; 

24 தோலான் = ஒரு கச்சாசேர் ; 72 தோலா = ஒரு பக்காசேர் (படி); 
 
40 தோலா= ஒரு ராத்தல் ; 3- 1/2 வராகனெடை = ஒரு தோலான் ; 

10 வராகனெடை = ஒரு பலம்;  1 1/4 வராகனெடை = ஒரு கழஞ்சு ; 

1 வராகனெடை -9 பணவெடை ;  8 பலம் = ஒரு கச்சாசேர்; 

40 பலம் = ஒரு வீசை ; 16 பலம் = ஒரு நாழி 

========================================================================================================



முடிவில்லாத அன்பு...!


கான்ஃபிடன்ஸ் பாஸ்...    கான்ஃபிடன்ஸ்...! 



அப்புறம் என்ன!


60களில் எஸ் எஸ் தென்னரசு எப்படி இருக்கிறார் பாருங்கள்.  இவர் மகன்தான் தற்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு என்று தெரியும் என்று நினைக்கிறேன்.


மதன்...   மதன்...

ஒலிம்பிக் டாக்டரும்....

ஒன்றும் புரியாத டாக்டரும்...!  

"ஒண்ணு ததேறாத டாக்டர்" அடுத்த வாரம்..!
=========================================================================================================


68 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோருக்கும் வரும் எல்லா நாட்களும்
    ஆரோக்கியமாக இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம். வாங்க வல்லிம்மா... வணக்கம்.

      நீக்கு
  2. அன்பு ஸ்ரீராம் 4001 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். முதலில்
    மதன் ஜோக்ஸ்க்கு சிரித்து வ்ட்டு வருகிறேன். ஹாஹ்ஹாஹஹஹஹ்ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... ஹா... பதிவு எண் சொல்லி வாழ்த்தி இருப்பது புன்னகைக்க வைக்கிறது அம்மா.

      நீக்கு
  3. கோபுலு சார். அடுத்தது. என்ன ஒரு சுவை அவரது படத்தில். வசனமே வேண்டாம்.
    படமே போதும். :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தின் சில ஜோக்ஸை இப்போது பார்க்கும்போது சிரிப்பே வராதவ வகையும் இருக்கிறது அம்மா.  ஒரு தகவல் போல படித்து விட்டு நகர்வோம்!

      நீக்கு
  4. உங்கள்,,, ஊபர், ஓலா, பைக் அனுபவங்களைப் பார்த்து
    சிரிப்பு வந்தாலும் சிரிக்க முடியவில்லை.
    2019 லேயே ஒரு நாள் கூட ஊபரின் அலட்சியத்தைத் தாங்க முடியவில்லை. ஹோட்டலிலிருந்து வீட்டுக்குப் போக 45 நினிடம் எடுத்துக் கொண்டார். இன்னோரு நாள் 15
    நிமிடத்திலேயே போய்ச் சேர்த்தார்.

    தினம் இது போல அவஸ்தப் பட்டால், அலுவலகத்தில்
    சேரும்போது உடல் எப்படி எல்லாம் வலிக்குமோ
    என்று வருத்தமாக இருக்கிறது,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  இதோ..  நேற்று மாலை கூட ஏழு நிமிடம் ஏழு நிமிடம் என்று அந்த ஆப் காட்டிக் கொண்டிருக்க அவர் வந்ததது பனிரெண்டு நிமிடங்கள் கழித்து. 

      நீக்கு
  5. கான்ஃபிடென்ஸ், சுப்பர்ப்..அந்தப் படமே சொல்கிறதே!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தப்பிக்கும் வழியாகவும் இருக்கலாம் - நான் எனது கணக்கு டியூஷன் வகுப்பில் செய்தது போல!!!

      படம் சும்மா நான் இணைத்தது!!

      நீக்கு
  6. தலைமுடி நீளமா, கட்டையா.
    யாரோடதாக வேண்டுமானாலும் இருக்கலாம் மா:)
    ஆனாலும் தூய்மையான அன்புதான்.
    கவிதை மிக அருமை.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா..  சும்மா ஜாலிக்காக எழுதியதும்மா...

      நீக்கு
  7. 40 பலம் = ஒரு வீசை ; 16 பலம் = ஒரு நாழி
    காய்கறி, வெண்ணெய் எல்லாம் இப்படித்தான் வாங்குவோம்.

    இந்தக் கணக்கை நான் போட்டிருக்கிறேன்.
    இதை மெட்ரிக் வரும் முன் பயன்படுத்தி இருக்கிறோம்.
    மற்றதெல்லாம் வெள்ளி, தங்கம்
    வாங்கப் பயன் படுத்தப்படும்.

    மிக நல்ல தகவல் மா ஸ்ரீராம்.
    பக்கா சேர் கணக்கும் பயன் படுத்தியது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ... ஆனால் இதெல்லாம் நான் கேள்விப்படாத வார்த்தைகள்..

      நீக்கு
    2. ஸ்ரீராம்...ஒரு படப் பாடலில் பலம் முந்திரி என்றெல்லாம் வருமே.. அதுகூடவா நினைவில்லை (சிவகுமார் படம்)

      நீக்கு
    3. ​பதிவில் அதைத்தானே நெல்லை குறிப்பிட்டிருக்கிறேன்!!

      நீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூழட்டும் இறையருள் எங்கெங்கும்.. வாங்க துரை செல்வராஜூ சார்... வணக்கம்.​

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. "கொஞ்சம் ஏறி நிக்கட்டுமா?//
    நல்ல கேள்வி! அவரை மிக எரிச்சல் படுத்தி இருக்கும்.

    //பாதி எழுந்து சரிசெய்துகொண்டு மறுபடி ஒரு முறைப்பை வாங்கிக் கொண்டேன்.//
    என்ன செய்வது அவர் முறைப்பை பார்த்தால் முடியுமா? வேலை செய்ய வேண்டுமே ஆபீஸ் போய்.

    இப்படி தினம் பயணம் செய்து வேலைக்கு போக வேண்டும் என்றால் பெரிய கஷ்டம் அல்லவா உங்களுக்கு.



    "முடிவில்லதா அன்பு" தொடரட்டும்.

    "கொஞ்சம் ஓவர்" நல்லா இருக்கிறது.

    மதன் நகைச்சுவை துணுக்கு சிரிக்க வைக்கிறது.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஸ்தான ஆட்டோ ஒருவர் இருக்கிறார்.  அவர் வரமுடியாத நாட்களில் இப்படி!  இது சமீப காலங்களில் அதிகமாக நிகழ்கிறது.  ஏதோ ஒரு காரணம் சொல்லி ஆட்டோக்காரர் அடிக்கடி மட்டம் போட்டு விடுகிறார்.  பெட்ரோல் விலை வேறு ஏறிக்கொண்டே போகிறது..

      நீக்கு
    2. என்ன பயனோ...! விலை ஏற்றுபவர்கள் மறுபடி குறைக்க மாட்டார்கள்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. நன்றி DD.. நேற்று மாலை ஒரு அருமையான வண்டியில் பனைத்தேன்! பல்சர் டூ எக்ஸ் என்று சொன்னார். ரியர் வியூ மிரர் இருந்த டைம் ஸ்டைல், வசதி. அமர்ந்து வந்தது சுகம். அதிர்வு கூட இல்லை!

      நீக்கு
  13. மோட்டோ பயணம் - நான் பயன்படுத்துவதில்லை.

    ஓலாவை விட ஊபர் - கட்டணம் குறைவு என்பது உண்மை. ஆனால் சமீபத்தில், திருச்சியில் ஓலா ஊபர் ஆகிய இரண்டிலும் ஆட்டோ கிடைப்பது கடினமாக இருக்கிறது என்று சொல்கிறார் இல்லத்தரசி. வந்தாலும், காண்பிக்கும் கட்டணத்தினை விட அதிகமாக கேட்கிறார்கள் என்றும் சொன்னார்.

    நகைச்சுவை துணுக்குகள் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போவது ஒரு கஷ்டம்.  அதனாலேயே அதிக காசு கேட்க்கிறார்கள்.  ஆனால் முன்பு 116 ரூபாய் ஆனா இடத்துக்கு இப்போது ஊபரிலேயே 135 வருகிறது.  அதற்கும் மேல் கேட்டால் எப்படி...   நன்றி வெங்கட்.  நான் போகும் ஆட்டோ கேஸ் ஆட்டோ!

      நீக்கு
  14. இனிய காலை வணக்கம்கருத்டு எழுதினால் நீண்டு விடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுங்களேன் ஜி எம் பி ஸார்...   எப்படி இருக்கீங்க...

      நீக்கு
  15. உங்களுடைய போக்குவரத்து பிரச்சினையை 2 விதத்தில் தீர்க்கலாம். ஒன்று நீங்கள் உங்களுடைய வசிப்பிடத்தை அலுவலகத்திற்கு அருகில் மாற்றிக் கொள்ளலாம். அல்லது அலுவலகத்தில் இருந்து கார் வீட்டிற்கு வந்து கூட்டிக்கொண்டு போகும் அளவுக்கு பதவி உயர்வு பெற்று அனுபவிக்கலாம். 

    சேர் போன்ற அளவுகளை   படித்தபோது சிறு பிராயத்தில் (57க்கு முன்) நான் அப்பாவோடு கடைக்கு சென்ற நினைவுகள் வந்தன. 

    அப்போது புழக்கத்தில் இருந்த எடைகள். பலம், சேர், வீசை, மனு, டன். பலம் கணக்கில் காயம், வீசை  கணக்கில் மிளகாய், மனு கணக்கில் விறகு என்று வாங்குவோம்.

     எண்ணெய் செக்கு ஆட்டுமிடத்தில் வாங்குவோம். ஆடம் என்பது ஒரு பெரிய குடம். வீசாடம் கணக்கில் வாங்குவோம் 

    அரிசி பக்காப்படியில் 48 படி ஒரு மூட்டை என்னு வாங்குவோம்.

    தங்கம் குண்டு மணி எடை அல்லது கழஞ்சு சவரன் எடையில் விற்கப்படும். வெள்ளி ரூபாய் எடை (தோலா, 10கிராம்) எடையில் வாங்கப்படும்.  

    இன்று காலையில் இருந்து மின்சாரம் தகராறு. வரும் போகும் என்று விளையாடுகிறது. அதனால் கொஞ்சம் லேட். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருகில் என்ந, அலுவலக வளாகதிற்குள்ளேயே இருந்தவர் தான் ஸ்ரீமான் ஸ்ரீராம் அவர்கள்!

      நீக்கு
    2. வாங்க ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...  அந்த அளவைகள் உங்கள் பழைய நினைவுகளைத் தூண்டி விட்டன போலும்.  நான் அவைகளை புழக்கத்திலேயே பார்த்ததில்லை!  அலுவலகப் பிரச்னை இப்போதைக்குத் தீரும் பிரச்னை இல்லை!

      நீக்கு
  16. தோல், பலம், வீசை, மணங்கு - என்றெல்லாம் அளவு முறைகள் இருந்தபோது எல்லாவற்றிலும் நீதியும் நியாயமும் நேர்மையும் நிறைந்திருந்தன..

    எடைக்கும் மேலாக கொசுறு என்று கொஞ்சம் கிடைக்கும் பாருங்கள் - அதுதான் அன்பின் அளவீடு...

    இப்போது அளவும் அன்பும் மாறிப் போய் விட்டன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் அளவே சரியாய் இருப்பதில்லை.  அப்புறம் கொசுறுக்கு எங்கே போக...  இன்னமும் மாறாதிருப்பது காய்கறி வாங்கினால் கொஞ்சம் கறிவேப்பிலை தருவது!

      நீக்கு
  17. டாக்டர்கள் பல சமயங்களில்..இப்படித்தான்.. ஒன்னும் புரியாமலேயே மருந்து எழுதிக்கொடுத்திடுறாங்கன்னு நினைக்கிறேன்.
    எனக்கும் இது புரில -ன்னு மதனோட டாக்டர்தான் மனந்தொறந்து சொல்வாரு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிற்காலங்களில் கிரேஸியின் டாக்டர்களும் அபப்டிக் சொல்லி இருக்கிறார்கள்.

      நீக்கு
  18. பெங்களூரில் ஊபர், ஒலாவைவிட கொஞ்சம் காஸ்ட்லீ. ஆனால் நிச்சயம் வந்து விடுவார்கள். ஓலா புக் பண்ணி விட்டு காத்திருப்போம், ட்ரிப் கான்சல்ட் என்று மெசேஜ் வரும்.

    பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டு உழைக்கிறீர்கள்.

    தூய்மையான அன்பு தொடரட்டும் என்று சொல்ல முடியவில்லை. ஆனாலும் கவிதை நன்று.

    மதன் ஜோக்ஸ் அட்டகாசம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா..   ஆனால் முன்காலத்தில் இப்படி ஊபர், ஓலா எல்லாம் இல்லாதிருந்ததற்கு இது தேவலாம்!  நடுவில் உங்கள் நண்பன் ஆட்டோ என்று ஒரு சேவை தொடங்கினார்கள்..   ஊபர் ஓலா வெள்ளத்தில் அது காணாமல் போனது.

      நீக்கு
  19. நேற்றைய கேள்விகளுக்கு இன்று விடை தருகிறேன்.
    1.நான் நன்றி கூற விரும்பும் இரண்டு நபர்கள் என் மூத்த சகோதரியும், என் கணவரும்.
    2. சமீபத்தில் கிடைத்த சந்தோஷம் பேத்தியின் வருகை.
    3. என் தனிப்பட்ட திறமை... ஹிஹி! போங்க ஸார்!
    4. என் வீட்டு குழந்தைகள் என்னிடம் கேட்ட கேள்விகளைப் பற்றி ஒரு பதிவே போட்டிருக்கிறேன்.
    5. இவரா இதைச் செய்தார் என்று என்னை வியக்க வைத்தவர் என் சகோதரர். அவர் மூன்று வருடங்களுக்கு முன் எங்கள் சொந்த ஊரான கண்டமங்கலத்தில் சௌபாக்கியசாயி கோவில் என்று ஒரு கோவில் காட்டியிருக்கிறார். அதில் ஷீர்டி சாய் பாபா, புட்டபர்த்தி சாய் பாபா இருவரின் விக்கிரங்கங்களும் பிரதிஷ்டை பண்ணப் பட்டிருக்கிறன்றன. இந்தியாவிலேயே இப்படிப்பட்ட அமைப்பில் இதுதான் முதல் கோவில். அது நிர்வகிக்கப்படும் நேர்த்தியைப் பார்த்த தமிழக இந்து சமய அறநிலையத் துறை அதிகார ஒருவர், அருகிலிருக்கும் வேறொரு கோவிலின் நிர்வாக கமிட்டியில் என் சகோதரரை சேர்க்க பரிந்துரை செய்திருக்கிறார். இறையருளால்தான் இவை நடந்தன என்றாலும், என் சகோதரரின் சாதனை பிரமிப்பூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    தங்களது அலுவலக பயண அனுபவம் கஸ்டமானதுதான்.ஆட்டோ என்றாலும் பரவாயில்லை. இந்த வண்டியில் நீண்ட தூரங்கள் பயணிப்பது மிகவும் சிரமத்தை தரக்கூடியது. இப்போது தொற்று வந்ததிலிருந்து இந்த மாதிரி ஊபர், ஒலாவில் நாங்கள் எங்கேயும் பயணபடவில்லை. அதற்கு முன் இதில் சில வரும் வராது கேஸ்ஸாக போயுள்ளது என சில தடவைகள் பையன் சொல்லியிருக்கிறார்.

    இந்த கணக்கு( வீசை, பலம், நாழி ) அம்மா, பாட்டி அடிக்கடி தங்கள் நினைவுகளாக சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.

    தூய்மையான அன்புக் கவிதை அருமை.

    டாக்டர் ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. ஜோக்ஸ் ரசனை.
    நேற்றைய கேள்வி களில் சிலவற்றின் பதில் முதல் நன்றி என்னை நன்றாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு .
    அடுத்து எனது தந்தை தாயாருக்கு.

    அண்மையில் கிடைத்த மகிழ்ச்சி 'இமய குருவின் இதய சீடன் ஸ்ரீ எம் ' என்ற புத்தகம் படிக்க கிடைத்தது.

    வீனசை அளவுகள் எனக்குத் தெரியாது அம்மா சொல்லி இருக்கிறார் .
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி. நீங்கள் சொல்லி இருக்கும் புத்தகம் பற்றி முன்னர் நெல்லை படித்ததன் பகிர்வாக இங்கு சொல்லி இருந்தார்.

      நீக்கு
  22. பைக் சவாரி பயணஅனுபவங்கள் இப்போதுதான் விரிவாக கேள்வி படுகின்றேன். நான் சென்னையில் வேலை பார்த்தது போது எனக்கு பைக் ஒட்ட தெரியாததால் எனக்கு பைக் டிரைவர் ஒருவர் இருந்தார் அதாவது கம்பெனீயில் உள்ள ஒருவர் கம்பெனி பைக்கில் நான் செல்ல வேண்டிய இடங்களுக்கு கூட்டி செல்வார் கம்பெணி ஆட்கள் பிஸியாக இருந்தால் ஆட்டோவில் பயணம் செய்வேன் ஒரு நாள் என்னை அழைத்து சென்றவர் வேலை முடித்து திரும்பும் சமயத்தில் நான் பைக்கில் ஏஈ அமர்ந்துவிட்டேன் என்று கருதி நான் ஏறுவதற்கு முன்னே ஒட்டி சென்றுவிட்டார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அப்போவுமே நீங்க ஈர்க்குச்சி சைஸ் தானா?

      நீக்கு
    2. ஹா..  ஹா..  ஹா...  இது மாதிரி காட்சிகள் திரைபபடங்களில் நகைச்சுவையாகப் பார்த்திருக்கிறேன்.  குறிப்பாக ஆபிஸ் சகோதரர்கள் படத்தில் ஜெய்சங்கரும், சோவும்!  நன்றி மதுரை.

      நீக்கு
  23. ரொம்பவே கஷ்டப்பட்டு அலுவலகம் போறீங்க போல! இந்த வாடகை பைக், ஸ்கூட்டர் எல்லாம் வடக்கே பல வருடங்களாக உண்டு. இந்த அளவுக்குக் கஷ்டம் இருக்காதுனு நினைக்கிறேன். ஆனாலும் ஊபர், ஓலா என்றெல்லாம் போவதில்லை. இங்கே ரெட் டாக்ஸி தான் அதிகம் பயன்படுத்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா... எப்படி இருக்கீங்க... நடக்க ஆரம்பிச்சாச்சா?

      நீக்கு
    2. ஆமாம், இரண்டு நாட்களாக. மருத்துவர் பத்து நிமிஷம் நடக்க ஆரம்பிச்சு மெல்ல மெல்லக் கூட்டிக்கொள்ளச் சொல்லி இருக்கார். நடை பழகுகிறேன். :)

      நீக்கு
    3. வெரிகுட்..  கேட்கவே சந்தோஷமா இருக்கு.

      நீக்கு
  24. மதன் ஜோக்ஸ் எல்லாம் ஏற்கெனவே பார்த்தவை. உங்க அன்பு முடிவில்லாதது எனத் தெரியுமே! நல்ல பதிவு. ஆனாலும் சுருக்கமா வந்திருக்கு போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  கொஞ்சம் சுருக்கிட்டேன்.  பாதி படிக்காமலே போகுது..  அதனாலே!!!  மதன் ஜோக்ஸ் யாரும் படிக்காமல் / பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.  சும்மா அவற்றை நினைவுபடுத்திக் கொள்ளத்தான்!

      நீக்கு
  25. ஊபர் மோட்டோ பற்றி இப்போதுதான் அறிய வருகிறேன். ஓட்டுநர் சரியாக அமையவில்லை எனில் இதில் சிரமம் சற்று அதிகமே. தோலான் விவரம் சுவாரஸ்யம். மதன் நகைச்சுவை அருமை. நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!