செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

சிறுகதை : மாறுதல் வரும் - பானுமதி வெங்கடேஸ்வரன்

 மாறுதல் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

தான் எழுதி முடித்த கதையை கவரில் போட்டு, ஒட்டுவதற்கு  பெவிஸ்டிக்கை எடுப்பதற்காக அப்பா,அம்மாவின் அறைக்குள் நுழைய கதவைத் திறந்தவன் அங்கு அவன் தம்பி மகேஷின்  கோலத்தைப் பார்த்து அதிர்ந்தான். 

அம்மாவின் புடவை, சட்டையை அணிந்து கொண்டு, கண்களில் மை, நெற்றியில் பொட்டோடு, லிப்ஸ்டிக்கை உதட்டில் பூசிக்கொண்டிருந்த மகேஷ் திடுக்கிட்டு நிற்க,



"டேய்! என்னடா பண்ற?" என்று முரளி அதட்டியதும், அப்படியே தரையில் குறுகி உட்கார்ந்தவன் அழுகிறான் என்பது புரிந்தது. 

"என்..ன ..டா?"

தலையை மெல்ல நிமிர்த்திய மகேஷ், "நான்.. டா இல்ல.. டி.."

"என்னது.?"

"ஆமாம், எனக்கு இது பிடிக்கல, நான் மாறப் போறேன்.."

"ஒதபடுவ.. என்னடா உளர்ர?"  

"நிஜமாத்தான் சொல்றேன், இப்போ இல்ல, ரொம்ப நாளாவே எனக்கு பொம்பளையா வாழத்தான் பிடிக்கும். இன்னிக்கு உனக்கு தெரிஞ்ச விஷயம் இன்னும் கொஞ்ச நாளில் அப்பா,அம்மாவுக்கும் தெரியும், அவங்களால இதை நிச்சயமா ஏத்துக்க முடியாது.."என்று சற்று இடைவெளி விட்டவன்,தொடர்ந்து,"நான் வீட்டை விட்டு போயிடுறேன்.." 

"சீ சீ அதெல்லாம் வேண்டாம். நான் அப்பா அம்மாட்ட பேசறேன். நீ டிரஸ் மாத்திக்கோ.. இல்ல வேண்டாம் இதே ட்ரெஸ்ஸில் இரு.." என்றதும் மகேஷ் நம்ப முடியாமல் அண்ணனைப் பார்த்தான். 

அவனை அங்கேயே விட்டு விட்டு வாசல் படியில் வந்து அமர்ந்த முரளியின் மனதில் ஆற்றாமை, வருத்தம், துக்கம் என்று கலவையாய் உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன. 

இந்த மாதிரி விபரீதங்கள் வெளியே எங்கோ, யாருக்கோ நடக்கும் பொழுது அது நம்மை பாதிக்கவே பாதிக்காது, அக்கம் பக்கத்தில் நடக்கும் பொழுது ஐயோ பாவம் என்ற உணர்வு வரும், நம் வீட்டிலேயே நடக்கும் பொழுதுதான் அதன் முழு வீச்சு புரிகிறது. 

இதை எப்படி அம்மா, அப்பாவிடம் சொல்வது? அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?  

சிறு வயதிலிருந்தே மகேஷ் ஆண்களை விட பெண்களோடுதான்  அதிகம் விளையாடுவான். அவன் அம்மா முரளிக்குப்பிறகு ஒரு பெண் குழந்தையை எதிர்பார்த்திருக்க, இரண்டாவதாகவும் ஆண்  குழந்தையே பிறந்ததும் ஏமாற்றத்தை மாற்றிக் கொள்ள மகேஷுக்கு பெண் பிள்ளை போல் கவுன் அணிவிப்பது, தலை முடியை நீளமாக வளர்த்து பூச்சூடி அழகு பார்ப்பாள். அவள் கணவன், "ஆம்பிளை பையனுக்கு இப்படி பொம்பளை மாதிரி டிரஸ் பண்ணாத.." என்று கோபிப்பார். ஆனாலும் அம்மா தனக்கு அடுத்து ஒரு பெண் குழந்தை பிறக்கும் வரை நிறுத்தவில்லை. 

மகேஷ் தங்கைக்கு சரியாக பாண்டி, கல்லாங்காய், பல்லாங்குழி என்று விளையாடுவான். அவள் மருதாணி வைத்துக் கொள்ளும் பொழுது இவனும் அவளைப்போலவே விரல்களுக்கு குப்பியும் வைத்துக் கொள்வான்.  முரளி கேலி செய்வதை பொருட்படுத்த மாட்டான். ஏன் கோலம் கூட அழகாக போடுவான். ஆனால் அப்பா  பார்த்தால் திட்டுவார் என்பதால் அவர் பார்க்காத பொழுது கோலம் போடுவான். 

இதையெல்லாம் ஏதோ அவனுக்கு அதில் இன்ட்ரெஸ்ட் என்று விட்டு விட்டோமோ? என்று என்று இப்போது முரளிக்கு தோன்றியது. இப்போது என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். உடனடியாக அப்பா,அம்மாவிடம் சொல்ல வேண்டும். 

எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டே இருக்கும் பொழுது வெளியே சென்றிருந்த அம்மாவும், அப்பாவும் வாசல் கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.

"ஏண்டா வாசலில் உட்கார்ந்திருக்க?"

"சும்மாதான் காத்துக்காக"

"ஏன் பவர் கட்டா?"

"பவரெல்லாம் இருக்கு. சும்மாதான் கொஞ்சம் பிரெஷ் ஏர் குடிக்கலாமேன்னுதான்"

"சரிதான்" என்றபடியே உள்ளே நுழைந்தவர், பாத் ரூம் சென்று கை, கால்களை கழுவி விட்டு வந்து மின் விசிறியை சுழல்விட்டு  சோபாவில் உட்கார்ந்தார்.

புடவையை மாற்றிக் கொள்ள தன் அறைக்குள் சென்ற அம்மா, அங்கு இருந்த மகேஷைப் பார்த்து விட்டு, "என்னடா இது வேஷம்? காலேஜுல ஏதாவது  ஃபான்சி டிரஸ் காம்படீஷனா? சேலையெல்லாம் கட்டிட்டு உட்கார்ந்திருக்க?" என்று மகேஷிடம் கேட்கும் குரல் கேட்டது. 

முரளி ஹாலில் அப்பாவிடம்,"அப்பா, மகேஷுக்கு ஒரு பிராப்ளம் இருக்குப்பா.." என்றபடியே வாசல் கதவை சாத்தினான்.

"என்ன பிராப்லம்? எதுக்கு கதவை மூடற? "

"கொஞ்சம் பேசணும், மகேஷ் இங்க வா, அம்மா நீயும் வாம்மா, அப்புறம் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிக்கலாம்"

சேலை உடுத்தி வந்து நின்ற மகேஷைப் பார்த்ததும் அவருக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. மகேஷின் கரத்தைப் பற்றிக் கொண்ட முரளி," அப்பா, அவன்... ஹி.... இஸ் ஷி.." 

அவன் சொன்ன வார்த்தைக்கு நேர் அர்த்தம் புரிந்தாலும், அது முழுமையாக அர்த்தமாக சில வினாடிகள் பிடித்தன. புரிந்ததும், அது தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் மகேஷை வெறித்தார். 

அம்மா நம்ப முடியாமல்," என்னடா சொல்ற?, இதெல்லாம் நம்ம குடும்பத்துல கிடையாதே? எங்கேருந்து வந்தது? ஐயோ! இப்படி ஒரு விஷயம் நம்ம வீட்டுல இருக்குனு வெளில தெரிஞ்சா மானம் போய்டுமே.." 

"ஆமா, இப்போ அழு, ஆம்பிளை பையனுக்கு பொம்பள மாதிரி டிரஸ் பண்ணாத, பண்ணாதனு எவ்ளோ தடவ சொன்னேன்? இப்போ அனுபவி."

"அப்பா, ப்ளீஸ்.. ஒருத்தரை ஒருத்தர் ப்ளேம் பண்ணிக்கற நேரம் இது இல்ல. இனிமே என்ன பண்ணணும்னுதான் யோசிக்கணும்." 

"என்ன பண்ணறது? இப்படி ஒரு ஆள வீட்டில் வெச்சுகிட்டு தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா?"

" என்னால யாருக்கும் கஷ்டம் வேண்டாம், நான் வீட்டை விட்டு போயிடுறேன்"

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..நீ பேசாம இரு"

"இந்த மாதிரி ஒரு ரெண்டும் கெட்டான் நம்ம வீட்டுல இருக்குனு தெரிஞ்சா நாளைக்கு சித்ராவை யாரு கட்டுவாங்க? உனக்கு யாரு பொண்ணு கொடுப்பாங்க? நம்ம சொந்தக்காரங்க நம்மளை ஒதுக்கி வெச்சாலும் ஆச்சர்யமில்லை." 

"ஒதுக்கி வெச்சா வெச்சுக்கட்டும்.. இந்த உண்மை தெரிஞ்சு நம்மளோடு சம்பந்தம் பண்ணிக்கிறவங்க கண்டிப்பா இருப்பாங்க."

"ஐயோ! நம்ம குடும்பத்துல யாரும் இப்படி கிடையாதே? நமக்கு ஏன் இப்படி நடக்கணும்?" அம்மா மறுபடியும் அதே பல்லவியை பாடினாள்.

"அம்மா, பொலம்ப ஆரம்பிச்சுடாத, நல்லா இருக்குற எத்தனையோ பேருக்கு அங்கஹீனமாவும், புத்தி ஸ்வாதீனமில்லாமலும் குழந்தை பிறக்கலையா? அந்த மாதிரிதான் இதுவும் இயற்கையில் நடக்குற பிழை. அது நமக்கு ஏன் நடக்குதுன்னு கேட்டால் யாரு பதில் சொல்ல முடியும்? வந்தாச்சு, இனிமே என்ன பண்ணனும்னு யோசிக்கலாம்" 

"என்னத்த பண்ணித் தொலைக்கிறது?"

" முதலில் இந்த மாதிரி பேசறத நிறுத்தணும். நல்ல வேலையாக அவனுக்கு இந்த வருஷத்தோட படிப்பு முடியும். லெட் ஹிம் கம்ப்ளீட். இப்போல்லாம் மூன்றாம் பாலினத்தவருக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுவதில்லை.  நாம் ஒரு நல்ல டாக்டரை கன்சல்ட் பண்ணலாம்".

"என் தலையெழுத்து.."என்று தலையில் அடித்துக் கொண்டார்.  " எப்படிடா இந்த மாதிரி? உங்கம்மா சின்ன வயசுல அவனுக்கு பெண்  கொழந்த மாதிரி அலங்காரம் பண்ணி பார்த்ததால் வந்து பாதிப்பா?"

"அதெல்லாம் கிடையாதுப்பா, எனக்கும் சரியாய் தெரியாது, அதனாலதான் ஒரு டாக்டரை கன்சல்ட் பண்ணலாம்னு சொல்றேன்". 

"அவனை முதல்ல டிரஸ் மாத்தச் சொல்லு, அவனை பார்த்தாலே என்னவோ போல் இருக்கு" மகேஷை பார்க்காமல் முரளியிடம் அவர் கூற, 

"ஏம்ப்பா, என்ன பாக்கவே உங்களுக்கு பிடிக்கலையா?" என்று மகேஷ் ஏதோ சொல்லத் தொடங்க, முரளி அவனுக்கு பேச வேண்டாம் என்று ஜாடை காட்டி அவனை உள்ளே அனுப்பினான். 

"அப்பா நம்மதான் அவனுக்கு இப்போ சப்போர்ட் பண்ணனும், இல்லனா, அவன் எங்காவது சிக்னலில் பிச்சை எடுப்பான், அல்லது கேவலமான தொழிலுக்கு போவான், அது பரவாயில்லையா?'' 

அப்பா பதில் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டார், அவர் கண்களிலிருந்து கரகரவென்று நீர் வழிந்தது. இது வரை அப்பாவின் கண்களில் கண்ணீரை பார்த்திராத முரளிக்கும் அடக்க முடியாமல் கண்ணீர் வழிந்தது. "நாம் அவனுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்." என்றபடியே கதவைத் திறந்தான். காற்று உள்ளே நுழைந்தது.  

*************************************         ******************************************************

43 கருத்துகள்:

  1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் இறைவன் அருளால்
    நலமுடன் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... வணக்கம். நலன்கள் அனைவருக்கும் கிட்ட இறைவன் துணை புரியட்டும்.

      நீக்கு
  2. அன்பின் பானு வெங்கடேஸ்வரனின் வித்தியாசமான
    கதை. கேஜி ஜி அவர்களின் படப்
    பொருத்தம் அட்டகாசமாகப் பதிவாகிறது.

    இந்த மூன்றாம் பால் விஷயம் பேசப்பட வேண்டிய
    ஒன்று.
    அருமையாக சொற்களில் பதிவாகி இருக்கிறது.

    தம்பியின் சங்கடத்தைப் புரிந்து கொண்ட அண்ணன்
    சிறப்பும், அது தம்பிக்கு ஆதரவாக
    மாறுவதும் வெகு சிறப்பு.

    ஒரு இருபது வருடங்களுக்கு முன்
    கேலிக்கூத்தாகி இருக்கும். இப்போது உலகம்
    முன்னேறி இருக்கிறது.
    இன்னும் அவர்களுக்கு ஆதரவு பெருக வேண்டும்.

    வாழ்த்துகளும் பாராட்டுகளும் அன்பு பானுமா.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. நல்ல கதை விழிப்புணர்வு கதை. நன்றாக எழுதி இருக்கிறார் பானுமதி. இந்த மாதிரி குழந்தைகளை பெற்றோர்கள் முதலில் அரவணைக்க வேண்டும், அப்புறம் சமூகம் ஆதரிக்க வேண்டும். கதையில் அண்ணன் உணர்ந்து கொண்டு தன் பெற்றோர்களுக்கு எடுத்து சொல்லியது நல்லது.
    கதைக்கு பொருத்தமாக படம் கெளதமன் சார் வரைந்து இருக்கிறார்.

    விகடனில் என்று நினைக்கிறேன் சு. சமுத்திரம் அவர்கள் திருநங்கை பற்றி தொடர் கதை எழுதி இருந்தார் . படிக்கவே கஷ்டமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கி.ரா ஐயா கூட எழுதி இருக்கிறார் .அவருடைய மாணவர் திருநங்கைகளுடன் பழகி இவரும் அவர்களிடம் கதைகள் கேட்டு எழுதி இருக்கிறார்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. நன்றி கோமதி அக்கா. அழகாக படம் வரைந்திருக்கும் கெளதமன் சாருக்கும் நன்றி.

      நீக்கு
    4. சு.சமுத்திரம் அவர்களின் அந்தத் தொடரைப் படித்துவிட்டு வேதனை தாங்க முடியாமல் நிறுத்தி விட்டேன். ஆனந்த விகடனில் தான் வந்து கொண்டிருந்தது.

      நீக்கு
  6. நல்லதொரு கதை. வீட்டில் ஒருவருக்கேனும் சரியான புரிதல் இருந்தது நல்ல விஷயம். அப்படி இல்லாமல் போகும்பொது தான் வெளியே வந்து பல கடினங்களை அனுபவிக்க நேரிடுகிறது.

    பதிலளிநீக்கு
  7. பானுமதி, பல வாழ்க்கைகளில் முடக்கப்படும் உண்மை... கதையாக! நன்று.

    பதிலளிநீக்கு
  8. @ கோமதி அரசு..

    // விகடனில் என்று நினைக்கிறேன்
    சு.சமுத்திரம் அவர்கள் திருநங்கை பற்றி தொடர் கதை எழுதி இருந்தார்..//

    நானும் படித்திருக்கின்றேன்... மிகவும் துயரமான கதை அது..

    பதிலளிநீக்கு
  9. கதை மனதை அழுத்துகின்றது..
    கதையை நன்றாகச் சொல்லி இருக்கின்றார்கள்..

    பதிலளிநீக்கு
  10. பானும்மா , தங்களின் கதை அருமை. நம் பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற இயற்கையான சில மாற்றங்களோ, குறைகளோ, நாம் தான் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.இது[போன்றதொரு நிகழ்வை கருவாய் வைத்து நானும் கதை எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். சில மாதங்கள் முன்பு, 19 வயதே ஆன எங்களுக்கு தெரிந்தவர்களின் மகன், இது போல மாறுதல் ஏற்பட்டு, பெற்றோரும் கோபப்பட, நண்பர்களும் கொண்டால் செய்ய, தன் உயிரை மாய்த்துக் கொண்டான். என்ன குறை என்றாலும் நம் பிள்ளைகலை நாமே விட்டுவிடலாமா? அப்படி ஒன்றும் குற்றம் புரியவில்லையே அந்த மகன். நல்ல கதைக்கு நன்றி மா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்னலில் பிச்சை எடுக்கும் திருநங்கைகளை பார்க்கும் பொழுது இந்த நிலை எப்போது மாறும் என்று நினைத்துக் கொள்வேன். பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  11. கேலி. கிண்டல் பேசிய நட்பும், சுற்றமும் அவன் உயிரை திருப்பி தர இயலுமா? வாடி நிற்கும் அவன் பெற்றோரை பார்த்தால், துக்கமும், கோபமும் ஒரு சேர வருகின்றது.

    பதிலளிநீக்கு
  12. குழந்தைகளின் தவறு இல்லாதபோது, அவர்களை ஆதரிக்க முடியவில்லை என்றால், அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அருகதை இல்லாதவர்கள். பலர் வீட்டை விட்டு விரட்டப்படுகின்றனர், பொது வெளியில் அவர்கள் வாழ்க்கை சிதறிவிடுகிறது.

    நல்ல கருவை எடுத்துக்கொண்டுள்ளார் ஆசிரியர். கேஜிஜி சாரும், ஒவ்வொரு வாரமும் முனைந்து ஓவியங்கள் சேர்த்து அழகூட்டுகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளின் தவறு இல்லாதபோது, அவர்களை ஆதரிக்க முடியவில்லை என்றால், அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அருகதை இல்லாதவர்கள்.// உண்மைதான்.

      நீக்கு
  13. //நம் வீட்டிலேயே நடக்கும் பொழுதுதான் அதன் முழு வீச்சு புரிகிறது//

    ஆம் இது மட்டுமல்ல மரணம்கூடத்தான்....

    பதிலளிநீக்கு
  14. கருத்திற்கு நன்றி நெல்லை & கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  15. மனதை வேதனைப் படுத்திய கதை. ஆனாலும் இது போல் நடப்பது புதிதும் இல்லையே! பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் தானே தெருக்களில் சுற்றித் திரிந்து பல்வேறு சிரமங்கள் பட்டுப் பிச்சை எடுத்துப் பிழைக்கின்றனர். அது மாற வேண்டுமானால் இப்படி ஓர் அண்ணன், அப்பா, அம்மா இருக்க வேண்டும். நல்லபடியாக ரமேஷின் வாழ்க்கை மாறிப் புதிய உலகில் அவன் பிரவேசிக்க வழி வகுக்கும் அண்ணனுக்கு வாழ்த்துகள். முக்கியமான அம்சம் புரிதல். அது இங்கே காணக்கிடைத்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவரமான விமர்சனத்திற்கு நன்றி.  //நல்லபடியாக ரமேஷின் வாழ்க்கை மாறி// ரமேஷ் இல்லை, மகேஷ்.

      நீக்கு
  16. சில நாட்கள் முன்னர் ஒரு சகோதரியும் இதே கருவில் எழுதி இருந்தார். அதிலும் குடும்பத்தார் ஏற்றுக் கொண்டு திருமணமும் செய்து வைக்கப் போவதாய்ச் சொல்லப்பட்டிருந்தது. இம்மாதிரி நுட்பமான கருவில் உள்ளவற்றை எழுதுவது என்பது சர்க்கஸ் வித்தை செய்பவர் கயிற்றில் பிடிமானம் இல்லாமல் நடப்பது போன்றது. மிகவும் சரளமாகவும், அதிகமான உணர்ச்சி வசப்பட்ட சம்பவங்கள் இல்லாமலும் கோர்வையாகவும் கதையைக் கொண்டு சென்றிருக்கும் பானுமதிக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சர்க்கஸ் வித்தை - சரியான சொல்!

      நீக்கு
    2. மீள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா அக்கா.

      நீக்கு
  17. கேஜிஜி சாரின் படம் கதைக்கு உயிரூட்டி உள்ளது.

    பதிலளிநீக்கு
  18. அழகாகவும் அளவோடும் இலக்கியம் எழுதியிருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  19. கதையை அழகாக கொண்டு சென்றுள்ளார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!