சனி, 25 செப்டம்பர், 2021

வனப் பிரசவம்

 ஆலங்குடியைச் சேர்ந்த முதியவர் இறந்தவர்களின் உடல்களை சொந்த காரில் கொண்டு செல்வதில் 50 ஆண்டுகளாக சேவையாற்றி வருவதை மாவட்ட எஸ்.பி. நிஷாபார்த்திபன் பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் கணேசன் 71. இவர் சொந்தமாக 515 என்ற பெயரில் அம்பாசிடர் கார் வைத்துள்ளார். இவர் இந்த பகுதியில் விபத்தில் காயமடைந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை தனது காரில் கொண்டு சென்று மருத்துவமனைக்கு சேர்ப்பது
அங்கிருந்து அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்வது என கடந்த 50 ஆண்டு காலமாக இதை சேவையாக செய்து வருகிறார்.





இதனால் இந்த பகுதியில் உள்ள போலீசார் மற்றும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற நேரங்களில் தங்களுக்கு உதவிக்கு இவரையே அழைப்பது உண்டு.இவர் யாரிடமும் பணம் கேட்பது கிடையாது. ஆனால் அவர்களாக தங்களால் முடிந்த தொகையை கொடுப்பதை வாங்கிக் கொள்வார்.

மேலும் இவர் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சேவையை தொடர்ந்து செய்து வந்த நிலையில் அவரை பாராட்டி கவுரவிக்க மாவட்ட போலீசார் முடிவு செய்தனர். அவரை நேற்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு வரவழைத்து எஸ்.பி. நிஷாபார்த்திபன் அவரை பாராட்டி கேடயம் வழங்கினார். அவரும் நன்றி தெரிவித்து தனது தன்னலமற்ற சேவை குறித்து பேசினார்.

முதியவர் கணேசன் இதுவரை விபத்து மற்றும் பல்வேறு சம்பவங்களில் காயமடைந்த மற்றும் இறந்து போனவர்களின் 6500 உடல்களை தனது காரில் மருத்துவமனைக்கும் உரியவர்களின் வீட்டிற்கும் கொண்டு சேர்த்துள்ளார்.இவருக்கு பத்மபூஷண் விருது கிடைக்க பரிந்துரை செய்ய மாவட்ட போலீசார் சார்பில் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தன்னலமற்ற மக்கள் சேவையாற்றும் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.


================================================================================================================================


மேட்டுப்பாளையம்; வனப்பகுதியில் ஆம்புலன்சில் பிரசவம் நடந்தது. '108' ஊழியர்கள் சமயோசிதமாக செயல்பட்டு, குழந்தையை பரிசலிலும், தாயை மற்றொரு ஆம்புலன்சிலும் கொண்டு சென்று, பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.



சிறுமுகை லிங்காபுரம் அருகே உள்ள, காந்தவயல் மேலுாரை சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி தீபா, 27. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று காலை, 6:30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக, '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.காந்தை ஆற்றில் தண்ணீர் தேங்கி உள்ளதால், கர்ப்பிணி பெண்ணை, பரிசலில் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகள், மேலுாருக்கு சென்றன. ஒரு ஆம்புலன்ஸ் காந்தை ஆற்றின் அருகே நிறுத்தப்பட்டது. மற்றொரு ஆம்புலன்ஸ், லிங்காபுரத்திலிருந்து, வனப்பகுதி சாலை வழியாக, காந்தவயல் மேலுாருக்கு சென்றது. கர்ப்பிணி பெண் தீபா, ஆம்புலன்சில் ஏறியதும், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, வனப்பகுதியில் பல கி.மீ.,சுற்றிச் செல்ல தாமதமாகும் என்பதால், குழந்தையை பரிசலில் ஏற்றி, ஆற்றின் மறு கரையில் இருந்த, மற்றொரு ஆம்புலன்சில் சேர்த்தனர். அந்த ஆம்புலன்சில், குழந்தை, சிறுமுகை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அதேசமயத்தில், தாய் தீபா, ஆம்புலன்ஸ் வாயிலாக, வனப்பகுதியில் சுற்றி அழைத்துச் செல்லப்பட்டு, சிறுமுகை சுகாதார நிலையத்தில், அனுமதிக்கப்பட்டார்.அங்கு, குழந்தைக்கும், தாய்க்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து,'108' ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் நந்தகோபால் கூறுகையில், "கடந்த ஆண்டு இதே போன்று காந்தை ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தபோது, வனப்பகுதிக்குள், ஆம்புலன்சை ஓட்டிச்சென்று கர்ப்பிணி பெண்ணை மிகுந்த சிரமத்திற்கு இடையே அழைத்து வந்தோம். அந்த அனுபவம் இருந்ததால், இந்த முறை இரண்டு ஆம்புலன்ஸ்களை எடுத்துச் சென்றோம். ஒன்றை ஆற்றின் மறுகரையில் நிறுத்தியும், மற்றொன்றை வனப்பகுதிக்குள் ஓட்டிச் சென்றும் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டோம். தாயையும், சேயையும் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தோம்" என்றார்.

முன்னெச்சரிக்கையாக யோசித்து, இரு ஆம்புலன்களைப் பயன்படுத்தி, தாயையும், சேயையும் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை, மலைவாழ் மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

===============================================================================================================




==================================================================================================================================================



நான் படிச்ச கதை  

 - ஜீவி -


 எலி
அசோகமித்திரன்


'சுருண்டோடும் வாழ்க்கை நதியின் சித்திரத்தை அசோகமித்திரனின் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை துளியில் ஆழ்ந்து விடும் தன்மை உடையவை. அத்துளிகளில், நதியின் பிர்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்.  அவரால் விரிவின் முழுமையைச் சித்தரிக்க இயலாது. விரிவை நுண்மைக்குள் அடக்கித்தான் தர முடியும்' என்பார், இலக்கியத்திலும் இலக்கிய விமர்சனங்களிலும் ஆழ்ந்த புலமை கொண்ட ஜெயமோகன்.


ஆக, அசோகமித்திரனின் எழுத்துக்கள் என்றாலே, நுண்மைக்குள் அடைக்கப் பட்ட  விரிவை விரித்துப் பார்ப்பது வாசகனின் வேலையாகிப் போகிறது. அப்படி விரித்துப் பார்க்க முடிந்தவர்க்கே அவர் கதைகள் நல்ல அனுபவம் ஆகும்.  அந்த விரித்தலும் அந்தந்த வாசகரின் வாசிப்பு அனுபவத்திலேயே இருக்க வேண்டியதும் தவிர்க்க முடியாது போகிறது..  நுண்மையின் விரித்தல் கதாசிரியர் நினைத்தே பார்க்காத தளங்களிலும் உலாவலாம். அந்த நேரங்களிலெல்லாம் நுண்மைக்குள் ஒடுங்கி விட்ட ஆசிரியரின் சிந்தனை, விரித்தலில் சம்பந்தப்படாத ஒதுங்குதலாகி எழுதியவரும் வாசித்தவரும் வெவ்வேறு தளங்களில் உலாவ நேரிடலாம். இதுவே வாசிப்பின் தீராத அனுபவம் எனில், எழுதியவர் எழுதியதற்கான நோக்கம் அடிபட்டுப் போகலாம். எழுத்துக்கு நோக்கமே இல்லை என்று வந்து விட்டால் அது குறித்து சொல்வதற்கும் ஒன்றுமில்லை என்றே ஆகிப் போகும்

அமரர் அசோகமித்திரனின் அந்த 'எலி' கதையையே  எடுத்துக் கொள்ளுங்களேன்.

எலியொன்று ரொம்பவும் ரகளை பண்ணிக் கொண்டிருக்கிறது. ராத்திரி ஆச்சுன்னா சமையலறையில் ஒரே துவம்சம்.  அந்த வீட்டில் இரவு பலகாரம் என்றால் பெரும்பாலும் தோசையும் உப்புமாவும் தான்.  எலிப்பொறி உள்கம்பியில் உப்புமாவை எப்படி மாட்டுவது, தோசையை வேண்டுமானால் பொத்தல் போட்டு மாட்டலாமா என்று அசோகமித்திரன் ரொம்பவே தமாஷ் பண்ணுவார்.

'எப்படியாவது அந்த எலியை இன்றைக்குப் பிடித்து விட வேண்டும்' என்று சூளுரைக்கிற மாதிரி மனைவி போட்ட உத்தரவில் உடனே கதை நாயகன் கணேசன், அந்த இரவில் வடை எங்கே கிடைக்கும் என்று தேடித் திரிகிறான்.  பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கும் ஒரு மைதானத்தை அவன் அடைந்த பொழுது எண்ணெய் சட்டியில் வடை போட்டுக் கொண்டிருக்கும் ஒரு தள்ளு வண்டிக்காரனைப் பார்க்கிறான். அவனைச் சுற்றி நிற்கும் கும்பலில் தானும் ஒருவனாகி வடைக்காக கணேசன் வேண்டி நிற்கிறான். அவனானால் நீர்மூழ்கிக் கப்பல் மாதிரி எண்ணையில் மிதக்கும் மிளகாய் பஜ்ஜியே போட்டுக் கொண்டிருக்கிறான்.  கடைசியில் ஒரு வழியாய் அவன் கவனத்தைக் கவர்ந்து அத்தனை நேரம் நின்றதற்கு ஒன்று கேட்டால் அவமானமாக இருக்கும் என்று சுடச்சுட பேப்பரில் பொத்தி இரண்டு வடைகளை வாங்கிக் கொண்டு கணேசன் வீடு திரும்புகிறான்.

யார் முகத்தில் விழித்ததோ தெரியவில்லை, அன்றிரவு அந்த எலி பொறியில் மாட்டிக் கொண்டு விடுகிறது.

கொஞ்ச தூரத்திலிருக்கும் மைதானத்தில் கொண்டு போய் விட்டால்,  அது வழி தெரிந்து திரும்ப கொஞ்ச நாளாவது ஆகும் என்ற தீர்மானத்தில் கணேசன் மைதானத்திற்கு அடுத்த நாள் காலை எலிப் பொறியைத் தூக்கிக் கொண்டு நடக்கிறான். மைதானத்தில் பொறியைத் தரையில் வைத்து மெதுவாக மூடிக் காம்பை கணேசன் அழுத்தினான்.  எலி வெளியே வந்தது.

'அது பெரிய எலியும் இல்லை; மிகச் சிறியதும் இல்லை.  பரந்த வெளி பழக்கமில்லாமல் எலி தாறுமாறாக ஓடுகிறது. அப்பொழுது எங்கிருந்தோ பறந்து வந்த காக்கை ஒன்று எலியை லேசாக ஒரு கொத்து கொத்தி விட்டுப் போனது. எலி மல்லாந்து படுத்து துள்ளியது. பிறகு இன்னும் வேகமாக தத்தித் தத்தி ஓடிற்று. காக்கை ஒரு சுற்று சுற்றி விட்டு வேகமாக கீழிறங்கியது.  எலிக்கு பதுங்க இடம் தெரியவில்லை.  காக்கை அப்படியே எலியைக் கொத்திக் கொண்டு தூக்கிச் சென்று விட்டது. கணேசனுக்கு துக்கமாக இருந்தது.

'இன்னொன்றும் அவன் துக்கத்தை அதிகரிக்கச் செய்தது. பொறியைத் தூக்கிக் கொண்டு வீடு திரும்ப ஆரம்பித்தவன் பொறிக்குள் பார்த்தான்.
அவன் முந்தின இரவு கொக்கியில் மாட்டிய வடை அப்படியே தின்னப்படாமல் இருந்தது'.   --  என்று கதை முடிகிறது.

வ்வளவு தான் கதை. பார்த்தால் இது என்னய்யா பெரிய கதை என்று தான் நினைப்பு ஓடும். சொல்லப் போனால் அசோகமித்திரனின் பாணி கொடி கட்டிப் பறக்கிற அற்புதமான கதை இது.

அந்தக் கடைசி வரி, 'அவன் முந்தின இரவு கொக்கியில் மாட்டிய வடை அப்படியே தின்னப்படாமல் இருந்தது' என்ற ஒற்றை வரி தான் மொத்தக் கதையையுமே தாங்கி நிற்கிற தாங்குபீடம்.  அல்லது இந்த பரிதாபத்தை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வதற்காகவே மொத்த கதையும் என்று கொள்ளலாம்.

எலி அந்த வடையையாவது தின்று விட்டு செத்துப் போயிருந்தால் இவன் மனசு கொஞ்சமாவது சாந்தப்பட்டிருக்கும். செத்தே போய்
விட்ட எலி, சாவதற்கு முன் அந்த வடையைத் தின்றிருந்தால் என்ன, தின்னாவிட்டால் என்ன என்பது விவாதத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கும்.  'அட, செத்தது தான் செத்தது, சனியன் வடையைத் தின்று விட்டு செத்திருக்கலாமிலே' என்பது பரிதாபம்.  அதுவும் நேற்றிரவு மைதானத்தில் கால்கடுக்க நின்று அவ்வளவு பாடுபட்டு அது தின்பதற்காகவே வாங்கி வந்த வடை!

இந்தப் பார்வை தான் ஜெயமோகன் சொன்ன,
'அவரால் விரிவின் முழுமையைச் சித்தரிக்க முடியாது;  விரிவை முழுமைக்குள் அடக்கித் தான் தர முடியும்' என்ற கருத்தின் அர்த்தம்.

'நிறைய நிறைய எழுதி எழுதி எழுத வேண்டுவதை எழுதாமல் விட்டு விட வேண்டும்' என்பார் நகுலன்.  அவர் சொன்னதற்கு சரியான உதாரணம், அசோகமித்திரனின் இந்த 'எலி' கதை.

அசோக மித்திரன் :

இயற்பெயர்  தியாகராஜன்.

அன்றைய ஆனந்த விகடன் ஆசிரியரின் ஜெமினி ஸ்டூடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் கொஞ்ச காலம் பணியாற்றினார். 

அசோக மித்திரனின் எல்லாச் சிறுகதைகளும் ஏதோ ஒருவிதத்தில் 'அட!' என்று அதிசயத்தக்க மாதிரி இருக்கும்.  பெரிய ஒரு சமாச்சாரத்தை துக்குனூண்டு காப்ஸ்யூலில் அடைத்து விடுகிற மாதிரியான எழுத்து அவரது. 'புலிக் கலைஞன்' கதையில் சாவகாசமாக ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்து கதையின் இதய பாகமான முக்கிய இடத்தையும் அந்த ஒவ்வொன்றில் ஒன்றாக முக்கியமில்லாதது மாதிரி சொல்லி அதைக் கடைசியில் முக்கியப்படுத்தும் அசோக மித்திரனின் எழுத்து ஜாலத்தைக் கண்டு பிரமிக்கலாம்.

அமியின் எழுத்து மத்தியதர வர்க்கத்தின் தினசரி வாழ்க்கையின் பிரதியாயிருந்து படம் பிடித்துக் காட்டிய எழுத்து. 

'கணையாழி' பத்திரிகையுடன் நீண்ட தொடர்பு அவருக்கு உண்டு   இவரின் 'அப்பாவின் சிநேகிதர்' என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாதமி 1996-ம் ஆண்டு விருது வழங்கியிருக்கிறது. 

பதினெட்டாவது அட்ச கோடு, தண்ணீர், ஆகாச தாமரை, மானசரோவர், இன்று என்று நினைவுக்கு வருகிற நாவல் ஒவ்வொன்றும் நமக்கு சொந்தமான ஏதோ ஒரு நினைவை மீட்டிச் செல்வதாகவே இருக்கிறது. ஒற்றன் என்ற பயணக் கட்டுரை போலவான அவரது நாவலையும் குறிப்பிட வேண்டும். 

லைப்ரரியில் பக்கம் பக்கமாகத் தேடி நியூஸ் படிக்க அல்லாடுவதிலிருந்து தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பது வரை.... இப்படி படிப்போருக்கு எழுதுகிற எழுத்து அந்நியப்பட்டுப் போய் விடாமல் அன்றாட அவதிகளை, ஆவலாதிகளைத் தொட்டு எழுதுவதே இவரது சிறுகதைகளின் சிறப்பாகத் தெரிகிறது.

இவ்வளவுக்கும் பெரும்பாலும் சிறு பத்திரிகைகளின் வாயிலாகவே இவ்வளவையும் எழுதி சாதித்துக் காட்டியவர் இவர்.  இதுவே மற்ற தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து தனித்துத் தனியாகவும் இவரைக் காட்டுகிறது.

36 கருத்துகள்:

  1. காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது..

    வாழ்க குறள் நெறி...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்.
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைப் போன்ற எழுத்தாளர்கள், நம்முடைய முன்னோடிகளின் எழுத்தாற்றலை பயிலவும் அவர்களின் சிறப்புகளை ஆராய்ந்து அனுபவிக்கவும் முன் வர வேண்டும். எல்லாக் கலைத்துறைகளிலும் கைக்கொள்வது போலவான பயிற்சி இது. நம்மளவில் தெரிந்தது போதும் என்றளவில் ஒதுங்கி விடக் கூடாது. நமக்குள் தானே சந்தோஷிக்கிறோம்? இந்தப் பகுதியில் சுதந்திரமாக மனசுக்குத் தோன்றியதை பகிர்ந்து கொள்ளுங்கள், தம்பீ. அது மேலும் மேலும் நம் ஆற்றலை வளர்க்கும். கேள்விகள் பிறக்கக் பிறக்கத் தான் நல்ல பதில்களும் நம்முள் கிளர்ந்து நம் வளர்ச்சிக்கு வழிகோலும். சொல்லத் தோன்றியது. இந்தப் பகுதியில் ஈடுபாட்டுடன் பங்கு கொள்ள வேண்டுகிறேன், தம்பீ.

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் எல்லா நாட்களும்
    ஆரோக்கியம் ,மன நலம், எல்லாம் பெற்று வாழ இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. தன் காரையே உபயோகித்து உலகில் மிகப் புனிதமான தொண்டை செய்து வரும் திரு கணேசனுக்கு மனம் நிறை நன்றிகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  5. 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்களின் அரிய சேவை

    மிகப் பாராட்டத் தக்கது.
    அதுவும் உலகில் மிகச் சிறந்த குழந்தை பிறப்பையும் ,அதற்குப்
    பின்னால் ஆன பாதுகாப்பையும்
    எவ்வளவு ஆதரவாக நடத்தி உள்ளனர்.

    மலை,காடுகளில் வசிக்கும் பெண்களின்
    உயிர் இனி பாதுகாக்கப் படும் என்ற நிச்சயம்
    மனதுக்கு உற்சாகம் தருகிறது.
    மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  6. திருமதி சிவசங்கரி
    நலமுடன் இருக்க வேண்டும். எத்தனையோ நாவல்களிலும்
    மற்ற நூல்கள் வழியாகவும் நல்லதையே எழுதி வந்தவர்

    தன் வாழ்வையும் சிறக்க அமைத்துக் கொண்டிருக்கிறார்.
    அவர் சேவை நல்ல படியாகத் தொடர வாழ்த்துகள்.

    அவரின் 80 ஆவது பிறந்த நாளுக்கு நம் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. திரு அசோகமித்திரனின்
    சிறு கதை 'எலி' படித்த நினைவு. வாழ்வோடு ஒட்டிச் செல்லும் விஷ்யங்களை
    செய்தியாகக் கதையை எழுதிச் செல்வார்.

    அந்த எழுத்துக்களைப் படிக்கும் பாக்கியம்
    நமக்குக் கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம்.
    மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. நீங்களும் இந்தப் பகுதியில் எழுதுவீர்கள் என்று நான் எதிர்பார்த்திருந்தால், காலை வணக்கத்துடன் முடித்துக் கொண்டு விட்டீர்களே, பா.வெ?
      நீங்களும் இந்தப் பகுதிக்கு எழுதுங்கள்.
      வாசிக்கக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  10. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறேன். சவக் கார். 108 ஆம்புலன்ஸ் செத்துப்போன எலி என்று என்னங்க எல்லாம் ஒரே சாவு கிராக்கியா இருக்கு.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  11. அசோகமித்திரன் கதைகளுக்கும் கி ரா வின் கதைகளுக்கும் ஒரு ஒற்றுமையை நான் காண்கிறேன். அந்த கடைசி வரி எப்போதும் சிந்திக்க வைக்கும். மற்றபடி எழுத்து, சொல்லும் பாணி வேறானவை. ஜீவி சார் அருமையாக விமரிசனம் செய்திருக்கிறார்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆர்வத்துடான தங்கள் தொடர் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஜெஸி சார்.

      தமிழின் உன்னத எழுத்தாளர்களின் எழுத்துச் சிறப்புகள் பற்றி அவற்றை நான் ரசித்ததை ரசித்தவாறே இந்தப் பகுதியில் எழுதலாம் என்றிருக்கிறேன்.

      செவ்வாய்க்கிழமை எபியில் சிறுகதை எழுதுவோருக்கும் அவற்றை புதுப்புதுக் கோணங்களில் வாசகர் ரசிப்பதற்கும் இந்தப் பகுதி உதவலாம் என்ற இன்னொரு பக்க எண்ணமும் எனக்குண்டு.

      ஆக்கபூர்வமான எல்லா விஷயங்களுக்கும்
      தன் முழு ஒத்துழைப்பையும் நல்கிடும் எபிக்கு நன்றி சொல்லிட வேண்டும்.
      நன்றி, எபி..!!

      நீக்கு
  12. இந்த எலிக்கதையை படித்தபோது தில்லை அகத்து எழுதிய எலிக்கதையும் ஞாபகம் வந்தது. 

    மர்மம் – துப்பறிவாளினி – செல்லம்



    https://thillaiakathuchronicles.blogspot.com/2021/06/


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செந்ற செவ்வாய் எபியில் ஷ்யாமளா வெங்கட்ராமன் அவர்கள் அமியின் இதே பாணியில் கதை நாயகி செளந்தர்யாவின் கணவனின் சில நச்சரிப்புகளை நம் யூகத்திற்கு விட்டது என் நினைவுக்கு வந்தது.

      நீக்கு
  13. செய்திகள் அருமை...

    கதை பற்றிய விமர்சனம் நன்று...

    பதிலளிநீக்கு
  14. தன்னலமற்ற மக்கள் சேவையாற்றும் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.//

    தன்னலமற்ற சேவையை வணங்கி பாராட்டுவோம்.


    //இரு ஆம்புலன்களைப் பயன்படுத்தி, தாயையும், சேயையும் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை, மலைவாழ் மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.//

    நெகிழ்ச்சி. பாராட்டுகள் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு.

    பதிலளிநீக்கு
  15. சிவசங்கரி அவர்களின் தொண்டு வாழ்க. அவர் கனவுகள் அனைத்தும் நனவாகும்.
    வாழ்த்துக்கள் . அமைதியான நதியாக ஓடி கொண்டு இருங்கள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  16. சார் பகிர்ந்த அசோகமித்திரன் அவர்கள் எலிக் கதை முன்பு ஜீவி சார் வலைத்தளத்தில்
    படித்த நினைவு இருக்கிறது.
    விமர்சனம் அருமை.

    பதிலளிநீக்கு
  17. கோமதிம்மா, 65 வருடங்களுக்கு முன்பு நான் ஹைஸ்கூலில் படிக்கும் பொழுது தமிழ் பாடத்தில் செய்யுள்களுக்கு 'நயம் பாராட்டுதல்' என்ற பகுதி உண்டு. லேசாக விமர்சனங்களிலிருந்து மாறுபட்டது இது. அந்த விதத்தில் இந்தப் பகுதியில் வருபவனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. தன்னலமற்ற சேவை புரிவோர் த்கைமை உடையவர்கள்..

    மனதார் அவர்களைப் பாராட்டுவோம்..

    பதிலளிநீக்கு
  19. சிவசங்கரி அவர்களது அரும்பணி வாழ்க..

    இறையருளால் நலம் கொண்டு வாழ்க..

    பதிலளிநீக்கு
  20. அசோகமித்திரன் அவர்களது எலி கதையைப் பற்றி ஜூவி அண்ணா அவர்கள் சொல்லியிருப்பது அழகு.. அருமை..

    எலிக்கும் பிடிக்காமல் போன வடையின் மகத்துவம் தான் என்னே!..

    பதிலளிநீக்கு
  21. அடடா! இப்படி ஒரு கோணம் இருக்கிறதா?
    நீங்கள் இதைக் கேட்காமலேயே இருந்திருந்தால் அது பற்றி யோசிக்கவே தோன்றியிருக்காது!
    ம்..ம்.. சரியான கேள்வி. யாரானும் இதற்கான பதில் சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறுகிறது.

    பதிலளிநீக்கு
  22. பண்ணை வீடு, கொடைக்கானலில் நிலபுலங்கள் - என்ன, ஒரு தமிழ் எழுத்தாளரிடமா இதெல்லாம் இருந்தன? அதுவும் குழந்தை, குட்டி இல்லாதவர்.. தலை சுற்றுகிறதே சாமி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஏகாந்தன். சிவசங்கரி மற்றும் அவர் கணவர் இருவருமே பெரிய வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். சிவசங்கரி பல முறை தங்கள் பண்ணை வீட்டைப் பற்றிச் சொல்லி இருக்கார். செங்கல்பட்டுக்கு அருகேயா? நினைவில் இல்லை. அவர் கணவர் பிசினஸ் செய்து வந்தார். ஆகவே அவங்களிடம் இவை எல்லாம் இருந்தன என்பதற்கு வியக்க வேண்டிய அவசியமே இல்லை. நல்ல பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருவருமே! திடீரெனத் தான் அவர் கணவர் இறந்தார். தங்களுக்குக் குழந்தை இல்லை என்பதால் அவங்க நாய்களை வளர்த்துப் பராமரித்திருக்கின்றனர். அதை வைத்தும் நிறைய நாவல், சிறுகதை னு சிவசங்கரி எழுதி இருக்கார். அந்தக் காலத்தில் இவருடன் போட்டி போட்ட பெண் எழுத்தாளர் என்னும் பட்டியலில் இருந்த திருமதி இந்துமதி அவர்களும் பாரம்பரியமான பணக்காரக்குடும்பமே!

      நீக்கு
    2. சிவசங்கரி, இந்துமதி பாரம்பர்யப் பணக்காரர்கள் என எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என் வியப்பு இவர்களின் பாரம்பர்யப் பணமல்ல.

      ’தமிழில் எழுதி’- பண்ணைவீடா, நிலபுலன்களா, அதுவும் கொடைக்கானல்.. என்று அசட்டுத்தனமாக ஆச்சர்யப்பட்டுவிட்டேன்.. அவ்வளவுதான்!

      நீக்கு
    3. அவங்க எழுத வந்தது பணம் சம்பாதிக்க அல்ல. எழுதிச் சம்பாதித்தவையும் அல்ல அந்தச் சொத்துகள். இந்துமதியின் கணவரும் கூட பிசினஸ் தான். இந்துமதி தான் ஆரம்பித்து நடுவில் யாரோ ஏமாற்றிவிடக் கையைச் சுட்டுக்கொண்டு பின்னர் கைவிட்டுவிட்டார் எனக் கேள்வி. சொந்த மாமாவையே திருமணம் செய்து கொண்டவர் இந்துமதி! பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் எளிமை எனக் கருதிப் பருத்திச் சேலையும், கை, கழுத்து, காதுகளில் எந்தவித நகைகளும் அணியாமல் இருந்தார் பல வருடங்கள். பின்னர் ஒரு முறை பரமாசாரியாரின் தரிசனம் கிடைத்தப்போ அவரின் ஆசி/ஆலோசனைகளின் பெயரில் கைகளில் இரண்டே வளைகள் கழுத்தில் ஒரே சங்கிலி, காதுகளில் எளிமையான தோடு என மாற்றிக் கொண்டதாகச் சொல்லி இருக்கார். சிவசங்கரி இந்தியா முழுவதும் சுற்றி வந்து அந்த அந்த மாநிலத்தின் இலக்கியங்களின் முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொண்டு புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார். அநேகமாக அது அவரின் மாஸ்டர் பீஸ் எனலாம். இந்துமதி பின்னர் சோபிக்கவில்லை. இருவருமே அந்தக் காலங்களில் பல பெண்கள்/ஆண்களின் ஆதர்ச எழுத்தாளர்கள். இருவரையும் ஒரே கதையை மாற்றி மாற்றி எழுத வைத்தது குமுதம். அதில் இருவருக்கும் பிரச்னைகளும் ஏற்பட்டன.

      நீக்கு
  23. நன்றி, ஏகாந்தன் சார்...

    அடுத்த எழுத்தாளராக யாரைப் பற்றி எழுதலாம் என்று யோசனையில் இருந்த பொழுது, பண்ணை வீடு, கொடைக்கானலில் நிலபுலன்கள் என்று க்ளூ கொடுத்து விட்டீர்கள். கொடைக்கானலை மறந்தாலும் அதன் டீ எஸ்டேட்டுகளை மறக்க முடியுமா?
    அடுத்த எழுத்தாளராக எழுதப் போவது அவரே தான்.

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்! கொடைக்கானல் க்ளூவா! டீ எஸ்டேட்.. மலைகள்.. ஏரிகள்.. சுவாரஸ்யம்தான். விடாதீர்கள். எழுதுங்கள். வாசிப்போம்.

      நீக்கு
    2. நீங்களும் தவறாது வந்து வாசித்து விடுங்கள், சார்! நன்றி.

      நீக்கு
    3. இது போடி நாயக்கனூர் மலைப்பகுதி சார்ந்த ஏலக்காய் எஸ்டேட் சார். ஞாபக மறதியில் கொடைக்கானல் என்று சொல்லி விட்டேன்.

      நீக்கு
  24. சேவை செய்யும் அனைத்து உள்ளங்களும் வாழட்டும்.
    கதை படித்திருக்கிறேன் அருமை.

    பதிலளிநீக்கு
  25. நேற்றே படிச்சேன் மொபைல் வழியா. ஆனால் கருத்துச் சொல்லவில்லை. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள், நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!