தவறவிட்ட தாலி, பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த நேர்மையான விவசாயியால் திருமணம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், மாலையிடு பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி, 40. இவரது உறவினருக்கு நேற்று நச்சாந்து பட்டியில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ரேணுகாதேவி ஏழு கிராம் தாலி, 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை, தன் கைப்பையில் எடுத்து நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டியில் சென்றுள்ளார்.
மலையலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் உள்ள வேகத்தடையில் சென்றபோது, வேகத்தடையில் ஸ்கூட்டி ஏறி இறங்கியதில், தாலி, பணம் இருந்த கைப்பை கீழே விழுந்து விட்டது. இதை ரேணுகாதேவி கவனிக்காமல் சென்று விட்டார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கைப்பை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கிடையே, மலையலிங்புரத்தைச் சேர்ந்த விவசாயி திராவிடமணி, 46 என்பவர், அவ்வழியாக வந்த போது, கீழே கிடந்த கைப்பையை பார்த்துள்ளார். அதில் தாலி, பணம் இருந்ததால், திருமணத்துக்காக வாங்கிச் சென்றது தவறி விழுந்துள்ளது என்பதை புரிந்து கொண்டார். நமணசமுத்திரம் போலீசில் தெரிவித்து, பையை ஒப்படைத்தார்.
நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் தான், கைப்பையை தவற விட்டிருக்க வேண்டும் என்று கருதினர். அதே வேளையில் சிவபுரம் பகுதியில், மூவர் சாலையோரம் பதற்றத்துடன் எதையோ தேடிக் கொண்டிருப்பதை பார்த்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, தவறவிட்ட தாலி, பணம் அவர்களுடையது என, தெரியவந்தது.
இதையடுத்து தாலி, பணத்தை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதனால் ரேணுகாதேவியின் உறவினர் திருமணம் எவ்வித பிரச்னையும் இன்றி நடந்தது. இதையடுத்து போலீசாரும், திருமண வீட்டாரும் விவசாயி திராவிடமணியை பாராட்டினர்.
================================================================================================
செய்தித்தாளில் இந்தச் செய்தியைப் படித்தேன். இணையத்தில் தேடினால் கிடைக்கவில்லை. எனவே கிடைத்த இடத்தில புகைப்படமெடுத்துச் சேர்க்கிறேன்.
=====================================================================================================
========================= ====== ======
நான் படிச்ச கதை - ஜீவி -
நாஞ்சில் நாடனும் ஒரு பாம்புக்கதை எழுதியிருக்கிறார் .
பாம்பு கதையைத் தீண்டியதா. கதையை பாம்பு தீண்டியதா என்று லேசில் கண்டுபிடிக்க முடியாத அழகான கதை அது. 'காலக்கணக்கு'ன்னு கதைக்குப் பெயர். ஆற்றங்கரையை அடுத்திருந்த தோப்பு வயல் பற்றி, வயலில் விளையும் பயிர்கள் பற்றி, இயற்கையின் எழில் பற்றி, மழையின் தீவிரம் பற்றி என்று.... கதையில் இடையிட்டு வரும் அளவான வர்ணனைகளுக்கு இடையே பாம்பு ஊர்தல் போன்று கதையும் சரசரவென்று நகர்கிறது.
"யப்பா.. பாம்பு.. யப்போவ் பாம்பு..." என்றான்.
"எங்கலே?..." என்றவாறு ஓடி வந்தார்.
முன்பு கண்டதோ, அதன் கூடப் பிறந்ததுகளில் ஒன்றோ தெரியவில் லை. இரண்டு சாண் நீளம் இருக்கும். சங்கு சக்கரம் தெரிந்தது. மண்வெட்டி படத்தின் வெளியே சீறியது. குட்டிச் சீறல்.
ஓடி விலகி நின்று கொண்டு, அதன் தலையில் போட பெரிய கல்லொன்று தேடினான். காணோம். ஓரத்தில் நின்ற பூவரசின் கம்பொன்றை ஒடிக்கப் போனான்.
"தள்ளி நிண்ணுக்கலே..... மம்பிட்டியை எதமா வாங்குனா ஓடீரும்."
"நிண்ணுப்பா.. கொண்ணுரலாம்..."
"வேண்டாண்டா.. வால்லதான் லேசா பட்டிருக்கும். பொழச்சுக்கிடும்.."
"நல்ல பாம்பை அடிச்சுக் கொல்லாம விடப்பிடாதுப்பா.."
"நாம வேணும்னாடா செய்தோம்.. ஒண்ணுஞ் செய்யாது. நீ அங்கணயே நில்லு.. பயப்பிடாம.."
இப்படியாக மகனுக்கும் தந்தைக்கும் நடக்கும் உரையாடலில், பத்தாவது படிக்கும் மகனின் பயத்தையும், தந்தையின் பாம்பு பற்றிய இரக்க மனநிலையையும் படம் பிடித்துக் காட்டுகிறார். அம்மா சர்ப்பக்குற்றம் என்று தீவிரமாக நம்புகிறாள். எப்படியும் ஆவணி மாத ஞாயிறுகளில் விரதம் இருக்க வேண்டும் என்கிறாள். கோயிலுக்குப் போய் நாகருக்கு உப்பும் நல்ல மிளகும் போட்டு நாகம்மனுக்குப் பாலூற்ற வேண்டும் என்கிறாள். இந்த நம்பிக்கைகளுக்கிடையே 'இந்த ஆவணிக்கு ஞாயிறு நான்கா, ஐந்தா என்று காலண்டரில் பார்க்க வேண்டும் என்று நினைப்புகளின் வீச்சுக்கு நாஞ்சில் நாடன் உயிர் கொடுத்திருப்பார் பாருங்கள், அற்புதம்!
"சனிக்கிழமை விரதம் இருந்தா பாம்பு வராதாப்பா?.."
"பாம்பு என்னடா செய்யப் போகு? அரணை, ஓந்தான், எலி போல அதுவும் ஒரு சீவராசி. வயக்காட்டிலே கெடந்தா நமக்கு நல்லது தான். எலி உபதிரவம் இருக்காது. அது வழிக்கு நாம போகல்லேண்ணா அது நம்ம வழிக்கு வராது.."
"பயமா இருக்குலாப்பா?"
"பயந்து என்னடா ஆகும்?.. வாறதை வழியிலே செறுக்க முடியுமா? தைரியமாட்டு இரி. ஒண்ணும் ஆகாது.."
அப்பா ஜோஸியர். நட்சத்திர ராசி, லக்ன நிருவுதலில் பையனுக்கு பாம்பால் எந்தத் தீங்கும் நேரிட்டுவிடாது என்று மனைவிக்கு உறுதி கூறுகிறார். கணக்குப் போட்டு முடிந்து ஒண்ணும் ஆகலே. கடைசியில் அப்பாவை பாம்பு ஒரே போடாகப் போட்டு விடுகிறது.
கம்பூன்றி நடந்து வந்த ஒரு பாட்டையா அதற்குக் காரணமும் சொல்கிறார்.
"பேரப்பிள்ளை! நேரம் வந்தா பாம்பு கடிச்சுஞ் சாவான். பல்லுவலி வந்தாலும் சாவான். அதுல்ல காரியம். சுடுகாட்டுச் சுடலையை நீ சாமானியமாவா நெனைச்சே! புதுசா சுடுகாடு கெட்டுனான்லே? ஒரு சிறப்பு கழிச்சனா? நாம சொன்னா சாகிற காலத்திலே கெழவன் பொலம்புதாம்னு சொல்லுவியோ?"
"பாட்டா, அதுக்கு பாவப்பட்ட ஜோசியரு என்ன செய்வாரு?.."
"யாருடா இவன் முட்டாக்..... சுடுகாடு கெட்டுகதுக்கு கல்லு இறக்க யாருடா நாளு குறிச்சா? இவன் செய்யலாமா ஒரு தொழிலாளி? சரி! நாளுதான் குறிச்சுக் கொடுத்தான், அதுக்கு பொறவு செய்ய வேண்டிய காரியங்களைச் சொன்னானா?"
நிகழ்வுகள் என்னவோ நடந்து விடுகின்றன.. அதற்கு மனுஷன் தன் கண்டுபிடிப்பாக கண்டுபிடித்துச் சொல்கிற காரணங்களுக்கு முடிவேயில்லை.. சரி, தப்பு என்னும் விவாதங்களுக்கும் குறைச்சலில்லை.
காரணங்கள் மனச்சாந்திக்கு தேவையாக இருப்பதால் தான் நடந்த நிகழ்வுகள் அதற்கான காரணங்கள் தெரியாம அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து 'இதனால் தானோ அது?' என்று விடை கண்டு விட்ட ஞானத்தில் முடித்து வைக்கவும் படுகின்றன. அதைத் தான் என்ன அழகாய் சொல்லி விட்டார் இந்த நாஞ்சில் நாடன் என்று வியந்து தொடர் யோசனையில் ஆழ்ந்து விடுகிறோம்.
உரையாடலிலேயே கதை நகர்கிறது. என்ன நடந்தது என்று நமக்குச் சொல்கிறது. அந்த உரையாடலில் ஒரு வரியை நீக்கினால் போதும்; கதையின் உயிரே போய்விடும். இது தான் நாஞ்சில் நாடனின் சாமர்த்தியம்.
இந்தப் பாம்புக்கதைக்கும் பொருத்தமாக 'காலக்கணக்கு' என்று பெயர் வைத்திருக்கிறார்.
நாஞ்சில் நாடன்:
கிழக்கே ஆரல்வாய்மொழி கோட்டைக்கும் மேற்கே பன்றி வாய்க்காலுக்கும் தெற்கே மணக்குடிக்கும்வடக்கே மங்கலம் எனப்படும் குலசேகரத்துக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு நாஞ்சில் நாடாயினும் கன்னியாகுமரி மாவட்டத்தின் வடகிழக்கே அமைந்த தேவானை தாலுகாவும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவின் சில பகுதிகளும் இன்றைய நாஞ்சில் நாடாக அறியப்படுகின்றன.இந்த மண்ணின் மக்களின் ஜீவன், வாழ்க்கையின் போக்காய் இளம் வயதினிலேயே அன்றைய பம்பாயின் பெருநகர வாழ்க்கையும் பயணங்களும் வாய்க்கப்பெற்ற ஒருவரின் அனுபவ நேர்த்தியில் கதைகளாகும் பொழுது பால்ய வாழ்க்கை அதன் பின்னாலான பிற்கால வாழ்க்கை என்று பின்னதின் பின்னணியில் முன்னதும், முன்னதின் பிண்ணனியில் பின்னதும் என்று ஒருவித ரசவாத வித்தை கலந்த சுகானுபவம் இவர் எழுத்துக்களில் படிந்திருப்பதைச் சொல்லத்தான் வேண்டும். நாஞ்சில் நாடன் கம்ப ராமாயணத்தை கற்றுத் தேர்ந்தவர். கம்ப நாடனின் கவிதையில் ஊறித் திளைத்தவர். இவர் கொண்டிருக்கும் பெயருக்கும் கம்ப நாடனிடம் இவர் கொண்டிருக்கும் பிரேமையே என்று நினைக்கத் தோன்றுகிறது. பெற்றோர் வைத்த பெயர் சுப்பிரமணியம். குமரி மாவட்ட வீர நாராயண மங்கலத்தில் தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டில் சுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர்.இவரது முதல் நாவல் 'தலைகீழ் விகிதங்கள்' வாசித்து என் இளம் வயதில் கிரங்கிப் போனது இப்பொழுதும் நினைவுக்கு வருகிறது. இந்த தலைகீழ் விகிதங்கள் தான், 'சொல்ல மறந்த கதை' திரைப்படம். 'சூடிய பூ சூடற்க' என்ற நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கி கெளரவித்திருக்கிறது.பொதுவாக நாஞ்சில் நாடன் தன் கதைகளுக்கு வைக்கும் தலைப்பே கொஞ்சு தமிழ் கொஞ்ச அழகாக இருக்கும். சொல்லப் போனால், அவருக்கிருக்கும் தமிழ் இலக்கிய ஆர்வம் பெரும் யோசனை இன்றியே வாசித்த அனுபவத்தில் தானே தலைப்பாய் வந்து உட்கார்ந்த மாதிரி இருக்கும். நமக்கோ ஒரு தடவை கதையின் தலைப்பைப் படித்தது போதாது என்று மீண்டும் படித்து மனசில் வாங்கி புன்முறுவல் பூக்க வைத்து கதைக்குள் நுழையத் தோன்றும்.வாழ்த்துக்கள், நாஞ்சில்!...
இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குவெகு நாட்களாக வாராதிருந்த விருந்தாளி
இன்று சத்தத்துடன் வருவதால்
மீண்டும் பிறகு வருகிறேன்.
அனைவரின் நலனையும் இறைவன்
காத்து வரவேண்டும். இன்றும் நல்ல செய்திகளே வந்திருக்கும்.
நன்மைகளே பெருகட்டும்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அடுத்து வரும் மாதங்கள் எந்தவிதமானப் பிரச்னைகளும் இன்றிக் கடக்கப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குஇரண்டு செய்திகளுமே செய்தித்தாளில் பார்த்தவை. பகிர்வுக்கு மிக்க நன்றி. நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று சித்தப்பா கொடுத்திருந்தார். இருக்கா, யாரானும் எடுத்துட்டுப் போயிட்டாங்களானு தெரியலை! :))))))
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குநாடன் யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கிறார்
என் அபிமான எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
பதிலளிநீக்குதிராவிடமணியை வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குகதையில் வரும் யதார்த்த நடை வசனங்கள் அருமை. அழகிய எடுத்துக்காட்டு படிக்கத்தூண்டிய விவரிப்பு.
எந்த பாசிட்டிவ் செய்தியை போட்டாலும் கீதா மாமி செய்தி தாளில் பார்த்து விட்டேன் என்று கூறிவிடுகிறார். ஆகவே செய்தித்தாளில் வராத இணையத்தில் மட்டுமே வந்த பாசிட்டிவ் செய்திகளை பிரசுரிக்குமாறு வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஇந்த இரண்டு தளங்களை பற்றி அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
https://azhiyasudargal.blogspot.com/
நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு
download link
1)https://abedheen.files.wordpress.com/2014/01/100-stories1.pdf
2) https://abedheen.files.wordpress.com/2014/01/100-stories-2.pdf
Jayakumar
ஆபிதீன் பக்கத்திலிருந்து இந்த இரண்டு புத்தகங்களையும் முன்பே தரவிறக்கி வைத்திருந்தேன். அதற்கு நான் அங்கு போட்ட கமெண்ட்டுக்கு திட்டும் வாங்கினேன்!!! ஆனால் சென்ற வாரம் காணாமல் போனதில் இதுவும் இருந்திருக்கும். எனவே மறுபடி இறக்கிக் கொண்டேன் நன்றி JC ஸார்.
நீக்குஐயா ஜீவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
பதிலளிநீக்குகில்லெர்ஜீ செய்வது போன்று கதை ஆசிரியர் எழுத்துக்கு ஒரு கலர், உங்கள் எழுத்துக்கு ஒரு கலர் என்று வைத்தால் படிப்பவர்களுக்கு எது கதை எது உங்கள் பின்னூட்டம் என்பது விளக்கமாகத் தெரியும். மேலும் கதையின் சுட்டி இருந்தால் அதையும் கொடுப்பது நலம்.
Jayakumar
மாற்றி இருக்கிறேன். இப்போது பாருங்கள்.
நீக்குஜெஸி ஸார்,
நீக்குகுறிப்பிட்ட எழுத்தாளரின் கதை சாதம் என்றால் அந்தக் கதையை வாசித்த என் ரசனை தயிர். சாதத்தையும் தயிரையும் கலந்து அளவாய் உப்பிட்டு தயிர் சாதமாய் உங்களுக்கு பரிமாறுகிறேன். மொத்தத்தில் இது ஒரு கலவை. சாதமும் தயிரும் தனித் தனியாய் தெரியாதவாறு பிசைந்த கலவை. இரண்டையும் பிரித்தால் எழுதிய எழுத்தாளரின் எழுத்தும் என் ரசிப்பும் தனித்தனி கூறுகளாகி சோகையாய் இரண்டுமே சோகையாய் காட்சி தரும்.
என் ரசனையின் ஊடாகத் தான் இந்தக் கதையை நான் சொல்லுகிற போக்கில் ரசிக்கிறீர்கள் என்பது முக்கியமான விஷயம். நான் எழுதுவது அந்தக் கதைக்கான பின்னூட்டம் அல்ல. கதையை நான் சொல்லுகிற விதத்தில் சொல்லி கதையை வாசிக்க என் புரிதலின்படி உங்களை வழி நடத்துகிறேன் என்பதே உண்மை. வாசிப்பு ரசனை ஊடான இந்த வழி நடத்துதல் தான் இந்தப் பகுதியின் சிறப்பு. இதே கதையை வேறு ஒருவர் தன் வாசிப்பு ரசனைக் கேற்ப வேறு விதத்தில் உங்களை வாசிக்க வைக்கலாம் என்பது தான் உண்மை.
காலட்சேபங்களில் சேங்காலிபுரம் அனந்தராம தீஷிதர், கிருபானந்த வாரியார், கிரிதாரி பிரசாத்
போன்றோர் வெவ்வேறு விதங்கள் காட்டிய மாதிரி இந்தப் பகுதியை எழுதுவோர் வெவ்வேறு வண்ணங்கள் காட்டலாம். இது ஒரே கதையை வேறு வேறு விதங்களில் புரிந்து கொள்கிற சிந்தனை வண்ணம்.
இந்தப் பகுதிக்கு அரைப்பக்கம் போன்றதான இடம் தான் ஒதுக்கப்பஉவதால் இந்தப் பகுதியை எழுதுவோர் அந்த எல்லைக்குள் தங்கள் வாசிப்பு ரசனைத் திறமையைக் காட்ட வேண்டியிருக்கிறது. இதுவே இந்தப் பகுதியை எழுதுவோருக்கான சவாலும் கூட.
உங்கள் வாசிப்பு ஆர்வத்துடனான கருத்துக்கு ரொம்ப நன்றி, சார்.
எபி பல விஷயங்களில் மற்ற இணைய தள வாசிப்புகள் போல இல்லாமல் வேறுபட்டிருந்தால் அதுவே அதன் வித்தியாச முயற்சிகளுக்கான பலம்.
நாளாவட்டத்தில் மின் நிலா தொகுப்பும் ஒரு வார இதழ் வாசிப்பு போல மாறியிருல்கும் என்பது உறுதி.
* ஒதுக்கப்படுவதால்
நீக்கு** மாறியிருக்கும்
என்னுடைய புரிதலின்மைக்கு விரிவான பதில் தந்ததற்கு நன்றி.
நீக்குஇணையத்தில் கண்ட பாசிட்டிவ் செய்தி.
பதிலளிநீக்குhttps://www.4tamilmedia.com/index.php/menu-news/20-india/2315-gym-owner-wrote-neet-at-age-of-47
Jayakumar
இதே போல இன்னொரு வயதான நீட் செய்தியும் தினமலரில் பார்த்தேன்தான். ஏனோ பாசிட்டிவாக நான் நினைக்கவில்லை!
நீக்குhttps://www.dinamalar.com/news_detail.asp?id=2844703
போற்றத்தக்கவேண்டிய பெருமக்கள்.
பதிலளிநீக்குகதை சிறப்பு.
ஜீவி சார் நாஞ்சில் நாடனின் கதையைப்பற்றி இன்று பேசியது நன்று. நாஞ்சிலின் படைப்புகளின் தலைப்புகளே ரஸமானவை, கவிநயம் கொண்டவை:
பதிலளிநீக்குநதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, காவலன் காவான் எனின், என்பிதலனை வெயில் காயும், எட்டுத்திக்கும் மதயானை, கொங்குதேர் வாழ்க்கை, சூடிய பூ சூடற்க - இப்படித் தலைப்புகளே நிறையச் சொல்வதால்.. அதுகளை ஒருதடவைக்கு இருதடவையாகப் பார்த்துவிட்டு சிந்தித்தவாறே அகன்றிருக்கிறேன்!
ஆமாம், ஏகாந்தன் சார்.
நீக்குவெகுஜன வாசிப்பு வட்டத்தில் சுஜாதாவைத் தாண்டியதான வாசிப்பு பரவலாக இல்லாமலேயே போய் விட்டது. எபியின் இந்தப் பகுதி கதை, கவிதை, கட்டுரை என்று பல தளங்களில் சிறப்பாக சாதித்தவர்களை
பற்றிப் பேசினால் நன்றாகவும், எபிக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் தான்.
இந்தப் பகுதி சனிக்கிழமையின் ‘regular feature' -ஆ? இதனை இதுவரை நான் சரியாகக் கவனிக்கவில்லை போலும்..
நீக்குசெய்திகளும் கதையும் அருமை...
பதிலளிநீக்குதிருமண வீட்டாரும் விவசாயி திராவிடமணியை பாராட்டினர்.//
பதிலளிநீக்குநல்ல மனிதரை நாமும் வாழ்த்துவோம், பாராட்டுவோம்.
காவல் ஆய்வாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
நல்ல செய்திகள். நல்ல மனங்கள் வாழ்க!
முதல் இரு செய்திகளும் நல்ல செய்திகள். சாலியில் விழுந்ததைக் கொடுத்த விவசாயி திராவிடமணி வாழ்க!
பதிலளிநீக்குபெண்ணிற்கு உதவிய துரைப்பாக்க காவலர்களுக்கு வாழ்த்துகள்!
கீதா
நல்லதொரு திருமண நிகழ்வு நடக்கக் காரணமான
பதிலளிநீக்குநேர்மை உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.
நாஞ்சில் நாடனின் எழுத்துகள்
எப்பொழுதுமே சுவாரஸ்யம். மிக நன்றி எபி.
சனிக்கிழமை பாசிட்டிவ் செய்திகளுடன் வரும் வாசிப்பு அனுபவம் மிகவும் நன்றாக இருக்கிறது ஸ்ரீராம். இதைத் தொடர வேண்டும் என்றும் வேண்டுகிறேன். நல்ல பகுதி வாசிக்கும் ஆர்வமுடைய ஆனால் வாசிக்க வாய்ப்பு கிடைக்காமல் இத்தனை வருடங்கள் போக இப்போது அடி எடுத்து வைத்து தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றோருக்கு இது மிகவும் உதவும்.
பதிலளிநீக்குஇன்று நாஞ்சில் நாடனின் கதை பற்றி ஜீவி அண்ணா சொல்லியிருப்பது அவரது ரசனையை உட்படுத்திய அறிமுகம் நன்று.
கீதா
நாஞ்சில் நாடன் பிறந்த வீரநாராயணமங்கலம் எங்கள் ஊரிலிருந்து 4 கிமீ தூரம் தான். நடந்தே செல்வோம். சிறிய ஆறு - நாங்கள் பெரிய வாய்க்கால் என்போம், ஒரு புறம் ஓட மறுபுறம் தென்னந்தோப்புகளும், வயல்களும் சூழ அத்தனை ரம்மியமான ஊர். இப்பக்கம் எங்கள் ஊர் என்றால் அந்தப் பக்கம் தாழக்குடி. இப்போது ஊர்கள் பக்கங்கள் நிறைய மாறியிருக்கிறது. அவர் கதைகளில் சிலவற்றில் வண்ணாக்குடி, வெள்ளாளக் குடி, காலனி, திருப்பதிசாரம், தேரேகால் எல்லாம் இடம் பெற்றதுண்டு.
பதிலளிநீக்குஅவரது சமூகம் பற்றியும் ஒருகதை வருவதாகத் தெரிகிறது.
என் மாமா வீரநாராயணமங்கலம் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். நல்லாசிரியர் விருதும் வாங்கியவர். எங்கள் ஊரிலே சார் என்றால் மாமாதான்.
கீதா
விவசாயி திராவிடமணியின் நேர்மையும், ஆய்வாளர் விஜயனின் கருணையுள்ளமும் பாராட்டுக்குரியவை.
பதிலளிநீக்குகதையைப் பற்றிய பகிர்வு அருமை, சுவாரஸ்யம்!
நாஞ்சில் கதை அருமை. உதவும் அன்புள்ளங்கள் போற்றுவோம்.
பதிலளிநீக்குநாஞ்சில் கதை அருமை. ஜீவி சாருக்கு நன்றி.
பதிலளிநீக்குநாஞ்சிலின் எழுத்து வீச்சிற்கு நாம் எல்லோரும் சேர்ந்து நன்றி சொல்வோம். நன்றி.
பதிலளிநீக்குஅனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! அனைவரும் நலமுடன் வாழ, எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
பதிலளிநீக்குநல்ல மனங்கள் வாழ்க பல்லாண்டு! ஒருவர செல்வத்தை மீட்டுக்கொடுத்தார். மற்றொருவர் கல்வியை மீட்டுக்கொடுத்திருக்கிறார்! நாஞ்சில் நாடனின் கதைகள் மூலமாகத்தான், நாஞ்சில் நாட்டு பேச்சு வழக்கின் அழகும், எளிமையும், ருசியும் நமக்கு கிடைத்தது. இன்றய பதிவு அருமை!