செவ்வாய், 14 செப்டம்பர், 2021

சிறுகதை : மசால் தோசையும் ஒரு வாய்க் காஃபியும்! - S G S

 ரமாவும் சங்கரனும் அங்கே இங்கே சுற்றி அலைந்த களைப்பில் அந்த ஓட்டலுக்குள் சென்று ஓர் நல்ல இடமாகப் பார்த்து அமர்ந்தனர். இருவருக்கும் நல்ல பசி.

ஓட்டலில் சர்வர் வந்து என்ன வேண்டும் எனக் கேட்டதுமே சங்கரன், "இரண்டு மசால் தோசை, ஒரு காஃபி, ஒரு எக்ஸ்ட்ரா தம்பளர் கொடுத்துடுங்க!" என்றான். 


இதான் சங்கரனின் பழக்கம். ஓட்டலுக்கெல்லாம் மனைவியைக் கூட்டிச் சென்றாலும் சங்கரன் என்ன சாப்பிடுகிறானோ அதைத் தான் ரமாவும் சாப்பிட வேண்டும். அதோடு காஃபி இருவருக்கும் தனித்தனியாக வாங்க மாட்டான் 

 இத்தனைக்கும் ஒரு காஃபி பதினைந்து ரூபாய் தான். ஒரே ஒரு காஃபி வாங்கி அதை நன்றாக ஆற்றிவிட்டுத் தான் முக்கால் தம்பளர் எடுத்துக் கொண்டு ஒரே ஒரு வாய் டபராவில் விட்டு ரமாவிடம் தள்ளி விடுவான். கூடவே அவளிடம், "இது போறுமோன்னோ! உனக்குத் தனியாகக் காஃபி வேண்டாமே!"என்றும் கேட்டுக் கொள்வான். 

ரமாவுக்குக் காஃபி நுரைக்க ஒரூ தம்பளர் நிறையச் சுடச் சுடக் குடிக்க வேண்டும் போல் இருக்கும். அதே போல் எப்போ ஓட்டலுக்கு வந்தாலும் மசால் தோசைதான். வீட்டிலேயே ரமா அடிக்கடி மசால் தோசை குழந்தைகளை முன்னிட்டுப்  பண்ணுவதால் ஓட்டலுக்கு வந்தால் வித்தியாசமாய்ச் சாப்பிட வேண்டும் என்பது அவள் எண்ணம்.

ஆனால் சங்கரனுக்கு அவன் சொன்னதுதான். அவனுக்குப் பிடித்ததுதான்! ரமாவும் அப்படித்தான் சாப்பிடணும் எனச் சொல்லுவான். என்ன பிடிவாதமோ...!   ரமா 'வேண்டாம் எனக்கு ஆனியன் ஊத்தப்பமோ, அடையோ சொல்லுங்க' என்றால், "இது என்ன வழக்கம்? உன்னை ஆசையா ஓட்டலுக்குக் கூட்டி வந்திருப்பது நான். நான் சொல்லுவதைக் கேட்காமல் உன் இஷ்டப்படி ஆடுவியா? ஓட்டலுக்குக் கூட்டிக் கொண்டு வரானேனு ஓர் நன்றி உணர்ச்சி இல்லாட்டியும்,  ஆனாலும் ரொம்பவே அலையறே!" என்று கடுமையாகக் கூறுவான்.  மனதுக்குள் திகைத்தாலும் வெளியே காட்டிக்கொண்டதில்லை ரமா. 

ஒரு முறை ரமா இப்படித் தான் ரொம்பப் பசியாக இருந்ததால் "அடை/அவியல் சொல்லுங்க இரண்டு பேருக்குமே!" என்று அவனையும் சேர்த்துக்கொள்ள சர்வருக்கு எதிரேயே சங்கரன் அவளைக் கன்னாபின்னாவென்று பேசிவிட்டான். அதிலிருந்து ரமா வாயே திறப்பதில்லை. கடனே என்று வரும் மசால் தோசையைச் சாப்பிட்டு விட்டு அந்த ஒரு வாய்க் காஃபியையும் வேண்டாம் என்று சொல்லாமல் குடித்து வைப்பாள்.  அவள் ஒரே வாயாக அந்தக் காஃபியை ஊற்றிக் கொள்வதைப் பார்க்கையில் எல்லாம் சங்கரன் சிரிப்பான்.

"காஃபியை இப்படியா குடிப்பது? கொஞ்சம் கொஞ்சமாய்க் குடிக்க வேண்டாமா?" என்பான். 

அது இருப்பதே ஒரு வாய் தான். அதுவும் சங்கரன் ஆற்றியதிலே ஆறிப்போய் ஆடை படிந்து இருக்கும். அதை எப்படி ஒவ்வொரு வாயாகக் குடிப்பது? 

"ஒரே அவசரம்! எல்லாத்துக்கும் பறக்கிறே!" என்பான் சங்கரன். ரமாவுக்கு அவனுடன் விவாதம் செய்து உண்மையை எடுத்துச் சொல்ல ஆசையாத்தான் இருக்கும். ஆனால் வீட்டிலேயே சில சமயங்கள் அவள் அப்படி எதையானும் எடுத்துச் சொன்னால் ஒரே ரசாபாசமாக ஆகிவிடும். குழந்தைகள் வேறே இருப்பார்களா! அவங்களுக்கு எதிரே சண்டை வேண்டாம்னு இருந்து விடுவாள். 

இதே சங்கரன் குடும்பத்தில் அனைவருடனும் ஓட்டலுக்கோ எங்கேயாவது போக நேர்ந்தாலோ நடந்து கொள்ளும் விதமே தனியாக இருக்கும். ஆனால் அப்போவும் ரமாவைத் தன் கண்பார்வையில் வைத்திருப்பான். தன் கைகளை முதுகுக்குப் பின்னே கொண்டு போய் ரமாவுக்குச் சைகைகள் செய்து அவளை எச்சரிப்பான்.  அதோடு இல்லாமல் பிறருக்குத் தெரியாதபடி கண்களாலும், பற்களைக் கடித்தும் ரமாவை எச்சரிப்பான். 

சங்கரன் என்ன சொல்கிறானோ அதற்கு ரமா மறுப்புச் சொல்லக் கூடாது. அவன் சாப்பிடும்போது தான் அவளும் சாப்பிடணும். அதுவும் அவன் என்ன சாப்பிடுகிறானோ அது தான் அவளும் சாப்பிடணும். பார்க்கிறவங்களுக்கு என்னமோ ஒற்றுமையான தம்பதி என்னும் எண்ணம்தான் ஏற்படும்!

அதோடு இல்லாமல்  ஏற்கெனவே சங்கரன் அவங்க இருவரும் தனியாய் ஓட்டலுக்குப் போகும்போதெல்லாம் ரமா நடந்து கொள்ளும் விதத்தைத் தன் போக்கில் குழந்தைகளிடம்  விமரிசிப்பான். குழந்தைகளிடம்,"உங்க அம்மாவுக்கு நல்லதே பிடிக்காது. தான் பிடிச்சதுதான். தன்னோட பிடிவாதம்தான் ஜெயிக்கணும்னு சொல்லுவா!" என்றெல்லாம் சொல்லுவான். இம்மாதிரி எப்போவும் மசால் தோசை தான்தான் சாப்பிடச் சொல்லுகிறேன் என்பதையோ, ஒரு காஃபியில் கொஞ்சம் போல் ரமாவுக்குக் கொடுப்பதையோ சொல்லவே மாட்டான்.  இது போலவே அன்றும் நடந்து முடிந்தது.  வேறு வழியில்லாமல் ரமா சகித்துக் கொண்டாள். ஆனால் அதன் பின்னர்  வீட்டுக்கு வந்த ரமா தலைவலி தாங்க முடியாமல்  ஃபில்டரில் டிகாக்‌ஷன் இறக்கிப் பாலைக்காய்ச்சிச் சூடான பாலில் நல்ல காஃபியாகக் கலந்து சங்கரனுக்கும் கொடுத்துவிட்டுத் தானும் குடித்தாள். சங்கரன் அதைப் பார்த்து ஓஹோவென்று சிரித்தான்.   மகன் குமாரும், மகள் ஜெயாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"என்னப்பா சிரிக்கறே?" 

"இப்போத் தான் உங்க அம்மா ஓட்டலில் காஃபி குடிச்சிருக்கா! அது போதாமல் வீட்டுக்கு வந்ததும் காஃபி போட்டுக்குடிக்கிறா!" என்று நக்கலுடன் சங்கரன் சொல்லக் குழந்தைகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ரமா ஒன்றும் வாயே திறக்கவில்லை.
 
*** *** 
யிற்று. அப்படியும் இப்படியுமாக நாட்கள் கடந்து செல்ல, தீபாவளியும் நெருங்கியது. சிறு சேமிப்புக்கான முகவராக இருந்து வந்த ரமாவுக்குச் சிறு சேமிப்புக் கமிஷனில் சுளையாக இரண்டாயிரம் ரூபாய் லாபம் கிடைத்திருந்தது.  எல்லோருக்குமே இந்த வருஷம் நல்ல பெரிய கடையில் போய்த் துணி எடுக்கலாம் என்று ஏகமனதாகக் குழந்தைகள் உட்பட ஆசைப்பட, சங்கரனும் அதற்குச் சம்மதித்தான். 

வெளிப்பார்வையில் ரமா இம்மாதிரிச்  சிறு சேமிப்பு முகவர் வேலைகள் பார்ப்பதை அவன் விரும்பாதது போல் காட்டிக் கொண்டாலும், அந்த வேலையில் ரமாவிற்கு வரும் கமிஷனைக் கணக்குப் பார்த்து அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டு விடுவான்!  ரமா தனக்கென்று பத்து ரூபாய் கூட ஒதுக்கிக் கொண்டதில்லை. அப்படியே அவனிடம் கொடுத்து விடுவாள்.  

மனதிற்குள் ஆசையாகத்தான் இருக்கும். ஆனாலும் வெளியே காட்டிக் கொள்வதில்லை. வேறு எதற்குமில்லை...  நவராத்திரிக்கு மஞ்சள் குங்குமத்தோடு 'வைச்சுக் கொடுக்க' நல்ல பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ரமாவின் ஆசை.  அவ்வளவுதான்.

ஆனால் சங்கரனோ, "வெளியே எல்லோருக்கும் உன் இஷ்டத்துக்கு அள்ளி விட்டுத்  தூக்கிக் கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கணும்னு நினைக்கிறே!" என்று சொல்லிச் சிரிப்பான். 

ரமாவால் நவராத்திரிக்குப் பத்து ரூபாய் வைத்துக் கொடுப்பதோடு அதற்கு மேல் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இத்தனைக்கும் அவளும் சிறு சேமிப்பு முகவராக இருந்து நல்லபடியா வருஷத்துக்கு இருபதாயிரத்துக்குக் குறையாமல் கமிஷன் வாங்கிக் கொண்டு தான் இருந்தாள். ஆனாலும் அவள் விரும்பியபடி எதையும் செய்ய முடியாது. குழந்தைகளுக்கு எதிரே எதையும் காட்டிக் கொள்ளாமல் சங்கரனின் அதட்டல்களையும்/அலட்டல்களையும் பொறுத்துக் கொண்டே வந்தாள் ரமா.

இம்முறை குழந்தைகள் ஆசைப்பட்டதால்  நவராத்திரி நேரத்தில் ஒரு நாள் விடுமுறையில் அனைவருமாகப் போய்த் துணி எடுத்துக் கொண்டு அப்படியே இரவு உணவையும் ஓட்டலில் முடித்துக் கொண்டு வரவேண்டும் என்பது முடிவாயிற்று. 

அந்த நாளும் வந்தது.  நாலு பேரும் கிளம்பினார்கள். பேருந்து பிடித்துக் கொண்டு புரசவாக்கத்தில் இருக்கும் பிரபலமான துணிக்கடைக்குப் போனார்கள். அங்கே ரெடிமேட் பகுதியில் பெண்ணுக்குப் பிடித்தவற்றை வாங்கிக் கொண்டு, சங்கரனுக்கும், பையனுக்கும் அங்கேயே ஆண்கள் பகுதியில் பான்ட், ஷர்ட்டுக்குத் துணி வாங்கி அங்கேயே தைக்கவும் கொடுத்து விட்டார்கள். இனி ரமாவுக்குத்தான். புடைவை செக்‌ஷனுக்கு வந்தார்கள். 

ரமாவுக்கு அந்த வருஷம் புதுசாக வந்திருக்கும் சில்க் காட்டன் புடைவை எடுத்துக்கொள்ள ஆசை. தீபாவளி வேறே! 

ஆனால் சங்கரனுக்கு அதில் இஷ்டம் இல்லை. எப்போதும் போல் பூனம் சேலைகளையே பார்த்தான். அவற்றில் நல்லதாக ஒன்றைப் பொறுக்கினான்.  

"இது எப்படி?"   

ரமா துக்கம் தொண்டையை அடைக்கப் பதிலே சொல்லாமல் தலையை அசைத்தாள்..  

குழந்தைகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அம்மா ஏற்கெனவே அவர்களிடம் சில்க் காட்டன் எடுத்துக்கொள்ளப் போவதாய்ச் சொல்லி இருந்தாளே! இங்கே அப்பா என்னவோ 'இதுவும் போதும், அதுவும் போதும்' என்கிறாப்போல் பேசுகிறாரே!  இருவரில் பையன் தான் கொஞ்சம் எதுவானாலும் கேட்பான். 

"அப்பா! இது அம்மாவுக்கு வந்த பணம்! அம்மா சில்க் காட்டன் புடைவை கேட்டிருந்தாள். நீ உன் பணத்தில் வாங்கிக் கொடுக்காட்டியும் அம்மாவை அவளோட சம்பாத்தியத்திலாவது வாங்கிக்கச் சொல்லலாமே!வருஷா வருஷம் நீ கிருஷ்ணா ஸ்டோர்ஸில் கடனுக்கு வாங்கித் தரும் புடைவையைத்தானே அம்மா தீபாவளிக்குக் கட்டிக்கொள்கிறா! எப்போதுமே நீ அம்மாவுக்கு என்றால் கொஞ்சம் மட்டமாகச் செய்கிறாயே! சரி, அதெல்லாம் தான் உன் சம்பாத்தியம். உன்னால் அதிகம் செலவு செய்ய முடியாதுனு சொல்லுவே! இப்போ என்ன வந்தது? இரண்டாயிரம் ரூபாயும் அம்மா சம்பாத்தியம் தானே! அதில் இஷ்டப்பட்ட புடைவையை அம்மா எடுத்துக் கொண்டால் என்ன?" 

சங்கரனுக்கு முகம் சிறுத்துவிட்டது. ரமாவைப் பார்த்து முறைத்தான்.  "குழந்தைகளைத் தூண்டி விடுகிறாயா!" என்று பல்லைக் கடித்தான். 

உடனேயே ஜெயா, "அம்மா எங்களிடம் எதுவும் சொல்லவில்லையே அப்பா! நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா?  எப்போ அம்மாவுக்குப் புடைவை எடுத்தாலும் ரொம்பவே விலை குறைச்சலாத் தான் எடுக்கிறே! உன்னோட ஆஃபீஸ் நண்பர்கள் எல்லாம் அவங்க மனைவிக்குப் பட்டுப்புடைவை எல்லாம் எடுத்துத் தராங்களே! நீ அந்த மாதிரி அம்மாவுக்கு தீபாவளிக்குக் கூட எடுத்துக் கொடுத்தது இல்லை! இப்போவும் பட்டுப்புடைவையா அம்மா கேட்டாள்? சில்க் காட்டன் தானே! அதுவும் அம்மாவின் சம்பாத்தியத்தில் தானே எடுத்துக்கப் போறா?  நீயா வாங்கிக் கொடுக்கிறே?" என்று கேட்டுவிட்டாள். 

இவர்களின் பேச்சு வார்த்தைகள் அக்கம்பக்கத்தினரின் கவனத்தை ஈர்க்க வேறு வழி இல்லாமல் சங்கரன் சில்க் காட்டன் புடைவையை ரமாவுக்குக் காட்டச் சொல்லி விட்டுக் கோபத்துடனே அங்கிருந்து நகர்ந்தான். அவன் வரை அவன் மனைவி அவனுக்கு அடங்கியவள். அவன் சொல்வதைத்தான் செய்ய வேண்டும். மறுத்தோ/மீறியோ பேசக் கூடாது. இப்போது  குழந்தைகள் மூலம் தூண்டி விட்டுத் தன் காரியத்தை அவள் நடத்திக் கொள்வதாகவே அவனுக்குத் தோன்றியது..

அனைவரும் ஓட்டலுக்கு வந்தார்கள். சங்கரன் முகத்தில் சிரிப்பே இல்லை. ஆனாலும் குழந்தைகளுக்காக ஓட்டலுக்கு வந்துவிட்டு அவங்களுக்குப் பிடித்ததை வாங்கித் தரணும் என்பதால் குழந்தைகளிடம் அவங்களுக்கு வேண்டியதை ஆரடர் பண்ணச் சொன்னான். 

பின்னர் ரமாவிடம் எதுவும் கேட்காமல் சர்வரிடம் எப்போதும் போல், "இரண்டு மசால் தோசை! ஒரு காஃபி, ஒரு எக்ஸ்ட்ரா தம்பளர்!" என்றான்.

ரமா குழந்தைகள் இருக்கும் தைரியத்தில் மெதுவாக, "எனக்கு ஆனியன் ஊத்தப்பம்! அப்படியே காஃபி தனியாகச் சொல்லிடுங்க. தலையை ரொம்ப வலிக்கிறது! " என்றாள்.  

சங்கரனுக்கு அடக்கி வைத்திருந்த கோபம் பீரிட்டது. ரமாவைப் பார்த்து, "உன்னிஷ்டத்துக்குப் பிடிவாதம் பிடித்துப் புடைவை எடுத்துக் கொண்டாச்சு. இங்கே வந்தும் உன்னோட வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டே!" என்று கடுமையாகச் சொல்ல, கண்களில் கண்ணீருடன் ரமா எழுந்து வெளியே சென்று விட்டாள். குழந்தைகள் இருவருக்கும் அப்போது தான் அம்மாவிடம் எந்தத் தப்பும் இல்லை. அப்பாதான் அம்மாவை அடக்கி அடக்கி வைக்கிறார் என்னும் உண்மை புரிந்தது!

அப்பாவிடம், "ஓட்டலுக்குக் கூட்டி வந்ததே இஷ்டத்துக்குச் சாப்பிடத்தானே அப்பா! அம்மா மட்டும் ஏன் தன் இஷ்டத்துக்குச் சாப்பிடக் கூடாது? நீ செய்வது தப்பு!  அம்மாவைப் போய்க் கூட்டி வந்து அம்மாவுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடு அப்பா!" என்று பிள்ளை சொல்ல, பெண்ணோ, "எனக்கு மட்டும் இப்படி ஒரு கணவன் என்றால் நான் அவனோடு எல்லாம் ஓட்டலுக்கே போக மாட்டேன் அப்பா! நீ எனக்குக் கல்யாணம் பண்ணுவதற்கு முன்னால் அந்தப் பையனிடம் நான் பேசிக் கலந்து கொள்ள வாய்ப்புக் கொடு. இப்படி எல்லாம் இருந்தால் என்னால் சகிக்க முடியாது! அம்மா மாதிரி நான் வாயை மூடிக் கொண்டு இருக்க மாட்டேன்!" என்றாள். 

சங்கரனுக்குச் சுருக்கென்றது.  

அதோடு இல்லாமல் பையன் மேலும் சொன்னான். "அப்பா! இத்தனை நாட்களாக நீ என்னமோ அம்மாதான் தன்னிஷ்டத்துக்கு எல்லாம் செய்வதாய்ச் சொல்லிக் கொண்டிருந்தே! ஆனால் உண்மை வேறாக அல்லவோ இருக்கிறது! அம்மாவுக்கும் ஆசைகள் இருக்காதா? அம்மாவுக்கெனத் தனியான விருப்பம் இருக்காதா?  அம்மா இஷ்டப்படி சாப்பிடுவதால் உனக்கு ஏதேனும் நஷ்டம் ஏற்படுமா? இத்தனை உழைக்கும் அம்மாவுக்கு ஒரு காஃபி முழுதாக வாங்கிக் கொடுக்க உனக்கு மனசு ஆகலையே!  இதைப் போலவே நம்ம ஹேமாவை அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் இடத்தில் நடத்தினால் உனக்கு எப்படி இருக்கும்?" என்று கேட்டுவிட்டான். 

பதின்ம வயது.  அனைத்தும் புரியும் பருவம். அதோடு அம்மாவிடம் அவனுக்குத் தனியான பற்று. குழந்தைகளை சுதந்திரமாகப் பேச விடவேண்டும் என்பது ஆரம்பத்திலிருந்தே சங்கரன் கொள்கை.  இப்போது அவனே அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை!  சங்கரனுக்குக் கொஞ்சம் அவமானமாக உணர்ந்தான். பையனை விட வயதில் சின்னவளானாலும் பெண்ணும் அப்பாவிடம், "அப்பா, நீயே போய் அம்மாவை அழைத்துக் கொண்டு வா! அம்மாவுக்குப் பிடித்த ஆனியன் ஊத்தப்பத்தை இன்னிக்கானும் அம்மா சாப்பிடட்டும்" என்றாள் உரிமையாக. 

இது நாள் வரை  சங்கரன் என்ன சாப்பிடுகிறானோ அது தான் ரமாவும் சாப்பிட வேண்டும். வெளி ஊர்களுக்குப் போகையில் தயிர்சாதம் கட்டிக் கொண்டு போனால் சங்கரனுக்கு அதில் கொஞ்சம் தண்ணீர் கலந்து மறுபடி பிசைந்து சாப்பிடணும். ஆனால் ரமாவோ அப்படியே சாப்பிட்டு விடுவாள். அதுக்கும் சங்கரனிடம் வாங்கிக் கட்டிப்பாள். "இதைப் பாரு! எப்படி முழுங்கறது லபக், லபக்னு! எனக்குனு வந்து வாய்ச்சிருக்கே! இந்தா! சொல்றதைக் கேள்! தயிர்சாதத்தில் தண்ணீரை விட்டுக் கலந்து சாப்பிடு!" என்று அதட்டுவதோடு அல்லாமல் தண்ணீரைத் தானே எடுத்து ரமாவின் தட்டில் ஊற்றவும் செய்வான். 

அழுகை முட்டும் கண்களோடு அந்த ருசி பிடிக்காமல் தூக்கி எறியவும் முடியாமல் ரமா சாப்பிடுவாள்.  துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்ளும். அதுக்கும் ஒரு நாள் அவள் சங்கரனின் தம்பி மனைவி ரேணுகா மூலம் விடிவு வந்தது.  

அவர்கள் எல்லோரும் சேர்ந்து சென்ற ஒரு  ரயில் பயணத்தின்போது  தன் ஓர்ப்படிக்கெனக் கட்டிய  தயிர்சாதப் பொட்டலத்தை ரமா அவளிடம் கொடுத்தாள்.  அவள் அதைப் பிரித்து ஸ்பூனால் எடுத்து அப்படியே சாப்பிட, பார்த்துக் கொண்டிருந்த சங்கரன் அவள் இலையில் தண்ணீரை ஊற்றுமாறு ரமாவிடம் ஜாடை காட்டினான்.  ரமா மறுத்து விட்டாள். ரேணுகாவும்," எனக்கு இந்த டேஸ்ட்தான் பிடிக்கும். தண்ணீரை விட்டுக் கலந்தெல்லாம் சாப்பிடப் பிடிக்காது!" எனப் பளிச்சென்று தன் விருப்பத்தைச் சொல்ல, அன்றுதான் சுமார் 15 வருடங்கள் கழித்து ரமா தன் பங்கு தயிர்சாதத்தில் தண்ணீர் சேர்க்காமல் அப்படியே ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டாள். அன்று அவள் மனதில் ஏற்பட்ட நிறைவு!

வெளியே நின்று கொண்டிருந்த ரமாவுக்குள் இதெல்லாம் கண்முன் காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்தது. அவளுக்குள் அழுகை முட்டியது.  அங்கே பலபேர் பார்த்துக் கொண்டிருக்கையில் அழக்கூடாது என்று அடக்கிய வண்ணம் நின்றிருந்தவள் தோளை சங்கரன் தொடுவதை அவள் உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். 

சங்கரன் மென்மையாக, "வா, உள்ளே, ஆனியன் ஊத்தப்பம் சூடாக வந்துடும். சாப்பிடலாம் இப்போ!  காஃபியும் உனக்குத் தனியாகச் சொல்லி இருக்கேன்!" என்றான். 

விரிந்த கண்களுடன் நம்பிக்கை இல்லாமல் அவனைப் பார்த்த ரமா உள்ளே பார்க்க, குழந்தைகள் கை அசைத்துச் சிரித்த வண்ணம் அவளை உள்ளே அழைத்துக் கொண்டிருந்தனர். 

நாம் கெஞ்சிக் கேட்டும் மனசு மாறாத சங்கரன், குழந்தைகளால் மாறி இருக்கிறான், இது ஆரம்பம் என்பதை ரமா புரிந்து கொண்டு விட்டாள். சங்கரன் மெல்ல மெல்ல மாற ஆரம்பித்து விட்டான். இனி ரமாவின் வாழ்க்கையில் சுருதிபேதம் இருக்காது. 

= = = = = =

48 கருத்துகள்:

  1. வல்லிம்மா இன்று விரைந்து வருவாரா? அல்லது வேறு யார் முதலில் வந்து கதையைப் படித்துக் கருத்திடுவார்கள் என யோசிக்கிறேன்

    கீசா மேடம் நேற்றைய இடுகையில் அரியர்ஸ் வைத்துள்ளார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, எனக்குக் கொஞ்ச நாட்களாகவே காலையில் வர முடிவதில்லை. நேற்றும் இன்றும் வேலை செய்பவரால் உட்கார நேரமில்லை! :( மறுபடி கால் வீக்கம் வந்துடப் போறதேனு கவலையா இருக்கு! ஆகவே அடிக்கடி போய்ப் படுத்து விடுகிறேன். ஒரு மணி நேரமாவது காலை நீட்டிக் கொண்டு படுத்துப் பின்னர் வேலை செய்ய வேண்டி இருக்கு.

      நீக்கு
    2. True Geetha Sambasivam madam. நானும் chairல் ரொம்ப நேரம் உட்கார்ந்து onlineல் இருப்பதால், கால் வலி அதிகமாகிறது.

      I wanted to follow your method. ஒரு சில மணி நேரங்கள்தான் இணையத்துக்கு.

      நீக்கு
  2. எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.

    ஸ்ரீராம், எழுத்தாளர் புதிய பெயராக இருக்கிறதே. இல்லை எனக்கு மறதியோ?

    வாசித்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கதை மிக அருமை. மிக மிக யதார்த்தம்!

    இப்படித்தான் சில கணவன்மார்கள் இருக்கிறார்கள்.

    தாங்கள் சொன்னதுதான் சட்டம். மனைவிக்கு எந்தக் கருத்தும் சொல்ல உரிமையோ அனுமதியோ இருக்காது....பிள்ளைகளிடம் தங்கள் பாச்சா பலிக்காது அதுவும் இந்தத் தலைமுறை பிள்ளைகளிடம் கண்டிப்பாகப் பலிக்காது எனவே தங்களுடைய அடக்குமுறையைக் காட்ட இருக்கவே இருக்கிறார்கள் கிள்ளுக்கீரைகள் அதான் மனைவி....அங்குதான் தன் சட்டம் செல்லுபடியாகும் அதுவும் ரமாவைப் போன்ற அமைதியாகத் தாங்கும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம்...

    //வெளிப்பார்வையில் ரமா இம்மாதிரிச் சிறு சேமிப்பு முகவர் வேலைகள் பார்ப்பதை அவன் விரும்பாதது போல் காட்டிக் கொண்டாலும், அந்த வேலையில் ரமாவிற்கு வரும் கமிஷனைக் கணக்குப் பார்த்து அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டு விடுவான்! ரமா தனக்கென்று பத்து ரூபாய் கூட ஒதுக்கிக் கொண்டதில்லை. அப்படியே அவனிடம் கொடுத்து விடுவாள். //

    செம....பல வரிகளை ரசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ ஆ ஆ கௌ அண்ணா....எஸ் ஜி எஸ் என்று கதாசிரியர் பெயர் சுருக்கம் என்பதால் உங்கள் பதிலும்!!!!!!!!!!!!!!!!!!!

      மண்டை குடைகிறது! என்ன விரிவாக்கம் என்று

      கீதா

      நீக்கு
    2. ஓ! புரிந்தது..அண்ணா

      படம் நன்றாக இருக்கிறது கௌ அண்ணா..

      கீதா

      நீக்கு
    3. ஆமாம், கௌதமன் சார் படம் நன்றாக வரைந்திருக்கிறார். அட? வாழை இலை போட்டிருக்காரே!

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. கதை அருமை.

    குழந்தைகள் அப்பாவை திருத்தியது அருமை.
    குழந்தைகள் அம்மாவின் விருப்பங்களை அப்பாவுக்கு எடுத்து சொன்னது நன்றாக இருந்தது.
    ரமாவின் வாழ்க்கை இனி மகிழ்ச்சியாக இருக்கபோவது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "இரண்டு மசால் தோசை! ஒரு காஃபி, ஒரு எக்ஸ்ட்ரா தம்பளர்!" என்றான்.//

      காத்து இருக்கும் படம் அருமை.
      கெளதமன் சார் பொருத்தமாக வரைந்து இருக்கிறார்.

      நீக்கு
  6. இக்காலத்துத் தலைமுறை பெண்கள் கண்டிப்பாக ரமா போன்று இருப்பது வெகு வெகு அபூர்வம். கணவன் இப்படி என்று தெரிந்ததும், பிறந்தவீட்டிற்குச் சென்று தீர்வுக்கு முயற்சிப்பாங்க, சொல்லியும் மாறவில்லை என்றால் டிவோர்ஸ் தான்...ரமா போன்று பொறுத்துப் போகமாட்டார்கள் அதுவும் சம்பாதிக்கும் பெண் என்றால்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பதின்ம வயதுக் குழந்தைகள்// யெஸ் குழந்தைகள் அந்த வயது வரும் போதுதான் பல மனைவிகள்/அம்மாக்களுக்குக் கொஞ்சமேனும் விடிவு காலம் வரும். அப்படியும் வராத மனைவிகள் இருக்கிறார்கள்.

    குழந்தைகளுக்குத் தட்டிக் கேட்கும் அனுமதியும், தைரியமும் இருக்க வேண்டும் இல்லை என்றால் இப்படியான சூழலில் மனைவிமார்களுக்கு சுகமே இருக்காது.

    குழந்தைகளும் அப்பாவைக் கேட்பதற்குத் தயங்கினால் அவ்வளவுதான்.

    இதில் நல்ல காலம் சங்கரன் குழந்தைகளுக்குப் பேசும் உரிமையைக் கொடுத்திருந்ததால் குழந்தைகளும் கேட்க ரமாவுக்கு நல்லகாலம் பிறந்தது.

    இனியேனும் ரமா சந்தோஷமாக இருக்கட்டும்.

    இக்கதையின் ரமாவின் உணர்வுகள் குறித்து நிறைய எழுதலாம்.

    கதாசிரியர் எஸ் ஜி எஸ் அவர்களுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இதில் வைஸ் வெர்சா - அதாவது பெண்களின்/மனைவியின் கன்ட்ரோலில் இருக்கும் நிகழ்வுகளும் குடும்பங்களும் உண்டு. அதனால் குடும்பங்கள் சீர்குலையும் நிகழ்வுகளும் உண்டு. நிறைய சொல்லலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்.
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    நல்ல கதை. இப்படியும் சில குடும்பங்கள் இருக்கின்றன. மனைவியின் எண்ணங்களை ஒரு போதும் மதிக்காத கணவன்மார்கள் இருக்கின்றனர். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களால் தன் மனைவியின் எண்ணங்களை அந்த கணவன் புரிந்து கொண்டது இதில் நன்று. சில இடங்களில் குழந்தைகளும் அப்போவோடு சேர்ந்து அம்மாவை மதிக்காமல் இருக்க கற்று கொண்டு விடுவார்கள். அந்த அம்மாவுக்கு வாழும் வரை மனப்போராட்டந்தான்...! இயல்பானதொரு கதையை முடிவு சுபமாக தந்தமைக்கு ஆசிரியருக்கு நன்றிகள். அழகாக தொய்வில்லாமல் கதையை எழுதிய ஆசிரியர் எஸ். ஜி. எஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைக்கு பொருத்தமாய் உணவக படம் வரைந்த கௌதமன் சகோதரருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். படம் நன்றாக உள்ளது. நன்றி.

      நீக்கு
  13. இப்படி அராஜகமாக வாழும் கணவர்களை நானும் கண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. இன்னிக்கு பா.வெ. கதையாக இருக்கும்னு நினைச்சுட்டு வந்தேன். அவங்க இல்லையா? நேற்று மாதிரி இன்னிக்கும் வேலை செய்யும் பெண்மணி வராததால் காலம்பரே வர முடியலை. அது சரி! யாரு இந்த எஸ்ஜிஎஸ்? புதுசா இருக்காங்களே!

    பதிலளிநீக்கு
  15. ரேவதிக்கு இன்னமும் வலி குறையவில்லை. உட்காரமுடியலைனு சொன்னாங்க. அதான் வரலை போல இரண்டு நாட்களாக! :( போகட்டும். பா.வெ., நெல்லை இவங்களைக் கூடக் காணோமே! அட! நெல்லை வந்திருக்கார், என்னைத் தேடி இருக்கார். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா நீங்க மெதுவாதான் வருவீங்கன்னு தெரியும்....நேற்றும் ஸ்ரீராம் சொல்லியிருந்தாரே!

      ஓ அதான் வல்லிம்மாவைக்காணலை இல்லையா

      ஆமாம் முதுகுவலின்னு சொல்லியிருந்தாங்க...

      கீதா

      நீக்கு
  16. புது எழுத்தாளர் கதை என்பதால் இன்னிக்கு போணியே ஆகலை போலிருக்கே1 ஶ்ரீராம், யார் எழுதினாங்க இந்தக் கதையை!

    பதிலளிநீக்கு
  17. நல்ல கதை.. இப்படியும் இருக்கின்றது உலகம்.. கதைக்கு வரையப் பட்ட ஓவியம் அழகு..

    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  18. எல்லோருக்கும் இனிய மாலை வணக்கம்.
    வலியில்லா வாழ்வும் ,நிறை பெறும் மனமும் இறைவன் அருள வேண்டும்.

    கதையில் வரும் சங்கரன்கள் மனம் திருந்தட்டும்.
    இப்படி எல்லாம் இருப்பார்கள் என்று
    நினைக்கவே சங்கடமாக இருக்கிறது.

    ரமா வாய்மூடி இருப்பது இன்னும் வியப்பு.
    குழந்தைகளாவது பேசினார்களே.

    கேஜி சாரின் படம் வெகு பாந்தம்.
    நெல்லைத் தமிழன் கால்வலி, கீதாமாவின்
    சங்கடங்கள் விலகட்டும்.
    பிரார்த்தனைகள். உடம்பு ஓய்வு கேட்கிறது
    முடிந்தவரை வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லி. உடம்பு தேவலையா? நேற்றே உங்களைக் காணலையேனு இருந்தது. முடிஞ்சப்போ வாங்க. உடம்பு முக்கியம். சீக்கிரம் குணமாகப் பிரார்த்திக்கிறேன். எங்கே பார்த்தாலும் வியாதியா இருக்கு! :(

      நீக்கு
    2. படம் பற்றிய பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  19. நல்ல கதை. இயல்பான நடை, யதார்த்தமான நிகழ்வுகள். கதை என்பதால் சங்கரன் திருந்தி விட்டார். நிஜத்தில் இப்படிப்பட்டவர்கள் திருத்துவது துர்லபம்.

    பதிலளிநீக்கு
  20. நல்லதொரு கதை. இப்படியும் சில சங்கரன்கள்... சில ரமாக்கள்.... அப்படியே உல்டாவாக இருக்கும் குடும்பங்களும் உண்டு - கீதாஜி சொல்வது போல!

    மற்றுமொரு எழுத்தாளரின் பங்களிப்பு - அவருக்கு வாழ்த்துகள்.

    ஓவியம் சிறப்பு. கேஜிஜி அவர்களுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  21. நல்லதொரு சிறுகதை. இப்படியும் சில சங்கரன்கள்.... சில ரமாக்கள். அப்படியே உல்டாவாக இருக்கும் சில குடும்பங்களும் கண்டிருக்கிறேன் - கீதா ஜி சொன்னது போல!

    மற்றுமொரு பங்களிப்பாளர் - கதைப் பக்கத்திற்கு! அவருக்கு வாழ்த்துகள்.

    கதைக்கான கேஜிஜி அவர்களின் ஓவியம் நன்று. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!