வியாழன், 9 செப்டம்பர், 2021

முதுமைக்காலம்

 மறுநாள் பொழுது விடிந்தது. 


இதுவரை குறுக்கிடாமல் அவன் சொல்வதை என் மனக்கண்ணால் பார்த்தபடி கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது ஆர்வம் தாளாமல் ஸ்ரீயிடம் கேட்டேன்...  

"அவுக, அம்மா என்றெல்லாம் சொல்றியே..  யாரு ஸ்ரீ அது?"

"நானே சொல்ல மாட்டேனா ஸார்...  அவசரப்படறீங்களே...  தெரியாமலா இருக்கப் போகுது?"

"அட, இப்பவேதான் சொல்லேன்.."

"அந்தந்த இடம் வரும்போது தெரியட்டும்னு நெனச்சேன் ஸார்..   கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன்..."

"யாரு என்னன்னு தெரியாம சம்பவங்களில் மனசு ஒன்றை மாட்டேங்குதுப்பா...  கேள்வி இருந்துகிட்டே இருக்கு!"

"அவங்க என் அப்பாவுக்கு பாட்டி முறை வேணும்.  சின்ன வயசுலயே - பத்துப் பன்னெண்டு வயசுலயே - திடீர்னு செத்துப் போயிட்டாங்க..   பெரியவங்க அப்புறம் அவங்களை வீட்டுல சாமியா வச்சு கும்பிட்டாங்க..  வீட்டுல இருக்கறவங்களுக்கு அப்பப்போ சில அனுபவம் இருந்திருக்கு...  எங்க வீட்டுல நெருக்கடியான நேரங்கள்ல இப்படி உதவுவாங்கன்னு சொல்வாங்க..  அவங்கதான் உதவறாங்கங்கறதும் நமக்குத் தெரிஞ்சுடும்..."

"சரி..  மேல சொல்லு..   மறுநாள் 'அவரை'ப் பார்க்கப் போனியா?"

ஸ்ரீ தொடர்ந்தான். 

'அவர்' சொன்னபடி வெற்றிலை பாக்கு பழங்களுடன் வண்டி அமர்த்திக் கொண்டு  கிளம்பினார்கள்.

குளித்துவிட்டு பூஜை முடித்துக் காத்திருப்பவர் போல இருந்தார் அவர்.

இவர்களை வரவேற்று, அமரவைத்து விபூதி பூசிவிட்டு கொஞ்ச நேரம் அமைதியாய் கைகளைக் கோர்த்து அமர்ந்திருந்தார்.

அவர் சொன்ன விவரங்கள் திகைப்பாய் இருந்தன.  கடந்த ஒரு வருடத்தில் இரண்டுமுறை இவன் உயிர் மீது தாக்குதல் நடந்திருக்கிறது என்று சொன்னார்.  ஒன்றை இவன் விபத்து என்று நினைத்திருந்தான்.  இன்னொன்று இவனே அறியாதது.  இரண்டிலுமே காப்புக் கவசமாய் இருந்திருக்கிறார் அம்மா என்றார்.  அதற்குப் பிறகுதான் இந்த ஏவல் முயற்சி என்றார்.

இதை முறியடிப்பதற்கான பூஜைகளை  தான் செய்து விட்டதாகவும் அதற்கான பலன் இன்றிரவு முதல் தெரியத் தொடங்கும் என்றும் சொன்னார்.  அதற்கான சான்று இன்றிரவு முதல் நாளைக் காலைக்குள் கிடைக்கும், நீயே அதையும் தெரிந்து கொள்வாய்.  மனிதரல்லாத உயிரினம் ஒன்று உன்னைத் தேடி வரும்.அது நாயாய் இருக்கலாம், பறவையாய் இருக்கலாம், பூனையாய் இருக்கலாம்..  வந்து உன்னைப் பார்த்துச் செல்லும்.  ஆனால் அந்த அணுகலை நீ உணர்வாய் என்றார். 

வீட்டுக்கு வந்த பின்னும் களைப்பாய் படுக்கையில்தான் இருந்தான் ஸ்ரீ.  பொழுது போனது.  இரவு கரண்ட் கட் ஆகி, , காற்று வரவில்லை என்று திண்ணையில் வந்து அமர்ந்திருந்தபோது, கோழியும் இல்லாத, புறாவும் இல்லாத இவன் அதுவரை அறியாத ஒரு பறவை பறந்து வந்து இவன்மேல் மோதுவது போல உரசி இருக்கிறது.  அப்புறமும் சென்று விடவில்லை.  வீட்டுக்குள் நுழைந்து இவன் அறைக்குச் சென்றிருக்கிறது.  கதவை மூடி அதனை வளைத்துப் பிடித்த அவன் அம்மா அதை காலில் கயிறு கட்டி கூடை போட்டு மூடி வைத்து விட்டார்.

மறுநாள் அந்தப் பெரியவரிடம் எடுத்துச் சென்று அதைக் காட்டலாம் என்று காலை அதை எடுக்க கூடையைத் திறந்து பார்த்தால் பறவையைக் காணோம்.  

தோப்புக்குப் போனார்கள்.  அவரிடம் அப்படி ஒரு பறவை வந்ததைச்  சொன்னதும் "அதுதான் சொன்னேனே..  தகவல் வந்து விட்டது..  இனி கவலை இல்லை" என்றாராம்.  மறுநாள் முதல் முற்றிலும் நார்மலுக்கு வந்து விட்டானாம் ஸ்ரீ.

கொஞ்ச நேரம் மௌனம்.

"ஸ்ரீ..  எனக்கு சில கேள்விகள்..."

"சொல்லுங்க ஸார்.."

"அதெப்படி சரியாய் அப்படி ஒரு பறவை வந்தது?  என்ன என்று தெரியாத அளவு ஒரு பறவை இருக்குமா?"

"ஆமாம் சார்..  எங்களால் இன்னது என்று சொல்ல முடியவில்லை" 

"சரி..  காலைக் கட்டி கூடைக்கு கீழே வைத்தது  காலை எப்படி காணாமல் போயிற்று?  என்ன கரடி விடறே"

"அதுதான் சார் எங்களுக்கும் ஆச்சர்யம்"

"என்னப்பா..  நீயும் என்கூட சேர்ந்து ஆச்சர்யப்படறே...   உனக்கு ஏதாவது மருந்து கொடுத்திருந்தாங்களா ஸ்ரீ?"

"சார்..  போதை மாதிரி இருந்து உளர்றேனா என்று கேட்கறீங்களா? "

"அப்படி இல்லை..  வசியம்னு சொல்வாங்களே..  அப்படி ஏதாவது?"

"அதை மட்டும் நம்புவீர்களா ஸார்?"  

"நீ சொன்னதுல ரெண்டு மூணு விஷயம் நம்பறா மாதிரி அல்லது ஏத்துக்கற மாதிரி இல்லையே..  உனக்கு உடம்பு குணமாகி விட்டது..  சந்தோஷம்.  ஆனா.."

"சார்..  நானும் உங்களை மாதிரிதான் இதுவரை இருந்தேன்.  இது எனக்கே நடக்கலைன்னா நானும் நம்பி இருக்க மாட்டேன்.  அதனால் நீங்க அப்படி நினைக்கறதுல தப்பு இல்லை ஸார்..  நான் தப்பாய் நினைக்க மாட்டேன்."  

"உங்க குலதெய்வம் அவங்கதானா ஸ்ரீ?"

"இல்லை சார்..  எங்க குலதெய்வம் ராக்கச்சி அம்மன்.. ஆனால் இவர்களையும் போட்டோ மாட்டி கும்பிடுவோம் சார்"

"கோச்சுக்காத ஸ்ரீ.. என்னால இப்பவும்.. "

"இல்ல சார்..சில வீடுகளில் இது மாதிரி நடந்திருக்கும்.  சிலபேர் வெளியில் சொல்வாங்க..  சிலபேர் சொல்ல மாட்டாங்க..  உங்களுக்கே கூட இப்பவும் உங்க முன்னோர் யாராவது உங்களை பெரிய ஆபத்திலிருந்து காப்பாத்திக்கிட்டுதான் சார் இருப்பாங்க..  நாம் அதை உணர்வதில்லை.  நமக்கு தெரியலை அவ்வளவுதான்.  அனுபவம் வர்ற வரைக்கும் நம்ப முடியாதுதான் சார்" 

"சரி..  அந்தப் பங்காளிங்க மறுபடி உன்னை தொந்தரவு செய்ய முயற்சிக்க மாட்டார்களா?"

"இதுவரை இல்லை.  'அம்மா' அவங்களை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.  அல்லது இது மாதிரி முயற்சி செய்து தோத்துட்டா அவங்களையே அது பாதிக்கும்னு சொல்லுவாங்க...  அப்படி நிறுத்தி இருக்கலாம்"

"உனக்கு பயமா இல்லையா?"

"பயம் இல்லை.  அம்மா பார்த்துப்பாங்க.  ஆனாலும் ஜாக்கிரதையா இருக்கேன்.  ."

============================================================================================

2014 ல் எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்தது...

வயதான காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, சில வழிமுறைகள் கூறும், மருத்துவர், வி.எஸ்.நடராஜன்:
நடுத்தர வயதிலிருந்தே, தன் தேவைகளை தானே செய்து பழக வேண்டும்.
ஏனெனில், திடீரென கணவன் அல்லது மனைவிக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், பின்னாளில் சிரமம் ஏற்படாததுடன், மற்றவர்களை சார்ந்திருக்காமல், தனியாக வாழும் தைரியத்தையும் ஏற்படுத்தும்.
வயது ஆக ஆக, மனதளவில் பந்த பாசங்களை குறைத்து வாழ, முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், முதிய மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தாமரை இலை மேல் இருக்கும் தண்ணீர் போல, வாழக் கற்றுக் கொள்வது நல்லது.
வீட்டுக்கு வருவோரிடம், உங்கள் புராணத்தை பாடாமல், அவர்கள் சொல்வதை முதலில் கேளுங்கள். அது, அவர்களை உற்சாகப்படுத்தி, உங்களை அடிக்கடி காண வரச் செய்யும். பிரச்னை இல்லாத மனிதர்கள், உலகில் யாருமே இல்லை.
எனவே, 'நான் என்ன பாவம் செய்தேனோ; எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்...' என, மற்றவர்களிடம் புலம்புவதை தவிர்க்க வேண்டும்.
சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்புக்கு ஏற்ற ஓய்வும், முதுமைக் காலத்தில் அவசியம். முடிந்த அளவுக்கு, சுற்றுலா செல்வதில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.
குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர்களை, உயிருக்கு உயிராக நேசியுங்கள். உறவு கள் கைவிட்ட காலத்தில், நட்பு கைகொடுக்கும்.
உடலுக்கு ஏதாவது தொல்லை வந்துவிட்டால், பெரிதாக கற்பனை செய்து, அலட்டவும் கூடாது; அதே சமயம், அலட்சியப்படுத்தவும் கூடாது.மேலும், எந்த ஒரு டாக்டரிடமும் முழு நம்பிக்கை வைக்காமல், இவரிடமிருந்து அவர், அவரிடமிருந்து இவர் என மாறாதீர்.
தன் மறைவுக்குப் பின், யார் யாருக்கு, சொத்து போய்ச் சேர வேண்டும் என்பதை தெளிவாக, சாட்சிகள் முன்னிலையில் எழுதி வைப்பது மிக அவசியம். இதனால், பிற்காலத்தில் பிள்ளை கள், அவர்களின் துணை மற்றும் வாரிசுகளுக்கிடையே ஏற்படும் மோதல் தொல்லைகளைத் தவிர்க்கலாம்.
முதுமை காலத்தில் வசிக்கப் போகும் இடம், வீடு பற்றி ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளுங்கள். நல்ல உடல்நலம், தினமும் செய்யும் உடற்பயிற்சி, சத்தான உணவு, மன உறுதி, ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றோடு கொஞ்சம் பணமும் இருந்தால் போதும்... பலருக்கு புயலாக வரும் முதுமைக்காலம், உங்களுக்குப் பூங்காற்றாக வீசும்!
தினமலரிலிருந்து...



======================================================================================

போர்க்கருவிகள் செய்யவேண்டுமோ, குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள் செய்ய வேண்டுமோ, இருக்கைகள் செய்ய வேண்டுமோ...  அததற்கு பொருத்தமான மரங்களைக் கண்டதும் தச்சர்கள் அதனிடம் சென்று இதுமாதிரி உன்னை நான் இதுவாக செய்யப்போகிறேன் உனக்கு சம்மதமா என்று கேட்பார்களாம்.  அது சம்மதம் சொன்னால் மட்டுமே அதை அதுவாக செய்வார்களாம்.  மரம் சொல்லும் சம்மதம் தச்சர்களுக்கு மட்டும் தெரியுமாம்.  எஸ்ரா 'உப பாண்டவ'த்தில் சொல்கிறார்.  அதைப் படித்ததும் எனக்குத் தோன்றியது...!

எதுவாக ஆக
விருப்பம் கொண்டிருந்ததோ

தச்சர்கள்
மரத்தின் விருப்பம் கேட்காமலே
மஞ்சமாக்கி விட்டார்கள் 
போலும்.
நித்திரையும் வரவில்லை
நிம்மதியும் இல்லை.

நினைத்தாலும் மறுபடி
​'​அது​'​வாக ஆகமுடியாத
ஆத்திரத்தில்
அமைதியில்லாமலே கிடக்கிறது
கட்டிலும்.

============================================================================================================

மதன்..  மதன்...


நாய்ப் பெருமை...

திரும்பிப் பார்த்துடாதீங்க பிரதர்....

முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக மாறிய ரெட்டைவால் ரெங்குடு...!

அவங்க ஏன் வெளில வரப்போறாங்க.... !!


56 கருத்துகள்:

  1. மதனுக்கு ஜே:)))))))
    நன்றி ஸ்ரீராம்.
    இனிய காலை நல் வணக்கம்.
    அனைவரும் எல்லா நாட்களிலும் எப்போதும் இறைவன் அருளுடன் மகிழ்வாக இருக்க வேண்டும்.
    கமலா ஹரிஹரன் நலம் அடைந்து வருவதாகச் சொன்ன நம் கோமதிக்கு நன்றி. சீக்கிரம் கமலாவின் முத்தான தமிழை ரசிக்கலாம். இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  மதனுக்கு ஜே..!!  கமலா அக்கா குணமடைந்து வருவதாக கோமதி அக்கா சொல்லி இருந்ததை நானும் படித்தேன்.  விரைவில் அவர் பதிவுகளுக்கு வரத்தொடங்குவார் என்று பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. நம் முன்னோர்கள் எப்பொழுதும் காக்கிறார்கள் என்பதை முன்பே ஒரு யோகி
    {கீதாம்மாவுக்குத் தெரியும்}
    சொல்லி இருக்கிறார்.சிங்கம் இறைவனடி சேர்ந்த போது
    நம் வீட்டுக்கு வந்தவர்
    அவர் உங்கள் நாற்காலி அருகில் நிற்கிறார் அம்மா.
    உங்களுக்குக் கவலையே வேண்டாம் என்று
    ஆறுதல் சொன்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர் உங்கள் நாற்காலி அருகில் நிற்கிறார் அம்மா.//

      அதை நம்மால் உணர / காண முடியாதது துரதிருஷ்டம்.  சில சமயம் நம் ஆறுதலுக்காக அப்படிச் சொல்கிறார்களா என்றும் தோன்றும்!

      நீக்கு
    2. நம் ஆறுதலுக்காகச் சொல்வது சாதாரண மனிதர்களாயிருந்தால்
      அப்படித் தெரியும்.
      இவர் முழுத் துறவி.
      அந்தப் பொழுதில் எனக்கு நம்பிக்கை
      வரவில்லை. அவர் சொன்னது உண்மை என்று
      பின்னால் தெரிய வந்தது.

      நீக்கு
    3. புரிகிறது அம்மா. பின்னர் எப்படித் தெரிந்தது என்பதைச் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்.

      நீக்கு
  3. உங்கள் ஸ்ரீயையும் காப்பாற்றியது ஒரு முன்னாள்
    பாட்டி என்பதை என்னால் நம்ப முடிகிறது.
    நாம் நன்றி மறந்தாலும் அவர்கள்
    நம்மைக் காக்க மறக்க மாட்டார்கள்.
    நம் கடமைகளைச் சரிவர மறக்காமல்
    அமாவாசை எல்லாம் கொடுக்கும் போது நம் நம்பிக்கை
    மீண்டும் புதுப்பிக்கப் படும்.
    நல்ல நிகழ்வு ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அம்மா. முன்னோர்களை நினைக்கவேண்டும். அவர்கள் நமக்காக பட்ட கஷ்டங்களை உணரவேண்டும்.

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம். சாம வேதம் என்பதால் எங்களுக்கு இன்றுதான் ஆவணி அவிட்டம். கீதா அக்கா வீட்டிலும்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா..   வணக்கம்.  ஆவணி அவிட்ட வாழ்த்துகள்.

      நீக்கு
    2. அட? பானுமதி! நீங்களும் சாமவேதமா? எங்களுக்கும் ஆவணி அவிட்டம் நல்லபடியாக முடிந்தது. வீட்டிலேயே யூ ட்யூப் தயவில் எல்லாம் செய்து விட்டார்.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.

    ஸ்ரீராம், அமானுஷ்யம் வாசிப்பது மிகவும் பிடிக்கும். வாசித்து விட்டு வருகிறேன். ஸ்ரீராம் உங்கள் கவிதையும் வந்திருக்கிறதே.

    சென்ற வாரக் கவிதை அட்டகாசம். ரொம்ப ரொம்ப ரசித்தேன். கருத்து கூட எழுதி வைத்தேன். கருத்துதான் இட முடியவில்லை.

    இனிய கனவுகள்
    இடையில் சிவ பூஜையில் புகுந்த கரடியாய்
    மாறுவேஷத்தில் யதார்த்தம்
    பயமுறுத்தல்

    சமீப காலமாக மனம் ஒத்துழைக்க மறுக்கிறது. ரொம்பவே சண்டித்தனம் செய்கிறது. என் இயல்பான பாசிட்டிவான பப்ளி குணத்திற்கு எதிர்மாரான மிகவும் புதிய மாற்றம்...

    முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii Geetha. How are you. come now. you are the most positve person. Welcome ma.

      நீக்கு
    2. வாங்க கீதா.. நல்வரவு. வல்லிம்மா சொல்வதை வழிமொழிகிறேன். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே...

      நீக்கு
    3. அம்மா அதற்குத்தான் முயற்சி செய்கிறேன்....மிக்க நன்றி அம்மா..

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
    4. வாங்க கீதா! என்ன ஆச்சு? எதுக்குப் போற்றுவார் போற்றல்! தூற்றுவார் தூற்றல்? இதுக்கெல்லாம் அசரலாமா? இதை எல்லாம் எதிர்த்து விடலாம்.

      நீக்கு
  6. டாக்டர் நடராஜனின் வாழ்க்கையே முதியோர்களுக்காக
    டெடிகேட் செய்யப்பட்டது.
    சொல்வதை 100% பின்பற்றாவிட்டாலும் பாதியாவது செய்யலாம்.
    முக்கியமாகப் புலம்புவது:)

    பதிலளிநீக்கு
  7. "நித்திரையும் வரவில்லை
    நிம்மதியும் இல்லை."


    அருமையான மரக் கவிதை.
    மரங்கள் , செடிகள் ,ஏன் இலைகள் எல்லாவற்றுக்கும்
    உணர்வு உண்டு என்று விஞ்ஞான பூர்வமாகவே நிரூபித்திருக்கிறார்கள்.

    உங்கள் கவிதையும் அழகாக அதைச் சொல்கிறது.
    சம்மதம் தராத மரம் தானும் நிம்மதி இழந்து
    தன்னை உபயோகிப்பவர்களின் நிம்மதியையும்

    தடுக்கிறது. இருவருமே நஷ்டப்படுகிறார்கள்.
    எஸ்.ரா அவர்களின் எழுத்தும் உங்கள் கவிதையும் அசத்துகின்றன. வாழ்த்துகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம், ஸ்ரீ பற்றி வாசித்து வரும் போது உங்கள் மனதில் எழுந்த கேள்விகளே எனக்கும் எழுந்தது.

    //"இல்ல சார்..சில வீடுகளில் இது மாதிரி நடந்திருக்கும். சிலபேர் வெளியில் சொல்வாங்க.. சிலபேர் சொல்ல மாட்டாங்க.. உங்களுக்கே கூட இப்பவும் உங்க முன்னோர் யாராவது உங்களை பெரிய ஆபத்திலிருந்து காப்பாத்திக்கிட்டுதான் சார் இருப்பாங்க.. நாம் அதை உணர்வதில்லை. நமக்கு தெரியலை அவ்வளவுதான். அனுபவம் வர்ற வரைக்கும் நம்ப முடியாதுதான் சார்" //

    ஆம் ஸ்ரீராம். நமக்கு அனுபவம் ஏற்படாத வரை. இது அமானுஷ்யத்துக்கு மட்டுமல்ல.

    வாழ்க்கையில் யதார்த்த அனுபவங்களை, கஷ்டங்களை அவ்வளவாகச் சந்தித்திராதவர்கள், அல்லது சந்தித்தும் அது மனதில் பதியாமல் இருந்தால், அல்லது நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், உறவுகளின், நட்புகளின் அனுபவங்களைக் கவனத்தில் கொள்ளாமல் இருந்தாலும், நாம் சொல்லும் சில யதார்த்த அனுபவங்கள், கதைகள் அவர்களுக்கு வேடிக்கையாய்த்தான் இருக்கும். இப்படி எல்லாம் நடக்குமா? சும்மா, கதை கட்டறா...நம்பமுடியலை, யதாத்தம் இல்லை, இப்படி எல்லாம் நடக்க சான்ஸே இல்லை என்று சொல்வதுண்டே.

    நல்ல கதைகள் வர வேண்டும் என்றால் நல்ல அப்செர்வர், நல்ல லிசனராக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. இது உண்மை நிகழ்வு. நீங்க நல்ல லிசனர்னு தெரியுது ஸ்ரீராம்.

    எனவே, உங்கள் கதை எழுதும் திறனை தூசி தட்டுங்க, கூர்மையாக்குங்க ஸ்ரீராம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் கதை எழுதும் திறனை தூசி தட்டுங்க, கூர்மையாக்குங்க //

      நைஸா கதை விடறேன்னு சொல்றீங்க... சொல்லுங்க.. சொல்லுங்க... ஸ்ரீ நம்புகிறான். அவ்வளவுதான்! அவன் சொன்ன மாதிரி ஒரு அனுபவம் இல்லா விட்டால் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான்!

      நீக்கு
    2. ஆன்மீகம், அமானுஷ்யம் - இதனை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே முழுமையாக நம்ப முடியும்.

      அந்த நபர் மீது அசாத்திய நம்பிக்கை, பக்தி வைத்திருப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்கள், கனவு கண்டிருப்பான், பூ சுற்றுகிறான் என்று சொல்லிக் கடந்துவிடுவார்கள்.

      ஸ்ரீ.எம் தன் இமயமலையின் இதய குரு புத்தகத்தில் தான் நாக உலகத்திலிருந்து வந்தவரைச் சந்தித்ததை, இன்னும் பல்வேறு நிகழ்வுகளை எழுதியிருக்கிறார். எத்தனை பேரால் அதனை நம்ப முடியும்?

      எனக்கு நிகழ்ந்த இரு நிகழ்வுகளை, என் வீட்டிலேயே நம்பவில்லை. (மூன்றாவது, சாவி கிடைத்தது..அதனை எனக்கே நம்புவது ரொம்பக் கடினமாக இருந்தது)

      நமக்கு நித்யானந்தா ஒரு காமெடி பீஸாகத் தோற்றமளிக்கிறார். ஆனால் அவரால் பலனோ, குணமோ பெறாமல் இப்படி கண்மூடித்தனமாக அவருக்கு சீடர்கள் இருக்க முடியுமா?

      நீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  10. மதன் ஜோக்ஸ் - வழமை போலவே அசத்தல்.

    ஸ்ரீ - அமானுஷ்யம் தான். நெல்லைத் தமிழன் நேற்று கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது - இந்த வியாழனில் தொடர் முடியுமா? ஹாஹா...

    முதுமை குறித்த விஷயம் - சிறப்பு. நேரடியாகவே வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறேனே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா..  ஹா...  நெல்லையின் கேள்வி இப்போதும் தொடருமா?  இப்போ முடிஞ்சுட்டுதுன்னு அர்த்தமா, இல்லை தொடருமா?!!

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  11. முதுமைக் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பல குறிப்புகள் வாட்ஸாப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வந்து கொண்டிருக்கின்றன. நேற்று பேப்பரில் 65 வயது வரை இளமை, அதன் பிறகு 85 வயது வரை நடு வயது, 85 வயதிற்கு பிறகுதான் முதுமை என்று WHO அறிவித்துள்ளதாக படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த அறிவிப்பெல்லாம் மேற்கத்தையவர்களுக்கு. நம்மில் பெரும்பான்மை, அறுபது ஆகிவிட்டாலே, ஏதோ இறப்பு என்ற சினிமாவுக்கு டிக்கட் எப்பவும் வந்துவிடும் என்று இறப்பை எதிர்பார்த்து முதுமையைச் சீக்கிரம் வரவழைக்கிறார்கள்.

      65 என்பதே சீனியர் சிடிசன் என்றாகிவிட்டது.

      நீக்கு
    2. WHO தனக்குத் தோன்றியதை எல்லாம் அறிவிக்கும் போல...   நாற்பது வயதில் மறைபவர்கள் கருவிலேயே காணாமல் போய்விடுகிறார்கள்!  முப்பது இருபது வயதுகளில் மறைபவர்கள் முன் ஜென்மத்திலேயே இருந்து விடுகிறார்கள்!!!  ஹிஹிஹி...

      நீக்கு
  12. கட்டில் கவிதை அருமை! நீங்கள் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கவிதை புத்தகம் வெளியாகும் நாளை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா... கவிதை புத்தகம்? இது சம்பந்தமாய் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது! பின்னர் சொல்கிறேன்!

      நீக்கு
  13. இந்த ஸ்ரீ கதை ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோஹினி யின் துவக்க காட்சிகள் போன்று உள்ளது. இந்த சீரியலை  பார்த்தீர்களா? அப்படி என்றால் இந்தக் கதை கனவில் வந்திருக்க வாய்ப்பு உண்டு. 

    முதுமைக்காலம்: ஓய்வின் பின் 12 வருட experience ஆனதால் பலவும் பழக்கம் வழக்கம். ஒரு சிறிய திருத்தம். முதுமை என்பதே சார்ந்து வாழவேண்டிய  நிர்பந்தம். கணவன் மனைவியின் புரிதல் தொடங்குவது திருமணம் செய்தவுடன் என்றால் அந்த புரிதல் முற்று பெற்று ஒருவரை மற்றவர் சார்ந்து வாழும் காலம் முதுமை. எதிர்பார்ப்பில்லாத உண்மையான அன்பு அப்போது தான் துவங்குகிறது. 

    கவிதை: கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடும். ஸ்ரீராம் வீட்டு கட்டிலும் சந்தம் பாடும், சத்தம் போடும். ஒரே ஒரு சந்தேகம். மரம் இறந்தபின் தானே கட்டில் ஆகியது. இறந்தபின் வாழ்ந்ததை எவ்வாறு நினைவு கூற முடியும்.  

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை..  கொஞ்சம் வாயை ஊது என்று சொல்லவில்லை!   ஹா..  ஹா.. ஹா...  நான் சீரியல் எல்லாம் பார்பபதில்லை ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்..  இது ஸ்ரீ சொன்னது..   அவ்வளவுதான்.

      முதுமை பற்றி நீங்கள் சொல்லி இருப்பது சரி.

      வெட்டினாலும் மரம் இறப்பதில்லை என்பது போல சொல்கிறார்கள்!  அல்லது அதன் சாபம் அந்த மரத்தில் தங்கிவிடுமோ என்னவோ!

      நன்றி JC ஸார்...

      நீக்கு
  14. ஸ்ரீராம் முதுமை பற்றிய டாக்டரின் கருத்துகள் நல்லாருக்கு. ஆனால் பலருக்கும் பலதும் வாய்ப்பதில்லையே.

    அது போன்று பக்குவமும் முதுமையை ஏற்று அதற்கு ஏற்றார் போல் நடக்கும் மனப்பக்குவம்.

    நம் மக்கள் 50 வந்துவிட்டாலே ஹையோ வயசாயிடுச்சு என்று சொல்லத் துவங்கி, எதுவும் முடிவதில்லை என்றும்.

    முதுமையை மகிழ்ச்சியாக அனுபவிக்கு முதலில் சிறு வயதிலிருந்தே வேலைகளை நாமே செய்யும் பழத்திற்குப் பழகிவிட வேண்டும். (டாக்டர் நடுத்தரவயது என்கிறார். ஆனால் என்னைக் கேட்டால் சிறு வயதிலிருந்தெ அந்தப் பழக்கம் வந்துவிட வேண்டும்.) இல்லை என்றால் டக்கென்று வராது. கஷ்டப்பட வேண்டிவரும்.

    முன்பெல்லாம் ஆண் பிள்ளைகளை வீட்டில் வேலை செய்ய விடாமல் பழக்கி வந்தார்கள். அதனால் சார்ந்திருப்பது அதிகமாகியது. காபி கூட கையில் கொண்டு அதுவும் சரியான சூட்டில் கொடுத்தால் தான் என்று இருக்கும் ஆண்களும் உண்டு.

    இப்போது பெண் பிள்ளைகளும் அப்படித்தான் வளர்கிறார்கள். கூடவே எல்லோரும் வேலையும் பார்ப்பதால் பணம் கொடுத்தால் ஆட்கள் கிடைத்து விடுகிறார்கள். ஆர்டர் செய்தால் உணவு வீட்டுக்கு வந்துவிடுகிறது என்பதால் சோம்பேறித்தனம் அதிகமாகிறதொ என்றுதான் தோன்றுகிறது. இதுவும் சார்ந்திருப்பதான் இல்லையோ?

    ஒரு நாள் வீட்டு வேலை செய்யும் ஆள், அல்லது உணவு கொண்டு வருபவர் தாமதமானாலோ, கொண்டு வரவில்லை என்றாலோ முதுமையிலும் டென்ஷன் தான். எனவே கூடிய வரை தன் கையே தனக்குதவி. ஆனால் முதியவயதினர் உடல் நலக் குறைவால் கஷ்டப்பட்டால், கூட ஆள் இல்லை என்றால் மிக மிகக் கஷ்டம். எனவே ஆரோக்கியம் முக்கியம். மிக முக்கியம். மிக மிக முக்கியம். படுக்காமல் டக்கென்று போய்விட வேண்டும்.

    இப்போது தலைமுறையினரில் இருவரும் சம்பாதிப்பதால் வயதாகும் போது இருக்கவே இருக்கு பல முதியோர் இல்லங்கள் 5 ஸ்டார் போன்று!!! அப்படிச் சென்ற நம் தலைமுறையும் இருக்கிறார்கள். எல்லாம் கையில் வரும். எல்லாத்துக்கும் ஆள் உண்டு. கையில் பணம் இருந்தால்!!

    ஆனால் நடுத்தர வர்கம் கண்டிப்பாக முதுமையில் சார்ந்திருக்காமல் இருப்பதைக் கொஞ்சமேனும் கற்றுக் கொள்ள வேண்டும். நம் மக்கள். மேலை நாட்டினர் போல் இல்லை நாம். அவர்கள் 90 வயதிலும் கார் ஓட்டுவார்கள். ஜாகிங்க் செல்வார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்களை வேலைக்குப் பழக்கும் இந்த விஷயம் அந்தக் காலத்தில் எல்லாம் இருந்தது.  உதாரணம் நான் இருக்கிறேனே...  ஹிஹிஹி...  இந்தக் காலத்தில்தான் ஒரு வேலையும் தெரியாமல் இருக்கிறார்கள்.  உதாரணம் என் மகன்கள்!!!   வளர்ப்பவர்கள் சரியில்லை!
      முதுமை ஆனால் புரிந்துகொள்ளும் தன்மை வளரவேண்டும்.  ஒரு அமைதியும், பக்குவமும் வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம்.  நடைமுறையில் அப்படி இருப்பதில்லை.  

      நீக்கு
    2. //வீட்டில் வேலை செய்ய விடாமல் பழக்கி வந்தார்கள். // - இது எல்லார் வீட்டிலேயும் கிடையாது. என் உறவினர், அவரது மகன்களை எல்லாவற்றிலும் பழக்கி இருந்தார். இவங்க, மகன் வீட்டுக்குப் போகும்போது, மனைவி வீட்டில் இல்லை என்றாலும், முழுச் சமையலையும் மகனே செய்துவிடுவாராம். எல்லாம் பழக்குவதில்தான் இருக்கிறது. என் நண்பன், சின்ன வயதிலிருந்தே சமைப்பான். தான் சமைத்து தன் அப்பாவுக்கும் போடுவானாம் (ஒரிஜினல் அம்மாவை விட்டு வெளியே வந்த பிறகு).

      நீக்கு
  15. ஸ்ரீ - நல்லதொரு நம்பிக்கையே...

    கவிதை வரிகள் அருமை...

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம், கவிதை அட்டகாசம், போங்க!. எங்கேயோ போய்ட்டீங்க. உங்கள் சிந்தனைகள் கற்பனைகள் விரிந்து கொண்டே போகிறது. சூப்பர்! பாராட்டுகள்! கடைசி வரி நச்!

    என் பாட்டி என்னை துளசி பறிக்கச் சொன்னால் அல்லது பவழ மல்லி பொறுக்கச் சொன்னால் சொல்வார், பெர்மிஷன் வாங்கிச் செய்யணும் என்று. சொல்லிவிட்டுச் செய் என்பார். மாங்காய் பறித்தாலும் சரி...கூடவே நன்றியும். அவற்றிற்கும் இறைவனுக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதிர்ந்த மலர்களை பொறுக்கக் கூட அனுமதியா?  பறிக்க என்றால் ஓகே...   கவிதை பாராட்டுக்கு நன்றி கீதா.

      நீக்கு
    2. துளசிச் செடியில் இலை பறிப்பதற்கு முன்பு, 'இந்த இலைகளை நான் பெருமாளுக்கு ஆராதனை செய்யத்தான் பறிக்கிறேன். அதற்காக என்னை க்ஷமிக்கணும்' என்ற அர்த்தத்தில் ஸ்லோகம் சொல்லித்தான் பறிக்கவேண்டும்.

      ஜப்பானியர்கள், மரத்தை வெட்டுவதற்கு முன்பு, அதனிடம் ப்ரேயர் சொல்லி பிறகுதான் வெட்டுவார்கள் என்று படித்திருக்கிறேன்.

      நீக்கு
  17. ஜோக்ஸ் ஹாஹாஹா மதன் மதன் தான்! செம! ரொம்ப ரசித்தேன்.

    செல்லங்கள் பற்றிய ஜோக்ஸ் கார்ட்டூன் செம. அதுவும் "இதுக்கு மட்டும் பேசத் தெரிஞ்சா...." 100 விழுக்காடு சரி!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! நம் முன்னோர்களின் ஆசிகள் எப்பொழுதும் நமக்கு உண்டு என்று உணர்ந்திருக்கிறேன். நம் நன்றிகளை நீங்கள் கூறியது போல, அமாவாசை அன்றும், அவர்களின் திதி வரும் பொழுதும் அவர்களுக்கு பூஜை செய்து , காக்கைக்கு சாப்பாடு வேண்டும்.
    தச்சர்கள் இவ்வாறு மரங்களிடம் அனுமதி கேட்பதை இப்பொழுது தான் கேள்விபடுகிறேன். சில வருடங்கள் முன் நான் படித்த கதை( பெயர் நினைவில்லை) ஒன்றில், நகை செய்கின்ற ஆசாரி ஒருவர், எட்டி மரத்தின் கீழே அமர்ந்து, சோகமான மனநிலையில், தங்கச்சங்கிலி ஒன்றை செய்வார். அதை வாங்கி அணிந்து கொண்ட பெண்மணியும் துன்பத்தையே அனுபவிப்பாள். தூய எண்ணம் கொண்டு செய்யப்படுகின்ற எந்த ஒரு பொருளும் நன்மையே செய்யும்.
    கவிதையும், மதன் ஜோக்ஸும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வானம்பாடி.  வணக்கம்.  நீங்கள் சொல்வது சரி.  சமையல் கூட அப்படி சொல்வார்கள்.  சமைப்பவர் மனம்போல் சமையலும், சாப்பிடுபவர் மனமும் அமையும் என்று.

      நன்றி வானம்பாடி.

      நீக்கு
  19. முன்னோர்கள் தெய்வமாக இருந்து காத்து வருவதை நாம் அனைவருமே உணர்ந்திருப்போமே! ஶ்ரீக்கு இன்னும் அதிகமாய்த் தெரிய வந்திருக்கு. மதன் ஜோக்ஸ் வழக்கம் போல் அருமை. கட்டில் கவிதையைக் கட்டிலில் இருந்து படிக்கலை நல்லவேளையா! உங்கள் கவிதை எழுதும் கற்பனைத் திறன் அபாரம். இந்த நடராஜன் மருத்துவர் முதியவர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கார். இப்போ அவரும் முதியவராய் இருப்பார்.

    பதிலளிநீக்கு
  20. சமைக்கும்பொழுது நல்ல விஷயங்களை நினைக்கணும்/மனதில் எந்தவிதமான கெட்ட எண்ணங்களும் இருக்கக் கூடாது என்பார்கள். யார் சமைக்கிறார்களோ/எந்த எண்ணத்தில் சமைக்கிறார்களோ/அதைச் சாப்பிடுபவர்களுக்கும் அதே எண்ணங்கள் வரும் என்பார்கள். இன்னும் சொல்லப் போனால் தானியங்கள் விளையும் நிலம்/ எந்தக் களஞ்சியத்திலிருந்து வருகிறது என்பது வரை அதன் தாக்கம் இருக்கும். எப்படிப் பட்ட நல்லவர்களும் மனதில் கெட்ட எண்ணத்தோடு சமைத்ததைச் சாப்பிட்டால் அதன் தாக்கம் அவங்களுக்கும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீ பற்ற்ய செய்திகள் HALUCINATIONS போல்தோன்று கிறது

    பதிலளிநீக்கு
  22. //எங்க குலதெய்வம் ராக்கச்சி அம்மன்.. ஆனால் இவர்களையும் போட்டோ மாட்டி கும்பிடுவோம் சார்"//

    எப்படியோ குலதெய்வமும், அந்த ம்மாவும் காப்பாற்றி விட்டார்கள். தொடர்ந்து அருள்புரிந்து காப்பாற்றி வரவேண்டும்.

    முதுமை வைத்தியர் நடராஜன் அவர்கள் கருத்துக்கள் எப்போதும் பிடிக்கும்.
    படிப்பேன் அவர் கட்டுரைகளை.
    நீங்கள் பகிர்ந்தது அருமை. பயனுள்ளது.

    //அதற்கு பொருத்தமான மரங்களைக் கண்டதும் தச்சர்கள் அதனிடம் சென்று இதுமாதிரி உன்னை நான் இதுவாக செய்யப்போகிறேன் உனக்கு சம்மதமா என்று கேட்பார்களாம். //
    அதற்குதான் பல மரங்களை பார்ப்பார் தச்சர் என்று சொல்வார்கள் போலும் !

    உங்கள் கவிதை அருமை.

    நகைச்சுவை பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  23. ஜோக்ஸ் கவிதை முதுமை ஆலோசனைகள் அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு
  24. இந்த மரம் வெட்டும் சமாச்சாரம் முகவும் சிக்கலானது.. இதனால் வாழ்ந்தவர் சிலரே..

    இப்படியான மரத்தைத் தாய் வீடாகக் கொண்டு வாழ்ந்த ஜீவராசிகளின் சாபத்தை முறையாகத் தடுக்க வில்லை எனில் விபரீதம் தான்..

    இதைத் தடுக்க வல்லது குல தெய்வ வழிபாடு...

    முதலில் குல தெய்வத்திடம் அனுமதி வாங்க வேண்டும்.. இதில் ஏகப்பட்ட் மர்மங்கள் உள்ளன..

    அத்தனையையும் இங்கே விவரிக்க இயலாது...

    பதிலளிநீக்கு
  25. வழக்கம் போல பதிவு அருமை..
    சிறப்பு...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!