வியாழன், 3 மார்ச், 2022

இளமைக் காலங்கள்...

என் மகன்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  அவர்களுடைய பள்ளிப்பருவம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் அண்ணனும் தம்பியும்.  நான் என் பள்ளி கால வாழ்க்கை பற்றி பேசினேன். நான் படிக்கும்போது ஸ்கூல் பஸ் என்று ஒன்று இருந்த மாதிரி நினைவில்லை.  அவரவர் டவுன் பஸ்ஸில்தான் வருவார்கள்.  அருகில் இருப்பவர்கள் மட்டுமல்ல, தூரமாயிருந்தாலும் நடந்து வந்து விடுவார்கள்.   மிகச்சிலர் சைக்கிளிலும், மிக மிகச்சிலர் அப்பா வண்டியிலும் வருவார்கள். 

வழக்கமான பள்ளி நேரத்திலிருந்து திடீரென ஒரு நாள் ஷிஃப்ட் ஸிஸ்டம் அறிமுகமானது.  காலை எட்டு மணிக்கு முதல் ஷிஃப்ட் தொடங்கிவிடும்..  ஒருவேளை ஏழரையோ...   இயற்கை உபாதைக்கு பத்து நிமிடம் தவிர வேறு இடைவேளை கிடையாது.  எனினும் அந்த முறை எங்களுக்குப் பிடித்திருந்தது. மதியம் இன்னொரு ஷிஃப்ட். 

பள்ளியில் இருந்த தொட்டியிலிருந்து நீரை மொண்டோ, அங்கு இணைக்கப்பட்டிருக்கும் குழாயிலிருந்தோ தண்ணீரைப் பிடித்தோ குடித்தது நினைவில் இருக்கிறது.  இப்போது அப்படிக் குடிப்போமா? 

பள்ளி செல்லும்போது தஞ்சை ஹவுசிங் யூனிட்டிலிருந்து கிளம்பி நடந்து செல்வது வழக்கம்.  தஞ்சை சரபோஜி காலேஜுக்கு முன்னர் இருந்தது ஹவுஸிங் யூனிட்.  சுமார் 600 முதல் 700 வீடுகள் வரை இருக்கும் என்று நினைவு.  வருமானத்துக்கு தக்கவாறு A பிளாக், B பிளாக், C பிளாக் என்று இருக்கும்.  ஒன்றிரண்டு D பிளாக் கூட இருந்தது. பள்ளி விட்டு வந்ததும் விளையாட பிளே கிரௌண்ட், மாலை பொழுது போக்க பார்க், மாதத்துக்கு ஒன்றிரண்டு சினிமா {அசோசியேஷன் சந்தா என்று மாதா மாதம் ஒரு தொகை வசூலிக்கப்படும்)  ஓட்டப்போட்டி, கோலப்போட்டி, ஆடல், பாடல், காலை நிகழ்ச்சிகள் என்று சுதந்திர தின, குடியரசு தின கொண்டாட்டங்கள்..    

இவ்வளவு வீடுகள் இருப்பதால் ஏராளமான நண்பர்கள் ஒவ்வொரு வயதினருக்கும் உண்டு.  பள்ளிக்கு அரட்டை அடித்துக் கொண்டே நடப்பதாகட்டும், வழியில் புளியம்பழம் அடிப்பதாகட்டும், மாங்காய் திருடுவதாகட்டும், மாட்டிக் கொள்வதாகட்டும்..  சுவாரஸ்யமாய் கழிந்த பொழுதுகள்..   

முதலில் - இங்கு ஹவுஸிங் யூனிட்டுக்கு வரும் முன்னர் - சில நாட்கள் பஸ்ஸில் சென்றிருக்கிறோம்.  சோழன் போக்கு வரத்துக் கழகம், வெண்சங்கு தனியார் பஸ்..  அங்கும் நண்பர்கள் போதுமான அளவில் இருந்தனர்.  

மருத்துவக் கல்லூரிக் குடியிருப்பில் வசித்த சமயம், என் அக்கா பள்ளி விட்டு வந்தபோது ஒரு மருத்துவக்கல்லூரி மாணவன் வழிமறித்து ஏதோ பேச முற்பட அக்கா கல்லிலும். முள்ளிலும் விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்து வீட்டில் சொல்ல, அப்பா கையில் பெரிய டார்ச்சுடன் என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்.  பேச முற்பட்ட மாணவன் தன் பெயர் சொல்லி இருந்ததால், அரைமணி நேரத்தில் அங்கிருந்து அவனை எளிதாகக் கண்டுபிடித்து டோஸ் விட்டுத் திரும்பினார்.  அப்பா மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில்தான் வேலை பார்த்தார். 

பின்னர் வீடு மாறி ஹவுஸிங் யூனிட் வந்தபின் பள்ளிக்குப் போகும்போது நான் பார்த்த அப்போது ரிலீசான படங்களின் கதைகளை என் கற்பனையையும் சேர்த்து இழுத்து இழுத்து சொல்லிக்கொண்டே செல்வேன்.  அதற்கொரு செட் உண்டு.  கார்த்தி சொல்வான் " நான் படம் பார்த்துட்டேன்.  நீ சொல்லும் பல ஸீன்ஸ் அதுல இல்லைய்யா.. ஆனா நீ சொல்றது சுவாரஸ்யமாய் இருக்கு" என்பான்.  ஒருவன் என் புத்தகங்களையும் சேர்த்து தூக்கிக் கொண்டு வருவான்!! 

என் மகன்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கக்கூடிய இடத்தில் வசிக்கும் அந்த பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நான் வழங்கவில்லை.  வழங்க முடியவில்லை.  நான் வசித்த இடத்தில் நான்கே வீடுகள்.  அதிலும் இவர்கள் வயதொத்த மாணவர்கள் இல்லை.   எனினும் இப்போது அவர்கள் சொல்லும் அவர்கள் பள்ளிக்கால அனுபவங்கள் வேறு வகையில் அவர்களுக்கு சுவாரஸ்யமாகவே இருந்திருக்கிறது என்பது அவர்கள் உரையாடலில் தெரிந்தது.  இவர்கள் நேரத்தில் பள்ளி பஸ்கள் வந்து விட்டன.   

என் அளவுக்கு இவர்கள் பள்ளிப்பருவ விளையாட்டுகளை அனுபவிக்கவில்லை என்று நான் சொன்னேன்.  தீபாவளி சமயங்கள் நாங்கள் ஒரு பெரும் குழுவாக தெருத்தெருவாக சுற்றிய அனுபவங்களை சுவாஸ்யத்துடன் கேட்டுக்கொண்டார்கள்.  ஆனால் அவர்கள் அதை ஒத்துக் கொண்டாலும் தங்கள் இளமையில் இவற்றை இழந்ததை பெரிதாக நினைக்கவில்லை.  அவர்கள் குறைந்த நண்பர்களுடன் வேறு அனுபவங்கள் வைத்திருந்தார்கள். 

இப்போது நான் வசிக்கும் இடத்தில் பார்க்கிறேன்.  தெருவில் குழந்தைகள் விளையாடுவது, கூடிக் களிப்பது மிக மிகக்குறைவாகவே இருக்கிறது.  கொரோனா வேறு இயற்கையான வாழ்க்கை முறையை மிகவும் மாற்றி விட்டது.  சுவர்களுக்குள் ஒடுங்கிய வாழ்க்கை வாழ்கிறோம்.  எங்கள் அபார்ட்மென்ட்டில் ஒரு வீட்டில் இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.  நம்ப மாட்டீர்கள், இந்த இரண்டு வருடங்கள் அவர்கள் இங்கேயேதான் இருக்கிறார்கள், ஆனால் யார் கண்ணிலும் படவில்லை.  அவர்கள் வீட்டுக் கதவு எப்போதும் மூடியே இருக்கும்.  இப்போது பள்ளிகள் திறந்த பிறகுதான் கண்ணில் படுகிறார்கள்.  எப்படி இப்படி சிறு குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே யார் கண்ணிலும் படாமல் இருந்தார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கும். 

அன்றொரு நாள் வரும் வழியில் அங்கிருந்த பார்க்கின் அருகில் பள்ளி இறுதி வகுப்பு படிக்கக்கூடிய ஏழெட்டு மாணவர்கள் சைக்கிளில் அமர்ந்தும், சைக்கிளை சாய்த்து வைத்து மரத்தில் சாய்ந்தும் பேசிக் கொண்டிருந்ததை பார்க்கும்போது கடந்த என் பள்ளிக்கால நினைவு வந்து பெருமூச்சு விட வைத்தது.  

அதை என் மகன்களிடம் சொன்னபோதுதான் இந்த உரையாடல் எல்லாம். மகன்கள் தங்கள் கால இளமை போல இப்போதிருக்கும் குழந்தைகள் இளமைக்காலம் இல்லை என்கிறார்கள்.  

இப்போதிருக்கும் இளமைகள், தங்கள் கால கேட்ஜெட்டுகள், விஞ்ஞான வசதிகள் உங்கள் காலத்தில் இல்லையே என்று சிரிக்கிறார்கள்.  நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் ஃபோனையே முதலில் பார்த்தேன் என்பதை ஆச்சர்யத்துடன் கேட்கிறார்கள்.   டயல் செய்யும் வகையான பழைய போன் அது.  அப்போது புதுமை.  அதுவும் இதற்காக அப்பாவின் ஆபீஸ் சென்று பார்த்து வந்தோம் என்பதையும் வியப்புடன் கேட்கிறார்கள். அந்த ஃபோனே இப்போது உபயோகத்திலேயே இல்லை! அந்த நாள் போல இந்த நாள் இல்ல என்று நான் ஒரு பின்னூட்டத்திற்கு பதில் சொன்னதும், பானு அக்கா, 'வயதாகிறது' என்று பதில் சொன்னதும் .நினைவுக்கு வருகிறது.

 ========================================================================================================== 

ரசித்த என்கிற வகையில் வராமல் மனதை கனக்க வைத்த புகைப்படமும், செய்தியும்.

வாட்ஸாப்பில் கிடைத்த ஒரு புகைப்படமும், அது பற்றிய செய்தியும்... 1945 இரண்டாம் உலகப்போரின் ஜப்பானில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. 

பிணங்களை தகனம் செய்யும் போது, இறந்த தன் தம்பியை தகனம் செய்யும் நேரத்துக்காக தகன மேடைக்கருகே காத்திருந்தான். இந்த படத்தை எடுத்த அமெரிக்க புகைப்படக் கலைஞர் 'ஜோ ஓ டோனெல்' இப்படம் எடுத்தபோது நிகழ்ந்த சம்பவத்தை இவ்வாறு நினைவுக்கூருகிறார். 

"இந்த படத்தை எடுக்கும் போது, இறந்த தன் தம்பியை சுமந்தப்படி நின்றிருந்த சிறுவன் பீறிட்டு வரும் அழுகையை நிறுத்த, உதடுகளை கடுமையாக கடித்துக்கொண்டு விம்மிக்கொண்டிருந்ததில் உதட்டோரத்தில் இரத்தமே கசிந்திருந்தது 

அப்போது அங்குள்ள தகனம் செய்யும் பணியாளர் 'உன் மூட்டையை கொடு' என்று சிறுவனிடம் கேட்டார். அதற்கு அவன் 'இது மூட்டை இல்லை. என்னுடைய தம்பி' என்று சொன்னான்". ஜப்பானில் இன்றும் இந்த படம் நம்பிக்கையின் சின்னமாக உள்ளது.




====================================================================================================== 

வீட்டில் பழைய புத்தகங்களுக்கு நடுவில் ஒரு சிறு கையெழுத்து நோட்டு கிடைத்தது.  அது என்னவென்று பார்த்தால் அப்பாவின் கைநோட்டு!  அப்பா ஃபிஃப்த் ஃபார்ம் படிக்கும்போது எழுதியது.  ஸ்கவுட் நோட்டு.  

அதில் எழுதி இருந்த ஸ்கவுட் க்ளாஸ் குறிப்புகளை அடித்து விட்டு தன் அக்கவிதை நோட்டாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.  அவர் சுபாஷ் சந்திரபோஸின் பக்தர் என்பதால் தன் புனைப்பெயரையே சுபாஷ் சந்திரன் என்று வைத்துக் கொண்டவர்.  அவர் 1949 ம் வருடம், தனது திருமணத்துக்கு முன் 'வாழ்க்கைத்துணைவி' என்று தலைப்பிட்டு எழுதிய கவிதைதான் இந்த வார கவிதை!  கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டியிருக்கும்.  எழுதப்பட்ட ஆண்டு, அந்தக் கால பேப்பர்!


=======================================================================================================

பேஸ்புக்கில் படித்த ஒரு சுவையான விஷயம்.  எழுத்தாளர் எஸ். குமார் பகிர்ந்திருக்கிறார்.  அதை இங்கு உங்களுக்கு படிக்கக் கொடுக்கிறேன்!


                                          





=================================================================================================

மதன் என்றால் ஜோக்ஸ் மட்டும்தானா?  இந்த வரம் சில அரசியல் கார்ட்டூன்ஸ்...





ஜோக் மாதிரி ஒன்று...    அந்த 'கிண்டல் ஸ்பெஷல்' இதழ் ஜெகஜோதியாய் ரசிக்கும்படி இருந்திருக்கும் இல்லை!



வித்தியாசமான, நல்ல கேள்வி...!

பொன் பெரிதா?  பெண் பெரிதா?

========================================================================================================

இந்த வாரம் இதோடு விடைபெறுவோமா...!


120 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நோயில்லா நல் வாழ்வு இறைவனிடம் வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் அனைவருக்கும்
    மாலை வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் தந்தையின் கவிதை
    வார்த்தைகளுக்கு மேற் பட்டது.
    அழகும் அன்பும் சொற்களிலுறைந்து இருக்கிறது.
    வரும் மனைவிக்கு இத்தனை மதிப்புரையா.!!

    இருவரும் அன்யோன்ய தம்பதிகளாக இருந்திருக்க வேண்டும்.
    அற்புதமான கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா. எழுத்துகள் மங்கலாகத் தெரிகிறதா? எளிதாக, முழுமையாக படிக்க முடிந்ததா?

      நீக்கு
    2. நன்றாகப் படிக்க முடிந்தது அப்பா.
      நல்ல தமிழ் . மனசு எல்லாம் மனைவி.
      கொடுத்து வைத்த தம்பதி.

      நீக்கு
  4. ''பள்ளியில் இருந்த தொட்டியிலிருந்து நீரை மொண்டோ, அங்கு இணைக்கப்பட்டிருக்கும் குழாயிலிருந்தோ தண்ணீரைப் பிடித்தோ குடித்தது நினைவில் இருக்கிறது. இப்போது அப்படிக் குடிப்போமா? ''

    இதுதான் எனக்கு இன்னும் வியப்பு. அப்போதெல்லாம்
    அந்த தண்ணீர் மேல் தொட்டியிலிருந்து
    கீழே நாலு குழாய்களில் வரும்.
    எடுத்துச் சென்ற டிஃபன் டப்பாவை அலம்பிவிட்டு
    அதிலேயே தண்ணீர் பிடித்துக் குடிப்போம்.

    ஒன்றும் ஆகவில்லை. இப்பொழுது எல்லாமே தலைகீழ்.
    பாதுகாக்கப் பட்ட தண்ணீர் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா..  அந்தத் தொட்டியை எட்டிப் பார்த்திருக்கிறேன்.  இப்போது நினைத்தால்...

      நீக்கு
  5. கிண்டல் இதழ் சூப்பர் சிரிப்பு.
    பெண் பார்த்து பெண் அழுகை:( :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்காவது எப்போதாவது வேறு பைண்டிங்கை எடுக்கும்போது அதில் இந்த கிண்டல் சிறப்பிதழின் பக்கங்கள் கிடைக்கக் கூடும்!

      நீக்கு
  6. ஜப்பானியச் சிறுவன். அச்சோ மனம் கொதிக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. அருமையான சம்பவங்கள் நிறைந்த பள்ளிப் பருவ காலம்.
    இப்பொழுது அனைத்தும் மாறி விட்டது,.
    நீங்கள் உங்கள் பிள்ளைகளோடு ஒப்பிட்டுக் கொண்ட அழகு இனிமை.
    ஸ்ரீராம்.
    கையில் கொஞ்சம் வலி இருப்பதால் மீண்டும்
    எங்கள் காலையில் பார்க்கலாம்.
    என்றும் நலமுடன் இருங்கள்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் கையில் வலி?  எனக்கு கூட கணினியை ஒரே மாதிரி பிடித்துக்கொண்டே இருப்பதால் சென்ற வாரம் வலி இருந்தது...  உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா.

      நீக்கு
    2. எல்லாம் ஒரு அனுபவம் தான்.:)

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் நிம்மதி நிலைக்கப் பிரார்த்தனைகள். உக்ரேனிலிருந்து வெளிநாட்டவர்கள் அனைவரும் அவரவர் நாடுகளுக்குப் பாதுகாப்பாய்ச் சென்றிடவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம். வாங்க கீதா அக்கா , வணக்கம்.

      நீக்கு
  9. //சுவாஸ்யத்துடன்// இன்னும் இரண்டு, மூன்று இருக்கு. பார்த்துடுங்க ஒரு தரம். நான் படிக்கும் முன்னாடியே எங்க பள்ளிக்கும், கேப்ரன் ஹால் பள்ளி, தெற்கு வாசல் கான்வென்ட் ஆகிய பள்ளிகளுக்கும் ஸ்கூல் பஸ் இருந்தது. நானும் ஒரு சில மாதங்கள் அதில் போயிருக்கேன். பின்னாட்களில் வீட்டில் வேலைகளை முடித்துவிட்டுப் பேருந்து வருவதற்குள்ளாகக் கிளம்ப முடியலை என நிறுத்தி விட்டார்கள். எனக்கும் அதுவே வசதியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா?  எழுதும்போது எனக்கு நினைவுக்கு வரவில்லை.  டி வி எஸ் பள்ளிக்கு கூட பஸ் இருந்ததோ...

      நீக்கு
    2. டிவிஎஸ் பள்ளி எல்லாம் ரொம்பவே தாமதமாக வந்தது. அப்போ நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேனோ என்னமோ! எங்க மாமா வீட்டின் பின்னால் தான் பள்ளி. மாமா கூட அப்பாவிடம் அங்கே சேர்த்துடட்டுமா என்று கேட்டார். கோ எஜுகேஷன் என்பதால் அப்பா வேண்டாம்னு சொல்லிட்டார். இப்படித் தான் கேந்திரிய வித்யாலயாவில் சேரவும் முயற்சி செய்து கோ எஜுகேஷன் என்பதோடு அப்போப் பத்தாவதோடு தான் இருந்தது. இந்த பாட்ச் பாஸாகிவிட்டால் +1 +2 வரும் என பிரின்சிபல் சொல்லியும் அப்பா சேர்க்க மறுத்துவிட்டார்.

      நீக்கு
    3. நானெல்லாம் சாதாரண பள்ளி மாணவன்!

      நீக்கு
  10. பள்ளி அனுபவங்கள் ஒவ்வொருவர் வாழ்வில் ஒவ்வொரு மாதிரி. என்றாலும் இப்போதைய குழந்தைகள் பல நல்ல அனுபவங்களை இழந்தே வருகின்றனர் என்பதும் உண்மை. எல்லாக் குழந்தைகளும் செல்ஃபோனும் கையுமாக வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்க நேரிடும்போது மனது வேதனையில் ஆழ்ந்து விடுகிறது. பாதி மனச்சிதைவுகளுக்கு இப்படிப் பிறரோடு கலந்து பழகாததே காரணம். மாணவ/மாணவிகளுக்கு எந்தச் சிறு பிரச்னையையும் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முடிவெடுக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு அனுபவத்தை அவர்கள் பார்த்தோ, உணர்ந்தோ இருந்தால் இழப்பது புரியும்.  அவர்கள் பார்க்காத, உணராததை அவர்களால் இழப்பாகக் கருத முடியாது!

      நீக்கு
    2. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் செல்ஃபோனைப் பிடுங்கினால் அது இழப்புத் தானே! :(

      நீக்கு
  11. ஜப்பானியச் சிறுவனின் இறுக்கமான முகபாவம் வேதனையைக் கொடுக்கிறது. கிண்டல் இதழ் நினைவில் இல்லை. பெண் பிறந்ததும் பொதுவாகக் கணவன் வீட்டினர் தான் அழுவார்கள்/சண்டை போடுவார்கள். குழந்தையின் அம்மாவேவா? எனக்கெல்லாம் முதலில் பெண் தான் வேண்டும் என ஆசை இருந்தது. அதேபோல் பெண் தான் பிறந்தாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பெண்குழந்தை வேண்டும் என்று நினைத்தேன்.  நடக்கவில்லை.  மகனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்!!

      நீக்கு
  12. ஜிவாஜி விஷயம் கேள்விப் பட்டதில்லை. ஆனால் சித்தப்பா தணிக்கைக்குழுவில் உறுப்பினராக இருந்தது தெரியும். மதனின் கார்ட்டூன்களும், அந்தக் கால ஶ்ரீதர்(மெரினா, பரணிதரன்) கார்ட்டூன்களும் சிறப்பாக இருக்கும். முதலில் ஶ்ரீதர் கார்ட்டூன்கள் நின்று போய் ஆனந்த விகடனில் மதன் பெயரில் கார்ட்டூன்கள் வர ஆரம்பிச்சதும் வேதனையாக இருந்தது. நினைவில் நின்றிருக்கும் விஷயம் அது. பின்னாடி தான் தெரிந்தது. ஶ்ரீதர் பணி ஓய்வு பெற்று ஃப்ரீலான்ஸராகச் (தமிழில் என்ன) செய்து வருகிறார் என்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய ஸ்ரீதர் கார்ட்டூன்கள் இருக்கின்றன.  முன்னர் சில பகிர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.  அப்புறமா வற்றைப் பகிர்கிறேன்.

      நீக்கு
  13. உங்கள் அப்பாவின் கையெழுத்தைப் படிக்கணும். முடியுமானு தெரியலை. பெரிது பண்ணிப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான கவிதை. அவர் எதிர்பார்ப்புகள் நிறைவேறி இருவரும் மனமொத்த தம்பதிகளாகவே வாழ்ந்திருப்பார்கள். நமஸ்காரங்கள்.

    பதிலளிநீக்கு
  15. நிறைய பொக்கிஷங்களை வைத்திருக்கிறீர்கள். முடிந்தவரை அனைத்தையும் பாதுகாப்பாக வைத்து விடுங்கள். குறிப்புக்களோடு! பின் வரும் தலைமுறைக்குப் பயனாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே கீதா அக்கா...? யாருக்கும் ஒன்றும் சுவாரஸ்யம் இல்லை. கவனமும் இல்லை.

      நீக்கு
    2. என்ன? இப்படிச் சொல்கிறீர்கள்? உங்க குழந்தைகளுக்குத் தமிழ் எழுதப்படிக்க வரும் தானே! :(

      நீக்கு
    3. எழுதப்படிக்க வரும்.  ஆனால் அவர்கள் எண்ணங்களை அவர்கள் அந்நிய மொழியில்தான் வெளிப்படுத்துகிறார்கள்!!

      நீக்கு
    4. ஓ!உங்களுடனுமா? :( என் குழந்தைகள்/பேத்திகள் ஆகியோருக்குத் தமிழே எழுதவும்/படிக்கவும் வராது. சூழ்நிலை அப்படி அமைந்து விட்டது. ஆனால் நாங்க எல்லோரிடமும் தமிழில் தான் கட்டாயமாய்ப் பேசுவோம். புரிஞ்சுப்பாங்க. பெரிய பேத்திக் கஷ்டப்பட்டுத் தமிழில் சில சமயம் சொல்லுவாள். குஞ்சுலுவும் தமிழில் பேசினால் நன்றாகவே புரிஞ்சுக்கும். அப்பா/அம்மா இருவருமே தமிழில் தான் பேசுகிறார்கள் ஆனாலும் அது ஆங்கிலம் தான் பேசுகிறது.

      நீக்கு
  16. பள்ளிப்பருவ நினைவுகள் சுகம். எங்கள் பள்ளி வாட்டர் டாங்கில் கும்பல் அதிகம் இருக்கும், சில நாட்கள் தண்ணீர் வராது. நாங்கள் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு வீட்டில் டிபன் பாக்ஸில் தண்ணீர் வாங்கி வருவோம். வழியில் தொடர்கதைகள் பற்றிய விவாதம் நடக்கும்.

    அப்பாவின் கவிதை மட்டுமல்ல கையெழுத்தும் நன்றாகத்தான் இருக்கிறது.

    மதனின் முதல் கார்டூன் தற்காலத்தில் கும் பொருந்துகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா.   எங்கள் பள்ளிக்கருகில் வீடு எதுவும் இல்லை.  தியேட்டர்தான் இருந்தது!  பின்னாட்களில் அங்கு சினிமா பார்த்திருக்கிறேன் (கட் அடித்து விட்டுதான்!)

      நீக்கு
  17. இப்படி இளமைக்கால நினைவலைகள் எல்லோருக்கும் உண்டு. எனக்கு நிறைய இருந்ததில்லை.

    ஜப்பான் புகைப்பட விடயம் முன்பும் பார்த்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோர் மனத்திலும் பசுமையாக இருக்கும் விஷயம் அது ஜி.  ஏன் இல்லை என்கிறீர்கள்?  நன்றி.

      நீக்கு
  18. இளமைக்கால பள்ளி நினைவுகள் எப்போதுமே அழியாகோலங்கள் தான். இன்னும் கொஞ்சம் விரிவு படுத்தி பழைய பாட புத்தகம் வாங்குவது, விற்பது, யூனிபோர்ம் இல்லாதது, 3 கி மீ நடந்து பள்ளிக்கு சென்று வருவது, மதியம் சாப்பிட கொண்டுபோகும் லஞ்ச் யாரோ சாப்பிட்டு விட்டு காலி டப்பா மட்டும் இருப்பது, 10 பைசா விஷ்டம் 40 பக்கம் நோட்டு வாங்க அப்பாவிடம் கேட்டு அவர் இல்லை என்று சொல்வது, ஆசிரியர்களிடம் அடி வாங்குவது, அதே ஆசிரியர்கள் பட்டினி இருக்கும்போது பரிவு காட்டி சாப்பாடு பகிர்வது போன்ற விசயங்களையும் நினைவு கூர்ந்திருக்கலாம். 

    அந்த காலத்தில் மரபுக்கவிதைகள் எழுதுவது மிகவும் பெருமையாக இருந்தது. பொங்கல் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்றவை சொந்தமாக புனைந்து நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்வர். 

    நான் பாஸ் முதல் பிரசவத்திற்கு பிறந்த வீடு சென்றிருந்த பொது எழுதிய கடிதங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. ஒரு கடிதம் முழுதும் சொல்ல வேண்டிய விஷயங்களை முழுதும் சினிமா பாடல்களாகவே எழுதியிருந்தேன். இன்னொரு கடிதம் மிர்ரர் இம்மேஜ் ஆக கண்ணாடியில் காட்டி படிக்கும் விதமாக எழுதியிருந்தேன். இந்த இரண்டையும் பாஸ் சமீப காலம் வரை வைத்திருந்தார். நான்  தான் அவற்றை கிழித்து போட்டேன். 

    அப்பாவின் சிநேகிதர் எழுதிய அசோகா மித்ரனா சிவாஜி படங்களில் ஆபாசம் கண்டார் என்பது வியப்பாக உள்ளது. தற்போது வெளிவரும் படங்களின் குத்தாட்டங்களையும் பாடல் வரிகளையம் அவர் கண்டிருந்தால் என்ன சொல்வாரோ?

    அரசியல் என்று வரும்போது மதன் கார்ட்டூன்கள் எடுபடவில்லை. 

    இந்த வாரம் எ பி யில் ஆக்டிவிட்டி கொஞ்சம் கம்மி, ரொம்ப பிசியோ? 

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க தெருவிலேயே என் வகுப்புக்கு முன்னால் படித்த துளசி என்னும் பெண்ணின் புத்தகங்களை பழைய விலைக்கு நான் வாங்கிப்பேன். அவங்களே யாரோ பழைய விலைக்கு விற்றதைத் தான் வாங்கி இருப்பார். அதைத் தான் நான் வாங்கிப்பேன். என்னுடைய புத்தகங்களைத் தேடிப்பிடித்து யாருக்கானும் விற்று விட்டு அந்தக் காசை அப்படியே நான் வாங்கிய புத்தகங்களுக்குக் கொடுக்கணும். சில சமயங்கள் பைசா குறையும். ஆனாலும் அப்பா தர மாட்டார். உன்னை யார் அதிக விலை கொடுத்து வாங்கச் சொன்னது? ஏன் உன் புத்தகங்களை அப்படி அதிக விலைக்கு விற்கலை! அதனால் உன்பாடு, உன் சமத்து. புத்தகம் கிடைச்சால் படிச்சுக்கோ! இல்லாட்டி படிப்பை விட்டுடு என்பார். பல சமயங்கள் என் பெரியப்பா பெண்/அக்கா உதவுவார். என் அப்பாவின் அக்கா பெண்/என் அத்தை மகள் உதவுவார். கல்பனா தியேட்டர் பக்கம் நடராஜபிள்ளை அக்ரஹாரத்தில் இருந்தார் குடும்பத்துடன். மாமியார்/நாத்தனார் எனப் பெரிய குடும்பம். ஆனாலும் சிரித்த முகத்துடன் எப்போப் போனாலும் டிஃபன் கொடுத்துக் காஃபி கொடுத்துச் சில்லறை ஏதேனும் வேணுமாடினு கேட்டுக் குறைந்த பக்ஷமாக ஒரு ரூபாயானும் கொடுப்பார். அந்தக் காலங்களில் ஒரு ரூபாய் என்பது இப்போதைய நூறு ரூபாய்க்குச் சமம். கீழ்ப்பாலத்தின் வழியாகப் பள்ளியிலிருந்து நடந்தே வீட்டுக்கு வருவேன். பஸ் காசை மிச்சம் பிடிக்கத்தான். அப்போ நேரே கல்பனா தியேட்டர் வழியாகத் தான் வருவேன். அங்கிருந்து இவங்க வீடு கிட்டக்க என்பதால் அநேகமாப் பசிச்சாப் போயிடுவேன். :)))))

      நீக்கு
    2. வாங்க ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்..   நிறைய நிறைய எழுதலாம்.  எல்லோருக்குமே நிறைய அனுபவங்கள் உண்டு.  முன்பு சில எழுதியும் இருக்கிறேன்.  ரொம்ப எழுதினால் போரடித்து விடும்.  அளவாக எழுதினால் உங்கள் நினைவுகள் தூண்டப்பட்டு நீங்களும் அந்த நினைவுகளில் ஆழ்ந்து விடுவீர்கள்!

      உங்கள் வித்தியாசமான கடிதங்கள் ரசிக்க வைக்கின்றன.

      மதன் ஜோக்ஸ் மட்டும்தான் ரசிப்பீர்களா? மதன் எழுதிய சுவாரஸ்யமான புத்தகங்கள் படித்திருக்கிறீர்களா?

      சென்ற வார வியாழன் நான் லீவு!  உடனே உடனே பதில் கொடுத்தேன்.  இந்து டியூட்டி!!

      நீக்கு
    3. கீதா அக்கா..   நானும் அல்லது நாங்களும் பழைய புத்தகங்கள் கிராக்கிகள்தான்.  பழைய புத்தகம் விற்றதில் ஒரு ஏமாந்த அனுபவத்தை முன்னர் பகிர்ந்திருக்கிறேன்.  நினைவிருக்கிறதா?

      அப்பா பஸ் காசு கொடுக்கும் வைபவம் நாங்கள் மறக்க நினைப்பது.  அப்படி அதை வாங்குவதைவிட நடந்து வந்து விடலாம் என்று தோன்றும்!

      நீக்கு
    4. ஹாஹாஹா, நானெல்லாம் எப்படியேனும் கொடுக்கும் காசை வாங்கிக்கும் ரகம். அப்படியாவது பைசா சேருமே என்னும் நப்பாசை தான். ஆனால் பள்ளிக்குப் போகும்போது நேரம் ஆயிடும் என்பதால் பஸ்ஸிலேயே போயிடுவேன். திரும்பும்போது நடராஜா சர்வீஸ் தான். அந்தப் பத்துப் பைசா அந்தக்காலத்தில் பத்தாயிரம் ரூபாய் போல்!

      நீக்கு
    5. //கொடுக்கும் காசை வாங்கிக்கும்//

      கொடுத்தால்தானே?!!

      நீக்கு
    6. அது சரி! அதுவும் சில சமயம் நடக்கும். அதுக்காகவே டிவிஎஸ் சுந்தரம் ட்ரான்ஸ்போர்ட்டில் காஷியராக இருந்த என் மாமாவிடம் சொல்லி அப்பா பள்ளி செல்ல பேருந்து பாஸ் (மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணம்) வாங்கிடுவார். அப்போ ரொம்பவே கஷ்டமா இருக்கும். அண்ணா/தம்பி அப்பா வேலை பார்த்த சேதுபதி உயர்நிலைப்பள்ளியிலேயே படிச்சாங்க. நான் ஒருத்தி தான் தூரக்கப் பாலம் தாண்டிப் போய்ப் படிச்சேன்.

      நீக்கு
  19. Japan சிறுவன் புகைப்படம் வேதனை...

    தந்தையின் கவி வரிகள் அருமை...

    இன்றைக்கு வளர்ந்து வரும் நவீன நுட்பங்கள் திகைக்க வைக்கின்றன...! (கணக்கியல் தவிர)

    தெரிந்து கொள்ளா விட்டால், "வயதாகி விட்டது" போன்ற கிண்டல்கள் தொடர்வது ஒருபுறம் இருந்தாலும், அவை நல்லதா? கெட்டதா? என்பது ஆராய வேண்டிய ஒன்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நினைவுகள் நல்லது கெட்டது பார்ப்பதில்லை. பகிர்வதில் வேண்டுமானால் பார்க்கலாம்!

      நன்றி DD.

      நீக்கு
  20. அந்த நாள் ஞாபகம்
    நெஞ்சிலே வந்ததே நண்பனே
    நண்பனே நண்பனே

    இந்த நாள் அன்று
    போல் இன்பமாய் இல்லையே
    அது ஏன் ஏன் ஏன் நண்பனே

    பதிவின் முதல் பகுதி வாசித்ததும் டக்கென்று நினைவுக்கு வந்தது இந்தப் பாடல்தான்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடல்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் என்று தெரியும் என்பதாலேயே நான் அதைச் சொல்லவில்லை. ஆனால் இது அந்நாளை இந்நாளை நடுநாளையும் கம்பேர் செய்யும் எண்ணங்கள்!

      நீக்கு
  21. பல நாட்கள் நடந்துதான் செல்வது பள்ளிக்கு. திருவண்பரிசாரத்தில் இருந்த போது. பேருந்து பல நாட்கள் ஏமாற்றிவிடும்.

    வள்ளியூரில் இருந்த போதும் நடைதான். 1/2 மணி நெரம் நடை. மெயின் ரோட்டில் இருந்தது. 6 ஆம்ப்பு பள்ளி.(நாகர்கோவில் - திருநெல்வேலி சாலையில்) 5 ஆம்ப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி வீட்டருகில். மூன்றாம் வகுப்பு வரை இலங்கையில் வீட்டை தொட்டத்து பள்ளி. வகுப்பு ஜன்னல் வழி வீட்டு அடுக்களையில் பாட்டி என்ன செய்கிறார் என்பது தெரியும்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல நினைவுகள்.  இந்த பள்ளி நோக்கிய நமது ஆடையை மழைகள் நிறுத்தியதில்லை.  பாதித்ததில்லை!

      நீக்கு
  22. என் மகனுக்குப் பள்ளி நாட்கள் கசந்தவை. கோயம்புத்தூரில் இருந்தவரை அவன் பள்ளி நண்பர்கள், வீடு பிஎஸ்ஜி க்வார்ட்டர்ஸ், மாணவர்கள் ஹாஸ்டல் மெஸ், என்று பெரிய வ்ளாகம் என்பதால் காம்பவுண்டில் ஓடி விளையாடுதல் மிகவும் மகிழ்ந்து அனுபவித்தான். சென்னை வந்த பிறகான நாட்கள், இப்போது சொன்னாலும் "வேண்டாம் அதை நினைவுபடுத்தாதே என்பான்". அவன் படிக்க மிகவும் கஷ்டப்பட்ட காலங்கள். நண்பர்கள் கிடையாது. ஏனென்றால் படிப்பில் கெட்டி இல்லை என்பதால்.

    ஆனால் அவனுக்கு ஒரு நண்பர் குழு வகுப்பில் மட்டும் அதன் பின் தொடர்பு கொள்ளமாட்டார்கள். அது வேறு ஒன்றுமில்லை, கொஞ்சம் கதைவிடுவான். நீங்கள் கற்பனை கலந்து சொல்வது போல மகனும் சொல்வான். ஸோ அதற்கான கூட்டம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மதுரையின் பெரிய பள்ளியில் படித்தாலும் படிப்பில் சோடை இல்லை என்றாலும் பல கசப்பான அனுபவங்கள் எனக்கும் உண்டு. முக்கியமாய்க் கணக்கு எடுக்கும் ஆசிரியை மூலம். ஆகவே நானும் அதை மறக்கவே நினைப்பேன். :)))))

      நீக்கு
    2. கசப்பான அனுபவங்கள் எனக்கும் உண்டு.  அவைகளை நான் நினைவில் நிறுத்தவில்லை!

      நீக்கு
  23. பாருங்க ஸ்ரீராம் அதான் அப்ப இருந்த உங்கள் கற்பனை இப்ப கை கொடுக்குது பாருங்க அதான் ரொம்ப அழகா எழுதவும் வருது!!

    என் நட்பு வட்டம் மிகப் பெரியது. பள்ளியில். கல்லூரியில். எனக்கும் பள்ளியில் ஒரு கூட்டம் உண்டு. நான் சொல்லும் உடான்ஸ் கதைகளைக் கேட்க. வீட்டிலும் என் தங்கைகள் உண்டு. கற்பனை விரிந்து பறக்கும். ரொம்ப காமெடியும் செய்வேன். அப்போதைய நட்புகள், என் அத்தையும் அப்பாவின் அம்மாவும் சொன்னது "நீ எழுத்துக்காரியா, ஆர்ட்டிஸ்டா (நடிப்பு, வரைதல், கோலம் எம்ப்ராய்டரி இப்படி), இல்லைனா ஒரு வேளை படம் கூட எடுப்பியோ என்னவோ, உன் பெரிய அத்தைக்கும் இப்படி எல்லா ஆசையும் உண்டு, எல்லாம் வரவும் செய்யும். ஆனா கொடுத்துவைக்கலை பாவி சின்ன வயசுலயே (28-30 க்குள்) போய்டா" என்று பாட்டி அடிக்கடி சொல்வார். என்னை ஊக்குவித்தவர்கள் ஆனால் நான்

    ஆனால் நான் வளர்ந்தது அம்மாவின் அம்மா வீட்டில். பெரிய குடும்பம். அங்கு படிப்பு படிப்பு. படிப்பு....ஆனா எனக்கு வராத ஒன்று!! அதைத் தவிர மத்தது எல்லாம் வரும். கிட்டிம்புல், மரம் ஏறுதல் ஹாஹாஹாஹா...வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் நான் என் தங்கைகளுக்கு அம்மனோ சாமியோ பாட்டுக்கு ஆடுதல், இப்படி போகும் ஆனால் ஏதேனும் ஒரு வாண்டு மாமாவிடமும் பாட்டியிடமும் போட்டுக் கொடுக்கும் அதன் பின் டண்டனக்கா டண்டனக்கா தான்!!!! ஹாஹாஹாஹா. என் வீட்டில் கன்னா பின்னா என்று அடிவாங்கியவள் நான் தான்.

    என் பாட்டி (அப்பாவின் அம்மா) அத்தை நட்பு அன்று சொன்னதை நினைத்து இன்று சிரித்துக் கொள்வேன். விவேக் டயலாக்!!! எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேனே ன்னு ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் திறமைகளும் இளமையிலேயே தெரிந்திருக்கின்றன.  இவ்வளவு இருந்தும் எனக்கு நெருங்கிய என்று சொல்லிக்கொள்ள பெரிய இல்லை, சிறிய நட்பு வட்டம் கூட இல்லை.  என்னவோ அப்படி போய்விட்டது!

      நீக்கு
  24. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  25. அந்த நாள் ஞாபகம்
    நெஞ்சிலே வந்ததே நண்பனே
    நண்பனே நண்பனே

    இந்த நாள் அன்று போல்
    இன்பமாய் இல்லையே - அது ஏன் ஏன் ஏன் நண்பனே?..

    அது தாண்டா தலையெழுத்து!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  

      எல்லோருக்குமே அந்த நாள்தான் இன்பமாயிருக்குமா?  சிலருக்காவது இந்த நாள் இன்பமாயிருக்காதா?

      நீக்கு
    2. நாம எப்போதும் கடந்த காலத்தில் வாழ்பவர்கள், விதிவிலக்குகள் உண்டு. அதனால்தான் எல்லோருக்கும் கடந்த காலம் நன்றாகவும் சந்தோஷமாகவும் இருந்ததுபோல் தோன்றும். அது காட்சிப்பிழை

      நீக்கு
    3. இப்போது இருக்கும் இதோ இந்தக் காலம் இன்னும் சில வருடங்கள் கழித்து இன்பமான காலமாகத் தோன்றலாம் என்கிறீர்கள்...

      நீக்கு
  26. இளமைக்கால நினைவுகள் சிறப்பு.
    நகைச்சுவைத்துணுக்குகள் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  27. ஹையோ ஸ்ரீராம் அந்த ஜப்பான் பையன் படம் மனதை கனக்க வைத்துவிட்டது. படம் பார்த்ததும் சிறிது நேரம் அப்படியே ஒன்றும் சொல்லத் தோன்றாமல் உணர்வு ஏற்படுத்திவிட்டது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அதனால்தான் வாட்ஸாப்பில் பார்த்ததும் அப்படியே பகிரத்தோன்றியது.  சிறு வயதிலேயே என்ன ஒரு அனுபவம் அவனுக்கு...

      நீக்கு
  28. மதன் கார்ட்டூன்ஸ் செம!

    ஜோக்குகள் சிரித்துவிட்டேன். அந்த ஜப்பான் பையன் படத்திலிருந்து கொஞ்சம் ரிலீஃப். ஆனால் மீண்டும் அந்தப் படம் நினைவுக்கு வந்து விட்டது!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. உங்கள் அப்பாவின் கவி வரிகள் அருமை. அவர் பள்ளிக்காலத்தில் எழுதியதோ? அல்லது கல்லூரி காலத்திலா? எப்படி இருந்தாலும் அந்த வயதிலேயே என்ன ஒரு சிந்தனை!! அதனால்தான் மனைவியின் பெயரை தன் பெயரின் முன் போட்டுக் கொண்டாரே! இல்லையா!! கிரேட்!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  31. ஆமாம் அப்போ எல்லாம் பள்ளி வாட்டர் டேங்கில் குடிப்பதுண்டு. வீட்டிலிருந்து வாட்டர் பேக் அதுவும் ஒன்னும் காய்ச்சிய தண்ணி கிடையாது அப்படியே கிணற்றிலிருந்து எடுத்த தண்ணிதான்....சின்ன பேக் அதனால் தீர்ந்துவிடும் அதுவும் நாங்க பள்ளில எல்லாம் தண்ணிப் பந்தல் போடுவோமே ஹாஹாஹா அதான் நான் கொண்டு செல்லும் தண்ணி விநியோகம்...அப்ப பள்ளி டேங்கிலிருந்து...அதுவும் டிபன் பாக்ஸில் பிடித்து - இப்ப அப்படி தண்ணி குடிபோமா நெவர் நெவர்..

    நம்முடையது தீர்ந்து போச்சுனா வேற நட்புகள் தண்ணி வைச்சிருந்தா அதை டிபன்பாக்ஸில் கொஞ்சமே கொஞ்சம் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு பல சமயம்நட்ந்து போகணுமே அப்ப குடிச்சுப்போம்.

    எல்லோருக்குமே பள்ளி நினைவுகள் ஒவ்வொரு விதமாக நிறைய இருக்கும். நானும் ஸ்ரீலங்காவிலிருந்து எழுத நினைத்து எழுதத் தொடங்கி வழக்கம் போல அப்படியே இருக்கிறது. அங்கிருந்து இந்தியா வந்தது வரை எழுதியது. ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதைய வாட்டர் பேக் நினைவுக்கு வருகிறது.  கனமான பிளாஸ்டிக்கில் சற்றே நீல் உருளையாக, மேலே பட்டனைத் திறந்து தண்ணீர் குடிப்பது போல..  ஆனால் நான் வாட்டர் பேகெல்லாம் வைத்திருந்தது கிடையாது.

      நீக்கு
    2. வாட்டர் பேகா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தண்ணீரே கொண்டு போனதில்லை. பள்ளி வளாகத்தில் இரண்டு, மூன்று போர் பம்புகள் (கைகளால் அடிக்கணும். தண்ணீர் ருசியாகவே இருக்கும்.) உண்டு! அதைத் தவிரவும் குறிப்பிட்ட நேரங்களில் தண்ணீர் வரும் குழாய்கள் உண்டு. காலை வகுப்பு அறை வந்ததும் அந்த வாரம் யாருடைய முறையோ அவங்க வகுப்பைக் கூட்டிப் பெருக்கிப் பானைகளில் தண்ணீர் பிடித்து வைப்போம். சீக்கிரம் தீர்ந்துவிட்டால் சில சமயங்கள் மத்தியானமும் தண்ணீர் பிடித்து வைப்பது உண்டு. மத்தியானம் சாப்பிட்டுவிட்டு அடி பம்புகளில் தண்ணீர் அடித்து டிஃபன் பாக்ஸைக் கழுவித் தண்ணீர் பிடித்துக் குடித்துக் கொள்வோம்.

      நீக்கு
    3. முதல் முதல் மதுரையில் நான் பையரைப் பிரசவிக்க வந்தப்போ ஒரு பள்ளியில் சேர்த்தோம்.அப்போத் தான் முதல் முதலாக வாட்டர் பாக் கொடுக்கணும். சாப்பாடு தவிர சின்ன டப்பாவில் பிஸ்கட்கள், சாக்லேட்டுகள்/ஏதேனும் பழம் வைச்சுக் கொடுக்கணும் என்றெல்லாம் தெரியும். எங்க காலத்தில் படிக்கப் போறியா/திங்கப் போறியா எனக் கேட்பார்கள். ஏதேனும் விருப்பமான உணவை மத்தியானம் கொடுக்கச் சொல்லிக் கேட்கும்போது திட்டு விழும். இதை எல்லாம் பார்த்ததும் எனக்கு மயக்கமே வந்தது. அதே போல் தான் பின்னர் கேந்திரிய வித்யாலயாவில் சேர்த்த போதும். அங்கே கான்டீன் வேறே இருந்ததா? குழந்தைகளிடம் குறைந்தது ஐந்து ரூபாய் சில்லறை கொடுத்து வைக்கச் சொல்லுவார்கள். :))))))

      நீக்கு
    4. நானும் தண்ணீர் கொண்டு போனதில்லை.  சிலர் அந்த வாட்டர் பேக் வைத்திருப்பார்கள்.  ஸ்டைலாக மேலே இருக்கும் பட்டனை நீக்கி அவ்வப்போது உறிஞ்சிக் கொள்வார்கள்!

      //அந்த வாரம் யாருடைய முறையோ அவங்க வகுப்பைக் கூட்டிப் பெருக்கிப் பானைகளில் தண்ணீர் பிடித்து வைப்போம்.//

      அதெல்லா 'கர்ள்ஸ்' வேலை!  நாங்கள் வேடிக்கைதான் பார்ப்போம்!

      நீக்கு
    5. அப்போதைய வாட்டர் பேக் நினைவுக்கு வருகிறது. கனமான பிளாஸ்டிக்கில் சற்றே நீல் உருளையாக, மேலே பட்டனைத் திறந்து தண்ணீர் குடிப்பது போல..//

      ஆமாம் மற்றொன்று வட்ட வடிவமாக திக் ப்ளாஸ்டிக். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் டேங்க் ஏதோ பிரச்சனையினால் அப்புறம் வகுப்பில் தண்ணீர்ப்பானை அதில் நிரப்ப வேண்டும் அதுவும் முறைப்படி.

      கீதா

      நீக்கு
    6. //நான் பையரைப் பிரசவிக்க வந்தப்போ ஒரு// பெண்ணை ஒரு பள்ளியில் சேர்த்தோம்னு வந்திருக்கணும். அந்த வார்த்தை விடுபட்டிருக்கு. :(

      நீக்கு
  32. கதம்பம் அருமை.
    நாங்கள் விளையாடியது போல இப்போது பிள்ளைகள் விளையாட முடிவது இல்லை என்று ஒவ்வொரு கால கட்டத்தை சேர்ந்தவர்களும் சொல்லி கொண்டுதான் இருக்கிறார்கள்.
    நகரத்தில் உள்ள குழந்தைகளை விட கிராமத்து குழந்தைகள் நன்றாக விளையாடி கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை கொரோனா எல்லாம் பயமுறுத்தவில்லை.
    செப்பு சாமான்கள் வைத்து மண்ணில் கூட்டாம் சாதம் செய்தும், மணல் வீடு கட்டியும் விளையாடுகிறார்கள். ஆலமரத்தில் ஊஞ்சல் ஆடுகிறார்கள், ஓணானை அடித்து தூக்கி கொண்டு ஊர்வலம் போகிறார்கள். தெருவில் பம்பரம் விடுகிறார்கள், சைக்கிள் டையரை வண்டியாக ஓட்டுகிறார்கள். கபடி, கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள் ஸ்ரீராம். நான் கோவில்பட்டி, கழுகுமலை , திருநெல்வேலி போனபோது பார்த்து படம் எடுத்து வந்து பதிவு போட்டேன். நுங்கு வண்டி ஓட்டுகிறார்கள்.

    //அங்கு இணைக்கப்பட்டிருக்கும் குழாயிலிருந்தோ தண்ணீரைப் பிடித்தோ குடித்தது நினைவில் இருக்கிறது. இப்போது அப்படிக் குடிப்போமா? //
    நாங்கள் படிக்கும் போது தொட்டி தண்ணிரும் குடித்து இருக்கிறோம் சில பள்ளிகளில் மண்பானை வாங்கி வைத்து தினம் ஒருவர் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும்.


    மகன்கள் சொல்வது போல அவர்கள் விளையாடியது போல இல்லை அவர்களும், நீங்களும் சொல்லி கொள்ள வேண்டியதுதான்.


    சாரின் அண்ணா தஞ்சை ஹவுசிங் யூனிட், திருச்சி ஹவுசிங்க் யூனிடில் இருந்த போது சினிமா பார்த்து இருக்கிறோம், வீட்டிலிருந்து நாற்காலிட்யை தூக்கி போய் போட்டு கொண்டு வீட்டில் மாலை செய்த டிபன்களை எடுத்து கொண்டு போய் ஜாலியாக படம் பார்த்து இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..    நீங்கள் சொல்லி இருப்பது உண்மையிலேயே சந்தோஷத்தைத் தருகிறது.  ஆமாம், கிராமங்களில் இது மாதிரி விளையாட்டுகள் நடக்கின்றன.  நீங்கள் சொல்லி இருக்கும் வர்ணனைகள் படிக்கும்போது சட்டென மனதில் ஒரு பூ பூக்கிறது.  பார்க்கவே சந்தோஷமாக இருக்கும் காட்சிகள்..  இன்னமும் கிராமங்கள் கெடவில்லை என்று தெரிகிறது.

      // சாரின் அண்ணா தஞ்சை ஹவுசிங் யூனிட், திருச்சி ஹவுசிங்க் யூனிடில் இருந்த போது சினிமா பார்த்து இருக்கிறோம், //

      ஆஹா..  எந்த வருடம்?  நானும் அங்கே இருந்திருப்பேன்.  ஆமாம்..  நாற்காலியைப் போட்டுக்கொண்டு பார்ப்பார்கள்.  நாங்கள் எல்லாம் முன்னே தரை டிக்கெட்டில் உட்கார்ந்து அலப்பறை செய்வோம்!

      நீக்கு
    2. ஆமாம் கோமதிக்கா நான் காலையில் சொல்ல நினைத்துவிட்டுப் போனது. இப்பவும் கிராமத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆமாம் கொரோனா எதற்கும் பயமில்லாமல்....

      கீதா

      நீக்கு
    3. எங்க குடியிருப்பில் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடுவார்கள். அவ்வப்போது அசோசியேஷன் மூலம் அவர்களுக்குப் போட்டி வைத்துப் பரிசுகள் எல்லாம் கொடுப்பதும் உண்டு. முக்கியமாய் ஆங்கிலப் புத்தாண்டின் சமயம். பெண்களுக்கும் அதே போல் கோலப்போட்டி, பாடல்கள் போட்டி என நடக்கும். இப்போ இரண்டு வருஷங்களாகக் கொரோனாவின் தாக்குதலில் நடக்கவில்லை என்றாலும் குழந்தைகள் விளையாடுவதை விடவில்லை. பல சமயங்கள் மத்தியானங்களில் அவங்க கூச்சல் படுக்க விடாது. அதே போல் இரவும் பதினோரு மணி வரை கொட்டம் அடிப்பார்கள். :))))

      நீக்கு
  33. //'உன் மூட்டையை கொடு' என்று சிறுவனிடம் கேட்டார். அதற்கு அவன் 'இது மூட்டை இல்லை. என்னுடைய தம்பி' என்று சொன்னான்".//

    இந்தபதில் மனதை நெகிழ செய்து விட்டது. போரின் கொடுமைகளை சொல்லி கொண்டு இருக்கும் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருக்கும் உறவுகளே உயிர் போனதும் வீட்டில் காத்திருக்கும்போது பாடி எப்போ வரும் என்று கேட்பார்கள்.

      பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு..ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு சூரையங்காட்டிடை சென்று சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தாரே...  என்று திருமூலர் சொன்னது போல..

      நீக்கு
  34. அப்பா திருமணத்திற்கு முன்பே தனக்கு வரப் போகும் வாழ்க்கை துணையைபற்றி மிக அருமையாக கவிதை எழுதி இருக்கிறார்கள்.
    வாழ்வின் ஜீவன் , ஜோதி என்று அம்மாவிடம் மிகவும் பிரியமாக இருந்தது படித்தும் , நீங்கள் சொல்லியும் தெரிந்து கொண்டு இருக்கிறேன்.

    'கிண்டல் ஸ்பெஷல் பகிர்வு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  35. தனது தம்பியின் சடலத்தைச் சுமந்து கொண்டு நிற்கும் சிறுவனின் படம் மனதை கனக்க வைத்து விட்டது...

    பதிலளிநீக்கு
  36. மதன் அரசியல் கார்ட்டூன் 3-வது படத்தில் வீட்டுக் கதவு முன் சாவியுடன் நிற்பவர் யார்? -- என்ற கேள்வியை வைத்திருக்கலாம்.

    அல்லது இரண்டாவது படத்தில் ஒற்றை மனிதராய் நிற்பவர் யார்?

    அல்லது முதல் படத்தில் தொப்பியுடன் இருப்பவர் யார்?

    ___ என்றாவது கேள்விகளை அடுக்கியிருக்கலாம்.

    அது என்ன, வாசகர்கள் ஞாபகத் திறனை மீட்ட வாய்ப்பே இல்லாமல் இருந்தால் எப்படி?...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,.... :))

    பதிலளிநீக்கு
  37. சிவாஜி, அ.மி. -- இரண்டு பேர்களும் ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் சிரிக்கிற மாதிரி படம் தான் உங்களுக்குக் கிடைத்ததா?

    ஒருத்தராவது முறைக்கிற மாதிரி இருந்த்தால் தானே அந்த சென்ஸார் சூழலுக்கு ஒத்து வருகிற மாதிரி இருந்திருக்கும்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒன்றும் அவர்களுக்குள் விரோதம் கிடையாது என்பதை வலியுறுத்தத்தான்...!

      நீக்கு
    2. விரோத்மெல்லாம் பெரிய வார்த்தை. நேரடியாக அவருக்கும் இவருக்கும் அறிமுகம் கூட இருந்திருக்காது என்ற வாழ்க்கைப் போக்கு.

      நீக்கு
    3. உலக்கை நாயகர், நாசர் போன்ற பல அந்தக்கால கட்டத்து அறிவுஜீவி நடிகர்கள் சித்தப்பா வீட்டைப் படையெடுத்தது உண்டு. சித்தப்பாவின் இரண்டாவது பையர் முத்துக்குமார் நாசரின் நெருங்கிய நண்பர். ஒருவருக்கொருவர் வாடா/போடா என அழைக்கும் அளவுக்கு. அதோடு சித்தப்பாவே ஞானியின் "பரிக்‌ஷா" நாடகக்குழுவில் நடித்திருக்கிறார். அதன் மூலமாகவும் பெரும்பாலான இயக்குநர்கள்/நடிகர்கள் மிக மிகப் பரிச்சயமே! என் தம்பி கூட சில வருடங்கள் பரிக்‌ஷாவில் நடிச்சிருக்கார். பின்னர் அவருக்கு வங்கி நேரத்தோடு ஒத்து வராததால் விட்டு விட்டார்.

      நீக்கு
    4. சித்தப்பாவின் முதல் பையர் திருமண வரவேற்பில் மேல்சொன்ன நடிகர்கள் எல்லாம் வரவேற்பு வேலையை மிக ஆர்வத்துடன் செய்தார்கள் என எங்க பெண் சொல்லி இருக்கிறாள். நாங்க அப்போ ஜாம்நகரில் இருந்ததால் கல்யாணத்துக்குக் கிளம்பி அஹமதாபாத் வரை வந்த நாங்கள் திரும்ப ஜாம்நகரே போகும்படி ஆனது ராஜீவ் காந்தி கொலையால். நவஜீவன் விரைவு வண்டியை மட்டுமில்லாமல் சென்னைக்குச் செல்லும் அனைத்து ரயில்களையும் ரயில்வே துறை ரத்து செய்திருந்தது.

      நீக்கு
  38. போபால் விஷவாயு விபத்தில் இறந்து போன ஒரு குழந்தையை தத்ரூபமாக படமெடுத்தார் என்று உலக புகைப்படத் திருநாளில் அந்த வருடத்தின் மிகச் சிறந்த படம் என்று பரிசளித்தார்கள், பாவிகள்!

    நான் நடத்திய சிறு பத்திரிகையில் கொதித்துப் போய் தலையங்கம் எழுதினேன்.. அது தான் இப்பொழுது நினைவுக்கு வந்தது...

    (தலையங்கத்தின் அச்சுப் பிரதி இப்பவும் கைவசம் உள்ளது.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோமாலியா படம் ஒன்று பரிசு பெற்றது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். உணவில்லாமல் எலும்பும் தோலுமாய் ஒரு சிறுவன் இப்பவோ எப்பவோ என்றிருப்பான். பின்னால் அவன் விழும் நேரத்துக்காக ஒரு பி தி கழுகு காத்திருக்கும்.

      நீக்கு
  39. ஜீவி சார். சோகங்களைப் படம் எடுப்பதில் என்ன திருப்தியோ:(
    உள்ளங்களைப் பதைக்க வைக்கும் செய்திகளும்
    படங்களும் பல நாள் துக்கத்தில் ஆழ்த்துகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று இந்தப் படம் உங்கள் மூடை எல்லாம் கெளததற்கு மன்னிப்பு கோருகிறேன்.  ஆனால் இவற்றையும் பார்க்கவேண்டும், தெரிந்த்து கொள்ளவேண்டும் என்றுதான்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் உலகின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டுமே. தெரிந்து கொள்ள வேண்டும்தான்

      கீதா

      நீக்கு
  40. பள்ளிக்கூடம் இனிய நினைவுகள். மதன்ஜோக்ஸ் சிரிக்க வைத்தது.

    அன்றைய குழந்தைகள் அனுபவித்தது இன்ற் இல்லை என்பது உண்மை.இப்பொழுது குழந்தை உலகமே தனிதான் விரும்பியதை கேட்கிறார்கள் பேரன் நான்கு வயதாகிறது பிக்னிக் போவோமா? பீச் போவோமா? இந்தப் புத்தகம் வாங்கிதருகிறீர்களா என்று குறிப்பிட்டுக் கேட்கிறான்.

    பதிலளிநீக்கு
  41. ஜப்பான் பையனின் படம் நம்மை உறையவைக்கும் படம். இது போன்று உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த படங்கள் என்று நான் ஒரு பதிவு எழுதிய நினைவு வருகிறது, சோமாலியா குழந்தை ஒன்று கிட்டத்தட்ட எலும்புக் கூடு போன்று அருகில் கழுகு இப்படி ஒரு சில.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளஸிஜி.  சோமாலியா குழந்தை பற்றி நானும் மேலே சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
  42. ஆமாம் ஸ்ரீராம்ஜி எனக்கும் இப்படியான பள்ளி நினைவுகள் உண்டு. அதுவும் நான் படித்தது ராசிங்கபுரம் கிராமம். அது வேறுவிதமான அனுபவங்கள்.

    ஒரு சில பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.

    என் குழந்தைகளும் தங்கள் பள்ளியில் நட்புகள் என்று நன்றாகவே மகிழ்வுடன் இருந்தார்கள். விளையாடியதும் உண்டு. வீட்டிற்கு நட்புகளும் வந்ததுண்டு. அதுவும் யூத் ஃபெஸ்ட் என்றால் அவர்களின் நட்புகள், போட்டிகளில் பங்கு பெறும் வேறு மாணவர்கள்
    அவர்களுக்கான பயிற்சி என்று வீடு கூட்டமாக இருக்கும். இப்போது மூன்று பேரும் வெளியூரில் என்பதால் அவர்கள் இங்கு வரும் போது நட்புகள் வருவார்கள். அவர்களும் அவர்களின் ரீதியில் மகிழ்வாக இருந்தது போல்தான் தெரிகிறது

    என் பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம் என்று எழுதவும் நினைத்துள்ளேன் ஆனால் நேரம் கிடைப்பதுதான் ரெம்பவும் சிரமமாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  43. உங்கள் அப்பாவின் கவிதை அருமை. இளம் வயதிலேயே கவிதை எழுதும் திறமை அதுதான் உங்களுக்கும் அந்தத் திறமை வந்திருக்கிறது ஸ்ரீராம்ஜி!

    கார்ட்டூன்கள், ஜோக்குகளையும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  44. பள்ளி நினைவுகள், அப்பாவின் கையெழுத்தில் கவிதை, விலை போகா எழுத்தாளர், மதன் ஜோக்ஸ் என அனைத்தும் சிறப்பு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  45. அந்நாளைய மலரும் நினைவுகள் சுவாரஸ்யம். அவரவர் கடந்து வந்த காலத்தை நினைக்க வைத்திருக்கும். புகைப்படம் மனதைக் கனக்க வைக்கிறது. தங்கள் அப்பாவின் கவிதை அருமை. நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!