செவ்வாய், 29 மார்ச், 2022

சிறுகதை - கனவு இல்லம் - துரை செல்வராஜூ

கனவு இல்லம் 

- துரை செல்வராஜூ -

காமாட்சியம்மாளுக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம்...  

இருக்காதா பின்னே!..

புது வீடு தரை மட்டத்திலிருந்து மூன்றடி உயரம் என்பதற்காக - அன்று முதல் இன்று வரை தை.. தை.. என்று தாண்டிக் குதித்துக் கொண்டிருக்கின்றவர் - நான்கைந்து நாட்களாக மாடிப் படிகளில் ஏறுவதும் இறங்குவதுமாக!..

ஒரு நாளைக்கு எத்தனை தடவை என்பது அவருக்கே வெளிச்சம்!..

அவர் என்றால் அகத்துக்காரர் - சுந்தரம்...  நாற்பது ஆண்டுகளுக்கு முன் கல்யாணப் பத்திரிக்கையைப் பார்த்ததுமே உறவு முறைகள் அத்தனையும் சொல்லிச் சொல்லி கேலி செய்து களித்தன...

திருவளர் செல்வன் - சுந்தரம்
திருவளர் செல்வி - காமாட்சி..
சுந்தர காமாட்சி
காமாட்சி சுந்தரம்..
எப்படிப் பார்த்தாலும் பெயர்ப் பொருத்தம் அழகோ அழகு என்று..

அப்படியே சொல்லுக்குச் சொல் மாறாமல் ஓடிப் போயின வருடங்கள்...

இத்தனை வருடங்களில் இருவருக்கும் இடையே ' முணுக் ' என்றொரு பார்வையும் கிடையாது.. ' நறுக் ' என்றொரு வார்த்தையும் கிடையாது..

அன்பு பாசம் என்றால் அப்படியொரு விதம்..
மகளும் மகனும் என்று இல்லறம் இனிமையாயிற்று.. 

மகளும் மருமகனும் பெங்களூரில்.

வளைகுடா நாடொன்றில் நல்ல வேலையில் மகன்..  சுபஸ்ரீ, ஸ்ரீஹரி - என செல்வக் களஞ்சியங்கள்..

மருமகனும் மகளும் அவ்வப்போது பிள்ளைகளுடன் பெங்களூரில் இருந்து வந்து செல்வார்கள்.. அந்த வகையில் இவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி...

மகனோ வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் விஜயம்.. அங்கும் இங்கும் சென்று வருவதிலேயே நாட்கள் ஓடிவிட - பேரன் பேத்திகளுடன் விளையாடிக் களித்த நேரம் என்பது மிக மிக சொற்பமாக இருக்கும்..
ஏமாற்றம் மிஞ்சியிருக்க  - அடுத்த விடுமுறை எப்போது?.. - என்ற எதிர்பார்ப்புடன் விமான நிலையத்தில் கையசைக்கும் போது இருவர் மனதிலும் ஏற்படும் வேதனை  - கன்னங்களில் வழிந்திடும்.. சொல்லி மாளாது..

தற்போது வழக்கத்துக்கு மாறாக இரண்டு மாத விடுமுறையில் வருகின்றார்கள் என்றதும் கிழவன் கிழவி இருவரும் -  இருபது வயதுக்குத் திரும்பி விட்டார்கள்..

அதிலும் சுந்தரத்துக்கு ஏக சந்தோஷம்..  பேத்தி சுபஸ்ரீ பத்து வயதினள்.. அன்றைக்குக் கேட்டு விட்டாளாம்..

" தாத்தா.. Tell me something about your rural life.. " - என்று..

தலை கால் புரியவில்லை அவருக்கு..

தற்காலத்தில் மாடியில் தோட்டம்.. கேட்கிறோம்.. பார்க்கின்றோம்..

இவர் என்ன செய்தார் என்றால் வீட்டின் முன்புறம்  செம்பருத்திச் செடியின் அருகில் இரும்புக் குழாய்களை நட்டு ஊஞ்சல் ஒன்றைத் தொங்க விட்டார்..

வீட்டை ஒட்டியிருந்த காலி இடத்தில் ரெண்டு ஆட்டுக் குட்டிகளை வாங்கி வந்து கட்டினார்..

மாடியை பண்ணை வீடாக மாற்றினார்...  மாடித் தளம் முழுவதற்கும் தென்னங்கீற்றால் கூரை வேய்ந்தார்.. சாரங்களில் சின்னச் சின்ன மண் தொட்டிகளில் கற்பூரவல்லி, பட்டு ரோஜா Money Plant என்று தொங்க விட்டார்... சற்றே பெரிய தொட்டிகளில் தும்பை, துளசி, கீழாநெல்லி, அந்தி மந்தாரை, ரோஜா என்று வளர்த்தார்..

வைக்கோலையும் தேங்காய் நாரையும் மண்ணுடன் கலந்து மாடித் தளம் முழுதும் பரப்பினார்..  இன்னும் அழியாதிருக்கும் நாட்டுக் கோழிகளில் நான்கினை வாங்கி வந்து கூரை நிழலில் விட்டார்..

காக்காய் கழுகு உள்ளே வந்து விடாதபடிக்கு - சுற்றிலும் கம்பி வலையை வைத்து முறுக்கினார்..

காமாட்சியம்மாள் சிரித்தபடி கேட்டார்கள்..

" எல்லாம் பெட்டைக் கோழிகளாக இருந்தால் பாவம் இல்லையா?.."

அன்றைக்கே  வெள்ளைச் சேவல் ஒன்று புது மாப்பிள்ளையாக வந்து சேர்ந்தது..

இப்போதுதான் நிம்மதி..

ஆனால் மறுநாள் பொழுது விடிந்ததும் வேறு சில பிரச்னைகள் மனித வடிவாகி வாசலில் வந்து நின்றன...

எல்லாருமே அரசு அலுவலக ஊழியர்கள்..  வசதி வாய்ப்பு மிக்கவர்கள்.. சிலரிடம் சொகுசு வாகனங்கள் கூட இருக்கின்றன..

" உங்களுக்கே தெரியும் இங்கே ஆடு மாடு கோழி எல்லாம் வளர்க்கக் கூடாது.. ன்னு!.. "

" எருமே மாட்டை வாங்கிக் கிட்டு வரலை!..  நல்ல வேளை.. அந்த சாணி மூத்திரத்துல இருந்து தப்புச்சோம்.. "

" நாங்க எல்லாம் இங்கே இருக்கிறதா?.. வீட்டை வித்துட்டுப் போறதா?.. "

" இது டவுனா.. பட்டிக்காடா?.. "

"  அந்தப் பொட்டைக் கோழி நாலு மணிக்கெல்லாம் சத்தம் போட்டு தூக்கத்தைக் கெடுத்துடுச்சி.. "

கூவுகின்ற கோழி எது என்று தெரியாத ஞான சூனியத்தின் வருத்தம்..

" வாத்து.. தெரியுமா.. வாத்து!.. அதிலயும் நாலு வாங்கிக்கிட்டு வந்து விட்டுருக்கலாமே!.. "

காழ்ப்புணர்ச்சி பல்வேறு வடிவங்களாக எதிரில் நின்றது...

உற்றுப் பார்த்தார் சுந்தரம்..

" கோப தாபம் இல்லாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஒற்றுமையா இருக்கணும்.. ங்கறது தான் எப்போதும் ஆசை.. நீங்க எல்லாரும் ஏதோ பதட்டத்துல வந்துட்டீங்க.. இருந்தாலும் பரவாயில்ல.. சாலை.. ல நின்னு பேச வேணாம்.. உள்ளே வாங்க!.. -  என்றபடி கம்பிக் கதவைத் திறந்தார்...

அந்தப் பக்கம் ஆட்டுக் குட்டிகள் தலை நிமிர்ந்து பார்த்து விட்டு மேய்வதில் கவனமாகின...

" வெளிநாட்ல இருக்கற என் பையன் குடும்பத்தோட  இன்னும் நாலு நாள்ல இங்கே வர்றான்.. பேரன் பேத்திகளோட சந்தோஷத்துக்காக இந்த ஜீவனை எல்லாம் இங்கே கொலு மாதிரி வெச்சிருக்கேன்.. "

" அதான் யூட்டூப்ளே கார்ட்டூன் எல்லாம் வெச்சிருக்கானே!.. "

அதற்கு ஒன்றும் கூறாத சுந்தரம் - " ஒரு மாசம் இருந்துட்டு அவங்க போனதும் இதை எல்லாம் கலைச்சிடுவேன்.. கவலப் படாதீங்க!.. " - என்றார்..

" நாங்க எதுக்கு சொல்ல வந்தோம்.. னா!.. "

குறுக்காக வந்தார் - அந்த பேங்க் மேனேஜர்..

" கொஞ்சம் இருங்க!... இங்கே நீங்களும் நானும் கஷ்டப்பட்டு தான் வீட்டைக் கட்டி குடி வந்து இருக்கிறோம்.. யாரும் யாருக்கும் இடைஞ்சல் இல்லை.. "

சற்று நிறுத்திய சுந்தரம் தொடர்ந்தார்..

" ஒரு தலைமுறைக்கு முன்னால நீங்களும் பட்டிக்காட்ல இருந்தவங்க தான்.. மாட்டுச் சாணியிலயும் ஆட்டுப் புழுக்கையிலும் வளந்தவங்க தான்.. அதை மறந்துடாதீங்க..   அப்புறம் - "

" யூட்டியூப்.. ல ஆயிரம் இருக்கலாம் .. லட்சம் இருக்கலாம்.. அதெல்லாம் சொப்பனத்துல கண்ட அரிசி மாதிரி... சோத்துக்கு ஆகாது.. "

வந்திருப்பவர்களை உற்றுப் பார்த்தபடி சொன்னார்..

" நமக்கு எதிரிகள் இந்தக் கோழிகளோ ஆட்டுக் குட்டிகளோ  இல்லை!... "

ரிடையர்டு வாத்தியார்  ஏடாகூடமாக  ஏதாவது பேசி வைப்பார் - என்று வந்தவர்களுக்கு ஏமாற்றம்...

அதற்குள் காமாட்சியம்மாள் காஃபி குவளைகளுடன் வந்தார்கள்..

" காஃபி சாப்பிடுங்க!.. " உபசரித்தார் சுந்தரம்..

அடுத்த நான்கு நாட்களில் உற்சாகத்துடன் ஓடி வந்த பேரன் பேத்திகள்  வீட்டிலிருந்த பூச்செடிகள் கோழிகள் ஆட்டுக் குட்டிகளைக் கண்டு குதுகலமானார்கள்..

அவர்கள் வந்த நேரம் முட்டையிட்டுக் கொண்டிருந்த கோழி ஒன்று அடை காப்பதற்கு அமர்ந்தது.. கூடையில் வைக்கோலைப் பரப்பி அதில் பத்து முட்டைகளை வைத்ததும் கோழி தானாகவே ஏறி அமர்ந்து கொண்டது.. 

கூரிய அலகினால் முட்டைகளைப் புரட்டிப் புரட்டி தனக்கு வாகாக வைத்துக் கொண்ட கோழி சிறகுகளை விரித்து முட்டைகளை அணைத்தபடி தூக்கத்தில் ஆழ்ந்தது..

இதைக் கண்ட பேத்தி சுபஸ்ரீக்கு ஆச்சர்யம்.. சின்ன மனதிற்குள் என்னென்னவோ நினைத்துக் கொண்டாள்..

அவ்வப்போது கோழி எழுந்து வெளியே ஓடும் சமயத்தில் தாத்தாவின் துணையோடு முட்டைகளைத் தொட்டுப் பார்த்தாள்...  இளஞ்சூட்டில் இருக்கும் முட்டைகள் - இதுவரை அறிந்திராத சந்தோஷம்..

இருபது நாட்கள் கடந்த நிலையில் முட்டை ஓடுகளில் மெல்லிய விரிசல்... 

" Why like this தாத்தா!?.. "

" முட்டைக்கு உள்ளே இருக்கிற குஞ்சு வெளியே வரப் போகுது.. ம்மா.. "

" தாத்தா.. முட்டைக்கு உள்ளே குஞ்சு ஏன் போச்சு.. எப்படி போச்சு?.. "

" அது போகலைடா செல்லம்.. முட்டைக்குள்ளே இருக்கிற வெள்ளைக் கருவும் மஞ்சக் கருவும்  கோழியோட சூட்டுல உயிராகி உருவமா ஆகிடிச்சு.. இன்னும் கொஞ்ச நேரத்தில முட்டையை உடைச்சிக்கிட்டு வெளியே வரும்!.. "

வியப்பினால் விழிகள் விரிந்தன.. ஆனாலும் அந்தப்  பிஞ்சுக்கு உயிரின் ரகசியம் விளங்கவில்லை..

" இந்தக் குஞ்சுக்காக முட்டைக்குள்ளே காற்றையும் வெச்சிருக்கான் இறைவன்.. நீ இன்னும் படிக்கிறப்போ உனக்கு இதெல்லாம் புரியும்!.. "

ஓட்டை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளி வருவதைக் கண்ட குழந்தைக்கு ஆச்சர்யம்..

அன்றைய பொழுதுக்குள் ஓடுகளைப் பிளந்து கொண்டு எல்லாக்  குஞ்சுகளும் வெளியே வந்திருந்தன..

உடலின் ஈரம் உலர உலர -  செவ்வந்திப் பூக்களாக  அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன குஞ்சுகள்.. கூடையில் இருந்து கோழியும் இறங்கி விட்டது..

குறு நொய்யும் தண்ணீரும் வைக்கப்பட்டன... எப்படி அவற்றைத் தின்பது என்று தாய்க் கோழி  குஞ்சுகளுக்குப் பயிற்றுவித்தது..

நெல்லின் முனை போன்ற அலகினால் குறு நொய்யைப் பொறுக்குவதும் தண்ணீரைக் குடிப்பதுமாகத் திரிந்த குஞ்சுகள் அவ்வப்போது தாயின் சிறகுக்குள் ஓடிப் புகுந்து ஓய்வெடுத்துக் கொண்டன..

தாழ்வாரத்தில் காக்கையைப் பார்த்து விட்டால் - தாய் எழுப்பும் சத்தத்தைக் கேட்டு குஞ்சுகள் அங்கும் இங்குமாக பதுங்கிக் கொள்வதை எல்லாம் பார்த்துப் பார்த்து சந்தோஷப்படும்  பேத்தியைக் கண்டு ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தனர் பெரியவர்கள்..

இதற்கிடையே - வாசலில் வந்து நிற்பதும் எட்டிப் பார்ப்பதுமாக -
அஞ்சு , அர்ச்சனா, ஸ்வேதா, பிரகதி, வருண், ஆகாஷ் என - அக்கம் பக்கத்துப் பிஞ்சுகள்..

சுபஸ்ரீ அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாள்..

அதற்கப்புறம் அந்த வீட்டிற்குள் எந்த நேரமும் ஆனந்தக் கூச்சல்.. வாசல் ஊஞ்சலில் ஆடிக் களித்த பிள்ளைகளுடன் தென்றலும் சேர்ந்து கொண்டது..

ரோஜாப் பூக்களை தொட்டுப் பார்ப்பதும் கோழிக் குஞ்சுகளைக் கையில் ஏந்திக் குதுகலிப்பதும் ஆட்டுக் குட்டிகளை அரவணைத்துக் கொள்வதும் - என,  எல்லாம் இன்ப மயமாகின..

பொழுதானதும் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு பெரியவர்கள்  வந்தார்கள்..

நெஞ்சார்ந்த விசாரிப்புடன் ஒருவரையொருவர் தெரிந்து கொண்டார்கள்.. புரிந்து கொண்டார்கள்...  அங்கே காலம் மகிழ்ச்சியை விதைக்க ஆரம்பித்தது..

பேரன் பேத்திகள் வளைகுடாவிற்குத் திரும்பிச் சென்று ஒரு வாரம் ஆகியிருந்தது..

ஆனாலும் வீட்டிற்குள் அக்கம் பக்கத்துப்  பிள்ளைகளின் விளையாட்டு ஆரவாரம்..

சுந்தரமும் காமாட்சியம்மாளும் - வீட்டிற்குள் விளையாடும் பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுப்பதும் முகம் துடைத்து விடுவதுமாக இருக்க -

அந்தப் பிஞ்சுகளும்  " தாத்தா.. பாட்டி!.. "  என்று உறவு கொண்டாடிக் களிக்க - அன்பு என்ற ஆலஞ்செடி அங்கே தழைத்திருந்தது..

மாடியறையில் வேறொரு கோழி அடை காத்துக் கொண்டிருந்தது..

ஃஃஃ

86 கருத்துகள்:

  1. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வாழ்கவே..

      வாங்க துரை செல்வராஜூ ஸார்...  வணக்கம்.

      நீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    பல்வேறு பணிகளுக்கு இடையேயும் கதையைப் படித்து கருத்துரை செய்து பதிவு செய்திருக்கும் அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    கதைக்கு அழகு செய்திருக்கும் அன்பின் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  4. இன்றுடன் ஒரு வருடம் ஆகின்றது - என் தாயார் இறைவனடிகளைச் சேர்ந்து...

    ஆத்ம சாந்தி பூஜைகளை நிறைவேற்றிய பின் வருகின்றேன்.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தாயாரின் நினைவு நாளில் எங்கள் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    2. உங்கள் அன்பு தாயாருக்கு வணக்கங்கள் பல

      நீக்கு
    3. துரை அண்ணா எங்கள் அஞ்சலியும், வணக்கங்கங்களும்

      கீதா

      நீக்கு
    4. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா, கில்லர்ஜி, கௌதம்,கீதா - அனைவரது அன்பினுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். என்றும் ஆரோக்கியம் நம்மைச்
    சூழ இறைவன் நம்மைக் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு கதை. தாத்தா பாட்டியைப் பார்க்கும் போது

    நல்ல ஒரு முன் மாதிரியான வாழ்க்கை.

    அன்பும் பண்பும் நிறைந்த வளம் நிறைந்த மனிதர்கள்.
    பேரன் பேத்திகளுக்காக இனிமை நிறைந்த
    விடுமுறையை அனுபவிக்கக்
    கொடுத்த அன்பு மனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் மக்கள் விடுபட்டு நிம்மதியான/ஆரோக்கியமான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. எங்கே? கௌதமன் சார்? இரண்டு நாட்களாய்க் காணோமே? கதையில் படம் நன்றாக வரைந்திருக்கார். கதையில் நடந்தது போல் நிஜத்திலும் நடந்தால்? கற்பனையாவது பண்ணிக்கலாமே எனத் தம்பி துரை நினைச்சிருக்கார். நல்லதொரு கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. வீட்டு வேலைகளில் ரொம்ப பிஸி. உதவியாளர் நீண்ட விடுப்பு.

      நீக்கு
    2. ஓ, முன்னாடியே சொன்னீங்க இல்லையா? நான் தான் மறந்திருக்கேன். நடுவில் கொஞ்சம் ஓய்வும் எடுத்துக்குங்க.

      நீக்கு
    3. அதானே...
      கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வது நலம்..

      நீக்கு
  9. இப்போல்லாம் மாடித்தோட்டம் பிரபலமடைந்து வருகிறது. அவ்வகையில் இப்படியும் நடக்க வாய்ப்புகள் உண்டு.

    பதிலளிநீக்கு
  10. பேரன் பேத்திகள்
    இத்தனை இயற்கை வளத்தைக்
    குழந்தைகளுக்காக அமைத்துக் கொடுத்து,
    ஒரு சின்ன கிராமத்தையே படைத்து விட்டார்.

    பேத்தி முட்டை குஞ்சு பொரிப்பதைக் கண்டு மகிழும் காட்சி மிக இனிமை.

    அன்பின் துரை அழகுணர்ச்சியோடு
    படைத்திருக்கும் கதைக்கு,
    கௌதமன் ஜி யின் படம் மிக மிகசிறப்பு.

    பதிலளிநீக்கு
  11. வீட்டுக் குழந்தைகள் கிளம்பிச் சென்றாலும் ஊர்க்குழந்தைகள் இந்த வளத்தை
    அங்கீகரித்து
    தாத்தாபாட்டியை மகிழ்விப்பதே நல்ல பலன்.

    பதிலளிநீக்கு
  12. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு -

    மூத்த தங்கையைப் பார்க்கின்றேன்.. மூத்த தம்பி இன்னும் சற்று நேரத்தில்...

    எல்லாம் காலக் கொடுமையடா கந்தசாமி!..


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாயின் ஆத்மா மிகவும் மகிழும் தருணம்.
      உறவுகளுடன் மகிழ்ந்து இருங்கள்.

      நீக்கு
    2. நீண்ட வருடங்கள் கழித்துக் கூடப் பிறந்த உறவுகளைப் பார்த்து நெகிழும் தருணம். அனைவருடனும் மகிழ்வாகப் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்.

      நீக்கு
    3. ஸ்ரீமதி கோமதிஅரசு, கீதாக்கா - தங்களது அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் ,வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  14. அழகிய கதைக்களம்... இதுதான் வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  15. பேரன் பேத்திகளுக்கு பண்ணை இல்லத்தை தான் இருக்கும் வீட்டிலேயே அமைத்து கொடுத்து விட்டார் அன்பு தாத்தா.
    பொருத்தமான படம் கெளதமன் சார் வரைந்து விட்டார்.

    பேரன் கவின் பண்ணை வீடு அமைத்து விளையாடுவான்.
    கோழி, ஆடு, குதிரை எல்லாம் இருக்கும் அதில். அதற்கு வேண்டிய உணவுகள் என்ன என்ன என்று அந்த விளையாட்டில் இருக்கும் அதை தேர்வு செய்து கொடுப்பான்.

    //மகனோ வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் விஜயம்.. அங்கும் இங்கும் சென்று வருவதிலேயே நாட்கள் ஓடிவிட - பேரன் பேத்திகளுடன் விளையாடிக் களித்த நேரம் என்பது மிக மிக சொற்பமாக இருக்கும்..
    ஏமாற்றம் மிஞ்சியிருக்க - அடுத்த விடுமுறை எப்போது?.. - என்ற எதிர்பார்ப்புடன் விமான நிலையத்தில் கையசைக்கும் போது இருவர் மனதிலும் ஏற்படும் வேதனை - கன்னங்களில் வழிந்திடும்.. சொல்லி மாளாது..//

    பேரக்குழந்தைகளின் வரவு தாத்தா, பாட்டிகளை எப்படி மகிழ்ச்சி படுத்தும் அவர்கள் ஊருக்கு சென்ற பின் அவர்களின் மனநிலை எல்லாம் அழகாய் சொல்லி இருக்கிறார் கதையில்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமான தாகவல்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. KGG சாரின் ஓவியத்  திறன் அதிகரித்து உள்ளது. 3D படங்களும் வரையும் அளவு  முன்னேறியுள்ளார். தொழில் முறை ஓவியராக வார பத்திரிகளைகளுக்கு  வரையும் காலம் அதிகமில்லை. 

    பதிலளிநீக்கு
  17. கௌ அண்ணா சூப்பர் போங்க!! படம். நன்றாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கதை மிகவும் சிறப்பு துரை அண்ணா. தாத்தா பாட்டி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஊருக்குச் சென்று விட்டால் அதன் பின் வெறுமை....அதையும் தாங்கிக் கொள்ள வேண்டும்

    பேரன் பேத்திகள் வந்தால் தாத்தா பாட்டி எத்தனை சந்தோசப்படுவர் என்பது கதையில் மட்டுமல்ல

    என் உணர்வுகளுடனும் கலந்தது. நான் தாத்தா பாட்டி அன்பில் திளைத்தவள். என் மகனுக்கும் ஓரளவு கிடைத்தது. அதுவும் என் பாட்டியின் அன்பும். இரு நாள் முன்பு பேசிய போது கூட என் பாட்டி அவனுக்கு ஆசையாகச் செய்ததைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் நிதர்சனமான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  19. இங்கு நம் பாட்டிகள் அதான் வல்லிம்மா, காமாட்சிம்மா, கீதாக்கா, கமலாக்கா கோமதிக்கா, பானுக்கா எல்லாரும் சூப்பர் க்ரான்ட்மாஸ்!!! ஹாஹாஹா

    ஒவ்வொருவரும் அவரவர் பேத்திகள் பேரன்களைப் பற்றி எழுதும் போது மனம் ரொம்பவும் மகிழ்ச்சியடையும். இந்த உறவு நலல்தாக அமைந்துவிட்டால் அது தனிதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டிகள் என்றாலும் பாட்டி என்று பாட்டி ஆகப்போகும் ஒரு பா(ர்)ட்டி சொன்னால் கோபம் வந்து விடும். பார்த்து சொல்லவும்.

       Jayakumar

      நீக்கு
    2. மேலே சொல்லி இருக்கும் அனைவருமே பாட்டி ஆனவர்கள் தாம்.

      நீக்கு
    3. முற்றிலும் உண்மை அன்புடன்

      நீக்கு
  20. கடைசி வரி செம //மாடியறையில் வேறொரு கோழி அடை காத்துக் கொண்டிருந்தது..//
    முடிவை ரசித்தேன்...இது கதையின் எஸன்ஸ்!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. 15/20 ஆண்டுகளாக மனம் எரிமலையாய் குமுறும்போது - விதிக்கப்பட்ட விதி.. என்ற் வேத வரிகள் எதிரில் தோன்றும்.. அப்போதெல்லாம் துணைக்கு வந்தவை கவியரசரின் வரிகள் -

    கனவில் நினையாத
    காலம் இடை வந்து
    பிரித்த கதை
    சொல்லவோ!..

    இன்றைக்கு மனம் நிறைந்து இருக்கின்றது.. இது இப்படித் தான் என்பது அவன் வகுத்தது..

    பாரதத்தின் கலாச்சாரத்தில் பெரியோர்கள் சொல்லி வைத்தது எல்லாமே உண்மை..

    இத்தனை நாள்/ வருடம் கழித்து இப்படியான வரம் தந்த இறைவனுக்கு வாழ்நாளே நன்றி..

    பதிலளிநீக்கு
  22. கதை சிறப்பு என்று எல்லாரும் சொல்லி விட்டார்கள்..

    ஆனாலும், தலைப்பு
    ஸ்ரீராம் அவர்களுடையது!..

    பதிலளிநீக்கு
  23. காமாட்சியம்மன்!..
    என் தாய்வழி குல தெய்வம்..

    கருணை கூர்ந்தவள் அவளே!..

    பதிலளிநீக்கு
  24. அன்பு, அரவணைப்பு,
    பந்தம், பாசம் என்று தவித்துக் கிடந்த எனக்கு இந்த நாளில் கதை வெளியாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்!

    தாத்தா, பாட்டியுடன் பேரப்பிள்ளைகள் வளரும் அழகே தனி தான். பெரியவர்கள் பிள்ளைகளுக்காக மிகுந்த சிரத்தையுடன் போட்டு வைத்த சிறு தோட்டமும், அதில் வசிக்கும் ஜீவன்களும் அழகு. கைபேசியும், தொலைக்காட்சியும் இல்லாமல், இயற்கையுடன் உறவாடும் மழலைகள் கொள்ளை அழகு. நாங்கள் சிறு பிள்ளைகளாய் கிராமத்தில் வசித்த நினைவு! இப்படி ஒரு தாத்தா, பாட்டி கிடைக்கப்பெற்றிருப்பது பெருமை! நல்லதொரு கதைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  26. @ கீதாக்கா...

    தாத்தாக்கள் எல்லாம் இளைஞர்களாக சுற்றிக் கொண்டிருக்க பாட்டிகளுக்கு பெருமிதம்.. சந்தோஷம்..

    பதிலளிநீக்கு
  27. தலைப்பிற்கேற்ற அருமையான கதை.

    கனவு இல்லம் என்றால் அதில் பல அர்த்தங்கள் அடங்கும்.

    ஆனால் கதையில் அன்பான உணர்வுகளால் எழுப்பப்பட்ட கனவு இல்லம்.

    இப்படி தாத்தா பாட்டி உறவுகள் அமைந்து அன்பு தழைத்தால் அது கனவு மெய்ப்படும் இல்லமாகிவிடும்தான்.

    வாழ்த்துகள் துரை செல்வராஜு சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  28. துரை செல்வராஜு சார், உங்கள் அம்மாவின் நினைவுநாளில் என் வணக்கங்கங்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் அன்பினுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
  29. மனதிற்கு இதமான கதை! படமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  30. அருமையான கதைக்கு மிக்க நன்றி அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  31. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் பாராட்டும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் பாராட்டும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!