"என்ன வேணும்? யார்?" என்றார் கொட்டாவி விட்டுக்கொண்டே.
கடகடவென்று விஷயத்தைச் சொன்னேன். இதுவரை நடந்த நிகழ்வுகளால், கிடைத்த அனுபவங்களால் நம்பிக்கை இழந்து, அதனாலேயே குரல் பேச முடியாமல் தடுமாற, கலங்கியிருந்த என் கண்களை இரவின் குறைந்த வெளிச்சத்தில் அவர் பார்த்திருந்தார் என்று பின்னர் தெரிந்தது.
சொல்லி முடித்ததும் அவர் உள்ளே செல்லத் திரும்பினார். விளைக்கை அணைத்து, கதவைத் தாழ் போடப் போகிறார். இதுதானே எனக்கு இப்போதைய முன் அனுபவம்...
என் மனதில் வெறுமையும் இயலாமையும் நிரம்பின. அடுத்து என்ன செய்யப்போகிறோம், எங்கு செல்வது என்கிற யோசனை ஓடியது. சற்று தூரம் சென்றால் பிரதான சாலைக்குச் சென்று விடலாம். அங்கு போய்த் தேடும் முன்பு வீட்டுக்குச் சென்று தகவல் சொல்லி விட்டு வரலாம் என்று தோன்றியது. அவர்களும் கவலையுடன் காத்திருப்பர். என்னைப் பற்றிய கவலையும் சேர்ந்திருக்கும். அல்லது சைக்கிளிலேயே அழைத்துச் சென்று விடலாமா?
இந்தச் சிந்தனைகள் நொடியில் கடக்க, அவர் விளக்கை அணைத்தார். கதவைத் தாழ் போட்டார் - வெளியில் வந்து. சட்டை அணிந்துகொண்டே ஆட்டோவை நோக்கி வந்தார். முகத்தில் ஈரம் இருந்தது. அது தூக்கத்தைப் போக்க அவர் தெளித்துக் கொண்ட தண்ணீரினால் மட்டுமல்ல என்று தெரிந்தது..
ஆட்டோவை ஸ்டார்ட் செய்து "எங்கே?" என்றார் சிக்கனமாக. நான் முன்னே சைக்கிளில் வழிகாட்ட, வீடு வந்தோம். காத்திருந்த பாஸையும், பெரியவனையும் ஆட்டோவில் ஏற்றி, சைக்கிளை எங்கள் வீட்டுக்குள் ஏற்றி வைத்து, அப்பாவிடம் கதவைப் பூட்டிக்கொள்ளச் சொல்லிவிட்டு நானும் ஆட்டோவில் ஏறினேன். இடத்தைச் சொன்னேன்.
ஆட்டோ விரைந்தது. அவர் திரும்பி குழந்தையை ஒரு பார்வை பார்த்துக்கொண்டார். நீண்ட பயணத்தின் இடையிலேயே ஒரு சிறு ஆஸ்பத்திரி திறந்திருக்க, அவர் அங்கு நிறுத்தினார். "இங்கில்லை..." என்று நான் தொடங்கவும், அவர் "குழந்தை என்ன நிலையில் இருக்கிறதோ... இங்கு பார்த்து விடலாம்.." என்று சொல்லி அவர் முன்னே உள்ளே சென்றார்.
நாங்களும் தொடர்ந்தோம்.
உள்ளே எதுவும் சரியாக இல்லை. இரண்டு இளம் பெண்கள் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, மருத்துவர் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. அந்தப் பெண்கள் எங்களை அமரச் சொன்னார்கள். "மருத்துவர் இதோ வந்து விடுவார்.." என்று சொல்லி விட்டு அங்கிருந்த ஒரு பணியாளரை அழைத்தார். "நீ போய் டாக்டரை அழைத்து வா... கேஸ் வந்திருக்கு என்று சொல்லு" எங்கள் போன்றோரின் அவசரம் அவர்களுக்கு தினசரி வாடிக்கை, பழகிப்போன ஒன்று.
அவர் டாக்டரை அழைத்துவர உள்ளே செல்வார் என்று பார்த்தால், வெளியே கிளம்ப, என்னவென்று விசாரித்தோம். சைக்கிளை எடுத்துக்கொண்டு வேறு ஏரியா சென்று சொல்ல வேண்டுமாம்.
"கவலை வேண்டாம்... டாக்டர் கிட்ட பைக் இருக்கு" என்றாள் ஒரு இளம்பெண்.
எனக்கு சரியாகப் படவில்லை. என்ன செய்வது என்று நான் யோசிக்கும் முன்
"வாங்க என்று எங்களையும் அழைத்துக்கொண்டு
ஆட்டோக்காரர் வாசல் நோக்கிக் கிளம்பிவிட்டார்.
வெளியில் வந்து கிளம்பி நான் சொன்ன அந்தப் பெரிய குழந்தைகள் மருத்துவமனைக்கே சென்றோம். இறங்கியதும் "எவ்வளோ கொடுக்கணும்?" என்று கேட்டேன். பதில் சொல்லாமல், "வாங்க உள்ளே போகலாம்" என்று உடன் வந்தார்.
நாங்கள் ரிசப்ஷனில் அட்மிஷன் ஃபார்மாலிட்டீஸ் முடித்துக் கொண்டிருக்கும்போது அவர் நேரத்தை வீணாக்காமல் உள்ளே சென்று ஒரு பெண்ணுடன் வந்து விட்டார். குழந்தையை எடுத்துக்கொண்டு அவர்கள் உள்ளே விரைந்தார்கள். "நீங்கள் இங்கேயே வேலையை முடிச்சுக்கிட்டு இருங்க இதோ வர்றேன்" என்று விட்டு ஆட்டோக்காரர் அவர்களுடன் சென்றார்.
சற்றுநேரத்தில் நாங்களும் உள்ளே சென்றோம். பையனுக்கு ஏற்கெனவே கைகால்களில் ட்ரிப் போட்டு பழைய மருத்துவமனையில் நரம்புகளை சேதப்படுத்தி வைத்திருக்க, இப்போது தேடித் தேடி குத்தியபோது எங்களுக்கு வலித்தது.
அங்கே நான்கு நாட்கள் இருந்தோம். ஆட்டோக்காரர் ஒரு மிகச் சாதாரணமான கட்டணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிச் சென்றார். அதற்குமுன் அவருடன் பேசியதில் அவருக்கு சில நாட்களுக்கு முன்னால்தான் குழந்தை பிறந்திருந்ததாகவும், அந்தக் குழந்தையைப் பார்க்க சேலம் சென்று விட்டு அப்போதுதான் அவர் வந்து தூங்கத் தொடங்கியதாகவும் சொன்னார். அதைக்கூட அவர் முன்னாலேயே சொல்லவில்லை என்பதும், அவர் துளிக்கூட களைப்பாக இருப்பதாகவோ, சோர்வாகவோ அலுப்பையோ காட்டிக்கொள்ளவில்லை என்பதுதான் சிறப்பு. அப்படியும் ஆட்டோக்காரர்கள் இருக்கிறார்கள், இப்படியும் இருக்கிறார்கள். ஆட்டோக்காரர்கள் என்று தனிப்படுத்திச் சொல்லாமல் பொதுவாகக் கூடச் சொல்லலாம். அவர் எங்களிடமிருந்து கிளம்பும்போது நள்ளிரவு மணி இரண்டை நெருங்கி கொண்டிருந்தது. என்ன தலையெழுத்து? இறக்கி விட்டுவிட்டு அவர் பாட்டுக்குச் சென்றிருக்கலாம்.
இன்று வரை அவர் பெயர் எனக்குத்தெரியாது. அப்புறம் பலமுறை அவரைப் பார்த்துப் பேசி இருக்கிறோம் என்றாலும் அவர் பெயர் எங்களை பொறுத்தவரை காயத்ரி அப்பா! இப்போது கூட எங்களுக்குள் அடையாளத்துக்கு அப்படித்தான் சொல்வோம்.
நான்கு நாட்கள் அந்த மருத்துவமனையில் இருந்து குழந்தையை குணமாக்கிக் கொண்டு வீடு வந்தோம். டாக்டர் வேதவல்லியும், டாக்டர் ஜே விஸ்வநாத்தும் (DR. JV) குழந்தைக்கு உயிர் கொடுத்தார்கள். அப்புறம் பல மாதங்கள் மாதமொருமுறை டாக்டர் ஜேவி என்று அறியப்பட்ட ஜே விஸ்வநாத்தை சென்று பார்த்து வருவோம்.
=============================================================================================
முன்னமொரு வியாழன் பதிவில் ஒரு படம் வெளியிட்டிருந்தேன். அதற்கு ஒரு கவிதை எழுதி இருப்பதாக துரை செல்வராஜூ ஸார் சொல்லி இருந்தாலும் அனுப்பவே இல்லை. 'பல்லவி கிடைக்கவே இல்லை' என்றார். அனுப்புங்களேன் என்று மறுபடியும் கேட்டபிறகு சென்ற வாரம் அனுப்பி வைத்திருந்தார். அது இங்கே.....
மேலே உள்ள படம்தான் செல்வராஜூ ஸாரை இந்தக் கவிதையை எழுதத் தூண்டியது என்றாலும் ஜீவி ஸார் விருப்பப்படி அவரே அனுப்பி உள்ள இந்தப் படத்தையும் இந்தக் கவிதைக்குப் பொருத்தமாக இங்கு இணைக்கிறேன். முதலில் படத்துக்கு கவிதை. பின்னர் கவிதைக்குப் படம்!
முன்னமொரு வியாழன் பதிவில் ஒரு படம் வெளியிட்டிருந்தேன். அதற்கு ஒரு கவிதை எழுதி இருப்பதாக துரை செல்வராஜூ ஸார் சொல்லி இருந்தாலும் அனுப்பவே இல்லை. 'பல்லவி கிடைக்கவே இல்லை' என்றார். அனுப்புங்களேன் என்று மறுபடியும் கேட்டபிறகு சென்ற வாரம் அனுப்பி வைத்திருந்தார். அது இங்கே.....
மேலே உள்ள படம்தான் செல்வராஜூ ஸாரை இந்தக் கவிதையை எழுதத் தூண்டியது என்றாலும் ஜீவி ஸார் விருப்பப்படி அவரே அனுப்பி உள்ள இந்தப் படத்தையும் இந்தக் கவிதைக்குப் பொருத்தமாக இங்கு இணைக்கிறேன். முதலில் படத்துக்கு கவிதை. பின்னர் கவிதைக்குப் படம்!
பாவை ஓவியம்..
********************
அவன்:
விழிப் புருவ வில்லேந்தி
வெல்லுகின்ற சொல்லேந்தி
நாண் அற்ற நாண் ஏற்றி
நலந் தொடுத்த கவிதை..
மலர்விழியில் மையெழுதி
மைவிழிக்குள் மனம் எழுதி
எனை வரைந்த தூரிகையால்
தனை வரைந்த ஓவியமே..
ஏடறியா மொழியும் நீ
கலை அறியாச் சிலையும் நீ
வழி அறியா வலையும் நீ
விழி அறியா ஒளியும் நீ..
மெல்லிதழில் மேவி வரும்
அமுதா நீ... அழகா நீ...
பொன்னிதழால் பேசி வரும்
தமிழா நீ... சுவையா நீ...
அந்தி வண்ண மெல்லிதழும்
கொஞ்சும் கொஞ்சும்
தமிழ்க் குங்குமத்து வாசம்
நெஞ்சில் தங்கும் தங்கும்...
காற்றில் ஏறிக் காதற்கிளி
செல்லும் செல்லும்
கனவில் கூட அதுவே தான்
வெல்லும் வெல்லும்...
அவள்:
சொல்லுவதும் தமிழைத்தான்..
வெல்லுவதும் தமிழத்தான்..
கொஞ்சுவதும் தமிழைத்தான்..
நெஞ்சமெலாம் தமிழத்தான்..
மங்கை மனம் பொன்னத்தான்
கையிரண்டில் அள்ளத்தான்..
திங்கள் மனம் நோகத்தான்
தென்றல் போல பேசத்தான்...
மாம்பழத்துக் கன்னத்தில்
மச்சம் ஒன்று தேடத்தான்...
மைவிழியின் ஓரத்தில்
உன் அழகைப் பாரத்தான்..
ரதிமதனும் நோகத்தான்
ரகசியங்கள் பேசத்தான்..
காரிருளும் கலையத்தான்
கவிதை ஒன்று தீட்டத்தான்...
கருங்குவளை மலரத்தான்..
கண் மலர்ந்து ஆடத்தான்...
காமனையும் வெல்லத்தான்..
கவிதை ஒன்று சொல்லத்தான்...
பொன் விழியும் கொள்ளத்தான்..
பூஞ் சிரிப்பை அள்ளத்தான்..
சேல் விழியை வெல்லத்தான்..
இதற்கு மேலும் என்னத்தான்!...
ஃஃஃ
===============================================================================================
பொக்கிஷம் : சில ஜோக்ஸ்...
"தயவு செஞ்சு சீக்கிரம் வாங்கப்பா...!"
மூட்டைப்பூச்சியால் விளைந்த விபரீதம்!
அது யாருக்குத் தெரியும்? இது ஜோக்!
தன்னடக்கம் இல்லீங்க...
அது ஒரு காலம்...
======================================================================================
படித்தது : அப்படியா?
மதுரைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அங்கே கோயில் கொண்டிருக்கும் அப்பனைவிட அம்மைக்கே சீரும் சிறப்பும் மிகுதி! அதனால் "மாது உறையும் பேரூர்" என்று முதலில் வழங்கி, அதுவே "மதுரைப் பேரூர்" எனத் திரிந்து, பின்னர் மதுரையாக நிலவுவதாயிற்று" என்று தமிழறிஞர்கள் சொல்வார்கள்.
- புலியூர் கேசிகன், "புகழ் பெற்ற பேரூர்கள்" -
======================================================================================
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது..
பதிலளிநீக்குநலம் வாழ்க...
பொருத்தமான குறள்தான்.
நீக்குவாழ்க நலம்.
அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குஇன்றொரு கவிதை என்று
பதிலளிநீக்குஇதோ அந்த ஓவியப்பாவை..
பொன் அழகா இல்லை
பூ அழகா என்று
இன்முகம் காட்டி வந்தாள்
பொதிகைமலைப் பூவை..
சென்ற ஆண்டு நவம்பரில் எழுதியது பாவை ஓவியம்...
முதல் கண்ணியில் பின்னிரண்டு வரிகள் மட்டும் சரியாக அமையவில்லை...
இருப்பினும் அன்புடன் பதிப்பித்த
ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...
படைப்பாளராக உங்களுக்கு குறை இருக்கலாம். எங்களுக்கு ஏதும் தெரியவில்லை! நன்றி துரை செல்வராஜூ ஸார்...
நீக்குகாயத்ரியின் அப்பா!...
பதிலளிநீக்குகண் கலங்க வைத்து விட்டார்...
இப்படியான நல்லவர்களைச் சந்திப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...
ஆம். ஒரு ஆச்சர்யம் என்ன என்றால் பல வருடங்களுக்குப் பிறகு சுமார் இருபது நாட்களுக்கு முன் அவர் என்னைத் தொடர்பு கொண்டார்!
நீக்குஉண்மையில் ஆச்சர்யம் தான்....
நீக்குநல்லமனங்கள் நலங்கொண்டு வாழ்க...
அன்பின் ஸ்ரீராம், அன்பு துரை இனிய காலை வணக்கம். நலமுடன் இருக்க என் பிரார்த்தனைகள்.
நீக்குவாங்க வல்லிம்மா... காலை வணக்கம்.
நீக்குஎதற்கு தொடர்பு கொண்டார் பழைய நினைவுகள் அவரிடமும் இருந்ததா
நீக்குபொக்கிஷம் அருமை..
பதிலளிநீக்குஇதில் குழந்தைக்குத் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்த கணக்கு எங்கோ படித்த மாதிரி இருக்கிறது...
அது ஒரு காலம் தான்
அந்த விலைவாசி விவரம்...
குழந்தைக்குத் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்த கணக்கு....
நீக்குஅது அடிக்கடி மறுஅவதாரம் எடுக்கும் ஜோக்!
பொக்கிஷம் மிக அருமை.
நீக்குஒர் ரூபாய்க்கு இரண்டு படி என்று வரிசையில் நின்று
வாங்கிய அனுபவம் இருக்கிறது.
திருமங்கலம் ஊரில் வாங்கிய நினைவு. எனக்கு 9
வயது இருக்கலாம்.எதற்காக,எந்த நிலைமை என்று நினைவில்லை.
தோழிகள் போனார்கள் நானும் போனேன்.:)
இந்த அரிசி விவகாரத்தை வைத்துதானே காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.. 'பக்தவச்சலம் அண்ணாச்சி' பதவி இழந்தார்?
நீக்குஅன்பு ஸ்ரீராம்.
நீக்குஇது நடந்தது 1957இல்.
அப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக
அரிசிக்குத் தடை வந்தது.
தங்கத்துக்குத் தடை வந்தது.
அவர்கள் பதவி இழந்தது இந்தி எதிர்ப்பு,ரயில் பாதையில்
படுத்தவர்கள் ஆட்சிக்கு வந்தது 67இல். :))))))
அது சரி... ஒரு ரூபாய்க்கு மூணு படி அரிசி கோஷம் அந்தத் தேர்தலில் எழும்பியதே...
நீக்குஓ!ஆமாம்.
நீக்குதராத பட்டியலில் அதுவும் ஒன்று.
நல்லவர்களில் போட்ட பாதையில்
நடந்து பாலம் கட்டிப் பெயர் வாங்கினார்கள் .அரிசி
கொடுக்கவில்லை.
மூட்டைப்பூச்சி கான்ஸ்டபிள் நல்ல சிரிப்பு.
பதிலளிநீக்குபொருட்காட்சி குழந்தை செலவு, அதிர்ஷ்டக்கார குழந்தை.
அம்மா அப்பா இவ்வளவு செலவழித்திருக்க மாட்டார்கள்.:)
ஹா.. ஹா.. ஹா... புத்திசாலிக்குழந்தை! சூரசம்ஹாரம் பட ஜனகராஜ் நினைவுக்கு வருகிறார்!
நீக்குகுழந்தைக்காக இத்தனை சிரத்தை எடுத்துக் கொண்ட
பதிலளிநீக்குகாயத்ரி அப்பா, மிகச் சிறப்பாக இருக்கவேண்டும்.
குழந்தையும் ,நீங்களும் பாசும் பட்ட சிரமம்
கண்கலங்க வைத்துவிட்டது.
குழந்தைகளும் நீங்களும் நீண்ட நல்வாழ்வு பெற
ஆசிகள்.
உண்மைதான் அம்மா. இப்படி ஒரு நல்ல மனம் அப்போது இருந்திருக்கிறது. நன்றி.
நீக்குமுடிவு தெரிந்த நிகழ்வு. சொல்லியவிதம் ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்குஅபூர்வமான மனிதர்.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
வாங்க நெல்லை. வணக்கம். சமயங்களில் அவரையும் விடுத்து இன்னொருவர் வந்திருக்கவும் வாய்ப்பிருந்ததே..!
நீக்குஅன்பு துரையின் பாவை ஓவியம்
பதிலளிநீக்குஒவ்வொரு வரியாகப் படித்துவிட்டுச் சொல்ல வேண்டும்.
அத்தானும் பாவையும் பார்வையாலயே பேசிக்கொள்ளும்
அழகு அவர் கவிதையில்
தேனாக ஒடுகிறது.
அதிலும் பாவை விழியால் காதல் கடிதம்
எழுதிக் கொண்டே இருக்கிறாள்.
தங்கள் அன்பின் கருத்துரைக்கு நன்றியம்மா...
நீக்குதிங்கள் மனம் நோகத்தான்
நீக்குதென்றல் போல பேசத்தான்...இங்கே எனக்கு புரியவில்லை.
திங்கள் மனம் ஏன் நோக வேண்டும்.
விளக்கம் ப்ளீஸ்.
திங்கள் - சந்திரன்...
நீக்குமனோகாரகன்.. மனதில் எழும் எண்ணங்களில் உன்னதத்திலும் உன்னதம் காதல்... அதன் அதிபதியாகக் கொள்ளப்படுபவன்...
இப்படியொரு காதலைக் கொண்டாடாமல் இருந்து விட்டோமே!.. என்று சந்திரன் மனம் வருந்த வேண்டும்..
அதனால் நீ என்னுடன் தென்றல் போல பேசடா கண்ணா!.. - என்கிறாள் நாயகி...
அருமை அருமை. நன்றி துரை மா.பேசட்டும் பேசட்டும்.
நீக்குஆழ்ந்து படிக்கிறீர்கள் அம்மா. கேட்ட விளக்கமும் அருமை; வந்த விளக்கமும் அருமை.
நீக்குதுரை செல்வராஜு சாரின் கவிதை மிக நன்றாக வந்திருக்கு.
பதிலளிநீக்குஆனால் இந்தப் படத்துக்கா அந்தக் கவிதை உதித்தது? தமிழைத்தான், தமிழ் அத்தான் என்ற டங்களில், தவழத்தான், தவிக்கத்தான் என்றுதான் படம் எனக்குச் சொல்கிறது.
தண்ணிலவு வேண்டுமெனில்
நீக்குதவழத்தான்..
தணல் கொண்டு நின்றிடுமோ
தவிக்கத்தான்!...
இப்படியும் வந்திருக்கலாம்.. ஆனால் அதற்கான சூழல் அங்கு இல்லை...
அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி...
அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நாளைய தினம் ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளிவரப்போகும் நாள். என்ன அறிவிப்பு வருமோ தெரியலை. எல்லாம் நல்லபடி இருக்கப் பிரார்த்திக்கலாம். ஐசிஎம் ஆர் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி கொடுத்திருப்பதாகச் செய்தி படித்தேன். இது உண்மையாக இருந்து விரைவில் செயல்பாட்டுக்கும் வரவேண்டும் எனப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம். எல்லாம் நல்லபடி நடக்கட்டும். இங்கு அருகாமை வீட்டுக்காரர் வங்கியில் பணிபுரிபவர். அவர் மாற்றுப்பணியில் சென்ற இடத்தில் ஐம்பது பேர்களாம். அதில் 45 பேர்களுக்கு கொரோனா வந்ததாம். வராத ஐந்து பேர்களிடம் எப்படி என்று கேட்டதற்கு அவர்கள் தினசரி வீடு சென்றதும் ஆவி பிடித்து விடுவார்களாம். ஒரு சொம்புத் தண்ணீரில் கல்லு உப்பும் எலுமிச்சம்பழச்சாறும் கலந்து குடிப்பார்களாம். ஆனால் இது மட்டும்தான் அவர்களுக்கு வராமலிருக்கக் காரணமா என்று தெரியவில்லை. ஐ சி எம் ஆர் அனுமதி கொடுக்கும் மருந்து வேலை செய்யவேண்டும் என்று பிரார்த்திப்போம்.
நீக்குநகைச்சுவை பகுதி அருமை.
பதிலளிநீக்குவிலைவாசி உயர்ந்து உயர்ந்து, அவசியம் இல்லாதவர்களையும் பிச்சைக்கார்ர்களாக அரசு ரேஷன் கடை மூலம் வைத்திருக்கிறது. தொலைக்காட்சிக்கு மாதம் 150ம், டாஸ்மாக்குக்கு 500ம் செலவழிப்பவர்களால் குடும்ப உணவிற்கு 500 ரூபாய் செலவழிக்க மனதில்லை, இலவச அரிசி (அப்படீன்னா என்ன? மத்தவங்க காசு கொடுத்து அதனால இவங்களுக்கு இலவச பொருட்கள் கிடைக்குது) கிடைக்க அல்லாடறாங்க.
ஆனால் டிசர்விங் ஏழை மக்களும் அதில் 20 சதவிகிதம் அல்லது அதற்குக் குறைவாக இருப்பாங்க
அந்த இலவச அரிசியை எத்தனை பேர் வாங்குகிறார்கள்? வாங்குகிறவர்களும் எதற்காக வாங்குகிறார்கள் என்பதெல்லாம் கேள்விக்குறிதான்! நேற்று கிலோ கணக்கில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரைப் பிடித்திருக்கிறார்களாம்! செய்தித்தாளில் படித்தேன்.
நீக்குகாயத்ரி அப்பா குழந்தையைக் காப்பாற்றினார். அரிதாக நடந்தாலும் நெகிழ வைத்த மனிதர். நீடூழி வாழட்டும். காயத்ரிக்குக் கல்யாணம் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். அதுக்குத் தான் அழைப்பதற்குத் தொடர்பு ? மாயாவின் ஓவியத்திற்கு துரையின் கவிதை சிறப்பு. நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குகவிதை சிறப்பு எந்றுரைத்தமைக்கு நன்றியக்கா...
நீக்குஅழைத்ததற்கான காரணம் வேறு ஒரு உதவி கேட்டு! சரி, வாருங்கள் என்றேன். அப்புறம் வரவில்லை.
நீக்குகுழந்தைக்குத் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்த நகைச்சுவைத் துணுக்கைப் பல்வேறு வடிவங்களில் பார்த்துட்டேன். மூட்டைப்பூச்சி கதையும் படிச்சிருக்கேன். குடிசையில் கிரஹப்ரவேசம் பண்ணியவரின் தன்னடக்கம் உண்மையில் வியக்க வைத்தது. பர்ஸ் தொலைந்த நகைச்சுவைத் துணுக்கும் படிச்சது தான். அந்தக் காலப்புத்தகங்களில் எவ்வளவு தரமான நகைச்சுவை உணர்வைப் பகிர்ந்திருக்கிறார்கள் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குசொன்னாலும் சொல்லாவிடிலும் மதுரைப் பேரூர் தான்.
நீக்குமீனாட்சிபுரம் நினைவுக்கு வருகிறது.
வல்லிம்மா.... மதுரை பேரூர் கிடையாது. மதுரை மூதூர். மத்ரா என்ற பெயர் கிரேக்க ஆசிரியர்களால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே குறிக்கப்பட்டுள்ளது.
நீக்குஆஹா. மூதூர்தா்ன். நன்றி நெல்லை மா.
நீக்குஆமாம் கீதா அக்கா... எல்லாம் முன்னரே நீங்கள் எல்லாம் படித்த நகைச்சுவைத் துணுக்குகளாகத்தான் இருக்கும்! மலரும் நினைவுகள்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அப்படியே அமைய உங்களோடு சேர்ந்து அனைவரும் பிரார்த்திப்போம். வாங்க கமலா அக்கா. வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று மிக தாமதமாகத்தான் பதிவுகளுக்கு வர முடியுமென்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனைக்கும் காலையில் மூன்று மணிக்கே எழுந்தாகி விட்டது. தீடிரென குழந்தைக்கு (மகள் வயிற்று பேத்தி) ஜுரமாக இருக்கிறது. ஒரே கவலை. தூக்கமே வரவில்லை. அதனோடு கிச்சன்,அங்குள்ள விண்டோ, மூலை முடுக்கு என சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு கவலையை மறக்க முயற்சித்ததில் மணி 7ஐ தொட்டு விட்டது. மதியத்திற்கு மேல் வருகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதற்றம் வேண்டாம்..
நீக்குகுழந்தை நலம் அடைவாள்..
ஐயன் அருள் உண்டு..
என்றும் பயம் இல்லை..
அன்பு கமலாமா,குழந்தைக்கு ஜுரம் குறைந்துவிடும். குறைந்ததும் சொல்லுங்கள். தளர வேண்டாம்.
நீக்குகுழந்தைக்கு ஜுரம் சரியாகி விடும் அக்கா. கவலை வேண்டாம். அனைவரும் பிரார்த்தித்துக் கொள்வோம்.
நீக்குகுழந்தைக்கு ஜுரம்னா நிச்சயமாய்க் கலக்கமாய்த் தான் இருக்கணும். கவனமாகப் பார்த்துப்பீங்க. இருந்தாலும் தைரியமாகவும் இருங்க. ஒண்ணும் இருக்காது. குழந்தை நல்லபடி குணமாகிப் பழையபடி விளையாட வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நீக்குகுழந்தைக்கு இறைவன் அருளால் ஜுரம் குறைந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
நீக்குவணக்கம் அனைவருக்கும்.
நீக்குநான் என் பேத்திக்கு ஜுரம் என சொன்னதும், சகோதரர் துரை செல்வராஜ், ஸ்ரீராம் சகோ, சகோதரிகள் வல்லிசிம்ஹன், கீதாசாம்பசிவம், கோமதிஅரசு அனைவரது அன்பான விசாரித்தலும், கனிவான ஆறுதல் வார்த்தைகளும் எனக்கு மிகவும் ஆறுதலளித்து தைரியமளித்தது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் பேத்திக்கு ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு ஒரு கடுமையான ஜுரம் வந்து நான்கைந்து நாட்களுக்கும் மேலாக மிகவும் சிரமப்பட்டு விட்டாள் அதுதான் நேற்றைக்கு ரொம்ப கவலையாக போய் விட்டது. இப்போது காய்ச்சல் சற்று குறைந்துள்ளது இரவு மறுபடியும் நேற்று போல் ஜுரம் வராமல், பூரண குணமாக அந்த ஆறுமுகன் காத்தருள வேண்டும். இந்த காலகட்டத்தில் இரவில் குழந்தைக்கு உடல்நிலை இப்படி சரியில்லாமல் போவது கவலையை தருகிறது. வேறு ஒன்றுமில்லை. உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் அவளை காத்து ரடசிக்க வேண்டும். நான் இன்று காலை என் மனப்பதற்றத்தில் உங்களையும் கலங்க வைத்து விட்டதற்கு வருந்துகிறேன். மறுபடியும் உங்கள் அனைவரது பிரார்த்தனைகளுக்கும் கனிவான விசாரித்தல்களுக்கும் என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... காலை வணக்கம்.
நீக்குநல்ல ஆட்டோக்காரர் வாழ்க!
பதிலளிநீக்குஎக்சிபிஷனில் தொலைந்த குழந்தை ஜோக் குமுதத்தில் வந்ததோ? படித்த நினைவு இருக்கிறது.
துரை சாரின் கவிதைதான் இன்றைய ஹைலைட்!
இப்போது விஷம் போல் ஏறியிருக்கும் விலைவாசி கூட ஐம்பது வருடங்கள் கழித்து குறைச்சல் என்று தோன்றலாம்.
சுவையான கதம்பம்!
நன்றி பானு அக்கா.
நீக்குஎனது கவிதையை இன்றைய ஹைலைட் என்று பாராட்டியதற்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஜெயராஜ் வரைந்த ஓவியம் என்று நினைத்தேன். ஜெ.. ஸ்டைலில் மாயா வரைந்த ஓவியம் என்பது பிறகுதான் தெரிந்தது. அதற்கு துரை சார் வரைந்திருக்கும் சொல்லோவியம் மிக அருமை!
பதிலளிநீக்குஆமாம்... ஜெ... பாணியில் மாயா வரைந்திருந்த ஓவியம்... இதை பேஸ்புக்கில் வேறு மாதிரி வாசத்துடன் பகிர்ந்திருந்தேன்! அதை வியாழனில் பாகிர்ந்திருந்தேன். துரை ஸார் அதற்கு அழகாக ஒரு கவிதை எழுதி விட்டார்.
நீக்குசென்ற நவம்பரில் எழுதிய கவிதை அது..
நீக்குஎப்படியாகுமோ .. - என்றிருந்தேன்..
அனைவரும் பாராட்டியிருப்பதில் மகிழ்ச்சி..
நல்ல மனம் உள்ளவர்கள் இறைவனின் அருட்கொடையாளர்கள்.
பதிலளிநீக்குஅதற்கு வேலை ஒரு காரணமல்ல! நல்ல மனமுள்ள ஆட்டோக்காரரும் உண்டு, கெட்ட குணமுள்ள விஞ்ஞானியும் உண்டு.
குவைத்ஜி அவர்களின் கவிதை அமுதத்தமிழ்.
வாழ்த்துகள் ஜி
வேலை காரணம் இல்லை, நான் உட்பட எல்லோரிடமும் இந்த குணங்கள் உண்டு என்பதை சென்ற வாரமே நானும் சொல்லி இருந்தேன்.
நீக்குநன்றி ஜி.
அன்பின் ஜி அவர்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி...
நீக்குதுரை சாரின் கவிதை அழகாக வளர்ந்திருக்கிறது. தவிர்க்கமுடியாத் தனிமையின் பங்களிப்போ! வியாழனுக்கான விசேஷ ஆபரணமோ..
பதிலளிநீக்குஇப்படிச் சொன்னது சரி. ஆனால், இங்கேயே நிறுத்திவிட்டால் என்னாகும்? ‘ஆஹா.. ஓஹோ!’ ஜோதியில் ஐக்கியமானதாக ஆகிவிடுமே! So, unpopular-ஆக இருக்கும் என்றாலும் பரவாயில்லை என மனதில் பட்டதைக் கொஞ்சம் -இந்தக் கவிதைக்காக அல்ல, பொதுவாக- சொல்வோம்:
கவிதை வடிவம் கொண்டிருப்பதே தமிழில்தானே
தமிழென்பதே இன்பம் என்பதும் தெரிந்ததுதானே
அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி
அலட்டவேண்டிய அவசியம் இல்லைதானே!
வாங்க ஏகாந்தன் ஸார்... அவர் மனதில் பெரியதொரு கற்பனை ஒற்று வைத்திருக்கிறார்.
நீக்குகவிதை வடிவம் கொண்டிருப்பதே தமிழில் தானே!..
நீக்குஉண்மைதான்.. சற்று வெளியில் இருந்து நோக்க வேணும்..
நெஞ்சம் எல்லாம் தமிழைக் கொண்டிருக்கும் என்னை - தமிழை -
கொஞ்சுகிறாயடா!..
அப்படித் தமிழைத் தமிழால் கொஞ்சுகிற போது அன்பு மொழி சொல்லுகிற போது வெற்றியடைவது தமிழாகிய நான் அல்ல..
தமிழாகிய அமுது.. மொழி!..
என்று நினைத்துக் கொண்டு எழுதினேன்..
அன்பின் ஏகாந்தன் அவர்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
காயத்ரி அப்பா போன்றவர்கள் இருக்கிறார்கள். நமக்கு நல்ல நேரம் இருக்கும்போது எதிரே வருவார்கள்..
பதிலளிநீக்குஅடடா!...
நீக்குநமக்கு நல்ல நேரம் இருக்கும் போது
நல்லவர்கள் எதிரே வருவார்கள்!....
இதைத் தானே தேடிக் கொண்டிருந்தேன்...
அன்பின் ஏகாந்தன் அவர்களுக்கு வணக்கம்...
ஆம்... நான் செய்த ஏதோ நல்ல காரியம் அவர்களை என் கண்ணில் காட்டி இருக்கிறது!
நீக்குவணக்கம் துரை சார்!
நீக்குஇன்னல், இடர்ப்பாடுகளினிடையே என்னசெய்வதெனத் தெரியாது விழித்தபோது, ஏர்ப்போர்ட்டுகளில், மொழிதெரியா நாடுகளில் எதிர்வந்து காரியம் செய்துவிட்டு திடீரெனக் காணாமற்போன மென் மனிதர்களின் சுவடுகள் மனதில் நிழலாடுகின்றன.
பையனுக்கு ஏற்கெனவே கைகால்களில் ட்ரிப் போட்டு பழைய மருத்துவமனையில் நரம்புகளை சேதப்படுத்தி வைத்திருக்க, இப்போது தேடித் தேடி குத்தியபோது எங்களுக்கு வலித்தது.//
பதிலளிநீக்குஆமாம் ரொம்பவே மனது கஷ்டமாக இருந்திருக்கும்.
காயத்ரி அப்பாவிற்கு எத்தனை பாராட்டுகள் நன்றிகள் சொன்னாலும் போதாது. என்ன ஒரு கரிசனம்!! நல்ல மனம் வாழ்க!!
கீதா
வாங்க கீதா ரெங்கன்... உண்மை. நாங்கள் அவரை மறக்கவே மாட்டோம்.
நீக்குதுரை அண்ணா கவிதை/பாட்டு தூள் கிளப்பிட்டீங்க! தமிழ் கொஞ்சுகிறது விளையாடுகிறது! வியக்கேன்!
பதிலளிநீக்குகீதா
நானும்!
நீக்குகீதா தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
நீக்குஒரு வகையில் காயத்ரி அப்பாவும், DR. JV போல ஒரு கடவுள்...
பதிலளிநீக்குகவிதை வரிகளில், தமிழ் சொக்க வைக்கிறது...!
JV யை விட அவரே பெரிய கடவுள் அந்த நேரத்தில்...
நீக்குநன்றி DD.
தயவு செய்து வாங்கப்பா//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா...பிள்ளைய வந்து கூட்டிட்டுப் போயிருப்பாங்களான்னு சந்தேகமாவே இருக்குதே!!!
கீதா
வேணும்னே விட்டுட்டுப் போயிருப்பாங்களோ...
நீக்குமற்ற பொக்கிஷம் அனைத்துமே ரசித்தேன். ஓல்ட் இஸ் கோல்ட்!
பதிலளிநீக்குவிலை வாசி ரூபாயின் மதிப்பு குறைந்துவருவதைத்தான் சொல்கிறது.
மதுரை எனும் பெயர் வந்தது சுவாரசியம்.
இதை வாசித்ததும் எங்கள் ஊர் திருவண்பரிசாரத்தில் நம் வீட்டிலிருந்து 5 நிமிட நடையில் இருக்கும் பெரியாற்றின் கரையில் ஜடாயுபுரம் அங்குதான் ஜடாயு வீழ்ந்திருந்ததாகச் சொல்லப்பட்டு ஜடாயுபுரம் என்றானது என்பர்.
எங்கள் ஊர்ப்பகுதி நிறைய ராமாயணத்தோடு சம்பந்தப்பட்ட பகுதிகள் என்று பெயருடன் இருக்கின்றன
சில கிலோமிட்டர் தள்ளி (நாகர்கோவிலில் இருந்து செல்ல வேண்டுமென்றால் சுற்றுபாதை எங்க ஊரிலிருந்து குறுக்கால போனா ஹா ஹா ஹா) தெரிசனங்கோப்பு அருகே தாடகைமலை தாடகை போன்று இருக்கும் என்றும் அங்கு தாடகை வாழ்ந்துவந்த பகுதி என்றும் சொல்லப்படும். அது போன்று வில்லுக்கீறி மருவி வில்லுக்குறி...
திருவான்மியூருக்கும் பெயர்க்காரணம் - வால்மீகி தவம் செய்யறப்ப புற்று வளர்ந்ததால் வால்மீகி என்று பெயர் பெற்றதாகவும் அங்குதான் தவம் புரியும் போது இறைவன் காட்சி கொடுத்ததாகவும் சொல்லப்படுவதால் வான்மிகியூர் அப்புறம் திருவான்மியூர் என்றானது என்பர்.
கீதா
நன்றி கீதா... மேலதிக விவரங்களுக்கும்!
நீக்குசில ஆண்டுகள் முன்னர் திருவான்மியூர் போயிட்டு வந்து நானும் இதைக் குறித்து எழுதின நினைவு. பார்க்கணும். சமயங்களிலே ட்ராஃப்ட் மோடிலேயே கிடக்கும்.
நீக்குகாயத்ரி அப்பாவுக்கு வாழ்த்துக்கள்! தகுந்த நேரத்தில் உதவி உடன் இருந்து பார்த்து கொண்டு பின் விடைபெற்ற நல்ல மனிதரை போற்ற வேண்டும். இக்கட்டான நேரத்தில் தெய்வம் அனுப்பிய மனிதர் காய்த்ரி அப்பா.
பதிலளிநீக்குசகோ துரைசெல்வராஜூ கவிதை அருமை.
பதிலளிநீக்குபொக்கிஷ பகிர்வுகள் அருமை.
விலைவாசி பாற்றிய செய்தி அன்றும் இன்றும் எந்த வருடம் என்று குறிப்பிட்டு இருக்கலாம்.
தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குகவிதை வந்து சேர்ந்தவுடன் நீங்களாவது அகநானூறு சித்திரக்காட்சி படம் ஒன்றைத் தேடிப் பிடித்துப் படத்தை மாற்றியிருக்கக் கூடாதா?..
பதிலளிநீக்குதம்பியின் அழகுக் கவிதைக்கேற்ற படம் இல்லை அது.
ஏதோ ஹோட்டல் அறைக்காட்சி மாதிரி ஒரு படம்.
நெல்லையைக் கேட்டால் குமுதப் படம் என்று குமுறுவார்.
நமக்கேன் வம்பு?... ஹாஹாஹா..
"குமுதப் படம்" என்று குமுறுவார் - ஹா ஹா - நான் எஸ் ஏ பியின் குமுதப் பத்திரிகை ரசிகன். இப்போ கூட, அந்தக் கால குமுதம் பத்திரிகைகள், எங்கேயும் கிடைக்கும் என்றால் வாங்கிப் படிக்க ஆசைதான் (70-90) என்ன ஒண்ணு... எல்லார் முன்னாலயும் விகடன், துக்ளக் படிக்கலாம். குமுதம் அப்படி படிக்க முடியாது. அவ்ளோதான்.
நீக்குபடமும் கவிதையும் SYNC ஆகலை. ஆனா கவிதை நல்லா இருக்கு.
உங்களுக்காகவே எஸ்.ஏ.பி. கால குமுதக்கதை ஒன்றை அனுப்பி எ.பி.யில் பிரசுரிக்கக் கேட்டுக் கொள்கிறேன், நெல்லைல. சரியா?..
நீக்குது செ கவிதைக்கு நெல்லை படம் வரைந்து அனுப்பினால், அதை மின்நிலாவில் வெளியிட்டுவிடலாம்.
நீக்குஜீவி சார்... நான் சொன்னது குமுதம் CONTENTS. துணுக்கு, பால்யூ, பேட்டி, கட்டுரை, அப்புறம் சிறுகதை/தொடர்கதை. நான் குமுதம் டைப் கதைகளுக்கு FAN இல்லை. (DOESN'T MEAN THEY ARE BAD, BUT I DONT HAVE THAT TASTE ஆனால் சுஜாதா கதைகளை மிகவும் ரசிப்பேன்)
நீக்குஅது எந்த பத்திரிகையில் நான் எழுதிய கதையாக இருந்தாலும் சரி, அதில் ஜீவி முத்திரை இருக்கும் நெல்லை.
நீக்குஅந்த இலச்சினையைப் பொறிப்பதற்காகத் தான் நான் எழுதவே செய்கிறேன்.
விரைவில் குமுதம் ஒரு பக்கக் கதை ஒன்று எதிர்பாருங்கள்...!
நீக்குஅடுத்த செவ்வாய்க்கேவா? (கேவா - கேட்டு வாங்கிய)
நீக்குவியாழனில் வரலாம்!
நீக்குஒரு சின்ன திருத்தம்:
பதிலளிநீக்குசென்ற பகுதியில் போட்ட படத்திற்கு கவிதை வந்து சேரவில்லை.
படத்திற்குத் தான் கவிதை எழுத வேண்டுமா, என்ன?..;
கவிதைக்கு படம் போட்டால் கெட்டா போய்விடும் என்று தோன்றியது, ஆசிரியர்
குழுவிற்கு.
அன்பு துரை செல்வராஜூ சார் அனுப்பிய கவிதைக்குப் படம் தேர்ந்து போட்டு விட்டோம்.
கவிதையை மட்டும் ரசித்து விட்டு விடாதீர்கள். சங்க இலக்கிய காட்சி படத்தையும் ரசித்துச் சொல்லுங்கள்..
-- இப்படி எழுதி அகநானூறு படத்தையும் தம்பியின் கவிதையையும் போட்டிருக்கலாமில்லே?..
கவிதைக்கென ஜீவி அண்ணா அவர்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி...
நீக்குநானும் முதலில் இப்படித்தான் நினைத்தேன்... ஆயினும் அந்த ஓவியப் பாவையின் கண்கள் எழுதத் தூண்டின..
அரை மணி நேரம் தான்... ஆனாலும் முதல் கண்ணி சற்று சிரமப்படுத்தியது...
தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
மதுரைக்கு இப்படி ஒரு பெயர் காரணம் இருப்பதை இன்றுதான் அறிந்தேன்
பதிலளிநீக்குநன்றி
மூட்டைப்பூச்சி...அதிகம் ரசித்தேன்.
பதிலளிநீக்குதுரை செல்வராஜ் அவர்களின் கவிதை அருமை
பதிலளிநீக்குதங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஉங்களுக்கு அந்த ஆட்டோ கிடைத்து, தங்கள் மகன் அன்று பூரண குணம் அடைந்திருப்பார் என நம்பினேன். அவ்விதமே அவர் உதவி அன்போடு கிடைத்தது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது.
மேலும் காயதிரி அப்பாவின் பல உதவிகள் மன மகிழ்வை தருகின்றன.அவரின் மனிதாபிமானம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டியது. நீங்கள் தினமும் சொல்லும் காயதிரி மந்திரம்தான் தக்க சமயத்தில் வந்து உதவியுள்ளது.மிக்க சந்தோஷம். தங்கள் மகன் என்றும் நலமுடன் நூறு வயது காலம் சிறப்புடன் வாழ பிரார்த்திக்கிறேன்.நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காயத்ரி எனப் படிக்கவும். பிழை வந்து விட்டது.
நீக்குஅனைவருக்கும் நாளைய வரலெட்சுமி விரத வாழ்த்துகள். அம்மனருள் அனைவரின் வாழ்க்கையிலும் பரிபூரணமாக நிலைத்து நிற்கட்டும்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கவிதை மிக அழகாக உள்ளது.
வேல் விழியாளும், அந்த விழிக் கூர்மையில் மகிழ்ந்திருப்பவருமான இருவரின் எண்ணங்களும் இன்பமுறும் கவிதையாக அழகு தமிழ் நடையில் அற்புதமாக கலந்துறவாடுகின்றன. அந்த இன்பமயமான கலந்துறவாடலுக்கு உறுதுணையாக சகோதரரின் சிந்தனை திறத்தில்,உதித்த வர்ணம் குழைத்த வார்த்தைகள் அனைத்தும் இந்தப் "பாவை ஓவியத்தை" பளிச்சிட செய்து பார்வையாக்கி, வந்த பாராட்டுக்களை பந்தத்தில் திளைத்து களிப்புடன் கலந்துரையாற்றும் அவர்களையும் ஆசை தீர அள்ளிப்பருகிட செய்திருக்கின்றன.
சகோதரரின் கற்பனை வளம் மிகுந்த வார்த்தைகளின் வனப்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் கூடிய பாராட்டுகளும், நன்றிகளும். அருமை. பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களிடமிருந்து இத்தனை பாராட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை..
நீக்குதங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...
நல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குகாயத்ரி அப்பா.. சிலரது இயல்பு.. எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவியாக இருப்பது.. உயர்ந்த மனிதர்கள்!
விலைவாசி.. நல்ல அலசல். நமது காலக் கட்டத்தில் சிறுவயதிலிருந்து இப்போதைய விலைவாசியைக் கணக்கிடத் தோன்றுகிறதா:)?
நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஇப்படியும் நல்ல ஆட்டோ ஓட்டுநர்கள் இருக்கிறார்கள் என்பது மனதிற்கு இதமான ஒன்று. மனித நேயம் இன்னும் வாழ்கிறது கொஞ்சமேனும்.
பதிலளிநீக்குதுரை செல்வராஜு சாரின் கவிதை மிக மிக நன்று. ரசித்தேன். ஸ்ரீராம்ஜி உங்கள் கவிதைகளைக் காணவில்லையே.
பொக்கிஷம் ரசித்தேன்.
மதுரை பெயர்க்காரணம் அங்கிருந்த போது கேட்டிருக்கிறேன்.
அனைத்தும் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
நன்றி துளசி ஜி.
நீக்குஜீவி ஸார் விருப்பப்படி குறுந்தொகைப் படத்தை இணைத்து விட்டேன். படத்தையும் ஜீவி ஸாரே அனுப்பி இருந்தார். நன்றி. நண்பர்கள் அனைவரும் படத்தைப் பார்த்து மறுபடி கவிதையைப் படித்து இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குநான் அனுப்பியிருந்த குறுந்தொகை காட்சிக்கான படத்தை தம்பியின் கவிதைக்காக இணைத்ததில் நன்றி, ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநல்லதொரு ஆட்டோ ஓட்டுனர். வாழ்க!
பதிலளிநீக்குமற்றவையும் சிறப்பு.