காற்றொடு காற்றாய்..
துரை செல்வராஜூ
" மேற்படி பஞ்சாயத்து தென்பாதி வட்டம் சர்வே நம்பர் 104 சப் டிவிஷன் 14 ல் புது சர்வே நம்பர் 18 கிழ மேல் நூற்று இருபது ( 120) அடி தென் வடல் நாற்பது (40) அடிக்குக் கூடுதல் நாலாயிரத்து எண்ணூறு (4800) சதுர அடி விஸ்தீரணம் உடைய மனைக்கட்டுக்கு நான்கெல்லை விவரமாவது -
ஐயனார் கோயில் ஒழுங்கைக்குத் தெற்குப ழனியப்பன் புஞ்சைக்கு மேற்கு மாரியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட புஞ்சைக்கு வடக்கு ராமசாமி வகையறா புஞ்சைக்கு கிழக்கு...
மேற்படி விஸ்தீரணத்தில் எவ்வித கட்டுமானங்களும் இல்லை..
ஈசான்ய மூலையில் மாங்கன்று மேல் புறத்தில் எலுமிச்சங்கன்று ஆகிய இவ்விரண்டும் உட்பட கிரயம் செய்யப்பட்டுள்ளது.. மேற்படி விருட்சங்களின் பேரில் எவ்வித தொகையும் பெற்றுக் கொள்ளவில்லை..
இப்படியான இந்த நான்கெல்லைகளுக்குட்பட்ட விஸ்தீரணத்தை
நாளது தேதி முதல் சூரிய சந்த்ர நக்ஷத்திராள் காலம் வரைக்கும் தாமும்
தமது புத்திர பௌத்திர வாரிசுகளும் ஆண்டனுபவித்துக் கொள்ள வேண்டியது..
இதுமுதற்கொண்டு இதன் மீது எனக்கோ எனது சந்ததியாருக்கோ எவ்வித சுவாதீனமும் இல்லை என உறுதி கூறி இவ்வூர் சாக்ஷிகளின் முன்பாக சுய ப்ரக்ஞையுடன் கையெழுத்துச் செய்கிறேன்.. "
கிரயப் பத்திரம் எழுதியவர் வாசித்து முடித்தார்.
அந்த நேரத்தில் அப்பாவின் நெஞ்சு விம்மியதையும் கண்கள் கலங்கியதையும்
கதிரவன் கவனிக்கத் தவறவில்லை.
" கிரயத்தொகை பற்று வரவு ஆச்சா?.. "
சப் - ரிஜிஸ்தரார் தடித்த மூக்குக் கண்ணாடியுடன் கேட்டார்...
" ஆகிடுச்சு..ங்க ஐயா!... "
" சரி... கையெழுத்துப் போடுங்க!... பத்திரத்தை வெள்ளிக்கிழமை ராகு காலம் கழிச்சு வந்து வாங்கிக்குங்க!.. "
" சரிங்க ஐயா!... "
அதற்கு அடுத்த வாரத்தில் நல்ல நாளாகப் பார்த்து மனை பூஜை போட்டாயிற்று..
சாமிநாத கொத்தனாரும் அவரது கையாள் வேம்புவும் தான்
அந்த வட்டாரத்திலேயே கைராசிக்காரர்கள்...
கிழக்கு முகமாக சுப்பையாவை நிற்க வைத்து கதிரவனும் விஜயலக்ஷ்மியும் காலில் விழுந்து வணங்கினார்கள்...
மகனையும் மருமகளையும் ஆறுதலாக அணைத்துக் கொண்ட
சுப்பையனின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது...
" பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழ வேணும்!... "
கதிரவனும் கண்களைத் துடைத்துக் கொண்டான்...
" அவளுக்கு இதெல்லாம் கொடுத்து வைக்காமப் போச்சு!... " - சுப்பையன் தழுதழுத்தார்...
" என்ன சுப்பு இது?.. சின்ன புள்ளை மாதிரி!... வந்தவங்களுக்கு சந்தனம் கொடுங்க.. சூடு ஆறுறதுக்குளே டிபனை எடுத்து வைங்க!... "
சாமிநாதக் கொத்தனார் சுப்ரமணியத்தைத் தேற்றினார்.
" பாலைவனத்துல ரெண்டு வருசம் பட்ட பாடு.. இன்னைக்கு இங்கே மனைக்கட்டா வளர்ந்து நிக்குது... சம்பாதிக்கிறது கஷ்டம்..ன்னா அதை விட கஷ்டம் நல்லபடியா சேர்த்து வைக்கிறது... அதை விடவும் கஷ்டம் சேத்து வச்சதில இருந்து ஒரு மனையோ வீடோ வாங்குறது... சுப்பு.. அந்த வகையில கொடுத்து வச்சவரு... உங்க நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது... "
" டே... வேம்பு.. வெட்ட வெளியில கிடந்து கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசு...
ஒரு கல்லு கூட சேதாரம் ஆகாம வீட்டைக் கட்டிக் கொடுக்கணும்... "
" ஆகட்டுங்..க!.. " - தலையை ஆட்டிக் கொண்டான் வேம்பு...
" நாளைக்குக் காலை..ல பதினாறு ஆள்!... சிமிண்டு இன்னைக்கு சாயுங்காலம் வந்துடும்... கடைக்கால்... வேலைய நாளக்கி ஆரம்பிச்சுடணும்..
மருதையன் கிட்ட நுணாவும் பூவரசும் சொல்லியிருக்கேன்!.. "
- என்று வேலைத் திட்டத்தைச் சொன்னவர் இந்தப் பக்கமாகத் திரும்பி -
" நல்லமுத்து!.. நாளைக்கு அந்த மாங்கன்னு கிட்ட கொட்டாய் போட்டு
தலைவாசல் நிலைக்கு முகூர்த்தம் பண்ணிடுங்க!.. " - என்றார்
" சரிங்க!... " - வேம்பும் நல்லமுத்து ஆசாரியாரும் தலையாட்டினார்கள்...
மூன்றாம் நாள் காலையில் - நெஞ்சம் எல்லாம் பல்வேறு நினைவுகள் கனத்திருக்க பையைக் கையில் எடுத்துக் கொண்டான் கதிரவன் ...
உற்றார் உறவினர்கள் சூழ்ந்திருந்தார்கள்..
அருகிருந்த அட்டைப் பெட்டியை எடுத்து அம்பாஸடர் காரின் பின்னால் வைத்து மூடினான் மைத்துனன்...
எல்லாருடைய முன்னிலையிலும் கதிரவன் மார்பில் தலை சாய்த்துக் கொண்டு விம்மினாள் விஜி...
" என்ன இது விஜி?.. நல்லபடியா போய்ட்டு வாங்க... ன்னு சொல்லாம!... "
விஜியின் அம்மா ஓடி வந்து தேற்றினார்கள்...
" நீங்க கவலைப்படாம புறப்படுங்க மாப்பிள்ளை... நாங்க நல்லபடியா பார்த்துக்கறோம்!.. "
மாமனார் கதிரவனின் தோளில் மெல்ல தட்டினார்...
அதற்கு மேலும் நின்று கொண்டிருந்தால் மனம் உடைந்து விடும் என்ற அளவில் காரை நோக்கி நடந்தான் கதிரவன் ...
அடுத்த பதினைந்து நாளில் பஹ்ரைனில் இருந்து கடிதமும் டிராப்ட்டும் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்தன...
இங்கிருந்தும் அங்கே சிறகடித்துச் சென்றன...
அடுத்து வந்த வைகாசியில் ஒருநாள் - இங்கிருந்து டெலிகிராம் ஒன்று சென்றது
' மஹாலக்ஷ்மி பிறந்திருக்கிறாள்!.. ' - என்ற செய்தியுடன்..
அதைக் கண்ட மாத்திரத்தில் தலை கீழாகத் தாண்டிக் குதித்தான் கதிரவன்..
" எங்க அம்மாவே வந்து பொறந்துருக்காங்க!.. " - என்று...
அடுத்த மாதத்தில் போட்டோ ஒன்று வந்திருந்தது...
பட்டுத் துணிக்குள்ளே
பால் மணக்கும் சிட்டு...
பாசத்திலும் நேசத்திலும்
திரண்டு வந்த முத்து!..
- விஜி..
- என்று அதனுடன் குறுங்கவிதை..
போட்டோவைப் பார்த்து விட்டு கதறிக் கதறி அழுதான்...
" அந்தப் பட்டுச் சேலை எங்க அம்மாவோடது!.. "
கூடவே மகிழ்ச்சி - மகள் பிறந்த வேளையில் விஜியும் கவிதை எழுத ஆரம்பித்து விட்டாள் என்று..
" அடே... வீடு உள் பூச்சு முடிஞ்சு கரண்டும் இழுத்தாச்சு..ன்னு உங்கப்பா லெட்டர் போட்டிருந்தார்..ல்ல.. நாங்க ஆளுக்கு ஐயாயிரம் தர்றோம்... எடுத்துக் கிட்டுக் கிளம்பு.. வீட்டுல கிரகப்பிரவேசம் பண்ணிட்டு பொண்டாட்டி புள்ளையோட ரெண்டு மாசம் சந்தோஷமா இருந்துட்டு வந்து சேர்!.. "
அறையில் உடனிருக்கும் நண்பர்கள் உற்சாகமாகக் கை கொடுத்தார்கள்...
" நான் இப்பவே ஏகப்பட்ட கடன்..ல இருக்கேன்... புதுசா இது வேற!.. எப்போ அடைக்கிறது?... " - குழம்பினான் கதிரவன்...
" இது கடன் இல்லடா கதிரு... உம்மகளுக்கும் புதுவீடு கிரகப் பிரவேசத்துக்கும் நாங்க வைக்கிற மொய்..டா... மொய்!... "
மனம் நெகிழ்ந்த கதிரவன் அந்த மாதக் கடைசியில் தனது புது வீட்டிலிருந்தான்...
ஆவணியின் சுப முகூர்த்த நாள்... இளங்காலைப் பொழுதில் கிரகப்பிரவேசம்..
சாமிநாத கொத்தனார், வேம்பு, நல்லமுத்து ஆசாரி, கலியபெருமாள் - என்று எல்லாருக்கும் தட்சணையுடன் புது வேஷ்டி துண்டு வைத்துக் கொடுத்தான்..
மகளுக்கும் கிரகப் பிரவேசத்துக்கும் என்று மொய் வைத்த நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் பத்திரிகை வைத்து, விசேசத்துக்கு வந்துருந்தவர்களோடு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டான்.
ரெண்டு நாட்கள் கழித்து தஞ்சாவூருக்குப் போய் கலர் பிலிமைக் கழுவி பிரிண்ட் போட்டு வளைகுடா நண்பர்களுக்கு அனுப்பி வைத்தான்...
வேறு வேலை இல்லாத ஜனங்கள் ரகசியமாக பேசிக் கொண்டார்கள்..
' எண்ணைக் கேணியில வேலை..
அதான் வருசத்துக்கு ரெண்டு பயணம்..
நகை நட்டு, வீடு வாசல்!.. அதுக்கு எல்லாத்துக்கும் கொடுத்து வெச்சிருக்கணும்!...'
குழந்தை பசி எடுத்து அழுது பால் குடித்த நேரம் போக பொழுதெல்லாம் கதிரின் தோளிலேயே கிடந்தாள்...
" அம்மா.. எங்க அம்மா!.. " - என்று மகளைக் கொஞ்சியதிலேயே கதிரின் வயிறும் மனமும் நிறைந்திருந்தன..
ரெண்டு மாதங்கள் ஓடிச் சென்ற வேகம் தெரியவில்லை...
மீண்டும் பயணம் புறப்படுவதற்கு முன்பாக ஒருநாள்...
மகனின் தோளைப் பிடித்துக் கொண்ட சுப்பையா மெல்லிய குரலில் பேசினார்..
போன வாரம் அவருக்கு சட்டென மயக்கம் வந்து விட்டது ... அப்படியே சாய்ந்து விட்டார்...
அலறியடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி வைத்தியம் பார்த்து அங்கிருந்து திரும்பி வந்ததில் எல்லாருக்கும் நிம்மதி - சந்தோஷம்..
என்றாலும் மனதின் பதற்றம் அவரிடமிருந்து நீங்கவில்லை...
" நீ எம்பேத்தியோட சந்தோசமா இந்த வீட்ல இருந்து வெளையாடுறதை நான் கண்ணாரப் பார்க்கணும்... அந்த வரத்தைக் கொடுப்பா... எனக்கு!... "
தகப்பனின் மார்பில் சாய்ந்து கொண்ட கதிர் மனம் கரைந்து அழுதான்..
என்னமோ ஏதோ என்று உள்ளிருந்து ஓடி வந்த விஜிக்கும் மனம் தாள முடிய வில்லை...
அடுத்த சில நாட்களில் விண்ணேறிப் பறந்த விமானத்தினுள் இருந்தான் கதிர்...
அவனுடன் - எத்தனை எத்தனையோ இளைஞர்கள்.. எத்தனை எத்தனையோ கனவுகள்..
அத்தனை கனவுகளையும் சுமந்தபடி காற்றோடு காற்றாய் விரைந்து கொண்டிருந்தது விமானம்...
= = = = =
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குகதிரவனுக்கு நல்ல நண்பர்கள் இருந்தாங்க. இன்னொரு பயணம் அமைந்தது. நல்லபடியா குழந்தையையும், அப்பாவையும் காண முடிந்தது. எத்தனையோ வளைகுடாவாசிகளுக்கு இரண்டு-நாலு வருடங்களுக்கு ஒருமுறை பயணம், எத்தனையோ நல்லது கெட்டதுகளில் பங்குபெறாமை என எத்தனையோ வருத்தங்கள்... ஆனால் உள்ளூர் வாசிகளுக்கோ, அவனவன் வளைகுடாவில் தங்கம் வெட்டு எடுப்பதுபோலும் பெட்ரோல் கிணறுக்கு ஓனர் என்றும் எண்ணம்.
நல்ல கதை ஆனால் மிகச் சுருக்கமாக அமைந்துவிட்டது. பாராட்டுகள்
வாங்க நெல்லை... காலை வணக்கம். வளைகுடா நாட்டில் சபாதித்த பங்கர்கள் எவ்வளவோ விதங்களில் இங்கு சுயநலமாயும் வீணாகவும் செலவழிக்கப்படும் கதைகள் கேட்டிருப்போம். இது நேர்மையான பாசப் போராட்டக் கதை. டிபிகல் துரை செல்வராஜூ ஸார் பாணி கதை.
நீக்குஅன்பின் நெல்லை..
நீக்குவளைகுடா நாடுகளில் வேலை செய்பவர்களுக்குத் தான் எத்தனை எத்தனை கஷ்டங்கள்...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் ஸ்ரீராம்...
நீக்குஅங்கே வெயிலிலும் பனியிலும் கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தின் மதிப்பு இங்கே இருப்பவர்களுக்குப் புரிவதில்லை..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நல்லதொரு மனதைத் தொட்ட கதை. ஊர் வாயை மூட முடியுமா என்ன? எதையாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். அவரவர் கஷ்டம் அவரவருக்கு தானே தெரியும். வழமைபோல துரை செல்வராஜூ ஐயாவின் சிறப்பான நடையில் ஒரு கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇறைவன் என்றும் நம்மைக் காக்கட்டும்.
வாங்க வல்லிம்மா... இணைந்து பிரார்த்திப்போம். வணக்கம்.
நீக்குவல்லியம்மா அவர்களது பிரார்த்தனையில் நானும்...
நீக்குஅன்பின் துரை செல்வராஜுக்கு
பதிலளிநீக்குமீண்டும் ஒரு இனிய கதை தந்ததற்கு அன்பு வாழ்த்துகள்.
தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா...
நீக்கு" பாலைவனத்துல ரெண்டு வருசம் பட்ட பாடு.. இன்னைக்கு இங்கே மனைக்கட்டா வளர்ந்து நிக்குது... சம்பாதிக்கிறது கஷ்டம்..ன்னா அதை விட கஷ்டம் நல்லபடியா சேர்த்து வைக்கிறது... அதை விடவும் கஷ்டம் சேத்து வச்சதில இருந்து ஒரு மனையோ வீடோ வாங்குறது... சுப்பு.. அந்த வகையில கொடுத்து வச்சவரு... உங்க நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது...///////////////////////////// இதுதான் கதையின் அடி நாதம்.
பதிலளிநீக்குகிராமத்துக் களனில் அடிமட்டத்திலிருந்து வீடு வளர்ந்து
அப்பா,மகன், பேத்தி என்று உயந்திருக்கிறது.
கதிரவன் தன் அப்பாவின் நேர்மைக்குப் பங்கம் வராமல்
அவர் கனவையும் நிறைவேற்றுவதும் கடவுளின்
அருளே.
எங்கள் மகன் துபாயிலிருந்து வரும்போது
ஓரிருவர் இந்தப் பேச்சை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
தங்கமாகப் பொழிந்திருப்பான் என்று.
அந்த மாதிரி பணம் தேட என்ன பாடுபட வேண்டும்
என்பது அங்கு சென்று வந்தவர்கள் அறிவார்கள்.
மஹாலக்ஷ்மி படம் மிக அருமை.
விஜியும் கதிரவனும், தந்தை சுப்பையாவும்
பேத்தி லக்ஷ்மியும் நிறைவாழ்வு வாழ வேண்டும்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குவளைகுடா நாடுகளில் வேலை செய்பவர்களுக்குத் தான் எத்தனை எத்தனை கஷ்டங்கள்..அத்தனையையும் வென்று வாழ்வில் ஜெயித்தவர்கள் கதிர்ழ்வனைப் போல் வெகு சிலரே..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பெருகட்டும்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம். வாங்க கீதா அக்கா... வணக்கம்.
நீக்குஅக்கா அவர்களது பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குதுரையின் கதை அது கதை அல்ல நிஜம். ஒவ்வொரு வளைகுடா மனிதனின் சொந்த வாழ்க்கை. பலரும் அங்கே கஷ்டப்படுபவர்களைப் பற்றிச் சிறிதும் நினைக்காமல் பணம் அள்ளும் இயந்திரமாகவே நினைப்பார்கள். இங்கே கதிரவனுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் குடும்பம் நல்ல குடும்பம்/நல்ல நண்பர்கள். சமயத்துக்கு உதவி செய்யும் நண்பர்கள் கிடைப்பது பேரதிர்ஷ்டம்.
பதிலளிநீக்குவளைகுடா நாடுகளில் வேலைக்கு என்று வந்த பிறகு நல்ல நண்பர்கள் அமைவதைப் போல நல்ல நிறுவனமும் நல்ல முதலாளியும் அமைந்திட வேண்டும்...
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...
இம்மாதிரிக் கதைகளுக்கு முடிவு என்பது இல்லை. நாமாக யூகம் செய்துக்கணும். கதிரவனின் துயரங்கள் தீர்ந்து குடும்பத்தோடு சேர்ந்து வாழும் நாட்கள் வரட்டும். பட்டுப்பாப்பா கொள்ளை அழகு. துரை தன் வாழ்வின் ஒரு பகுதியை இங்கே கதையாக எழுதிட்டார் போல!
பதிலளிநீக்குஎன் வாழ்வில் கொஞ்சமும் நண்பர்கள் வாழ்க்கையில் கொஞ்சமுமாக இந்தக் கதை..
நீக்குஆனாலும் இத்தனை ஆண்டுகள் இங்கே கஷ்டப்பட்டும் இன்னும் எங்களுக்கென்று ஒரு இல்லத்தை இன்னும் இறைவன் பிரசாதிக்கவில்லை..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...
அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஅன்பின் வணக்கத்துடன்
நீக்குநலமெலாம் வாழ்க..
கதை படித்து முடித்ததும் கண்ணில் திரையிட்டது கண்ணீர்.
பதிலளிநீக்குஅருமையான கதை.
//அடே... வீடு உள் பூச்சு முடிஞ்சு கரண்டும் இழுத்தாச்சு..ன்னு உங்கப்பா லெட்டர் போட்டிருந்தார்..ல்ல.. நாங்க ஆளுக்கு ஐயாயிரம் தர்றோம்... எடுத்துக் கிட்டுக் கிளம்பு.. வீட்டுல கிரகப்பிரவேசம் பண்ணிட்டு பொண்டாட்டி புள்ளையோட ரெண்டு மாசம் சந்தோஷமா இருந்துட்டு வந்து சேர்!.. //
இந்த மாதிரி நல்ல நண்பர்கள் கிடைப்பது வரம்.
குடும்பத்தை பிரிந்து இருப்பவர்களுக்கு தான் தெரியும் சேர்ந்து இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான ஒன்று என்று.
பட்டு பாப்பாவை பார்ப்பது அதைவிட மகிழ்ச்சி.
கவிதை அருமை. பாப்பா அழகு.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குஅந்த மழலைக்கு நல்வாழ்த்துகள்..
இனிய கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
சொன்னால் நம்புவது கடினம். என் பெண் (குழந்தை) போட்டோ போலத்்தோன்றிற்று, அது எப்படிக் கிடைத்தது என யோசித்தேன்.. அதனை, பெண் அனுமதித்தால் பகிர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்..
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்..
அன்பின் வணக்கம்.
நீக்குஇன்று கதைக்களம் காண வந்திருக்கும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குவரவேற்போம்.
நீக்குஎனது கதை அடுத்த வாரம் என்றிருந்து விட்டேன்.. வழக்கம் போல் கதையை அழகுறப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் திரு KGG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமாம்பழப் பட்டில்
பதிலளிநீக்குமல்லிகை மொட்டு..
மனதினை அள்ளிடும்
பொன் வண்ணச் சிட்டு!..
கவிதையால் கண்மணி
கன்னத்தைத் தொட்டு
காற்ரினில் வந்திடும்
கனித்தமிழ் மெட்டு!..
ஆஹா ! நன்றி.
நீக்குவலைகுடாவாழ் மக்களின் பலரது மனதை படம் பிடித்து காட்டி விட்டது ஜி.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான கதை...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வளைகுடாவாசிகளின் வாழ்க்கையின் இரண்டு பக்கங்களையும் அழகாக சோல்லியிருக்கும் நல்ல கதை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குபாசங்களை அடக்கி திரைகடலோடியும்திரவியம் தேடு என்று சென்றவர்களின் குடும்ப வாழ்க்கை. நல்லதொரு தகப்பனார். ஸூப்பர் விவரித்த விதம். அன்புடன்
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..
நீக்குஇந்த மாதிரி வார்த்தைக்கு வார்த்தை
பதிலளிநீக்குஅன்பையும் பாசத்தையும் பிழிந்தெடுக்க தம்பி துரையால் தான் முடியும்.
அன்பின் அண்ணா..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான கதையை தந்திருக்கிறீர்கள். வெளிநாடு சென்று சம்பாதித்து வருபவர்கள் படும் துன்பங்கள், தனிமைகள் இவைகளை புரிந்து கொள்ளாமல், அக்கம் பக்கம் பொறாமையால், வாய் கூசாது எப்படி பேசுவார்கள் என்பதை கதை சுட்டிக் காட்டுகிறது. பாசமும், அன்பும் இணைந்த அந்த குடும்பத்தின் ஒருவரையொருவர் பிரிந்திருக்கும் வேதனைகள் என கதையில் அழகாக சுட்டிக் காட்டியுள்ளீர்கள். குழந்தை படமும், அதற்கு கவிதையும் நன்றாக உள்ளது. ஒரு நல்ல குடும்பத்தின் அருகாமையை உணர்ந்தது போல இருக்கும் வண்ணம் நல்லதொரு கதையை தந்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நேற்று எனக்கு இந்த நெட் பிரச்சனையால் வர இயலவில்லை. இன்று என்னமோ வருகிறது. நேற்று வந்து கருத்துக்கள் தராததற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது அன்பின் வருகையே மகிழ்ச்சி...
நீக்குஅன்பான கருத்துரையே உற்சாகம்..
மன்னிப்பு என்ற வார்த்தையெல்லாம் எதற்கம்மா...
இணையப் பிரச்னை என்ற போதும் எனது படைப்பினை வாசித்து கருத்துரை செய்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி...
நான் முன்று வாரங்கள் துபாயிலிருந்திருக்கிறேன் அன்கு அல்லல் படும்மக்களை பார்த்திருக்கிறேன் பலரையும் பணம் காய்க்கும் மரம் என்றே இங்குளோர் நினைக்கிறார்கள் உண்மை நிலை கதையாய் சொல்லி இருக்கிறாச்துரை செல்வராஜு
பதிலளிநீக்குஅன்பின் ஐயா.
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
என்னைப் பெற்ற தாயிவள்,
பதிலளிநீக்குநான் பெற்ற சேயிவள் !
பிறந்த சேதி கேட்டு,
பறந்து ஓடி வந்தேனே!
உன் புன்சிரிப்பில்,
என்னை மறந்தேன்!
எங்கள் உயிரில் பூத்த பூவே!
பிரிய மனமில்லாமல் செல்கிறேன்...
மீண்டும் காணும் நாளுக்காய் ஏங்கியே...
-கதிர் கவிதை எழுதியிருந்தால் இப்படி எழுதியிருப்பானோ?
அன்பின் வானம்பாடி.
நீக்குதங்களுக்கு நல்வரவு...
தங்கள் வருகையும் இனிய கவிதையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
மனம் தொட்ட கதை
பதிலளிநீக்குஅன்பின் ஐயா.
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
சுவாரசியமான நடை.. கிரயப்பத்திரம் வாசிப்பது கிராம வழக்கமா அல்லது நகரங்களிலும் உண்டா?
பதிலளிநீக்குஅன்பின் ஐயா.
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பத்திர எழுத்தர் பத்திரத்தை வாசித்த பின்பே பதிவாகும்..
இப்போது எப்படி என்று தெரியவில்லை..
தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி. நன்றி..
இப்போ இருக்கும் கூட்டத்திற்கு வாசித்துக் கட்டுபடி ஆகாது.
நீக்கு