செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

மறக்கவியலா சிறுகதை :  பரம்பரை வீடு - அப்பாதுரை 


பரம்பரை வீடு

     ன் பெயர் வால்டர் டெலாபோர். இருநூறு வருடங்களுக்கு முன் என் முப்பாட்டனாரின் தந்தை ஆல்ப்ரெட் இங்கிலாந்திலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்க டெலாபோர் வம்சத்தைத் தொடங்கினார். நிறைய பணத்துடன் அசம்பாவிதமாக ஓடி வந்துவிட்டார் என்று நிழலாக அவரைப் பற்றி ஒரு பேச்சு உண்டு. எதுவாக இருப்பினும் எங்கள் வம்சப் பெரியவர். அவர் பெயரில் இருந்த இங்கிலாந்து பெரிய பண்ணை பரம்பரை வீட்டின் உரிமைப் பத்திரங்கள் அவர் வழிச் சந்ததியில் ஒவ்வொருவராக ஏற்றபின் எனக்குக் கிடைத்தது.

     எனக்குத் தெரிந்து அந்த வீட்டை அமெரிக்க வம்சத்தினர் யாருமே பராமரிக்கவில்லை. யார் திரும்ப இங்கிலாந்து போவது என்று என் தந்தையைப் போலவே நானும் எங்கள் குடும்ப வியாபாரத்தில் கவனமாக இருந்தேன். அமெரிக்கப் படையில் சேர்ந்த என் மகன் போருக்காக இங்கிலாந்து போன போது பரம்பரை வீட்டின் சில படங்களை வரைந்து எனக்குத் தபாலில் அனுப்பியிருந்தான்.

     நூற்றாண்டுகளின் சேதாரத்தில் வீடு பார்க்க அச்சமூட்டினாலும் அதன் கம்பீர வசீகரம் என்னை இழுத்தது என்பேன். ஒரு அழைப்பை உணர்ந்தேன். கடிதம் கிடைத்த அடுத்த வாரமே என் மகன் போரில் இறந்தான் என்ற தந்தி வந்து நொந்தேன். முந்தைய வருடம் என் மனைவி டிபி வந்து மிக அவதிப்பட்டு இறந்த துக்கம் தணியுமுன் மகனையும் இழந்ததில் அமெரிக்காவில் இனி எனக்கேதுமில்லை என துயரத்தில் வெந்தேன்.

     ஒரு மார்ச் மாத ஞாயிறன்று வர்ஜினியா கல்லறையில் என் மனைவிக்கும் மகனுக்கும் வரிசையாக மலர் வளையம் வைத்து என் அன்பைச் சொன்ன கணத்தில் தோன்றியது. பரம்பரை வீட்டுக்குப் போனால் என்ன?

***

     வியாபாரத்தை விற்றுக் காசாக்கி அடுத்த கப்பலில் இங்கிலாந்து வந்து சேர்ந்து ஒரு வருடத்தில் பரம்பரை வீட்டைச் சுத்தப்படுத்தி மேம்படுத்திச் சீராக்கத் தீர்மானித்தேன். என் இந்த முயற்சி சுற்று வட்டாரத்தில் பலருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தாலும் பொறாமை என்று இயல்பாக எடுத்துக் கொண்டேன். குறிப்பாக ஊர் தாசில்தார் சர் விலியம் ப்ரைடனும் போலீஸ் கேப்டன் நோரிஸ் பட்லரும் முதலில் எதிர்த்தனர். எச்சரித்தனர். பிறகு தயங்கினர். என் உணர்வுகளைப் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு அவ்வப்போது நான் கொடுத்த அமெரிக்க சாராயமும் தென்னமெரிக்க தடிச்சுருட்டும் முன்னிரவில் தொடங்கி வானக்கூரையின் நட்சத்திர ஓட்டைகளைப் பார்த்தபடி என்னுடன் நள்ளிரவு தாண்டி அரட்டை அடிக்கும் வாய்ப்பும் கூடுதல் காரணங்கள் என்பேன்.

     பண்ணை முழுதும் மின்சார விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தேன். இந்த ஊரில் முதன் முதலாக பயனுக்கு வருவதால் பாத் பகுதியிலிருந்து கம்பிகள் கட்டி மின்சாரம் கொண்டுவர வேண்டியிருந்தது. அது தவிர சிறு மின்கடத்தி கோபுரங்கள், குழாய்கள், பொறிகள், மரக்கட்டைகள் என்று உபரி சாதனங்களும். அமெரிக்காவில் பொதுவாகக் கிடைத்த பம்புசெட் குளியல் வசதியைத் துறக்க மனமில்லாமல் பம்புசெட், மோட்டார், குழாய்கள் என்று அமெரிக்காவிலிருந்து தரவழைத்தேன். என் செலவில் ஊருக்கு மின்சாரமும் பம்புசெட் பொருத்திய பொதுக்குளியலறை வசதியும் கிடைத்ததால் உள்ளூர் மக்கள் என் புதுப்பித்தல் பணியில் ஒத்துழைத்தார்கள்.

     ஒரு குடும்பம் ஆக்ஸ்பர்டிலிருந்து வந்து என்னை இந்த வீட்டைப் புதுப்பிக்காதீர்கள் என்று கடிந்து கொண்டனர். நான் பாவியாவேன் என்று சபித்தனர். உற்றம் சுற்றம் எல்லாவற்றையும் இழந்த எனக்கு இந்த வீடு மட்டுமே பற்றுதல் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளப்போவதில்லை என்று பதிலுக்குக் கடிந்து அனுப்பிவிட்டேன். பிறிதொரு நாள் வந்த இரண்டு கருப்பர் குடும்பம் என்னைக் கெஞ்சினர், வீடு புதுப்பித்தால் அது பெரும் கொடுமைகளைக் கொண்டு வரும் என்று இரைஞ்சி வீட்டை உடனே இடித்து நொறுக்கி அந்த நிலத்தில் சாத்தான் விரட்டல் வசதியுடன் கூடிய பெரிய தேவசபை நிறுவச் சொன்னார்கள். பதிலுக்கு என் அடிமைகளாகப் பணி செய்வதாகச் சொன்னார்கள். கனிவுடன் மறுத்தேன். மறுநாள் அதிகாலை பண்ணை முகப்பில் மனித மிருக எலும்புகளும் மகத்தான ரத்தச்சேறும் முதல் நாள் என்னைச் சந்தித்த கருப்பர் குடும்பத்திலிருந்து இரண்டு குழந்தைகளின் இறந்த உடலும் கிடந்தன. என் முயற்சிகளை நிறுத்துவதற்காக நரபலி என்று ஒரு கடிதமும் என் பெயரில் இன்னொரு கடிதமும் கிடந்தன. பிரித்துப் பார்த்தேன். 'ஹன்ச்வில் கிராமம்' என்று எழுதியிருந்தது.

     இது போன்ற சில விபரீத சம்பவங்களும் செலவும் தவிர சுமுகமாகவே இருந்தது இங்கிலாந்து பண்ணை வாழ்க்கை. பரம்பரை வீட்டைப் புதுப்பித்துக் குடியேறுவதில் குறியாக இருந்தேன்.

***

     மேம்பட்டு வந்தப் பண்ணை வீட்டின் இருபதாயிரம் சதுரடிப் பிரம்மாண்டம் என்னை வியப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது. வடக்கு மாடத்தை வேலையாட்களுக்காகக் கொடுத்திருந்தேன். வீட்டு வேலைக்கான பணியாட்கள் கிடைக்க சிரமமாக இருந்தது. வேலைக்குச் சேர்ந்த பத்து பேரும் இரவு தங்க முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள். கிழக்கு மாடத்தில் என் படுக்கையறை. ஒரு புத்தக அறை. கூடம். சாப்பாட்டு அறை. உப சமையலறை. மாலையில் சுருட்டு பிடிக்கத் தனியறை. சுடுநீருக்கான விறகடுப்புத் தொட்டியுடன் கூடிய இரண்டு குளியலறைகள். கிணற்றடி. என் குதிரை கோச் வண்டிக்கு கூரையுடன் கொட்டிலும் தொழுவமும்.  வசதியாக இருந்தது. மேற்கு மாடத்தை இன்னும் சில வாரங்களில் செப்பனிட்டு விடுவார்கள். மேற்கு மாடத்தின் வசதிகளும் தென்பட்ட இயற்கைக் காட்சியழகும் என் மனங்கவர்ந்தன. சில மாலை நேர மேற்குமாடக் காட்சிகளில் என் மனைவி மகனைப் பார்த்திருக்கிறேன். தெற்கு மாடத்தில் இன்னும் வேலை தொடங்கவில்லை.

     ஆயிற்று.. ஜூலை இருபத்துமூன்றாம் தேதி காலை.. பரம்பரை வீட்டின் கிழக்கு மாடத்தில் குடியேறி விட்டோம். நானும் கரியனும். கரியன் என் பூனை. கட்டிட மேற்பார்வையின் போது திடீரென்று ஒரு நாள் எங்கிருந்தோ வந்தான். ஒட்டிக்கொண்டான். நானும் அவனை ஏற்று என்னுடனிருக்க அனுமதித்தேன். பகல் முழுதும் என்னருகில் அமர்ந்திருப்பான். பண்ணை வீட்டுக் கட்டிடத்தையே உற்றுப் பார்த்திருப்பான். இரவில் என் காலடியில் அசையாமல் படுத்துக்கொள்வான். அப்படித் தப்பித்தவறி என் கண்பார்வையிலிருந்து விலகினால் நான் "கரியா" என்றதும் நொடிகளில் வந்துவிடுவான். என்னமோ காற்றிலிருந்து வருபவன் போல.

***

     வீடுபுகுந்த இரண்டாம் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீர் விழிப்பு வர.. கரியனைக் காலடியில் காணாது திகைத்தேன். பல முறை அழைத்தும் காற்றைக் கிழித்து வரும் கரியனைக் காணோம். சுற்றித் தேடினேன். வடக்கு மாட சமையலறையிலிருந்து ஒரு தீப்பந்த விளக்கை எடுத்துக்கொண்டு இன்னும் மின்சாரம் இணைக்காத மேற்கு மாடம் போனபோது அங்கே ஒரு பெரிய அறையில் கரியனைக் கண்டேன். இத்தாலியிலிருந்து வரவழைத்திருந்த வண்ணச்சுவரலங்காரக் காகிதம் ஒட்டிப் புதுப்பிக்கப்பட்ட சுவரையே பார்த்துக் கொண்டிருந்தான். "கரியா" என்ற என் குரலைக் கவனிக்கவில்லை. சட்டென்று எழுந்து சுவரின் நெடுக்காக நடக்கத் தொடங்கினான்.   சற்று வேகமாக.  மிக வேகமாக.   தாவித்தாவி.  மிர் என்ற அதட்டலுடன்.  சிறு உறுமலுடன்.  வர்ர்ர் என்று உரத்த உறுமலுடன்.  வாஆஆர்ர்ர்ர் என்று குடலைக் கிழிக்கும் கர்ஜனையுடன்.   கரியன் வாய் திறந்து மியாவ் கூட கேட்டதில்லை நான். ஊமைப்பூனை என்று எண்ணிக்கொண்டிருந்தேன். "கரியா.. நிறுத்து" என்று நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் உறுமினான். தாவினான். சுவற்றைக் கிழிக்கப் பார்த்தான். கோபம் வந்து லேசாக அவனை உதைத்தேன். தள்ளி விழுந்து சுதாரித்தான்.

     அவனை எடுக்கக் குனிந்த போது கவனித்தேன். சுவரில் சத்தம். கரகர கிடுகிடு என விட்டுவிட்டு ஒலித்துளி. யாரோ இருபது கைகளுடன் சுவருக்குள் அங்குமிங்கும் சுரண்டுவது போல்.. இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஓடுவது போல்.. எலிகளாக இருக்குமோ? நான் கவனித்ததைப் புரிந்து கொண்ட கரியன் என்னை முறைத்து முதன் முறையாகப் பற்களை விரித்துக் காட்டினான். பயந்தேன். உறுமி என் பிடியிலிருந்து தாவி மறுபடி சுவற்றின் குறுக்காக ஓடினான்.

***

     மறுநாள் காலை மேற்குமாடக் கட்டிட வேலையாட்களிடம் கேட்டேன். தாங்கள் எந்த ஒலியும் கேட்கவில்லை என்றனர். ஒருவன் மட்டும் என்னைப் பார்த்ததும் மிக வெளிறிப் போனான். சுவர்க்காகிதம் ஒட்டும் பொழுது சுவரில் ஏதோ தட்டுப்பட்டதாகவும் சிறிது சுரண்டியதில் கொத்து கொத்தாக தலைமுடி கிடைத்ததாகவும் சொன்னான். மறு வாரம் அவன் வேலைக்கு வரவில்லை. விசாரித்ததில் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகச் சொன்னார் பெரிய மேஸ்திரி.

     கிழக்கு மாடத்தில் என் அறைக்குத் திரும்பியவன் தீ மிதித்தது போல் துணுக்குற்றேன். என் படுக்கையருகே வழக்கம் போல் கரியன் தன் முன்னிரண்டு கால்களைத் தூணென ஊன்றி அமர்ந்திருந்தான்.

 அவனருகே... அவனருகே... வரிசையாக எட்டுப் பூனைகள். வெள்ளை நிறத்தில், சாம்பல் நிறத்தில், கருஞ்சாந்து நிறத்தில், காய்ந்த புல்லின் நிறத்தில், நெல்லின் நிறத்தில், நள்ளிரவின் நிறத்தில், மண்ணின் நிறத்தில், மரவேரின் நிறத்தில் என்று எட்டும் கரியனைப் போலவே என்னைப் பார்த்தபடி அசையாமல் அமர்ந்திருந்தன! வெள்ளைப்பூனை மட்டும் வாயில் எதையோ மென்று கொண்டிருந்தது.

***

     சில நாட்கள் அமைதியாகவே இருந்தது வீடு. பத்தாம் நாளோ என்னவோ தாள முடியாத அழுகைச் சத்தம் கேட்டு விழித்தேன். வெள்ளைப்பூனையை மற்ற பூனைகள் சுற்றி வந்து கீறிக் குதறிக் கொண்டிருந்தன. அது அசையாமல் சிலை போல் உட்கார்ந்திருந்த விதம் வியப்பாக இருந்தது. எங்கிருந்து வருகிறது அழுகை? வந்த கோபத்தில் அத்தனை பூனைகளையும் விரட்டத் தொடங்கியதும் கவனித்தேன். கரியன் எங்கே?

     தீப்பந்தத்துடன் மேற்குமாடத்துக்கு விரைந்தேன். அமைதியாக இருந்தது. கரியனைக் காணோம். உடன் ஓடி வந்த பூனைகள் என்னைப் பார்த்த விதம் திகிலாக இருந்தாலும் சிரித்தேன். எனக்கு ஏதோ செய்தி சொல்வது போல் தலைசாய்த்து ஒருங்கே என்னைப் பார்த்தன. திடீரென்று தெற்கு மாடத்தை நோக்கி ஓடத் தொடங்கின.

     தெற்குமாட நுழைவருகே அமர்ந்திருந்தான் கரியன். "கரியா, வா போகலாம்" என்றேன். அவனுடன் சேர்ந்து அத்தனை பூனைகளும் என்னைச் சுற்றிச்சுற்றி வந்து கரமுரவென சத்தமிட்டன. வெள்ளைப் பூனையைக் காணவில்லை என்று கவனித்தேன்.

     என்னவோ சொல்கின்றன என்பது புரிந்து தெற்குமாட நுழைவுக்கதவைத் தள்ளினேன். பகல் பொழுதில் கூட உள்ளே நுழைந்ததில்லை. இரவில் சற்று தயக்கமாகவும் அச்சமாகவும் இருந்தது. பிற மாடங்கள் போல் அல்லாமல் தெற்கு மாடத்தில் மூன்றே அறைகள் இருந்தன. உயரம் குறைவாக இருந்தன. குள்ளர்களுக்கான அறை போல. ஒரு வேளை பாட்டனார்கள் காலத்தில் குள்ள வேலையாட்களை கேளிக்கைக்காக வைத்திருந்தார்களோ? முதலிரண்டு அறைகளில் ஏதுமில்லை. மூன்றாவது அறைக்குள் நுழைந்ததும் கதிகலங்கினேன். உள்ளே வெள்ளைப் பூனை குற்றுயிராக அழுது கொண்டிருந்தது. பல குழந்தைகள் ஒருங்கிணைந்து அழுவதற்கும் சக்தியில்லாமல் அழுவது போல... தாளமுடியாத வேதனையுடன் கூடிய அழுகையொலி.

     எனக்கு வந்தக் குமட்டல் உணர்வு நிற்கவேயில்லை. பூனை உடலின் சேதத்தைப் பார்த்தால் என்றைக்கோ செத்திருந்தது போல பட்டது. இத்தனை நாள் நான் பார்த்தது?

***

     மறுநாள் முழுதும் பிரமை பிடித்தாற்போலிருந்தேன்.

***

     தாசில்தார் பிரைட்டனிடம் நான் கண்டதைச் சொன்னேன். என் கலவரத்தை விவரித்தேன். இத்தனை நாள் எனக்கு தைரியமும் ஆதரவும் வழங்கியவர் முதன் முறையாக என்னை ஊர் ஆவண அறைக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் நோரிஸுக்கு செய்தி அனுப்பி என்னிடம், "வால்டர்.. உங்க பரம்பரையைப் பற்றி அறிந்து கொள்வது உதவியாக இருக்கும்" என்றார்.

     கேப்டன் நோரிஸ் வந்து இரண்டாம் சாவியைக் கொடுத்ததும் ஆவண அறை வெளிவாயில் பூட்டுக்களைத் திறந்தார் பிரைட்டன். இடம் ஒரு நூலகம் போல.. மர அலமாரிகளில் வருடக்குறிப்புடன் ஆவணங்கள். "பிறப்பிறப்பு சான்றுகள்" என்றார் பிரைட்டன். இன்னொரு சாவியை எடுத்து உள்ளறைக் கதவைத் திறந்தார் பிரைட்டன். "ஐம்பது வருடத்துக்கு முந்தைய ஆவணங்கள் எல்லாம் இந்தக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கிறோம்" என்றார்.

     வியப்புடன் உள்ளே போனேன். கேப்டன் நோரிஸ் ஒரு பழைய பையை எடுத்து வந்தார். மூங்கில் நாரால் செய்த கோணிப்பை. முகப்பில் "டி லா பூர்" என்று எழுதியிருந்தது. "இதுதான் உங்கள் அசல் வம்சப்பெயர்" என்றார் நோரிஸ். என்னிடம் கோணிப்பையைக் கொடுத்து நகர்ந்தார். "தயவுசெய்து இருவரும் என்னுடன் இருங்கள்" என்றேன். கோணிப்பையைப் பிரித்து உள்ளிருந்த காகிதங்களைப் பார்வையிடத் தொடங்கினேன்.

     என் முப்பாட்டனாரின் தந்தை பற்றிய கோப்பு. அவருடைய வாக்குமூலம். ஊர் வாக்குமூலங்கள். 1701ம் வருடத்திய தேதியிட்டு எழுதியிருந்தார்கள். அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. உரக்கப் படித்தேன். "...தெற்குமாடக் கிடங்குகளில் நான் கண்ட காட்சியின் பயங்கரத்தில் ஓடோடி வந்தேன்.. பயத்திலும் ஆத்திரத்திலும் எனக்கு உடல் நடுங்கிக்கொண்டிருந்தது... மேற்குமாடப் பேரறையில் என் குடும்பத்தினர் உற்சாகமாக அக்டோபர் பௌர்ணமி விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.. எத்தனை கோரம்! இத்தனை வருடம்.. இத்தனை நாள்.. இவர்களுடன்.. இதையா.. என்று கேள்வியாகத் துளைத்த மனம் என்னை சித்திரவதை செய்தது. அவர்களிடம் விவரம் கேட்டதும் சாதாரணமாகச் சொன்னார்கள்.. இதில் ஒன்றும் இல்லையே கலவரப்பட..? பரம்பரையாக அக்டோபர் பௌர்ணமி விருந்து எத்தனையோ நூற்றாண்டுகளாக.. நம் முன்னோர்கள் ரோமானிய வம்சாவளி.. அந்த நாளிலிருந்து நடக்கிறது.. நான் கத்தினேன்.. உடனே இதை நிறுத்துங்கள்.. அவர்கள் சிரித்தார்கள்.. என் தாய், தந்தை, சிற்றப்பா, என் மூத்த அண்ணன், அக்காள்..எல்லாரும். தந்தை என்னை அதட்டினார்.. நீ சிறுவன்.. பேசாமல் முகம் கழுவி விருந்துண்ண வா.. பிறகு என் தாயிடம் கோபித்தார்.. இதற்குத்தான் ஐம்பது வயதில் காலம் கழித்துக் குழந்தை பெறக்கூடாதென்றேன்.. நமக்கும் அவனுக்கும் இரண்டு தலைமுறை இடைவெளி வந்துவிட்டது பார்.. நான் அவர்களைப் பார்த்தேன்.. இந்தப் பதினெட்டாம் நூற்றாண்டில் இப்படிப்பட்டவர்களா? இவர்களா என் மூதாதையர்? திடீரென்று எனக்கு வந்த வெறியில் சுவற்றில் இருந்த வேட்டைத் துப்பாக்கியை எடுத்து தந்தை தாய் சிற்றப்பாவை வரிசையாகச் சுட்டேன்.. சாப்பாட்டு மேஜையிலிருந்த மாமிசம் வெட்டும் கத்தியை எடுத்து அண்ணன் மேல் எறிந்தேன்.. ஓடிப்போக எண்ணிய அக்காளை சுவரில் மாட்டியிருந்த குதிரை சவுக்கை உருவி விளாசி இழுத்தேன்.. அடிபட்டுக் கீழே விழுந்த அத்தனை பேரையும் சாகும் வரைச் சவுக்கால் அடித்தேன்.. எல்லாரும் இறந்து விட்டார்கள்.. என் வம்சம் என்னுடன் அழியட்டும்.. சரணடைகிறேன்.. மரண தண்டனை கொடுத்து என்னை உடனே தூக்கிலிடுங்கள்.."

     படித்து முடித்து அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருந்த என்னை ஆசுவாசபடுத்திக் கொண்டேன். "இவர் எப்படி அமெரிக்கா வந்தார்?" என்றேன். பதில் சொல்லாமல் ஊர் வாக்குமூலங்களை என் முன் நகர்த்தினார் பிரைட்டன். "இந்த முறை நீங்க படிங்க" என்றேன். உரக்கப் படிக்கத் தொடங்கினார். "..என் பெயர் ஜேம்ஸ் அன்செஸ்டர். ஊர் முன்சீப் மற்றும் காவல் ஷெரிப். வால்டர் என்னிடம் சரணடைந்ததும் ஊர் பெரியவர்களைக் கூட்டினேன்.. வால்டர் விவரம் சொன்னார்.. தன் தந்தை தாய் சிற்றப்பா அண்ணன் அக்காள் மற்றும் அவர்கள் வளர்த்த ஒன்பது வெள்ளைப்பூனைகள்... அத்தனையையும் கொன்றுவிட்டதாகவும் தன்னை தூக்கிலிடும்படியும் அழுதார்.. அவர் சொல்லச் சொல்ல ஊர் மக்களும் நானும் ஒரு வித நிம்மதியடைவதை உணர்ந்தோம்.. டி லா பூர் குடும்பம் ஒரு கிராதகக் குடும்பம்.. அவர்களை ஒன்றும் சொல்லவோ செய்யவோ முடியாதிருந்தோம்.. வால்டர் செய்தது சரியென்ற விபரீத எண்ணம் மேலோங்க, அவரைத் தண்டிக்க வேண்டாம் என்றேன்... நான், தாசில் ரிச்சர்டு, ஏட்டு ஜான், வக்கீல் ஈனிட் அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்தோம்.. வால்டரை அமெரிக்கா அனுப்பத் தீர்மானித்தோம்.. ரிச்சர்டும் ஜானும் வால்டரின் பண்ணைக்குச் சென்று அங்கிருந்து இருபதாயிரம் பவுண்டு பணமும் கணிசமான பொன்னும் எடுத்து வந்தார்கள்.. வால்டருக்கு ஆல்ப்ரட் டெலாபோர் என்ற பெயரில் பிறப்புச் சான்றும் அடையாளமும் அமெரிக்கா செல்ல பாஸ்போர்ட் பேப்பரும் எடுத்துக் கொடுத்தார் ஈனிட். எல்லாவற்றையும் கொடுத்து இந்தப் பக்கமே வராதே என்று நவம்பர் பதினேழாம் தேதிக்கான கப்பலில் அமெரிக்கா அனுப்பிவைக்கத் தீர்மானித்தோம்.."

***

     ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு வெளியே வந்தோம். எனக்கு இன்னும் படபடப்பாக இருந்தது. "ஹ்ம்ம்.. என் அமெரிக்க வம்ச முதல்வர் ஆல்ப்ரட் ஒரு பெரிய கொலைகாரன்!" பெருமூச்சு விட்டேன். ஏனோ சிரிப்பு வந்தது.

     "இருக்கலாம்.. ஆனால் அந்த நாளில் அவருடைய செயல் அவரைக் குற்றமற்ற ஹீரோ போலவே நடத்தத் தூண்டியது.. உங்கள் கௌரவம் இதனால் குறையாது என்று சொல்லிக் கொள்கிறேன்" என்றார் நோரிஸ்.
     "ஆல்ப்ரட் அப்படி என்ன பார்த்திருப்பார் தென்மாடக் கிடங்கில்? நான் கிடங்கு எதையும் பார்க்கவில்லையே?" என்றேன்.

     "தெரியவில்லை" என்றனர் இருவரும். ஆனால் பிரைட்டன் எதையோ மறைப்பது புரிந்தது. "பிரைட்டன்.. நீங்கள் எதையாவது மறைக்கிறீர்களா? கிடங்கைப் பார்த்திருக்கிறீர்களா? தயவுசெய்து சொல்லுங்கள்.. என் முன்னோர்கள் பற்றிய என் தேடல் முடிவு பெற உதவுங்கள்" என்றேன்.

     சற்று நடந்தோம். "ஹன்ச்வில் கிராமம் எங்கே இருக்கிறது?" என்றேன் தற்செயலாகக் கேட்பது போல்.

     "தெரியாது" என்றார் நோரிஸ்.

     "பாத் போகும் வழியில் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால்.. போனதில்லை" என்றார் பிரைட்டன். அவர் முகத்தில் தோன்றி மறைந்த கலவரத்தைக் கவனித்தேன். மறைக்கிறார்.

     "பிரைட்டன்.. நீங்கள் சீட்டாடினால் நிறைய இழப்பீர்கள்" என்று சிரித்தேன். "நாலு நாள் லன்டன் போய் வரலாமென்று நினைக்கிறேன். என் படபடப்பு அடங்க உதவும்" என்றேன். அன்றிரவே கிடங்கைத் தேடுவதென்றும் மறுநாள் காலை ஹன்ச்வில் போகவும் தீர்மானித்தேன்.

***

     தென்மாட அறைகளில் எத்தனை தேடியும் கிடங்கோ கிடங்குக்கான பாதைகளோ தென்படவில்லை.

     இரவு ஊரடங்கியதும் என் கோச் வண்டியில் கிளம்பினேன். யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்தபடி வேண்டுமென்றே பாத்திலிருந்து லன்டன் பாதையில் ஒரு மணி நேரம் போல் வண்டியைச் ஓட்டினேன். ஸ்வின்டன் அருகே சட்டென்று திரும்பி ஹன்ச்வில் பாதையில் இணைந்தேன். ஹன்ச்வில் அடைந்த பொழுது அதிகாலை மணி நான்கு. யாரும் என்னைப் பின் தொடரவில்லை எனினும் யாரோ என்னைக் கவனிப்பது போலவும் பின் தொடர்வது போலவும் உணர்வு மேலோங்கியது. என் கைத்துப்பாக்கியை அருகில் வைத்துக்கொண்டு கோச் வண்டியில் இளைப்பாறத் தீர்மானித்தேன். விடியட்டும்.

      காலை எட்டு மணியிலிருந்து ஹன்ச்வில் கிராம ஆட்களை ஒவ்வொருவராக விசாரித்தேன். மதியம் வரை எதுவும் கிடைக்காத அயர்வில் மீண்டும் கோச் வண்டியில் கண்ணயர்ந்தேன். எத்தனை நேரம் தூங்கினேனோ தெரியாது, ஒரு சிறுவன் என்னைத் தட்டி எழுப்பினான். குள்ளன். "பெரிய தாத்தாவைப் பார்க்க என்னுடன் வா" என்று அதட்டினான். விசித்திரமாக நடந்தான். அவனைத் தொடர்ந்தேன். ஊர் எல்லையில் தனியான குடியிருப்பு போல பத்திருபது வீடுகள். அங்கே இருந்தவர்கள் அத்தனை பேரும் சற்று உயரம் குறைவாகவும் உடல் சற்று வளைந்தது போலவும் தெரிந்தார்கள். என்னை அழைத்துச் சென்ற சிறுவனைப் போலவே. ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் என்னை விட்டு, "உள்ளே இருக்கிறார் தாத்தா" என்று ஓடினான் சிறுவன்.

     உள்ளே நுழைந்தேன். அதிக வெளிச்சமில்லாத வீடு. "வாங்க" என்ற குரல் வந்த திக்கிலே பார்த்தேன். மிக வயதான பெரியவர் ஒருவர் படுத்துக் கொண்டிருந்தார். சரியாகச் சொல்ல முடியவில்லை எனினும் மனிதர்கள் போலல்லாமல் கால்களை விசித்திரமாகக் குறுக்கிப் படுத்திருந்தார். கண்களும் மூக்கும் பெரிதாக இருந்தன. மனித முகம் தானா இது? "கிட்டே வாங்க" என்றது குரல்.

     அருகில் சென்றேன். என் முகத்தை சடாரென்று இழுத்து மிக அருகில் பார்த்தார் பெரியவர். அலறி "வால்டர் பெருமான்!" என்றார்.

     "இல்லை.. நான் இளைய வால்டர்.. என் பூர்வீக வீட்டைப் பற்றிச் சொல்வீர்களா? குறிப்பாக.. தென்மாடக் கிடங்குகள்" என்று என் விவரங்கள் சொல்ல முற்பட்டேன்.. என்னைத் தடுத்தார் பெரியவர். "நான் அன்றைக்கே சொன்னேனே? என்னுடன் வந்தால் காட்டுகிறேன்.. ஆனால் இந்த ஆபத்து உங்களுக்கு அவசியமில்லை..நீங்கள் யோக்கியர்.." என்றார். தொடர்ந்து "..முன் போலவே கிடங்குக்குள் அழைத்துச் செல்கிறேன்".

     நிச்சயம் என்னைப் பழைய வால்டர் என்றே எண்ணுகிறார் என்று நினைத்தபடி, "வாருங்கள் போகலாம்" என்றேன்.

     எங்கிருந்தோ வந்த நோரிஸ் என் கையில் விலங்கிட்டு தன்னுடன் பிணைத்துக் கொண்டு "நானும் வருவேன்" என்றார். ஒரு கயிற்றின் முனையைத் தன் வலது காலில் சுற்றிக்கொண்டு மறுமுனையை வாசலில் எறிந்தார். பிடித்துக் கொண்ட பிரைட்டன் "சரியாகப் பதினைந்து நிமிடங்களில் இழுப்பேன்" என்றார். என்னைப் பின் தொடர்ந்திருக்கிறார்கள்! இருவரையும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் சற்று பாதுகாப்பாக உணர்ந்தேன்.

***

      கிட்டத்தட்ட ஒரு விலங்கு போல கை கால்களைத் தரையில் பதித்து நடந்தார் தாத்தா. "வாங்க வாங்க" என்றார் வினோதமான குரலில். தெற்குமாடம் திரும்பினோம். மூன்றாவது அறையுள் நுழைந்து தெற்கு மூலைத் தரையில் கை வைத்து அழுத்தினார். உள்ளே எந்தப் பூனையையும் காணாது திகைத்தேன். தாத்தா தன் தலையைத் திருப்பி ஒரு மாடு போல என்னைப் பார்த்தார். நான் சற்று அதிர்ந்து நோரிஸின் கையை இடித்தேன். தாத்தா பற்களைக் காட்டி சட்டென்று தரையில் ஓங்கி அழுந்த அது சுரங்கக் கதவு போலத் திறந்து கொண்டது. உள்ளே படிகள், பிறகு நடை பாதை. நிறைய தீப்பந்த விளக்குகளின் ஒளி. ஆரவாரம். "விழா நாள்.. அக்டோபர் பௌர்ணமி அல்லவா? வாங்க.. வாங்க.." என்று உள்ளே நடந்தார். தொடர்ந்தோம். உள்ளே நான் பார்த்தவை என் நெஞ்சைப் பிய்த்து நரம்புகளைக் கிழிப்பது போலிருந்தன. எங்கு பார்த்தாலும் பல வயது மனிதர்கள்.. ஆனால் எல்லாருமே விலங்குகள் போல கை கால் ஊன்றி நடந்தார்கள்.. பலர் கூண்டுகளில் இருந்தார்கள். தலையும் முகமும் நீண்டு கண்கள் ஏறக்குறைய வெளிவந்து.. கால்நடை போல இருந்தார்கள்.. அவர்களைச் சுற்றித் தரையில் அங்குமிங்கும் எலிகள் ஓடிக்கொண்டிருந்தன. நிறைய பூச்சிகள். இது என்ன அகோரம்! பச்சைப் பிள்ளைகளிலிருந்து பெரியவர்கள் வரை பலரும் அந்த நிலையில்.. மனிதக் கால்நடை.. மெள்ள நடந்து நடுவறைக்கு வந்தால் பெரிய சமையலறை. அங்கே.. அங்கே.. ஏழெட்டு மனிதக் கால்நடைகளைக் கழுவியபடி அப்பா சிற்றப்பாவின் சமையல்காரர்கள்.. என்னை எதிர்பார்க்கவில்லை.. "வாங்க வால்டர் பெருமான்" என்றனர். என்னுடன் வந்த தாத்தாவைக் காணாது திகைத்தேன். சமையல்காரர் ஒருவர் என்னிடம் வந்து "உங்களுக்குப் பிடித்ததைச் சொல்லுங்க.. விருந்துக்கு சேர்த்துடுவோம்.." என்று அருகில் கட்டியிருந்த மனிதக் கால் நடைகளைச் சுட்டிக்காட்டினார்.

     ஆத்திரத்துடன் ஓடினேன். மேற்குமாடப் பேரறையில் என் அம்மா அப்பா சிற்றப்பா, அண்ணன், அக்காள்.. என்னை வரவேற்றனர். "பௌர்ணமி விருந்துக்கு வந்தாயா வால்டர்" என்றாள் அக்காள். "நீங்கள் எல்லாம் மனிதர்களே இல்லை" என்று கூவினேன்.. எதிரே சுவற்றில் வேட்டைத் துப்பாக்கியும் குதிரைச் சவுக்கும் கண்ணில் பட்டன. எடுக்கத் தாவினேன். அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளப் போகிறேன்..

      பிரைட்டன் திட்டப்படி கயிற்றை இழுத்து எங்களைச் சரியான நேரத்தில் மீட்டார். கால்நடை தாத்தாவைக் காணவில்லை. எப்படி தெற்குமாடம் போனோம் எப்படித் திரும்பி வந்தோம் என்ற திகைப்பிலும் அதிர்ச்சியிலும் உறைந்திருந்தோம். ஹன்ச்வில் கிராமத்திலிருந்து அவசரமாக ஓடினோம்.

***

      அடுத்த சில வாரங்களில் பண்ணை வீட்டைத் தரைமட்டமாக்கினேன். பிரைட்டனைப் பொறுப்பாளராக்கி ஊருக்கே பண்ணையை எழுதிக் கொடுத்தேன். அமெரிக்கா திரும்பத் தீர்மானித்தேன். என்னை வழியனுப்ப ஒரு கூட்டமே வந்திருந்தது. கப்பலின் முதல் வகுப்புத் தளத்திலிருந்து அவர்களுக்குக் கையசைத்து விடைகொடுத்தேன். கப்பல் மெள்ள நகரத் தொடங்கியது. கப்பலின் வேகம் அதிகரிக்க, மெதுவாகக் கரைந்த ஊரும் நரக்கறி தின்ற என் பரம்பரை நிழலும் என்னிடமிருந்து விலகுவதை உணர்ந்தேன். யாரோ என்னைத் தட்டுவதை உணர்ந்து திரும்பினேன். அருகில் நின்றிருந்தவர், "நான் கப்பல் கேப்டன் ராஜர். உங்கள் அறைக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறேன்" என்றார்.

      என்னை அறையில் சேர்த்த ராஜர், "மாலை ஐந்தரைக்கு டின்னர். மேல் தளத்துக்கு வாருங்கள். கடல் நடுவே சூரியன் மறையும் கண்கொள்ளாக் காட்சியுடன் மதுவும் உணவும் அருந்தலாம்." என்றார்.

      அறைக்குள் தாளிட்டுக் கொண்ட நான், டின்னருக்கு ராஜரை வெட்டிச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை அசைக்க முடியாமல் தவித்தேன்.

***

H.P.Lovecraft எழுதி 1924ல் வெளிவந்த 'The Rats in the Walls' எனும் ஆங்கிலச் சிறுகதை. நிறைய உரிமைகள் எடுத்துக்கொண்டு என் பாணியில் தமிழில் தந்திருக்கிறேன்.


      லவ்க்ரேப்ட் எழுதிய அசல் கதை படிப்பதற்கு சற்று சிரமமாக இருந்தாலும் பத்து மடங்கு திகிலும் (சிலருக்கு அருவருப்பும்) நிச்சயம் தரும். சில விஷயங்கள் எபி வாசகர்களுக்கு ஒத்து வராது என்று தெரிந்தே இதை ஸ்ரீராமுக்கு அனுப்பினேன். துணிந்து அவர் இதை வெளியிட்டால் அவர் தான் பொறுப்பு (ஹிஹி). இதைப் படித்தவர்களுக்கும் பின் லவ்க்ரேப்டின் அசல் கதையைப் படிக்கத் துணிந்தவர்களுக்கும் நன்றி. (இனிமேல் என் மறக்கவியலாத சிறுகதை பக்கமே தலைவைக்க மாட்டேன் என்று தீர்மானித்தவர்களுக்கும்).


      லவ்க்ரேப்ட் நிறைய "விபரீத" கதைகள் எழுதியிருக்கிறார். விபரீதக் கதைகளுக்கு இவர்தான் வாத்தியார். இவரிடம் சுடாத விபரீதக் கதை எழுத்தாளர்களே இல்லை என்பேன். எங்கிருந்து தான் இவருக்கு இப்படி கற்பனை தோன்றியதோ என்று ஒவ்வொரு லவ்க்ரேப்ட் கதை படிக்கும் பொழுதும் வியப்பேன்.


      பாருங்களேன். வீட்டில் சாயந்திரம் டின்னர் சாப்பிட்டதும் அறையில் குடும்பத்துடன் அமர்ந்திருந்தாராம். தன் பாட்டுக்கு இவர் ஏதோ எழுதிக்கொண்டிருக்க பிள்ளைகளும் மனைவியும் அவர்கள் பாட்டுக்கு ஏதோ செய்துகொண்டிருந்தார்கள். திடீரென்று ஏதோ சப்தம் கேட்டு எழுதிக்கொண்டிருந்ததை நிறுத்தினார். கரகரகர என்று தொடர்ந்த ஒலி. சுவரிலிருந்து கேட்பது போல் இருக்கிறது. மனைவியைப் பார்த்தால் அவர் பயந்து லவ்க்ரேப்ட்டுடன் ஒட்டிக் கொள்கிறார். மெள்ள சுவரையும் அறையையும் சுற்றி வந்தால் மேஜைக்கு அடியில் மறைவாக லவ்க்ரேப்டின் சிறுபிள்ளை! லவ்க்ரேப்ட் எழுதிப்போட்ட காகிதங்களை ஒவ்வொன்றாக கசக்கிப் போட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அதான் கரகரகர சப்தம்.


      நானாக இருந்தால் பிள்ளையைக் கடிந்து கொண்டிருப்பேன். லவ்க்ரேப்ட் இதை வைத்து rats in the walls என்று உடனே விபரீதக் கதை எழுதினார். what a twisted mind! what a brilliant twisted mind!


      நான் படித்த மறக்கவியலாத சிறுகதை #3.

31 கருத்துகள்:

  1. விபரீத கதை.... ஓரளவு படிக்க முடிந்தது.... மறக்கமுடியாத கதை என்பதற்கான சிறப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

    துளசிதளம் எழுதிய என்டமூரி விரேந்திரநாத் கதைகளில்கூட நம்பும் சம்பவங்கள் நிறைய இருந்து கதையை சுவாரசியப்படுத்தும். இந்தக் கதையில் அப்படி ஒன்றும் இல்லை என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. என்டமூரி போல வேறு சில கதாசிரியர்கள் எழுதிய பில்லிசூனிய, மந்திர தந்திர, கேரள பரம்பரை தரவாட்டுக் கதைகள்கூட இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

    இந்தக் கதைல நேட்டிவிட்டியோ, நம்பும் சம்பவங்களோ மிகவும் குறைவு. உவ்வே சமாச்சாரங்கள் எப்படி திகிலை உண்டாக்கும்?

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம்.
    கறுப்புப் பூனை. ஹாரர் கதை.
    காலை படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவரும் என்றும் நலமுடன் இருக்க இறைவன் அருள்
    செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. அப்பாதுரையின் கதைகள் மனதைக் கவர்ந்து பலநாட்கள் நினைவில் தங்கி இருப்பதைப் போல அவரின் மொழிபெயர்ப்புக் கதைகள் கவரவில்லை. இந்தக் கதை துளியும் கவரவில்லை. ஒரு வேளை திகில் இல்லை என்பதாலோ? மூலமான மொழி ஆங்கிலத்தில் படித்திருந்தால் ஒருவேளை கவர்ந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திகில் கதை வெளியிட்டால், இரவு பயத்தில் கத்துகிறீர்கள் என கம்ப்ளெயின்ட் வருது. கிராம்ம், காதல், சுப முடிவுன்னா, அந்த தீம் துரை செல்வராஜு சார் குத்தகைக்கு எடுத்திருக்கிறார் சரி... நானொரு கதை எழுதலாம்னா, அதை கிழித்துத் தோரணம் கட்ட ரெடியா இருக்கீங்க. . வேற என்னதான் செய்யறது கீசா மேடம்?

      நீக்கு
  7. எண்டமூரி கதைகளும், ஒரு சில மலையாளக்கதைகளும் நெல்லை சொல்வது போல் மனதில் நின்றிருக்கின்றன. ஆனால் எண்டமூரியின் ஒரு சில கதைகள் ஆங்கில மூலத்தைத் தழுவி எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் வந்த "FEVER" novel கதையை ஒட்டித் தமிழில் எண்டமூரியும் எழுதி இருக்கார். அந்த நாவல் பெயர் நினைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
  8. LOT OF DETAILS அது அப்பாதுரையின் ஸ்பெஷாலிடி ஒரு விதத்தில் அமனுஷ்ய்ம் இருக்குமோ

    பதிலளிநீக்கு
  9. இன்னொருவரின் கற்பனை என்றாலும்
    அங்த இறுதிப் பகுதி நோக்கிய உங்கள் நிதான பதட்டப் படாத ஆனால் வாசிப்பவரை நகங்கடிக்க வைக்கிற உங்கள் வழி நடத்தல் ரசிக்கும் படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தான் உங்களுக்கான பாராட்டு, அப்பாதுரை ஸார்.
      உங்க்ள் எழுத்து நடையும், அதன் நடுநடுவே தூவலாகத் தென்படும் சில சொற் பிரயோகங்களும் அற்புதமானது. சுயமானது. நான் மிகவும் ரசிப்பது.

      எப்பொழுதுமே அதில் எந்தக் குறையும் வைப்பதில்லை நீங்கள்.

      நீக்கு
  10. சரி. வாசித்தாயிற்று. அதனால் விளைந்த பலன் என்ன?
    எந்த வகை எழுத்தும் வாசித்த பின் ஒரு யோசிப்பை நம்மிடம் விட்டு விட்டுச் செல்ல வேண்டுமல்லவா? அது தானே வாசிப்பதினால் ஆய பயன்?
    இந்தக் கதை என்ன சேதி சொன்னது?
    சட்டென்று பதில் சொல்லத் தெரிய வில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனித வக்கிரம்.
      (அது தான் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் - ஆங்கிலக் கதையைப் படித்ததும். வக்கிரம் நெறிகளின் கபட நிழல் என்று நினைக்க வைத்த கதைகளில் இது முக்கியமானது. அதனால் தான் மறக்கவியலா சிறுகதை. ஆங்கிலத்தின் வக்கிரம் தமிழில் உணரமுடியாமல் போனதன் காரணத்தைக் கண்ணாடியில் பார்க்கிறேன்.

      நீக்கு
  11. புதுமைப் பித்தன் கூட இந்த மாதிரி ஆரம்ப முயற்சிகளைச் செய்தவர் தான். அயலகக் கலைத் திறமைகளை இங்கு கொண்டு வந்து சேர்ப்பீர் என்று பாரதியார் கூட வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார் தான். இதையெல்லாம் ஓர்ந்து பார்க்கும் பொழுது எதைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற நம் தேர்ந்தெடுப்பில் தான் மொத்த சமாச்சாரமும் அடங்கியிருப்பதாக உணர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  13. எதைத் தேர்ந்தெடுப்பது எழுத என்பது ஒரு முக்கியமான கேள்வி. எது வேண்டுமானாலும் இருக்கட்டும், எங்கள் வாசகர்களின் ரசனைக்கேற்ப என்று நினைப்பது சுலபமன பதில் தான். இருப்பினும் ரசனைகளை மேம்படுத்த என்று கொள்ளும் போது அதுவே நீடித்த எந்னாளும் நினைவு கொள்கிற பலனாகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனையை மேம்படுத்தவெல்லாம் நினைக்கவில்லை சார்.. மேம்பட அவசியம் இருப்பதாக நினைத்தால் தானே? ரசனை என்பது அவரவர் அனுபவ சூழல் மற்றும் விருப்பு வெருப்புகளை ஒட்டியது தானே? விஜய் சினிமாவை எப்படி ரசிக்க முடிகிறது என்று நான் நினைக்கையில் என் வீட்டில் ஒருவர் விஜய் படம் முதல் நாள் முதல் காட்சி பார்க்கிறார். அவர் ரசனையில் மேம்பாடுக்கான தேவை இருப்பதாக நினைக்க முடியுமா? (இருந்தாலும்..நான் கொஞ்சம் தள்ளி நிற்பேனே தவிர என்ன செய்ய? )

      நீக்கு
    2. நான் சொல்ல வந்தது வேறு. தனிப்பட்ட முறையில் உங்களால் ஸ்ரீரராமால் அதைப் புரிந்து கொள்ள முடியும்.

      நீக்கு
    3. //ரசனையை மேம்படுத்தவெல்லாம் நினைக்கவில்லை சார்.. மேம்பட அவசியம் இருப்பதாக நினைத்தால் தானே?//

      வெற்று பொழுது போக்கு என்பது ரொம்ப ஆபத்தான வளையம். ஆரம்ப காலங்களில் நம் எல்லோரிடமும் ஒட்டிக் கொள்வது தான். ஒரு கால கட்டத்தில் அதைத் தாண்டி வர வேண்டும். வரவில்லை என்றால் ஆயுசு பூராவும் அது தான் வேலை என்றாகி நம் முழு வாழ்க்கையையுமே சாப்பிட்டு விடும்..

      மற்றவர்களை சந்தோஷப்படுத்தி, அதில் நாமும் சந்தோஷம் கண்டு.. ஒரு பத்து வருஷம் கழித்து 'நாம் என்ன சாதித்தோம்?' என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டால் ஏதாவது பதில் கிடைக்கிற மாதிரி இருக்க வேண்டும்.

      இது ஸ்ரீராமிடம் கூட நான் அடிக்கடி சொல்வது தான்.

      நீக்கு
  14. இது மாதிரியான கதைகளைப் படித்ததில்லை.. இம்மாதிரியான திகில் திரைப் படங்களைப் பார்த்ததும் இல்லை...

    ( படித்து விட்டு யார் குளிர் பிடித்துக் கிடப்பதாம்!?..)

    இப்போது கூட கால்வாசியில் பிடித்த ஓட்டம் கடைசி முற்றுப் புள்ளிக்கு வந்து தான் நின்றேன்...

    பதிலளிநீக்கு
  15. அந்தக் காலத்தில் குமுதம் இதழில் -

    ( எதற்கும் வார இதழில் என்று சொல்லி விடலாம்... இதழில் படித்தேன்.. - என்றால் வேற ஏதாவது அர்த்தம் வந்திடப் போகுது!..)

    எக்ஸார்ஸிஸ்ட் என்றொரு களேபரக் கதை வந்தபோது பட்டப் பகலிலேயே அந்தப் பக்கம் போகாமல் இருந்தேன்...

    அப்படிப்பட்ட எனக்குத் தான் நடுநிசியில் காளி கோயிலில் இருந்து வழிபடும் பேறும் கிடைத்தது என்பது கூடுதல் செய்தி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை தம்பி. எனக்கு எழுத கற்றுக் கொடுத்தது குமுதம் தான். கரும்பு என்றால் சாறும் சக்கையும் சேர்ந்தது தானே?.. குமுதம் எஸ்.ஏ.பி. அவர்கள் எழுத்து நடை சாறு. எனது பதினெட்டு வயதில் என் எழுத்து குருவாக அவரை வரித்தேன்.

      நீக்கு
    2. // கரும்பு என்றால்
      சாறும் சக்கையும் சேர்ந்தது தானே!..//

      அருமை.. அருமை அண்ணா!..

      நீக்கு
  16. இந்தக் கதையில் எதுவும் பிரமாதமாக இல்லை. எது உங்களை மறக்க முடியாமல் செய்தது? எழுதப்பட்டிருந்த விதமா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைக்கரு.
      மனித வக்கிரங்கள் சுவாரசியமான கதைத்தளங்கள்.

      நீக்கு
  17. பா.வெ. கதையைச் சொல்லிய விதம் அபாரம். கதை சொல்லல் என்பது தான் ஆதாரம்; அது தான் தொன்னை. அதில் தான் கதையாகிய பாயசத்தை ஊற்ற வேண்டும். அந்த கதை சொல்லல் கலை அப்பாதுரை சாருக்கு கைவந்த கலை.
    அந்தத் திறமை காட்டில் பொழிந்த நிலவாகி விடக்கூடாது என்பது தான் என் கவலை.

    ராஜேஷ் குமார் எழுத்து நடை மிகப் பிரமாதமாக, லாவகமாக இருக்கும். பட்டுக்கோட்டை பிரபாகர், பி.டி.சாமி, இ. செளந்தர ராஜன் போன்ற அவரது சக எழுத்தாளர்களுக்கு அமையாத வரம் அது. இருந்தும் அவர் பெரிதாகப் பேசப்படாததற்குக் காரணம் அவரை அமிழ்த்திய 'துப்பறியும் கதை' குழி தான்.

    அமெரிக்க பொது நூலகங்களில் கிட்டத்தட்ட முக்கால் வாசிப் பகுதியை 'துப்பறிகிற
    மர்ம, அமானுஷ்ய' கதை சப்ஜெக்ட்டுகள் தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. இருந்தும் கதை சொல்லல் கலையில் அவை அத்தனையும் கொடி கட்டிப் பறக்கும். 'எப்படி எழுதுவது' என்ற துறையில் புதுப்புது உத்திகளைப் புகுத்திய கில்லாடிகள் அவர்கள். ஒரு விஷயம் அப்படியே கண்ணுக்கு முன்னால் நடக்கிற மாதிரி படப்பிடிப்பாய் எழுத்தை ஓட விட்டு நம்மை வசப்படுத்தி ஆழந்து வாசிக்க வைப்பதில் கைதேர்ந்தவர்கள் அவர்கள்.

    அந்த எழுத்து நடையைக் கைப்பற்ற வேண்டும் நாம். நமக்கு வாகான கதைப் போக்குகளுக்கு அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கே, எது வாசித்தாலும் நமக்கு அவை எவ்விதத்தில் உபயோகமாகும் என்று யோசிக்கிற காலம் இது.


    பதிலளிநீக்கு
  18. //தெற்குமாடக் கிடங்குகளில் நான் கண்ட காட்சியின் பயங்கரத்தில் ஓடோடி வந்தேன்.. பயத்திலும் ஆத்திரத்திலும் எனக்கு உடல் நடுங்கிக்கொண்டிருந்தது... மேற்குமாடப் பேரறையில் என் குடும்பத்தினர் உற்சாகமாக அக்டோபர் பௌர்ணமி விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.. எத்தனை கோரம்! இத்தனை வருடம்.. இத்தனை நாள்.. இவர்களுடன்.. இதையா.. என்று கேள்வியாகத் துளைத்த மனம் என்னை சித்திரவதை செய்தது.//

    பயங்கரம் .

    //அறைக்குள் தாளிட்டுக் கொண்ட நான், டின்னருக்கு ராஜரை வெட்டிச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை அசைக்க முடியாமல் தவித்தேன்.//

    பரம்பரை எண்ணம் வந்து விட்டதோ!

    பதிலளிநீக்கு
  19. மொழிபெயர்ப்புக் கதை கூட நீங்கள் எழுதும் பாணியிலேயே இருக்கிறதே. ஆச்சரியமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!