திங்கள், 8 பிப்ரவரி, 2021

'திங்க'க்கிழமை :: தளர் கறியமுது - ரேவதி நரசிம்ஹன் ரெஸிபி

 

வெகு நாட்களாக எங்கள் வீட்டில் செய்யப்படும் தளர் கறியமுது பற்றி குறித்துக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் என்னைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது.

கடைசி நாத்தனார், சிங்கத்தின் சித்தப்பா மகளுக்கு வாட்ஸாப்  செய்து எனக்கு வந்த செய்முறை, இது. 

நன்றி தங்கச்சி. (அதுதான் அவள் பெயர்.:))

இந்தத் தளர் கறியமுது குழம்பும் இல்லை; கூட்டும் இல்லை.

சாம்பார்ப் பொடி போடாமல் சில விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படும்.

மங்கலிப் பொண்டு, கனுப் பொங்கல், காரடையான் நோன்பு என்று இருக்கும் அந்த நாட்கள். நிறை மணம், கண்ணுக்கு அழகு என்று அமைப்பாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: 

காய்கறிகள்: 

பரங்கிக்காய்

அவரை,

சேம்பு,

மொச்சை,

குடமிளகாய்,

டபிள் பீன்ஸ்,

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

எல்லாவற்றையும் ஒரே அளவில் சற்றுப் பெரிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பெரிய, அடிகனத்த பாத்திரத்தில் இந்தக் காய்கறிகளை, நீரில் உப்பும் மஞ்சள் பொடியும் போட்டு வேக வைக்க வேண்டும்.

குழம்புக்குத் தேவையான கைப்பிடி புளியைக் கோதில்லாமல் கெட்டியாகக் கரைத்து வைத்து துளி உப்பும் போட்டு வைக்கணும்.

 அரைக்க வேண்டிய பொருட்கள்: 

ஒரு மூடி தேங்காய்த் துறுவல்,

வறுத்த பச்சரிசி

வறுத்த வெள்ளை எள்,

வறுத்த கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தேவையான மிளகாய் வற்றல், பெருங்காயம் எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துத் தனியே வைத்துவிடலாம்.

++++++++++++ 

குக்கரில் நல்ல பாசிப் பருப்பை ஒரு டம்ப்ளர் அளவில் எடுத்து மையாக வேகவைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் சிறிதே எண்ணெய் வைத்து வெந்தியம், கடுகு, பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்துகொண்டு அதில் இந்த வெந்த கறிகாய்த் தான்களைப் போடவேண்டும்.

கொதித்ததும் அரைத்து வைத்துத் தேங்காய்க் கலவை சேர்த்துப் பிறகு புளிக்கரைசலையும் சேர்க்க வேண்டும்.

இப்போது வெந்து மசிந்த பாசிப்பருப்பை சேர்க்கலாம்.

எல்லாம் கலந்து கொதிக்கும் போது ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு மீண்டும் கறிவேப்பிலை போட்டு இறக்கி வைக்க வேண்டியது தான்.

உப்பு சரியாக இருக்கா என்று பார்த்துக் கொள்ளவும். 

 = = = =  

57 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இறைவன் அருளால்
    அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
    இன்று இங்கு இந்த செய்முறையைப்
    பதிவிட்டதற்கு கௌதமன் ஜி க்கு மிக நன்றி.

    எல்லோரும் அறிந்த கூட்டு என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. கிட்டத்தட்டத் தாளகம் அப்புறமா நம்ம கூட்டுக்குழம்புக்குத் தம்பி முறை. அம்மா பண்ணுவார். ஆனால் அப்போல்லாம் குடமிளகாய் பற்றித் தெரியாது. அதோடு எந்தப் பருப்பும் வேகவைத்துச் சேர்க்க மாட்டார். ராயர் குழம்பு என்போம் எங்க வீடுகளிலே.எள் கட்டாயம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கீதாமா,
      நன்றி.
      சின்ன மாமியார் வீட்டில் திருமலை என்பவர் 59 வருடங்களாக இருந்தார். நெல்லையைச் சேர்ந்தவர்.
      எங்களுக்கும் திருக்குறுங்குடி+கீழ நத்தம் என்பதால்
      என்னைத் தனியாக அருமையாகக்
      கவனித்து உணவளிப்பார்.
      ''இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ ரேவதி ''
      என்று அவர் கூறுவதே அருமை.
      எவ்வளவு முறை செய்தாலும் அவர் கைமணம்
      வரவில்லை.
      ஆமாம் தாளகமே ,தளர் கறியமுது ஆகி இருக்கும்.

      நீக்கு
  4. என் மூத்த மகனின் ஆயுஷுஹோமத்துக்கு முதல் நாள், திருநெல்வேலி டைப் அரைச்சுவிட்ட சாம்பார் என்று ஒரு மாமி செய்தார்.  அது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஸ்ரீராம்.
      இதைச் செய்து அறிமுகம் செய்தவர் திருனெல்வேலிக்காரர் தான்.

      ஆனால் எங்க அம்மா செய்து நான் பார்த்ததில்லை.
      நன்றி மா.

      நீக்கு
    2. என் பிறந்த வீட்டில் சமையல் அடிக்கடி மாத்தி மாத்திப் பண்ணுவாங்க. அம்மாவுக்கே விதம் விதமாய்ச் சமைப்பதில் ஆசை/ஆவல் உண்டு. ஆகவே யாரானும் புதுசாச் செய்தால் அம்மா உடனே கற்றுக்கொண்டு பண்ணுவார். எங்களோடு கடையநல்லூர்க்காரங்க/கல்லிடைக்குறிச்சிக்காரங்கனு குடி இருந்திருக்காங்க. அவங்களிடம் இருந்து அம்மா தாளகம்/ பொரிச்ச குழம்பு,/அவியல் புளி விட்டுச் செய்வது எனக் கற்றுக்கொண்டு செய்வார். நான் முறுக்குச் சுற்றக் கற்றுக்கொண்டதும் திருநெல்வேலிக்கார மாமி ஒருத்தரிடம் தான். சீதா மாமி என எங்களோடு குடி இருந்தார். கல்லுரலில் புழுங்கலரிசியை அரைத்து முறுக்கு/தட்டை செய்வார் . பிரமாதமாய் இருக்கும். தே.எண்ணெய் மணக்கும்.

      நீக்கு
    3. அன்பு கீதாமா,

      அம்மா, சென்னையில் வளர்ந்ததால், நிறைய பக்குவங்களை
      என் அப்பா வழிப் பாட்டியிடமிருந்தே கற்றார்.
      கற்சட்டி சமையலும், மண் பாண்டத்தில் செய்யும் கீரையும்
      அவ்வளவு நன்றாக இருக்கும்.
      திரட்டிப்பாலும் ,தேன் குழலும் ,மைசூர்ப்பாகும் ,
      கை முறுக்கும்
      அம்மா ஸ்பெஷல்.
      சமையலுக்கு முக்கால்வாசி தே எண்ணெய் தான்.

      நீங்கள் சமையல் முறை சொல்வதிலிருந்தே
      உங்கள் அம்மாவின் கைவண்ணம் தெரிகிறது.
      சமைப்பதை விட, அந்தப் பக்குவம் சொல்வதிலும் நேர்த்தி வேண்டும் இல்லையாமா.

      நன்றி மா.

      நீக்கு
  5. கல்லுரலில் புழுங்கலரிசியை அரைத்து முறுக்கு/தட்டை செய்வார் . பிரமாதமாய்///////

    ஆமாம்.வெள்ளைவேளேர் என்று அந்த மாவு
    பெருங்காய ஜலம் கலந்து நல்ல வாசனையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனைவி தயார் செய்யும் முறுக்கு மாவு...அவ்ளவு ருசியாக இருக்கும். எதுக்கு கஷ்டப்பட்டு முருக்கு சுத்துவது, பேசாம, இஷ்டப்படி தேன்குழல் அச்சிலேயே பிழிந்துவிடேன் என்பேன்.....

      நீங்கள் நினைவுபடுத்திவிட்டீர்கள். அவளை முருக்கு மாவு தயார் செய்யச் சொல்லணும்.

      நீக்கு
  6. இனி வரும் கருத்துகளுக்குக் காலையில் தான்
    பதில் அளிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சுலபமாக சொல்லிச் சென்ற விதம் அருமை அம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு தேவகோட்டைஜி,
      வந்து படித்து கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா. சுலபமான
      முறைதான். செய்து பாருங்கள்.

      நீக்கு
  8. சுலபமான ரெசிப்பியா இருக்கு. இதில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு தவிர மற்றவற்றைப் போட்டுச் செய்துபார்க்க வேண்டும். ஆனால் பசங்களுக்காக அதிசயமா வாங்கின சர்க்கரைவள்ளிக் கிழங்கும் வீட்டில் இருக்கு.

    இன்று படம் காணோமே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் சேர்க்கலாம் என்று தேடிப் பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை!

      நீக்கு
    2. சர்க்கரை வள்ளிக்கிழங்கின் மணம் அலாதியாக இருக்கும் இந்தக் குழம்பில்.

      நீக்கு
    3. அன்பு முரளிமா,
      செய்வது சுலபம். படம் எடுக்கதான் மறந்து விடும்.

      இதை இப்படியே வெளியிட்டது
      கௌதமன் ஜி யின் பெருந்தன்மை.

      தாளகம்
      என்ற பெயரில் படங்கள் இருக்கின்றன.
      அதை இந்தச் செய்முறைக்குப்போடுவது தர்மம் இல்லை.
      அடுத்த தடவை கவனமாக இருக்கிறேன்.
      வள்ளிக்கிழங்கு சேர்த்து செய்தால் மணம் கூடுதல் தான்.
      நன்றி மா,.

      நீக்கு
  9. இப்போ நாம உபயோகிக்கும் குடமிளகாயை நான் வெளிநாட்டில்தான் முதல்முறை பார்த்திருக்கிறேன். அதுபோல 1 1/2 அடி விட்டமுள்ள கேபேஜும் திபாயில்தான் பார்த்திருக்கிறேன்.

    மோர்மிளகாய்க்காக தஞ்சாவூர் குடமிளகாய் என அந்தக்காலத்தில் வீட்டில் வாங்குவது சிறிய அளவில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சாவூர்க்குடமிளகாய் கூட எனக்கெல்லாம் தெரியாது. எங்க வீட்டில் சின்ன நாட்டு மிளகாயில் தான் மோர் மிளகாய், புளி மிளகாய் செய்வார்கள். அறுபதுகளில் சித்தி வீட்டில் இருந்தப்போத் தான் கோவைக்காய், பெரிய வெங்காயம், குடமிளகாய் எல்லாம் முதல் முதலாகப் பார்த்தேன். வாங்கிச் சமைத்ததில்லை. கோவைக்காய் மட்டும் சித்தி வாங்குவார். அவங்க அதை தொண்டங்காய் என்பார்கள்.

      நீக்கு
    2. தஞ்சாவூர் குடமிளகாய் மோர் மிளகாய் போட
      அம்மா வாங்குவார்.
      சென்னையிலும் சிலசமயம் கிடைக்கும்.
      நல்ல சுவைதான்.
      கறுக் முறுக்கென்று காரமில்லாமல் சுவையாக இருக்கும் மா.

      நீக்கு
    3. தொண்டங்காய், புளிச்சகீரை எல்லாம் சென்னையில் தான் அறிமுகம்.

      நீக்கு
    4. தொண்டங்காய் என்பது கோவைக்காயா? இதை சென்னைக்கு வந்தப்புறம்தான் பார்த்திருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு, பலப் பல வருடங்கள் கழித்துத்தான் பசங்களுக்காக மனைவி கரேமது செய்தவதைப் பார்த்திருக்கிறேன். இன்றுவரை எனக்கு அது பிடிக்காது. புளிச்சகீரை நான் வாங்கி நினைவில்லை. நெல்லையில் அரைக்கீரைதான், பஹ்ரைனில் தண்டுக்கீரை, அபூர்வமாக பாலக்.

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரி

    அருமையான சமையல் செய்முறை இன்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்கு வெந்த துவரம்பருப்பு, கொஞ்சம் கடலைபருப்புடன் இந்த காய்கறி கலவை, அரைத்து விட்ட பொருட்கள் சேர்த்து எங்கள் வீட்டில் இன்றும் இந்த தாளதம் (நாங்கள் இதை தாளதம் என்றுதான் சொல்வோம்) செய்வோம். காய்கறிகள் சற்று வித்தியாசப்படும். சேம்பு இல்லையேல் சேனை, அல்லது உருளை கொஞ்சம் சேர்ப்போம். கத்திரிக்காயும் அளவாக உண்டு. இப்போது காரட், புடலை எனவும் சேர்க்கிறோம். சிகப்பு பூசணியுடன் கொஞ்சம் வெள்ளைப் பூசணியும் சேர்ப்போம்.

    அப்போதெல்லாம், அம்மா வீட்டில் கற்சட்டியில் நன்கு கொதிக்க வைத்து இதை பண்ணும் போது, இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். மறுநாள் வீட்டு பெரியவர்கள் பழையதை சேர்க்க மாட்டார்கள் என்பதால், மறுநாள் நாங்கள் , காலை இட்லி, தோசைக்கும் மதியம் தயிர்சாததிற்கும், இதை தொட்டுக்கொண்டு சாப்பாடும் போது தேவாமிர்தமாக இருக்கும்.

    நீங்கள் வித்தியாசமான முறையில் பாசிப்பருப்புடன் அளவாக காய் சேர்த்து மிக அருமையாக இந்த தாளதத்தை சொல்லியுள்ளீர்கள். ஒருதடவை இப்படியும் செய்து பார்க்கிறேன்.

    சுவையான சமையலை அறிமுகம் செய்த தங்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கமலாமா,
      இந்த செய்முறையில் சின்ன மாமியார் வீட்டில் அனுபவித்த
      விருந்துகள் அனேகம்.
      டிஃபன் வகையறாவுக்குத் தொட்டுக் கொள்ள
      வெகு ருசி.
      குடைமிளகாய் எல்லாம் அவர் ஏன் சேர்த்தார் என்று தெரியாது .
      ஆனால் நல்ல வாசனையாக இருக்கும்.
      இந்த ஊரில் குடமிளகாய் பல வர்ணங்களில் வந்தாலும்
      நம்மூர் மாதிரி மணப்பதில்லை.

      நீக்கு
    2. அனேகமாகத் தை, மாசி ,பங்குனியில்
      வீட்டிற்கு வரும் காய்கறிகளை அவர் உபயோகப் படுத்தி இருப்பார் என்று தோன்றுகிறது.
      சின்ன மாமனாருக்குப்
      பிடித்த காய்கறிகளை மட்டும் சேர்த்தாரோ என்னவோ:)

      துவரம் பருப்பு எப்பவுமே அதிக மணம்.
      நீங்கள் சொல்லி இருப்பதும்,
      கீதாமாவின் செய்முறையும் நல்ல ருசியாக இருக்கும் .
      மிக நன்றி கமலாமா.

      நீக்கு
  12. செய்முறையும், அதற்கு வந்த பின்னூட்டங்களும் நாவில் நீர் ஊற வைத்தன. நாட்டுக் கறிகாய்களோடு குடைமிளகாய் சேருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே! நான் எப்போவுமே இம்மாதிரிப் பாரம்பரியச் சமையல் முறைகளில் உ.கி.காரட், பீன்ஸ், கு/மி போன்றவை சேர்ப்பதில்லை. இவை எல்லாம் சப்பாத்திக்கே பயன்படுத்திப்பேன். இம்மாதிரிச் சமையல்களில் நாட்டுக்காய்கள் மட்டுமே போடுவேன்.

      நீக்கு
    2. 😊👌👌👌👌😊😊😊😊😊அன்பு பானுமா,
      அவர் செய்ததை சொல்லி இருக்கிறேன்.
      வீட்டுப் பெண்களுடன் பேசிச் சிரித்து சாப்பிட்டதுதான் நினைவில்.
      அதுவும் 25 வருடங்கள் முன்னால்.

      சித்தி '' திருமலை இன்னிக்கு என்னடா
      இலையில் போடப் போறே'' என்று சிரித்தபடி கேட்பது
      காதில் விழுகிறது. அவர் வைத்ததுதான் அந்த வீட்டில் சட்டம்.
      என் நாத்தனார் தன் செய்முறையையும்
      கலந்து சொன்னாரோ என்னவோ!!!
      நன்றி மா.

      நீக்கு
    3. அன்பு கீதாமா,
      திருமலை இந்தக் குழம்பு தளரக் கறியமுதை
      ஆராதனை செய்யும் போது
      பெருமாளுக்குக் காட்டி இருக்க மாட்டார்
      என்று நினைக்கிறேன்.
      சின்ன மாமனார் தான் அந்த வீட்டில் பெருமாள்.
      :))))))))

      நீக்கு
  13. படங்கள் இல்லாதது குறையாக இல்லை. நீங்கள் எழுதியிருக்கும் விதத்தில் அவை மனக்கண்ணி்ல் வந்து விட்டன.

    பதிலளிநீக்கு
  14. சமையல் சுவையில் காலை வணக்கம் கூறவே,மறந்து விட்டேன். அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய மாலை வணக்கம் மா.

      என்னென்னவோ ஞாபகங்கள் இதை எழுதும்போது.
      நான் சமையலில் அவ்வளவு திறமை
      காட்டியதில்லை.
      கிளி மாதிரி கேட்டதை சொல்லிச் செய்வேன்.
      நீங்கள் எல்லோரும் ரசித்துப் பின்னூட்டம்
      இடுவதே எனக்கு சந்தோஷம். நன்றி பானுமா.

      நீக்கு

  15. செய்முறை விளக்கம் மிக அருமை... ஒரு புகைப்படமாவது போட்டு இருக்கலாம் என்பது என் கருத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Avargal அன்பு துரை,
      படம் போட்டிருக்கலாம். ஆனால் செய்யும்போது
      அந்த மும்முரத்தில் படம் எடுக்க விட்டுப் போய் விட்டது.
      எபிக்கு பெரிய மனசு.
      அப்படியே போட்டு விட்டார்கள்.
      உங்களுக்கும் பிடித்ததே நன்மை.
      செய்து பாருங்கள்.

      நீக்கு
  16. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் எங்கெங்கும் வாழ்க...

    பதிலளிநீக்கு
  17. ஆகா... அருமை...
    மொச்சையும் சேம்பும் சேர்க்காமல் வேறு சிலவற்றைச் சேர்த்து செய்வதுண்டு...

    மொச்சை ஒத்துக் கொள்ளாததால் சேர்த்துக் கொள்வதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொச்சை நாங்க சேர்ப்போம். முற்றிய அவரைப்பருப்புக்களையும் சேர்ப்பது உண்டு.

      நீக்கு
    2. அன்பு துரை செல்வராஜு,
      எல்லாம்,
      சமையல் செய்பவரின் விருப்பம். எனக்கும் சேம்பு ,மொச்சை இந்த வயதில் ஒத்துக் கொள்வதில்லை.
      அப்பொழுதெல்லாம் பிரச்சினை இல்லை.
      பிடித்த காய்கறிகளைச் சேத்து செய்து கொள்ளலாம்.
      பச்சைக் காய்கறிகள் ஒன்றும் செய்யாது.
      நன்றி மா.

      நீக்கு
    3. அன்பு கீதாமா,
      அந்த மாதங்களில் நிறைய கிடைக்கும்
      பருப்பு வகையறாவைத் திருமலை
      சேர்த்துக் கொள்வார்.

      கொத்தமல்லி கூட போடமாட்டார். ஆனாலும் நல்ல வாசனை.
      கைமணம் தான் மா/.

      நீக்கு
  18. பதில்கள்
    1. மிக நன்றி அன்பு முனைவர் ஐயா.
      வந்து கருத்து சொன்னதே மிக நன்மை.

      நீக்கு
  19. படிக்கவே சுவையாக இருக்கிறது. செய்து பார்க்கலாம்
    (சுலபமான ரெசிபி என்கிறாரே நெல்லை.. ?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுலபமாகத்தான் இருக்கிறது. செய்து, சுவைத்து விட்டோம். 

      நீக்கு
  20. அன்பு துரை,
    நல்ல குளிரிலிருந்து எஸ்கேப் உங்களுக்கு.!!!
    களியுடன் சாப்பிட்டதில்லை.
    களியே இங்கு வந்துதான் செய்தேன்.

    இது திருமலை அவர்களின் தனி செய்முறை.
    நெல்லைத்தமிழன் நிறைய பரிசோதனைகள் அவர் வீட்டில் நடத்துகிறார்.
    அவருக்கு இது சுலபமாகத் தோன்றி இருக்கிறது.

    பொங்கலுடன் ,இட்லியுடன் ,காரடையுடன் இந்த கூட்டு குழம்பு நன்றாக
    இருக்கும். நன்றி மா.

    பதிலளிநீக்கு
  21. தாளகம் டைப் தான் எல்லாக் காய்கறிகளும் சேர்த்து செய்யும் போது அலாதி ருசி வந்து விடுகிறது நன்றாக இருக்கிறது அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு காமாட்சிமா,
      நல்ல நாட்களில் செய்வதுதான்.
      எல்லோருக்குமே தெரிந்த செய்முறை.
      புதிதில்லை.
      எனக்கு ஆதி நாட்களில் அனுபவித்த
      நல்ல நாட்களை நினைவில் கொண்டு வரும்
      உணவு. வந்து படித்ததற்கு மிக நன்றி மா.

      நீக்கு
  22. இங்கு வந்து கருத்துரைகளால் அலங்காரம் செய்த
    பதிவை
    இன்று போஸ்ட் செய்ய முடிவெடுத்த எபிக்கு நன்றி.
    ஸ்ரீராம் அண்ட் கௌதமன் ஜி.
    கத்துக்குட்டி சமையலையும் அங்கீகரித்து விட்டீர்கள்.
    இனிமை.

    பதிலளிநீக்கு
  23. தளர் கறியமுது செய்முறையும் சொல்லிய விதமும் நன்றாக இருக்கிறது வல்லி அக்கா.
    பாசிப்பருப்பு போட்டு செய்தது இல்லை. துவரம் பருப்பு போட்டு செய்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கோமதிமா,
      சுலப முறையில் எல்லாக் காய்கறிகளையும் உள்ளடக்கி
      சாம்பார்ப் பொடி போடாமல் மணக்க மணக்க செய்வார்
      திருமலை அவர்கள்.
      பொடி போடும் வழக்கமும் ,காமதேனு தியேட்டரில்
      சினிமா பார்க்கவும்
      நம் வீட்டுக்கு வந்து பணம் வாங்கிக்கொள்வார்.

      வரும்போது ஒரு குட்டித் தூக்கு நிறைய
      பருப்புருண்டை குழம்பு இருக்கும்.
      அடைப் பாட்டி கையில் கொடுத்துவிட்டு,
      என் கையில் ஒரு டிஃபன் டப்பாவில்
      பாதாம் அல்வாவும் கொடுப்பார்.

      எனக்குத் தயக்கமாக இருக்கும்.
      எல்லாம் உங்க மாமியாருக்கும் தெரியும் சாப்பிடு
      என்பார்.
      தன் 75 வயதில் அதே வீட்டில் மறைந்தார். நல்ல உழைப்பாளி.

      துவரம் பருப்பு போட்டு செய்யுங்கள் .இன்னும் மணமாக
      இருக்கும்.

      நீக்கு
  24. சிறப்பான செய்முறை. எங்கள் வீடுகளில் செய்வார்களா என்று தெரியவில்லை. குறிப்பினை ஆதிக்கு அனுப்பி வைக்கிறேன். ஒரு ஆளுக்கு இதனைச் செய்வது கடினம் என்றே தோன்றுகிறது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வெங்கட்,
      இது பெரிய குடும்பத்துக்கு செய்வது. நமக்கேற்ற முறையில் சுருக்கி விடலாம்.

      நமக்கு அன்பும் காட்டி உணவும் அளித்தவர்ஜளை மறக்கக் கூடாது.
      அந்தப் பெரியவரின் நினைவில் பதிந்தேன்.
      ஆதி நன்றாகவே செய்வார்மா. நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!