செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

சிறுகதை :  மாறியது நெஞ்சம் - பானுமதி வெங்கடேஸ்வரன்.

மாறியது நெஞ்சம் 

பானுமதி வெங்கடேஸ்வரன்

நான் காலை நடைப் பயிற்சியை  செய்து கோண்டிருந்த பொழுது எதிரே நாயுடன் வந்து கொண்டிருந்த ரித்திகா," ஹாய் அங்கிள்!" என்றாள். அந்த ஹாயை புன்னகையோடு திருப்பினேன். 

நவீன பெண்ணுக்குரிய விரித்த தலை, பாழ் நெற்றி, கிழிந்த ஜீன்ஸ் என்று அத்தனை அடையாளங்களும் கொண்டவள். இவள் தமிழ்ப்பெண் என்று என்னால் நம்ப முடியாமல்தான் இருந்தது. இதுவரை இவள் ஒரு வார்த்தை தமிழில் பேசி நான் கேட்டதில்லை. ஆனால் அவளுடைய தோழியான என் மகள் சிரித்துக் கொண்டே அப்பா, "அவள் ரித்திகா ஐயர்  தமிழ்ப் பெண்தான்." என்றாள். 

தமிழில் பேசவே மாட்டேன் என்கிறாளே?"

"படித்தது முழுக்க வெளி நாட்டில்" 

"வீட்டில் கூடவா தமிழ் பேச மாட்டார்கள்?"

"அவளுக்கு தமிழ் புரியும், ஏனோ பேசுவதில்லை." 

அவள் மட்டுமல்ல, எங்கள் குடியிருப்பில் பல குழந்தைகள் ஆங்கிலத்தில்தான் உரையாடுகின்றன. 

ரித்திகாதான் தமிழ் பேசுவதில்லையே தவிர, அவள் கணவன் நன்றாக தமிழ்ப் பேசுகிறான். நவராத்திரி, தீபாவளி போன்ற நாட்களில் இனிப்பு கொடுக்கவும், வாழ்த்து சொல்லவும் இருவரும் வந்திருந்தார்கள். 

அப்போது கூட அவள் புடவை அணியாமல் ,கழுத்து, கைகள்  மூளியாய், பாழும் நெற்றியோடு வந்தது என் மனைவிக்கு  அதிருப்தியை உண்டாக்கியது.  அவர்கள் சென்ற பின், " மற்ற நாட்களில் எப்படியோ இருக்கட்டும், பண்டிகை தினங்களிலாவது நெற்றிக்கு திலகம் வைத்துக் கொண்டு, கழுத்திலும், கைகளிலும் ஏதாவது அணிந்து கொள்ளக் கூடாதா?"  என்ற அவள் கேள்விக்கு நாங்கள் யாரும் பதில் சொல்லவில்லை. இதனால் என் மனைவியை கர்நாடகமாக கற்பனை செய்து  கொண்டு விடாதீர்கள். எழுபதுகளின் இறுதியில் பட்ட  மேற்படிப்பை  முடித்தவள். வங்கி ஒன்றில் பணி புரிந்தவள்.  நீங்கள் அவளை தொலைக்காட்சிகளில் டாக் ஷோக்களில் பார்த்திருப்பீர்கள். 

அப்போதைய பெரும்பான்மையான பெண்களைப் போல, படித்துவிட்டு வேலைக்குச் சென்றாலும் திருமணமான பெண்கள் பொட்டு வைத்துக் கொள்ளாமல் இருப்பதையும், தலையை விரித்துப் போட்டுக்  கொள்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாதவள். நல்ல வேளை எங்களுக்கு வந்த மருமகள் ஜீன்ஸ் அணிந்தாலும் பொட்டும் வைத்துக் கொள்வாள்.     

சென்ற மாதம் திருநெல்வேலியில் எங்கள் உறவினர் ஒருவருக்கு சதாபிஷேகம் நடந்தது.  அதற்காக அங்கு சென்றிருந்தோம். அங்கிருந்து சங்கரன் கோவிலுக்கு சென்றே ஆக வேண்டும் என்று என் மனைவி கண்டிப்பாக கூறினாள். அங்கிருந்து புற்று மண்ணை வாங்கி கொண்டு வந்தவள், "ரித்திகாவிற்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகி விட்டதே? இன்னும் குழந்தை பிறக்கவில்லை. சங்கரன் கோவில் புற்று மண்ணை பூஜை அறையில் வைத்துக் கொண்டால் நிச்சயம் குழந்தை பிறக்கும். அவளுக்கு கொடுத்து விட்டு வருகிறேன்" என்று கிளம்பியவளை என் மகள் தடுத்தாள்.  "சும்மா இரும்மா,  தேவை இல்லாத வேலை எல்லாம் பண்ணாத.."

"இல்லடி,கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆயிடுத்து, இன்னும் குழந்தை பொறக்கலை.."

"அவளுக்கு பொறக்கலையா? இல்ல அவ பெத்துக்கலையானு தெரியாது..." 

இப்படி ஒரு விஷயம் உண்டு என்பதை என் மனைவியால் ஏற்கவே முடியவில்லை. ஒரு பெண், குழந்தை வேண்டாம் என்று  நினைப்பாளா? என்பது  அவளுக்கு அதிர்ச்சி.  எங்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் குழந்தை  பிறந்தது. அந்த சமயத்தில் அவளுக்கிருந்த மன  உளைச்சல்கள், அனுஷ்டித்த விரதங்கள்..! அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 

இதற்குப் பிறகு ரித்திகாவை நாயோடு பார்க்கும் பொழுதெல்லாம்," நாயைக் கட்டிக் கொண்டு மாரடிப்பாளாம்,ஒருகுழந்தையை  வளர்க்க  முடியாதா? " என்று  புலம்புவாள். 

"நாயை  படிக்க வைக்க வேண்டாம், பரீட்சையில் மார்க் குறைவாக வாங்கினால் வருத்தப் பட வேண்டாம், கல்லூரி அட்மிஷனுக்கு அலைய வேண்டாம், எவ்வளவு வசதிகள்! அதுவோ அன்பைக் கொட்டும்". 

எங்களின் இந்த பதிலை அவளால் ரசிக்க முடியாது. 

"பாதி நாள் ஸ்விக்கியிலிருந்து சாப்பாடு வருகிறது. குழந்தையும் பெற்றுக் கொடுக்க மாட்டாளாம், எதற்கு கல்யாணம் செய்து கொண்டாள்?"  
 
இந்த கேள்விக்கெல்லாம் யார் என்ன பதில் சொல்ல முடியும்? அவரவர்  வாழ்க்கையை அவரவர் வாழுகிறார்கள். இதில் நாம் யார்? 

நான் நடைப் பயிற்சியின் கடைசி ரவுண்டில் இருந்தபொழுது, மகளிடமிருந்து வீடு திரும்பச் சொல்லி அழைப்பு வந்தது. 

வீட்டிற்குள் நுழைந்ததும் என் மகள்,"கற்பகம் சித்தி போய்ட்டாளாம்"   என்றாள்.

"அடப்பாவமே! எப்போ? "

"இன்னிக்கு மார்னிங்" 

கற்பகம் சித்தி என்பது என் மனைவியின் சித்தி.என்றாலும்  என் மனைவிக்கும் அவள் சித்திக்கும் அதிக வயது வித்தியாசம் கிடையாது. அதனாலோ என்னவோ சித்தியை பெயர் வைத்து அழைப்பாள்.  ஏறத்தாழ சகோதரிகள் போல. இந்த செய்தி அவளுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.  மதுரையில் இருந்த கற்பகம் சித்தியும், சித்தப்பாவும்,  அவர்களுடைய ஒரே மகன் மகேஷ் அமெரிக்கா சென்றவுடன் தனியாகத்தான் வசித்து வந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர்களுடைய மகன் அமெரிக்காவிலிருந்து வந்த பொழுது பெற்றோர்களை கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு வசதியான முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு சென்றான். இருந்த போதிலும் அவர்களுடைய மதுரை வீட்டை விற்காமல் வைத்துக் கொண்டிருந்தனர்.வருடம் முழுவதும் ஹோமிலேயே  இருக்காமல்  அவ்வப்பொழுது மதுரைக்கும் செல்வார்கள். நிறைய சுற்றுலா சென்று கொண்டிருந்தவர்கள் ஒரு வருடமாக எங்கேயும் செல்லவில்லை. பயணம் செய்வது கஷ்டமாக இருப்பதாக கூறினார்கள். 

கற்பகம் சித்திக்கு ஒரு வருடமாகவே சின்ன சின்ன உடல் உபாதைகள் இருந்ததாகவும், முக்கியமாக சுவாசிப்பதில் பிரச்சனை என்றும், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள் என்றும் தெரிந்தது. 

இனிமையானவர். உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளாமல் இருக்க மாட்டார். அவர் வந்தால் அந்த இடமே கலகலப்பாக மாறி விடும். பெரிய குடும்பத்தில் நடுவில் பிறந்ததாலோ என்னவோ எல்லோரையும் அனுசரித்து செல்லும் குணம் அவருக்கு சுலபமாக வந்து விட்டது.  பல பெரிய குடும்பங்களில் பார்த்திருக்கலாமே, மூத்தவர்களுக்கு கிடைக்கும் மரியாதையோ, இளையவர்களுக்கு கிடைக்கும் சலுகையோ நடுவில் பிறப்பவர்களுக்கு  கிடைக்காது. ஆனால் அவர்கள்தான் எல்லோரையும் அனுசரித்துச் செல்வார்கள். கற்பகம் சித்தியும் அப்படிதான். யாரிடமும் கடுமையாக பேச  மாட்டார்.  இனிமையானவர், மகனிடம் மட்டும் பாசம் அதிகம். 

கற்பகம் சித்தியின் மகன் மகேஷ் அழகான, சூட்டிகையான பையன். அவனைக் குறித்து சித்திக்கு ஏக பெருமை. அவனுக்கு தினமும் லஞ்ச் நேரத்தில் ஸ்கூலுக்கு சாப்பாடு எடுத்துச் செல்வார். டிபன் பாக்சில் கொடுத்தனுப்பினால் சாப்பாடு ஆறிப் போய் விடுமாம். 

அவன் இன்ஜினீயரிங் படிக்கும் வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. இஞ்சனீயரிங் படித்தவன் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி ஒரு நல்ல வேலையில் அமர்ந்தான். அந்த வேலையில் ஒரு வருடம்தான், பிறகு வேறு ஒரு கம்பெனிக்கு மாறினான். அங்கிருந்து மீண்டும் இன்னொரு வேலை மாறினான். அது இந்தக் கால இளைஞர்களின் மனோபாவம் எனலாம். இரண்டு வருடங்களுக்குப் பிறகு,"இன்ஜினீயரிங் ஐஸ் நாட் மை கப் ஆஃப் டீ, எகனாமிக்ஸ் படிக்கப் போகிறேன்," என்று டில்லி ஸ்கூல் ஆஃ ப் எகனாமிக்சில் போய் சேர்ந்தான். அங்கிருந்து அமெரிக்காவிற்கு மேல் படிப்பிற்குச் சென்றான். அதற்கும் பெற்றோர்கள்தான் பணம் அனுப்பிக் கொண்டிருந்தனர்.  அவன் வயதை  ஒத்த யுவர்கள் திருமணம் செய்து கொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டு செட்டிலாக, மகேஷ் பெற்றோர்களின் பணத்தை கரைத்துக் கொண்டிருந்தான். ஒரு ஸ்டேஜில் அவர்கள் தங்களுடைய பெரிய வீட்டை விற்று, அபார்ட்மெண்டுக்கு மாறினார்கள். அவன் அங்கேயே ஒரு வியட்நாம் பெண்ணை மணந்து கொண்டான் என்னும் செய்தி, வெளியே சொல்லிக்கொள்ளா விட்டாலும்  கற்பகம் சித்தியையும், சித்தப்பாவையும் அதிகம் பாதித்தது.    

அமெரிக்கா சென்றதிலிருந்து மகேஷ் இரண்டு முறைகள் மட்டுமே இந்தியா வந்தான். அதில் ஒரு முறை அவனுடன் வந்த அவன் மனைவி ஏனோ வீட்டில் தங்காமல் ஹோட்டலில் தங்கினாள். இவர்கள் ஒரு முறை அமெரிக்கா சென்றார்கள். 

அவர்கள் இருந்த சீனியர் சிட்டிசன் ஹோமிலேயே இருந்திருக்கலாம். இந்த கோவிட் காலத்தில் அங்கு கெடுபிடி அதிகம் இருந்ததால் தங்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். 

கற்பகம் சித்தியின் கணவர் மிகவும் உடைந்து போய் விட்டார். "ரெண்டு நாளாகவே டயர்டாக இருப்பதாக சொல்லிக் கொண்டே இருந்தாள். நான் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்பொழுதே டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போயிருக்க வேண்டும்.. தப்பு பண்ணி விட்டேன்.. சமையல் முடித்து, வாஷிங் மெஷினில் போட்ட துணிகளை உலர்த்தி, எல்லா வேலைகளையும் முடித்து விட்டு சென்றிருக்கிறாள்." என்று முகத்தில் அறைந்து கொண்டு அழுதார்.  


மகன் வரும் வரை பாடியை வைத்திருக்க அவர் விரும்பவில்லை. அவரே மனைவிக்கான இறுதி காரியங்களை செய்தார். மகன் வரவும் இல்லை என்பதுதான் சோகம். ஸ்கைப்பில் தாயின் உடலைப் பார்த்தவன், வருவதாகக் கூட கூறவில்லை. என்ன பையன் இவன் என்று எல்லோருக்கும் தோன்றியது. 

நல்லவேளையாக அவருடைய அண்ணா வீடும் அருகிலேயே இருக்கிறது. வரும் வழியெல்லாம் என் மனைவி தம்பியைப் பற்றி(சித்தி மகன்)புலம்பிக் கொண்டே வந்தாள். எங்கள் காலனியில் வண்டி நுழைந்த பொழுது ரித்திகா நாயைப் பிடித்துக் கொண்டு அதை இயற்கை உபாதை கழிக்க வைப்பதற்காக கையுறை அணிந்து கொண்டு, கையில் ஒரு பிளாஸ்டிக் கவரோடு நடந்து கொண்டிருந்தாள். சாதாரணமாக இந்தக் காட்சியை காணும் பொழுதெல்லாம் சுஜாவிற்கு கோபம் வரும்." நாயின் கக்காவை அள்ள முடிகிறவளுக்கு குழந்தையின் டயபரை மாற்ற முடியாத?" என்பாள். ஆனால், இன்று, "இவள் செய்வதுதான் சரி, எதற்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்? என்ன கஷ்டப்பட்டு வளர்த்தாலும் கடைசியில் கர்மம் பண்ண கூட வராத குழந்தைகளை விட , நாய்கள் எவ்வளவோ மேல்" என்றாள்.

வீட்டிற்கு வந்து, முகம் கழுவி, சூடாக ஒரு கப் காபி குடித்து, குளித்து விட்டு வந்ததும், சோகம் கொஞ்சம் மறைந்தது. இரவு சாப்பிடும் பொழுது மகள், "அம்மா, யூ நோ சம்திங்? ரித்திகா இஸ் ஆன் ஃபேமிலி வே" என்றதும், நான்,சுஜா இருவருமே ஆச்சர்யப்பட்டோம். 

"என்னவோ, அவ குழந்தைகள் வேண்டாம்னு இருப்பதா சொன்ன..?"

"இது கூட வேண்டாம்னுதான் நினைச்சாளாம், ஆனால் கிளினிக் போனதும் ஏனோ கலைக்க மனம் வரலையாம்" 

"நல்லது, ஏதோ பகவான் நல்ல புத்தி குடுத்தாரே " என்ற சுஜா மறுநாள் பிக் பாஸ்கெட்டில் அருநெல்லிக்காய் ஆர்டர் செய்தாள். எதற்கு என்றதற்கு "அருநெல்லிக்காய் முறபா செய்கிறேன். ரித்திகாவிற்கு கொடுக்கலாம். ப்ரெக்னென்டாக இருக்கும் பெண், வாய்க்கு ஏதாவது புளிப்பாக சாப்பிடனும் போல் இருக்கும்". என்றாள்.
 
************************************************ 

45 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு கதை. ரித்திகாவைப் பற்றி தொடர்ந்து வந்த போது திடீரென வேறு எங்கோ கதை பயணிக்கிறது என நினைத்து கொண்டு கதை படித்தால், கடைசியில் அதனைக்கொண்டு சேர்த்தது நன்று. கதாசிரியருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரித்திகா வர்ணனையைப் படித்த உடனேயே இரண்டு மணி நேரம் மும்முரமாக ஒரு படம் தயார் செய்தேன். அப்புறம் மீதி கதையை படிக்க ஆரம்பிக்கும்போது எனக்கும் அந்த சந்தேகம் வந்துவிட்டது. அப்புறம் கதையில் மீண்டும் ரித்திகா வந்தவுடன்தான் நிம்மதி ஏற்பட்டது!

      நீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  4. ஆகா..
    நேற்று தக்காளி சூப் வழங்கிவிட்டு
    இன்று நல்லதொரு விருந்து.. அருமை..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் எப்பொழுதும் நலமுடன் இருக்க வேண்டும்.
    இறைவன் அருள்.

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான கதை. ரித்திகா மாதிரி பெண்கள்
    நிறைய இருக்கிறார்கள். ஏன் என்றுதான் புரியவில்லை.
    வேதனை தான் மிச்சம்.
    அழகாகப் பின்னப்பட்ட கதை. ரித்திகாவுக்கும்
    சித்தி மகனுக்கும் தொடர் ஏற்படுத்திய
    லாவகம், கை தேர்ந்த எழுத்தாளரின் திறமை.

    சில பிள்ளைகள் அது போல இருந்தாலும் பெரும்பாலும் நல்ல குழந்தைகளே
    நம் மக்கள்.

    பாவம் கற்பகம் சித்தி.
    மிக நேர்த்தியான கதை. அன்பு வாழ்த்துகள் பானுமா.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். இன்று என் கதையை பொருத்தமான படத்தோடு வெளியிட்ட எங்கள் ப்ளாகிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரி

    நல்ல கதை. கற்பகம் சித்தியின் கதை மனதை உருக வைத்து விட்டது. இந்த காலத்தில் ரித்திகா போல பெண்கள், மகேஷ் போன்ற சுயநலவாதிகள் தங்கள் இஷ்டப்படி வாழ்ந்து வருகிறார்கள்.இதனால் அவர்களுக்கு மனதளவில் எந்த பாதிப்பும் வராது. பாதிக்கப்படுகிறவர்கள் பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோர்களே... இறுதியில் ரித்திகாவுக்கும் இயல்பாக தாய்மை உணர்ச்சி வந்ததை ஆசிரியர் சுட்டிக் காண்பித்து விட்டார்.

    கதைக்கென வரையப்பட்ட ஓவியங்கள் நன்றாக இருக்கிறது. கெளதமன் சகோதரருக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. கதையாகவே தோன்றவில்லை கண்முன்னே இவைகளை பார்க்கிறோம் அல்லவா இக்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளே இப்படித்தான் இருக்கிறது அருமையாக எழுதியதற்கு மிகவும் பாராட்டுகள் அன்புடன்

    பதிலளிநீக்கு
  11. //நவீன பெண்ணுக்குரிய விரித்த தலை, பாழ் நெற்றி, கிழிந்த ஜீன்ஸ் என்று அத்தனை அடையாளங்களும் கொண்டவள்//

    ஹா.. ஹா.. நெற்றியடி


    குழந்தை பெற விரும்பாததின் காரணத்தை நன்றியுள்ள நாயோடு இணைத்த விதம் அருமை.

    நான் அபுதாபியில் இருந்தபோது உறவினரின் தந்தை இறந்துவிட உறவினரை நாட்டுக்கு அனுப்பி வைக்க எனது செல்வாக்கை கம்பெனியில் பயன்படுத்தி அவனுக்கு எனது பணத்தில் டிக்கெட் போட...

    உறவினர் எனக்கு அலைபேசியில் அழைத்து சொன்ன வார்த்தை "புட்டுக் கிருச்சாம்ல" (அதாவது தந்தை இறந்து விட்டாராம்)

    பதிலளிநீக்கு
  12. கதை நன்று. ஓவியம் மிக அழகு. பாராட்டுகள் கேஜிஜி சார்

    பதிலளிநீக்கு
  13. அன்பு பானுமதியம்மா, அருமையான கதை! எதார்த்தமாக இருந்தது...எங்கோ பக்கத்து வீட்டில் நடப்பதை போல ஒரு உணர்வு...இன்று அநேக வீடுகளில் நடப்பதே...உண்மை கசந்தாலும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் கொடுக்கிறது!

    பதிலளிநீக்கு
  14. கதை சொல்லல் அழகாக பாந்தமாக இருந்தது கதையோடு ஒன்றி வாசிக்க உதவியது. இந்தக் கலை கைவரப் பெற்றதாலே எழுதுவோருக்கும் வாசிப்போருக்கும் அதுவே ஒரு தனி சந்தோஷத்தைக் கொடுக்கும். என்ன சொல்கிறீர்கள்?..

    இன்னொன்று. எழுதும் எதுவும் ஏதாவது ஒரு மெஸேஜை விட்டுச் செல்லவில்லை என்றால் எழுதுவதே வேஸ்ட் என்ற எண்ணமும் எழுதும் பொழுதும் எதையும் வாசிக்கும் பொழுதும் கூடவே வரும். உங்கள் பக்கப் பதிலும் "எஸ்.." தான் என்று இந்தக் கதையை வாசிக்கும் பொழுதே தெரிகிறது.

    இதுக்கு இது, அதுக்கு அது என்று இரண்டு சின்னக் கதைகளையும் ஒன்றாய் சேர்த்து
    ஒட்டுப் போட்ட விதமும் அழகு.

    "நாய்கள் மேலடா.." என்ற கண்ணதாசனின் 'ஒரே ஒரு ஊரிலே' பாட்டும், 'மகன் பெற்றவர்களுக்கு ஆற்றும் உதவி' பற்றிய குறளும்.. நினைவின் இன்னொரு மூலையில் ஓடிக் கொண்டே தான் இருந்தது.

    எழுத்தாளர்கள் எப்படியும் எழுதத் தெரிந்தவர்கள் தாம். இப்படியும் எழுதுவார்கள், அப்படியும் எழுதுவார்கள். சொல்லப்போனால் அதனாலேயே அவர்கள் எழுத்தை ஆள்பவர்களாயும் ஆகிப் போனார்கள்.

    அதனால்?..

    அதனால் இந்தக் கதைக்கு இன்னொரு மாற்றாக 'இவனைப் பெற இவன் பெற்றோர் என்ன தவம் செய்தாரோ?' என்று நாங்கள் வியக்குமாறு இன்னொரு கதையையும் இந்தத் தளத்திலேயே எழுதி எங்களை வாசிக்கவும் வைத்து விடுங்கள். சரியா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம்,பாராட்டு,கோரிக்கை எல்லாவற்றையும் அழகான பின்னூட்டமாக அளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

      நீக்கு
  15. கதை ஆரம்பித்த விதமும், நடுவில் எங்கோ பயணித்த விதமும் கொஞ்சம் மனதில் சிந்தனையையும் ஏமாற்றத்தையும் கொடுத்தாலும் எப்படியோ இரண்டையும் பின்னிப் பிணைத்து விட்டீர்கள். உங்கள் எழுத்தாற்றலை அது காட்டுகிறது. கதையின் நீளம், "பானுமதி எழுதியதா?" என யோசிக்க வைத்தது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒருவருக்கே ஏற்பட்டதால் கதையின் கருவை நல்லபடியாக எடுத்துச் சொல்ல முடிந்திருக்கிறது. கொஞ்சமும் தடுமாறாமல் (எனக்கெல்லாம் சொதப்பி இருக்கும்.) கதையைக் கொண்டு போனது உங்கள் திறமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் விமரிசனம்,உங்களின் வாசி்ப்பு அனுபவத்தை சொல்கிறது. மிக்க நன்றி.

      நீக்கு
  16. ஆனால் இந்தக் காலத்துப் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அஞ்சுகிறார்கள் என்பதும் உண்மை தான்! பெரும்பாலானவர்கள் தவிர்க்கவே நினைக்கிறார்கள். அதற்கேற்றாற்போல் விளம்பரங்களும் வந்து விடுகின்றன. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல், குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது என்பதே இப்போதைய சமூக முன்னேற்றம். அதைச் சார்ந்தே பலரும் எழுதுகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குழந்தை பெற்றுக்கொள்ள அஞ்சுகிறார்கள்// - பின்ன... அவங்க பெற்றோரை எப்படிலாம் டார்ச்சர் பண்ணியிருப்பாங்க என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு, நமக்கெதுக்கு ஒரு டார்ச்சர் என்று நினைக்கிறாங்களோ...ஹாஹா

      நீக்கு
  17. கதை மிக நன்றாக இருக்கிறது.
    இப்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் கதையில் இடம்பெற்று இருக்கிறது.
    கதை சொல்லி சென்றவிதம் அருமை.தாய், மகள் உரையாடல் நன்றாக இருக்கிறது.
    கதைக்கு பொருத்தமான அழகான படம் வரைந்து இருக்கிறார் கெளதமன் சார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!