திங்கள், 1 பிப்ரவரி, 2021

"திங்க"க்கிழமை : பைனாப்பிள் சாத்துமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி 

 பைனாப்பிள் சாத்துமது – நெல்லைத்தமிழன்

நான் சில நாட்கள் வெளியூர் சென்று திரும்பியபோது என் மனைவி, உங்களுக்காக இந்த பைனாப்பிள் வாங்கினேன் என்று பெரிய பைனாப்பிளை என் கையில் கொடுத்தாள். பழத்தை நன்கு திருத்துவது என் வேலை. மற்ற மூன்று பேரும், மொத்தமாக மூன்றில் ஒரு பங்கு பைனாப்பிள் சாப்பிட்டாலே அதிகம். பெரும்பாலும் நான் பெரும்பாலான பங்கைச் சாப்பிடுவேன். இந்தத் தடவை, பைனாப்பிள் சாத்துமது பண்ணலாம் என்று தோன்றியது. மனைவி, நாளைக்கு பண்ணிடுங்கோ, அப்பா வீட்டிற்கும் கொடுத்தனுப்பலாம் என்றாள்.  ஏற்கனவே எனக்கு இதன் செய்முறை தெரியும் என்றாலும் எதுக்கும் இணையத்தையும் ஒரு வலம் வந்து ஏதேனும் டெக்னிக் இருக்குன்னா அதையும் உபயோகிக்கலாம் என்று நினைத்தேன்.

 

இணையத்தில் எந்த ஐட்ட த்திற்கும் ஏகப்பட்ட செய்முறை இருக்கும். இருந்தாலும், பெரும்பாலும் தவறுகள் நேராதவாறு ஒரு சிலர்தான் இணையத்தில் செய்முறை காணொளி கொடுக்கறாங்க. அதில் குறிப்பிட த் தகுந்தவர் ரேவதி ஷண்முகம் அவர்கள். (இன்னொருவர் வெங்கடேஷ் பட் அவர்கள்) அவருடைய செய்முறையையும் பார்த்தேன்.  இனி பைனாப்பிள் சாத்துமது எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

 

தேவையானவை

 

பைனாப்பிள் துண்டங்கள் ஒரு கப்.  (இதை அரைக்கப் போகிறோம் என்பதால் துண்டங்கள் பெரிதாக இருந்தால் பரவாயில்லை. நான் பைனாப்பிள் தோலை எடுத்த பிறகும், இன்னும் சிறிது அதிகமாக வெளிப்பகுதியை கட் பண்ணி அதனைச் சேகரித்துக்கொண்டேன். )

இதிலிருந்து சில துண்டங்களை எடுத்து அதனை மிகச் சிறிதாக திருத்தி தனியாக வைத்துக்கொள்ளவும்.

சாத்துமது பொடி 2 ஸ்பூன்

கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை

மீடியம் சைஸ் தக்காளி 3

எலுமிச்சம்பழம் 1

½ கப்பிற்கும் கொஞ்சம் குறைவாக துவரம்பருப்பை கொஞ்சம் அதிகமாக தண்ணீர் வைத்து தளிகைப்பண்ணிக்கொண்ட து.

 

செய்முறை

 

வேகவைத்த துவரம்பருப்பில் உள்ள ஜலத்தைத் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

மிக்ஸில தக்காளி, பெரிய துண்டு பைனாப்பிள், கொஞ்சம் கொத்தமல்லி, சிறிது கருவேப்பிலை,  ஜலத்தை எடுத்த துவரம்பருப்பு (இதிலும் கொஞ்சம் ஜலம் இருக்கும்), சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும். 

 

கடாயில் தனியாக எடுத்துவைத்த பருப்பு ஜலம்,  அரைத்துவைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும். நன்கு ஒரு கொதி வரணும்.

 

அடுப்பில் கொதிக்க வைத்த உடன், இன்னொரு பாத்திரத்தில், சிறிய துண்டங்களாக வைத்திருக்கும் பைனாப்பிள், கொத்தமல்லித் தழை போடவும். அதில் எலுமிச்சையைப் பிழிந்து சாறை விடவும்.  நெய்யில் திருவமாறிய கடுகை அதில் கொட்டவும்.


இப்போ பருப்பு+விழுது நன்கு கொதிக்கும். உடனே அடுப்பை அணைத்துவிட்டு, அதில் 2 ஸ்பூன் ரசப்பொடியைப் போட்டுக் கலக்கி, மூடிவைத்துவிடவும். 2-3 நிமிடங்கள் அந்த ரசப்பொடி சூட்டில் தன் குணத்தோடு அதில் கலந்துவிடும். நினைவிருக்கட்டும்…அடுப்பை அணைத்தபிறகுதான் பொடியைச் சேர்த்திருக்கிறேன்.

 

ஒரு வடிகட்டியை உபயோகித்து இந்த கொதித்த ரசத்தை (ஹா ஹா குழம்பை) பைனாப்பிள், கொத்தமல்லித் தழை, எலுமிச்சை சாறு, திருவமாறிய கடுகு உள்ள பாத்திரத்தில் விடவும்.  வடிகட்டுவதன் காரணம், ரசம் ரொம்பவே தெளிவா இருக்கணும், தக்காளியின் தோலோ இல்லை பைனாப்பிளின் நெருடலோ அகப்படக்கூடாது.

 

சாத்துமதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டுவிட்டு மூடி போட்டு மூடிவிடவும்.

 

மணமான பைனாப்பிள் சாத்துமது ரெடி.










நான் சாத்துமது பொடி அவ்வப்போதுதான் செய்வேன்.  என் பெண்ணுக்கு அம்மா செய்திருக்கும் குழம்புப் பொடியைப் போட்டு சாத்துமது பண்ணினால் ரொம்ப ப் பிடிக்கும். நான் செய்யும் சாத்துமது பொடிக்கு துவரம்பருப்பு, மிளகு, மிளகாய், கொத்தமல்லி விரை இவைகளை வெறும் வாணலியில் சிறிது வறுத்துக்கொண்டு ஆறவைத்து மிக்சியில் கரகரவெனப் பொடித்துக்கொள்வேன்.

 

சாத்துமது அளவு கொஞ்சம் ஜாஸ்தியாகணும்னா, வடிகட்டினபிறகு மீதமிருக்கும் மண்டியில் சிறிது தண்ணீர் விட்டு லைட்டாக சூடு பண்ணி, அதனையும் வடிகட்டிச் சேர்க்கலாம்.

 

பைனாப்பிள் சாத்துமது எப்படி இருந்தது என்று எழுதலையே என நினைக்காதீர்கள். கண்டருளப்பண்ணியபிறகு நான் ஒரு ஸ்பூன் டேஸ்ட் பார்த்தேன். நல்லாவே இருந்த து. ஆனா பாருங்க.. மணமறியும் திறன் எனக்கு சில வருடங்களாகவே குறைந்துவிட்ட து. நன்றாக வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எப்போதும் படங்கள் எடுத்துவிட்டு, எபிக்கு எழுதி அனுப்ப பல வாரங்கள் ஆகிடுது. அதனால் சில சமயம் மத்தவங்க முந்திக்கறாங்க. அதுனால உடனே படங்களை டவுன்லோட் செய்து எபிக்கு தி.பதிவுக்காக எழுதி அனுப்புகிறேன்.

 

வெளியாகும்போது, மத்தவங்க சாப்பிட்டுவிட்டு என்ன சொன்னார்கள் என்று எழுதினால் போச்சு.


அன்புடன்


நெல்லைத்தமிழன்

73 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமே மேலோங்கி தடுப்பூசி வெற்றிகரமாய்ச் செயல்படவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. பைனாப்பிள்/அன்னாசிப்பழ ரசம் கல்யாணங்கள், மற்ற விசேஷங்களில் சாப்பிடுவது தான். அதே போல் பைனாப்பிள் கேசரியும். வீட்டில் பண்ணினால் நான் தான் சாப்பிடணும். இஃகி,இஃகி,இஃகி. ஆனால் பைனாப்பிள் பழச்சாறு இரண்டு பேருக்குமே பிடிக்கும். வெளியே போனால் கூட வாங்கிக் குடிச்சிருக்கோம். இங்கே விட வடமாநிலங்களில் பைனாப்பிள் பழச்சாறு குடிக்கணும். ஒரு முழு பைனாப்பிளை நறுக்கி அதோடு பம்பளிமாஸ் பழத்தையும் போட்டுப் பிழிந்து சாறு எடுத்து மேலாகச் சாட் மசாலாப் பொடி தூவித் தருவாங்க. நாங்க ஐஸ் போட்டுக்க மாட்டோம். வெறும் பழச்சாறு மட்டுமே. அது எந்தப் பழச்சாறாக இருந்தாலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ ! உங்களுக்கு புகழ்ச்சி (ஐஸ்) பிடிக்காதா!

      நீக்கு
    2. வருக கீதா சாம்பசிவம் மேடம்.

      எனக்கும் பைனாப்பிள் மிகவும் பிடிக்கும். இங்க 20-30 ரூபாய் விலைல அப்போ அப்போ இரண்டு வாங்கி வருவேன்.

      மும்பைக்கு 91ல் சென்றிருந்தபோது, பைனாப்பிள் ஜூஸ் ஆவலுடன் சாப்பிட்டால் அந்தோ சாட் மசாலா கலந்திருந்தார்கள். அதுவும் பிறகு பிடித்துப் போனது.

      தாய்வானில் நான் சென்றபோதெல்லாம் அங்கு கிடைக்கும் பைனாப்பிளை வாங்கத் தவறுவதில்லை. ருசி சொல்லி மாளாது.

      நீக்கு
    3. //ஓஹோ ! உங்களுக்கு புகழ்ச்சி (ஐஸ்) பிடிக்காதா!/எந்தப் பழச்சாறுமே ஐஸ் கட்டிகள் சேர்க்காமல் குடிச்சால் தான் அதன் உண்மையான ருசி தெரியும். ஐசைப் போட்டு ருசியை மாத்துவதோடு அல்லாமல் நமக்குனு பண்ணின பழச்சாறை 2,3 பேருக்குக் கொடுக்கவும் கொடுப்பாங்க. ஐஸ் இல்லாமல் தான் கரும்புச்சாறு, நன்னாரி சர்பத், பழச்சாறு வகைகள் எல்லாமும் குடிக்கணும். அதான் உடம்புக்கும் நல்லது.

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் எப்பொழுதும் நலமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலமே எங்கும் வாழ வேண்டிக் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் அனைவருக்கும். எனக்கு இதை எழுதி அனுப்பியதே மறந்து போயிடிச்சு. இன்றைக்கு யார் எழுதியிருப்பாங்க என்று பார்க்க வந்தேன்.

    நேற்றுதான் என்ன என்ன எழுதணும் என்று படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படங்களை ஃபோல்டரில் பிரித்துப் போட்டேன். இனி எழுத ஆரம்பிக்கணும்.

    எனக்கு சரவணபவனில் (90களில்) மதிய உணவில் வரும் பைனாப்பிள் ரசம் பிடிக்கும். அதற்கு அப்புறம் வேறு எங்கும் சாப்பிட்ட நினைவு இல்லை.

    உணவு சமைத்துவிட்டு அதனைச் சாப்பிடுவது என்பது எனக்கு விருப்பமாக இருந்ததில்லை. எனக்கோ ரசம், சாதம், இன்னொன்று தொட்டுக்க என எல்லாமே சுடச்சுட இருக்கணும். நான் பண்ணினால் மத்தவங்க சாப்பிடாமல் எனக்குச் சாப்பிடத் தோணாது. பிறகு மறுபடியும் சுடப்பண்ணிச் சாப்பிடப் பிடிப்பதில்லை.

    இப்போ யோகா, ஜிம் போகணும். பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. பைன் ஆப்பிள் ரசப் பதிவு மிக அருமை. ரசனையுடன் செய்திருக்கிறீர்கள் முரளிமா
    நல்ல விளக்கப் படங்கள்.
    அதீத கவனத்துடன் செய்த வேலை மிளிர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வல்லிம்மா. மிக்க நன்றி. ஆனால் சிலசமயம் நான் செய்வது எனக்குத் திருப்தியாக அமைவதில்லை. வெங்கடேஷ் பட் ஒரு தடவை சொல்லியிருந்தார், ஒவ்வொரு டிஷ்ஷையும் ஆயிரம் தடவை செய்துபார்த்து செய்முறையை சரிசெய்திருக்கிறேன் என்ற.

      நீக்கு
  8. நளபாகச் சக்கரவர்த்தி என்று பெயர் கொடுக்கலாம். இவ்வளவு அக்கறையோடு
    ஒருவர் சமையல் செய்வது வீட்டில் அனைவருக்கும்
    நன்மை.
    சிங்கத்துக்கு இந்த ரசம் பிடிக்கும். சரவணபவன் சென்றால்
    முதலில் இந்த ரசம் வாங்கி வைத்துக் கொள்வார்.

    எனக்கு தான் ஒத்துக் கொள்ளாது.சர்க்கரை இருப்பதால்.

    இவ்வளவு படங்களைப் பார்த்ததும் வியப்பாக இருக்கிறது.
    ரசப்பொடி, இன்னும் மற்றவற்றை நறுவிசாகப்
    படம் எடுத்துச் சொல்லி இருப்பது சிறப்பு. அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ரசனையோடு சொல்லப்பட்ட ரசம்.

      நீக்கு
    2. சரவண பவன் சாப்பாட்டுற்கு (93 வரை). நான் பரம ரசிகன். அவ்வளவு அருமையாக இருக்கும் அவங்களோட மதிய உணவு.. அந்த மாதிரி உணவு இப்போ வேறெங்க கிடைக்குமோ

      நீக்கு
    3. //நளபாகச் சக்கரவர்த்தி // ஹா ஹா ஹா. உண்மையைச் சொல்லணும்னா, எப்போவாவது செய்யும் நான், பத்து ஐட்டங்கள் செய்தால் 6-7 நன்றாக வரும். அதில் ஓரிரண்டு பசங்களுக்குப் பிடித்தாலே அதிகம்.

      நான் முன்பே சொல்லியிருப்பதுபோல, சமையல் வேலை கத்துண்டு செய்யும்போதுதான், மனைவியின் வேலை எவ்வளவு அதிகம் என்ற புரிதல் ஏற்படுகிறது.

      நேற்று நான் மாமனாரின் படத்தின் முன்பு வைப்பதற்காக (ஒவ்வொரு நாளும் ஓரிரு இனிப்புகள்) பாதுஷா செய்தேன். என் பெண், மினி ரசமலாய் செய்தாள். நான் செய்த இனிப்பு, அவளுடையதை கம்பேர் செய்யும்போது ரொம்ப சுமார் என்று சொல்லும்படி ஆகிவிட்டது.

      அதனால, என்னைப்போல குறைகுடம் தளும்புவதைக் கண்டு, ஆள் நிறைகுடம் போலிருக்கு என்று நினைத்துவிடாதீர்கள்.

      நீக்கு
    4. "நளபாகம்" என்பது அடுப்பில் வைக்காமல் செய்யப்படும் உணவு வகைகள் நெல்லையாரே! :))))) சரவணபவன் ஏனோ எங்களை அதிகம் ஈர்த்தது இல்லை தொண்ணூறுகளில் கூட நம்ம ரங்க்ஸ் அவங்க அலுவலகத்தின் பார்ட்டிகளை அண்ணா நகர் சரவணபவனில் வைப்பார்கள்னு போயிட்டு வருவார். சிலாக்கியமாய்ச் சொன்னதில்லை. ஆனால் அந்தச் சாப்பாடு உன்னால் சாப்பிட முடியாது. வீணாகும் என்பார்.

      நீக்கு
    5. மாமனார் காலம் ஆனது தெரியவில்லை. உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தங்கள்.

      நீக்கு
    6. //ஆனால் அந்தச் சாப்பாடு உன்னால் சாப்பிட முடியாது. வீணாகும்// - ஹா ஹா.. ஆனால் சரவண பவன் சாப்பாடு சூப்பர் (90ல்) என்பது என் எண்ணம். இந்த ஊருக்கு வந்த பிறகு ஒரு முறை சாப்பிட்டேன் (உஸ்மான் ரோடில், ஆனால் எதிர் சாரியில்). நன்றாக இல்லை, சுத்தம் குறைவு, ஊழியர்களின் அலட்சியப் போக்கு.

      90ல், 10 3/4க்கே மதியச் சாப்பாடு முதல் ஆளாக சாப்பிட்டுடுவேன்.

      அடுப்புல வைக்காம சமைப்பதா? அட ஆண்டவா...

      நீக்கு
    7. ஆமாம், நளபாகம் என்றால் அடுப்பில்லாமல் சமைப்பதைத் தான் குறிக்கும். நிறையவும் இருக்கின்றனவே அடுப்பில்லாமல் சமைக்கும் உணவு வகைகள்.

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. பைனாப்பிள் சாத்துமது படங்களுடன் மிக அருமை.
    செய்முறை படங்களும் அழகு.

    //நாளைக்கு பண்ணிடுங்கோ, அப்பா வீட்டிற்கும் கொடுத்தனுப்பலாம் என்றாள். //

    மாமா என்ன சொன்னார்கள் என்று அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.... எங்க மாமனார்தான் என்னுடைய கல்லூரியின்போது எனக்கு ஆங்கில ப்ரொஃபசராக இருந்தவர். எங்கள் குடும்பத்திற்கு எனக்குத் திருமணம் ஆவதற்கு முன்பே 30 வருடங்களாக நண்பர். நீங்க இந்தக் கேள்வி கேட்டப்பறம் நான் எப்போது பைனாப்பிள் சாத்துமது செய்தேன் என்று பார்த்தேன். சென்ற 28 டிசம்பர் அன்று பண்ணினேன். அவருக்கும் கொடுத்து அனுப்பினேன். நன்றாக இருக்கிறது என்றார். 24 ஜனவரி அன்று அவர் மறைந்துவிட்டார். எப்போதும் அவர்ட்ட சொல்லுவேன், நீங்க என்னைவிட ஆக்டிவ் ஆக இருக்கீங்க என்று. (அவருக்கு 88 வயது) என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர். சென்ற ஒரு வருடமாக அவரின் அருகிலேயே இருந்ததுதான் எனக்கு கொஞ்சம் ஆறுதல்.

      அவருக்கு அவ்வப்போது இனிப்புகள் செய்து கொடுப்பேன். கடைசியாகச் செய்த இரண்டு இனிப்புகளும் (திருவாதிரைக் களி 11 டிசம்பர்ல, சர்க்கரைப் பொங்கல் 8 ஜனவரி) சரியா வரலை. இரண்டுமே வெல்லம் அதிகமானதால் stiffen ஆகிவிட்டன. சர்க்கரைப் பொங்கல் நான் அனுப்பியது அவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன இரண்டு நாட்கள் கழித்து. அது சரியா வரலை, என் மனைவியை மறுநாள் செய்து அனுப்பச் சொன்னார். அனுப்பினோம்.

      யாருடைய இழப்பும், மற்றவர்கள் மறைந்தவருக்குச் செய்யவேண்டிய எவ்வளவோ பாக்கி இருக்கே என்று நினைக்க வைத்துவிடுகிறது.

      நீக்கு
    2. நீங்கள் அடிக்கடி என் மாமனாருக்கு சாப்பிட செய்து கொண்டு தந்தேன் என்று சொல்லியதிலிருந்து அவர் நன்றாக இன்னமும் நடமாடி கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.அடாடா..! விஷயங்கள் கேள்விப்பட்டவுடன் மனதிற்கு வருத்தமாக உள்ளது. தங்களுக்கு கல்லூரியில் படிப்பித்த ஆசானாகவும் அமைந்த அவர்,வாழ்க்கையில் மாமனாராகவும் அமைந்தது சிறப்புத்தான். மனதுக்கு நெருக்கமானவரின் இழப்பு வருந்ததக்கதுதான்.

      /யாருடைய இழப்பும், மற்றவர்கள் மறைந்தவருக்குச் செய்யவேண்டிய எவ்வளவோ பாக்கி இருக்கே என்று நினைக்க வைத்துவிடுகிறது./

      உண்மை. மனதை கலங்க வைத்த வரிகள். என்ன செய்வது? நடப்பது நடந்து கொண்டேதான் உள்ளது.

      நீக்கு
    3. நன்றாக இருப்பதாக சொன்னது மனதுக்கு ஆறுதல்.

      குடும்ப நண்பர், ஆசிரியர், மாமனார் உறவுகளை தாண்டி மனதுக்கு நெருக்கமானவர் மதிப்பும், மரியாதையும் வைத்து இருப்பவர்களை பிரிவது மனதுக்கு வேதனை தரும் விஷயம்.

      //சென்ற ஒரு வருடமாக அவரின் அருகிலேயே இருந்ததுதான் எனக்கு கொஞ்சம் ஆறுதல்.//

      சில நேரத்தில் அவர்கள் வீட்டுக்குகூட போக முடியாத நிலை இருந்தது ஒரே ஊரிலிருந்தும் என்று சொல்லி கொண்டு இருந்தீர்கள் ஒரு பதிவில்.
      அடிக்கடி பார்த்து வருவது அவர்களுக்கும் மகிழ்ச்சி, நமக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

      உங்கள் மனைவிக்கும், உங்களுக்கும் உங்கள் குடுமபத்தினர் அனைவருக்கும் இறைவன் ஆறுதலை தர வேண்டுகிறேன்.


      //யாருடைய இழப்பும், மற்றவர்கள் மறைந்தவருக்குச் செய்யவேண்டிய எவ்வளவோ பாக்கி இருக்கே என்று நினைக்க வைத்துவிடுகிறது.///

      ஆமாம், உண்மை. செய்ய நினைத்து செய்யாமல் விட்டது நிறைய அதை நினைத்து வருந்துவதும் நடக்கிறது.

      நீக்கு
  11. பதில்கள்
    1. வாங்க திண்டுக்கல் தனபாலன். வாய்ப்பு கிடைக்கும்போது செய்துபாருங்கள்

      நீக்கு
    2. ரசப்பொடிக்கு எப்போவுமே கொத்துமல்லி விதையுடன் துவரம்பருப்பு, மிளகு சேர்த்துப் பொடித்தால் ரசமும் தெளிவாக இருக்கும். சுவையும், மணமும் தூக்கும்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வாங்க வானம்பாடி. செஞ்சு பாருங்க. ரசத்தில் பைனான்பிள் என்ற கான்சப்ட் பிடிக்கணும். அவ்வளவுதான்

      நீக்கு
  13. ரசமான ரசம்இது குடிக்கவா அல்லது சாதத்துடன் சேர்த்துசாப்பிடவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி சார்... பசி இருந்தால் சாத்த்தோட ரசம் சாதமா. இல்லைனா கப்பில் வாங்கி கப்புகப்புன்னு குடிச்சுட வேண்டியதுதான்

      நீக்கு
    2. குடிக்கப் பிடிக்கும் ரசம். மதிய வேளை சூப் மாதிரி.

      நீக்கு
  14. காலையிலேயே பைனாப்பிள் சாத்துமது பார்த்தேன்.அரைத்துக் கரைத்துச் செய்வது எல்லாமே ருசிதான் என்று என் அம்மா சொல்லுவார். ஒரு டம்ளர் கொடுத்தால் குடிக்கலாம் என்று தோன்றியது.எதுவுமே அருமையாகத்தான் எழுதுகிறீர்கள். செய்யவும் செய்கிறீர்கள். நான் இப்போது படிபபதுடன் ஸரி. தவிர சிலவிஷயங்கள் புரிந்தது. .அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காமாட்சி அம்மா... உங்களுக்கெல்லாம் தெரியாத்தையா எழுதப் போகிறேன்.

      நீங்கள் வந்து கருத்திட்டதற்கு நன்றி

      நீக்கு
  15. கேரளத்தில் பைன் ஆப்பிள் புளிசேரி பிரபலம். சாத்தமுது என்றால் இங்கு வெறும் புளித்தண்ணீர் மட்டும் தான். பருப்பு கூட சேர்க்க மாட்டார்கள். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் சார்.. மாம்பழப் புளிசேரி மாதிரி பைனாப்பிள் புளிசேரியா?

      சில சாத்துமது தவிர மற்றவற்றிர்க்கு பருப்பு ஜலம் உண்டு

      நீக்கு
  16. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    அருமையான செய்முறைகள், படங்கள் என பைனாப்பிள் சாத்தமுது மிக அற்புதமாக தயார் செய்து விட்டீர்கள். எல்லாமே விவரணையாக சொன்ன விதங்கள் கவர்கிறது. இந்த மாதிரி பைனாப்பிள் வைத்து ரசம் செய்யலாமென்று எனக்கு தெரியாது. இதை ஜுஸ்சாகதான் எப்பவாவது குடித்துள்ளோம்.எங்கள் வீட்டிலும் அவ்வளவாக இது யாருக்கும் விருப்பமில்லை என்பார்கள். இனி பைனாப்பிள் கிடைக்கும் போது இப்படி செய்து பார்க்கிறேன்.

    எனக்கு சிறுவயதிலெல்லாம் சாத்தமுது என்றால், ரசசாதம் என்றுதான் நினைத்துக் கொள்வேன். பிறகுதான் வெறும் ரசமே சாத்தமுது என நண்பிகள் மூலம் தெரிந்து கொண்டேன். சாறு+அமுது என்பதால் அப்படி நினைத்து விட்டேன். ஆனால், அந்த சாறே அமிழ்தமாக இருப்பதினால் இந்தப் பெயர் வந்தது போலும். தெலுங்கில், ரசத்திற்கு பெயர் சாறுதான்.

    தக்காளி அரைத்து ரசம் செய்தாலே ஒரு ருசிதான். நீங்கள் தயார் செய்திருக்கும் ரசப் பொடியும் பக்குவமாக உள்ளது. இதில் ஜீரகம் சேர்க்க மாட்டீர்களோ? இல்லை, கடுகு தாளிக்கும் போது அதனுடன் தாளித்து விடுவீர்களோ?

    நான் காலையில் முதலில் வந்து இங்கு தலையை காட்டியதுதான்.. அப்போதே பதிவை படித்து விட்டேன். அதன் பின் எதற்கும் நெட் தொடர்பு வர தொடர்ந்து மிகுந்த சிரமபட்டதால், வர இயலவில்லை. இப்போது மகளிடம் கடன் வாங்கி களிக்கிறேன்.அதனால்தான் இத்தனை தாமதம். மன்னிக்கவும். அருமையான பதிவை பொறுமையுடன் செய்து காண்பித்த பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... இன்றுதான் 170 பக்கங்களை முடித்திருக்கிறேன். உங்கள் செய்முறைகளுக்கு விமர்சனமும் (சிறப்பு மின்னூலுக்கானது) எழுதிவிட்டேன்.

      எனக்கும் பைனாப்பிள் ஜூஸ்தான் பிடிக்கும். சரவணபவனில் அந்தக் காலத்தில் சாப்பிட்ட ருசியில் செய்துபார்த்தேன். அவ்ளோதான்.

      சென்னையில் ஜியோவும் இங்கு ஏர்டெல்லும் இதுவரை படுத்தவில்லை. நான் தப்பித்தேன் (பசங்களுக்கு ஆன்லைன் படிப்பு என்பதால் நெட் பிரச்சனை என்றால் உடனே சரிபண்ணித் தரணும்)

      நீக்கு
  17. பைனாப்பிள் ரசம் செய்முறை நன்று. படங்கள் பார்க்க அழகு. இங்கே கிடைக்கும் என்றாலும் செய்து பார்க்க விருப்பம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். நீங்க மற்ற ரசங்கள் செய்வது உண்டா?

      நீக்கு
  18. பைனாப்பிள் ரசம் அருமையா வந்து இருக்கு சார் ..பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு ...

    ஆனால் இதுவரை இதை சாப்பிட்டு பார்த்தது இல்லை ...பார்ப்போம் வாய்ப்பு கிடைக்கும் போது சுவைக்க வேண்டும் ..

    ஆனால் பைனாப்பிள் கேசரி எனக்கு ரொம்ப பிடிக்கும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனுராதா ப்ரேம்குமார். எனக்கு வெறும் கேசரி பிடிப்பதுபோல பைனாப்பிள் கேசரி பிடிப்பதில்லை. பைனாப்பிள் வாங்கும்போது செய்துபாருங்கள்.

      நீக்கு
  19. நிறைய படங்களோடு நல்ல விளக்கமான செய்முறை. பைனாப்பிள் கேசரி அடிக்கடி செய்வேன், ரசம் ஒரு முறைதான் செய்திருக்கிறேன். 
    'சாத்தமது', 'திருவமாறிய கடுகை', 'தளிகை' போன்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். நெல்லையாருக்கு பழக்கத்தில் வந்திருந்தாலும், ஆசிரியக்குழு மாற்றியிருக்கலாம் என்பது என் கருத்து.   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்...

      நீங்க எழுதினதைப் படித்ததும் நான் எபிக்கு முதல் முதலா ரெசிப்பி அனுப்பினபோது ஶ்ரீராம் சொன்னது நினைவுக்கு வந்தது. எதுக்காக பழக்கத்தில் உள்ள சொற்களை மாற்றணும், அதுவும் ஒரு சாரார் உபயோகிக்கும் தமிழ்தானே என நான் கருதியதால் அப்படியே விட்டுவிடுங்கள் என்றேன். என் சிறு வயதில் பெரியப்பா வீட்டில் (வீடு என்பதையே வீடுபேறு என்ற அர்த்தத்தைத் தவிர அந்த வயதில் உபயோகித்ததில்லை. அப்போவே அதன் அர்த்தம் தெரியும்) திருப்பம் என்றுதான் தளிகை பண்ணும் இடத்தைக் குறிப்போம். சமையலறை என்பதை உபயோகித்ததில்லை. இப்போ பசங்களுக்கு கிச்சன் என்பதுதான் வருது. நான் விடாப்பிடியாக தளிகை போன்ற வார்த்தைகளை வீட்டில் உபயோகிக்கறேன். சில சமயம் என் மனைவி என்ன..எல்லாத்துக்கும் தமிழ் வார்த்தை உபயோகிக்கறீங்க என்று அலுத்துப்பா.... வட்டார வழக்கு, சமூக வழக்குச் சொற்கள் உபயோகிக்கணும் என்பது என் கருத்து. கோவில் என்று வந்தால், அது எந்தக் கோவிலானாலும், "பெருமாள் இருக்கும் இடம், கருவறை, தாயார் சன்னிதி" என்றே உபயோகிப்பேன், சாமி இருக்கற இடம், அம்மன், பூசாரி என்ற வார்த்தைகளை வீட்டில் உபயோகிப்பதில்லை, எழுதும்போதும் பெரும்பாலும் அப்படி எழுதுவதில்லை.

      பைனாப்பிள் கேசரி மகளுக்கு ரொம்பப்பிடிக்கும், ஆனால் இனிப்பு குறைவா இருக்கணும். சாத்துமது (சாற்றின் அமுது), திரும்ப விரும்பிக் கேட்பார்கள் எனத் தோன்றவில்லை.

      நீக்கு
    2. எதுக்குத் தவிர்க்கணும்? இன்று வரை தூயத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திப் பேசுபவர்கள் வைணவர்கள் மட்டும் தான். நாமெல்லாம் அடுக்களை என்றே சொல்லுவதில்லை. கிச்சன் என்கிறோம். கூடியவரை நான் தமிழ்ச் சொற்களையே வழக்கத்தில் சொல்லும்படி வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே சமையலறை அல்லது அடுக்களை என்றே சொல்லுவேன். இல்லை எனில் இத்தகைய சொற்கள் நாளடைவில் மறைந்து ஒழிந்து விடும். பெரியாழ்வார் பயன்படுத்திய "குட்டன்" என்னும் அழகான தமிழ்ச் சொல் மலையாளத்துக்குப் போய்விட்டது. அவங்க நம்ம சிறப்பு "ழ"கரத்தையே எங்களுடையது எனச் சொந்தம் கொண்டாடுவாங்க. :( தமிழை பழிப்பதும்/அழிப்பதும் தமிழர்களாகிய நாமே தான்! :((((

      நீக்கு
    3. பா.வெ. மேடம் சொன்னது, மொழியை பலரும் அறியும் வண்ணம் வழக்குச் சொற்களை மட்டும் உபயோகிக்கலாமே என்ற எண்ணத்தில். ஆனால் அதில் எனக்கு ஒப்புதல் இல்லை. நீங்க எழுதின 'அடுக்களை' என்ற மறந்துபோன வார்த்தை என்னில் பல எண்ணங்களைத் தோற்றுவித்தது. 'பாரு..அடுக்களைக்குள்ள பூனைக்குட்டி மாதிரி சுத்திச் சுத்தி வர்றான்' என்று சின்ன வயதில் சொல்லுவாங்க. பெட்டகசாலையை பட்டாசாலைன்னு சொல்லுவாங்க (அங்கதான் நெல்லுக்கான பத்தாயம் இருக்கும்), கொல்லைப்பக்கம் என்று சொல்வாங்க (கொல்லைக்குப் போயிருக்கான் என்பது கலோக்கியல் அர்த்தத்தை அப்போது தந்தது). இருக்கற அடுக்குக் குடியிருப்பில் கொல்லையாவது பட்டாசாலையாவது. ரிஜப்ஷன், ஹால், டைனிங் டேபிள், கிச்சன், சர்வண்ட் மெய்ட் ரூம் என்று தமிழை விட்டுவிட்டு நாம் ஆங்கிலேயர்களைக் காப்பி அடித்துக்கொண்டிருக்கிறோம்.

      'குட்டன்' - அடடா... பெரியாழ்வார் பாசுரத்தில்,

      வானிளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன்
      நந்தகோப னிளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழலூதினபோது என்று வரும்.

      குழந்தை என்பதை குட்டன் என்று குறிப்பிடுவர்.

      மலையாளமொழியின் தாய் தமிழ்தானே... தாய்க்குரியனவற்றை மகள் உரிமை கொள்ளுவதில் பிரச்சனை இல்லை.

      நீக்கு
    4. தவிர்க்கணும்னு சொல்லலே.. புரியறாப்ல மாற்றியிருக்கலாமோ? திருவமாறிய இப்போது தான் கேள்விப்படுகிறேன். தாளித்தல்?

      நீக்கு
    5. ஆமாம் அப்பாதுரை சார்... எங்க வீடுகள்ல, தாளித்தல்னு சொன்னா ஒருமாதிரி பார்ப்பாங்க. சின்ன வயசுல, பெரியப்பா வீட்டில் (இதையே உபயோகித்ததில்லை) தண்ணீர் என்று சொன்னதில்லை. சோறு, சாம்பார் போன்ற பதங்களும் உபயோகித்ததில்லை. ஆனால் இவையெல்லாம் தமிழ் சொற்கள். (அகம், திருவமாறுதல் போன்று. ஜலம் போன்று வடமொழிச் சொல்லும் உபயோகித்ததுண்டு

      நீக்கு
  20. @நெல்லை, அன்னாசிப் பழத்தில் கர்நாடகாவில் "கொஜ்ஜு" பண்ணுவாங்க. நம்ம தமிழ்நாட்டில் சிலர் வீடுகளில் அன்னாசிப் பழ மோர்க்குழம்பு உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாம்பழ மோர்க்குழம்பை ஆஹா ஓஹோ என்று பலர் சொல்லுவர். இன்னும் சாப்பிட்டதில்லை இதுல அன்னாசிப் பழத்துல மோர்க்குழம்பா? அதில் கொஜ்ஜுவா? தாங்காதுடா சாமீ....

      நீக்கு
    2. கீசா மேடம்..நேற்றுத்தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இன்று என்ன கீசா மேடம் இன்னும் ஓரிரு வேரியேஷன்ஸ் எழுதவில்லையே என்று.. என்னாயிற்று?

      நீக்கு
    3. ஒண்ணும் குறிப்பாச் சொல்லும்படி இல்லை. கொஞ்சம் முடியலை! அவ்வளவு தான்! மற்ற வேலைகள் செய்து கொண்டிருந்தேன்.

      நீக்கு
    4. சமீபத்தில் கொஜ்ஜு பற்றி இங்க எழுதியிருந்தாங்க. ஆனால் கொத்சு, கொஜ்ஜு.. போன்றவற்றிர்க்கு நான் அம்பேல்

      நீக்கு
    5. கொஜ்ஜு அநேகமாக நம்ம பிட்லைக்குத் தம்பினு நினைக்கிறேன். புளி சேர்ப்பதும் வறுத்து அரைப்பதும், வெல்லம் சேர்ப்பதும் உண்டு. பைனாப்பிள் மட்டுமில்லாமல் கேழ்வரகுக் களிக்குப் பாகற்காய் கொஜ்ஜு பண்ணுவார்கள். தக்காளி கொஜ்ஜுவும் உண்டு. என்னை விட ரஞ்சனிக்கு இன்னும் நன்றாய்த் தெரிந்திருக்கும். அவங்க வந்து சொல்லட்டும்.

      நீக்கு
  21. இது ஒரு common platform. எங்கள் ப்ளாகை ரெகுலராக இங்கு வந்து கருத்திடும் சிலர் மட்டும் படிப்பதில்லை. இன்னும் பலர் படிக்கிறார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். அப்படி இருக்கும் பொழுது பொதுவான பாஷையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது சபை நாகரீகம்.

    பதிலளிநீக்கு
  22. nice recipe. செய்து பார்க்கிறேன்.
    ரேவதி ஷண்முகம் சேனல் பார்த்து ஒரு தடவை இட்லி செய்தேன். அத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். ரேவதி ஷண்முகம் என்ன செய்வார் பாவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அப்பாதுரை சார்... இட்லி பண்ண அவங்க சேனல் பார்த்தீங்களா?

      உண்மையிலேயே ரேவதி சண்முகம் மிகச் சரியா சொல்லிக்கொடுக்கறாங்க. அடுத்து வெங்கடேஷ் பட். பெரும்பாலும் இவங்க இரண்டு பேரோட ரெசிப்பி சரியா வரும்.

      நீக்கு
    2. ரேவதி சண்முகம் செய்யும் முறை எனக்குப் பிடிக்கிறதில்லை. வெங்கடேஷ் பட் இல்லைனா ராகேஷ் ரகுநாதன். அதிலும் ராகேஷும் அவங்க அம்மாவும் சேர்ந்து செய்யும் சமையல் குறிப்புக்களை வருடக்கணக்காகப் பார்த்து வருகிறேன். அம்மா/பிள்ளை அந்நியோன்னியம் அருமையா இருக்கும். வெங்கடேஷ் பட்டும் இப்போல்லாம் அப்பாவைக் கூட்டிக் கொண்டு வருகிறார். அதும் இயல்பாக இருக்கிறது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!