மெல்லப் பேசும் செல்லக்கிளி..
துரை செல்வராஜூ
" அப்பா சாப்பிட்டாங்களா?.. " - ரகு கேட்டதும் -
" நேத்து ராத்திரி டிபன் சாப்பிட்டாங்களே அது தான்... ரங்கன் வீட்டை விட்டுப் போய்ட்டான்...னு... சாப்பிடவே இல்ல.. " - அட்சயா வருத்தப்பட்டாள்..
சமையலறையில் மகனும் மருமகளும் பேசிக் கொள்வதை கூடத்தில் இருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தார் மூர்த்தி...
" சரி... கூடத்தில எடுத்து வை... அப்பா சாப்பிட வாங்க!.. " - என்றபடி வெளியே வந்தான் ரகு...
தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த மூர்த்தி மகனை அண்ணாந்து நோக்கினார்...
' உயிருக்கு உயிரான ரங்கனைப் பற்றி ஒன்றும் தெரியாத நிலையில்... சாப்பிடுவதும் ஒரு பொருட்டா?!.. ' என்பதாக இருந்தது அவர் பார்வை...
" வந்துடுவான்.. வந்துடுவான்... எங்க போவான்... அவனுக்கு யாரைத் தெரியும்?.." - ரகு ஆறுதலாகப் பேசினான்..
" அவனை விடு... அந்தப் புள்ள ரேவதியும் சாப்பிடாம இருக்கா..." மூர்த்தியின் கண்கள் கலங்கின...
" ரேவதிய கூப்பிடு அட்சயா!... "
" அவ அறையை விட்டு வெளியிலேயே வர மாட்டேங்கிறா.. பால் கொடுத்தேன்.. பிரட் எடுத்து வைச்சேன்.. திரும்பியே பார்க்கலை... மாமா!.. " - என்றாள் அட்சயா..
" வாயில்லாப் பிள்ளை மாதிரி சொல்ல முடியாம அவ தவிக்கிறா...இந்த ரங்கனுக்கு என்ன குறை வெச்சோம்!... ஏன் இப்படி நடந்துக்கிட்டான்?... எதுவா இருந்தாலும் எங்கிட்ட மனசு விட்டுப் பேசுவானே.. அவன் இஷ்டப்படி தானே இந்தப் புள்ளையக் கட்டி வைச்சோம்!.. "
மனதுக்குள் மருகினார் மூர்த்தி..
" உனக்கு ஏதாச்சும் தெரியுமா.. அட்சயா?.. "
மருமகளை வினவினார்...
" நான் என்னத்தைக் கண்டேன்.. மாமா!.."
" சரி.. ஒரு வாய் சாப்பிடுங்க அப்பா!.. "
" இல்லேப்பா!... அந்தப் புள்ளையும் சாப்பிடாம இருக்கா.. அவளோட வேதனை தான் பெரிசு... "- என்ற மூர்த்தி, " அட்சயா கொஞ்சம் காபி போட்டுக் கொடும்மா... அந்தப் புள்ளைக்குக் கொஞ்சம் பால் கொடு... " - என்றார்..
அறைக்குள்ளிருந்து இன்னது என்று இனம் காண முடியாதபடிக்கு ஒரு ஒலி நெஞ்சைத் துளைத்தது...
" சரி.. சரி.. வந்துடுவான்.. வந்துடுவான்.. " - மூர்த்தி சொல்லிக்கொண்டு இருந்த வேளையில் வாசலில் அழைப்பு...
" நீங்க இருங்க மாமா!.. " - என்றபடி எழுந்து சென்றாள் அட்சயா..
" இதோ.. இந்த வீடுதான்... " - பக்கத்து வீட்டுப் பொடியன் பாலுவின் குரல்..
" வாத்தியார் ஐயா இருக்காங்களா அம்மா!... " - புதிதாய் யாரோ வந்திருக்கிறார்கள்...
மூர்த்தி எழுந்து நடப்பதற்குள் - " மாமா! உங்களத் தான் தேடி வந்திருக்கிறார்கள்... " - என்றபடி கூடத்துக்கு வந்தாள் அட்சயா..
" யாருப்பா நீ!... " வாசலுக்கு கேள்வியுடன் வந்தார் மூர்த்தி...
" நான் அந்தப் புளிய மரத்தாண்ட குடுச போட்டு பித்தாளை பாத்திரத்துக்கு ஈயம் பூசிக்கிட்டு இருக்கணுங்க... "
" சரி.. அதுக்கு ஏதும் பிரச்னையா?.. "
" அதுக்கு ஒரு பிரச்சினையும் இல்லீங்க... நேத்திக்கு சாயங்காலம் குடிசயாண்ட வந்த ஒங்க புள்ள... "
" எம் புள்ளயா?... எம் புள்ள..ன்னு உனக்கு எப்படித் தெரியும்?.. "
" இந்தத் தம்பிதாங்க சொல்லிச்சு... " ப.வீ.பொ.பாலுவைக் கை காட்டினான்..
மூர்த்தியின் முகத்தில் மலர்ச்சி... இருந்தாலும் -
" இதோ இவனா!... " - என்று பரபரத்தார்..
" இவுரு இல்லீங்கோ... இன்னொரு புள்ள!... "
" ரங்கனா?... "
" எனக்குப் பேரெல்லாம் தெரியாதுங்கோ!.. "
" சரி.. அவனுக்கு என்ன!.. அவன் எங்கே இப்போ?.. "
" அதத் தானுங்க நானுங்கேக்கறேன்.. "
" அவனப் பத்தி நீ ஏன் கேக்கணும்?.. அவனத் தான் நேத்து சாயங்காலத்துல இருந்து காணோம்... ன்னு தேடிக்கிட்டு இருக்கோமே!... "
" உங்க புள்ளையாண்டானப் பத்தி நான் சொல்றேன்..ங்க!.. "
ஒன்றும் புரியாமல் நின்றார் மூர்த்தி..
" ஏழை பாழைங்க நாங்க... கிளியாட்டம் பொண்ண பொத்தி பொத்தி வளத்து இருக்குறோம்.. மூனு நாளா குடிசப் பக்கம் சுத்திக்கிட்டு இருந்த உங்க பையன் நேத்து எம் பொண்ண மயக்கி அழைச்சிக்கிட்டுப் போய்ட்டாருங்க..."
விம்மலுடன் வெளிப்பட்டன வார்த்தைகள்...
மூர்த்திக்கு அதிர்ச்சி..
" ரங்கனா!?... பூ மாதிரி இங்க ஒருத்தி இருக்கிறா!... அவள் விட்டுட்டு.. "
" ஊரு ஒலகம் தெரியாம வளந்த பொண்ணுங்க... "
........
" தோள்..லயே வளத்தேன்... ஒங்க பையனோட ஆச வார்த்தைக்கு மயங்குவா... ன்னு நெனைக்கலீங்க... "
" இப்ப தான் அவன் எங்கே.. ன்னு தெரியலையே... வரட்டும்... தோலை உரிக்கிறேன்... "
- மூர்த்திக்கு கோபம்...
" ரங்கு தான் வந்திருக்கானே... " - ப.வீ.பொ. பாலு அடியெடுத்துக் கொடுத்தான்...
" இங்கே வந்துருக்கானா?.. எங்கேடா!.."
- அதிர்ந்தார் மூர்த்தி..
" கேணிப் பக்கம் வந்துருக்கான்!.. " - என்றான் ப.வீ.பொ. பாலு..
" நல்லதா காரியம் பண்ணியிருந்தா வாசப் பக்கமா வந்திருக்கலாம்... இது தான் அடாவடி... அக்குருமம் ஆச்சே!.. கேணிப் பக்கமாத்தான் வரணும்... "
" யோவ்... சும்மா இருய்யா கொஞ்ச நேரம்!.. " - என்ற மூர்த்தி கொல்லைப் பக்கம் விரைந்தார்...
எல்லாரும் பின்னாலேயே ஓடினார்கள்..
" டேய்... ரங்கு!.. எம் மரியாதையக் கெடுத்துட்டீயே... உன்னை என்ன பண்றேன் பாரு.. டேய்.. ரகு.. அந்தக் கம்பியக் காய வெச்சு எடுடா!... "
இத்தனை ஆர்ப்பாட்டத்துக்கும் காரணமான ரங்கு கிணற்றுக் கட்டையில் அலட்சியமாக அமர்ந்திருந்தான்...
' புருசனை ஒன்னும் சொல்ல வேணாம் ... ' - என்கிற மாதிரி பின்னாலிருந்து ரேவதியின் குரல் பரிதாபமாக ஒலித்தது...
" கேட்டியாடா... ஒன்னைக் காணோம்.. ன்னு மூனு வேளையா அவ பட்டினி!.. நீ என்னடா.. ன்னா?.. "
மூர்த்தியின் கோபத்தைக் கண்டு கொஞ்சமும் அசராத ரங்கு தலையை மட்டும் கவிழ்த்துக் கொண்டான் எதுவுமே நடக்காத மாதிரி...
" இந்தா யா! ... உம் மகளை அழைச்சிக் கிட்டு வந்துட்டதா சொன்னியே... அவன் தனியாத் தானே ஒக்காந்திருக்கான்... எங்கே யா உம் பொண்ணு?.. "
" உங்க புள்ள எங்கேயாவது ஒளிச்சு வெச்சிருப்பாரு!.. "
" அவங்க ரெண்டு பேரையும் நான் ஒன்னா பார்த்தேனே!.. " - ப.வீ.பொ.பாலு...
" எங்கேடா.. அந்தப் புள்ள?.. கூப்பிடு அவள... உன்னைய நம்பி வந்த அந்த மூஞ்சியக் கொஞ்சம் பார்ப்போம்!..." ஆத்திரத்தில் இரைந்தார் மூர்த்தி...
" மூஞ்சி..ன்னு சொல்லாதீங்க... தங்கக் கிளியாட்டம் இருப்பா எம் புள்ள!.. "
" நீ ஏன்..யா பல்லியாட்டம் குறுக்க குறுக்க சத்தம் கொடுக்கறே!.. "
" கூப்புடுடா... அந்தப் புள்ளய!.. "
" செல்லம்!.. " - என்றான் ரங்கு..
கிணற்றோரமாக இருந்த செம்பருத்திச் செடியின் பின்னால் இருந்து முன்னால் வந்தாள் அவள்..
அவளைக் கண்டதும் ' திடுக்..' என்றிருந்தது அனைவருக்கும்...
" இந்த மாதிரி பண்ணிட்டியே லெச்சுமி!. " - வளர்த்தவனின் கண்களில் கண்ணீர்..
' ஓ.. இந்தப்புள்ளயோட பேரு லெச்சுமியா!.. '
" நடந்தது நடந்து போச்சு.. இப்ப ஏன் யா அழுவுறே!.. "
" மாமா.. அவங்க ரெண்டு பேரையும் உள்ளே கூப்புடுங்க.. " - என்றாள் அட்சயா..
" இதோ.. தாய்க்குலத்தோட ஆதரவு கிடைச்சிடுச்சில்லே!.. யப்பா.. ரங்கு... அந்தப் புள்ளயக் கூட்டிக்கிட்டு உள்ளே போப்பா!.. "
ரங்கு முன் நடக்க - பின்னே அவனைத் தொடந்தவள் - நிலைப்படியைக் கடந்து வீட்டின் உள்ளே நுழைகையில் எதிரே ரேவதி...
" கீகீ!.. " - என்றாள்..
" கிகி... கிகிக்.. கிக்கி!.. " - என்றான் ரங்கன்..
கனிந்த பார்வையுடன் அருகில் வந்த ரேவதி - மருண்டிருந்த லெச்சுமியை ஆறுதல் படுத்தினாள்..
சிவந்த அலகை உரசியபடி தலையைக் கோதி விட்டாள்..
" கிரீட்.. கிரீட்!.. "
ரங்கனுக்கு " அப்பாடா!.. " - என்றிருந்தது..
ரேவதி முன் நடக்க ஒரு காலை ஊன்றியபடி பின் நடந்தாள் லெச்சுமி..
" எப்படி யா இந்த மாதிரி ஆச்சு?.. " - வினவினார் மூர்த்தி..
" கொழந்தையா இருந்தப்போ சைக்கிள்.. ல அடிபட்டுட்டா!.. எப்படியோ லெச்சுமி நல்லா இருந்தா சரிங்க... "
" அந்தக் கவலையே உனக்கு வேணாம்.. ராணி மாதிரி பார்த்துக்குவோம்.. நல்ல காரியம் தான் பண்ணி இருக்கான் ரங்கு.. சரி.. இப்ப நாம சம்பந்தி ஆயிட்டோம்.. வந்து ஒரு வாய் சாப்பிடு.. அட்சயா இலையப் போடும்மா!.. " - மூர்த்திக்கு சந்தோஷம் ரங்கு திரும்பி வந்ததில்...
" வூட்ல பொஞ்சாதியும் பையனும் இருக்காங்க ஐயா!.. "
" அதனால என்ன?.. இப்போ வந்ததுக்கு நீ சாப்பிடு... நாளைக்கு நம்ம வீட்டுல கல்யாண விருந்து.. அவங்களையும் அழைச்சிக்கிட்டு சந்தோஷமா வா!... "
அவரவர் சந்தோஷம் அவரவருக்கு என்று - கூடத்தில் இருந்த கூட்டிற்குள் செல்லக் கிளிகள் மூன்றும் கொஞ்சிக் கொண்டிருந்தன...
ஃஃஃ
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநல்ல செய்திகளே நம்மை வந்தடைய
இறைவன் துணை நிற்கட்டும்.
வாங்க வல்லிம்மா வணக்கம். தீய செய்திகளே உலகில் இல்லாதிருக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.
நீக்குதத்தைகள் பற்றிய செல்லக் கதைக்கு வாழ்த்துக்கள். அன்பு துரை செல்வராஜு
பதிலளிநீக்குஅழகாகக் கதை கொடுத்துவிட்டார்.
கிளிகளும் முருகன் போல இரண்டு சக்திகளைக்
கொள்ளுமோ.
பாலும் ரொட்டியும் கொடுத்தேன் என்றதும் பூனைச் செல்லங்களோ
என்று நினைத்தேன். எதிர்பாராத திருப்பமாக
கிள்ளைகளானது.
அழகான கதை.
கிள்ளைகளும் களித்திருக்கட்டும்...
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் பல்கிப் பெருகவும் பிரார்த்தனைகள். தொடரும் தொற்று முற்றிலும் மறையவும் ஆண்டவன் அருள் புரியட்டும்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஇறையருளும் தற்காப்பும் ந்ம்மைக் காக்கட்டும்..
நீக்குஹாஹாஹா, வித்தியாசமான கதை துரையிடம் இருந்து. ஆனால் தொடக்கத்திலேயே செல்லங்கள்னு புரிஞ்சது. அதுவும் பாலும் ப்ரெடும் என்று அக்ஷயா சொன்னதும் இன்னமும் நன்றாகப் புரிந்தது. ஆனால் எதிர்பார்த்தது வாலைக்குழைத்திடும் நம்ம நண்பரை! கிளிகள் என்பது கடைசியில் தான் புரிந்தது. நல்லா வாய்விட்டுச் சிரிக்கவும் சிரித்தேன். நல்லதொரு கருவைக் கொண்ட கதைக்கு நன்றி துரை. வாயில்லா ஜீவன்களிடமும் பாசம்/நேசம்/காதல்/அன்பு எல்லாம் உண்டு என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கிளிகளை எடுத்துக் கொண்டதுக்கும் நன்றி. நாங்களும் ராஜஸ்தானில் ஓர் கிளிக்குஞ்சை வளர்க்க முயன்றோம். முடியலை! :)))))
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...
நீக்குகாலை வ்ணக்கம் எல்லாருக்கும்..
பதிலளிநீக்குதுரை அண்ணா கதை ரொம்ப நல்லாருக்கு வாசித்து வரும் போதே புரிந்துவிட்டது!!! இது செல்லங்கள்தான் என்று....முதலில் ரங்கு நாலுகால் என்று நினைத்தேன். அப்புறம் இல்லை இது நாலுகால் இல்லை என்பது விளங்கிட கொஞ்சம் புரியத் தொடங்க அதுவும் கிக்கி என்றதும் கிளி என்றும்!!!! கிளிகளை வைத்து கிளிப்பேச்சு பேசிட்டீங்க துரை அண்ணா!!!!
கீதா
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... சஸ்பென்ஸைக் காப்பாற்றத் தெரியலை எனக்கு...
நீக்குநன்றி.. மிக்க நன்றி..
கடைசில சம்பந்தி சாப்பாடு என்றதும் சிரிப்புதான்....செல்லங்கள் இருந்தால் வீட்டில் குதூகலம்தான். ரசித்தேன் துரை அண்ணா
பதிலளிநீக்குவாழ்த்துகள்! பாராட்டுகள்!
கீதா
வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
இன்று எனது ஆக்கத்தினை பதிவு செய்து அன்புடன் ஊக்கம் அளித்த ஸ்ரீராம் அவர்களுக்கும் KGG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
பதிலளிநீக்குஇன்று கதைக் களம் காண்பதற்கு வருகையளித்துள்ள அனைவருக்கும் அன்பின் நல்வரவு...
பதிலளிநீக்குதலைப்பில் மட்டும் குழப்பி விட்டதாக நினைக்கின்றேன்... ஆனாலும் முன்னோடிகள் அனைவரும் கதையை ரசித்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி.. நன்றி...
பதிலளிநீக்குமுன்பு போல அடிக்கடி இங்கே வர முடிய வில்லை.. காரண காரியங்கள் சொல்லத் தெரிய வில்லை... நேற்று கூட அன்பின் கீதா ரங்கன் அவர்களது கிளிக் கூட்டான் (!) படித்து விட்டு ஒன்றும் சொல்லாமல் போய் விட்டேன்... மன்னிக்கவும்...
பதிலளிநீக்குஅன்பின் கீதா ரங்கன் அவர்களது கிளிக் கூட்டான் (!)//
நீக்குகிளிக்கூட்டான்!! ஹா ஹா ஹா ஹா
அண்ணா எதற்கு மன்னிப்பு தயவு செய்து அதெல்லாம் வேண்டாம். இதில் என்ன இருக்கிறது துரை அண்ணா. உங்கள் நலனை பார்த்துக் கொள்ளுங்கள். அது முக்கியம்.
நன்றி அண்ணா
கீதா
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குதுரை செல்வராஜ் அவர்களிடமிருந்து வித்தியாசமான ஒரு கதை. சஸ்பென்ஸை கடைசி வரை கட்டி காத்த திறமைக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஅருமையான அழகான கதை...
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவித்தியாசமான கதை
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஐயா..
அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! தொற்று நீங்கி, அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் .
பதிலளிநீக்குஅருமையான கதை! நிறைய வீடுகளில் பைரவ நண்பர்களுக்கு பெயர் வைத்து, தங்கள் பிள்ளைகள் போல வளர்ப்பதை பார்த்ததுண்டு. "எதுவா இருந்தாலும் எங்கிட்ட மனசு விட்டு பேசுவான்" என சொன்னதில் கிளியென்று யூகித்தேன். நல்லதொரு கதைக்கு நன்றி!
அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. மிக்க நன்றி..
நீக்குகிளிப்பேச்சு அழகுநடை...
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான கதை.
பதிலளிநீக்குமணம் பரப்புவதற்காக ஊதுபத்தி தன்னைத் தானே கருக்கிக் கொள்ள வேண்டியிருக்கு.
செல்லக்கிளிகள் என்ற பெயரில் வீட்டுக்கிளிகளாய் மற்றவர் சந்தோஷத்திற்காக தம் சுதந்திரம் இழந்து கூண்டுகளில் அடைபடவும் வேண்டிதிருக்கிறது.
கடைசி பாரா தான் கதையின் ஜீவ நாடி.
சுய சுதந்திரம் இழம்து போன பெண்கள், ஆண்கள் அத்தனை பேரின் கதையும் இதுவே தான்!..
வாழ்த்துக்கள், தம்பி.
அன்பின் அண்ணா.. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. மிக்க நன்றி..
நீக்குமன்னித்து அன்பு செலுத்தும் கிளி மனிதனைவிட உயர்ந்து விட்டது. அன்பு எல்லோரிடத்திலும் சொல்லிய விதம் பிரமாதம். கிக்கீ.கிக்கீ. அன்புடன்
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..
நீக்குகிளிகளின் கதை நன்று. ரசித்தேன்.
பதிலளிநீக்குகதாசிரியருக்கும் வலைப்பூ ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..
நீக்குஅருமையாக இருக்கிறது கதை.
பதிலளிநீக்குசெல்லக்கிளிகள் நலமாக, வளமாக இருகட்டும்.
வித்தியாசமான கதை.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. வாழ்க வையகம்..
நீக்கு