வீழ்வேன் என்று நினைத்தாயோ
கீதா ரெங்கன்
அறிவுக்சுடரைச் சந்தித்து 3 மாதங்கள் ஆகியிருந்தது. அறிவுச்சுடர்!
அப்படித்தான் அவரை நான் சொல்வது வழக்கம். அறிமுகம்
ஆனதிலிருந்து அவரை அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருந்தேன். சந்திக்க நினைத்து பல
முறை அழைத்தும் பதிலில்லை. அடுத்த வாரத்தில் வெளியாக வேண்டிய கட்டுரையும் வந்து சேரவில்லை.
என்ன ஆயிற்று இந்தச் சுடருக்கு? நேரில் போய் பார்த்துவிடலாமோ?
நினைத்தேன் வந்தார் நூறு வயது. அவரது அழைப்பு. ‘சுடர் பலகாலம் ஒளிர வேண்டும்’
மகிழ்ச்சியுடன் “ஹலோ சார் ஆயுசு நூ…..” சற்று குழம்பினேன். பேசியது அவர் மனைவி.
“நிறைய உங்க மிஸ்ட் கால்ஸ். ஏதாவது மிக முக்கியமா?”
சுடருக்கு என்ன ஆயிற்று? அடிவயிற்றுக் கலக்கம் அனுமானிக்க
முடியாத எதையோ சொல்லியது. சம்திங்க் ராங்க் என்று.
“சார்…எப்படி…..” எப்படிக் கேட்பது என்று குழம்பி இழுத்தேன்.
“மௌனம்”
அந்த மௌனம் அடிவயிற்றில் வேகமாகப் பந்தை உருட்டி விளையாடியது.
“சார் ரொம்ப பிஸினா பரவால்ல மேடம். அப்புறம் வரேன்.”
“பெர்சனல் விசிட்டா? சானல், மேகசின் மேட்டரா?”
“பெர்சனல்தான். பார்த்து நாளாச்சுன்னு…”
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு வரச் சொன்னார். அந்தத்
தயக்கம் ஏற்படுத்திய குழப்பத்துடனே சென்றேன்.
“வாங்க மதியழகன். எப்படி இருக்கீங்க?” இயல்பான வரவேற்பு.
நான் அடுத்துக் கேட்கும் முன், “அவர் ரூம்ல இருக்கார்”
ரூமைக் காட்டி என்னை உள்ளே போகச் சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டார். குழந்தைகள்
ஆன்லைன் வகுப்பில் இருந்தார்கள்.
ஈசிசேர் போன்ற படுக்கையில் சாய்ந்து படுத்திருந்தவரைக்
கண்டதும் அதிர்ச்சி. மூன்று மாதங்களுக்கு முன் சந்தித்த மனிதரா இப்படி? சவரம் செய்யப்படாத
முகம், வளர்ந்த தலைமுடி. ஏதோ ஒருவித அயர்ச்சியும் சோர்வும் மிகுந்த முகமாக….. அவரை
இதற்கு முன் அப்படிப் பார்த்ததில்லை. சற்றும் எதிர்பார்க்கவில்லை. அறிவுச்சுடர் சற்று
மங்கலாக இருக்கிறதோ?! விவரிக்க முடியாத துக்கம் தொண்டையை அடைத்தது.
“சார், நான் மதி வந்திருக்கேன்.”
ஜன்னலின் வெளியே எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்
சடக்கென்று திரும்பினார். பயந்துவிட்டாரோ? மெதுவாக நேராக உட்கார முயற்சி செய்தார்.
உதவினேன். புன்சிரிப்பில்லை. கண்களைச் சற்றுச் சுருக்கிப் பார்த்ததிலிருந்து அவருக்கு
என்னை அடையாளம் தெரியவில்லையோ? என்னாயிற்று இந்த 3 மாதங்களில்?
“மதி. “அறிவுச்சுடர்” பத்திரிகை, சானல்”
என்னையே வெறித்துப் பார்த்தார். எங்கேயோ பார்த்தார். விழிகள்
அங்குமிங்கும் அலைந்தன. “வேயர் இஸ் மை ப்ரெய்ன்? என் ஐடியாவைத் திருடிட்டான் ப்ளடி
ராஸ்கல்.. வேவு பாக்க வந்தியா? யு…”.”மூச்சிரைத்தது. உடம்பு பதறியது. கைகள் நடுங்கின.
அதிர்ந்தேன். மேடத்தைக் கூப்பிட வேண்டுமோ? அறிவுச் செருக்குடன்
இருந்த மனிதரா இப்படிப் பேசுகிறார்? ஆளுமை நிறைந்த கணீர் குரல் எங்கு போயிற்று? அவரது
இந்த நிலையைப் பார்த்து என்னால் என் உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை. மனம் விக்கித்துப்
போனது. அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு அவர் அருகில் அமர்ந்தேன். கொஞ்சம் அமைதியானது
போல இருந்தது. என் மனம் நழுவியது.
8 மாதங்களுக்கு முன்….
அரங்கம்
கைதட்டலில் அதிர்ந்தது. அவரது ஆய்வு பற்றிய பேச்சில் நான் ஸ்பெல்பௌன்ட்! இளம் மூளை!
40 இருக்கலாம். மனம் கணக்கிட்டது.
“என்ன
பேசினார்? ”புரிஞ்சுச்சா?”.
”அறிவுஜீவி”.
“ஸ்பேஸ்
டெலிகம்யூனிக்கேஷன், 5ஜி, எஸ்டிஆர் னு அப்புறம் ஆகாசதத்துவம்னாரு.”
“காஸ்மிக்
சர்க்கிள், மாஸ் டைம் ஸ்பேஸ், எனர்ஜி சிவ டான்ஸ்னாரு”
“ஸப்தஸ்வரம்
ஃப்ரீக்வென்ஸின்னு கம்பாரிஸன் வேற”
நேனோஎனர்ஜியாம்.
எல்லாத்தையும் கூட்டாக்கி………
சுத்த
ஹம்பக்….. ப்ளாபரிங்க்”…
“எக்சென்ட்ரிக்?”
“இருக்கலாம்”
“ஆனா
பீயர் (Peer) ரெவ்யூ நல்ல ரெஸ்பான்ஸாமே”
“சிதம்பர
ரகசியம்னு ஃபிலாசஃபியும் சேர்த்துக்கிட்டாரு.”
“அரசியல்வாதி
சிதம்பரம் ரகசியம் புதுசா என்னருக்கு?” சிரித்தார்கள். பார்ட்டி ஹாலுக்கு விரைந்தார்கள்.
அவரது
ஆய்விலிருந்து இன்னும் பலவித ஆராய்ச்சிகளுக்கான ஸ்கோப் இருப்பதை கம்பேர் செய்து இணைத்துப்
பேசியது இவர்களுக்குச் சரியாகப் புரியவில்லை
அல்லது ப்ரொஃபெஷனல் ஜெலஸி என்பது மட்டும் புரிந்தது.
எதைப்
பற்றியும் கவலைப்படாத தரணி மேடையிலிருந்து இறங்கினார். நடையில் அறிவின் மிடுக்கு. கண்களில்
அறிவுச் செருக்கு.
பெயருக்கு
ஏற்றாற் போல் இந்தியாவின் புகழை தரணியில் அறிய வைப்பாரோ மூளை எசகுபிசகாகக் கணக்கு போட்டது.
கூட்டத்திற்குச்
சற்றும் பொருந்தாத ஒரு பெண் மந்தகாசப் புன்னகையுடன் அவரை நெருங்கினாள்.
“ஹேய்
கேர்ஃபுல் செவிடு பிஞ்சுரப் போகுது. அவரு ஒரு தினுசு” அவள் நண்பன் அவள் காதிற்குச்
சொல்வதாக நினைத்தது என் காதிலும் விழுந்தது.
“நான்சென்ஸ்.
இடியாட்டிக் ப்ராக்டீஸ்” ஆட்டோக்ராஃப் வாங்க வந்தவர்களைப் புறக்கணித்துக் கடந்தார்
தரணி.
“என்ன
பாக்குற அவரு அப்படித்தான்.” என்றபடியே வெராண்டாவில் நின்றிருந்த கதிர் சிகரெட்டைக்
கையில் எடுத்தான். நான் எனது வீடியோ சாதனங்களைப் பையில் பத்திரப்படுத்தினேன்.
“அவுட்”
என்ற குரலைக் கேட்டு நாங்கள் இருவருமே அதிர்ந்தோம். தரணியேதான். கதிருக்குப் புரிந்தது.
சிகரெட் பாக்கெட்டிற்குள் ஒளிந்தது.
“இந்தாளை
நீ இன்டெர்வ்யூ எடுத்து சானல்ல போடு. ஹாட்வைரல். பிச்சிக்கும் வியூஸ்.”
“அவசியமில்லை.
நான் வேற விதமா யோகிக்கிறேன்..”
“வேஸ்ட்
டா நீ. காசு பார்க்கத் தெரியலை.”
“உனக்கு
அவரைத் தெரியுமா?”
“தூரக்க
இருந்து தெரியும். பக்கத்துல போனதில்லை. கொஞ்சம் ஒரு தினுசான நட் கழண்டஆளு”
வெளியில்
வந்தோம். கதிர் சிகரெட்டை வெளியில் எடுத்துப் பற்ற வைத்தான். “இங்கியே சாப்பாட்டையும்
முடிச்சுரலாம்” என்றான். எனக்கும் வயிறு கெஞ்சியது.
கிளிங்க்
சத்தங்களுக்கிடையில், நயனும், சிவனும் கல்யாணம் செய்துப்பாங்களா? மேடிக்கு என்ன வயசிருக்கும்?
முடி, தாடிக்கு டை அடிக்கவில்லை என்று கபாபைக் கடித்துக் கொண்டே கவலைப்பட்டார்கள்.
“மம்மூட்டி
கூட தாடி முடி எல்லாம் வளத்து சாமியார் ரேஞ்சுக்கு இருக்காப்ல. மனுஷன் வயசு 69 ஆம்
நம்பவே முடியலை”
தரணி
இங்கு ஏன் வரவில்லை என்பது புரிந்தது. “ஒரு மாதிரி ஆளு”! எனக்குச் சிரிப்பு வந்தது.
கொஞ்சம்
வித்தியாசமாகச் சிந்தித்தால் “ஒரு மாதிரி” என்பது கதிர் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தின்
கணிப்பு. இப்படியானவர்களுக்குச் சமூகத்தில் அடையாளம் கிடைப்பது கடினம்தான். அறிவுஜீவிகள்
கூட முகமூடி அணிந்து கொண்டு உலாவர வேண்டிய காலம்.
எந்தக்
காலத்தில் புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளை இந்த உலகம் ஏற்று அங்கீகரித்திருக்கிறது?
காலம் சென்ற பிறகு…பாருடா இதைத்தான் அன்னிக்கே அவரு சொன்னாரு என்று சொல்லும். ஏதேனும்
போக்கற்ற ஒரு பரிசை அவர் வயதாகி நினைவிழந்த நிலையில் கொடுக்கும்…பொன்னாடை போத்தும்…இல்லையேல்
போஸ்த்துமஸ் அவார்ட் கொடுக்கும்…..
இப்படித்தான்
இன்று அறிவியல் உலகில் கொண்டாடப்படும் விஞ்ஞானிகளின் அன்றைய நிலை. என்ன உலகமோ?
“என்ன
சிரிப்பு?” என்றபடியே கதிர் ஏதோ ஒரு திரவத்தை எடுத்து வந்தான். அவனுக்கு அது இல்லை
என்றால் அதற்குப் பெயர் பார்ட்டியே இல்லை. கோயில் சாப்பாடு என்பான்.
“அவர்
நம்பர் உங்கிட்ட இருக்கா?”
“வாங்கித்தரேன்.
லேசுல பிடி கொடுக்கமாட்டாரு. அத்தனை ஈசியில்ல. நீ ஒண்ணு கேட்டா அவரு இடக்குமடக்கா பதில்
சொல்லுவாரு. ஆனா நீ சமாளிச்சிருவ.” நக்கல்.
நான்
சிரித்துக் கொண்டேன்.
“வாட்
டவுட்?” சிரித்தான் கதிர். ‘நீயும் அப்படித்தான்’ என்பது அந்த சிரிப்பின் அர்த்தம்.
‘இவர்
மற்றவர்களைப் போல் இல்லை. இவரது அறிவை சமுதாயத்திற்குப் பயன்படுத்திக்கணும்’ என் மனம்
என்னென்னவோ கணக்குப் போட்டது. நடக்குமா?.
கூகுள்
அவர் பெயரின் பின்னே பல பட்டங்களைக் காட்டியது. டிஎஸ்ஸி (டாக்டர் ஆஃப் சயின்ஸ்) என்றது.
ஸ்பேஸ், கம்யூனிக்கேஷன், விஎல்எஸ்ஸை, எம்பெட்டெட் ஆராய்ச்சி…. காஸ்மிக் எனர்ஜி என்று
ஆராய்ச்சித் தகவல்களைப் பரப்பியது. புரிந்தது சில. புரியாதது பல. மீடியா வெளிச்சம்
படாத சுடர். சந்திக்க முடிவு செய்தேன். அழைத்தேன். ராபர்ட் ப்ரூஸ் ஆனேன். 18 வது முயற்சி
முதல் சந்திப்பானது.
வீடு
மிக மிக சிம்பிளாக இருந்தது. நிறைய புத்தகங்கள். டிவி இல்லாத வீடு. பொதுவான சமூகத்திலிருந்து
வித்தியாசம்தான்.
“மின்னிதழ்,
சானல் பெயரா? அறிவுச்சுடர்?” கண்ணை மூடி நெற்றியைத் தேய்த்துக் கொண்டார். கை நீட்டி
விரல் சுட்டிப் பேசினார்.
“அறிவுச்சுடர்னா
என்னன்னு தெரியுமா? இதோ இங்க இங்க” என்று தலையைச் சுட்டினார். தேவையில்லாமல் ரகுவரன்
நினைவுக்கு வந்தார்.
ஒரு தீபத்திலிருந்து
இன்னொரு தீபத்தை ஏத்துறது போல ஒரு செயின் ரியாக்ஷன், சமூகத்துக்கு அறிவு வெளிச்சம்
கொடுக்கறது. ஆனா மீடியா என்ன செய்றீங்க? கேவலமான விஷயங்களை ஊதி ஊதி சென்சேஷனல்! காட்டுத்
தீயை பத்த வைக்கறீங்க! இயற்கையான வைரஸை விட வைரல்னு நீங்க பரப்பர வைரஸ்தான் ரொம்ப டேஞ்சரஸ்.
ஸாரி. ஐ கனாட் வேஸ்ட் மை டைம்.” தாளித்தார். பிரகாஷ்ராஜ் நினைவுக்கு வந்தார்.
நியாயமாகப்பட்டது.
எந்த நடிகர் நடிகை அரசியல்வாதி பற்றியும் கிசுகிசுக்காத, வம்பு பேசாத, பரபரப்பிற்கு
அலையாத என் சானலோ இணையப் பத்திரிகையோ பாப்புலர், வைரல் ஆகாததும் வ்யூஸ் பெறாததும் வியப்பல்லதான்.
ஸோ வாட்!?
“அப்சொல்யூட்லி
ரைட் சார். நான் ஒரு அஸிஸ்டன்ட் ப்ரொஃபஸர். நாங்க நண்பர்கள் 4 பேர் சேர்ந்து அறிவு
சார்ந்த விஷயமா இணையப் பத்திரிகையும், சானலும் நடத்தறோம். ஸ்கூல் பசங்க, காலேஜ் பசங்களுக்கும்
பாமர மக்களுக்கும் கூட ஈசியா புரியற மாதிரி நடைமுறை எக்ஸாம்பிள்ஸ் சொல்லி பாடம் நடத்துறதோட,
அவங்க கேட்கற கேள்விகளுக்குப் பதிலும் அவங்களுக்குப் புரியறாமாதிரி விளக்கமா சொல்லித்
தரோம் சார். ஒரு செர்வீஸ். இதோ ஒரு சாம்பிள் சார்”
ஒருவழியாகப்
பார்க்க ஒப்புக் கொண்டார்.
“கான்செப்ஷுவல்
மட்டுமில்லாம கூடவே ப்ராக்ட்டிக்கலாக்கவும் முயற்சி ப்ளஸ் ஊக்கப்படுத்தறோம். சில பள்ளிகள்
எங்க மேகசின், சானலை பிள்ளைகளுக்குக் காட்டி கற்பிக்கறாங்க”
“குட்
எஃப்ஃபோர்ட்” ஆச்சரியப்பட்டார். அங்குமிங்கும் வேகமாக நடந்து கொண்டே பேசியவர் ஒரு வழியாகப்
பேச உடன்பட்டு அமர்ந்தார்.
“என்
பேச்சை கட் செய்யக் கூடாது”.
மனதில்
சிறு பதற்றம். ரேஷன் புன்னகையால் பதிலளித்தேன்.
நேர்மையான
அறிவிற்கு மதிப்பில்லை என்று தொடங்கி பேர்பெற்ற பல்கலையில் பதவிக்கு நடக்கும் பண விளையாட்டு,
முனைவர் பட்டம் பெற நடக்கும் பேரம், பெண் மாணவி என்றால் ஆண் ஆசிரியர் அத்து மீறல்,
என்பது வரை கல்வித் துறையில் நடக்கும் ஊழல்களைக் கெட்ட வார்த்தைகளை அடைமொழியாக்கிப்
பேசினார்.
நான்
தடுமாறித்தான் போனேன்.
“ஸார்.
ப்ளீஸ். ஒரு நல்ல அறிவாளியை இந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்தற நோக்கத்துல எடுக்கறேன்
சார். ஸோ கெட்ட வார்த்தைகள் வேண்டாமே ப்ளீஸ். நல்ல அறிவியல் சிந்தனைகள் மட்டும் போதுமே
சார்…” தைரியத்தை துணைக்கு அழைத்து மிகுந்த தயக்கத்துடன் சொன்னேன்.
“ஐ ஆம்
ப்ரொவோக்ட்”
உதட்டைக்
கோபத்தில் கடித்துக் கொண்டு கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு அங்குமிங்கும் நடந்தார்.
அவரது மனதுள் எரிமலை கனன்று கொண்டிருப்பது அதிகமாகவே வெளிப்பட்டது. தண்ணீர் குடித்தார்.
எரிமலையை
அணைத்துவிட முடியுமா? அரை மணி நேரத்திற்குப் பிறகு சற்று அமைதியாக வந்து அமர்ந்தார்.
அவர் மனைவி சற்று பதற்றுத்துடன் இருந்தது போல் தெரிந்தது.
“ஸாரி.
என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை”
“இட்ஸ்
ஓகே சார். நாம தொடரலாமா?”
அவர்
பேசிய அறிவியல் விஷயங்கள் பிரமிப்பூட்டியது.
இடையில்
மீண்டும் கோபத்தில் எழுந்து நடக்கத் தொடங்கிவிட, எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல்
தடுமாறினேன். அவரது மனைவி அவரை ஆசுவாசப்படுத்திட ஒருவழியாக முடிந்தது.
நான்
எனது சாதனங்களைப் பத்திரப்படுத்தினேன்
“மிஸ்டர்
மதியழகன் வாங்க லஞ்ச் ரெடி. வாங்க சாப்பிடலாம்.”
தயங்கினேன்.
ஆனால் மறுக்க இயலவில்லை.
சற்று முன் உணர்ச்சிவசப்பட்ட நிலை. பின்னர்
அமைதியான அன்பான உபசரிப்பு. வித்தியாசமான இரு நிலைகள் அடுத்தடுத்து. வித்தியாசமான அனுபவம்.
நல்ல
சுவையான வட இந்திய சாப்பாடு. கூடவே புளியோதரை, தயிர்சாதம்.
“பாலாஜி
ரொம்பவே விருந்தோம்பல் பண்ணுவார் தெரியுமா மதியழகன்?”
“…….”
“ஒரு
வாய் சாப்பாடாவது கொடுக்காம அனுப்பமாட்டார்.”
சட்டென்று
பிடிபடாமல் நான் அவரையே பார்த்தேன்.
“புரியலை?
பக்கத்து பாலாஜி கோயில் பிரசாதம்.”
புரிந்தது.
“வெண்ணை
உண்ட வாயன், மண்ணை உண்ட மாயன்”
புளியோதரையில்
மண் இருந்ததை அவர் அப்படிச் சொல்கிறார் என்பது மிகவும் தாமதமாகப் புரிந்தது.
“கடவுளுக்குச்
செய்வதில் கூட சிரத்தை இல்லாத நாதாரி தே……பசங்க.”
அவரைப்
பற்றி ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. சமூகக் கோபம். ஃப்ரீக்வென்ஸி ஒத்த இன்டெலெக்சுவல்
கம்பானியன் இல்லாத குறைபாடு என்றும் சொல்லலாமோ? ஆனால் பொதுவான சமூகத்தின் பார்வையே
வேறாக இருக்கும் போது?
அறிவுச்செருக்கும், வளைந்து கொடுக்காத நேர்மையும் உண்மையை
உரக்கச் சொல்லும் மனிதர். இச்சமூகத்தில் தாக்குப் பிடிக்க முடியுமோ?
கெட்ட வார்த்தைகள், நெகட்டிவ் விஷயங்கள் சிலவற்றை எடிட்
செய்துதான் வெளியிட்டேன் என்றாலும் அறிமுக வீடியோ வைரலானது. ஆனால் என் மனம் ஒப்பவில்லை. அவரது அறிவை சமுதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள விழைந்து அன்று
தொடங்கியது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நல்லதொரு
இன்டெலெக்சுவல் கம்பானியன். குட் ராப்போர்ட். மனதிற்கு ஒரு சுகம்தான்.
அப்படியாகப்
பரிச்சயம் ஏற்பட்டு அவரும் அவர் மனைவியும் நல்ல நண்பர்களானார்கள். அவரது இரு பெண் குழந்தைகளும்.
தரணி
ஸாரின் அறிவும் எண்ணங்களும் பிரமிப்பானது. மற்றொரு இனிய பக்கம் வெளிப்பட்டது. மிகவும்
அமைதியானது போல் தெரிந்தது.
ஒரு வேளை
அவரைப் புரிந்து கொள்ளும் கம்பானியன் கிடைத்ததால் இருக்கலாமோ?
ஆனால்
இப்போதைய நிலை? எனக்குப் பெருமூசெழுந்தது.
*************
“என்ன மதியழகன் ஆச்சரியமா? அதிர்ச்சியா?”
“…………………”
“இதுதான் அவரோட இப்போதைய நிலை. குழந்தைகள் ஆன்லைன் க்ளாஸ்.”
என்று மிக மெதுவாகப் பேசியபடியே உள்ளே வந்த மேடம், ஜில்லென்ற ஆரஞ்சு ஜூஸை எனக்கும்
கொடுத்து சாருக்கும் கொடுத்தார்.
அருகில் சென்று “ஆரஞ்சு ஜூஸ்தான் குடிங்க” என்றார். அவர்
ஜூஸையே பார்த்துக் கொண்டிருந்தார். ‘பயமாம் அது விஷமோ என்று’. குடிக்க உதவிவிட்டு.
கணினியில் கர்நாடக இசையை இசைக்கவிட்டார்.
“ம்யூசிக் தெராப்பி. இன்ஸ்ட்ருமென்டல்.”
“இந்த ராகத்துல ‘ரி, க’ வோட ஃப்ரீக்வென்ஸி ……..இல்லை நான்
சொல்ல மாட்டேன். இவன் வேவு பார்க்கறான்…”
அந்த இடத்தில் சாரின் முன் என் அதிர்ச்சியை வெளிப்படுத்திப்
பேசுவது சரியல்ல என்று புரிந்தது. ஹாலுக்குச் சென்றோம்.
“உங்களுக்கு இசைல ஆர்வம் உண்டா?”
“இசை பிடிக்கும். ஆனா கர்நாடக இசை ஞான சூனியம்.”
“யாருமே ஞான சூனியம் கிடையாது. நமக்குப் பல விஷயங்கள் நம்முள்ள
இருக்குன்றதைக் கூட உணரத் தெரியல. தெரிஞ்சாலும் வெளிப்படுத்தத் தெரியல. இல்லை அதுக்கான
சூழல், நல்ல வழிகாட்டி நமக்குக் கிடைக்கல அவ்வளவுதான்.”
சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது. சுடரும் அமைதியானது
போல் தெரிந்தது.
“பிலஹரி, கதனகுதூகலம் இதெல்லாம் மனசை குஷிப்படுத்தற ராகங்கள்.
மத்யமாவதி மனசை அமைதிப்படுத்தும். கர்நாடக தோடி ராகம் மன அழுத்தம், வியாகூலம் இதை மாத்தும்.
ஆராய்ச்சி சொல்லுது.”
“இப்ப இது என்ன ராகம் மேடம்?
“கதனகுதூகலம்”
கேட்பதற்கு நன்றாக இருந்தது. துள்ளல் சந்தோஷ உணர்வு.
“மேடம் உங்க சப்ஜெக்ட்?”
“சைக்காலஜி”
“ராகங்கள், ம்யூசிக் தெரப்பின்னும் பேசுறீங்களே.”
மெலிதாகப் புன்னகைத்தார்.
“மனம் நல்ல நிலையில் இருக்க என்ன தேவைன்றதை அலசுறதுதானே
சைக்காலஜி”
“அப்ப நீங்களும் எங்க இணையப் பத்திரிகைக்கு தொடர் எழுதலாமே.
சமூகத்துக்கு ரொம்ப வேண்டிய விஷயம். எங்க சானல்ல பேசலாம்”
பதிலில்லை. ஏதோ ஆழ்ந்த யோசனை.
“ரொம்பவே அதிர்ச்சி மேடம். நம்பவே முடியல. எப்படி இப்படி
திடீர்னு சாருக்கு? டாக்டர்கிட்ட போனீங்களா? எப்படிச் சமாளிக்கறீங்க எல்லாமும்? எனக்குச்
சொல்லிருக்கலாமே?”
நான் கேள்விகளாகவே பேசியது அவருக்கு ஆயாசமாக இருந்தது போலும்.
மூச்சு வேகமாக இருந்தது. கண்களை மூடிக் கொண்டு கொஞ்சம் அமைதிகாத்தார். பதில்களுக்கு
மனதில் ஒத்திகை போலும்.
“எப்படி இப்படி திடீர்னு சாருக்கு? ன்னு கேட்டீங்கல்லியா?
அது மில்லியன் டாலர் கேள்வி.” கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
“ப்ரெயின் கெமிஸ்ட்ரி. அதுதான் ஒவ்வொருவரையும் வேறுபடுத்துது.
அதுல பிரச்சனை ஏற்படும் போது……சென்சிட்டிவ் டு த கோர் மனுஷங்களா இருந்தா பாதிக்கப்படுவாங்க……இதைப்
பத்தி பேசணும்னா நிறைய இருக்கு…” மீண்டும் ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
சென்ஸிட்டிவிட்டி ஆஃப் த மைன்ட்! ம்ம் ஒவ்வொருவரது கோபதாபங்கள், விறுப்பு வெறுப்பு, இயல்பு, முடிவு எடுக்கும் திறன் மாறுபடுகிறதுதானே.. மூளையைப் பற்றி புரிந்து கொள்ளும் அளவு மூளை இருக்கிறதோ? யோசிக்க யோசிக்க மூளை வலித்தது போன்று இருந்தது. .
“மருந்து சாப்பிடாமல்,
நாலு மாசமாவே கொஞ்சம் கொஞ்சமா டல் ஆகி.. இவர் செஞ்ச ஆராய்ச்சிய வேற ஒருத்தர் தன் பெயர்
போட்டுக்கிட்டு போயிட அந்தக் காரணமும் சேர்ந்து.. அப்புறம் ஹாஸ்பிட்டல் அட்மிஷன் ட்ரீட்மென்ட்
அந்தக் கெமிஸ்ட்ரியை கொஞ்சம் ட்விஸ்ட் செய்ய. வீட்டுக்கு வந்து 10 நாளாகுது. பெட்டர்
ஆகிடுவார்”
அறிவுச்சுடர் எப்படிப் பிரகாசித்தது! எத்தனை செமினார்கள்,
வொர்க்ஷாப்களுக்குக் கூடவே சென்றிருக்கிறேன். அவரது நிலைமை மனதை சங்கடப்படுத்தியது.
“என்னைக் கூட அடையாளம் தெரியலியே. இந்த வயசிலேயே டெமன்ஷியாவோன்னு
ஷாக்காகிடுச்சு.”
“கொஞ்சம் ஸ்ட்ராங்க் மெடிக்கேஷன். அந்த மயக்கத்துல அடையாளம்
தெரிஞ்சாலும் வெளிப்படுத்த கொஞ்சம் சிரமமா இருக்கும். அவ்வளவுதான். சரியாகிடுவார்”
எனக்குப் பேச்செழவில்லை.
“எல்லா மக்களுக்குமே சென்சிட்டிவிட்டி உண்டுதான். ஒரு சிலருக்கு
அது அதீதமாகப் போகும் போது சோசியல் நார்ம்ஸ் பிரச்சனை ஏற்படும். மருத்துவ உதவி தேவைப்படும்.”
சமூகத்திலிருந்து வித்தியாசமாக இருந்தால் என்ன என்று எனக்குத்
தோன்றுவதுண்டு ஆனால் இப்படியான பிரச்சனைகளும் உண்டு என்று புரிந்தது.
“வீட்டில் புரிதல், வளர்ப்பிலிருந்து, சமூகச் சூழல் வரை
பல காரணங்கள்””
என்ன சொல்ல? விதி? சொல்லப் பிடிக்கவில்லை. விதி எனும் வார்த்தையை
விடக் காலம் என்பது கொஞ்சம் நன்றாக இருந்தது போலத் தோன்றியது.
காலம் விளையாடும் பந்துகள் போலும் மனிதர்களின் வாழ்க்கை.
ஒரு சிலருக்கு பௌன்ஸர், சிக்ஸர் என்று அடித்துத் தள்ளுகிறது. கோல் போட வைக்கிறது. காலம்
நிற்காமல் சக்கரமாகச் சுழல்வது என்று சொன்னாலும் சிலர் மேலேயே. சிலர் கீழேயே. அதன்
கணக்கு புரிவதில்லை.
கோல்ஃபில் பந்து குழிக்குள் விழுந்தால் வெற்றி. ஆனால் காலம்
மனித வாழ்க்கையை குழிக்குள் தள்ளினால் அதளபாதளத்தில் சிக்கும் மனிதர்கள். காலத்திற்கு
வெற்றிக் களிப்பு? குழியிலிருந்து மேலே வர காலம் கை கொடுத்து உதவுமோ? கை பிடித்து ஏறும்
போது கை விட்டுச் சறுக்கி மீண்டும் கீழே போனால்? வெளிச்சம் பார்ப்பது எப்போது? காலம்
பதில் சொல்லுமோ.
“காலம் பதில் சொல்லாது. நிற்கவும் செய்யாது. வேடிக்கை பார்த்துக்
கொண்டு நகர்ந்துகொண்டேதான் இருக்கும்.”
அது நின்றுவிட்டால் இயக்கமே இருக்காதே! அதனோடு சேர்ந்து
பயணிக்க வேண்டும். இல்லை என்றால் பின் தங்கிவிடுவோமோ. அபாயம்.
“காலத்துக்கிட்ட எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு” ஆயாசத்துடன்
சொன்னார்.
ஆச்சரியம்!. என் மன ஓட்டங்களைப் படித்துவிட்டாரோ? சைக்காலஜி?
காலத்தைக் கேள்வி கேட்க முடியுமோ?. அதன் பதில்கள் நமக்கு
ஏற்க முடியாமல் சில சமயம் கோபத்தை வரவழைக்கலாம். ஆனால் ஏற்கத்தான் வேண்டும். அதுதான்
யதார்த்தம். யதார்த்தம் கசக்கும்.
“எப்படி என் மனசுல ஓடுற அதே சப்ஜெக்ட்டை நீங்களும் பேசுறீங்க?
ஆச்சரியம். நான் யோசிச்சது காலத்தின் விளையாட்டை”
மேடம் மெதுவாகச் சிரித்தார். பல அர்த்தங்களின் சிரிப்பாகத்
தெரிந்தது. விரக்தி? கோபம்? இயலாமை?
“வாழ்க்கை எல்லாருக்கும் அத்தனை எளிதில்லை. ஒவ்வொருத்தருக்கும்
ஒவ்வொருவிதமான பிரச்சனை. இருந்தாலும் அதுக்கிடையிலும் சந்தோஷமா இருக்காங்கனா சந்தோஷம்றது
காலத்தோட கையில இல்லை. மனசுலதான் இருக்குன்னு தோணும்”
காலம் பற்றி என் அகத்தில் ஓடிய எண்ணங்களுக்கு அவரது எண்ண
ஓட்டங்களின் புற வெளிப்பாடு. அந்தச் சிரிப்பின் அர்த்தம்?
“அறிவு, நேர்மைன்னு ஓவர் பெர்ஃபெக்ஷனிஸ்ட், எதிர்பார்ப்புன்னு
அந்த உலகிலயே வாழற சிலர் மூளைல பல எண்ணங்கள், சிந்தனைகள் முட்டி மோதுமாம். அந்த வேகத்திற்கு
யதார்த்தத்தோடு ஈடுகொடுக்க முடியாம சிக்கல். திணறல். முட்டி மோதலில் ஏற்படும் உணர்ச்சிகள்
வெடித்தல்.”
சாரின் பிரச்சனை புரியத் தொடங்கியது. எனக்கும் என் பேச்சினை
யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்ற வருத்தம், சமூகக் கோபம் உண்டு ஆனால் அதைப் புறந்தள்ளி
என் பாதையில் நடக்க முடிகிறது. அவரால் அது இயலவில்லை.
சமூகத்தில் ‘அந்நியர்கள்’ இப்படித்தான் உருவாகிறார்களோ!
சமூகத்தைப் பொருத்தவரை
இவர்கள் எக்சென்ட்ரிக். பைத்தியங்கள், மனநிலை சரியில்லாதவர்கள்.
கொலையும்,
கொள்ளையும் ஊழலும் செய்து மக்களை ஏமாற்றி சுதந்திரமாக நடமாடுபவர்களை இந்தச் சமூகம்
பைத்தியம், மனநிலை சரியில்லாதவர்கள் என்று சொல்வதில்லையே……முரண்!
“வாயிலருந்து தெரித்து விழும் கூர்மையான வார்த்தைகள் எத்தனை
பேருடைய கண்ணாடி போல இருக்கற மனசை உடைக்கும் தெரியுமா? நம்ம நாக்கும், பிஹேவியரும்
பொருத்துதான் நம்ம கூட நட்பும் உறவும் இருப்பதும், விலகுவதும். காலம் அதை முடிவு செய்யறதில்லை.
ஆனா ஒண்ணு, உண்மை பேசினா பைத்தியக்கார/ன்/ரி.”
“அதையே திருப்பியும் போடலாம் இல்லையா? இவரைப் புரிஞ்சுக்காதவங்க
இவரை உதாசீனப்படுத்தும் போது, அதுவும் ப்ரிட்டில் மைன்ட் உள்ளவர்”
மேடத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. உறவுகள்
விலகிய நிலை. ஆனால் இப்படியானவர்களை உறவும், சமூகமும் புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான்.
குடும்பமே புரிந்து கொள்ளாத போது சமூகத்தை என்ன சொல்ல முடியும்? கஷ்டம்தான்.
இரு குழந்தைகளுக்கும் அப்பாவைப் புரிந்து கொள்ளும் வயதில்லை.
புரிந்து கொள்ளும் பக்குவம் கிடைக்கப்பெற வேண்டும்.
எனக்கு ஒரு நல்ல இன்டெலெக்சுவல் கம்பானியன், நட்பு கிடைத்ததாகவே
பட்டது. எ குட் ராப்போர்ட். என்னால் அவரை புரிந்து கொள்ள முடிகிறது.
மேடம் ஏதோ சிந்தனைவயப்பட்டிருந்தார், பெருமூச்செழுந்தது.
“யார்கிட்ட பேசுறோம்ன்றதை விட நாம என்ன பேசுறோம்ன்றது ரொம்ப
முக்கியம். சிலர் மத்தவங்ககிட்ட எப்பவும் தப்பு கண்டுபிடிச்சுட்டே இருப்பாங்க. சர்க்காசிசமும்
கூட. காது கொடுத்துக் கேட்கற எண்ணம் இல்லாம, தான் செய்யறது, பேசுறது மட்டும்தான் ரைட்டுன்னு
சொல்றது. பேசும் கலை இல்லைனா சமூகம் ஏற்காது. மனசுக்குள்ள ஓடுறது எல்லாத்தையும் ராவா
கொட்டக் கூடாது. எடிட் பண்ணித்தான் சொல்லணும். இல்லைனா சண்டை, விரோதம், ப்ரொஃபஷனல்
ஜெலசி இப்படி...”
சாரின் கூடவே இருக்கும் இவர் செருப்பை மாட்டிக் கொண்டால்தான்
அந்த வலி புரியும் என்பது நிதர்சனம்.
நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். பொதுவாகச் சொல்வது
போல் யாரைச் சொல்கிறார் என்பது புரியாமல் இல்லை. மேடத்திற்கு ஒரு டைரி என்ட்ரி!
அறிவுச்சுடருடன் அளவளாவிய நாட்கள் எத்தனை இனிமையானவை. ஒரு
வேளை நான் வராமல் போனதால் அவருக்குத் தன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள ஆள் இல்லாமல்
இப்படியானதோ? என்னை அழைத்திருக்கலாமே.
“மதியழகன் வெரி ஸாரி. கொஞ்சம் ஓவரா புலம்பிட்டேன். லஞ்ச்
ப்ரிப்பேர் பண்ணறேன். இங்கயே சாப்பிட்டுரலாம் நீங்க.”
நான் சாரின் அறைக்குச் சென்றேன். இன்னும் இசை ஓடிக் கொண்டிருந்தது.
என்ன ராகம் என்றெல்லாம் தெரியவில்லை. தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் குறித்துக்
கொண்டேன்.
அவரின் தோள் மீது கை போட்டுக் கொண்டு அணைத்துக் கொண்டேன்.
புரிந்திருக்கும் போல! என்னைப் பார்த்துப் புன்சிரித்தார். அந்தக் கண்களில் ஏக்கம்
இருந்தது போலத் தோன்றியது.
சுடர் மங்காது. மீண்டு எழுந்து ஒளிரும். ஒளிர வேண்டும்.
ஒளிர வைக்க வேண்டும்.
“நான் தினமும் வரேன் மேடம்.”
= = = =
அனைவருக்கும் காலை வணக்கம். கீதா ரங்கனின் கனமான கதை. நிதானமாக படித்து விட்டு வருகிறேன்.
பதிலளிநீக்குமீண்டும் வருக. நன்றி.
நீக்குஇன்று இந்தக் கதைதானோ என்று மனதில் தோன்றிட காலையில் பார்த்துவிட்டேன். சரி கருத்துகள் வரட்டும் அப்புறம் வந்து கருத்து கொடுப்போம் வேலைகளும் சரியாக இருக்கு...
நீக்குகௌ அண்ணா உங்கள் படம் சூப்பரோ சூப்பர்! ரொம்ப ஆப்ட்! நன்றி கௌ அண்ணா...
கீதா
பானுக்கா உங்கள் கருத்தும் கீழே பார்த்துவிட்டேன் மிக்க நன்றி பானுக்கா
நீக்குகீதா
//
நீக்குகௌ அண்ணா உங்கள் படம் சூப்பரோ சூப்பர்! ரொம்ப ஆப்ட்! நன்றி கௌ அண்ணா... // நன்றி.
அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
அன்பின் வணக்கம்.
நீக்குநல்ல பொழுதாய் விளங்குவதற்கு வேண்டிக் கொள்வோம்...
பதிலளிநீக்குஆம், வேண்டுவோம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் தொற்றும் அதை விட வேகமாகப் பரவும் வதந்திகளும் முற்றிலும் ஒழிந்து அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மன நிம்மதியும் உண்மையான இயல்பு வாழ்க்கையும் அமையப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குதுரை அண்ணா, கீதாக்கா ஒவ்வொரு நாளும் நல்ல நாளாய் விடிய வேண்டும் என்று பக் பக்கென்றுதான் விடிகிறது. இத்தனைக்கும் செய்திகள் பார்ப்பதில்லை. இருந்தாலும்...
நீக்குகீதா
நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட கதை. மிகவும் கடினமான கதைக்கரு. இதை எடுத்துக் கொண்டதுக்கு முதலில் பாராட்டுகள். அறிவுச் சுடர் சுடர் விட்டுப் பிரகாசிப்பார் என்னும் நம்பிக்கையுடன் இருப்போம். இந்த மாதிரிக் கதைக்கெல்லாம் முடிவு என்பதே இல்லை. வருவதை எதிர்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா கீதாக்கா! இந்த்க கீதாவுக்குச் சிறிதாக எழுதவே வருவதில்லை. என்ன செய்ய..
நீக்குஆம் இது போன்ற கதைகளுக்கு முடிவு இல்லைதான்....வருவதை எதிர்கொண்டாலும் அதை எதிர்கொள்ளும் சக்தியும் வேண்டும் மனிதர்களுக்கு
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
பல அறிவு ஜீவிகள் (நான் சொல்வது உண்மையான தேர்ந்த அறிவாளிகள்) நிலைமை இப்போது மட்டுமல்ல எப்போதுமே இது தான். அவங்களை விடக் குடும்பத்தினருக்குத் தான் ரொம்பக் கஷ்டம். அதனால் தானோ என்னமோ சிலர் திருமண வாழ்க்கையே வேண்டாம் எனத் தனித்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஆமாம் குடும்பத்தினருக்குக் கஷ்டமதான். இப்படியானவர்கள் தனியாக இருப்பது நலம் தான் ஆனால் எல்லாரும் அப்படிச் செய்வதில்லை...மருத்துவ உதவியோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். குடும்பத்தோடு.. புரிந்து கொண்டு மருத்துவ உதவி எடுத்துக் கொள்பவர்கள் என்றால் பிரச்சனை இல்லை இல்லை என்றால் அதுவும் கடினம் தான்
நீக்குமிக்க நன்றி கீதாக்கா
கீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குதொற்று பற்றிச் சேதங்கள் காதில். விழுகின்றன.
இனியும் அது இல்லாமல் எல்லோரும் நலம்
பெற வேண்டும்.
பிரார்த்திப்போம்.
நீக்குஅறிவுச் சுடர்கள்,
பதிலளிநீக்குதாங்களும் எரிந்து சுற்றி இருப்பவர்களையும்
சுடுகிறார்கள்.
பாதி கதையில் புரிந்தது.
மீண்டும் படித்து விட்டு வருகிறேன்.
சின்ன கீதா, கீதா ரங்கனின் விசாலமான
கணினி ஞானம் திகைக்க வைக்கிறது.
வாழ்த்துகள்.
பல வார்த்தைகள் தலைக்கு மேலே செல்கின்றன.
//சின்ன கீதா, கீதா ரங்கனின் விசாலமான
நீக்குகணினி ஞானம் திகைக்க வைக்கிறது.//
ஹா ஹா ஹா அம்மா இப்படி ஏமாந்துபோவீங்களா!!!!!!ரொம்ப இன்னொசென்ட்!!!
சுஜாதா அவர்களின் மொழியில் சொல்வதென்றால் நான் நாலு வார்த்தைகளைத் (வார்த்தைகளை மட்டும்) தெரிந்து வைத்துக் கொண்டு ஜல்லி அடிக்கிறேன் அவ்வளவுதான்...ஹா ஹா ஹா ஹா
எனக்கு அறிவியல் சுத்தம் அம்மா..
//தாங்களும் எரிந்து சுற்றி இருப்பவர்களையும்
சுடுகிறார்கள்.
பாதி கதையில் புரிந்தது.//
புரிதல் இருந்தால் கடந்துவிடலாம் அம்மா
மிக்க நன்றி
கீதா
“வாயிலருந்து தெரித்து விழும் கூர்மையான வார்த்தைகள் எத்தனை பேருடைய கண்ணாடி போல இருக்கற மனசை உடைக்கும் தெரியுமா? நம்ம நாக்கும், பிஹேவியரும் பொருத்துதான் நம்ம கூட நட்பும் உறவும் இருப்பதும், விலகுவதும். காலம் அதை முடிவு செய்யறதில்லை. ஆனா ஒண்ணு, உண்மை பேசினா பைத்தியக்கார/ன்/ரி.”////////////////////////////////////////////////////////எத்தனை புரிதல் அவர் மனைவிக்கு. மதியழகனின்
பதிலளிநீக்குகருணை அந்த சுடரை மீட்கட்டும்.
அன்பு வாழ்த்துகள் கீதா மா.
இப்படியானவர்களைப் புரிதல் இல்லை என்றால் வாழ்க்கை தாறுமாறாகத்தான் போகும். மதி மீட்பார் என்று நம்புவோம் அம்மா
நீக்குமிக்க நன்றி
கீதா
//கை பிடித்து ஏறும் போது கை விட்டுச் சறுக்கி மீண்டும் கீழே போனால்? வெளிச்சம் பார்ப்பது எப்போது? காலம் பதில் சொல்லுமோ.
பதிலளிநீக்கு“காலம் பதில் சொல்லாது. நிற்கவும் செய்யாது. வேடிக்கை பார்த்துக் கொண்டு நகர்ந்துகொண்டேதான் இருக்கும்.”//
இப்படிப்பட்ட கனமான விஷயங்களை பேசும் கனமான கதை. படித்து முடித்ததும் மனம் போனது. அருமை கீதா! I wish all the very best to you!
பானுக்கா மிக்க நன்றி உங்கள் பாராட்டிற்கும் கருத்திற்கும்.
நீக்குஆம் கதை ஹெவி சப்ஜெக்ட் தான். இது தொடராக/நாவலாகவும் எழுதலாம். ஆனால் இதுவே நீளமாகிவிடுது ப்ளாகில் அப்புறம் நாவல் எல்லாம் யாரு வாசிப்பாங்க?!
மிக்க நன்றி பானுக்கா உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு
கீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்.
நீக்கு//வெண்ணை உண்ட வாயன், மண்ணை உண்ட மாயன்”
பதிலளிநீக்குபுளியோதரையில் மண் இருந்ததை அவர் அப்படிச் சொல்கிறார் என்பது மிகவும் தாமதமாகப் புரிந்தது.//
ரசித்தேன்.
//“அறிவு, நேர்மைன்னு ஓவர் பெர்ஃபெக்ஷனிஸ்ட், எதிர்பார்ப்புன்னு அந்த உலகிலயே வாழற சிலர் மூளைல பல எண்ணங்கள், சிந்தனைகள் முட்டி மோதுமாம். அந்த வேகத்திற்கு யதார்த்தத்தோடு ஈடுகொடுக்க முடியாம சிக்கல். திணறல். முட்டி மோதலில் ஏற்படும் உணர்ச்சிகள் வெடித்தல்.”//
உண்மைதான். இவர்களால் யதார்த்த வாழ்க்கை வாழமுடியாது போகும்.
//மனசுக்குள்ள ஓடுறது எல்லாத்தையும் ராவா கொட்டக் கூடாது. எடிட் பண்ணித்தான் சொல்லணும். இல்லைனா சண்டை, விரோதம், ப்ரொஃபஷனல் ஜெலசி இப்படி...”//
ஆமாம், மனதில் பட்டதை பேசிவிடக் கூடாதுதான்.
//கொஞ்சம் ஸ்ட்ராங்க் மெடிக்கேஷன். அந்த மயக்கத்துல அடையாளம் தெரிஞ்சாலும் வெளிப்படுத்த கொஞ்சம் சிரமமா இருக்கும். அவ்வளவுதான். சரியாகிடுவார்”//
அறிவு ஜீவியின் மனைவி நம்பிக்கை பலிக்கட்டும்.
அவர் காலம் பற்றி பேசிய உரையாடல் நன்றாக இருக்கிறது.
கதை நன்றாக இருக்கிறது கீதா. நிறைய விஷயங்களை பேசுகிறது கதை.
கதைக்கு ஏற்ற படம் சார் வரைந்து விட்டார்.
மிக்க நன்றி கோமதிக்கா. வரிகளை ரசித்தமைக்கும், கோட் செய்து இங்கு பகிர்ந்தமைக்கும்.
நீக்கு//அவர் காலம் பற்றி பேசிய உரையாடல் நன்றாக இருக்கிறது.//
மிக்க நன்றி கோமதிக்கா..
ஆமாம் இது ஹெவி சப்ஜெக்ட் தான் கோமதிக்கா.. இதில் நிறைய எழுதலாம்..
மிக்க நன்றி கோமதிக்கா உங்கள் கருத்திற்கு
கீதா
// கதைக்கு ஏற்ற படம் சார் வரைந்து விட்டார்.// நன்றி.
நீக்குஅருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ
நீக்குகீதா
// மனுஷங்களா இருந்தா பாதிக்கப்படுவாங்க... //
பதிலளிநீக்குஇந்த வரியில் அனைத்து எண்ணங்களும் அடங்கி விட்டன...
மிக்க நன்றி டிடி கருத்திற்கு...அதுவும் இந்த வரியைப் பற்றி சொன்னமைக்கும்
நீக்குகீதா
அனைவருக்கும் முகம் மலர அன்பான மாலை வணக்கங்கள் ! தொற்று நீங்கி, அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஅறிவு சுடர்விடும் அருமையான கதை! மனோதத்துவம், அறிவியல், ஆன்மிகம், வானவியல், கணினி , இசை என அறிவியலின் எல்லா வெளிகளையும் தொட்டு தங்கள் தனித்துவ மொழிநடையில் கதையாக வெளியிட்டுள்ளீர்கள். நல்ல பல வீணைகள் நம் கண்ணெதிரே நலம்கெட புழுதியில் கிடப்பதில் வருத்தமே.
நல்ல பல வீணைகள் நம் கண்ணெதிரே நலம்கெட புழுதியில் கிடப்பதில் வருத்தமே.//
நீக்குபாயின்ட்!!!சரியான வரி வானம்பாடி!
தங்கள் தனித்துவ மொழிநடையில் கதையாக//
அட! என் எழுத்து அப்படியாக இருக்கிறதா?!!!!!!
மிக்க நன்றி வானம்பாடி!
கீதா
கொஞ்சம் ஹைடெக் கதை! நன்றாக எழுதியிருக்கிறீர்கள் கீதா! சரளமான வேகமான நடை ! நிறைய உணர்ச்சிக்குவியல்களுடன் ஆழ்ந்த கருத்துக்களை தன்னிலையில் பேசி வெளிப்படுத்திய விதம் அழகு! இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ அக்கா. உங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும் ஊக்கம் கொடுக்கும் வரிகளுக்கும்.
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குஇன்றைக்கு கீதாஜி கதை. அவரது பாணியில் - கொஞ்சம் ஹெவியான சப்ஜெக்ட் தான். ஆனாலும் சிறப்பாக எழுதி இருக்கிறார். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
வித்தியாசமான கதைகளை செவ்வாய் கிழமைகளில் வெளியிட்டு வரும் எங்கள் பிளாக் குழுவினருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
வெங்கட்ஜி மிக்க நன்றி உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்
நீக்குகீதா
இப்படியான கதைக் களம் தங்களுக்கே வாய்க்கும்...
பதிலளிநீக்கு// காலம் பதில் சொல்லாது.. நிற்கவும் செய்யாது!.. //
ஆகா!.. அருமை.. அருமை..
நாம் தான் அது சொல்ல வேண்டிய பதிலை யோசித்து உணர்ந்து கொண்டே அதனுடன் சென்றாக வேண்டும்..
கீதா.. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்..
பாராட்டுகளுடன்....
மிக்க நன்றி துரை அண்ணா. ஆம் காலத்துடன் அதைக் கூர்ந்து நோக்கி அதனுடன் நாம் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் எல்லாம் எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்! நான் எழுதுவதையும் பாராட்டி ஊக்கப்படுத்திக் கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி துரை அண்ணா
நீக்குகீதா
ஆமாம், எங்கே ஜீவி ஸார்....? செவ்வாயில் அவர் பின்னூட்டம் இல்லாமல் எப்படி...
பதிலளிநீக்குநானும் ஜீவி அண்ணாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்/இருந்தேன் ஸ்ரீராம்
நீக்குகீதா
தலைப்பு, எழுதியவர் பெயரை மறந்து (மறதி நல்லது) - ஒரு முறை மேலே பார்த்துக்கொண்டேன் -எபி-யைத்தானே படித்துக்கொண்டிருக்கிறோம் என உறுதிப்படுத்திக்கொள்வதற்காக. இந்தக் கதையின் தலைப்புக்குக் கீழே’கீதா ரெங்கன்’ என்று எழுதாமல், யார் எழுதியது என்று ’புதன் வேலை’ செய்திருந்தால், கேட்டிருந்தால் ? - எழுதியது கீதா ரெங்கன் என்று யூகித்திருப்பதற்கான வாய்ப்பு ப்ரைட்டாக இருந்திருக்காது - கர்னாட்டிக் ம்யூஸிக் தலைகாட்டாதிருந்தால்!
பதிலளிநீக்குரொம்பவே வேறுபட்ட கருத்துக்களம். Difficult pitch. இருந்தும் தைர்யமாக இறங்கி பேட்டைச் சுழற்றியதில், ரன் எந்தெந்த மூலையிருந்தெல்லாமோ வந்திருக்கிறது! Scoreboard is ticking..
இறுதியாக -
..சுடர் மங்காது. மீண்டு எழுந்து ஒளிரும். ஒளிர வேண்டும். ஒளிர வைக்க வேண்டும்.//
Wishful thinking ! மனித விருப்புகளுக்கெல்லாம், முயற்சிகளுக்கெல்லாம் காலம் அசைந்துகொடுப்பதில்லை..வேண்டிய அவசியம் அதற்கில்லை.
ஏகாந்தன் அண்ணா கதைக்கான கருத்திலும் கிரிக்கெட்!!!!
நீக்குமிக்க மிக்க நன்றி அண்ணா உங்களிடமிருந்து இப்படியான கருத்து வந்தமைக்கு.
//Wishful thinking ! மனித விருப்புகளுக்கெல்லாம், முயற்சிகளுக்கெல்லாம் காலம் அசைந்துகொடுப்பதில்லை..வேண்டிய அவசியம் அதற்கில்லை.//
கண்டிப்பாக அது அசைந்துகொடுக்கவே கொடுக்காதுதான் ஆம் அவசியமும் இல்லை அதன் பணி அதுவல்லவே! ஆனால் மனுஷங்க நாம நம்பிக்கையோடுதானே அந்தக் காலத்தையும் தள்ளிக் கொண்டு போகிறோம்...போக வேண்டியதும் ஆகிறது. இல்லைனா பின் தங்கிவிடுவோமே! இல்லையா...
//எழுதியது கீதா ரெங்கன் என்று யூகித்திருப்பதற்கான வாய்ப்பு ப்ரைட்டாக இருந்திருக்காது - //
ஆஹா!!
கர்னாட்டிக் ம்யூஸிக் தலைகாட்டாதிருந்தால்!// ஹா ஹா ஹா
மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா!
கீதா
ஆங்கில இலக்கியம் சேர்ந்தபோது நான் கேட்ட முதல் வாசகம் 'இலக்கியம் வாழ்வை பிரதிபலிக்கும் கண்ணாடி'.
பதிலளிநீக்குஅதற்கு அன்று எனக்கு புரியாத விளக்கங்கள் இன்றுவரை இதுபோன்ற கதைகள் மூலம் கிடைக்கின்றன.
நல்ல கனமான பல உண்மைகளை பேசிய கதை ஜூனியர் கீதா மேடம்.
மிக்க நன்றி.
அறிவுஜீவிக்கான முக்கிய இலக்கணம் அறிவாளியாக இருப்பது மட்டுமல்ல.
என்னைப் பொருத்தவரை அறிவை வெளிப்படுத்தும் விதத்திலும், தம்மை காயப்படுத்துவோரையும் அவர் தறப்பை உணர்ந்து மதிக்கும் பாங்கிலும் அரிவுஜீவிக்கான அர்த்தம் இருப்பதாக உணர்கிறேன்.
அதை அவ்வப்போது இசைஞானி இளையராஜா போன்ற ஜாம்பவான்களும் மறந்துவிடுவதுண்டு.
சுடருக்கு இதுபோன்ற கிரகணங்கள் ஏற்பட்டாலும், அறிவுச்சுடர் மீண்டு நிச்சயம் எழும்.
ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.