செவ்வாய், 21 ஜூன், 2022

டும் டும் டும் - சிறுகதை - சியாமளா வெங்கட்ராமன்

 

*டும் டும் *என்ற மேள சப்தமும் *ஆனந்தம் ஆனந்தம் *என்ற நாதஸ்வர சத்தமும் அந்த கல்யாண மண்டபத்தில் ஒலிக்க மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. அதைக்கேட்ட கிட்டு  வாத்தியாருக்கும் காயத்ரி மாமிக்கும் பிராயச்சித்தம் கிடைத்தது கண்டு நிம்மதி அடைந்தனர் .ஆம் !இது பிராயச்சித்தம் தான்....... ஏனென்றால்?...........

கிட்டு வாத்தியார் பிள்ளை ஸ்ரீதர் IITயில் படித்து பட்டமும் வாங்கிவிட்டான். மிக புத்திசாலி. அவன் தன் மேல்படிப்புக்கு யூஎஸ் போக விரும்பினான். ஸ்ரீதர் கிட்டு தம்பதியருக்கு ஒரே பிள்ளை அவனை யூஎஸ் அனுப்ப காயத்ரிக்கு விருப்பமில்லை. அங்கு போனால் அமெரிக்கப் பெண்மணியை திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கி விடுவான் என்று நினைத்து அனுப்ப மறுத்தாள். அவனுக்கு அமெரிக்காவின் சிறந்த யூனிவர்சிட்டி ஆன ஹாவர்டு யுனிவர்சிட்டியில் ஸ்காலர்ஷிப்புடன் கூடிய மேற்படிப்புக்கான விண்ணப்பம் வந்தது. அதைப்பார்த்து அனைவரும் அவனை யூஎஸ் அனுப்ப சொல்லி மாமியை வற்புறுத்தினர் மாமி ஒரு கண்டிஷன் உடன் யூஎஸ் அனுப்ப ஒப்புக்கொண்டாள். அதாவது இங்கு உடனடியாக திருமணம் செய்து கொண்டால் போகலாம் .ஏனென்றால் இங்கு மனைவி இருந்தால் அங்கு திருமணம் செய்துகொண்டு நிரந்தரமாக தங்க மாட்டான் என்று கூறினாள். அதுவுமின்றி படிப்பு முடிந்ததும் பெண்டாட்டியை அழைத்துக்கொண்டு போக இந்தியா வர வேண்டும் என்றும் கூறினாள். கிட்டு ஐயர் தம்பதிகள் திருவாரூரில் வசித்து வந்தார்கள்.

உடனடியாக பெண் பார்க்க ஒன்றும் சரியாக அமையவில்லை ஸ்ரீதர் யூஎஸ் போகவேண்டிய நாளும் நெருங்கிக்கொண்டு இருந்தது.

கிட்டு ஐயர் வீட்டிற்கு எதிரில் நாணுமாமாவும் அவர் மனைவிபட்டுவும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரே பெண் ரம்யா. அவளுக்கு வயது 14 ஆனால் வளர்ச்சியோ வயதுக்கு மீறி! அதைப்பர்த்த அவள் பெற்றோர்கள் மிகுந்த கவலைப்பட்டார்கள். பட்டு காயத்ரிக்கு அவ்வப்போது சமையலுக்கு உதவுவதற்கு அவர்கள் வீட்டிற்கு வருவாள். வரும்போதெல்லாம் ரம்யா *நாமக்கல் ஆஞ்சநேயர்* போல் வளர்ந்து கொண்டே போகிறாள் எங்கள் வசதி குறைவுக்கு எப்படி தான் மாப்பிள்ளை கிடைக்க போகிறானோ? என்று கூறி வருத்தப்படுவாள். ஸ்ரீதர் கல்யாணத்திற்கு பெண் கிடைக்காததால் காயத்ரி சோர்ந்து போனாள்.

அன்று ரம்யாவிற்கு 9th ரிசல்ட் வரவும் ஸ்வீட் எடுத்துக்கொண்டு காயத்ரி வீட்டிற்கு வந்தாள். அவளைப் பார்த்ததும் 'ஏன் ரம்யாவை ஸ்ரீதருக்கு திருமணத்திற்கு கேட்கக்கூடாது' என்ற எண்ணம் வந்தது. உடனே பட்டுவை சென்று பார்த்து தன் எண்ணத்தை கூறினாள். உடனே பட்டுவும் நாணாவும் எங்கள் பெண் அதிர்ஷ்டசாலி! உங்கள் சம்பந்தம் கிடைக்க நாங்கள் மிக புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று கூறி சந்தோஷப்பட்டார்கள் உடனே தன் எண்ணத்தை ஸ்ரீதரிடம் கூற அவன் மிகவும் கோபம் கொண்டு "ஏனம்மா, ரம்யா குழந்தை அவளைப் போய்எனக்கு பார்க்கிறீர்களே !என் வயது என்ன ரம்யாவின் வயது என்ன? "என கேட்க…..*என்னடா... புடலங்காய் வயது* எனக்கு ம்உன் அப்பாவிற்கும்12 வயது வித்தியாசம். ஆனால் உனக்கும் ரம்யா விற்கும் பத்து வயதுதான் வித்யாசம்!! அவர்களுக்கு உன்னை மாப்பிள்ளை ஆக்கி கொள்வதில் மிகுந்த சந்தோஷம் என்று கூறினாள். அவனுக்கோ யூஎஸ் போகவேண்டும். அவன் யூஎஸ் கனவு நிறைவேற ஒருவழியாக இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தான். கிட்டு ஐயர்வீடு மூன்று கட்டு வீடு. எனவே வாசல் அடைத்து பந்தல் போட்டு திருமணத்தை நடத்தினார்கள். ரம்யாவிற்கு தினுசு தினுசாக புடவை நகைகளை பார்த்து குழந்தையைப் போல் சந்தோஷம் அடைந்தாள். அவளுக்கு என்ன ஐஐடி மாப்பிள்ளை !யூஎஸ் மாப்பிள்ளை!! என்றுஊரே அவள் அதிர்ஷ்டத்தை பற்றி ஒரே பேச்சாக இருந்தது. ஸ்ரீதர் மட்டும் மன வருத்தத்துடன் இருந்தான். தான் படித்திருந்தும் இப்படிப்பட்ட குழந்தை கல்யாணத்திற்கு சம்மதித்தோமே என்று குற்ற உணர்ச்சி மேலோங்க இருந்தான்.

அவன் யூஎஸ் போக வேண்டிய நாளும் வந்தது!!! எல்லோரும் சென்னைக்கு அவனை வழியனுப்ப வந்தனர். அவன் கிளம்பும் போது தன் மனைவி ரம்யாவிடம் வந்து" நான் கிளம்புறேன் "என்று சொன்னதும் "ஓகே அண்ணா !ஜாக்கிரதையா போங்கோ " என்றாள் எப்போதும் போல்!! அவள் சிறு வயது முதல் எதிர் வீட்டில் இருந்ததால் அவனை *ஸ்ரீதர் அண்ணா* என்று தான் கூப்பிடுவாள் அதேபோல் இன்றும் கூறினாள். இந்த வார்த்தை அவன் மனதை ஈட்டி போல் குத்தியது.


ஸ்ரீதரை யூஎஸ் அனுப்பிவிட்டு திருவாரூர் வந்ததும் காயத்ரி ரம்யாவிடம் தொடர்ந்து படிக்கும்படி கூறினாள் நீ யுஎஸ் போனால் அவனுக்கு சரியாக இருக்க வேண்டும் என்று கூறி தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு அவளைப் படிக்க வைத்தாள். ரம்யாவும் ஒரு குறைவும் இன்றி நன்றாக படித்தாள். அவளும் பட்டப்படிப்பை முடித்தாள். அவள் படிப்புக்கேற்ப நல்ல வேலை டெல்லியில் கிடைத்தது. ஸ்ரீதரும் வேலைக்கு போவது நல்லது என்று கூறி அவளை வேலையில் சேரச் சொன்னான். அவளுக்கு துணையாக தன் அம்மா அப்பாவையும் டெல்லியில் குடித்தனம் போட வைத்தான். 

வருடங்கள் ஓடியது. அவர்கள் டெல்லியில் இருந்தசமயம் மாமியின் சொந்தகார பையன் சஞ்சய் டெல்லியில் ஒருவேலை விஷயமாக வந்தான். அவன் ரம்யாவின் திருமண விஷயம் பற்றி விசாரித்தான். அதைக்கேட்டதும் மனதளவில் வருத்தம்  அடைந்தான். ஸ்ரீதரின் படிப்பும் ஒருவழியாக முடிந்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்தான். வேலையில் சேர்ந்ததும் இந்தியாவிற்கு வந்தான். ரம்யாவை பார்த்து ஆச்சரியம் அடைந்தான் போகும்போது ஒன்றும் தெரியாமல் குழந்தைத்தனமாக இருந்த ரம்யாவிற்கும் தற்போது உள்ள ரம்யா விற்கும் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. 

அவளை தனியாக அழைத்துச் சென்று தனக்கும் அவளுக்கும் உள்ள வயது வித்தியாசத்தையும் தன் மனம் அவளை ஏற்க மறுப்பது பற்றியும் ஒளிவுமறைவின்றி கூறி தன்னை விட்டு அவளை விலகிச் செல்லுமாறு அதாவது தன்னை டைவர்ஸ் செய்துவிட்டு வேறு ஒரு நல்ல பையனை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினான். அவனுடைய பெற்றோர்கள் இதற்கு முதலில் சம்மதிக்கவில்லை. 

ஆனால் நான் செய்துகொண்டது *பொம்மை கல்யாணம்* என்றும் 14 வயது திருமண வயது இல்லை என்றும் இது சட்டப்படி குற்றம் என்றும் கூறினான். ரம்யா தன் காலில் நிற்க வேண்டும் என்று இதுவரை நான் இந்தியா வரவில்லை நான் வந்தால் நீங்கள்  அவளை யூ எஸ் அழைத்துச் செல்ல வற்புறுத்துவீர்கள். மனம் ஒப்பாத இந்த திருமணத்தால் ரம்யாவின் வாழ்க்கை பாழாகும் என்று கூறினான். நான் ஊருக்கு போகும் அன்று அவளிடம் விடைபெறும்போது அவள் குழந்தைப் பருவம் முதல் என்னை கூப்பிட்டது போல அன்றும் சரி அண்ணா போய் வாருங்கள் என்றாள். அந்த சொல் என் மனதை ஈட்டி போல் குத்தியது. அன்றே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அவளை நன்கு படிக்க வைத்து வேலைக்கு அனுப்பும் வரை இந்தியா வரக்கூடாது என்று தீர்மானித்தேன். என்று கூறினான். 

இதைக் கேட்ட காயத்ரி நீ ரம்யாவை டைவர்ஸ் செய்தால் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் ஏனென்றால் நம் வம்சம் தழைக்க வேண்டும் அதற்கு நீ சம்மதித்தால் உன் சொல்படி ரம்யாவிற்கு டைவர்ஸ் தரலாம் என்று கூறினாள்.

நான் ஏற்கனவே யூ எஸ் இல் சுப்ரியா என்ற பெண்ணை நான்கு வருடங்களாக காதலிக்கிறேன். ரம்யாவிற்கு மறுமணம் செய்தபின்தான் நாங்கள் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்துள்ளோம் என்றான். காயத்ரி தன் சொந்தகார பையனான சஞ்சய் அழைத்து ரம்யாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டாள். அவனும் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டான். ஆனால் ரம்யா தன் அம்மா அப்பாவின் சம்மதம் இல்லாமல் மறுமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டாள். 

தன் அம்மா அப்பாவிடம் சம்மதம் கேட்க திருவாரூர் சென்றாள். டெல்லியில் நடந்த விஷயங்களை அவர்களிடம்கூற அவர்கள் இருவரும் ஓ என்று அழுதுகொண்டு ' எங்கள் வசதியைக் குறைவிற்காக உன்னைப் பாழும்கிணற்றில் தள்ளுவது போல திருமண பந்தத்தில் இந்த மாங்கல்ய கயிற்றை உன் கழுத்தில் கட்டி உன் வாழ்க்கையை கருக வைத்து விட்டோம்'  என்று கூறினார்கள். அதைக்கேட்ட ரம்யா தான் டைவர்ஸ் கொடுக்க இருப்பதையும் சஞ்சய் தன்னை மணக்க இருப்பதையும் ஆதியோடு அந்தமாக கூறி உங்களிடம் சம்மதம் வாங்கவே இங்கு வந்தேன் என்றாள். இது என் மாமனார் மாமியார் முடிவு என கூறிவிட்டு தன் கழுத்தில் இருந்த திருமங்கல்யத்தை அவிழ்த்து தன் அம்மாவிடம் கொடுத்து இது என் சார்பாக ஸ்ரீ கமலாம்பிகை உண்டியலில் போட்டு விடு. நாளை நாம் மூவரும் டெல்லிக்கு விமானத்தில் போவதற்கு ஸ்ரீதர் அண்ணா ஏற்பாடு செய்துவிட்டார். என்று கூறியதைக் கேட்டு ரம்யாவை கட்டிக்கொண்டு முத்த மாரி பொழிந்தார்கள்.

ரம்யாவுக்கும் சஞ்சய்க்கும் டெல்லியில் உள்ள கல்யாண மண்டபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு ஆயிற்று, கிட்டு ஐயர் தம்பதிகள் ரம்யாவை தன் பெண்ணாக தத்து எடுத்துக் கொண்டார்கள். அதன்பின் ஸ்ரீதர் 'அண்ணா' ஸ்தானத்திலிருந்து மாப்பிள்ளைக்கு மாலையும் மோதிரமும் போட காயத்ரியும் கிட்டு ஐயரும் கன்னிகாதானம் செய்து வைத்தார்கள்.

ரம்யா, ஸ்ரீதர் & சுப்ரியாவைப் பார்த்து அடுத்த டும்டும் எப்போது ? என்று குழந்தை போல் கேட்க அனைவரும் கொல்லென்று சிரித்தனர்!

= = = = 



25 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. இந்தக் கதையைப் படித்தேன். என்ன கருத்து சொல்வதென்று தோன்றவில்லை. அறுபது வருடம் முன்பு இது புரட்சிக்கதையாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் அமைதியும் ஆரோக்கியமும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. ஐஐடி தொழில் நுட்பக் கல்லூரிகள் அனைத்துமே சுதந்திரத்துக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டவை. மேலும் இந்தக் கதை நடந்த காலம் சரியாகச் சொல்லாவிட்டாலும் சுமார் பத்து வருஷங்கள் முன்னர் என எடுத்துக் கொண்டாலும் ரம்யா போன்ற இளம்பெண்கள் இப்படி ஒரு திருமணத்துக்குச் சம்மதிப்பார்களா/பெற்றோர் தான் ஏற்றுக் கொள்வார்களா? சந்தேகமே! என்றாலும் முடிவு சுபம். ஶ்ரீதர் அம்பேரிக்கா போக வேறே ஏதானும் வலுவான காரணம் காட்டி இருக்கலாமோ!

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீதரின் செயல் முறையற்றதாக இருக்கிறது

    இதில் குற்றவாளி காயத்ரிதான்.

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீதரின் செயல் முறையற்றதாக இருக்கிறது

    இதில் குற்றவாளி காயத்ரிதான்

    பதிலளிநீக்கு
  7. அடப்பாவமே...!

    பாவிகளா ---> கொல்லென்று சிரித்த அனைவரும்...

    பதிலளிநீக்கு
  8. திண்டுக்கல்லாரை வழி மொழிகின்றேன்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இது எப்போது நடந்தது எனத் தெரியவில்லை. அந்த காலத்தில் பால்ய விவாகம் நடைமுறையில் இருந்தது. எங்கள் அம்மாவுக்கு திருமணம் நடந்த போது வயது 12 என்று சொல்வார்கள். அவர்கள் சுற்றத்தவர்களின் திருமண வயதுகளை கூறும் போதும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருப்போம். இக் கதையின் முடிவு நன்றாக உள்ளது. அந்த விஷயத்தில் ஸ்ரீதரின் முடிவை ஆமோதிப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், 1947 ஆம் ஆண்டில் என் அம்மாவிற்கு பதின்மூன்று வயது. அப்பாவுக்கு25 அல்லது 26. ஆனாலும் திருமணம் நடந்து அம்மா 53 வயதில் போகும்வரையும் நன்றாகவே வாழ்ந்தார்கள் எனலாம். என்னோட இரண்டு மூத்த நாத்தனார்களுக்கும் 13 வயது 15 வயது வித்தியாசத்தில் திருமணம்.

      நீக்கு
    2. எங்கள் பாட்டிக்கு 7 வயது என்று சொல்வார்கள். அம்மாவுக்கு தாமதமான திருமணம்-கொஞ்சம் உறவு முறையில். ஆனால் என் ஜெனெரேஷனில் மாமா பெண்கள், 10+ வயது வித்தியாசத்தில் திருமணம். (என் கசின், மாமா பெண்ணை, 13 வயது வித்தியாசத்தில், திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆர்வமாக முன்வந்தார், ஆனால் மாமி ஒத்துக்கொள்ளவில்லை). என் பெண், 7 வயது வித்தியாசமா என்று எங்களைப் பார்த்து ஆச்சர்யப்படறாள்.

      நீக்கு
    3. ஆமாம், நெல்லை. என் அம்மாவின் அம்மாவுக்கும் ஐந்து வயதில் பதினாறு வயது பிள்ளையுடன் திருமணம். விரல் போட்டுக்கொண்டிருப்பார் எனவும் மாமனார் என் பாட்டியை (மருமகளை) தோளில் தூக்கிக் கொண்டு வந்து பிறந்தகத்தில் விட்டு விட்டுப் போவார் என்றும் சொல்வார்கள். இதைப் பற்றி முன்னர் கூடக் குறிப்பிட்டிருக்கேன். எனக்கும் மாமாவுக்கும் கூட வயது வித்தியாசம் தான்! எங்க பெண்/மாப்பிள்ளைக்கும் வயது வித்தியாசம். பெண் மனப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்தாள்.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. காயத்ரி மாமி பிராயச்சித்தம் செய்து விட்டார் மருமகளை மகளாக ஏற்று.
    ஆனால் மறுமணத்திற்கு ரம்யா சம்மதம் தெரிவித்த காரணத்தால் கதை சுபமாக முடிந்தது இல்லையென்றால் ஸ்ரீதர், ரம்யா, சுப்ரியா வாழ்க்கை நரகம் தான் .

    குளத்தங்கரை அரசமரம் கதை நினைவுக்கு வந்தது.( சிறு வயது திருமணம். அதனால் ஏற்படும் விளைவு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா இல்ல! நினைவு மனதின் அடி ஆழத்தில் இருந்தது. கதை பெயர் நினைவில் வரலை. நன்றி கோமதி.

      நீக்கு
  12. கடைசியில் எல்லாம் சுபம். கதை நன்று. கதாசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  13. இந்தக் கதையில் யாராவது நல்லவர்கள் தென்படுகிறார்களா என்று பார்க்கிறேன். ஒருத்தரும் அகப்படவில்லை. ஸ்ரீதர், காயத்ரி, ரம்யா, சுப்ரியா...... என்று யாரை எடுத்துக்கொண்டாலும் அராஜகமான குணம். உருப்பட்டமாதிரிதான்.

    முதல் பகுதி நெருங்கிய சொந்தத்தில் நடந்துள்ளது. அவர்கள் ரிடையர்லாம் ஆகி நல்லாவே இருக்காங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி, இங்கே கொடுக்க வேண்டிய பதிலை மேலே கொடுத்துட்டேன். அங்கே போய்ப் படிச்சுக்குங்க! :))))

      நீக்கு
  14. கதை கொஞ்சம் சிக்கல் நிறைந்த கதை..

    சின்னதாக எழுத வேண்டும் என்றில்லாமல் இந்தச் சிக்கல்களையும் கதையின் கருவையும் கூடக் கொஞ்சம் ஆழ்ந்த பாத்திரப் படைப்புகளின் மூலம் (கதை பெரிதாகப் போனாலும் பரவாயில்லை என்று கதையின் போக்கில்) உணர்வுகளின் வெளிப்பாட்டின் மூலம் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. இதில் நிறைய சொல்ல இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கல்னு சொல்ல முடியலை. பெண்ணிற்கு விபரம் தெரியாத வயதில் கல்யாணம் பண்ணுவதைப் பலரும் ஆதரிக்கவே செய்வார்கள்/செய்கிறார்கள். மனதில் இவர் தான் நம்மவர் என்பது பதிந்து விடும். தடம் மாறிப் போகாது என்பதும் ஒரு காரணம். இந்தக் கதையின் நாயகனுக்கும்/நாயகிக்கும் பத்து வயசே வித்தியாசம் என்பதால் சேர்ந்து வாழ்ந்திருந்தாலும் அது ஏற்கப்பட வேண்டியதாகவே இருக்கும். ஏனெனில் இப்போதும் பத்து வயது வித்தியாசத்தில் நிறையத் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் மனம் பொருந்தவில்லை என்பதே இங்கே முக்கியக் காரணம். சின்ன வயசில் இருந்தே ஓர் குழந்தையாக/சகோதரியாகப் பார்த்தவளை மனைவியாகப் பார்ப்பது என்பது எல்லோராலும் முடியாது.

      நீக்கு
  15. நான் தட்டச்சுக் கற்கையில் என்னுடன் ஓர் பெண் தட்டச்சுக்கற்றுக் கொண்டிருந்தார். அவருக்கு எஸ் எஸ் எல் சி முடிஞ்சதுமே கல்யாணம் ஆகிவிட்டது. கல்யாணம் ஆகித்தான் படித்துக் கொண்டிருந்தார். மாமா படிக்க வைப்பதாகவும் சொல்லுவார். மாமாவைத் தான் திருமணம் செய்திருப்பதாகவும் சொல்லுவார். அவருக்குக் குழந்தை பிறந்த பின்னர் வீட்டுக்கு அழைக்கவே குழந்தையைப் பார்க்க நாங்க சிநேகிதிகள் எல்லாம் போனோம். அங்கே அவர் மாமாவைப் பார்த்தால் 30/35 வயதுக்குக் குறையாது வீட்டில் பாட்டி இருந்தார். அவர் மாமாவுக்கு அம்மா. இந்த சிநேகிதிக்குப் பாட்டி. அக்கா பெண். அக்கா குழந்தை பெற்றதுமே இறந்து விட்டதால் பாட்டியும் மாமாவும் தான் வளர்த்துப் படிக்க வைத்திருக்கிறார்கள். பேத்தியைத் தன் பிள்ளைக்கே அந்தப் பாட்டி திருமணம் முடித்திருக்காங்க. எப்படி மனசு வந்தது? வளர்த்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள எப்படி அவர் சம்மதித்தார்? இது அந்த நாட்களில் எங்களுக்குள் ஓர் பெரிய விவாதமாக இருந்திருக்கு. அவங்க என்னமோ சந்தோஷமா இருந்தாப்போல் தான் தோணும். :(

    பதிலளிநீக்கு
  16. அந்தக் காலத்துக்கு ஏற்ற கதை . முடிவில் சுபமானது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!