வியாழன், 9 ஜூன், 2022

கரும்பாயிரம்

 [சென்ற வாரத் தொடர்ச்சி....]

இந்த கான்டீன் என்று சொன்னேனே, அதன் அருகிலேயேதான் சலூனும்  இருந்தது.  அதன் உரிமையாளர் பெயர் கரும்பாயிரம்.  பெயர் மறக்கவில்லை பாருங்கள்.  கொஞ்சம் வித்தியாசமான பெயர்தான் இல்லையா?  அதனால்தான் மறக்கவில்லையோ, என்னவோ...  

பெயர் மட்டுமல்ல, அவர் உருவமும் மறக்கவில்லை.  என்  மனக்கண்ணில் அப்படியே இன்னமும் தெரிகிறார்.  உங்களுக்கு அதைக் காட்ட முடியாது எனினும், உங்கள் கற்பனைக்கு ஒரு உருவம் கொடுக்கிறேன்.  சற்றே குண்டான உருவம்.  கணுக்கால் வரை கட்டிய பழுப்பு கலந்த வெள்ளை வேஷ்டி.  கொஞ்சம் கருத்த உருவம்.  கம்பி கம்பியாய் நீட்டியிருக்கும் தலைமயிர்.  உருண்டை முகம்.  பென்சிலால் வரைந்தது மாதிரி மீசை.  மௌனச்சாமி போல அவர் அதிகம் பேசமாட்டார்.  அவர் முகத்தில் சிரிப்பையும் பார்த்ததில்லை.  கடுவன் பூனை போன்ற முகம்.

அவர் பெரும்பாலும் யாருக்கும் முடி வெட்ட மாட்டார்.  அல்லது எங்களை போன்ற பொடியன்களுக்கு வெட்ட மாட்டார்.  மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வெட்டி பார்த்திருக்கிறேன்.  அவருக்கு ஒரு உதவியாளர் இருந்தார்.  விஸ்வநாதன் விஸ்வநாதன் என்று பெயர்.  (கிர்ர்ர்..  ஒரு விஸ்வநாதன்தான்)

அவரை வர்ணிக்கவா...   அவரும் கணுக்கால் வரைதான் வேட்டி கட்டி இருப்பார்.  அவர் வேட்டி கரும்பாயிரம் வேட்டியை விட சற்று வெளுப்பாக இருக்கும்.  சிரித்த முகம்.  சாந்த ஸ்வரூபி.  மரக்கால் போன்ற முகம்.  முடியை ஒட்டி வெட்டிக்கொண்டிருப்பார்.  எங்கள் மீது தனிப்பிரியம் கொண்டவர்.  'தம்பி தம்பி' என்று அன்பாகப் பேசுவார்.  எல்லோரிடமும் கலகலப்பாகவும், பிரியமாகவும் பேசுபவர்,  நிறைய பேர்களின் பெயரை அறிந்து வைத்திருப்பார்.  "ஹரித்தம்பி, குமார் தம்பி, ஜப்பார் தம்பி" என்றெல்லாம் பெயர் சொல்வார்.  பின்னாட்களில் தனிக்கடை வைக்கும் உத்தேசம் இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது!  பெரும்பாலும் ஜூனியர் மாணவர்கள்தான் இந்தக் கடைக்கு வருவார்கள் என்று சொல்லலாம். 

அவர் எங்களுக்கு வெட்டும்போது முதலாளி சற்று தூரத்தில் பெஞ்சில் காலை நீட்டிக்கொண்டு சைடு வாக்கில் படுத்து கைகளை முட்டுக் கொடுத்து தூங்கி கொண்டிருப்பார், அல்லது பிலிமாலயா, பேசும்படம் என்று புரட்டிக் கொண்டிருப்பார்.  எப்போதாவது விஸ்வநாதன் அண்ணன் இல்லை என்றால்தான் அவர் எங்களுக்கு சேவை செய்வார்.  எங்களுக்கும் ('ம்' மை  கவனிக்கவும்) வேப்பங்காயாக இருக்கும்!  ஏனென்று தெரியாத ஒவ்வாமை.  சிலரைக் கண்டால் ஆரம்பத்திலேயே அப்படித் தோன்றி விடுகிறது!  முன்ஜென்மக் காரணம் ஏதாவது உண்டா என்று ஆராய வேண்டும்!  கரும்பாயிரத்துக்காக சொல்லவில்லை, பொதுவாக!

ஆரம்ப கால நான்!  மூளை இருக்கோ இல்லையோ முடி நிறைய இருக்கும்!

பள்ளியில் ஸ்ட்ரிக்ட் என்பதாலும், வீட்டின் வழக்கம் என்பதாலும் மாதம் பிறந்ததும் அப்பா சரியான சில்லறையை (பெரும்பாலும்) கையில் தந்து எங்களை அக்கடைக்கு அனுப்பி விடுவார்.  ஆரம்ப காலங்களிலே அவரே வந்து எங்களுடன் அமர்ந்திருப்பார்.  அப்பாவும் பிள்ளையும் ஒரே நாளில் முடிவெட்டிக் கொள்ளக் கூடாது என்று பாட்டி சொல்லி இருப்பதால் அவர் வேறொரு நாளில் வெட்டிக்கொள்வார்.  பாட்டிக்கு நாங்கள் சகோதரர் இருவரும் ஒரே நாளில் வெட்டிக் கொள்வதே கூட பிடிக்காது.  எதிர்த்து கொண்டே இருப்பார்.  என்னைத் தனியாக அனுப்ப முடியாது என்பதாலும், பள்ளிக் காரணங்களாலும் அண்ணனும் கூட வந்து விடுவது வழக்கம்.

எங்களைத் தவிர மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் அந்தக் கடைக்கு வருவார்கள்.
  ஆனாலும் கூட்டம் ரொம்ப இருக்காது.  நிறைய பேர் ரோட்டுக்கடை என்று அழைக்கப்படும் மாடர்ன் கடை ஒன்றுக்கு சென்று விடுவார்கள். 

காம்பௌண்டுக்கு வெளியே மெயின் ரோடில் கதவிலேயே ஸீத்ரூவாக கண்ணாடி எல்லாம் போட்டு மாடர்னாக இருந்த கடை அது.  நாங்கள் அங்கு போனதே இல்லை!  எங்களுக்கு முடிவெட்ட இந்தக் கடையும், டிராயர் சட்டை தைத்துக்கொள்ள ஏழுமலை கடையும்தான்.  ஏழுமலை அய்யங்டைத்தெருவில் இருந்தார் என்று நினைவு.  அவர்  சந்திரபாபு நீதியில் போட்டிருப்பாரே அதுமாதிரி டிராயர் தைத்துத் தருவார்.  சொல்லி இருக்கிறேன்.

எங்களுக்கு சமயங்களில் வேறொரு சங்கடமும் வரும்.  'முடிவெட்டிக் கொண்டு விஸ்வநாதனிடம் 'அப்பா அப்புறம் வந்து தருவார்னு  சொல்லி விட்டு வந்து விடுங்கள்.  நான் பின்னர் தருகிறேன் என்று சொல்' என்பார் அப்பா.  

எங்களுக்கு விஸ்வநாதனிடம் சொல்லத் தயக்கம்.  இருக்காதா பின்னே?  அவர் பணிக்கு வரும் நேரம் தெரியும்.  பெரும்பாலும் அவர்தான் காலை வந்து கடையைத் திறப்பார்.  எப்போதாவதுதான் முதலாளி கடையைத் திறந்தபின் ஒரு குற்ற உணர்வுடன் குறுகிப்போய் உள்ளே வருவார்.  மத்தியான சாப்பாட்டுக்கு ஒரு தூக்குச் சட்டியில் உணவும், மடித்த ஒரு மஞ்சள் பையும் கொண்டு வருவார்.  உள்ளே ஏதோ டாகுமெண்ட் போல பேப்பர் வைத்து மடித்து வைத்திருப்பார்.

இது மாதிரி சமயங்களில் முன்னரே காத்திருந்து அவர் வந்து கதவைத் திறக்கும் நேரமே சொல்லி விடுவோம்.  கடை திறக்கும் நேரமே கடன் சொல்கிறோம், அது சரியல்ல  என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை.  ஆனால் எங்கள் சங்கடத்தை விச்சு அறிந்திருந்தார்.

ஆனால் அப்புறமப்புறம் அவருக்கும் இதை முதலாளியிடம் சொல்லத் தயக்கம்.  இருக்காதா பின்னே?   'நீங்களே...  முதலாளி கிட்டயே சொல்லிடுங்க தம்பி' என்பார்.  அவர் இதை முதலாளியிடம் சொல்லும்போது அவர் என்ன சொன்னாரோ!  

வேறு வழியின்றி நாங்கள் இதை கரும்பாயிரமிடம் சொல்வோம்.  அவர் பேசவே மாட்டார்.  அவர் குரல் கூட எங்களுக்கு நினைவில்லை.  எங்களை உறுத்துப் பார்த்தபடி ஒரு 40 பக்க நோட்டில் எழுதிக் கொள்வார்.

சில சமயங்களில் அப்பா விஸ்வநாதனை வீட்டுக்கே அழைத்து முடிவெட்டிக் கொண்டிருந்திருக்கிறார்.  வாசலில் ஒரு சேர் போட்டு அமர்ந்து, மீசையை நீவி விட்டுக்கொண்டே வெட்டிக்கொள்வார்.  ஓரிருமுறை எங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது!  மீசை நீவும் பாக்கியமல்ல, வீட்டில் முடிவெட்டிக்கொள்ளும் பாக்கியம்!

இந்த சலூனுக்கருகில் ஒரு கேன்டீன் இருக்கிறது என்று சொன்னேன் இல்லையா?   அதுதான் எங்கள் கவர்ச்சியே..   அதை ஒரு முஸ்லீம் நண்பர் நடத்திக் கொண்டிருந்தார்.  அவர் பெயர் சலீம்.  அவருக்கு ஒரு சகோதரரும் உண்டு.  அவர் பெயர் நினைவில்லை.  எவ்வளவு பெயர்தான் நினைவு வைத்துக் கொள்வது!  சலீம் ஒல்லியாக, அழகாக, கிராப் வெட்டி, அளவான மீசையுடன் இருப்பார்.  பெரும்பாலும் லுங்கியுடன், எப்போதாவது பேன்ட்ஸில் இருப்பார்.  முடி வெட்டிக் கொண்டபின் அப்பா எங்களை இங்கு அழைத்துச் செல்வார்.  இட்லி, தோசை என்று இருந்தாலும் எங்கள் தெரிவு தட்டின்மீது மந்தார இல்லை பரப்பி அதில் வைத்துத் தரப்படும் பூரியும், அதன் நடுவே வைக்கப்படும் உருளை மசாலும்.  

மொட்டை அடிக்கும் முன்!

டிஸ்பிளே அலமாரியில் அவர் ஒரு டம்ளர் நிறைய பாலாடை வைத்திருப்பார்.  எனக்கு அதன்மேல் எப்போதுமே ஒரு கண்!  வீட்டிலேயே அம்மா கரி அடுப்பில் பால் வைத்து காய்ந்ததும் மேலே வரும் ஆடையை ஒரு ஸ்பூனால் எடுத்து சிறு தட்டில் வைத்து சாப்பிடும் பழக்கம் உண்டு எனக்கு.  ஆனால் கடைசி வரை அந்த டம்ளர் பாலாடை நான் அங்கு சாப்பிடவே இல்லை.

நாங்கள் மட்டும் சலூனுக்கு செல்லும் நாட்களில் அப்பா பூரிக்கெல்லாம் காசு தந்தது துர்லபம்.  

இந்த மாதிரி நாட்கள் கடந்துகொண்டிருந்த ஒரு நாளில், ஒரு மாதம் நானும் அண்ணணும் முடிவெட்டிக் கொள்ள புறப்பட்டோம்.  சமீப காலமாக எங்களுக்குள் வாக்குவாதங்கள் அதிகமாகி இருந்தது.  யார் சொல்வது சரி என்பதில் குடுமிப்பிடி சண்டைகள் நடந்தன.

இதோ, இப்போது என் மகன்கள் இருவரும் வாக்குவாதத்தில் இறங்கும்போது பார்க்கிறேன்.  வாக்குவாதம் தடித்து ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் போது கவலையாக இருக்கும்.  அந்த அளவு மிகக் கடுமையாக இருக்கும்.  ஒருவர் பேசுவதை இன்னொருவர் கேட்காமலேயே சண்டை இடுவார்கள்.  

என் கவலை எல்லாம் போகும் அளவு மறுநாள் அருகருகே அமர்ந்து வேறு விஷயம் சாந்தமாய் பேசிக் கொண்டிருப்பார்கள். .

நானும் என் சகோதரனும் போட்ட சண்டைகளை மறந்து விட்டேன் போல...  அது மாதிரி அன்றும் ஏதோ வாக்குவாதம், சண்டை.  ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு முன்னாலும் பின்னாலும் ஓடி ஒரு வழியாய் கடையை அடைந்தோம்.  விச்சு இன்னும் வந்திருக்கவில்லை.  வாக்கு வாதத்தின் உச்ச கட்டமாய் நாங்கள் பேசிக் கொண்டிருந்த விஷயத்தில் பெட் கட்டினோம்.

என்ன பெட்?

"நீ தோற்றால் எனக்கு பூரி வாங்கி கொடுக்க வேண்டும்"  

"நீ தோற்றாலும்..."

எப்படி இருந்தாலும் பூரி சாப்பிட வழி செய்து கொண்டோம்.

காசில்லாமல் எப்படி வாங்குவது?  அப்பா கொடுத்து அனுப்பி இருந்த காசில் கொஞ்சம் மிச்சம் இருக்கும்.  அதைத் தவிர கொஞ்சமும் வேண்டும்.  என்ன வழி?  மிச்ச காசுக்கும் வீட்டில் பதில் சொல்லவேண்டும் என்கிற எண்ணம் அந்த நிமிடம் வரவில்லை.

பந்தயத்தில் நான் தோற்றுப்போனேன். 

மொட்டை அடிப்பது என்று முடிவானது.  முடி வெட்ட 75 பைசா என்று ஞாபகம்.  ஆனால் மொட்டைக்கு 50 காசுதான். 

சரி, யார் மொட்டை அடித்துக் கொள்வது?

"நீதான்.  நீதானே தோற்றுப்போனே?"  என்றான் அன்புக்கோர் அண்ணன்.

தோற்றது நான்.  எனவே எனக்கும் அதுதான் நியாயம் என்று பட்டது.  பாருங்கள், நான் சின்ன வயதிலிருந்தே ரொம்ப நியாயவான்.  விச்சு வந்து  கடையைத் திறந்திருக்க, உள்ளே சென்று எனக்கு மொட்டை என்றதும் விச்சு தயங்கினார்.  அப்பாதான் சொன்னார் என்று ஒரே அடியாய் அடித்து விட்டோம்!  அவரும் எனக்கு அடித்து விட்டார்!

என்னுடைய நேர்மையை நினைத்து எனக்கே "பூரி"ப்பு தாங்கவில்லை.  அம்மாவிடம் சொன்னால் பாராட்டுவார் என்று நினைத்துக்கொண்டே  (அவர் எதற்கெடுத்தாலும் என்னை பாராட்டும் ரகம்) பக்கத்து கேன்டீனில் சென்று ஆனந்தமாய் ஆளுக்கொரு பூரி செட் சாப்பிட்டு விட்டு வீடு சென்றோம்.

வீடு சென்றோமா...  என்ன நடந்தது, என்ன சொன்னார் அண்ணன் அப்பாவிடம் என்று நினைவில்லை.  ஆக, நான் இரண்டாவது முறை பந்தாடப்பட்டேன். அதிலெல்லாம் அப்பா தாராளம்.  அண்ணனுக்கு அடி  ஒன்றும் விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  வேண்டுதல் அது இதுவென்று முருகன் பெயரைக் கூட இழுத்ததாய் நினைவு.

ஆனால் என்ன நினைத்தாரோ, நான் பள்ளிக்குச் செல்லும் முன்பு  எட்டணாவுக்கு ஒரு தொப்பி வாங்கி கொடுத்து விட்டார்.  நல்ல அப்பா. 

இதனால் சகோதர சண்டைகளின்போது சில நாட்களுக்கு என் சகோதர சகோதரியால் நான் 'மொட்டை' என்று அழைக்கப்பட்டேன்!

ஆனால் ஒரு பூரி செட்டுக்காகத்தான் நான் மொட்டை அடித்தேன் என்பது எனக்கும் அண்ணணுக்கும்தான் தெரியும்!

பின்னர் வந்த நாட்களில் நாங்கள் ரயில் நிலையம் அருகில் இருந்த ஆனந்த் பவன், நியூ பத்மா கேப் போன்ற 'பெரிய' ஹோட்டல்களிலும் சாப்பிட்டு இறும்பூதெய்தினோம்.   கேன்டீன் இட்லி தோசைகளுக்கும் இங்கிருக்கும் இட்லி தோசைகளுக்கும் நிறைய வேறுபாடுகள், ருசிகள்!  பரோட்டா அறிமுகமானதும் இங்குதான்.  இங்கு டிபன் சாப்பிட்டு விட்டு தெருவிலேயே கடை வைத்திருந்த சுப்பையாபிள்ளை பால்கடையில் பால் சாப்பிடுவது ஒரு வழக்கம் அனைவருக்கும்.  அந்த பாலில் அப்படி என்ன மாயமோ, அவ்வளவு சுவையாக இருக்கும்.  சுண்டக் காய்ச்சிய பாலில் பனங்கல்கண்டு போட்டு பித்தளை டபரா டம்ளரில் தருவார்.  டோக்கன் வாங்கி வரிசையில் காத்திருக்க வேண்டும்!

அதேபோல ஏழுமலையிடமிருந்து விடுபட்டு பாரத் டெயிலர் என்கிற ஒரு நவநாகரீக இளைஞரிடம் ட்ரெஸ் தைத்தும் போட்டுக்கொண்டோம்.  துணிக்குவியலின் நடுவே தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே எங்களைக் கண்ணால் அளவிட்டு டிராயர் எனும் பெயரில் சாக்கு தைத்துக் கொடுத்த ஏழுமலைக்கும், 

பெரிய காலர், (பட்டன் வைத்து திறந்து மூடும்) சட்டைப்பை, பட்டன் வைக்கும் இடங்கள் போன்றவற்றில் பட்டை வைத்து தைத்த சட்டை போட்டுக்கொண்டு அளவெடுக்கும் நாடாவை தோளில் போட்டபடி ஸ்டைலாய் இருக்கும் தொங்குமீசை, ஸ்டெப் கட்டிங் இளைஞர் பாரத் டெய்லருக்கும் ஏகப்பட்ட வித்தியாசம்!
=============================================================================================================

கொஞ்ச நாள் மட்டும்...!

மேகமாய் மாற ஆசை 
வேகமாய் தூரங்களைக் கடக்கலாம்.
பாஸ்போர்ட் விசா தேவை இல்லை 
வேகத்தடைகள் எங்குமில்லை 
சிறை செய்ய முடியாது 
துரத்தி வருவார் யாருமில்லை 
மாறும் உருவம் காட்டி 
மாறா வேகம் கூட்டி 
பறந்து எங்கும் திரியலாம் 
சாலைச்சிக்கல் முற்றும் இல்லை 
சாவகாசமாய் தாண்டிச் செல்லலாம் 
மக்களுக்கு 
நிழலும் தரலாம், நீரும் தரலாம் 


நதியை நனையாமல் கடக்கலாம் 
நதியையே நாம் நனைக்கலாம் 
மேருவையும் தாண்டலாம் 
கடலையும் கடக்கலாம் 
பனிமலைக் கயிலாயத்தை சுற்றி வந்து 
பரமனை நீரால் நனைக்கலாம் 
மனம் நனையத் துதிக்கலாம் 
வனங்கள் மீது பறந்து, பொழிந்து 
மரங்கள் நிறைய வளர்க்கலாம் 
மழைபொழியும் மேகமாய் இருப்பதாலேயே 
தாகக்கவலை ஏதுமில்லை 
அந்தியில்லை, சந்தி இல்லை 
காலை இல்லை, மாலை இல்லை 
பசி, தூக்கம் எதுவுமில்லை 
காற்றடிக்கும் திசையிலே 
கடுகி நாமும் விரையலாம் 
வானமெங்கும் பறக்கலாம் 
வளைந்து வளைந்து மிதக்கலாம்.
நகர்ந்து பறந்து மிதந்து நாளும் 
நகர்வலங்கள் நாமும் நடத்தலாம் 

=========================================================================================================

//என் தம்பி சின்ன மருதுவை, மூன்று நாளைக்கு முன் தூக்கிலிட்டதால், என்னைத் தூக்கில் ஏற்றுவதை நிறுத்தி வைக்கக் கூடாது. அப்படி செய்வது, தரும சாஸ்திரத்துக்கு ஏற்காது. //

காட்டில் தலைமறைவாக இருந்த மருது சகோதரர்கள் பிடிபட்டு, பெரிய மருது, அக்.,10ல் தூக்கிலிடப்பட்டார்.
அப்போது அவர், கிழக்கிந்திய கம்பெனி சேனாதிபதி கர்னல் ஆக்னி துரை முன்பாக, மரண வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது.
அது:
என்னுடைய ஜமீன், வேலு நாச்சியை கல்யாணம் செய்து கொண்டதன் மூலமாக, சிவகங்கை ஜமீனுக்குரிய உயில் சாசனத்தை பெற்றிருக்கிறேன். ௧௭௭௩ல் உயில் சாசனம் பெற்று, மாத்தூர் நவாடி அவர்களால், ஜமீனை ஜப்தி செய்து, ஏலமாக்கிய பணத்தை, நான் கட்டி, ஏலத்தை நீக்கி, அனுபவித்து வருகிறேன். என்னைத் தவிர, இதில், வேறு யாருக்கும் பாத்தியமில்ல
தேவஸ்தானம், பண்ணை மற்றும் கொள் கிரயம், சோறு தேட்டு, ஆயம், சுங்கம், சாயவேல், உப்பளம், சத்திரங்கள், மடம் இவைகள் என்னால், கிரயத்துக்கு வாங்கப்பட்டன; நானே அனுபவித்து வருகிறேன். இந்தச் சொத்துகளில் யாருக்கும் எந்த விதமான பாத்தியமும் இல்லை.
நானும், என் வாரிசுகளுமே பாத்தியமுடையவர்கள். மேற்கண்ட சொத்துகள், நான் சுயார்ச்சிதமாக சம்பாதித்தவை. நான், பாஞ்சாலங்குறிச்சி கட்ட
பொம்முவுக்கும், ஊமைத்துரைக்கும் உதவி செய்யவில்லை; இடம் கொடுக்கவும் இல்லை.
என்னால் கட்டப்பட்டிருக்கும் சத்திரங்களுக்கும், கோவில்களுக்கும் விடப்பட்டிருக்கிற, தரும சாசனங்கள், மற்றவர்களுக்கு கொடுத்திருக்கிற தஸ்தாவேஜுகளில் கண்ட சொத்துகள், யாவும் அவரவர்களே அனுபவிக்கும்படி செய்ய வேண்டும்.
என் தம்பி சின்ன மருதுவுக்கும், எனக்கும், தாய் ஒருத்தி; தகப்பன் வேறு வேறு. சின்ன மருதுவுக்கு, ஜமீனில் யாதொரு பாத்தியமும் இல்லை. அவனை மானேஜராக மட்டுமே வைத்திருந்தேன். அவன் பாஞ்சாலக்குறிச்சி கட்டபொம்முவுக்கும், ஊமைத்துரைக்கும் அடைக்கலம் கொடுத்து, காத்ததாக சொல்லப்படுகிறதே தவிர, எனக்கு எதுவும் தெரியாது.
என் தம்பி சின்ன மருதுவை, மூன்று நாளைக்கு முன் தூக்கிலிட்டதால், என்னைத் தூக்கில் ஏற்றுவதை நிறுத்தி வைக்கக் கூடாது. அப்படி செய்வது, தரும சாஸ்திரத்துக்கு ஏற்காது. நானே கழுத்தில், கயிற்றை போட்டுக் கொள்கிறேன்.
என் வாரிசுகளை வரவழைத்து, என் ஜமீனை கொடுக்க வேண்டும்.
ஜமீன் சொத்துகளை, என் சந்ததிகளுக்கு கொடுத்து விடுவதாகவும், நான் அமைத்திருக்கிற தரும நிலையங்களுக்கு, நான் ஏற்படுத்தியிருக்கிற பிரகாரம் யாவும் ஒழுங்காக நடக்க வேண்டும். அதற்கு, நீங்கள் எனக்கு உறுதிமொழி தருவதுடன், அதற்கு அத்தாட்சியாக, கவர்ன்மென்ட் கத்தியை போட்டுத் தாண்டி, நீங்கள் சத்தியம் செய்து தர வேண்டும்.
என் வாரிசுகள்: என் மனைவி ராக்காத்தாள், அவள் மகள் மருதாத்தாள், இரண்டாவது மனைவி கருப்பாயி ஆத்தாள். அவருக்கு, கருத்தையா என்று ஒரு மகன், கண்ணாத்தாள் என்று ஒரு பெண். இருவருக்கும், சந்ததியில்லை. மூன்றாம் மனைவி, பொண்ணாத்தாள்; அவருக்கும் சந்ததியில்லை. நாலாம் மனைவி, ஆனந்திபாய், அவருக்கு ஒரு பெண் குழந்தையுண்டு. ஐந்தாம் மனைவி, மீனாட்சி; அவள் அன்னிய ஜாதி. அவருக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. எனக்கு, சிவகங்கை ஜமீன் உயில் சாசனம் செய்து கொடுத்த, முதல் மனைவி வேலு நாச்சி இறந்து, ஒரு வருஷம் ஆகிறது. அவருக்கு சந்ததியில்லை.
என்னுடைய வாரிசுகளை, கம்பெனியார்கள் எந்தவொரு இம்சையும் செய்யாமல் இருக்கும்படி, கேட்டுக் கொள்கிறேன்.

மேலே சொன்னபடி, நீங்கள் கத்தியை போட்டு சத்தியம் செய்து கொடுத்ததை, நான் நேரில் பார்த்துக் கொண்டேன். ஆகையால், ஆகாச வாணி, பூமாதேவி சாட்சியாக, நான் என் கழுத்தில் கயிறு போட்டுக் கொள்கிறேன்.
(ஒப்பம் பெரிய மருது சேர்வை)
ஆதாரம்: கவிஞர் சுரதா தொகுத்த, 'நெஞ்சில் நிறுத்துங்கள்' நூலிலிருந்து...
=================================================================================================

ரசித்த படங்கள் வரிசையில்...

குறும்பும் அதிகம், செல்லமும் அதிகம் என்று தெரிகிறது...!
==========================================================================================

ஜோக்ஸ்... ஜோக்ஸ்...




============================================================================================================

இந்த வாரம் 'டாட்டா' காட்ட என்னைக் கூப்பிட்டிருந்தார்.. அப்புறம் அவரே சின்னப்புள்ளையா மாறி 'டாட்டா' காமிக்கிறாராம்.. யாரும் பார்க்கறதுக்கு முன்னாடி என்னை போகச் சொல்லிட்டார்!

பை.. பொழச்சு கிடந்து அடுத்த வாரம் பார்ப்போம்!

108 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. Super post. Enjoyed reading each and every word of your ' Poori adventure '

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதியான தங்கள் எண்ணங்களில் பயங்கர நினைவாற்றல் தங்களுக்கு
    எல்லோரது பெயர்களும் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறீர்களே..

    இரண்டாவது தடவை "பூரி" க்கும் ஆசையுடன் நீங்கள் அப்பாவிடம் அடி வாங்கியதற்கு கண்டிப்பாக முருகன் காத்தருள வந்திருக்க மாட்டார். ஹா. ஹா.ஹா.
    ஒரு வீட்டில் அண்ணனும், தம்பியும் சேர்ந்தாற் போல முடி வெட்டிக் கொள்ள கூடாதுதான்.ஆனாலும் உங்கள் வீட்டில் எப்படியோ அனுமதித்து விட்டிருக்கிறார்கள்.. அந்த ஜோரில் கை கோர்த்து நீங்கள் இருவரும் சென்றதினால், உணர்ச்சிவசப்பட்டு பூரிக்காக நீங்கள் முடி இழந்ததை நல்ல நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள்

    இரண்டு சகோதரர்கள் இருக்கும் வீட்டில் எப்போதும் சண்டைதான் போலும். எங்கள் இரு குழந்தைகளும் இப்படித்தான் அடிதடியுடன் சண்டையிட்டு பின் அடுத்த நிமிடமே சமரசத்துடன் பாசத்தை பொழிந்து கொள்வார்கள். இவர்கள் எப்போது இப்படி மாறுவார்கள் எனத்தெரியாமல் எனக்கு அவர்களை பார்ப்பதிலேயே பாதி பொழுதுகள் பறக்கும்.

    மேகக் கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள் . பிறவற்றை படித்து விட்டு மீண்டும் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான பாராட்டுக் கருத்துக்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  4. கும்பகோணத்தில் கரும்பாயிரம் பிள்ளையார் என்ற கோவில் உண்டு. சலூன் உரிமையாளர் கும்பகோணம் போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? எனக்குத் தெரியாது.

      நீக்கு
    2. இதைப் படித்த பின்னர்தான், எனக்கு சோழநாடு யாத்திரையின்போது இந்தக் கோவிலின் அருகிலிருந்த சத்திரத்தில் தங்கியது நினைவுக்கு வருகிறது. அதன் எதிரில் குளம் ;நன்றாக காம்பவுண்ட் வேலி போட்ட) குளம் இருக்கும்.

      நீக்கு
    3. க்ரூப்பில் போட்டோ பார்த்தேன்!

      நீக்கு
  5. ரசித்துப் படித்தேன். பிரமாதம்

    பதிலளிநீக்கு
  6. பூரிக்காக மொட்டை அடித்தது ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  7. குழந்தையாக புகைப்படங்கள் அருமை...

    பூரியின் மேலுள்ள காதல், "பூரி"ப்பில் தெரிந்தது...!

    பதிலளிநீக்கு
  8. // பொழச்சு கிடந்து //

    இப்படி வேண்டாமே... அதை நீக்கி விடவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் தவறில்லை DD.  இஸ்லாமிய நண்பர்கள் இனி நடக்கவிருக்கும் ஒரு செயலைப் பற்றி முன்னரே சொல்லும்போது "இன்ஷா அல்லாஹ்" என்பார்கள்.  அதாவது அல்லாஹ் மனது வைத்தால், அல்லது அல்லாஹ்வின் கருணையில் என்று பொருள் வரும்.  தலைக்கனமாக நாம் பேசக்கூடாது, இறைவனே முடிவு செய்பவன் என்று பொருள்.  அது போல எங்கள் இல்லங்களிலும், பெரும்பாலான இல்லங்களிலும் இந்த "பொழச்சு கிடந்து" வார்தையைச் சொல்லியே சொல்வார்கள்!  நான் சில சமயம் 'இன்ஷா முருகா' என்பேன்!

      நீக்கு
    2. இங்கும் பலர் சொல்வதை கேட்டுள்ளேன்...

      இரண்டு முறை heart attack வந்த போதும் தப்பித்தவர், "heart problem எதுவுமில்லைன்னு சொல்லி விட்டார்கள், இதோ நாளை வந்து விடுவேன்" என்று எங்களிடம் மிகவும் மகிழ்வாக சொன்னவர், அடுத்த நாள் இல்லை...

      அவர் வேறு யாருமில்லை, எனது மாமனார்... என்னுடன் நண்பன் போலவும் பழகியவர்... ம்... நேற்றோடு மூன்று மாதம் முடிந்தது...

      நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
      பெருமை உடைத்துஇவ் வுலகு

      பெருமை = பேரியல்பு

      நீக்கு
    3. Man Prooses; God disposes என்பார்களே..   அது மாதிரி.

      நீக்கு
  9. மேகம் கவிதை மிகவும் ரசித்தேன். அதற்கு மேலே இருந்த பதிவை நினைவுபடுத்தியது. பெரிய மேகம் (அண்ணன்) வந்து மோதி, மின்னல் கோபம் எழுந்து நீங்கள் (சிறிய மேகம்) கண்ணீர் விடுவதை (மழை) மனக்கண்ணால் காண முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணீரா?  நானா?!   பூரி சாப்பிட்ட இனிய நினைவுடன் அப்பாவின் கை டிராயர் நாடாவிலிருந்து தளர்ந்த நேரத்தில் ஓடிப்போய் விடுவேன் இல்லை?

      நீக்கு
  10. //பொழச்சுக் கிடந்தா/ - அம்மா சொல்லிச் சொல்லி அதைக்கேட்டு எனக்கும் இப்படிச் சொல்லும் பழக்கம் இருந்தது, இருக்கிறது. அதுபோல எங்க போற என்ற கேள்வியையும் விரும்புவதில்லை. அதற்கு எப்போதும் பதில் சொல்லுவதுமில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொழைச்சுக் கிடந்தா, பிச்சைக்காரனுக்கு! இந்த வார்த்தைகளின் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் இது தப்பாய்த் தெரியாது. இப்போவும் நாங்க பொழச்சுக்கிடந்தாக் காலம்பரப் பார்க்கலாம் என்போம். ஒவ்வொரு நாளும் இறைவன் கொடுக்கும் வரம். எந்த நேரம் எது நடக்கும் என்பது தெரியாது என்பதால் நாம் இருக்கும் ஒவ்வொரு நாளையும் அவன் கொடுக்கும் வரமாக எண்ணிக் கொண்டாடுகிறோம். இதைக் குறித்து மஹாபாரதத்தில் தர்மர் செய்யும்/சொல்லும் ஒரு கருத்தையும் அதற்கான அர்ச்சுனன்/பீமன்? எதிர்வினையும் நினைவில் வருகிறது. எங்கே போறே என்னும் கேள்வியைப் பொதுவாய் யாரும் கேட்பதே இல்லை. வெளியே கிளம்பறீங்களா என நாசூக்காகவே கேட்பார்கள்.

      நீக்கு
    2. பிழைத்துக் கிடப்பது நம் கையில் இல்லை என்பது புரிந்தால் இது தப்பானதாகத் தெரியாது. மதுரையில் அந்தக் காலத்தில் இரவுகளில் வரும் "ராப்பிச்சை" (இப்போல்லாம் வருவதில்லை) சாதம் மிச்சம் இருக்கா என்றே கேட்க மாட்டார். "சாதம் தப்பா இருக்கா அம்மா!" என்றே கேட்பார். அவர் தான் எங்களுக்குச் செம்மண் (கோலத்துக்கு) கொண்டு வருவார். செம்மண் கேட்டால் பொழச்சுக்கிடந்தா கொண்டு வரேன் தாயி! என்பார்.

      நீக்கு
    3. நாளைப் பாடு/நாராயணன் பாடு என்றும் பெரியோர் வாக்கு. ஒவ்வொரு நாளும் இறைவன் அருளாலேயே கடக்கிறோம் எனதன் பொருள்.

      நீக்கு
    4. 'பொழைச்சு கிடந்து' வார்த்தையின் விளக்கங்களுக்கு நன்றி.  அதேதான் நானும் சொல்ல வந்தது!

      நீக்கு
  11. பூரி சாப்பிட்ட மகாத்மியத்தை ரசனையுடன் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் பயணத்தில் நாங்களும் இருந்து கடைசியில் பூரி சாப்பிட்ட திருப்தி.

    இப்போது காசு எல்லாம் இருக்கு. எப்போது நினைத்தாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று விரும்பிய உணவை உண்ணலாம். ஆனால் அப்போதிருந்த திருப்தியோ இல்லை சாப்பிட்ட பெருமிதபோ இப்போது கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள்.

      நீக்கு
    2. நான் அதிகம் வீட்டில் நான் செய்யும் பூரியையே விரும்புவேன். ஓட்டலுக்குப் போனால் நான் கொஞ்சம் வித்தியாசமான சாப்பிடாத உணவையே தேர்ந்தெடுப்பேன். பிள்ளை, பெண், ரங்க்ஸ் எல்லோருமே கேலி செய்வார்கள். அதே போல் அவங்களுக்கெல்லாம் முன்னாடியே வந்துடும். எனக்கு வரத் தாமதம் ஆகும்.

      நீக்கு
    3. அளவாய்க் கிடைக்கும்போதுதான் சுகம்.  அதிகமாய்க் கிடைத்தால் சுவை குன்றிப் போகும்!

      நீக்கு
    4. நான் ஹோட்டலில் சகலத்தையும் சுவை பார்க்க விரும்புவேன்!

      நீக்கு
  12. இரு குழந்தைகள் இருந்தால் போட்டி பொறாமை சண்டை இருக்கத்தான் செய்யும்.

    என் பையன் பிறந்த பிறகு, பெண் அவன் பக்கத்தில் இருக்கும்போது அவளறியாமல் ஒரு கண் வைத்துக்கொண்டிருப்பேன். அவனுக்கு மூன்று வயதானபின் ஆறு வயதான அக்காவுடன் சண்டை போட்டு பட்டுனு அடிக்கும் அளவு வீரமாயிட்டான், என்னிடமும் வாங்கியருக்கிறான். பெரும்பாலும் அவங்க நட்கோடதான் இருந்திருக்கிறார்கள். ஆனால் இப்போவும் பொறாமை இருக்கும் என எனக்கு ஒரு எண்ணம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறாமை ங்கள் வீட்டில் குறைவு.  போட்டி கொஞ்சம் இருக்கும்!  அடிதடி நிறைய அடைந்திருக்கிறது!  என் மகன்கள் வாக்குவாதம் செய்வார்கள், அடிதத்துக் கொள்ள மாட்டார்கள்!

      நீக்கு
    2. இந்தப் பொறாமை! என்னனு சொல்றது! நான் நிறைய அன்றும்/இன்றும்/என்றும் கஷ்டப்பட்டேன்/பட்டிருக்கேன்/பட்டுக்கொண்டிருக்கேன். :(

      நீக்கு
    3. ஶ்ரீராம் சொல்லுவது சாதாரணமாக இருக்கும் பொறாமை எனில் நான் சொல்லுவது வெறுப்புக் கலந்த அசூயை! நம்மையே முற்றிலும் வெறுப்பார்கள்.

      நீக்கு
    4. அசூயையை நான் உணர்ந்ததில்லை!

      நீக்கு
  13. பெரிய மருது... வரலாற்றுத் துணுக்கைப் படித்த நிறைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைவா, நினைவா?   முன்னர் பகிர்ந்திருக்கிறேனா என்று பார்த்துதான் வெளியிட்டேன்.  தளம்பகிர்ந்த மாதிரி காட்டவில்லை.  பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன் இதை!

      நீக்கு
  14. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடர்ந்து கொண்டிருக்கும் தொற்றுப் பரவாமல் மக்கள் அனைவரையும் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்கும்படி அந்த ஆண்டவன் தான் அருள் புரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம், வாங்க, பிரார்த்திப்போம்.  மறுபடி முதலிலிருந்து தொடங்குகிறது!

      நீக்கு
  15. //அப்பாவும் பிள்ளையும் ஒரே நாளில் முடிவெட்டிக் கொள்ளக் கூடாது என்று பாட்டி சொல்லி இருப்பதால் அவர் வேறொரு நாளில் வெட்டிக்கொள்வார். பாட்டிக்கு நாங்கள் சகோதரர் இருவரும் ஒரே நாளில் வெட்டிக் கொள்வதே கூட பிடிக்காது. // புதுசா இருக்கே! தந்தை, மகன் ஒரே நாளில் முடிவெட்டிக்கலாம். சகோதரர்கள் தான் ஒரே நாளில் அதுவும் சேர்ந்தாற்போல் முடி வெட்டிக்கக் கூடாது. இதற்கான காரணத்தை இந்தக் காலை வேளையில் எழுத மனம் தயங்குகிறது. என்றாலும் ஒவ்வொரு வீட்டு வழக்கம் ஒவ்வொரு மாதிரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லவே வேண்டாம்.  காரணம் எல்லோரும் அறிந்ததுதானே!  ஆனாலும் தவிர்க்க முடிவதில்லை!

      நீக்கு
  16. மருது சகோதர்ர்கள் மதுரைப்பக்கம் இருந்தவர்கள் என நினைக்கிறேன். திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலிலுள் துழைந்ததும் கோவில் உள் பார்த்திருப்பதுபோன்று பெரிய அழகிய சிலைகள் அவர்களுக்கு உண்டு. அந்தப் படத்தை இன்று வாட்சப் குழுமத்தில் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைனு இல்லைனாலும் மதுரைக்கு அருகே தானே!

      நீக்கு
    2. மருது சகோதரர்கள் சிவகங்கைச் சீமை!  முன்னர் எங்கள் வீட்டில் "மானம்காத்த மருதுபாண்டியர்" என்றொரு புத்தகம் இருந்து, படித்திருக்கிறேன்.  இப்போது அந்தப் புத்தகம் இல்லை ஆயினும், இணையத்திலிருந்து நேற்று அந்தப் புத்தகத்தை தரவிறக்கி வைத்துள்ளேன்.

      நீக்கு
  17. பூரிக்க வைத்த உண்மைச்சம்பவங்களை ரசித்தேன். எங்க வீட்டில் அம்மாவே அடிக்கடி பூரி பொரிப்பார் என்பதால் ஓட்டல் பூரிக்கெல்லாம் ஏங்கியதில்லை. அதென்னமோ அப்பாவுக்குச் சப்பாத்தி பிடிக்காது. ஆனால் பூரி பிடிக்கும். ஆதலால் எங்களுக்கும் பூரி எப்படியோ கிடைச்சுடும். :)))) பூரிக்காக ஏங்கினதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் அப்போது எல்லாவற்றுக்கும் ஏங்கி இருக்கிறோம்!!!!

      நீக்கு
    2. கிட்டத்தட்ட ஒரு வருடம் என் பெரியப்பா வீட்டில் இருந்து படித்தேன் (தினம் ஐந்து கிலோமீட்டர் + ஐந்து கிமீ நடை). அப்போ அவங்க எளிமை (பணம் நிறைய இருந்தது). கட்டுப்பாடுகளும் உண்டு. நல்ல உணவுக்கு, பரோட்டா, பூரி கிழங்கு, நல்ல உடை, கையில் பணம் போன்றவைகளுக்கு ஏங்கியிருக்கிறேன் (பதின்ம வயதுப் பருவம்)

      மாதத்தில், நான் கரண்டி பிடிக்கும் நாட்களில் ஒரு தடவையாவது பூரி கிழங்கு பண்ணிவிடுவேன்.

      நீக்கு
    3. நாங்க ஏங்கினது என்றால் மாம்பழம், கரும்பு, வெள்ளரிப்பிஞ்சு, இளநீர், தேங்காயை உடைத்தாலே அடிச்சுக் கொண்டு போவோம். இதிலே நல்ல இளநீருக்கு எங்கே போறது? உ.கி.சி.வெ. கறிக்கும் அடிச்சுப்போம். இத்தனைக்கும் மாசம் ஒரு நாள் ஞாயிறன்று அப்பா பண்ணச் சொல்லுவார். மாங்காய் பத்தை, இலந்தைப்பழம், நெல்லிக்காய், மிட்டாய் வகைகள், பிஸ்கட் வகைகள் (பன் மட்டும் அனுமதி. அதுவும் உடம்பு சரியில்லைனால். அதுக்காகவே ஜூரம் வரணும்னு வேண்டிப்போமுல்ல!) இப்படி நிறைய உண்டு எங்களுக்கும். பெரிய பட்டியலே இருக்கு. இதிலே மாம்பழத்தை நான் சின்னமனூரில் என் சித்தி வீட்டிலும் இளநீரைக் கல்யாணம் ஆனப்புறமாப் புக்ககத்திலும் சாப்பிட்டேன். அங்கே தான் கரும்பும் சாப்பிட்டேன். பலாப்பழமெல்லாம் அப்பா வாங்கவே மாட்டார். ஆனால் எதிர்த்தாப்போல் இருக்கும் பெரியப்பா வீட்டில் வாங்குவாங்க. அப்பாவுக்குத் தெரியாமல் அங்கே போய்ச் சாப்பிடுவோம். :)))

      நீக்கு
    4. நீங்கள் எழுதியிருக்கும் அனைத்தும் எனக்கும் பிடிக்கும். மாங்காய், நெல்லிக்காய் விட்டுவிட்டீர்கள். (இலந்தைப் பழம் பிடிக்காது. அப்போலலம் திருநெவேலில என் மாமாக்கள், உடைந்த பிஸ்கெட் குறைந்த விலையில் பெரிய டின்களில் கிடைக்கும். அதை வாங்குவார்கள்).

      நீக்கு
    5. //மாங்காய் பத்தை, இலந்தைப்பழம், நெல்லிக்காய்,// ஒழுங்காப் படிக்கணும். இஃகி,இஃகி,இஃகி

      நீக்கு
    6. மாம்பழம், வெள்ளரிப்பிஞ்சு எல்லாம் வாசலில் விற்று வந்து அம்மா நிறைய வாங்கி விடுவார்.  அதனால் அது போல ஐட்டங்களில் எனக்கு ஏக்கமில்லை.

      நீக்கு
  18. அதி அற்புதமான மேகக் கவிதை! அது கயிலாயமும் சென்று ஈசனையும் சுற்றி வருவதை நினைத்துப் பார்த்தாலே மனம் சிலிர்க்கிறது. நல்லதொரு ஆக்கபூர்வமான கற்பனைக்கு வாழ்த்துகள். ஜோக்கெல்லாம் படிச்சதே! செல்லம் சின்னக் குட்டியாக இருந்தால் வாசலில் கழட்டிப் போட்டிருக்கும் செருப்புக்களைக் கூட விடாது. மருது சகோதரர்கள் பற்றிய தகவல்கள் ஏற்கெனவே படிச்சிருக்கேன். பெரிய மருதுவின் இத்தனை மனைவிகளைப் பற்றிப் படிச்ச பின்னால் அவர் மேல் இருந்த மரியாதை கொஞ்சம் இல்லை நிறையக் குறைந்தது என்னமோ உண்மை. தினமலரில் திருச்சி பதிப்பில் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய குறிப்புகள் தினம் ஒன்றாக வந்து கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  மேகக்கவிதை கவிதை மாதிரி இல்லை என்று அனைவரும் ஒள்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.  அவசரமாக உங்கள் ஈட்டு புகைப்படங்களைப் பார்த்ததும் தோன்றிஅயதை எழுதினேன்.  இரண்டு நாட்களுக்கு முன்தான் நேரடியாக பிளாக்கில் எழுதினேன்!

      நீக்கு
    2. ஒரு ஆங்கிலேயே அதிகாரிக்கு களரி வீச சின்ன மருதுதான் கற்றுத்தந்திருக்கிறார்.  அதிகாரி பின்னாளில் அவருக்கே எமனாய் வந்தான்.  சின்ன மருதுதான் ஊமைத்த்துறைக்கும் அடைக்கலம் கொடுத்திருக்கிறார், அண்ணனுக்குத் தெரியாமல்.  இதெல்லாம் மபொசி புத்தகத்திலும். ஏன் எஸ் ரா புத்தகத்திலும் கூட இருக்கிறது என்று நினைக்கிறேன்.  சிவகங்கைச்சீமை என்று கண்னதாசன் எடுத்த படம் மருதுபாண்டியர் பற்றிதானோ?

      நீக்கு
    3. இன்னிக்குக் கட்டபாண்டிய வீர பொம்மன். சேச்சே! வீரபாண்டியக் கட்ட பொம்மன். கட்ட பொம்மனைச் சுதந்திரப் போராட்ட வீரர்னு விபரம் தெரிஞ்ச பின்னால் நான் ஒத்துக்கறதே இல்லை. பதிவு எழுதிய ஆரம்ப காலத்தில் வவ்வால் என்னும் பதிவருக்கும் எனக்கும் இதைக் குறித்து நீண்ட விவாதமே நடந்தது. எல்லாம் கருத்துக்களாகத்தான். நான் மறுத்துச் சொல்ல அவர் (தமிழறிஞர்) பதில் சொல்ல இரவு வரை தொடர்ந்தது. அப்போல்லாம் இத்தனை சீக்கிரம் படுத்துக்க மாட்டேன் என்பதால் நானும் விடாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். :))))

      நீக்கு
    4. ஜகவீர பாண்டியனின் நேரடி/உண்மையான வாரிசு ஊமைத்துரை தான். கட்ட பொம்மன் ஜகவீர பாண்டியனின் காதல் கிழத்தியின் மகன். ஊமைத்துரைக்குப் பேச்சு வராததால் சந்தர்ப்ப சூழ்நிலையால் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராக ஆனான்.

      நீக்கு
    5. முன்னாடியும் சொல்லி இருப்பேனோ என்னமோ!

      நீக்கு
    6. நேற்று கூட யதேச்சையாக வவ்வால் பக்கத்துக்கு புத்தகக் கண்காட்சி பதிவொன்று படித்தேன்.

      நீக்கு
    7. காதல் கிழத்தயின் மகன், ஊமை என்பதால் அரசாட்சி கிடைக்கவில்லை.....    மஹாபாரதக் காட்சியாய் இருக்கிறதே....

      நீக்கு
  19. எங்க வீட்டில் நானும் தம்பியும் கொஞ்சம் கொஞ்சம் ஒத்துப் போவோம். அண்ணா பெரியவர் என்பதால் எங்களோட விளையாட்டில் அதிகம் வரமாட்டார். பெரியவர் என்னும் தன்மையுடன் ஒதுங்கியே இருப்பார். என்றாலும் சண்டை எல்லாம் போட்டுப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அக்கா கொஞ்சம் ஒதுங்கிப் போகும் டைப்.  சீக்கிரமே கல்யாணமும் ஆகிப்போனார்.  நாங்கள் மூவரும் சண்டைக்கோழிகள்!

      நீக்கு
  20. ஒரு செட் பூரிக்கு உயிரையே சே மயிரையே தியாகம் செய்த உங்கள் செயல் ஆச்சர்யம் தான். அப்பாவிடம் இருந்து எத்தனை பூரி கிடைத்தது முதுகில்?  அடுத்த 3 மாதம் முடி வெட்டாமல் மிச்சப்படுத்திய காசில் மேலும்  9 செட் பூரி கிடைத்திருக்கும்! 

    மேகம் குறித்து பாட்டு பார்த்தவுடன் தோன்றியது wordsworth மற்றும் shelly (An ode to the cloud) தான். 

    I wandered lonely as a cloud
    That floats on high o'er vales and hills,
    When all at once I saw a crowd,
    A host, of golden daffodils;
    (Wordsworth)

    மேகம் பாடுகிறது. 

    காற்றில்லாமல் நானில்லை.
    தானே நானும் பிறக்கவில்லை.
    கடல் இல்லாமல் மேகம் இல்லை
    மேகம் இல்லாமல் மழை இல்லை 
    மழை இல்லையேல் உலக மில்லை. 

    "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" போல் ஸ்ரீரங்கத்து மேகங்களாக போட்டோ போட்டு விட்டீர்கள். கீதாக்காவுக்கு சந்தோசம் பொங்கி வழியும்.

    மருது சகோதர்கள் ஆண்டது சிவகங்கை சீமை. 

    மதன் ஜோக்ஸ் போல ஆஃபிஸில் நானும் உட்கார்ந்தவாறே ரெஸ்ட் (தூக்கம்) எடுத்தது உண்டு. அது மதிய உணவு (கான்டீன் சாப்பாடு) உண்ட மயக்கம். 

    அப்படி இப்படி என்று உங்கள் போட்டோவைப் பிரசுரித்து விட்டீர்கள் சின்ன வயசு போட்டோ ஆனாலும். 

    கொஞ்ச நாளா டாடா சொல்கிறீர்கள். ஏன்? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்ரீரங்கத்து மேகங்களாக போட்டோ போட்டு விட்டீர்கள். கீதாக்காவுக்கு சந்தோசம் பொங்கி வழியும்.//ஆமா இல்ல! காலை அவசரத்தில் ஃபோட்டோக்களைச் சரியாக் கவனிக்காமல் இருந்திருக்கேன். ஹிஹிஹி, எங்க மொட்டை மாடி! மொட்டை மாடி!

      நீக்கு
    2. மொட்டை மாடிக்குப் போய் 2 வருஷங்கள் ஆகின்றன. நாளைக்குப் போய்ப் படம் எடுக்க முடியுமா பார்க்கணும், நினைவிருந்தால்! :(

      நீக்கு
    3. ஆங்கிலக் கவிதை படிச்சிருக்கேன். ஆனால் அப்போ நினைவில் எல்லாம் வரலை. மேகப் பாடலும் அருமை.

      நீக்கு
    4. அப்பாவிடமிருந்து கிடைக்கும் பூரிகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை JC ஸார்...   பழகிப்போன விஷயம்!  ஆங்கிலக் கவிதை நான் படித்ததில்லை.  அது ஸ்ரீரங்கத்து மேகம் என்று அந்தப் பெரிய குழாய் பார்த்து கண்டு பிடித்தீர்களோ!

      டாடா சொல்வது சும்மா, சுவாரஸ்யத்துக்கு... இந்த வாரம் சென்று அடுத்த வியாழன் வாருங்கள் என்று சொல்ல!

      ​என் சிறு வயது போட்டோ முன்னரே வேறொரு தளத்தில் வெளியாகி இருக்கிறது! "சும்மா" தளத்தில்!

      நீக்கு
  21. கனாக்காலம் ரசனை.

    கவிதை எம்மையும் மேகமாக மாற ஆசை கொள்ள வைக்கிறது.

    ஜோக்ஸ் சிரித்துவிட்டேன்.
    வளர்ப்பு செல்லத்தின் சேட்டை படம் :)

    பதிலளிநீக்கு
  22. அன்பின் ஸ்ரீராம்,
    கலகலப்பான பதிவு. அப்படியே
    உங்களுடன் சலூன் சென்று வந்த அனுபவம்:)
    உங்களுக்குத் தலைவாரி பூ சூட்டிய படம் மிக அருமை. குழந்தையின் இன்னொசென்ஸ்.

    பதிலளிநீக்கு
  23. வெளியில் இருக்கிறோம் மீண்டும்வருகிறேன்.
    மொட்டை அடித்தால் எல்லா அப்பாவுக்கும்கோபம் வரத்தான் செய்யும்.
    புட்டுக்கு மண் சுமந்ததைப் போல பூரிக்கு மொட்டை:)


    மழை போல பொழியும் மேகக் கவிதை
    மிக அருமை ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியும் பூரி சாப்பிடுவது என்று முடிவு செய்து விட்டு காரணத்தைக் (வழியை) கண்டுபிடித்தோம்.  கவிதை அவசரமாக எழுதியது.  அதை கவிதை என்று ஒப்புக்கொண்டதற்கே முதல் நன்றி!

      நீக்கு
  24. சிறு வயது நினைவுகள் அருமை. என் அப்பாவுடன் சிறு வயதில் ஓட்டல்களில் சாப்பிடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    அண்ணன் , தம்பி போட்டி , சவால், பந்தயம் அதனால் மொட்டை எல்லாம் இப்போது வேடிக்கையாக இருக்கும் நினைத்துப் பார்க்கும் போது.

    மேக கவிதைகள் அருமை.

    //பனிமலைக் கயிலாயத்தை சுற்றி வந்து
    பரமனை நீரால் நனைக்கலாம்
    மனம் நனையத் துதிக்கலாம் //

    ஆமாம், எந்த ஒரு அனுமதி வாங்க வேண்டாம் மேகமாய் மாறி எப்போது கயிலை நாதனை துதிக்கலாம்.
    அருமை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா..  பதிவையும் மேகப் பகிர்தலையும் ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  25. செருப்பை கடிக்கும் செல்ல குட்டியை பார்த்து இருக்கிறேன் மாயவரத்தில் பிள்ளையார் கோயில் அருகில் இருந்த இது போன்ற குட்டி செல்லம் என் செருப்பை தூக்கி போய் விளையாடி கொண்டு இருந்தது.நகைச்சுவைகளும் நன்றாக இருக்கிறது.
    உங்கள் சிறு வயது படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே செல்லங்களுக்கு செருப்பு கடிக்கும் பழக்கம் உண்டு!  இதில் அதன் கண்களில் தெரியும் குறும்பு!

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  26. தில்லையகத்து கீதா ரங்கனைக்(க்காவைக்) காணோமே..... ஒருவேளை கில்லர்ஜி தளத்தின் பாடலுக்கு மெட்டமைத்துக்கொண்டிருக்கிறாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா, இல்ல! நான் சரியாக வருவதில்லை என்பதால் தெரியலைனு நினைச்சேன். உங்க கேள்வியைப் பார்த்ததும் தான் அவரும் வருவதில்லை என்பது புரிந்தது.

      நீக்கு
    2. எனாதூஊஊஊஊஊஊ கீதா ரங்கனைக் காணல்லியோ?:)).. இது எவ்ளோ நாளாக:)).. நல்லவேளை அதிரா காணமல் போகவில்லையாக்கும்:))

      நீக்கு
    3. கீதா 16 ம் தேதி தான் வருவார். அவர் பதிவிலே சொன்னாரே!இனி அடுத்த பதிவு 16ம் தேதி வரும் என்று. வெளியூர் பயணம்.

      நீக்கு
    4. ஆமாம், கீதா ரெங்கன் வெளியூர்ப்பயணத்தில் இருக்கிறார்.  சொல்லி இருந்தார்.

      நீக்கு
  27. //இந்த கான்டீன் என்று சொன்னேனே//
    ஆஆஆஆ அப்பூடியோ நான் பழசு எதையும் பார்க்கவில்லையே இன்னும்:))

    //ஆரம்ப கால நான்! மூளை இருக்கோ இல்லையோ முடி நிறைய இருக்கும்!//
    ஓ அப்போ முடி குறையக் குறையத்தான் மூளை அதிகமானதாக்கும்:))

    //பாட்டிக்கு நாங்கள் சகோதரர் இருவரும் ஒரே நாளில் வெட்டிக் கொள்வதே கூட பிடிக்காது.//

    இது நானும் கேள்விப்பட்டதுண்டு, ஆண்பிள்ளைகள் எனில் இருவரும் ஒன்றாக முடிவெட்டக்கூடாது என்பது, அதற்கு நான் கண்டுபிடிச்ச காரணம், பொதுவாக ஊரில், தலைமயிர் வெட்டினால், பின்பு எண்ணெய் வைத்துத் தோய்வதுதான் வழக்கம்[அது பெற்றோருக்கு நல்லதல்லவே), அதனால கூட , ஆண்பிள்ளைகள் ஒன்றாக முடி வெட்டக்கூடாது எனும் வழக்கம் வந்திருக்கலாம், ஆனால் இப்போ அப்படியில்லை, வெட்டியவுடன், சும்மா சம்போ வைத்து தோய்வார்கள் அதனால பெரிதாகப் பார்ப்பதில்லை, ஆனாலும் நான் சொல்லிக் கொடுத்தபடிதான் நடக்கிறார்கள் நம் வீட்டில்..

    அதாவது..
    1. வெள்ளி செவ்வாய் களில் தலைமயிர் வெட்டக்கூடாது மற்றும் நகம் வெட்டக்கூடாது என்பது.

    சின்னவர் வந்து இடைக்கிடை கேட்பார் இன்று சேவ் பண்ணலாமோ ஃபிறைடேயில என ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போன வாரத்தின் தொடர்ச்சி இது அதிரா...   வாங்க..  நலமா?

      ஆம் சாஸ்திர சம்பிரதாயங்களில் நிறைய அர்த்தங்கள் காரணமாயிருக்கும்.  நாம்தான் யோசிப்பதில்லை!

      நீக்கு
  28. //மொட்டை அடிக்கும் முன்!//

    களத்தூர்க் கண்ணம்மா கமல் அங்கிள் போல இருக்கிறீங்கள்...

    முடி வெட்டும் படலம் பற்றிய .. அந்தநாள் ஞாபகம் மிக அருமை...:).. எனக்கும் அப்பாவோடு சென்று சலூனில் தலைமயிர் வெட்டியதெல்லாம் நினைவுக்கு வருது..

    டயானா கட் தான் வெட்டோணும் என அடம் பிடிச்சு, அம்மா உனக்கு அடர்த்தியான நீண்ட மயிர் . அதனால டயானா கட் வேண்டாம் என மறுக்க, அப்பா எனக்காக அம்மாவோடு வாதாடி வென்று:), என்னைக் கூட்டிக் கொண்டு போக, அன்று சரியான வெயில்.. நான் வெயில் சூடுதாங்காமல் மயக்கமாகிவிழுந்து, அருகில் இருந்த கடைக்குள் போய்ப் படுத்து ரெஸ்ட் எடுத்து , எனக்குப் பிடிச்ச எலிபண்ட் பிராண்ட் நெக்டோ சோடா வாங்கித்தர, குடிச்சுப்போட்டு, சரி நீ ரயாட்டாக இருக்கிறாய் இன்னொரு நாள் வெட்டலாம் என திரும்பி வீட்டுக்கே வந்தது இன்னமும் நினைவிருக்கு:))...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..   எனக்கு பூரி போல உங்களுக்கு கூல்ரிங்க்கோ!  டயானா கட்...   இருமலர்கள் படத்தில் சிலாஜியின் மகள் அந்த மாதிரிதான் கட் செய்திருப்பார் இல்லையா?!!

      நீக்கு
  29. மேகக் கவிதை சூப்பர்..
    //பாஸ்போர்ட் விசா தேவை இல்லை //

    ஆமா ஆமா ஸ்கொட்லாண்ட் க்கும் வரலாம்:))..

    ஆனாலும் நமக்கு மேகம் மகிழ்வாக இருப்பதைப்போல இருந்தாலும், அதனிடம் கேட்டால்தான் புரியும் அதன் சோகமும் மகிழ்ச்சியும்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேகத்துக்கும் தாகமுண்டு என்று ஒரு படமுண்டு!  மேகத்துக்கும் சோகமுண்டு என்கிறீர்கள் நீங்கள்!

      நீக்கு
  30. படத்தில் இருப்பவை உங்கட மொட்டைமாடியோ ஸ்ரீராம், அது என்ன கீசாக்கா வீட்டுக் காவேரி நதியோ?.. அழகாக இருக்குது..

    ஜோக்ஸ் நல்லா இருக்குது.. கைவசம் பெரிய தொகுப்பே வச்சிருக்கிறீங்க போல இருக்கே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் இருப்பது கீதா அக்கா வீட்டு மொட்டை மாடி.  நாங்கள் அங்கு 2014 ல் சென்றபோது எடுத்தது.

      நீக்கு
  31. //பொழச்சு கிடந்து அடுத்த வாரம் பார்ப்போம்!//

    ஹா ஹா ஹா உங்கட டமிலில் பொருட்பிழை இருக்கிறதே ஸ்ரீராம்..

    எங்கட நெ.தமிழன் புரொபிஸர் எங்கே போயிட்டார் இதை எல்லாம் பார்க்காமல், இதற்குக் கீழே நீங்க இலை போட்டு அந்நாளில் சாப்பிட்ட பூரிப் படத்தைப் போட்டிருந்தால் கவனிச்சிருப்பார் அனைத்தையும்.. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு.. அப்போ போயிட்டு வாறேன்ன்ன்.. எந்த ஆள் அரவமும் இல்லாமல் அமைஈஈஈதியாக்கிடக்கு இங்கின:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் பொருட்பிழையும் இல்லை, சொற்பிழையும் இல்லையே அதிரா!!

      நீக்கு
    2. பொழைச்சுக் கிடந்தால் என்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் நானே நிறைய பிழை விடுகிறேன் (ஐபேடில் தட்டச்சு செய்வதால்). அதனால் இப்போதைக்கு நக்கீரன் பதவி அடிராவிடம்தான் இருக்கிறது.

      நீக்கு
  32. எங்க வீட்டுக்கு கொலு பொம்மை கொண்டு வருவார் ஒரு வயதானவர் அவர் ஒவ்வொரு வருடமும் "பொழுச்சி கெடந்தா வரேன் தாயி "என்று சொல்வார் இந்த தலைப்பில் பதிவு எழுதி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா.. நிறைய பேர்கள் உபயோகிக்கும் வார்த்தை அது!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      நாங்களும் (பொழைத்து கிடந்தால்) இப்படித்தான் சொல்வோம். இது எல்லோரும் சொல்லும் வழக்கந்தானே.. உங்கள் சின்ன வயது போட்டோக்கள் நன்றாக உள்ளது. காலையிலேயே கருத்துரையில் சொல்ல வந்தேன். அவசரத்தில் மறந்து விட்டது. பின் மதியம் வரலாமென நினைத்தேன். அப்போதும் வரவியலவில்லை. என்னவோ நேரம் சரியாகப் போய் விட்டது.
      தங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தமைக்கு பிரத்தியோகமான வாழ்த்துகள்.

      மழை மேக கவிதையின் படங்களில் உச்சி பிள்ளையார் இருக்கிறார் அவரை வைத்துதான் நானும் இப்போது அந்த இடம் ஸ்ரீரங்கம் என்று நினைத்தேன். நீங்களும் கருத்துக்களில் சொல்லி விட்டீர்கள்.

      .ஜோக்ஸ் அனைத்தும் அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  33. கரும்பாயிரம்// பெயரே வித்தியாசமாகத்தான் இருக்கு ஸ்ரீராம். ஆனால் கரும்பு ஆயிரம் இருந்தாலும் அவர் கரும்பு போல இல்லையோ ஹிஹிஹி....

    பூரிக்கு என்னெல்லாம் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. அப்படிச் சாப்பிட்ட பூரிதான் ரொம்ப சுவையாக இருந்திருக்கும் பொதுவாகவே கொஞ்சம் திருட்டுத்தனமாகச் செய்வதில் ஒரு த்ரில் இருக்குமே அப்படி. இல்லையொ?

    இரு குழந்தைகள் இருந்தால் சண்டை வரும்தான். நாங்கள் கூட்டுக் குடும்பத்தில் இருந்த போதும் கூட சண்டை போட்டுக் கொண்டதில்லை. கோபம் வந்தால் கொஞ்சம் நேரம் பேசாமல் இருப்போம்...அவ்வளவுதான். ஒரு வேளை டெரர் பாட்டியின் கீழ் இருந்ததாலோ என்னவோ.

    மருது சகோதரர்கள் தகவல்கள் புதியது பெரியவருக்கு வேலுநாச்சியார் ஒருவர்தான் மனைவி என்று நினைத்திருந்தேன்.!!!!!!!!

    கவிதைகளை ரசித்தேன் சூப்பர். படங்கள் கீதாக்கா வீட்டு மொட்டைமாடியில் இருந்து எடுத்த காவிரி படங்கள் போல இருக்கிறன்றனவே..பாலம் காவிரி என்று தெரிகிறது

    நகைச்சுவையும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  34. கரும்பாயிரம்// பெயரே வித்தியாசமாகத்தான் இருக்கு ஸ்ரீராம். ஆனால் கரும்பு ஆயிரம் இருந்தாலும் அவர் கரும்பு போல இல்லையோ ஹிஹிஹி....

    பூரிக்கு என்னெல்லாம் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. அப்படிச் சாப்பிட்ட பூரிதான் ரொம்ப சுவையாக இருந்திருக்கும் பொதுவாகவே கொஞ்சம் திருட்டுத்தனமாகச் செய்வதில் ஒரு த்ரில் இருக்குமே அப்படி. இல்லையொ?

    இரு குழந்தைகள் இருந்தால் சண்டை வரும்தான். நாங்கள் கூட்டுக் குடும்பத்தில் இருந்த போதும் கூட சண்டை போட்டுக் கொண்டதில்லை. கோபம் வந்தால் கொஞ்சம் நேரம் பேசாமல் இருப்போம்...அவ்வளவுதான். ஒரு வேளை டெரர் பாட்டியின் கீழ் இருந்ததாலோ என்னவோ.

    மருது சகோதரர்கள் தகவல்கள் புதியது பெரியவருக்கு வேலுநாச்சியார் ஒருவர்தான் மனைவி என்று நினைத்திருந்தேன்.!!!!!!!!

    கவிதைகளை ரசித்தேன் சூப்பர். படங்கள் கீதாக்கா வீட்டு மொட்டைமாடியில் இருந்து எடுத்த காவிரி படங்கள் போல இருக்கிறன்றனவே..பாலம் காவிரி என்று தெரிகிறது

    நகைச்சுவையும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா...   மெனக்கெட்டு வந்து படித்துக் கருத்திட்டதற்கு நன்றி!
      அந்த வயசில் பூரி கொஞ்சம் ஸ்பெஷல்!  அதுவும் இந்த மாதிரி சாகசங்களும் த்ரில்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!