பல்லடம் அருகே வீடு வீடாக சென்று அரசு பள்ளி தலைமை ஆசிரியர், 'பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தால் 1,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, பிரசாரம் செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கோவை மாவட்டம்,சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டு லட்சுமி நாயக்கன் பாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, லட்சுமணசாமி தலைமை ஆசிரியராக உள்ளார். இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக, வீடு வீடாக பிரசாரம்செய்யும் இவர் கூறியதாவது:அதிக மாணவர்களை சேர்க்கும் முயற்சியாக, '1,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, அறிவித்துள்ளேன். மாணவர்களை சேர்க்க முயற்சிப்பவருக்கும், இத்தொகையை வழங்குவேன்.கூடுதலாக ஓர் ஆசிரியர்மட்டும் இருந்தால், மாணவர்களை கவனிக்க உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
பிரிட்டன் அரசாங்கத்தின் முதல் குவாண்டம் கணினியை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வாங்கியுள்ளது. அப் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் ஸ்டீஃபன் டில் இதனை "மைல்கல் தருணம்" என கூறியுள்ளார். [மேலும் படிக்க....] [நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் சார்]
==========================================================================================
பெங்களூரு,-பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம், பயணியரின் வசதிக்காக பல திட்டங்களை செயல்படுத்துகிறது.
தற்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பு பஸ் சேவையை ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. மக்களுக்கு தரமான போக்குவரத்து சேவை வழங்குவதில், பி.எம்.டி.சி., முதலிடத்தில் உள்ளது. ஏழைகளின் உயிர் நாடியாக விளங்குகிறது. தங்களின் போக்குவரத்துக்கு, ஏழை பயணியர் பி.எம்.டி.சி.,யை நம்பியுள்ளனர். இதை உணர்ந்தே, நஷ்டத்தில் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல், பயணியருக்கு தரமான சேவை வழங்குகிறது.
தற்போது ஒரு படி முன்னே சென்றுள்ள பி.எம்.டி.சி., மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளது. இந்த பஸ்களில் சக்கர நாற்காலி வசதி இருக்கும்.இது தொடர்பாக, பி.எம்.டி.சி.,யின் ஐ.டி., பிரிவு இயக்குனர் சூர்யா சேன் கூறியதாவது:பெங்களூரில் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக, 'வீல் சேர் லிப்டிங்' வசதி கொண்டுள்ள 100 பஸ்கள் வாங்க முடிவு செய்துள்ளோம். ஆகஸ்ட் 1க்குள், இந்த பஸ்கள் சேவையை துவங்கும். முதல்வர் பசவராஜ் பொம்மை, இந்த பஸ் போக்குவரத்தை துவங்கி வைப்பார். இதுவரை தனியார் பஸ்களில் மட்டுமே, வீல் சேர் லிப்டிங் வசதி இருந்தது. இனி பி.எம்.டி.சி., பஸ்களிலும், இந்த வசதி இருக்கும். முதல் கட்டமாக இதுபோன்ற வசதியுள்ள, 100 பஸ்கள் வாங்கப்படும். வீல் சேரை மேலே துாக்கும் வசதி, பஸ்சின் மத்திய பகுதியில் செய்யப்பட்டுள்ளது.நிர்ணயித்த பட்டனை அழுத்தினால், பயணியர் உள்ளே வந்து அமர, வெளியே இறங்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகளை மனதில் கொண்டே, இந்த பஸ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மெஜஸ்ட்டிக்கில் இருந்து, ஹெப்பால், சில்க் போர்டு சாலை, வெளி வட்ட சாலை உட்பட, பி.எம்.டி.சி., நிர்வாகம் சுட்டிக்காண்பித்த வழித்தடங்களில், இந்த பஸ்கள் இயங்கும். ஏற்கனவே அத்திப்பள்ளி, எலஹங்கா, பிடதி என பல வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
==================================================================
சாலையின் ஓரமாக ஒரு பன்னிரண்டு வயது சிறுவனை நிற்க வைத்து ஒரு காவல்துறை அதிகாரி, மணிக் கணக்காக ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சிறுவனும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
அந்த சாலை வழியாக போன பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியமாக அந்த காட்சியை பார்த்துக் கொண்டே போனார்கள்.
சில சமயங்களில் அந்த சிறுவன் ஏதோ கேட்க, அந்த போலீஸ் அதிகாரி அவனுக்கு பொறுமையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த பொதுமக்களில் சிலர் தங்கள் மொபைலில் இந்தக் காட்சியை படமாகவும் எடுத்தார்கள்.
அப்படி எடுத்த ஒரு படத்தால்தான் இந்த விசித்திரமான விஷயம் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர். இங்கேதான் நடந்து கொண்டிருக்கிறது அந்த நல்ல காரியம்.
ஆம். இந்தூர் காவல் நிலையத்தில் உள்ள ஒரு காவல் துறை அதிகாரிதான் அந்தப் பகுதியில் உள்ள ஏழை மாணவன் ஒருவனுக்கு இலவசமாக டியூஷன் எடுத்துக் கொண்டிருக்கிறார் தினமும் தெரு ஓரத்தில் நின்று.
அந்த காவல்துறை அதிகாரியின் பெயர் வினோத். அந்த 12 வயது மாணவன் பெயர் ராஜூ.
"எப்படி ஆரம்பமானது இந்த டியூஷன் ?"
கடந்த ஆண்டு ஒரு ஊரடங்கு மாலையில் காவல்துறை அதிகாரி வினோத். வழக்கமான ரோந்து பணியில் இருக்கும்போதுதான் தற்செயலாக அந்த பையனை பார்த்தார்.
சாலை ஓரத்தில் சோகமான முகத்தோடு நின்று போலீஸ்காரர்களை பார்த்துக் கொண்டிருந்தான் ராஜூ.
அவனை அருகே அழைத்தார் வினோத். "யார் தம்பி நீ ?"
ராஜூ தன் கதையை சொன்னான்.
அப்பா ரோட்டோரம் டிபன் கடை வைத்திருந்தாராம். ஊரடங்கால் கடை மூடப்பட்டு விட்டது. மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். ஆனாலும் இந்த சிறுவனுக்கு படிப்பில் ஆர்வம் அதிகம்.
"எதிர்காலத்தில் என்ன ஆக விரும்புகிறாய் ராஜூ ?"
"உங்களை போல போலீஸ் ஆக !"
வினோத்துக்கு ஆச்சரியம். "போலீஸ் ஆக ஆசையா ?"
"ஆமாம் சார், ஊரே அடங்கி ஒடுங்கி கிடக்கும் இந்த நேரத்திலும் நீங்கள் எல்லோரும் எவ்வளவு உற்சாகமாக வேலை செய்கிறீர்கள் ? எனக்கும் இதைப் போல சேவை செய்ய ஆசை !"
"வெரிகுட்."
"ஆனால் ... ஸ்கூல் எல்லாம் எப்போது திறக்கும் என தெரியலை சார்."
"ஏதாவது டியூஷனுக்கு போகலாமே தம்பி."
"இல்லை சார். அதற்கு ஃபீஸ்..."
"ஓ !"
கொஞ்ச நேரம் யோசித்தார் வினோத். "ஒன்று செய்யலாம்."
"என்ன சார் ?"
"நாளை இதே நேரம், இரவு எட்டு மணிக்கு இந்த இடத்திற்கு வந்து விடு."
அடுத்த நாளிலிருந்து ஆரம்பமானது அந்த இலவச டியூஷன்.
டியூட்டியை முடித்து விட்டு வரும் வினோத் தினமும் அந்தப் பையனுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்தார்.
டியூஷனுக்கான இடம் ?
காவல் நிலையத்துக்கு அந்த பையனை அழைத்து செல்ல அவர் விரும்பவில்லை. எனவே அவர் வசம் போலீஸ் ஜீப் இருந்தால் ஏதாவது ஒரு தெரு விளக்கின் அடியில் அதை நிறுத்தி வைத்து விட்டு, ஜீப் பானெட்டிலேயே வைத்து பாடம் நடத்துவார் வினோத்.
ஜீப் இல்லையென்றால் ..?
ஏதாவது ஒரு ATM வாசலில்..! அல்லது தெருவில் எங்கே வெளிச்சம் இருக்கிறதோ, அங்கேதான் டியூஷன் சென்டர்.
சந்தோஷமாக படித்துக் கொண்டிருக்கிறான் ராஜூ.
அதை விட சந்தோஷமாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வினோத்.
மீடியாக்காரர்கள் காவல்துறை அதிகாரி வினோத்திடம் கேட்டார்கள்.
"எப்படி சார் இருக்கிறது இந்த புது டியூஷன் அனுபவம் ?"
சிரித்தார் வினோத்.
ஏற்கனவே இதற்கு முன் அவர் பணி புரிந்த ஊர்களில் எல்லாம் இதே போல பலருக்கும் டியூஷன் எடுத்திருக்கிறாராம். அவரிடம் படித்த சில மாணவர்கள் இப்போது காவல்துறையிலும் பணிக்கு சேர்ந்திருக்கிறார்களாம். மகிழ்ச்சி.
நிச்சயமாக காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் ஒரு மனிதர் இந்த வினோத்.
காக்கிச்சட்டை என்றாலே கடுமை என்று சிலர் நினைக்க வைக்கிறார்கள்.
ஆனால் கடவுள் கூட சில வேளைகளில் காக்கிச்சட்டை அணிந்து வரலாம் என வினோத் போல இருக்கும் சிலர் நினைக்க வைக்கிறார்கள்.
"பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்" ( வாலி )
=====================================
நான் படிச்ச கதை
ஜெயக்குமார் சந்திரசேகரன்
****************
காதலுக்கு முண்டோ கடன்? - வல்லிக்கண்ணன்
கதை, கவிதை, நாடகம் என்று எல்லாத்துறையிலும் சங்க காலம் முதல் இன்றளவும் நிலையாகப் பயன்படுத்தப்படுவது காதல் என்ற கருப்பொருள். இந்தக் காதல் எங்கே, எப்போது, எப்படித் துவங்கும் என்பது காதலிப்பவர்களுக்கே தெரியாது. காமம் இல்லாதாகி, காதல் உருவெடுத்து மணத்தில் முடிவடையும் போதே இவர்கள் இடையே நிலவியது காதல் என்று புரிய வரும்.
இந்தக் கதையும் ஒரு காதல் கதை தான். ஒரு ஒன்றரை
அணா (கடன்) காதல் கதை.
அணா என்ற போதே கதையின் காலம் புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். பெண்கள் பூப்படையும்
முன்னரே கன்னிகா தானம் செய்யப்பட்ட காலம் அது. காதல் என்பது கதைகளிலும் சினிமாக்களிலும்
தான் காணப்படும். நிஜ வாழ்க்கையில் எதிர்ப்புகள் தான் அதிகம்.
அத்தகைய காலத்தில் எழுதப்பட்ட கதை.
கதை முழுவதும் கீழே தரப்பட்டுள்ளது. சுருக்கம் வேண்டும் என்றால் பர்பிள் வண்ணத்தில் உள்ள வரிகளை மட்டும் படித்தால் போதும். கதை ஒருவாறு ஊகிக்கப்பட்ட வழியிலேயே செல்லும்.
வல்லிக்கண்ணன் என்ற ஆசிரியர் பெயர் இல்லையேல் இது ஒரு சாதாரண அமெச்சூர் எழுத்தாளர் எழுதியது
என்று நினைப்போம்.
காதலுக்கு முண்டோ கடன்?
எக்கச்சக்கமான நிலைமை என்பார்களே; அதன் அர்த்தம்
விஸ்வநாதனுக்கு அன்று வரை சரியாகப் புரியாமல்
தான் இருந்தது. அப்படி ஒரு நிலையை, அவன் அனுபவிக்க நேர்ந்த போதுதான் ஓகோ அது இது தான் என்ற தெளிவு அவனுக்கு ஏற்பட்டது.
ஆனால் அந்த ஞானோதயம் அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.A
"உம், சீக்கிரம் முடிவு
பண்ணுங்க. சில்லறையாக இருந்தால் எடுங்க. இல்லையானால் இங்கேயே இறங்கி விடுங்க' என்றார் கண்டக்டர், கண்டிப்பாக.
விஸ்வநாதன் ஒரு ரூபாய் நோட்டை நீட்டி, 'ஒன்றரை அணா
டிக்கெட் ஒன்று கேட்டான்.
அவன் போய் இறங்க வேண்டிய இடத்துக்கு ஒன்றரை அணாதான் கட்டணம்,
'சில்லறை இல்லையே!” மீண்டும் அறிவித்தான் விஸ்வம்.
"அதற்கு நான் என்ன ஸார், செய்கிறது? சில்லறையாக மாற்றிக் கொண்டு வந்திருக்கலாமே!" கண்டக்டர் கேலியாகப் பேசுவது போல் தோன்றியது. விஸ்வநாதன் உள்ளத்தில் சூடு ஏற்பட்டது. சுடச்சுட ஏதாவது சொல்லவேண்டும் என்று பட்டது அவனுக்கு. ஆனாலும் அப்போதைய நிலைமையை உத்தேசித்து, அவன் தணிந்து போனான்.
இரண்டு மூன்று தடவைகள் சொல்லித் தீர்த்த பிறகு, கண்டக்டர் பஸ்ஸை நிறுத்துவதற்கு உரிய
மணியை அடித்தார். "உம் இறங்குங்கள்,
ஸார்!” என்றார்.
விஸ்வநாதனுக்கு மிகுந்த மனக்கஷ்டம்தான்.. அவன் முகம் வாட்டமுற்றது. தயக்கத்துடன் எழுந்தான்.
'கண்டக்டர், இந்தாப்பா,
ஒன்றரை அணா: டிக்கெட்டை அங்கே கொடுத்து விடு!"
என்று ஒரு குரல் கணீரென ஒலித்தது.
எல்லாரும் திரும்பி நோக்கினர். விஸ்வநாதனும் பார்த்தான்.
ஒரு ஸீட்டின் ஓரத்தில் இருந்த யுவதி ஒருத்திதான் துணிந்து அவ்விதம் உதவி புரிந்தாள் என்று தெரிந்ததும், அனைவருக்கும் ஆச்சரியமே உண்டாயிற்று.
கண்டக்டர் டிக்கெட்டை
விஸ்வநாதனிடம் தந்து விட்டு, அவள் அருகே போய் காசுகளைப் பெற்றுக் கொண்டார். ரொம்ப தாங்ஸ்' என்று கூறிய பிறகு, தனது இடத்தில் வந்து உட்கார்ந்தான் விஸ்வம்.
பஸ் ஒழுங்காக ஓட ஆரம்பித்தது. ஆனால் பிரயாணிகளின் சிந்தனைதான் தடம் புரண்டு ஓடத் தொடங்கியது.
இவளுக்கு என்ன இவ்வளவு அக்கறை? இவள் யார்? அவனுக்கு வேண்டியவளாக இருப்பாளோ? இந்தக் காலத்துப் பெண்கள் ரொம்பவும் துணிந்து விட்டார்கள். ரொம்ப, ரொம்ப வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் - இப்படி ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக எண்ணினர்.
விஸ்வநாதன் மட்டும் அவளைப்பற்றி எண்ணாமல் இருப்பானா? அவன் உள்ளத்திலும் அவளே நிறைந்து நின்றாள். அவள் துணிந்து உதவி புரிய வந்திராவிட்டால் இப்போதெல்லாம் அவன் ரோட்டில் நடந்து கொண்டு இருக்க வேண்டியிருக்கும். நல்ல சமயத்தில் உதவி பண்ணினாள் என்ற நன்றியுணர்வு தலை தூக்கியது.
மற்றவங்க கஷ்டப்படுவதைப்
பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிற
மனோபாவம்தான், எல்லாரிடமும் வளர்ந்து
வருகிறது. இந்தப் பெண் அப்படியில்லை. இவள் நல்லவள்'
என்று அவன் உள்ளம் பாராட்டிக் கொண்டிருந்தது.
அவன் இறங்கவேண்டிய
இடம் வந்து சேர்ந்தது. ஒன்றரையணா ஜீரணமாகிவிட்டது
என்று முனகியவாறே பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கினான் விஸ்வம். மறுபடியும் அவன் திகைப்படைய
நேர்ந்தது. அந்த யுவதியும் அங்கே தான் இறங்கினாள்!
பஸ்ஸில் இருந்தவர்களில்
பலரது கண்கள் அவனையும் அவளையும் மாறி மாறிப் பார்த்ததை அவன் கவனிக்காமல் இல்லை. ஆனால் அவன்
யாரையும், அல்லது எதையும் பற்றிய சிந்தனையில்லாதவனாய்,
நிமிர்ந்த தலையும் நேர் நோக்கும் கொண்டு நடந்தான்.
பஸ் நகர்ந்து ஓடிய பிறகு, விஸ்வநாதன் வேகமாக அவள் அருகே சென்றான்.
"நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி. கொஞ்சம் இங்கேயே நிற்கிறீர்களா? அந்தக் கடையில்
சிலவறை மாற்றி வந்து,
ஒன்றரை அணாவை...." என்று தொடங்கினான். அவன் வளர்ப்பதற்குள் அவள் பேச்சை முடித்து விட்டாள்.
"பரவாயில்லே! நீங்கள் திரும்பத் தரணும்கிற அவசியம் எதுவுமில்லை" என்று அவள் சொன்னாள்.
அவனைப் பார்த்து அவள் சிரிக்கவுமில்லை;
மேலும் பேச வேண்டும் என்று ஆர்வம் காட்டவுமில்லை. அவள் பாட்டுக்கு
நடந்து கொண்டே இருந்தாள்.
இவள் போக்கு விசித்திரமாகத்தான் இருக்கிறது என்று நினைத்தான் அவன். சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அவ்விதம் தன்னையே பார்த்தபடி நின்றான் என்பதை அவள் புரிந்து கொண்டிருந்த போதிலும், ஒரு தடவை கூடத்
திரும்பிப் பார்க்கவில்லை. தனது நடையில் மாறுதல் எதுவும் சேர்க்கவுமில்லை . அவள் தன் சுபாவப்படி மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தாள்.
எவருடைய அபிப்பிராயமும்
எந்நேரத்திலும் ஒரே தன்மையில் இருப்பதில்லை, சூழ்நிலை, சந்தர்ப்பம் முதலிய புறக் காரணங்களுக்குத் தகுந்தபடி
மாறுகிறது.
'அந்த யுவதி
நல்லவள்' என்று அவன் காலையில் கொண்ட அபிப்பிராயத்தை அவனே மாலையில் மாற்றிக் கொண்டான்! 'சே,
இவளைப் போய் நல்லவள் என்று பாராட்டினேனே நான். இவள் மகா தலைக்கனம் என்றல்லவா
தோன்றுகிறது' என்று எண்ணினான் அவன்.
அவ்வாறு அவன் எண்ணுவதற்குக் காரணம் இல்லாமல் போகவில்லை. பஸ் நிற்கும்
இடத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். ஒரு தூணில் சாய்ந்தவாறு நின்றிருந்த
அவனை, அப்போது அங்கே வந்த பெண்கள் கவனிக்கவில்லை என்றே தோன்றியது.
மூன்று பெண்கள் வந்தார்கள், வரும்பொழுதே வம்பளந்து
சிரித்து மகிழ்ந்து நடந்தார்கள்.
ஒருத்தியை இரண்டு பேர் கேலி செய்து களித்ததாகத் தெரிந்தது.
அவர்கள் பேச்சு விஸ்வநாதன் காதில் நன்றாக விழுந்தது.
பின்னே என்னடி வத்ஸலா! உனக்கு அவன் பேரிலே பிரியம் ஏற்படவில்லைன்னு
சொன்னால், நீ ஏன் அவனுக்காக இரக்கப்படணும்?
அவன் யாரு? அவனுக்காக நீ ஏன் ஒன்றரையணா கொடுக்கணும்?'
"பிரியம்னு சாதாரணமாகச் சொல்றியே லலி!
வெறும் பிரியமா அது? கா...
தல்! இல்லையா வத்ஸல்?” என்று கேட்டுவிட்டுக் கலகலவென்று சிரித்தாள்
இன்னொருத்தி.
விஸ்வநாதனுக்குத் திக்திக்'
என்றிருந்தது! தனக்கு நேர்ந்த நிகழ்ச்சியைப் பற்றித்தான்
அம் மூவரும் பேசுகிறார்கள்
என்பதை முதலிலேயே அவன் புரிந்து கொண்டான். அந்த வத்சலா என்கிறவள் என்னதான் பதில் சொல்வாளோ என்று அறியத் துடித்தது. அவன் உள்ளம்.
அவள் சொன்னாள்: "அந்தச் சமயத்திலே அவன் மூஞ்சைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. ஒரு ரூபாய் நோட்டைக் கையிலே வைத்துக் கொண்டு, ஒன்றரை அணா இல்லை என்பதற்காக, பஸ்ஸை விட்டுக் கீழே இறங்க வேண்டுமே என்று எண்ணினால் யாருக்குத்தான்
வருத்தம் ஏற்படாது. எல்லாரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்டக்டர் கண்டிப்பாகச்
சொன்னவுடனே அவன் முகம் தந்த தோற்றம் என்னை இளக்கியது.
நானே காசு கொடுத்து விடலாம் என்று
நினைத்தேன் கொடுத்தேன். அவ்வளவு தான்!"
“இப்படிச் செய்ததற்குப்
பேரு, தானமா, தர்மமா?" என்று கேட்டாள் பத்மா. அவள் குறும்புக்காரிதான்.
“நான் ‘தான தர்மம்’ செய்யவில்லை ...”
“அப்போ ஆண் இனத்துக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்று அப்படிச்
செய்தாயாக்கும்?"
''நியாயமான கேள்வி,
லலிதா!" என்று பத்மா பாராட்டினாள்.
வீணான சர்ச்சைக்கு
முடிவு கட்டுவதற்குத் தானோ அல்லது வேறு என்ன காரணத்தினாலோ, "ஆமாம். அப்படித் தான்!"
என்று தீர்மானமாகச் சொன்னாள் வத்ஸலா.
‘இது வரை நான் இங்கே இருப்பதை இவர்கள் உணரவில்லை' என்று மகிழ்ச்சி அடைந்த விஸ்வம், இனியும் அவர்கள் பார்வையில் படாமலே மறைந்துவிட வழி இல்லையே என்று வருத்தப்பட்டான்.
அவனுடைய நினைப்பு அநாவசியமாக வளர்ந்து விடாமல் தடுத்து நிறுத்துவதற்காகவே வந்து
சேர்ந்தது போல், வந்தது ஒரு பஸ். ''இதில் ஒருவருக்குத்தான் இடம் இருக்கிறது. ஒருவர் தான் ஏறலாம்" என்று கண்டக்டர் தெரிவித்தார்.
தோழிகள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்ற போது, 'விஸ்வநாதன் வேகமாகத் தாவிப் பஸ்ஸில் ஏறி,
உள்ளே பிரவேசித்தான். திரும்பிப் பார்த்த போது, வத்ஸலாவின் பார்வை அவன் பார்வையைச் சந்தித்தது.
'ஐயோடீ' என்று அவள் கூவியதும் அவன் காதில் விழுந்தது.
கண்டக்டர் 'ரைட்!'
என்று குரல் கொடுக்கவும், பஸ் இரைந்து
கொண்டு கிளம்பி ஓடத் தொடங்கியது. ஆனால் அம் மூவரின் முக தரிசனமோ, பேச்சுப் பரிமாற்றமோ அவனுக்குக் கிடைக்க வழியில்லாமல் போய்விட்டது.
விஸ்வநாதனின் மனம் அமைதி பெறாமல் துடித்தது. ‘ஓகோ!’ என்று கொக்கரித்தது. ‘இந்தப் பெண்களுக்கு இருக்கிற திமிரைப் பாரேன்!' என்று உறுமியது.
முடிவாக அவன் தீர்மானித்தது இதுதான்: அவள் தினசரி இந்தப் பஸ்ஸில் பிரயாணம் செய்கிறவள் என்று தெரிகிறது அல்லவா? நாளைக்கே அவள் கடனை அவளிடம் கொடுத்துத் தீர்த்து விடுகிறேன்.
இது என்ன பிரமாதம்!
ஆனால் விஷயம் அவன் நினைத்தபடி அவ்வளவு சுலபமாக முடிந்துவிடவில்லை. சட்டைப் பையில் அதிகப் படியாக ஒன்றரையணாவை வைத்துக் கொண்டு அவன் மறுநாள் வந்தபோது, அவள் வரவில்லை. இரண்டு மூன்று பஸ்களில் எதிர்பார்த்தும்
பலனில்லை. மறுநாளும் அதே கதைதான். நாலைந்து நாட்களுக்குப் பிறகு அவள் வந்தாள்.
அன்று அவனிடம் ஒன்றரையணா
இல்லை; அவனது செலவுக்குப் போதுமான காசுகள் தான் இருந்தன. அதற்கு மறுநாளும் அவனிடம் ஒன்றரை அணாவாக இல்லை! நாலணா நாணயம் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு அவன் அருகில் போய்,
'உனக்குச் சேரவேண்டிய ஒன்றரையணாவை எடுத்துக் கொள். பாக்கி தா!'' என்று சொல்லலாமென நினைத்தான்.
ஆனால் அவள் பக்கத்தில் குறும்புக்காரி பத்மாவும், திமிர் பிடித்த
லலிதாவும், கர்விகள் போல் தோன்றிய இன்னும் இரண்டு பெண்களும் காணப்பட்டார்கள்.
'நான் அவளுடன் பேசுவதற்கு ஆசைப்பட்டுத்தான்
இவ்விதம் செயல் புரிவதாக அந்த மூன்றும் நினைத்துவிடும்!
அப்புறம் அதிகப்பிரசங்கித்தனமாகக் கேலி பேசி லூட்டி அடிப்பார்கள்' என்று அவன் மனம் குறுகுறுத்தது.
இப்படிக் காலம் ஓடியதே தவிர, கடன் தீர்ந்தபாடாக இல்லை! 'காலக் கோளாறு என்பது இதுதான் போலும்' என்று விஸ்வம். அலுத்துக் கொண்டான்.
'காலக்கோளாறு, சந்தர்ப்ப சகாயம்' என்பதெல்லாம் வாழ்க்கையில் எதிர்ப் படத்தான் செய்கின்றன. துரதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என்று சொன்னாலும் சரிதான்!’
இவ்விதமாக விஸ்வநாதன் எண்ணிக்கொள்ள வேண்டிய
அவசியமும் ஒரு மாத காலத்திற்குள்ளாகவே
ஏற்பட்டுவிட்டது.
விஸ்வநாதனின் தந்தை பரமானந்தம் திடுமென்று அறிவித்தார். அவருக்குத் தெரிந்தவர் ஒருவரின் மகளை, அவனுக்கு மணம் முடித்து வைக்க விரும்புவதாகவும்,
ஜாதகமெல்லாம் திருப்திகரமாக அமைந்திருப்பதாகவும் அவர் சொன்னார். நல்ல நாள் என்று ஒரு நாளைத் தேர்ந்து, பெண்ணைப் பேட்டி காண்பதற்காக அவனை அழைத்தும் சென்றார்.
தன்னுடைய வாழ்க்கை நாவலில் சுவை சேர்ப்பதற்காகத்
தந்தை தேர்ந்துள்ள கதாநாயகி
தனக்கு முன்னரே அறிமுகமான வத்ஸலா தான் என்பது விஸ்வநாதனுக்கு அப்பொழுதுதான்
தெரிந்தது. அது ஆச்சரியமாகவும்
அதிர்ச்சியாகவும் இருந்தது. வத்ஸலாவுக்கும் அப்படித் தான் இருந்தது என்பதை அவளுடைய முகத்திலிருந்து அவன் கண்டு கொண்டான்.
உள்ளே மறைந்த வத்ஸலா தன் தந்தையை அழைத்தாள். அவர் எழுந்து
சென்றார்.
அவ்வேளையில் தன் மகளை நோக்கிய தந்தையிடம், அவள் சொன்னாள் "முதலில் நான்
அவரிடம் தனியாகப் பேச வேண்டும். அப்புறம்தான் என் சம்மதத்தைத் தெரிவிக்க
இயலும் என்று.”
வத்ஸலாவின் தந்தை சிவப்பிரகாசம் வழுக்கை மண்டையைத் தடவிக் கொண்டு முன் பக்கம் வந்தார்.
மோவாயைத் தடவியவாறு,
மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்த
பரமானந்தம் மெதுவாக அறிவித்தார்.
“பையன் வந்து பெண்ணைத் தனியாகக் கண்டு பேசணும் என்று'' இழுத்த பேச்சை அவர் முடிக்கவில்லை. அதற்குள்ளாகவே முகம் பூராவும் பிரகாசமடைய, சிவம் உற்சாகமாக,
"வத்ஸலாவும் என்னிடம் இதே மாதிரிதான் சொன்னாள்.
நான் தனிமையில் அவரோட சில வார்த்தைகள் பேசணும். அதற்கு அப்புறம் தான் என் இஷ்டத்தைச் சொல்லமுடியும்' என்றாள். இதை உங்களிடம் எப்படிச் சொல்வது; பொண்ணு என்ன இப்படி இருக்குது என்று நீங்கள் நினைத்து விடுவீர்களே'
என்று தயங்கினேன் இப்போ இரண்டு பேருக்கும் ஒத்த மனசு என்பதும் தெளிவாகிவிட்டது” என்றார்.
“நம்ம காலம் மாதிரியா இப்ப?
எல்லாமே மாறிப்போச்சு. நம்ம குழந்தைகள் ரொம்ப முன்னேறி விட்டார்கள்.” என்று மகிழ்ந்து போனார் பரமானந்தம்.
விஸ்வநாதன் வத்ஸலாவைத்
தனிமையில் சந்தித்ததும், முதல் காரியமாகத் தன் கையை வேகமாக நீட்டினான்.
அவள்
கன்னங்கள் சிவந்தன.
அவன் அடிப்பதற்காகக் கைநீட்டவில்லை. அவள் கன்னங்கள்
அடிபட்டுச் சிவக்கவுமில்லை!
அவன் கையிலிருந்த
ஒன்றரையணாவைக் கண்டுதான் அவள் நாணம் அடைந்தாள்!
"இந்தா உன் காசு. முதலில் கடன் தீர்ந்து விடட்டும்”
என்று முணு மூணுத்தான் வைராக்கியசாலி!
“என்னை மன்னிக்கணும். தயவுசெய்து மன்னிச்சிடுங்க" என்றாள் அவள்.
“மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது வத்ஸல்“ என்றான் விஸ்வநாதன்.
அவள் காதுகளில் இனிமை கிளுகிளுத்தது. அவள் உள்ளத்தில்
ஆனந்தம் சிலிர்த்தது. முகம் செங்கனியாகியது.
அதற்குள்
“கல்யாணத்திற்குப் பின் கொஞ்சம் பாக்கி வைத்திருங்கள்” என்ற சொற்கேட்டு,
வெட்கமும் கூச்சமும் மெருகிட உள்ளே போனாள் வத்சலா, விசு தன் தகப்பனாரிடம் வந்தான்.
பின்னுரை.
கதை கதையாக இல்லை. ஒரு விறுவிறுப்பு, முடிச்சு, திருப்பம் போன்றவை இல்லை. ஒரு சிறுகதை என்று வரையறுக்கப்பட்ட இலக்கிய இலக்கண வரம்புக்குள் வரவில்லை.
ஆனாலும் இக்கதை “வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்”
என்ற தொகுப்பில் உள்ளது.
ஆசிரியர் பற்றிய குறிப்பு
இயற்பெயர்: ரா சு.
கிருஷ்ணசாமி
புனை பெயர் : வல்லிக்கண்ணன்.
நையாண்டி பாரதி, கோரநாதன், மிவிஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவ தரிசி, அவதாரம் ஆகியவை.
மற்ற எழுத்தாளர்கள் இவரை ஒல்லிக்கண்ணன் என்று குறிப்பிடுவார்கள்.
பிறந்த ஊர்: ராஜவல்லிபுரம்.
திருநெல்வேலி மாவட்டம். திருமணம் செய்து கொள்ளவில்லை.
வாழ்ந்த வருடம்: 1920-2006; சுமார்
60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் இருந்தவர். ஏறக்குறைய
75 நூல்களை
பிரசுரித்திருக்கிறார். சாஹித்திய அகாடமி விருது பெற்றவர்.
இவருடைய “பெரிய மனுஷி”
என்ற குறுங்கதை பிரசித்தம். பல மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
நன்றி: வல்லிக்கண்ணன் - தமிழ் விக்கிப்பீடியா (சுட்டி)
வல்லிக்கண்ணன் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று சொல்வதற்கில்லைதான். அவரது பலம் கட்டுரை தான். ஆனால் அந்த நாட்களில் அவருடைய சமகாலத்தவரான கு. அழகிரிசாமி யும் இதேபோலத்தான் linear writing எழுதிக் கொண்டிருந்தார் என்பதை கவனிக்க வேண்டும். தாகூரின் பல சிறுகதைகளும் அப்படிப்பட்டவையே.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
நீக்குவல்லிக்கண்ணன் கதை பற்றி கருத்து கூறியமைக்கு நன்றி. க நா சு வும் ஜெயமோகனும் இவரைப் பற்றி இதையே தான் கூறுகிறார்கள். சாஹித்திய அகாடமி விருதுக்கு தகுதியற்றவர் என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.
நீக்குJayakumar
இப்போதுதான் மோசமாக, வக்கிரமாக சித்தரிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியை ஒரு திரைப் படத்தில் பார்த்து நொந்து போய் இருந்தேன். அந்த சமயத்தில் ஏழை மாணவனுக்கு பாடம் எடுக்கும் போலீஸ் பற்றிய செய்தி சந்தோஷமளிக்கிறது.குவாண்டம் கம்பியூட்டர் .. சரியாக புரியவில்லை.ஆயிரம் ரூபாய் கொடுத்து மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் ஆசிரியர் வாழ்க என்று வாழ்த்தினாலும் மனதின் ஒரு ஓரம் வலிக்கிறது.
பதிலளிநீக்குநன்றி ' பெயரில்லா !'
நீக்குவினோத் அவர்களின் செயல் மிகவும் சிறப்பு...
பதிலளிநீக்குஆம்.
நீக்குபோலீஸ் நண்பர் மனதைத் தொட்டார்.
பதிலளிநீக்குஆம். நன்றி.
நீக்குவல்லிக்கண்ணன் கதையில் ஸ்பெஷலாக ஏதுமில்லை.
பதிலளிநீக்குகதையை இப்போது படித்தேன். இது வெளிவந்த காலம் 1957 க்கு முந்தைய, 'அணா' காலம். அப்பொழுது இது புதுமையாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு இதே கதையம்சத்துடன் பல கதைகள், திரைப்படங்கள் வந்துவிட்டதால் இந்தக் கால கட்டத்தில் இதை மதிப்பிடக் கூடாது. என்னைப் பொருத்தவரை, ஒரு கதையைப் படிக்கும்போது சிரமமில்லாமல் அதை picturise செயமுடிக்கிறது என்றால், அது நல்ல எழுத்து. அந்த வகையில் இந்தக் கதை A+
நீக்குகாவல்துறை அதிகாரி வினோத் பிரமிக்க வைத்திகார் வாழ்க வளமுடன்...
பதிலளிநீக்குவாழ்த்துவோம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. கல்விக்காக களம் இறங்கியவர்களை வாழ்த்துவோம்.
இன்றைய கதையான எழுத்தாளர் வல்லி கண்ணன் எழுதிய காதலுக்குமுண்டோ கடன் என்ற கதை நன்றாக உள்ளது. எழுத்தாளர் அறிமுகமும் படித்து தெரிந்து கொண்டேன். எளிமையான எழுத்துக்களுடன் இவர் எழுதிய சில கதைகளை படித்துள்ளேன்.இந்தக் கதையையும், விபரங்களையும் பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குபோலிஸ் என்றாலே அடிதடிதான் இந்நிலையில் வினோத் விசித்திரமானவர் மனதார வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குவல்லிக்கண்ணன் கதை நன்றாகவுள்ளது.
பதிலளிநீக்குதலைமை ஆசிரியர் எண்ணம் போல அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் இன்னொரு ஆசிரியரும் பணிக்கு வர வேண்டும். ஆசிரியர் எண்ணங்கள் பலிக்க வேண்டும்.
பி.எம். டி.சி போக்குவரத்து சேவை தொடர வாழ்த்துக்கள்.
காவல்துறை அதிகாரி வினோத் அவர்கள் சேவைக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
எல்லா செய்திகளும் அருமை.
கதை பகிர்வு நன்றாக இருக்கிறது. கதைக்கு முன்னுரை அருமை.
பதிலளிநீக்குஇந்த கதையில் வருவது போல பழைய சினிமாவில் (முத்துராமன், ஜெயச்சித்திரா நடித்த படத்தில்)இப்படி ஒரு காட்சி வரும் காசு கொடுத்து உதவிவிட்டு அந்த காசை வாங்க துரத்தி கொண்டே இருப்பார் . அப்புறம் கல்யாணம் செய்வார்கள்.
நன்றி
நீக்கு"கணக்கு போட்டு காதல் வந்தது" என்ற பாடல் அந்த படத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகுழந்தைகளை பாடசாலையில் சேர்க்க தலைமை ஆசிரியர் எடுக்கும் முயற்சியும் பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குபள்ளிகளின் நிலைமை வேதனைக்கு உரியது
பதிலளிநீக்குஇன்னிக்குக் காலம்பரயே அண்ணனுடன் ஆஞ்சியைப் பார்க்கப் போன ஶ்ரீராம் இன்னமுமா வரலை?
பதிலளிநீக்கு