வெள்ளி, 24 ஜூன், 2022

வெள்ளி வீடியோ : எட்டி உதைக்கும் காலுக்கு சலங்கை, சட்டையை இழுக்கும் கைகளில் வளையல்..

 துரை செல்வராஜூ ஸாரும் சொன்னார், சமீபத்தில் தஞ்சை சென்று வந்த என் அண்ணனும் சொன்னார் அந்த இடமெல்லாம் அடையாளமே தெரியாமல் மாறி விட்டது என...

எந்த இடம்?

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை, குடியிருப்பு..

முன்பு ஈஸ்வரி நகர் தாண்டி ஆஞ்சநேயர் கோவில் தாண்டியதும் மசூதிக்கு எதிரே மருத்துவக்கல்லூரி காம்பௌண்ட் கண்ணில் படும்.  அதற்கு உள்ளே செல்லும் கேட் ஒன்றும் அந்தப் பக்கம் வெளியே வரும் கேட் இருக்கும்.

இந்தச் சாலைக்கு வந்து எதிரே இருந்த மளிகைக்கடை சந்து அல்லது தெரு வழியாக நேரே உள்ளே போனால் வரும் ராஜேந்திரா டாக்கீஸ்!  அந்த டூரிங் டாக்கீஸில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறோம். 

மாலை ஐந்தரை மணி சுமாருக்கு பக்திப்பாடல் ஒளிபரப்பு தொடங்கும்.  அது குடியிருப்பு வரை கேட்கும்.  அதில் இந்தப் பாடல் கேட்டதானால் டிக்கெட் கொடுக்க ஆயத்தமாகி விட்டார்கள் என்று பொருள்.  அங்கு அறிமுகமானதுதான் இந்தப் பாடல்.

பிற்பாடு ரேடியோவில் அதிகம் கேட்டபோது ஒரு சொந்த உணர்வு வந்து!  முருகன் என் இஷ்ட தெய்வமானதற்கு இதெல்லாமும் ஒரு காரணம்.

தமிழ் நம்பியின் பாடலுக்கு டி எம் எஸ் தானே இசையமைத்து பாடியிருக்கும் அற்புதமான பாடல்.

முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா? 
கந்தா என்றழைக்கவா? கதிர் வேலா என்றழைக்கவா?  
எப்படி அழைப்பேன்  உன்னை எங்கே காண்பேன்?  

ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா 
அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா 
அருணகிரி மனம் நொந்து தவித்தபோது
அருணகிரி மனம் நொந்து தவித்தபோது  - நீ 
அருள் கொடுத்து ஒளியாக நின்றாயப்பா! 
முருகா என்றழைக்கவா... 

நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா - முருகா 
நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா - அந்தப் 
பாவினிலே மனமுருகி நின்றாயப்பா 
பாவினிலே மனமுருகி நின்றாயப்பா - உலகுக்குப் 
பண்புமிகும் தமிழ்க் கவியை ஈன்றாயப்பா  
முருகா என்றழைக்கவா?  

முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க
முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க - நீ  
முன் தோன்றி வழி அமைத்துக் கொடுத்தாயப்பா 
கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா
கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா - நீ  
கந்தவேளாய் வந்து நின்று சிரித்தாயப்பா  -
முருகா என்றழைக்கவா  

நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா 
நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா
முருகா நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா 
கண்கள் குளிர வந்து நின்றாடப்பா 
நீ  காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா -உன்னை  
முருகா என்றழைக்கவா



1978 ல் வெளியான திரைப்படம் 'இவள் ஒரு சீதை'.  ஏ ஜெகந்நாதன் இயக்கத்தில் விஜயகுமார், ஸ்ரீகாந்த், சுமித்ரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.  வி குமார் இசை.  கவியரசர், ஆலங்குடி ஒழு ஆற்றலரசு ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கிறார்கள்.  மற்ற பாடல்கள் எதுவும் தெரியாது.  எஸ் பி பி யின் இந்தப் பாடல் மட்டுமே தெரியும்.  பாடலை ரசித்தபோது படம் இவள் ஒரு சீதை என்று தெரியும்.  அவ்வளவுதான்.  படம் பார்க்கும் விபரீத ஆசை எல்லாம் எழவில்லை.

கர்ப்பமாக இருக்கும் மனைவியைப் பார்த்து பாடும் பாடல்.  வழக்கம்போல எஸ்பிபி எஸ்பிபி எஸ்பிபி எஸ்பிபி தான்!  கேட்டுப்பாருங்கள்.

காட்சியோடு கானம் இருந்தது, தெளிவான பிரிண்ட் என்றாலும் அவற்றில் அந்த ஆரம்ப இசை இல்லை.  அதற்காக ஆரம்ப இசையோடு இருக்கும், காட்சியில்லா கானம் இணைத்திருக்கிறேன்.  காட்சியோடு காண இங்கு சுட்டலாம்.  ஆனால் காட்சியைவிட பாடல், குரல்தான் முக்கியம்!

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு- அவள் 
பழமுதிர்சோலையில் தாமரை போலே மலர்ந்தது ஒரு மொட்டு 
மலர்ந்தது ஒரு மொட்டு.

எட்டி உதைக்கும் காலுக்கு சலங்கை சட்டையை இழுக்கும் கைகளில் வளையல் 
கண்ணன் வருகிறான் என் மன்னன் வருகிறான் 
புல்லாங்குழலின் ஓசையடி பூ மெத்தைத் தென்றலின் வாசமடி 
அம்மா என்கிறான் கையை அசைக்கிறான் 
அம்மா என்கிறான் கையை அசைக்கிறான் 

ஒன்பது மாசம் போனது கண்ணே ஒரு மாதத்தில் வருவான் கண்ணன் 
கனவே பலித்தது என் நினைவே ஜெயித்தது 
அங்கே எனது வெள்ளிநிலா ஆண்மை சொல்லும் பிள்ளை நிலா 
சீதை தஹருகிறாள் ராமன் பெறுகிறான் 
சீதை தருகிறாள் ராமன் பெறுகிறான் 
வெள்ளி வீடியோ :  எட்டி உதைக்கும் காலுக்கு சலங்கை சட்டையை இழுக்கும் கைகளில் வளையல் 

June 24 : இன்று கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இரண்டு மன்னர்கள் பிறந்த தினம்!  
= = = =

51 கருத்துகள்:

  1. தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அப்பனென்று நின்றானை
    அம்மையென்று வந்தானை
    சுப்பனென்று சொன்னானை
    எப்பொழுதும் புகழ்வாய் நெஞ்சே..

    வெப்பெடுத்து வந்தாலும்
    வேதனையைத் தந்தாலும்
    அப்பனவன் அருட்கலமே
    அவன் பதங்கள் அடைக்கலமே..

    முருகா.. முருகா..

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பக்திப் பாடல் அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நாட்டில் சுபிக்ஷமும் அமைதியும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. டி எம் எஸ்ஸின் முருகன் பற்றிய பக்திப்பாடல்கள் அனைத்துமே அருமை. இந்தப் பாடலும் அடிக்கடி கேட்டவையே. ஆனால் அடுத்து வரும் படம் பற்றியோ பாடல் பற்றியோ சுத்தமாகத் தெரியாது. இஃகி,இஃகி,இஃகி! தெரிஞ்சால் தான் ஆச்சரியம்னு ஶ்ரீராம் முணுமுணுப்பது காதில் விழுந்துடுத்தே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்தப் பாடலும் அடிக்கடி கேட்டவையே.//

      பிழை!!!  'கேட்டதே' என்றிருக்க வேண்டும்!!!

      படத்தை விடுங்கள்.  பாடல் எப்போதோ ஒருமுறை கூட காதில் விழவில்லையா என்ன?!

      நீக்கு
    2. //பிழை!!! 'கேட்டதே' என்றிருக்க வேண்டும்!!!// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், திருத்தினேன். இந்த ப்ளாகர் போட்டுக் கொடுத்திருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரோ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. இப்போத் தான் கேட்டேன் முதல்முறையாக!

      நீக்கு
    4. //திருத்தினேன்.//

      நம்பிவிடுவோம்!!!

      //இப்போத் தான் கேட்டேன் முதல்முறையாக!//

      எப்படி இருந்தது என்று சொல்லவில்லையே?!

      நீக்கு
    5. பரவாயில்லை ரகம். எஸ்பிபி இதை விட அருமையான பாடல்கள் எல்லாம் பாடி இருக்கார். கேளடி கண்மணியின் பாடலை விடவா? ஆனால் அதில் உள்ள சூக்ஷ்மத்தையும் எஸ்பிபி ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.

      நீக்கு
  6. 78 ஆம் ஆண்டில் நாங்க சிகந்திராபாதில் இருந்தோம். அருமையான நாட்கள். அங்கே திரைப்படம்னு அதிகம் போகலை. (இல்லாட்டி மட்டும் போவோமா என்ன? நசிராபாதில் ராணுவக் குடியிருப்பில் திறந்த வெளித் திரையரங்கில் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களும் படம் போடுவார்கள். ராணுவ வீரர்களுக்கு இலவசம். எங்களைப் போன்ற அதிகாரிகளுக்குச் சலுகை விலைச் சீட்டு! இஃகி,இஃகி,இஃகி/ ஆகவே நிறையப் படம் பார்ப்போம். நேரம் வேறே வசதியா இருக்கும். ராத்திரி எட்டு மணிக்குத் தான் படம் ஆரம்பிக்கும் என்பதால் வீட்டில் எல்லா வேலைகளையும் முடிச்சுண்டு வந்து நிம்மதியாப் படம் பார்க்கலாம்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஏற்கெனவே சொல்லியுள்ளதுபோல எனக்கு படங்கள் மேல் பிரியம் கிடையாது.  பாடல்கள் மேல் அபார பிரேமை உண்டு.  நிறைய படங்கள் நான் பார்த்ததில்லை.  நல்ல பாடல்கள் (என் மனதுக்குப் பிடித்த) இருந்தால் அதைக் கேட்காமல் விட்டதுமில்லை.  ஒரு படம் வெளியாகி இருக்கிறது என்றால் அந்தப் படம் பற்றிய எண்ணமே இருக்காது.  ஆனால் அதில் அமைந்திருக்கும் பாடல் லிஸ்ட் ஒருமுறை பார்த்து / கேட்டு விடுவேன்!  குறிப்பாக அப்போதெல்லாம் எஸ் பி பி குரலில் பாடல் இருக்கிறதா என்று பார்த்து விடுவேன்!

      நீக்கு
  7. சொல்ல வந்ததை விட்டுட்டு வேறே கதைக்குப் போயிட்டேனே! சிகந்திராபாதில் இருக்கையில் அங்கே தமிழ்ப்படங்கள் ஒரு திரை அரங்கில் ஞாயிறு காலைக்காட்சியாகப் போடுவார்கள். அப்போ சுமித்ரா கதாநாயகி, கமல் கதாநாயகனாக நடிச்ச ஒரு படத்தை பாலசந்தரின் இயக்கத்தில் வந்ததுனு நினைக்கிறேன். பார்த்தோம். ஷோபாவும் அதில் நடிச்சிருந்த நினைவு. அங்கே இருந்த 2 வருஷங்களில் இந்த ஒரு படம் தான் பார்த்தோம். :))) இங்கே சுமித்ரா பெயரைப் பார்த்ததும் அந்த நினைப்பு வந்தது. இஃகி,இஃகி,இஃகி! ஶ்ரீராம் பல்லை அப்படிக் கடிக்காதீங்க! சத்தம் இங்கே வருது! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் நிழல் நிஜமாகிறது.  இரண்டு அற்புதமான பாடல்கள் அதில் உண்டு.

      ஒன்று, நீங்கள் வடநாட்டில் மாட்டிக்கொண்டதால் நீங்கள் அதிக பாடல் கேட்கவில்லை அல்லது இயல்பாகவே உங்களுக்கு இதுபோன்ற பாடல்கள் மேல் பெரிய சுவாரஸ்யம் கிடையாது!

      நீக்கு
    2. நீங்கள் சொல்லுவது இரண்டும் சரியே என்றாலும் பாடல்கள் மேல் ஈடுபாடெல்லாம் உண்டு. என்றாலும் எல்லாப் பாடல்களும் அல்ல. இன்னும் சொல்லப் போனால் ஹிந்தித்திரைப்படப் பாடல்கள் அதிகம் கேட்டிருப்பேன். ஆனால் திரைப்படப் பாடல்கள் என்று பார்த்தால் ரொம்பக் குறைவு. அப்பா விட மாட்டார். முன்னெல்லாம் அக்கம்பக்கம் சக குடித்தனக்காரங்க வீட்டு ரேடியோ மூலம் கேட்பவை/ஒலிபெருக்கிகள் (மதுரையில் இதுக்குப் பஞ்சமே இல்லை) மூலம் கேட்பவையே திரைப்படப் பாடல்கள் எல்லாம். வீட்டில் ரேடியோவெல்லாம் இல்லை. என் கல்யாணத்துக்கு ஒரு வருஷம் முன்னால் அண்ணா தான் வாங்கி இருந்த ஃபிலிப்ஸ் ட்ரான்சிஸ்டரை எனக்குக் கேட்டுப் பொழுது போக்கவெனக் கொடுத்தார். அப்போ ஹோசூரில் அண்ணா வாசம். அங்கே தான் திரைப்படப் பாடல்கள் அதிகம் கேட்டிருக்கேன். பின்னர் மதுரை வந்தாலும் அப்பா வீட்டில் இருக்கும் சமயம் ரேடியோவில் திரைப்படப் பாட்டெல்லாம் கேட்க முடியாது. இல்லாத நேரமாகப் பார்த்துக் கேட்கணும். அந்த பயம் மனதிலே படிந்து விட்டதோ என்னமோ? பின்னர் வந்த நாட்களிலும் அதிகம் கேட்கத் தோணலை. :))))

      நீக்கு
    3. எங்கள் வீட்டில் ஆரம்பம் முதலே ரேடியோ இருந்தது.  பிலிப்ஸ் வால்வ் ரேடியோ!  அப்புறம் டிரான்சிஸ்டர், டிவி எல்லாம் உண்டு.  பாடல்கள் கேட்க சிலோன் ரேடியோ முதல் விவித் பாரதி வரை..  அப்புறம் FM ரேடியோ தரத்தில் மதுரை வானொலி...  நிறைய பாடல்கள் எம்டி கேசெட்ஸ் வாங்கி ரேடியோவிலிருந்து ரெகார்ட் செய்திருக்கிறேன்.  தமிழுக்கு இணையாக ஹிந்திப் பாடல்களும், கொஞ்சம் தெலுங்கு, கொஞ்சம் கன்னடப் பாடல்களும் ரசிப்பேன்.  அதைவிடக் குறைவாக மலையாளம்!

      நீக்கு
    4. சென்னை/அம்பத்தூரில் இருந்த வரைக்கும் காலை சென்னை வானொலியின் மங்கள வாத்தியத்தில் ஆரம்பித்து ஒன்பதரைக் கச்சேரி வரை கேட்டுக் கொண்டிருப்பேன். பின்னர் மத்தியானம் விவித்பாரதியின் கீத் மாலா கேட்பேன். அது 3 மணி வரைக்கும் இருக்கும். அதன் பின்னர் ரேடியோவை அணைச்சுட்டு வேலைகளை ஆரம்பிப்பேன். அங்கே இருந்து வரச்சேயே அந்த ட்ரான்சிஸ்டரை/ரேடியோவைக் கொடுத்துட்டு வந்தாச்சு. பின்னர் வந்த ட்ரான்சிஸ்டர்களில் எந்த ஸ்டேஷன் எங்கே என்பதைப்பார்த்துப் போட முடியலை. ஆகவே பையர் கணினியில் தரவேற்றிக் கொடுத்தார். பின்னணியில் இசை ஒலிக்கக் கணினியில் வேலை செய்த காலம் உண்டு. ஆனால் எல்லாம் பக்திப்பாடல்கள், கச்சேரி,இசைக்கருவிகளின் இசை, ஒரு சில ஆங்கிலப் பாடல்கள்னு தேர்ந்தெடுத்தவையே. அதுவும் டெஸ்ட் டாப் ரிப்பேர் ஆனதும் நின்னு போச்சு. அதை எல்லாம் பென் ட்ரைவில் சேமித்து வைத்திருந்தாலும் இதில் எல்லாம் போட்டுக் கேட்கும்படியான வசதி இல்லை. டெஸ்க் டாப்பில் அந்தக் குறிப்பிட்ட ஃபைலை மட்டும் ஆஃப்லைனில் போட்டுக் கேட்டுக் கொண்டே இணையத்திலும் இருக்கலாம். இதை இப்போத் தேடிக்கண்டு பிடிக்கும் அளவுக்குப் பொறுமை இல்லை. அப்படியே விட்டுப் போச்சு. இங்கேயும் யார் வீட்டிலும் திரை இசைப்பாடல்கள் ஒலிப்பதில்லை. யாருமே கேட்கமாட்டாங்க போல! தொலைக்காட்சிப் பெட்டியும் கேபிள் போய் செட் டாப் பாக்ஸ் வந்தவுடன் போடுவது சிரமம். பல சமயங்களில் தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்கையில் ஏதோ தவறு நிகழ்ந்து பின்னர் கேபிள்காரங்க வந்து சரிசெய்யறாப்போல் ஆயிடும். ஆகவே அதையும் தொடுவதில்லை. இல்லை எனில் மத்தியானம் ஜிடிவி, சோனி டிவியில் ஹிந்திப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். :( இப்போ எதுவும் இல்லை.

      நீக்கு
    5. டெஸ்க் டாப்/ என வந்திருக்கணும். ஸ்டார் தொலைக்காட்சியில் நிறைய ஆங்கிலப் படங்களும் பார்த்திருக்கேன். அப்போத் தான் மிஸஸ் டவுட்ஃபயர் பார்த்துட்டு ஆஹா, நம்ம உல(க்)கை நாயகனைக் காப்பி அடிச்சதாச் சொல்லப் போறாங்களேனு வியந்து போனேன்! இஃகி,இஃகி,இஃகி! இது போலச் சில/பல படங்கள். ஒரு படத்தின் கதையைக் கூட என் போக்கில் எழுதினேன். :)))))

      நீக்கு
    6. நான் ஆங்கிலப்பாடல்கள் பெரும்பாலும் கேட்டதில்லை.  எப்போதாவது எல்லோரும் கேட்கும் abba, போனி எம் போன்றவை கேட்பதுண்டு,  ரம்பா ரொம்ப ரேர்!  விவித் பாரதியின் மன் சாஹே கீத், மனோரஞ்சன், ஆப் கே பரமாயிஸ், சாயா கீத் போன்றவை ரெகுலர்.

      நீக்கு
    7. படங்களே ரேர். எ திலும் ஆங்கிலப் படங்கள் ரொம்ப ரொம்ப ரேர்.  ஜேம்ஸ் பாண்ட், மெக்கன்னாஸ் கோல்ட் போன்ற புகழ்பெற்ற படங்கள் மட்டும்.

      நீக்கு
    8. Mackenna's Gold படம் சென்னை ஸஃபையர் தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது எழுபதுகளில். கல்யாணம் ஆகிக் குடித்தனம் வைச்சப்போ ஒரு நாள் அலுவலகத்திலிருந்து சீக்கிரமா வந்து உடனே என்னை வெளியே கிளம்பும்படி அவசரப் படுத்தினார். என்னடானு பார்த்தால் அவரோட நண்பர்களில் சிலரோடு இந்தப் படம் பார்க்க மவுன்ட் ரோடுக்கு அழைத்துப் போனார். எனக்கு அப்போ ஆங்கிலப்படம்னு எல்லாம் தெரியாது. கல்யாணம் ஆகிச் சில நாட்களே ஆகி இருந்தது. ஏதோ சினிமானு சந்தோஷமா வந்தால் ஒரு விதத்தில் ஏமாற்றம். ஒரு விதத்தில் திரை அரங்கைப் பார்த்து சந்தோஷம். அப்புறமா அங்கிருந்து படம் முடிஞ்சதும் ஒரு ஓட்டலில் ஒரே ஒரு தோசை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து மிச்சம் வைச்சிருந்த சாதத்தைச் சாப்பிட்டு இரவு உணவை முடிச்சோம். அப்போல்லாம் சாப்பிட முடிஞ்சது இரவு நேரமானாலும். இப்போல்லாம் ஏழு மணிக்கு மேலே ஒத்துக்கறதே இல்லை.

      நீக்கு
    9. படம் அப்போப் புரியலை. அதுக்கப்புறமா ராஜஸ்தான் வந்ததும் சிநேகிதர்கள் மூலம் கதையைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். பின்னர் அங்கே ராணுவத் திறந்த வெளி தியேட்டரில் கூட இதையும் டென் கமான்ட்மென்ட்ஸ் (பள்ளியில் படிக்கும்போது பேசிப்பாங்க) படம், Hatari எல்லாமும் பார்த்தோம். பெண் அப்போ ஒன்றரை வயதுக் குழந்தை. ஒமர் ஷரிஃப் மெக்கென்னாஸ் கோல்டில் நடிச்சவர் அப்போ ரொம்பப் பிரபலம். பின்னர் கான் வித் தி வின்ட் (நாவல்) கதையைப் படிச்சுட்டுப் படம் பார்த்தப்போ என்னவோ வெறுமையாக உணர்ந்தேன். கதையை மட்டும் 3,4 தரம் படிச்சிருப்பேன்.

      நீக்கு
    10. படம் பெயர் தெரியவில்லை.  கப்பல் உடைந்து ஹீரோ ஒரு தீவுக்குப் போவான்.  மாபெரும் சிலை ஒன்று இருக்கும் அது எழுந்து நடக்கும்.  ஹீரோ அதை எதிர்த்துப் போராடுவார்.  வேறு சில ஜாலக்காட்சிகள் எல்லாமும் இருந்த ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன்.  ஹிஸ்டரி ஆப் தி வேர்ல்ட் பார்த்திருக்கிறேன்.  10 கமாண்ட்மெண்ட்ஸ் பள்ளியில் காண்பித்தார்கள்.  அதுவும் சில லாரல் ஹார்டி படங்களும்.

      நீக்கு
  8. இரண்டுமே அருமையான பாடல்கள் ஜி

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  10. நல்ல இரண்டு பாடல்கள். முதல் பாடல் மட்டும் நிறையக் கேட்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  11. பக்தி பாடல் பலதடவை கேட்டதுண்டு எங்கள் அப்பா வீட்டில் ஒலிக்க விடுவார் கோவில் திருவிழாக் காலங்களில் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்.

    இரண்டாவது எஸ் பி பி குரலில் அருமையாக இருக்கும் .

    இன்று கவி மன்னர்கள் இருவருக்கு பிறந்தநாள் என அறிந்து மகிழ்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  13. அருமையான முருகன் பாடல். டி,எம்.எஸ் இசை அமைத்த பாடல் அடிக்கடி கேட்கும் பாடல்.
    அடுத்த பாடலும் இனிமையான பாடல். கேட்டு இருக்கிறேன்.
    பாடல் பகிர்வுக்கு நன்றி.
    இரு சிகரங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள், வணக்கம் பல.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை.

    முதல் தனிப்பாடல் பலமுறை கேட்டு ரசித்துள்ளேன்.
    /எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன்?/
    இந்த வரிகளில் மனது பரிதவித்து போகும். டி. எம். எஸ்ஸின் கம்பீரமான குரலில் அடிக்கடி கேட்டு பக்தி பரவசபட்ட பாடல்.

    இரண்டாவது பாடலும் அடிக்கடி இல்லாவிட்டாலும் கேட்டுள்ளேன். எனக்கு பிடித்தமான பாடகர் எஸ. பி அவர்களின் இனிமை நிறைந்த பாடல்.இப்போதும் கேட்டு ரசித்தேன்.

    இரண்டு பாடல்களுமே மறைந்திருக்கும், ஆனால் நம் மனதில் தினமும் உறைந்திருக்கும் உருவத்தை என்று கண்ணாற கண்டு களிக்கப் போகிறோம் என்ற ஒரு தவிப்புடன் அமைந்திருப்பது அருமை. குழந்தையும் தெய்வமும் என்றும் ஒன்றுதானே.....அதிலும் நீங்கள் இன்று அந்த இரண்டையும் இணைத்திருப்பது கேட்பதற்கு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.  இரண்டு பாட்டுக்கும் பொருத்தமாகவும் அழகாகவும் இணைப்புப் பாலம் கொடுத்து விட்டீர்கள்.

      நீக்கு
  15. அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள்!
    பாடல்கள் அருமை! சிறு வயதில் முருகன் பக்தி பாடல்கள் சினிமா தியேட்டர்களில் கேட்ட நினைவு உண்டு. இரவு உறங்க செல்லும் முன்பு ஒலிக்கும் "மருதமலை மாமணியே" நினைவில் ஆடுகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வானம்பாடி.  இரண்டாவது பாடல் கேட்டீர்களா?  அப்புறம் சமையல் குறிப்பு, கதை எல்லாம் அனுப்பவில்லையே நீங்கள்?!

      நீக்கு
  16. பாடல்கள் அருமை! மற்றதையெல்லாம் மற்றவர்கள் எழுதிவிட்டார்களே!

    பதிலளிநீக்கு
  17. இரு பாடல்களுமே கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்...
    டி எம் எஸ் இசையமைப்பு சூப்பர்!!

    பல்லவ நாட்டு - பருவம் 18....எஸ் பி பிக்கு 70 வயதிலும் பருவம் 18! இந்தக் குரல் அதே காந்தம் இறுதி வரை!!!! கிம்மிக்ஸ் உட்பட!! அது என்ன ரகசியமோ....வரம்!!! உச்சரிப்பும்

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!