பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், கம்பி, கான்கிரீட் இல்லாமல் சுடாத செங்கற்களை பயன்படுத்தி, மாடி வீடு கட்டியுள்ளார்.
பெரம்பலுார் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் - -லோகாம்பாள் தம்பதியரின் மகன் ஜெகதீசன், 30. இவருக்கு ரம்யா என்ற மனைவியும், செந்தமிழ்வேந்தன் என்ற மகனும் உள்ளனர். தனியார் கல்லுாரியில் பி.இ., சிவில் படித்த பின், புதுச்சேரி மாநிலம், ஆரோவில் பகுதியில் உள்ள பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த ஒருவர் நடத்தும் 'எர்த் இன்ஸ்டியூட்டில்' தற்சார்பு முறையில் வீடு கட்டும் பயிற்சி பெற்றார்.தொடர்ந்து, வித்தியாசமான முறையில் பழமையான முறையில், கம்பி, கான்கிரீட் இல்லாமல் சுடாத செங்கற்களை பயன்படுத்தி, மண் மாடி வீடு கட்ட விரும்பினார். அன்னமங்கலம் கிராமத்தில் 2021 மார்ச்சில் இதற்கான கட்டுமான பணியை துவங்கினார்.தற்போது, கட்டுமான பணி முடிந்து, கடந்த 1ம் தேதி கிரஹப்பிரவேசம் நடத்தி உள்ளார். வீட்டின் அடித்தளம் கருங்கற்களாலும், சுவர்கள் அனைத்தும் சுடாத செங்கற்களாலும் கட்டப்பட்ட இந்த வீடு, பார்க்க மண் வீடு போல் அழகாக தோற்றம்அளிக்கிறது.
செம்மண்ணில் சிறிதளவு சிமென்ட் சேர்த்து மின்சாரம் தேவைப்படாத மிஷின் மூலம் நல்ல அழுத்தம் கொடுத்து, மண் செங்கற்களை உருவாக்கியுள்ளார். இந்த கற்களை கொண்டு வீடு கட்டப்
பட்டுள்ளது.மேற்கூரைக்கு கம்பி மற்றும் கான்கிரீட் பயன்படுத்தாமல், சுடப்படாத மண் கல்லை 'ஆர்ச்' வடிவில் மேற்கூரையை கட்டி உள்ளார்.வீட்டின் மாடி கைப்பிடி, வீட்டின் முன் பக்க கேட், ஜன்னல் கிரில் இவை அனைத்தும் இருசக்கர வாகனத்தில் உள்ள 'செயின் ஸ்பிராக்கெட்' பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்தில், குகை போன்ற அமைப்பில் ஒரு அறை கட்டப்பட்டு உள்ளது.
பழங்கால முறையை பயன்படுத்தி தரை தளம் மற்றும் முதல் தளம் கட்டப்பட்டுள்ளதால், கோடை காலத்தில் வெயில் தாக்கம் இல்லாமல், வீடு எப்போதும் குளுகுளுவென உள்ளது.வீட்டில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மழை நீர் சேமிப்பு தொட்டியும், மாடித் தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் தரைக்கோ, சுவருக்கோ எங்கும் டைல்ஸ் பயன்படுத்தவில்லை. வீட்டில் கதவு, ஜன்னலுக்கு புதிய மரங்களை பயன்படுத்தாமல், பழைய மரங்களை பயன்படுத்தி உள்ளார். இவரின் வித்தியாசமான முயற்சி குறித்து அறிந்து கொள்ளவும், இவரை பாராட்டவும் 99436 -77481 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
==================================================================================================================
விமான நிலையத்தில் நடமாடும் ரோபோ அறிமுகம்!
விமான பயணிகளுக்கு உதவும் நடமாடும் ரோபோ ஏற்கெனவே பெங்களூரு விமான நிலையத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது கோவை விமான நிலையத்தில், பயணிகளுக்கு வழிகாட்ட இரண்டு நடமாடும் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் கோவை கலெக்டர் சமீரன், கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கோவை போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார், கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரோபோ செயல்பாடு குறித்து, கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறியதாவது:
இரண்டு ரோபோக்களும், பயணிகளுக்கு உதவ பயன்படுத்தப்படும். பயணிகளுக்கு தேவையான தகவல்கள், உதவிகள், விமான நிலையத்தில் உள்ள வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மேற்கொள்ளும். தற்போது ஆங்கில கட்டளைக்கு மட்டுமே செயல்பட்டு வரும் இந்த ரோபோ, விரைவில் தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் செயல்பட செயல்படும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில், பயணிகளின் கேள்விகளுக்கு ஒலி வடிவிலான பதில்களை தரும் வகையில் அமைந்துள்ளது.
விமான நிலையத்துகுள் நடமாடும் ரோபோ, பயணிகளை அணுகி அவர்களின் தேவைகளை கேட்கும். பயணிகள் உதவி மையத்துடன் தொடர்பு கொண்டு பேச உதவும். வீடியோகால் முறையில் உதவியாளருடன் பேசவும் முடியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
======================================================================================================
==============================================================================================================================================
கேரளாவில் மருந்து டெலிவெரி முயற்சியில் ஈடுபட்டுள்ள ட்ரோன் ஸ்டார்ட்அப்!
புது டில்லியைச் சேர்ந்த ட்ரோன் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்கை ஏர் மொபிலிட்டி, ஆஸ்டர் டி.எம்., ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து பரிசோதனை முயற்சியாக கேரளாவில் மருந்து மற்றும் ஆய்வக சேம்பிள்களை விநியோகிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது.
இதற்காக ஆஸ்டர் டி.எம்., மருத்துவமனையுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி, ஸ்கை ஏர் மொபிலிட்டி நிறுவன ட்ரோன்கள் கோழிக்கோட்டில் உள்ள ஆஸ்டர் எம்.ஐ.எம்.எஸ்., மருத்துவமனையிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அரீகோட்டில் உள்ள ஆஸ்டர் மதர் மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் ஆய்வக சேம்பிள்களை கொண்டு சேர்ப்பர்.
அதற்காக பி.வி.எல்.ஓ.எஸ்., சோதனை ஓட்டம் 5 நாட்கள் நடைபெற்றது. கண் பார்வையில் ட்ரோன்கள் இருக்கும் நிலையில் ஆபரேட் செய்வதை விசுவல் லைன் ஆப் சைட் (VLOS) என்பர். பார்வைக்கு அப்பால் ட்ரோன் சென்ற பின்னரும் அதனை இயக்குவதை பியான்ட் த விசுவல் லைன் ஆப் சைட் (BVLOS) என்கிறார்கள். திறன்பெற்ற ட்ரோன் பைலட்டுகளால் தான் இதனை இயக்க முடியும்.
தற்போது 50 ட்ரோன்களை இரு மருத்துவமனைகளுக்கு இடையே இயக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். குளிர்ப்பதன கிடங்கு நிபுணர் மருந்துகள் மற்றும் ஆய்வக சேம்பிள்களை வெப்பநிலையை கட்டுப்படுத்தும் பேலோட் பெட்டியில் நிரப்பி, ட்ரோனில் ஏற்றுவார். பின்னர் அது ட்ரோன் பைலட்டின் கட்டளைக்கு ஏற்ப குறிப்பிட்ட இலக்கை அடையும். முன்னதாக பெங்களூருவில் இருக்கும் இரு ஆஸ்டர் மருத்துவமனைகளுக்கு இடையே 7 நாள் மருந்து மற்றும் ஆய்வக சேம்பிள்கள் டெலிவெரி நடைபெற்றது.
ட்ரோன் மூலமாக சங்கிலி தொடர் மருத்துவமனைகளுக்கு விநியோகம் வழங்குவது குறித்து ஸ்கை ஏர் மொபிலிட்டியின் சி.இ.ஓ., அன்கித் குமார் கூறியதாவது: இந்த சோதனை முயற்சியின் நோக்கம் ட்ரோன் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி மாதிரிகளை பெற்று விநியோகிப்பது வேகமாக நடக்கும். செலவையும் , நேரத்தையும் குறைக்கும். சங்கிலித் தொடர் மருத்துவமனைகள் தங்களது நோயாளிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கவும், மருத்துவமனைகளை மேம்படுத்தவும் வாய்ப்பு வழங்குகிறது.
= = = = = = = = ======================================================================================================
நான் படிச்ச கதை
ஜெயக்குமார் சந்திரசேகரன்
***************
சாஸ்தாப் பிரீதி-அ. மாதவையா
ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு
முன் எழுதிய கதை.
கதைச் சுருக்கம்:
இந்த பர்பிள் வண்ணத்தில் உள்ள வாக்கியங்களைத் தொடர்ச்சியாகப் படித்தால் போதும்.
முழுக்கதையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக்கால தமிழ் நடையை ரசிக்கலாம்.
செங்கோடடைக்கும் கொல்லத்துக்கும் இடையிலே, தென்னிந்தியா இருப்புப்பாதை சுமார் இருபது மைல் நீளத்துக்கு, குறிஞ்சி நிலத்தை ஊடுருவிச் செல்கின்றது. அந்தப் பிரதேசம், மலைவளத்திலும் இயற்கைக் காட்சியின் வனப்பிலும், இத்தேசமெங்குமே இணை எதிர் இன்றிச் சிறந்ததாகும். நெடுகவே பலவளஞ் செறிந்து விளங்கும் மேற்குமலைத்தொடர், இப்பாகத்திலே கண்கவர் அழகுடன் செல்வவளமும் மலிந்து, சந்தனமரம், தேக்குமரம், காப்பிக்கொட்டை, தேயிலை, சாதிக்காய், ஏலக்காய், மிளகு, கிராம்பு முதலிய பல்வேறு பொருள்களை விளைவிக்கும் குளிர்ந்த பசிய சோலைகளுடன் பொலியாநிற்கும். மெதுவாகவே செல்லும் ரயில்வண்டியிலிருந்து இருபுறமும் மலைக்காட்சியைக் காண மனோகரமாயிருக்கும். சில சமயங்களில் காட்டுயானைகள் அங்கே வருவதுண்டு. இப்பாதையிலுள்ள ஆரியன் காவு என்னும் ஸ்தலம் மிகவும் அழகானது. அதன் சமீபத்தில் ரயில் வண்டி சற்றேறக்குறைய மூவாயிரம் அடி தூரத்துக்கு மலையை ஊடுருவித் தோண்டியுள்ள குகைமார்க்கமாகச் செல்கின்றது. ஆயின் நம்கதை நிகழ்ந்த காலத்திலே, குகைவழியும் இல்லை, ரயிலும் இல்லை. அந்தப் பிரதேசத்துக்கு ரயில் வந்து கொஞ்சகாலம்தான் ஆகிறது. ஆரியன் காவு என்னும் பெயர், அங்குள்ள ஆரியன், ஐயன், ஹரிஹரபுத்திரன் என்னும் சாஸ்தாவின் கோயிலை ஒட்டி வந்தது.
அசுரர்கள் அமிர்தத்தைப் பானஞ் செய்து நித்தியத்துவம் பெற்றுவிடாதபடி, அவர்களை ஏமாற்றும் பொருட்டு, மகாவிஷ்ணு மோகினி அவதாரமெடுத்த பொழுது, அந்த மோகினிக்கும் பரமசிவனுக்கும் ஹரி ஹர புத்திரன் உற்பவித்த புராண கதையைப் பலர் அறிந்திருக்கலாம். காட்டு யானைகள் சஞ்சரிக்கும் வனப்புமிக்க அம் மலைப்பாங்கிலே, அந்த ஹரிஹர புத்திரர் கோயில்கொண்டு வாழ்வதும், வர்ண பேதமின்றிப் பல்லாயிரம் பக்தர்கள் அவரை வழிபட்டுக் கொண்டாடுவதுமே, நம் கதையைச் சார்ந்த விஷயங்களாகும். திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து செங்கோட்டை - கொல்லம் வழியாக மலையாளம் செல்லும் பிராமணப் பிரயாணிகளுக்கு, ஆரியன் காவில் மலையாளத்து மகாராசா ஏற்படுத்தியிருக்கும் ஊட்டுப்புரை, வழித்தங்கலுக்கு வசதியான இடம். ஆகவே, ஆண்டாண்டுதோறும் அக்கோயிலில் நடக்கும் சாஸ்தாப் பிரீதி என்னும் விசேஷச் சடங்குக்கும் விருந்துக்கும், பிராமணர்கள் திரள் திரளாகக் கூடுவதுண்டு. பிரக்கியாதி பெற்ற சாஸ்தாவின் தரிசன மகிமையும், அன்று நிகழும் விருந்துச் சாப்பாட்டின் சிறப்பும் யாவரும் அறிந்தனவே. செல்வச் சுருக்கமும் சீரண சக்திப் பெருக்கமும் ஒருங்கே வாய்ந்து, ஆங்காங்குள்ள பல புண்ணியஷேத்திரங்களைச் சென்று தரிசித்து, அவ்வவ்விடங்களில் ஏற்பட்டிருக்கும் ஊட்டுப்புரை, சத்திரம், கோயில்களில் பணச்செலவின்றி வயிறுபுடைக்க உண்டுகளித்து, தாம் கண்ட பற்பல தெய்வங்களின் ஏற்றத்தாழ்வையும் வரசக்திகளையும் பற்றிக் கதைபேசியும் வாதாடியும் ஒருநாள் போலப் பல நாளையும் ஆண்டுகளையுங் கழிக்கும் பிராமணோத்தம கோஷ்டிகள் எல்லாம், கிழக்கேயுதிக்கும் ஞாயிறு மேற்கே உதிக்கினும், ஆரியன் காவு சாஸ்தாப் பிரீதியன்று, அங்கு கூடாதொழியார். இத்தகைய கோயில் பெருச்சாளிகளின் யதார்த்தமான தெய்வ பக்தியும் விசுவாசமும் ஆழ்ந்து பரிசோதிக்கத் தக்கதன்று. ''பனங்காட்டு நரி சலசலப்பை அஞ்சாது.''
ஆரியன் காவில் அன்று சாஸ்தா பிரீதி. மணி பன்னிரண்டாகிவிட்டது.
வெயில் கடூரமாய் இருந்தது. இலை அசங்கவில்லை. மேற்குத் திக்கிலிருந்து வரும் இரண்டு பிராமணர், ஆரியன் காவை நோக்கி மூச்சிறைக்க நடந்து வந்துகொண்டிருந்தார்கள். மலையேற்றம் அதிகம்
இல்லை. ஆனால் தொந்திகளின் பெருமையினால், அவர்கள் வியர்த்து
விறுவிறுத்து, வாய்திறந்து மூச்சு விட்டு, வெகு சிரமத்துடன் நடந்து வந்தார்கள். கோயில் இன்னும் அரை மைலுக்கு மேலிருக்கும்.
பொழுதாகி விட்டது. ஆகவே அவர்கள் இயன்றமட்டும் அவசரமாக
நடந்தார்கள். கடைசியில் ஆரியன் கோயிலை அடைந்தவுடன்,
அவர்களில் ஒருவர் களைப்புற்று, குளத்தின் கரையில்
கீழே விழுந்துவிட்டார். மற்றவர் பரபரப்பாய்
விசாரித்ததில், இன்னும் சடங்கு முடியவில்லை, அவர்கள் வந்தது
நல்ல சமயந்தான் என்று தெரிய வரவே, களைப்புற்றவரைத் தேற்றி, அவசரப்படுத்திக் கையுதவினார். பின்பு, இருவரும் வேகமாய் நீராடி, சந்தியாவந்தன ஜபங்களை முடித்துக்கொண்டு, கோயிலுக்குள் நுழைந்தார்கள். பழைய பெருச்சாளிகளாகிய
அவர்களுக்கு, எங்கே உட்கார்ந்தால் நல்ல சாப்பாடு போதுமானபடி கிடைக்கும் என்பது தெரியும். ஆனால், கோயிலில் கூட்டம்
அதிகமாயும், இவர்கள் உட்கார உள்ளங்கை யகலமுள்ள இடம் கிடைப்பதும் அரிதாயுமிருந்தது.
யாவரும் சளசளவென்று பேசிக்கொண்டுமிருந்தனர்.
விருந்துச் சமையல் முடிந்து, சாஸ்தாவின் பூசையும்
முடிந்தாய்விட்டது. ஆயின், வழக்கம்போல், ஐயன் இன்னும் எவர்மேலும் ஆவேசமாகி
வந்து பிரசன்னமாகி, தான் திருப்தியடைந்ததை
வெளியிட்டு, பிரசாதம் கொடுக்கவில்லை. அதன்பொருட்டு எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
கோயிலில் வெளிப் பிராகாரத்துக்குள் ஒரு
நாய் வந்துவிட்டது. அதனால் பூஜையும்
விருந்தும் அசுத்தமாகி விட்டது. அதனால்தான் ஐயனுக்குக் கோபம், என்றார் சிலர். சிலர், வந்தது பூனைதான்,
நாய் இல்லை, அதனால் அசுத்தமில்லை, என்றனர். வேறு சிலர், கோயில் சுயம்பாகிகளில் ஒருவன் கையில்,
ஒரு நாயர் ஸ்திரீ ஒரு முறத்தைக் கொடுக்கும் பொழுது அவள் கை அவன்மேல் பட்டும், அவன் ஸ்நாநம் செய்யாமல் மடைப்பள்ளியில்
வேலை செய்ததனால்தான் ஐயனுக்குக்
கோபம் என்றனர். பின்னும் சிலர், ஊட்டுப்புரைகளிற்
சிலவற்றை அடைத்துவிடுவது என்ற
திருவாங்கூர் சமஸ்தானத்தாரின் யோசனைதான், தீன தயாளுவாகிய ஐயனது கோபத்துக்குக்
காரணமென்றனர். இவ்வாறாக, பலர் பலவண்ணம் கூக்குரலிட்டு வாதாடிக்
கொண்டிருப்பினும், எங்கே இடம் போய்விடுமோ என்ற பயத்தினால், ஒவ்வொருவரும், தத்தம் ஸ்தானத்திலேயே நிலையாயிருந்தனர். ஆகவே, இரட்டையிரட்டை வரிசைகளாய் உள்ள பந்திகளினூடே, நூதனமாய் வந்த
பிராமணர் இருவரும், திரிந்து திரிந்து பார்த்தும், அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அதே சமயத்தில்,
முன்பு களைப்புற்றுக் கீழே விழுந்தவரும் இப்பொழுது கொடும் பசியினால் வருந்திக் கொண்டிருப்பவருமான
கிருஷ்ணையருக்கு, முரட்டு யுக்தி ஒன்று தோன்றிற்று.
உடனே அவர், தன் நண்பர் இராமையர் காதில் அதை ஊதினார். குசுகுசுவென்று இருவரும் சில நிமிஷம் அந்தரங்கமாய்ப்
பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு, ஆபத்துக்குப் பாவமில்லையென்று நினைத்தோ, அல்லது சாகத் துணிந்து விட்டால் சமுத்திரம் முழங்கால் என்று எண்ணியோ, தங்கள் குயுக்தியை நிறைவேற்றத் துணிந்துவிட்டனர்.
பூசை முடிந்து ஒருமணி நேரமாய் விட்டது. பூசாரி நைவேத்யஞ்
செய்த தேங்காய் பழம் முதலிய பிரசாதங்கள், அப்படியே திரள்
திரளாய் இருந்தன. மூச்சு முட்டும்படி, பூசையறை, தூப தீபங்களால் நிறைந்திருந்தது. நாவில் நீரூறும்படி
மணக்க மணக்கச் செய்து வைத்திருந்த போஜன பதார்த்தங்களெல்லாம்,
ஆறிக்கொண்டிருந்தன. பிராமணப் பாடகர்கள் மூவர், ஐயனது திவ்ய மங்கள குணங்களைப் புகழ்ந்து
பாடிக்கொண்டிருந்தனர். ஐயன் மனமிரங்கி,
இன்னும் எவர்மேலும் ஆவேசமாகிப் பிரசன்னமாக
வில்லை. எல்லாருக்கும் அலுப்பும் பசியும் அதிகரித்துக்
கொண்டிருந்தன. இங்கனமிருக்கும் பொழுது, அதோ அந்த பிராமணரைப் பாருங்கள்! அவர் தொந்தியினும் பருத்த தொந்தி அங்கு எவருக்குமில்லை. ஒரு தூணிற் சாய்ந்தபடியே கண்களை மூடிக்கொண்டு, இராமையரால் அணைக்கப்பட்டு,
கிருஷ்ணையர் உடலெல்லாம் உதறி நடுங்கினார். முதலில் ஒருவரும்
அவரைக் கவனிக்கவில்லை. ஆயின், அடுத்த நிமிஷத்தில் ''அதோ ஐயன் வருகிறான்!'' ''ஐயன் வருகிறான்!''
''ஐயன் வந்துவிட்டான்!'' என்ற சந்தோஷகரமான பேரொலி கோயிலெங்கும்
முழங்கிற்று. பாடகர்கள் தங்களுக்கெட்டிய மட்டும் உயர்ந்த குரலில் ஐயனைப் புகழலானார்கள். ஐயனது ஆவேசத்தைப்
பார்க்கும் வண்ணம், பலர் எழுந்து வந்தனர். தாசிக்குத் தண்ணீர்க் குடத்திற் கண், என்னும் மூதுரை விளங்க, அங்ஙனம் எழுந்து வந்தோரெல்லாம், தத்தம் ஸ்தானத்திலே
மேல்வேஷ்டியோ, துண்டோ, போட்டுவிட்டே வந்தனர். ''உவாய்! உவாய்! உவாய்!''
என்று, அப்பெரு முழக்கமும் அடங்கும்படி கர்ச்சித்தார்
கிருஷ்ணையர். இப்பொழுது பார்த்தால், சற்று நேரத்துக்கு முன், மலையேறி வருவதில் மூச்சிளைத்துக் களைத்து விழுந்தவர் இவர்தானோ என்று சந்தேக முண்டாகும். ஐயன் உள மகிழ்ந்து ஆவேசங் கொண்ட மகா புருஷனை,
பிரதானிகரான ஐந்தாறு பிராமணர்கள் சூழ்ந்து, அணைத்துப் பிடித்து, பூசையறைக்குள் ஐயன் சந்நிதிக்கு மெதுவாகக்
கொண்டு சென்றனர். கிருஷ்ணையரோ,
கண்மூடி, கால்களை உதறிக்கொண்டு, பிரக்ஞையின்றி, வலிப்புற்றவர் போலவே இன்னும் தோன்றினார்.
பூசையறைக்குள், சந்நிதிக்கும் பிரசாதங்களுக்கும் நடுவே, ஒரு பலகையின் மேல் அவரை உட்கார வைத்தனர். அப்பொழுது,
அவர், வெறியயர்ச்சியின் வேகம் சற்று தணிந்து,
பலகையிலிருந்தபடியே சுழன்று, ஆடலானார். மற்றவர்கள், கைகட்டி, வாய்புதைத்து, வெகு வணக்கத்துடனும் மரியாதையுடனும் திருவுளக்
கருத்தை விசாரிக்கலாயினர். ''சுவாமி! ஐயனே!
உன் குழந்தைகள் நாங்கள். ஒன்றும் அறியாதவர். உன்னைத் தவிர வேறு கதியில்லை.
தெரிந்தும்
தெரியாமலும் நாங்கள் ஏதாவது செய்துவிட்டால்
நீயே பொறுத்தருள வேண்டும்.
தன் பிள்ளைகளுக்கு வேண்டிய புத்தி சொல்லி அவர்களைத் திருத்துவது,
தந்தையின் கடமையன்றோ? எங்கள் ஐயனாகிய நீயே கோபம் கொண்டுவிட்டால், நாங்கள் மற்றென் செய்வோம்? நீ என்ன உத்திரவு கொடுத்தாலும் நாங்கள்
செய்யச் சித்தமாயிருக்கிறோம். ஏழைகளாகிய எங்கள்மேல்
இரங்க வேண்டும். உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கதி யார்?''
இவ்வாறு பிராமணர் வருந்தி வேண்டிக் கொண்டதை ஒருசிறிதும் கவனியாது, ஐயன் ஆடிக் கொண்டிருந்தான். அப்பொழுது, இராமையர் சிறிது கோபத்துடன், ''சுவாமி! இது தர்மமா? வெகு தூரத்திலிருந்து உன் கியாதியைக் கேள்வியுற்றுத்
தரிசிக்க வந்த பிராமணோத்தமர்க
ளெல்லாம், மிக்க பசியுடன் உன் உத்திரவை எதிர்பார்த்து நிற்கின்றனர். சூரியனும் அஸ்தமிக்க
லாயிற்று. அவர்கள் மேல் உனக்கு இரக்கமில்லையா?
பிரசாதத்தை
அநுக்கிரகஞ் செய்து, பிராமண போஜனம் மேல் நடக்கும்படி உத்திரவு செய்ய மாட்டாயா?
இவ்வளவு ஆலசியம் போதாதா?'' என்று சொன்னார்.
உடனே ஐயன், ''உவாய்! உவாய்! உவாய்!'' என்று மறுபடியும் ஓலமிட்டு, தன் இரு கைகளையும் கீழே ஓங்கி அறைந்து, ஆவசத்தின் உக்கிரக மத்தியிலே, பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளினான். ''பிராமணர்கள் - பிராமணர்கள் - பட்டினியே - பட்டினியே - கிடந்தால் - என் பிசகா? என் பிசகா? உங்கள் பிசகுதான்! உங்கள் பிசகுதான்! ஆம்! முக்காலும் மூன்று தரம் உங்கள் பிசகுதான்! அதற்கு - நீங்கள் - பிரசாயச் சித்தம் - பிராயச் சித்தம் - செய்தாலன்றி - எனக்கு - திருப்தியாகாது. நான் போகவும் மாட்டேன். செய்கிறீர்களா? சொல்! செய்கிறீர்களா?'' உடனே ஊட்டுப்புரைக் கணக்கர் எதிரே வந்து, என்ன அபராதம் விதித்தாலும் தான் தண்டமிறுக்கச் சித்தமாயிருப்பதாகச் சொல்லி, மேல் உத்திரவை வேண்டினார்.
''இந்தப் பிராமணாள் - இந்தப் பிராமணாள் - ஒவ்வொருவருக்கும் - கூட ஒவ்வொரு சக்கரம் - அதிக தக்ஷணை - அதிக தக்ஷணை - கொடுக்க வேண்டும். கொடுக்கிறாயா? - கொடுக்கிறாயா?''
''சுவாமி! உத்திரவுப்படியே கொடுக்கிறேன்'' என்றார் ஊட்டுப்புரை அதிகாரி.
''அந்தப் பரிசாரகப்
பயல் - அந்தக் கொலைபாதகப் பயல் - அச்சியை
- ஒரு சூத்திர ஸ்திரீயை - தொட்டுவிட்டு
- குளியாமல் - என் மடைப்பள்ளிக்குள்ளே - இருந்த பயல் - கொண்டு வா அவனை இங்கே! கொண்டு வா இந்த நிமிஷம்!''
உடனே ஐந்தாறு பேர் கோயில் மடப்பள்ளிக்கும்
மற்றப் பாகங்களுக்கும் சென்றோடிப்
பார்த்தனர். ஆனால் அந்தக்
'கொலை பாதகப் பயல்' அகப்பட வில்லை.
''சுவாமி! அவன் ஓடிப்போய் விட்டான்'' என்றார் ஊட்டுப்புரை அதிகாரி.
''பிழைத்தான்! பிழைத்தான் இந்த விசை! இல்லாவிட்டால் அவனை - இல்லாவிட்டால் அவனை! - நல்லது - சவம் போகிறான் - இனிமேல் அவன் என் வேலை செய்ய வேண்டாம். என் கோயிலுக்குள் அடியெடுத்து வைக்க வேண்டாம்,
அந்தப் பயல்.''
''சுவாமி! ஆக்ஞைப்படி அவனை நீக்கி விடுகிறேன்'' என்றார், ஊட்டுப்புரை அதிகாரி.
பின்பு, பஜனமாகவோ,
நோன்புக் கடனாகவோ, வந்திருந்த சிலர், தங்கள் தங்கள் முறைபாடுகளை ஐயனிடம்
தெரிவித்துக் கொண்டனர். அவர்களில் இரண்டொருத்தருக்கே அநுகூலமான உத்திரவு கிடைத்தது.
சிலர் மறுபடியும் வரும்படி உத்திரவு பெற்றார்கள். சிலர்க்கு உத்திரவு கிடைக்கவில்லை. விபூதியும் பிரசாதங்களும்
கை நீட்டியவருக்கு ஐயன்
உதவியபின், ஆவேசம் ஓய்ந்து முடிந்தது. மற்றவர் அப்பொழுது கவனியாவிட்டாலும், நாம் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்றும் நிகழ்ந்தது. பிரசாதம் பெற்றவர் பெரும்பாலார்க்கும், ஒரு வாழைப்பழமோ,
ஒரு மூடித் தேங்காயோ, சிறிது விபூதியோ, இரண்டொரு புஷ்பமோதான் கிடைத்தது. நிற்க.
ஆனால், இராமையர் பாகத்துக்கு மட்டும் ஏழெட்டுத் தேங்காய் மூடிகளும், இருபது முப்பது பழங்களும் கிடைத்தன. ஐயனாரின் ஆவேசப் பாத்திரமாகிய கிருஷ்ணையரும், அவர் நண்பர்
இராமையரும், அக்கிர ஸ்தானங்களில் மணைகளின் மேல் வீற்றிருந்து, கோயில் அதிகாரிகளால் மிக்க மரியாதையுடன் உபசரிக்கப்பட்டு, திருப்தி போஜனம் செய்தனர். சாப்பாடான பின், ஊட்டுப்புரை அதிகாரியே அவர்களுக்குச் சந்தனாபிஷேகம்
செய்து, ஜோடி தாம்பூலமும், விசேஷ தக்ஷிணையும் உதவினார்.
கதை பற்றிய ஆய்வு.
“கதை என்பது எத்தனையோ காலமாக வழி வழி வந்த சொத்து.
ஆனால் அதற்கு இலக்கிய அந்தஸ்து சிறுகதையால் தான் ஏற்படும்.
கதை என்பது பொதுப்பட கவிதை,
நாடகம், காவியம், பயண நூல்கள், என்பவற்றிற்கெல்லாம் ஆதாரமாக இயங்குகிற ஒரு அடிப்படைக் கோப்பு. ஆனால் சிறுகதை என்பதோ இலக்கியத்தின் தனித் துறை. அதாவது பரணி, கலம்பகம், குறவஞ்சி போல் ஒரு தனித் துறை.” கா நா சு.
“சிறுகதை என்ற இலக்கியத்தின் தனித்துறை உலக இலக்கியத்திலேயே தலை எடுத்து சுமார்
130 வருடங்கள் தான் ஆகின்றன. அது எட்கர் ஆலன் போ என்ற அமெரிக்க ஆசிரியர் தோற்றுவித்த இலக்கிய தனித்துறை.” என்று கா
நா சு கூறுகிறார்.
“தமிழில் சிறுகதைக்கு வ வே சு ஐயரைத்தான் தந்தை என்று சொல்வது வழக்கமாகி விட்டது.
அவருக்குப் பிறகு தமிழில்
சிறுகதை வளர்த்த சரித்திரம் டாக்டர் சாமிநாதையர், மாதவையா, ராஜாஜி,
எஸ் வி வி போன்றோர்.
பாரதியார் எழுதியது சீர்திருத்த கதைகள் என்று கூறலாமே ஒழிய சிறுகதை இலக்கணத்திற்கு உட்பட்டவை
அல்ல.“ கூறுவது கா நா சு.
ஆமாம் இங்கு உள்ள “சாஸ்தா ப்ரீதி” பற்றிக் கூறாமல் ஏன் இத்தனை கதை அளப்பு என்கிறீர்களா?
இக்கதை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. சிறுகதை என்பது
தோன்றி சில வருடங்களே ஆகியிருந்தன. இது போன்று சிறுகதைகளை “குசிகர் குட்டிக் கதைகள்” என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்புகளை
துணிந்து வெளியிட்டவர் மாதவையா.
வெற்றியும்
பெற்றார்.
இனி இக்கதையை ஆய்வோம். இக்கதை நேராக அக்கதையின் ஆரம்பத்திற்கு
சென்று நடுவில் வளர்ந்து கடைசியில் எதிர்பார்த்த முடிவையும்
பெறுகிறது. இராமய்யர் கிருஷ்ணய்யர் இருவரும் எவ்வாறு அவர்களுடைய காரியத்தில் குறுக்கு
வழியில் வெற்றி பெற்றார்கள் என்பதை சுவாரசியமாகச்
சொல்வதில் வெற்றி அடைகிறார் ஆசிரியர்.
கதை நடுவே உள்ள கிண்டலும் கேலியும் கதைக்கு ஒரு அணிகலன் ஆகி சிறப்பூட்டுகிறது.
குறைகள் இல்லாமலில்லை. பசி மயக்கத்தால்
கீழே விழுந்த கிருஷ்ணய்யர் எவ்வாறு பசி பொறுத்து சாமியாடவும் வைகறை வரை பசி பொறுக்கும் தெம்பும்
பெற்றார் என்பது வியப்பே.
ஆசிரியர் பற்றிய குறிப்பு.
அ. மாதவையர் அல்லது அ. மாதவையா (1872 – அக்டோபர் 22, 1925). தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892-இல் முதல்
மாணவராக முடித்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
பின்னர், தனது குடும்பத்தை நடத்துவதற்காக, Salt Inspector ஆக ஆந்திராவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். செனட் உறுப்பினராக
இருந்தபோது தமிழை பி ஏ பட்டப் படிப்பிற்கு கட்டாயப் பாடம் ஆக
வேண்டும் என்று மேடையில் பேசி அமர்ந்தவுடன் உயிர் துறந்தார்.
அவருடைய நண்பரான சி. வி. சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் சாவித்திரியின் கதை
என்ற தொடரினை எழுதினார்.
இவரது முக்கிய படைப்பு “பத்மாவதி சரித்திரம்”.
இவரது முக்கிய நிலைப்பாடு சமூக சீர்திருத்தம். சீர்திருத்தத்தை தன்னுடைய சமூகத்திலேயே பரப்பி திருந்த வைத்தவர். விதவை மறுமணம், பால்ய விவாகம் தடை, தீண்டாமை ஒழிப்பு போன்ற முற்போக்குச்
சிந்தனைகளைக் கதைகளின் ஊடே
பரப்பியவர்.
திரு.ஜெகதீசன் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குகோவை விமான நிலைய செய்தி நேற்று வாட்ஸ் அப்பில் உலா வந்தது....
நன்றி ஜி.
நீக்குவித்தியாசமான கதை. பகிர்வுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குப்ளாஸ்டிக் சேகரிப்புத் தொட்டி சில நிமிடங்களிலேயே நிரம்பியிருக்கணுமே
பதிலளிநீக்குஉடனே உடனே எடுத்து விடுகிறார்களோ என்னவோ!
நீக்குஅனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மன அமைதியும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா அக்கா.. வாங்க..
நீக்குஇந்தக் கதை உள்ள தொகுப்புப் புத்தகம் என்னிடம் உள்ளது. தேடிப் பார்க்கணும். நல்ல கதை என்பதோடு மறைமுகமாக இந்த சாமி ஆடுதல் போன்றவற்றில் நடைபெறும் தகிடுதத்தங்களையும் விரிவாக எடுத்துச் சொல்லி இருப்பார். ஆனாலும் இன்றளவும் இதெல்லாம் நடைபெற்று வருகிறது.
பதிலளிநீக்குசாமி ஆடுதல், ஐயன் இறங்குதல், நரசிம்மர் வருவது எல்லாம் பலமுறை நேரில் பார்த்திருக்கேன். அதிலும் மெலட்டூர் பாகவத மேளாவில் பிரஹலாத சரித்திரத்தில் நரசிம்மர் வேஷம் போடுபவர் அதற்கு நான்கைந்து நாட்கள் முன்னிருந்தே விரதம் இருப்பார் என்பதோடு அவர் பேச்சு/நடவடிக்கை எல்லாமும் மாறிவிடும். பிரஹலாத சரித்திரம் நடைபெறும் அன்று அவர் உண்மையிலேயே உணர்ச்சி வசப்பட்டு நரசிம்மராகவே ஆகிவிடுவார்.
பதிலளிநீக்குஆதிசங்கரர் நாடகத்தை (மாஸ்டர்) ஶ்ரீதர் போடும்போது அவருடன் பத்மபாதராக நடிக்கும் நபருக்கு ஆதி சங்கரரின் கை வெட்டுப்பட்டுத் துடிக்கையில் நரசிம்மர் ஆவிர்ப்பவிப்பார். நாடகத்தின் அந்த இடத்தில் அனைவருகே ஓர் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். அந்த நபருக்கு உண்மையாகவே நரசிம்மர் வந்துவிடுவார். இதையும் நாடகம் நடைபெற்றபோது அவர் நடிக்கையில் நேரில் பார்த்திருக்கோம். ஆங்காங்கே தீபாராதனைகள், பானகம் நிவேதனம் என ரசிகப் பெருமக்கள் தயாராக வந்திருப்பார்கள். ஒவ்வொரு முறை நாடகம் போடும்போதும் இது நடைபெற்று வந்தது. எண்பதுகளில் இவை நடந்தன.
பதிலளிநீக்குகாலப்போக்கில் இப்போதெல்லாம் இவற்றில் நடக்கும் சிலவற்றால் உண்மையான பக்திக்குக் குறைபாடு ஏற்பட்டுவிட்டதும் உண்மை.
பதிலளிநீக்குசற்றும் எதிர்பாராத கதாசிரியர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் திரு ஜேகே சாருக்குப் பாராட்டுகள். இந்த விவேக சிந்தாமணி/விநோத ரச மஞ்சரி எல்லாம் என் தாத்தாவின் தயவில் படிச்சிருக்கேன் என்பதை நினைக்கையில் மனதில் சந்தோஷமும்/பெருமையும் வருகிறது. திரு ஜேகே அவர்கள் ஆனந்தரங்கம் பிள்ளை டயரிக்குறிப்புக்களையும் படிச்சிருப்பார் என நம்புகிறேன். விரைவில் அது பற்றிய விமரிசனத்தையும் எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்கு//ஆனந்தரங்கம் பிள்ளை டயரிக்குறிப்புக்களையும் படிச்சிருப்பார் என நம்புகிறேன். விரைவில் அது பற்றிய விமரிசனத்தையும் எதிர்பார்க்கிறேன்.//
நீக்குஆனந்த ரங்கம் பிள்ளை டைரி குறிப்பு என்னிடம் இல்லை. மேலும் அது கதை அல்ல. நிகழ்வு.
Jayakumar
தெரிஞ்சு தான் சொல்றேன். அந்தக் கால கட்டத்து ஃப்ரெஞ்சுக்காரர்களின் ஆட்சி முறை, ஆங்கிலேயருக்கும் ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் இப்போதும் இருந்து வரும் பரம்பரைப் பகை, ஆனாலும் அரச குடும்பங்களின் மணங்கள் என எத்தனையோ அறிந்து கொள்ளலாம்.
நீக்குஅனைத்து நல்ல செய்திகளுக்கும் அருமையான குளிர்ச்சியான வீடு கட்டி இருக்கும் ஜகதீசனுக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள். செலவு குறைகிறதா என்பது பற்றி எதுவும் தெரியலை.
பதிலளிநீக்குஅதே போல பாதுகாப்பு எப்படி என்றும் தெரியவில்லை!
நீக்குஇந்த சாஸ்தா ப்ரீதியில் பரிமாறப்படும் பாயசம் பற்றிக் கூட ஒரு கதை படிச்ச நினைவு. அல்லது இந்தக் கதையிலேயோ வருதோ? என்றாலும் அந்தப் பாயசத்தின் சுவையே தனி தான். கல்லிடைக்குறிச்சியில் பதினெட்டு அக்ரஹாரங்களின் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தே சாஸ்தாப்ரீதி நடத்துவார்கள். அப்போது அந்த ஊர்க்காரங்க அனைவரும் எங்கே இருந்தாலும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். இதெல்லாம் நான் சின்னவளாக இருந்தப்போப் பார்த்த ஒன்று, இப்போல்லாமும் அப்படி நடைபெறுகிறதா என்பது அம்பியையோ/தக்குடுவையோ கேட்டால் தான் தெரியும். என் மாமிகள் இருவர் கல்லிடைக்குறிச்சி/ என் தம்பி மனைவி கல்லிடைக்குறிச்சி.
பதிலளிநீக்குரேவதி, தி/கீதா, பா.வெ. ஆகியோர் நலமாக இருப்பார்கள் என நம்புகிறேன். பா.வெ. கணினி கிடைக்கலை என்றார், தி/கீதா பயணம் என்று சொன்னார்கள். ரேவதி உடல் நலம் தானே!
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ சார் வலது கை பாதிப்பில் இருக்கிறது. கீதா ரெங்கன் சுற்றுப் பயணத்தில்... வள்ளிம்மாவும் சுவிஸ்ஸில் உள்ளூர் சுற்றுலாவில். பானு அக்கா அவ்வப்போது கணினியில் கமெண்ட் போடமுடியாத நிலைமை...
நீக்குதுரை செல்வராஜூ அவர்கள் உடல் நலமடைய பிரார்த்தனைகள்
நீக்குரோபோ சேவை சிறக்கட்டும்...
பதிலளிநீக்குஒரு சின்ன சந்தேகம். பச்சை மண் மழையில் கரையாதா? கூரையில் ஒரு சின்ன ஒழுக்கு ஏற்பட்டாலும் கூரை பலம் இழந்து விழ நேரிடும்.
பதிலளிநீக்குJayakumar
குளிர்ச்சியான வீடு வாழ்த்துகள். வித்தியாசமான கதை .
பதிலளிநீக்குரோபோ சேவை பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.
குளிர்ச்சியான வீடு போற்றுதலுக்கு உரிய முயற்சி. பாராட்டுவோம்
பதிலளிநீக்குசுடாத செங்கற்களை பயன்படுத்தி, மாடி வீடு கட்டி அதில் தோட்டமும் போட்டு இருக்கிறார் என்றால் பாராட்ட வேண்டும்.
பதிலளிநீக்குமற்ற செய்திகளும், சாரின் கதைபகிர்வும் நன்றாக இருக்கிறது.
Excellent Post! Very informative. Good strategic tips u have provided in the post.
பதிலளிநீக்குI completely agree with you. Thanks for sharing.
💝 By Urdu Fancy Text Generator