செவ்வாய், 10 ஜனவரி, 2023

சிறுகதை - மனச்சிறை - ஜீவி

 மனச்சிறை

ஜீவி

எக்குத் தப்பாக மாட்டிக் கொண்டதில் ஆறு வருஷம் தீட்டி விட்டார்கள்.  என்னென்னவோ சடங்குகள். எப்படா வெளிக்காற்றை சுவாசிப்போம் என்று பரபரப்பிலிருந்த ராஜேஷூக்கு வெறுப்பாக இருந்தது. இடது கை பெருவிரல் கீழே நீலக்கறை திட்டாகப் படிந்து விட்டது. அந்தளவுக்கு சிறை ரெகார்டுகளில் விரல் ரேகை பதித்தாயிற்று.  

நினைக்க நினைக்க ஆத்திரம் குமுறிக் கொண்டு வந்தது அவனுக்கு.    'தற்காப்புக்காக செய்த கொலை இது, யுவர் ஆனர்' என்று ஆனமட்டும் மல்லாடிப் பார்த்தாரே தியாகு ஏற்பாடு செய்திருந்த இவன் வக்கீல்? கொஞ்சம் கூட மசியவில்லையே அந்த ஜட்ஜ் சதாசிவம்? 

வெளியிலிருந்த பொழுதும் சரி, உள்ளிருந்த பொழுதும் சரி, வசந்தா மேல் ஏற்பட்ட மோகத்தில் அனலிடைப் பட்ட மெழுகு போல உருகிக் கொண்டிருந்தான் ராஜேஷ். அவன்  பாஸின் மனைவி வசந்தா.. இருபது வயது ராஜேஷூக்கு வசந்தாவைத் தெரிந்திருந்தது என்பது வெறும் ஆறே மாதக் காலம் தான். அதாவது வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதம் முடிகிற தருவாயில் அவன் சிறைக்கு வந்து விட்டான்.

ராஜேஷின் பாஸ் தியாகு.  மெ.சி. தியாகு என்றால் எல்லோருக்கும் தெரியும்.  மெழுகுச் சிலைகள் தயாரிப்பாளன்.
தத்ரூபமான அவன் தயாரிப்புகள் அவனுக்கு வாங்கிக் கொடுத்த பெயர் தான் மெ.சி.தியாகு.  தொழிலில் அதீத ஈடுபாடு.
எந்நேரமும் ஃபாக்டரியே கதியென்று இருப்பான். ஒவ்வொரு சிலையும் அவனின் ஒப்புதலுக்குப் பிறகே டெலிவரிக்குப் போகும்.   மாநகர சந்தடிகளுக்கு வெளியே தொழிற்கூடம் இருந்ததினால் சிலைக்கு ஆர்டர் கொடுப்பவர்கள் வசதிக்காக நகரின் மெயின் ரோட் பக்கமிருந்த தன் வசதியான வீட்டின் வெளிப்புறத்தில் அலுவலகத்தை வைத்திருந்தான்.  மெழுகுச் சிலைக்கான ஆர்டர்களை புக் செய்வதிலிருந்து டெலிவரி ஆகும் வரை அத்தனை வேலைகளையும் ராஜேஷ் ஒருவனே தனி ஆளாய் கவனித்துக் கொண்டிருந்தான். 

ஒரு பகலில் அலுவலகத்தைப் பூட்டி விட்டு மதிய உணவிற்காக பக்கத்துத் தெரு ஹோட்டலுக்கு ராஜேஷ் சென்றிருந்த பொழுது தான் அது நடந்தது.  அலுவலகத்திற்கு வெளி வராண்டாவிற்கு வெளிப் புறமாய் கிரில் கேட்.  கிரில் கேட் தாண்டி இறங்குமுகமாக இரண்டு படிகள், கொஞ்சம் இடைவெளி விட்டு விக்கெட் கேட். அது தாண்டி சின்ன தெரு.  வெகு அருகில் சந்து முனையில் மெயின் ரோடு.

வழக்கமாய் ராஜேஷ் ஏதாவது வேலையென்று வெளியே போவதென்றால்
அலுவலக ரூம் கதவைப் பூட்டிக் கொண்டு
வராண்டா கிரில் கேட்டை வெறுமனே சாத்தி விக்கெட் கேட் கொக்கியைப் போட்டு விட்டுப் போய் விடுவான்.
வராண்டாவின் உள்பக்கம் தியாகுவின் வீடு. தியாகுவின் மனைவி வசந்தா தனியாக இருந்தாள் என்பதினால் வீட்டின் வெளிப்பக்கக் கதவு என்னேரமும் சாத்தி உள்பக்கம் தாழ் போட்டிருக்கும்.  வெளிப்பக்கம் வர அவர்களுக்கு இன்னொரு வழியும் உண்டு. அந்த வழியில் உள்ளடங்கி கார் நிறுத்த போர்ட்டிகோ.

ஹோட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்ட ராஜேஷ்  சந்து முனை தாண்டி வீட்டு விக்கெட் கேட் வரை வந்து விட்டான். கேட் கொக்கியில் கை வைக்கும் பொழுது வராண்டாவில் யாரோ நின்று கொண்டு திறந்திருக்கும் கதவின் பின்னால் நின்றிருக்கும் தியாகுவின் மனைவி வசந்தாவிடம் பேசிக் கொண்டிருப்பது இவன் பார்வைக்குப் பட்டு விட்டது.
சரேலென்று வீட்டுப் பக்கம் வேகமாக வந்தான்.

அதற்குள் வெளிப்பக்கம் நின்று கொண்டிருந்தவன் சட்டென்று மரக்கதவைத் தள்ளிக் கொண்டு உட்பக்கம் போய்விட்டான். நல்ல வேளை அவன் கதவைத் தாழிடுவதற்குள் ராஜேஷ் முந்திக் கொண்டான்.  உடம்பை கதவு மேல் சாத்தி அசுர வேகத்தில்  உள் நுழைந்த பொழுது ராஜேஷ் கண்ட காட்சி அவனைப் பொறி கலங்கச் செய்தது.
இவனுக்கு முதுகுப் பக்கம் காட்டிக் கொண்டு அந்த அந்நியன் வசந்தாவை சுவரில் சாய்த்தபடி இறுக அணைத்திருந்த்தான்.  வசந்தாவோ நிலைகலங்கி ஆடை குலைந்து அவன் பிடியிலிருந்து திமிறிக் கொண்டிருந்தாள்.

மின்னல் வேகத்தில் நடந்தது அது.  கீழே கிடந்த மரக்கட்டை ஒன்று வாகாக ராஜேஷூக்கு சரியான நேரத்தில் சரியாகக் கிடைத்த ஆயுதம் ஆயிற்று.  பின் மண்டையில் பலங்கொண்ட மட்டும் ஒரே போடு!  இந்த எதிர்பாராத தாக்குதலில் அந்த அந்நியன் தட்டுத் தடுமாறி இரத்தக் குட்டையில் சரிந்தான்.

வசந்தா மிகவும் வெலவெலத்துப் போயிருந்தாள். திடுக்கென்று ஏற்பட்ட இச்சம்பவம் அவளை வெகுவாக அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது.  ராஜேஷூக்கு அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது. மெள்ள அவள் கை பிடித்து ஆதுரத்துடன் தோள் பற்றி அணைத்தவாறே உள் அறைக்கு அவளை நடத்தி வந்து அங்கிருந்த சோபாவில் சாய்ந்தவாறு அமரச் செய்தான்.  வியர்க்க விறுவிறுக்க இருந்தவளை ஆசுவாசப்படுத்தி ஃபேனை சுழல விட்டான்.

போலீஸ் வந்தது,  தியாகுவுக்கு செய்தி பறந்தது. வழக்கமான நடைமுறைகள்தாம். திட்டு திட்டாக இரத்தக்கறை படிந்த மரக்கட்டை தகுந்த சாட்சியமாயிற்று. தியாகு தன் செல்வாக்கை ஆனமட்டும் உபயோகித்தும் முடியாமல் போய் ராஜேஷ் உள்ளே போகவேண்டியதாகி விட்டது. 

காலக்கணக்கிற்குத்தான் ஆறு வருஷம் போலிருக்கு.  இந்த நீண்ட சிறை வாசத்தின் கசப்பான அனுபவங்களுக்கிடையேயும் வசந்தா சித்திர ஓவியமாய் அவன் மனசில் படிந்திருந்தாள்.  அது வசந்தா கூட அறியாத இரகசியமாய் அவன் மனசில் குடிபுகுந்து ஆரோகணித்து சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தது.

அவளின் புஷ்டியான புஜங்களும் வழுவழு கன்னப் பிரதேசமும் பூசின மாதிரியான திரேக வாகும் அத்தனை சிறை அவஸ்தைகளுக்குப் பிறகும் அவனைப் பாடாய்ப் படுத்தின.

வசந்தா வெளி வராண்டா பக்கம் வரும் பொழுதோ அல்லது விக்கெட் கேட் பக்கம் நின்று கொண்டு தெருவை வேடிக்கை பார்க்கும் பொழுதோ அவள் அறியாமல் இவன் அவளை அரசுப் புரசலாக நோட்டமிட்டிருக்கிறான்தான்.  

தன்னை விட மூத்த பிராயத்தினள் என்ற பிரத்யட்ச உண்மையும், தன் முதலாளியின் மனைவி என்ற அவள் அந்தஸ்து கலந்த மரியாதையுமே அப்பொழுதெல்லாம் அவன் மனசை நிரப்பியிருந்தது.. ஆனால் தனிமை தந்த சுதந்திரத்தில் ஒரு பெண்ணின் தோள் பற்றிய நெருக்கமும் அருகாமையும் இப்படி தலைகுப்புற அவனை வீழ்த்தியது அவனுக்கே அதிசயமாக இருந்தாலும் மனம் என்னவோ அந்த இரகசிய உணர்வை திருப்பித் திருப்பி தனக்குள் தானே சுவைக்கவே விரும்பியது. 

வசந்தாவை ஸ்பரிசித்த தன் விரல்களைத்தானே தன் முகம், கழுத்து, பிடரி என்று தடவி விட்டுக் கொள்ளும் பொழுதெல்லாம் ஒரு இரகசிய இன்பப் பெருக்கு தன்னுள் ஊற்றெடுப்பதை நாளாவட்டத்தில் உணர ஆரம்பித்தான்.  அந்த உணர்வு தான் நீண்ட சிறை வாழ்க்கைத் துன்பத்தை பெருமளவு அவனுள் மறக்கடித்தது எனலாம்.  

இனிமேல் தான் மெள்ள மெள்ள நெருங்கி வசந்தாவுடன் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  இந்த விஷயத்தில் அவசரம் கூடாது என்பதை அவன் தெரிந்துமிருந்தான்.

இனி அவன் சுதந்திரப் பறவை. எந்தத் தளையும் இல்லாத சுதந்திரப் பறவை. வசந்தாவுக்கும் அவனுக்குமான உலகில் சிறகடித்துப் பறக்கப்போகும் சுதந்திரப் பறவை. இந்த உற்சாகம் தந்த கிளுகிளுப்பில் அவன் மிதந்தான்.

சிறை தாண்டி நாலு எட்டு நடந்ததும்தான் ஒதுங்கி நிறுத்தப் பட்டிருந்த அந்தக் காரைப் பார்த்தான் ராஜேஷ்.   அவனே எதிர்பார்த்திராத ஆச்சரியமாய் அவனை அழைத்துப் போக நீல நிற மாருதி வந்திருந்தது.

அவன் பக்கத்தில் வந்ததும் கார் கதவைத் திறந்து. வெளியே வந்த தியாகுவைப் பார்த்ததும் ராஜேஷின் விழிகள் கலங்கின.  லேசாக நடை தடுமாறியது.

"வா. வீட்டுக்குப் போகலாம்.." என்று ஆதரவுடன் அவனை அணைத்துக் கொண்டான் தியாகு.

                         2

வழியெல்லாம் தியாகு தான் அவனோடு பேசிக் கொண்டு வந்தான். ராஜேஷூக்கோ கொஞ்ச நேரத்தில் வசந்தாவைப் பார்க்கப் போகிறோம் என்ற போதையே மனம் பூராவும் ஆக்கிரமித்திருந்தது. தியாகு பேசிக் கொண்டு வருவது மனசில் பதியாமல் இடையிடையே 'உம்' கொட்டுவதோடு இருந்தவனைப் பார்த்த தியாகு, "என்ன யோசனை, ராஜேஷ்?" என்று பரிவுடன் கேட்டான்.

சட்டென்று சுதாரித்துக் கொண்ட ராஜேஷ், "ஒண்ணுமில்லே, பாஸ்...
ஆறு வருஷம் உள்ளே இருந்தவன்.. இப்ப வெளிலே வந்திருக்கேன். சகஜமா எல்லாரோடையும் பழைய மாதிரி பழக முடியுமா, தெரிலே.." என்றான்.

"ராஜேஷ்.. நீ என்ன ஏதாவது குற்றம் செஞ்சு சிறைக்குப் போனையா இப்படியெல்லாம் நெனைக்கறதுக்கு? அந்த மாதிரி ஒரு அசந்தர்ப்பத்திலே தீரனா போராடி என் மனைவியோட மானத்தைக் காப்பாத்திருக்கே.. அந்த நேரத்லே நான் இருந்தா என்ன செஞ்சிருப்பேனோ அதை நீ செஞ்சிருக்கே.. எனக்குப் பதில் நீ சிறைக்குப் போய் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்லே, ஆறு வருஷம் தண்டனை அனுபவிச்சிருக்கே.. இனிமே எனக்கு முன்னாடி இப்படி சொல்லாதே, ராஜேஷ்.." என்று கண்கலங்கினான் தியாகு.

"சாரி, பாஸ்.." என்று ராஜேஷ் சொன்ன பொழுது அவன் குரலும் நெகிழ்ந்திருந்தது. "நான் அதுக்காகச் சொல்லலே.." என்று தான் சொல்ல நினைத்ததைச் சரியாகச் சொல்ல முயன்ற பொழுது மிடறு விழுங்கினான்.

அவன் சொல்ல நினைக்கும் எதையும் சொல்லி தெளிவு பெறட்டும் என்பதற்காகக் காத்திருப்பது போல தியாகு மெளனமானான்.

முன்னாடி போய்க் கொண்டிருந்த வண்டி லேசாக வேகத்தைக் குறைக்க அதற்கேற்றவாறு இவனும் காரின் வேகத்தை மட்டுப்படுத்தி லாவகமாக பக்கத்து திருப்பத்தில் தன் வண்டியை ஒடித்துத் திருப்பினான். 

"ஆறு வருஷம் உள்ளே இருந்திட்டு வந்திருக்கேன்லே... பழகின இடம்.  அக்கம் பக்கத்திலே என்ன நினைப்பாங்களோ, ஜெயில்லே இருந்திட்டு வந்தவன் தானேன்னு இளக்காரமாகப் பாப்பாங்களோன்னு தயக்கமா இருக்கு, பாஸ்.." என்று ஒரு வழியாகத் தான் சொல்ல நினைப்பதை சொல்லி தியாகுவைப் பரிதாபமாகப் பார்த்தான் ராஜேஷ்.

"நானும் என்னவோ ஏதோன்னு நெனைச்சேன். கவலையே படாதே, ராஜேஷ்.. " என்று தியாகு அவன் பக்கம் திரும்பி அவனை உற்சாகப்படுத்துவது போலச் சொன்னான்.  "அதை ஏன் கேக்கறே.. நம்ம ஏரியா ஆட்களுக்கு நீ இப்போ ஹீரோ ராஜேஷ்..  தெருவுக்கு உன்னை மாதிரி ஒருத்தர் இருந்தா எந்த அக்கிரமத்தையும் அண்ட விடாமல் செஞ்சிடலாம்ன்னு பேசிக்கிறாங்க, தெரியுமா? உன்னை உள்ளே தள்ளி தண்டனை கொடுத்ததிலே நம்ம சுற்று வட்டார ஜனங்களுக்கு ரொம்ப வருத்தம்..." என்றான்.

"அப்படியா,  பாஸ்?.." என்று ராஜேஷ் சொன்ன பொழுது வீடு வந்து விட்டது. 

காரை மேடேற்றி  போர்ட்டிகோ வெளிப்பக்கம் நிறுத்தினான் தியாகு. "வா.." என்று ராஜேஷைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். அது வரை அங்கு நின்றிருந்த ஒரு பெண் பரபரக்க உள் பக்கம் ஓடிற்று.

அடுத்த வினாடியே "வா, தம்பீ.." என்று அழைத்தபடி மெல்ல சாய்ந்த தளர்ந்த நடையில் வசந்தா வந்தாள்.

மேடு தட்டிய வயிற்றுப் பக்கம் எடுப்பாக இருக்க தாய்மைக் களையில் முகம் மினுமினுத்திருந்தது.

அவளை அந்த தோற்றத்தில் பார்த்த வினாடியே ராஜேஷூக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போயிற்று. 

"என்ன தம்பி அப்படியே நின்னுட்டே?.. நம்ம வீடு தான். உள்ளே வா.." என்று அவள் சொன்னது எங்கேயோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல அவனுக்கு இருந்தது.

"வா, ராஜேஷ்.." என்று தியாகு அவன் கை பிடித்து ஹாலுக்குள் அழைத்து வந்து அங்கிருந்த சோபாவில் அமரச் சொல்லி தானும் அவன் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்தான்.  

"தம்பீ.. என்னைக் காப்பாத்தப் போய் ஒனக்கு எத்தனை கஷ்டமாயிடுச்சு பார்.." என்று ஆற்றாமையில் வசந்தாவின் குரல் தழுதழுத்தது.  அழுது விடுவாள் போல இருந்தாள்.

"பரவாயில்லை, அக்கா..." என்று அடி வயிற்றிலிருந்து வெளிப்பட்ட மாதிரி குழறியபடி சொன்னான் ராஜேஷ்.

"பரவாயில்லையா? என்ன சொல்றே, தம்பீ? ஆறு வருஷம், ஐயா.. வளர்ற வயசுலே இந்தச் சின்னப் பிள்ளைக்கு இந்தக் கஷ்டம் நேரணுமா, கடவுளே!" என்ற வசந்தா விக்கி விக்கி அழுதே விட்டாள்.

ராஜேஷூக்கு உடல் சிலிர்த்தது. அனிச்சையாய் அவளைக் கையெடுத்துக்
கும்பிட்டான்.  "அழாதீங்க அக்கா.." என்று வார்த்தை வராமல் தடுமாறினான்.

"நீ உள்ளே போனதிலிருந்து வசந்தாவிற்கு மனசே சரியில்லை.  'நீங்கள் வீட்டில் இல்லாத நேர்த்தில் பாவம் அந்தப் பிள்ளையாவது எனக்குத் துணையாக இருந்தான். விதி அவனையும் விட்டு வைக்கவில்லையே' என்று புலம்பித் தீர்ப்பாள். உன்னை நேரில் பார்த்ததும் துக்க அணை உடைத்துக் கொண்டு விட்டது. நீ வந்துட்டேல்லே? இனி கவலை இல்லை.. அவள் மன நிலை சமனமாகிவிடும்.." என்று தியாகு சொல்லும் பொழுது கூனிக்குறுகிப் போனான் ராஜேஷ்.  'பாவி, நான்.. எவ்வளவு கேவலமாக யோசித்திருக்கிறேன்? இந்த சிறை வாழ்க்கையே எனக்குக் கிடைத்த சரியான தண்டனை' என்று அவன் உள் மனசு அரற்றியது.

"ராஜேஷ்.. இனி நீ எங்கேயும் போக வேண்டாம்.  நீயும் இந்த குடும்பத்தில் ஒருத்தன்.  மாடியில் உனக்கு தனி அறையெல்லாம் கட்டி வைச்சிருக்கு... தங்கிக்கலாம்.." என்றான் தியாகு.

"ஏங்க.. முக்கியமான விஷயத்தை அவனுக்குச் சொல்லலியே நீங்க?"
என்றாள் வசந்தா. பின் ராஜேஷ் பக்கம் பார்த்து

"தம்பீ.. நான் மாசமா இருக்கேன்லே... கணக்குக்கு இப்போ எட்டு மாசம்.  ஒத்தாசைக்கு என்னோட தங்கச்சியை கூட்டி வந்திருக்கோம்..." என்றவள் வீட்டின் உள்பக்கம் பார்த்து, "குயிலி.. இங்கே வர்றியா?" என்று சப்தமாய் கூப்பிட்டாள்.

அடுத்த சில வினாடிகளில் குயிலி என்ற மயில் அங்கு பிரசன்னமானது, "என்னக்கா?" என்றபடியே.

"இதான் ராஜேஷ்.. ஒனக்கு நாங்க பாத்து வைச்சிருக்கற பையன்.  இவனைக் கட்டிக்கறையா?" 

"போங்கக்கா.." என்றபடியே அந்த மயில் நாணத்தில் தலை கவிழ்த்தது.

"ராஜேஷ்.. நீ என்னப்பா சொல்றே?"

"அக்கா.. நான் தாய்- தந்தை இல்லாத அனாதை. நீங்க தான் எனக்கு எல்லாம்.  வேலை போட்டுத் தந்தீங்க.. இப்ப உங்க தங்கச்சியை கட்டி வைக்கிறேன்னு சொல்றீங்க.. இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரிலே.." என்று சந்தோஷத்தோடு சொன்னான்.

'அதான் நிறைய செஞ்சிட்டையே.. இனிமே நாங்க தான் உனக்குச் செய்யணும்.." என்ற தியாகு, "குயிலி பிஎஸ்ஸி
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கா.  உனக்கு கம்பெனி வேலைலேயும் துணையா இருப்பா.  இந்த ஆபிஸை நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாத்துக்கங்க... நான் நிம்மதியா ஃபாக்டரி வேலையைப் பாத்துப்பேன். சரியா?" என்றான்.

கோயில் மாடுகள் மாதிரி ராஜேஷும் குயிலியும் ஒரு சேர தலையசைத்து சிரித்தனர்.

–--–--------------------------------------

2022 ஆம் ஆண்டில், 52 செவ்வாய்க்கிழமைகளில் பன்னிரெண்டு கதாசிரியர்கள் எழுதிய சிறுகதைகள்/தொடர்கதைகள் வெளியிடப்பட்டன. 

புள்ளி விவரங்கள் : 

செவ்வாய்க்கிழமைப் பதிவுகள். 

வரிசை எண்

எழுதியவர்

பதிவுகள் எண்ணிக்கை

1

துரை செல்வராஜு

20

2

ஜெயக்குமார் சந்திரசேகரன்

14

3

கௌதமன்

5

4

சியாமளா வெங்கட்ராமன்

3

5

மாலா மாதவன்

            2

6

பானுமதி வெங்கடேஸ்வரன்

2

7

கீதா ரெங்கன்

1

8

அப்பாதுரை

1

9

நிழலன்

1

10

வானம்பாடி

1

11

கில்லர்ஜி

1

12

அருண் ஜவர்லால்

1

 செவ்வாய்க்கிழமை பதிவுகளில் அதிகம் பேர் படித்த கதை :

காற்றினிலே : துரை செல்வராஜூ

செவ்வாய் சிறுகதைப் பதிவுகளில், தொடர்ந்து முதல் ரேங்க் வாங்கி வருகின்ற துரை செல்வராஜு அவர்களுக்கு  2022 ஆம் ஆண்டுக்கான சிறுகதை மன்னர் பட்டம் அளிக்கப்படுகிறது 

54 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவருக்கும் இந்த நாளை நல்லதொரு நாளாக இறைவன் அமைத்து தருவார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய சிறுகதை நன்றாக உள்ளது. ராஜேஷின் மனதில் எழுந்த தப்பான, வக்கிரம் நிறைந்த, குற்றவுணர்ச்சிக்கு தண்டனையாக ஆறுவருட சிறைவாசத்தை இறைவனே சமயம் பார்த்து தந்திருப்பதாக கதையை நகர்த்திய விதம் நன்றாக உள்ளது. அதை ராஜேஷும் உணர்ந்த போது அவன் வாழ்க்கையில் இனி பிடிமானமாக வாழ, அவன் செய்த தவறை மன்னித்து ஒரு பரிசையும் இறைவன் தந்து விட்டார்.

    மனச்சிறை தலைப்பு நன்றாக உள்ளது. சிறை வாழ்வை கடந்து வெளியில் வருபவர்கள் சிலசமயம் மனந்திருந்தி நல்லவர்களாக வருவதுண்டு. ஆனால் இதில் ராஜேஷ் இன்னமும் திருந்தாத மனநிலையில் வருகிறானே என பரிதவிப்புடன் கதை படித்து வருகையில், நல்ல திருப்பு முனையாக கதை முடிவை தந்திருக்கும் கதாசிரியர் ஜீவி சகோதரருக்கு மனம் நிறைந்த நன்றி. பகிர்வுக்கு உங்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரிக்கு வணக்கம்.
      எதை வாசித்தாலும்
      மனமொன்றி வாசிக்கும் பழக்கம்
      தங்களிடம் இருப்பதால் வாசிக்கும் விஷயம் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் சிறப்பாக அமைந்து விடுகின்றன.
      ராஜேஷூக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்
      கொடுத்து அவன் தன் சொந்த வாழ்க்கைப் போக்கில் தீர்மானமாக காலூன்ற வழிவகை செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.
      அதற்காகவே கதையை அரைகுறையாக முடிக்க அவசரப்படாமல் தீர்மானமாக எழுதினேன். ராஜேஷ்க்கு என்ன சிக்கல் என்று பின்னூட்ட முடிவில் தனியாகச் சொல்கிறேன்.
      தங்கள் பின்னூட்டம் தான் முதல் பின்னூட்டம். எபி தளத்தில் முதல் பின்னூட்டம் தான் பின்னால் வரும் பின்னூட்டங்களை வழி நடத்தும் வலிமை வாய்ந்தது. அதற்காகவும் தங்களுக்கு ஸ்பெஷல் நன்றி. வழக்கமான கதைகளை வாசித்து
      சலித்துப் போய்
      வாரப்பத்திரிகைகளில் வருவது போல எபியில் செவ்வாய் கதைகள் அமையலாமா என்ற
      யோசனைக்கு ஒரு சோதனை முயற்சியும் கூட. தொடர்ந்து செய்யலாம் என்று நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கு. அதற்காகவும் என் மனமார்ந்த நன்றி, சகோதரி.

      நீக்கு
    2. வணக்கம் ஜீவி
      சகோதரரே

      தங்களது அருமையான பதிலுரைக்கு மிக்க நன்றி ஜீவி சகோதரரே. கதையின் உட்கருத்தை தாங்கள் விவரித்த முறையும் மனங்கவர்ந்தது. எ. பி வாசகர்கள் எல்லோருக்கும் தாங்கள் தந்த பதில்களையும் இப்போதுதான் ரசித்து படித்தேன். மிக்க நன்றி. 🙏.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    சென்ற வருடத்திய கதை பகிர்வுகளில் சிறந்த சிறுகதை மன்னராக இடம் பெற்றிருக்கும் நம் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். கதை பகிர்வுகளில் இடம் பெற்றிருக்கும் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். இதை அறிய தந்த எ. பிக்கும், அதன் ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றிகள் பல. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // துரை செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்..//

      தங்கள் வாழ்த்துகளும்
      பாராட்டுகளும் எனக்கு ஊக்கமளிக்கின்றன..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தேர்ந்த கதாசிரியர் எழுதிய கதை. மிகவும் நன்றாக இருந்தது.

    மனதில் தவறான எண்ணங்கள் இருக்கும்போது, நம்மைப்பற்றி மற்றவர் உயர்ந்த மதிப்பீடு வைத்திருக்கிறார் என அறியும்போது தவறான எண்ணங்கள் மறைவதை, ஏதாவது சந்தர்ப்பம் வாய்க்கும்போது, அண்ணா..உன்னை நம்பி வந்திருக்கிறேன் காப்பாற்று எனச் சொன்னால் தவறான எண்ணங்களை, பாச உணர்ச்சி வீழ்த்திவிடுவதை மிக அருமையான நடையில் சொல்லியிருக்கிறார் ஜீவி சார்... பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.
      மனத்தில் பட்டத்தை யாருக்காகவும் மறைக்காமல் சொல்லி விடும் தனித் தன்மை உங்கள் அருங்குணம். அதனால் உங்கள் பின்னூட்டமும் என் மேற்கொண்டான முயற்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. எழுத்து நடைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எனக்கும்
      உங்கள் புரிதலில் மகிழ்ச்சி மிக்க நன்றி நெல்லை.

      நீக்கு
  5. வெளியிலிருந்த போதும் உள்ளிருந்த போதும் வசந்தாமேல் மோகம் - இந்த வரி தவறு. அப்படி கதையில் இல்லை. தன்னைவிட மூத்த பிராயத்தினள், மரியாதை என்றல்லவா வருகிறது?

    சம்பவம் நடந்து உள்ளே சென்றபிறகல்லவா சம்பவத்தை நினைத்து அவள் மீது மோகம் கொள்கிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு புரசலாக ராஜேஷ் மனத்தில் பதிந்தது அது. எழுத்தில் சொல்லியும் சொல்லாமலும் வாசகர் புரிதலுக்காக என்று விட்டு விடுதலும் பல உண்டு. இதெல்லாம் வேண்டுமென்றே செய்வது தான்.
      கம்பி மேல் நடக்கிற மாதிரி. கொஞ்சம் நீட்டி முழக்கினால் புஷ்பாவுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய் விடுகிற ஆபத்து இருக்கிறது. ஹி..ஹி..

      நீக்கு
  6. சிறுகதை மெஷின் துரை செல்வராஜு சாருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. ஜீவி அண்ணா கதை அருமை. மனித இயல்புகளை அழகாக விவரித்த விதம் சபாஷ் போட வைக்கிறது.

    கெட்ட எண்ணம் வரும் போது அவர்களே நம்மிடம் மிகுந்த மரியாதை கொண்டு நல்லவிதமாகப் பேசும் போது நம் மனம் தவிடு பொடியாகி ஒரு குற்ற உணர்வுக்குப் போய்விடும் இப்படிப்பட்டவர்களிடமா நாம் இப்படியான எண்ணம் கொண்டிருந்தோம் என்று.

    அப்படித்தான் வசந்தா, தம்பி என்று ஆசையோடு அன்போடு அழைத்ததும் ராஜேஷின் மனம் கூனிக் குறுகித் தன் தவற்றை உணர்வதை ஜீவி அண்ணா செமையா சொல்லியிருக்கீங்க...கூடவே ராஜேஷுக்கு போனஸ் குயிலி!!!! ப்ளஸ் பொறுப்பு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தியாகு, வசந்தா, ராஜேஷ்.. இந்த மூன்று பேரின் மன ஓட்டங்களையும் துல்லியமாக வித்தியாசப்படுத்தி வடித்தெடுத்தது தான் கதையின் பின்புல பலம். இந்த மாதிரி ஆலாபனைகள் தான்
      விதவிதமான கதைகளை எழுத வைக்கும். இல்லாவிட்டால் ஒரே மாதிரியான ஸ்டீரியோ
      டைப்பான கதைகளாகி போரடிக்க ஆரம்பித்து விடும். குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி.

      நீக்கு
  9. நாள் இந்த நாள் எல்லார்க்கும் நல்ல நாள்..

    அனைவருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. ஜீவி அண்ணா.. அவர்களது கை வண்ணம்..

    மனித மனங்களின் இயல்புகளை அவருக்கே உரித்தான விதத்தில் அழகான விவரிப்பு..

    சிறந்த கதை..
    இன்றைய பதிவு சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனித மனங்கள் இல்லாமல் எழுத்தே ஏது?..

      தங்கள் ரசனைக்கு நன்றி, தம்பி.

      நீக்கு
  11. காலையிலேயே கதையை வாசித்து விட்டேன்..

    கருத்தைப் பதிவதற்கு சற்றே தாமதம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இருக்கும் இடத்தில் இப்பொழுது தான் மதியமே.

      அதனால் தான் என் பக்கத்திலும் பதிலளிக்க தாமதம்.
      பின்னூட்டங்கள் குறைச்சல் என்றாலும் ஆத்மார்த்தமாக நிறைவாக இருந்ததில் மேற்கொண்டான சோதனை முயற்சிகள் செய்ய ஆர்வம் ஏற்பட்டது.

      நீக்கு
  12. இவ்வருடமும் எனது சிறுகதைகளை பதிப்பித்து என்னை முதலிடத்தில் வைத்த எபி குழுவினர் தமக்கு முதற்கண் நெஞ்சார்ந்த நன்றி..

    ஊக்கமளித்த நன்னெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  13. @ அன்பின் நெல்லை அவர்களது அன்பினுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  14. துரை அண்ணா வுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வாழ்த்துகளும்
      பாராட்டுகளும் எனக்கு ஊக்கமளிக்கின்றன..

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
    2. தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  15. 'தற்காப்புக்காக செய்த கொலை இது, யுவர் ஆனர்' // ?????

    ஜீவி அண்ணா இதைக் கொஞ்சம் கவனிங்க....வசந்தாவைக் காப்பாற்றத்தானே...நான் சொல்வது சரியா தவறான்னு தெரியலை....ஆனா இப்படித் தோன்றியது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்செயல்?

      கீதா

      நீக்கு
    2. நோ. தற்காப்பு தான்.

      அந்த அன்னியன் திருப்பித் தாக்குவதற்குள் முந்திக் கொண்டது தான். விஷயம் தெருந்த வழக்குரைஞர் விஷயம் தெரிந்தே வாதாடியிருக்கிறார்.

      நீக்கு
    3. ஓ அப்ப்டியான கோணத்தில்...புரிகிறது

      மிக்க நன்றி ஜீவி அண்ணா

      கீதா

      நீக்கு
  16. நான் கற்றுக் கொள்ள வேண்டியவை இன்னும் ஏராளம்..

    அதிக எண்ணிக்கையில் சிறுகதை.. சரி..

    ஆனால், மன்னன் என்ற சொல் ஏற்புடையது அல்ல..

    எபி குழுவினருக்கு நன்றி.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  17. வெளியிலிருந்த பொழுதும் சரி, உள்ளிருந்த பொழுதும் சரி, வசந்தா மேல் ஏற்பட்ட மோகத்தில் //

    உள்ளே போனப்புறம்தான் இல்லையோ? அதற்கு முன்....அவன் அரசல்புரசலாக நோட்டமிட்டிருந்தாலும்,

    //தன்னை விட மூத்த பிராயத்தினள் என்ற பிரத்யட்ச உண்மையும், தன் முதலாளியின் மனைவி என்ற அவள் அந்தஸ்து கலந்த மரியாதையுமே அப்பொழுதெல்லாம் அவன் மனசை நிரப்பியிருந்தது//

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே இதையே கேட்ட நெல்லைக்கும் பதிலளித்திருக்கிறேன். பார்க்க வேண்டுகிறேன்.

      நீக்கு
    2. பார்த்துவிட்டேஞ்ச் ஜீவி அண்ணா. இலைமறை காயாக என்று கொள்ளலாம் இல்லையா,,,ஓகே

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  18. எதனால் கௌதமன் சார், படம் வரைய முயலவில்லை? அல்லது இணையத்திலிருந்தாவது எடுத்துப் போட்டிருக்கலாமே ("இடுப்பு கிள்ளல்' நினைவுக்கு வருதே....)

    பதிலளிநீக்கு
  19. பதில்கள்
    1. 'குற்றமென்ன செய்தேன், கொற்றவா?' என்று
      பழைய தமிழ்ப் படங்களில் கேட்ட வசனம் நினைவுக்கு வந்தது, டி.டி.
      ஹி. ஹி..

      நீக்கு

  20. "பரவாயில்லையா? என்ன சொல்றே, தம்பீ? ஆறு வருஷம், ஐயா.. வளர்ற வயசுலே இந்தச் சின்னப் பிள்ளைக்கு இந்தக் கஷ்டம் நேரணுமா, கடவுளே!" என்ற வசந்தா விக்கி விக்கி அழுதே விட்டாள்.

    ராஜேஷூக்கு உடல் சிலிர்த்தது. அனிச்சையாய் அவளைக் கையெடுத்துக்
    கும்பிட்டான். "அழாதீங்க அக்கா.." என்று வார்த்தை வராமல் தடுமாறினான்//

    வசந்தாவின் தாய்மை கோலம், வசந்தாவின் தாயின் பரிவு ராஜேஷ் மனதின் ஓரத்தில் இருந்த அழுக்கை போக்கி விட்டது.
    வசந்தாவை கயவனிடமிந்து காப்பாற்றியதற்கு பரிசும் கொடுத்து விட்டார் வசந்தா.

    //இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரிலே.." என்று சந்தோஷத்தோடு சொன்னான்.//
    என்றும் நல்ல மனதுடன் உதவும் உள்ளத்தோடு இருந்தால் போதும்.
    கதை நன்றாக இருக்கிறது. அன்பும், பரிவும் கெட்டவர்களை நல்லவர்களாக ஆக்கிவிடும் என்று கதை நிறைவு சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்னிப்பாக கதையை வாசித்து எடுத்தாள வேண்டியதை மிகச் சரியாக எடுத்தாண்டு சொன்னதற்கு நன்றி
      சகோதரி.

      வசந்தாவின் கேரக்டர் தான் கதையை நிமிர்த்தி நிறுத்தியது.

      தண்டனையை விட சம்பந்தபட்ட நபர்களின் மனமாற்றம் முக்கியமில்லையா?

      அதற்காகத் தான் தண்டனை என்று சட்டம் வகுத்திருந்தாலும்...

      சில சமயங்களில் புரண்டு போவதைத் தான் பார்க்கிறோமே!!

      நீக்கு
  21. //துரை செல்வராஜு அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான சிறுகதை மன்னர் பட்டம் அளிக்கப்படுகிறது //

    அருமை. பாராட்டுக்கள் சகோ, வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
    நல்லகதைகள் தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. எனது ஆக்கங்களுக்கு அழகான சித்திரங்கள் வரைந்து மெருகூட்டிய - அன்பின் கௌதம் அவர்களை இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்..

    சித்திரச் செல்வர் தமக்கு அன்பின் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  23. இந்த வகை உயிரிழப்புக்கள் தண்டனைக்குரியவை அல்ல. வசந்தாவின் சாட்சியம் அவரைக் காப்பாற்றியிருக்கும்.

    பதிலளிநீக்கு
  24. அவரைக் காப்பாற்றியிருக்கக் கூடாது என்பதற்குத் தானே, இந்தக் கதையே, பெயரிலா! :))


    பதிலளிநீக்கு
  25. கதாசிரியரின் பின்னுரை:

    Young adulthood (18 to 22 years) என்பது ஆண்-பெண் இருபாலரின் முக்கியமான வளர்ச்சிக் கட்டம். இந்த பருவத்து மன வளர்ச்சியே எதிர்காலத்து அவர்களைத் தீர்மானிக்கும் வளர்ச்சிப் போக்கில் முக்கியமாய் பங்கு வகிக்கிறது.

    ஆனால் நம் நாட்டின் சமூக அமைப்பு சோகங்கள் பெரும்பாலும் இந்த வயதினரை நல்ல வகையில் வளர்த்தெடுக்கும் போக்கில் இல்லை என்பதை வருத்தத்துடன்
    குறிப்பிட நேருகிறது. இன்றைய சினிமா இந்த அவலங்களில் தலையானது.

    இந்த சீர்கேடுகளுக்கு துணை போகும் சாதனங்கள் இன்னும் நிறைய.

    இந்த போக்குகளிலிருந்து விடுபட்டு இளம் உள்ளங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தூண்டுகோலாய் எழுத நினைத்தது வேறுபட்ட பார்வையில் அழுந்தச் சொல்ல முடியாத கதையாகியிருக்கிறது.
    இருப்பினும் இப்போதைக்கு இது என்று கொள்ள வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Young adulthood (18 to 22 years) என்பது ஆண்-பெண் இருபாலரின் முக்கியமான வளர்ச்சிக் கட்டம். இந்த பருவத்து மன வளர்ச்சியே எதிர்காலத்து அவர்களைத் தீர்மானிக்கும் வளர்ச்சிப் போக்கில் முக்கியமாய் பங்கு வகிக்கிறது.//

      அண்ணா இதை அப்படியே ஏற்கிறேன் இதோடு கூடவே பருவ வயதும் மிக முக்கியம்.....அங்கிருந்துதானே முளை இல்லையா? அச்சமயத்தில் பதியும் சில நீங்கள் சொல்லியிருக்கும் பருவத்தில் பெரிதாகும் முளையாக.....சில நல்ல முளை சில கெட்ட முளை. களையப்படாமல் போனால் பாதிப்பு...

      //ஆனால் நம் நாட்டின் சமூக அமைப்பு சோகங்கள் பெரும்பாலும் இந்த வயதினரை நல்ல வகையில் வளர்த்தெடுக்கும் போக்கில் இல்லை என்பதை வருத்தத்துடன்
      குறிப்பிட நேருகிறது. இன்றைய சினிமா இந்த அவலங்களில் தலையானது.//

      அப்படியே வழி மொழிகிறேன்...

      //இந்த போக்குகளிலிருந்து விடுபட்டு இளம் உள்ளங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தூண்டுகோலாய் எழுத நினைத்தது வேறுபட்ட பார்வையில் அழுந்தச் சொல்ல முடியாத கதையாகியிருக்கிறது.
      இருப்பினும் இப்போதைக்கு இது என்று கொள்ள வேண்டுகிறேன்.//

      உங்களால் அழுந்தச் சொல்ல முடியும் அண்ணா நீங்க தேர்ந்த எழுத்தாளர். எனவே எழுதலாமே....அழுத்தமாகச் சொல்ல முடியுமே...

      கீதா

      நீக்கு
    2. எஸ். ஒரு ஆணின் பருவ வயது திகைப்பிலும் குறுகுறுப்பிலும் பதட்டத்திலிருந்தும் தான் ஆரம்பித்திரு தேன். வேறொரு கதையாய் அது வரும். இந்தப் பையன் ராஜேஷூக்கு 20 வயது என்று குறிப்பிட்டு விட்டதால் அதற்கேற்ற மாதிரி கதையில் மாற்றம் செய்தேன்
      மூளையின் சுரக்கும்
      நியூரான்களின் கொண்டாட்டத்தை
      தவறான எண்ணங்கள் என்று வகைப்படுத்தவும் கூடாது. அந்த எண்ணங்கள் ஏற்படாவிட்டால் தான் கோளாறாகலாம்.
      இதையெல்லாம் எழுதலாமா இதையெல்லாம் சாங்கோபாங்கமாக விவரிக்கலாமா என்று
      இந்தத் தளத்தில் சிலர் தூற்றலாம். ஆனால் இவர்களே
      திஜாவின் அம்மா வந்தாளுக்கு வரிந்து வரிந்து பாஷ்யம் எழுதுவார்கள். விட்டுத் தள்ளுங்கள்.

      நீக்கு
    3. //நியூரான்களின் கொண்டாட்டத்தை
      தவறான எண்ணங்கள் என்று வகைப்படுத்தவும் கூடாது. அந்த எண்ணங்கள் ஏற்படாவிட்டால் தான் கோளாறாகலாம்.// - இந்தக் கோணம் சரிதான். பெற்றோர் நினைப்பதுபோலவே அவர்கள் பையன்/பெண் இருக்கணும் என்றால் அதற்கு ரோபோட் தான் வச்சுக்கணும். இயற்கை, பதின்ம வயதில் அடுத்த கட்டத்துக்கு ஒரு மனித உயிரை எடுத்துச்செல்லும்.

      நீக்கு
  26. சிறையில் இருந்து வரும் ராஜேசின் மனநிலையுடன் நகர்ந்து செல்லும் கதை படிக்கும்போது எப்படி செல்லப்போகிறதோ என்ற எண்ணத்தை எங்கள் மனதில் எழுப்பிக் கொண்டு செல்கிறது முடிவில் நல்லதோர் திருப்பத்துடன் முடித்துள்ளீர்கள் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே காணோமே என்று பார்த்தேன் சகோ. நீங்கள் சொல்கிற இடத்தில் முதல் அத்தியாயத்தை முடித்திருந்தேன். ஒரு வாரம் சஸ்பென்ஸூக்காக இது. இரண்டு அத்தியாயங்களும் ஒரு சேர பிரசுரம்.
      நோய் நொய்யென்று இழுத்துக் கொண்டிருக்காமல்
      இதுவும் நல்லத்துக்குத் தான்.
      தங்கள் வாசிப்பு வெளிப்பாடு பிரமாதம். நன்றி.

      நீக்கு
  27. 'சிறுகதை மன்னர் ' பட்டம் பெற்ற திரு. துரை செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. கதை எழுதுவதில் உங்களுக்கு இருக்கும் அனுபவம் அழகாக இந்தக் கதையில் வெளிப்பட்டிருக்கிறது. இதை ஒரு குறுநாவலாக, ஏன் நாவலாகவே கூட எழுத முடியும் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களும் வாசித்து கருத்திட்டதில் திருப்தி எனக்கு சகோ. தாங்கள் சொல்கிற மாதிரி நீட்டி எழுதுவதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ள சஜெக்ட் இது. .

      இதே ப்ளாட்டில் இதற்கு அடுத்த பகுதியை
      இன்னொரு கோணத்தில் எழுத முயற்சிக்கிறேன். எபியின்
      மிக்க நன்றி.

      நீக்கு
  29. தாங்களும் வாசித்து விட்டதில்
    திருப்தி எனக்கு.
    எஸ். நீங்கள் சொல்கிற.மாதிரி
    விரிவாக எழுத நிறைய கோணங்கள்
    கொண்ட.சப்ஜெக்ட் தான் இது.
    இன்னொரு கோணத்தில் இதே
    விஷயம் பற்றி இன்னொரு முயற்சிய்ச்ச்ய்
    எழுதுகிறேன். நன்றி, சகோதரி.

    பதிலளிநீக்கு
  30. கரெக்ட். இந்தக் கதைக்
    கருப்பொருளை மட்டும்
    எடுத்துக் கொண்டு அப்படிச்
    செய்கிறேன். தங்கள் வாசிப்பு
    நேர்த்திக்கும் ஆலோசனைக்கும்
    நன்றி, பா.வெ.

    பதிலளிநீக்கு
  31. கரெக்ட். இந்தக் கதைக்
    கருப்பொருளை மட்டும்
    எடுத்துக் கொண்டு அப்படிச்
    செய்கிறேன். தங்கள் வாசிப்பு
    நேர்த்திக்கும் ஆலோசனைக்கும்
    நன்றி, பா.வெ.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!