கீதா சாம்பசிவம்:
நாம் வருந்தி வருந்தி உழைச்சு ஒருத்தருக்குப் பலவிதங்களிலும் உதவிகள் செய்தாலும் அவங்க நம்மிடம் எதிரியாகவே இருப்பதன் காரணம் என்ன?
நெருங்கிய உறவைக் கூட character assasination பண்ணிப் பெயரைக் கெடுப்பது ஏன்? திடீரெனத் தன்னைப் பத்தி இப்படி எல்லாம் பேச்சு நடந்திருக்கு எனத் தெரியும்போது அந்த அப்பாவிகள் மனம் படும் பாடு அவங்களூக்குப் புரியுமா? இதுக்கு உளவியல் ரீதியாகக் காரணம் உண்டா?
# மூன்றாம் மனிதர் மூலம் அறியப்படும் செய்தி தவறாக இருக்கலாம், திரித்து கூறப்பட்டதாக இருக்கலாம், நம் புரிதல் தவறானதாக இருக்கலாம், அதில் நாம் ஒப்புக் கொள்ளாத உண்மையும் இருக்கலாம்.
உதவி என்பது பிரதி பலன் எதிர்பார்த்து செய்வதல்ல.
மூன்றாம் மனிதர் நம்மிடம் "கோள்" சொல்வது நடவாமல் இருந்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது.
நாம் நம்மைப் பிறர் தவறாக எடுத்துக் கொள்வது பற்றி அதிகம் கவலைப் படாமல் இருப்பது நல்லது. அது தேவையற்றதும் கூட.
= = = = =
KGG பக்கம் :
ஆண்டு விழாவில் நடந்தது என்ன?
ஆண்டு விழா அன்று, மேடையில் ஏறவேண்டிய எல்லோரையும் விழா ஆரம்பிப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே வந்துவிடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அவ்வாறே சென்று சேர்ந்தோம்.
பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள், சொன்னார்கள்: " நாங்கள் இருவரும் மேடையின் இரு பக்கங்களிலும், திரைக்குப் பக்கத்தில் உங்களைப் பார்த்து நிற்போம். நாங்கள் நிற்பது பார்வையாளர்களுக்குத் தெரியாது. ( பக்கத் திரை மறைத்திருக்கும்) உங்களுக்கு மட்டும்தான் தெரியும். திரை விலகி, விளக்குகள் எரியத் தொடங்கியதும், இவரைப் பாருங்கள். இவர் கை விரல்களால் தாளம் போடத் தொடங்குவார். நீங்களும் அவரைப் பார்த்து அவருடனேயே முதலில் விரல்களால் தாளம் போட ஆரம்பிக்கவேண்டும். எல்லோரும் ஒன்றாகத் தாளம் போட ஆரம்பித்தவுடன், நான் ஒரு சொடுக்குப் போட்டவுடன் எல்லோரும் ஒரே நேரத்தில் ரைம்ஸ் சொல்ல ஆரம்பிக்கவேண்டும். வலது கையை நான் ஒரு சுற்று சுற்றினேன் என்றால், திரும்பவும் நீங்கள் சொல்லவேண்டிய பாடலை திரும்பச் சொல்லவேண்டும். போதும் என்று சைகை செய்ததும் நிறுத்திவிடவேண்டும். மேடையில் விளக்குகள் அணைக்கப்படும் வரை அப்படியே நிற்கவேண்டும். விளக்குகள் அணைந்ததும், மெதுவாக ஒருவர் பின் ஒருவராக வரிசையாக மேடையின் பின்பக்கம் வழியாக கீழே இறங்கிச் செல்லவேண்டும்"
அதற்குப் பிறகு, திரும்பத் திரும்ப ஒத்திகை நடந்தது.
அப்பொழுது கலை நிகழ்ச்சிகள் பிரிவு குழு ஆசிரியர் ஒருவர் வந்து எங்கள் ஒத்திகை ஆசிரியரிடம் ஏதோ சொன்னார்.
ஒத்திகை ஆசிரியர், எங்களிடம் " பசங்களா - ஒரு சிறிய மாற்றம். ஆறாம் வகுப்பு A பிரிவு, B பிரிவு - இரு பிரிவினரையும் தனித் தனியாக மேடை ஏற்றி இறக்கி நடத்த நேரம் இல்லையாம். அதனால், இரண்டு பிரிவுகள் மாணவர்களும் ஒன்றாக இரண்டு பாடல்களையும் சொல்லவேண்டும், இரண்டு முறை" என்றார்.
அவசரம் அவசரமாக ஏ பிரிவு மாணவர்கள், பி பிரிவினர் பாடலையும், பி பிரிவினர், ஏ பிரிவினரின் பாடலையும் கற்றுக்கொண்டோம். இரண்டு பாடல்களுக்கும் ஒரே வகை தாளம்தான். அதே இடது உள்ளங்கை, அதே வலது கை விரல்கள் தாளம்.
புஷி கேட்டும், ஹிக்கரி டிக்கரியும் எங்கள் வாயிலிருந்து வெளியே வர தயார் நிலை.
விழா ஆரம்பித்தது.
ஒரு மாணவி ஆண்டு அறிக்கை படிக்க ஆரம்பித்தார். முதல் வரிசை சீனியர் மாணவர்கள் 'போர், போர்' என்று முணுமுணுக்க ஆரம்பித்து, பெரிய குரலில் சொல்லும்வரை அறிக்கை படிப்பது தொடர்ந்தது.
ஆண்டு அறிக்கை ஒருவழியாக முடிந்ததும், கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.
முதல் நிகழ்ச்சியே நாங்கள் சொல்லும் ரைம்ஸ்தான்.
" முதல் நிகழ்ச்சியாக ஆறாம் வகுப்பு மாணவர்கள் பாடும் ரைம்ஸ் " என்று அறிவித்தார்கள்.
வரிசையாக திரைக்குப் பின்னால் எல்லோரும் அணிவகுத்து நின்றோம். மேலும் ஒரு திருப்பமாக ஆறாம் வகுப்பு சி பிரிவு மாணவர்களும் எங்களோடு மேடையில் வந்து நின்றனர். அவர்கள் சொல்லவேண்டிய டென் கிரீன் பாட்டில் - ஏ பிரிவு, பி பிரிவு மாணவர்கள் எல்லோருக்கும் பாடல் வரிகள் தெரியாது. ராகம் மட்டும்தான் தெரியும்.
'என்ன நடக்கிறது' என்று யோசிப்பதற்குள், 'பிர் ர் ர்' என்று விசில் ஊதப்பட்டு, திரை தூக்கப்பட்டது.
மேடையிலிருந்து பார்வையாளர்களைப் பார்ப்பது எனக்கு அதுதான் முதல் அனுபவம்.
மாணவர் வரிசையில் மூன்றாவது வரிசையில் என்னுடைய அண்ணன் (விசுவேஸ்வரன்) தன் நண்பர்களோடு உட்க்கார்ந்திருந்தார். அப்பொழுது அவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். அவர் தன்னுடைய நண்பர்களிடம், என்னைக் காட்டி பெருமையாக தன்னுடைய தம்பி என்று சொல்லிக்கொண்டிருந்தார். சைகை மூலமாக 'நான்காவதாக நிற்கும் பையன்' என்று அவர் அடையாளம் காட்டி சொல்லிக்கொண்டிருந்தார்.
தாளம் போடும் ஆசிரியர் தாளம் போட ஆரம்பித்ததும் நாங்களும் அவரைப் பார்த்து அது போலவே தாளம் போட ஆரம்பித்தோம்.
மற்றொரு ஆசிரியர் ஸ்டார்ட் என்று சைகை காட்டியதும், பாடல் சொல்ல ஆரம்பித்தோம்.
முதல் பாடல், ரிப்பீட்
இரண்டாம் பாடல், ரிப்பீட்.
அதற்குள் தாளம் போடும் ஆசிரியர் போய் வேறு ஒரு ஆசிரியர் அங்கே வந்து நின்றார்.
ஆறாம் வகுப்பு சி பிரிவு மாணவர்களுக்கு கைத்தாளம் கிடையாது. கைகளால் சில அபிநயங்கள் செய்யவேண்டும்.
நான் அபிநயம் செய்யும் ஆசிரியரைப் பார்த்து அவர் செய்தபடியே எல்லாம் செய்தேன். வாய் மட்டும் டென் கிரீன் பாட்டில்ஸ் ராகத்தில் முதல் வரியை மட்டும் ஒழுங்காக சொல்லி, மற்ற வரிகளுக்கு " பே ப பெப்ப பே " என்று உணர்ச்சி ததும்ப சொல்லி நடித்து முடித்தேன்.
நிகழ்ச்சி முடிந்ததும் பிரமாதமாக கை தட்டல் - மூன்றாவது வரிசையிலிருந்து ( அண்ணன் & அவர் நண்பர்கள்) சத்தம் வந்தது.
விழா முடிவில் ' பரிசு அளிக்கும் நேரம் வந்ததும், ஒவ்வொரு பெயராக அறிவித்து அழைத்து, பரிசு கொடுத்தார்கள். ரைம்ஸ் பாடிய ஒவ்வொருவருக்கும் பரிசு! என் பெயர் சொல்லப்பட்டதும் மேடை ஏறி சென்று, விழா தலைவர் அளித்த பரிசுப் புத்தகத்தை வாங்கி வந்தேன்.
புத்தகத்தின் தலைப்பு : " வழங்கி வாழ்ந்தவர்கள்" கடையேழு வள்ளல்கள் பற்றிய புத்தகம் என்று ஞாபகம்.
இந்தப் புத்தகம் பல வருடங்கள் என் வீட்டில் இருந்தது. பிறகு வீட்டை காலி செய்யும்போது, சா பா என்னும், பா ஹே என்னும், பாலசுப்ரமணியம் ( ஸ்ரீராமின் தந்தை ) எங்கள் வீட்டில் இருந்த (அண்ணன்கள், அக்கா, மற்றும் நான் வாங்கிய) பரிசு புத்தகங்களை, 'தமிழை பழைய பேப்பர்காரனுக்கு போடாதீர்கள்' என்று சொல்லி, தன்னுடைய நூலகத்திற்காக எடுத்துக்கொண்டார்.
இப்போ அந்தப் புத்தகம் எங்கே இருக்கு என்று யாருக்குமே தெரியவில்லை.
[இப்போது எங்கள் வீட்டில் உள்ள கலெக்ஷனில் அப்படி ஒரு புத்தகம் இல்லை! - ஸ்ரீராம்]
== = = = =
நெல்லைத்தமிழன் பக்கம் !
நான் பார்த்து நொந்த படம் (பாதியில் எழுந்து ஓடிய படம்) – நெல்லைத் தமிழன்
படம்: மார்க் அண்டனி
நம்ம ஜெயக்குமார் சார், நான் படிச்ச கதைன்னு வாரம் தோறும் எழுதறாரே, நாமும் அது மாதிரி ஏதேனும் எழுதி அனுப்பலாம்னு நிறைய தடவை நினைத்திருக்கிறேன். ஆனால் புத்தகங்கள் ஏதேனும் படித்தால்தானே. நேரமில்லை என்ற ஒற்றை வார்த்தை சாக்காக அமைந்துவிடுகிறது.
எங்க வீட்டில் அருகில் (காம்பவுண்டுக்கு அடுத்து) Cinepolis cine complex இருக்கிறது. என்ன என்ன படங்கள் ஓடுதுன்னு இணையத்துல பார்த்துட்டு, காலைல 9 மணிக்கு நடைப்பயிற்சி முடிந்ததும் அப்படியே அங்க போனால், டிக்கெட் வாங்கிக்கொண்டு திரும்பிவிடுவேன். படம் ஆரம்பிக்க ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் நடந்து போய், ஷோவில் உட்கார்ந்தால் போதும். ரொம்பப் பக்கத்தில் இருப்பதால், கொஞ்சம் திமிர்ல, இப்போல்லாம் படம் ஆரம்பிக்கும் நேரம்தான் வீட்டைவிட்டுக் கிளம்ப ஆரம்பித்திருக்கிறோம். அவன் விளம்பரம்லாம் போட்டுவிட்டு, தேசிய கீதம் இசைத்த பிறகு போய் சீட்ல உட்கார்ந்தால் போதும். இந்தத் திமிர்னால, ஜெயிலர் படத்தின் முதல் 4 நிமிடங்கள் கழித்துச் சென்றதும் நடந்திருக்கிறது.
இந்த சினி காம்ளக்ஸில், நான் பார்த்த ஒரு வித்தியாசம் என்னன்னா, இணையத்துல எந்த நேர ஷோவுக்கு என்ன ticket price என்று பார்த்தால் price வித்தியாசம் இருக்கிறது. காலை 9-10:30 ஷோக்கள், வார நாட்களில் 112-120 ரூபாய் இருந்தால், மதியம் மற்றும் இரவு 9 மணிக் காட்சி 150-200 இருக்கும். வார இறுதியில் அதே படம் 180-200 ரூபாய் இருக்கும். ஜெயிலர் போன்ற படங்களின் ஆரம்ப தினங்களில் 400-500 ரூபாயாக இருந்தது. இரண்டு நாட்களில் 200-250 ரூபாயாக ஆகிவிட்டது.
ஜெயிலர் நான் இரண்டு முறை தியேட்டரில் பார்த்தேன். இதற்கு முன்னால், டிடி ரிட்டர்ன்ஸ் (சந்தானம் படம்) படத்தை இரண்டு முறை பார்த்தேன். முதலில் நான் மாத்திரம் பார்த்தேன். படத்தை மிகவும் ரசித்ததால், பையன் வெளிநாட்டுக்குப் போவதற்கு முன்பு Openheimer இரண்டாவது முறை பார்க்கணும் என்று சொல்லிக்கொண்டிருந்தவனை, நேரமின்மையால் கடைசி நேரத்தில் இந்தப் படத்துக்குக் கூட்டிச் சென்றிருந்தேன் (குடும்பத்தில் எல்லோருமாக). எல்லோரும் அந்தப் படத்தை ரொம்பவே ரசித்தனர், அதிலும் பசங்க விழுந்து விழுந்து (இதெல்லாம் பொதுவா உபயோகிக்கும் வார்த்தைகள். எங்க கட்டுப் போட்டாங்கன்னு கேட்காதீங்க) சிரித்து ரசித்தது எனக்கு மன நிறைவாக இருந்தது.
என்னுடைய வழக்கம், நான் ரசித்தால்தான் எதையும் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வேன், கூட்டிச் செல்வேன், அது படமாக இருந்தாலும் சரி, உணவகமாக இருந்தாலும் சரி, சுற்றுலாத் தளமாக இருந்தாலும் சரி. இணையத்தில் இந்த “மார்க் அண்டனி” படத்திற்கு 3.6 / 5 மதிப்பெண்கள் கொடுத்திருந்தாங்க. அதிலும் பெரும்பான்மை 4.1 மதிப்பெண்கள் கொடுத்திருந்தாங்க. அதை நம்பி, இந்தப் படத்தை முதல் முறையாகப் பார்க்கப் போகும்போது (மறுநாள் படத்தைத் தூக்கிடுவாங்கன்னு தோன்றியது) மனைவியையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். போதாக்குறைக்கு, மச்சினனையும், வரச்சொல்லியிருந்தேன்.
விமர்சனம் பண்ணின எந்தப் பயலும், இந்தப் படம் செவித்திறன் குறைந்தவர்களுக்கு மட்டும் என்று சொல்லவில்லை. அதே போல பொழுது போகாத பொக்கிகளுக்கு மாத்திரம்தான் படம் எடுத்திருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கவில்லை. மச்சினனும் (என் பசங்க மாதிரி) 400 ரூபாய் செலவழித்து பாப்கார்ன் வேறு வாங்கிவந்தான் (நான் முதல் முறையாக, இந்தியாவில், பட இடைவெளியில் மனைவிக்கு கேரமல் பாப்கார்ன் வாங்கித் தரலாம் என்று நினைத்திருந்தேன். பசங்க வந்தாங்கன்னா, சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்காப் பணம் என்பது போல, 4 பேருக்கு டிக்கெட் 600-720 ரூபாய் என்றால், 1000 ரூபாய்க்கு ஏதேனும் வாங்குவார்கள். இதையும் நான் அனுமானித்துச் சொல்கிறேன். உண்மை விலையைச் சொன்னால் அப்பாவுக்கு ப்ரெஷர் ரொம்ப அதிகமாகிவிடும் என்று அவங்க எப்போதுமே விலையைச் சொல்வதில்லை). இந்தப் படத்திற்கு மூணு பேருக்கும் டிக்கெட் விலையே 336 ரூபாய்தான். சரி போகட்டும்… படம் விமர்சனம் எங்கே என்று தப்பித் தவறிக் கேட்பவர்களுக்காக இனி படத்தைப் பற்றி மாத்திரம்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். முக்கிய நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜெ.சூர்யா. Time travel பற்றிய கதை இது.
இந்த time travel machine மூலமாக பழைய நாட்களுக்கு போனைப் போட்டுப் பேசலாம், ஒரு தடவைதான் அந்த நாளில் (பழைய நாள்) ஒரு நம்பரில் பேசமுடியும், எதிர்காலத்துக்குப் பேச முடியாது என்றெல்லாம் சில பல கண்டிஷன்கள். போனின் மூலமாக நடந்த நிகழ்ச்சியை மாற்றி அமைக்கலாம் என்ற சிந்தனையையும் உபயோகித்திருக்கிறார்கள்.
படத்தில் எஸ்.ஜே சூர்யா அப்பாவும் மகனுமாகவும், அதுபோல விஷால், அப்பாவும் மகனுமாகவும் நடித்திருக்கிறார்கள். விஷாலுக்கு தன் அப்பா ரௌடி என்பதாலும், அம்மா இறக்கக் காரணம் என்பதாலும் அவரைப் பிடிக்காது. டைம் டிராவல் மிஷின் (போன்) மூலமாக விஷாலுக்கு தன் அப்பா கெட்டவர் கிடையாது என்பதும், அம்மாவை யார் கொன்றார்கள் என்பதையும் கண்டுபிடிக்கிறார். அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் கதை.(இடைவேளைக்குப் பிறகு).
நடிகர்களுக்கு 70களில் நடக்கும் படம் என்பதால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு கோரமாக மேக்கப் போட்டிருக்கிறார்கள். உடையும் அப்படித்தான். 70கள்னாலே டி.ராஜேந்தர் போல எல்லோருமே பேசணும்னு யாருப்பா இவங்களுக்குச் சொல்லிக்கொடுத்திருப்பாங்க? குழப்பமான கதையை நேராகச் சொல்லியிருக்கிறார் என்பது விமர்சகர்களின் கருத்து. கதை எப்படிப் பயணிக்குது, யார் யார் புதிதாக வருகிறார்கள், எப்படி நடந்த நிகழ்வை போனின் மூலமாக மாற்றுகிறார் என்றெல்லாம் கதை சென்றது. தாங்க முடியாத இரைச்சல், நடிகர்களின் கொடுமையான மேக்கப், 70-80களில் நடப்பதாகச் சொன்னதால் காட்சிகளின் tone, சட் சட் என்று புதுப் புது கேரக்டர்கள் என்று எங்களுக்குக் கொடுமையான அனுபவம். ஏதாவது ஒரு knot அகப்படாதா, அதை வைத்துப் படத்தை சுவாரசியமாகக் கொண்டு செல்வார்களா என்று நானும் பார்த்துக்கொண்டிருந்தேன். இதற்கிடையில் படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களில் எங்களுக்கு இடது பக்கம் இருந்த இரண்டுபேர் வெளியே சென்றுவிட்டார்கள். கீழே அடுத்த வரிசையில் இருந்த நால்வரும் அடுத்த கால் மணி நேரத்தில் வெளியில் சென்றுவிட்டார்கள். படம் கொஞ்சம்கூடப் பிடிக்காததால் எப்படா இடைவேளை விடுவான் என்று காத்திருந்து இடைவேளை விட்டதும் தியேட்டரிலிருந்து ஓட்டம் பிடித்தோம். (வாங்கின பாப்கார்ன் காலியாகணும் இல்லையா?). தியேட்டரில் ஐந்துபேர்கள்தான் பாக்கி. அவங்க எப்போ ஓடினாங்கன்னு தெரிந்துகொள்ள நாங்கள் தியேட்டரில் இல்லை.
‘அந்த ஒரு நிமிடம்’ என்ற கமலஹாசரின் படத்தை நான் (கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாங்கள், 4 நண்பர்கள், 85ல்) முதல் நாள் மாலை 6 மணி ஷோ, மதுரையில் பார்த்தோம். இடைவேளை விட்ட சிறிது நேரத்தில், பேசாமல் ஹாஸ்டலுக்குத் திரும்பலாம், படத்தினால் ஏற்பட்ட தலைவலி தாங்கமுடியவில்லை என்று கிளம்பினால், திரையிடப்பட்ட ஹாலிலிருந்து எங்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சார்.. கமல் படம் முதல் நாளே பாதியில் போனீங்கன்னா, படம் பப்படம்னு வெளில தெரிஞ்சுபோகும், கமல் ரசிகர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்று செக்யூரிட்டி/வாயிற்காப்போன் சொல்லிவிட்டார். வேற வழியில்லாமல் படம் முடியும்வரை இருக்கவேண்டியதாகப் போயிற்று. அதற்கு அப்புறம் படம் பார்க்காமல் பாதியில் பின்னங்கால் பிடறிபட ஓடியது இந்தப் படத்திற்குத்தான்.
என்னடா இப்படி ஒரு அட்டுப் படத்திற்குக் கூட்டிச் சென்றுவிட்டோமே என்ற வருத்தத்தில், ஒழுங்கா பட விமர்சனத்தைக் கேட்போம் என்று இன்று கேட்டேன். பலர், முதல் பாதி சுமார், இடைவேளைக்கு அப்புறம் சூர்யா சூப்பர், படமும் ரொம்ப நல்லா இருந்து, எஸ்.ஜே.சூர்யாவிற்கு சிறந்த நடிகர் என்ற விருதும் கிடைக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். மனைவிகிட்ட இதைப் பற்றிச் சொன்னபோது, பேசாம இடைவேளைக்கு அப்புறம் உள்ள பகுதியை முதலிலும், இடைவேளைக்கு முன் உள்ள பகுதியை அப்புறமும் போட்டிருந்தால் ஒருவேளை ரசிகர்கள் பொறுமையாகப் படம் பார்க்க ஏதுவாக இருந்திருக்கும் என்றாள்.
இன்றைய செய்திகளைப் படித்துக்கொண்டிருந்த போது, நடிகர் விஷால், இந்தப் படத்தை ஹிந்தியில் வெளியிட சென்சார் போர்ட் லஞ்சம் கேட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார். எனக்கு வந்த கடுப்புல, உடனே எங்கள் பிளாக்குக்கு இந்தப் படம் பார்த்த அனுபவத்தை எழுதி அனுப்பணும் என்று தோன்றியது. அனுப்பிட்டேன்.
= = = = = = =
அப்பாதுரை பக்கம் :
அவன் செயல்.
அவனன்றி அணுவும் அசையாது. எல்லாவற்றையும் திட்டமிட்டு புண்ணிய-பாவ தரமும் தராசும் தூக்கி நடத்துகிறவன் அவனே. அவன் இயக்குகிறான் நாம் இயங்குகிறோம்.
இங்கே அவன் என்பது அவளுமாகும் என்ற பொதுவில் வைக்கும் பாங்கை, நீரும் பசுஞ்சாந்தும் சூலமும் வளையுமுடை மாதொருபாகன் வாயிலாக நமக்குப் புகட்டப்பட்டிருப்பது மதச்சிறப்பு என்றாலும் நம் வேதங்கள், உபனிஷதுகள், திருக்குறள், நம் நாட்டு மற்றும் மேலை நாட்டு இலக்கியம், புராணம் எல்லாம்... 'அனைத்தும் அவன் செயல்' என்ற கருத்தை உலகளாவியதாக வலியுறுத்துகின்றன.
பின், நம்மில் பலர் ஏன் எண்ணியோ எண்ணாமலோ கர்மம் துணிவதற்குத் தயங்குகிறோம்? என் எண்ணம் மற்றும் செயலில் தவறிருப்பினும் எல்லாம் அவன் செயல் என்பதால் அவனே பொறுப்பு என்ற உணர்வில் (அல்லது உணர்வில்லாமல்) ஏன் நம்மில் பலர் அறம் பிறழ்கிறோம்? அவன்தான் என்னை அறம் தழுவச் செய்கிறான், அவன்தான் என்னை அறம் வழுவச் செய்கிறான் என்று எல்லாவற்றையும் அவன் மேல் சுமத்தி நாம் தினம் நெறி தவறினால் என்ன? எல்லாம் அவன் செயல் என்றால் கடமை வினை இவையெல்லாம் ஏன்? உன் கடமையைச் செய் என்று ஆட்டுவிப்பவனே ஆடுபவனிடம் எதற்குச் சொல்ல வேண்டும்? தீதும் நன்றும் வந்தடையும் முறை பற்றி நாம் ஏன் நோக வேண்டும்? யான் எனதெனும் செறுக்கறுக்க அவசியமே இல்லையே? சுலபமாக இருக்குமே வாழ்வியல்?
இது ஒரு புறமிருக்க, எல்லாமே அவன் செயல் என்றால் நாம் என்ன அடிமைகளா? சிந்தனையற்ற ஜடங்களா? எதற்காக நமக்கு அறிவு இருக்கிறது? அறிவை அவன் கொடுத்தான் என்றே வைத்துக் கொண்டாலும், செயல்களுக்கு அவனே காரணமெனில் நமக்கு ஏன் அறிவைத் தர வேண்டும்?... போன்ற கேள்விகளும் தோன்றுகின்றன.
அக்கேள்விகளைத் தோற்றுவிப்பவனும் அவனே என்ற வட்டவிதிச் சுழலில் சிக்கினால் அப்பாதுரைப் பக்கம் டப்பாதுரை பக்கமாகி இங்கேயே மூடிவிடும் அபாயம் இருப்பதால், சிக்காமல் தப்பி உங்களோடு சேர்ந்து சிந்தித்து இரண்டு மூன்று பதிவுப்பிசின் இழுக்கத் தீர்மானித்திருக்கிறேன். (அதுவும் அவன் செயலா? ஹிஹி)
கீதாச்சாரியனில் தொடங்கி இதிகாச ஜாபாலியிலிருந்து சாக்ரேட்ஸ் அரிஸ்டாடில் தொடர்ந்து சமீப ராமானுஜர், இன்னும் சமீப ரமணர் ஜேகே, யாராவது எப்போதாவது படிக்கும் பெர்றண்ட் ரசல் ஐன்ஸ்டைன்... என்று பலர் இந்தப் பாதையில் வெளிச்சம் போட்டுக் கொடுத்திருப்பதால் பயணம் நமக்குச் சுளுவாகிறதென்று நினைக்கிறேன். ஊர் கூடித் தேர் இழுப்போம்.
சேர்ந்து சிந்திக்கும் இந்தக் கூட்டுச் சிந்தனை உத்தி ஜேகேயிடம் கற்றது. சமீபமாக ஜேகே தினம் பார்க்க, கேட்கத் தொடங்கியுள்ளேன். டிப்டாப்பாக உடை அணிந்து கொண்டு உரையாற்றுகிறார். பாதி நேரம் அவர் உடை சிகை தோரணை குரல் என்று கவனம் போய்விடுகிறது. செங்கோணமாக அமர்ந்து நேராகப் பார்த்துக் கனைத்து "அகங்காரம் எங்கிருந்து வருகிறது?" என்று மேல்தட்டுக் கேள்வி ஒன்றை உறுமலாகக் கேட்கிறார். "எனக்கும் அகங்காரம் உண்டு உங்களுக்கும் உண்டு.. இது எப்படித் தோன்றுகிறது என்பதை நுணுக்கமாக அறிய, நீங்களும் நானும் சேர்ந்து சிந்திப்போம்" என்கிறார். ஒன்றும் புரியவில்லை. கடைசியில் நேரம் கடந்துவிட்டதே என்று பார்த்தால் அவரும் சிந்தித்த மாதிரி தெரியவில்லை நாமும் சேர்ந்து கொண்ட மாதிரி தெரியவில்லை. (ஆனாலும் தினம் ஜேகே நேரம் என்று பதினைந்து நிமிடம் நான் ஒதுக்கியிருப்பதற்கு காரணம் அவன் செயலாக இருக்கலாம். சலவை செய்த வெள்ளைக் குர்தா ஒன்றை நானும் அணிந்து கொணடு கேட்டால் புரியுமோ என்னவோ?).
பற்றற்றவன் பற்றைப் பற்றிப் பற்றறுக்க, படாத பாடுபடும் விடாப்பிறவிகளான நாம் நம் புறத்தே ஜீவம் (ஆத்மா) அகத்தே பரமம் (ஆத்மா) என்ற இருநிலை செயல்பாட்டில் இயங்குவதை பலரும் அறிவோம். இந்த ஒரு பொருள் (ஆத்மா) இரு நிலை (ஜீவாத்மா, பரமாத்மா) செயல்பாடு, ஒரே திடம் (உடல் அல்லது உயிர்) என்ற சட்டத்துக்குள் அடங்கினாலும், ஒன்றையொன்று சார்ந்து இணைந்து செயல்படுவதை விட முரணாகச் செயல்படுவதே அதிகமாகத் தென்படுகிறது. அல்லது தோன்றுகிறது.
பரமாத்மா நம் அனைவரிலும் இருப்பதாகவும், ஜீவாத்மாவின் இயக்கங்களுக்கு சில நேரம் இயக்குனராகவும் சில நேரம் பார்வையாளராகவும் சில நேரம் பாராமுகமாக இருப்பதாகவும் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன. கீதையில் வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கிது. நானே அனைத்துயிரின் உள்ளிருப்பவன் என்று கண்ணன் சொல்வதாக வருகிறது. பிருஹதாரண்ய மற்றும் கடோ உபநிஷதுகளில் இத்தகைய ஆத்ம வேறுபாடுகள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆத்மம் பிரம்மம் என்று வேறுபடுத்தப்பட்டாலும் எல்லாம் ஒன்றே என்ற பொருளில் "நானே பிரம்மம்" என்கிற தத்துவம் முதன் முதலாக பிருஹூ உபநிஷதில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது. பிருஹூவின் அஜாதசத்ரு, கடோவின் நசிகேதன் இவர்களின் சுவாரசியமான பயணங்களை அறிந்து உளங்களிக்க நசிகேத வெண்பா படிக்கவும் (ஹிஹி).
முன்னர் எழும்பிய கேள்வி மீண்டும். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு பரமாத்மா என்ன செய்கிறது? என் மேனேஜர் போல் தண்டச் சம்பளமா இந்த பரமாத்மா? என் செயல்களில் என்னுடைய ஆக்கம் முனைப்பு எதுவும் இல்லையா? அப்படி இருந்தால், மிக உயர்ந்த ஆத்மா எதற்காக என்னுள் இருந்து கண்ணை (?) மூடிக்கொண்டு சாதாரண ஜீவாத்மாவாகிய என்னைத் தகாத எண்ணம் தகாத செயல் செய்ய அனுமதிக்கிறது? அப்படி என் பங்கு ஏதும் இல்லையென்றால், எல்லாப் புகழும் கிடக்கட்டும், எல்லாப் பழியும் அல்லவா என்னுள் உறையும் இறைக்கு (?) சேர வேண்டும்?
இந்த இரு நிலை செயல்பாட்டுக் குழப்பத்தை சங்கரர் ராமானுஜர் போன்ற மாமகான்களும் சின்மயானந்தா போன்ற யோகிகளும் விளக்கியிருக்கிறார்கள். பரமாத்மா என்ற தத்துவம் கிறுஸ்துவ இஸ்லாமிய மதங்களிலும் உண்டு என்று பழைய ஆய்வுகள் சொல்கின்றன. Holy Spirit (oversoul) என்பதற்கான பழைய எற்பாடு உரைகள் இதே ரீதியில் போனதாகப் படுகிறது. இஸ்லாமிய இறையிலக்கியம் நான் அதிகம் படித்ததில்லை. நான் எப்போதாவது கலந்து கொள்ளும் பன்மத இணைய உரையாடல் ஒன்றில் ஒரு இஸ்லாமிய theology professor இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: "...believe the A-brahamic God (the Father) is more closely related to Brahma Creator God of Vedic beliefs". மறுபிறவி சித்தாந்தத்தில் மாற்றுக் கருத்து இருந்தாலும் பாவ-புண்ணியம், பாவத்தின் சம்பளம், புண்ணியத்தின் கிரீடம் போன்ற கருத்துக்களில் அனேகமாக அனைவருமே ஒன்றுபடுகிறோம். (அதாவது) பரமாத்மா என்பது வழி நடத்தவோ அல்லது பிராக்கு பார்க்கவோ செய்கிறது. ஜீவாத்மா மட்டுமே செயல்களுக்கும் விளைவுகளுக்கும் பொறுப்பாகிறது.
இந்த முரண் எப்படி சாத்தியம்? இந்த சிக்கலை எப்படி விடுவிப்பது?
நான் சமீபத்தில் படிக்கத் தொடங்கியிருக்கும் ராமானுஜர் வேதாந்த உரைகளில் இதை அவர் விளக்கியிருக்கும் விதம் தெளிவானதென்றும் ஏற்புடையதென்றும் நினைக்கிறேன்.
= = = = = =
//தேசிய கீதம் இசைத்த பிறகு
பதிலளிநீக்குஇன்னமும் நடக்கிறதா என்ன? அல்லது இது சுடலை சாம்ராஜ்ஜியத்தில் இல்லாததனால் நடக்கிறதா?
கர்நாடகாவில் (பெங்களூர் அனுபவம்) இது நடக்கிறது. தேசியகீதம் திரையில் வரும்போது எல்லோரும் எழுந்து நிற்கின்றனர். சிலர் கூடவே பாடுகின்றனர்.
நீக்குsalute.
நீக்குசல்யூட்.
நீக்குகன்னடர்கள் மொழிப்பற்று உள்ளவர்கள் என்பது தெரியும்.
நீக்குதேசப்பற்றும் இருப்பதில் மகிழ்ச்சி.
மொழிப்பற்று உள்ளவர்களில் முதலிடம் மலையாளிகள். கலாச்சாரப் பற்றும் உள்ளவர்கள் அவர்கள். 'தமிழ் தமிழன்' என்று பேசிப் பேசி, நடிகர் ராஜ்குமார் அவர்கள் காலத்தில்தான் 'கன்னடர்' என்ற பேச்சும், கன்னட மொழியைத் தூக்கிப்பிடிப்பதும் ஆரம்பித்தது. எப்போதுமே, 'என் அப்பா' என்று நாம் உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்தால், மற்றவர்களும் 'என் அப்பா' என்று குரல் உயர்த்துவார்களே தவிர, ஆமாம் 'உங்கள் அப்பா' என்று ஜால்ரா போடமாட்டார்கள். இதுதான் மொழி விஷயத்திலும் நடக்கும்.
நீக்குஹிந்தி வேண்டாம், ஹிந்தி போடா என்றெல்லாம் உள்ளூரில் கூவிவிட்டு, 'ஹிந்தி தெரிந்த ஹிந்தியில் ட்வீட்டுகள், கட்டுரைகள் போடத்தெரிந்த திமுக உறுப்பினர்களுக்கு வேலை கொடுக்கப்படும்' என்று விளம்பரம் கொடுக்கிறார்ப்போல் ஆகிவிடும்.
எல்லாத்திரையரங்குகளிலும் தேசிய கீதம் கட்டாயம் என நினைக்கிறேன்.
நீக்கு//முதல் பாதி சுமார்,
பதிலளிநீக்குகல்கி எழுதியதாகச் சொல்லப்படும் திரை விமரிசனங்கள் (நினைவிலிருந்து)
முதல் பகுதி மோசம், இரண்டாம் பகுதிக்கு முதல் பகுதியே பரவாயில்லை.
அது சரி அப்பாதுரை சார்... உங்க பிளாக்குல, பல கதைகள் பாதியலே நின்றுவிட்டிருக்கிறதே. மூணு நாலு பகுதிகள் எழுதிவிட்டு அம்போ என விட்டுவிடுகிறீர்களே... படிப்பவர்கள் அவர்களாகவே நொந்துபோய், சரி போகட்டும், அடுத்த வேலையைப் பார்ப்போம் என எண்ணவேண்டும் என்பதாலா?
நீக்குஎந்த கதை?
நீக்கு(என்னுடைய ஸ்பெசலிடியே அரைகுறை அப்பாத்துரை..)
பதின்ம முடிவில் குமுதத்தில் ஒரு கதை எழுதிய அந்தஸ்தினால் கிடைத்த எடுபிடி வேலை நாளில் இது ராகிர எனக்கு வைத்த பெயர். அரைகுறை என்றாலும் ஓகே, அப்பாத்துரை என்று என் பெயரை அப்பளம் போல உடைத்து விட்டீர்களே என்று அவரோடு சண்டைக்குப் போனேன்.
நீக்குபுள்ளி, கண்பிடிங்கி நீலன் .....
நீக்கு// என்னுடைய ஸ்பெசலிடியே அரைகுறை அப்பாத்துரை..)// :)))
நீக்குtime travel வித்தியாசம் என்றாலும் அதே வஞ்சம் தீர்க்கும் கதையா?எல்லா தமிழ் படமும் இப்படித்தான் போல. (பிரைமில் ஜெயிலர் பார்த்தேன். கடவுளே உனக்கு கருணையே இல்லையா?)
பதிலளிநீக்குஉங்கள் கடைசி வாக்கியத்தைப் படித்தபிறகுதான், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. மார்க் அன்டனி மூளை தெளிவாக இருப்பவர்களுக்கு அல்ல என்று புரிந்துகொண்டேன்.
நீக்குஜெயிலர் படத்தை திரையில் இருமுறையும், ப்ரைமில் வந்த அன்று ஒரு தடவையும் பார்த்தேன். ஹா ஹா ஹாந
!!!!
நீக்கு//தமிழை பழைய பேப்பர்காரனுக்கு போடாதீர்கள்
பதிலளிநீக்குஆகா!
ஆம்! தமிழ் நேசர் அவர்.
நீக்குநாம் வருந்தி வருந்தி உழைச்சு ஒருத்தருக்குப் பலவிதங்களிலும் உதவிகள் செய்தாலும் அவங்க நம்மிடம் எதிரியாகவே இருப்பதன் காரணம் என்ன?
பதிலளிநீக்குநாய்வால்.
அது சரி, உதவி செய்வதோடு நிறுத்திக் கொண்டால் எதிர்பார்ப்பில்லாமல் இருக்கலாமே?
கீதா சாம்பசிவம் மேடம் தமிழ் செய்யுள்கள் படித்ததில்லை போலிருக்கு.
நீக்குமனிதர்கள் பலவித விலங்குகளின் குணம் கொண்டவர்கள , சிலர் நாய், சிலர் சிங்கம், சிலர் பாம்பு....
பாலை வார்த்தாலும் பிஸ்கட் போட்டாலும் அவரவர் அவரவருடைய குணநலன்களின்படித்தான் இருப்பர்.
ஆம். உண்மை.
நீக்குநாம் நல்லது நினைச்சுச் செய்தாலும் நாமே அறியாமல் நம்மைப் படுகுழியில் தள்ளுபவர்கள் பற்றித் தான் கேட்டிருக்கேன். இது சாதாரண உதவி எல்லாம் இல்லை. எப்படி விவரிப்பதுனும் தெரியலை.
நீக்குஅப்பாத்துரை இந்த மாதிரி டாபிக்குகளில் தன் அறிவுத் திறனை வெளிப்படுத்தி பிரமிக்க வைக்கிறார் (உங்கள் தளத்திலும்). நிறைய படித்துச் சிந்தித்தால்தான் இப்படி எழுதமுடியும்.
பதிலளிநீக்குநசிகேத வெண்பாவை எங்கு வாங்குவது? ஏற்கனவே புதுக் கவிதைகள், கவிதை மாதிரி நினைத்து எழுதப்பட்ட ஜிகினாக்கள், 85களின் கணிணியில் எழுதப்பட்ட ஃபார்மட் பண்ண முடியாத அரைகுறை உரைகளைக் கொண்டவைகளைக் கவிதைகள் என,று சொல்லும் போக்கு கவிதைகள் என்றாலே அலர்ஜியை உண்டாக்குகின்றன. மரபுக் கவிதைகளின் ரசிகன் நான். நசிகேத வெண்பா எப்படி இருக்கப் போகிறதோ. அது புரிந்துகொள்ளும் உரை நடை என்றால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.
https://nasivenba.blogspot.com/
நீக்கு(ஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி)
ஒரு சந்தேகம்... வெண்பா உங்கள் உபயமா இல்லை அரசன் அவர்களா? புத்தகமாக வெளியிட்டிருக்கிறீர்களா?
நீக்குஉங்கள் எழுத்துதான். வெண்பாவும் அருமை, எடுத்துக்கொண்ட சப்ஜெக்டும் அருமை. படிக்க ஆரம்பித்துவிட்டேன்.
நீக்குஎழுத்துக்கு ஒரு அர்த்தம் தேடியிருக்கிறீர்கள். சாதாரண கற்பனைக் கதைகள் பொழுதுபோக்க உபயோகப்படுபவை. அதுவும் தேவைதான் என்றாலும் எழுதியவனை நினைவுகூர உயர்ந்த எழுத்து தேவைப்படுகிறது.
Nachiketha Venba "Appaadurai"s masterpiece.
நீக்குபடிக்க ஆரம்பித்திருக்கிறேன். Brilliant. வெண்பா சூப்பராக இருக்கிறது. அதில் உபயோகித்திருக்கும் வார்த்தைகள் சூப்பர். மிகப் பெரிய உழைப்பு. பாராட்டுகள் அப்பாதுரை சார். புத்தகமாகப் போடவேண்டிய ஒன்று.
நீக்குமிக நன்றி.
நீக்குகேஜிஜியின் கோரஸ் பாடல்கள், ஹாஸ்டல் ஆண்டுவிழாவில் நான் பாடிய இறைவணக்கத்தை நினைவுபடுத்தியது. எனக்கே உள்ள குறும்பினால் இசைக்கோர்வை முடிவதற்குள் பாடலை ஆரம்பிப்பது, சட் என பாட ஆரம்பித்துவிடுவது என பின்னால் இசை போட்டுக்கொண்டிருந்த ஆசிரியரைத் திகைக்க வைத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅப்பாதுரை சார். மெத்தப்படித்தால் சித்தம் தெளியும் என்று நினைத்து எல்லாவற்றையும் படித்தபின் படித்தது அவன் செயல், படிக்கவைத்த பொருளும் அவன் செயல் என்ற வட்ட பாதையில் வருவதற்கு இசைபவர் சொற்பம்.
பதிலளிநீக்குஎ பி வாசகர்கள் யாவரும் முதிர்ந்தவர்கள். அவர்கள் எல்லா சப்ஜெக்ட்டிலும் அவர்களுக்கு பிடித்த ஒரு முடிவை மூன்றே கால் என்று முன்னரே முடிவெடுத்து வாதிப்பவர்கள். அவர்கள் இந்த தத்துவ ரீதியான தர்க்கத்திற்கு வருவார்கள் என்று தோன்றவில்லை.
ஓம் தத் சத்.
சிறிது காலத்திற்கு முன் இந்து ஆங்கில இதழ் நமது universe பற்றிய ஒரு படம் வெளியிட்டிருந்தது. அதன்படி universe அண்டம் (முட்டை) வடிவில் இருப்பதாக படம் இருந்தது. அப்போது எனக்கு தோன்றியது இந்த முட்டை எப்படி பூர்ணம் ஆகும். அது பறந்தவெளிக்குள்ளா இருக்கிறது? அந்தப் பறந்தவெளி என்ன? என்ற வட்டக் கேள்வி வந்தது.
https://www.thehindu.com/sci-tech/Image-of-entire-universe-released/article16186917.ece
எல்லாவற்றையும் நோக்கும்போது தற்போதைய குழப்ப குவாண்டம் தியரி மேல் என்று தோன்றுகிறது.
அப்படி உங்கள் அவன் செயலில் அவன் செயலாக நான் ஒரு புது தலைவலியையும் (அண்டம் பற்றிய ஆய்வு) புகுத்துகிறேன்.
Jayakumar
//தற்போதைய குழப்ப குவாண்டம் தியரி மேல் என்று தோன்றுகிறது.
நீக்குபயங்கரமான குழப்பமா இருக்கும் போலிருக்குதே?
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசகோ கீ.சா.அவர்களின் கேள்வி நான் கேட்டு பதில் பெற்றது போல் உணர்ந்தேன்.
பதிலளிநீக்குநெல்லையாரின் அனுபவம் எனக்கு சுதாகர் - ராதிகா நடித்த "கரும்பு வில்" படத்தை பாதியில் பார்த்து வெளிவந்த ஞாபகத்தை கொண்டு வந்தது.
நானொரு பொன்னோவியம் கண்டேன் இதிலே என்ற அருமையான பாடல் படத்தில் உள்ளது.
வெள்ளிக்கு ஸ்ரீராம்ஜி முயற்றிசிக்கலாமே...
நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் 'கண்ணில் தெரியும் கதைகள்' படம். ஐந்து இசைமைப்பாளர்கள். கரும்புவில் படத்தில் எனக்கு மூன்று பாடல்கள் பிடிக்கும். 1) மீன்கொடி தேரில் மன்மத ராஜன்' (யேசுதாஸ் வெர்ஷன்), 2) ஆசையை காத்துல தூது விட்டு, 3) மலர்களிலே ஆராதனை
நீக்கு//சகோ கீ.சா.அவர்களின் கேள்வி நான் கேட்டு பதில் பெற்றது போல் உணர்ந்தேன்.// எனக்கு பதிலில் திருப்தி இல்லை. அல்லது கேள்வியின் கனம் உணரப்படவில்லை. சாதாரணமான உதவி எல்லாம் இல்லை.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
பதிவு சிறப்பு..
பதிலளிநீக்குகலந்து கட்டி அடித்திருக்கின்றீர்கள்..
/// அப்பாதுரைப் பக்கம் டப்பாதுரை பக்கமாகி...///
பதிலளிநீக்குஇங்கே தான் நிற்கின்றார்!..
பதிலளிநீக்கு/// தமிழை பழைய பேப்பர் காரனுக்கு போடாதீர்கள்.. ///
தமிழ் இருந்த - அந்தக் காலத்துக்கு சரி..
இப்போது தான் இல்லையே!..
அதானே!
நீக்கு..அவனே பொறுப்பு என்ற உணர்வில் (அல்லது உணர்வில்லாமல்) ஏன் நம்மில் பலர் அறம் பிறழ்கிறோம்?//
பதிலளிநீக்குபிறழ்வதில் கவிழ்வதில் ஒரு த்ரில்..!
டீவீப் பொட்டி விளம்பரக் கூத்தாட்டங்களின் இடையே - உங்கள் - என்ற வார்த்தை
பதிலளிநீக்குஊங்கள் என்றும்
ஒங்கள் என்றும் சொல்லப்படுகின்ற அவலத்தைக் கேட்டதுண்டா!?..
இன்னொரு விளம்பரத்தில் - வார்த்தைகளுக்கு வலிப்பு வந்த மாதிரி -
கா ஆட்சி (காட்சி)
பி.. ற்ர்.. மாண்டம்.. மான
(பிரம்மாண்டமான)
கொழ்ழு (கொலு)
என்றெல்லாம்
உச்சரிக்கப்படுகின்றன..
காலக் கொடுமையடா கந்தசாமி..
அக்கிரமம்!
பதிலளிநீக்குதமிழ் வழக்கு நிறையவே மாறிவிட்டது. நான் இப்படிப் புலம்பினால் என் ஆந்திர நண்பரும் புலம்புகிறார் - தெலுங்கில் இந்தியும் ஆங்கிலமும் கலந்து மொழி அடையாளமே மாறிவிட்டதென்கிறார்.
பதிலளிநீக்கு// நாம் நம்மைப் பிறர் தவறாக எடுத்துக் கொள்வது பற்றி அதிகம் கவலைப் படாமல் இருப்பது நல்லது. அது தேவையற்றதும் கூட. //
பதிலளிநீக்குகைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ வுலகு
அ. ரை. பக்கம் :
பதிலளிநீக்கு// இந்த முரண் எப்படி சாத்தியம்? இந்த சிக்கலை எப்படி விடுவிப்பது? //
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு
அருமை.. அருமை..
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு/// பாலை வார்த்தாலும் பிஸ்கட் போட்டாலும் அவரவர் அவரவருடைய.. ///
பதிலளிநீக்குகுணோபேத அனுகூலங்களை ஏற்றுக் கொண்டே எறும்பு முதற் கொண்டு யானை ஈறாய எண்ணாயிரம் கோடி ஆன்மாக்களும் கருவினுள் பிரவேசிக்கின்றன..
இதில்,
வேம்பு இனிப்பதும் இல்லை!..
கரும்பு கசப்பதும் இல்லை!..
வேம்பின்புழு* வேம்பின்றி உண்ணாது,* அடியேன்-
நீக்குநான்பின்னும்* உன்சேவடியன்றி நயவேன்,*
தேம்பல் இளந்திங்கள்* சிறைவிடுத்து,* ஐவாய்ப்-
பாம்பின் அணைப்* பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ!
வேம்பின் புழு..
நீக்குஇன்றைய கேள்வி பதில் இன்றைய பதிவுகளுக்கு பொருத்தமாக இருக்கிறது. தேவகோட்டை ஜியும் ஒத்து கொண்டார்.
பதிலளிநீக்கு//நாம் நம்மைப் பிறர் தவறாக எடுத்துக் கொள்வது பற்றி அதிகம் கவலைப் படாமல் இருப்பது நல்லது. அது தேவையற்றதும் கூட.//
ஆமாம், மனது கேட்கிறதா! சிலநேரம் கவலை கொள்கிறது, நம்மை எப்படி அப்படி சொல்லலாம் என்றும் சொன்னால் சொல்லி விட்டு போகட்டும் கவலை இல்லை என்றும், நம்மை பொறுத்தவரை நான் சரியாக செய்து இருக்கிறேன் என்ற நினைப்பும் வருவது அப்போதைய மனநிலையை பொறுத்து அமைகிறது.
என் பதிவுக்கு நெல்லைத்தமிழன் அவர்கள் 'எல்லாம் அவன் செயல்.'
என்ற கருத்து சொல்லி இருக்கிறார். அது அப்பாதுரை சார் பதிவில் உள்ளது .
கருத்துரைக்கு நன்றி.
நீக்குKGG சார் ஆண்டுவிழாவில் நடந்ததை மிக அருமையாக சொல்லி இருக்கிறார்.
பதிலளிநீக்கு//நான் அபிநயம் செய்யும் ஆசிரியரைப் பார்த்து அவர் செய்தபடியே எல்லாம் செய்தேன்.//
சிறு வயதில் ஆசிரியர் சொன்னபடி செய்த காலம். இப்போது ஆசிரியர்கள் குழந்தைகளை அவர்களையே தயார் செய்து வர சொல்கிறார்கள். அவர்கள் பாட்டு டீச்சர், நடன ஆசிரியரிடம் படித்து கொண்டு போய் செய்கிறார்கள். சிலருக்கு அம்மா, அப்பா சொல்லி தருகிறார்கள்.
அப்பாதுரை சார் பக்கம் நிறைய சிந்திக்க வைக்கிறது. தேவகோட்டை ஜி இறைவனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்கிறார்.
ஆம். அந்தக் காலம் வேறு; இந்தக் காலம் வேறு.
நீக்குநெல்லைத்தமிழன் செய்த பட விமர்சனம் அந்த படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்கிறது.
பதிலளிநீக்குஎன் அப்பாவும் நல்ல படம் என்றால் அழைத்து போவார்கள்.
//ஜெயிலர் நான் இரண்டு முறை தியேட்டரில் பார்த்தேன். //
சில காட்சிகளை பார்க்கும் போது கண்களை மூடி கொண்டேன்.
எப்படி அதை இரண்டு முறை பார்த்தீர்கள்?
வீட்டில் பார்த்தலாவது அதை ஓட்டி பார்க்கலாம் மறுமுறை நீங்கள் தியேட்டரில் போய் பார்த்து இருக்கிறீர்கள்.
//போனின் மூலமாக நடந்த நிகழ்ச்சியை மாற்றி அமைக்கலாம் என்ற சிந்தனையையும் உபயோகித்திருக்கிறார்கள். //
நடந்த நிகழ்ச்சியை மாற்றி அமைக்கலாம் , அதை எப்படி மாற்றி அமைத்தார்கள் என்று பொறுமையாக பார்த்து வந்து இருக்கலாம்.
இப்படி தியேட்டரை விட்டு ஓட வைத்து விட்டார்களே!
/சில காட்சிகளை பார்க்கும் போது கண்களை மூடி கொண்டேன்.// - ஒருவேளை என் மனதில் கழுத்துவெட்டு சீன்களெல்லாம் உறைக்கவில்லையோ என்னவோ... அந்தப் படத்தை ரசிப்பதே நம் ஆழ்மனதின் குரூர எண்ணங்களை வெளிப்படுத்துகிறதோ?
நீக்கு/பொறுமையாக பார்த்து வந்து இருக்கலாம்.// - எனக்கு சத்தம் அதிகமாக இருந்தால் பிடிக்காது. இந்தப் படமோ செவித்திறன் அற்றவர்களுக்காக எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன். காட்சியின் நிறங்கள், நடிகர்கள் உடைகள், மாடுலேஷன் என்று எவ்வளவு நேரம்தான் கொடுமைகளைப் பொறுத்துக்கொள்வது? விஷால் மேக்கப், அவரை 50 வயது போலக் காட்டுகிறது. ஓசிக்கு எங்காவது வந்தால் (ஓடிடி), இடைவேளைக்கு அப்புறம் என்னத்தைத்தான் காட்டியிருக்காங்கன்னு பார்ப்பேன்.
:)))
நீக்குநல்லவேளையாக எனக்கு இந்தப் படங்களைப் பார்க்கும் ஆவல் அதிகமாய் இல்லை. தேர்ந்தெடுத்துத் தான் பார்ப்பேன். ஆர்.ஆர்.ஆர்., ராக்கெட்ரி,போன்ற சில படங்களே பாதி தான் பார்த்திருக்கேன். சீக்கிரம் பார்த்து முடிக்கணும். :)
பதிலளிநீக்குஆறாம் வகுப்பில் இருந்து தான் நான் ஆங்கிலம் படிக்க ஆரம்பிச்சேன். ஆகவே எங்களுக்கும் அப்போ ரைம்ஸ் உண்டு. விஷயம் என்னன்னா எங்க பள்ளியில் உள்ள குழந்தைகள் வகுப்பில் இதெல்லாம் நான்கு வயதுப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பாங்க. நாங்க ஆறாம் வகுப்பிலே சொன்னோம். என்னத்தைச் சொல்லுவது. அந்தச் சின்னக் குழந்தைங்கல்லாம் நாங்க ரைம்ஸ் சொல்லும்போது சிரிப்பாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குஆம், அதே.
நீக்குsweet and loe/sweet and loe/ wind of the western sea. father will come to his baby in the nest/அரைகுறையா நினைவிருக்கும் இந்த ரைம்ஸ் எனக்குப் பிடித்தது. இதுக்கு ஆக்ஷன் எல்லாம் பண்ணி இருக்கேன். கேஜிஜி அவர்கள் எல்லாம் நினைவில் வைச்சிருக்கறாப்போல் எனக்கும் நினைவுகள் வந்து வந்து போகின்றன.
பதிலளிநீக்குஅட! அப்படியா!
நீக்குநெல்லையின் பட விமரிசனம் படத்தைப் பார்க்காதே என்று சொல்லி விட்டது. நான் ஏதோ ஆங்கிலப் படம்னு நினைச்சிருந்தேன். ஜெயிலர் எல்லாம் இந்தியத் தொல்லைக்காட்சிகளில் முதல் முறையாப் போடும்போதே பார்க்க முடியுமானு தெரியலை. என்னத்தைச் சொல்ல! நேத்தித் தான் சொந்தம் ஒருத்தர் வியட்நாம் வீடு பத்திச் சொன்னாங்க. இஃகி,இஃகி, இஃகி, ஜிவாஜி பிறந்த நாளா அதான். வியட்நாம் வீடு படமே பார்க்கலைனு சொன்னதும் முதல்லே நம்பலை. அப்புறமா என்னை அடிக்காத குறைதான். :)))) அப்போ இருந்த குடும்ப நிலைமை அப்படி. :)
பதிலளிநீக்குவி வீடு படம் அந்தக் காலத்தில் ரசித்த அளவுக்கு இந்தக் காலத்தில் ரசிக்காது என்று நானும் நினைக்கிறேன்.
நீக்குஅப்படியா? எனக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. எப்போப் பார்த்திருந்தாலும் சிப்புச் சிப்பாய் வந்திருக்கும். அம்புடுதேன். ;) இப்போ யாரோ முகநூலில் "பாசமலர்" படம் பார்த்து ரசித்ததை எழுதி இருந்தாங்க. எல்லாம் அதே ஜிவாஜி பிறந்த நாளீல் தான். முன்னர் ரசித்ததை விட இப்போ இன்னும் ரசிக்க முடிஞ்சதாச் சொல்லி இருந்த நினைப்பு.
நீக்குஅப்பாதுரை ஸ்ரீராமாநுஜர் பற்றிப் படிச்சதை அதாவது அவர் எழுதியதைப் படிச்சுட்டு எழுதப் போகும் அனுபவத்துக்குக் காத்திருக்கேன். சுமார் பத்து வருஷங்கள் முன்னரே அவர் ஆன்மிகத்தின் இந்தப் பக்கத்தில் ஒரு மயிரிழையில் கழைக்கூத்தாடி போல் நடந்து கொண்டிருந்தார். இப்போ அந்தப் பக்கம் விழுந்துட்டார் என்றே நினைக்கிறேன். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபார்ப்போம்.
நீக்குCinepolis cine complex - நெல்லை அங்கு கண்ணூர் ஸ்க்வாட் ஓடுதா சொல்லுங்க கொஞ்சம்?!! ஆனா கொஞ்சம் தூரம்....
பதிலளிநீக்குஎனக்கு இந்தப் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை. எனக்குக் க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் படங்கள் ரொம்பப் பிடிக்கும். தியேட்டரில் பார்க்க வேண்டும். எனக்குக் கூட யாரும் இல்லைனாலும் தனியாகவும் கூடப் போய்விடுவேன். வீட்டில் அனுமதி முக்கால்வாசி கிடைச்சிருக்கு ஹாஹாஹாஹா...அதை விட்டுடுவமா!? அதான்..கருடா மாலில் மதியம் 12.35 ஷோ நாளை இருக்கு. அதுவும் தூரம்தான். கொஞ்சம். டிக்கெட் விலை அதென்னவோ மூன்று விலை போட்டிருக்கிறார்கள். 315 - நமக்குக் கட்டுப்பிடியாவாது. 190, 170 என்று க்ளாசிக், டீலக்ஸ் அப்படி இப்படின்னு...இங்கு தியேட்டர் பற்றி அதிகம் தெரியாது என்பதால்
கீதா
கீதா
பட விமர்சனம் கண்டேன். தப்பித்தேன். நன்றி
பதிலளிநீக்கு:)))
நீக்குநெல்லை ஜெயிலர் எப்படி ரெண்டு முறையா...ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ எனக்கு போஸ்டர், கதை வாசித்ததுமே பிடிக்கலை. இதைப் போய் கொண்டாடுறாங்களேன்னு நினைச்சேன். கதை நல்ல கதை ஆனால் எனக்கென்னவோ அதைச் சொன்ன விதம் சரியாகப் படலை. இன்னும் அழகா சொல்லிருக்கலாம். வயலென்சுக்குப் பதில் உணர்வு பூர்வமா சொல்லிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் இப்படி வெட்டுக் குத்து சப் கதைகள்தான் பார்வையாளர்களுக்குப் பிடிக்கிறது போலும்.
பதிலளிநீக்குகீதா
இதுக்கு உளவியல் ரீதியாகக் காரணம் உண்டா?/
பதிலளிநீக்குகீதாக்கா உண்டு உண்டு. நமக்குச் சின்ன வயதில் போடப்பட்டிருக்கும் ஸ்க்ரிப்ட் அதாவது மனதிற்குள் அதன் பின் அது எவால்வ் ஆகாமல் அதாவது அடல்ட் ஈகோவுக்கு வராமல் க்ரிட்டிக்கலாகவே அதுவும் நெகட்டிவ் க்ரிட்டிக்கலாக இருப்பது காரணம். ட்ரான்ஸ் அனலைஸஸ் என்று இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நிறைய இருக்கு. எனவே அவர்களைப் பத்திக் கவலைப்படாம நாம நம்ம அடல்ட் ஈகொவிலிருந்து யோசித்து எவால்வ் ஆகிட்டோம் என்றால் தப்பித்துவிடலாம். விலகி இருத்தல் மேல் அதாவது மனதளவில். ஒரு எல்லை வகுத்துக் கொண்டு. நமக்குத் தேவை இல்லாத இப்படியான விஷயங்களைத் தவிர்த்துக் கொண்டு.
கீதா
நமக்குத் தேவை இல்லைனு சொல்ல முடியாதே தி/கீதா! நாம தான் அவங்களூக்காகப் பாடுபட்டிருப்போம். அதையே நினைக்காமல் இல்லைனு சொன்னால்?
நீக்கு# ஆசிரியர் சொல்லியிருப்பதை டிட்டோ செய்கிறேன். இதுதான் அடல்ட் ஈகோ.
பதிலளிநீக்குகீதா
மற்றொன்று ஒரு இடம் துர்நாற்றம் அடிக்கிறது என்றால் - நம் வீடு என்றால் நாம் அதைச் சுத்தப்படுத்திவிடலாம். அதே சமயம் பொது இடத்தில் நாம் சுத்தம் செய்ய முடியாத நிலையில் நாம் விலகி இருப்போம் இல்லையா அப்படித்தான் யாரையும் நாம் திருத்த முடியாது, நம்மை நாம் மாற்றிக் கொள்ளலாம் இல்லையா...விலகி இருக்கலாம்
நீக்குகீதா
சரியான கருத்து.
நீக்குஏல்லாரையும் திருத்த முடியாது தான். ஆனால் விலகி இருந்தாலும் தேடி வந்து கிண்டலும் கேலியும் செய்து நம்மைத் துன்பப் படுத்தும்போது? வாய் திறவாமல் இருந்தாலும் விட மாட்டாங்க.
நீக்குகௌ அண்ணா - உங்கள் அனுபவங்கள் சூப்பர். ஆண்டு விழா, பரிசுகள் என்று...
பதிலளிநீக்குஎனக்கு என் பள்ளி, கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது. கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, நாடகம், பேச்சுப் போட்டி பாட்டு, நடனம் (எப்பவுமே ஆண் வேடம்தான்...நாடகத்திலும் சரி நடனத்திலும் சரி!!!!!) என்று பரிசுகள் எல்லாம் நிறைய....மாவட்ட அளவிலும்....
அத்தனையும் ஒரு நாளில், ஒரே நாளில் அப்படியே தலைகீழாகிவிட்டது. ...விவேக்கின் வசனம் அடிக்கடி நினைவுக்கு வரும்.
கீதா
:((
நீக்கு@ அன்பின் நெல்லை..
பதிலளிநீக்கு/// வேம்பின்புழு* வேம்பின்றி உண்ணாது,.. ///
கண்கள் கலங்கி விட்டன..
அதுவும் அவனருள்..
விதித்ததும் அவன் தானே!..
இந்த சினி காம்ளக்ஸில், நான் பார்த்த ஒரு வித்தியாசம் என்னன்னா, இணையத்துல எந்த நேர ஷோவுக்கு என்ன ticket price என்று பார்த்தால் price வித்தியாசம் இருக்கிறது. காலை 9-10:30 ஷோக்கள், வார நாட்களில் 112-120 ரூபாய் இருந்தால், மதியம் மற்றும் இரவு 9 மணிக் காட்சி 150-200 இருக்கும். வார இறுதியில் அதே படம் 180-200 ரூபாய் இருக்கும்.//
பதிலளிநீக்குஆமாம் அப்படித்தான் தெரியுது.
நெல்லை எப்படி அந்தப் படம் ஆ பெயர் வர மாட்டேங்குதே அந்த சூர்யா ஜெ படம்....அந்தக் கதையும் என்னை ஈர்க்கவில்லை. ஆனால் சூர்யா நன்றாக நடிப்பார். இப்போது அவரது நடிப்பு முன்னைவிட மெச்சூர் ஆகியிருக்கு..... எதோ ஒரு க்ளிப்பிங்க் பார்த்தேன். என்ன என்று நினைவில்லை.
ஆனால் ஒவ்வொருவரின் ரசனையும் ஒவ்வொரு மாதிரி ஸோ ...நான் குற்றம் சொல்லமாட்டேன். தப்பாவும் சொல்லலை! ஹிஹிஹி
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎல்லாம் அவன் செயல்...என்று சொல்வது என்னை ரொம்ப யோசிக்க வைக்கும். கொலை கொள்ளை குற்றங்களும் அவன் நடத்தி வைப்பதா....அப்பாதுரை ஜி யின் முதல் பகுதிகளில் சொல்லப்பட்டதைத்தான் ரிப்பீட்டு இங்கு
பதிலளிநீக்குஇப்ப அப்பீட்டு.
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குசின்ன வயசில் கடவுளைக் கும்பிடும்போது பெரியவங்க பயம் காட்டி பக்தியை வளர்த்தாங்களா? நீங்க பயந்திருக்கீங்களா?
பதிலளிநீக்குபதில் அளிப்போம்.
நீக்குஎல்லாம் அவன் செயல் என்பது தப்பித்தலா? அல்லது பக்தியின் எல்லையா?
பதிலளிநீக்குபதில் அளிப்போம்.
நீக்குKgg ஆண்டு விழா சுவாரசியம்.
பதிலளிநீக்குபடங்கள் தெரிந்தெடுத்து பார்க்க வேண்டிய காலமாகி விட்டது .
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு