=========================================================================================================
=================================================================================================
சுஜாதா முன்னுரை
நண்பர்
தேசிகன்
என்
தீவிர
வாசகர்,
ரசிகர்.
அவர்
குடும்பத்தினர் அனைவரும் என் கதைகளை விரும்பி வாசிப்பவர்கள். தேசிகன் என் கதைகளில் ஒரு ‘அத்தாரிட்டி’ என்று கூட சொல்லலாம். பல சமயங்களில் நான் எழுதிய கதைகளைப் பற்றிய சந்தேகங்களை நானே அவரிடம் கேட்பேன். இந்த வருஷத்தில் இன்ன பத்திரிகையில் எழுதியது என்று தெளிவாகத் தகவல் கொடுப்பார். மேலும் நான் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் என்னிடம் இல்லை. தேசிகனிடம் இருக்கிறது. புத்தக வடிவில் இன்னும் வராத கட்டுரைகள் கூட வைத்திருக்கிறார்.
ஓர்
எழுத்தாளனுக்கு இவ்வகையிலான வாசகர்கள் அமைவது ஒரு அதிர்ஷ்டமே. தேசிகன் நல்ல வாசகர் மட்டும் அல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல கணிப்பொறி மென்பொருளாளர், நல்ல நண்பர், எல்லாமே.
தேசிகனின்
வலைப்பக்கத்திற்கு விஜயம் செய்யும் அன்பர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றி.
சுஜாதா
சென்னை
26/5/2001
நான் படிச்ச கதை
(JK)
https://sujathadesikan.blogspot.com/
இவ்வலைப்பக்கத்தை எங்கள் ப்ளோகில் சைடு பாரில் சேர்க்க பரிந்துரை செய்கிறேன்.
திருச்சி, சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களில் வசித்தவர். புனை பெயர் சுஜாதா தேசிகன். இயற்பெயர் தேசிகன்; தேசிகன் நாராயணன். தற்போது பெங்களூரில் வாசம். தீவிர வைணவர். வைணவம் பற்றியும் பிரபந்தம் பற்றியும் நூல்கள் எழுதியிருக்கிறார். சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீரங்கத்து தேவதைகள் இவர் தொகுத்தது. சொல்வனம் போன்ற மின்னிதழ்களிலும் கல்கி, குங்குமம் போன்ற அச்சிதழ்களிலும் இவரது கதைகள், கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.
தற்செயல் என்ற இக்கதை குங்குமம் இதழில் பிரசுரிக்கப்பட்ட ஒன்று. Sirukathaigal.com தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
‘‘விதி வலியது… வாழ்க்கையில் எல்லா சம்பவங்களும் முன்பே தீர்மானிக்கப்பட்டது.” இதுவே இக்கதையின் கருப்பொருள்.
ஜோதிடம் கைரேகை மூலம் விதியை அறிய முடியுமா அல்லது விதி என்பது வெறும் தற்செயலா, என்பதை கதை மூலம் விளக்க முற்பட்டுள்ளார் ஆசிரியர். நண்பன் சொன்னது என்று கதை விடுகிறார்.
நான் படிச்ச கதை
(JK)
தற்செயல்
கதையாசிரியர்: சுஜாதா தேசிகன்
என் நண்பருடைய கதையைக் கேட்டபோது, ‘‘வாட் எ கோயின்சிடன்ஸ்!’’ என்றேன். கோயின்சிடன்ஸ் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தற்செயல், யதேச்சை… இதெல்லாம் எதற்கு? விஷயத்துக்கு வருகிறேன்.
‘எல்லோரிடமும் ஒரு நல்ல கதை இருக்கு’ என்று எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லுவார்களே… அது போல் இருந்தது இந்தக் கதை. எழுதினால் ‘சும்மா கதை விடாதே’ என்று விமர்சிப்பீர்கள். இந்தக் கதையும் அப்படித்தான்! இருந்தாலும் சொல்லி விடுகிறேன்.
‘‘தம்பி, அம்மாக்கு உடம்பு சுகமில்லை… நீ வெள்ளனே கிளம்பி வா ராசா’’ என்று பக்கத்து வீட்டு ஆச்சி போன் செய்த பிறகு எதுவும் செய்யத் தோன்றவில்லை.
‘‘உடனே வர முடியாதே… அடுத்த வாரம் நீச்சல் போட்டி இருக்கு!’’
‘‘உடனே உன்னைப் பார்க்கணும்னு சொல்லுதே!’’
ஆச்சி குரலில் அவசரத்தை உணர முடிந்தது. அன்று இரவு ரயிலிலேயே டிக்கெட். படுக்க இடம் கிடைத்தாலும் தூக்கம் வரவில்லை. வேண்டாத நினைவுகள். அம்மாவிற்கு கடைசி ஆசை என்று எதுவும் இல்லை. ஆனால் நான் நீச்சல் அடிக்கக் கூடாது என்பதுதான் அம்மாவின் நீண்ட நாள் ஆசை. பொங்கலுக்கு ஊருக்குப் போனபோது ‘‘எனக்கு வாக்கு கொடு’’ என்று அம்மா ரயில் ஏறும் வரை அடம் பிடித்தாள். நீச்சல் சாம்பியன் எப்படி நீச்சல் அடிக்காமல் இருக்க முடியும்? இந்த முறை ஊர் ஆற்றில் நீச்சல் அடித்துக் காண்பிக்க வேண்டும்.
அப்பா அந்த ஆற்றில்தான் நீந்தப் போய் இறந்து போனார். அந்த நிகழ்வு எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது.
பதினான்கு வயதில் மஞ்சள் காமாலை வந்தது. பக்கத்து வீட்டு ஆச்சிதான், ‘‘கண் மஞ்சளா இருக்கு… மூத்திரத்தில சோத்தைப் போட்டு பாரு’’ என்று அம்மாவிடம் சொன்னாள். சோறும் லால்குடி ஆஸ்பத்திரியில் டாக்டரும் மஞ்சள் காமாலை என்று உறுதி செய்து விட்டார்கள். அப்பாவுக்குக் காட்டூர் பக்கம் சர்க்கரை ஆலையில சூப்பர்வைசர் வேலை. மாலையில் வீடு வந்தபோது என்னைப் பார்த்து மிரண்டு போய், ‘‘என்னடா… மூஞ்சி எல்லாம் விபூதி?’’ என்று கேட்டார்.
‘‘திரௌபதியம்மன் கோயிலுக்குப் போய் விட்டு வந்தேன்… புள்ளைக்கு மஞ்சள் காமாலையாங்க!’’
‘‘எங்கடா… கண்ணைக் காமி! ஆமா, கண் பூரா மஞ்சளா இருக்கே!’’ ‘கீழாநெல்லி அரைச்சுக் குடு’, ‘பத்தியச் சாப்பாடு போடு’, ‘இளநீர் நெறைய குடிக்கக் குடு’ என்று தெரு டாக்டர்கள் பலரும் அறிவுரை கூறினார்கள். அந்தக் கூட்டத்தில் யாரோ, ‘‘பொன்மலைப் பக்கம் கஷாயம் தராங்க. அஞ்சே நாள் சாப்பிட்டா சரியாயிடுமாம்’’ என்று சொல்ல, அப்பா ஆபீஸுக்கு பர்மிஷன் போட்டுவிட்டு என்னை தினமும் காலை லால்குடி பாசஞ்சரில் அழைத்துக்கொண்டு போனார்.
வெள்ளை தாடி வைத்துக்கொண்டு ஒரு பெரியவர் தினமும் கசப்பாகக் கஷாயம் தந்தார். கண்ணை மூடிக்கொண்டு ஏதோ மந்திரம் சொல்லிக்கொண்டே விபூதி இட்டுவிட்டு, பச்சை கலர் புளிப்பு மிட்டாய் தருவார். ஐந்தாம் நாள் ரயிலில் போகும்போது நாங்கள் ஏறிய ரயில் பெட்டியில் அழுக்கான சாமியார் ஒருவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். நெற்றி முழுவதும் திருநீறு; வியர்வையில் நடுவில் இருந்த பெரிய குங்குமப் பொட்டு மூக்கு மேல் வழிந்து இருந்தது. நாய் அருகே போனால் சூடாக ஒரு வாசனை வருமே… அதேபோல் அவரிடமிருந்தும் ஒருவிதமான வாசனை வந்தது. அவரைப் பார்க்கக் கூடாது என்று உள்மனம் சொன்னாலும், கண் அவரைப் பார்த்தது.
சிரித்தார்.
அப்பா கண்டுகொள்ளவில்லை, ஆனால் சாமியார் சிரித்துக் கொண்டு இருந்தார். பல் இடுக்குகள் எல்லாம் சிவப்பாகக் கறை படிந்து இருந்தது.
அப்பா இப்பொழுதும் அவரைக் கண்டுகொள்ளாமல் தன்னிடம் இருந்த பெட்ரண்ட் ரஸ்ஸல் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் எங்களையே பார்த்துக்கொண்டு இருந்தார்.
அப்பாவிடம் திடீரென்று, ‘‘கையை நீட்டு’’ என்றார்.
அப்பா அவரைப் பார்த்து விட்டு, மீண்டும் புத்தகத்திற்குள் போனார்.
‘‘சொல்றேன் இல்ல… கையை நீட்டு!’’
‘‘எதுக்கு?’’
‘‘நீட்டு! குறி சொல்லணும்…’’
‘‘என்கிட்ட காசு இல்லை!’’
‘‘உன் காசு யாருக்கு வேணும்? கையை நீட்டு!’’
‘‘வேண்டாம் சாமி… நம்பிக்கை இல்லை!’’
‘‘நீ படிக்கற புத்தகத்தைப் பார்த்தாலே தெரியுதே… கையைக் காமி!’’ – அவரது குரல் ஆணை போல் இருந்தது.
‘‘ஐயா, எனக்கு நம்பிக்கை இல்லை என்றால் விட்டுடுங்களேன்…’’
‘‘விதி வலியது… வாழ்க்கையில் எல்லா சம்பவங்களும் முன்பே தீர்மானிக்கப்பட்டது. கையை நீட்டு!’’
எனக்கு பயமாக இருந்தது.
‘‘எல்லாம் கட்டுக்கதை’’ என்றார் அப்பா.
‘‘சத்யம் சிவம் சுந்தரம்… உண்மை, நன்மை, அழகு… நம்பிக்கை இல்லை என்றால் இது எல்லாம் கிடையாது!’’
அப்பா பேசாமல் இருந்தார்.
‘‘மனிதனுக்கு மட்டும்தான் நம்பிக்கை இருக்கிறது. மிருகங்களுக்குக் கிடையாது! கெட்டவன், நல்லவன் எல்லாம் நம்பிக்கையினால் வருவது… சரி, உன் கையை நீட்டு!’’
அப்பா கையை நீட்ட, அதையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, ஜன்னல் வழியே ஒரு தொலைதூரப் பார்வையும், பெருமூச்சும் விட்டார். ‘‘எட்டாம் வீடு… கண்டங்கள் நிறைந்தது… உன் பிறந்த தேதி?’’
அப்பா சொன்னார்.
‘‘உன் மரணம் தண்ணீரில்தான் நிகழும். உன் குடும்பத்திற்கே தண்ணீர் கண்டம் உண்டு… விதி வலியது… ஒன்றும் செய்ய முடியாது!’’
‘‘எனக்கு நீச்சல் நல்லாத் தெரியும். தினமும் ஆத்துத் தண்ணிலதான் குளிக்கறேன்… இவனும் நல்லா நீச்சல் அடிப்பான்… சுத்த பைத்தியக்காரத்தனம்!’’
‘‘உனக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்திருக்குமே?’’ – அவர் கேட்டவுடன் அப்பா அமைதியாகி விட்டார்.
‘‘ஆமாம், ஒரு வயசுல செத்துப் போச்சு!’’
‘‘எப்படி இறந்தது?’
‘‘டீஹைட்ரேஷன்!’’
‘‘நீரகற்றம்… பாருங்க, நீர் சம்பந்தமானது…’’
‘‘தற்செயல்!’’
பெருமூச்சு ஒன்றை விட்டு, பெரியவர் கண்களை மூடிக் கொண்டார்.
பொன்மலையிலிருந்து திரும்ப வரும்போது அப்பாவிடம், ‘அந்தப் பெரியவர் சொன்னது உண்மையா’ என்று கேட்டேன்.
‘‘எல்லாம் பொய்… இதெல்லாம் ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் பைத்தியங்கள்!’’ என்றார்.
‘‘எனக்கு முன்னால ஒரு பாப்பா செத்துப் போனதை சரியாச் சொன்னாரேப்பா… எதுக்கும் ஆத்துப் பக்கம் கொஞ்ச நாளைக்கு போக வேண்டாம்பா!’’
‘‘இதெல்லாம் தற்செயல்டா… பெரியவன் ஆனா உனக்கே புரியும்… அறிவியலில் நீயே படிப்ப… இப்ப பாரு, இங்கே தண்ணி ஓடுது; முழங்கால் அளவுதான் இருக்கு. அதில குளிச்சுட்டு வரேன்’’ என்று உள்ளே இறங்கியவர் வெளியே வரவில்லை. இறந்து போயிருந்தார்.
ஒரு வாரம் கழித்து அம்மாவிடம், ரயிலில் நடந்ததை எல்லாம் சொன்னேன். அம்மா பயந்துவிட்டாள். திரௌபதியம்மன் கோயில் பூசாரியிடம் சொல்ல, பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்று அவர் ஐந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு, தாயத்து ஒன்று தந்தார்.
சில மாதங்களுக்குப் பின் ஆடி மாதம் கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் வர, ‘‘வாடா… ஒண்ணும் ஆகாது’’ என்று நண்பர்கள் தைரியம் கொடுக்க, திரும்பவும் நீச்சல் அடிக்க ஆரம்பித்தேன். ஆனால் அம்மாதான், ‘‘தண்ணிகிட்ட போகாதடா’’ என்று மன்றாடிக்கொண்டே இருந்தாள். ஸ்கூல், காலேஜ் என்று நீச்சல் போட்டிகளில் எல்லாம் பரிசு வாங்கினேன். பரிசைக் காட்டும்போதெல்லாம் அம்மா பீதியானாள். மாவட்ட அளவில் நான்தான் முதல் இடம். படிப்பு முடித்தபின் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வங்கியில் வேலை கிடைக்கக் காரணமாக இருந்ததும் அந்த நீச்சல்தான்!
ஆனால் ஊருக்குப் போகும்போதெல்லாம் அம்மா, ‘‘நீச்சல் மட்டும் வேண்டாம் ராசா! எனக்கு பயமா இருக்கு’’ என்று புலம்பிக் கொண்டே இருப்பாள்.
‘‘நீச்சலுக்குதான்மா வேலையே… அடுத்த தடவை வரும்போது ஆத்துல அடிச்சுக் காமிக்கிறேன். நீயே பாரு, எப்படி அடிக்கிறேன் என்று!’’
ஆனால் அம்மாவுக்கு அதற்குள் உடம்புக்கு முடியாமல் போய் விட்டது. திருச்சிக்கு அழைத்துப் போய் பெரிய டாக்டர்களிடம் காண்பித்தேன். நரம்பு தொடர்பான ஏதோ ஒரு நோய் பெயரைச் சொன்னார்கள். எல்லாமே படுத்த இடத்தில்தான்.
ஆச்சி போனுக்குப் பிறகு ஊருக்குச் சென்றபோது அம்மா அப்படியே படுத்துக் கொண்டிருந்தாள்.
‘‘உன்னைப் பாக்கணும் போல இருந்தது ராசா’’ என்றாள்.
‘‘எப்படிம்மா இருக்கே?’’ – கையைப் பிடித்துக் கொண்டு கேட்டேன்.
‘‘என்னய்யா செய்யறது? படுக்கையில்தான் எல்லாமே… நீச்சல் மட்டும் அடிக்காதே. அந்தப் பெரியவர் சரியாதான் சொல்லியிருப்பார்!’’
டீ போட்டுக் குடித்துவிட்டு அம்மாவிற்கும் கொஞ்சம் கொடுத்தேன். திரும்பவும் நீச்சல் பேச்சு எடுத்தாள்.
‘‘அட, அதை எல்லாம் நம்பாதே… இரு, வெளியே போய்விட்டு வருகிறேன்’’ என்று அடுத்த வார நீச்சல் போட்டிக்கு பயிற்சி எடுக்க ஆற்றில் நீச்சல் அடிக்கக் கிளம்பினேன்.
‘‘ரொம்ப கத்தினாப்பா… வந்துடுவான்னு சொன்னாலும் கேக்கலை. லொக்கு லொக்குன்னு நிக்காம இருமல்… நான்தான் கொஞ்சம் தண்ணி குடுத்தேன்’’ – அழுகையோடு சொன்னாள் ஆச்சி.
– ஜனவரி 2014
இலவச இணைப்பு.
விதியின் விளையாட்டு : ஓர் சின்ன கதை முக நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
விதியை தர்ம பத்தினியாலும் வெல்ல முடியாது! நீதிக்கதைகள் …
மகரிஷி தன்ரீகரின் மனைவி பூந்ததி, கணவர் மீது பக்தி கொண்டவள்.
அதிகாலை எழுந்ததும் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவாள்.
ஒரு நாள் கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கியவள், தற்செயலாகத் திரும்பினாள்.
முனிவர் தன்ரீகர் நிம்மதியாகப் படுத்துக் கிடக்க…
அவரது நிழல் மட்டும் அரையடி தள்ளி இருப்பதைப் பார்த்தாள். தன் கணவருக்கு ஏதோ விபரீதம் நிகழப் போகிறது என்பது புரிந்து கலவரப்பட்டாள்.
இதைத் தடுக்க வேண்டும் என்ற ஆவேசத்துடன் எழுந்து அகல் விளக்கை நன்கு தூண்டி எரிய விட்டாள்.
குளித்து விட்டு சாணத்தைக் கரைத்துத் தெளித்தாள். கோலம் போட்டாள்.
கண் விழித்ததும் மகரிஷி தன்ரீகர் ஆற்றங்கரைக்கு நீராடக் கிளம்பினார்.
வாசலைத் தாண்ட முற்பட்ட போது, அவர் முன் வந்து நின்ற பூந்ததி, ‘‘ஸ்வாமி! இன்று நான் விரதம் அனுஷ்டிக்கிறேன். சூரியன் மறையும் வரை தாங்கள் வெளியில் வராமல் இருக்க வேண்டும்!’’ என்றாள் கண்ணீருடன்.
‘‘நீ விரதம் இருப்பதற்கும் நான் வெளியே செல்லாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?’’
‘‘ஸ்வாமி… விளக்கம் கேட்காதீர்கள்!
இன்று மாலை வரை குடிலை விட்டு வெளியே வராதீர்கள்.’’ _ கண்ணீரும் கம்பலையுமாக அவள் பேசிய விதம் மகரிஷி யின் மனதை இளக வைத்தது. உள்ளே சென்று, யோசனையுடன் அமர்ந்தவர், விலகியிருக்கும் தனது நிழலைக் கண்டார்.
உடனே, ‘பூந்ததி விதியுடன் போராடத் துணிந்து விட்டாள்’ என்பது புரிந்தது.
புன் முறுவலுடன் வேடிக்கை பார்க்கத் தீர்மானித்தார்.
ஆற்றங்கரையில் காத்துக் கொண்டிருந்த எமதூதர்கள் தன்ரீகர் வராததால் ஏமாற்றமடைந்து குடிலை நோக்கி வந்தனர்.
குடிலை நெருங்கப் போனவர்களை அக்னிப்பிழம்பு எரித்தது.
‘‘மகா பத்தினி பூந்ததி தன் கற்பின் மீது சத்தியம் செய்து என்னைக் காவலாக நிறுத்தியிருக்கிறாள். எமதர்மனே வந்தாலும் உள்ளே போக முடியாது!’’ என்று அக்னி பகவான் எச்சரித்தார்.
மிரண்டு போன எமதூதர்கள் எமனிடம் விஷயத்தைத் தெரிவிக்க விரைந்தனர். குடிலின் வாசலுக்கு எதிரே தீவிரமாக பூஜை செய்து கொண்டிருந்தாள் பூந்ததி. பக்கத்து மரக்கிளையில் வெகு நேரமாக ஒற்றைக் காகம் கரைந்து கொண்டே இருந்தது. நேரம் செல்லச் செல்ல அந்தக் காகம் பூந்ததிக்கு அருகில் வந்து கரைந்தது. பூஜை தடைபடக் கூடாது என்று கருதி, பூந்ததி கண்களை மூடிய வண்ணம் மந்திரங்களை ஓதினாள். திடீரென காகம் கரைவதை நிறுத்தியது. நிசப்தம் நிலவியதும் கண்களைத் திறந்தாள் பூந்ததி. இறைவனுக்குப் படைக்க இருந்த பிரசாதத்தை காகம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைக் கண்டு கோபமான பூந்ததி, அங்கிருந்த மரக் கிளையை ஒடித்து காகத்தை விரட்டினாள்.
காகம் தள்ளிப் போனது. பூந்ததி சற்று நகர்ந்து விரட்டினாள். மீண்டும் தள்ளிப் போனது.
இப்படியாகக் காகத்தை விரட்டிக்கொண்டே குடில் அமைந்த நந்தவனத்தை விட்டே வெளியே வந்தாள். இதுவரை விலகிப் போன காகம், அவளது காலடியில் அமர்ந்து எமதர்மராஜனாக உருமாறியது.
‘‘தாயே… மன்னியுங்கள்!
குடில் அருகே நீங்கள் இருந்தால், என் கடமையை செய்ய முடியாது.
விதிப் படி எல்லாம் நடக்க வேண்டும் என்பதை அறிய மாட்டீர்களா?’’ என்றான் எமதர்மராஜன்.
‘கணவரின் உயிரைக் காக்க இயலாத ஒரு பெண் உயிரோடு இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது’ என்று, கிணற்றில் குதித்தாள் பூந்ததி.
எமதர்மன் பின் தொடர்ந்து வந்து கிணற்றில் எட்டிப் பார்த்தான். ‘பூந்ததியின் ஆயுள் இன்னமும் முடியவில்லையே?’ என்று அவன் யோசித்தபோது… கிணற்றிலிருந்து காகமாக மாறி மேலே பறந்து வந்தாள் பூந்ததி.
‘‘தாயே! எங்கெங்கு நான் உயிர் எடுக்கப் போகிறேனோ… அங்கெல்லாம் காகம் உருவில் சென்று எச்சரியுங்கள்! இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய உணவு உண்டு அவரவர்க்கு சமர்ப்பணம் செய்யுங்கள்!’’ என்று பூந்ததியிடம் கேட்டுக் கொண்டான் எமதர்மராஜன்.
அதன்படி காகத்தின் வடிவில் இன்றும் மரணத்தை எச்சரித்துக் கொண்டும், இறந்தவரின் ஆன்மா சாந்திக்காக உணவு உண்டும் இருந்து வருகிறாள் பூந்ததி!
நன்றி : அஸ்ட்ரோ வெ.பழனியப்பன்
நிகழ்கால கதையும், புராண கதையும் ஒன்றி வருவது சிறப்பு.
பதிலளிநீக்குசுஜாதாவிற்கு என்ன தலையெழுத்தோ தேசிகனை இந்த அளவிற்கு உயர்த்திச் சொல்லியிருக்கிறார்? தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட சுஜாதாவின் எழுத்தை இம்மி பிசகாமல் விவரிக்க எத்தனையோ ரசிகர்கள். சுஜாதா டைட்டர்ஸ் குழு என்று ஃபேஸ் புக்கில் இருக்கிறது. சுஜாதா வாசகர்கள் திறமையை அங்கு வாசித்துப் பார்த்தால் அசந்து போகணும். சுஜாதா விஷயத்தில் நம்ம ஸ்ரீராம் அளவுக்குக் கூட இவர் தேறமாட்டார் என்பது என் கணிப்பு. சுஜாதாவுக்கு உடம்புக்கு முடியாத பொழுது கூட மாட உதவியாளர் போல ஒத்தாசையாக இருந்திருக்கார் என்று தெரிகிறது. பேனா பிடிச்சவன் கையால் சும்மா இருக்க முடியாது. சுஜாதா இல்லாத நேரத்தில் சுஜாதா வாரிசாய் ஜொலித்திருக்க வேண்டும், இல்லையா?
பதிலளிநீக்குஆளையே காணுமே!
ஜீவி சார்.... சுஜாதா தேசிகனை குரல் மூலம் நான் அறிவேன். எழுத எழுத எழுத்து பழகி மிகச் சிறப்பாக ஆன்மீக விஷயங்களை எழுதுபவர்.
நீக்குசுஜாதா தேசிகன் ஆன்மீக சம்பந்தப்பட்டது, அதிலும் வைணவம் சம்பந்தப்பட்டது மாத்திரமே எழுதுகிறார். (ஆனால் அவர் சிறந்த பேச்சுத்திறமை கொண்டவர் அல்லர்). தான் பிரித்தெழுதிய பிரபந்தத்தை, தன் காலத்திற்குப் பிறகு மேலும் கொண்டுசெல்ல வேண்டும் என்று பிரபல எழுத்தாளர் அகஸ்தியன், இவரைத் தேர்ந்தெடுத்துத் தன் படைப்பை இவரிடம் கொடுத்தார்)
இவரின் தளம் வேறு. டி எம் எஸ், எம் எஸ் வி ரசிகர்கள் பலர் இருந்தாலும் அவர்களே, இவர்தான் என் முதன்மை ரசிகர் என ஒருவரை உயர்த்தினால் அதனைக் கேள்வி கேட்க நாம் யார்?
இவர், சுஹா என்ற எழுத்தாளர் (நெல்லை கண்ணன் அவர்கள் புதல்வர்) போன்றவர்களின் எழுத்து மிக மிக நன்றாக இருக்கும். அதற்காக சுஜாதா போல் பல்வேறு தளங்களில் (ஜோனர்) எழுதுவதில்லை.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
விதிவலியது சுமார். புராணக்கதை பகிர்வு நன்று.
பதிலளிநீக்கு//உன் மரணம் தண்ணீரில்தான் நிகழும். உன் குடும்பத்திற்கே தண்ணீர் கண்டம் உண்டு… விதி வலியது… ஒன்றும் செய்ய முடியாது!’’//
பதிலளிநீக்குஜோதிடர்கள் தண்ணீரில் கண்டம் இருக்கிறது என்று மட்டும் சொல்வார்கள் . சித்தர் என்பதால் அப்படியே சொல்லி விட்டார் போலும்.
புராணக்கதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
மிக நல்ல பாசிட்டிவ் செய்தி.
பதிலளிநீக்குகீதா
சுஜாதா தேசிகன் அவர்களின் தளத்தை அவ்வப்போது வாசிப்பதுண்டு.
பதிலளிநீக்குசுஜாதா தேசிகனின் இக்கதை ஜஸ்ட் ஒரு நிகழ்வைச் சொல்லிச் செல்வது போல இருக்கு.
இலவச இணைப்புக் கதை புதிது, இதுவரை அறிந்ததில்லை.
கீதா
ஜெ கே அண்ணா, இன்றைய கதைக்குப் பொருத்தமான ஒரு புராணக் கதையை பகிர்ந்திருப்பதிலிருந்து தெரிவது, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமாகப் பகிர்கிறார். உழைப்பு, தேடல் என்று வித்தியாசமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் படிச்ச கதை!!
பதிலளிநீக்குபாராட்டுகள் ஜெ கே அண்ணா.
கீதா
வருகை புரிந்தோர்க்கும் கருத்துக்கள் கூறியவருக்கும் நன்றி கூறுகிறேன்.
பதிலளிநீக்குJayakumar
செய்தியும் கதையும் அருமை...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு