======================================================================================================
நான்
பிடிச்ச கதை (JKC)
முன்னுரை
வழக்கம் போல அழியா சுடர்கள் தளத்தில் படைப்பாசிரியர் பட்டியலை ஆராய்ந்த போது பவா செல்லதுரை என்ற பெயர் கண்ணில் பட்டது. அவர் பிக் பாஸ் 7 என்ற ஆடம்பர சிறையில் இருக்க, விரும்பிச் சென்று வெறுப்புடன் ஒரு வாரத்துக்குள் வெளியேறியவர் என்ற தகவலையும் அறிந்தேன்.
பவா செல்லத்துரை எழுதிய நான்கு சிறுகதைகள் அழியா சுடரில் இருந்தன. இரண்டு இவ்வார நான் படிச்ச கதை பகுதியில் இடம் பெறுகின்றன. ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை,’ ‘ஏழுமலை ஜமா’ ஆகிய இரண்டு.
இரண்டு கதைகளும் மொழி, வட்டார வழக்கு, கரு, நடை, சொல்லும் முறை ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை. முதல் கதை நேர்கோட்டில் மூன்றாம் மனிதரின் பார்வையில் சொல்லப்படுகிறது. இரண்டாவது கதையும் மூன்றாம் மனிதரின் பார்வையில் தான் என்றாலும் ஒரு சினிமா போல் நடுவில் துவங்கி பிளாஷ் பாக் போய் முன் பகுதியை விவரித்து முடிவை நோக்கி செல்கிறது. ஆனால் நான் கதையை நேராக்கி சுருக்கத்தை எழுதியிருக்கிறேன்.
ஆசிரியர் ஜெயமோகனின் நண்பர். கிட்டத்தட்ட அவருடைய நடையில் எழுதியிருக்கிறார். வார்த்தை சிக்கனம் இல்லை.
‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’யின் முக்கிய கரு anxiety, என்ன நடக்குமோ என்ற பரிதவிப்பு. ஒரு விபரீத குறிச் சொல் (அருள் வாக்கு? ) எப்படி திகிலடைய வைக்கிறது என்பதே.
ஏழுமலை ஜமா என்ற கதை ஒரு கலைஞனுக்கும் கலைக்கும் உள்ள தொடர்பை (காதலை?) வலியுறுத்துகிறது. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதுதான் இதன் கரு. . இது தெருக்கூத்துக் கலைஞனுக்கும் உண்டு என்பதே.
இரண்டு கதைகளின் முடிவும் சூசகமாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. வாசகர்கள் அவரவர் தேவைக்கேற்ப முடிவை ஊகித்துக் கொள்ளலாம்.
- "ஏழுமலை ஜமா" என்னும் சிறுகதையை கருப்பு கருணா குறும்படமாக இயக்கியுள்ளார்.
- "ஏழுமலை ஜமா" என்னும் சிறுகதை ரோஸ்லின் இயக்கத்தில் 'கூத்தே’ என்ற பெயரில் குறும்படமாக்கப்பட்டுள்ளது.
- 'நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை' கதையை மைக்கேல் அருண் எழுதி இயக்க பினு ஒளிப்பதிவு செய்தார்.
(நன்றி
தமிழ் விக்கி)
இரண்டு கதைகளும் இந்தப் பதிவில் முழுதாகத் தரப்படவில்லை. வழக்கம் போல ஆசிரியரின் வார்த்தைகளில் கதை சுருக்கங்கள் மாத்திரமே தந்திருக்கிறேன். கதைகளின் சுட்டிகள் கீழே கொடுத்திருக்கிறேன்.
====>முதல் கதையின் சுட்டி<====
====>இரண்டாம் கதையின் சுட்டி<====
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
பவா செல்லதுரை
நடுநிசியைத்
தாண்டிய மூன்றாம் ஜாமத்தில், ஊமையன் எங்கிருந்தோ அத்தெருவுக்குள் நுழைந்தான். அவன்
நின்ற முதல் வீடு நிறைமாத கர்ப்பிணியான மேரி வில்லியம்ஸின் முல்லைப் பந்தல் விரிந்த
ஓட்டுவீட்டு வாசல். ம் ... ம்ம் ... ம்ம் ... ஒலியுடன் ஊமையன் விளையாடிக் கொண்டிருந்தான்.
ஒலியினுள் புதைந்திருந்த வார்த்தைகள் மேரி வில்லியம்ஸ்க்கு ஒரு ரகசியத்தைப் போல நுட்பமாகப்
பதிந்தது.
’இந்தக் குழந்தையும்
உனக்குத் தங்காது’ ….
தெரு நுனியிலிருந்து
ஊமையனின் ஒலி சப்தம் இன்னமும் கேட்டுக் கொண்டிருந்தது. அவள் அழுகையைக் கட்டுப்படுத்த
முடியவில்லை.
பெத்தலகேமில்
பிறந்தவரை போற்றித் துதி மனமே - நீ பெத்தலகேமில் பிறந்தவரை போற்றித் துதி மனமே …என்ற
கீர்த்தனைப் பாடல் ட்ரம்ஸ் சத்தத்தில் மெருகேறி, அந்த இரவின் தனிமையையும், குளிரையும்
துரத்தி அடித்தது.
அப்பாடலை நோக்கி
அவள் மனம் நகர முயன்று தோற்றது. கடவுள், கணவன், ஊமையன், பாடல்…. எதுவுமே பிடிக்காமல் போனது.
’தேவநாம சங்கீர்த்தன
பஜனை தேவா ... தேவா ... நித்யபிதா ஒருவருக்கே
நமோஸ்தே ... நமோஸ்தே ...’ என்று குரலெழுப்பி பஜனைக்குழு அடுத்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.
குழுவின் சப்தத்தால்
தூக்கம் கலைந்த வில்லியம்ஸ், அவளைத் தொட்டு முகத்தைத் திருப்பினான். அந்தச் சிவந்த
முகத்தில் நீண்டநேர அழுகையின் படிதல்களைப் பார்த்து அதிர்வுற்றான்.
அவள் ஊமையனின்
குறி சொல்லலைச் சொல்லி வெடித்தழுதாள்.
’அவனே நாக்கறுக்கப்பட்ட
ஊமையன். பேச முடியாது. அவன் ஏதோ பிச்சை வாங்க உளறனதைப் போயி பெரிசு பண்ணி இப்படி அழறியே,”
என மெதுவானக் குரலில் அதட்டினான்.
”இல்லீங்க,
கர்ப்பிணிங்க வீட்டு முன்னாடி அபஸ்வர குரலெழுப்பி அவன் சொன்ன அத்தனையும் பலிச்சிருக்கு,
நகோமி டீச்சர் துவங்கி டெய்சி சித்தி வரை” என்று விட்டு விட்டுப் பேசினாள். ...அன்றைய
காலை அவர்களுக்கு முடிவின்றியே நீண்டது.
இரவு சொன்ன
செய்திக்காக சேகரிக்கப்படும் பகல்நேர பிச்சையில் ஊமையன் மும்முரமாயிருந்தான். கதவுகளினூடான
இடைவெளியில் நின்று, எதிர்வீட்டில் நிற்கும் அவனை முழுவதுமாக ஊடுருவினாள் மேரி.
அடுத்த வீட்டிற்கு
நகர்ந்தான். கெட்ட செய்தி சொன்ன வீட்டில் தட்சணை என்ன வேண்டியிருக்கு? என்ற தர்மம்
அவனுக்குள்ளும் நிரம்பியிருந்திருக்கலாம்.
தெரு கிருஸ்மஸ்
கொண்டாட்டங்களுக்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்திருந்தது. பெருகி வழியும் இசை
சப்தம், அவ்வப்போது ஆலயத்திலிருந்து கேட்கும் எக்காள பாடல்கள், வந்து குவியும் வாழ்த்து
அட்டைகள் எனச் சூழல் குதூகலமாகிக் கொண்டேயிருந்தது. எதிலும் ஆர்வமற்று ஒரு பிணம் மாதிரி
கிடந்தாள் மேரி.
”என் குழந்தையைக்
காப்பாற்றவும் ஒரு ரட்சகர் வேண்டும்” என முட்டியிட்டு இறைந்து மன்றாடினாள். நம்பிக்கைக்கும்
நம்பிக்கையின்மைக்குமான இடைவெளியைத் தன் மனதால் தொட்ட வண்ணம் அந்த இரவைக் கடந்தாள்.
கிருஸ்மஸ் வெகு
சமீபத்திலிருந்தது. இன்றைய இரவின் நகர்தலில் அதை அடையமுடியும். பகலுக்கான அவசியமின்றி
தெரு இருட்டை மின்விளக்குகள் உறிஞ்சி வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன.
கிறிஸ்துமஸ்
இரவு. வில்லியம்ஸ்சின் மடியில் மேரி சலனமற்றுப் படுத்திருந்தாள். மொழியற்ற ஒரு சத்தம்
அவளை முடக்கிப் போட்டிருந்தது. அன்று இரவு ஆராதனை அவர்களின்றி இயேசுவின் பிறப்புக்காக
நடந்தேறியது.
பட்டாசுகள்
வெடிக்க மீண்டும் ட்ரம்ஸ் ஒலி முழங்க, கிருஸ்மஸ் தாத்தா வேடம் போட்ட ஒருவர் கையில்
சாக்லெட் நிரப்பப்பட்ட பெரிய பக்கெட்டில் கைவிட்டு அள்ளி அள்ளி ஒவ்வொரு வீட்டிற்கும்
கொடுத்துக் கொண்டிருந்தார். கொத்துகொத்தான சந்தோஷத்தில் தெரு நிரம்பிக் கொண்டிருந்தது.
”சர்வத்தையும்
படைத்தாண்ட சர்வ வல்லவர் - இங்கே பங்கமுற்ற பசுந்தொட்டியில் படுத்திருக்கின்றார்.”
ஆராதனை முடிந்த
பகல்நேர பஜனைக் குழுவினரின் நடை, கிட்டத்தட்ட ஓட்டமாக மாறியிருந்தது
அழுது வீங்கின
முகத்தோடு மேரி வாசற்கதவைப் பிடித்துக் கொண்டு தனியாக நின்றிருந்தாள்.
வீட்டிற்குள்
திரும்ப நினைத்த அவள் கையைப் பிடித்து விரித்து, கிருஸ்மஸ் தாத்தா நிறைய சாக்லெட்டுகளைத்
திணித்தார்.
”நேற்றிரவு
நம் கன்னிமரியாளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.”
”எந்தச் சேதாரமுமின்றியா?”
எதிர்பாராத
இக்கேள்வியால் கிருஸ்மஸ் தாத்தாவின் கைகள் லேசாக நடுங்கின. சமாளித்து,
”தாயும்
சேயும் பூரண நலம்”
என்னுரை: “தீச்செய்தி தீச்செய்தி களைந்துமே
நற்செய்தி
நற் செய்தி கொள்."
நம்பிக்கையே வாழ்க்கை. இயேசு போல மேரியின் வயிற்றிலும் ஒரு மகன். சிறப்புடன் பிறப்பான்.
ஏழுமலை ஜமா - பவா செல்லதுரை
சுற்றுப்பக்கம்
இருபது மைலுக்கு இருபது மைல் ‘‘ஏழுமலை ஜமா’’ தான். பாக்கு வைக்கும்போதே கிராமங்களுக்குள்
போட்டி கிளம்பும். அத்தனை மவுசிருந்தது ஏழுமலை ஜமாவின் சலங்கை சத்தத்திற்கு.
விடியவிடியக்
கூத்து நடக்கும். மறக்க முடியாத கதைகள். கூத்து முடிய, காலை பத்து, பதினொன்றுகூட ஆகும்.
வேஷம் கலைக்காமலேகூட படுதாவுக்குப் பின்னால் சாராயம் குடிப்பார்கள்.
அநேகமாய்ப்
பல ஊர்களில் ஏழுமலையை விட்டுவிட்டு ‘‘ஜமா’’ ஊர் திரும்பும். ஏழுமலைக்கென்று திறக்கும்
கதவுகளும், ஒரு கோடி பிரியத்தோடு பரிமாறப்படும் மாட்டுக்கறியும், சாராயமும், ராத்திரிக்கு
கிடைக்கும் ஒடம்பும் என அவனுடைய வாழ்வின் சுவாரஸ்யங்களே தனிதான். ரெண்டு மூன்று நாட்கள்கூட
ஆகும் ஊர் திரும்ப.
திகட்டத்திகட்ட
வாழ்கிற மாதிரி இருந்தது, செல்லங்குப்பம் கூழ்வார்க்கும் விழா நோட்டீஸ் வருகிறவரை.
நம்பமுடியாமல் மறுபடி மறுபடி படித்தான். நோட்டிஸின் கீழே கொட்டை எழுத்துகளில் போட்டிருந்தது.
இரவு எட்டு மணிக்கு ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே வீடியோ படம்
காண்பிக்கப்படும். ஏதோ மனசுக்குள் அறுந்து விழுவது கேட்டது. இவன் திமிரத்திமிர ஒரு
திகில் வந்து வலுக்கட்டாயமாய் இவனுள் நுழைவது புரிந்தது.
‘‘இன்னாடா இது,
சாமிக்கு முன்னாடி, சினிமாக்காரனை ஆடவுட்ரானுங்க’’, வேதனை வாய்வழியே சிந்திவிடாமல்
கேட்டான்.
அதன் நியாயம்
பல வகைகளில் அவனுக்கு விளக்கப்பட்டது
‘‘உங்களுக்குன்னா
ரெண்டாயிரம், மூவாயிரம் ஆவும். இது முன்னூறு நானூறுல எல்லாம் முடிஞ்சிடும். மழை மாரி
இல்லாத இந்த நேரத்தல ஜனங்க கைல காசு இல்லைன்னா...’’
‘‘போதும், போதும்.
நிறுத்திக்குங்க.’’ தாங்க முடியவில்லை. அவனுக்கு எல்லோருக்கும் முன்னால் ஆத்திரம் சிதறியது.
அப்பறம் சுத்துப்பக்க
கிராமத்துல இருந்து வந்த எல்லா நோட்டீஸ்களிலும் நடிகர், நடிகைகள் பெயராகத்தான் மாறியிருந்தது.
இத்தனைக்குப் பிறகும்கூட சில ஊர்த்தெருக்களில் கூத்து நடந்து கொண்டிருந்தது இவனுக்கு
ஆச்சரியமாய் இருந்தது.
நடுராத்தரியில்
பெங்களூருக்கு பஸ் ஏறினான்.
‘ஏழுமலை, கூத்தாடும்
போதுதான் இந்த ஜிட்டு தலப்பெல்லாம். கூடை தூக்குறப்போ வேணாம். `கெராப்பு வெட்டிக்கோடா.’
சொல்றவனுக்கு
இவன் மகன் வயசிருக்கும். இங்கு எல்லாருமே போடா வாடாதான். எத்தனை வயசுக்காரனயும் இப்படி
சொல்ல சிட்டி ரவுண்ட் மார்க்கெட் சீனியாரிட்டி தைரியம் கொடுத்திருந்தது. யாரும் எதையும்
பேச முடியாது. மரியாதைக்கெல்லாம் ஆசைப்பட்டா எவன் கை வேணுன்னாலும் நீளும். கைகள் ஊர்வாரியா,
ஜில்லாவாரியா, ஜாதிவாரியா பிரியும்.
எந்த நேரமாயிருந்தாலும்
கூடையை இறக்கி வைத்துவிட்டு ஆட வேண்டும். பாதங்களில் சலங்கைகளின் சப்தம் எழ, சுற்றி
ஆடின ஊர் ஞாபகம் மனசில் முட்ட, மார்க்கெட் கொய்யா இலையும், சப்போட்டா இலையும் காலில்
மிதிபடும். மார்க்கெட்டில பல உருவங்கள் நின்று பார்க்கும். ‘‘லூசு’’ என்ற புரிதல் பல
முகங்களில் எதிரொலிக்கும். அதெல்லாம் தான் அவனுக்கு மரண அடிகள், வேட்டைநாய் மாதிரி
துரத்தித்துரத்திக் குதறியது. தப்பிக்க, எங்கும் ஓடிப்போக முடியவில்லை. சுற்றிச்சுற்றி
சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டுக்குள்ளேயே வாழ்க்கை அவனை இயக்கிக் கொண்டிருந்தது.
இல்லை. இந்த
நகரம் இனியும் எனக்கு வேண்டாம். ஊருக்குப் புறப்பட்டான்.
ஊருக்குப் போய்
என்ன பண்ண?
சிட்டி ரவுண்ட் மார்க்கெட் மோரி நாத்தம் பழகி புதிய
மணமாய் அவனுள் உறைந்திருந்தது. சொந்த ஊருக்குப் போகிறோம் என்கிற நினைப்பே மற்ற எல்லாத்
துயரத்தையும் வடியச் செய்தது. உடல் முழுக்க புது ரத்தம் ஊறுவது மாதிரியிருந்தது. பஸ்
முழுக்க கூட்டம் நசநசவென்றிருந்தது.
சீட் நெம்பர்
தேடி உட்கார்ந்து ஆசுவாசமாய் பக்கத்தில் பார்த்தான். அழுக்கும் சோர்வும் அப்பிய முகங்களில்
அதையும் மீறின லேசான உற்சாகம் துளிர்ந்ததைக் கவனிக்க முடிந்தது.
எதைப் பற்றியும்
நினைக்காமல் ஊர்போய்ச் சேர வேண்டும். மனசு மட்டும்தான் இப்படி நினைத்தது. கண்கள் இப்படியும்
அப்படியும் அலைந்தது. பஸ்ஸில் உட்கார்ந்திருப்பவர்களில் சிட்டி ரவுண்ட் மார்க்கெட்
முகங்கள் அடையாளம் தெரிகிறது. பழக்கூடை சுமந்து காய்ப்பேறிய கைகள் அவனைக் கஷ்டப்படுத்துகிறது.
அழுகை அழுகையாய் வருகிறது.
இறங்கி விடலாமா?
இல்லை. இந்த
நகரம் இனியும் எனக்கு வேண்டாம்.
ஊருக்குப் போய்
என்ன பண்ண?
குடும்பத்தோட
கொளத்துல விழுந்து மாஞ்சாலும் சரி, இங்க வேணாம். கம்பியில் தலை சாய்ந்து, கண்களை இறுக்கமாக
மூடிக் கொண்டான். எதற்கோ காத்திருந்தது போல, எது?
மீறியாகி விட்டது.
இதுவரை இவன் மென்னியைப் பிடித்துக் கொண்டிருந்த வாழ்வின் கலகத்தைத் திருப்பி இறக்கியாகி
விட்டது. இனி ஊர்போய்விட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய் வெளியாக இந்த எண்ணம் உருக்கொண்டது.
ஊர்தான் இவனை நெட்டித் தள்ளி கண்டோன்மென்ட் நெரிசலில் தள்ளியது என்பதெல்லாம் இதுவரை
இருந்த வெறியில் ஞாபகம் வரவில்லை. ஆனால் இந்த பஸ் பயணம் இப்போதே அதைக் கொண்டு வந்து
ரப்பர் பந்து மாதிரி மனசில் மோதுகிறது.
போதும், போதும்
என்னை நெரிக்காதே என்று ஏதோ எதிரில் நின்ற பிசாசிடம் கெஞ்சுவது மாதிரிதான் சிட்டி ரவுண்ட்
மார்க்கெட்டில் இருந்து இதோ இப்போது தப்பியது.
மத்தியானத்துக்கு
மேல், இவன் வந்திருப்பது ஊருக்குத் தெரிந்தது. ஒவ்வொரு கூரையிலும், கேள்விகள் முளைத்தது.
இதுக்குப் பயந்துதான் பெங்களூருக்கு ஓடினது. மீண்டும் அதே கேள்விகள். எப்படி ஏழுமலை
வந்தாப்பலே?
‘‘அப்புறம்
இன்னா பண்ணப் போற?” யார் மூலமோ வாழ்வு அவனைக் கேட்கிற அழுத்தமான கேள்வி இது. முடியவில்லை
இதற்கு பதில் இல்லாமலே பெங்களூரை விட்டுப் புறப்பட்டிருக்கிறான்.
இருட்டினதுக்கப்பறம்,
‘‘ஜமா’’ ஆட்கள் விசயம் கேள்விப்பட்டு வந்தார்கள். அதே மரியாதை இருந்தது ஒவ்வொரு மொகத்திலும்.
கரும்பு வெட்டக் கூப்பிட்டார்கள், சந்தையில் மாட்டுத்தரவு செய்வது கவுரவமான தொழில்
என்றார்கள், எதையும் கேட்கிற மாதிரி இல்லை மனசு.
‘‘எவனுக்கும்
கூத்த போடலாம் வாத்தியாரேன்னு சொல்ற தைர்யம் வரலையே’’ என்று குச்சியால் தரையைக் கிளறிக்
கொண்டிருந்தான்.
எல்லாரும் போனபிறகு
மனசு கனத்திருந்தது. எதுக்கோ ஏங்கியது. வாடகைக்கு சைக்கிள் பேசி எடுத்துக் கொண்டு வேளானந்தலை
நோக்கி மிதித்தான். பிரிட்ஜ்ஜைத் தாண்டுகிற போது ஆசை வந்தது. ‘‘பாடிப் பார்க்கலாமா?”
மொத்தமாய் நாலு
டம்ளர் குடித்து, பச்சை மொளகா அதிகமா போடச் சொல்லி, மொச்சையை கையில் வாங்கி சைக்கிள்
மிதிச்சப்போ நிதானம் இழக்க ஆரம்பித்தான்.
பிரிட்ஜ்ஜை
தாண்டும்போது லாரி ஒன்று இவனைக் கடந்து போனது. நிதானமாக சைக்கிள் ஓட்ட முயன்றான்.
வடக்கே இருந்து
கூத்துப்பாட்டு சத்தம் கேட்டது.
பிரமை. வெறும்
பிரமை. நாளெல்லாம் இதே நெனப்போட இருந்தா இப்படித்தான்.
இல்லை, சைக்கிள்
நகர நகர பாட்டு துல்லியமாகிக் கொண்டே வந்தது.
இப்போது பெட்ரோமாக்ஸ்
வெளிச்சமும் தெரிந்தது. வெறிபிடித்த பிசாசு மாதிரி சைக்கிள் வேகமெடுத்தது. மண்ரோட்டில்
சைக்கிளை நிறுத்திவிட்டுத் தட்டுத் தடுமாறி மரத்தடிக்கு நடந்தான்.
பத்துப் பதினைந்து
உருவங்கள் மங்கலாய்த் தெரிந்தன. மர ஸ்டூல் போட்டு ஒருத்தன் உட்கார்ந்திருந்தான். கையில்
பெரிய நோட்டிருந்தது. கூத்துப் பழகிக் கொண்டிருந்தவர்கள் எல்லாருமே புது ஆட்கள், எல்லார்
முகத்திலும் அது திட்டுத்திட்டாய்த் தெரிந்தது. ஒரு செடி, மனசுக்குள் முளைப்பது மாதிரி
இருந்தது இவனுக்கு. தள்ளாடி விழப் போனவனை மரம் தாங்கிக்கொண்டது. கூர்ந்து அந்தக் கால்களைப்
பார்த்தான். சரியில்லை. அந்தக் கிருதாக்காரனின் அடவு தப்புத் தப்பா வருது. உள்மனசு
இவனுக்குள்ளேயே பேசிக் கொள்வது கேட்டது. என்ன வாத்தியார் இவன், அடவைக் கவனிக்காம புஸ்தகத்தைப்
பாத்து படிச்சிட்டா போதுமா, ‘‘அடவு தாண்டா உசுரு ஆட்டத்துக்கு.’’
கிருதாக்காரன்
தொடர்ந்து தப்புப் பண்ணிக் கொண்டே இருந்தான். ஏதோ உள்ளிருந்து கிளம்ப, ‘தகிதோம், தகிதோம்’
என அந்த வட்டத்துக்குள் பெரிய வன்முறையாளனைப் போலக் குதித்தான். அவசரமாய் ஒருவன் பெட்ரோமாக்ஸ்
விளக்கை நகர்த்திக் கொண்டான். அவனுக்குள்ளிருந்த வெறிபிடித்த பேய் விடாமல் ஆடியது.
மடேரெனக் கீழே
விழந்தபோது, ரெண்டொருவர் அதிர்ந்தனர். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், ஒரு கை மூக்கில்
கை வைத்துப் பார்த்தது.
‘‘மூச்சி இருக்கு’’
‘‘போதை போலிருக்கு.’’
வாத்தியார் நிதானமாய் எழுந்து வந்தார். முகத்தைத் திருப்பி வெளிச்சத்தில் பார்த்தார்.
‘‘நம்ம கோணலூர் ஏழுமலை’’
என்னுரை
: “பாட்டில் சுவை
இருந்தால் ஆட்டம் தானே வரும் கேட்கும் இசை இருந்தால் கால்கள் தாளமிடும். கலைஞனுக்கு
மட்டும் அல்ல. தெருக்கூத்து கலைக்கும் மூச்சு இருக்கிறது.
ஆசிரியர் பற்றிய குறிப்பு
எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், கதைசொல்லி, களப்பணியாளர், திரைப்பட நடிகர், இயற்கை விவசாயி, அரசியலாளர் என்று பன்முகம் கொண்டவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மாவட்டச் செயலாளராகவும், தலைவராகவும், மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தவர்.
எழுத்தாளனாக அடைந்ததைவிட, பத்துமடங்கு வாசகர்களை கதைசொல்லியாக அடைந்திருப்பதாக இவர் கூறுகிறார். ஒரு கதைசொல்லியாக பல்வேறுநாடுகளுக்குச் சென்று பவா செல்லத்துரை இலக்கியக் கதைகளை கூறிவருகிறார்.
எழுத்தாளர் ஜெயமோகன்," பவா செல்லதுரையின் புனைவல்லாத படைப்புகளில் அன்பு, பரிவு ஆகியவை நிறைந்த ஒரு கொண்டாட்ட மனநிலை இருக்கும். எதிர்மறை அம்சமும், துயரமும் இல்லாத தன்மையிருக்கும். புனைவில் நேர்மாறாக பெருங்கருணையோடு துயரப் படுபவர்களைப் பார்த்து அல்லது துயரப் படுபவர்களின் குரலாக ஒலிக்கிற தன்மையைப் பார்க்கலாம்" என்று விமர்சிக்கிறார்.
கதையை சொல்கிறார் என்பதைவிட நவில்கிறார் என்ற சொல்லே சரியாக இருக்கும். அவரது கதை கூறல் முறை தாலாட்டைப் போல மயங்குறச் செய்கிறது.
திருவண்ணாமலை சொந்த ஊர். வம்சி பதிப்பகம் இவருடையது.
இவரது வலைத்தளம் <==== சுட்டி
https://bavachelladurai.blogspot.com/
மேலதிக விவரங்களுக்கு
பவா செல்லதுரை சக எழுத்தாளர்களை அடிக்கடி சந்தித்துத் தொடர்பில் இருப்பதுபற்றி, அவர்களின் படைப்புகளைப் பொதுவெளியில் பேசுவதுபற்றி, கொண்டாடுவதைப்பற்றி எஸ்.ரா.வும் ஸ்லாகித்துத் தன் தளத்தில் எழுதியிருந்ததை, முன்பு படித்த நினைவு வருகிறது. சர்ச்சைகளுக்குள் விரும்பிச் சென்று மாட்டிக்கொண்டு ’புகழ்பெற’ விரும்பாத சாதாரண படைப்பாளி போலும். அதற்காக, ஒரேயடியாக சாதுவாக இருந்துவிட்டால் சுவாரஸ்யமாக இருக்காதோ என எண்ணி ஹாசன் கமலின் பிக் பாஸில் நுழைந்து .. தலையைப் பிய்த்துக்கொண்டு.. வெளியேறியிருக்கக்கூடும்.
பதிலளிநீக்குஆம்புலன்ஸ் ஓட்டுனரையும், தமிழ்வாணன் மனைவி சிவசங்கரியையும் வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குநீண்ட பின்னூட்டங்கள் வெளியாவதில்லை. வெளியிடுவதில் ஏதோ தவறு நேருகிறதாம். அதைத் தெரிவிக்கவே இந்த பின்னூட்டம்.
பதிலளிநீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
பவா செல்லதுரை அவர்கள் bigboss செல்லாமல் இருந்திருக்கலாம்...
பதிலளிநீக்குஇரு நேர்மறை செய்திகளும் சிறப்பு. மீட்டு முதலுதவி செய்த ஆம்புலன்ஸ் ஊழியர்களையும், நகையை போலீஸிடம் ஒப்படைத்து உரியவர்களுக்கு அதைச் சேர்த்த சிவசங்கரிக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகீதா
பவா செல்லதுரை அவர்கள் பல எழுத்தாளர்களின் கதைகளைக் குழுவினருக்குச் சொல்லும் காணொளிகளைப் பார்த்துள்ளேன். கேட்பதை விட வாசிப்பது எனக்கு ஒத்துவருகிறது. எல்லாம் இந்த மூன்றாவது காதினால்தான்.
பதிலளிநீக்குநான் பிக்பாஸ் பார்ப்பதில்லை. அவர் அதற்குள் நுழைந்தார் என்பதும் செய்தி பார்த்து அறிந்ததுதான். அங்கு என்ன நடந்தது என்பதெல்லாம் தெரியாது ஆனால் பவா செல்லதுரை எதுக்கு பிக் பாஸுக்குப் போனார்? போயிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.
அவர் எழுதிய கதைகளை வாசிப்பது இப்போதுதான். ஜெ கே அண்ணாவுக்கு நன்றி
கீதா
கீதா
முதல் கதை கிட்டத்தட்ட மகிழ்வான முடிவை எட்டும் என்ற ஒரு நம்பிக்கையை மேரியின் மனதில் விதைக்கிறார் கிறிதுமஸ் தாத்தா.
பதிலளிநீக்குஎந்த அளவிற்கு மேரியின் மனது இருள் கவிழ்ந்து எதிர்மறையால் புரண்டு போயிருக்கிறது, ஊமையனின் சப்த மொழியினால் என்பது அவளை அறியாமலேயே மனதில் உள்ள வார்த்தைகள் வெளியில் வருவது...மேரியின் கேள்வி "எந்தச் சேதாரமும் இன்றியா" என்பது கி தாத்தாவுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
இது பொதுவாகவே குறி சொல்பவர்கள் என்றில்லை, ஜோசியர்கள் பூடகமாகச் சொல்லும் எதிர்மறை என்றில்லை, யாராக இருந்தாலும் (யாராவது எதிர்மறையாகச் சொன்னால்கரிநாக்கா என்று கேட்பவர்களையும் பார்த்திருக்கிறேன்) பலரை ரொம்பவே பாதிக்கிறது என்பதைச் சொல்லும் கதை. தானாக வருவது என்றால் சிலர் ஜோசியரை நாடிச் சென்று இப்படி மாட்டிக் கொள்வர். என்னதான் அவர் பரிகாரம் என்றெல்லாம் சொன்னாலும் இந்த எதிர்மறைதான் மனதில் தங்கிப் போகும். அதுவே அவர்களுக்கு எதிர்வினையாற்றத் துணை போகும்.
அண்ணாவின் என்னுரை - சூப்பர்....டிட்டோ செய்கிறேன்.
அதற்குத்தான் நல்லதை நினை நல்லதைப் பார், நல்லதைக் கேள் நல்லதை வாசி என்று அறிவுரைக்கப்படுகிறது. நம்மை எல்லாம் வழிநடத்தும் சக்தியிடம் விட்டுவிட்டு மனதை நேர்மறையாக
கீதா
கூத்துக் க்லை என்பது மிக மிக அருமையான ஒரு கலை. முன்பெல்லாம் இது விழிப்புணர்வு, புராணக் கதைகள், ஊர்ச்செய்தி, நிகழ்வுகள், நாடோடிக் கதைகள் என்று பல ஆடுவாங்க.
பதிலளிநீக்குஇரண்டாவது கதை கூத்துக் கலைஞன் தன் கலை பின் தள்ளப்படும் போது அடையும் விரக்தியைச் சொல்வதோடு அது அக் கலைஞனின் உடலுள் மனதுள் ஊறியிருப்பதைச் சொன்னாலும், அப்படி ஊறியிருப்பது, மனதில் ஆட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் சாதாரண நிலையிலும் ஒரு உத்வேகத்துடன் ஆட வேண்டும் ஆனால், தண்ணி போட்டால்தான் ஆட வருமா? என்ற கேள்வியைத் தவிர்க்க இயலவில்லை. இப்படி நானும் பார்த்ததுண்டு யதார்த்தம்தான். ஆனால் இந்தக் கேள்வி என் மனதுள் எழுவதுண்டு. தண்ணி போடலைனா இல்லை பான்பராக் போடலைனா அந்த உத்வேகம் வராது என்றால் அந்தக் கலை அப்போ மனதுள் உடலுள் இல்லையா?
இசை நம் மனதில் இருந்தால் எந்த நேரத்திலும் அதைக் கேட்கும் போது கால் அல்லது கை தாளமிடும் அதைப் போலத்தானே இந்தக் கலையும் இல்லையா?
கீதா
இந்தக் கதை ஒட்டிய ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இங்கு பெரிதாகிவிடும். எனவே அதைப் பதுக்குகிறேன்!!!!!
பதிலளிநீக்குகீதா
அந்த சம்பவத்தை ஒரு பதிவாக்கலாமே.
நீக்குJayakumar
ஆமாம் அண்ணா அதற்காகத்தான் பதுக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்...
நீக்குமிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
பதிவைப் பார்த்தவர்களுக்கும் கருத்து கூறியவர்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குJayakumar
ஆம்புலன்ஸ் ஓட்டுனரையும், சிவசங்கரி அவர்களையும் வாழ்த்துவோம். பாராட்டுவோம்.
பதிலளிநீக்குபவா செல்லத்துரை அவர்கள் கதை பகிர்வு இப்போது தான் படிக்கிறேன், நன்றி. அவர் கதை சொல்வதை கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஜோக்கர் என்ற சினிமாவில் நடித்து இருக்கிறார்.
ஜெயகாந்தன் அவர்கள் கதையை பவா செல்லத்துரை அவர்கள் சொன்னதை கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. பாஸிடிவாக செயல்பட்ட இரு செய்திகள் சம்பந்தபட்ட இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்றைய கதை பகிர்வும் நன்றாக உள்ளது. இந்த ஆசிரியர் பற்றி இதுவரை அறிந்ததில்லை. நல்ல கதைகள். படித்து ரசித்தேன். கதைகளையும், அதன் சிறப்பான கதாசிரியர் பற்றியும் பல செய்திகளையும் தந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.