புளிக்காய்ச்சல் மற்றும் புளியோதரை ரெடி மிக்ஸ் செய்முறை
இதோடு எங்கள் வீட்டில் என் பாட்டி செய்யும் போது குடும்பத்திற்குக் காணும்படி செய்யும் டிப்ஸ் மற்றும் என் அனுபவத்தில் கற்றதையும் சேர்த்து இந்தச் செய்முறையில் சொல்கிறேன்.
அடுப்பில் வாணலி வைத்து அடுப்பை ஏற்றிச் செய்யும்
முன் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொண்டு விட வேண்டும்.
புளி கண்டிப்பாகப் பழைய புளியாக இருக்க வேண்டும்.
பழம் புளி என்றதும் ஒரே அடியாகக் கறுப்பாக இருக்கும் புளி அல்ல. புதுப்புளி என்றால்
பெருங்காயம், வெந்தயம் மணம் சரியாக வர கூடுதல் போட வேண்டும் என்பதோடு புதுப்புளி புளிப்பும் இனிப்பும் கலந்து புளியின் வாசனை தெரிவதாக இருக்கும்
என்பதால் சுவை அமைவது கொஞ்சம் வித்தியாசப்படும்.
வெந்தயம் பெருங்காயம் மணம் புளியோதரைக்கு முக்கியம்.
வெந்தயம் பெருங்காயம் வறுக்கும் முறை சரியான அளவு மற்றும் பதத்தில்
இருக்க வேண்டும்.
தயாராக வைத்துக் கொள்ள வேண்டிய தேவையான பொருட்கள்.
இங்கு நான் சொல்லப் போவது 125 கிராம் புளிக்குத் தேவையானவை.
புளி – 125 கிராம் (கொட்டை, கோது இல்லாமல் இருந்தால் நல்லது. கொட்டை கோது அதிகமாக இருந்தால் கொஞ்சம் கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம். நான் இங்கு பயன்படுத்தியிருக்கும் புளியில் கொட்டை இல்லை கோது அதிகம் இல்லை.
கடலைப் பருப்பு – 50 கிராம் ¼ கோப்பை
உளுத்தம் பருப்பு – 50 கிராம் ¼ கோப்பை
மிளகாய் வற்றல் – காரத்திற்கு ஏற்ப சொல்லியிருக்கிறேன்.
காரமாக வேண்டும் என்றால் 45. மிதமான காரம் – 35 – 40. காரம் கம்மியாக என்றால் 30. ஆனால்
காரம் ரொம்பக் குறைவாகப் போடும் போது புளிப்புச் சுவை தூக்கலாகத் தெரியும். வற்றல்
மிளகாயில் குண்டூர் மிளகாய் இங்கு படத்தில் காட்டியிருக்கும் மிளகாய் மிதமான காரம்
உடையது என்பதால் நான் 40 பயன்படுத்தினேன். கிட்டத்தட்ட 40 கிராம். இந்த மிளகாய் எண்ணிக்கையும் கிராம் கணக்கும் கிட்டத்தட்ட ஒரே போன்று இருக்கிறது. குண்டூர் மிளகாயில் இதைவிட நீளம்
சற்று கம்மியாகச் சிறியதாக இருக்கும் மிளகாய் நல்ல காரமாக இருக்கும். இதை அளக்கும்
போது 40 எண்ணி எடுத்தால் கிராம் கணக்கு சற்று வேறுபடும். எனவே நீங்கள் பயன்படுத்தும் மிளகாய்
மற்றும் காரத்திற்கு ஏற்ப எண்ணி பயன்படுத்திக்கோங்க.
பெருங்காயம் கட்டி/சிறிய துகள்களாக (கட்டியாக இருந்தால்
உடைத்துக் கொள்ளவும்) – 1 மேசைக் கரண்டி விளிம்பளவு. 15 கிராம் தோராயமாக பொடி
என்றால் ஒரு மேசைக்கரண்டி தூக்கலாக. 15 கிராம் தோராயமாக. குறைத்துவிட வேண்டாம்
வெந்தயம் – 1 மேசைக் கரண்டி தூக்கலாக 15 கி தோராயமாக.
வெந்தயம் பெருங்காயம் சம அளவு. இதை கிராம் கணக்கில்
இல்லை என்றாலும் மேசைக்கரண்டியில் கொஞ்சம் தூக்கலாக அளந்து கொண்டால் போதும். நான் பெருங்காயம் எல் ஜி கட்டி பயன்படுத்துவதில்லை. அது ட்ரையாகப் பொரிக்கும் போது புளியோதரைக்கு மணம் கொடுப்பதில்லை. எனவே ராஜஸ்தான் பெருங்காயம் சின்ன துகள்கள் கிடைத்தால் அதைப் பயன்படுத்துவேன். அல்லது பெரும்பாலும் பெருங்காயப் பொடிதான் அதுவும் எல் ஜி அல்ல.
மஞ்சள் பொடி – 1 மேசைக்கரண்டி
வெல்லப் பொடி – 1 மேசைக்கரண்டி. உங்கள் விருப்பம்.
நல்லெண்ணை – ½ கோப்பை – ¾ கோப்பை
(மகனுக்கு வாக்குவம் பார்சல் செய்த போது எண்ணை கசிவு
இல்லாமல் குறைவாக விட்டு நன்றாகக் கெட்டியாகக் கிளறிவிடுவேன். வாக்குவம் கவரில் போடும்
போது புளிக்காய்ச்சல் அரை கவர் இருக்கும்படிதான் போட வேண்டும். பாக் செய்யும் போது
எண்ணை இழுபடும் அது மெஷின் வரை கூட வந்துவிடும். எனவே எண்ணை இருக்கவும் வேண்டும் ஆனால்
ஓவராகக் கசியக் கூடாது. பார்சல் அனுப்பும் போது இப்படி அனுப்பினால் எண்ணைக் கசிவு வெளியில்
எல்லாம் இருக்காது. பாதுகாப்பாகப் போய்ச் சேரும்.)
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
கருகப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
புளிக்கரைசல் அடியில் கெட்டியாகத்தான் இருந்தது. ஃபோட்டோ எடுக்க விட்டுப் போனதால் கடைசியில் புளிக்கரைசல் வடிகட்டிய பாத்திரத்தைக் கழுவி ஊற்றிய தண்ணீர் மேலே தெரிகிறது.
புளியை 2 கப் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
இல்லை என்றால் குக்கரில் வைத்து வேக வைத்தும் எடுத்துக் கொண்டுவிடலாம்.
ஊறியதும் அல்லது குக்கரில் இருந்து எடுத்ததும்
(ஆறியதும்) நன்றாகப் பிசைந்து கெட்டியாகக் கரைத்து கொஞ்சம் பெரிய ஓட்டை உள்ள வடிதட்டில்
போட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். கிட்டத்தட்ட ஏற்கனவே விட்ட இரண்டு கப் தண்ணீருடன்
+ 1 1/2 - 2 கப் தண்ணீர் தேவைப்படலாம்.
வற்றல் மிளகாயை மிகவும் சிறிய துண்டுகளாக கட் செய்து/கிள்ளி
வைத்துக் கொள்ளுங்கள். படத்தில் வாணலியில் தெரியும் அந்த சைஸ்.
வெறும் வாணலியை அடுப்பில் ஏற்றி நன்றாகச் சூடான
பிறகு வெந்தயத்தைப் போடவும். அடுப்பை சிம்மில் வைத்து மெதுவாகக் கை விடாமல் வறுக்கவும்.
வறுபடும் வாசனை வரும். துள்ளவும் செய்யும். ப்ரௌன் நிறம் வந்ததும் உடனே எடுத்து ஒரு
தட்டில் கொட்டிக் கொண்டுவிடவும். ரொம்ப நிறம் ப்ரௌன் ஆனால் வெந்தயம் கசப்பதோடு அல்லாமல்
புளியோதரைக்கான சுவை மாறும்.
பெருங்காயம் பௌடர் என்றால் – அதை வெந்தயம் வறுபடும் சமயம் அடுப்பை ஆஃப் செய்துவிட்டு பெருங்காயப் பொடியை அதோடு சேர்த்து ஒரு நிமிடம் தான். உடனே ஒரு தட்டில் மாற்றிவிடவும். ஆறியதும் நன்றாகப் பொடித்துக் கொண்டுவிடவும். படங்கள்.
பெருங்காயம் சின்ன கட்டிகளாக இருந்தால் – இதையும் வெந்தயம் வறுத்ததும் அடுத்தாப்ல வாணலியில் போட்டு கைவிடாமல் வறுத்து அது விரிந்து பொரியும் கலர் மாறக் கூடாது.
உடனே மாற்றி வெந்தயம் போட்ட தட்டிலேயே எடுத்து வைத்துக் கொண்டுவிடலாம்.
எல்லாம் தயாராக வைத்துக் கொண்டதும், வாணலியில் கால் கப் எண்ணை விட்டு சூடானதும், முதலில் சிறிதாகக் கட் செய்த மிளகாய் வற்றலைப் போட வேண்டும்.
அவை நன்றாகப் பொரிந்து கடும் ப்ரௌன் நிறம் ஆகும் சமயம், கடுகைப் போட வேண்டும். கடுகு வெடித்ததும், பருப்புகளைப் போட வேண்டும். எல்லாம் சிவந்து வரும் சமயம் மிளகாயும் நல்ல கரும் நிறத்தில் வந்துவிடும், கருகப்பிலை கொஞ்சம் போட்டு, புளிக்கரைசலை மெதுவாக விட்டு உப்பையும் போட்டுவிடலாம். புளி கரைக்கும் போதே கூட உப்பையும் சேர்த்துக் கரைத்துக் கொண்டுவிடலாம். மஞ்சள் பொடியும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கொதிக்கும் போது வெல்லம் சேர்ப்பது ஆப்ஷனல். நான் குறிப்பில் சொன்ன அளவு கொஞ்சம் சேர்ப்பேன். (கர்நாடகா ஸ்டைலில் புளியோதரை திதிக்காது!) அது புளிப்புத் தன்மையைச் சமப்படுத்தும்.
புளிக்காய்ச்சல் காச்சும் போது திக்காகி வரும் போது தெறிக்கும் எனவே கொஞ்சம் ஆழமான
வாணலியாக இருந்தால் அல்லது கனமான உருளியில் பாத்திரத்தின் அரை அளவு இருந்தால் வசதியாக இருக்கும்.
அல்லது மூடி போட்டு அவ்வப்போது திறந்து கிளறிக் கொடுக்கலாம்.
மீதமுள்ள எண்ணையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்
கிளறி திரண்டு வந்து எண்ணை கொஞ்சம் பிரிவது
ஓரத்தில் தெரியும் போது நன்றாகப் பொடித்து
வைத்துள்ள வெந்தயம் பெருங்காயப் பொடியைச் சேர்க்க வேண்டும். மீதமுள்ள கறிகப்பிலை ஒரு
கொத்தும் கூடச் சேர்க்கலாம்.
புளிக்காய்ச்சல் பதம் வந்து இறக்குவதற்குப் 10
- 15 நிமிடங்கள் முன்னால்தான் இப்பொடியைக்
கலக்க வேண்டும். எப்போதுமே பெருங்காயத்தை எந்த உணவிற்குமே கடைசி பருவத்தில் சேர்த்தால்தான்
மணம் இருக்கும். பெருங்காயம் சேர்த்து அதிக
நேரம் கொதிக்கக் கூடாது. வெந்தயமும் ட்ரையாக வறுத்த பொடியாகப் போடுவதால் இப்படிக் கடைசிப்
பதத்தில் சேர்ப்பதுதான் கசக்காமல் நல்ல மணம் தரும். வெந்தயம் ஊற ஊற தான் சுவை கூடும்.
வெந்தயம் பெருங்காயம் சேர்த்ததும் 15 நிமிடங்களில்
நல்ல வாசனை வரும் புளிக்காய்ச்சலும் திரண்டு கெட்டியாகி வந்திருக்கும். அடுப்பை அணைத்துவிடலாம்.
ஆற ஆற இன்னும் கொஞ்சம் கெட்டியாகும்
படத்தில் காட்டியுள்ளது போலக் கெட்டியாக இருக்கும்.
பாட்டி செய்வது - கொஞ்சம் கணிசமாக வரும் என்று கொடுக்கப்பட்டுள்ள மிளகாய் எண்ணிக்கையில் 12 – 15 மிளகாயைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டுவிட்டு மற்ற மிளகாய்களை மேலே சொல்லியது போல கிள்ளி வைத்துக் கொண்டுவிட வேண்டும்.
மிளகாயை இந்த மாதிரி வறுத்துக் கொள்ள வேண்டும்
அது போல இந்த அளவுப்
பருப்புகளில் ஒவ்வொன்றையும் இரு மேசைக்கரண்டி தலைதட்டி அளந்து எடுத்து வைத்துக் கொண்டுவிட
வேண்டும். மிளகாயைத் தனியாகவும் பருப்புகளைத் தனியாகவும் கொஞ்சம் போல எண்ணை விட்டு
நன்றாக வறுத்து எடுத்துக் கொண்டு (மேலே உள்ள படங்கள்) பருப்பை நைஸாகப் பொடித்துக் கொண்டு மிளகாயைத் தனியாக
ஓட்டி கரகர என்று எடுத்து வைத்துக் கொண்டு விட வேண்டும்
மற்றவை எல்லாம் மேலே சொல்லப்பட்ட அதே முறைதான்.
புளிக்காய்ச்சல் கொதித்துக் கொஞ்சம் கெட்டியாகும் போது, இந்த மிளகாய் பருப்புப் பொடியைச்
சேர்த்து விட்டால் புளிக்காய்ச்சல் தெறிக்காமல் டக்கென்று கெட்டியாகி வரும். அடுப்பை
மிகவும் மிதமான தீயில் வைத்துக் கிளற வேண்டும். எண்ணை கொஞ்சம் சேர்த்துக் கிளறி மேலே
சொல்லியது போல இறக்குவதற்கு 10 – 15 நிமிடங்களுக்கு முன்னர் வெந்தயம் பெருங்காயம் பொடியைச்
சேர்த்துவிட வேண்டும். மற்றவை எல்லாம் அதே செய்முறைதான்.
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க வாங்க நெல்லை....உங்கள் கலாய்ப்புக்காக வெய்ட்டிங்க்...இன்று மதியம் மேல் நான் பிஸி. நெருங்கிய உறவினர் வீட்டிற்குச் செல்ல வேண்டும். ஸோ இப்போதே வலைல சுற்றிவிட்டு ஓட வேண்டும் இடையே வேலைகளும்.....வடை, தயிர்வடை (உறவினருக்காகத்தான்!!!)
நீக்குகீதா
அவசரப்பட்டு எல்லோரும் புளிக்காச்சலுக்குத் தேவையான பொருட்களைத் தட்டில் எடுத்து வைக்க ஆரம்பிக்காதீங்க. பாதீல செய்முறையை நிறுத்தியிருக்காங்க. இதுல நிலக்கடலை சேர்க்கணுமா, முந்திரி சேர்க்கணுமா? காய்வதற்கு கிளறியதும் தட்டில் கொட்டி வெயில்ல வைக்கணுமா? மிளகு உண்டான்னு ஏகப்பட்ட சந்தேகம் வரும்... ஆனால் அதுக்கு விடை இந்த வாரம் வராது. அடுத்த வாரம் வரை காத்து (ஒரு வேளை முற்றும் போட்டேல்), புளிக்காய்ச்சல் செய்ய ரெடி ஆகுங்க.
பதிலளிநீக்குஹாஹாஹாஹாஹா நினைச்சேன்!!!! முழுசும் வாசிச்சாதானே!!!! எங்க அண்ணன் எப்பவுமே இப்படித்தான்!!!
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முதல் பாராலயே சொல்லிட்டேன் மிளகு எல்லாம் சேர்க்காத செய்முறைன்னு....
நிலக்கடலை, முந்திரி எல்லாம் புளிக்காய்ச்சல் காய்ச்சும் போது சேர்ப்பதில்லை கலக்கும் போதுதான். அன்றைய தேவைக்கு மட்டும் அல்லது சீக்கிரம் தீர்ப்போம் என்றால் மட்டுமே நிலக்கடலை சேர்ப்பது ஓகே நிறைய நாள் இருப்பதற்கு என்றால் அதில் நிலக்கடலை சேர்க்காம இருந்தா வாசனை நல்லாருக்கும் . இல்லேனா சிக்கு வாசனை வந்துவிடும். சிரிச்சு முடில எனக்கு
மிக்க நன்றி நெல்லை
கீதா
செய்முறை நல்லா வந்திருக்கு கீதா ரங்கன். நான் கட்டிப் பெருங்காயம்தான் வாசனை என நினைத்துக்கொண்டிருந்தேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நெல்லை....
நீக்குநெல்லை கட்டிப் பெருங்காயம், எனக்கு அப்படித் தோன்றியதால்....எனக்குப் பெருங்காயம் வாசனை மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் என்று தெரியும்...
ராஜஸ்தான் பெருங்காயம் கொஞ்சம் காஸ்ட்லிதான் ஆனால் வாசனை செம....ராஜஸ்தான் ஃபேமஸ். பெருங்காயம் மற்றும் பச்சை கொத்தமல்லிவிரைக்கு. உங்களுக்கு அங்கு ஃபேமஸ் கடை அவங்க ஆன்லைன்லதான் வியாபாரம் அனுப்பறேன். அவங்க லிங்க்...
நன்றி நெல்லை
கீதா
குஜராத்திலும் பெருங்காயம் சுவை
நீக்குதிருச்சேறை கோவில் புளியோதரை ரொம்ப நல்லா இருக்கும். அங்கு மடப்பள்ளியில் இருந்தவர், தான் புளிக்காய்ச்சல் செய்வதில் எக்ஸ்பர்ட் என்றும், சொன்னால் கிலோ 500ரூ க்கு புளிக்காய்ச்சல் செய்து தருவதாகவும் முன்பு சொன்னார். அந்தக் கோவிலின் பிரசாதங்கள் அவர் கைப்பக்குவத்தால்்ரொம்ப நல்லா இருக்கும்.
பதிலளிநீக்குஒரு தடவை புளியோதரை எங்களுக்குத் தருவதற்கு முன்னால் பாத்திரத்திலிருந்து 25 மிளகாய்களை எடுத்தார். கடைசியில் காரத்துக்காக புளிக்காய்ச்சலிலேயே முழு நீள மிளகாய்களை வறுத்துச் சேர்த்திருப்பாரோ எனத் தோன்றியது.
ஓ! நான் திருச்சேறை போனதில்லை என்று நினைக்கிறேன். அவரிடமே குறிப்புகள் கேட்டிருக்கலாமே நெல்லை.
நீக்குஇது எனக்கு திருக்குறுங்குடி கோயிலில் இருந்த மாமாவிடம் கற்றுக் கொண்டது. அவர் ஊருக்கே செய்யும் அளவு பக்கா கணக்கு சொன்னார். அந்த அளவை நான் சிறிய அளவுக்கு கணக்கிட்டு, தோராயமாக என் அனுபவத்தில் செய்ததை வைத்துத் தொடர்ந்து செய்கிறேன். என் மாமியார் மாமனார் மாமியாரின் அம்மா என்று எல்லோரும் எனக்குத் திருமணம் ஆன புதிதில் திருவனந்தபுரம் வந்திருந்த போது கேரளத் திருப்பதி கோயில்களுக்கு அழைத்துச் சென்ற போது கையில் கொண்டு போக புளியோதரை, தயிர்சாதம் செய்திருந்தேன்! மூவருமே ரொம்ப பாராட்டினாங்க. வெந்தயம் பெருங்காயம் எல்லாம் நல்ல வாசனையா இருக்குன்னு. அப்ப எல் ஜி கட்டி தானே யூஸ் பண்ணினேன். ஆனால் இப்போது ஏனோ எல் ஜி கட்டி சரியாகப் பொரிவதில்லை போன்ற உணர்வு எனக்கு. அல்லது எனக்குச் செய்யத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
ஆனால் demart extra strong என்று டிமர்ட்டில் பெருங்காயப் பொடி நல்ல மணமாக இருக்கு.
இப்போது எல்ஜி கட்டி வாங்கறதில்லை அதற்குப் பதிலாக கிரிஸ்டல் கட்டிகள் வாங்குகிறேன். அருகில் ஒரு கடையில்
ஆமாம் கிள்ளிப் போடும் மிளகாய்களைக் குறைத்துக் கொண்டு வறுத்துப் பொடி போட்டுவிடலாம். என் பாட்டியின் சித்தி அப்போது வியாபாரம் செய்த போது அப்படித்தான் வறுத்து மொறு மொறு என்று இருக்கும் டார்க் மிளகாய்களைக் கையால் நொறுக்கிக் கலந்துவிடுவாங்களாம். புளிக்காய்ச்சல் செய்யும் போது. அதை அடுத்த பகுதிரெடி மிக்ஸில் சொல்லியிருக்கிறேன்.
மிக்க நன்றி நெல்லை
கீதா
இப்போதெல்லாம் சாத்த்தின் அளவை மிகவும் குறைத்துவிட்டேன். அதனால் கலந்த சாதம் சாப்பிடும் வாய்ப்பு குறைவு.
பதிலளிநீக்குஆனாலும் இந்தப் புளிக்காய்ச்சலை செய்துபார்க்கப் போகிறேன்.
ஆமாம் இங்கும் அப்படித்தான் நெல்லை. யாரேனும் கேட்டால், மகனுக்கு என்று செய்வதுதான் பெரும்பாலும்.
நீக்குசெஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க என்னை திட்டாதீங்க!!!!!!!!!!!!!! ஹிஹிஹிஹி
மிக்க நன்றி நெல்லை
கீதா
படங்களுடன் பதிவு தெளிவாக இருக்கு. நல்ல உழைப்பு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நெல்லை
நீக்குகீதா
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க துரை அண்ணா...
நீக்குகீதா
அவசரத்தில் புலிக்கு காய்ச்சல் என்று படித்து விட்டேன்.
பதிலளிநீக்குஹாஹாஹாஹா கில்லர்ஜி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குகீதா
மிகத்தெளிவாக, விரிவாக, அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கீதா! முதல் முறை சொன்ன குறிப்பு தான் நானும் செய்வது. ஆனால் தாளிக்கும்போது கடலைப்பருப்போடு பச்சை வேர்க்கடலை நிறைய சேர்த்து வதக்கி புளிக்காய்ச்சல் செய்வேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ அக்கா. நீங்களும் முதல் முறையில் செய்வதை அறிந்து. நானும் பச்சை வேர்க்கடலை வறுத்துச் சேர்ப்பதுண்டு காய்ச்சும் போது ஆனால் ரொம்ப நாள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சேர்ப்பதில்லை என்பதோடு இது அங்கு கோயிலில் கடலை சேர்க்காமதான் செய்வாங்க. மாமா கொடுத்த குறிப்பு என்பதாலும் அப்போது நம் வீட்டிலும் கடலை சேர்க்கும் வழக்கம் இலலததாலும் அப்படியே கொடுத்தேன்.
நீக்குஇப்போ அங்கும் கோயிலில் சேர்ப்பார்களோ என்னவோ தெரியவில்லை. திருக்குறுங்குடி கோயில் புளியோதரை சாப்பிட்டு ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது.
புளியோதரை கலக்கும் போது வறுத்த கடலையைச் சேர்த்து செய்கிறேன் காய்ச்சும் போது போடவில்லை என்றால்.
மிக்க நன்றி மனோ அக்கா.
கீதா
அருமை..
பதிலளிநீக்குஆனாலும் -
மிக்க நன்றி துரை அண்ணா.
நீக்குஆனாலும் - என்பதற்கான அர்த்தமும் காரணமும் தெரியும் துரை அண்ணா நீங்க முன்னரே சொல்லியிருக்கீங்க.
கீதா
பதிலளிநீக்குஆனாலும்,
ஒன்றரை ஆண்டுகளாக
சமையலில் நல்லெண்ணெய்
புளிப்பு, காரம் அறவே கிடையாது..
உப்பு நாலில் ஒரு பங்கு தான்..
எனது தீவினை எனக்கு அளித்திருக்கும் தண்டனை இது..
சமையலில்
சிறிதளவு மிளகு மட்டுமே..
தவிர்க்க இயலாத சூழ்நிலையில் உறவு முறை வீடுகளுக்குச் செல்வதே எனக்குப் பரிதாபம்..
கொடுமையிலும் கொடுமையாக உணவகங்களுக்குச் சென்றால் அவனவனும் இஷ்டத்திற்கு இட்டலி மாவிலும் சட்டினிகளிலும் விளையாடி வைக்கின்றனர்..
வெளியில் தின்பண்டங்களில் சோடா உப்பும் வேறு சில ரசாயனங்களும் சேர்க்கப்படுவதால் அவையும் ஒதுக்கப்பட்டு விட்டன..
புளிப்புச் சுவை உடைய பழங்களும் ஒத்துக் கொள்வதில்லை..
உங்கள் ஒவ்வாமை பற்றி சொல்லியிருக்கீங்க அவ்வப்போது சொல்கிறீர்கள்....நிறைய தவிர்க்க வேண்டிய கட்டாயம் என்பதும் தெரிகிறது. உங்கள் உடல் நலம் விரைவில் சரியாகிடும் துரை அண்ணா.
நீக்குகீதா
நீக்கு@ கீதா..
/// உடல் நலம் விரைவில் சரியாகிடும் துரை அண்ணா.. ///
தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..
நன்றி சகோ..
//நல்லெண்ணெய்
நீக்குபுளிப்பு, காரம் அறவே கிடையாது..
உப்பு நாலில் ஒரு பங்கு தான்..// - மற்றதெல்லாம் புரிகிறது. நல்லெண்ணெயை ஏன் தவிர்க்கச் சொல்லுகிறார்கள்? ஆச்சர்யம்.
விரைவில் உடல் சார்ந்த பிரச்சனைகள் நீங்கப் ப்ரார்த்திக்கிறேன்
நெல்லை அவர்களது அன்பினுக்கும் பிரார்த்தனைக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
நீக்குரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துள்ளது.. தனியாக வெளியில் சென்று வருகின்றேன்..
பதிலளிநீக்குஇவையே தற்போது இறைவனின் வரப்ரசாதம்..
ஆனால் முழங்காலில் வலி மட்டும் குறையவில்லை..
மிக நல்ல விஷயம் துரை அண்ணா. இன்னும் உங்கள் உடல்நலம் நன்றாக ஆகிவிடும், பாருங்க.
நீக்குமுழங்கால் வலியும் சரியாகிவிடும்...உங்களுக்கு ஏற்புடையது என்றால் ஃபிசியோ தெரப்பி மேற்கொள்ளலாம்.
கீதா
ஃபிசியோ தெரப்பி மேற்கொள்ளும் அளவுக்கு எல்லாம் பெரிய பிரச்னை இல்லை..
நீக்குதங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..
நன்றி சகோ..
தம்பி துரையின் உடல் நலம் மேம்படப் பிரார்த்தனைகள்
நீக்குநல்லவேளை புலிக்காய்ச்சல் என்று எழுதாமல் விட்டீர்களே!
பதிலளிநீக்குஒரு புளிக்காய்ச்சலில் எத்தனை வகை. இருவர் மட்டும் என்பதால் நாங்கள் இதை போன்ற பேஸ்ட் வகைகளை கடையில் வாங்கிக் கொள்வது வழக்கம்.
மதுரை அழகர் கோயில் புளியோதரை நன்றாக இருக்கும்.
Jayakumar
ஹாஹாஹாஹா ஜெகே அண்ணா...
நீக்குபுளிக்காய்ச்சலில் வகைகள் இருக்கு....காஞ்சிபுரம் ஸ்பெஷல் தனி அதுவும் குறிப்பு போடுகிறேன். ஆனா செய்யும் போது படங்கள் எடுக்கணுமே. இங்கு ஒரே வகைதான் கொடுத்திருக்கிறேன் பாட்டியும் அதே மெத்தட்தான் அது கணிசமா வரணும் என்பதற்காக அப்படிக் கொஞ்சம் வறுத்து சேர்ப்பாங்க சுவையில் எந்த மாறுதலும் இருக்காது.
மதுரை அழகர் கோயில் புளியோதரை சாப்பிட்டுருக்கிறேன். நன்றாக இருக்கும் கோயில் தோசையும் செமையா இருக்கும்.
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
எலுமிச்சை சாதத்தை விட எனக்கு மிகவும் பிடித்தமானது புளியோதரை தான்..
பதிலளிநீக்குகுவைத்தில் இருந்தபோது -
இந்தப் புளிப் பாய்ச்சலை
(புளிக் காய்ச்சலை) அடிக்கடி செய்வேன்..
இப்போது உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் போனது தான் காலக் கொடுமை..
புளியோதரை பெரும்பாலானோர்க்கு மிகவும் பிடித்தது என்று நினைக்கிறேன்.
நீக்குஉங்களுக்கு இதையும் சாப்பிடும் காலம் விரைவில் வந்துவிடும் எல்லாம் சரியாகிவிடும் துரை அண்ணா. இதுவும் கடந்து போகும்!
கீதா
@ கீதா..
நீக்கு/// இதுவும் கடந்து போகும்!..///
தங்கள் அன்பினுக்கு நன்றி சகோ..
புளிக்காச்சல் நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குமிக்க நன்றி மாதேவி
நீக்குகீதா
புளிக்காச்சல் செய்யும் முறை மிக விவரமாக இருக்கிறது கீதா.
பதிலளிநீக்குமுக்கிய குறிப்புக்கள் கொடுத்து மிக அழகாய் சொன்னீர்கள்.
நிறைய அளவு செய்ய உங்கள் செய்முறை விளக்கம் பயன்படும் கீதா.
புளியோதரை ரெடி மிக்ஸ் செய்முறை படிக்க ஆவல்.
மிக்க நன்றி கோமதிக்கா. ஆமாம் சமீபத்தில் 1 1/2 கிலோ புளியில் செய்தேன்.
நீக்குரெடி மிக்ஸ் இதே அளவுதான் கோமதிக்கா...அடுத்த பதிவில் சொல்கிறேன்
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
@ நெல்லை..
பதிலளிநீக்கு/// நல்லெண்ணெயை ஏன் தவிர்க்கச் சொல்கிறார்கள்?.. ///
உடலுக்கு ஒவ்வாத பொருட்களுடன் இது சேர்ந்து கொண்டு எதிர் வினையாற்றுகின்றதாம்..
சித்த மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது அகத்திக் கீரையும் பாகற்காயும் ஆகாதவை..
பதிலளிநீக்குபடிப்படியான செய்முறை அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி..
நீக்குகீதா
அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ
நீக்குகீதா
கிட்டத்தட்ட நானும் இப்படிச் செய்தாலும் தாளீப்பில் எல்லா மிளகாயும் போடுவதில்லை. பாதி போட்டுவிட்டு பாதியை வறூத்துச் சேர்ப்பேன். மற்றபடி நெய்யில் வறூத்த மிளகுப் பொடித்துச் சேர்ப்பேன்.
பதிலளிநீக்குகீதாக்கா கருத்துக்கு மிக்க நன்றி கீதாக்கா. மிளகுப் பொடி என் மாமியார் செய்யும் வகையில் உண்டு. அபப்டிச் செய்யும் போது நான் சேர்ப்பதுண்டு கீதாக்கா.
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபுளிக்காய்ச்சல் செய்முறை மிக அற்புதமாக விளக்கியிருக்கிறீர்கள். படங்கள் அனைத்தும் மிக நன்றாகவும், தெளிவாகவும் உள்ளது. எங்கள் அம்மா வீட்டில் அம்மா, பாட்டி இப்படித்தான் மிளகாயை கிள்ளி வறுத்து செய்வார்கள். நான் திருமணமான பின் எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்து போடும் செய்முறையில் செய்கிறேன். நானும் நிறைய தடவைகள் கொத்தமல்லி விதை மிளகு சேர்க்க மாட்டேன்.(லேசான சாம்பார் வாசனை வந்து விடுமோவென்றுதான்) ஆனால், இப்படி பலவிதங்களில், பல பொருட்களையும் சேர்த்து செய்யும் போது ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமான அனுபவங்களுடன் புளியோதரை வந்துள்ளது. உங்கள் பக்குவமான செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது. பார்க்கும் போதே செய்து சாப்பிடும் ஆவலைத் தூண்டுகிறது. அடுத்து புளியோதரை ரெடிமிகஸ் பக்குவம் குறித்து அறிய ஆவலாக உள்ளேன்.
அந்த திங்களுக்குள் வந்து விட்டேன். நீங்கள் கூறியபடி ஊறிய புளிக்காய்ச்சல் மிக, மிக நன்றாக இருக்கிறது. புளிக்காய்ச்சல் (நாங்கள் கொஜ்ஜூ என்போம்.) எப்போதுமே நாட்பட ஊறினால்தான் சுவை அதிகம் தரும். (இப்போதுதான் கு. சா பெட்டி கொஞ்ச நாட்கள் வைத்து சாப்பிட ஏதுவாக உள்ளதே..!) அதுவும் அது தீரும் தருணத்தில் அனைவருக்குள்ளும் ஒரு போட்டி மனப்பான்மையும் வந்து விடும். ஹா ஹா. தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹாஹாஹா கமலாக்கா வெந்தயம் சேர்ப்பதால் ஊற ஊறத்தான் நன்றாக இருக்கும்.
நீக்குகொஜ்ஜூ என்று ஆந்திராவில் சொல்லிக் கேட்டிருக்கிறேன் ....
ஆமாம் நானும் மிளகு தனியா சேர்ப்பதில்லை நீங்களும் இக்கட்சியா ஹைஃபைவ்!
ஆஅமாம் கு பா வில் வைத்துவிட்டால் அதுபாட்டுக்குக் கிடக்கும். முன்பெல்லாம் பாட்டி செய்து வைத்து தினமும் கிளறிக் கொடுப்பார் அடி எண்ணை மேலே வரும் இப்படி புரட்டி புரட்டிக் கொடுத்து நாள் பட வைத்துக் கொள்வார்.
மிக்க நன்றி க்மலாக்கா. இனிமேல்தான் எழுத வேண்டும் புளிக்காச்சல் ரெடி மிக்ஸ்...
கீதா