திங்கள், 30 அக்டோபர், 2023

"திங்க" க்கிழமை  : புளிக்காய்ச்சல் ரெடி மிக்ஸ் - கீதா ரெங்கன் ரெஸிப்பி 

 

புளிக்காய்ச்சல் மற்றும் புளியோதரை ரெடி மிக்ஸ் செய்முறை

சென்ற "திங்க"வின் தொடர்ச்சி…….

என் அன்பு (சாப்பாட்டு) ரசிகப் பெருமக்களே! வாங்க வாங்க… புளியோதரை பொடி ரெடி மிக்ஸ் அடுத்த திங்க வில் சொல்கிறேன் என்று சொல்லி முடித்திருந்தேன். அதுதான் இந்த வாரம் திங்கவில். பெரிய சூத்திரம் எதுவும் இல்லைங்க. உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இது சும்மானாலும் நான், வேக்குவம் பாக்கிங்க் செய்யாத காலங்களில், எண்ணை வழியாமல் போக வேண்டுமே என்பதால் மகனுக்கு எப்படிச் செய்து கொடுத்தேன் என்பதைத்தான் இங்கு சொல்லப் போகிறேன்.

அளவு சென்ற ======> திங்க பதிவில்  <====== (இங்க போய் பார்த்துக்கோங்க) கொடுத்த அதே அளவுதான். எண்ணையைத் தவிர. இப்படிச் செய்வதற்கு எண்ணை 3 டேபிள் ஸ்பூன் போதும். ரொம்ப அளவு கூட்டிச் செய்தால் மட்டும் அதற்கு ஏற்றாற் போல் எண்ணையைக் கொஞ்சம் கூட்டிக் கொள்ளலாம்.

அப்பதிவில் சொன்னது போல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை அனைத்தையும் அளந்து எடுத்து வைத்துக் கொண்டு,

முதலில் வெறும் வாணலியில் வெந்தயம், பெருங்காயத்தை வறுத்து வைத்துக் கொண்டுவிடுங்கள். 

கட்டிப் பெருங்காயம் பயன்படுத்தினால் வெறும் வாணலியில் இந்த அளவுதான் (முதல் படம்) பொரிய வேண்டும் கலர் மாறினால் சுவை மாறும். 

எண்ணையில் வறுத்துப் பொடிக்க –

அளவு @ சென்ற பதிவில் சொன்ன அளவை வைத்துச் சொல்கிறேன்.

மிளகாய் 40 எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் அதில் 15 மிளகாயைச் சிறியதாகக் கிள்ளி / கட் செய்து  கொள்ளுங்கள். மீதமுள்ள 25 மிளகாய்களை அப்படியே வைச்சுக்கோங்க. நீங்கள் எந்த அளவு எடுத்துக்கறீங்களோ அந்த அளவுப்படி இந்த விகிதத்தில் பிரித்துக் கொள்ளுங்கள். (என் பாட்டியின் சித்தி அந்தக் காலத்தில் உணவு வியாபாரம் செய்தார்களாம். அப்போது புளிக்காய்ச்சலில் கொஞ்சம் மிளகாய்களை மட்டுமே கிள்ளிப் போட்டுத் தாளித்து நல்ல ஆழ்ந்த வண்ணத்தில் பொரித்துக் கொண்டு மற்ற மிளகாய்களைக் கிள்ளிப் போடாமல் அப்படியே நன்றாகச் சிவக்க வறுத்துக் கொண்டு அது நல்ல மொறு மொறு என்று இருக்கும் என்பதால் கையால் நொறுக்கி, புளிக்காய்ச்சல் கொதிக்கும் போது போட்டு விடுவார்களாம். என் பாட்டியும் அப்படிச் செய்ததுண்டு. நானும்)

பருப்புகளில் – உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஒவ்வொன்றிலும் பாதி அளவை தனியாக எடுத்து வைச்சுக்கோங்க.

வாணலியில் ½ டேபிள் ஸ்பூன் நல்லெண்ணை விட்டு அதில் தனியாக எடுத்து வைத்த (இங்கு 25) மிளகாய்களை மிதமான தீயில் வறுக்கவும். அப்படி வறுக்கும் போது கொஞ்சம் நிறம் மாறத் தொடங்கும் போது எடுத்து வைத்திருக்கும் பாதி அளவு பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். மிளகாய்களும் நன்றாகச் சிவந்து வந்துவிடும். வறுபட்டதும் தட்டில் மாற்றிவிடுங்க. ஆறட்டும். (வறுக்கும் படம், வறுத்தவை எங்கேன்னு கேக்காதீங்க! போயே போச்!!)

தாளிப்பதற்கு - 

அடுத்து அரை டேபிள் ஸ்பூன் நல்லெண்ணை விட்டுக் கொண்டு அதில் கிள்ளி வைத்த மிளகாய்களைப் போட்டு நன்றாகச் சிவந்து கரும் நிறம் வரும் போது மீதமுள்ள பருப்புகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். கருகப்பிலை ஒரு கொத்து போட்டுக்கோங்க. (போட்ட பின் எடுத்த படமும் காணவில்லை)

புளி உப்பு வறுத்தல்

அடுத்து புளியை சின்னதாகக் கிள்ளிக் கொண்டு 2 டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டுக் கொண்டு ஈரம் போக வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதை அதே வாணலியில்/சட்டியில் செய்யலாம் அல்லது தனியாக வாணலியில்/சட்டியில் செய்யலாம். அதே வாணலியில் செய்தால் மேலே சொன்னவற்றை வரிசையாக செய்து விட்டுக் கடைசியில் புளியை வறுக்கவும். ஏனென்றால் புளி வறுக்கும் போது வாணலியில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டு கறுப்பாகும். நான் தனியாக மண்சட்டியில் செய்வது வழக்கம். புளியில் கொட்டை, கோது இருந்தால் நீக்கி விடுங்கள், அப்படி இல்லாத புளி என்றால் நல்லது.

அதோடு உப்பையும் போட்டு ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். அடுத்து அதில் மஞ்சள் பொடியையும் போட்டுக் கொள்ளவும்.




பொடித்தல் - சேர்த்தல்

எல்லாம் ஆறிய பிறகு முதலில் வெந்தயம் பெருங்காயத்தை நன்றாகப் பொடித்துக் கொண்டு விடுங்கள் நைஸாக. அடுத்து எண்ணையில் வறுத்துப் பொடிக்க என்று சொன்னவற்றைச் செய்து ஆற வைத்ததைச் சேர்த்து பொடித்துக் கொள்ளுங்கள். கடைசியாக உப்பு மஞ்சள் பொடியோடு இருக்கும் புளியைப் பிரித்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.


எல்லாம் நன்றாகப் பொடித்த பிறகு அதை அகலமான பாத்திரத்தில் போட்டு தாளித்தவற்றைப் போட்டு நன்றாகக் கலந்து விடுங்கள். நான் தாளித்த வாணலியிலேயே போட்டுக் கலந்துவிட்டேன்.


பொடி..... தயார்

பொடி தயார். சரியாக வந்திருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்க்க பொடியை கலக்கிவிட்டு அதிலிருந்து இரண்டு மேசைக்கரண்டி எடுத்து மூழ்கும் அளவு தண்ணீர் விட்டுக் கலக்கிக் கொண்டு வாணலியில் 4 மேசைக்கரண்டி நல்லெண்ணை விட்டு அதில் இந்தக் கரைசலை விட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டுக் கிளறினால் புளிக்காய்ச்சல் தயார்.

இங்கு படத்தில் காட்டியிருப்பது தயாரித்த பொடியில் கால் கோப்பை எடுத்துக் கொண்டு செய்தது. நல்ல பேஸ்ட் போன்று வந்திருப்பது படத்தில் தெரியும். உப்பு தேவையாக இருந்தால் இதில் பொடி உப்பு கலந்து கொள்ளலாம். புளியோதரை தயார் செய்ய புளிக்காய்ச்சல் தயார்.


முதல் படம் பொடியை தண்ணீரில் கலந்து ....அடுத்த படம் நல்லெண்ணையில் வதக்குதல்/காய்ச்சுதல்

நல்ல பேஸ்ட் போன்று வந்திருப்பது படத்தில் தெரியும்.

எப்போதுமே புளியோதரை கலக்கும் முன், உதிர வடித்த சூடான சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் அல்லது குழிவான தட்டில் போட்டு, அதில் கொஞ்சம் நல்லெண்ணை, கருகப்பிலை, ஒரு சிட்டிகை உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு நடுவில் குழித்துக் கொண்டு உத்தேசமான அளவில் புளிக்காய்ச்சலை போட்டு சூடு சாதத்தைக் குவித்து மூடிவிடுவது என் வழக்கம். 

அதன் பின் ஆறியதும் தான் அதைக் கலைத்து கலப்பதுண்டு. முள் கரண்டியால். அப்போது சாதம் தேவையாக இருந்தாலோ அல்லது புளிக்காய்ச்சல் தேவையாக இருந்தாலோ கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். புளியோதரை கலந்த படம் எடுத்திருந்தேன் ஆனால் ரொம்ப Blur ஆக வந்திருந்தது. அதனால் இங்கு இல்லை. இருட்டுப் பகுதியில் மின்சார விளக்கில் என் மூன்றாவது விழி சரியாக எடுக்காது!!!

அப்போதைய மொபைலில் கேமராவும் அவ்வளவு சரியாக இருந்ததில்லை.

இவ்வளவுதாங்க புளியோதரை ரெடி மிக்ஸ், மேட்டர்! 

(கீதா இது உனக்கே நல்லாருக்கா!! எங்களை எல்லாம் இப்படி பரிசோதனை எலிகளாக்கிட்டியே!!!)


52 கருத்துகள்:

  1. இந்த புளியோதரைப் பொடி வித்யாசமாக உள்ளது. சாதாரணமாக பொடியை நேரே சாதத்தில் போட்டு கிளறி உபயோகிப்பர். ஆனால் நீங்கள் பொடியை பேஸ்ட் ஆக்கி உபயோகிக்க சொல்கிறீர்கள்.

    அடுத்தது கேரள சம்மந்திப்பொடி செய்து பதிவு இடுங்கள். இப்படி பருப்புப்பொடி, கறிவேப்பிலை போடி, நார்த்தங்காய் பொடி, எலுமிச்சை பொடி, பூண்டுப்பொடி என்று தொடரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா மேடம் சொன்ன தேங்காய் மிளகாய் பொடிதான் சம்மந்திப்பொடி. நகைச்சுவை இல்லை.

      நீக்கு
    2. பொடி போடி ஆகிவிட்டது. திருத்தி வாசிக்கவும். மன்னிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
    3. ஜெ கே அண்ணா மிக்க நன்றி.

      நீங்கள் சொல்லியிருப்பது போலும் செய்வதுண்டு. அப்படியே கலப்பது ஆனால் அது ஒரு வேளைக்கு, கொஞ்சமாக என்று தயாரிக்கும் போது புளி கொஞ்சம் என்பதால் வறுத்துக் கொள்வது எளிதாக இருக்கும். இப்படிப் பெரிய அளவில் செய்யும் போது புளிக்காய்ச்சலுக்கான புளி சரியான பதம் வராது பச்சை வாசனை வரும். அதனால்தான் காய்க்சல் என்கிறோம்.

      மற்ற பொடி வகைகளுக்குப் புளி சேர்த்தாலும் அடுப்பில் வைத்துக் காய்ச்சுதல் என்பது கிடையாது. அப்படியே போடுவது அதுவும் சிறிதளவு என்பதால் பொடி வகைகள் பிரச்சனை இல்லை. ஆனால் இது இப்படிச் செய்தால்தான் புளியோதரை சுவை வரும்.

      எம் டி ஆரின் புளியோதரை மிக்ஸ் கூட அடுப்பில் வைத்துக் கொஞ்சம் புரட்டி எடுக்கும்படிதான் சொல்கிறார்கள்.

      கீதா

      நீக்கு
    4. நீங்கள் சொல்லியிருக்கும் மற்ற பொடிகள் இன்னும் பிற ரெடி தயாரிப்புகள் மகனுக்குச் செய்து கொடுத்ததுண்டு. மோர்க்குழம்பு, சாம்பார் உட்பட.

      சம்மந்திப் பொடி உட்பட. கேரள நாடன் சம்மந்தி பொடியில் சிலர் கொஞ்சம் சின்ன வெங்காயம் வதக்கி/வறுத்தும் சிலர் பூண்டும் சேர்த்துச் செய்வதுண்டு.

      எங்களுக்கு இதுவும் பிடிக்கும் என்பதால் இப்படியும் செய்து கொடுத்ததுண்டு.

      இடையில் எங்கள் சூழல் மாறியதால் பல பிரச்சனைகள் வந்த போது இப்படிச் செய்து கொடுத்ததுண்டு. ஆனால் எனக்குச் சாமர்த்தியம் பத்தாது. இரண்டாவது நம் வீட்டில் உணவு என்பது காசு வாங்கக் கூடாது என்ற கொள்கையும் உண்டு என்பதால்.

      வீட்டில் செய்யும் போது முடிந்தால் படங்கள் எடுக்க முடிந்தால் எபிக்கு அனுப்புகிறேன்.

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா.

      கீதா

      நீக்கு
    5. ஸ்ரீராம் கூடக் கேட்டிருந்தார் என்னெல்லாம் கொடுத்து அனுப்பினீங்கன்னு....அதை ஒரு பதிவில் சொல்கிறேன் என்று பதில் கருத்தில் சொன்னேன்...இன்னும் எழுதவில்லை !!!!!

      கீதா

      நீக்கு
    6. //உணவுன்னா காசு வாங்கக்கூடாது// அப்போ நான் தப்பித்தேன் கீதா ரங்கன்.

      நீக்கு
    7. எனக்கு கேரள சம்மந்நிப்பொடி மிகவும் பிடித்தமானது

      நீக்கு
    8. /உணவுன்னா காசு வாங்கக்கூடாது// அப்போ நான் தப்பித்தேன் கீதா ரங்கன்.//

      ஹாஹாஹாஹா....அப்படினாக்க என்ன சொல்ல வரீங்க!!!! நான் எதுவும் உங்களுக்குச் செஞ்சு தரலையே!!!! இனிமே செஞ்சு தரேன்னு சொல்லவும் மாட்டேன் போதுமா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    9. எனக்கு கேரள சம்மந்நிப்பொடி மிகவும் பிடித்தமானது//

      எனக்கும், கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
    10. இதில் சரியா வருதானு பார்க்கிறேன். இது ஏதோ புதுசு. சரியா வருது. புளிக்காய்ச்சல்ப் பொடி நானும் இப்படித் தான் தயாரிப்பேன். தயாரிக்கிறேன். மற்றப் பொடி வகைகளும் என்னோட சாப்பிடலாம் வாங்க வலைப்பக்கத்தில் காணக்கிடைக்கும். பாரம்பரியச் சமையல்கள் புத்தகத்திலும் முதல் புத்தகத்தில் கிடைக்கும். இஃகி,இஃகி, சின்ன விளம்பரந்தேன்.

      நீக்கு
    11. விளம்பரம்லாம் இருக்கட்டும். சொப்புச் சாமான்களில் தளிகை பண்ணுபவருக்கு புளிக்காய்ச்சல் பொடி எதுக்கு?

      நீக்கு
    12. கீதாக்கா, நீங்கள் எவ்வளவு அனுபவஸ்தர்! உங்க கருத்திற்கு மிக்க நன்றி. உங்கள் பக்கமும் பார்த்திருக்கிறேன். சாப்பிடலாம் வாங்க பகுதியில்.

      விளம்பரம்னு சொல்லிட்டு அந்த லிங்கும் கொடுத்திருக்காலாம்ல கீதாக்கா...மத்தவங்களுக்கு உபயோகமா இருக்குமே. எங்கிட்ட லிங்க் உண்டு.

      இதோ கீதாக்காவின் சாப்பிடலாம் வாங்க லிங்க்.

      https://geetha-sambasivam.blogspot.com/

      அக்கா அப்புறம் எந்த திப்பிஸமும் செய்யலையோ. அப்புறம் காணலையே

      கீதா

      நீக்கு
    13. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை ஏன் சொப்பு சாமான்ல சமையல் செஞ்சா புளியோதரைப் பொடி செய்யக் கூடாதுன்னு இருக்கா!!!! பொடிதானே கெட்டுப் போகாது. எப்ப வேணும்னாலமும் கொஞ்சமா எடுத்துச் செய்துக்கலாமே!!!

      கீதா

      நீக்கு
    14. அதுவே மிஞ்சிப் போய்ச் சாப்பிட ஆளைக்காணோமாம். நிறையப் பண்ணி என்ன செய்யறது?

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரி

    புளிக்காய்ச்சல் ரெடி மிக்ஸ் பொடி செய்முறை, படங்கள் என அனைத்தும் அருமையாக வந்துள்ளது. இது நிறைய நாட்கள் வைத்திருந்து உபயோகப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. உங்களின் நல்லதொரு செய்முறை பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நான் தேங்காய் மிளகாய்பொடி செய்தால், அதை அப்படியே சாதத்தில் கலந்து சாப்பிடுவோம். ஆனால் அதற்கு தொட்டுக் கொள்ள நீர்க்க ஏதாவது காய்கறி கலந்த கூட்டுக்கள், இல்லை தயிர் சார்ந்த ஏதாவது ஒன்று உடன் வேண்டும். இல்லையென்றால், இட்லி தோசைக்கு இப்படித்தான் தேங்காய் மி. பொடியை நீரில் கலந்து தேங்காய் கார சட்னியாகவும் தொட்டுக் கொள்ளலாம்.

    வெறும் பச்சை மிளகாய் பொட்டுக்கடலை, தேங்காய், (கொஞ்சம் வதக்கிக் கொள்ளலாம்) தேவைகேற்ப புளி, உப்பு கலந்த சட்னியையும் இப்படி நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்வேன். இதுவும் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். வீட்டிலும் அவ்வப்போது அவசரத்தில் ஒரு சட்னியாகவும் உருமாற்றி செய்வேன். வெளியில் பிராயணத்திற்கும் செல்லும் போது, இட்லிக்கு உபயோகமாக இருக்கும். சட்டென நீர் கலந்து சட்னியாக்கி விடலாம்.

    தினசரி செய்யும் தேங்காய் சட்னி என்றால் உடனே காலி செய்ய வேண்டும். இல்லையென்றால், அன்று செய்யும் காய்கறி கூட்டுகளிலோ, தயிர் பச்சடி மாதிரியோ செய்து காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகி விடும்.

    இந்த மாதிரி கவனமாக செய்து வைத்துக் கொள்ளும் பொடி வகைகள் உபயோகமாகத்தான் உள்ளது. தங்கள் செய்முறை நன்றாக உள்ளது. நானும் இதைப்போலவே செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையெல்லாம் செய்முறை எழுதி எபி திங்களுக்கு . .உங்களிடமிருந்தும் லாங் டியூ..

      நீக்கு
    2. //இதையெல்லாம் செய்முறை எழுதி எபி திங்களுக்கு . .உங்களிடமிருந்தும் லாங் டியூ..// ஆஃபிஸில் மெமோ கொடுக்கிற மாதிரி இருக்குது.

      நீக்கு
    3. கமலாக்கா இதுவும் செய்து வைத்துக் கொள்வதுண்டு. மகனுக்கும் செய்துகொடுத்ததுண்டு. அக்கா தேங்காய் வதக்கியும் செய்யலாம் சிவக்காமல்.... இல்லை என்றால் கடைகளில் ட்ரை தேங்காய் பொடி கிடைக்கிறதே இல்லை கொப்பரை அதைத் துருவியும் சேர்த்துச் செய்யலாம். மகனுக்கு அப்படித்தான் தேங்காய் சேர்க்கும் பொடிகள், மோர்க்குழம்புக்கான ரெடி தயாரிப்புகள் செய்து கொடுக்கிறேன். நீங்களும் உலர் தேங்காய் பொடியில் செய்து பாருங்க அது வதக்க வேண்டாம். கு பெ யில் வைத்துக் கொள்ளலாம்

      மிக்க நன்றி கமலாக்கா

      வேலை முடித்து வருகிறேன் இப்ப ஆஜர் வைச்சுட்டுப் போகிறேன்

      கீதா

      நீக்கு
    4. // ஆஃபிஸில் மெமோ கொடுக்கிற மாதிரி இருக்குது. //

      ஹிஹிஹி...

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. கருத்து சொல்ற நேரத்தில் தனிப்பதிவு தருகின்ற சாகசம்.. கமலா ஹரிஹரன் வாழ்க..

    நல்ல பதிவு..
    கீதா ரங்கன் அவர்களுக்கும் கமலா ஹரிஹரன் அவர்களுக்கும்
    நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
    2. /கருத்து சொல்ற நேரத்தில் தனிப்பதிவு தருகின்ற சாகசம்.. கமலா ஹரிஹரன் வாழ்க./

      ஹா ஹா ஹா.. மிக்க நன்றி சகோதரரே.

      நீக்கு
  6. செய்முறை நன்று. செய்துபார்க்கிறேன்.

    கமலா ஹரிஹரன் மேடம் தேங்காய் மி பொடி செய்முறை எழுதட்டும். நீங்கள் முதலில் மோர்க்குழம்புப் பொடி முறையை எழுதிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா...அது செய்யறப்பதானே..இப்ப ஃப்ரெஷ் தேங்கா போட்டுத்தானே செய்கிறேன்.

      உங்க ஹஸ்பன்ட் கிட்ட சொன்னேனே அன்று. ஆனா அவங்க செய்யும் மோர்க்குழம்பு என் மாமியார் வீட்டில் செய்யும் வகை. அதுவும் நான் மகனுக்குச் செய்து கொடுத்தத்ண்டு ரெடிமேட்.

      ஆனால் உங்கள் வீட்டில் அதே பொருட்கள் போட்டுச் செய்தாலும் செய்யும் முறை ப்ரப்போர்ஷன் வேறாக இருக்கும் அதனால நான் எப்படிச் செய்யறதுன்னு சொல்லிவிடுகிறேன் நீங்க உங்க ப்ரொப்போர்ஷன் போட்டுச் செய்ங்கன்னு சொன்னேன்.

      நான் திருநெல்வேலி மோர்க்குழம்பு என்றதும் உங்க ஹஸ்பன்ட் - அவர் அப்படியா சொன்னார்? ன்னு கேட்டாங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹாஹா நான் சிரிச்சு முடியலை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  7. பஹ்ரைனில் தேங்காய் தூள்கள் (கொப்பரைல எடுத்து மூடை மூடையா விற்பனைக்கு வருவது) நீர் சேர்த்து ஊறவைத்து மற்ற சில பல சாமான்களைப் போட்டு கெட்டிச் சட்னி நிறைய அரைத்து, ஃப்ரீஸரில் வைத்துவிட்டு, அன்றன்றைக்கு கொஞ்சம் கொஞ்சம் எடுத்து கொஞ்சம் நீர் விட்டு சட்னி ஆக்குவாங்க. அதன் பிறகு ஹோட்டல் சட்னினாலே எனக்குச் சந்தேகம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவங்க அப்படிச் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. பொடியைத் தயாராக வைத்துக்கொண்டு தேவைப்படும் போது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளலாம்.

      நான் பொதுவாகவே உணவகங்களில் காலை 11 மணிக்கு அலல்து அதுக்கு மேல் டிஃபன் சாப்பிடும்படி ஆனால் கண்டிப்பாகத் தேங்காய்ச் சட்னியைத் தவிர்த்துவிடுவேன். சில உணவகங்களில் மாலையில் சில்லென்று சட்னி தருகிறார்கள். குளிர்சாதனப்பெட்டியிலிருந்து என்று தெரிந்துவிடும். தவிர்த்துவிடுவேன்.

      உங்க கருத்துகள் எல்லாத்துக்கும் நன்றி நெல்லை. அங்க சொல்ல விட்டுப் போச்சு!

      கீதா

      நீக்கு
    2. போச்சு! மீண்டும் ப்ளாகர் படுத்தத் தொடங்கிவிட்டது! இங்கு போட்ட கருத்து காணவில்லை. பின்னாடி வரும்...

      கீதா

      நீக்கு
  8. பார்ப்பதற்கு கிரேவி போலவே இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட கெட்டி கிரேவியாக இருக்கும் கில்லர்ஜி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் செய்வாங்க.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
    2. ஆ! கில்லர்ஜி உங்களுக்கு நான் போட்ட பதில் கருத்து கிரேவிக்குள்ள முங்கிடுச்சு போல! ஸ்ரீராம் அலல்து கௌ அண்ணா அதை எடுத்து இங்க கொண்டு வந்து போடணும்..

      இது கெட்டி கிரேவின்னு சொல்லலாம் கில்லர்ஜி.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  9. புளிக்காச்சல் மிக்ஸ் பொடி நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. Desiccated coconut நமது சமையலுக்கு ஒத்து வராது..

    ஆனால், அதை ஒத்துக் கொள்கின்ற காலம் வந்து கொண்டிருக்கின்றதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் சமையலுக்கு ஒத்து வராதுதான் என்றாலும் பல சமயங்களில் கை கொடுக்கிறது என்றுதான் சொல்வேன் துரை அண்ணா. மகனுக்கு fresh தேங்காய் போட்டுக் செய்து கொடுக்க முடியாதே எனவே இது உதவுகிறது. ஏற்க வேண்டிய நிலை வரும் போது ஏற்கத்தான் வேண்டும். மாற்றங்கள் ஒன்றே மாறாதது.

      சனிக்கிழமை, ஜெ கே அண்ணா பகிர்ந்திருந்த நான் படிச்ச கதை - கூழாங்கற்கள் நினைவுக்கு வருகிறது, துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
    2. இன்றைய பேக்கரிகளில் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றது.

      நீக்கு
    3. ஆமாம், பேக்கரிகளிலும், இங்கு பல இனிப்புக் கடைகளிலும்...இங்கு இந்த ஊரில்/கர்நாடகாவில் கொப்பரை பயன்பாடு அதிகம், துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
  11. கீதா! வழக்கம்போல செய்முறை விளக்கம் அருமை!
    கீதா! எனக்கு ஒரு விபரம் தேவை. இங்கே நம் ஊரில் எந்த brand கட்டிப்பெருங்காயம் நன்றாக இருக்கும்? எந்த பெருங்காயப்பொடி நன்றாக இருக்கும்? சமீபத்தில் தான் TT பெருங்காயப்பொடி நல்ல மணம், சுவையுடன் இருப்பதைக் கண்டு பிடித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ அக்கா மிக்க நன்றி. உங்கள் திறமையை விடவா...

      நம் ஊரில் பெருங்காயக் கட்டி, பொடி நான் பார்த்த வரையில் வட இந்திய ராஜஸ்தான் கட்டிகள், பொடிகள் மிக மிக மணம் மிக்கவை. விலை கூடுதல்தான். அக்கா உங்களுக்கு இங்கு ஒரு லிங்க் தருகிறேன். அதில் ஆன்லைனில் அங்கு மிகவும் புகழ்பெற்ற கடை ஆன்லைனில் விற்கிறார்கள் அவர்களின் தயாரிப்புகள் வேறு எங்கும் கிடையாது. Maharani Spices. Jodhpur. என் தங்கை பெண்ணிற்குச் சொல்லியிருந்தேன் ராஜஸ்தான் பெருங்காயம் நன்றாக இருக்கும் என்று. அவள் சமீபத்தில் ராஜஸ்தான் சுற்றுலா போய்வந்தாள். அப்போது எனக்கும் வாங்கி வந்திருக்கிறாள் இந்தக் கடையிலிருந்து. போஸ்டல் சார்ஜஸ் ரூ 80 சார்ஜ் செய்கிறார்கள் என்றும் அவள் விவரங்கள் அறிந்து சொன்னாள்.

      https://maharanispice.com/

      மற்றொன்று சம்பூர்ணா ஹோட்டல் பெருங்காயம் என்று இடையில் கிடைத்தது மிக மிக நல்ல மணம். அது பேஸ்ட் போன்று பால் பெருங்காயம் மணத்துடன் இருந்தது. தரமாகவும் இருந்தது. அரைகிலோ அளவில் கிடைத்தது. அது எனக்கு நன்றாக பல மாதங்கள் வந்தது. கொஞ்சம் போட்டாலே போதும். ஆனால் அதன் பின் அந்த டப்பா கிடைக்கவில்லை. இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது. அப்போது அதன் விலை அரைக்கிலோ 400-500க்குள் இருந்தது. இப்போது 250 கிராமே ரூ 750. நான் ஆன்லைனில் வாங்கவில்லை. அதன் லிங்க்

      https://www.ashatradingco.com/product-page/sampoorna-asafoetida-250g

      இங்கு நான் தற்போது பயன்படுத்தும் பொடி என்றால் Demart extra strong மிக நன்றாக இருக்கிறது மனோ அக்கா. கட்டுப்படியாகும் விலையில். எனவே இப்போதைக்கு இதுதான்.

      //சமீபத்தில் தான் TT பெருங்காயப்பொடி நல்ல மணம், சுவையுடன் இருப்பதைக் கண்டு பிடித்தேன்.//

      சூப்பர். குறித்துக் கொண்டுவிட்டேன் இங்குகிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

      மிக்க நன்றி மனோ அக்கா.

      கீதா

      நீக்கு
    2. அன்பு நன்றி கீதா! தகவல்களை குறித்துக்கொண்டு விட்டேன். தேடிப்பிடித்து வாங்க வேண்டும். எங்கள் உணவகத்திலேயே வட இந்திய மளிகைப்பொருள்கள் நிறைய உபயோகிக்கிறார்கள். அவ்வளவாக நான் கண்டு கொண்டதில்லை. இனி கவனிக்க வேண்டும். துபாயில் வட இந்திய மளிகைப்பொருள்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. போய் தேடிப்பார்க்கிறேன் ராஜஸ்தான் பெருங்காயத்தை!!

      நீக்கு
    3. மனோ அக்கா இங்கும் வட இந்திய கடைகள் நிறைய இருக்கின்றன. துபாய், அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் வட இந்தியக் கடைகள் நிறைய பார்க்கலாம் குறிப்ப்கா மளிகைப் பொருட்கள், இந்திய உடைகள் கடைகள்.

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. கொஞ்சம் நல்லெண்ணை, கருகப்பிலை, ஒரு சிட்டிகை உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு நடுவில் குழித்துக் கொண்டு உத்தேசமான அளவில் புளிக்காய்ச்சலை போட்டு சூடு சாதத்தைக் குவித்து மூடிவிடுவது என் வழக்கம்.

    அதன் பின் ஆறியதும் தான் அதைக் கலைத்து கலப்பதுண்டு. முள் கரண்டியால். அப்போது சாதம் தேவையாக இருந்தாலோ அல்லது புளிக்காய்ச்சல் தேவையாக இருந்தாலோ கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். //

    நானும் முள் கரண்டியால்தான் கலவை சாதங்களை கிளறுவேன்.

    கீதா படங்களும், செய்முறை விளக்கமும் அருமை. கவனமாக கவனிக்க வேண்டிய குறிப்புகள் எல்லாம் கொடுத்து மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். கடைசி படம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. ஆமாம் முள் கரண்டியால் கிளறி விடும்க் போது சாதம் உதிராக வரும்.

      //கீதா படங்களும், செய்முறை விளக்கமும் அருமை. கவனமாக கவனிக்க வேண்டிய குறிப்புகள் எல்லாம் கொடுத்து மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். கடைசி படம் நன்றாக இருக்கிறது.//

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  14. என் தாத்தா என் சித்தப்பவுடன் சேர்ந்து இந்த திடீர் புளியோதரை மிக்ஸ் செய்து வியாபாரம் செய்திருக்கிறார்.  போலவே வேறு சில திடீர் மிக்ஸ்களும் விற்றிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர், ஸ்ரீராம் அதுவும் அப்போதைய காலகட்டத்தில்!!! தாத்தாகிட்ட நிறைய கத்துக்கொண்டிருந்திருக்கலாமோ!! நானும் 1999-2000 ஆம் ஆண்டு செய்யத் தொடங்கினேன் வீட்டிற்காக. வெளியூர்ப்பயணங்கள் இருந்ததால்.

      கீதா

      நீக்கு
  15. புளியோதரை பொடி அருமை... செய்முறை விளக்கம் நேரில் சொல்வது போலவே இருக்கிறது...

    பயணம் என்றால் புளியோதரை தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி! ஆமாம் பெரும்பாலோர் பயணம் என்றால் புளியோதரைதான் செய்வது வழக்கம் டக்கென்று கெட்டுப் போகாதே!

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!