செவ்வாய், 17 ஜூலை, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத கோலம் - பானுமதி வெங்கடேஸ்வரன்




மாறிய காலம், மாறாத கோலம்
பானுமதி வெங்கடேஸ்வரன் 


சுகுமார் இரண்டாவது நாளாக பள்ளிக் கூடம் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான். சாதாரணமாக அப்படி சொல்லக் கூடியவன் கிடையாது. படிப்பில் சிறந்து விளங்கியதால் ஆசிரியர்களுக்கு பிடித்தமான மாணவன். முதல் நாள் தலை வலி, காய்ச்சல் வரும் போலிருகிறது என்றான். ஆனால் மதியதிற்கு மேல் விளையாட சென்று விட்டான். இன்றும் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்றதும் அவன் அம்மா கமலத்திற்கு கோபம் வந்தது.
“நீ நல்லா படிக்கிறியேனு சந்தோஷப் பட்டது தப்பு.. என்னாச்சு உனக்கு? ஏன் இஸ்கோலு போக மாட்டேங்கற?
“எனக்கு டவுசர், சட்டை, வாங்கி கொடு, நான் ஸ்கூல் போறேன்..”
“டவுசர், சட்டையா? இப்போ என்னடா டவுசரும்? சட்டையும்? நான் எங்க போக?”
“அப்போ நானும் ஸ்கூல் போக முடியாது.”
“தீவாளிக்கு வாங்கித் தரேன்.”
“நானும் தீவாளிக்கு பொறவு ஸ்கூல் போரேன்..”
மகன் பதிலுக்கு பதில் பேசியது கமலத்திற்கு எரிச்சல் ஊட்டியது. எல்லாத்துக்கும் பதில் சொல்றியா? என்று கீழே கிடந்த விசிறியை கையில் எடுத்துக் கொண்டு அவனை நோக்கி வந்தாள்.   
அம்மாவிடமிருந்து தப்பித்து ஓட முயற்சித்த சுகுமார் வாசல்படியில் தடுக்கி விழுந்தான், கமலம் அவனை விசிறி காம்பால் விளாசத் தொடங்க, எழுந்து ஓடியவன் பக்கத்து குடிசை ஆயா மீது மோதிக் கொண்டான். சுகுமாரை தழுவிக் கொண்ட ஆயா,
“தா, கமலம், இன்னாத்துக்கு புள்ளைய அடிக்கிற?”
“ஆங்.. தெனம் சோறு துங்கறதே பெரும் பாடா இருக்கு, ஏதோ ஒரு வேளை மதிய உணவு பள்ளிகூடத்துல போடறாங்களேனு அனுப்புனா தொரை புது டவுசர் இருந்தாதான் இஸ்கோலுக்கு போவாராம்..”
“ஏங்கண்ணு, அப்படியா சொல்ற…?" பரிவுடன் ஆயா கேட்டவுடன், சுகுமார், ’’இல்ல ஆயா, என்னோட டவுசர், சட்டை எல்லாம் கிழிஞ்சு கெடக்கு, அதை போட்டுக்கிட்டு போனா பசங்க கேலி பண்றாங்க..” சொல்லும் போதே அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
“அழுவாத கண்ணு, அம்மா வாங்கி கொடுக்கும். அதாரு? உன்னைய கேலி பண்றது? நான் உங்க பள்ளிகூடத்துக்கு வந்து வாத்தியாரண்ட சொல்றேன்..”
“ஐயோ ஆயா, அதெல்லாம் வாணாம்..”
சுகுமாரை சமாதானப் படுத்திய ஆயா, அவன் தாயாரிடம், “இந்தா கமலம், கொழந்தைக்கு டவுசர் வாங்கி கொடு, கிழிசலை போட்டுக்கிட்டு அது எப்புடி பள்ளிக்கூடம் போவும்?”
ஆயா சொன்ன பிறகு மகனுடைய ட்ரௌசரை எடுத்துப் பார்த்த கமலத்திற்கு அது அணிந்து கொள்ள முடியாத அளவிற்கு மோசமாக கிழிந்திருப்பது தெரிந்தது. உண்மையை தெரிந்து கொள்ளாமல் மகனை அடித்து விட்டோமே என்று துக்கம் பொங்கியது.
மறுநாள் தான் வேலை செய்யும் வீட்டில் அட்வான்ஸ் வாங்கி அம்மா அவனுக்கு சீருடை துணி வாங்கி தைக்கக் கொடுத்தாள். அது கிடைப்பதற்கு மேலும் இரண்டு நாட்கள் ஆகின. புது சீருடை அணிந்து கொண்டு பள்ளி சென்ற போது வகுப்பாசிரியர், “வாங்க சார்,  எங்க நாலு நாளா ஆள காணோம்..? மாப்பிள்ளை மாதிரி புதுசெல்லாம் பொட்டுக்கிட்டு வந்திருக்கீங்க..” என்று கிண்டலாக கேட்டதும், ஒரு பையன், “ஸார், அவனோட டவுசர் ஒரே கிழிசல் சார், அதான் அவன் வரல.. இப்பொ புதுசு தெச்சு போட்டுக்கிட்டு வந்திருக்கான்..” என்று கூற, சிலர் சிரித்தார்கள், சுகுமாருக்கு அவமானமாக இருந்தது.
“டேய்! உங்கிட்டயாடா கேட்டேன்?” என்று அந்த அதிகப்ரசங்கி மாணவனை அதட்டி விட்டு, வகுப்பெடுக்க ஆரம்பித்தார்.
சுகுமார் மேல் வகுப்புக்குச் சென்ற போது அதுவரை ரிக்ஷா ஓட்டிக் கொண்டிருந்த அவன் தந்தை ஆட்டோ ஒட்ட ஆரம்பித்தார். வாடிக்கையாளராக இருந்த வங்கி மேலாளர் ஒருவர் கடன் உதவி செய்ய, சொந்தமாக ஆட்டோ வாங்கியதோடு, ஸ்கூல் சவாரிகளும் கிடைக்க, நிரந்தர வருமானம் கிடைத்தது. வறுமை முற்றிலுமாக ஒழிந்து விடவில்லை, என்றாலும் கிழிசலை கட்டிக் கொள்ளும் அவலம் இல்லை.
அவன் பி.யூ.சி. படித்த பொழுது அவன் அத்தை வீட்டில் புதுமனை புகு விழா என்று அழைத்தார்கள். அவனிடமிருந்த உடைகளில் சிறந்ததை அணிந்து கொண்டு புறப்பட்டான்.
“அடடா! சுகுமாரா? பெரிய பையனாயிட்ட?” வாஞ்சையொடு வரவேற்ற அத்தை, சாப்பிட பலகாரம் கொடுத்தாள். அதை சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்ற போது தன் மகனிடம், “ஒன்னோட நல்ல பேண்ட் ஏதாவது சுகுமாருக்கு கொடு” என்று சொல்வது கேட்டது.
“ஏம்மா?”
“அவன் ஏதொ வெளுத்துப்போன பேண்டை மாட்டிக்கிட்டு வந்திருக்கான். நமக்குதான் கௌரவ குரைச்சல்”
சுகுமார், இனிமேல் இப்படிப்பட்ட இடங்களுக்கு வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டான்.
காலம் மாறியது. சுகுமாரின் படிப்பு அவனுக்கு நல்ல வேலையை பெற்றுத் தந்தது. முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு சட்டை, தனக்கும், தம்பிக்கும் டீ ஷர்ட் என்று வாங்கினான். பிறகு ஒவ்வொரு மாதமும் விதம் விதமாக உடைகள், தான் சிறு வயதில் ஆசைப்பட்டு வாங்கிக் கொள்ள முடியாததை எல்லாம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் வாங்கிக் கொண்டான்.
நல்ல இடத்தில் திருமணமும் நடந்தது. பானை பிடித்தவள் பாக்கியமோ என்னவோ வேலையை துறந்து விட்டு வியாபாரம் தொடங்கினான், அது சிகரத்தை தொட, சுகுமார் இன்று நகரில் ஒரு பெரும் புள்ளி. தோட்டம், நீச்சல் குளத்தோடு பங்களா, ஒரு இன்னொவா, ஒரு ஹோண்டா சிட்டி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று நிறைவான வாழ்க்கைதான். ஆனால் அவருடைய குழந்தைகள் அணிந்து கொள்ளும் உடைகள்தான் அவருக்கு வியப்பூட்டுகிறது.
மகள் அணிந்து கொள்ளும் சட்டையில் தோள்பட்டையில் கிழிந்தது போல ஒரு அமைப்பு. மகளும் சரி, மகன்களும் சரி எப்போதும் சாயம் போய் வெளுத்துப் போனது போல ஒரு ஜீன்ஸ்தான். அதிலும் அங்கங்கே கிழிசல்.
தான் எதிலிருந்து விடுபட நினைத்தோமோ அதை தன் குழந்தைகள் விரும்பி அணிவது அவருக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. இதைத்தான் ஐரனி என்பார்களோ?

76 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்!
    தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.
    (இது நம்ம பூஸாரின் அங்கிள், நமக்கெல்லாம் தாத்தா, கண்ணதாசன் அவர்களின் அனுபவ வரிகள். )
    கரெக்டா வெங்கட்ஜி தளத்தில் கருத்து போட்டு இங்கு ஓடி வரும் போது கரன்ட் போயி வந்தது. எனவே நெட்டும்….அங்கும் கருத்து போகலை…இங்கு வரும் போது நெட் வரலை…ஸோ லேட்டு
    கீதா

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். கவனமாக காலை மெசேஜ் தயார் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!

    :))

    பதிலளிநீக்கு
  5. நேற்றும் இன்றும்
    பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் கைவண்ணம்...

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  6. /// நேற்றும் இன்றும்
    பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் கைவண்ணம்...//

    நாளை(யும்) அவர்கள் கேள்வி வண்ணம் இருக்குமோ!

    பதிலளிநீக்கு
  7. இந்த நாள்....

    அனைவருக்கும்...


    மகிழ்வாக🤣🤣🤣🤣🤣..

    சிறப்பாக😍😍😍😍😍...

    அமைய...

    எனது வாழ்த்துக்களும்...🏋‍♂🏋‍♂🏋‍♂🏋‍♂💪💪💪💐💐💐☔☔☔🌻🌼🌻🌼

    பதிலளிநீக்கு
  8. ஹா ஹா ஹா ஹா.....பானுக்கா செம கதை...சூப்பர்!!!! ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க...ஷார்ட் அண்ட் ஸ்வீட். உங்களிடமும் கற்றுக் கொள்ள வேண்டும் இந்த ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா எழுத!! ஹா ஹா ஹா...மீ க்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பல சமயங்களில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இப்படியான நண்பர்கள் பள்ளி நாட்களில் உடன் இருந்திருக்கின்றனர்...

    காலம் கற்றுத் தந்த பாடங்களில் ஒன்று
    எளியவர்க்கு இரங்குதல் என்பதுவும்...

    இன்றைய நாட்களில் எப்படியெல்லாமோ ஆகிப் போனது....

    நல்ல கதை.. வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  10. அட! நேத்தும் பானுக்கா இன்றும் பானுக்கா ராக்ஸ்!!!

    ஆமாம் இப்படி ரெண்டு தி செ ல என்னோடதும் வந்துச்சே....ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம் கண்ணதாசன் அவர்களின் வரிகள் இன்று பானுக்காவின் கதைக்கு கொஞ்சம் பொருத்தமாக வருகிறதோ....என்றும் தோன்றியது

    கீதா

    பதிலளிநீக்கு
  12. // கண்ணதாசன் அவர்களின் வரிகள் இன்று பானுக்காவின் கதைக்கு கொஞ்சம் பொருத்தமாக வருகிறதோ...//

    ஆமாம் கீதா.. அக்காவின் கதை சுருக், நறுக்!

    பதிலளிநீக்கு
  13. துரை ஸார்.. எனக்கும் அனுபவம் உண்டு. தீபாவளிக்கு யுனிபார்ம்தான் புது ட்ரெஸ்! அதுவும் நீதியில் சந்திரபாபு அணிந்து வரும் ஸ்டைலில் இருக்கும். அதற்கென்றே தஞ்சையில் ஏழுமலை என்றொரு டெய்லர் இருந்தார்!

    பதிலளிநீக்கு
  14. வாங்க அனுபிரேம்..

    காலை வணக்கமும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  16. ஹா... ஹா...

    காலம் மாறிப் (கெட்டுப்) போச்சி...!

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
    அருமையான கதை பானு, வாழ்த்துக்கள்.!
    காலம் செய்த கோலம் 'மாறிய காலம் மாறாத கோலம் '
    தலைப்பு அருமை.
    முன்பு வறுமை, இப்போது பெருமை.

    பதிலளிநீக்கு
  18. வறுமையும், நவநாகரீகமும் ஒரே புள்ளியில் இணைந்து பயணிப்பதை அழகாக சொன்னீர்கள்.

    இருப்பினும் திரைப்படங்களில் வருவதுபோல... நாயகனை "வாழ்க்கையில் 1000 தடைக்கல்லப்பா" என்று ஜந்து நிமிடத்தில் கோடீஸ்வரர் ஆக்கிட்டீங்களே... மேடம்.

    எனக்கும் ஏதாவது ஐடியா கொடுங்களேன்... நான் உழைத்ததை மீட்பதற்கு மட்டும்...

    பதிலளிநீக்கு
  19. ஒருவேளை விதி, சுகுமார் பணக்காரனானாலும் அவன் குழந்தைகள் கிழிசல் உடையுடன்தான் இருக்கணும்னு இருக்கோ?

    பதிலளிநீக்கு
  20. கில்லர்ஜி... விரைவாக கதையை நகர்த்தியிருந்தாலும், நாமெல்லாம் சிறிய வயதில் இதையெல்லாம் அனுபவித்தவர்கள்தானே.

    எனக்கு பதின்ம வயதில் பரோட்டா சாப்பிட மிக மிக ஆசை. ஆனால் ஹோட்டல்களில் சாப்பிட முடியாது. வேலை பார்த்த சமயத்தில் என் பசங்க மிகவும் விரும்பும் உணவு எனக்கு எப்போதும் பார்ட்டி, கான்பரன்ஸ், மீட்டிங் போன்றவற்றில் கிடைக்கும். அதை நான் விரும்பியதும் இல்லை, சாப்பிட்டதும் இல்லை. நமக்கு விதித்ததுதான் நமக்குக் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெ.த.அவர்களுக்கு...
      உண்மையை சொல்கிறேன் சிறிய அகவையில் கிழிசலை போடும் நிலையை இறைவன் எனக்கு தரவில்லை (இறைக்கு நன்றி)

      ஆனால் எனது மகனுக்கு கொடுத்து இறைவன் என்னை பழி தீர்த்துக் கொண்டானே... ஹஹ்.. ஹஹ்.. ஹா.. (திரிசூலம் சிவாஜி பாணியில் படிக்கவும்)

      நீக்கு
  21. ஆமாம் பானுக்கா சொல்லியிருக்கும் அந்தக் கடைசி வரிகள்....காலம் மாறினாலும் கோலம் மாறவில்லை ஆனால் அது ஃபேஷன் என்று சொல்லப்படுகிறது...முன்பு ஐயே என்று சொல்லப்பட்டது...

    என் பள்ளி கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தன....ரொம்பவே.சுகுமார் போலவே..பல சமயங்களில் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளேன். சுத்தமான உடைதான். ஆனால்....அதன் காரணமாகவே யார் எப்படி உடை உடுத்தினாலும் அதைச் சொல்லக் கூடாது என்று ஒரு பாடமும் கிடைத்தது...ஏனென்றால் அது அந்தந்த ஷூக்களில் இருந்து பார்த்தால்தான் தெரியும் என்ற பாடம்.

    சுருக்கமா எழுதணும் கற்கணும் இப்படிச் சொல்லுவேனே தவிர முயற்சி செய்தாலும் வருவதில்லை...ஹா ஹா ஹா ஹா ஹா.......

    சூப்பரா எழுதிருக்கீங்க பானுக்கா....(ரிஷபன் அண்ணாவும் நினைவுக்கு வந்தார்...)

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கவனமாக காலை மெசேஜ் தயார் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!

    :))/

    ஹா ஹா ஹா ஹா ஹா யெஸ் யெஸ் யெஸ் யெஸ்ஸூஊஊஊஊஊஊஊஊஊஊ....ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  23. எனக்கும் அனுபவம் உண்டு. தீபாவளிக்கு யுனிபார்ம்தான் புது ட்ரெஸ்//

    ஸ்ரீராம் துரை அண்ணா நானும் அந்த லிஸ்டில் ஹா ஹா ஹா ஹாஹ் ஆ...நம்மில் பெரும்பாலோனோர்க்கு இந்த அனுபவம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  24. இருப்பினும் திரைப்படங்களில் வருவதுபோல... நாயகனை "வாழ்க்கையில் 1000 தடைக்கல்லப்பா" என்று ஜந்து நிமிடத்தில் கோடீஸ்வரர் ஆக்கிட்டீங்களே... மேடம். //

    ஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி இது சிறு கதை..அக்கா என்ன படமா எடுக்கறாக...ஷார்ட்ஃபில்ம்....அதில் அவர் பணக்காரர் எப்படி ஆனார் என்று பானுக்கா விவரிக்கத் தொடங்கினால் அது அப்புறம் நான் எழுதுவது போல ஆகிடும் ஹா ஹா ஹா ஹா ஹா...

    ஸோ அது உங்க கற்பனைக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லை அகத்தாருக்கு...

      திரைப்படப் பாடல் கேட்டது போன்ற பிரம்மை... ஹி.. ஹி..

      நீக்கு
  25. ரொம்ப நல்ல கதை...

    எதார்த்தத்தை எளிமையா இனிமையா சொல்லி இருக்கீங்க்க்..அருமை..

    பதிலளிநீக்கு
  26. இன்றைய ஃபேஷன் என்ற நிகழ்வில் இருந்து அழகாக பின்னப்பட்ட கதை!!

    பதிலளிநீக்கு
  27. பானை பிடித்தவள் பாக்கியமோ//

    பானுக்கா கீழ என் கருத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கேட்டோ சேச்சி!! என் பொதுவான தனிப்பட்டக் கருத்து.

    யதார்த்ததில் இந்த வார்த்தைகளைக் கேட்டு எனிக்கு மடுத்து....ஹா ஹா ஹா ஹா ஹா....எனக்குத் தூரத்து உறவினர் பெண்...கொஞ்சம் கஷ்டப்பட்டக் குடும்பத்தைச் சேர்ந்தவள். திருமணம் ஆகிச் சென்றதும் அவளுக்குச் சில கஷ்டங்கள் வந்தது...கணவனுக்கும் பிஸினஸ் ஃபெயிலியர்...அவன் செய்த சில தவறுகளால்....தொடர்ந்து கொண்டும் இருந்தது....

    அச்சமயம் அவளது மாமியார் அவளது கணவனின் அண்ணன் மனைவிகளுடன் ஒப்பிட்டுப் பேசி.....இதெல்லாம் பானை பிடித்தவள் பாக்கியத்தைப் பொருத்தது உன் காரணம் என் மகன் கஷ்டப்படுகிறான்...நீ வந்த வேளை சரியில்லை...பாரு அவங்க எல்லாம் எப்படி நல்லாருக்காங்கனு....என்று. இத்தனைக்கும் அவளால் அல்ல.

    சில குடும்பங்களில் விஷயங்களை மறைத்து....பிள்ளைக்குக் கல்யாணம் செய்துவிட்டு இப்படிப் பேசும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். வீட்டுக்கு வரும் பெண்ணை இப்படி கம்பேர் செய்து சொன்னால்? அப்பெண் பொறுமையாக இருக்கிறாளே அதுதானே பானை பிடித்தவளின் பாக்கியம்? என்றெல்லாம் மமியார் எனும் பெண்ணே யோசிப்பதில்லை. பெண் வந்தால் சீருடன் பணத்துடன் வர வேண்டும் என்று நினைப்பது. அப்பெண் பணக்காரியாக இருந்திருந்தால் விட்டுப் போயிருக்கவும் கூடுமல்லவா? அப்போ எது பானை பிடித்தவளின் பாக்கியம்? வீட்டுக்கு வரும் பெண்ணின் குணம் அல்லவா பாக்கியம். இல்லையா

    இப்படி எல்லாம் என்னை நினைக்க வைத்தது. சென்ற வாரம் கூட எங்கள் தெருவில் கடைக்குச் சென்ற போது....எனக்குத் தெரிந்த ஆன்டி கடையில் பேசிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் அங்கிருந்த வேறொரு பெண்மணி, கேட்டீங்களா கீதா, அந்த வீட்டுல இருக்கற அந்த பையன் இறந்துட்டான்...கல்யாணம் கழிஞ்சு 6 மாசமே ஆகிருக்கு. ம்ம்ம்ம் துர்பாக்கியம்...அப்பெண்ணோட வரவு அவன் இறந்துட்டான். பாருங்க. இதுக்குத்தான் பா...பி...பா". அந்தப் பையன் தினமும் குடிப்பவன். ஆனால் பழி பெண் மீது. ம்ம்ம்ம் என்ன சொல்ல

    கீதா

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் துரை சார். இந்த 'ஆகா' வடிவேலு சொல்வதைப் போல ஒலிக்கிறதே..!

    பதிலளிநீக்கு
  29. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  30. கண்ணதாசன் அவர்களின் வரிகள் இன்று பானுக்காவின் கதைக்கு கொஞ்சம் பொருத்தமாக வருகிறதோ....என்றும் தோன்றியது

    அட! ஆமாம். மிகவும் தற்செயலாக அமைத்திருக்கிறதே கீதா. நன்றி!

    பதிலளிநீக்கு
  31. // ஆமாம் கீதா.. அக்காவின் கதை சுருக், நறுக்!//
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  32. நன்றி கில்லர்ஜி.
    //இருப்பினும் திரைப்படங்களில் வருவதுபோல... நாயகனை "வாழ்க்கையில் 1000 தடைக்கல்லப்பா" என்று ஜந்து நிமிடத்தில் கோடீஸ்வரர் ஆக்கிட்டீங்களே... மேடம்.//
    ஹாஹாஹா! இதற்கு கீதா ரெங்கன் தந்திருக்கும் பதிலை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. நன்றி கோமதி அக்கா.
    // முன்பு வறுமை, இப்போது பெருமை.// கதையின் கருத்தை கச்சிதமாக கூறி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  34. வாங்க நெ.த. //ஒருவேளை விதி, சுகுமார் பணக்காரனானாலும் அவன் குழந்தைகள் கிழிசல் உடையுடன்தான் இருக்கணும்னு இருக்கோ?//
    இதுவும் ஒரு பாயிண்ட்! நன்றி.

    பதிலளிநீக்கு
  35. நன்றி மி.மா.
    // இன்றைய ஃபேஷன் என்ற நிகழ்வில் இருந்து அழகாக பின்னப்பட்ட கதை!!//
    உண்மைதான். ஒரு முறை நகரின் பிரபலமான மாலுக்குச் சென்றிருந்தபொழுது, அங்கு வந்திருந்த இளைஞர்களும், யுவதிகளும் அணிந்து வந்திருந்த உடைகளை பார்த்த பொழுதுதான் இந்தக் கரு உதித்தது.

    பதிலளிநீக்கு
  36. ஒரு சினிமாப்பாடலில் கதை போல்

    பதிலளிநீக்கு
  37. @கீதா ரங்கன்:
    //பானை பிடித்தவள் பாக்கியமோ?// என்ற கருத்திற்கு நீண்ட விளக்கம் அளித்திருக்கிறீர்கள். பெண்களை இழிவு படுத்துவது போல தோன்றுவதால் என்னாலும் இந்த பழமொழியை ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் இருந்தது. பெண்கள் படித்து, வேலைக்குச் செல்லாமல் இருந்த அந்தக் காலங்களில் ஒரு பெண்ணுக்கு சௌகரியமான வாழ்க்கை அமைய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கணவன். அதனால் இவளுக்கு நல்ல வாழ்க்கை அமைவதற்காகவே அவனுக்கு நல்ல தொழில் அமைந்து விடும் என்று இப்படி ஒரு பழமொழி வந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  38. // அப்பெண் பொறுமையாக இருக்கிறாளே அதுதானே பானை பிடித்தவளின் பாக்கியம்?// அது அந்த ஆணுக்கு பாக்கியம்.

    பதிலளிநீக்கு
  39. @கீதா ரங்கன், பா.வெ - //பெண்களை இழிவு படுத்துவது போல தோன்றுவதால் // - என்னவோ.. நீங்களெல்லாம் நெகடிவ்வாகவே எண்ணறீங்க. ஒரு குடும்பத்துக்கு ஆதாரம் கணவன் இல்லை, மனைவிதான். அவளால்தான் குடும்பம் பெருமை பெறும். கணவன் அம்பானியா இருந்தாலும், மனைவிதான் வீட்டை நிர்வகிக்கிறவர், சொந்தங்களைப் பேணுபவர், கணவனின் பின்புலமா இருப்பவர். அதனால் அவளைப் பொருத்துதான் குடும்பம் மேல் எழுவதும், வீழ்வதும்.

    பெண் பிறந்த நேரம் நான் எங்கேயோ போயிட்டேன், மனைவி வந்த நேரம் நல்லா ஆயிட்டேன் என்றெல்லாம் கேட்டதில்லையா?

    எந்த வீட்டில் பெண் சரியில்லையோ, அந்தக் குடும்பம் கணவனால் மீட்டெடுக்கப்பட முடியாது. மனைவிதான் வரவு, செலவு, சேமிப்பு, ரிலேஷன் என்று எல்லாவற்றிர்க்கும் காரணம், கணவனின் வெற்றி உள்பட.

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் சகோதரரே

    இன்றைய செ. ஸ் மிகவும் அருமை. சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் கைவண்ணத்தில் கதை மிகவும் அருமையாக இருந்தது.

    பழைய காலத்தில் கேலியாய் மனதை கஸடபடுத்தகிற மாதிரி இருந்தவை எல்லாம் தற்சமயம் நாகரீகமாக போய் விட்டது காலம் செய்த கோலங்கள்தான்.
    நாகரீகம் என்ற பெயரில் இக்காலத்தில் செய்து கொள்ளும் அலங்கோலம் கொஞ்சம் கஸ்டமாகத்தான் உள்ளது. கதையை துல்லியமாக நகர்த்தி அருமையாக முடித்த சகோதரிக்கு பாராட்டுடன் நன்றிகள். சற்று தாமதமாக வந்து படித்து கருத்திடுவதற்கு மன்னிக்கவும் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  41. ஹாஹா :) அருமையான குட்டி கதை
    இப்போ கோல்ட் ஷோல்டர் டாப் /எஸிம்மிட்ரிக்கல் டாப் /torn jeans இதெல்லாம் தானே பேஷன் :)

    பதிலளிநீக்கு
  42. முதல்லே நெ.த. சொல்வதைக்கன்னாபின்னாவென ஆதரிச்சுடறேன். :))))

    பதிலளிநீக்கு
  43. மற்றபடி இந்தக் கதையின் பணக்காரக் குழந்தைகள் போடும் கிழிசலுக்கும் சுகுமார் சின்ன வயசில் போட்ட கிழிசல் ட்ரவுசருக்கும் வித்தியாசம் உண்டே! அது நைந்து போயிருக்கும் தைச்சுத் தைச்சு! இது புதுசே இப்படித் தானே விக்கறாங்க. சுகுமாருக்கு வேணா இது என்னமோ மாதிரி இருக்கலாம். ஆனால் இதுவும் காலத்தினால் விளைந்த கோலம் என ஏற்க வேண்டியது தான்! :))) சுருக்கமா எழுதறாங்க பானுமதி! எனக்கானா பின்னூட்டமே முழ நீளம் வருது! :))))

    பதிலளிநீக்கு
  44. ஆண் பிள்ளைகள் நல்ல பேண்டை எல்லாம் கட்செய்து, நடுவில் வி ஷேப்பில் வேறு துணிகளை இணைத்து,பெல் பாட்டத்திற்கு அடிமையான காலம் ஒன்று என் ஞாபகத்திற்கு வந்தது. அது உங்களுக்கெல்லாம் தெரியாத காலமாகக் கூட இருக்கலாம். இப்போது உங்களின் கச்சிதமான கதையைப்படித்து நான் கூட முதலில் இப்படி ஒட்டுபோட்டு ஏன் இந்தப்பசங்கள் போட்டுக் கொள்கிரார்கள் என்று நினைத்தது பளிச்சிட்டது. நிஜம் பளிச்சிடும் கதை. மனதைக் கவர்ந்தது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  45. ஆவ்வ்வ்வ் அனைவருக்கும் ஆடிப்பிறப்பு வாழ்த்துக்கள்.. ஆடிக்கூழ் செய்து அப்புசாமிக்கு சாப்பிடக்குடுத்து அலுவல் முடிச்சு வர லேட்டாயிட்டுது.

    பதிலளிநீக்கு
  46. ஹா ஹா ஹா அழகிய குட்டிக் கதை, பானுமதி அக்கா நிறைய கதைப் புத்தகங்கள் படிப்பதனாலதான் இப்படி சோட் அண்ட் சுவீட்டாக கதைகள் எழுத வருகிறது என நினைக்கிறேன்.

    உண்மைதான் ஒரு காலத்தில் கஸ்டம் வெட்கம் என நினைத்தவை இப்போ பாஷனாகி விட்டது. நகைகள்கூட அப்படித்தானே, முன்னைய காலத்தில் பவுண் நகை போட வசதியில்லை என பவுண்போல நகைபோட்டு ஒளிச்சு ஒளிச்சுப் பாதுகாப்பார்களாம், இப்போ அதுவே பாஷனாகி விட்டது...

    காலத்தின் கோலம்...

    பதிலளிநீக்கு
  47. வாங்க கீதா அக்கா! முதலில் பாராட்டுக்கு நன்றி சொல்லி விடுகிறேன். நன்றி!

    நானும், கீதா ரங்கனும் சொலவது வேறு, நீங்களும் நெல்லை தமிழனும் சொல்வது வேறு.

    ஒரு ஆண் எப்படி இருந்தாலும், அவனுடைய உயர்வுக்கும், தாழ்வுக்கும் குறிப்பாக தாழ்வுக்கு அவன் மனைவிதான் காரணம் என்று வலியுறுத்தத்தான் 'பானை பிடித்தவள் பாக்கியம்' என்று கூறி விடுகிறார்கள். மனைவியின் யோகம் கணவனின் வாழ்க்கையை பாதிப்பது போல, கணவனின் யோகம் மனைவியை மட்டுமல்ல அவனுடைய வேட்டகத்தையே பாதிப்பதை ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்து, பல ஜாதகங்களை அலசும் பொழுது நான் கவனித்திருக்கிறேன். இதற்கு எந்த பழமொழியும் இல்லையே,ஏன்!

    மேலும், நான் அந்த பழமொழிக்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்று எழுதியிருப்பதை நெல்லை தமிழன்தான் சரியாக படிக்காமல் 'பெண்களை இழிவு படுத்துவது போல் தோன்றுவதால்' என்னும் வாக்கியத்தை மட்டும் படித்துவிட்டு அவசரப்பட்டு எழுதியிருக்கிறார் என்றால் நீங்கள் அதை கன்னாபின்னாவென்று வேறு ஆதரிக்கிறீர்கள். என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  48. ஜோதிட விஷயம் எழுத வேண்டாம் என்று பார்த்தேன், விட மாட்டேன் என்கிறீர்களே..
    பிறந்த ஜாதகத்தில் நான்காம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் அந்த ஆண்மகன் மனைவியாலும், மாமனார் வீட்டாலும் லாபங்களை அடைவான். இப்படி நான்காம் வீட்டில் சுக்கிரன் இருக்கும் பல ஆண்களின் ஜாதகங்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு திருமணம் ஆனவுடன் அவர்களுடைய மாமனார் வீடு முன்பு எப்படி இருந்தாலும் பின்னர் செழிப்பாகி விடும். அவனுக்கு மாமனார் வீட்டால் லாபம் கிடைக்க வேண்டுமே. அதே நேரத்தில் சுக்கிரன் சரியாக அமையாத ஆண்களுக்கு பெண்ணை கொடுத்தவர்களின் வீடு நொடித்து போய் விடுகிறது. இதையெல்லாம் யாராவது சொல்கிறார்களா?

    பதிலளிநீக்கு
  49. ஏன்ஜெல், சகோதரி கமலா ஹரிஹரன், காமாட்சி அம்மா, அதிரா எல்லோருக்கும் நன்றிகள்.
    // முன்னைய காலத்தில் பவுண் நகை போட வசதியில்லை என பவுண்போல நகைபோட்டு ஒளிச்சு ஒளிச்சுப் பாதுகாப்பார்களாம், இப்போ அதுவே பாஷனாகி விட்டது...//
    ரொம்ப கரக்ட் அதிரா. முன்பெல்லாம் கவரிங் நகையை போட்டு திருமணம் செய்தால் அது மோசடி. இப்போது மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்து விடுபவர் புடவைக்கு ஏற்ற மாதிரி கவரிங் நகை கொண்டு வந்து அதைத்தான் போட்டு விடுகிறார்.

    பதிலளிநீக்கு
  50. வணக்கம் 🙏.

    நல்ல கதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  51. அன்பு பானு, ஆதியில் படும் துயரங்கள் மனதை வருத்தியது. நல்ல
    வேளை சுகுமாரை முன்னுக்குக் கொண்டுவந்து விட்டீர்கள். பானை பிடித்தவள் பாக்கியம் //நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். கண்வன் ஏற்ச்சி அடைந்தால் அது அவன் வேலைத்திறம். அவன் வேலையிலோ ,வாழ்விலோ தாழ்ந்தால், ஜாதகத்தில் அதாவது மனைவி ஜாதகத்தில்
    பலம் போறாது .
    இது என் வாழ்க்கையில் கேட்டது.

    இருவரும் சேர்ந்து உயர்வுக்கு வழி தேடி பிள்ளைகளும் சிறந்து விட்டால்,
    அவர்களைக் கண்டு பொறாமை.
    எத்தனை விட்டுக் கொடுத்திருப்போம் என்று யாருக்காவது உரைக்குமா.
    ஊருக்காக வாழ்ந்த வாழ்வு அலுத்து விட்டது.
    யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே
    பாடல் நிலைதான் எப்பவும் சரி.
    சுகுமார் மற்றும் எல்லோர் வாழ்க்கையும் சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  52. நிகழ்வதை கதையாக்கிய நல்ல கற்பனை. பொறுத்தமான தலைப்பு.

    பதிலளிநீக்கு
  53. //அதனால் இவளுக்கு நல்ல வாழ்க்கை அமைவதற்காகவே அவனுக்கு நல்ல தொழில் அமைந்து விடும் என்று இப்படி ஒரு பழமொழி வந்திருக்கலாம்.// இதைப் படிச்சுப் புரிஞ்சுண்டே பதில் கொடுத்தேன். ஆனால் நீங்க சொல்லி இருக்கும் ஜோதிட அடிப்படை விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரியாதே! என்றாலும் ஒரு சில ஜோசியர்கள் ஜாதகம் பார்க்கையில் இந்த ஜாதகரால் மாமனார் வீட்டுக்கு எவ்விதமான நற்பலனும் கிட்டாது எனச் சொல்லிக் கேட்டிருக்கேன். இது எங்க பெண்ணுக்குப் பார்க்கும்போதும் சொல்லி இருக்காங்க! பையருக்குப் பார்க்கிறச்சேயும் சொல்லி இருக்காங்க. ஆனால் கிரக அமைப்புப் பத்தி எல்லாம் தெரியாது. இப்போக் கூட கிட்டத்தட்ட இம்மாதிரி ஒரு ஜோசியம் ஒருத்தர் சொல்லி இருக்கார்! :))) ஆகவே நான் உண்மையாகச் சொல்லப்படும் ஜோதிடத்தை நம்புகிறேன். மற்றபடி எதுக்கெடுத்தாலும் பார்க்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  54. அதோடு இல்லாமல் "பானை பிடித்தவள் பாக்கியம்" என்பதை நீங்க ஜோதிட அடிப்படையில் குறிப்பிட்டிருப்பதையும் நான் உணரவில்லை. பொதுவான கருத்து, எல்லோரும் சொல்லும் பழமொழி என்னும் அடிப்படையிலேயே பார்த்தேன். ஆனாலும் சிலர் மனைவியால் கணவனுக்கு நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும் அதை ஒத்துக்காமல் அவன் அதிர்ஷ்டம், அவன் உழைப்பு, இவ அனுபவிக்கிறா என்றும் சொல்லுவார்கள். இப்படியும் நடந்திருக்கு! என் பிள்ளை கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிச்சுப் போடறதை இவ எங்கே இருந்தோ வந்து அனுபவிக்கிறாளேனு சொல்லும் மாமனார், மாமியார்களும் உண்டு. கதையின் கருத்திலிருந்து இது மாறுபட்டு இருப்பதற்கு மன்னிக்கவும். பானை பிடித்தவள் பாக்கியம் பற்றிப் பேச்சு வந்ததால் சொல்லும்படி நேர்ந்தது. :))))))

    பதிலளிநீக்கு
  55. @ Bhanumathy Venkateswaran, @ Geetha Sambasivam :

    விரிவான, தெளிவான கருத்துப் பரிமாற்றங்கள்.

    @ Bhanumathy Venkateswaran: //...ஜாதகத்தில் நான்காம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் அந்த ஆண்மகன் ..அதே நேரத்தில் சுக்கிரன் சரியாக அமையாத ஆண்களுக்கு..இதையெல்லாம் யாராவது சொல்கிறார்களா? //

    அப்பிடிப்போடுங்க.. போட்டுத்தாக்குங்க!

    @ Geetha Sambasivam : //.. மனைவியால் கணவனுக்கு நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும் அதை ஒத்துக்காமல், அவன் அதிர்ஷ்டம், அவன் உழைப்பு, இவ அனுபவிக்கிறா என்றும் சொல்லுவார்கள். இப்படியும் நடந்திருக்கு!//

    நடந்திருக்கா? நடந்துகொண்டிருக்கு. இனியும் விமரிசையாக நடக்கும்!



    பதிலளிநீக்கு
  56. ஆனாலும் சிலர் மனைவியால் கணவனுக்கு நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும் அதை ஒத்துக்காமல் அவன் அதிர்ஷ்டம், அவன் உழைப்பு, இவ அனுபவிக்கிறா என்றும் சொல்லுவார்கள். இப்படியும் நடந்திருக்கு! என் பிள்ளை கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிச்சுப் போடறதை இவ எங்கே இருந்தோ வந்து அனுபவிக்கிறாளேனு சொல்லும் மாமனார், மாமியார்களும் உண்டு. கதையின் கருத்திலிருந்து இது மாறுபட்டு இருப்பதற்கு மன்னிக்கவும். பானை பிடித்தவள் பாக்கியம் பற்றிப் பேச்சு வந்ததால் சொல்லும்படி நேர்ந்தது. :)))//

    கீதாக்கா யெஸ் யெஸ் .....அந்த அடிப்படையில் தான் நான் சொன்னதும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  57. பானுக்கா மிக்க நன்றி உங்கள் விளக்கத்திற்கு. ஆமாம் நெல்லையின் கருத்து வேறு....நாம் நினைத்தது வேறு....நீங்களே சொல்லிட்டீங்க

    நெல்லை உங்களுக்கு நான் சொல்ல வந்ததை கீதாக்கா சொல்லிட்டாங்க...நீங்கள் சொல்லுவது வேறு...வகை...நான் நெகட்டிவ் இல்லை இந்த சமூகம் சொல்வதைத்தான் சொல்லி அப்படி நினைப்பது தவறு என்றேன்...ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  58. சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன், கதை மிக நன்றாக இருக்கிறது. இது பலருக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. அட்லீஸ்ட் நம் ஜெனரேஷனில் உள்ளவர்கள் பலருக்கும். முடிவில் சொல்லியிருப்பதும் அருமை. ஆமாம் இப்போதுள்ள குழந்தைகளின் ஃபேஷன் அப்படித்தான் இருக்கிறது.

    கதை மிக அருமையான நடையில் எழுதியிருக்கீங்க. யதார்த்தம். பாராட்டுகள், வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  59. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  60. துளசிதரன் நல்ல கேள்வி தான் கேட்டிருந்தார். ஆனால் ஏன் நீக்கினார்னு தெரியலை. போனால் போகட்டும். எனக்கு இப்போ டிடியோட பதிவின் விஷயமே மனசிலே ஓடிக் கொண்டிருக்கு! அதனால் துளசியின் கேள்விக்கு இப்போ பதில் தரமுடியாது. என்றாலும் நல்ல ஆரம்பம் என்று சொல்லலாம்.தொடரட்டும். வாழ்த்துகள்! சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இதுக்குப் பொருந்தும்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  61. // கண்வன் ஏற்ச்சி அடைந்தால் அது அவன் வேலைத்திறம். அவன் வேலையிலோ ,வாழ்விலோ தாழ்ந்தால், ஜாதகத்தில் அதாவது மனைவி ஜாதகத்தில்
    பலம் போறாது .//
    //இருவரும் சேர்ந்து உயர்வுக்கு வழி தேடி பிள்ளைகளும் சிறந்து விட்டால்,
    அவர்களைக் கண்டு பொறாமை.//
    ரொம்ப ரொம்ப சரி வல்லி அக்கா. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  62. நன்றி ஜீ.வி. சார். உங்களைப்போன்ற சீனியர்களின் பாராட்டு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது.

    பதிலளிநீக்கு
  63. ஏகாந்தன் சாரின் முதல் வருகைக்கும், கீதா அக்கா, மற்றும் கீதா ரெங்கனின் மீள் வகைகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  64. கீதாக்கா துளசியின் கேள்வி புதனுக்குரியது இல்லையா அதனால இங்க தெரியாம போட்டுட்டேன்னு நினைச்சு நீக்கி அங்க போட்டேன். நான் தானே அவர் அனுப்பும் தங்கிலிஷை தமிழாக்கி எல்லா வலையிலும் போடுவது. சென்னைதானே தலைமையகம் எங்களுக்கு...ஹா ஹா ஹாஹ் ஆ

    புதன் கேள்வியில் இருக்கு பாருங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  65. எனக்கு இப்போ டிடியோட பதிவின் விஷயமே மனசிலே ஓடிக் கொண்டிருக்கு! //

    கீதாக்கா எனக்கும் இப்போ டிடி யோட பதிவுதான் மனதில் ஓடிக் கொண்டிருக்கு..நிறைய யோசிக்க வைக்கிறது...கேள்விகளும் எழுத்தான் செய்கிறது. அவர் அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்க்....

    கீதா

    பதிலளிநீக்கு
  66. / அப்பெண் பொறுமையாக இருக்கிறாளே அதுதானே பானை பிடித்தவளின் பாக்கியம்?// அது அந்த ஆணுக்கு பாக்கியம்.//

    யெஸ் பானுக்கா அதைத்தான் சொல்லியிருந்தேன்.ஆணுக்கும் அந்தக் குடும்பத்துக்கே...அப்புறம் ஏன் அவளை சொல்லணும் என்பதைத்தான்....அதை நான் சரியான வரியாகச் சொல்லவில்லை.!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  67. கடைசி வரிகளில் குறிப்பிட்டவைதான் தற்போதைய நாகரீகம் என்று அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  68. நல்ல கதை. வாழ்கை ஒரு வட்டம் என்பது இதுதானோ என்னவோ.

    தில்லியில் தன்னை பகட்டாக காட்டிக்கொள்ளும் பலர் இப்படிப்பட்ட கிழிசல் ஆடைகளைத்தான் அணிந்திகொண்டு திரிகிறார்கள். பெண்களே அவர்களில் பெரும்பான்மை. ஒருகாலத்தில் ஆடையின் கிழிசல்கள் வழியாக தங்கள் மானம் தப்பி குதித்து ஓடிவிடும் என்று நினைத்தார்கள். அனால் இன்றோ ஆடையின் கிழிசல்கள் வழியாக புகுந்துதான் பெருமை தங்களைத் தேடி வருவதாக நினைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!