செவ்வாய், 31 ஜூலை, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : வயசு - ரிஷபன்


வயசு
ரிஷபன் 

சந்திராவின் குரலில் அதட்டல் தெரிந்தது.

" தாத்தா கூடவே போகணும். புரிஞ்சிதா"

வினு தலையாட்டினான். வெளியே போகும் வாய்ப்பு கிட்டியதில் அவனுக்கு உற்சாகம். தாத்தாவுடனான டீல் தெருவுக்குப் போனதும் பார்த்துக் கொள்ளலாம்.



" மருந்து வாங்கிட்டு அப்புறம் பூங்கா போகலாம்" என்றான் படியிறங்கி வெளியே வந்ததும்.

அவர் சிரித்தார். அதன் பின்னான பிள்ளைச் சதி அவருக்குப் புரிந்தே இருந்தது.

வினுவை அவருக்குப் பிடித்துப் போனதும் இதனால்தான். யோசிப்பதும் தனக்குச் சாதகமாய் நிகழ்வுகளைத் திசை திருப்புவதும் அப்படியே அவரைப் போலவே.

ஒரு சைக்கிள் அவரை உரசிப் போனது. யாரென்று பார்ப்பதற்குள் ஓட்டி வந்தவன் நிற்காமல் போய் விட்டான்.

அவனை அடிக்கணும்.. என்றான் வினு.

கண்களில் முரட்டுத் தனமும் கோபமும்.

" எதுக்குப்பா"

" மேல மோதிட்டு ஸாரி சொல்லாம போறான்"

" ஓ.. அவனை அடிச்சா சரியாயிருமா"

" பனிஷ்மெண்ட் தான் சரி தாத்தா"

"அப்படின்னு யார் சொல்லிக் கொடுத்தாங்க"

"நானே யோசிச்சேன்"

அவன் அந்த வார்த்தைகளை உச்சரித்தபோது கொஞ்சம் வேடிக்கையும் கொஞ்சம் பழைய நாட்களும் கலந்து தெரிந்தது அவருக்கு.

" இந்த கம்பெனி இல்லை ஸார். ஆனா இதே மருந்து இருக்கு.. தரவா'

மருந்துச் சீட்டைப் பார்த்து விட்டு கடைக்காரர் சொன்னார்.

" அம்மா திட்டுவாங்க ஏன் இதே மருந்து வாங்கலன்னு.."

" டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தே வேணும்னா அவர் க்ளினிக் பக்கத்துல இருக்கிற மெடிகல் ஷாப்பில் தான் கிடைக்கும் "

" இது தப்பில்லையா தாத்தா"

வினு சற்றே கொழுத்த வடிவம். கன்னச் சதை அசைய அவன் பேசும்போது வார்த்தைகள் முழு வீர்யத்துடன் வெளிவரும். அவன் உருவத்திற்குப் பொருத்தமில்லாத காட்டமான பேச்சு.



முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் போகாத நிலையில்.

" பஸ்ல போயிரலாம்'

வினுவை ஏற்றி விட்டு அவர் ஏறுவதற்குள் கண்டக்டர் விசில் கொடுத்து விட்டார். தடுமாறி கம்பியைப் பிடித்துக் கொண்டார்.

" ஆள் ஏற்ரதுக்குள்ளே என்ன அவசரம்"

" வயசான காலத்துல வீட்டோட கிடக்காம ஏன் எங்க உயிரை வாங்கறீங்க. விழுந்து வச்சா"

வினுவுக்கு முகம் சிவப்பாகி விட்டது.

" என்ன பேசறார் அந்த கண்டக்டர்"

அவன் கையைப் பற்றி அழுத்தினார். டிக்கட்டுக்கு சரியான சில்லறை தரவில்லையென்று மறுபடி ஒரு வசவு வந்தது.

வினு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

" தாத்தா ஏன் இப்படி இருக்கீங்க "

" எப்படி இருக்கேன்"

" எதுக்கும் பணிஞ்சு போகிற மாதிரி"

சிரித்தார்.

" உனக்கு எத்தனை வயசு"

வினு முறைத்தான்.

" இப்ப எதுக்கு தாத்தா.. உங்களுக்கு தெரியாதா"

" சொல்லேன்"

சொன்னான்.

நிதானமாய்ச் சொன்னார்.



" கொஞ்சம் பொறுத்துக்கோ. பெரியவனாவே. அப்போ எல்லாமே புரிஞ்சுரும்"

வினுவுக்கு ..  அவர் குரல் ஏன் பிசிறியது என்று லேசாய்ப் புரிய ஆரம்பித்தது.


படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்...

39 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைத்து வண்ணத்துப் பூச்சிகளுக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று வண்ணத்துப் பூச்சிகளோ!

      இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..

      நீக்கு
    2. கதைப் பூங்காவில் சுற்றித் திரியும்
      வண்ணத்துப் பூச்சிகளே
      வாழ்க.. வாழ்க...

      நீக்கு
  2. அழகான கதை....

    காலம் பக்குவப்படுத்தும்போது தான்
    வாழ்க்கையின் சுவை தெரியும். புரியும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. வழக்கம் போல சுருக் கென கருத்தோடு அமைந்த கதை! பேரனுடன் ஆன பொழுதை ரசிக்கும் தாத்தா. தாத்தாவை விட்டுக் கொடுக்காமல் ஆதரிக்கும் அதே சமயம் சமூகக் குறைபாடுகளைக் கண்டதும் பொங்கி எழும் பேரன்.

    பதிலளிநீக்கு
  4. ஐந்து வருடம் முன்னால் ஶ்ரீரங்கம் வந்த புதுசில் தனியார் பேருந்தில் திருச்சி செல்ல ஏறும்போதே நடத்துநர் விசில் கொடுத்துவிட, நான் அப்படியே பின்னால் மல்லாக்க விழ இருந்தேன். நல்லவேளையாகக் கம்பிகளை அழுத்தமாகப் பிடித்திருந்ததோடு மேலே இருந்து என் கணவரும் பிடித்துத் தூக்கிவிட்டார். நடத்துனரிடம் என்ன அவசரம் ஏறுவதற்குள் எனக் கேட்டதுக்கு, ஏன், ஆட்டோ இல்லைனா காரில் போவது தானே என நக்கலாக பதில்! அதுக்கப்புறமாப் பேருந்துகளிலேயே ஏறுவதில்லை. உண்மையாகவே ஆட்டோ, இல்லைனா தொலைதூரம் போகக் கார் தான்! செலவு தான். ஆனால் கீழே விழுந்து அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்து அவதிப்பட்டுக் கொண்டு ஆகும் செலவு, மனக்கஷ்டம் ஆகியவற்றை நினைத்தால் இது தான் தேவலை என்று ஆகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நடத்துனரிடம் என்ன அவசரம் ஏறுவதற்குள் எனக் கேட்டதுக்கு, ஏன், ஆட்டோ இல்லைனா காரில் போவது தானே என நக்கலாக பதில்! /

      இந்த மனநிலை சக பயணிகளிடமே இருக்கிறது கீதா அக்கா..

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம். ரிஷபன் சார் கதையா? வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. காலம் அனைத்தையும் மாற்றும்
    அருமை
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  7. அழகான கதை,காலம் புரியவைக்கும் ...

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம்.

    ஆஹா ரிஷபன் ஜி கதை.....

    பதிலளிநீக்கு
  9. நல்ல கதை. வயது ஏற ஏற கிடைக்கும் அனுபவங்கள்....

    சின்ன கதையில் இத்தனை அழகாய் விஷயங்களைச் சொல்லி விடும் கலை - ரிஷபன் ஜியின் ஸ்பெஷல்.... வாழ்த்துகள் ரிஷபன் ஜி!

    அம்மு - வெளியீட்டிற்கு வாழ்த்துகள் ரிஷபன் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயது/ நல்ல கரு. வெளி மனிதர்கள் மதிப்பை இழப்பது சகஜம்.
      அவசர உலகத்தில் மெதுவான மனிதர்களுக்கு
      இடம் குறைவுதான். பேரனின் ரோஷம் பிடித்திருக்கிறது. தாத்தாவின் பொறுமையும்.
      நிதர்சனமான உலகத்தை அழகாகச் சொல்லிவிட்டார் ரிஷபன் ஜி.

      மனதைத் தொடும் வரிகள். மிக நன்றியும் வாழ்த்துகளும்.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    வாழ்வியல் உண்மையை கூறும் கதை.
    அருமையான கதை. வாழ்த்துக்கள் .

    //வினுவுக்கு .. அவர் குரல் ஏன் பிசிறியது என்று லேசாய்ப் புரிய ஆரம்பித்தது.//

    வீட்டில் கிடைத்த அனுபவம் அதிகம் தாத்தாவிற்கு என்று புரிந்து விட்டதோ!

    பதிலளிநீக்கு
  11. சொல்லாமல் சொல்லி விளங்க வைப்பதில் தான் ஒரு ace என்பதை ரிஷபன் சார் மற்றொரு முறை நிரூபித்திருக்கும் கதை.!

    நான் சிறுமியாகஇருந்த பொழுது தனக்கு இழைக்கப்படும் அவமதிப்புகளை பொறுமையாக சகித்துக் கொள்ளும் என் பாட்டியிடம்," நீ ஜடமா? உனக்கு கோபமே வராதா?" என்று கேட்டிருக்கிறேன். என் பாட்டி அதற்கும் எந்த பதிலும் சொல்ல மாட்டார். வயதும், அனுபவமும் ஏற ஏற பாட்டியை புரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மகள் என்னைக் கேட்பாள். ஏம்மா உனக்குக் கோபமே வராதா.
      நான் சொல்வேன் நானும் கோவித்துக் கொண்டால் விளைவுகள்
      மாறப் போவதில்லை. கடந்து கொண்டே இருக்கணும்னு.
      எனக்காக வரிந்து கட்டிக் கொண்டு பொரிந்து தள்ளுவாள்.
      இப்போது அவளே பொறுமையாக இருக்கிறாள்.
      காய் ,கனியாக மாறும் காலம்.

      நீக்கு
  12. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா....இன்று ரிஷபன் அண்ணா கதையாக இருக்கும் என்று யூகம்...அதனாலேயே 6 மணிக்கு ஆஜர் வைக்க நினைத்தேன் ஆனா முடியலை...

    கதை அருமை. முடிவு லைன் என்னென்னவோ..பல அர்த்தங்களைச் சொல்லுது....வினு இளம் ரத்தம்..இளங்கன்று பயமறியாது...ஆனால் போகப் போக அனுபவம் பல படிப்பினைகளைக் கற்றுத் தந்து சில சமயம் பலரது வாயையும் நியாயமான தருணங்களில் கூடக் கட்டிப் போட்டு விடுகிறதுதான். பொறுமை காக்கும் பண்பு உட்பட..மூப்படையும் போது இயலாமையும் சேர்ந்து விடுகிறதே!

    //யோசிப்பதும் தனக்குச் சாதகமாய் நிகழ்வுகளைத் திசை திருப்புவதும்// யெஸ் யெஸ் இப்படி ஒரு அப்படியேயான கேரக்டர் எனக்குத் தெரிந்தே உண்டு.

    பேருந்து விஷயம் ஆம் மனிதாபிமானம் மறைந்து வருவதற்கு எடுத்துக்காட்டு.

    கதை அருமை ரிஷபன் அண்ணா...ஜஸ்ட் இத்துனூண்டு நிகழ்வு பல அர்த்தம் பல பொதிந்த ஷார்ட் வசனங்களுடன் செம செம....

    வழக்கமான என் டயலாக்கை இன்று சொல்லாவில்லை...ஹிஹிஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  13. அருமையான கதை! வாழ்த்துகள் தோழரே!

    பதிலளிநீக்கு
  14. ரிஷபன் சார்.... உங்க கதைத் தலைப்புல ஶ்ரீராம் கைவைக்கலை போலிருக்கு.

    தலைப்பைப் படிக்க விட்ட நான், "ரௌத்திரம்" அல்லது "ரௌத்திரம் பழகு" என்று தலைப்பு இருக்குமோன்னு பார்த்தேன்.

    உங்க கதையைப் படிக்கும்போது, அட... 25 வரிக்குள்ளவே ஒரு கதை எழுதியிருக்காரே... ரொம்ப சுலபமே... என்று நினைத்து பேனாவைத் தூக்கினால், "ஶ்ரீ:"க்கு அப்புறம் ஒரு வரியும் வரமாட்டேன் என்கிறது. சுருங்க எழுத மிகத் திறமை வேணும், "வின்ஸ்டன் சர்ச்சில்" சொன்னதுபோல்.

    பதிலளிநீக்கு
  15. இள வயதில் நம்மால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும் என நம்புவதும், அனுபவம் அதிகமாகும்போது நம்மால் தம்மை மாற்றிக்கொள்வதே கடினம் எனும்போது வேறு யாருடைய குணத்தை மாற்றமுடியும் எனும் தெளிவு ஏற்பட்டுவிடுகிறதோ?

    பதிலளிநீக்கு
  16. அனுபவமே வாழ்க்கை கதைக்கரு அருமை ஸார்

    பதிலளிநீக்கு
  17. வயது ஏறஏற சொல்ல வேணடிய பதில்களைக்கூட சொல்லாமல் மௌனம் சாதித்து,நிலைமையை ஸமாளிக்க வேண்டிய அவசியம். இளம் ரத்தம் எதிர்ப்பைத் தெரிவிக்கச் சீருகிறது. அனுபவமும்,அறியா வயதும் கதையில் எவ்வளவு நளினமாகக் கையாளப் பட்டிருக்கிறது. ஒரு அட்வடைஸிங் கம்பெனியில் கிளைண்ட்ஸ் எல்லாம் எனக்கு வேண்டியவர்கள். இந்த வேலையை விட்டுவிட்டு, நானே புதியதாகக் கம்பெனி ஆரம்பிக்கப் போகிறேன். எல்லோரும் என்பக்கம்தான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டு இரண்டு வருஷமே வேலையில் அனுபவமுள்ள ஒரு பையன் என் மகனிடம் வந்தான்.
    ஆமாம். இப்போது வேலைதெரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறாய். எல்லா கிளைண்ட்ஸும் நம்மிடம் வந்து விடுவார்கள்,நம்மால்தான் கம்பெனியே ஓடுகிறது என்ற எண்ணம் உனக்கு வந்து விட்டது. அது ஸரி இல்லை. இந்த வயதில் அப்படித் தோன்றும். இன்னும் வேலைகள் கற்றுக் கொள்ள வேண்டும். பொருமையுடன் இரு என்று சொன்னதைக் கேட்கவில்லை. ஒரு வருஷம் கம்பெனி நடத்தி விட்டுத் ஸரிவராமல் திரும்பவும் வேறு கம்பெனியில் வேலை. அனுபவம் பேசும் கதை உங்களுடயது. கருத்தானது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  18. நச் ..... !

    மிகச் சிறியதோர் சம்பவம் கதையாகி மிகப்பெரிய அனுபவத்தையும், யதார்த்த உண்மைகளையும் விளக்கியுள்ளது.

    விதை சிறியதுதான். கண்களுக்குத் தெரியாமல் பூமிக்குள் புதைந்தே இருக்கும். அது மிகப்பெரிய ஆல விருக்ஷமாகும் போது தன் நிழலில் ஆயிரம் பேர்களைக்கூட அள்ளி அணைத்து அரவணைத்துக்கொள்ளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு சார்... //மிகப்பெரிய ஆல விருக்ஷமாகும் போது// - இது கதை விமரிசனமா இல்லை கதாசிரியரைப் பற்றிய விமரிசனமா? ஹா ஹா ஹா

      நீக்கு
    2. //நெல்லைத் தமிழன்
      கோபு சார்... **மிகப்பெரிய ஆல விருக்ஷமாகும் போது** - இது கதை விமரிசனமா இல்லை கதாசிரியரைப் பற்றிய விமரிசனமா? ஹா ஹா ஹா //

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      தங்கள் ஸித்தம் ..... என் பாக்யம் !

      தாங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், ஸ்வாமீ.

      அடியேன் .... கதையில் வரும், ஆண்டு அனுபவித்த முதியவரை (தாத்தாவை) ஆல விருக்ஷமாகவும்,
      அந்தப் பொடியனை (பேரனை) வீர்ய விதையாகவும் நினைத்து எழுதியுள்ளேன்.

      வயசு ஆக ஆக, வீர்யங்கள் குறைந்து, விவேகங்கள் ஏற்பட்டு, சுத்த வழுவட்டையாவோம் என்பதே இயற்கையின் நியதி அல்லவா !

      ’வழுவட்டை’ பற்றி மேலும் விரிவான பல விஷயங்கள் அறிய இதோ ஓர் இணைப்பு:
      http://gopu1949.blogspot.com/2014/04/vgk-13.html

      அன்புடன் கோபு

      நீக்கு
    3. அன்பு கோபு சார், உங்கள் அனுபவங்கள் எல்லாம் அற்புதம். அரவணைப்புக்கு முதல் மனிதர் நீங்கள். வணக்கம்.

      நீக்கு
    4. // vallisimhan **அன்பு கோபு சார், உங்கள் அனுபவங்கள் எல்லாம் அற்புதம். அரவணைப்புக்கு முதல் மனிதர் நீங்கள். வணக்கம்.** //

      வாங்கோ மேடம், வணக்கம். நல்லா செளக்யமாக இருக்கிறீர்களா?

      தங்களின் இந்த அன்புக்கும், அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நன்றியுடன் கோபு

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் ரிஷபன் சகோதரரின் கதை மிக அருமை. வாழ்வில் வயது ஏற ஏற அனுபவங்களின் வாயிலாக பக்குவமான மனது எப்படி வருகிறது என்பதை சுருக்கமான வார்த்தைகளால் சுட்டிக்காட்டி விட்டார். எழுதிய முறை மிகவும் நன்றாக இருந்தது. ரசித்துப் படித்தேன். நன்றி..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. ரிஷபன் சாரின் கதையில், பொதுவாக எபி-யில் காணக் கிடைப்பது பின்னூட்டம் போல ஒரு கதை. கதைகளாகப் பல பின்னூட்டங்கள்!

    உள்ளே சரக்கொன்றுமிருப்பதில்லை என்பதினால், நமது வார இதழ்களை கடையிலேயே புரட்டிப் படம் பார்த்துவிட்டு, மடங்காமல் வைத்துவிட்டு வந்துவிடுவேன். கடந்த வாரம் குமுதம் இதழை வாங்கினேன், உள்ளே ரிஷபன் தென்பட்டதால்! வீட்டில் வந்து பார்த்தேன். ‘திடீர் சிறுகதைப் போட்டி’யில் தேர்வாகி பிரசுரமாகியிருந்தது ‘கட்டில்’. படுத்துப் பார்த்தேன்; சுகமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  21. அன்பு நன்றி அனைவருக்கும்..

    பதிலளிநீக்கு
  22. இன்னிக்கு புதன்கிழமை தானே. கேள்வி, பதில் இத்தனை நேரம் வந்திருக்கணுமே! கேஜிஜி சார், தூங்கிட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  23. வயது பக்குவத்தைத் தரும். கதை மிக அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!