சனி, 2 டிசம்பர், 2023

பத்தாயிரம் பீஸ் வாங்கும் இடத்தில 150-200 வாங்கும் மனுஷி மற்றும் 'நான் படிச்ச கதை'

 ஒரு நடிகரின் படத்தின் டீஸரை சில லட்சம் பேர், அல்லது கோடி பேர் பார்த்திருப்பதைத்தான் இதுவரை கேட்டிருக்கிறோம்..

இதோ இந்த ரூபி என்ற ஆசிரியை அதுவும் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை, தனது அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வசதியாக வடிவமைத்த கணிதப் பாடத்தின் செயலியை பார்த்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொடப்போகிறது..
பாடம் நடத்தும் எளிமை அருமையாக இருக்கும். Algebra வை எளிய நடையில் சொல்லி கொடுக்க இவரை மிஞ்ச யாரும் இல்லை..
இவரது இலவச கல்வியை youtube மூலம் பல குழந்தைகள் பயன் பெறுகிறார்கள்..

கல்விக்கு மீண்டும் ஒரு தெரஸா அம்மையாரை காண முடிகிறது..
பணிகள் தொடரட்டும்.. நன்றி வெரைட்டி ஆஃப் இமேஜஸ்...



===========================================================================================

ராசிபுரம் நகரில் வலிப்பால் சாலையில் மயங்கிய நிலையில் இருந்தவரை தனது காரில் ஏற்றி கொண்டு சென்று அரசு மருத்துவ மனையில் சேர்த்தார் நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ்.


=====================================================================================

வீடு தேடி உதவும் மனித நேய ராதா முத்து...  பத்தாயிரம் பீஸ் வாங்கும் இடத்தில 150-200 வாங்கும் மனுஷி..


================================================================================



====================================================================================


=============================================================================

 நான் படிச்ச கதை (JKC)

விதியே விதியே

கதையாசிரியர்: எஸ்ஸார்சி

முன்னுரை

இன்று இங்கு வாசிக்கப் போவது  ஒரு சாதாரண கதை. அதிகம் அறியப்படாத ஒரு ஆசிரியர் எழுதியது.  ஒரு சாதாரண நிகழ்வு. ஆனாலும்  படித்து முடித்தவுடன் ஒரு சின்ன தாக்கம். குடி எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்ற வெளிப்பாடு.

கதை ஆசிரியர் கதையை அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவமாக, ஒரு டைரி குறிப்பு போன்று சொல்கிறார். கதை மாந்தர்கள் எவருடைய பெயரும் குறிப்பிடப் படவில்லை. கதை ஆசிரியர் S. ராமச்சந்திரன் ஜீவி சாருக்கு தெரிந்தவராக இருக்க வாய்ப்பு அதிகம். காரணம் ஆசிரியர் B S N L இல் வேலை செய்தவர். NFTE யில் பதவி வகித்தவர்.

 ===> விதியே விதியே <==== கதையின் சுட்டி

கதையாசிரியர்: எஸ்ஸார்சி

சென்னையிலும் பெங்களூரிலுமாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. பெற்ற குழந்தைகளுக்கு இறக்கைகள் முளைத்தன. அது அதுகளுக்கு பிழைப்பு எங்கோ, அங்கு அங்கு போய் அவரவர்கள் காலத்தை ஓட்டுகிறார்கள். என் பெரிய பையனுக்குக் கலிஃபோர்னியாவில் வேலை. அந்த அமெரிக்க வாழ்க்கை எல்லாம் நமக்குச் சரிப்படாது.

சின்னவனுக்கு பெங்களூரில் ஜாகை. ஆக அந்த பெங்களூருக்குத் தான் சென்னையிலிருந்து அடிக்கடி போய் வர முடிகிறது. கலிஃபோர்னியா மாநிலத்து லாஸேஞ்சலிஸ் போய்வருவது பற்றி எல்லாம் நினைப்பது கூட இல்லை. கொரானா அரக்கன் கண்விழித்தபிறகு அந்த மாதிரிக்கு இருந்த யோசனை தீய்ந்துதான் போனது.

என் வீடிருக்கும் முடிச்சூர் அருகே அடையாறு ஓடுகிறது. அந்த ஆற்றின் வடகரை குடியிருப்புப் பகுதியாய் இருக்கும் இந்த நேதாஜி நகருக்கும் தாம்பரத்திற்கும் ஒரு நான்கு கிலோமீட்டர் இருக்கலாம். வீட்டிலிருந்து தாம்பரம் வரைக்கும் ஆட்டோ கீட்டோ என்று பிடித்துக்கொண்டு போய்விடலாம். பிறகு புறநகர் ரயில் பிடித்துத்தான் சென்ட்ரல் போகவேண்டும். தாம்பரத்திலிருந்து சென்ட்ரலுக்கு நேர் ரயில எல்லாம் ஏது? பூங்கா ரயில் நிலையத்தில் இறங்கித் தாண்டுத் தப்படியாய் மூட்டை முடிச்சுகளுடன் அந்த சென்ட்ரலுக்குள்ளே போகவேண்டும். அப்படியும் இப்படியும் மொத்தத்தில் நூறு படிக்கட்டுகள் ஏறி இறங்கவேண்டும். மின்சார ஏணி சில சமயம் வேலை செய்யும். சமயத்தில் படுத்தும் கொள்ளும்.

தாம்பரத்திலிருந்து மும்பை கொல்கத்தா டில்லிக்கு ரயிலுண்டு ஆனால் இந்த பெங்களூருக்குத்தான் இல்லை. இதனை எல்லாம் நாம் எங்கே போய்ச் சொல்ல முடியும்.

சென்னைக்குத் தாம்பரம் மாதிரி பெங்களூருக்கு கே.ஆர் புரம். அந்த கிருஷ்னராஜபுரம் நிறுத்தத்தில் டபுள் டெக்கர் ரயிலை விட்டு இறங்கினேன். மதியம் மணி பன்னிரெண்டரை. என்னோடு என் துணைவியும் வந்திருந்தாள். ரயில் நிலையம் என்றால் மாடிப்படியும் கூடவே இருக்கத்தானே செய்யும். அதனில் ஏறவும் இறங்கவும் அவளால் முடிவதில்லை. அறுபது வயது நெருங்கிய பெண்களுக்குப் படி ஏறுவதும் இறங்குவதும் சங்கடமாகவே இருக்கிறது .மின்சார ஏணி வசதி என்பதெல்லாம் இந்த ரயில் நிலையத்தில் இல்லவே இல்லை.

மாடிப்படி ஏறி ரயில் நிலையத்தின் அடுத்த வாயிற்பக்கம் இறங்கியிருந்தால் ராமமூர்த்தி நகருக்கு எளிதாகச் சென்றுவிடலாம். ஆட்டோ செலவுக்கும் ரூபாய் நூறுதான் ஆகும். மாடிப்படி ஏறுவது நம்மால் ஆகாது என்றால் கே ஆர் புரத்தின் மெயின் கேட் வழியாகத்தான் வெளியே வரவேண்டும். ஆட்டோவில் ஏறி ஊர் சுற்றிக் கொண்டு அந்த ராமமூர்த்தி நகருக்குச் செல்லலாம்.

அப்படித் தான் நானும் என் மனைவியும் ஒரு ஆட்டோவைத் தேடிக்கொண்டு மெயின் கேட் வாயிலில் நின்றோம். பெங்களூர் ஆட்டோக்காரர்களுக்கு அனேகமாக இங்கு புழங்கும் எல்லா பாஷைகளும் தெரிந்தே இருக்கின்றன. கன்னடம் தமிழ் தெலுங்கு மலயாளம் இந்தி ஆங்கிலம் என ஆறு பாஷைகள் தெரிந்தவர்கள்தான் இந்த பெங்களூர்வாசிகள். இன்னும் கூட மராட்டி கூர்க் என மொழி அறிந்தவர்கள் இங்கே இருக்கிறார்களாம். நான் தான் அவர்களைப் பார்த்ததில்லை.

‘சார் ஆட்டோ சார் ஆட்டோ' நான்கைந்து ஆட்டோக்காரர்கள் என்னை வழிமறித்தார்கள்.

‘நான் ’ராகவேந்திரா சர்க்கிள்’ போகணும்’

‘அப்பிடி போங்க அதுக்கு வேற ஆளு வேற ஆட்டோகாரங்க’ டிரைவர்கள் எங்களைத் தள்ளி தள்ளி விட்டார்கள்.

கடைசியாக ஒரு ஆட்டோக்காரர் எங்களை வழி மறித்து,’ எங்க போவுணும்’ என்றார்.

’ராகவேந்திரா சர்க்கிள், ராமமூர்த்தி நகர்’

‘ஆட்டோல ஏறுங்க’

‘எவ்வளவு கேக்குற’

‘ஏரநூற்று அம்பது’

‘எர நூறு வாங்கிக்க’

‘இண்ணைக்கு ஆட்டோ கேஸ் என்ன வெல விக்குது’

‘எப்பவும் ஆட்டோவுக்கு நூறு நூத்தம்பது தர்ரது’

‘அது மாடிப்படி ஏறி அங்காண்ட போயிட்டா நூற்றம்பதுதான்’

‘அது முடியாமதான இந்தப் புறமா நிக்குறம்’

‘அப்பறம் என்னா பேசுற’

என் மனைவிக்கு ஆட்டோவில் கால் தூக்கி எடுத்து வைக்க முடியாது. ’அந்தப்  படி உயரம். அந்த உயரம் என்னால் முடியவே முடியாது’ என்பாள். எப்போதும் அப்படித்தான். எப்போதும் என்றால் அது சமீபமாகத் தான். ஒரு நான்கைந்து ஆண்டுகளாக இருக்கலாம்.

ஆட்டோக்காரன் ஒரு செங்கல்லை எங்கிருந்தோ தூக்கிக்கொண்டு வந்தான். கீழே கிடத்திப் போட்டு ‘இதுல மொத ஏறிக்க பெறகு வண்டில ஏறு நாங்களும் தெனம் ஜனத்த பாக்குறம்ல’ என்றான்.

செங்கல்லில் கால் வைத்து என் மனைவி மெதுவாக வண்டிக்குள் ஏறிவிட்டாள். அவள் நகர்ந்து உட்கார்ந்தாள். நானும் அமர்ந்து கொண்டேன். ஆட்டோக்காரன் வண்டியை எடுத்தான். கொல்கத்தாவின் தொங்கு பாலம் போல் ஒரு பெரிய பாலம் சாலையில் தொங்கிக் கொண்டிருந்தது. அதனை ஒரு புறமாக்கி எங்கள் ஆட்டோக்காரன் ஒரு மஃப்சல் பேருந்து நிலையம் வந்தான். ஊர் பேர் எல்லாம் அங்கு எழுதியில்லையே. ஆட்டோக்காரன் சர்க்கு புர்க்கு என்று வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான். ஐ டி ஐ க்கு பக்கமாய் வந்து சேர்ந்தான். ஐ டி ஐ கட்டிடங்கள் இன்னும் தான் பிராணனை வைத்துக்கொண்டு இருக்கின்றன. இங்கு அட்டைக் கருப்பு நிறத்தில் சம்மணமிட்டு அமரும் தொலைபேசியைத் தயாரிப்பார்கள். அது எல்லாம் நின்று போய் எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. பொதுத்துறைக்கு எல்லாம் பிரதமர் நரசிம்ம ராவ் காலத்திலேயே குழிவெட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

மய்ய அரசு இந்த ஐ டி ஐ அடிமண்ணை பல்லாயிரம் கோடிகளுக்கு காசாக்கலாம். அதற்கு ஆட்களும் நேரமும் இன்னும் பொறுத்தமாக அமையவில்லை அவ்வளவுதான்.

எங்கப்பா போற நீ

‘நீ டென்ஷன் காட்டாதே

ஆட்டோக்காரன் எனக்கு பதில் சொன்னான்.

ஒரு தெருவின் பின் அடுத்த தெருவாகப் போய்க் கொண்டிருந்தான். சம்பந்தமே இல்லாத தெருவெல்லாம் வந்தது. எனக்கும் பழகிய ஊர்தானே இது.

ஏம்பா எடம் தெரியலன்னா யாரையாவது கேக்குலாம்

நீனு டென்ஷன் காட்டாதே

என் மனைவி அவன் குடித்திருப்பதைத் தெரிந்துகொண்டு நீங்க கொஞ்சம் பொறுமையா வாங்க

எனக்கு அறிவுரை சொன்னாள்.

ஏம்பா கோஷி ஆஸ்பிடல் தெரியுமா இல்லே லோடஸ் கல்யாண மண்டபம் தெரியுமா இல்லே சைதன்யா டெக்னோ ஸ்கூலாவது தெரியுமா

எல்லாம் எனக்கு தெரியும் நீ டென்ஷன் காட்டாதே

கோஷி ஆஸ்பிடலையும் தாண்டி வேறு எங்கோ போய்க் கொண்டிருந்தான்.

வண்டிய நிறுத்து நாங்க இறங்கிகறம்

வண்டியை நிறுத்தினான் யார் செய்த புண்ணியமோ.

வண்டியை விட்டு எறங்காதே

எங்களுக்குக் கட்டளையிட்டான்.

எதிரே இவனைப்போலவே நடந்து வந்த இன்னொருவனை நிறுத்தி ராகவேந்திரா சர்கிள் எப்பிடி போவுணும்

ஆட்டோக்காரன் கேள்வி கேட்டான்.

அவனும் குடித்துத் தான் இருந்தான்.

எலே வண்டிய ராகவேந்திரா சர்கிள் தாண்டி ஓட்டிகினு வர, வந்த வழியே ஒரு கிலோமீட்டருக்கு போ ரைட்டுல திரும்பு எதுத்தாப்புல ராகவேந்திரா சர்கிளு அப்பிடியே அடையாறு ஆனந்த பவனு அடுத்தாப்புல லோடஸ் மண்டபம் எங்க எங்கயோ இவாள இட்டுகிணு அலையற

அவன் பதில் சொன்னான்.

'உன் வண்டியே எங்களுக்கு வேணாம் நாங்க வேற எதானா பாத்து போய்க்கிறம்

'உங்களை கும்புடறன் ஒண்ணும் சொல்லாதிங்க எறங்கிடாதிங்க வண்டியிலயே இருங்க

எங்களிடம் சொன்னான். இரண்டு கைகளாலும் கும்பிட்டான்.

'நா அளவா குடிப்பன். அவன் சாதியில அய்யிரு ஆட்டோ ஓட்ட வந்துட்டான் அளவு கிளவு தெரியாம குடிப்பான். அய்யிரு சனம் நல்லா இருந்தா முருங்கக்கா வேணாம் கத்திரிக்கா வேணாம் வெங்காயம் வேணாம்னு பேசும். கெட்டு போனா ஆமய சுட்டு, பாம்ப சுட்டு, பல்லிய சுட்டு தின்னும். பேட்டரி கட்ட பிளாஸ்டிக் செருப்பு ஊறலுல போட்டு சாராயம் காச்சுனாலும் வாங்கி குடிச்சி குண்டி வெடிச்சி சாவும். நீங்க எறங்கிகிங்க வேற எதனா ஆட்டோல போவுலாம் எதிரே நடந்து வந்தவன் எங்களுக்குச்சொன்னான்.

என் மனைவிக்கு ஆட்டோவில் ஏற ஒரு செங்கல் உயரம் வேண்டும்.இறங்கவும் எதாவது உயரமாக வேண்டும். நாங்கள் எங்கே ஏறுவது? எங்கே இறங்குவது? எனக்குள்ள பிரச்சனையே வேறு.

‘செத்த பொறு சாரு. டென்ஷன் மட்டும் நோ என்றான்.

வண்டியை U டர்ன் போட்டான். அதே சாலையில் போய் ரைட்டில் திரும்பி ராகவேந்திர சர்கிள் தாண்டினான். என் சின்ன பையன் வீட்டு வாயிலில் டக்கென்று நிறுத்தினான்.

அடையாறு ஆனந்த பவனுக்கும் லோடஸ் கல்யாண மண்டபத்துக்கும் இடையுள்ள தெருவில் முதல் வீட்டில்தானே நாங்கள் இறங்க வேண்டும்.

நானும் என் மனைவியும் அப்படியே இறங்கினோம்.

எங்கோ தெரு எல்லாம் தேடி ஒரு செங்கல் கொண்டு வந்தான் ‘அம்மா இப்ப எறங்குங்க என்றான். என் மனைவிக்குப் பெரிய ஒத்தாசை அது.

‘ஆட்டோகாரன் ஊர சுத்தி சுத்தி வந்தான் பெட்ரோல் என்ன வெல விக்கறது ஒரு ஐம்பது ரூபா சேர்த்து குடுங்க ஒண்ணும் காச பாக்கவேணாம்

என் மனைவியா சொல்வது நான் பார்த்துக்கொண்டேன். அவள் தான் சொன்னாள்.

முந்நூறு ரூபாய் எடுத்து ஆட்டோக்காரனிடம் கொடுத்தேன்.

‘சார் வேணாமுங்க இந்தாங்க உங்க ஐம்பது நா பேசுனது எர நூத்து அம்பது அது போதும் எனக்கு. நடந்த தப்பு என் தப்புதான்

ஆட்டோவின் ஸ்டேரிங்க் பிடித்தபடி ஆட்டோ டிரைவர் எங்களையே பார்த்தான்.

அவன் கண்கள் குளமாகியிருந்தன. அது எதற்காகவும் இருக்கலாம்.

அவன் அழறானா என்ன

வேற எதானா பேசேன் என் மனதிலும் சங்கடம். என் மனைவியை நோக்கினேன்.

எங்க போறிங்க அடுத்தாப்புல ஆட்டோக்காரனைக்கேட்டேன். இது நாம் கேட்க வேண்டுமா? என்ன.

சாரு தெரியாத மாதிரிக்கு கேக்குறீங்க

சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.

அவன் எங்க போறான்னு தெரியுமா

திரும்பவும் கே ஆர் புரம் ரயில்வே ஸ்டேஷனுக்குத்தான்

அதுதான் இல்ல அவன் நேரா அந்த பலான கடைக்குப் போறான்

அது எப்பிடி சொல்றீங்க

பேசனதவிட பத்து ரூபாயாவது தனக்கு கூட வேணும்னு சண்ட போடணும். அப்பிடி போடுறவன்தான் சரியாத் தொழில் பண்ணுற ஆட்டோக்காரன். அவன்மட்டும் தான் ஆட்டோ ஸ்டேண்டுக்கு திரும்பவும் போவான். சவாரியும் அடுத்ததா ஏத்துவான்.’

இல்லன்னா

அவன் அதே நெம்பர் கடைக்குத் தான் போவான்

அட நாராயணா மனைவி எனக்குப் பதில் சொன்னாள்.

என்னுரை

இக்கதையில் நான் கண்ட நீதி குடிப்பழக்கம் குலம் கோத்திரம் நோக்குவதில்லை என்பதே.

குலத்திற்கும் தொழிலுக்கும் இருந்த பிணைப்புகள், கட்டுப்பாடுகள்  எல்லாம் மறந்து வயிற்றுப பிழைப்பிற்கு எக்குலமாயினும் எத்தொழில் ஆயினும் செய்ய முனைப்பு ஏற்படுவது தற்காலத்தில் சாதாரணமாகி விட்டது. புலியும் பசி தாங்காமல் புல்லை தின்னும் காலம்.

கதை ஓட்டத்தில் நீங்கள் ஒன்றை அவதானித்திருக்கலாம். ஆட்டோகாரர் முதலில்  பேசும்போது இருந்த தற்பெருமை, கெத்து, முரட்டுப் பரிமாற்றம் “எனக்கு எல்லாம் தெரியும்” என்ற அதட்டல் எல்லாம், வழி தவறி விட்டது என்பதை உணர்ந்தபோது குற்ற உணர்வில் மரியாதை, கும்பிடுதல் போன்ற நல்ல குணங்கள் உள்ளவராகிறார்.  இதுவே குலப்பிறப்பாலும் வளர்ப்பாலும் வந்த நற்பண்பு.

//‘சார் வேணாமுங்க இந்தாங்க உங்க ஐம்பது நா பேசுனது எர நூத்து அம்பது அது போதும் எனக்கு. நடந்த தப்பு என் தப்புதான்.’ //

இக்கதையில் வரும் ஆட்டோக்காரர் போன்ற ஒருவரின் ஆட்டோவில் இங்கு திருவனந்தபுரத்தில் பயணித்திருக்கிறேன். கெட்ட சகவாசத்தினால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி சீரழிந்தவர் சிலரை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் 60 வயதாகும் முன்பே மேலுலகம் சென்று விட்டார்கள். 

இக்கதை ஒரு விதத்தில் சிவசங்கரியின் “ஒரு மனிதனின் கதை” யை நினைவூட்டியது.

அந்தக் கதையில் தியாகு என்னும் இளைஞன் பெரிய சிக்கல்கள் இல்லாத குடும்பச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கையில் விளையாட்டாகத் தொடங்கிய குடிப்பழக்கம் அவனை அடிமையாக்கி, குடிநோயாளியாக ஆக்கி, அவன் வாழ்க்கையை அழிப்பதை விவரித்திருப்பார். தொடர்கதையாக, தொலைத்தொடராக, திரைப்படமாக வெளி வந்த கதை..

ஆசிரியர்: எஸ்ஸார்சி


எஸ்ஸார்சி புனை பெயர். இயற்பெயர் எஸ் ராமசந்திரன். கடலூர் மாவட்டம் தருமநல்லூர் சொந்த ஊர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வேதியியல் படித்தார்.  பி எஸ் என் எல்லில் இளநிலை கணக்கு அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய “நெருப்புக்கு ஏது உறக்கம்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

// கல்லூரியில் படித்த சமயம் சிதம்பரம் வந்த காஞ்சி ஜயேந்திரர் கீழ வீதியில் வேத பாராயண மடத்தில் இறங்கியிருந்தார். அவர் முன் கூடியிருந்த ஆன்மீகக் கூட்டத்தில் தன்னிடமிருந்த மாலையொன்றை வீசி எறிந்தார். அது என் மீது வந்து விழுந்தது. பின்னர் என்னை அவர் அழைத்து வரச்சொல்லிப்பேசினார்.

காஞ்சி சங்கராச்சாரியர் ஜயேந்திரர் அவர்கள் என்னை இந்துசமய தொண்டு மன்றம் தொடங்கிப் பணி செய்ய அறிவுறுத்தினார். பரங்கிப்பேட்டையில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.//

இதனால் உந்தப்பட்டு தான்

//திண்ணை இணைய தள இதழில் தொடர்ந்து எழுதுகிறேன். பத்து உபநிடதங்களை நான்கு வேதங்களை புதுக்கவிதை நடையில் நூறு வாரங்கள் கொண்டு வந்திருக்கிறேன். //

இவர் எழுதிய ஒரு புது கவிதை சாம்பிள்.

ஈசாவாஸ்ய  உபநிடதம்

//அனைத்து உயிர்களையும்

தன் ஆன்மாவுக்குள்ளே காண்பதுவும்

அனைத்து உயிர்களிலும்

தன் ஆன்மாவைக் காண்பதுவும்

ஆத்ம அனுபவம்//

அத்வைதம்?

//அய்ந்து சிறுகதை நூல், மூன்று புதினங்கள், மூன்று கவிதை நூல், நான்கு கட்டுரை நூல்,

மொழிபெயர்ப்பு நூல்கள் இரண்டு ஆகியன இதுவரைக்குமான என் படைப்புக்கள்.// இவரை தன்னைப்பற்றி  sirukathaigal.com தளத்தில் எழுதிய விவரமான C V யை இந்தச் >>>>>>>>சுட்டியில்<<<<<<<< வாசிக்கலாம்.

23 கருத்துகள்:

  1. மரியாதைக்குரிய
    ஆசிரியை ரூபி அவர்கள் வடிவமைத்த கணிதப்பாட கல்வி செயலி யூட்யூப் மாதிரி ஒன்றைக் கொடுத்திருக்கக் கூடாதா? எபி மூலமாகவும் தெரிந்த மாணவ குழந்தைகளுக்கு பயன்பட்டிருக்குமே என்ற எண்ணத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடிப்பார்க்கவில்லை ஜீவி ஸார்...   எலலா வேலைகளையும் (அலுவலக நேரம் போக) அவசர அவசரமாக செய்ய வேண்டி இருக்கிறது!

      நீக்கு
    2. பூர்ணமாக உணர்கிறேன், ஸ்ரீராம். ஜெஸி ஸார் இதைப் பகிர்ந்திருக்கிறார் என்று நினைத்தேன்.

      நீக்கு
  2. பெங்களூர் வாசியான எனக்கு இந்தக் கதை சம்பவத்தைச் சொல்லிச் செல்லும் நிகழ்வுக் குறிப்பாகத் தோன்றியது. டெக்னிகல் மாற்றங்கள் வந்துவிட்டதால் நமக்கு நிறைய வசதிகளும் வந்துவிட்டன (சக்கரம் உள்ள பெட்டிகள், எஸ்கலேட்டர், லிஃப்ட், மெட்ரோ, நம்ம யாத்ரா ஓலா போன்ன அப்ளிகேஷன்....). இருந்தாலும் நமக்கு நடக்க முடியாது ஏற முடியாது என்றால் பயணம் மிகவும் கடினம்.

    குடிக்கு கலம் கோத்திரம் கிடையாது. அதைவிட்டு எவ்வளவு தள்ளி இருக்கிறோமோ அவ்வளவு நம் வாழ்வு செழுமையுறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // குடிக்கு கலம் கோத்திரம் கிடையாது. அதைவிட்டு எவ்வளவு தள்ளி இருக்கிறோமோ அவ்வளவு நம் வாழ்வு செழுமையுறும்.// அதே, அதே!

      நீக்கு
  3. //பத்து உப நிடதங்கங்களை நான்கு வேதங்களில் புதுக்கவிதை நடையில் நூறு வாரங்கள் திண்ணை இணைய தள இதழில் எழுதியிருக்கிறேன்.//

    அம்மாடி! எவ்வளவு அரிய பணி!.. எவ்வளவு அடக்கமாக சாதாரணமாகச் சொல்கிறார்! உபநிடதங்களை வாசித்து எழுத முயன்றிருக்கும் எனக்கு இவர் செய்திருக்கும் பணியின் அருமையை உணர்கிறேன். வியக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கடைசி பாசிடிவ் செய்தியைத் தவிர மற்ற எல்லாமே மிகவும் சூப்பர். பாராட்டுகள்.

    காலம் போன காலத்தில் இப்போதுதான் பலப்பல லஞ்சம் வாங்கி ரௌடிகளுக்கும் சட்டத்திற்குப் புறம்பானவர்களுக்கு வாலாட்டி மக்களுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்த போலீஸ்கார்ர்களை இடமாற்றம் செய்திருக்கிறார் எனப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. ஓ.. கடலூர் ராமச்சந்திரனா?..
    எனக்குத் தெரிந்த நண்பர் தான். நான் நடத்திய 'சாரல்' பத்திரிகையில் நண்பரின் கதைகளை கேட்டு வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன்.
    நெடுங்காலம் கழித்து
    புகைப்படம் மூலமாகவும் நண்பரைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. இப்பொழுது தான் பார்த்தேன்.
    'எனக்குத் தெரிந்தவராய் இருக்கும்' என்ற உங்களின் யூகமும் சந்தோஷத்தைத் தந்தது ஜெஸி ஸார்.

    பதிலளிநீக்கு
  7. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. கதையை வாசித்ததும் பல டிராபிக் நெருக்கடிகளுக்கிடையே பிரதேச மொழி புரியா என்னை பழைய தில்லி ரயில் நிலையத்திற்கு சவாரி ஏற்றிக்கொண்டு வழியில் ஆட்டோ டைனமோ உடைந்தும் குறித்த நேரத்தில் கொண்டு வந்து விட்ட ஆட்டோ ஓட்டுனரை அணைத்துக் கொண்டு இருவரும் நெகிழ்ந்தது நினைவுக்கு வந்தது.
    மனிதம் உணர்வதற்கு
    நல்ல மனம் இருந்தால் போதும். சொல்லப் போனால் அப்படியான உணரும் தருணங்கள் தாம் நாம் மனிதர்கள் என்பதையே நினைவுபடுத்துகின்றன.

    பதிலளிநீக்கு
  9. ரூபி டீச்சர் வீடியோ.

    https://www.youtube.com/watch?v=b_4AYcIsn5s


    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. நிச்சயம் நமக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று பலருக்கு உபயோகப்படலாம். நன்றி ஜெஸி ஸார்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல உள்ளங்கள் அங்கு, இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  12. உதவும் நல்லுள்ளங்கள் அனைவரையும் வாழ்த்துவோம்.

    கதை குடிப்பவர் மீண்டும் அதை தேடி ஓடுவதை எடுத்துச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  13. வீடு தேடி உதவும் மனித நேய ராதா முத்து அவர்களுக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. குடிக்கு அடிமை ஆகி விட்டால் நேரம் காலம் தெரியாது என்பார்கள்.
    எப்படியோ நல்லபடியாக போகவேண்டிய இடத்திற்கு கொண்டு விட்டாரே!
    குடிப்பவர் மனநிலையை சொல்கிறது கதை.

    பதிலளிநீக்கு
  15. வருகை புரிந்தோர்க்கும் கருத்துக்கள் கூறியோருக்கும் நன்றி. இன்று என்னமோ இரண்டு கீதா மேடம் களையும் காண வில்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  16. நான் எஸ்ஸார்சி
    தொலைபேசி இலாகாவில் கடலூரில் பணிபுரிந்து சென்னையில் ஓய்வுபெற்றவன். பழையபெருங்களத்தூர் சென்னையில் குடியிருக்கிறேன்.
    ஜீவி யை கனேசன் பி ஐ, சிவா -சித்தார்த்தன் இவர்களோடு சந்தித்தவன். சென்னை அகில இந்திய மாநாட்டில் வடபழனியில் நடந்தது. வெ. நா என்னை காஞ்சியில் இரண்டுமுறை கூட்டத்திற்கு அழைத்தவர். இதுவரை 35 புத்தகங்கள் வந்துள்ளன. நான் பிரபலமானவன் இல்லைதான்.
    மற்றபடி இந்தக்கதை வாசித்த உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். 9443200455 வாட்ஸ் ஆப் எண்ணும் இதுவே. ஆகஸ்ட் முதல் வாரம் கழித்து இந்தியா வருவேன். தற்போது அமெரிக்காவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க சந்தோஷம் ஸார்.  ரேண்டமாக ரசித்த, அல்லது வாசித்து கவர்ந்த கதைகளை பகிரும் இது  மாதிரி பதிவுகளுக்கு அதன் படைப்பாளிகளே வந்து பதில் சொல்வது எதிர்பாராத சந்தோஷத்தைத் தருகிறது.  கடவுளே நேரில் காட்சியளித்த மாதிரி...  எனக்கொரு கேள்வி ஸார்...   இது இங்கு வந்திருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொண்டீர்கள்?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!