நான் படித்த பள்ளியின் நினைவுகள் – தாளவாடி (Talavadi) பகுதி 1
2020, அக்டோபரில், கோவிட் பிரச்சனை தலைதூக்கி இருந்த நேரம். வளாகத்துக்குள்ளேயே அடைந்து கிடந்ததால், ஒரு சனிக்கிழமை அதிகாலையில் மத்யரங்கம் நோக்கிச் சென்றோம். மதியத்திற்கு புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் போன்றவற்றைக் கொண்டு சென்றிருந்தோம். இருந்தாலும் வழியில் தாவண்கெரே Bபெண்ணெ தோசை போன்றவற்றைச் சாப்பிட்டுவிட்டு நேரே மத்யரங்கம் போனபோது 11 ½ ஆகிவிட்ட து. பிறகு அருகில் காவிரி, அங்கிருந்த கல்லால் ஆன மிகப் பழங்காலத்து பாலம் போன்றவற்றைப் பார்த்துவிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டபிறகு, மணி கிட்டத்தட்ட 1 மணி. தலைக்காவிரி செல்லலாமா இல்லை மைசூர் போகலாமா என்று பேசிக்கொண்டிருந்த போது, கொஞ்ச தூரத்தில்தான் சாம்ராஜ்நகர் இருக்கிறது என்று மச்சினன் சொன்னான். அப்படியென்றால் நான் இருந்த தாளவாடி என்ற ஊருக்குச் செல்லாமா என்று கேட்டேன். ரொம்ப தூரம் என்றால் வேண்டாம் என்றேன். அவனோ, அதற்கென்ன, போயிடலாம் என்று சொல்லிவிட்டான். இது திட்டமிடப்படாத பயணம். அவனிடம் சொல்லிவிட்டேன், அந்த ஊர் எனக்கு நினைவிருக்கிறது, ஆனால் சாம்ராஜ்நகரிலிருந்து வழியெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் அது சத்தியமங்கலத்துக்கு, அதாவது கோயமுத்தூர் செல்லும் பாதையில் இருக்கிறது என்று சொன்னேன். கூகுள் இருக்க நமக்குக் கவலை எதற்கு என்று சொல்லிவிட்டான்.
வலது புறத்தில் பழங்கால கற்பாலம். இடது
புறத்தில் புதிதாகப் போடப்பட்டுள்ள பாலம். பழைய
பாலத்தில் கோவில் கல் தூண்களைப் போன்று அமைத்து அதன் மீது கற்களை வைத்து அதன் மீது
மண் போட்டிருக்கிறார்கள்.
பழங்கால கற்பாலம். இந்த இடத்திற்குப் பலமுறை
சென்றிருக்கிறோம். நிறைய படங்கள் எடுத்திருக்கிறேன்.
இந்த போர்டைப் பார்த்த பிறகுதான், எங்கள்
பயணத் திட்டம் மாறியது.
சாம்ராஜ்நகர்
அருகில் வரும்போது மதியம் 2
½ மணி . வழியிலேயே காரை நிறுத்தி, கொண்டுவந்த உணவைச்
சாப்பிட்டோம்.
அப்போதும்
எனக்கு தாளவாடி போக முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அவன் எடுத்த காலைப் பின்வைக்கப்
போவதில்லை என்று சொல்லி கூகுள் மேப்பின் துணையோடு ‘தாளவாடி’ என்ற போர்டைப் பார்க்கும்போது மணி 3 ½ ஆகிவிட்டது. பிறகு வழியில்
கேட்டுக்கொண்டு,
அடுத்த
பத்து நிமிடங்களில் தாளவாடி ஊரை அடைந்தோம்.
தாளவாடிக்குச் செல்லும் காட்டுப் பாதை. அடுத்த படம் தாளவாடி ஊரின் நடுவே.
இந்த ஊருக்கு நான் 42 வருடங்களுக்குப் பிறகு வருகிறேன். நினைவலைகளில் உள்ளதுடன் தற்போதைய ஊர் ஓரளவு பொருந்தியது. கார், நேராக அங்கு காட்டாற்றின் மேலிருந்த பாலத்தை நோக்கிச் சென்றது. மணல் வெளியாகப் பார்த்திருந்த இடம், தண்ணீருடன், மற்ற ஆறுகளைப் போலவே செடிகள் மரங்கள் நிறைந்து இருந்தது. மணலைத்தான் காணவில்லை.
ஊருக்குச் செல்லும் போர்ட். அடுத்த படத்தில் தாளவாடி பேருந்து நிலையம்.
காட்டின் விளைபொருட்களான வாழை, கரும்பு போன்றவை இங்கிருந்து வெளியில் செல்லும். இது தவிர, ஏராளமான கடுக்காய், நெல்லிக்காய் போன்றவைகளும்
காட்டில் விளையும்.
ஆற்று நீரின் பகுதியில் ஏராளமான மரங்கள்/செடிகள்
இப்போது. முன்பு முழுவதும் மணற்பரப்பு.
தாளவாடி ஆற்றின் மேலிருக்கும் பாலத்தைக் கடந்து 2 கிமீ சென்றால் தொட்டகாஜனூர். இது கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் பிறந்த ஊர். அவர் பிறந்த வீடு.
நினைவலைகள்
நான் 6ம் வகுப்பு இராமனாதபுரம், பூலாங்குறிச்சியில் இருந்த மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். அந்த வருடம் படிப்பு முடிந்த சமயத்தில் பள்ளியின் ஹெட்மாஸ்டராக இருந்த என் அப்பாவிற்கு கோவை மாவட்டம் சத்தியமங்கலம் அருகில், மலைப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளிக்கு மாற்றல் வந்தது. மலைப்பகுதியில் இருந்த அந்தப் பள்ளி மிகவும் பின் தங்கிய பகுதி, காடுகள் சூழ்ந்த இடம். அதனால் எங்களை தாளவாடி என்ற ஊராட்சியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அதாவது நாங்க எல்லாரும் தாளவாடியில் இருந்தோம். அப்பா மாத்திரம் வாரம் முழுமைக்கும் அவர் வேலை பார்த்த பள்ளி இருந்த ஊரில் இருப்பார். சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடி சுமார் 60 கிமீ தூரம். பண்ணாரி தாண்டிய பிறகு (பண்ணாரி மாரியம்மன் கோயில் புகழ் பெற்றது), மலையில் பேருந்து பயணிக்கும், பிறகு காட்டுப்பாதை வழியாக திம்பம், ஹாசனூர் போன்ற இடங்களைக் கடந்து தாளவாடி வரும். இந்த இடைப்பட்ட காடுகளில் யானைகள் நிறைய இருக்கும். மலையில் 27 கொண்டை ஊசி (Hair Pin bend) வளைவுகள் உண்டு. என் அப்பா வேலை பார்த்த மலைக் கிராமப் பள்ளி, தாளவாடியிலிருந்து சுமார் 20 கிமீ தூரத்தில் இருந்தது. மலைக்கிராமங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், தாளவாடியிலிருந்து 2 கிமீ தூரத்தில் இருந்த Dதொட்டகாஜனூர் என்னும் ஊர்தான். (அங்கிருந்துதான் சந்தன வீரப்பன், நடிகர் ராஜ்குமாரைக் கடத்தினான் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்) அதன் பிறகு காடுகள் சூழ்ந்த பாதைதான் அப்பாவின் பள்ளி இருந்த ஊர். மழைக்காலங்களில் காட்டின் இடையில் உள்ள ஓடைகளில் பெரும் வெள்ளம் போகும். அப்போதெல்லாம் பேருந்துப் போக்குவரத்து இருக்காது. அந்தப் பகுதியில் கரும்பு விளைச்சல் அதிகம். அதனால் சீசனில் வெல்லம் காய்ச்சுவார்கள். இந்தப் பகுதிகள் எல்லாமே தமிழ்நாட்டுடன் இருந்தாலும், கர்நாடக எல்லைப் பகுதியைச் சேர்ந்தவை என்பதால், பள்ளியில் கன்னட மொழிதான் பிரதானமாக இருக்கும். தாளவாடியில் மாத்திரம், பாதிக்குப் பாதி தமிழ் மாணவர்களும் இருப்பார்கள் என்பதால், தமிழ் செக்ஷன், கன்னட செக்ஷன் என்று ஒவ்வொரு வகுப்புக்கும் இரண்டு பிரிவுகள் இருக்கும்.
நாங்கள் சத்தியமங்கலத்திலிருந்து, எங்கள் சாமான்களை ஏற்றிவந்த லாரியிலேயே பயணித்து தாளவாடிக்கு வந்தோம். அதற்கு முன்பு, என் அப்பா, ஒரு வீடு பார்த்து, மற்ற அடிப்படை வேலைகளையும் முடித்துவைத்திருந்தார்.
லாரியில்
காட்டுப்பகுதியில் வரும்போது கூட்டம் கூட்டமாக யானைகளை 100 மீட்டர் தூரத்தில் பார்த்த நினைவு
இருக்கிறது.
காடுகளில்
ஏராளமான யூகலிப்டஸ் மரங்களையும் பார்த்தேன்.
27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள மலை. படத்தில் வளைவின் வீர்யம்
சரியாகத் தெரியவில்லை. காரை நிறுத்திப் புகைப்படம் எடுக்கும் வசதி இல்லை. மலைப்பாதையில் இறங்கும்
வண்டிக்குத்தான் முன்னுரிமை. ஏறும் வண்டி காத்திருக்கவேண்டும்.
தாளவாடியிலிருந்து சத்யமங்கலம் போக 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலையில் இறங்கிச் செல்லவேண்டும் (அதற்கு முன்பு நெடிய காட்டுப்பாதை). மலையை விட்டு இறங்கி சமவெளிக்கு வந்துவிட்டால் பண்ணாரி மாரியம்மன் கோவில்.
எங்கள் வீட்டிலிருந்து நான் படித்த பள்ளி சுமார் 1 கிமீ தூரம். பள்ளிக்கு முன்பாக ஒரு காட்டாறு ஓடிக்கொண்டிருந்தது. மலைப்பகுதியில் மழை பெய்தால் பயங்கர வேகத்துடன் கரைபுரண்டு ஓடும். அப்போது பலவித மரங்களையும் அடித்துக்கொண்டு வரும். மற்ற நேரங்களில் சுமாராகத்தான் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்.
எங்கள் வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்திலேயே அந்தக் காட்டாறு ஓடும். அதன் மேலாக நல்ல புதிய பாலம் வேறு அப்போது இருந்தது. பாலத்தின் கீழே நிறைய மணற்பகுதிகள் உண்டு. காட்டாறு என்பதால், மலைப்பகுதியில் மழை பெய்துவிட்டால் வெள்ளம்தான். இங்குதான் நாங்கள் வார இறுதிகளில் அல்லது விடுமுறை நாட்களில் அப்பாவுடன் சென்று குளிப்போம்.
எங்கள் பள்ளி வளாகம் ரொம்பவே பெரியது. பெரிய கால்பந்து மைதானம் போல விளையாட்டு மைதானம் இருக்கும். அந்த ஊருக்கு பள்ளியும் பெரிதாகவே இருந்தது. புதிதாகவும் இருந்தது. பள்ளி வளாகத்தில் நுழைந்தவுடன் கைப்பந்து மைதானத்தில் பாதியளவு இருந்த இடத்தில் மண் கொட்டி வைத்திருப்பார்கள். அங்குதான் உயரம் தாண்டும் மற்றும் நீளம் தாண்டும் போட்டிகள் நடக்கும். எல்லாப் பள்ளிகளிலும் இருப்பதைப் போல தண்ணீர் தொட்டி இருக்கும். வளாகத்தில் ஏகப்பட்ட மரங்களும் புல்வெளியுமாகக் காணப்படும். அப்போதோ (1976-77) ஒரு அறிவியல் கூடமும் புதிதாக இருந்தது.
எங்கள் வீடு என்பது மூன்று வீடுகள்/பகுதிகளைக் கொண்டது. முன் பக்கம் சமையலறை, படுக்கை அறை, சிறிய ஹால், இன்னொரு அறை என்று இருக்கும் ஒரு வீடும், அதன் பின் பகுதியில் ஹால், சிறிய அறை, நடுப்பகுதி, சமையலறையுமாக ஒரு வீடும், அதற்குப் பின்பகுதியில் இன்னொரு இதேபோன்ற அமைப்பு, மற்றும் 2 பாத்ரூம்கள் பின் பகுதியில் இருந்த இரண்டு வீட்டுக்கும் என்று இருந்தது.. முன்பகுதி வீட்டில் இருந்தவர், தாளவாடி மேல்நிலைப் பள்ளியின் ஹெட்மாஸ்டர். பின் வீட்டில் இருந்தவர் அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர். அவர்தான் வீட்டுக்காரர். அவருடைய குடும்பம் கொள்ளேகால் பகுதியில் இருந்தது. எங்கள் வீட்டுப் பகுதிக்கு அருகிலேயே பல வீடுகள் இருந்தன. அவற்றில் பள்ளியின் சில ஆசிரியர்கள் குடும்பமாக வசித்துவந்தனர்.
ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பது எங்கள் பகுதி. முன் பக்கம் நீல வண்ணத்தில் இருப்பது பள்ளி ஹெட்மாஸ்டரின் பகுதி. வீட்டுக்காரர் பகுதி பின்பக்கம் இருந்தது. அதன் உள் அமைப்பு எனக்கு நினைவில்லை. அந்த வீட்டிற்குள் வெகு அபூர்வமாகத்தான் சென்றிருக்கிறேன்.
எங்கள்
வீடு இருந்த பகுதி,
தாளவாடி
பேருந்து நிலையத்திற்குப் பின்புறம் சிறிது நடந்து போலீஸ் ஸ்டேஷன் பிறகு
அவர்களுடைய குடியிருப்புப் பகுதியைக் கடந்தால் வரும். வீட்டின் அருகிலேயே அந்தப் பகுதியில்
உள்ளவர்களுக்காக ஒரு கிணறும் இருந்தது.
தாளவாடியில் நாங்கள் இருந்த வீடு. (நீல நிறத்தில் வீடு இருக்கும் இடம் வெற்றிடமாக இருந்தது). ஓட்டு வீடு, நாங்கள் இருந்தபோது புதிதாகக் கட்டப்பட்டிருந்தது. அதன் வலது புறத்தில் ஒரு தோட்டமும் இருந்த து (அங்கு கோதுமை நிற நாகங்கள் சகஜமாகத் தென்படும்)
ஹெட்மாஸ்டரின் மகன், என்னுடைய வகுப்பு (7ம் வகுப்பு). ஆண் பெண் இருபாலாரும் படிக்கும் பள்ளி அது. எங்கள் பள்ளி, வாலிபால் (கைப்பந்து) விளையாட்டுக்குப் பெயர் போனது. 77ம் வருடத்தில் மாவட்டத்தில் எல்லாப் பள்ளிகளையும் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றினார்கள். அந்தப் பள்ளியில்தான் நான் 7ம் வகுப்பும் 8ம் வகுப்பும் படித்தேன்.
ஆரம்பத்தில் சில வாரங்கள்? அல்லது ஓரிரு மாதங்கள் சிரமப்பட்டிருப்பேன். அனேகமாக எல்லோருக்கும் கன்னடம் தெரியும். நானோ புதிதாக வந்துள்ளவன். (என் அண்ணனும் அந்தப் பள்ளியில்தான் படித்தான்). பள்ளியில் சேர்ந்த இரண்டாம் நாளிலேயே கிடைத்த இடைவெளி நேரத்தில் அந்த மணற்பகுதியில் கையால் பெரிய பிள்ளையாரை வரைந்தேன். பலர் பாராட்டினார்கள். அதனால் ஏற்பட்ட புகைச்சலின் காரணமாகவும், அது இளம் பிராயம் என்பதாலும் (teenage) எனக்கும் ஹெட்மாஸ்டர் பையனுக்கும் எப்போதுமே ஏதாவது பிரச்சனை வந்துகொண்டே இருந்தது. அதனால் விளைந்த ஒரே ஒரு கெடுதலைப் பிறகு கூறுகிறேன். என்னுடன் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்ற தெலுங்கு மாணவனும் படித்தான். அவன் என்னைவிட படிப்பாளி.
அந்த ஊரிலிருந்து நடக்கும் தூரத்திலேயே காட்டுப்பகுதி வந்துவிடும். சில மாதங்களுக்கு ஒரு முறை, ஹெட்மாஸ்டர், அவருடைய பெண் (9ம் வகுப்பு), பையனுடன் நானும் நடந்து காட்டுப்பகுதிக்குச் சென்றிருக்கிறோம். அங்கு சந்தன மரங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பதைப் போல படம் வரைதல், பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி என்று எல்லாவற்றிலும் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கிவிடுவேன். கையெழுத்துப் போட்டியில் மாத்திரம் என் அண்ணன் பரிசு வாங்குவான். என் வகுப்புத் தோழர்களின் பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை.
வகுப்பில் ராஜகோபால் முதல் ரேங்க் (தமிழ்/கன்னடப் பிரிவுகள் எல்லாம் சேர்ந்து), நான் இரண்டாவது, கோவிந்தராஜன் என்ற கன்னடப் பிரிவு மாணவன் மூன்றாவது ரேங்க். அப்போது ஆங்கில மொழியில் மிகுந்த திறன் பெற்றிருந்தேன் (இதெல்லாம் 6ம் வகுப்பு வரை என் அப்பா, எங்களுக்குக் கற்றுத்தந்ததின் பயன். Wren and Martin Grammer book வைத்துக் கற்றுக்கொடுத்திருந்தார். எல்லா tense, நிறைய வார்த்தைகள் என்றெல்லாம் கற்றுக்கொடுப்பார்.) தாளவாடியில் நான் ஆங்கிலத்தில் முதல் மாணவனாக இருந்ததில் என்ன அதிசயம் இருக்கிறது? பரீட்சையின் போது அரை மணி ஆனதற்குப் பிறகுதான் விடைத்தாளைக் கொடுக்கமுடியும், பரீட்சை 1 ½ மணி நேரம் இருந்தாலும். ஆங்கிலம் இரண்டாம் தாளை நான் முதல் அரைமணிக்கு முன்பே முடித்துவிடுவேன், அரை மணி ஆனவுடன் முதலில் விடைத்தாளைக் கொடுத்துவிடுவேன். 90 மதிப்பெண்களுக்கு மேல் இரண்டாம் தாளில் வாங்கிவிடுவேன் என்றாலும், அப்போது ‘பீத்தல்’ வேலை செய்திருக்கிறேன் என்று பிற்பாடு நினைத்துக்கொள்வேன். இதற்குக் காரணம் என்னுடன் படித்த பெண் நண்பியாக இருக்குமோ? அந்தப் பள்ளியில் 150-200 மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள் என்று நினைவு. தினமும் அசெம்ப்ளி உண்டு. ஒவ்வொரு செக்ஷன் மாணவர்களும் வரிசையில் நிற்க, லீடர் முன்னால் நிற்பான். ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்ற பாடலை, தமிழாசிரியர் பாடாத போது, நான் தைரியமாகப் பாடுவேன் (வெட்கம் என்பது என்னிடம் இந்த விஷயங்களில் கிடையாது).
தாளவாடி
பள்ளியைப் பற்றி நினைக்கும்போது,
இருபதம்சத்
திட்டத்தைப் பற்றி மேடையில் பாடியதும் (பிரதமர்
இந்திராகாந்தி கொண்டுவந்த திட்டம்), ஜனாதிபதி
பக்ருதீன் அலி அகமது மறைந்ததும்,
அருகிலிருந்த
காட்டில் நாவல் பழங்களை அசட்டுத் தைரியத்தில் பொறுக்கப் போனதும், பள்ளிக்குள்ளேயே வந்த
பெரிய மலைப்பாம்பை முதல் முறையாகப் பார்த்ததும், நடிகர் ராஜ்குமார் அவர்களின்
உறவினர்கள் என் பள்ளியில் படித்ததும், அவங்க
எலெஃபெண்ட் பெல்பாட்டம் அணிந்து வந்ததும், வகுப்புக்கு லீடர் தேர்ந்தெடுக்க
தேர்தல் வைத்ததும்,
அதில் நான்
சாமர்த்தியத்தால் வெற்றி பெற்றதும் என்று பல சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அப்போதே சாதீய நோக்கு, மொழிப் பற்று (கன்னடம்) என்று மாணவர்களிடையே
பரவலாக இருந்தது.
அரசு மேல்நிலைப் பள்ளி, தாளவாடி…. இதுதான்
நான் 7, 8ம் வகுப்புகள் படித்த பள்ளிக்கூடம்.
பிரமாதம். நினைவுகள் அழிவதில்லை. நூல் கண்டின் ஒரு நூலிழையைப் பற்றி இழுத்தால் சரசரவென்று நூல் கண்டிலிருந்து விடுபட்டு வருவது போலத் தான் நினைவுகளும். ஆனால் எனக்கென்னவோ எந்தப் பழைய நினைவுகளைத் தொட்டாலும் சொந்த விஷயங்களை சற்றே ஒதுக்கித்தள்ளி அன்னாளைய சமூக, அரசியல் விஷயங்களைத் தொட்டுச் செல்லாமல் இருக்க முடியாது. காரணம் என் இளம் வயதிலேயே பத்திரிகைகள் வாசிப்பு, சமூக அரசியல் விஷயங்களைக் கூர்மையாகக் கவனிப்பது, கதைகள் எழுதுவது என்று ஆகிப் போனதாலோ என்னவோ.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி சார். இன்று மாலைக்கு மேல் வருவேன். காரணத்தையும் எழுதறேன். இன்னும் சிறிது நேரத்தில் 35பேருக்கு பகாளாபாத், அக்காரவடிசில் பண்ண ஆரம்பிக்கணும்
நீக்குவாசிப்பு என்பதன் முக்கிய ஆரம்பம் தாளவாடியில்தான் ஆரம்பம். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் அசம்பாவிதத்துக்குப் பிறகு கருணாநிதி கோவை மாநாட்டுக்கு வந்ததும் எங்கள் பள்ளியில் அதற்குச் செல்பவர்களுக்கு மாணவர்களுக்கு விடுமுறை தருவோம் என அனௌன்ஸ் பண்ணியதும் நினைவில். மிகுதி பின்பு
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
சொல்ல மறந்து விட்டேனே. தாளவாடி வீட்டு அமைப்பை வரைபடத்துடன் தீர்கமாகப் பகிர்ந்து கொண்டது அற்புதம். வெகுவாக ரசித்தேன்
பதிலளிநீக்குசத்ய மங்கலம் என்றதும் வீரப்பன் நினைவு வந்தது. நான் பவானியில் தொலைபேசி இலாகாவில் பணியில் இருந்த பொழுது பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு முதல் நாள் மதியம் வந்திருந்து அடுத்த நாள் அதிகாலையில் ஊர் திரும்பியது நினைவில் பளிச்சிட்டுப் போயிற்று.
வீரப்பன் நடிகர் ராஜ்குமாரைச் சிறைபிடித்தது தாளவாடியிலிருந்து இரு கிமீ தூரத்தில் தொட்டகாஜனூர் ஊரில்
நீக்குரஜினி காந்த் -- கருணாநிதி நெருக்கம் ஆரம்பிப்பதற்கு சற்று முற்பட்ட காலம் அது.
நீக்குபள்ளி நாட்களின் மலரும் நினைவுகள் அருமை..
பதிலளிநீக்குஇனிய பதிவு.. படங்கள் அழகு..
வாங்க துரை செல்வராஜு சார். மிக்க நன்றி
நீக்குKGG சார் பள்ளி நினைவுகள் பற்றி எழுதியதின் தொடராக நெல்லை சார் ஒரு பயணம்+பள்ளி நினைவுகள் என்று நேர்த்தியாக பதிவை படங்களுடன் நிறைவு செய்திருக்கிறார். பதிவு கீரிப்பாறையை சில சமயம் நினைவூட்டினாலும், நெல்லிக்காய், அகத்திக்கீரை காய்கள் போட்ட துவாதசி சாம்பார் போன்று இருந்தது.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஜெயகுமார் சார்...இந்த ஊருக்குச் சென்றபோது எனக்கு எழுந்த நினைவலைகளை, மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் மாத்திரமே சென்றிருந்தால் மெதுவாக ஒவ்வொன்றாக அசைபோட முடிந்திருக்கும்.
நீக்குபொதுவெளியில் சட் என்று தேங்காய் உடைத்ததைப்போல் எல்லாவற்றையும் எழுத முடியாதில்லையா ஜெயகுமார் சார்.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்
நீக்குஅக்கா கீதா மற்றும் ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் ஆகியோர் வருகையை அன்புடன் எதிர் நோக்குகின்றது பதிவுலகம்..
பதிலளிநீக்குகீதா சாம்பசிவம் மேடம்....எப்போதும் உற்சாகமான மனநிலை, ஆனால் சமீபத்தில் கொஞ்சம் பிஸியாயிட்டாங்க. கமலா ஹரிஹரன் மேடம் யாத்திரை போயிருக்காங்க. வந்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டுவிட்டு, சுருக்கமாக (ஹா ஹா ஹா) பல பதிவுகள் எழுதணும் என்று எதிர்பார்க்கிறேன்.
நீக்குதாளவாடி நினைவுகள் அருமை. எங்கள் மாமியார் வீட்டுக்கு பின்னால் வீட்டில் இருந்த தொட்டப்பாவின் தம்பி இருந்த ஊர். தாளவாடி சின்ன தொட்டப்பா வந்து இருக்கிறார்கள் என்று என் குழந்தைகள் சொல்வார்கள். அந்த ஊர் காய்கனிகள் கொண்டு வருவார் வரும் போது எல்லாம்.பின்னால் வீட்டு தொட்டப்பா ஊர் மைசூர், தொட்டம்மா ஊர் சாம்ராஜ்நகர். என் கணவர் போய் இருக்கிறார் தாளவாடிக்கு அந்த ஊரின் பசுமையை பற்றி சொல்லி இருக்கிறார்கள். காட்டு பகுதிக்கு எல்லாம் போய் வந்து இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஉங்கள் படங்கள் சார் சொன்னது போல இருக்கிறது.
படங்கள் எல்லாம் அருமை.
சாரின் தம்பி சத்திய மங்கலத்தில் பணியாற்றிய போது அங்கு போய் இருக்கிறோம். அப்படியே பன்னாரி அம்மனை, பவானி கோவிலையும் தரிசனம் செய்து வந்து இருக்கிறோம்.
சிறு வயதில் இருந்த இடங்களை பார்க்கும் போது அப்படியே இருந்தால் மகிழ்ச்சி அதிகமாகும், மாறுதல் ஏற்பட்டு இருந்தால் முன்பு இருந்த இடம் இப்படி மாறி விட்டதே! என்று மனம் அலைபாயும். பழைய இடங்களை பற்றி நம் குடும்பத்தினர்களிடம் பகிரும் போது சிறு குழந்தையாக மாறி விடுவோம். அவர்கள் நம்மை கேலி செய்வதை மனம் பொருட்படுத்த மாட்டோம். இங்கு பகிர்ந்து கொண்ட போதும் அப்படித்தான் உங்கள் மனம் உற்சாகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பள்ளி நினைவுகள் அருமை.
இன்று புதுயுக தொலைக்காட்சியில் கிருபா சமுத்திர பெருமாள், சிறுபுலீயூர் (நன்னிலம் திவ்ய தேசம்) காட்டினார்கள். உங்களை நினைத்து கொண்டேன் , தரிசனம் செய்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மாயவரம் அருகில் இருப்பதால் நாங்கள் இரண்டு , மூன்று முறை போய் இருக்கிறோம்.
மாறுதல் ஏற்பட்டு இருந்தால் முன்பு இருந்த இடம் இப்படி மாறி விட்டதே! என்று மனம் அங்கலாய்க்கும்.
நீக்குஉங்க நெடிய பதில் மனதைக் கவர்ந்தது கோமதி அரசு மேடம்.
நீக்குபழைய இடங்கள், பழைய நண்பர்கள்... இவங்களைப் பார்க்கும்போது நமக்கு ஏற்படும் உற்சாகம், மனம் நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்வதால், வார்த்தைகளால் விளக்க முடியாது. நம்முடன் இருப்பவர்களுக்கு அந்த உணர்வு உண்டாகாது. எனக்கு ரொம்பவே உற்சாகமாக இருந்தது.
திருநீர்மலை தவிர மற்ற எல்லா திவ்யதேசங்களுக்கும் அனேகமாக இரண்டு முறையாவது போயிருக்கிறேன். அடுத்த வருடம் முக்திநாத்துக்கு இரண்டாவது முறை செல்லணும் என்று நினைத்திருக்கிறேன். என்னை கோவில் உலாவின்போது நினைத்துக்கொண்டது மனதை சந்தோஷப்படுத்துகிறது. பெரியவங்க நட்பு என்பது நம்மை உயர்த்தக்கூடியது.
நீக்கு//மாறுதல் ஏற்பட்டு இருந்தால் முன்பு இருந்த இடம் // - நிறைய மாறுதல்கள் ஏற்படாமல் இருக்க வாய்ப்பே இல்லை. காரணம் வளர்ச்சிதான்
நீக்கு42 வருடங்களுக்கு முன் வசித்த ஊரைப்பற்றியும் அதன் தொடர்பான நினைவலைகள் பற்றியும் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்!!
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குநான் 93ல் துபாய்க்குச் சென்றேன் (வேலை). சில வருடங்களுக்குப் பிறகு பஹ்ரைன். வெகுகாலம் கழித்து நானும் மனைவியும் துபாய் பயணித்து, நாங்கள் வாழ்க்கையை ஆரம்பித்த ஸ்டூடியோ ஃப்ளாட்டை தெய்ராதுபாயில் பார்த்தபோது...அது ஒரு தனி சந்தோஷம். அதுபற்றியும் ஒருநாள் எழுதுவேன் (படங்களோடு)
நெல்லை, அசத்தல் போங்க...தாளவாடி அழகான ஊர்னு தெரிகிறது. நான் ஈரோடு சத்தியமங்கலம், இந்த ரூட்டில் பயணத்திருக்கிறேன். மலை, காடு கொண்டை ஊசி வளைவுகள் அருமையான வழி. நீங்க தாளவாடிலயே இருந்திருக்கீங்களே!!! ஆஹா!!!
பதிலளிநீக்குஇப்ப நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் வரும் ரயில் ஈரோடு தாண்டியதுமே மலை அழகு ஓசூர் வரை செமையா இருக்கும் ரயிலில் எடுத்திருக்கிறென் படங்கள் ரயிலில் ஒருந்து ஓட்டைக் கேமராவில்....அது எங்கு சேமித்தேன்னு தெரியலை பார்க்க வேண்டும்.
உங்க அனுபவங்கள் அருமையோ அருமை நெல்லை. ஒவ்வொரு வரியும் கண்ணில் ஒரு திரை போட்டு ஓட்டிப் பார்த்தேன்.
குறிப்பாக....வீட்டுப் பக்கத்துல 200 மீ தூரத்தில் - ரொம்பக் கிட்ட - அந்தக் காட்டாறு ஓடை யை நினைச்சு....நான் அங்கிருந்திருந்தா பெரும்பாலும் அது பக்கத்துலதான் இருந்திருப்பேன் அப்புறம் காட்டுக்குப் போயிருந்திருப்பேன்னு நினைத்துக் கொண்டேன்.
கீதா
ஈரோடு என்று எழுதிவிட்டேன்...சேலம் தருமபுரி தாண்டியதும் தருமபுரியிலிருந்து ஓசூர் வரை காட்சிகள் செமையா இருக்கும்.
நீக்குகீதா
வாங்க தில்லையகத்து கீதா ரங்கன்(க்கா). தாளவாடி என் மனதுக்கு நெருக்கமான ஊர். எத்தனையோ நினைவுகள், மனது சந்தோஷம் கொள்ளும் நினைவுகள்...
நீக்குகாட்டாற்றில் எப்போ வெள்ளம் வரும் என்று தெரியாது. வெள்ளம் வரும்போது முதலில் ஏகப்பட்ட மரங்களை, மரக் கட்டைகளைத் தள்ளிக்கொண்டு பீறிட்டு வரும். மக்கள் பாலத்தின் இரு கரைகளினின்றும் அந்த மரங்களை இழுப்பார்கள் (அவர்கள் உபயோகத்துக்கு).
7ம் 8ம் வகுப்புப் பாடப் புத்தகத்தைப் படித்ததனால் வந்த கற்பனை என்று நினைக்கிறேன். (பறவை இறக்கைகளைக் கட்டிக்கொண்டு சிறையிலிருந்து கடலின் மேலாகப் பறந்து..). இரண்டு கைகளிலும் சுளகைக் கட்டிக்கொண்டு, பாலத்திலிருந்து குதித்துப் பறக்கமுடியும் என்று நான் நம்பியிருக்கிறேன். இதனைப் பற்றியே நினைத்துக்கொண்டு, இரண்டு கைகளையும் அடித்துக்கொண்டு பறவைபோலப் பறக்க முடியுமா என்று நினைத்து பாலத்தின் கைப்பிடிச் சுவர் பக்கத்தில் ஏற நினைத்தேன்... யாரோ ஒருவர் மிரட்டி வீட்டுக் போ என்று விரட்டிவிட்டார்.
நெல்லை, ஆஹா..நானும் ரெக்கை கட்டிப் பறந்த வயதுதான். ஆனால் தனிமையில்...எனக்குதான் பாடத்தை விட இப்படியானவற்றில் ஆர்வம் அதிகமாச்சே...
நீக்குகீதா
படங்கள் நல்லாருக்கு. மத்தியரங்கம் போக வேண்டும் எப்பவோ போனது இந்தப் பழைய பாலம் நினைவு இருக்கிறது. அப்ப தண்ணி பாலத்தின் அடியில் தூண்களை மறைக்கும் அளவு ஓஒடிக் கொண்டிருந்தது. ஆச்சரியம் இன்னும் தண்ணி போனா பாலம் உடைந்திடாதோ என்றுகூடவே ஒரு பயமும் ஏன்னா எங்க ஊர்ல அடிக்கடி இந்தக் வட கிழக்கு மழையில் நடக்கக் கூடியதாச்சே...
பதிலளிநீக்குஅருமையான இரு வருடங்கள் இல்லையா நெல்லை? தாளவாடி அருமையான ஊர். ஊருக்குள் சென்றதில்லை நான்...
கீதா
மத்தியரங்கம் போய்வாருங்கள் கீதா ரங்கன். ஆனால் நேரிடையான பேருந்து இல்லைனு நினைக்கிறேன்.
நீக்குஆமாம் கிடையாது. முன்ன போனப்ப இன்னும் கடினமாக இருந்தது. நான் சொல்வது 30 வருடங்களுக்கு முன். இப்போதும் பார்த்தப்ப கொஞ்சம் பரவாயில்லை. என்றாலும் இப்போது திட்டமிட முடியாதே நெல்லை.
நீக்குகீதா
எனக்கு எவ்வளவோ ஆசைகள் இருக்கு. இப்படியான ஊர்களுக்கு இயற்கை சூழ் ஊர்களுக்குப் போக வேண்டும் என்று. ஆனால் இயலாத நிலை சூழ்நிலை.
பதிலளிநீக்குஅந்த வயதின் மன ஓட்டங்கள் அனுபவங்கள் எல்லாம் ரசித்தேன் நெல்லை. இப்படியான பள்ளிகளில் படிப்பதும் நல்ல அனுபவங்களைத் தரும்.
எனக்கு இப்ப கன்னடம் கற்க வேண்டும் என்று ஆசை...ஆனால் வர மாட்டேங்குது. பேசுவதற்கு ஆள் வேண்டும் இல்லைனா யுட்யூபில்தான் கற்க வேண்டும். கேட்டு கேட்டுக் கற்க வேண்டும். உங்களுக்கு அப்பவே கன்னடம் கத்துக்கிட்டிருப்பீங்க.
நான் ஒரே ஊருக்குள்ள ஒரு சின்ன வட்டத்துக்குள்ள ஊர் எல்லையைத் தாண்டாமலேயே எம் ஏ வரை படிச்சு....ஹாஹாஹா!! இப்படியான அனுபவங்கள் அப்ப இல்லை. ஆனா அதுக்கப்புறம் சட்டி பானை தூக்கறதுதான்!
கீதா
அப்போ நான் ஓரளவு நல்லா பேசுவேன்னு நினைக்கிறேன் (கன்னடம்). என் அப்பா நல்லா எழுதுவார், ஆனால் பேசமாட்டார். அதனால் மளிகை சாமான்களுக்கு நான் பேர் சொல்லச் சொல்ல அவர் எழுதியது நினைவுக்கு வருது. பிறகு கன்னடம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட்டது.
நீக்குஇப்போ நல்லா பேசறீங்க நெல்லை.
நீக்குகீதா
இனிய நினைவலைகள். கண்டு களித்தோம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி மாதேவி
நீக்குநினைவோட்ங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது.... தொடர்ந்து வருகிறேன்.
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி. தொடர்வதற்கு நன்றி
நீக்கு