வியாழன், 28 டிசம்பர், 2023

இரண்டு டெலிஃபோன் கால் ஆயிரம் ரூபாய்....

 அன்று காலை 11 மணி இருக்குமா?  

ஃபோன் ஒலித்து எடுத்துப் பார்த்தேன்.  விக்கி விக்னேஷ் என்று வந்தது..  யாரென்று புரியவில்லை.  ஏதாவது வரன் பெயரை இப்படி சேமித்து வைத்திருக்கிறேனா?  இப்படி வைக்க மாட்டேனே..  புரிகிற மாதிரிதானே வைப்பேன்..

தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை எடுப்பதில் எப்போதுமே ஒரு தயக்கம் இருக்கும்.  சமீப காலங்களில் புதிய வரனாக இருக்குமோ என்று எடுத்துப் பேசுவதுண்டு.  பெரும்பாலும் விரும்பாத அழைப்புகள்தான் தெரியாத எண்ணிலிருந்து வரும்.  எனவே இந்தப் பெயர் மனதில் சென்று மூளைக்கு எட்ட சில நொடிகள் பிடித்தன.

இப்போது அழைத்தது எங்களிடம் கொஞ்சநாள் முன்பு பயிற்சிக்கு வந்திருந்த ஒரு இளைஞன்.  பயிற்சி முடிந்து விடைபெற்று மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது.  புள்ளிங்கோ கட்டிங்கும், கணுக்கால் வரை டைட்ஸும் அணிந்து வந்து சிலர் வெறுப்புக்கு ஆளாகி இருந்தவன்!  ஆனால் வேலை கற்றுக்கொண்டதில் கெட்டிக்காரன்.

"என்னப்பா.."

"ஸார்..  நான் விக்னேஷ் பேசறேன் சார்..  விக்கி"

"தெரியுது..  சொல்லு..  எப்படி இருக்கே?"  அதற்குள் கல்யாணம் வைத்து விட்டானா?  

"நல்லா இருக்கேன் ஸார்...  ஸார்..  ஒரு சின்ன ஹெல்ப்.."

அதானே பார்த்தேன்...'டிரெயினிங் முடித்து சும்மா இருக்கும் நேரம் எங்களிடமே வா..  நாங்கள் கையிலிருந்து ஆளுக்கு கொஞ்சம் போட்டு ஒரு அமவுண்ட் தருகிறோம்.  நான்கு மணிநேரம் வா..  மதிய சாப்பாடு என் செலவு...  வாங்கித் தந்து விடுகிறேன்' என்று அழைத்திருந்தேன்.  எங்களுக்கும் அலுவலகத்தில் வேலை செய்ய ஆள் குறைவாக இருந்தது.  அரசு புதிய ஆட்களை நியமிப்பதே இல்லை பல வருடங்களாய்..  பல போஸ்ட் காலியாகவே இருக்கும் நிலை.  எங்களுக்கு உதவி தேவையாய் இருந்தது.  

வரவில்லை என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை.  'சரி, நிச்சயம் வருகிறேன்' என்று சொல்லி கடைசி நிமிடத்தில் காலை வாரியவன் இவனும், இவன் நண்பனும்!

ஆனால் நாங்களும் இவனை பெரிதாக நம்பி இருக்கவில்லை.  சும்மா ஒரு கல் எறிந்து பார்த்தோம்,  அவ்வளவுதான்.  எனவே கோபமோ, வருத்தமோ கிடையாது எங்களிடம்.

இப்போது அந்த மாதிரி வேலை இருக்கிறதா என்று கேட்கப் போகிறானோ...  நான் வேறு, அந்த இடத்திலிருந்து மாறிவிட்டேனே..

மனம் ஒரு மாயக்குதிரை.  அதன் சிந்திக்கும் வேகம் அபாரமானது. நொடியில் மனதில் ஓடிய இத்தனை சிந்தனைகளுக்கிடையே என் உதடுகள் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தன.

"என்ன ஹெல்ப்புப்பா.."

பதில் இரண்டு நொடி தாமதித்து, சற்றே குழைந்த, கு(ழை)றைந்த குரலில் வந்தது.

"ஒரு ஆயிரம் ரூபாய் பணம் வேணும் ஸார்..."

"என்னது?"  

'நான் இதை உன்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை' என்கிற த்வனியையும், 'கிடைப்பது கஷ்டம்' என்கிற எண்ணத்தையும் அவன் மனதில் அந்த ஒற்றை வார்த்தையில் விதைத்தேன்.

"இல்லை ஸார்..  ரெண்டு நாள்ல திருப்பிடறேன்.  வேலை செய்யற  இடத்துல வாங்கி இருந்தேன்...  தரல..  ரெண்டு மாசமா பாக்கி ஆயிடுச்சு..  'உடனே கொடு, இல்லன்னா வெளில போ' ங்கறான் ஓனர்.  இரண்டாயிரம் வேணும்.  ஆயிரம் ஏற்பாடு பண்ணிட்டேன்..  இன்னொரு ஆயிரம் வேணும்....ப்ளீஸ் ஸார்.."

'ரெண்டு நாள்ல திருப்பிடறியா?'  மனம் புன்னகைத்தது.  'உன் பேச்சை எல்லாம் தண்ணிலதான் எழுதி வைக்கணும்'

"ஸாரிப்பா..  நான் அந்த இடத்துல இல்ல இப்போ...  உதவ முடியாத நிலைல இருக்கேன்..."

"சரி ஸார்.."  வைத்து விட்டான்.

"என்ன ஸார்?"  எதிரே இருந்த என் அடுத்த நிலை அதிகாரி - நண்பர் - கேட்டார்.  சொன்னேன்.

பர்ஸிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்து நீட்டினார்.

ஆச்சர்யத்துடன், "விக்கிக்கா?  நீங்களே தரவேண்டியதுதானே?"

"அவனுக்கு யார் கொடுப்பா?  இது உங்களுக்கு..  ஆறு மாசத்துக்கு முன்னால டிரான்ஸ்ஃபர் ஆன ரெண்டு ஃப்ரெண்ட்ஸுக்கு பார்ட்டி வைக்கலாம்னு கலெக்ட் பண்ணோமே..  ஞாபகமிருக்கு இல்ல...   அந்தக் காசு..  பார்ட்டியும் வைக்கல...  எல்லாருக்கும் திருப்பிக் கொடுத்துட்டேன்.  உங்களுக்கு மட்டும் மறந்து மறந்து போய்க்கொண்டிருந்தது...  இப்பவாவது சட்டென முடிச்சிடலாம்னு.."

அட...   விக்ந விநாயகா...  வாங்கி பைக்குள் வைத்துக் கொண்டேன்.  

'ஞாபகம் இல்லாமல் இருக்குமா?'

மாலை நான்கு மணி சுமாருக்கு ஒரு ஃபோன் வந்தது.....

===================================================================================================

ஏகாந்தமாய் 



ஆஹ்லுவாலியா சாஹிப் என்றொரு அதிகாரி


ஆரம்ப வருடங்களில் அமைச்சகத்தில் எனக்கு இம்மீடியட் பாஸ் ஆக சிலர் இருந்தனர். அது என்ன சிலர்? ஒருவர்தானே இருக்கமுடியும் என்று கேட்பவர்கள், மத்திய அரசின் வெளியுறவுத்துறைபற்றி சரியாக அறியாதவர்கள். இந்திய அரசு இயந்திரத்தில் மிக அதிகமாகப் பணி இடமாற்றம் நிகழும் அமைச்சகம் என்றால், அது வெளியுறவுத்துறைதான்.

உள்நாட்டுக்குள்ளேயே பல வித டிவிஷன்கள், மாநிலங்களில் பாஸ்போர்ட்
அலுவலகங்கள் போன்றவைகளோடு, அயல்நாடுகளில் இயங்கிய இந்திய
தூதரகங்கள் பல என்று மாற்றலாகிப்போக வாய்ப்புகள் தன்னாலே நம்மைத் தேடிவரும். சிலவற்றிற்குப் போக கடும் போட்டி நிலவும். மேலும் சிலவற்றைக் கஷ்டப்பட்டு தவிர்க்கவும் நேரிடும்..

நான் பணியிலமர்ந்த ஒரு வருடத்துக்குள் boss-ஆக இருந்த, சுமுகமான
குணாதிசயங்கள் கொண்டிருந்த பட்நாகர் (Bhatnagar) என்பவர் பணி ஓய்வு
பெற்றுவிட, சில நாட்களில் பொறுப்பேற்க அங்கு வந்து சேர்ந்தார் எஸ் பி
ஆஹ்லுவாலியா. சுரேந்திர பால் ஆஹ்லுவாலியா. அமைச்சகத்தின்
வெவ்வேறு பிரிவுகளில் நேர்மை, சிறப்பான பணிக்காக பலவருடங்களாக
பேர்பெற்றிருந்தபோதிலும், அரசாங்க ‘பாலிசி/தேவைகளின்படி’ இவரைத் தாண்டி வேறு சிலர் (தகுதியில்லாதவர் அல்லது குறைந்த செயல்திறன் உள்ளோர் எனத் தனியாகச் சொல்லத் தேவையில்லை) அவ்வப்போது பதவி உயர்வு பெற்றுவந்ததால், இவருடைய ப்ரொமோஷன் வருவேனா என்று அடம்பிடித்தது. (அடியேனுக்கும் நிகழ்ந்திருக்கிறது இந்த வைபவம்) வெகு தாமதமாகி ஒருவழியாகக் கிடைத்திருந்தது இப்போது. (இவை பின்னால் எங்களுக்குத் தெரியவந்தன). இந்த டிவிஷன் இவருக்குப் புதிது.

ஐம்பதுகளின் ஆரம்பத்திலிருந்த உயரமான, வாட்டசாட்ட உருவம். க்ரே,
ஆஃப்-ஒய்ட், பேல் பர்ப்பிள் கலர்களில் சஃபாரி சூட்டில் வருவார். ஓரிரு
நாட்களிலேயே புரிந்தது, இவர் ஒரு சராசரி சர்க்கார் அதிகாரி அல்ல
என்பது. சீட்டுக்கு வந்தவுடன், செக்‌ஷனில் பலரை இருந்த இடத்திலிருந்தே நோட்டம் விடுவார். செக்ஷனுக்கு இன்னொரு அறையும் இருந்தது. அதில் பட்டாச்சார்ஜி, மோகனன், ஆனந்த், கிஷன் சிங் ஆகியோரின் சீட்டுகள். அங்கே காஷுவலாகப் போய் லேசாக ஒரு பார்வை பார்த்துவிட்டு இங்கு வந்து உட்காருவார். தன் முன்னே வைக்கப்பட்டிருக்கும் ஃபைல்களில் சில நிமிடங்களுக்கு கவனம்.

ஃபைல்களில் சம்பந்தப்பட்ட சீட்டின் அன்றைய ’நோட்’/சப்மிஷனைப்
படிப்பார். சிலவற்றில் உடனே கையெழுத்திடுவார். சிலவற்றைப் படித்தபின் திருப்தியின்றி காணப்படுவார். புதியவராதலால் யார் சப்மிட் பண்ணிய ஃபைல் இது என்பது அவருக்குத் தெரிந்திருக்காது.  கையெழுத்திட மாட்டார். அவருக்கு அடுத்த சீட்டில் இருந்த (அப்படி அமைந்திருந்த சீட்!) கத்துக்குட்டியான என்னிடம் ஃபைலைக் காண்பித்து, இது யாருடைய இனிஷியல்ஸ், யார் இதை டீல் பண்ணுவது என்று நாஸூக்காகக் கேட்டுத் தெரிந்துகொள்வார். நிதானமாக அவரைக் கூப்பிட்டு ”என்ன கேஸ் இது, என்ன எழுதியிருக்கிறீர்கள்?” - என்று கேட்டுவைப்பார். அவர் தலைசொறிய, அல்லது திடுக்கிட்டு முழிக்க, சில இடங்களில் திருத்தி ரீ-சப்மிட் செய்யச் சொல்வார். பிறகு கையெழுத்திட்டு மேலே அனுப்பிவைப்பார்.

ஃபைல்களைப் படித்தவாறோ, சீட்டிற்கு வந்திருக்கும் புதிய கடிதங்கள், கோரிக்கைகளை அலசியவாறோ நான் அருகில் உட்கார்ந்திருப்பேன்.  சந்தேகம் ஏதுமிருந்தால் பக்கத்திலிருந்த சீனியரான ஹவன் ப்ரகாஷிடம் கேட்டுக்கொண்டிருப்பேன். வில்ஸ் ஃப்ளேக் ஊதிக்கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்தவாறு சில சமயம் காணப்படும் அவர், என் பக்கம் திரும்பமாட்டார். என் சப்மிஷனான குறிப்பிட்ட ஃபைலை ‘இன்’ ட்ரேயில் வைக்கும்போதும், ட்ரேயைத்தான் பார்ப்பாரே தவிர, என்னைப் பார்க்கமாட்டார். என் முன்னேயே, உடனே அந்த ஃபைலை எடுத்துப் பார்க்கமாட்டார். நிதானமாக மதியவாக்கில் பார்த்து கையெழுத்திட்டிருப்பார். ஆரம்பத்தில் பல நாட்களாக எங்கள் கண்கள் சந்தித்துகொண்டதாகவே நினைவில்லை.

நீளவாட்டில் அமைந்திருந்த செக்‌ஷனின் தூரத்து சீட்டில் என்னவிதமான
அரட்டை ஓடிக்கொண்டிருக்கிறது. உள்ளே நுழைந்து பேசிக்கொண்டிருக்கும் ’வெளி’ ஆள் அல்லது பெண் ஊழியர் யாரென கவனிப்பார். அந்த நபர் பேப்பரைக் கொடுத்துவிட்டோ, பேசிவிட்டோ ஒருவழியாக எங்கள் செக்‌ஷனிலிருந்து வெளியே போக வாசலை நெருங்குகையில், ஒரு மரியாதைக்காக எங்கள் பாஸைப் பார்த்து ‘நமஷ்கார்ஜி!’ என்று பல்லைக்காட்டிவைப்பார். இவர் மெல்ல தலையைத் தூக்கி அவரைப் பார்ப்பதுடன் சரி. பதிலுக்கு ஒரு புன்னகையோ, தலையாட்டலோ, கையசைப்போ எதையும் வெளிப்படுத்தாமல், தன் முன்னுள்ள ஃபைலை சீரியஸாகப் புரட்டிக்கொண்டிருப்பார். முன்பு அந்த போஸ்ட்டிலிருந்த அதிகாரிகளிடமிருந்து வந்த வழக்கமான ஹாய், நமஷ்கார், ஜீ .. ஆப் கைஸே ஹை(ன்).. போன்ற குசல எதிர் விஜாரிப்புகளெல்லாம் வெளிவராததுகண்டு, ஃபைல் கொண்டுவருகிற சாக்கில் வேறு செக்‌ஷன்களிலிருந்து உள்ளே வந்து அரட்டை, குலாவலில் ஈடுபடுவதை வழக்கமாகக்கொண்டிருந்த சிலரின் வருகை குறைய ஆரம்பித்தது.

அப்படியே வர நேர்ந்தாலும் ஃபைல்/பேப்பர்களைக் கொடுத்துவிட்டு,
குறைவாக, மெதுவாகப் பேசி, உடனே வெளியேறினார்கள்! செக்‌ஷனில்
மந்தமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு சில பெரிசுகளிடமும் ஒரு
உஷார்த்தனம் வந்துவிட்டிருந்தது. 5 மணிக்கு ஆஃபீஸ் நேரம் முடிவு
என்றால் நாலு மணியிலிருந்தே நழுவ ஆரம்பிக்கும் (குறிப்பாக பெண்
ஊழியர்கள்) சிலர் ஜாக்ரதையாக செயல்பட்டார்கள். மனதில், ’இந்த
ஆளுக்கு எப்போது மாற்றல் வரும்? எப்போது இங்கிருந்து கிளம்புவான்?’
என்று நினைத்திருக்கலாம்.

எங்கள் ஆஃபீஸிலிருந்து 20 நிமிட நடைதூரத்தில், ரயில் பவனுக்கு
அருகில் அப்போது இயங்கிவந்தது பிரிட்டிஷ் கௌன்சில் லைப்ரரி. அதில்
அவ்வப்போது புத்தகங்கள் எடுத்துவந்து வாசிப்பதுண்டு. நேரம்
கிடைக்கையில், அங்கே உட்கார்ந்து பளபளக்கும் வெளிநாட்டு பத்திரிக்கைகளை, குறிப்பாக Life, Scientific American, Newyorker, The Guardian போன்றவைகளைப் படித்துப் பார்ப்பதில் ஒரு இனந்தெரியா த்ரில் அப்போது இருந்தது. அன்று மதிய உணவு இடைவேளைக்குப் பின் அங்கே போய் ஏதாவது ஒரு புத்தகம் எடுத்துவரலாம் எனத் தோன்றியது. நம்ப ’மிஸ்டர் சீரியஸ்’-இடம் பர்மிஷன் வாங்கியாகவேண்டுமே என்பதில்
தயங்கினேன். இருந்தும் ப்ரிட்டிஷ் கௌன்சில் டெம்ப்டேஷன் ஓவர்டேக்
செய்ய, மதியம் 3 மணிவாக்கில் அவரிடம் மெல்ல விஷயத்தை
ஆரம்பித்தேன். பிரிட்டிஷ் கௌன்சில் லைப்ரரி போய்வர பர்மிஷன்
வேண்டுமெனவும், ஒரு மணிநேரத்தில் புத்தகம் எடுத்து திரும்பிவிடுவேன்
என்றும் உறுதி சொன்னேன். அந்தக் கால கட்டத்தில் சர்க்கார் ஊழியர்
ஒருவர், அரசு நூல்நிலையத்தைத் தவிர்த்துவிட்டு, பிரிட்டிஷ் கௌன்ஸில் லைப்ரரி போய் புத்தகம் எடுத்துப் படிப்பார் என்பதே ஆச்சர்யம் தரும் விஷயம் என்பது பின்னரே எனக்கும் புரிந்தது. அந்தப் பின்னணியில் அவர் திடுக்கிட்டவராய் தலைதூக்கி என்னைப் பார்த்தார்.

”வாட்? யு ஆர் கோயிங் டு ப்ரிட்டிஷ் கௌன்சில்? உங்களுக்கு அங்கே
மெம்பர்ஷிப் உண்டா!” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார். பக்கத்து
சீட்காரர்களும் திடுக்கிட்டது தெரிந்தது. மாலையில் ஒரு மணி நேரம்
முன்னதாக வீட்டுக்குப் போக அனுமதி கேட்பவர்களைப் பார்த்துத்தான்
அவர்களுக்கு வழக்கம். ”என்னிடம் லைப்ரரி கார்டு இருக்கிறது.
ஒன்றிரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஒரு மணிநேரத்தில் – நாலே கால் மணிக்கெல்லாம் திரும்பிவிடுவேன்” என்றேன். கொஞ்சம் யோசித்து, “ஓகே..” என்றார் அவர்.

வேகமாக நடந்து சென்று பிரிட்டிஷ் கௌன்சில் லைப்ரரியில் நுழைந்தபோது, புதுப்புது வார, மாத பத்திரிக்கைகள் டேபிளில் கிடந்தன.  மனம் கவர்ந்தன. பத்திரிக்கைகளுக்குள் நுழைந்து பார்க்க, நேரம் இதுவல்ல. லைப்ரரியின் கவிதைப் பகுதிக்கு சென்றேன். ஒன்றைத் தூக்கி எண்ட்ரி செய்து வாங்கிக்கொண்டு வேகமாகத் திரும்பிவிட்டேன்

ஆஃபீஸுக்குள் நுழைகையில் மணி நாலு அஞ்சு! ஆஹ்லுவாலியா சாஹிப்
கவனித்தார். ஒன்றும் சொல்லவில்லை. நான் என் டேபிளில் அந்தப்
புத்தகத்தை வைத்துவிட்டு, ஒரு ஃபைலை எடுத்து தூதரக லெட்டர்
ஒன்றுக்கு பதில் ட்ராஃட் செய்ய ஆரம்பித்தேன். சில நிமிஷங்களில் அவர்
என்னிடம் ”அதைக் கொஞ்சம் பார்க்கலாமா?” என்று நான் எடுத்துவந்திருந்த புத்தகத்தைக் காட்டிக் கேட்டார். கொடுத்தேன்.

அந்த மெல்லிய புத்தகம் ஆங்கிலக் கவிஞர் ஆர்.எஸ். தாமஸின் கவிதைத்
தொகுப்பு. தாமஸின் கவிதைகளைப்பற்றி அதற்குமுன் நான்
கேள்விப்பட்டதில்லை. அன்றுதான் முதன்முதலாகப் பார்த்து, வேகமாகக்
வரிகளில் கண்களை ஓட்டியதில், கவரப்பட்டவனாய், தூக்கிக்கொண்டு
வந்திருந்தேன். அவர் அதன் தலைப்பை கவனித்துவிட்டு (எனக்கு இப்போது நினைவுக்கு வரவில்லை) உள்ளே புரட்டி, ஏதோ ஒரு பக்கத்தில்
வாசிப்பதைக் கவனித்தேன். வேலையில் மும்முரமானேன். “இந்தமாதிரி
கவிதைப் புத்தகங்களையெல்லாமா நீங்கள் வாசிக்கிறீர்கள்!” என்ற அவரின் குரல் கேட்டதும்தான் தலைதூக்கி, அவரைப் பார்த்தேன். முகத்தில் ஆச்சர்யம் தெரிந்தது. ”பொயட்ரி, ஃபிலாஸபி எனக்கு பிடித்தமான விஷயங்கள்..” என்று சுருக்கமாகச் சொன்னேன்.  நம்பமுடியாதவராய் பார்த்து, மெல்லிய புன்னகையை உதிரவிட்டவாறே புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்தார் அவர்.

சில மாதங்களுக்குப் பின் ஒரு நாள் அவரின் நடவடிக்கைகளில் ஒரு
பரபரப்பு இருந்ததைக் கவனிக்க நேர்ந்தது. வெளியே போவதும்
வருவதுமாய் இருந்தார். என்ன விஷயமாக இருக்கும் என்று சஜன்
சிங்கிடம் கேட்டுவைத்தேன். ”பாரிஸுக்கு போஸ்ட்டிங் ஆயிருக்கு.
அதுக்கான அஃபீஷியல் ஃபார்மாலிட்டிகள கம்ப்ளீட் செய்யறதுக்காக
அட்மினிஸ்ட்ரேஷனுக்குப் போவதும் வருவதுமா இருக்காரு..” என்றான்
சர்தார்ஜி. திறமையான நல்ல அதிகாரிக்கு பொருத்தமான போஸ்ட்டிங்கைத்தான் கொடுத்திருக்கிறார்கள் என்று
நினைத்துக்கொண்டேன்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் ஒரு மதியத்தில் அவரைப் பார்க்க
இன்னொரு அதிகாரி –இவருடைய நண்பராக இருக்கவேண்டும்- செக்‌ஷனுக்கு வந்தார். பேசிக்கொண்டிருக்கையில் ”எப்போது பாரீஸுக்குப் போகப்போகிறீர்கள்?” என வந்தவர் கேட்க, இவர் லேசாக சிரித்துவைத்தார்.

சொல்லவிருப்பமில்லைபோலும் என்று நான் நினைத்துக்கொண்ண்டிருக்கையில், அவரிடமிருந்து மெல்ல வார்த்தைகள் வந்தன. ”நான் போகப்போவதில்லை..” திடுக்கிட்ட நண்பர் ”என்ன, போகலியா.. ஏன்? பாரீஸ் நல்ல போஸ்ட்டிங்தானே.. வேற எதையாவது முயற்சிக்கிறீங்களா?” என்றார். 

“உங்களை அட்மினிஸ்ட்ரேஷன் டிவிஷனில் நேற்றும் பார்த்தேனே.. ”என்று மேலும் இழுத்தார் நண்பர்.

“எதுவும் வேண்டாம். ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுகிறேன் “ என்று
அவர் மெதுவாகச் சொன்னது எனக்கு நன்றாகக் கேட்டது. ஆச்சர்யத்துடன்
ஆஹ்லுவாலியா சாஹிபின் முகத்தை அவதானித்தேன். நண்பர் மேலும்
ஏதோ கேட்க முயற்சிக்க, லேசான சிரிப்புடன் “வாங்க.. காஃபி
சாப்பிடப்போவோம்” என்று அவரைக்கூட்டிக்கொண்டு வெளியேறினார்
அவர்.

அடுத்த வாரத்துக்குள் அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு அவர்
அமைச்சகத்திலிருந்து ரிலீவ் ஆகி, போய்விட்டது தெரியவந்தது. அவருக்கு
ஒரு ஃபேர்வெல் கொடுக்கக்கூட அவகாசமில்லாதுபோய்விட்டதே என எங்களில் சிலர் பேசிக்கொண்டோம். கொடுக்கவிரும்புகிறோம் எனச்
சொல்லியிருந்தாலும் அதெல்லாம் தேவையில்லை என்று அவர்
மறுத்திருப்பார்தான்…

சில வாரங்கள் கடந்திருக்கும். டிவிஷன் ஹெட் (எங்கள் ஒட்டுமொத்த
டிவிஷனின் தலைமை அதிகாரி) மென்மையாகப் பேசும் ஒரு பெங்காலி
ஜெண்ட்டில்மேன், என்னை ஒரு மாலையில் அழைத்ததால் அவர்
ரூமுக்குப் போனேன். எதற்குக் கூப்பிட்டிருக்கிறார்.. சப்மிட் செய்த
ஃபைல்கள் எதிலாவது தவறுதல் ஏதும் நிகழ்ந்துவிட்டதோ என மனதில்
சஞ்சலம். அவர் ரிலாக்ஸ்டாகக் காணப்பட்டார். சிரித்தவாறு பொதுவான
உரையாடல் எங்களிடையே. ஆஹ்லுவாலியா சாஹிப் பக்கம் பேச்சு
திரும்பியபோது :அவர் ஒரு நேர்மையான அதிகாரி. நாங்கள் அவரை மிஸ்
செய்கிறோம் சார்.” என்றேன். இயல்பாக வாயில் அப்படி
வந்துவிட்டிருந்தது. தலையாட்டி ஆமோதித்தவர் ”உன் மீது அவருக்கு ஒரு
மரியாதையோ அன்போ இருந்திருக்கிறது” என்றதும் திடுக்கிட்டேன்.

”சார்..  ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்..” என்று தயக்கத்துடன் கேட்டபோது,
“உன்னைப்பற்றி பிரமாதமான ரிப்போர்ட் அனுப்பியிருந்தார். என்னிடம்
வந்ததும் நானும் அங்கீகரித்து கையெழுத்திட்டு மேலே அனுப்பினேன்”
என்றார் அந்த தலைமை அதிகாரி. எனக்கு என்ன சொல்வது என்றே
தெரியவில்லை.. தடுமாறினேன். ”நீயும், மோகனனும், இன்னும்
ஒன்றிரண்டு பேரும் தானே அந்த செக்‌ஷனில் சிறப்பாக
பணியாற்றுகிறீர்கள்.. நாங்கள் இதுபற்றிப் பேசியதுண்டு” என்றவர்..
”தேங்க்ஸ் ஃபார் கமிங்.. சும்மாதான் கூப்பிட்டேன்!” என்றதும், மனது
லேசாகி அவருக்கு வணக்கம், நன்றியைத் தெரிவித்துவிட்டு
செக்‌ஷனுக்குத் திரும்பினேன்.

அன்று மாலையில் முன்னாள் பாஸ் பற்றிய சிந்தனையே
மேலோங்கியிருந்தது. ’என்னைப்பற்றி பிரமாதமாக ரிப்போர்ட் எழுதி அவர் அனுப்பினாரா... அப்படி என்ன செய்துவிட்டொம் நாம்..’ என மனம்
கேட்டவாறிருந்தது.

அமெரிக்காவில் அவரது அண்ணன் குடும்பத்தோடு வசிப்பதாகவும், அவர்
வரச் சொன்னதால்தான் இவர் ராஜினாமா செய்துவிட்டு அங்கே
சென்றிருக்கிறார் என்றும் பிற்பாடு கேள்விப்பட்டேன்.

அமைச்சகத்தில் நீண்ட சர்வீஸில், கூட வேலைபார்த்த மிக அருமையான ஒரு சிலர்களில் ஆஹ்லுவாலியா சாஹிப்பும் ஒருவர் என மனம் அவ்வப்போது சொல்லும்…

[வளரும் ]
===================================================================================================

சாஹித்ய அகாடமி பரிசு வென்ற தேவி பாரதியின் சிவாஜி அனுபவம்.

எனது சினிமா அனுபவத்துக்கு அரசியல் வரலாற்றுப் பின்னணி உண்டு. எனது ஏழு அல்லது எட்டாவது வயதில்தான் முதன்முதலில் திரைப்படத்தைப் பார்த்தேன். அது 1964ஆம் வருடம். பிரதமர் நேரு மரணமடைந்ததற்கு மறுநாள் தற்போதைய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சித்ரா திரையரங்கில்தான் முதல் சினிமாவைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சிவாஜி கணேசன் நடித்த குலமகள் ராதைதான் நான் பார்த்த முதல் திரைப்படம்.
தாராபுரத்திற்கு அருகில் தேவத்தூர் என்னும் மிகச் சிறிய கிராமத்தில் எங்கள் உறவினர் ஒருவருடைய வீட்டிலிருந்தபோதுதான் நேரு செத்துப்போய்விட்டார் என்னும் செய்தியைக் கேள்விப்பட்டேன். எங்கிருந்தோ அந்தச் செய்தியை அறிந்து கொண்டு வந்த என் தந்தை மிகுந்த சோகத்துடன் தென்பட்டார். தொடக்கப் பள்ளி ஆசிரியரும் முன்னாள் ராணுவ வீரருமான என் தந்தையை அந்த மரணம் மிகவும் பாதித்திருந்தது. அவரது கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன. சோகமான அந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்வதற்கு நேருவைப் பற்றித் தெரிந்த வேறு யாருமே அந்தக் கிராமத்தில் இல்லாததால் எழுத்து வாசனையற்ற என் அம்மாவிடம் குழந்தைகளான எங்களிடமும் பகிர்ந்து கொண்டார்.
கலங்கிய கண்களுடன் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அப்பாவை அம்மா சற்று பயத்துடன் பார்த்தார். உடனடியாக ஒரு செம்புத் தண்ணீரைக் கொண்டுவந்து குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார். முகத்தைத் துடைத்துக் கொள்வதற்காக துண்டு ஒன்றையும் எடுத்து வந்து தந்தார். அன்று முழுவதும் அவர் சாப்பிடவே இல்லை.
அவரது அத்துயர் என் தாயாரை மிகவும் தவிப்புள்ளாக்கியிருந்தது. அவர் ஆவலுடன் மேற்கொண்டிருந்த ஒரு விடுமுறைக்காலப் பயணம், எனது தந்தையின் சோகமயமான மனோநிலை காரணமாக வீணாகிக் கொண்டிருந்தது. நேரு முக்கியமான தலைவர்தான். ஆனால், அதற்காக வருந்துவதற்கும் ஓர் அளவில்லையா என்ன?
அதிலிருந்து அப்பாவை மீட்டெடுப்பதற்காகவோ என்னவோ குழந்தைகளை அழைத்துக்கொண்டு சினிமாவுக்குப் போகலாம் என அம்மா யோசனை சொன்னார். அம்மாவின் சகோதரரான மாமா தேவத்தூரின் விவசாயி ஒருவரிடமிருந்து பாரவண்டி ஒன்றைப் பெற்று வந்தார். எங்களோடு அண்டை வீட்டினர் சிலரும் சேர்ந்துகொள்ள இரட்டை மாட்டு வண்டி. அந்த வண்டியில் எல்லோரும் தாராபுரத்திற்குப் போனோம்.
அன்றைய தாராபுரம்
அப்போதே - 1960களில் - தாராபுரம் பெருநகரத்திற்குரிய தோரணையைப் பெற்றிருந்தது. மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள், ஹோட்டல்கள், பள்ளிக்கூடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் தவிர பேருந்து நிலையமும் இருந்தது. பேருந்து நிலையத்தையொட்டி நான்கைந்து குதிரை வண்டிகளும் ஏழெட்டு மாட்டு வண்டிகளும் நின்றிருந்தன. அப்போதைய டாக்சிகளும் ஆட்டோ ரிக்‌ஷாக்களும் அவைதான்.
அமராவதி ஆற்றின் கரையோரம் இருந்தது சித்ரா திரையரங்கம். திரையரங்கைச் சுற்றிக் கிடந்த திடலைப் போல் தோற்றமளித்த பொட்டல்வெளியில் வண்டியை நிறுத்தி எங்களை ஒவ்வொருவராகக் கீழறக்கிவிட்டார்கள். எங்களுக்கு முன்பாகவே ஆறேழு பார வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஓரிரு கூட்டு வண்டிகளும் தென்பட்டன.
தியேட்டருக்கு எதிரே சாலையோரம் இரண்டு மூன்று கொடிக்கம்பங்கள், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன. மேஜையொன்றில் நேருவின் சட்டமிடப்படாத கறுப்பு வெள்ளைப் புகைப்படம். அநேகமாக ஒரு பழைய காலண்டர். அந்தப் புகைப்படத்தில் இருந்த நேரு ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தவரைப் போல் தென்பட்டார். அவரது நெற்றியில் யாரோ குங்குமத்தைத் தீற்றியிருந்தார்கள். காலண்டரின் பலவீனமான சட்டத்தில் ஒரு சிறிய செவ்வந்தி மாலை போடப்பட்டிருந்தது. அப்பாவைப் போலவே சோகம் கப்பிய முகங்களுடன் தென்பட்ட நான்கைந்து பேர் அந்தக் கொடிக்கம்பங்களுக்குக் கீழே நின்றிருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கிய உடனே அப்பா அந்தக் கொடிக்கம்பத்தை நோக்கி நடந்தார். அப்பாவுடன் இரண்டு முதியவர்களும் இளைஞரொருவரும் சேர்ந்துகொண்டனர்.
கொடிக்கம்பத்தையும் எதிரே பிரமாண்டமான தோற்றத்துடன் தென்பட்ட தியேட்டரையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்த அம்மா சிறு தயக்கத்துடன் அப்பாவைப் பின் தொடர்ந்தார். நேருவின் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் அப்பாவின் முகம் விம்மியது போல் தென்பட்டது. இரு கைகளையும் கூப்பிக் கும்பிட்டவர் சிறிது நேரம் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தார். மாமாவும் எங்களுடன் வந்த தேவத்தூர்வாசிகளும் நுழைவுச் சீட்டு வாங்குவதற்காகக் காத்திருந்த வரிசையில் போய் நின்றுகொண்டார்கள்.
அவர்தான் சிவாஜி
நீண்ட வரிசை. பெண்களுக்குத் தனியாக ஒரு வரிசை தென்பட்டது. பின்கொசுவம் வைத்த சேலை உடுத்திய ஏழெட்டுப் பெண்கள் அந்த வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். கூடவே பாவாடை சட்டை உடுத்திய இரண்டு மூன்று சிறுமிகள். ஒரு சிறுமி தாவணி உடுத்தியிருந்தாள். எங்களை அழைத்துக் கொண்டு அம்மா அந்த வரிசையில் போய் நின்றுகொண்டார். எல்லோருமே பரவசத்தில் மூழ்கியிருந்தவர்களாய்த் தென்பட்டார்கள். தியேட்டரின் மதில் சுவர் மீது போஸ்டர் ஒட்டப்பட்ட ஒரு தட்டி, அருகில் சிவாஜி கணேசனின் ஆளுயர கட் அவுட். கட் அவுட்டில் சிவாஜி சிரித்துக்கொண்டிருந்தார். காலண்டரிலிருந்த நேருவின் கழுத்தில் தென்பட்டது போலவே சிவாஜியின் தோளில் இரண்டு மாலைகள். அவற்றிலொன்று ரோஜா மாலை. நான் வைத்த விழி வாங்காமல் அந்தப் போஸ்டர்களையும் கட் அவுட்டையும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவர்தான் சிவாஜி என எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் அம்மா. அவர் நடித்த வேறு சில படங்களைப் பற்றிச் சொன்னார். பாசமலர், பாவ மன்னிப்பு, படிக்காத மேதை, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை என அவர் நடித்த படங்களின் சோகம் ததும்பும் கதைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அருகில் நின்றிருந்த பெண்கள் அவர் சொன்னதை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
-தேவிபாரதி

நன்றி கந்தசாமி R ஸார். ஃபேஸ்புக் 
===============================================================================

தவளைக்கு தண்ணீர்
பிறந்த வீடா
புகுந்த வீடா?

மஞ்சள் போர்வையின் 
மயக்கத்தில் உலகம்.
அந்தி மாலை 

தலைவனுக்கு தூக்கம் 
தலைவிக்கு துக்கம் 
விடுமுறையில் வீடு 

========================================================================================================

நியூஸ் ரூம் 





பானுமதி வெங்கடேஸ்வரன்  

28-12-23

- பெங்களூர் ஆடுகோடி காவல் நிலையத்தின் ரவுடி பட்டியலில் இருந்தவர் 28 வயதான ஜெயபிரகாஷ் என்ற அப்பி என்பவர். இவரை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் வீட்டு அருகிலேயே மர்ம கும்பல் ஒன்று விரட்டி விரட்டி கொலை செய்தது.

- இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் டெஸ்டிநேஷன் வெட்டிங்கிற்காக வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கவும், வெளிநாட்டினரை இந்தியாவில் மணமுடிப்பதை வரவேற்கவும், 'India says I do' என்னும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்க உள்ளார். இதற்காக புகழ்பெற்ற அரண்மனைகள், கோட்டைகள், சுற்றுலா தலங்கள், ரிசார்ட்ஸ் இவைகளை தேர்ந்தெடுக்கும் வேலையில் மத்திய சுற்றுலா துறை இறங்கியுள்ளது - ம்ம்ம்!

- ஹைதராபாத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகள் வீட்டார் அளித்த விருந்தில் பரிமாறப்பட்ட ஆட்டுக்கறி நல்லி எலும்பு மிஸ் ஆனதால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் - பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு!

- பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட ஹோட்டல்கள், பார், பப் கிளப்புக்கு 31 ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது - இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!


=======================================================================================

பொக்கிஷம்  :



தாடிக்குள் நாக்கு!


யார்ணா இது?


இந்தப் புத்தகத்தில் உள்ளவை....  பாஹேயின் கையெழுத்தில் 

சேகரின் ஓவியம் கல்கியின் கதைக்கு 

கோ(வி)ந்து வச்ச பேப்பர்!

மாற்றமும் ஏமாற்றமும்!

==================================================================================================


இரண்டு டெலிஃபோன் கால் ஆயிரம் ரூபாய்....  [தொடர்ச்சி]

மாலை நான்கு மணி சுமாருக்கு ஒரு ஃபோன் வந்தது.

மேலே உள்ள முதல் பகுதியின் தொடர்ச்சி...

..... ஏமாந்தீர்களா?  நீங்கள் வேறொன்று நினைத்திருப்பீர்கள்.  விக்கியிடமிருந்து மறுபடி ஃபோன் வந்திருக்குமென்று!   இல்லை...  

பேசியது அதற்கும் முன் நான் வேலை பார்த்த அலுவலகத்தில் உடன் பணிபுரிந்த இன்னொரு நண்பர்.

குசல விசாரிப்புகள்.  தொடர்ந்து அவர் சொன்ன விவரம்...

"ஸ்ரீ..   ஜிபே பார்த்திருப்பே..   ஆயிரம் ரூபாய் அனுப்பி இருக்கேன்.."

'இன்னொரு ஆயிரமா இன்று!'

"அப்படியா?  என்ன விஷயம்?"

"ஞாபகமில்லையா?  சுரேஷ் கல்யாணத்துக்கு என்னால வரமுடியலைன்னு உன்னை ஓதி விடச் சொன்னேனே...   ஸாரி...  லேட்டாயிடுச்சு..  மறந்து மறந்து போகுதுப்பா..  அதான் இன்னிக்கி ஞாபகமா அனுப்பிட்டேன்..."

விக்கி விநாயகா...  இது என்னப்பா விளையாட்டு? என்று நினைத்துக் கொண்டேன்.  

இப்பவும் நீங்கள் நான் உடனே விக்கிக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பி இருப்பேன் என்று நினைத்தால்...

ஆம்...

அது தவறு!

ஹிஹிஹி...   அனுப்பவில்லை.  
================================================================================================

107 கருத்துகள்:

  1. Telephone தானே
    Telefhone இல்லையே
    அதனால் அந்த டெலிஃபோன் வார்த்தையில் ஃ--க்கை எடுத்துடலாமோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிப் போட்டே, அப்படிப் படித்தே வழக்கமாகி விட்டது!

      நீக்கு
  2. கல்கினா கல்கி தான்.
    அந்த முதல் அத்தியாய ஆரம்பமே ஒருவித ஈர்ப்புடன் எவ்வளவு அழகாக இருக்கிறது.

    இதெல்லாம் நாமும் எழுதிப் பார்ப்பதற்கு
    பள்ளிக்கூட பாடப்புத்தக மாதிரி
    தான். வாசித்துக் கற்போம் என்றால் யார் கேட்கிறார்கள்?--
    சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருப்பமுடன் வாசித்தால் தானாய் மனதில் புகும்!

      நீக்கு
  3. தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை எடுப்பதில் எப்போதுமே ஒரு தயக்கம் இருக்கும். //

    hநான் எடுப்பதே இல்லை ஸ்ரீராம். அது ஒரு வேளை நான் சேமித்து மாயமான அல்லது சேமிக்காத உறவு நட்பு என்றாலும், எடுப்பதில்லை. அப்படி நம்மைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் எஸ் எம் எஸ் பண்ணி தன்னைச் சொல்லிக் கொண்டு தான் அழைத்ததாகச் சொல்லலாமே என்று நினைப்பதுண்டு. நான் அப்படிச்செய்வதுண்டு!!! நான் அழைக்கும் எண் வாட்சப்பில் இருந்தால் என்னை அறுமுகப் படுத்திக் கொண்டு ஒரு செய்தி அனுப்பிவிடுவேன்.

    ஆனால் பெரும்பாலும் யாரும் அப்படிச் செய்வதில்லை. பின்னர் வேறுவழியாகத் தொடர்பு ஏற்படும் போது சொல்வாங்க நான் எப்ப கூப்பிட்டாலும் நீ எடுக்கவே இல்லைன்னு குற்றம் சொல்வாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வைத்திருக்கும் போன் சில எண்களை பொட்டன்ஷியல் ஃபிராடு என்று காட்டும்.  சிலவற்றை ஸ்பாம் என்று காட்டும்.  எடுக்காமல் விட்டு விடுவேன்.  ஒருநாள் அப்படி என்னதான் இருக்கிறது என்று எடுத்து பார்த்தால்  ஒன்று காலாவதியாகிட்ட என் டிஷ் ஆன்டெனா கணக்கை கட்டச்சொல்லி, இன்னொன்று மேட்ரிமோனியல்!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் இப்ப என் ஃபோனும் அப்படிக் காட்டுது. இடம் கூடச் சொல்லுது. அப்படி இருந்தும் சில சமயம் இப்படி ஆகும்.

      //காலாவதியாகிட்ட என் டிஷ் ஆன்டெனா கணக்கை கட்டச்சொல்லி, இன்னொன்று மேட்ரிமோனியல்!//

      ஹாஹாஹாஹா..

      கீதா

      நீக்கு
  4. மனம் நிஜமாகவே மாயம் தான் அதன் வீச்சு அபாரம் ஸ்ரீராம். அது ஓடும் வேகத்திற்கு நமக்கு மூச்சு வாங்கும்...ஹாஹாஹா....சில சமயம் இதயத் துடிப்பு எகிறும்!

    கீதா


    பதிலளிநீக்கு
  5. பாருங்க! விக்கி உங்களுக்கு வர வேண்டிய பணத்தை வாங்கிக் கொடுத்துட்டார்!

    ஏதோ ஒரு வகையில் இந்த விக்கியின் அழைப்பு நன்மை பயத்திருக்கிறது! இதுக்குதான் எது நடந்தாலும் நன்மைக்கேன்னு சொல்றாங்களோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. விக்கி வாங்கி கொடுத்தாரா?

      நீக்கு
    2. பின்னே விக்கியின் கால் வந்ததுனால நீங்க உங்க நண்பர்கிட்ட அத சொல்ல அவருக்கு அந்த 1000 பொற்காசுகள் நினைவுக்கு வர உங்களுக்கு வந்ததே!!!!!!

      கீதா

      நீக்கு
    3. அவர் ஏற்கெனவே கொடுக்க நினைத்து மறந்து மறந்து போவதுதானே?  இருங்கள் வார்த்தையை ஒழுங்காக அமைக்கிறேன்..  அவர் மறந்து மறந்து போனாலும் கொடுக்க நினைத்ததுதானே!

      நீக்கு
    4. ஆமாம்.....பெரும்பாலும் 99% எனக்கு இப்படியானவை நினைவில் இருந்து ஒழுங்காக நடந்துவிடும் ஆனால் சிலப்போ கொடுக்க நினைத்து நினைத்து இந்த மறதி சில சமயங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதும் நடக்கும், ஸ்ரீராம். எனக்கு.

      கீதா

      நீக்கு
    5. அடுத்தவரைச் சொல்லும் நாமே சிலபொழுதுகள் அதே தவற்றைச் செய்திருப்போம்!!  செய்திருக்கிறேன்!

      நீக்கு
  6. மாலை நான்கு மணி ஃபோன் - வாசகர்களுக்கு மிஸ்ட் கால்! அடுத்த வியாழன் காலை 5 மணி வரை காத்திருக்கவும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஏகாந்தன் ஸார் எழுத்து வாசிப்பு எப்பொழுதுமே சுகம் தான். எனக்கும் ஆஹ்லுவாலியா மாதிரியான ஒரு அதிகாரியின் நினைவு வந்தது.
    'ஏன் ஆஹ்லுவாலியா வேலையை இராஜினாமா பண்ணினார் என்ற கேள்வி ஒரு தொடர்கதையைப் படிக்கிற சுவாரஸ்யத்தில் மனதைக் குடைந்தது.
    'அண்ணன் வரச்சொல்லி அமெரிக்கா போனார்' என்று ஏகாந்தன் ஸார் தெரிந்து கொண்டதையும் உண்மையான காரணமாக மனசு ஏற்கவில்லை...

    ஹி.. ஹி..
    என் அனுபவத்தில் எழுதறவனுக்கு இப்படியெல்லாம் தான் கதைக்கான கரு கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //'அண்ணன் வரச்சொல்லி அமெரிக்கா போனார்' என்று ஏகாந்தன் ஸார் தெரிந்து கொண்டதையும் உண்மையான காரணமாக மனசு ஏற்கவில்லை...//

      எனக்கும் தோன்றியது.  சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது!

      நீக்கு
    2. 'வெளியில் சொல்ல முடியாது' என்றெல்லாம் நான் நினைக்கவில்லை.
      'எழுதறவனுக்கு கதை கிடைக்கிற வழி' -- யாருக்காவது உபயோகப்படட்டுமே என்று ஒரு தூண்டில்.

      நீக்கு
    3. அப்படிச் சொல்லவில்லை. அரசாங்க ரகசியமாக கூட இருக்கலாம் என்று சொல்ல வந்தேன்.

      நீக்கு
    4. ..எழுதறவனுக்கு இப்படியெல்லாம் தான் கதைக்கான கரு கிடைக்கும்.//

      கதையா.. கருவா ! அட, ஆண்டவா....



      நீக்கு
    5. ..ஏகாந்தன் ஸார் எழுத்து வாசிப்பு எப்பொழுதுமே சுகம் தான்.//

      இப்படியான பின் ’ஊட்டங்களில்’ மனம் திளைத்துவிடாமல் ஜாக்ரதையாக இருக்கப் பார்க்கிறேன்..

      நீக்கு
  8. நேர்மையான அதிகாரிகளுக்குச் சட்டென்று பதவி உயர்வு கிடைப்பது அலல்து தாமதமாகக் கூடக் கிடைக்காமல் போவது என்ற அனுபவங்கள் ரொம்பவே அறிந்ததுண்டு, மத்திய அரசு என்றாலும் மாநில அரசு என்றாலும். நேர்மையாக இருந்தால் எதிர்ப்புகள் தான் வரும் என்பதும் அறிந்த விஷயம். ஒரு சிலருக்கு மட்டுமே நல்ல விஷயங்கள் வாய்க்கும்.

    ஏகாந்தன் அண்ணாவின் பாஸ் நல்ல மனிதர் என்று தெரிகிறது.

    பிரிட்டிஷ் கௌன்சில் நூலகம் என்னை மிகவும் ஈர்த்ததுண்டு. ஒருகாலத்தில் சில தடவைகள் சென்றதுண்டு. திருவனந்தபுரத்தில் இருந்தப்ப. அதன் பின் அந்த வாய்ப்பு ஏற்படவில்லை.

    உங்கள் அனுபவங்களை ரசித்து வாசித்தேன், ஏகாந்தன் அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்ப்பு மேலிருந்து வரும்.  சமயங்களில் நம் கீழிருந்தும், நம்முடனே இருக்கும் நபர்களிடமிருந்தும் கூட வரும்.  யார் எப்போது முதுகில் குத்துவார் என்று சொல்ல முடியாது!

      நீக்கு
    2. எதிர்ப்புகளினால் அவரது ப்ரொமோஷன் தாமதமானது எனச் சொல்லவில்லை.

      ’அரசாங்க ‘பாலிசி/தேவைகளின்படி’ இவரைத் தாண்டி வேறு சிலர் ... அவ்வப்போது பதவி உயர்வு பெற்றுவந்ததால்..’ எனக் குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்கவில்லையோ! ரிஸர்வேஷன் எனும் சர்க்கார் இடியாப்பச்சுற்றுகளில் மாட்டிக்கொண்டதால்..என்றெல்லாம் விளக்க விரும்பாததால் அத்தோடு விட்டேன்!

      நீக்கு
  9. ஏகாந்தன் அண்ணா பகுதிக்குப் போட்ட கருத்தைக் காணவில்லையே....ஆ

    கீதா

    பதிலளிநீக்கு
  10. எனக்கென்னவோ, சாஹிலாயா அவர்கள் ராஜினாமா செய்த காரணம் பின்னால் வேறு ஏதோ இருப்பதாகப் படுகிறது. அதுவும் ஃப்ரான்ஸிற்கு மாற்றப்பட்ட போது....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாஹிலாயா/ ஆஹ்லுவாலியா...என்று வர வேண்டியது...என் உச்சரிக்கு கூகுளுக்குப் புரியவில்லை போல! இதைத் திருத்த வந்தால் கருத்தைக் காணவில்லை. இப்ப இழுத்துட்டு வந்திட்டீங்க ஸ்ரீராம்!!!!..

      ப்ளாகர் இன்னும் தூக்கக் கலக்கத்துல இருக்கு போல...காலைல தூங்கவிடாம இப்படிக் கருத்தா அடிச்சிட்டிருந்தா......அப்படின்னு ப்ளாகருக்குக் கோபம் போல!!!

      பாருங்க இந்தக் கருத்தை வெளியிட மாட்டேங்குது !

      கீதா

      நீக்கு
  11. இந்த வருட சாஹித்ய அகாதமி விருது தேவி பாரதி என்பவருக்கு என்று கேள்விப்பட்டதும் 'யார் இவர்?' என்று திகைத்ததுண்டு. எஸ்.ரா.. ஜெமோ சொல்லித் தெரிந்த பெயராகவும் நினைவிலில்லை. சொல்லப்போனால்
    ஜெமோவே பழசாயிட்டார். அவரைத் தாண்டி வாசிப்புப் பழக்கம் அறவே அற்றுப் போன
    என் சொந்தக் குறைபாடு தான் காரணம். தேவி பாரதி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்ரீராமாவது ஏதாவது வியாழனில் அவர் பற்றி எழுதட்டுமே என்று யூட்யூப் செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்ட நினைவிருக்கிறது.
    ஆனால் நாம் நினக்கிற மாதிரி எல்லாம் நடக்கிறதா என்ன?.. தேவி பாரதி பற்றி குறிப்பு என்றாலும் சிவாஜி பற்றியல்லவா செய்தி போய்விட்டது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   விருது பெற்ற எழுத்து எப்படி இருக்குமோ என்கிற பயம்!  யு டியூப் செய்தியை எப்படிப் பகிர்வது?  

      நீக்கு
    2. ஜீ வி அண்ணா, இவரைப் பற்றி சமீபத்தில்தான் அறிந்தேன். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்ற வருடம் ஈரோடில் 25 நாட்கள் இருந்த போது அறிய நேர்ந்தது,

      https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF

      இதில் இவரைப் பற்றியும் இவர் எழுதியவை பற்றியும் இருக்கிறது. இவரது சிறு கதைகள் ஏதேனும் இணையத்தில் இருக்குமா என்று கொஞ்சம் தேடினேன். அப்போது கிடைக்கவில்லை. இப்ப மீண்டும் தேட வேண்டும்.

      கீதா

      நீக்கு
  12. தவளையில் ஆரம்பித்து தலைவனில் முடிந்தாலும் மூன்று வரி துண்டுகளாய் மூன்று.

    இதற்கு பர்த்தியாய்
    தவளைக்கும் தலைவனுக்கும் முடிச்சுப் போட்டு ஆறு வரிக் கவிதை ஒன்று வாசித்திருக்க மாட்டோமா என்று தோன்றியது. அவசரமில்லை. இருக்கவே இருக்கு அடுத்த வியாழன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவருக்கு தோன்றும் கற்பனை,அதே போல அபூர்வமாகத்தான் அடுத்தவருக்கும் தோன்றும்.  உங்கள் முயற்சியை அனுப்புங்களேன் - பின்னூட்டமாகவே!

      நீக்கு
    2. கிணற்றுத் தவளைகள்
      தமிழ்நாட்டு தலைவர்கள்.

      நீக்கு
    3. பொழுது புலர்ந்து
      இரவு இருட்டு
      கவிகற வரை
      அரசியல் பேச்சே
      மூச்சாக இருக்கும்
      தமிழ் நாட்டிற்கேன்
      இந்த சாபக்கேடு
      ஜெஸி ஸார்?..

      நீக்கு
    4. கிடைத்தது சுதந்திரம்
      பேசுவோம்
      தூற்றுவார் தூற்றட்டும்
      போற்றுவார் போற்றட்டும்.

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  13. என் இரு கருத்துகள் இருந்தா இழுத்துக் கொண்டுவாங்க ஆசிரியர்களே!!!!!

    ஆஹ்லுவாலியா// என்று அடிக்க வேண்டியதை சாஹ்லியான்னு அடிச்சிட்டேன் திருத்த வந்து பார்த்தால் கருத்தைக் காணவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. நான் அப்பால வாரேன் பளாகர் தூங்கட்டும்.....அப்புறம் போட்டதும் காணாம போய்டுச்சு!! ப்ளாகர் ஆக்ட்டிவ் ஆனப்பிறகு வாரேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. ஆயிரம் ரூபாய் கொடுக்கலாமல் டிமிக்கி காட்டிவிட்டீர்கள். அதே சமயம் அதை விட கொஞ்சம் பெரிய தொகையை தெரிந்தே இழந்திருப்பீர்கள், ஏமாறுகிறோம் என்று தெரிந்தே, நிர்பந்தத்தினால். "நான் இழந்த கதை" என்று வியாழன் தொடராகட்டும்.

    ஏகாந்தன் சார் அனுபவங்கள் சாவி எழுதிய கேரக்டர் போன்று கேரக்டர் விவரிப்புகளிலேயே உள்ளது.

    தவளைக்கு தண்ணீர் என்பதை விட தவளைக்கு குளம் அல்லது தவளைக்கு கிணறு என்பது பொருத்தமாக இருக்கும். பிறந்த வீடும் இல்லை, புகுந்த வீடும் இல்லை. வீடே அதுதான். சாப்பாடு 'தரை' என்ற ஹோட்டலில்.

    பொன்மாலை பொழுது
    இது ஒரு பொன்மாலை பொழுது
    வானமகள் நாணுகிறாள்
    வேறு உடை பூணுகிறாள்

    உடை மாற்றம் ஒரு கவிஞருக்கு. போர்வை உங்களுக்கு.

    பொக்கிஷம் பாஹே குறிப்பு எதைப்பற்றியது. படித்த புத்தகங்களோ? அல்லது சொந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பட்டியலோ?
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இழந்தவை முன்பு ஏமாந்த அனுபவங்கள் என்று எழுதி இருக்கிறேன் JKC  சார்...  இந்த விஷயத்தில் என் பணம் என் பணம்.  கடன் ஏன் கொடுக்க வேண்டும்?!

      // படித்த புத்தகங்களோ? அல்லது சொந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பட்டியலோ?//

      ஒரு குறிப்பிட்ட பைண்டிங் புத்தகத்தில் உள்ள கன்டென்ட்.

      நீக்கு
    2. ஓ குறிப்புகளின் அர்த்தம் இங்கு பார்த்துவிட்டேன் ஸ்ரீராம்!

      கீதா

      நீக்கு
    3. ...அனுபவங்கள் சாவி எழுதிய கேரக்டர் போன்று கேரக்டர் விவரிப்புகளிலேயே உள்ளது.//

      ஓ...அப்படியா! (சாவியின் எழுத்து ஹாஸ்யமானது. சில கட்டுரைகளை தினமணிகதிரில் படித்திருக்கிறேன். தலைப்புகள் நினைவிலில்லை)

      அனுபவங்களினூடே சில கேரக்டர்கள் வருவார்கள்தான்.. அவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் தவிர்க்கமுடியாதது. சொல்லவில்லையென்றால் அந்த அனுபவம் அல்லது சம்பவத்தின் கூறு, தீவிரம் சரியாக அறியப்படாமல் போக வாய்ப்புண்டு. ரஸம்போய்விட்ட கண்ணாடியில் முகத்தைத் தேடும் முயற்சியாகிவிடும் எழுத்து.

      கேரக்டர்கள் ! நாமெல்லாம்கூட வாழ்வெனும் மேடையில் அவ்வப்போது ஏறும், திரையிடுக்கில் திடுமென மறையும் கேரக்டர்கள்தானே..

      நீக்கு
  16. நல்லி எலும்பு மிஸ் ஆனதிற்கும்,
    நரசுஸ் காபி பாணி
    'பேஷ் பேஷ்'க்கும் ஒத்து வரவில்லை பா.வெ. ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதெதற்கு எல்லாம் கோபித்துக் கொள்வது பாருங்கள்!

      நீக்கு
    2. //நல்லி எலும்பு மிஸ் ஆனதிற்கும்,
      நரசுஸ் காபி பாணி
      'பேஷ் பேஷ்'க்கும் ஒத்து வரவில்லை பா.வெ. ஹி..ஹி..// எனக்கும் தோன்றியது. என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவரான நீங்கள் இதைநேராகவே சொல்லலாம் ஜீ.வி.சார். ஹி ஹி யெல்லாம் தேவையில்லை. நன்றி__/\__ __/\__

      நீக்கு
  17. ஆயிரம் ரூபாயை எனக்கு அனுப்பிவிடவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் எழுதியுள்ள த்வனியைப் பார்த்தால் எப்பவோ வாங்கி ஶ்ரீராம் இன்னும் கொடுக்கவில்லையோ?

      நீக்கு
    2. அடக் கடவுளே! அவர் எனக்குக் கொடுக்கலாம் என்று யோசித்தால் கூட நீங்க சொன்னவுடன் த்வனி சரியில்லை - அதனால் கொடுக்க மாட்டேன் என்று அவரை நினைக்க வைத்து விடுவீர்கள் போலிருக்கு. அப்படி அவர் அனுப்பவில்லை என்றால் , நெல்லைதான் எனக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பவேண்டும்!

      நீக்கு
    3. நீங்கள் என்ன பேசிக்கொள்கிறீர்கள் என்றே புரியவில்லை!

      நீக்கு
  18. கடன் கொடுப்பது என்பதே வேண்டாத வேலை. பெரும்பாலும் நமக்குக் கேட்க கூச்சம் அல்லது மறதி வந்துவிடும். எதிர்பார்ட்டி நினைவில் இல்லாத்துபோலவே இருந்துவிடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்து ஏமாந்தது அதிகம்தான்!

      நீக்கு
    2. நான் ஹாஸ்டலில் (9ம் வகுப்பு) சேர்ந்த புதிதில் என் அப்பா எனக்குச் சொன்னது.... யாரேனும் நண்பர்கள் கடன் கேட்டால் 2 ரூபாய் கொடு. நிச்சயம் திருப்பித் தர மாட்டாங்க. அப்புறம் யாருக்குமே கடன் கொடுக்காதே. கடன் எப்போதும் வாங்காதே என்றார். பிற்காலத்தில் கடன் கொடுத்து அதை வாங்குவதற்குள் கஷ்டப்பட்டுவிட்டேன்.

      நீக்கு
    3. யாரும் சொல்லாமலேயே இதைப் பின்பற்றிய நானேதான் பெரிதாகவும் ஏமாந்தேன்!

      நீக்கு
  19. ரொம்ப வளையாத கம்பிகள் உடைந்துவிடும். அதனால் தகுதி இருந்தும் பதவி உயர்வு வராது.

    இதனால்தான் ஊரோடு ஒத்துவாழ் என்ற பழமொழி வந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
  20. உயர்நீதிமன்ற நீதிபதியைப் பற்றி ஒரு சீனியர் வக்கீல் சொன்னது. ரொம்ப வளையாமலிருப்பவர்கள் ஓரிருவர் இருந்தால் அதுவும் நல்லதுதான்... அரசியல் எதிரிகளின் வழக்கு அவருக்குப் போவது நல்லது

    பதிலளிநீக்கு
  21. தேவிபார்தி சொல்லியிருக்கும் அனுபவங்கள் சுவாரசியம். அந்தக் கால கட்டத்தில் ஏன் கிட்டத்தட்ட நம்ம காலகட்டத்துலயும் இப்படித்தான். ஸ்ரீராம் நீங்க அன்று சினிமா பார்த்த அனுபவங்களை வியாழனில் சொன்னதில் எனக்கு என் அனுபவங்கள் நினைவுக்கு வர அதை எழுதிக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கிறேன்!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் ஒரு சுவாரஸ்யம்.  அதுதான் பகிர்ந்தேன்.

      நீக்கு
  22. தவளைக்குத் தண்ணீர் ? அது மழைத்தண்ணிலயும் இருக்கும் தான்...ஏரி குளம்....ஏரில இருக்கற தவளை குளத்துக்குப் போனா...(அதாங்க சீஸனுக்கு!!!!) புகுந்த வீடு...ஆணா இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி!!! ஹிஹிஹிஹி இப்படி அங்கிட்டும் இங்கிட்டும் போறதை சொல்லலாமோ!!
    த்வளைகளுக்குக் கட்டிப்பிடி வைத்தியம் தான்!!!! முட்டை வந்திரும்.

    கீதா


    பதிலளிநீக்கு
  23. மஞ்சள் போர்வை, தலைவன் தலைவி - இரண்டுமே நல்லாருக்கு, ஸ்ரீராம் ஹைக்கூக்கள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. அதென்னது திருமணத்தில் நல்லி எலும்பு இல்லை? அப்ப்டினா என்னா?!!! நல்லி? எலும்பு? ஸ்‌ரீராம் நியூஸ்!!?

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஆஅ நல்லி எலும்பு அம்புட்டு ஃபேமஸா ரெண்டு நியூஸ்லயும் வந்திருக்கே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நல்லி கடையில் எலும்பு கூட கிடைக்குமா?? ஹா ஹா ஹா

      நீக்கு
    2. அது ஒரு வகை எலும்பு.  நல்ல எலும்பு போலும்!

      நீக்கு
  26. 2-4-39 அந்த வருடத்திலேயே சுஜாதா இப்படியா இருந்தார் இளைஞராக? இந்தத் துணுக்கு புரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. பாஹே அப்பாவின் கையெழுத்து பொக்கிஷம்!!!! ஏதோ எழுத குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறாரோ!!! இன்றைய பொக்கிஷத்தில் இதுதான் பொக்கிஷம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு பைண்டிங் புத்தகத்தின் முன் உள் அட்டை.  அந்தப் புத்தகத்தில் உள்ளே என்னென்ன இருக்கிறது என்கிற லிஸ்ட்!

      நீக்கு
    2. அந்தக் காலத்தின் எழுத்தே, பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஃபௌண்டெய்ன் பென் -இல் எழுதியிருந்தாரோ...

      நீக்கு
    3. தெரியவில்லை.  இரண்டு மூன்று பேனாக்கள் வைத்திருப்பார்.  மேஜைமுன் நாற்காலியில்  அமர்ந்து எழுதிக் கொண்டே இருப்பார்!

      நீக்கு
  28. கல்கியின் அந்தக் கதை என்னவாக இருக்கும்னு பார்க்க வேண்டும். ஓவியம் அந்தக்காலப் பயணத்தைச் சொல்லும் விதத்தில் வரைந்ததை அச்சில் வரப்ப அது எப்படி என்பது உட்பட!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. இன்று, ஸ்ரீராமின் தவளை ஹைக்கூ வினால் என் மனதில் பல வருடங்களாக ஓடிக் கொண்டிருந்த கேள்வி.

    பெண்கள் - புகுந்த வீடு என்று சொல்வது போல் ஏன் ஆண்கள் - புகுந்த வீடு என்று சொல்வதில்லை??!!!

    ஹப்பா ஒரு வழியா கௌ அண்ணாவின் அங்கலாய்ப்பை போக்கிவிட்டேன் புதன் கேள்வி கேட்டு!!!!!!!

    இதற்கு நான் ஒரு காலத்துல மேடையில் முழங்கியதுண்டு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் நான் கேட்ட புதன் கேள்விகளை நிராகரித்து விட்டார்.

      நீக்கு
    2. கௌ அண்ணா  நோட் செய்திருப்பார்.  ஆனால் JKC ஸார் என்ன கேள்வி கேட்டு நிராகரிக்கப்பட்டது?  புரியவில்லையே..

      நீக்கு
    3. கேள்விகள்?? தேடிப் பார்க்கிறேன்.

      நீக்கு
    4. கண்டு பிடித்து விட்டேன். பதில்கள் அளிப்போம். நன்றி.

      நீக்கு
  30. விக்னேஷ் போன் செய்ததால் உங்களுக்கு நன்மை செய்து விட்டார்.
    அவருக்கும் 1000 ரூபாய் கிடைத்து இருக்கும். மாலை நான்கு மணிக்கு வந்த போன் யாரிடமிருந்தோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் கடைசி பகுதி படிக்கவில்லையோ?!!

      நீக்கு
    2. படித்தேன் யாரிடமிருந்தும் என்று ஊகித்து விட்டேன், இருந்தாலும் நீங்கள் சொல்லட்டும் என்று அப்படி ஒரு கேள்வி ஸ்ரீராம்.

      நீக்கு
  31. ஆஹ்லுவாலியா சாஹிப்புக்கு அமெரிக்காவில் நல்ல வேலை கிடைத்து விட்டது போலும்

    பதிலளிநீக்கு
  32. தேவி பாரதியின் சிவாஜி அனுபவம் நன்றாக இருக்கிறது.
    உங்கள் கவிதை கேள்வியாக இருக்கே
    புதன் கேள்வி என்று நினைத்து கொள்ள போகிறார்.
    தவளை பிறந்த வீடு, புகுந்தவீடு எல்லாம் தண்ணீர் தான்.
    வெளியே வந்தாலும் மீண்டும் தண்ணீருகுள் போய் விடும் தானே!
    விடுமுறையில் வீடு என்றால் வேலை தலைவி அதிகம் தான் அதுதான் துக்கமோ?

    பதிலளிநீக்கு
  33. பாஹேயின் (அப்பாவின்) கையெழுத்தில் உள்ளவற்றை படித்தேன்.
    அருமை.
    பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள் சொன்ன புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி. அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
    பொக்கிஷ பகிர்வில் மாற்றத்தை , ஏமாற்றம் ஆக்கியதை சிறுவர்கள் குறும்பை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள் சொன்ன புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி. அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.// நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  34. ஹாஹாஹாஹா! ஸ்ரீராம் கடைசில 4 மணி அழைப்பை கடைசில பார்த்துவிட்டேன்!!! ஒ அதுக்குத்தான் காலைல இதுக்கு ஹாஹாஹா சொல்லணுமா ஹிஹிஹிஹி சொல்லணுமான்னு சொல்லிருந்தீங்களா!!

    நாங்க அப்படி எல்லாம் நினைக்கலையாக்கும் விக்கிதான் கூப்பிட்டிருப்பார்னு...இது வேற யாரோ மீண்டும் 1000 கொடுக்க முடியுமான்னு கேட்டிருப்பார்ன்னு நினைச்சேன். ஆனா பாருங்க வரவு!!!

    இது விக்கியின் விஷயத்தைச் சொல்லாமலேயே வந்த வரவு! டபுள் டமாக்கா! ஹப்பா அடுத்த வியாழன் வரை காத்திருக்கவும் இல்லை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க கொடுத்திருக்க மாட்டீங்கன்னு தெரியும்! நான் ஏமாறலையே!!!

      கீதா

      நீக்கு
  35. //..... ஏமாந்தீர்களா? நீங்கள் வேறொன்று நினைத்திருப்பீர்கள். விக்கியிடமிருந்து மறுபடி ஃபோன் வந்திருக்குமென்று! இல்லை... // எ.பி.வாசகர்களை குறைவாக மதிப்பிட்டு விட்டீர்கள் என்று தோன்றுகிறது. நிறைய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் இந்த சஸ்பென்ஸுக்கெல்லாம் ஏமாறுவார்களா? உங்களுக்கு அந்த நாள் நல்ல நாள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எல்லாம் ஏமாற்றி விட முடியுமா? எனக்குத் தெரியாதா? இப்படி எழுதுவதுதான்... வாசிக்கறதுதான்...!

      நீக்கு
  36. ஏகாந்தன் சார் அறிமுகப்படுத்தும் மனிதர்கள் சுவாரஸ்யமானவர்களாக இருக்கிறார்கள். நேர்மையான அதிகாரிகளுக்கு கீழே பணி புரிவதும், அவர்களிடமிருந்து பாராட்டு பெருவதும் சிறப்பான அனுபவங்களைத் தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  தங்கள் மனசாட்சிக்கே நேர்மையான அதிகாரிகளே அபூர்வம். 

      நீக்கு
  37. விக்கிக்கு அனுப்புவீர்கள் என நாங்கள் நினைக்கவேயில்லை:). ஏமாறக் கூடாதென நீங்கள் நினைத்தது புரியாதா என்ன? எப்படியோ அன்றைய தினத்தின் ஆயிரங்கள்... பற்றிய பகிர்வு அருமை. கவித்துளிகள் நன்று. தொகுப்பு சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா.. ஹா..  அட்லீஸ்ட் விக்கியிடமிருந்து மறுபடி போன் வரும் என்று எதிர்பார்த்திருக்கலாம்!  நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!