புதன், 20 டிசம்பர், 2023

ஏட்டுச் சுரைக்காய்!

 

சென்ற வாரமும் எங்களை யாரும் கேள்விகள் கேட்கவில்லை. 

எனவே இதோ எங்கள் கேள்விகள்: 

1) உங்களுக்கு மிகவும் பிடித்த பழைய சினிமா பாடல் எது? புதிய சினிமா பாடல் எது?

2) யாரையாவது காரணமே இல்லாமல் வெறுப்பவர்கள், ஏன் அப்படிச் செய்கிறார்கள்? 

3) 'ஆஹா - இதற்குத்தான் இவ்வளவு நாளும் காத்திருந்தேன்' என்று நீங்கள் சமீபத்தில் நினைத்தது எதைப்பற்றி ? 

4) நெருங்கிய சொந்தம் அல்லாத - உங்களுக்குப் பிடித்த தூரத்து உறவினர் யார்? ஏன்? 

= = = = = = = = = = =

KGG பக்கம் : 

ஏட்டுச் சுரைக்காய்! 

பாலிடெக்னிக் படித்த காலத்தில், 'இந்த பாடத்தினால் என்ன உபயோகம்?' என்று நான் நினைத்த ஒரு பாடம், Machine drawing & design  பாடம். ஆனா பாருங்க - 1973 முதல், 2006 வரை நான் பார்த்த வேலை முற்றிலும் drawing & design மட்டுமே! 

பாலிடெக்னிக் படிக்கும்போது டிராயிங் பாடத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்டவை எல்லாமே வேலை பார்த்த அலுவலகத்தில் தலை கீழாக மாற்றிக்கொள்ளவேண்டியதாக ஆனது! 

டிராயிங் வகுப்பில், 2 H பென்சில் H பென்சில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

அசோக் லேலண்ட் டிராயிங் ஆபீஸில் சேர்ந்த முதல் நாள் நான் அப்படி ஒரு tracing ஷீட்டில் வரைந்த படத்தைப் பார்த்த மேலதிகாரி பயங்கரமாக சிரித்தார். "இப்படி எல்லாம் பாலிடெக்னிக்ல சொல்லிக்கொடுத்தகாப்போல இங்கே வரைந்தால், இதிலிருந்து புளூ பிரிண்ட் எடுக்க இயலாது. வகுப்பில் கற்றுக்கொண்டதை எல்லாம் மறந்துவிடு. இங்கே வரையும்போது எவ்வளவு திக்கா டார்க்கா வரைய முடியுமோ அந்த அளவுக்கு திக்கா டார்க்கா வரையணும். அப்போதான் புளூ பிரிண்ட் சரியா வரும் " என்றார். 

வகுப்பில் படித்த சமயம், ஒரு போல்ட் படம் வரைவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். போல்ட் ஹெட் thickness முதல் எல்லாவற்றிற்கும் விகித கணக்கு உண்டு. 

ஆனால், ஆபீஸில் ஒரு போல்ட் படம் வரைய ஐந்தே விநாடிகள்தான்! படம் வரைவதை விட முக்கியம் படத்தில் உள்ள பாகத்தின் அளவுகளை சரியாகக் குறிப்பிடுவது மட்டுமே! Bolt போன்ற சில standard பாகங்களுக்கு, "Unspecified dimensions to conform to BIS 1367" என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடலாம்! 

கல்லூரிக் கல்வி பாடத்தில்  படிக்கும் பாடங்களுக்கும், நடைமுறை வேலைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். சில சமயங்களில் அது முற்றிலும் வேறாகக் கூட இருக்கும். 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுதானே! 

அப்பாதுரை பக்கம் :  

முத(லை)லாளிகள்

வரலாறு எழுதப்படத் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உலகின் மிகப்பெரிய செல்வந்தராகக் கருதப்படுபவர் ஆப்பிரிக்க மாலி தேச அரசராக இருந்த மன்ஸா மூஸா என்பவர்.  உலக வரலாற்றுத் தொடக்கம் ஒப்பாதென்றால், சென்ற ஆயிரம் ஆண்டுகளின் செலவந்தர் கணக்கெடுப்பில் மூஸாவை அடிச்சுக்க ஆளில்லேனு நிச்சயம் சொல்லலாம்.  

மூஸாவைப் பற்றிய நிறைய சுவாரசியமான விவரங்கள் நேஷனல் ஜியோக்ரேபிக் போன்ற தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. உதாரணத்துக்கு: மன்னர் மூஸா மெக்கா பயணம் சென்ற போது எகிப்தில் தங்கினார். தன் உடன்பயணிகள், படை(?)க்கு செலவு செய்யவும், பொதுவாக எகிப்தில் தங்கிச் செலவழிக்கவும், தானம் செய்யவும் மன்னர் மூஸா  செலவழித்த தங்கம் காரணமாக எகிப்தில் தங்க விலை சீரழிந்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு நகைக் கடைகளெல்லாம் மூடி, பிரியாணி விற்கத் தொடங்கினவாம். எனவே பிரியாணி  உதயமானது மூஸாவின் எகிப்து பயணத்தில் தான் என்பதறிக.  (பனிரெண்டு வருஷம் நாடு முழுக்க நகைக்கடைல போணியாவலியா?!!)

கொலம்பஸுக்கு நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே மூஸா அமெரிக்கா வந்து போனதாகச் செவ்விந்தியர் குறிப்புகளில் சொல்லப்பட்டிருக்கிறது. டிம்பக்டு நகரம் கட்டியவர் இவர்தான்.  இந்த மன்னரிடம் இத்தனை செல்வம் சேர எத்தனை குடம் வியர்வை (குருதி?) சிந்தின என்ற தோராயக் கணக்கு விவரமும் கிடைக்கிறது. (வேண்டாமே?)

மூஸாவுக்குப் பின் நிறைய மகரங்கள், அதாவது முதலைகள். 

சமீப ஐநூறு ஆண்டுகளில் ராகபெல்லர், கார்னகி, மோர்கன், வேன்டர்பில்ட், ஜேம்ஸ் ஹில், கூல்ட், ஆஸ்டர்,  ஸ்டேன்பர்ட், டாடா, பிர்லா என்று அமெரிக்க ஐரோப்பிய இந்திய செல்வந்தர்கள் சம்பாதித்த மற்றும் வாழ்ந்த விதம் பற்றி பீடர் டர்சின் என்பவர் ஆராய்ச்சி (!!) செய்து புத்தகம் எழுதியிருக்கிறார் (ஐயா.. டர்சின், உங்க end times புக்குல விகிபீடியா விவரம் எல்லாம் அப்படியே வருதே? இதுக்கு அம்பது டாலரா? இன்னாபாது, யாரு முதலை?).

ஆன்ரூ கார்னகி ஸ்காட்லந்தில் ஒரு தையல் கடையில் பாபின் நூல் சுற்றித்தரும் வேலையில் தொடங்கி உழைத்து உலகின் மிகப்பெரிய கரி, இரும்பு மற்றும் பல உலோக ஆலைகளின் முதலாளியானவர்.  வீட்டில் குடும்பத்தாரோடு வளர்ப்புப் பிராணிகளை உட்கார வைத்து சேர்ந்து சாப்பிடும் வழக்கம் பார்த்திருக்கிறோம். கார்னகி விருந்தாளிகள் வரும்போது மட்டும் வீட்டு நாய்களை வரவழைத்து உடன் உட்கார்ந்து சாப்பிடுவாராம். ஏதோ செய்தியாம். 

உலகின் மாபெரும் எண்ணை பெட்ரோல் பெருச்சாளி ஹி முதலாளி யாரென்றால் ராகபெல்லர்.  படிக்க வசதியில்லாமல் குடும்பப் பசி காரணமாக மூன்று டாலர் தினக்கூலிக்கு வேலை செய்யத் தொடங்கி முன்னேறி மெத்தப்படித்து முதலாளியானவர். பின்னாளில் உலக நாடுகளின் பொருளாதாரத் தலையெழுத்தை தன் நிறுவனங்களின் தலையெழுத்தோடு இணைத்து எழுதுமளவு வளர்ந்தார். க்லியோபாட்ரா போல் பசும்பாலில் உடலூறிக் குளிக்கும் பழக்கம் உண்டாம். ஆரோக்கிய வெறியர். உடன் வேலை பார்ப்பவர்கள் இத்தனை எடைதான் இருக்கவேண்டும் என்று நிபந்தனை இடுவாராம். உலக எண்ணை முதலாளிகளில் செக்கிழுத்த நம் செம்மல் பற்றியும் விவரம் இருக்குது.  

கப்பல் ரயில் ஓட்டி முதலாளியானவர் வான்டர்பில்ட். நம்ம ஊர் கப்பலோட்டிய தமிழன் பத்தியும் சில விவரங்கள்.  கிழக்கிந்திய கம்பெனி அவரிடம் நிறைய அறிவுரை கேட்டார்களாம் எப்படி சென்னையிலும் கல்கத்தாவிலும் சரக்கு சுமந்த கப்பல் படகுகளைக் கொண்டு வரவேண்டுமென்று.  கடைசியில் சரக்கு என்னடாவென்றால் வெடிகுண்டு துப்பாக்கிகள்! இந்தியாவில் நன்கு ஊன்றியதும் கப்பலாவது கிப்பலாவது என்று எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு.. பாவம் கப்பலோட்டிய தமிழர். 

ஹென்ரி போர்ட், உலகின் முதல் கார் முதலை.  அதாவது முதலாளி. கார் வடிவம், தொழிற்சாலை எல்லாம் தயாரானதும் இவரிடம் எந்த கலரில் கார் தயாரிப்பது என்று கேட்டார்களாம்.  "எந்த கலரில் வேண்டுமானாலும் தயாரிக்கலாம், கறுப்பாக இருக்கும் வரையில்" என்றாராம்.  தான் சொன்னது எதுவும் சட்டமாகவில்லை என்றால் இவருக்குக் கோபம் வருமாம். கவர்னரையோ அமெரிக்க அதிபரையோ சர்வ சாதாரணமாக அழைத்து ரெண்டு அறை விடுவாராம். சொல்லறை.

போர்ட் ராகபெல்லர் கார்னகி ஸ்டேன்பர்ட் மற்றும் அனைத்துப் பெருஞ்செல்வந்தர்களும் அமெரிக்க ஐரோப்பிய ஆப்பிரிக்க அரசாங்கங்களின் குடுமிகளைக் கையில் வைத்திருந்தவர்கள். இவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள், பிற நாடுகளைக் கைப்பற்றியோ ஊடுருவியோ இவர்களின் வியாபாரத்துக்கு அடிகோலின.  நம்மூர் டாடா பிர்லாக்கள்,  மேற்கத்திய முதலாளிகளின் வழியைப் பின்பற்றி பிரிடிஷ் மற்றும் சுதந்திர இந்திய அரசுகளைத் தங்கள் வியாபார வளர்ச்சிக்குப் பயன்படுத்தினார்கள். முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் டாடா பிர்லாக்கள் எத்தனை கோடி சுரண்டினார்கள் என்பதைப் படிக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது (நேரு! யம்மாடி, இவரு இன்னா ஆளுனு தோணுதே।).  ஒரு முறை கலைஞர் கேட்டது நினைவுக்கு வருகிறது: "தொழிலதிபர்கள் என்றால் டாடா பிர்லா தானா? மாறனுக்கு என்ன குறை? மாற்றானுக்குக் கிடைத்த சலுகைகள் நம்  மாறனுக்குக் கிடைத்தால் அதன் பெயர் ஊழலா?" ம்ம்ம்.. அர்த்தமுள்ள கேள்வி தான் கலைஞரே.

அடுத்து, சமீப ஐம்பது ஆண்டுகளில் மிகப்பெருஞ்செல்வந்தரானவர்கள் பற்றித் திரும்புகிறது புத்தகம். 

பில் கேட்ஸ், கோர்டன் மூர், ஆன்ரூ க்ரோவ், ஸ்டீவ் ஜாப்ஸ், லேரி எலிசன், மார்க் ஸகர்பர்க், இலான் மஸ்க், முகேஷ் அம்பானி என்று பட்டியல் நீளுகிறது.  கணினி, இணையம் மற்றும் டிஜிடல் உலகில் இவர்கள் சம்பாதித்த வேகம் பிரமிக்க வைக்கிறது.  சென்ற ஐம்பது வருடங்களில் இவர்கள் சேர்த்த செல்வம் முந்தைய நானூறு வருடங்களில் கார்னகி வகையினர் சேர்த்ததற்கு இணையாம்!

அதே கணக்கில், முந்தைய தொழிலதிபர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் உதவும் வகையில் நிறுவிய அறக்கட்டளைகளின் கொடை, கணினிக்குப் பிந்தைய செல்வந்தர்களின் ஈகையைவிட பல மடங்கு அதிகம்.  அதைப்பற்றி புதிய தொழிலதிபர்கள் கவலைப்படவில்லை.  ஆளாளுக்கு தீவு வாங்குவதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

முந்தைய தலைமுறைத் தொழிலதிபர்கள் போலவே இவர்களும் அரசாங்கங்களைக் கைக்குள் போட்டுக் கொண்டிருப்பது அதீத ஒற்றுமை என்றாலும் வியப்பொன்றுமில்லை.  வெளியே பாச்சா காட்டினாலும் அமெரிக்கா இங்கிலாந்து  போன்ற நாடுகள், மெடா கூகில் டெஸ்லா அமெசான் நிறுவனங்களின் பிடிகளில் சிக்கியிருப்பது உண்மை. சைனா உடையுமென்றால் கூகில் மெடா நிறுவனங்கள் காரணமாகும் என்ற அச்சம் சீன அரசிடம் பரவலாக உண்டாம். இந்த வாய்ப்பை மேற்கத்திய  நாடுகளின் உளவு நிறுவனங்கள் வரவேற்று நிறைய டிஜிடல் ஊடுருவல்கள் செய்கின்றன.  உலகப்போர் என்று வந்தால் மெடா கூகில் டெஸ்லா தொழிலதிபர்கள் அதன் பின்னணியில் இருப்பார்கள் என்றும் பண்டிதர்கள் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு சமீபத்தில் பொலிவியா நாட்டின் மோராலிஸ் அரசாங்கத்தை தூக்கியெறிந்தது அமெரிக்க அரசாங்கமே என்று செய்தி வந்ததும் டெஸ்லா முதலாளி மஸ்க் இப்படி ட்வீட் செய்தார்: "நாங்கள் எந்த அரசாங்கத்தையும் தூக்கியெறிவோம். என்ன செய்வீர்கள்?".  ஒருவர்  கூட மஸ்கைத் தட்டிக் கேட்கவில்லை என்பது இன்னும் ஆச்சரியம். (பொலிவியாவில் புதிய அரசாங்கம் மஸ்க் நிறுவனத்துக்கு லிதியம் சுரண்ட பத்து ஆண்டுகளுக்கு முழு அனுமதி வழங்கியது இங்கே முக்கியம்).

மெடா மன்னர், அதாங்க ஸ்கர்பர்க், அவரு தன்னை அசல் மன்னர்னே நினைச்சுக்குறாரு. அவருடைய சிகையலங்காரம், ரோமானியப் பேரரசர் அகஸ்டஸ் சீசரைப் போலவே இருக்கும்.  பெண்ணுக்கு ஆகஸ்ட் என்று பெயர் வைத்துள்ளார். அலுவலக மீடிங்குகளை முடிக்கும் பொழுது அகஸ்டஸ் சீசர் போல் கைகளை உயர்த்தி "ஆதிக்கம்" (domination) என்று அறையதிரக் கூவுவாராம்.  பொழுது போகாத நேரத்தில் இலான் மஸ்குடன் பொதுவில் குத்துச் சண்டை போட அறைகூவுகிறார். தன் சொந்தத்தீவில் சீசருக்கு ஹி ஸகர்பர்குக்கு அரண்மனை கட்டியாகி வருகிறது. அதற்காக அண்டை நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கில் கூலியாட்களும் (சொந்தத் தீவு, கேட்பாரில்லை) நூற்றுக்கணக்கில் யானைகளும் குதிரைகளும் பறவைகளும் இறக்குமதி ஆகிறது. அமெரிக்க அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் மூக்கு இருக்கிறது, விரல் இருக்கிறது... 

நம்ம ஊர் அம்பானி குறைந்துவிடுவாரா என்ன?  அண்ணன் தம்பி அடிதடி செய்தி குறைந்து அவர்களின் அரசியல் தனிவாழ்வு ஆடம்பரங்கள் மீறல்கள் பற்றி நிறைய செய்திகள்(நாம யாரு குறை சொல்ல?).  அவருடைய வீட்டுச் செலவு மட்டும் ஒரு நாளைக்கு 67 லட்சமாம்.  அவர் குடிக்கும் டீக்கோப்பையின் விலை மூன்று லட்ச ரூபாயாம்! இந்தியாவின் முக்கிய தேசிய கட்சிகள் இரண்டும் (?) இவரைக் கேட்டு தான் பட்ஜெட் தயாரிக்கின்றனவாம். (நாம என்னவோ நிம்மியம்மானு நெனச்சுட்டு இருக்கோம்).

ஒன்று தெளிவாகிறது. அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி முதலாளிகள் அரசாங்க உதவியுடன் மிக வேகமாக வளர, சாதாரண மக்கள் மிக அதிக தியாகங்கள் புரிய வேண்டிய நிலை மாறவேயில்லை. முதலாளிகளின் செல்வமும் வசதியும் வாழ்முறையும் நெறியும்  நம் தினசரி வாழ்க்கை நெறிகளின் மிகப் பெரிய முரண். 

கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக என்ற கேள்விக்கு விடை கிடைத்தது போல் உணர்கிறேன்.

= = = = = = =

64 கருத்துகள்:

  1. புதன் கேள்வி: 1. பெரிய பணக்காரன் என்று ஒருவனைச் சொல்வதில் அர்த்தம் இருக்கிறதா? பணக்காரன் என்பதை எதைவைத்து அறுதியிடுவது? 2. மன நிம்மதி மெஇழ்ச்சியை எது கொடுக்கிறது? 3. எப்போது சந்தோஷமாக இருப்பதை ஒருவர் உணர்வார்?

    பதிலளிநீக்கு
  2. முதுகு வளைந்து உழைப்பது..... நாம் ஒவ்வொருவருமே, முதலாளியானால் நாம் அம்பானி அதானிகளைப் போலத்தான், ஏன் அவர்களைவிட மோசமாகத்தான் நடந்துகொள்வோம் என்பதை வாழ்க்கையில் கிடைத்த சந்தர்ப்பத்தில் நிரூபித்திருக்கிறோம் இல்லையா? (விதிவிலக்குகள் தவிர)

    பதிலளிநீக்கு
  3. கீதா சாம்பசிவம் மேடம் பிசியாக இருக்காங்க. இங்கு வருவதில்லை. அவர் சார்புல ஒரு கேள்விக்கு பதில்்சொல்லிடறேன்.(பதில் அவருடையதாக நினைத்துக்கொள்ளுங்கள்)

    மிகவும் பிடித்த பழைய பாடல் செந்தமிழ் தளன் மொழியாள். பிடித்த புதிய பாடல் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்ற கரணன் படப் பாடல் இவைகளைத்தான் பொதிகையில் போட்டான்.

    பதிலளிநீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. யப்பா யாராச்சும் கேள்விகள் கேட்டுருங்கப்பா.....இந்த ஆசிரியர்கள் கேட்கும் - கௌ அண்ணாதான் வேறு யாரு இப்படி எல்லாம் கேட்கப் போறாங்க!!!!!!! - கேள்விகள் தாங்கலைப்பா!!!!!!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பழசு புதுசுன்னு எந்த வருஷப் பாடல்களைச் சொல்றீங்க கௌ அண்ணா? சிலருக்குப் போன வருஷப் பாட்டே பழசுதான்!!!!!!! வருஷம் குறிப்பிட்டிருக்கலாம்.

    பழைய சினிமா பாடல்கள் நிறைய இருக்கின்றனவே! எதைச் சொல்ல எதை விட! கறுப்பு வெள்ளை, ஈஸ்ட்மென் கலர் படங்கள் பாடல்கள் நிறைய. இல்லைனா இசையமைப்பாளர்கள் காலம் சொல்லிக் கேட்டிருக்கலாம்.

    புதுசுல? ரோஜா படம் பழசா புதுசா? திருமணம் எனும் நிக்காஹ் பழசா புச்சா? என்னை நோக்கிப் பாயும் தோட்டா - Old or new?!!!
    ஒரு சில உண்டு....கண்ணுக்குள் பொத்தி வைப்பேன், மறுவார்த்தை பேசாதே....பிடித்தது - அது சரி அந்தப் படம் வெளிய வந்துச்சா?! இன்னும் இருக்கு டக்கென்று வார்த்தைகள் கிடைக்கவில்லை,

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழசு / புதுசு என்று எது உங்களுக்குத் தோன்றுகிறதோ அதை அப்படியே குறிப்பிடலாம்.

      நீக்கு
  7. 2 - இது உளவியல் சார்ந்த ஒன்று.

    3. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. கிடைச்சா ஓகே...இல்லையா இல்லை....அதுவும் ஓகேதான். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை.

    4. நெருங்கிய சொந்தம், தூரத்து சொந்தம் என்பதே நாம் வரையறுப்பதுதான் அதாவது நம் மனதுக்குகந்த எனும் போது அது தூரத்துச் சொந்தம் என்று வெளியில் சொல்லப்பட்டாலும் நமக்கு நெருங்கிய சொந்தமாகிவிடும் இல்லையா? நெருங்கிய சொந்தம் என்று வெளியில் வரையறுக்கப்படுபவை தூரத்துச் சொந்தமாவதும் உண்டு இல்லையா!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா கௌ அண்ணா குட்டையைக் குழப்பினா தெளியும்னு வேற சொல்லுவாங்களே!!!!!!

      கீதா

      நீக்கு
    2. அதாவது நெருங்கிய சொந்தம் என்பது தூரத்திலும், தூரத்துச் சொந்தம் என்பது நெருக்கமாகவும் இருப்பாங்கன்னு!!!

      கீதா

      நீக்கு
  8. பதிவு மிகச் சிறப்பாக இருக்கின்றது..

    கேள்விகள் அருமை..

    பதிலளிநீக்கு
  9. பழைய பாட்டுல மிகவும் பிடித்தது நாணமோ இன்னும் நாணமோ.
    புது பாட்டுல கொய்யாயோ உய் கோயாயோனு சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுப் பாட்டு: நெசமாவே அப்படி ஒரு பாட்டு இருக்கா!

      நீக்கு
    2. யாருக்கு தெரியும்? எல்லா புது பாட்டும் உய்யா கொய்யானு தான் இருக்கு.. நிச்சயமா நான் சொன்ன புது பாட்டு இருக்கும். :-)

      நீக்கு
  10. காரணமே இல்லாமல் விருப்பும் வெறுப்பும் வர ஆத்மா லெவல்ல விளக்கம் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லுங்க. விளக்கமாக சொன்னாலும் படிக்க ஆவலாக உள்ளேன்.

      நீக்கு
    2. ஒரு புதனுக்கு ஐடியா குடுத்தீங்க. பாவம் பானுமதி.. படிச்சே ஆவணும் :-)

      நீக்கு
  11. இதற்குத் தான் காத்திருந்தேன்... இன்னும் காத்திருக்கிறேன். :-)

    பதிலளிநீக்கு
  12. அன்னதானம் செய்து ஏழை ஆனவர்கள் பற்றிய கதைகளை படித்த நமக்கு ஏகாந்தன் சார் எழுதியிருக்கும் ஆடம்பர கதைகள் ஆச்சர்யமூட்டுகின்றன. கின்னஸில் இடம் பெற்ற வளர்ப்பு மகன் திருமணமெல்லாம் ஜுஜுபி போலிருக்கிறதே??
    ஸமீபத்தில் நாம் யாரோடு பழகுகிறோமோ அவர்களின் அதிர்ஷ்டம் நமக்கும் வரும் என்று ஒரு நம்ப முடியாத, நம்ப விரும்பாத செய்தி ஒன்று படித்தேன். இன்று ஏகாந்தன் சாரின் கட்டுரையை படித்ததும் இப்படிப்பட்ட முதலைகளோடு நட்பாவது எப்படி என்று யாராவது சொன்னால் தேவலை என்று தோன்றுகிறது.
    அது சரி நேற்று ஐ.பி.எல். ஏலம் பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .. இன்று ஏகாந்தன் சாரின் கட்டுரையை படித்ததும் ..//

      இன்று கட்டுரை எழுதிய ஏகாந்தன் சார் யாரு! ஏன் இப்படி ஆடம்பரக் கதைகளா எழுதறாரு இவரு...

      நீக்கு
    2. நானும் அதைத்தான் கேட்க நினைத்தேன்!

      நீக்கு
    3. ஓ..! ஏகாந்தன் நாளைக்குத்தான் வருவார் இல்லையா? அப்பாதுரையை ஏகாந்தன் என்று நினைத்து விட்டேன். அப்பாதுரை மன்னிப்பாராக.

      நீக்கு
  13. பிடித்த தூரத்து சொந்தம் மகாத்மா காந்தி. (சும்மா சொல்லி வைப்போமே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிடித்த தூரத்து சொந்தம் மகாத்மா காந்தி//ஹாஹாஹா!.. என் மகன் கல்லூரியில் சேர்ந்த பொழுது விவேகானந்தா கல்லூரியிலும் விண்ணப்பித்தான். விண்ணப்ப படிவத்தில் இந்தக் கல்லூரியில் படித்த உங்கள் உறவினர் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் பெயரை குறிப்பிடுங்கள் என்று கேட்டிருந்தார்கள். என் மகன், "சோ என்று குறிப்பிடட்டுமா?" என்றான்.

      நீக்கு
  14. 1. பழைய சினிமா பாடல்கள் என்றால் "சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, சுப்ரமண்ய சுவாமி உனை மறந்தார் அன்றோ..", காற்றினிலே வரும் கீதம்.." தொடங்கி நிறைய உண்டு. எம்.ஜி.ஆர். பட டூயட் பாடல்கள் பிடிக்கும்.
    "உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போரடலாம்.."கவனியுங்கள் வெல்லலாம் இல்லை, போரடலாம் ஒரு மோட்டிவேஷனல் சாங்க். அதனால் பிடிக்கும்.
    புதிய பாடல் என்றால் காற்று வெளியிடை(படம் வந்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டது) படத்தில் 'அழகியே மேரி மீ, மேரி மீ அழகியே..' பாடல் பிடிக்கும்.இந்தப் பாடலை ஒரு முறை வெள்ளி வீடியோவிற்காக கேட்ட பொழுது தான் அந்தப்பாடலை கேட்டதில்லை என்று கூறி மறுத்து விட்டார் ஸ்ரீராம்(கர்ர்ர்).
    நெற்றிக்கண்(நயந்தாரா) படத்தில் வரும் "இதுவும் கடந்து போகும்.. சுடரி, சுடரி...இருளில் ஏங்காதே பாடலும் பிடிக்கும்.
    'மமல பித்தா பிதாரே..' கூட பிடிக்கும்.(இதெல்லாம் பாட்டா? தகர டப்பா என்று வயதானவர்கள் புலம்பட்டும்)
    சைந்தவி பாடியிருக்கும் பாடல்கள் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  15. நாங்க கேக்காட்டியும் நீங்க விட்றாப்புல இல்ல.. சரி, பிடிங்க :

    1) //..மிகவும் பிடித்த பழைய சினிமா பாடல் எது? //
    a) என்னாலும் வாழ்விலே.. கண்ணான காதலே…
    என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே..

    b) விழியிலே மலர்ந்தது.. உயிரிலே கலந்தது…
    பெண்ணென்னும் பொன்னழகு..
    அடடா.. எங்கெங்கும் உன் அழகு…

    //புதிய சினிமா பாடல் எது//
    புதிய சினிமாவில் பாடலா! இருக்கா?

    2) … ஏன் அப்படிச் செய்கிறார்கள்? //
    அவர்கள் என்னத்தச் செய்கிறார்கள். அப்படித்தான் நிகழ்கிறது அவர்களுக்குள்..

    3) .. 'ஆஹா - இதற்குத்தான் இவ்வளவு நாளும் காத்திருந்தேன்'… //
    உலகக்கோப்பையை ரோஹித் வென்றிருந்தால் இப்படிச் சொல்லியிருப்பேன். அதான் கைநழுவிப்போச்சே…

    4) … உங்களுக்குப் பிடித்த தூரத்து உறவினர் யார்?//
    எனக்குப் பிடித்த தூரத்து உறவு.. நான்தான் !

    பதிலளிநீக்கு
  16. .ஏட்டுச் சுரைக்காய் ரசனை.

    அப்பாத்துரை பக்கம் நன்று பலதையும் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
  17. பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என்று பிடித்த பாடல் நிறைய இருக்கிறது.

    பிடித்த பாடல் லிஸ்ட் நிறைய இருக்கிறது.நான் பிறக்கும் முன் இருந்து இருக்கிறது .
    எல்லா மொழியிலும் இனிமையான பாடல்களை கேட்பேன்.
    இசை மனதுக்கு இதம் தரும்.

    துன்பம், இன்பம், தூங்க எல்லாவற்றுக்கும் இசை வேண்டும்.
    டிசம்பர் இசை விழா கச்சேரி கேட்டீர்களா?
    டிசம்பருக்கு ஏற்ற கேள்வியாக இருக்கிறது.

    எல்லோருக்கும் பிடித்தவர்களாக யாராலும் இருக்க முடியாது.

    சில பாடல்கள் தேடி முன்பு கிடைக்கவில்லை இப்போது கிடைத்து இருக்கிறது.

    உள் அன்புடன் பேசும் தூரத்து, கிட்டத்து உறவுகள் எல்லாம் இருக்கிறார்கள். முடிந்தவரை உறவுகளை தக்க வைத்துக் கொள்வோம்.

    இன்று புதன் பதிவில் இடம்பெற்றவை அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  18. கல்லூரிக் கல்வி பாடத்தில் படிக்கும் பாடங்களுக்கும், நடைமுறை வேலைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். சில சமயங்களில் அது முற்றிலும் வேறாகக் கூட இருக்கும். //

    உண்மைதான் கௌ அண்ணா இப்போதுவரை நம் கல்வித்திட்டம் பெரும்பான்மை அப்படித்தான் இருக்கின்றன. பாடதிட்டத்தில் உள்ளதை படிச்சிட்டு நாம நிறைய நடைமுறையில் பயிற்சி பெற்று வேலைக்குப் போவது நல்லது இன்னும் நம்மூரில் practical applicability and updating இல்லை. கணவர் அடிக்கடி சொல்வது.

    பாடத்திட்டமும் அப்படி, பசங்களும் அப்படித்தான் இருக்காங்க. இஞ்சினியரிங்க் படிக்கறவங்கள்ல யாரு நடைமுறையில் நிறைய தெரிஞ்சுக்கறாங்களோ அவங்க வேலையில் மிளிர்கிறார்கள் இல்லாதவங்க வேலை கிடைக்கலைன்னு புலம்பறாங்க! இதுதான் இப்போது. பாடத்திட்டங்கள் அவ்வப்போது வளரும் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்ற வேண்டும்.

    நம் பாடத்திட்டங்கள் மேம்படவும் இல்லை என்பது மிகப் பெரிய குறை.

    //ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுதானே!//

    டிட்டோ.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ஒன்று தெளிவாகிறது. அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி முதலாளிகள் அரசாங்க உதவியுடன் மிக வேகமாக வளர, சாதாரண மக்கள் மிக அதிக தியாகங்கள் புரிய வேண்டிய நிலை மாறவேயில்லை. முதலாளிகளின் செல்வமும் வசதியும் வாழ்முறையும் நெறியும் நம் தினசரி வாழ்க்கை நெறிகளின் மிகப் பெரிய முரண். //

    இதுதான் காலம் காலமாக. உலகமே இவர்களின் கைகளில்தான் இருந்து வருகிறது என்பதுதான் நாம் காணும் உண்மை.

    கில்லர்ஜியின் பதிவு கூட கிட்டத்தட்ட இந்தக் கருத்தைச் சொல்லும் விதத்தில் அவரது பாணியில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. இத்தனை பணக்காரர்கள் பத்தி சொல்லியிருப்பவர் என்னடா நம்ம அம்பானிய பத்தி சொல்லலையேன்னு நினைச்சேன் அதானே பார்த்தேன் அவரு இல்லாமையா..

    அம்பானியின் வாழ்க்கை முறை நிறைய வருது செய்திகளில். ஹெலிகாப்டர் இறங்குவதற்குத் தளம், விருந்தினர் வருகைக்கு ஒரு தளம் இப்படி 13 மாடியாமே அவர் வீடு!!!! எதிர்காலத்தில் பல ஆண்டுகள் கழித்து, அம்பானி பேலஸ்னு சுற்றுலாத் தலமாகுமோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. அப்பாதுரை ஜி - ஆராய்ச்சினா இப்பல்லாம் அங்கங்கருந்து பிட் எடுத்து விடுறதுதான் ஆராய்ச்சி! சொந்தமா ஒவ்வொரு இடமும் போய் ஒவ்வொருத்தர் பத்தியும் ஆய்ந்து டேப் ரெக்கார்ட் பண்ணி செய்யறது இல்லை உக்காந்த இடத்துலருந்தே கைக்குள்ளயே இருந்து செய்யறதுதான்!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. யாரையாவது காரணமே இல்லாமல் வெறுப்பவர்கள், ஏன் அப்படிச் செய்கிறார்கள்?// காரணம் இல்லாமல் காரியம் இல்லை. உளவியல் காரணமாக இருக்கலாம், அல்லது ஜென்மாந்திர வாசனையோ என்னவோ..?
    பிடித்த தூரத்து உறவினர் என் பெரிய நாத்தனாரின் மாமியார். அவருக்கும் என்னைப் பிடிக்கும் :))
    ஒரு விஷயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், நல்லபடியாக முடியட்டும்.. சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. //நேற்று ஐ.பி.எல். ஏலம் பார்த்தீர்களா?// இந்தக் கேள்வியை அடுத்த புதனுக்கு எடுத்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!