செவ்வாய், 26 டிசம்பர், 2023

சிறுகதை : பூ வரைந்த பூ - துரை செல்வராஜூ

 பூ வரைந்த பூ

துரை செல்வராஜூ

*** *** *** *** ***
குடையாய் விரிந்திருந்த பொன்னரளிக்குக் கீழாக ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு - வீட்டு வாசலின் ஆனா மானாவை அழுத்தினார் சுந்தரம்.. 

அது ' தெய்வமே!.. ' என்றிருந்தது..

எங்கேயோ மின்சாரம் பிடுங்கிக் கொண்டது போலிருக்கின்றது..

' ஏதோ கருத்தரங்கம் ன்னு.. செந்தில் காலையிலயே திருச்சிக்கு புறப்பட்டு போய் விட்டான்.. ஞாயிற்றுக்கிழமை கூட வீடு தங்கற மாதிரியில்லை.. தனியார் வேலைன்னா இப்படித் தான்.. '

யோசித்துக் கொண்டே கதவைத் தட்டவும் காமாட்சியம்மாள் வந்து திறக்கவும் சரியாக இருந்தது..

உச்சந்தலை வழுக்கையில் வியர்வையுடன்  நின்றிருந்த கணவனைக் கண்டதும் ஒரு புறம் சிரிப்பு.. மறு புறம் பரிதவிப்பு..

" வெயில் ல போக வேண்டாம் ன்னு சொன்னா கேட்கணும்.. "

" காலைல காய்கறி வாங்கப் போறது நல்லது தானே... "

" நல்லது தான்..  ஆனா நடந்து போகணும் ராஜா.. நடந்து!.. "

" அதுக்குன்னு என்ன.. ஒன்ரை மைலா?.. "

" என்ன ஒன்ரை மைலா?..  குருஜி  சொன்னது ஞாபகம் இருக்கா?.. " 

"என்ன ஞாபகம் இருக்கா?.. "

" நெதமும் மூனு கிலோ மீட்டர் காலார நடக்கணும் ன்னு.. சொன்னாரா இல்லையா... "

" சொன்னார் தான்... யாரு இல்லை ன்னது!.. "

" அப்போ எதுக்கு சுக்கூட்டி?.. "

அவருக்குத் தெரியுமா..  இந்த மூனு பையையும்  தூக்கிக்கிட்டு ஒன்ரை கிலோ மீட்டர் நடக்குறது எவ்வளவு கஷ்டம் ன்னு?.. "

" இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. "

கணவரின் கையில் இருந்த பைகளை வாங்கிக் கொண்ட காமாட்சியம்மாளிடமிருந்து கேள்வி..

" சொல்லி விட்டதெல்லாம் வாங்கியாச்சா.. சேப்பங் கிழங்கு வாங்குனீங்களா?.. "

" சேப்பங்கிழங்கு மார்க்கெட் லயே இல்லை.. "

" விட்டல் கடை மட்டுந்தான் உங்களுக்கு மார்க்கெட்.. "

" எலுமிச்சம் பழம்?.. "

" வாங்கியிருக்கேன்.. "

" நல்லவேளை.. சாயங்காலம் துர்க்கைக்கு வேணும்.. "

பைகளைத் திறந்து பார்த்த காமாட்சியம்மாளுக்கு அதிர்ச்சி..

" புதினா கொத்தமல்லியக் காணோமே.. மறந்துட்டீங்களா!?.. "

" அது மஞ்சப் பையில தக்காளிக்கு கீழே கிடக்கு ... சொல்லச் சொல்ல  கேக்கலை விட்டல் போட்டுட்டான்..  அக்கா ஒன்னும் கோவிச்சுக்க மாட்டாங்க.. இன்னிக்கு பிரியாணி தானே.. ன்னு சிரிக்கிறான்.. "

" உங்களோட கூட்டு தானே..  அப்படித்தான் இருக்கும்.. இருபது ரூபா புதினா கொத்த மல்லிய ஒரே நாள்ல தீர்த்துக் கட்றதுக்கு நாம என்ன கல்யாண பிரியாணியா செய்யப் போறோம்!..  அதை எல்லாம் விட்டுட்டது விட்டலுக்குத் தெரியாதா?.. "

" ஏன் தெரியாம.. விட்டலுக்குத் தெரியாததும் உண்டா!... '

- என்றவர் பின்கட்டை நோக்கி நடந்தார்.. 

" எங்க போறீங்க?.. "

விரலைக் காட்டினார்..

" தோட்டத்துல உள்ளதுக்குப் போங்க... "

" ஏன்.. இங்கே என்ன ஆச்சு?.. "

"  திருப்புளியும் கையுமா வித்யா உள்ள போயிருக்கு.. "

" எதுக்கு?.. "

" அந்தத் துணி போடற கம்பிக் குழாய் ஸ்குரு கழண்டு போய்க் கிடக்குல்ல... அதை சரியா முறுக்கறதுக்குத் தான்!.. "

" இதையெல்லாம் ஏன் அந்தப் பொண்ணு செய்யுது?.. "

" நான் சொல்றத எல்லாம்  நீங்க கேக்கறீங்களா?.. "

" இல்லையே!.. " - சுந்தரத்திட்ம் சிரிப்பு..

" அப்புறம் என்ன?.. " 

" ஏன் அத்தை.. நானும் உங்க பேச்சைக் கேட்கறது இல்லையா!?.. " 

செல்லக் கோபத்துடன் குளியல் அறையிலிருந்து வெளியில் வந்தாள் வித்யா..

கையில் திருப்புளி..

" இல்லேம்மா.. சும்மா பேசிக்கிட்டோம்.. நீ இந்த வீட்டு மருமகளா வந்து மூனு மாசம் தான ஆவது.. நானும் அவரும்  இப்படித் தான்.. எல்லா சோசியரும் சொல்வாங்க.. ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம் ன்னு.. செந்திலும் சரண்யாவும் எப்படித் தான் பொறந்தாங்களோ தெரியலை!.. "

" அது பாட்டுக்கு அது.. இது பாட்டுக்கு இது!.. " - 

வித்யா வாய் விட்டு சிரித்தாள்...

காமாட்சியம்மாளிடம் வெட்கம்  -  " மருமக பொண்ணு  இருக்கறப்போ பேசற பேச்சா இது!?.. "

" இதெல்லாம் ஒரு சந்தோஷம் காமாட்சி.. சந்தோஷம்.. "

" நல்லா வந்திச்சு சந்தோஷம்!.. "

" அதுசரி.. உனக்கேம்மா இந்த வேலை எல்லாம்?.. பிளம்பரை வரச் சொன்னா போச்சு.. " சுந்தரத்தின் கேள்வி..

" அப்படியே வரச் சொல்லிட்டாலும்... " காமாட்சியம்மாளுக்கு முனுக் என்று வந்தது..

" இந்த வேலைக்கெல்லாம் பிளம்பரா?.. ஐநூறு கொடு.. ஆயிரங் கொடு ன்னு நிப்பாங்க.. இருந்த மூனு ஸ்க்ரூவுல ரெண்டு சின்னது.. ரெண்டையும் கழட்டிப் போட்டுட்டு வேற மாத்துனேன்.. இப்போ போய்ப் பாருங்க... "

" இந்த ஸ்குரூ ஆணி சுத்தியல் வேலை எல்லாம் உனக்கு எதுக்கும்மா.. ஒரு சமயம் போல இருக்காது..  இது தெரிஞ்சா சாயங்காலம்  வந்ததும் அவன் தாண்டிக் குதிப்பான்.."

மாமனாரின் அன்பு கண்ட வித்யா மனம் குளிர்ந்து சிரித்தாள்..

" இதெல்லாம் சாதாரணம் மாமா... அப்பாவோட வண்டிய நானே கழட்டி மைனர் ரிப்பேர் பார்த்து அசெம்பிள் பண்ணிடுவேன்!.. "

சுந்தரம் வியப்புடன் பார்த்தார்..

" வீட்ல  டூல்ஸ் வாங்கி வெச்சிருக்கோம்.. அப்பா வண்டிக்கு டயர் டியூப் நானே மாத்திடுவேன்..  பிரஷர் ஹோஸ் வச்சு வாட்டர் வாஷ் பண்ணி ஆயில் சேஞ்ச் பண்ணிடுவேன்.. "

காமாட்சியம்மாளுக்கு மூக்கின் மேல் ஆச்சர்யம்..

" நீ அக்கௌண்டன்ஸி தானே படிச்சே.. "

" ஆமாம்!.. "

" இதெல்லாம் செய்வேன்னு சொல்றியே.. எப்படி?.. "

" என் பிரெண்டோட அப்பா டூ வீலர் வொர்க்‌ ஷாப் வெச்சிருக்கார்..  அங்கே போறப்ப எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிட்டேன்.. "

" இந்த விஷயத்தை அப்போ சொல்லலையே!.. "

சுந்தரத்திடம் வியப்பு..

" சொல்ல வேணாம்.. ன்னுட்டாங்க.. "

" ஏன்?.."

" பசங்கள மாதிரி பொண்ண வளர்த்து வெச்சிருக்காங்க.. ஆம்பிளத் தனமா இருக்கும் ன்னு ரிஜக்ட் பண்ணிடுவீங்களோ.. ன்னு பயந்தாங்க.. "

" நல்ல பொண்ணுமா!.. "

" அக்கா வெகுளியா இருந்தா.. பசங்க இல்லாத வீடு ன்னு  நான் தைரியமா தான் வளந்தேன்.. எங்களை எப்படி கரையேத்தறது ன்னு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்பவே கவலை.. ஆனா நல்ல விதமாவே கரையேறிட்டோம்.. "

" பூ வரையும் பூங்கொடியே... " கைத்தல பேசியில் கவிதை..
கைத்தல பேசியைக் கவனித்த வித்யா ஸ்பீக்கரைப் போட்டு விட்டாள்..

" பூங்கொடி பூவையா வரையுது.. அது புல்லட்டையே பிரிச்சு மாட்டுது!.. "

சுந்தரம் நினைத்துக் கொண்டு சிரித்தார்..

" செல்லம் சாப்டாச்சா?.. "

செந்தில் தான்...

" நீங்க?... "

" சாப்டாச்சு.. இருந்தாலும் ஏண்டா வந்தோம் ன்னு இருக்கு.."

" ஏன்?... "

" மீட்டிங் பதினோரு மணிக்கெல்லாம் முடிஞ்சுடுச்சி..  லஞ்சுக்கு அப்பறம் அவனவனும் ஜோடியோட மலைக்கோட்டை முக்கொம்பு ந்னு கிளம்பிட்டானுங்க.. நாந்தான் பாவம்!.. "

" அடடா!.. " - வித்யாவுக்கு ரொம்பவும் பரிதாபம்..

" ஆமா!.. " - அங்கே செந்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டான்..

" சரி.. நீங்க ஒன்னு பண்ணுங்க.. "

" என்னது?.. "

"  வண்டிய திருப்பிக்கிட்டு தஞ்சாவூர்க்கே வந்துடுங்க!.. "

" வந்து?.. "

" நாம அடுத்த வாரம் கல்லணைக்குப் போவோம்.. "

" அப்பா அம்மா?.. '

"  நாம ரெண்டு பேர்.. ரெண்டு பேர் மட்டும்!.. "

" ஹையா!.. "

சட்டென இணைப்பை துண்டித்த வித்யா பேச முற்படுவதற்குள் -

" சட்டு புட்டுன்னு புறப்படுங்க.. நாங்களும் தனியாப் பேசி ரொம்ப நாளாச்சு!.. " -  என்றார் சுந்தரம்.. காமாட்சியம்மாளிடம் வெட்கம்..

வித்யாவின் சிரிப்பலைகளால் வீடு நிறைந்தது..

***

26 கருத்துகள்:

  1. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    வணக்கம்..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    கண் கவரும் படத்துடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. அடுத்து வரப்போகும் பின்னூட்டத்துக்கு எங்கள் பதில்..

    நாங்களும் நன்றி!

    :))

    பதிலளிநீக்கு
  6. கதை நன்றாக் இருக்கு துரை அண்ணா! உரையாடல்கள் இயல்பு.

    சிறிசுகளும், வயதான சிறிசுகளும் சந்தோஷமா இருக்கட்டும்!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// சிறிசுகளும், சின்னஞ் சிறிசுகளும் சந்தோஷமா இருக்கட்டும்///

      தங்கள் அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
  7. கதையில் வர பெண் போல கிட்டத்தட்ட நம்ம வீட்டுல நானும் ஒரு காலத்துல இருந்தேன். இப்ப அதுக்கான வாய்ப்பு இல்லாம போச்சு ஆனா என் எல்லைக்குள்ள இருப்பதுக்கு தன் கையே தனக்குதவி!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ ...

      இது வேறயா..

      கண்ணெதிரில் கதைக்கு காட்சி..
      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  8. ஓ...

    இது வேறயா!..
    கண்ணெதிரில் கதைக்கு சாட்சி..

    மகிழ்ச்சி..
    நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  9. இயல்பான நடையில் கதை.. நன்கு மலரும் நடுத்தரக் குடும்பத்தைக் கண் முன் கொண்டுவந்துவிட்டீர்கள்.

    உரையாடல்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நடுத்தரக் குடும்பத்தைக் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.///

      நெல்லை அவர்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  10. கணவனின் அழைப்பு வரும்போது, ஸ்பீக்கரில் போட்டுப் பேசுவது மாத்திரம்தான் நெருடுகிறது. ரொம்ப வெளிப்படையாகப் பேசும் குடும்பமாயிருக்கும். அதுவும் ஒரு நல்ல குடும்பத்துக்கு அடையாளம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணவனின் அழைப்பு வரும்போது, ஸ்பீக்கரில் போட்டு விட்டு அப்புறம் தான் சுதாரித்துக் கொள்கிறாளே...

      இதுவும் ஒருவகை சந்தோஷம் தான்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. // சட்டென இணைப்பை துண்டித்த வித்யா.. //

      சட்டென இணைப்பை துண்டித்திரா விட்டால் அந்தக் குறும்புக் காரனின் சேட்டைகள் வெளிப்பட்டிருக்கும்..

      நமக்கு அதெல்லாம் தேவையா ?..

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. கதை தலைப்பும் கதையும் நன்றாக இருக்கிறது.
    இயல்பான உரையாடல் மூலம் கதையை சொன்னது அருமை.
    மகிழ்ச்சியான அன்பான குடும்பம்.

    //அந்தத் துணி போடற கம்பிக் குழாய் ஸ்குரு கழண்டு போய்க் கிடக்குல்ல... அதை சரியா முறுக்கறதுக்குத் தான்!.. //

    இதை செய்யலாம் தான்.


    இல்லத்து அரசிகள் திருப்புளி வைத்து சின்ன சின்ன வேலைகள் செய்ய வேண்டி இருக்கும் சமையல் அறையில். குக்கர் கைபிடி வால் கிண்ணம் கைபிடி எல்லாம் அடிக்கடி டைட் செய்யவேண்டும்.


    கதைக்கு பொருத்தமாக படம் சார் வைரைந்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லத்தரசிகள் திருப்புளி வைத்து சின்ன சின்ன வேலைகள் செய்வதற்கு கற்றுக் கொண்டால் எவ்வளவோ மிச்சம்.. தேவையற்ற பிரச்சனைகளும் இருக்காது..

      தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. வருகையளித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!