புதன், 6 டிசம்பர், 2023

மெழுகு பொம்மைகள்

 

சென்ற வாரம் யாரும் எங்களை கேள்விகள் கேட்கவில்லை. 

எனவே நாங்கள் சில கேள்விகள் கேட்கிறோம். 

பதில் பதியுங்கள் 

1) உங்கள் வீட்டில் இன்னமும் மின்சார இஸ்திரிப் பெட்டி உள்ளதா? பயன்படுத்துகிறீர்களா? 

2) தபால் அலுவலக பொருட்களை / சேவைகளை இப்பொழுதும் பயன்படுத்திக் கொள்கிறீர்களா? 

3) நீங்கள் மிகவும் விரும்பி வாங்கி, பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்கள் எவை? 

= = = = = = = =

KGG பக்கம்: 

JTS படித்த காலத்தில் என்னுடைய படைப்பாற்றல் திறன் மேம்படுத்தப்பட்டது என்று சென்ற வாரம் எழுதியிருந்தேன். 

எப்படி என்று இந்த வாரம் பார்ப்போம். 

அங்கு தொழிற்கல்வி சொல்லித் தரப்பட்டது. Carpentry, Moulding/Foundry, Smithy, Fitting, Welding - இவை  முதல் ஆண்டில். 

அடுத்த இரண்டு ஆண்டுகளில் Machineshop & one elective practical. 

முதல் ஆண்டில் முப்பது பேர் படித்தோம். அடுத்த ஆண்டில் 5 பேர் fail ஆனதால், 25 பேர் படித்தோம். அதற்கும் அடுத்த இறுதி ஆண்டில் 18 பேர் படித்தோம். 

மாணவர்கள் குறைவாக இருந்ததால் - வெவ்வேறு elective என்று இல்லாமல், எல்லோருக்கும் ஒரே elective கொடுக்க வகுப்பு ஆசிரியர் பரிந்துரைத்தார். அதிக risk இல்லாத Moulding & Foundryயை எங்களுக்காக அவர் பரிந்துரை செய்தார். 

அதுவரை படம் வரைவதில் இருந்த என் ஆர்வம், moulding & foundry பக்கம் திரும்பியது. 

உடனே ஒரு பிரமாதமான யோசனை உதித்தது. 

விநாயகர் சதுர்த்திக்கு பூஜை செய்த களிமண் பிம்பத்தை மறுநாள் நீரூற்றி பக்குவமாக சப்பாத்தி மாவு பதத்திற்குக் கொண்டு வந்தேன். வீட்டில் அப்பா பூஜை செய்யும் உலோக விக்கிரகங்களில்  இருந்து அச்சு தயார் செய்து, அதில் மெழுகை காய்ச்சி ஊற்றி, மெழுகு சிலை செய்தேன். அழகான விநாயகர் மெழுகு பொம்மைகள் பல செய்தேன். சூப்பர் சக்ஸஸ் ! 



ஐந்து பைசாவுக்கு வாங்கிய மெழுகுவர்த்தியை உருக்கி, மூன்று பிள்ளையார் பொம்மைகள் உருவாக்கினேன். ஒவ்வொன்றையும் பத்து பைசாவுக்கு விற்று, ஐந்து பைசாவை முப்பது பைசா ஆக்கினேன்! 

நான் தயாரித்த மெழுகு சிலைகளைப் பார்த்த என் வகுப்பு நண்பன் தண்டபாணி, அதனால் உந்தப்பட்டு, என்னிடம் டெக்னாலஜி தெரிந்துகொண்டு, அவனுடைய வீட்டில், சீதாப்பழம், மாவடு எல்லாம் அச்சாகப் பயன்படுத்தி, மெழுகு பொம்மைகள் உருவாக்கினான். 

வீட்டில் இருந்த night lamp transformer லிருந்து இணைப்பு கொடுத்து, ஒரு லாட காந்தம், அதன் மீது சுற்றப்பட்ட காப்பிட்ட கம்பிச் சுருள் மூலம், எளிய மின்சாரமணி தயார் செய்தேன். 

அண்ணன் எனக்குக் கொடுத்த விளையாட்டு எலெக்ட்ரிக் மோட்டார் ( கார் அல்ல மின்சார மோட்டார்) கொண்டு, விளையாட்டு வண்டியின் மரச்சக்கரத்தை அதில் பொருத்தி, வண்டிச்சக்கரத்தின் சுற்றிலும் உப்புத்தாள் ஒட்டி, grinding machine model உருவாக்கினேன். 

அண்ணன் சொல்லிக்கொடுத்த, + கொடுத்த germanium டயோடு, transistor (triode ) tuning condenser எல்லாம் உபயோகித்து, சிறிய ரேடியோ உருவாக்கினேன். (ஆனால் இது நாகையில் வேலை செய்யவில்லை; சென்னை வந்து சேரந்தபின் இதே ரேடியோவை மீண்டும் செய்து - ஒரு ரூம் முழுவதும் கேட்கும் அளவுக்கு ஒரு ரேடியோ செய்தேன்) 

எதற்கு எல்லாவற்றையும் இங்கே சொல்கிறேன் என்றால், தொழிற்கல்வி படிப்பு & Engineering படிப்பு எந்த அளவுக்கு என் படைப்பாற்றல் திறனுக்கு தீனி போட்டது என்பதை பதிவு செய்வதற்குத்தான். 
= = = = = = = = = = =

அப்பாதுரை பக்கம் : 

அப்பப்பா!

ஜான் மஸ்டின்.

1969. ஜூன் 28. கொனிடா  நகர ஒலிம்பியா தியேடரில் ஞாயிறு மேட்னி காட்சியில் தன் அபிமான நாயகன் ஸ்டீவ் மக்வீனின் தாமஸ் க்ரௌன் படம் இரண்டாவது முறையாக உள்ளார்ந்து அனுபவித்துப் பார்க்கையில் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தான் ஜான் மஸ்டின். தானும் அதே போல் ஒரு கொள்ளை அடித்து சாதுர்யமாகத் தப்பிவிட வேண்டுமென்று. முப்பதாம் தேதி திங்கட்கிழமையன்று வழக்கம் போல் தன் வங்கி வேலைக்குச் சென்ற ஜான், வேலை முடியும் நேரம்,  ஜூலை முதல் வாரச் சம்பளக் காசோலை மாற்ற வரும் வாடிக்கைக்காக வைத்திருந்த பணத்திலிருந்து ஒரு லட்சம் டாலரை இதற்காகவே கொண்டு வந்திருந்த உள்சட்டை போன்ற பையில்  சுருட்டிக் கொண்டான்.  மேல் சட்டையை அணிந்து ஓசைப்படாமல் வங்கியை விட்டு வெளியே வந்தான்.  காணாமல் போனான். 

ஹென்ரி லாரன்ஸ்.

1969. ஜூலை 2. அன்று  காலை வேலைக்குச் சேர்ந்திருந்தான் ஹென்ரி. போலீஸ் அகாடெமியில் அதிக மதிப்பெண் பெற்றதால் சமீபத்தில் நாடளாவ வளரத் தொடங்கியிருந்த FBI நிறுவனத்தின் கொனிடா நகரக் கிளைக்கு முதல் சிஐடியாக வந்திருந்த இருபத்து மூன்று வயது ஹென்றியை அழைத்தார் உயரதிகாரி சார்ல்ஸ். உள்ளூர் கோவாபரெடிவ் வங்கியில் ஒரு லட்சம் டாலர் கொள்ளை போன விவரத்தைச் சொல்லி "ஜான் மஸ்டினைக் கண்டுபிடி" என்றார்.  எழுந்து போலீஸ் கான்டீனில் புதிதாக வாங்கியிருந்த கலர் டிவியின் அதிசயத்தைப் பார்க்கப் போனார். 

நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.

1969. ஜூலை 11.  சந்திரனில் காலடி பதித்தான் மனிதன் என்ற பெருமையை அமெரிக்காவுக்குத் தந்தார் கொனிடா நகர மைந்தன். எங்க வீட்டுப் பிள்ளை என்று ஒரு வருடத்துக்கு மேல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கைக் கொண்டாடிய ஊரும் நாடும் ஜான் மஸ்டினை ஒரே வாரத்தில் மறந்து போனது.

டாம் க்ரேடில்.

1970. ஆகஸ்டு பதினாறு. கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலையில் எம்பிஏ படிக்க வந்த டாம் அமைதியான மாணவன் என்ற பெயரெடுத்திருந்தான். இரண்டு அடுக்கு தள்ளி அமர்ந்திருந்த விக்டோரியாவுக்கு அமைதியான மாணவர்களும் அல்வாவும் மிகவும் பிடிக்கும் என்பது தெரியாமல்.

விக்டர் ஆஸ்வால்ட்.

1971. டிசம்பர் 12. ஒஹயோ மாகாண fbi அதிகாரி. சிகாகோவுக்கு கார் கடத்தும் கும்பலைப் பிடிக்கும் முயற்சியில் தன் இரண்டு துணை அதிகாரிகளையும் துப்பாக்கிச் சூட்டில் பலி கொடுத்தார்.  கொனிடாவிலிருந்து  உதவிக்கு வந்திருந்த ஹென்ரி லாரன்ஸ் என்ற ஏஜன்டை உடனடியாக பதவி உயர்த்தி துணை அதிகாரியாக நியமித்து தன்னுடன் டேடன் நகரத்துக்கு மாற்றலாகி வரச் சொன்னார். "வங்கிக் கொள்ளை..." என்று தயங்கிய ஹென்ரியை தோள் தட்டி  "இது பெரிய பதவி.. ரெண்டு வருசத்துல ஒரு பல்லியைக் கூட உன்னால பிடிக்க முடியல.. அப்படியும் உனக்கு ப்ரமோஷன்.. சாமர்த்தியமாக இரு.. வங்கிக் கொள்ளையை வங்கியே மறந்துபோச்சு கண்ணா" என்று அடக்கினார். 

"என் ஓய்வு நேரத்தில் வங்கிக் கொள்ளையை விசாரிக்க அனுமதி கொடுத்தால் இந்த பதவி உயர்வை ஏற்கிறேன்" என்ற ஹென்ரியை ஏற இறங்க பார்த்த விக்டர் இணங்கினார். "அசடுகள் ஆயிரம் ரகம்" என்றார்.

விக்டோரியா க்ரேடில்.

1974. பிப்ரவரி 14. வேலன்டைன் (காதலர்) தினத்தன்று கல்யாணம் செய்த களிப்பில் கணவனைக் கட்டிக் கொண்டிருந்தாள் விக்டோரியா.  "க்ரேடில் என்ற பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது. சீக்கிரம் தொட்டில் போடுவோமா?" என்றாள். சிரித்த டாம் தாடியைத் தடவியபடி தொப்பியை சரி செய்து கொண்டான். 

"கிட்டத்தட்ட அஞ்சு வருசமா பழகறோம்.. நீ எப்பவுமே தாடியும்  தொப்பியுமா இருக்கியே? கழட்ட மாட்டியா?" என்றாள். 

இடவலமாகத் தலையாட்டிச் சிரித்தான் டாம். 

"தொட்டில் போடுற சமாசாரத்துக்குத் தொப்பியை எடுப்பே இல்லே?" என்று நெருக்கினாள் வி.

மேலும் கீழும் தலையாட்டிச் சிரித்த டாம் "தொப்பி மட்டும் கழட்டுனா போதுமா?" என்றான்.

"இந்தச் சிரிப்பும் தாடியும் எனக்குப் பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ டாம்" என்று மேலும்  நெருக்கினாள்.

ஏஞ்சல் லாரன்ஸ்.

1976. மார்ச் 20.  அப்பொழுது தான் தாயிடமிருந்து வெளிவந்து  சுத்தபடுத்தப்பட்டு அழகாக அழுதாள் ஏஞ்சல். "என்னைப் பிடிக்கலே போல" என்றபடி நீட்டிய மருத்துவரிடமிருந்து கவனமாக வாங்கிக் கொண்ட ஹென்ரி தன் குழந்தையின் முதல் தொடலில் சிலிர்த்தான். கடவுளே, இது எப்பேற்பட்ட அனுபவம்!  கட்டிலில் சோர்ந்து கிடந்த மனைவியை எழுப்பி சிறு நடனமாடத் துடித்தான்.

பவர் க்ரேடில்.

1977. டிசம்பர் 25.  வீடெங்கும் தன் முதல் பிறந்த நாளுக்காக அலங்காரம் செய்திருப்பது புரியாமல் அங்கேயும் இங்கேயும் தவழ்ந்து கையில் சிக்கிய எல்லாவற்றையும் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள் குழந்தை பவர். இதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த  கணவனை அதட்டினாள் விக்டோரியா. "குழந்தையைக் கவனிங்க புரபசர் டாம்" என்றாள்.  லின்பர்க் நகர கலைக்கல்லூரியில் புதிதாக சீனியர் லெக்சரர் வேலைக்குச் சேர்ந்திருந்த கணவனை செல்லமாக இடித்தாள். "இனியாவது தொப்பியைக் கழட்டி ஷேவ் பண்ணுங்க புரபசர்" என்றாள்.  "நெவர்" என்று சிரித்தான் டாம்.

விக்டர் ஆஸ்வால்ட்.

1989. அக்டோபர் 31. துணை அதிகாரியை  அழைத்த விக்டர், "ஹென்ரி, இருபது வருடங்களாகத் தீர்க்க முடியாத குற்றப் பட்டியல் இது. விவரம் சரி பார்த்துச் சொல். விசாரணையை நிறுத்தி கோப்புகளை சேமிப்புக்கு அனுப்பும் உத்தரவைப் படித்துக் கையெழுத்திடு" என்றார். "நானும் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும்".  

கொனிடா வங்கிக் கொள்ளை அந்தப் பட்டியலின் முதல் ஐந்தில் இருப்பதைப் பார்த்த ஹென்ரி மனதுள் வெதும்பி கையெழுத்திட்டுக் கொடுத்தான். 

ஏஞ்சல் லாரன்ஸ்.

1992. மார்ச் 20. பதினாறாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மும்முரமாக இருந்தாள் ஏஞ்சல்.  ஆட்டம் பாட்டு இடையே கேக் வெட்டினார்கள்.  ஹென்ரியைப் பேச அழைத்தார்கள்.  "உன் பெண் உன்னைப் போலில்லாமல் அழகாகவும் அறிவோடும் இருக்கிறாள்" என்ற விருந்தினர்களை முறைத்தான் ஹென்ரி.  நமக்குத் தெரிந்த இன்னொரு போலீஸ் அதிகாரி சவுத்திரி போலவே கம்பீரமாக நின்ற ஹென்ரி, அனாவசியமாக அலட்டாமல் இயல்பாக, "என்னைப் பார்த்து என்னை வெல்ல என் பெண் வளர்ந்திருக்கிறாள்" என்றான். "பூ" என்றனர் அனேகர். "வீட்டில் இன்னொரு போலீஸ் அதிகாரியா? சோதனை மேல் சோதனையா? போதுமடா சாமி" என்றனர்.

"சின்ன வயசுலயே அம்மாவை இழந்த எனக்கு எல்லாமே என் அப்பா தான்" என்று ஹென்ரியின் கை கோர்த்த ஏஞ்சல், "நான் படித்து பட்டம் பெற்று நிச்சயம் fbi தான் சேருவேன். வெற்றி பெரும் அதிகாரியாக வருவேன்" என்றாள் தன் தந்தையின் கைகளை அழுத்தி. அடிக்கடி அவளுக்குச் சொன்ன கொனிடா கதையின் விளைவைப் புரிந்து கொண்டான் ஹென்ரி.

விக்டோரியா & பவர் க்ரேடில்.

1999. டிசம்பர் 25. சிகாகோ விமான நிலையத்தில் பாரிஸ் போக விடைபெற்றார்கள் தாயும் மகளும்.  "நீ ஏன் வரலேனு புரியவே மாட்டேங்குது" என்று சிணுங்கிய மகளைத் தட்டிக் கொடுத்தான் டாம். "விமானம் என்றால் எனக்கு பயம் என்று உனக்குத் தெரியாதா? அதனால் தானே நாம உள்நாட்டுல ஆயிரம் மைலானாலும் கார்ல சுத்தினோம்? அம்மாவோட போய் பாரிஸ் பாரு.  நல்லா சுத்திட்டு வா" என்றான் டாம்.  

"பிஸினஸ் க்லாஸ் டிகெட், ரிட்ஸ் ஹோட்டல்.. எங்களுக்காக இத்தனை செலவு செய்து.. உன் துணையில்லாம.." என்ற மனைவியை அணைத்துக் கொண்டான் டாம். "மெரி க்ரிஸ்மஸ்" என்றான்.

ரூடி ஜூலியானி.

2001. செப்டம்பர் 11. ந்யூயார்க் நகரத் தாக்குதல் தொடர்ந்த அவசர நிலைக்கு அமலாக்கத் தலைவராக யாரை அழைப்பது என்று கவர்னர் ஜூலியானி தேடிய போது பெரும்பான்மையானோர் சிபாரிசு செய்த பெயர் ஹென்ரி லாரன்ஸ். தேடிப் பிடித்து வரவழைக்கப்பட்ட  ஹென்ரி, கவர்னர்  ஜூலியானிக்கு வலதுகரமாகச் செயல்பட்டு இரண்டே மாதங்களில் தீவிரவாதத் தடுப்பு இலாகாவிற்கு மாற்றலாகி வாஷிங்டன் வாசியானான். மனதின் ஓரத்தில் வலி இருப்பதை மறக்க முடியவில்லை அவனால். எத்தனை சாதனை எத்தனை வெற்றி என்றாலும் முதல் கேஸ் முடியாத கேஸாகி நிற்கிறதே?!  

பவர் க்ரேடில்.

2012. மே 6. டென்வர் பல்கலை பட்டமளிப்பு விழா முடிந்ததும் ஓடி வந்து  பெற்றோரை அணைத்துக் கொண்டாள் பவர். "Doctorate in Criminal Justice" என்ற பட்டத்தைக் காட்டினாள். பெருமையுடன் வளாகத்தில் உடன் இருந்த பத்து பதினைந்து பேரை ஒவ்வொருவராகத்  தன் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தினாள்.  "அப்பா.. இவங்க பேரு ஏஞ்சல் லாரன்ஸ். FBI ஜூனியர் field agent. இவங்க கூடத்தான் என் post doctoral ஆய்வு வேலை" என்றாள். 

ஹென்ரி லாரன்ஸ்.

2014. நவம்பர் 24. "Happy thanksgiving dad. Thank you for everything you have done for me" என்ற மகளைப் பெருமையுடன் பார்த்தான் ஹென்ரி. அவளுடன் வந்திருந்த அழகான பெண், "என் பெயர் பவர் க்ரேடில். க்ரிமினல் ஜஸ்டிஸ்ல பிஎச்டி  படிச்சுட்டு உங்க பெண் துணையோட post doctoral ஆய்வு பண்ணிட்டிருக்கேன்" என்றாள். 

"உங்க பெற்றோர் என்ன பண்றாங்க?"

"அம்மா இறந்து ஆறு மாசமாகுது. அப்பா ரிடையர்ட் புரபசர். இந்த மாசம் தான் ரிடையர் ஆனாரு"

"அப்படியா? நானும் டிசம்பர்ல ரிடையர் ஆறேன்"

."ஓ டேடி.. சொல்லவே இல்லையே.." 

"அறுபத்தெட்டு வயசாயிடுச்சேமா ஏஞ்சல்.. ஹூ நீட்ஸ் மி?" 

"அப்படிச் சொல்லாதிங்க.." என்றாள் பவர். "உங்களைப் பத்தி ஏஞ்சல் நிறைய சொல்லியிருக்கா. நான் எடுத்துட்டிருக்குற ஆய்வில, சொல்லக்கூடாது ஆனாலும் சொல்றேன், நீங்க பாத்த முதல் கேஸும் அடக்கம். முழு ஆய்வுக்கான எல்லா அனுமதியும் கிடைக்க சில வருடங்களாகலாம்"

"ஆமாப்பா. பவர் நம்ம ப்ராக்ஸி. ஏதாவது கிடைச்சா விடமாட்டோம்" என்றாள் ஏஞ்சல்.

டாம் க்ரேடில்.

2017. ஜனவரி 2. விடுமுறைக்காக வந்த மகளை அழைத்துப் பேசினான் டாம். "பவர். உன்னிடம் இரண்டு அதிர்ச்சி தரும் செய்திகள் சொல்லப் போறேன்" என்றான்.

"என்னப்பா சொல்றிங்க?"

"எனக்கு நுரையீரல் கேன்சர் டெர்மினல் ஸ்டேஜ்" என்ற டாம் மருத்துவ சீட்டுக்களைக் காட்டினான். "இன்னும் சில வாரங்களோ மாதங்களோ தான் இருப்பேன்"

"அப்பா।"

"பரவாயில்லைமா. நான் நன்றாகவே வாழ்ந்தேன். என் வாழ்வை வளப்படுத்திய உனக்கும் விக்டோரியாவுக்கும் அந்த மேரிமகனுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. உன்னிடம் மறைச்சதுக்கு மன்னிச்சுடுமா.  அதற்குக் காரணம் உண்டு"

"என்னப்பா"

"என் பெயர் டாம் க்ரேடில் இல்லைமா. என் அசல் பெயர் ஜான் மஸ்டின். நான் பிறந்து வளர்ந்த ஊர் கொனிடா. விளையாட்டா ஒரு நாள் தாமஸ் க்ரௌன் படம் பார்த்துட்டு நான் வேலை பார்த்த கோவாபரெடிவ் வங்கியிலிருந்து.." என்று டாம் சொல்லச் சொல்ல பவருக்குத் தலை சுற்றியது.

[6:07 am, 04/12/2023] Appadhurai: வால்:

இதற்குப் பிறகு என்ன நிகழ்ந்தது என்பதும் டாம் எப்படியெல்லாம் தன்னை அடையாளம் காட்டாமல் ஐம்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்தான் என்பதையும்.. டாமின் தாடியும் தொப்பியும் அவன் ஏன் பாரிஸ் வரவில்லை என்பதை பவரும் ஏஞ்சலும் அலசுவதும்..  குற்றவாளியும் அவனைத் தேடிய போலீசும் அவர்களுடைய பிள்ளைகளால் சேரும் விதி பற்றியும், ஓ.. டாம் என்ன ஆனான், கொள்ளைப் பணம் என்ன ஆனது என்பதும்...   படு சுவாரசியமென்றாலும் பதிவுக்கு அனாவசியம் என்பதால் உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். 

வால் வால்:

கற்பனையாவது கழுதையாவது விவரத்தை சொல்லப்பா என்பவர்களுக்காக. இது உண்மைச் சம்பவத்தை ஒட்டி எழுதியது. பதிப்புரிமை தனியுரிமை கருதி அசல் podcast பெயர் சொல்லப் போவதில்லை.  "My Father, A Bank Robber" என்ற ரீதியில் தேடினால் அசல் apple podcast கிடைக்கும்.  செய்தி மட்டும் போதுமென்றால் "thomas readle jack conrad bank robber" என்று தேடுங்கள் கிடைக்கும். விவரங்கள் விறுவிறுப்பாக சுவாரசியமாகப் போகும், இப்போதே சொல்லி விடுகிறேன்.

== = = = = = =

60 கருத்துகள்:

  1. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை.

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. 1) உங்கள் வீட்டில் இன்னமும் மின்சார இஸ்திரிப் பெட்டி உள்ளதா? பயன்படுத்துகிறீர்களா?

    உண்டு தற்போது உள்ளது மூன்றாவது,.

    2) தபால் அலுவலக பொருட்களை / சேவைகளை இப்பொழுதும் பயன்படுத்திக் கொள்கிறீர்களா?

    உண்டு. தற்போதும் அலுவல்கத் தொடர்பு கடிதங்களை சாதா தபாலில் அனுப்புகிறேன் (ரெகார்ட், வவுச்சர்.)

    3) நீங்கள் மிகவும் விரும்பி வாங்கி, பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்கள் எவை?

    நானல்ல. பாஸ். தையல் மெஷின், ரைஸ் குக்கர். நான் வாங்கி பயன்படுத்தாமல் இருந்த கரி பாயிலரை தற்போது தான் கடையில் போட்டோம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. மெழுகுக்கு பதில் எபாக்சி ரெசின் கொண்டு உருவாக்கப்பட்ட கண்ணாடி பொம்மைகள் போல் தோற்றமளிக்கும் விநாயகர் பொம்மை கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மால் அதை செய்ய முடியுமா?

      நீக்கு
    2. வீட்டில் செய்ய இன்ஜெக்ஷன் மோல்டிங் மெஷின் தேவைப்படும் என்று தோன்றுகிறது.
      Jayakumar

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. தன் அபிமான நாயகன் ஸ்டீவ் மக்வீனின் தாமஸ் க்ரௌன் படம் இரண்டாவது முறையாக உள்ளார்ந்து அனுபவித்துப் பார்க்கையில் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தான் ஜான் மஸ்டின்.//

    தமிழ் சினிமாவோ, இங்கிலீஷ் சினிமாவோ, பார்ப்பவனைச் சும்மா விட்டதில்லை. உன்னிப்பாகப் பார்த்தவனை ஒழிச்சுக்கட்டிவிட்டுத்தான் மறுவேலை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் சினிமாவோ, இங்கிலீஷ் சினிமாவோ, பார்ப்பவனைச் சும்மா விட்டதில்லை. உன்னிப்பாகப் பார்த்தவனை ஒழிச்சுக்கட்டிவிட்டுத்தான் மறுவேலை...///

      உண்மை..
      உண்மை..

      நீக்கு
  7. ..ஐந்து பைசாவுக்கு வாங்கிய மெழுகுவர்த்தியை உருக்கி, மூன்று பிள்ளையார் பொம்மைகள் உருவாக்கினேன். ஒவ்வொன்றையும் பத்து பைசாவுக்கு விற்று, ஐந்து பைசாவை முப்பது பைசா ஆக்கினேன்! //

    அடடா.. அதானி, அம்பானிக்கெல்லாம் ஆரம்பமே இங்கேதான்னு தெரியாம, வடக்கே பாத்து வாயத் திறந்து கெடக்கானே தமிழன் !

    பதிலளிநீக்கு
  8. அப்பாதுரை மிக சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்.

    அவருடைய தளத்திலும், சில பல முறை சூடு பட்டுக்கொண்ட பிறகு, கடைசிப் பகுதியைப் படித்து, தொடர் பதிவு/சம்பவம்/கதை முடிந்தால்தான் ஆரம்பத்திலிருந்து படிப்பேன். மற்றதை வெள்ளித் திரையில் காண்க என்பதுபோல பலவற்றிர்க்கும் க்ளைமாக்ஸ் பகுதியை எழுதுவதில்லை அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹி.. அப்படி இல்லைங்க. சில சமயம் முடிவு ஒரு closureஆ இருக்க வேண்டியதில்லைனு தோணும். (அரைகுறையா விட்ட எழுத்து, அது வேறே..)

      நீக்கு
  9. கௌதமன் சாரின் அப்ளிகேஷன் திறமை வியக்கத் தக்கது. இதையே ஜீனிப் பாகு செய்து சில பல உருவங்கள் செய்து கொடுத்திருந்தால் அவர் அம்மா இன்னும் மகிழ்ந்தருப்பாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்ணும் பொருட்கள் செய்யும் அளவிற்கு மனது துணியவில்லை!

      நீக்கு
    2. எனக்கு அந்த சர்க்கரை பொம்மைகள் மிகவும் பிடிக்கும். என்னுடைய பெண் கல்யாணத்திற்கு சம்பந்தி வீட்டிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான ச பொ களை நான் ஒரே ஆளாக சில நாட்களில் தின்று தீர்த்தேன்.

      நீக்கு
  10. 1) உங்கள் வீட்டில் இன்னமும் மின்சார இஸ்திரிப் பெட்டி உள்ளதா? பயன்படுத்துகிறீர்களா?
    வேறே மாதிரி இஸ்திரி பெட்டி இருக்குதா? (தணல் ?). நான் மின்சார இஸ்திரியையே பயன்படுத்துகிறேன், இஸ்திரி என்ற பெயர் என் வந்தது என்று தெரியாவிட்டாலும்.

    2) தபால் அலுவலக பொருட்களை / சேவைகளை இப்பொழுதும் பயன்படுத்திக் கொள்கிறீர்களா?
    சில சமயம் பார்சல் அனுப்புவேன். சில first day cover இன்னமும் வாங்குகிறேன்.

    3) நீங்கள் மிகவும் விரும்பி வாங்கி, பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்கள் எவை?
    bobby fisher விளையாடிய செஸ் பலகையும் காய்களும் வாங்கி அப்படியே வைத்திருக்கிறேன். ஒரு 1980's ibm electric typewriter.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவரமான பதில்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. இஸ்திரி, பெயர்ச்சொல்.

      தேய்ப்பு பெட்டி
      துணித்தேய்ப்பு
      மொழிபெயர்ப்புகள்
      ஆங்கிலம்
      iron box
      ironing clothes
      விளக்கம்
      Estirar என்ற போர்த்துகீசிய சொல்லிருந்து உண்டானது
      இஸ்திரி தணல் அல்லது மின்சாரம் மூலம் சூடேற்றப்பட்டு துணிகளை சுருக்கம் போக இஸ்திரி போட்டு மடிக்க உதவும் பெட்டி.

      நீக்கு
    3. இஸ்துக்குனு ஓட்னவன் வசதியா மாட்டிக்கிட்டான்னா, புடிச்சு, பாண்ட்டைக் கீழே கொஞ்சம் எறக்கிவிட்டு பின்பக்கத்துல சூடு போட்றதுக்கு வசதியான பொட்டிங்கறதால.. இஸ்திரிப் பொட்டின்னு பேர் வந்திருக்குமோன்னு கற்பனய வளத்துக்கிட்டிருக்கயில.. வந்திருச்சு ஒங்க வெளக்கம் !

      நீக்கு
    4. நானு, ஸ்த்ரீக்களிடமே இந்த வேலையையும் ஆரம்பத்தில் தலையில் கட்டிவிட்டதால் இஸ்த்ரீன்னு பெயர் வந்திருக்குமோ என்று நினைத்தேன்....

      நீக்கு
    5. இஸ்து இஸ்து போடுறதுனால இஸ்திரி.
      ஸ்திரி தியரியும் சரி. காரைக்கால் நாட்களில் பார்த்திருக்கிறேன். இஸ்திரி வண்டி தள்ளி வந்தோர் அனைவரும் பெண்களே.

      நீக்கு

  11. கௌதமானந்த ஜி..

    வீட்டு விஞ்ஞானி!..
    ஜொலித்திருக்கவேண்டியவர்..

    தமிழகம் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ கர்நாடகா மக்களாவது பயன்படுத்திக் கொள்கிறார்களா பார்ப்போம்!

      நீக்கு
  12. ஐயா அப்பாதுரை அவர்களது பக்கம் சிறப்பு..

    பதிலளிநீக்கு
  13. கேள்வி பதில்
    1) தினமும் பயன்படுத்துகின்றோம்.
    2) இடையிடையே.
    3) உடை தவிர (அவசரத்துக்கு உதவும் என சில வைத்திருப்பேன்.) மற்றைய பொருட்கள் உடனே பாவித்து விடுவேன்.

    Kgg அவர்கள் மெழுகு பொம்மை செய்தது அசத்தல்.

    அப்பாத்துரை அவர்கள் பக்கம் நன்று.

    பதிலளிநீக்கு
  14. 1) நான் இஸ்திரி பெட்டி உபயோகிக்கின்றனர்.

    2) தபால் வேலைகள் இல்லை ஆனால் அவ்வப்போது நண்பர்களுக்கு எனது நூல் அனுப்பி வைப்பது உண்டு.

    3) நான் எந்த பொருளையும் விரும்புவதில்லை ஆனால் கிடைத்த பழைய பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பதில் புரியவில்லை. கருத்துறைக்கு நன்றி.

      நீக்கு
  15. 1) உங்கள் வீட்டில் இன்னமும் மின்சார இஸ்திரிப் பெட்டி உள்ளதா? பயன்படுத்துகிறீர்களா?

    இப்ப வரை இதுதானே கௌ அண்ணா! சரி சரி நீங்கதான் புதுசு புதுசா கண்டுபிடிச்சு மெஷின் எல்லாம் உருவாக்கறவராச்சே!! ரோபோட்டிக் இஸ்திரிப்பெட்டி கண்டுபிடிங்க.....இப்ப தரை கூட்ட ஒன்னு இருக்கே அது போல....நல்ல பிஸினஸ் ஆகும்!!! இந்த ஐடியா கொடுத்ததுக்கு எனக்கு ராயல்டி கொடுத்திருங்க ஓகேவா கௌ அண்ணா!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்து உறவினர்கள் வீட்டில் இஸ் பெ உள்ளது. ஆனால் யாரும் உபயோகிப்பது இல்லை. தரை பேருக்கும் மின் எந்திரம் நான் மூன்று வருடங்களாக உபயோகித்து வருகிறேன். கருத்துறைக்கு நன்றி.

      நீக்கு
  16. 2) தபால் அலுவலக பொருட்களை / சேவைகளை இப்பொழுதும் பயன்படுத்திக் கொள்கிறீர்களா? //

    சென்னையில் இருந்த வரை பயன்படுத்தியிருக்கிறேண். இங்கு வந்த பிறகு தபால் ஆஃபீஸ் எங்கனு தேடணுமா இருக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. கௌ அண்ணா பக்கம் - கௌ அண்ணா யு ராக்!!! செம படைப்புத் திறன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அப்பாதுரை ஜி - சுவாரஸியமா எழுதியிருக்கீங்க. உங்க பாணில. மீதி வெள்ளித் திரையில்னு சொல்றாப்ல லிங்க் கொடுத்திட்டீங்க போய் வாசிக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. 1) உங்கள் வீட்டில் இன்னமும் மின்சார இஸ்திரிப் பெட்டி உள்ளதா? பயன்படுத்துகிறீர்களா?

    இருக்கிறது, ஆனால் பயன்படுத்தி நாளாச்சு.(பல வருடங்கள் ஆச்சு)

    2) தபால் அலுவலக பொருட்களை / சேவைகளை இப்பொழுதும் பயன்படுத்திக் கொள்கிறீர்களா?//

    பயன்படுத்தி வெகு நாள் ஆகி விட்டது.

    3) நீங்கள் மிகவும் விரும்பி வாங்கி, பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்கள் எவை?

    தையல் மிஷின் விரும்பி வாங்கி நிறைய தைத்தேன் ஒரு காலத்தில் பின் பயன்படுத்தவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆத்மாரத்தமாக பதில் கூறியிருக்கிறீர்கள். எல்லோர் வீட்டிலும் பெரும்பாலும் இதே நிலைதான்.

      நீக்கு
  20. Kgg சார் அவர்கள் மெழுகு பொம்மை மற்றும் ஒரு ரூம் முழுவதும் கேட்கும் அளவுக்கு ரேடியோ செய்தது அருமை.

    அப்பாதுரை சார் பக்கம் படிக்க விறு விறுப்பாய் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  21. அப்பாதுரை பக்கம் அருமையோ அருமை!

    பதிலளிநீக்கு
  22. உங்கள் வீட்டில் இன்னமும் மின்சார இஸ்திரிப் பெட்டி உள்ளதா? பயன்படுத்துகிறீர்களா?

    இருக்கிறது, பயன்படுத்துகிறேன்
    2) தபால் அலுவலக பொருட்களை / சேவைகளை இப்பொழுதும் பயன்படுத்திக் கொள்கிறீர்களா?//

    இல்லை.

    3) நீங்கள் மிகவும் விரும்பி வாங்கி, பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்கள் எவை?

    எக்ஸர்ஸைஸ் மெஷின். நாஸா விஞ்ஞானிகள் தயரித்த டெக்னாலஜி..."ஓடாமல் நடக்காமல் குதிக்காமல் உடல் எடையைக் குறைக்கலாம்....தினசரி பதினைந்து நிமிடங்கள் உபயோகித்தால் போதும்" என்றெல்லாம் ஸேல்ஸ்மேன் பில்டப் கொடுக்கும்போதே சுதாரித்திருக்க வேண்டும். ஆசை யாரை விட்டது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. haha.. அப்படியே வச்சிருங்க. இன்னும் பத்தே வருசத்துல புராதன பொருள்னு நல்ல விலைக்கு விக்கலாம்.

      நீக்கு
    2. :))) கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!