வியாழன், 14 டிசம்பர், 2023

முதன் முதலாக முதன் முதலாக

 முதன் முதலாக என்று நாம் சில விஷயங்களை நினைத்துப் பார்ப்போம் இல்லையா? 

ஒரு புதனில் நீங்கள் முதலில் பார்த்த மாற்று மொழி திரைப்படம் எது என்கிற கேள்வி வந்திருந்தது.  அதன் இன்ஸ்பிரேஷனில் இன்றைய பதிவு.  

நான் பார்த்த முதல் ஆங்கில திரைப்படம் Treasure Island.  ஸ்கூலில் அழைத்துப் போனார்கள்.  தியேட்டரில் மண்ணாந்தை மாதிரி அமர்ந்திருந்தோம்.  அது ஆங்கில நான் டீடெயிலில் பாடமாக வந்திருந்தது என்று நினைவு.  பள்ளியிலேயே தெய்வமகன் திரைப்படமும் இன்னொரு படமும் திரையிட்டார்கள்.  புத்தகங்கள் இல்லாமல் பள்ளிக்குச் செல்வது இரண்டு சந்தர்ப்பங்களில்தான்.  ஸ்போர்ட்ஸ் தினம், ஆண்டுவிழா தினம்.  அதே போல யூனிபார்ம் இல்லாமல் ஸ்கூலுக்குச் செல்வதும் இந்த இரண்டு தினங்களில்தான்.  சில சமயங்களில் ஹெட்மாஸ்டர் சனிக்கிழமைகளில் ஸ்கூல் வைக்கும்போது கலர் ட்ரெஸ் என்று அறிவிப்பார்.  தீபாவளி விடுப்பு முடிந்து பள்ளி செல்லும் நாளில்  கலர் ட்ரெஸ் போட்டு போனால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.  பள்ளிக்குச் செல்வதே பாடம் படிக்கத்தான் என்கிற நிலையில் எல்லோரையும் ஒரு ஹாலில் அமர வைத்து 16 mm ப்ரொஜெக்டரில்  இந்தப் படம் காட்டப்பட்ட போது நன்றாகத்தான் இருந்தது அந்த Feel.  காதல் காட்சிகளில் எல்லாம் கேம்ஸ் மாஸ்டர் ப்ரொஜெக்டர் முன் கையை வைத்து மறைத்து விடுவார்.

அப்புறம் Ten Commandments.  அதுவும் அழைத்துப் போனார்கள்.  வரிசையில் நின்று தியேட்டருக்குள் மாணவர்கள் நுழைவதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் நின்றிருந்தது.  அப்புறம் நானே தியேட்டருக்கு சென்று பார்த்த படம் மெக்கன்னாஸ் கோல்ட்.  இன்னொரு படம் சிலை எல்லாம் நகரும்.  படகுப் பயணத்தில் ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு கண்கவர் ஆபத்து.  படத்தின் பெயர் நினைவில்லை.  தஞ்சாவூர் குமரன் தியேட்டரில் பார்த்தேன்.

ஸ்கூலுக்கு பக்கத்துக் கட்டிடம் அருள் தியேட்டர்.  சனிக்கிழமைகளில் பள்ளி வைக்கும் நேரங்களில், சனி ஞாயிறுகளில் அருள் தியேட்டரில் காலைக் காட்சியாக ஆங்கில திரைப்படம் போடுவார்கள்.  பெரும்பாலும் லாரல் ஹார்டி.  

வீட்டிலிருந்து கிளம்பும்போது யூனிபார்ம் சட்டைக்குள் கலர் சட்டை.  ஸ்கூலை நெருங்கும்போது கலர் சட்டைக்குள் யூனிபார்ம் வெள்ளைச் சட்டை!  நைஸாக லைனில் நின்று டிக்கெட் எடுத்து - 60 பைசா என்று நினைவு - உள்ளே சென்று பெரும்பாலும் லாரல் ஹார்டி படங்களை பார்த்து விடுவோம்.  ஒரு சனிக்கிழமையில் ஸ்கூலில் 'பசங்களின் எண்ணிக்கை' மிகவும் குறைவாக இருக்க, இரண்டு கேம்ஸ் மாஸ்டர்களும் தியேட்டருக்குள் புகுந்து டார்ச் லைட் அடித்து 'பசங்களை' பிடித்துச் சென்றனர்.  என்னை அவர்களுக்கு அடையாளம் தெரியாமல் இருந்தது நான் செய்த பாக்கியம்.  இந்த முறையில்தான் கிரேஸி தீவ்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் பார்த்து ரசித்தது!

நான் பார்த்த முதல் மலையாளப்படம் காற்றத்த  கிளிக்கூடு.  மோகன்லால் ரேவதி என்று நினைவு.  ஞாயிறு பன்மொழி திரைப்படங்கள் வரிசையில் தூர்தர்ஷன் டெல்லியில் மதியம் ஒளிபரப்பானதை பார்த்தது. இதே வரிசையில் ஒரு மம்மூட்டி படம் கூட பார்த்தேன்.  படத்தின் பெயர் நினைவில்லை. தியேட்டருக்குப் போய் எந்த மலையாள படமும் பார்த்ததில்லை.  சாணக்கியா உட்பட மொழிமாற்றப் படங்கள் பார்த்திருக்கிறேன்.  தற்சமயம் OTT யில் இந்த மொழி பாகுபாடெல்லாம் பார்க்க முடிவதில்லை!

நான் பார்த்த முதல் தெலுங்கு படம் சங்கராபரணம்.  தெலுங்குப் படம் வேறெதுவும் தியேட்டரில் பார்த்ததில்லை.  பன்மொழி திரைப்பட வரிசையில் 'சித்தாரா'  என்ற இளையராஜா இசைப் படம் பார்த்து அதில் வந்த SPB பாடல்களை அப்படியே டீவியிலிருந்து கேசட்டில் ரெகார்ட் செய்தேன்.  அதுமாதிரி வெவ்வேறு மொழிப்பாடல்கள் நிறைய செய்திருக்கிறேன்.  ஞாயிறு மாநிலமொழி திரைப்பட வரிசையிலேயே தியாகையா பார்க்கத் தொடங்கி பாதியிலேயே தெறித்து ஓடிவிட்டேன்!  தற்சமயம் OTTயில்...  மேலே சொல்லி இருக்கிறேன்.

ஒரு கன்னடப்படம் கூட தியேட்டரில் பார்த்ததில்லை.  இல்லை, இருங்கள்..  ஒரே ஒரு படம்.  கமல், பாலுமகேந்திராவுக்காக...  கோகிலா என்றொரு படம் பார்த்திருக்கிறேன்.  முதலும் கடைசியாய்.  OTTயில் கூட கன்னடப் படங்கள் பார்ப்பதில்லை.  அங்கு பார்த்த ஒரே கன்னடப்படம் KGF.

நான் பார்த்த முதல் ஹிந்தித் திரைப்படம் பாபி.மிகவும் ஆச்சரியகரமாக அப்பா, தாய்மாமா கம் அக்கா கணவருடன் பார்த்தேன்.  அதுவும் இரவு இரண்டாம் காட்சி!  தஞ்சாவூர் கிருஷ்ணா திரையரங்கில் என்று நினைவு.  இல்லை அருள்?  அப்பாவும் மாமாவும் கிளம்பும்போது என்னையும் அழைத்துச் சென்றது வியப்பு.  மறுநாளுக்கு மறுநாள்  எனக்கு ஆங்கிலம் இரண்டாம் தாள் முழுப்பபரீட்சை!  அப்புறம் நானே பார்த்தது ஷோலே, அடுத்து தீவார்.  அமிதாப்பின் ரசிகனானேன்.  ஹிந்தி மோகத்தில் அப்புறம் அஜ்நபி (ராஜேஷ் கன்னா), ஸமாதி(தர்மேந்திரா), ஆப் பேட்டி(சஷி கபூர்), ஹரே ராமா ஹரே கிருஷ்ணா(தேவ் ஆனந்), தோஸ்தானா(அமிதாப், சத்ருகன் சின்ஹா) என்று படங்கள் பார்த்து தள்ளினேன்.  அமிதாப் படம் வந்தால் விடுவதில்லை!   ஏற்கெனவே  விவித் பாரதியில் காலை மதியம் இரவு என ஹிந்திப் பாடல்கள் கேட்கும் வழக்கமும் இருந்து வந்தது.  அதெல்லாம் என் மாமா ஜவர்லால் உபயம்!  ஜவர்லால் எதை ரசிக்கிறாரோ, எப்படி பேசுகிறாரோ, என்ன செய்கிறாரோ  அதை நாங்கள் - நாங்கள் என்றால் நானும் என் அண்ணனும் -  எங்கள் நண்பர்களிடத்தில் காப்பியடிப்போம்!

ஆங்கிலப் படம் முதலில் பார்த்தது (சிறுவயதில் பார்த்தது தவிர) 007 ஸ்பை ஹூ லவ்ட் மீ.  அப்புறம் சிலபல ஜாக்கிசான், 007 படங்கள், என்டர் தி டிராகன்  பார்த்திருக்கிறேன்.  History of the world பார்த்திருக்கிறேன்.

இவ்வளவும் சொல்லி விட்டு தமிழ்ப்படம் பற்றி சொல்லாவிட்டால் எப்படி?  முதலில் பார்த்த தமிழ் திரைப்படம் மூன்று தெய்வங்கள்.  அப்புறம் மாட்டுக்கார வேலன். அப்புறம் சபதம், அன்பு சகோதரர்கள்  அப்படி இப்படி என்று படங்கள் பார்ப்பது வழக்கமானது.

ஒரு பழைய புதன் கேள்வியை வைத்து இந்த வியாழன் இப்படியாக போனது!

நான் முதன்முதலாக கேட்டு ரசித்த தமிழ்ப்பாடல் 'முத்துக்கு முத்தாக' பாடலா, 'கங்கைக் கரை தோட்டம்.. கன்னிப்பெண்கள் கூட்டம்' பாடலா..  எதுவென்று சரியாய் நினைவில்லை.  முதல் கர்னாடக சங்கீத பாடல் 'ராதா சமேதா கிருஷ்ணா..'  பாடல்..  ஜி என் பி பாடியது.   ஹிந்தி பாடல் ஆராதனா பாடல் 'மேரே சப்புனோங் கி '
=========================================================================================
நியூஸ் ரூம் 
                                                                   








=======================================================================================

ஏகாந்தமாய் 


சோகக் கவிஞன்
ஏகாந்தன் 

புதிதாக வந்திருந்த பேட்ச்சைச் சார்ந்த எங்களில் சிலர், வெளிநாட்டு போஸ்ட்டிங்கிலிருந்து சமீபத்தில் திரும்பியிருந்த சில பெரிசுகள் உணவு/டீ இடைவேளைகளின்போது அவிழ்த்துவிடும் திகில் கதைகளை, வாய்ச்சவடால்களை ஆர்வமாகக் கவனிப்போம். அதுக்கு நேர்மாறாக, அங்கே பணிபுரிய வாய்ப்புப் பெற்ற வேறுசில சீனியர்கள், வெளி அனுபவங்கள்பற்றி வாயே திறக்காதுகள்! கேட்டாலும் ஏதாவது வழிந்து, மழுப்பிவிட்டுச் செல்லும் ப்ரகிருதிகள்..

ஒரு மாலைப் பொழுதின் லேட்-சிட்டிங்கின்போது மோஹனன், பட்டாச்சார்ஜி (எங்களுக்கு ஒரு வருடம் ஜூனியர்), நான் ஆகியோர் சும்மா இருக்க நேர்கையில் க்ரியேட்டிவ்வாக ஏதாவது செய்யலாமா என யோசித்தோம். சின்னதாக, ஒரு இன் –ஹவுஸ் மெகசின் ஆரம்பிக்கலாம் என்கிற ஐடியா வந்து விழுந்தது. ஒவ்வொருவரும் அந்தப் பத்திரிக்கையில் வெளியிட வேண்டிய விஷயங்களைத் தனித்தனியாக முதலில் எழுதுவோம். சரிபார்த்து, டைப் செய்து, காப்பி எடுத்து, கோர்த்து, என்கிற அடுத்தடுத்த நிலைகளைப் பின்னர் யோசிப்போம் என்பது முடிவாயிற்று.

”நான் நம் பத்திரிக்கையில் கவிதை எழுதப்போகிறேன்” என்றான் பட்டாச்சார்ஜி.  தன்னுடைய பங்களிப்பு சின்னக் கட்டுரைகளாக
இருக்கலாம் என்று மோஹனன் சொல்ல, நானும் எழுதுவேன் என்று நான்
ஆரம்பிப்பதற்குள், ”ஹேய்! நீ மெகஸின் அட்டையை டிஸைன் செய்..  உள்ளே படம் வரை..” என்று இருவரும் குறுக்கிட்டுச் சொன்னார்கள். நான் ஏனோ ஒரு ஓவியனாக அங்கே அறியப்பட்டிருந்தேன்போலும். ஏதாவது ஃபைல் கவரில், தனிக் காகிதத்தில் அழகாக எழுதியிருக்கலாம் அல்லது ஓரத்தில் கொஞ்சம் பார்டர்-டிஸைன் போட்டிருப்பதை இவர்கள்
பார்த்திருக்கக்கூடும்.. அதனால் முளைத்தது அந்த யோசனை.

எனக்குள்ளும் ஒரு கவிஞன் இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
எனக்கேதான் தெரியாதே…

The Muse என்று வரப்போகிற சிறுபத்திரிக்கைக்குப் பேர் வேறு வைத்தாயிற்று.  அட்டைப்பட சிந்தனைகள், உள்ளே ஏதாவது படம் என நான் அவ்வப்போது மனதிலும், காகிதத்திலுமாகக் கிறுக்கிக் கிறுக்கிப் பார்த்துக்கொண்டிருந்தேன். பட்டாச்சார்ஜி தினமெல்லாம் அலுவலக வேலையினூடே, சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். இடைவேளைகளில் அவ்வப்போது கிறுக்குவதும் கிழிப்பதுமாய்க் காணப்பட்டான். கவிதை அவனுள்ளே முளைவிட்டு உயர்கிறதோ. அந்த மாலையில், தான் ஆங்கிலத்தில் கிறுக்கிய ஒன்றை என்னிடம் காண்பித்தான். முழுக் கவிதை நினைவிலில்லை. ‘இன்னும் கொஞ்சகாலம் நான் வாழக்கூடும்..’ என சோகமாக, தீர்க்கமாக ஆரம்பித்தது அந்தக் கவிதை! படித்துவிட்டு ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்தேன். 

”கைஸா ஹை யார் (yaar)?” என்றான் லேசான சிரிப்புடன் பெங்காலி-ஆக்ஸெண்ட் ஹிந்தியில். 

”லுக்ஸ் குட்..” (நன்றாக வந்திருப்பதாகத் தெரிகிறது) என்றேன். அவன் முகத்தில் ஒரு திருப்தி.

அவன் அப்பேர்ப்பட்ட ஆள்தான்.  Low profile, unassuming..  வேற்றுலகவாசிபோல் சில சமயங்களில் பார்ப்பான். ஏதோ சொல்ல விரும்புபவன்போல் தயங்குவான். பிறகு ஏதோ பேசுவான்.  அமைதியாகிவிடுவான். வார்த்தைகளுக்குப் பதிலாக, மெல்லிய புன்னகையினால் முகமொழியே தந்துகொண்டிருப்பான். ஒல்லியான தேகம். மீடியம் உயரம். கொஞ்சம் மஞ்சளான நிறம்.  சாம்பல் பழுப்புக் கண்கள். சோம்பலான உடல்மொழி. திக்குவாயும் கூடவே என்பதால், அதுதொடர்பான சுயநம்பிக்கைக்குறைவும் அவ்வப்போது தென்பட்டவாறு இருந்தது. சோகபிம்பத்தை அது அழுத்தமாகக் காண்பித்தது. மொத்தத்தில் ஒரு சுவாரஸ்யக் கலவை அவன். சத்யஜித் ரே கவனித்திருந்தால் ஒருவேளை, தன் படமொன்றில் சில நிமிஷங்களுக்காவது அவனை நுழைத்துவிட்டிருக்கக்கூடும்..

எங்களது பத்திரிக்கை முயற்சி ஆரம்பத்தில் வேகம் காட்டி, போகப்போக
பேட்டரி டௌன் ஆகி, கனவாகவே நின்றுவிட்டது. என்னதான் பத்து- இருபது பக்கம் எழுதி, படமெல்லாம் போட்டுவைத்தாலும் (ஃபோட்டோ காப்பியரெல்லாம் தலைகாட்டாத காலம்வேறு), யார் விரும்பி வாங்குவார்?  நம்மைப்போன்ற சீரியஸ்களின் படைப்புகளைப் புரிந்துகொள்வோர், ரசிப்போர் யார் உலகர் இந்த உலகில்! – என எங்களிடையே ஒரு மாலையில் பேச்சு செல்ல, அயற்சி உண்டாகி, கைவிடப்பட்டது இதழ் முயற்சி. சிலதுகள் கனவாகவே இருப்பதுதான் நல்லதுபோலும்..

பட்டாச்சார்ஜியிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு நாள் ”உன்னுடைய
முதல் ஃபாரின் அஸைன்மெண்ட் – வெளிநாட்டுப் பயணம் - எந்த நாடாக
அமைந்தால் நன்றாக இருக்கும்?” என்று கேட்டேன். படாரென்று சத்தமாக
சிரித்தான் (அவனது குணத்தில் இல்லாதது). “Bijoy (பிஜோய்) !” என்று
என்னை விளித்து - (விஜய் என்பதை பெங்காலியில் உச்சரிக்கும் லட்சணம்
– Bijoy! ) ”நான் இப்போது இருப்பதே ஃபாரின் அஸைன்மெண்ட்டில்தான்!”
என்றான்.

” என்ன உளறுகிறாய்” என்றேன்.

”நான் பெங்காலி. வசிப்பதோ அஸ்ஸாமின் ’ஸில்ச்சர்’ எனும் ஊரில்.  உங்கள் சௌத் (தென்னிந்தியா) எல்லாம் டெவலப் ஆன பிரதேசம்.
நீயெல்லாம் வடகிழக்குப்பக்கம் வந்திருக்கமாட்டாய். அங்கே நிலவரம்
என்ன என்பது உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஸில்ச்சர்போன்ற
ஒரு சிக்கலான இடத்தில் ஒருவன் வளர்ந்து, படித்து, சர்க்கார் பரீட்சை
எழுதி, பாசாகி.. டெல்லிவரை வந்துவிட்டான் - அதுவும் செண்ட்ரல்
கவர்ன்மெண்ட்டில் சேர்ந்தும்விட்டான் என்றால், அதுவே ஃபாரின்
போஸ்ட்டிங்தான், அச்சீவ்மெண்ட்தான் அவனுக்கு! Try to understand..”
”ஓஹோ..” என்றுவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தான். ‘வடகிழக்கு மாநிலங்கள்’ முன்னேற்றப்பாதைக்குள் கொண்டுவரப்படாததோடு, அவையும் இந்திய நிலந்தான், அங்கே வாழ்பவர்களும் நம் ஜனங்கள்தான் என்பதை மத்திய அரசே உணராதிருந்த சோகமான காலகட்டமது…

சில மாதங்களில், ப்ரொமோஷன் காரணமாக நான் அமைச்சகத்தின்
பிறிதொரு பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டிருந்தேன். ஷிஃப்ட் ட்யூட்டி நேர
அவஸ்தைகளினால், பழைய நண்பர்களுடனான தொடர்பு குறைந்தது.
அறுபட்டது. அந்தக்காலத்தில் இப்போதுபோல மொபைலா, வாட்ஸப்பா..
ஒரு மண்ணும் இருந்ததில்லையே.. நேரே பார்த்தால் பேசலாம் ..
இல்லையென்றால், நினைத்துப் பொழுதுபோக்கலாம். தெரிந்தவர் மூலம்
விஜாரிக்கலாம்..  ஓரிரு வருடங்களுக்குப் பின் ஒரு நாள் ஒரு இன்லேண்ட் லெட்டர் என் பெயருக்கு ஆஃபீஸ் முகவரியில் வந்திருந்ததைப் பார்த்தேன். அனுப்புனர் நம்ப பட்டாச்சார்ஜி! தன் சொந்த ஊரிலிருந்து எழுதியிருந்தான். நீண்ட லீவில்-ஏதோ பிரச்னைபோலும்-இருந்தான். தூரத்திலிருந்து, தன் பிரச்னைகளுக்கிடையே பழைய நட்பு மிளிர அழகாக எழுதியிருந்தான்.

கடிதத்தைப் படித்து சந்தோஷப்பட்டேன். நிதானமாக இவனுக்கு பதிலெழுதவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அது சில வாரங்களாகி ஒரு நாள் தேடுகையில், அந்த லெட்டரைக் காணவில்லை.

எங்கே போச்சு?

அதில்தானே அவனது முகவரியை முதலாகப் பார்த்தேன்.  குறித்துவைத்துக்கொள்ளாமல் போனேனே.  இப்போது எப்படி பதில் போடுவது என அயர்ந்துபோனேன். (ஆஃபீஸில் அடுத்தவரின்
முகவரியெல்லாம் வாங்கமுடியாது)

மூன்றுவருட இடைவெளி. வெளிநாட்டுப் பணியொன்றை முடித்துவிட்டு
தலைநகர் திரும்பிய ஒரு நாளில் நினைவு வைத்துக்கொண்டு ஆஃபீஸ்
நிர்வாகப் பிரிவில் பட்டாச்சார்ஜிபற்றி விஜாரித்தேன். ” ஓ.. அவரா.. லாங்க்
லீவில் இருந்தார்.. பின் தொடர்பில் வரவில்லை என்று தெரிகிறது.
டூட்டிக்குத் திரும்பியதாக ரெகார்ட் இல்லையே..” என்று
சொல்லப்பட்டவுடன் அதிர்ச்சியும், சோர்வும் என்னைத் தாக்கியது. என்ன
ஆச்சு பட்டாச்சார்ஜிக்கு?  நல்ல மனிதன், நல்ல நண்பன்
ஆர்.எஸ்.பட்டாச்சார்ஜி. ரஜத் சுப்ர பட்டாச்சார்ஜி. நான் தொடர்பில் இருக்க
விரும்பிய வெகுசில அமைச்சக அறிமுகங்களில் ஒருவன். இப்போ எங்கே,
எப்படியிருக்கிறானோ?

- வளரும் -
=======================================================================================

என் கதை - பாரதிராஜா படம்  - கடுகு 

சில வருஷங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்கிறேன்.  டில்லியிலிருந்து சென்னை வந்திருந்த சமயம் பாரதிராஜாவின் ‘புதுமைப் பெண்’ படத்தைப் பார்க்கப் போனேன்.
படத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு லேசான வியப்பு ஏற்பட்டது. (படம் எல்லா விதத்திலும் பிரமாதமாக இருந்தது என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.) வியப்பிற்குக் காரணம், நான் எழுதிய ‘அலை பாயுதே கண்ணா” என்ற நாவலில் வரும் பல அம்சங்கள் அதில் இருந்தன. நிறைய ஒற்றுமைகள் இருந்தன. நம்முடைய நாவலைப் படித்து, அதன் பாதிப்பால் உருவான கதையாக இருக்குமோ என்று நான் எண்ணும் அளவுக்கு பல ஒற்றுமைகள் இருந்தன.

டில்லிக்குத் திரும்பியதும் பாரதிராஜாவிற்குக் கடிதம் எழுதினேன், ஒற்றுமைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு எழுதினேன்,. முடிவுரையாக ”என்னுடைய நாவலைப் பார்த்துக் காபி அடித்து இருக்கிறீர்கள் என்று நான் கூறவில்லை., வழக்குத் தொடரப் போகிறேன் என்றும் நினைத்துவிடாதீர்கள் .... சிற்சில சமயம் இரண்டு பேருடைய கற்பனையில் சில அம்சங்களில் ஒற்றுமைகள் ஏற்படக்கூடும். ஒருக்கால் உங்கள் உதவியாளர்கள் யாராவது என் நாவலைப் படித்து அதிலிருந்து சில சம்பவங்களை சொல்லியிருக்கலாம்” என்று எழுதினேன். இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு பாரதிராஜாவிடமிருந்து கடிதம் வந்தது. ”உங்கள் நாவலை நான் படிக்கவில்லை. அதை வாங்கிப் படித்துவிட்டு எழுதுகிறேன். ”சில சமயம் இரண்டு பேருடைய கற்பனையில் ஒரே மாதிரியான அம்சங்கள் வரக்கூடும் என்று தாங்கள் பெருந்தன்மையுடன் எழுதி இருந்தீர்கள். அதைப் பாராட்டுகிறேன்” என்கிற ரீதியில் சற்று நீளமான கடிதம் எழுதி இருந்தார்,
அதன் பிறகு அவருக்கு நானும் கடிதம் எழுதவில்லை. அவரும் எனக்கு எழுதவில்லை. . இதனால் எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை.
- கடுகு - 
இணையத்தில் இருந்து எடுத்தது

===================================================================================


======================================================================================

ரசித்த, துல்லிய கண புகைப்படங்கள்.

நமக்கு வலிக்கிறது இல்லை?




================================================================================================

பொக்கிஷம்  : -

சஹாய ராஜ்!

கிருத்திருமம்!

உன்பாட்டு என்பாட்டு பின்பாட்டு நிப்பாட்டு!


இந்தப் படத்தின் 'யே ஜீவன் ஹை' பாடல் பற்றி ஒன்றும் சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்.

தாத்தா காக்கா பேர காக்காவுக்கு செய்த உபதேசம்!


"அடுப்புல பாயசத்தை வச்சுட்டு மாமியாரை ஏலக்காய், பச்சை கற்பூரம் வாங்க கடைக்கு அனுப்பினேன்.."

"சரி.."

"கடைத்தெருவுல மாமியாருக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு.."

"அய்யய்யோ..  அப்புறம்.."

"அப்புறம் என்ன பண்றது?  ஏலக்காய் பச்சை கற்பூரம் இல்லாமலேயே பாயசத்தை பண்ணி இறக்கிட்டேன்..."

மீடியமா ஒரு ஜோக்!

பாலச்சந்தர் கல்கியில் கதையெல்லாம் எழுதி இருக்கார்ப்பா...

80 கருத்துகள்:

  1. அலை ஓசை லலிதா, சீதாவுக்கு இப்படி ஒரு துணுக்குச் செய்தியா?

    பதிலளிநீக்கு
  2. ஒரு குட்டிக் கேள்வி:

    கல்கி பொங்கல் மலர் விளம்பரத்தில் காணும் கல்பனா
    ஆணா, பெண்ணா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் உண்மையான பெயரைச் சொல்லுங்கள்.  சட்டென சொல்லி விடுகிறேன்!

      நீக்கு
    2. குட்டிக் கேள்வி என்பதில் ஏதாவது குறியீடு இருக்குமோ?

      நீக்கு
  3. "தாங்ஸ்.. சீக்கிரம் சொல்லுங்கள்.. அடித்து முடித்து விட்டு
    மாட்னி கிளம்புகிறேன்.." என்று பர்ஸனல் டைபிஸ்ட் சொன்னதும், " நானும் கூட வரட்டா?" என்று கேட்க மாட்டான், ஒரு மேனேஜர்?

    பதிலளிநீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. முதன்முதலில் பார்த்த
    திரைப்படக் கதம்பம்..


    ஆகா..
    அருமை..

    பதிலளிநீக்கு
  6. குமரனில் எந்த ஒரு படமும் பார்த்ததில்லை..

    தியேட்டர் காணாமல் போய்விட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குர்பானி உட்பட சில படங்கள் அங்கே பார்த்திருக்கிறேன்!

      நீக்கு
  7. முதன்முதலாக பார்த்த மலையாளத் திரைப்படம் வைஷாலி.

    அந்த ராஜகுருவுக்கு ஒரு அறை விடலாமா என்று இருக்கும்..

    பாவம் வைஷாலி!..

    பதிலளிநீக்கு
  8. முதலில் பார்த்தவை ரொட்டி கப்டா அவுர் மக்கான்..

    குவைத் சென்ற பிறகு கணக்கு இல்லை..

    மாதுரி தீக்ஷித்.. ஜூஹி சாவ்லா (!)

    சாஜன், ராஜா ஹிந்துஸ்தானி ..
    கல்நாயக்..
    அடடா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதுரியை எனக்கும் பிடிக்கும். ரொட்டி கப்டா பார்த்ததில்லை.

      நீக்கு
  9. சிரிசிரி முவ்வா முதல் தெலுங்கு..

    தஞ்சை ஞானத்தில்..

    சங்கராபரணம் இப்போதும் மனதை நெகிழ்த்தும்..

    பதிலளிநீக்கு
  10. சமீபத்தில் என்றால். ஆறேழு வருடங்களுக்கு முன்பு..

    பக்த ராம்தாஸ், அன்னமையா.. இறுதிக் காட்சிகளில் அழுதிருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  11. மொஹல் இ ஆஸம். .

    இன்னும் கண்ணுக்குள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கவில்லை! பாட்டு காட்சி மட்டும் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  12. பலமொழிப் படங்கள் பலவற்றை பார்த்திருந்தாலும் முதல் படம் எது என்று நினைவில் வைப்பது கடினம். அவ்வகையில் நீங்கள் பட்டியலிட்டது சிறப்பு.

    ஏகாந்தன் சாரின் சோக கீதம் மனதை நெருடியது. அரசு ஊழியத்தில் அடுத்தவனை கவிழ்ப்பது என்பதெல்லாம் சாதாரணம். அதில் அப்பாவி பட்டாசார்ஜீ விழுந்ததில் வியப்பில்லை.

    கடுகு சார் தொடர்ந்து எழுதுவதில் மகிழ்ச்சி.

    எண்ணங்களை விதைத்தால்
    கவிதைகள் மலரும்

    அயர்லாந்திலும் காக்கா உண்டா?
    காக்கையை ஒரு போதும் கல்லெறிந்து கொல்ல முடியாது.

    லைட் மியூசிக்குக்கு நிறைய பக்க வாத்தியங்கள். அப்போ ஸ்ட்ராங் மியூசிக்குக்கு 2 என்ற பகடியை ரசித்தேன்.
    Jayakumar


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி JKC ஸார்.  கடுகு மறைந்து விட்டார்.  இது அவரது எழுத்திலிருந்து எடுத்து முகநூலில் கந்தசாமி ஸார் பாகிர்ந்ததிலிருந்து எடுத்தது.

      ஆம்.  அலுவலக அரசியல் தனிரகம்.  

      அயர்லாந்தில் காக்கைகள் இல்லாததால்தான் அவர்களுக்கு அவை பற்றி தெரியவில்லை போலும்!

      நீக்கு
    2. பட்டாச்சார்ஜி எங்கும் விழவில்லை. வேறு ஏதோ அவரில் விழுந்திருக்கலாம்...

      நீக்கு
  13. கிரேஸி தீவ்ஸ் இன் கேம்ஸ் குடந்தை செல்வத்தில்!..

    பதிலளிநீக்கு
  14. தலைப்பைப் பார்த்ததும், "முதன் முதலில் பார்த்தேன்" பாடல்தான் டக்குனு நினைவுக்கு வந்தது!!!! ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் அந்தப் பாடலைச் சொன்னால் எனக்கு சோச்செங்கே  துமே ப்யார் நினைவுக்கு வருகிறது...

      நீக்கு
  15. முதன் முதலில் என்பது பள்ளியில் என்றால் Ten Commandments திரைப்படம் இதுதான் நினைவுக்கு வருகிறது. அதற்கு முன் என்ன என்பது நினைவில் இல்லை.

    வீட்டில் என்றால் பசி? எல்லோரும் நல்லவரே இதில் எது முதலில் !!!!!வந்ததோ அந்தப்ப்படம்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் நலலவரே . தான் முதல்.   '.படைத்தானே ப்ரம்ம தேவன்...'

      நீக்கு
  16. ஆமாம், ஸ்ரீராம் தீபாவளி முடிந்து கலர் ட்ரெஸ் போட்டு பள்ளிக்குச் சென்றால் ஒன்றும் சொல்ல மாட்டாங்க. ஆனால் அப்படிச் சென்றதில்லை. அது போல எங்கள் பள்ளியில் பிறந்த நாளன்றும் அனுமதி உண்டு ஆனால் நம் வீட்டில் அப்போவே அதுக்கெல்லாம் கொண்டாடும் வழக்கம் இல்லை என்பதால் எல்லா நாளும் ஒரே நாள்.

    சுதந்திர தின விழா என்றால் புத்தகம் எதுவும் கிடையாது ஆனால் சீருடையில்தான் போகணும்.

    இந்த மாதிரி படங்கள் காட்ட பெரும்பாலும் சனிக்கிழமைதான் தேர்ந்தெடுப்பாங்க மற்ற தினம் என்றால் குஷியா இருக்கும். பின்ன வகுப்புகள் இருக்காதே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறந்த நாளை எதுக்காக்க் கொண்டாடணும்? யார் கொண்டாடணும்?

      நீக்கு
    2. அதானே....நெல்லை. ஆனா எங்க வகுப்பிலும் சரி மகன் பிறந்த பிறகும் வரும் அழைப்புகளும் சரி....எல்லாரும் கொண்டாடுறாங்கன்னு அதைச் சொன்னேன்.

      எங்க வீட்டில் இப்பவரை இல்லை. நினைவும் இருப்பதில்லை

      கீதா

      நீக்கு
    3. நான் இந்த பிறந்த நாள் கலாட்டா எல்லாம் எதுவும் செய்ததில்லை. செய்யும் வாய்ப்பை எனக்கு அப்பா கொடுக்கவில்லை!

      நீக்கு
  17. புதன் பதிவு நன்று. உங்கள் நினைவுத்திறன் வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. பட்டாச்சார்ஜீ என்ற பெயரா தெரியவில்லை - நானறிந்த ஒரு பட்டாசார்ஜீயும் தனி டைப்.

    உங்கள் பட்டாசார்ஜீ கவிதை வரி அப்படியே தொக்கி நிற்கிறது. உங்களிருவர் தொடர்பு நின்றதற்கும் கவிதை வரிக்கும் தொடர்பு இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  19. ஜோக்குகள் எதுக்கும் சிரிப்பு வரலே.

    பதிலளிநீக்கு
  20. ஆமாம் ஸ்ரெaீஅம், சனிக்கிழமைகளில் ஸ்பெஷல் க்ளாஸ் வைச்cசா கலர் ட்ரெஸ்!! கிட்டத்தட்ட நம்ம காலத்துல எல்லா பள்ளிக்கூடங்களிலுmம் இதேதான் போல!!!!... அப்ப 10 கமான்ட்மென்ட்ஸும் எல்லாரும் பாத்திருப்பாங்க போல!

    நானாகத் தனியா எல்லாம் சினிமா பார்த்ததில்லை ஸ்ரீராம். தோழிகளோடு போனதும் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தனியா பார்த்த படங்களும் உண்டு. நண்பர்களுடன் பார்த்த படங்களும் உண்டு. நண்பர்களுடன் படம் என்றதும் ஸமாதி படமும் உடன் வந்த சசிதரனும் நினைவுக்கு வருகிறார்கள்.'

      நீக்கு
  21. நீங்க பாத்த மம்முட்டி தூர்தர்ஷன் படம் மதிலுகள் ன்ற படமாதான் இருக்கும்.

    செம லிஸ்ட் நல்ல நினைவு ஸ்ரீராம். எனக்கு இப்படி முதன் முதல் நு நினைவில்லை.

    முதலில் கற்றுக் கொண்ட கர்நாடக சங்கீதம் - ச ரி க ம ப த நி!!!!!!! ஹிஹிஹிஹி.....ப்ாட்டு? என் அத்தையிடம் கற்றுக் கொண்டது அருள வேண்டும் தாயே!
    என் மாமியிடம் ஏதோ ஒரு பாட்டுப் போட்டிக்காகக் கற்றுக் கொண்ட முதல் மலையாளப் பாடல் - லெலித கானம் - அதாவது செமி க்ளாஸிக்கல் என்று சொல்லப்படும் ...ஜெயச்சந்திரன் பாடிய பாடல் பெயர்? - ஹயையோ மறந்து போச்சே....
    அப்புறம் வாரணமாயிரம். இது உங்களுக்கு அனுப்பறேன்னு சொல்லி ட்யூ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் மதிலுகள் இல்லை. அழகான காதல் கதை என்றுதான் நினைவு.

      நீக்கு
  22. நியூஸ் ரூம் - அடக் கடவுளே தேர்வு எழுதப் போன மாணவர் ஹார்ட் அட்டாக்கா? கடவுளே. சின்ன வயசு.

    ஆழ்துளைக் கிணறு சம்பவங்கள் இன்னும் நடக்குது பாருங்க...2, 3 படங்கள் வந்தாச்சுன்னு நினைக்கிறேன்..மலையாளத்துல ஒரு படம் வந்திச்சு...மாடியிலிருந்து விழுந்த குழந்தை...ம்ம் என்ன சொல்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
  23. ஏகாந்தன் அண்ணா, உங்க அனுபவங்களில் அந்த பெங்காலி நண்பரைப் பற்றி நீங்க சொல்லி வருகையில் எனக்குத் தோன்றியது ஒரு வேளை பெங்காலி மக்களே கவிஞர்களா இருப்பாங்களோ, தாகூர், நம்ம சத்யஜித்ரே ஸ்டைல் ஆளா இருப்பார் போலருக்கேன்னு நினைச்சு வந்தப்ப உங்க வரிகள் வந்துவிட்டன..சத்யஜித்ரே பார்த்திருந்தான்னு...

    நண்பர் வடகிழக்குப் பகுதி பற்றிச் சொன்ன அந்த வரிகள் மிக மிகச் சரியே...அப்பகுதி தனி உலகம் தான். அங்கிருந்து பல பகுதிகளுக்கும் இப்போதெலலம் மாணவர்கள் படிக்க வரும் வாய்ப்புகள் இருக்கின்றன...அங்கும் இப்போது கொஞ்சம் முன்னேற்றம் உண்டு என்றாலும் ரொம்பக் குறைவு அப்படியிருக்க அப்போதெல்லாம் மிகவும் கடினம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வடகிழக்குப் பகுதி மீது காட்டப்படும் அலட்சியம் பற்றி பிங்க் படத்தில் அமிதாப் கூட சொல்வார் என்று நினைவு.

      நீக்கு
    2. மோடியின் ஆட்சியில் வடகிழக்கு வளர்ச்சிக்கு என Ministry of Development of North Eastern Region என்கிற பெயரில் பிரத்யேக அமைச்சகம் இயங்குகிறது. வடகிழக்கு மக்களை நோக்கித் தன் பார்வையைத் திருப்பிய முதல் பிரதமர் வாஜ்பாயி எனலாம். கட்சியை விலக்கிவிட்டுப் பார்த்தால் புரியும்..

      நீக்கு
    3. ..எனக்குத் தோன்றியது ஒரு வேளை பெங்காலி மக்களே கவிஞர்களா இருப்பாங்களோ, //

      கற்பனை வேண்டாம். No need to generalise.. அயோக்கிய சிகாமணிகள் இருவரும் உண்டு நான் பார்த்த பெங்காலிகளில்.

      நீக்கு
  24. பிஜாய் - விஜய் - அப்ப உங்க பெயர் விஜயராகவனா!! பெங்காலியில் வ - ப.....இங்கு ப ஹ என்பது வ - ப எனது போல....

    கீதா

    பதிலளிநீக்கு
  25. பட்டாசார்ஜி பற்றிய கடைசி வரிகள் ரொம்ப சோகமாகிவிட்டன. பாவம்....சில விஷயங்கள் இப்படித்தான் நாம் உடனுக்குடன் குறித்துக் கொண்டுவிடாமல் பின்னர் தொடர்பு கொள்ள நினைத்தாலும் முடியாமல் ஆகிவிடுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கேயோ யாரோ யாரையோ கூப்பிடும் ஒரு பெயர் என்னுடைய ஏதோ ஒரு நினைவைக் கிளறுகிறது என்பது போல முன்பு ஒரு கவிதை எழுதிய நினைவு!

      நீக்கு
    2. நினைவுகள் வரவேற்கப்படுகின்றன!

      நீக்கு
  26. கடுகு அவர்கள் சொல்லியிருப்பது போல் //சிற்சில சமயம் இரண்டு பேருடைய கற்பனையில் சில அம்சங்களில் ஒற்றுமைகள் ஏற்படக்கூடும்.//

    இது நானும் அவ்வப்போது நினைப்பதுண்டு. என்றாலும் கடுகு அவர்களின் பெருந்தன்மையையும் இங்குப் பாராட்ட வேண்டும். அருமையான மனிதர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை எழுத மொத்தமே ஏழு கருக்கள்தான் என்று யாரோ எங்கேயோ எப்போதோ சொன்னது ஞாபகம் வருகிறது!

      நீக்கு
  27. ஸ்ரீராம் உங்க கவிதையை ரொம்ப ரொம்ப ரசித்தேன். பொருத்தமான நேரத்தில் எதிர்காலத்தின் பொருத்தமான கவிதை ...பாருங்க நீங்க மிகப் பெரிய கவிஞனாகப் போறீங்க!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. சத்தியமா எனக்கு மூக்குல குத்து, இடுப்புல எலும்புன்னு ஒரு செகன்ட் தடவும் நிலை! படங்கள் செம துல்லியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  29. சத்தியமா எனக்கு மூக்குல குத்து, இடுப்புல எலும்புன்னு ஒரு செகன்ட் தடவும் நிலை! படங்கள் செம துல்லியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ... உண்மை.. உண்மை... மூக்கிலிருந்து ரத்தம் வருவது போல ஒரு பிரமை!

      நீக்கு
  30. லைட் ம்யூஸிக் - இத்தனை இசைக்கருவிகளுடன்....ஸ்ட்ராங்க் ம்யூஸிக் ரெண்டே ரெண்டுடன்...- ரொம்ப ரசித்தேன்..

    மற்ற பொக்கிஷங்களும் நல்லாருக்கு. காக்கா கதை சூப்பர். பாருங்க அயர்லாந்து காக்காக்கு பாட்டி சுட்ட வடை கதை தெரியலை போல! பரம்பரைக் கதையாச்சே அது!. அது போல நாடோடிகள் கவண்கல் அடிப்பாங்கன்றதையும் சொல்லாம விட்டிருச்சே!! இந்தியக் காக்காய்க்கு வாட்சப் விடலாம்னா குஞ்சு காக்கா உலகையே வித்திரும் போல! பொழச்சுக்கும்!

    இதில் மறைவாக ஒரு செய்தி இருப்பதாகப் படுது ஸ்ரீராம். முன்ன எல்லாம் தாத்தா பாட்டிகளின் நெருக்கம் இருந்தது..இப்பல்லாம் தாத்தா பாட்டிகளின் நெருக்கம் கிடைத்தாலும் அவங்களுக்குப் புத்திமதி சொல்லும் அளவில் பேரன் பேத்திகள் இருக்கும் என்றே தோன்றுகிறது அந்த அளவு உலகம் உள்ளங்கையில்!

    இந்தக் கதை வந்த காலம் பாருங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டுக்குடும்பமும் தாத்தா பாட்டிகளும் என்று ஒரு கவிதை எழுதி விடலாம்!

      நீக்கு
  31. ’மதினிமார்கள் கதை’ போல், தாத்தா பாட்டிகள் கதையையும் யாரேனும் முயற்சிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஏற்கனவே ஒரு தாத்தா சார்ந்த கதை ஏ பில நான் எழுதி வந்துச்சே குச்சி ஐசும் கடலை மிட்டாய் கதை

      கீதா

      நீக்கு
  32. சுவாரஸ்யமான நினைவலைகள் ரசித்து படித்தேன்.

    பதிலளிநீக்கு
  33. பார்த்த சினிமாக்களின் நினைவுகள் விவரம் அருமை. எங்களை கர்ணன் சினிமாவுக்கு பள்ளியில் அழைத்து சென்றார்கள்.
    மகன் சிறு வய்டஹில் அன்புள்ள ரஜினி காந் அழைத்து சென்றார்கள் பள்ளியில் அவனுடன் நானும் அனுமதி பெற்றௌ போனேன்.

    நேற்று வரமுடியாத சூழ்நிலை.

    பதிலளிநீக்கு
  34. உங்கள் கவிதை அருமை.
    செய்தியில் ஒரு குகந்தை மீட்பு, ஒரு குழந்தை பலி என்று படித்த போது இன்பமும், துன்பமும் அடைந்தேன். ஏகாந்தன் சார் சொன்ன பட்டாச்சார்ஜிக்கு என்ன ஆகி இருக்கும் என்று நினைவுகள் மனதில் ஓடுகிறது. மற்ற செய்திகளில் துணுக்கில் புத்திசாலி காகம் மனம் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  35. நினைவுகளை மலரச் செய்தது ‘முதன்முதலாக’. அதே காலக் கட்டங்களில் அப்படங்களில் பலவற்றை நானும் பார்த்திருக்கிறேன்.

    கவிதை அருமை.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!