இறைவன் இருக்கின்றான்
அந்த கிளினிக்கின் வரவேற்பாளரின் மேசைக்குப் பின்னால் ஒரு பெரியவரின் மார்பளவு புகைப்படம் என்லார்ஜ் செய்யப்பட்டு சந்தனமாலை சார்த்தி மாட்டப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் சுகுமாரன் ஏதோ யோசனையில் ஆழ்ந்து விட்டார்.
"நீங்கள் போய் அங்கே உட்கார்ந்து கொள்ளுங்கள். நானே கூப்பிடுகிறேன். அப்பொழுது நீங்கள் டாக்டரைப் பார்க்கலாம்" என்று பேஷண்டின் பெயரைக் குறித்துக் கொண்டு வரவேற்பாளர் சொன்னதும், நாங்கள் போய் ஒரு பக்கமிருந்த சோபாக்களில் அமர்ந்து கொண்டோம்.
கொஞ்ச நேரம் ஆயிற்று. இடதுபக்க கோடியில் பச்சை ஸ்கிரீன் போட்டு ஒரு அறை இருந்தது. அந்த ஸ்கீரினை விலக்கியபடி ஒருவர் வெளி வந்தார். ஆக, டாக்டர் அந்த அறையில் தான் இருக்கிறார் என்று நிச்சயப்படுத்தியபடியே நான் சுகுமாரனைப் பார்த்தேன். சுகுமாரன் தன் யோசிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை.
"என்ன சுகுமாரன்? என்ன யோசனை?"
"அதான், சார்! அந்தப் புகைப்படத்திலிருப்பரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் சட்டென்று நினைவுக்கு வரலே. அனேகமா சிதம்பரத்தில் தான் அவரைப் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன்."
"போட்டோவிற்கு சந்தனமாலை போட்டிருக்கிறார்கள். பார்த்தீர்களா?"
"ஆமாம். பார்த்தேன். குங்குமப்பொட்டு கூட வைத்திருக்கிறார்கள். அவர் இப்பொழுது இல்லை போலிருக்கு. அவர் இந்தக் கிளினிக்கைத் தொடங்கியவராய் இருக்கலாம். இல்லேனா--" என்று சுகுமாரன் சொல்லிக் கொண்டிருந்த பொழுதே, வரவேற்பாளர் "தனலட்சுமி.." என்று உரத்த குரலில் கூப்பிட எங்கள் முறை வந்து விட்டதென்று டாக்டரைப் பார்க்க நாங்கள் எழுந்து கொண்டோம். சுகுமாரனின் தம்பி சம்சாரம் பெயர் தனலட்சுமி.
பச்சை ஸ்கிரினைத் தூக்கியபடியே உள்ளே நுழைந்தோம். எங்களைப் பார்த்ததும் "வாருங்கள்.." என்று முகம் மலர்ந்தார் மருத்துவர். அச்சாக வெளியே மாட்டியிருந்த புகைப்படத்திலிருந்தவரின் சாயல் பளிச்சென்று தெரிந்தது.
சுகுமாரனிடம் வரவேற்பாளர் கொடுத்திருந்த சீட்டை வாங்கியபடியே, சீட்டிலிருந்த பெயரைப் பார்த்ததும், "பேஷண்ட் வரவில்லையா?" என்று தலைநிமிர்ந்து சுகுமாரனைப் பார்த்துக் கேட்ட டாக்டர், ஒரு நிமிடம் திகைத்து, "ஐயா, என்னைத் தெரியவில்லையா?" என்று எழுந்து நின்று தனக்கு முன்னால் அமர்ந்திருந்த சுகுமாரனின் இருகைகளையும் ஆதுரத்துடன் பற்றிக் கொண்டார்.
சுகுமாரனுக்கும் திகைப்பு. "தம்பி.. அதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். வெளிலே மாட்டியிருக்கிற போட்டோவைப் பார்த்ததிலிருந்து சலனம். எங்கோ பார்த்தமாதிரி இருக்கேன்னு."
"ஐயா நான் தான் சதாசிவம். சிதம்பரத்திலே உங்க வீட்டுக்கு எதிர் வீட்டிலிருந்தேனே?.. வெளிலே மாட்டியிருக்கிறது, அப்பாவோட படம்."
"தம்பி, நீ அண்ணாமலை யுனிவர்ஸிடிலே படிச்சிண்டிருந்த சதாசிவம் தானே?.. எப்படி தம்பி இருக்கே?.. அடடா! சபேசன் இப்போ இல்லையா?.."
"ஆமாய்யா! அப்பாவுக்கு நோவுநொடி ஒண்ணுமில்லே. திடீர்னு ஆயிடுச்சு.." என்று அவன் சொல்வதைக் கேட்டு கண்கலங்கினார் சுகுமாரன். வாசல் திண்ணையில் அமர்ந்தபடி ஊர் கதையெல்லாம் உரத்த குரலில் விவாதித்து பழகிக்களித்த நண்பருடனான பழைய நினைவுகள் அவரை வாட்டியது வெளிப்படையாகத் தெரிந்தது.
ஒருவழியாகத் தன்னை சமனப்படுத்திக் கொண்டு,"நீ என்ன மெட்ராஸ்லே செட்டில் ஆயிட்டியா? எத்தனை குழந்தைகள்?.. குழந்தைகள்லாம் படிக்கறாங்களா.. என்ன செய்யறாங்க?.." என்று கேட்டார் சுகுமாரன்.
"எல்லாரும் நலமா இருக்காங்க, ஐயா... எல்லாத்தையும் சொல்றேன். யாருக்கு என்ன உடம்பு அசெளகரியம்?... சொல்லுங்க.. எதுனாலும் குணப்படுத்திடலாம். அம்மா எப்படி இருக்காங்க?..நான் உங்க வீட்டுக்கு வந்து போறச்சேல்லாம், வீட்லே செஞ்சிருக்கிற பலகாரத்தை தட்டிலே வச்சுக் கொடுத்து எப்படி இருக்குன்னு சாப்பிட்டுச் சொல்லும்பாங்களே?.. எவ்வளவு நல்லவங்க?.." என்று சக மனிதனாய் நடந்ததை நினைவுபடுத்திச் சொன்னான் சதாசிவம்.
"இவர் தான் விஜயகுமார். இவர் தான் என்னை இங்கே கூட்டி வந்தார். என்னோட ஆப்த நண்பரோட சம்பந்தி. இங்கே மெட்ராஸ்லே இருக்கார்." என்று என்னை டாக்டருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சுகுமாரன்.
டாக்டர் சதாசிவம் என்னை நோக்கிக் கைகூப்பினார்.
(இன்னும் வரும்)
இயல்பாக, அதே சமயம் ரசிக்கத்தக்க வகையில் செல்கிறது. திருப்பங்களுடன் சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஆனால் தமிழ் சீரியல்கள் மாதிரி இரண்டே சம்பவங்களுடன் இந்த வாரப் பகுதி முடிந்துவிடுகிறது. கொஞ்சம் நீளமாகத் தந்து நெடுங்கதையை நான்கு வாரங்களாக்கியிருக்கலாமோ?
வாங்க, நெல்லை.
நீக்குவேக ஓட்டப் பயிற்சிகளின் போது
ஓரிடத்தில் கொஞ்சம் நின்று மூச்சு வாங்கிக் கொண்டு மீண்டும் ஓட்டத்தைத் தொடர்வது போல தான் அங்கங்கே இந்த நிறுத்தங்கள்.
மேலும் ஒரு வார இடைவெளியை சரிக்கட்ட கதையின் ஓட்டம் மறந்து போனவர்களுக்கு
முன்பகுதியைப் படித்து விட்டுத் தொடர்வதற்க்காகவும் இந்த மாதிரி ஒரு ஏற்பாடு.
சரியா? இனி கதை வேகமெடுக்கும்.
ரசனை மிக்க எழுத்து ஜீவி சார்.
பதிலளிநீக்குரசனை மிக்க ஓவியங்கள் கூட.
நீக்குகேஜ்ஜி ஸார் அந்த மருத்துவரை என்ன அழகாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் பாருங்கள். அருமை.
நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//என்ன உடம்பு அசெளகரியம்?... சொல்லுங்க.. எதுனாலும் குணப்படுத்திடலாம்.//
பதிலளிநீக்குஇந்த வார்த்தை போதுமே! நோய் குணமாகி விட்ட நம்பிக்கை வந்து விடும். நல்ல அன்பான மருத்துவர்.
சென்ற வாரத்தில் சொன்ன ஆச்சிரியம் தெரிந்த மனிதர் டாகடர் சதாசிவம் அவர்கள் சந்திப்புதான்.
கதை நன்றாக போகிறது. தொடர்கிறேன்.
நீங்கள் சொல்வது சரியே. மருத்துவர்
நீக்குஅன்பாக பேசினால் நமக்கே நோய்
பற்றிய பதட்டம் போய் விடும் தான்.
உங்களுக்கே தெரியும் தான். யு.எஸ்.ஸில் டாக்டர் கிளினிக்கை டாக்டர் ஆபீஸ் என்பார்கள்.
பெயர் கூப்பிட்டு உள்ளே போகும் பொழுதே, "ஹலோ.. ஹெள ஆர் யூ?" என்று சந்தோஷ முகத்தோடு வெகு
நட்பாகப் பேசுவார்கள். அப்பொழுதே அந்த உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்ளு. தான்.
சென்ற வார ஆச்சரியமும் நீங்கள் சொல்வது தான். தெரிந்த மனிதராய் டாக்டர் இருந்தால் கேட்கவே வேண்டாம்.
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
பிரார்த்திப்போம்.
நீக்குசுவாரஸ்யமாக செல்கிறது தொடர்ந்து வருகிறேன்....
பதிலளிநீக்குதொடர்ந்து நீங்கள் வாசித்து வருவதில் மகிழ்ச்சி தேவகோட்டையாரே!..
நீக்குஜீவி அண்ணா கதை ரொம்ப சுவாரசியமாகச் செல்கிறது.
பதிலளிநீக்குசென்ற பகுதியில் நான் ஊகித்தது கதையைச் சொல்லிவரும் கதாபத்திரத்திற்குத் தெரிந்தவராக இருப்பாரோ இந்த மருத்துவர் என்று நினைத்தேன். ஆனால் சுகுமாருக்கு!
அடுத்து என்னவாகும் என்று ஆர்வம்
கீதா
கதாபாத்திரத்திற்குத் தெரிந்தவராய் இருப்பதில் ஒரு இடைஞ்சல் உண்டு. சதாசிவம் என்று அந்தப் பெரியவர் பெயர் சொன்ன போதே விஜி ஸாருக்குத் தெரிந்து போயிருக்குமில்லே?
நீக்குஅடுத்து என்ன?
இதே மாதிரி இன்னொரு..ஹி..ஹி..
கௌ அண்ணா ஓவியம் நல்லாருக்கு...
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குஎதிர்ப்பாராத மகிழ்வு, அருமை...
பதிலளிநீக்குஆமாம் டி.டி. மகிழ்வு கூட எதிர்பாராமல் கிடைக்கும் பொழுது இரட்டிப்பாகத் தான் இருக்கும். உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகதை நன்றாக செல்கிறது.
பதிலளிநீக்குஅதற்கேற்ப படங்களும் நன்று.
தொடர்வோம்....
நன்றி.
நீக்குதொடர்ந்து வாசித்து வாருங்கள், மாதேவி.
நீக்குவரும் அத்தியாயங்களில் நீங்கள் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கும்.